Jeyamohan's Blog, page 819
March 1, 2022
அன்னையின் பயணம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஓர் அன்னையின் பயணம் ஒரு அருமையான கட்டுரை. அவர் வெண்முரசுடன் கொண்டிருக்கும் உறவை நினைக்கையில் உண்மையில் இலக்கியத்தின் பயன் என்ன என்று புரிகிறது. திரும்பத்திரும்ப இங்கே எழுத்தால் என்ன பயன், வாசிப்பால் என்ன பயன் என்று கேட்பதுண்டு. ‘பத்து பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா?’ என்று என் அப்பா கேட்பார். பைசாவால் எந்த பிரயோசனமும் இல்லாத நிலை வாழ்க்கையில் உண்டு. அப்போது கூட வருவது எழுத்துதான். அது அளிக்கும் உலகம் ஆன்மிகம் அளிக்கும் நிறைவுக்கு நிகரான ஒன்றை அளிப்பது. நான் அதை ஒரு இக்கட்டான சூழலில் உணர்ந்தேன். அந்த அம்மாவுக்கு என் நமஸ்காரம்
ஜே.ராதாகிருஷ்ணன்.
அன்புள்ள ஜெ,
ஓர் அன்னையின் பயணம் அற்புதமான ஒரு கடிதம். நான் என் வாழ்க்கையின் சாராம்சமாக வாசிப்பை என்ணிக்கொள்பவன். வாசிப்பு எனக்கு என்ன தருகிறது என இன்னொருவருக்குச் சொல்ல என்னால் முடியாது. வேறு எதுவும் தராத ஒன்றை தருகிறது என்று மட்டும்தான் சொல்வேன். இந்தக் கடிதம் அது என்ன என்று சொல்கிறது
ரவி சிவக்குமார்
அன்புள்ள ஜெ
ஓர் அன்னையின் பயணம் முக்கியமான ஒரு கடிதம். வெண்முரசு பற்றி சொல்லும்போது அத்தனை பெரிய நாவலை யார் படிப்ப்பார்கள் என்று சிலர் கேட்பதுண்டு. நான் சொல்வேன், வாசிப்பவனுக்கு அந்த நூல் இரண்டுமாத தவம், சீக்கிரம் முடிந்துவிடும். அதன்பின் பெரிய ஏக்கம்தான் மிஞ்சும் என்று. நல்ல வேளை. உங்கள் வாசகர்கள் வாழ்நாள் முழுக்க உங்களை வாசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.
அந்த அன்னைக்கு நூல் முடிவுறாது நீளவேண்டும்
எம்.சரவணன்
February 28, 2022
தந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும் —2
நீல பத்மநாபனின் எழுத்து மிக நேரடியானது. இலக்கிய உத்தி என அவர் எதையும் செய்வதில்லை. அவருடைய இலக்கிய உத்தி என்பது நனவோடை. ஆனால் அது அவருடைய உளம் இயங்கும் இயல்பான வழிமுறை மட்டுமே. அவருடைய நாவல்களில் வரலாறு இருப்பதில்லை. தத்துவமும் இருப்பதில்லை. ஆகவே படிமங்களோ கருத்துருவகங்களோ இல்லை.அவை சாதாரணத்துவத்தின் கலை, அல்லது அன்றாடத்தின் கலை என்று வகுக்கத்தக்கவை.
உண்மையில் தமிழில் நீல பத்மநாபனைப் போல சலிப்பூட்டும் இன்னொரு எழுத்தாளர் இல்லை. இயல்பாக, எந்த அசாதாரண நிகழ்வுகளும் இல்லாமல் ஒழுகும் அவருடைய நாவல்களை பொறுமைகாத்தபடியே வாசிக்கவேண்டும். சிலநாட்கள் ஓர் இடத்தில் நேரடியாக வாழ்ந்த அனுபவம் அவற்றிலிருந்து கிடைக்கும். ஓர் ஆஸ்பத்திரியில் பத்துநாள் இருந்ததுபோல. எப்போது முடியும் என்னும் அலுப்புடன் காத்திருந்து நாள்கள் தீர்வதுபோல.
ஆனால் பெரும் பரபரப்புடன் வாசித்த பல நாவல்கள் அப்படியே நினைவில் இருந்து மறைந்துவிடுகின்றன. ஒரு தடையம்கூடஎஞ்சாமல். காமம், வன்முறை என கொப்பளித்த நாவல்கள்கூட துளியும் மிஞ்சாமலாகின்றன. குறிப்பாக இந்த அறுபது வயதில். ஆனால் நீல பத்மநாபனின் நாவல்களில் அத்தனை கதாபாத்திரங்களும் நேரில் அறிந்தவர்களாக நினைவில் வாழ்கிறார்கள். சொல்லப்போனால் நீல பத்மநாபனில் இருந்து தொடங்கி அவர்களை நானே விரிவாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். உறவுகளில் வரும் அப்பாவை நான் உருவாக்கி வைத்திருக்கும் விதம் நீல பத்மநாபன் நினைப்பதைவிட விரிவானது. இப்போது எழுந்து திருவனந்தபுரம் சென்றால் அவரைப் பார்த்துவிடலாமென்று தோன்றும்படி உயிருள்ளது.
நீலபத்மநாபன் தன் கதாபாத்திரங்களாக தன்னை உருவகித்துக் கொள்பவர். ஆகவே அவை பெரும்பாலும் தன்வரலாற்று நாவல்கள். அந்த தருணத்தில் அவர் என்ன உணர்ந்தாரோ அதை பெரும்பாலும் எந்த பாவனையும் இன்றி, எந்த அழகுறுத்தலும் இன்றி, எந்த கதைச் சட்டகமும் இன்றி நேரடியாக சொல்ல முயல்வார். அவருடைய நாவல்கள் எல்லாமே அத்தகையவை. மேலும் துல்லியமான தன் வரலாரான உறவுகள் அவ்வாறுதான் அமைந்திருக்கிறது. உறவுகள் புனைவென்பதை விட முற்றிலும் நேர்மையான உளப்பதிவு ஆவணம் என்றே சொல்லவேண்டும்.
தந்தை உடல்நலமற்றிருக்கும் செய்தியை அறியும் கதாநாயகன். முதலில் அடையும் உணர்வு செலவுக்கு என்ன செய்வது என்பது தான். தொடர்ந்து எத்தனை நாள் விடுப்பு தேவைப்படும் என்பதுதான் அவன் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பிறகு அதைப்பற்றி குற்ற உணர்வு அடைகிறான். தந்தையின் மரணப்படுக்கை அருகே பதினெட்டு நாட்கள் இருக்கும் அவன் அவரிடமிருந்து தன் உள்ளம் விலக்கியது என்ன ஏன் அவரை அகற்றினோம் என்று எண்ணுகிறான்.
வயதுக்கு வந்தபிறகு தந்தையிடமிருந்து ஒரு தொலைவை இயல்பாக உருவாக்கிக்கொண்டவன் அவருடைய சொற்களை செவி கொள்ளாதபடி தன்னை ஆக்கிக்கொண்டவன். இறுதியாக அவர் உடல்நலம் பற்றி சொல்வதைக்கூட பொருட்படுத்தாதவன். மிகுந்த உணர்வு வீச்சுடன் தந்தையை நோக்கித் திரும்பி வந்து அவரைக் கண்டடைகிறான். அவர் வழியாக தனக்கொரு மாபெரும் உறவு வலை உருவாகியிருப்பதை அதில் ஒருவனாக மட்டுமே தான் இருப்பதை உணருகிறான். தன்னை ஒரு தனி மனிதனாக வகுத்துக்கொள்ள முயன்றவன், உறவு பெரும்பின்னலிலுள்ள ஒரு சிறு கண்ணி மட்டுமே தான் என்றும், அக்கண்ணி தன் தந்தையிடமிருந்து தனக்கு வந்ததென்றும், தன்னிடமிருந்து தன் மைந்தருக்குச் செல்லும் என்றும் உணருகிறான்.
தன்னுணர்விலிருந்து பொதுமை உணர்வு நோக்கிச் செல்லக்கூடிய பதினெட்டு நாட்கள் குற்றஉணர்வு, விலக்கம், நெகிழ்வு, கண்டடைதல், வகுத்துக்கொள்ளுதல், கடந்து செல்லுதல் என பல படிநிலைகளில் அவனுடைய உணர்வுகள் மாறிவருவதை அந்த பதினெட்டு நாட்களின் உள ஓட்டங்களாக பதிவுச் செய்திருக்கிறார் நீல பத்மநாபன்
இது அவன் தன்னை பாசமான மைந்தனாக உருவகப்படுத்தி முன்வைக்கும் செயற்கையான முயற்சியும் அல்ல. தந்தையை புனிதப்படுத்தி தியாகியாக்கும் முயற்சியும் அல்ல. ஆனால் அவரை அவன் கடவுளாக்கியே தீரவேண்டும். மூதாதையரின் பெருநிரையில் கொண்டு வந்து அமரவைத்தாக வேண்டும். மாலை போட்டு ஊதுவத்தி வைத்து வணங்கியாக வேண்டும். அது இந்தியாவில் ஒவ்வொரு சராசரிக் குடும்பத்திலும் நிகழ்வது. அந்தச் சராசரி நிகழ்வின் உளவியல் என்ன என்றுதான் இந்த நாவல் ஆராய்கிறது.
அந்த தெய்வமாக்கல் நிகழ்வதற்கான பல படிநிலைகளை இந்நாவல் விளக்குகிறது. அவனடையும் குற்ற உணர்வு, அதிலிருந்து சென்றடையும் தன்னிலையும், அதன் விளைவான தன்விளக்கங்களும், அத்தன்னிலையை கொண்டுசென்று அவன் பொருத்திக்கொள்ளும் உறவுவலை. அந்த உறவுவலை மாபெரும் மரபென ஆவது. அம்மரபின் முகமென தந்தை மாறுவது. இந்த நுண்ணிய பாதையே இந்நாவலில் உள்ளது. தந்தை இறந்தபிறகு நாவல் முடிகிறது. மேலும் நாற்பத்தொன்றாவது நாள் மரபான முறையில் நீர்ச்சடங்குக்குப் பிறகு அவர் தெய்வமாகிவிடுவார். அவ்வண்ணமே நீடிப்பார்.
தமிழில் தந்தை தெய்வமாவதைப்பற்றிய உள பரிணாமத்தின் மாபெரும் சித்திரம் என்று உறவுகள் நாவலைச் சொல்லலாம். அதை மிக மெதுவாக, மிக மிக எதார்த்தமாக வந்தடைந்த நாவல் இந்தக் கோணத்தில் படிப்பவர்களுக்காக மட்டுமே உகந்ததாக இருக்க முடியும். அதை சுந்தர ராமசாமிக்கு எழுதினேன். மறுநாள் எஸ்.எல்.பி பள்ளி மைதானத்தில் அவரைச் சந்தித்து விரிவாகப் பேசினேன். அந்திவெயிலில் நடந்தபடி நான் பேசிக்கொண்டே சென்றேன். கொந்தளிப்புடன், சீற்றத்துடன், பின்னர் கண்ணீருடன்
அன்று இத்தனை தெளிவாக இதை நான் யோசிக்கவில்லை என்றாலும் எனக்கும் என் தந்தைக்குமான உறவைப்பற்றி மிக விரிவாக சுராவிடம் கூறினேன். ‘தெய்வமாக ஆக்கப்பட்ட தந்தை செரிக்கப்பட்ட உணவு போல. குற்றவுணர்வாலோ அல்லது வேறேதேனும் காரணத்தாலோ அவ்வண்ணம் ஆகாத தந்தை செரிக்கப்படாத இரும்புக்குண்டு போல உள்ளே இருந்து நோயென்று ஆவார். உயிர்ப்பலி கொள்வார். நீல பத்மநாபனின் நாவல் அந்த தெய்வமாக்கலின் படிகளை அற்புதமாகச் சொல்கிறது.
‘ஆனால் இன்னொசென்ஸ் என்பது நாவலாசிரியனின் தகுதி அல்ல’ என்று சுந்தர ராமசாமி சொன்னார். ‘அப்படியென்றால் ஒரு மனநோயாளியின் வாக்குமூலமும் கூட இலக்கியமாக ஆகிவிடக்கூடும்’. நான் அதை மறுத்தேன். நவீனத்துவம் இலக்கியவாதியை அறிஞனாக, ஆய்வாளனாக எண்ணுகிறது. இலக்கியவாதி வெறும் ஊடகமே. தன் ஆழுளம் வெளிப்பட தன்னை கருவியாக்கிக் கொள்பவன். தன்னை அதற்கு ஒப்பளிப்பவன், அதுவே பின்நவீனத்துவ நிலைபாடு. அதற்கு கள்ளமின்மை என்பது மிகமிக உதவியான ஒன்றுதான்
ஆனால் அது ஓர் எளிய வாக்குமூலம் அல்ல. அதில் மொழி உள்ளது. இலக்கிய வடிவம் உள்ளது. அவையிரண்டும் பண்பாட்டால் உருவாக்கப்ப்ட்டவை. ஓர் எளிய வாக்குமூலத்தில் அவையிரண்டும் இல்லை. ஆகவே அது இலக்கியம் அல்ல. உண்மையில் மொழி பலவகையான பாவனைகளையே அளிக்கிறது. வடிவம் கூறவந்ததை மறைக்கிறது. அவற்றைப் பற்றிய தன்னுணர்வே இல்லாமல் தன்னை அளிப்பதும், எந்த தடையுமின்றி தன் அகம் தன் புனைவில் திகழவிடுவதும் பெரும் படைப்பூக்கம். அறிந்து எழுதிய நூலை விட ஆழமானது அறியாமல் எழுதிய நூல். இலக்கியம் உருவாவது மொழியும் வாழ்வும் ஒன்றாகும் அறியாக்கணத்தில்தான் என நான் சொன்னேன்.
வழக்கம்போல எனது கருத்துக்களை சுரா ஏற்றுக்கொள்ளவில்லை. ’ஐரோப்பியப் பார்வையின் இரக்கமற்ற புறவயத்தன்மை, அதன் அறிவியல் அணுகுமுறை இந்திய உள்ளத்தை சீண்டுகிறது. அதை வெல்வதற்காக இந்தியா போட்டுக்கொள்ளும் பாவனைகள் தான் இவை’ என்று மிக எளிதாக அதைக் கடந்து சென்றார். வழக்கம்போல அது நவீனத்துவதற்கும், அதன் முடிவுக்காலகட்டத்தில் தோன்றி தன்னனுபவம் வழியாக அதைக் கடந்து செல்லும் இன்னொரு காலகட்ட எழுத்தாளனுக்குமான உரையாடலாக மாறி முடிவுற்றது.
இக்கட்டுரையை நான் எழுதவேண்டியிருப்பது ஏனென்றால் அந்த உரையாடல் நிகழ்ந்து சிறிது காலத்திற்குப் பிறகு சுந்தர ராமசாமி அவருடைய புகழ் பெற்ற நாவலான குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்னும் நாவலை எழுதினார். அதில் அவருடைய தந்தை எ.ஆர்.சுந்தரம் ஐயர் உருமாறியிருக்கும் விந்தை அந்த உரையாடல்களை என் நினைவில் தொகுத்துக் கொள்ளச் செய்தது. 2004ல் என் குறிப்புகளில் அதைப்பற்றி எழுதியிருக்கிறேன். சமீபத்தில் அக்குறிப்பு கையில் சிக்கியது.
நான் பதினைந்து ஆண்டுகளாக சுந்தர ராமசாமியிடமிருந்து அவரது தந்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எஸ்.ஆர்.எஸ் என்ற பெயரில் அவருடைய எல்லா நாவல்களிலும் வந்து கொண்டிருக்கும் எஸ்.சுந்தரம் ஐயர் சுந்தர ராமசாமியால் ஒரு குறிப்பிட்ட வகையில் வரையறுக்கப்பட்டவர். குற்றாலத்தில் அருவிநீரில் கல் விழுந்து சிலர் பலியான செய்தி கேட்டதும் பிராமணாள் யாரும் அதில் உண்டோடோ என்று கேட்டவர் அவர் என்று திரைகள் ஆயிரம் கதையில் அவரைப்பற்றி கேலியாக பதிவு செய்கிறார்.
ஜே.ஜே.சில குறிப்புகளில் வரும் எஸ்.ஆர்.எஸ் ஓர் ஓவியனை உயிருடன் பார்ப்பதே ஜே.ஜே.வரைவதை பார்க்கும்போதுதான். பக்கத்தில் வந்த அப்பா போன்ற பல கதைகளில் வரும் எஸ்.ஆர்.எஸ் லௌகீகமானவராக, வணிக ஈடுபாடு மட்டுமே கொண்டவராக, மகனைப்பற்றிய கவலைகள் நிறைந்தவராக, உலகியலில் தேர்ச்சி இல்லாமல் பெரும்பதற்றத்துடன் முட்டி மோதுபவராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். பழமையானவராகவும் கலை இலக்கிய சிந்தனைகளிலும் அடிப்படை புரிதல் இல்லாதவராகவும் மட்டுமே ஜே.ஜே. சிலகுறிப்புகள் உட்பட அனைத்து நாவல்களிலும் எஸ்.ஆர்.எஸ் வருகிறார். அவருக்கும் சுந்தர ராமசாமிக்குமான உறவு மோதல் மட்டுமே கொண்டது. அவருடைய நினைவுக்குறிப்புகளில் கூட அவை பதிவாகியிருக்கின்றன.
சுந்தர ராமசாமி சொன்ன ஒரு நினைவு. இலக்கிய ஆர்வம், அரசியல் ஈடுபாடு காரணமாக சுந்தர ராமசாமி வணிகத்தில் தோற்றுவிடுவார் என அவர் அப்பா அஞ்சுகிறார். அதை அவர் அம்மா சுந்தர ராமசாமியிடம் சொல்ல ராமசாமி தொழிலில் இறங்கி தந்தையைவிட வெற்றிகரமாக அதை நடத்துகிறார். ஆனால் அவர் அப்பா சீண்டப்படுகிறார். கடைக்கு சுந்தர ராம்சாமி இல்லாதபோது வந்து பலவகை பிரச்சினைகளை உருவாக்குகிறார். ‘நல்லவேளை இறந்துவிட்டார். இல்லையேல் சுதர்சனில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கியிருப்பார்’ என்று கிருஷ்ணன் நம்பி கேலியாகச் சொன்னார் என்று சுந்தர ராமசாமி சொன்னார்.
ஆனால் தன்வரலாற்றுத் தன்மை கொண்டதாக கருதப்படும் ’குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ எஸ்.ஆர்.எஸ்ஸின் ஆளுமை முழுமையாகவே மாற்றி புனையப்பட்டுள்ளது. அவர் தன் வீட்டுத் தோட்டத்தில் கொட்டகை அமைத்து அறிஞர்களிடம் ஷெல்லியைப் பற்றி உரையாடுபவராக, இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்பற்றிய ஆர்வமும் பதற்றமும் கொண்டவராக, சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியா அடையும் மாற்றங்களைப் பற்றிய கவலை கொண்டவராக, ரஸல் உட்பட சமகால தத்துவங்களைப்பற்றிச் சிந்திப்பவராக சித்தரிக்கப்படுகிறார். இந்த எஸ்.ஆர்.எஸ் முழுக்க முழுக்க சுந்தர ராமசாமியின் கற்பனை. சுந்தர ராமசாமியின் தந்தையை நேரில் அறிந்தவர்கள் என் நண்பர் வட்டத்தில் உண்டு. அவர்கள் அனைவரும் இந்த சித்திரத்திற்கும் எஸ்.ஆர்.எஸ்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்கிறார்கள்.
எனில் இத்தகைய ஒரு கதாபாத்திரத்தைப் புனைந்து கொள்ளும் தேவை சுந்தர ராமசாமிக்கு ஏன் வந்தது? அவர் தன்னுடைய ஆளுமையை எஸ்.ஆர்.எஸ்ஸுக்கு அளிக்கிறார். தான் விரும்பிய ஒரு தந்தையை அவர் புனைந்து கொள்கிறார். அந்த வடிவத்தில் தன்வரலாற்று நாவல் ஒன்றை நிறுவுவதன் மூலமாக அவர் உள்ளம் எதைக் கண்டடைகிறது? நீலபத்மநாபனின் உறவுகள் நாவலில் கதாநாயகன் தந்தையை தெய்வமாக்குவதற்கு இணையான ஒரு செயல்பாடுதான் இது. பிராய்டிசத்தின் பிடியிலிருந்து சுந்தரராமசாமி மீண்டு வந்ததை நான் குழந்தைகள் பெண்கள் ஆண்களில் கண்டேன்.
சுந்தர ராமசாமியிடம் ‘சார் நீங்களும் கடைசியில் எஸ்.ஆர்.எஸ்ஸுக்கு படம் வைத்து மாலை போட்டு ஊதுவத்தி ஏற்றிவிட்டீர்கள். நீலபத்மனாபன் நாவலில் கதாநாயகனுக்கு பதினெட்டு நாட்கள் தான் தேவைப்பட்டன. உங்களுக்கு முப்பது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது’ என்று சொன்னேன். எச்.எல்.பி.பள்ளி வளாகம். சுரா அவ்விமரிசனத்தை ஏற்கவில்லை.என் சொற்களை அவருடைய அந்தரங்கத்திற்குள் நிகழ்ந்த ஓர் அத்துமீறலாகவே அதை உணர்ந்தார் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் முகம் சிவந்திருந்ததை நினைவுகூர்கிறேன்
(நிறைவு)
இரா.முருகனின் ’மிளகு’
இந்தப் புத்தகக் கண்காட்சியில் இலக்கிய வாசகர்களுக்குப் பரிந்துரைக்கவேண்டிய நூல்களில் ஒன்றாக இரா.முருகன் எழுதிய ’மிளகு’ இடம்பெறும். இந்நாவலின் பகுதிகளை இணையத்தில் வாசித்தேன். தமிழில் எழுதப்பட்ட முக்கியமான நூல்களில் ஒன்று என்று இந்நாவலைச் சொல்வேன்.
வரலாற்றுக்கு ஊடாக சாமானியர்களை ஊடாடவிட்டு விளையாட்டும் விமர்சனமுமாக கதைசொல்வது இரா.முருகனின் பாணி. அரசூர் வம்சம் போன்ற அவருடைய பெருநாவல்களில் உருவான அந்தப்பாணி முழுமையை அடைந்திருக்கும் நாவல் இது. இதிலுள்ள வடிவ விளையாட்டு, முன்னும்பின்னுமாகச் செல்லும் கதை ஆகியவை சலிப்பூட்டும் மூளைச்சோதனைகள் அல்ல. எல்லாப் பக்கங்களிலும் வாசகன் புன்னகைக்கவும் கற்பனையில் நீள்தொலைவு செல்லவும் வாய்ப்பளிக்கும் புனைவுத்தருணங்கள் உள்ளன. வரலாற்றை ஒட்டுமொத்தமாக ஒரு அபத்தப்பின்னலாக ஆக்கிக் காட்டும் இந்நாவல் வரலாறுமேல் அது என்னவென்றே தெரியாமல் ஒரு வழிபாட்டுணர்வு கொண்டுள்ள தமிழ் உள்ளத்திற்கு அவசியமான சில கீறல்களை அளிக்கிறது.
மிளகு வாங்கஜேன் ஆஸ்டன் -பி.கே.பாலகிருஷ்ணன்
இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் ஜேன் ஆஸ்டன் பிறந்தார். பாதிரியார் ஒருவரின் ஏழு குழந்தைகளில் இவர் ஆறாவது குழந்தை. பிறந்தது 1773ல். 1818ல் இறந்தும் போய்விடுகிறார். அகவாழ்க்கையின் சில ஒளிரும் அம்சங்களை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், நினைவுகூறத்தக்க சம்பவங்கள் எதுவும் 45வது வயதில் இறந்த, திருமணமாகாத அந்த பெண்ணின் வாழ்க்கையில் இல்லை. நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்து, மாற்றமே இல்லாத அதே சூழலில் வாழ்ந்து, ஊர் ஆட்களால் எந்தவகையிலும் வம்பு பேசமுடியாதபடியான சர்வசாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த ஜேன் ஆஸ்டன் ஏதோ உடல்நலக் கோளாறால் அற்ப ஆயுளில் இறந்தார். திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதுதான் அவரது வாழ்க்கையின் ஒரே தனித்தன்மை. ஜேன் ஆஸ்டனின் நாவல்களில் வரும் சமூகச் சித்திரத்தை வைத்து பார்த்தால், அன்று எல்லா பெண்களும் திருமண வாழ்க்கையின் இன்பத்திற்காக பார்வதியைப்போல தவம் இருந்திருக்கிறார்கள். அன்றைய சமூகச்சூழலில் பெண்களின் வாழ்வின் தொடக்கமும், முடிவும் திருமணம்தான். அப்படிப்பட்ட சமூகத்தை எந்த வைராக்கியமும் இல்லாமல் வெடிச்சிரிப்புடன் சித்தரித்த ஜேன் ஆஸ்டன் திருமணமாகாதவர் என்பது எவ்வளவு பெரிய தனித்தன்மை! ஜேன் ஆஸ்டனுக்கு நிரந்தரமான நோய்தாக்குதல்கள் எதுவுமே இல்லை. நல்ல தோற்றமும், இனிமையான இயல்புகளும் அவரது உடன்பிறப்புகளைப்போல. தன் மானசீகமான மகள்களான எலிசபெத் பென்னெட் (Elizabeth bennette), எம்மா உட் ஹவுஸ் (Emma Woodhouse), ஆன்னி எலியட் (Anne Elliot) இவர்களின் சுய விருப்பம், இயல்புகளில் உள்ள சிக்கல் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அவர்களுக்கு பிடித்தமான கணவனை அமைத்துக்கொடுத்த ஜேன் ஆஸ்டன் , தனக்கு என ஒரு கணவனை காணமுடியாமல் இறந்துவிட்டார். இது இலக்கியத்தின் முக்கியமான முரண்நகையாளர்களின்(ironist) தனிவாழ்க்கையில் விதியின் விளையாட்டாக அமைந்த முரண்நகை(irony) என்றுதான் தோன்றுகிறது.
பெண்கள் திருமணம்செய்துகொள்ளாமல் வாழவேண்டும் என்றால் அதற்கு காதல் சார்ந்த பகற்கனவுகள் என்ற விரைவுத்தேரிலிருந்து சிதறிவிழுந்து தங்களை புண்ணாக்கிக்கொள்ள வேண்டும். தன் ’காமதேவன்’ எங்கே?எங்கே? என்று எந்த அரவமும் இல்லாமல் தீவிரமாக அரற்றியபடி, தன்னைத்தேடி வந்த அப்பாவிகளை அவமதித்து, இறுதியாக கையில் எந்த ஒன்றும் எஞ்சாமல் வைராக்கியத்தின் கப்பரையை ஏந்தி பத்ரகாளியைப் போல ருத்ரதாண்டவம் ஆடும் கன்னிப்பெண்கள் இருக்கிறார்கள். என்ன இருந்தாலும், முதிர்கன்னிகள் என்பவர்கள் சந்தைமுனையில் பைபிள் பிரசங்கம் போல புனிதமான குமட்டல்தான். அவர்களில் வைராக்கியத்தின், வெறுப்பின் பாவனைகள் பலவகையில் வெளிப்படும் அவ்வளவுதான். அது பலவீனமான தன்னிரக்கத்திலிருந்து தொடங்கி எரிக்கும் உலகவெறுப்பு வரை பரவிக்கிடக்கும் ஒரு மனநிலை. எப்படிப்பார்த்தாலும் அந்நிலையில் அன்போ, இணக்கமோ, மகிழ்ச்சியோ இருக்காது என்று உறுதியாகச் சொல்லமுடியும். வாழ்க்கை அனுபவத்தின் இந்த பாலையில் வழிதவறி மாட்டிக்கொள்ளும் பல பெண்கள் அதன் கடுமையான வெம்மையின் மயக்கத்தில், ஆண்களைப்போல வாழ்க்கையை மாற்றிக்கொள்வதையும் காண்கிறோம். ஆனால் ஆண்களின் தன்மதிப்பும் பெண்களுடையதைப் போலவே எளிமையான, ஆர்ப்பாட்டங்கள் அற்ற அடக்கமான மனநிலையில்தான் உருவாகிறது. அதனால் ஆண்களாக தங்களை உருமாற்றிக்கொண்டதாக சுய ஏமாற்றத்தில் மகிழ்ச்சியடையும் இந்த வீரநாயகிகள் ஆபாசமான இருப்புகளாக பரிணாமம் அடைகிறார்கள்.
இதன் மறுஎல்லையில் சாத்வீகமான, அபலைப் பெண்கள். பிறப்பிலேயே குரூரமான தோற்றம் போன்ற காரணங்களால் திருமணம் சாத்தியமற்ற கன்னிப்பெண்களில் படர்ந்து எரியும் தன்னிரக்கம் உலகைக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பாக, பரிவாக, கண்ணீராக மாறுகிறது. அவர்களின் இதயத்தில் ’நிறைவேறாத ஆசை’ முள் போல தைத்திருக்கிறது. ஆனால், அந்த முள் தன்னைத் தவிர உலகிலுள்ள மற்ற எல்லா மனிதர்களிலும் தைத்திருக்கிறது, அவர்கள் அனைவருமே அதை முள்கிரீடம் என சூடியிருக்கிறார்கள் என்று கற்பனைசெய்துகொள்ளும் கன்னிப்பெண்களின் உலகம் அழகுணர்வும், மகிழ்ச்சியும் அற்ற இருண்ட உலகம். ஆனால், இங்கு ஒரு திருமணமாகாத பெண் விஷயத்தில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. வஞ்சம், வைராக்கியம் போன்ற மனநிலைகள் உலகில் இருப்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை. அவர் தன் சொந்த தந்தையை நேசித்தார். தன் சொந்த சகோதரர்களை, அவர்களின் மனைவிகளை நேசித்தார். எல்லாவற்றையும்விட தன் சொந்த சகோதரி கசாண்ட்ராவை(Cassandra) நேசித்தார். தன்னுடைய சுற்றுப்புறம், தன் சமூகச்சூழல் இவற்றுடன் இயைந்து எந்த ஆரவாரமின்றி உற்சாகமாக வாழ்ந்தவர் ஜேன் ஆஸ்டன். சமூகத்துடனான தனிமனித உறவு குலையும்படியான நிலைக்கு ஜேன் ஆஸ்டன் நகரவே இல்லை. பொதுவாக ஒரு மனிதனின் தனித்தன்மைகளை அவனது தனிவாழ்க்கையிலும், குணாதிசய அமைப்பிலும் காண முடியும். ஆனால் நாம் எதிர்பார்க்கும் தனித்தன்மைகள் எதுவுமே ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கையில் இல்லை என்பதுதான் அவரின் வாழ்க்கையின் தனித்தன்மை. கவனிக்கவேண்டிய எதுவுமே இல்லாத மிகச்சாதாரணமான மனநிலை அபூர்வமாக சிலசமயம் அசாதாரணமான ஏதோ ஒன்றின் உறைவிடமாக ஆவதுண்டு. தன் சொந்த அம்மாவோ, குழந்தையோ துர்மரணப்பட்டுக்கிடப்பதை திடீரென காணும் ஒருவன் தன் வழக்கமான நிலையிலிருந்து இம்மிகூட பிசகாமல் அந்த தருணத்தில் எதிர்வினையாற்றுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ‘சாதாரணத்தன்மை’யை நீங்கள் எப்படி வகைப்படுத்துவீர்கள்? ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கையின், அவரது மனதின் சர்வசாதாரணத்தன்மை கிட்டத்தட்ட அதே மாதிரிதான்.
இந்த செயல்பாட்டை யோசித்துப்பார்ப்பது சுவாரஸியமான விஷயம். வாழ்க்கை அனுபவங்கள் சுத்தமாகவே இல்லாத, சுயஎள்ளல் நிறைந்தவரான ஜேன் ஆஸ்டன் ஏதோ சில நாவல்களை எழுதினார். ஒருவன் வாழ்க்கை அனுபவங்களின் மூட்டையை சுமக்காமல் இலக்கியம் என்ற ஆலயத்தின் நுழைவாயிலுக்கு சென்றால், இலக்கியத்தின் புரோகிதர்கள் ஒரு பரிகாசமான சிரிப்புடன் அந்த வாழ்க்கை அனுபவங்கள் என்ற பொதிமூட்டையை சுமக்காமல் அங்கு நுழைந்திருக்கும் பைத்தியக்காரனை அன்றும் இன்றும் வழிமறித்து நிற்பார்கள். அதுவும் ஜேன் ஆஸ்டன் என்ற ‘பட்டிக்காட்டு’ பெண்ணைப்போல இவ்வளவு சுருங்கிய அனுபவங்கள் கொண்ட வேறெதாவது வாழ்க்கை இருக்கிறதா என்ன? ஜேன் ஆஸ்டனுக்கு பெரும்பாலான வாழ்க்கை அனுபவங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒழுக்கில் இயல்பாகவே விலக்கப்பட்டன என்பதுதான் சங்கடமான உண்மை. பெண் என்று சொன்னவுடன் காதல் என்ற சொல்லும் அதன் வேறுவேறு அர்த்தங்களும் நம் மனதில் உடனே தோன்றுகின்றன. 19ம் நூற்றாண்டின் நிலப்பிரபுக்களின் ஒழுக்கநெறிக்கு கட்டுப்பட்ட ஜேன் ஆஸ்டனுக்கு காதல் சார்ந்த அனுபவங்கள் ஒன்றுகூட இல்லை. மனித இயல்புகளின், மனிதனின் பண்பாட்டுப்பரப்பின் கருவறைத்தெய்வமான ‘காமம்’ பற்றிய எந்த அனுபவமும் இந்த பெண்மணிக்கு இருப்பதை காண முடியவில்லை. திருமணவாழ்க்கையின் தோசை போன்ற காமமோ, திருமணத்திற்கு அப்பால் இருக்கும் உணர்வுகள் கொப்பளிக்கும் உலகில் காமம் கிடைக்கும் கடைகளிலுள்ள பல்வேறு திண்பண்டங்களின் மிச்சம் மீதிகள். பாவம், இப்படி எதையும் ஜேன் ஆஸ்டன் சுவைத்துப்பார்த்ததில்லை.
ஆனால், ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கை அனுபவங்களில் உள்ள ’இல்லாமை’களின் பட்டியல் இத்துடன் முடிந்துவிடுவதில்லை. நடுத்தரவர்க்கத்தினர் நிறைந்த அந்த உள்கிராமத்தில் வயது முதிர்ந்த, திருமணமாகாத பெண் ஒருத்தியின் தினசரி வாழ்க்கை என்பது விலக்கப்பட்டவைகளால், செய்யக்கூடாதவைகளால் நிறைந்தது. அதனால் ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கை என்பது செறிவான அனுபவங்களை அடைய விதிக்கப்பட்டது அல்ல. ஒரு திருமணமாகாத பெண் சமூகத்தின் அவமதிப்பிற்கு உள்ளாகாமல், தன்மதிப்புடன், புழங்கக்கூடிய இடங்கள் மிகமிக குறைவு. இளைஞர்களுடன் பழகுவது என்பது திருமண நோக்கம் கொண்ட காதல் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இளைஞர்களுடனான வெறும் நட்புறவு பெண்ணுக்கு விலக்கப்பட்டிருந்தது. இதற்கெல்லாம் அப்பால், செல்வி ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கை என்பது என்றுமே சொந்த கிராமம், குடும்பம் அது சார்ந்த வட்டம் மட்டும்தான். இப்படியான வாழ்க்கை வாழும் ஒரு ஜீவனுக்கு நாவல் எழுதியே தீரவேண்டும் என்று தோன்றினால் அதற்கான தடைகள் வேறு சில இருக்கின்றன.
நாவல் எழுதுவது இருக்கட்டும்- நாவல் வாசிப்பதுகூட நல்ல குலப்பெண்களுக்கு அன்று அவமரியாதையான செயல். (அவ்வாறான அவமரியாதை பற்றிய சித்திரம் ஜேன் ஆஸ்டனின் Northanger Abbeyயிலேயே காணமுடியும்). மானம், மரியாதையுடன் பெண்களை வளர்க்கும் பெற்றோர் தன் சொந்த பெண் நாவல் வாசிப்பதை சம்மதிப்பதில்லை. ராட்க்ளிஃப் (Miss radcliff) போன்ற ’அவமரியாதையான’ பெண்கள் த்ரில்லர் நாவல்கள் எழுதி அன்று சர்ச்சைக்குள்ளாயினர், பணம் சம்பாதித்தனர்; அப்படி நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் நாவலெழுத்து என்பது மாண்புள்ள குடும்பங்களில் விலக்கப்பட்ட விஷயம் என்றுதான் நான் சொல்லவருகிறேன். ஒரு பொழுதுபோக்கிற்காக நாவல்கள் எழுதுவது உண்டு என்றாலும் ’நான் மாண்புள்ள மற்ற பல வேலைகளை செய்து வாழும் கௌரவமான மனிதன்தான்’ என்று vanity fair நாவலை எழுதிய தாக்கரே ஆணையிட்டு சொல்லி மதிப்பை காப்பாற்றிக்கொண்ட காலம்தான் அது. பாழாய்போன குடும்பவாழ்க்கையின் சலிப்பை வெல்ல நோட்டு புத்தகங்களில் மலைமலையாக எழுதிக் குவிக்கப்பட்ட நாவல்களை தன்மானத்தையும், குடும்ப கௌரவத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆண்களைப்போன்ற புனைபெயர் வைத்து பிரசுரித்த ப்ராண்டி சகோதரிகள் (Emily Bronte) காலகட்டம். கிட்டத்தட்ட அதே காலத்தில்தான் தன் வாழ்க்கையை வைத்து நாவல் எழுதுவதற்கு எந்த அருகதையுமெ இல்லாத ஜேன் ஆஸ்டன் நாவல் எழுதினார். செல்வி ஜேன் ஆஸ்டனின் ’விலகல்தன்மை’ ஆஸ்டன் குடும்பத்திற்கு பொதுவாகவே உள்ள இயல்புதான் என்றுதான் தோன்றுகிறது. அந்த ‘விலகல்தன்மை’ இல்லாவிட்டால் வீட்டுச்சூழலில், பொழுதுபோக்கிற்காக என்றாலும் கூட, குடும்பங்களில் மறுக்கப்பட்ட ஒரு கலையை முயற்சித்துப்பார்க்க வீட்டில் இருப்பவர்கள் சம்மதித்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், இந்த குழப்பங்களையெல்லாம் கடந்து அந்த பெண் நாவல் எழுதினார். அன்றைய சூழலில் ரிச்சர்ட்ஸன் (Samuel Richardson) போன்றவர்களின் நாவல்களில் உள்ள மிகையுணர்ச்சி (sentiment), ராட்கிளிஃப் (Miss Radcliff) போன்றவர்களின் பரபரப்பு, மர்மம் போன்ற கூறுகள் அன்றைய வாசகனின் ரசனையை புயல்போல ஆட்கொண்டிருந்தது. இந்த பின்னணியில் இந்த இரண்டு பிரபல முறைகளையும் (மிகையுணர்ச்சி, மர்மம்) பகடிக்குள்ளாக்கும் ‘சாதாரணக்கதைகளை’ ஜேன் ஆஸ்டன் எழுதினார். கண்ணீர் சிந்த வைக்கும் கடுமையான உணர்வெழுச்சிகளை கறாராக தன் புனைவுக்கு வெளியே நிறுத்திய, மர்மமும் பரபரப்பும் ஒரு இடத்தில்கூட இல்லாத வெறும் கதைகள். அதனால் அன்று பதிப்பகத்தார் ஜேன் ஆஸ்டனின் ’pride and prejudice’ நாவலை பதிப்பிக்க மறுத்துவிட்டனர்.
பி.கெ பாலகிருஷ்ணன்ஜேன் ஆஸ்டன் ஏன் நாவல் எழுதினார் என்பதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் அளிக்கமுடியும். அவர் பிறப்பிலேயே ஒரு நாவலாசிரியர் தான். அந்த பெண்மணியின் கூடவே பிறந்த ’மேதைமை (genius)’ என்ற அம்சத்தால் அவர் எங்கே பிறந்திருந்தாலும், எந்த சூழலில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் கலைப்படைப்பு வழியாக தன் ஆன்மாவை வெளிப்படுத்திவிட்ட நிறைவை அடைந்திருப்பார். ’O’ போன்ற சுருங்கிய வட்டத்தில் வாழ்ந்த, வாழ்க்கை அனுபவங்கள் சுத்தமாகவே இல்லாத சுயஎள்ளல் நிறைந்த ஜேன் ஆஸ்டன் நான்கு குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைமுறையை மட்டும் அடிப்படையாகக்கொண்டு எழுதிய வீட்டுவிஷயங்கள் மட்டுமே கொண்ட நாவல்கள் உலக இலக்கியத்தின் விந்தையான இயல்பு கொண்ட நாவல்களாக ஆனதற்கான பதில் ‘மேதைமை(genius)’ என்ற ஒற்றைச்சொல்லில் இருக்கிறது. உலக இலக்கியத்தின் மகத்தான நாவலாசிரியர் யார்? இந்த கேள்விக்கான பதில் வாசகர்களின் வெவ்வேறான அபிப்பிராயங்களைப் பொறுத்து மாறக்கூடியதுதான். தங்கள் அனுபவம் சார்ந்த எல்லை, இலக்கிய ரசனை இவற்றைப் பொறுத்து பலர் பல பெயர்களை சொல்லலாம். ஆனால் உலகின் மிக சிறந்த ஆளுமைகொண்ட நாவலாசிரியர் யார்? எந்தவகையிலும் போலிசெய்ய முடியாதபடியான தனியாளுமை சார்ந்த நாவலை யார் எழுதியிருக்கிறார்? இந்த கேள்விக்கு பதில் ஒன்றுதான் – ஜேன் ஆஸ்டன். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் வால்டர் ஸ்காட்டின்(walter scott), பைரனின்(Byron),நெப்போலியனின் காலத்தில் வெளிவந்தவை ஜேன் ஆஸ்டனின் நாவல்கள். அந்த காலகட்டத்திற்கு பிறகு இங்கிலாந்து, ஏன் உலகமே பெரிய மாற்றத்திற்கு உள்ளானது. இன்று கிளாஸிக்குகளாக மாறிய பெரும்பாலான நாவல்கள் இந்த மாற்றத்திற்கு பிறகுதான் எழுதப்பட்டன. கிளாசிக் நாவல்கள் இன்றும் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன. ஆனால், உங்களால் சமகாலத்தில் வெளிவந்த நல்ல நாவலை வாசிக்கும் அதே சுவாரஸியத்துடன் நல்ல ஒரு கிளாசிக் நாவலை வாசிக்க முடியுமா? ஜேன் ஆஸ்டனின் கலைப்படைப்புகளின் தனித்தன்மையை இங்குதான் உணரமுடியும். மனதிற்கு நெருக்கமான சமகால இலக்கியத்தை வாசிக்கும் சுவாரஸியத்துடன் ( ஒரு கிளாசிக்கை வாசிக்கிறோம் என்ற பிரக்ஞையை, மதிப்பை நம்மில் ஏற்படுத்தாமல்) செல்வி ஜேன் ஆஸ்டனின் படைப்புகளை நாம் இன்று வாசிக்க முடியும். கிளாசிக் நாவல்களின் உயர்ந்த சிம்மாசனத்தில் ஏறி கௌரவமான இடத்தை பெற்றுக்கொள்ளாமல், எல்லா காலங்களிலும் ஜேன் ஆஸ்டனின் நாவல்கள் மட்டும்தான் சமகால ரசனையில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன.
தமிழில் அழகிய மணவாளன்
கோவையில்..
இனிய ஜெயமோகன் அவர்களுக்கு,
கோவை புதிய வாசகர் சந்திப்பு ஒரு இனிய நிகழ்வு. நான் அங்கு வருவேன் என்றும் உங்களுடன் இரண்டு நாள் தாங்குவேன், தங்கி அருகிலிருந்து உங்களை பார்பேன் , உங்களுடன் உரையாடுவேன் என கற்பனை செய்தது கூட இல்லை. நான் அது வரை எங்கும் தனியாக பயணம் சென்றதில்லை, எந்த ஒரு வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டது இல்லை.அனைத்தும் எனக்கும் முதல் முறை.
முதல் காதல், முதல் நட்பு, முதல் முத்தம் யாவும் நம் நினைவில் ஆழமாக பதிவதற்கான காரணம் அவை முதல் முறை என்பதால் மட்டும் அல்ல அவை அமையும் தருணங்களால்தான். அத்தருணங்களை நாம் பலவாறு நம் கற்பனையில் நடித்து இருப்போம். பெரும்பாலும் நாம் எண்ணியபடி அவை நிகழ்வதில்லை, நம் கற்பனைகளை மீறி அவை நிகழும்போது முதலில் நாம் அதிர்ச்சி அடைகிறோம், நம் மனம் அதை உள்வாங்க சற்று நேரம் எடுக்கிறது . மெதுவாக அந்த சூழலை உள்வாங்கி, ஒவ்வொரு கணமாக அதை மீட்டி , நம் கற்பனை மூலம் அதை விரித்து மீண்டும் மீண்டும் நிகழ்த்த விடுகிரோம். அது காலப்போக்கில் ஒரு அழியாத படிமமாய் மாறி நம் நினைவு ஆழத்தில் பதிகிறது. பிறரிடம் அந்த நிகழ்வை பகிரும் பொழுது, நம்மால் அதை தெளிவாக்கி ஒரு வரையறை செய்து கொள்ள முடிகிறது. என்னை தொகுத்து கொள்ள இந்த கடிதம் எழுதுகிறேன்.
இரவு தளத்தில் வாசகர் சந்திப்பு பதிவை பார்த்தவுடன் ஒரு வேகத்தில் விண்ணப்பித்து விட்டேன். இடம் கிடைக்குமா கிடைக்காதா, எப்படி பயணம் செய்வது, அப்பா அம்மா விடம் எப்போது சொல்வது என, பல கேள்விகள் ஓடிக்கொண்டே இருந்தது. என் இடம் உருதியான மின்னஞ்சல் வந்ததிலிருந்து துள்ளிகொண்டே இருந்தேன். அதற்கு பின்னர்தான் அப்பாவிடமும் அம்மாவிடமும் கூறினேன். அவர்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் உருண்டு பிரண்டு பட்டினி இறுந்தாவது அனுமதி வாங்கவேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தேன். பலவாறு ஒத்திகை பார்த்து அவர்கள் பதிலுக்காக காத்திருந்தேன். அங்கு நடந்ததோ வேறு, மறு கேள்வி இல்லாமல் அவர்கள் சம்மதித்து விட்டார்கள், நான் அதை எதிர் பார்க்கவே இல்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாரானேன். உங்களை எப்படி முதலில் பார்ப்பேன், என்ன பேசுவது, நீங்கள் என்ன பேசுவீர்கள் என பல சந்தர்ப்பங்களை நான் என் மனதில் உருவாகி அதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தேன்.
19ஆம் தேதி காலை 5:00 மணி ரயிலில் சேலத்தில் இருந்து கிளம்பினேன். வாசகர் சந்திற்பிர்காக அனுப்பி வைக்கப்பட்ட சிறுகதைகளை படித்து கொண்டே வந்தேன. கோவையில் 8:00 மணிக்கு வந்து இறங்கினேன். நான் முன்னரே கேப் book செய்து இருந்தேன், ஆனால் கடைசி நிமிடத்தில் அவை கிடைக்கவில்லை. முக்கால் மணி நேரம் சென்று விட்டது, சற்று பதற்றம் ஆனது, அங்கு நின்ற வண்டிகளில் ஒன்றை வாடகை பேசி கிளம்பினேன். இடையில் மணவாளன் அண்ணாவிற்கும், கதிர் அண்ணவிற்கும் phone செய்து வழி கேட்டுகொண்டே வந்தேன். வாசகர் சந்திற்பிற்கான நேரம் நெருங்கி கொண்டே இருந்தது. ஒருவழியாக வழி கண்டுபிடித்து நிகழ்விடதிர்க்கு வந்தேன்.
நான் தார் சாலையிலேயே இறங்கி உள்ளே நடந்துவந்தேன். முதலில் கண்ணில் பட்டது மேற்கு தொடர்ச்சி மலை, அதற்கு கீழே அமைந்த சிறிய தென்னந்தோப்பு, அதை சுற்றி இருந்த கரட்டு காடு.குளிர்ந்த காற்று எங்கும் நிறைந்து இருந்தது, பறவைகளின் பாடல்கள் ஒருகணமும் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது, அதற்கு இடையில் எங்கும் நிறைந்த அமைதி, நிசப்தம். நெருங்க நெருங்க மரங்கள் வளர்ந்து கொண்டே இருந்தன. நீல கேட்டிற்குள் நுழைந்து இருபுறமும் வளர்ந்திருந்த தென்னை மரங்களை பார்த்துக்கொண்டே உள்ளே வந்தேன்.
நான் வந்த பொழுது அனைவரும் காலை உணவு முடித்து வெளியில் பேசிக்கொண்டிருந்தனர். நல்ல விசாலமான வீடு. அனைத்திற்கும் அப்பால் என் மனதில் உங்களை எப்போது எப்படி பார்க்க போகிறேன், என்ன பேச போகிறேன் என ஓடிக்கொண்டே இருந்தது. வீட்டிற்கு உள்ளே பையை வைத்துவிட்டு உணவருந்தி வருமாறு கூறினார். உங்களை கண்கள் சுற்றியும் தேடியது நீங்கள் வெளியில் இல்லாததை கண்டு வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நிதானமாநேன்.
வீட்டிற்கு உள்ளே முகம் கழுவ சென்றேன். உள்ளே நுழைந்ததும் பெரிய கூடம், அதற்கு அடுத்து வரவேற்பறை , பாத்ரூம் உள்ளே படுக்கை அறையில் வலது பகுதியில் இருந்தது, ஒரு புறம் கட்டில் இருந்தது. நான் சென்று முகம் கழுவி வெளியே வந்தேன். அப்பொழுதுதான் கட்டிலில் நீங்கள் படுத்து இருப்பதை பார்த்தேன். அப்படியே உறைந்து விட்டேன். நான் சற்றும் எதிர் பார்க்காத முதல் சந்திப்பு. வலது புறம் தலை வைத்து இடது கையை தலைக்கு வைத்து மல்லாந்து படுத்திருந்தீர்கள்.நான் முதலில் பார்த்து உங்கள் கண்களை தான். அவை மை தீட்டியது போல அழகாக இருந்தது. நீங்கள் பெரும்பாலும் கண்ணாடி அணிவதால் உங்கள் கண்களை இமைகளை புறுவங்களை பார்க்க முடிவதில்லை. குமரிதுரைவியின் பின் அட்டை படத்தில் கண்ணாடி இல்லாத ஒரு படம் இருக்கும். வேறு எந்த பேட்டியிலும் உங்களை கண்ணாடி இல்லாமல் பார்த்ததில்லை. ஒரு ஐந்து வினாடி அப்படியே நின்று இருப்பேன். நீங்கள் கண்கள் திறந்து மூடிநீர்கள். நினைவு வந்தது வெளியே சாப்பிட சென்றேன்.
என் உள்ளத்தில் ஒரு சொல்லும் எழவில்லை , I was awestruck. நான் சாப்பிட்டு முடிப்பாதற்குள் அனைவரும் உள்ளே அமர்ந்து விட்டனர்.நான் கடைசி யாக வந்தேன். உரை தொடங்கும் முன் எங்கிருந்தோ ஒரு மயிலகவியது, ஒரு சிறு புன்னகையுடன் உரை தொடங்கியது.தங்களின் உரை ஒவ்வொரு புள்ளியை தொட்டு தொட்டு விரிந்து மண் விட்டு வான் நோக்கி எழும் பருந்தை போல, சுருதி மீட்டி ராக ஆலாபனையில் திளைத்து மேல் எழுந்து கீர்தனைக்கு செல்லும் பாடகரை போல கூடிகொண்டே சென்றது. உங்கள் கைகள் அதற்கேற்ப விரித்தும், ஒன்றை சுட்டிக்காட்டியும் வேறு ஒரு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தது.
அறிவியக்கம் குறித்தும், தொடர் அறிவு செயல் பாட்டை குறித்தும் , அறிவியக்க முன்னோடிகள் குறித்தும் , பாரதி முதல் சுந்தர ராமசாமி வரை ஒரு தொடரை சுட்டி காட்டிநீர். இந்த செயல்பாடு அனைத்து காலத்திலும் தொடரும் ஒரு இயக்கம். வில்லியம் மில்லர், ஊ வே சா, சி சு செல்லப்பா, ரா பி சேது பிள்ளை, முதலிய சென்ற தலைமுறை அறிவியக்க வாதிகளின் பங்களிப்பு என விரித்து கொண்டே சென்றது. Cell மற்றும் cytoplasm முன்வைத்து நீங்கள் கூறிய ஒப்புமை; cytoplasm வாழ்வதற்கே செல், அதுபோல அறிவு செயல்பாட்டினை சுற்றியே மானிட சமூகம் இயங்குகிறது. அவர்கள் தன் அதன் மைய விசை.
பின்னர் சிறுகதை பற்றிய உரையாடல், அதன் தொடக்க, வரலாறு, வடிவம் – twist at the end- சிறுகதை மாஸ்டர்ஸ் , விமர்சனங்களை முன்வைத்தால் தொடர்பான அறிவுறுத்தல்கள், கட்டுரை எழுதுதல், கவிதை மற்றும் மரபார்ந்த கவிதைகான வரையறைகள், வேறுபாடுகள் – loud reading and silent reading, word play and expanding ideas – associative fallacy, falcification போன்ற அடிப்படை தவறுகளை சுட்டி காட்டி அதை திருத்தும் வழிகளை கூறினீர்கள்.இடை இடையில் நகைச்சுவை வெடிக்கும் சிரிப்பு .
அங்கு இருந்த வாசகர்கள் அனைவரிடமும் ஒரு அறிமுகம் கிடைத்தது, பல்வேறு பின்புலத்தில் இருந்தும் , பல்வேறு வாசிப்பு படிநிலைகளில் இருந்தும் அங்கு கூடி இருந்தனர், ஓவியர், மருத்துவர், அரசு ஊழியர், வழக்கறிஞர், என பல துறைகளைச் சேர்ந்தவர்கள். அனைவரும் வெவ்வேறு இடங்களில
வாசிப்பை தொடங்கி, ஏதோ ஒரு புள்ளியில் உங்களை வந்து சேர்ந்து உங்களை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தவர்கள். அவர்களுடனான உரையாடல் மூலம் என்னை என் வாசிப்பு படினிலையை வரையறை செய்து கொள்ள முடிந்தது.
அங்கு வந்த பெரும்பாலானவர்கள் உங்கள் எழுத்து மூலம்மும் அவர்களின் கடிதம் மூலமும் நன்கு அறிந்திருந்தேன்.மணவாளன் அண்ணா, கிருஷ்ணன் sir, கதிர் அண்ணன், சொள்முகம் செந்தில் sir, மீனா அக்கா அனைவரும கதைக்குள் இருந்து எழுந்து வந்தவர்கள் போல பிரம்மிபாக பார்த்து கொண்டிருந்தேன். சு வேணுகோபால் அவர்களின் வருகை மேலும் இனிமை சேர்த்தது, அவருடன் நடந்த உரையாடல், அவர் பகிர்ந்து கொண்ட செய்திகள் அறிவுரைகள் யாவும் ஆரம்ப வாசகர்களாகிய எங்களுக்கு பெரும் கொடை. ஜெயகாந்தன் மேல் அவருக்கு இருக்கும் மரியாதை ஈர்ப்பு, அவரை முதலில் சந்தித்த தருணம், சு ரா வை அவர் சந்தித்த நிகழ்வு, தங்களுடனான முதல் சந்திப்பு என பல அனுபவங்களை கூறினார். சென்ற தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் உள்ள வித்யாசம், நாங்கள் பெரும் வாய்ப்புகள் அவற்றின் முக்கியத்துவம், பற்றி உணரமுடிந்தது. அவற்றை அவர் தொகுத்து கூறிய விதம் , அவரது உணர்வுகளை எளிமையாக எங்களுக்கு கடத்தினார்.
ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் அமைதியாக அனைவரையும் கூர்ந்து கவனித்து கொண்டே இருந்தார், அனைத்தையும் கூர்மையாக கறாராக கூறினார். உங்கள் கட்டுரையில் உள்ளதுபோல அவரை பற்றிய குறிப்புகள் யாவும் சரியாக பொருந்தின.வரிடம் மேலும் உரையாட வேண்டும்.
தேநீர் இடை வேளையில் உங்களுடனான உரையாடல், அது பெளத்தம், வரலாறு, நகைச்சுவை என வேறு ஒரு கிளையாக சென்றது. உரையாடல் முழுவதிலும் நித்யா, நாராயண குரு, அருண்மொழி அம்மா, சு ரா வந்து கொண்டே இருந்தனர்.அங்கு வந்து தான் பலாமரத்தை முதல் முதலாக பார்த்தேன். சென்ற முறை யானை இரங்கியதாக ஒரு செய்தி வந்தது, சரி அதையும் பார்த்து விடலாம் என்று சற்று தேற்றிகொண்டன்.
உங்களை இரண்டு நாள் முழுவதும் கண் கொட்டாமல் பார்த்துகொண்டு இருந்தேன். என்னை அறியாமல் என் முகத்தில் ஒரு புன்னகை இருந்து கொண்டே இருந்தது.இரண்டு நாளும் நீல உடையே அணிந்தீர்கள் -a sweet coincidence. ஒரு வகையான பித்து நிலையில் தான் இருந்தேன். சொல் இன்றி வெறும் விழியாக, உங்கள் ஒவ்வொரு அசைவையும் குழந்தை போல பார்த்து கொண்டு இருந்தேன். என்னுடன் மட்டுமே பேசுவதை போல கேட்டுக்கொண்டு இருந்தேன். ஏன் இப்படி என்று என்னை நானே கேட்டு கொண்டேன். சுரதா கம்பதாசன் காதல் கடித பரிமாற்றத்தை பற்றி நீங்கள் கூறிதை கேட்ட பின் வெடித்து சிரித்தேன், அந்த ஐயம் தெளிந்துவிட்டது.
மேலும் நான் கவனித்த வரை ஒன்று உண்டு, இந்த இரண்டு நாளில் நீங்கள் வெண்முரசு பற்றி ஒரு முறை கூட பேசவில்லை, எந்த ஒரு மேர் கோளும் வென்முரசை ஒட்டி கூறவில்லை.வெண்முரசு என்ற சொல்லைகூட கூறவில்லை. ஒரு முறை intence life மற்றும் அதற்கு பின் வரும் வெறுமை பற்றி கூறும் பொழுது கவிஞர் பிரபாகரனை பற்றி கூறினீர்கள், அதற்கு பின்பு” நான் ஏலு..” என்று கூற வந்து பின்னர் ” சரி அது இருக்கட்டும்” என்று சொல்லி வேறு தலைப்பிற்கு சென்றீர்கள்.
உங்கள் நினைவாற்றல் பற்றி குறிப்புகள் மூலம் அறிந்திருந்தாலும், அன்று தான் கண்கூடாக அறிந்தேன்.நீங்கள் அனைத்தையும் கதையாக மாற்றி நினைவு கொள்வதாக ஒரு கட்டுரையில் கூறினீர்கள், ஓவியம் பற்றி நீங்கள் கூறியது ஒரு நெடுங்கதை போலதான் இருந்தது.இரண்டு நாளும் ஒரு இமைகணம் போல இருந்தது, காலம் செல்லவே இல்லை உறைந்து விட்டது. அனைவரிடமும் 20ஆம் தேதி மாலை, பிரியா விடை பெற்ரேன், தொலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டோம். ரயில் ஏறி மனம் முழுவதும் நிறைந்த நினைவுகளுடன் சேலம் வந்தேன்.
Happiness is your choice , என்று கூறினீர்கள் இது நான் மகிழ்ச்சியாக இருக்க தேர்ந்தெடுத்த பாதை ,மகிழ்ச்சியை நோக்கிய பெரும்பயணதில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மகிழ்ச்சியே, இனி வரும் நாட்களில் இதே செயல் ஊக்கத்துடன் மகிழ்ச்சியுடனும் இருக்க தொடர்ந்து செயலாற்றுவேன்.
இப்படிக்கு
சோழ ராஜா.
பன்னிரு படைக்களத்தின் திருதராஷ்டிரர்
பன்னிரு படைக்களம்…வாசித்து கொண்டு இருக்கிறேன் , திருதராஷ்டிரர் வரும் இடங்களை மிகையுணர்ச்சி இல்லாமல் வாசிக்க முடியவில்லை ஒரு தோள்தழுவி என் உயர் உனக்கு என்று நின்றவர்கள் இன்று எதிரெதிராக நிற்கும்போது மனம் என்னமோ செய்கிறது. உண்மையில் அவர்கள் படைக்களம் ஏந்தி எதிர் எதிராக நிற்கும் போது உணர்வு கொந்தளிப்பு இல்லாமல் எவ்வாறு வாசித்து கடப்பேன் என்றே தெரியவில்லை. மூத்த கௌரவர் என்ன பிழை செய்தார் , தொடக்கம் முதலே ஊழ் எத்தனை சிறப்பாக தன் ஆட்டத்தை ஆடுகிறது !! அவர் வாயுவின் மைந்தன் அல்ல, இந்திரனின் மைந்தன் அல்ல, தர்மனின் மைந்தனும் அல்ல, மண் தோன்றிய இறைவடிவான இளைய யாதவன் அல்ல. பேரன்பே உருவம் என திகழும் விழி இழந்த பேரரசரின் எளிய மைந்தன். அவரின் குருதிக்காகவா இவர்கள் எல்லாம் மண் தோன்றினார்கள். “நிறைவின்மை அன்றி எதையும் அடையக்கூடாதென்பதே தெய்வங்கள் வகுத்தது போலும்” அதற்காகவே கர்ணனைப் போல் எப்போதும் நான் துரியோதனன் பக்கம் இருப்பேன்.
ஏழுமலை
அன்புள்ள ஜெ
வெண்முரசு பன்னிரு படைகக்ளம் வரை வந்திருக்கிறேன். எல்லா கதாபாத்திரங்களும் உருமாறியிருக்கின்றன. கதை எவ்வகையிலும் மாறவில்லை. ஆனால் அக்கதைகளைச் சொன்ன வகையில் அவை எல்லாமே மாறிவிட்டிருக்கின்றன.மகாபாரத்த்தில் கதாபாத்திரங்கள் எல்லாம் சொல்லிச் சொல்லி டைப் ஆக மாறியவை. வெண்முரசு எல்லா கதா பாத்திரங்களையும் சிக்கலானதாக, நாற்புறமும் விரிவனவாக மாற்றிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பிரம்மாண்டமானதாக ஆகிவிட்டன. என் மனதில் இப்போது திருதராஷ்டிரரின் பெருமிதமான இருப்புதான் பெரிதாக தெரிகிறது
சரண்
February 27, 2022
தந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும்
முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு முறை நீண்ட நடைப்பயணம் ஒன்றில் சுந்தர ராமசாமியுடன் நீலபத்மநாபனைப்பற்றி பேச நேர்ந்தது. அப்போது நீல பத்மநாபனின் முழுப் படைப்புகளையும் பற்றி ஒரு பெருந்தொகுப்பு வந்திருந்தது. நீலபத்மநாபனின் நாவல்களைப் பற்றியும் கதைகளைப் பற்றியும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட ஏறத்தாழ அனைத்து கட்டுரைகளுமே அதில் தொகுக்கப்பட்டிருந்தன. அந்த தொகுதியை முதன்மை எடிட்டராக டாக்டர் கே.எம்.ஜார்ஜ் இருந்து ஒருங்கிணைக்க, ஆசிரியர் குழுவில் கே.நாச்சிமுத்து எம்.நயினார் டி.பெஞ்சமின். கே வானமாமலை ஆகியோர் இருந்தனர். பாரதி நேஷனல் ஃபோரம் திருவனந்தபுரத்திலிருந்து வெளியிட்டது. 2001-ல் வெளிவந்தது.
அந்நூல் பற்றி அன்று சொல் புதிது இதழில் வந்த குறிப்பை சுந்தர ராமசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். ’இதேபோல ஒரு தொகுப்பை இன்றைய சூழலில் இன்னொருவர் முயன்று வெளிக்கொண்ர முடியாது குறிப்பாக 1950களில் இருந்தே நீலபத்மநாபனின் படைப்புகளைப்பற்றி எழுதப்பட்ட ஒவ்வொரு வரியும் எடுக்கப்பட்டு இவ்வாறு தொகுக்கப்பட்டு சேர்க்கப்படுவது இயல்வதே அல்ல’ என்றார். ’அவை நீலபத்மநாபனால் தொகுக்கப்பட்ட அவருடைய தனிப்பட்ட கோப்புகளில் இருந்தவை. அந்நூல் நீல பத்மநாபனால் தன்னைப்பற்றி தயாரிக்கப்பட்டது இவர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன’ என்றார்.
நான் அது உண்மையாக இருந்தாலும் கூட சிற்றிதழ் சூழலிலிருந்து வரும் ஒரு நவீன எழுத்தாளருக்கு அப்படி ஒரு பெருந்தொகுதி வருவது ஒரு முன்னுதாரணம்தான். எல்லாவகையிலும் அது வரவேற்புக்குரியது. பிற்கால ஆய்வாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய கொடை. சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் என்றால் ஒழுங்கற்றும் ஆய்வுநோக்கற்றும் இருக்கவேண்டியதில்லை. எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்தாமல் இருப்பது ஒருவருடைய இயல்பாக இருக்கலாம். ஆனால் அது ஒரு நிபந்தனையாக வேண்டியதில்லை. அது ஒரு தனிச்சிறப்பும் அல்ல. ஒரு கலைஞன் காலத்தின் முன்னும் சமூகத்தின் முன்னும் தன்னை முன்வைப்பதில் ஒன்றும் பிழையில்லை என்று கூறினேன்.
அத்தகைய ஒரு பெருந்தொகை சுந்தர ராமசாமிக்கு வருமெனில் அதை நான் வரவேற்பேன் என்று சொல்லி அவரும் தன்னுடைய தனிக்கோப்புகளில் ஏராளமான கடிதங்களையும் குறிப்புகளையும் பிரசுரமான படைப்புகளையும் ஆவணப்படுத்தி வைத்திருப்பதை நான் கண்டிருப்பதையும் குறிப்பிட்டேன். தனிப்பட்ட முறையில் ஆவணப்படுத்தும் வழக்கம் எனக்கில்லை. என்னுடைய அலைந்து திரியும் இயல்புக்கு அது ஒத்துவருவதுமில்லை. ஆனால் அது ஒரு உயர்ந்த பண்பல்ல என்றேன். பின்னாளில் சுந்தர ராமசாமியின் ஆய்வடங்கல்கள் அவருடைய சொந்த சேகரிப்பை ஒட்டியே வரப்போகின்றன என்றும் குறிப்பிட்டேன். சுந்தர ராமசாமி அதிருப்தியுடனேயே இருந்தார்.
சுந்தர ராமசாமி நீலபத்மநாபனைப் பற்றி உயர்வான கருத்து கொண்டவரல்ல. எதிர்மறையாகவே கடுமையாக பேசுவார். ஆனால் தலைமுறைகள் பள்ளிகொண்டபுரம் இருநாவல்களைப்பற்றி அவருக்கு மதிப்புண்டு. அவற்றைப் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். உறவுகள் நாவல் அவருக்குப் பிடிக்கவில்லை. அன்று அதைப்பற்றி பேச்சு திரும்பியது. நான் எழுதிய ஒரு கட்டுரையில் உறவுகள் முக்கியமான நாவல் என்று சொல்லியிருந்தேன். சுந்தர ராமசாமி அதைக்கடுமையாக மறுத்தார். அது வழக்கமான அப்பா செண்டிமெண்ட் வெளிப்படும் ஒரு சாதாரணமான படைப்பு என்று சொன்னார்.
அதில் உள்ள உணர்வு நிலைகள் இயல்பாகவே எல்லாக் குடும்பங்களிலும் பெற்றோர் மேல் மகன்களால் வெளிப்படுத்தப்படுபவை. பொதுவழிப்பாதையில் வெளிப்படும் அவ்வுணர்வுகளை அப்படியே பதிவு செய்வது இலக்கியத்தின் பணி அல்ல என்று சுந்தர ராமசாமி சொன்னார். அதற்கப்பால் உளவியல் ஆழங்களுக்குச் சென்று தந்தையின் மகனின் உறவுகளின் உள்ளடுக்குகளை ஆராய்வதே இலக்கியத்தின் பணி. உண்மையில் தந்தை மகன் எனும் உறவு இந்நாவலில் சொல்லப்படுவது போல ஒற்றைப்படையானது அல்ல என்றார் சுந்தர ராமசாமி.
நீலபத்மநாபனின் நாவலில் தந்தைக்கும் ராஜகோபாலுக்கும் இடையே எந்த கருத்து முரண்பாடும் இல்லை. ஆளுமை மோதல் எங்குமே இல்லை. தந்தையின் மீதான ஒவ்வாமைகள் என்று எதையும் மகன் நினைவுகூர்வதுமில்லை. இப்படி முழுமையான வழிபாட்டுணர்வு என்பது செயற்கையானது வலிந்து புனையப்படுவது தந்தை மகனும் இரு காலகட்டங்களைச் சார்ந்தவர்கள். தந்தை மகனைத் தன் நீட்சியாக கருதுகிறார். மகன் அதை எதிர்க்கிறான். தன் தனித்தன்மைக்காக அவன் போராடுகிறான். ஆகவே அவர்களுக்குள் இருக்கும் மோதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிராய்டிய நோக்கில் அது இரு ஆண்களுக்கிடையேயான மோதலும் கூட. அவ்வாறு பிராய்டிய இருத்தலிய அடிப்படையில் ஆண்பெண் உறவையும் தந்தை மகன் உறவையும் நுணுகி ஆராய்வதே இன்றைய இலக்கியவாதிகள் செய்ய வேண்டியது. பிராய்டு நூறு கிலோமீட்டர் ஓடி வந்துவிட்டபிறகு மூன்றாவது கிலோமீட்டரில் ஒற்றைக்காலில் தத்தி தத்தி வந்துகொண்டிருப்பவர் நீல பத்மநாபன் என்று சுந்தர ராமசாமி சொன்னார்.
நான் அதை கடுமையாக மறுத்தேன். சுந்தர ராமசாமிக்கும் நீலபத்மநாபனுக்கும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். முறையாக பிராய்டை படித்திருந்தேன். சுந்தர ராமசாமி உட்பட தமிழ் எழுத்தாளர்களைப் போலன்றி பிராய்டிய உளவியல் ஆய்வாளர்களுடன் சிலருடன் நேரடி தொடர்பும் உண்டு. பிராய்டிய சிந்தனை கொண்ட பேராசிரியர் எம்.என்.விஜயனுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தேன். டாக்டர் ரிதுபர்ணன் டாக்டர் என்.சந்திரசேகரன் ஆகியோரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.அத்துடன் உளவியல் அறிஞரான நித்ய சைதன்ய யதியுடன் அணுக்கமாகி இருந்தேன். உளவியல் மறுப்பாளரான ஆர்.டி.லெய்ங்-ஐ ஊட்டியில் நேரில் சந்தித்து உரையாடியிருந்தேன்.
ஆகவே நான் ஃப்ராய்டை ஒர் அறிவியலுண்மையை முன்வைத்தவராக நினைக்கவில்லை. அவருடையது ஓர் ஆய்வுக்கருவி, அல்லது ஒரு வகை ஊக முறை – அவ்வளவுதான். நித்ய சைதன்ய யதி வழியாக நான் அன்று கார்ல் யுங்கை படித்துக்கொண்டிருந்தேன். சொல்புதிது இதழில் சி.ஜி.யுங் எழுதிய கட்டுரைகளின் மொழியாக்கங்கள் அன்று வெளிவந்தன. மேலும் அன்று நரம்பியல் துறை மனம் என்பதையே மறுவரையறை செய்து ஃப்ராய்டை வெறும் இலக்கிய ஆசிரியனாக தள்ளிவிட்டிருந்ததை நான் வாசித்து அறிந்துகொண்டிருந்தேன். சொல்புதிதில் ஆலிவர் சாக்ஸ் போன்றவர்களின் கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன.
இதற்கப்பால் எனக்கு என் தந்தையுடன் முரண்பாடும் கசப்பும் கொண்ட உறவுதான் இருந்தது. நீலபத்மநாபன் உறவுகளில் சொல்லப்படுவதுபோல அல்ல என்னுடைய உறவு. சுந்தர ராமசாமிக்கும் அவரது தந்தைக்குமான உறவும் என் தந்தையுடனான உறவுபோலத்தான். ஆனால் எங்கள் மதிப்பீடுகளை நீலபத்மநாபன் மேல் ஏற்றவேண்டிய தேவை இல்லை என்று நான் சொன்னேன். இந்திய சூழலில் தந்தை மகன் உறவை தீர்மானிப்பதென்பது பிராய்டிய உளச்சிக்கல்கள் அல்ல. அவை பிராய்டின் பார்வைகளே ஒழிய மனித குலத்துக்கு எப்போதைக்குமான வரையறுக்கப்படும் அறிவியல் உண்மை அல்ல சில நுட்பங்களைப் புரிந்துகொள்ள் அத்தகைய உளவியல் கருத்துகள் உதவியாக இருக்குமே ஒழிய அவற்றை அறுதியாக கொள்ள வேண்டிய தேவை இல்லை. நவீனத்துவம் சார்ந்த எதிர்மறை உளநிலையே ஃப்ராய்டிசம் முன்வைக்கப்பட்டதுமே அதை அப்படியே ஏற்கச்செய்கிறது. அதைவிட பலமடங்கு விரிவான, ஆழமான உளஅவதானிப்புகள் இந்திய யோகமுறைகளில் உண்டு என்றேன்.
இந்திய சூழலில் தந்தை மகன் உறவென்பது உபநிஷத் காலத்திலிருந்தே பல்வேறு வண்ணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சாந்தோக்ய உபநிடதத்தில் வரும் ஆருணியாகிய உத்தாலகருக்கும் அவர் மகன் ஸ்வேதகேதுவுக்குமான உரையாடல் ஒரு உதாரணம். நசிகேதனின் தந்தைக்கும் அவனுக்குமான உறவு இன்னொரு உதாரணம். மகாபாரதம் தந்தை மகனுறவின் பல தளங்களாக விரித்துரைக்கும் ஒரு பெரும் படைப்பு.இங்குள்ள தந்தை மகன் உறவென்பது எளிய ஈடிபஸ் காம்ப்ளெக்ஸால் விளக்கத்தக்கது அல்ல. அது மேலும் விரிந்தது. யயாதிக்கும் புருவுக்குமான உறவு பிராய்டு கற்ப்னை செய்ததை விட மேலும் சிக்கலானது. மேலும் பல தளங்கள் கொண்டது.
மகாபாரதத்தில் வரும் உத்தாலகன் ஸ்வேதகேது உறவும் சரி, தேவிபாகவதத்தில் வரும் ஹிரண்யாக்ஷனுக்கும் பார்வதிக்குமான உறவும் சரி மிக நேரடியாகவே ஈடிபஸ் உளச்சிக்கலை சொல்லுவன. சொல்லப்போனால் ஃப்ராய்ட் நினைத்ததை விட விரிவாகவும் கூர்மையாகவும். ஆனால் அதற்கப்பாலும் இந்திய மரபில் தந்தை மகன் உறவென்பது ஆசிரியன் மாணவன் என்ற தளமும் கொண்டது. இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுடைய முதல் ஆசிரியர் தந்தையே. பழைய காலகட்டங்களில் குலக்கல்வி தந்தையிடமிருந்தே பெறப்பட்டது. குலமுறையாக வரும் கலைகளும் அவ்வாறே அளிக்கப்பட்டன. இன்றும் கலைகளில் தந்தையிடமே முதல் அறிமுகத்தை பெறுகிறார்கள். அங்கு முதன்மை பெறுவது ஆசிரியர் மாணவர் என்ற உறவே ஒழிய உயிரியல் உறவல்ல.
தந்தை மகனின் உறவென்பது இந்திய சூழலில் வழித்தொடர்தல், வாரிசாதல் (Inheritance)என்னும் இன்னும் சிக்கலான உணர்வைச் சார்ந்தது. தந்தையின் தொடர்ச்சியாக தன்னை உணர்வதும், தந்தையின் ஆளுமையிலிருந்து மாறுபட்டு ஒரு ஆளுமையை தனக்கென உருவகித்துக்கொள்வதும், அதிலிருக்கும் முரண்பாடுகளும் தான் இந்தியாவில் தந்தை மகன் உறவை தீர்மானிக்கின்றன. எந்த வகையில் தந்தையை எடுத்துக்கொள்வது, எந்த இடத்தில் பொருத்திக்கொள்வது என்பதே இந்திய மகனின் சிக்கல். தந்தை இருக்கும் வரை அவருடைய வளரும் ஆளுமையை முழுமையாக தொகுத்துக்கொள்ள முடியாததனால் அவன் எப்பொழுதும் உளச்சிக்கலுக்கு ஆளாகிறான்.
தந்தையை வகுத்துக் கொள்ளுதற்கு அவருடைய அணுக்கம் தடையாக இருப்பதனால் வயது வந்த பிறகு அவரிடமிருந்து விலகிச் செல்லத்தொடங்குகிறான். உளத்தாலும் உடலாலும் விலகுகிறான் அவர் மேல் கேலியையோ விமர்சனத்தையோ வளர்த்துக் கொள்கிறான். அவரிடமிருக்கும் தீவிரமான பற்றை குறைத்துக் கொள்ளும் பொருட்டு கேலி, விமர்சனம் போன்ற உளவியல் நாடகங்களை அவன் ஆடுகிறான்.ஆனால் அகலமுயன்று அணுகும் உறவு அது.
இந்திய சூழலில் தந்தை மகன் உறவு மேலும் சிக்கலாக்குவது இங்குள்ள கடுமையான வாழ்க்கைப் போட்டி பிற நாடுகளைப் போலன்றி இந்தியாவில் ஒரு தந்தை தன் முழுவாழ்நாளையும் மைந்தருக்கு செலவழித்தாலன்றி மைந்தரை சமூகத்தில் முதன்மைப்படுத்த முடியாது .அவையத்து முந்தியிருப்பச் செயல் என்பது தந்தையின் கடமையாக ஔவையால் சொல்லப்படுகிறது. தன்னையே தன் மைந்தருக்கு பலியிடுதல் என்பது இங்குள்ள தந்தைக்கான முன்னுதாரணமான வடிவமாக முன்வைக்கப்படுகிறது. மகனென்னும் நீ நானேதான் என்று உபநிஷத் கூறுகிறது. அந்த கொடையைப் பெற்றுக்கொள்ளும் மகனின் குற்றவுணர்வும் அதை வெல்லும் பொருட்டு அவன் உருவாக்கும் பலவிதமான உளநாடகங்களும்தான் முதன்மையாக இந்தியத் தந்தைமகன் உறவை தீர்மானிக்கின்றன. பிராய்டு சொல்வது போல அற்பமான பாலியல் முக்கோணம் அல்ல. ஒருவேளை அது அவ்வுறவில் இருந்தாலும் கூட மிக குறைவானதே. புறக்கணிக்கப்படும் அளவுக்குச் சிறியது.
இந்தியக் குடும்பங்களின் உறவென்பது இன்று தனிக்குடும்பங்களானாலும் கூட கூட்டுக்குடும்ப தன்மை உடையது தனிவீடுகளுக்குள் இருக்கும் ஒரு பெருங்கூட்டுக்குடும்பம் என்று இந்தியாவுடைய குடும்பங்களைச் சொல்ல முடியும். தந்தை மட்டுமல்ல தந்தையின் உடன்பிறந்தார்களும் தந்தையின் இடத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்களும் தந்தையின் இடத்தில் இருக்கிறார்கள். அதற்கிணையாகவே தாய்மாமன் இங்கு தந்தையின் இடத்தில் இருக்கிறார். இங்கு ஒருவனுக்கு தந்தை என்பது தந்தையர் என்றே பொருள் படுகிறது தந்தையர் நிரை என்ற சொல்லையே நாம் கவிதைகளில் பார்க்க முடியும். அங்கு ஒரு தனி மனிதன் தந்தையாக இருக்கிறான், கூடவே தந்தையர் என்னும் பெரும் கருத்துருவின் வடிவமாகவும் இருக்கிறான்.
தந்தை என்பவன் ஒரு கூட்டு ஆளுமையாக ஒரு தொகுப்பு அடையாளமாகவே இருக்கிறான். ஒரு கருத்துருவமாகவே அவனை அணுக முடிகிறது. தந்தை மரபின் அடையாளமாக சென்ற காலத்தின் அடையாளமாக சமூகத்தின் ஒட்டுமொத்தத்தின் அடையாளமாகவே இருக்கிறான். ஆகவே அவன் இங்கே ஒரு மாபெரும் அதிகாரம். ஒருநவீன மேலைநாட்டுச் சூழலில் மைந்தன் மேல் தந்தையின் அதிகாரம் இத்தனை முழுமையானதோ அனைத்து திசைகளிலிருந்தும் சூழ்ந்து கொள்வதோ அல்ல.
இந்தியா மூத்தோர் வழிபாடு நிறைந்த நாடு. அகவை முதிர்ந்த ஒவ்வொருவரும் தந்தையின் இடத்திற்கு செல்கிறார்கள். துறவியர் அரசியல் தலைவர்கள் தந்தை வடிவமாக போற்றப்படுகிறார்கள். இறைவன் அப்பனே அப்பனே என்று தந்தைவடிவமாக இங்கு நிறுவப்பட்டிருக்கிறான். பெருந்தந்தை என்னும் கருதுகோள் இந்திய உள்ளத்தை ஆட்டுவிக்கிறது. காந்தியோ காமராஜோ ஈ.வெ.ராமசாமியோ தந்தை வடிவமாகவே வந்து அடைகிறார்கள். இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாசரோ இங்கே தந்தை உருவம்தான்.
இந்தக்கருத்துருவை எதிர்கொள்வதிலுள்ள சிக்கல்கள் என்ன உளத்தயக்கங்கள் என்ன என்பதை இன்று ஒரு நவீன இந்திய எழுத்தாளன் ஆராய வேண்டும். மாறாக துருப்பிடித்துப்போன பிராய்டிய உளப்பகுப்பாய்வு முறைகளையோ இருத்தலியல் கருதுகோள்களையோ கொண்டு இவ்வுலகுக்குள் அவன் நுழைவானாயின் அபத்தமான ஒற்றைப்படையான நாவல்களையே எழுதமுடியும்.
மார்க்சியக்கொள்கைகளையே சட்டகமாகக் கொண்டு எழுதப்படும் முற்போக்கு எழுத்திற்கும் பிராய்டிய கொள்கையைச் சட்டகமாகக்கொண்டு எழுதப்படும் நவீனத்துவ எழுத்திற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? அது தட்டையான கருத்துப் பிரச்சாரமாக ஆகும்போது இது எப்படி கலைப்படைப்பாகவும், உள ஆய்வாகவும் ஆகமுடியும்?
எழுத்தாளன் ஒன்று வரலாற்றுப் பிரக்ஞையுடன் தத்துவப்பிரக்ஞையுடன் தந்தை எனும் கருதுகோள் பல்லாயிரம் வருடங்களாக இங்கு எவ்வாறு நிலை பெற்றது ஆட்கொள்கிறது நீடிக்கிறது என்பதை உசாவி எழுதலாம். பிரதர்ஸ் கரமசோவ் போன்ற ஒரு பெரும்படைப்பாக அது மாறலாம். அன்றி நீலபத்மநாபன் எழுதுவது போல எந்த மேலதிக வாசிப்பும் தத்துவ உசாவலும் வரலாற்றுணர்வும் இன்றி தன்னை மட்டுமே நேர்மையாக வைக்கும் கள்ளமற்ற ஒரு வகையான எழுத்துமுறைக்குச் செல்லலாம்.
அத்தகைய ஒரு படைப்பு உருவாகும்போது அதன்மேல் எளிமையான ஃப்ராய்டிய ஒற்றைச்சட்டகத்தைப் போடுவதென்பது மார்க்ஸியர் எந்த நூல் கையில் கிடைத்தாலும் தங்கள் கருத்தியல் அளவுகோல்களை போட்டுப்பார்க்கும் இயந்திரத்தனத்திற்கு நிகரானது. நான் அன்று சுந்தர ராமசாமியிடம் விவாதித்துவிட்டு வீட்டுக்கு வந்தபின் விரிவாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நாகர்கோயிலில் இருந்தே நாகர்கோயில் விலாசத்துக்குக் கடிதம். அதெல்லாம் அன்று சாதாரணம்
(மேலும்)
பனிமனிதன் – வாசிப்பு
பொங்கல் விடுமுறையில் நான் படித்த புத்தகம் ‘ பனி மனிதன் ‘.சின்ன குழந்தைகளுக்கான fantasy கதை போல இல்லாமல் நிறைய யோசனை செய்ய வைத்தது.இது ஒரு Adventurous கதை. படிக்க ஜாலியாக இருக்கும்.மொத்தம் 215 பக்கங்கள்.44 chapters படிப்பதே தெரியாது போய்க்கொண்டே இருக்கும்.எளிமையான எழுத்துநடை.Science,Geography,philosophy, spirituality,comedy எல்லாம் கலந்த ஒரு கதை.
கதை
பனி மனிதர்களை தேடும், கேப்டன் பாண்டியனின் journey தான் இந்த கதை.ஒரு டாக்டர் மற்றும் மலை வாழ் சிறுவன் கிம் இருவரும் அவருடன் செல்வார்கள். பனி மனிதர்களை எப்படி சந்திக்கிறார்கள்? போகும் வழியில் சந்திக்கும் வித்தியாசமான உயிரினங்கள் , பனி மனிதர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? பரிணாம வளர்ச்சி. இதையெல்லாம் விளக்குவதே இந்த கதை.
கதையில் எனக்கு பிடித்தவை:
தத்துவம் :இந்தப் புத்தகத்தில் நிறைய Philosophical facts இருந்தது. ஒவ்வொன்றையும் நான் குறித்து வைத்துள்ளேன்.
தியானம் என்பது கண்களை மூடிக்கொண்டு நம் மனத்தில் ஓடும் எண்ணங்களைக் கூர்ந்து கவனிப்பதாகும். அப்படிக் கவனித்தால் மெதுவாக நமது எண்ணங்கள் ஒழுங்காக ஆகிவிடும். நம் மனம் மிகவும் அமைதி அடைந்துவிடும். இதை வெகு நாள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
பௌத்த மதத்தில் பல விதமான தியானப் பயிற்சிகள் உண்டு. அவற்றை பிட்சுக்கள் சிறுவயதிலேயே குழந்தைகளுக்குக் கற்றுத் தருவார்கள். அவற்றைத் தொடர்ந்து செய்யும் குழந்தைகளுக்கு ஞாபகசக்தி அதிகமாக இருக்கும். பொறுமையும் அதிகமாக இருக்கும்.
‘ஞானம் உடையவர்களை எவ்வாறு அறிவது?”
“வளர்ச்சி அடைந்த மனம் உடையவர்கள்தான் ஞானிகள். அவர்களுக்கு நான் என்ற உணர்வு இருக்காது. எனவே பேராசை இருக்காது. பேராசை இல்லாததனால் அவர்கள் எதையுமே தனக்கென வைத்துக் கொள்ள மாட்டார்கள். சொந்தமாக ஏதும் இல்லாமல் இருப்பதனால் அவர்களுக்கு மற்றவர்கள் மீது பயம் இருக்காது. எனவே பொறாமையோ கோபமோ அடைய மாட்டார்கள். எதை இழந்தாலும் அவர்களுக்குத் துக்கம் ஏற்படாது. அதாவது மனம் எப்போதும் அமைதியாக இருப்பவர் எவரோ அவர்தான் ஞானி”
அறிவியல்:சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சியை easy ஆக விளக்கியிருந்தார் .
“மனிதனிலும் பரிணாம மாற்றம் நடைபெறுகிறது. ஆனால் மனிதனின் வாழ்நாள் அதிகம். அதனால் மாற்றம் தெரியப் பல ஆயிரம் வருடங்கள் ஆகும். நாற்பது கோடி வருடம் முன்பு பூமி மீது பலவகையான குரங்குகள் இருந்தன. அவற்றில் சில வகைக் குரங்குகள் வாழ்ந்த சூழல் மாறுபட்டது. பூமி மீது குளிர் குறைந்தபோது அவற்றின் உடலில் முடியும் குறைந்தது. மரங்கள் குறைந்தன. எனவே அவை அதிகமாகத் தரையில் நடக்க ஆரம்பித்தன. அதனால் படிப்படியாக அவற்றின் முதுகு நிமிர்ந்தது. அவை மென்மையான உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தன. எனவே அவற்றின் வாய் சிறியதாக ஆயிற்று. அதாவது, அவை படிப்படியாக மனிதனாக மாறின”
சில குரங்குகளுக்கு உடல் வேகமாக மாறியது. சிலவற்றுக்கு மூளை வேகமாக வளர்ந்தது. வேகமாக மாறிய குரங்கு மனிதர்கள் மற்ற குரங்கு மனிதர்களைத் தோற்கடித்தார்கள். மனிதன் உருவான பிறகு மனிதர்கள் குரங்கு மனிதர்களைத் தோற்கடித்தார்கள். அவர்களைக் கொன்றார்கள். இப்படித்தான் மனிதர்களின் இனம் பூமி மீது எங்கும் பரவிப் பெருகியது. குரங்கு மனிதர்கள் படிப்படியாக இல்லாமல் ஆனார்கள்.”
மண்டை ஓடை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .
மண்டை ஓடுகளை வைத்துக்
கொண்டு மனித இனத்தை ஆராய்ச்சி செய்யலாம். அதற்கு மண்டை ஓட்டியல் என்று பெயர்.
மண்டை ஓட்டியல் நிபுணர்கள் மண்டை ஒட்டுக்குள் உருக்கிய ரப்பரை ஊற்றி உறைய வைப்பார்கள். பிறகு அதைப் பிரித்து எடுத்தால் அந்த உயிரினத்தின் மூளை மாதிரியே இருக்கும்.
Spirituality ( Buddhism ):
இந்த புத்தகத்தில் கிம் ஒரு மலை வாழ் சிறுவன்.
எப்போதும் புத்தரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பான். வழியில் நிறைய வைரங்களை அவன் பார்த்தாலும் எதற்கும் ஆசைப்பட மாட்டான்.கடைசியில் அவன் மகாலாமா வாக ஆகி விடுவான். இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த கேரக்டர் கிம்.
புத்தரைப் பற்றி இந்த புத்தகத்தில் இருக்கும் விஷயங்கள்.
“ஏன் பனி மலையை புத்தரின் மனம் என்கிறார்கள்?”
“ஏனென்றால் இங்கு எல்லாமே தூய்மையாக உள்ளன. தூய்மையாக இருக்கும்போது பூமியும் வானம் போல ஆகிவிடும். இங்கு எந்த ஒலியும் இல்லை. தியானம் செய்யும் புத்தரின் மனம் போல இந்த இடம் அமைதியாக இருக்கிறது”
4.ஒவ்வொரு chapter யிலும் ஒரு gk fact இருந்தது.ரொம்ப useful facts.
5.ராணுவ வீரர்கள் பழைய கடிதங்களை படித்து தங்கள் உறவினர்களை நினைப்பது,ராம பிதாகஸ்- ராமனின் வாலில்லா குரங்கு, மீண்டும் பிறக்கும் புத்தர்- மைத்ரேயர், கோயில்களில் காணப்படும் யாளி,வெற்றி தோல்வி இல்லாத போட்டி இல்லாத பனிமனித குழந்தைகளின் விளையாட்டு, மலத்திற்கும் சாணிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.
ஜெயமோகன் அவர்களை பற்றி
இவர் எழுதி நான் படிக்கும் இரண்டாவது புத்தகம் தான் பனிமனிதன். வெள்ளி நிலம் ஏற்கனவே படித்து விட்டேன். என் பாட்டி, மாமா ரெண்டு பேரும் இவரின் தீவிர fans.நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.இவரின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.அறம்,வெண்முரசு, விஷ்ணுபுரம் போன்ற புத்தகங்களை பிற்காலத்தில் படிப்பேன்.
நன்றி
ரியா ரோஷன்
ரா.கிரிதரன் நூல்கள்
கிரிதரன் நான் எப்போதும் வியந்து நோக்கும் பொறாமை கொள்ளும் சிறுகதைகளை எழுதியவர். நாக்கில் பட்டதும் ‘சுர்ரென்று’ இருக்கும் துரித உணவின் உப்புச் சுவை போல ஒரு செயற்கையான நெகிழ்ச்சியே தமிழ்ச் சிறுகதையின் இன்றைய மையப்போக்கு என இந்த சமூக ஊடக வெளி நம்மை நம்ப வைத்துவிடும் அபாயம் நிறைந்த ஒரு காலத்தில் கனமான கதைக்கருக்களையும் அக்கருக்களை சிதைக்காத முதிர்ச்சியும் நிதானமும் கலந்த மொழிநடையும் இத்தொகுப்பினை பிரத்யேகமான ஒன்றாக மாற்றிவிடுகிறது. தமிழ்ச் சிறுகதை பரப்பின் மீதான நம்பிக்கையை மறு உறுதி செய்கிறது.
சுரேஷ் பிரதீப்
நிமிர்வு- கடிதங்கள்-2
அன்புள்ள ஜெ., அவர்களுக்கு,
இன்று “நிமிர்பவர்களின் உலகம்” கட்டுரையில் படித்த வரிகள்…
“ஓர் எழுத்தாளனைப் பார்த்து மகிழ்வுடன் அருகே செல்லும் வாசகன், அவனிடம் ஓரிரு சொற்கள் பேசி படம் எடுத்துக்கொள்பவன், நூலில் கையெழுத்து வாங்கிக் கொள்பவன் இருக்கும் நிலை இலக்கியம் அளிக்கும் பரவசத்தில் ஒன்று. அந்த எழுத்தாளன் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும், தன்னை ‘மதிக்கவேண்டும்’ என்றெல்லாம் அந்த வாசகன் எதிர்பார்ப்பதில்லை. அது அவனுக்கு அவனே அளித்துக்கொள்ளும் வெகுமதி. இலக்கியத்தைக் கொண்டாடுவது அது.”…
இது முற்றிலும் உண்மை… என் அனுபவத்தில் இதுவே நிகழ்கிறது திரும்பத் திரும்ப.. உங்களை கோவையில் பல முறை வந்து தொலைவில் நின்று பார்த்துச் செல்பவன் நான்.. அதுவே ஒரு வெகுமதிதான்.. எழுத்து வழியாக வெளிப்படும் ஆளுமைகள், நனவிலும் அவ்வாறே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று தெளியும்போதுதான், வாசிப்பவன் வாசகனாக மாறத்தொடங்குகிறான..
அன்புடன்,
தயானந்த்
அன்புள்ள ஜெ
நிமிர்பவர்களின் உலகம் ஓர் அற்புதமான கட்டுரை. இங்கே எழுதுபவர்கள் வாசிப்பவர்கள் இருவருக்குமே ஓர் இலட்சியவாத அணுகுமுறை தேவையாகிறது. இல்லாவிட்டால் இங்கே செயல்பட முடியாது. நாம் எழுதியும் வாசித்தும் நமக்கு அப்பாற்பட்ட ஓர் உலகை உருவாக்கிக் கொள்கிறோம் என்பது எவ்வளவு அற்புதமான வார்த்தை. நாம் ஒருவரை ஒருவர் உணரும் தருணம்தான் அந்த சந்திப்புகள், புன்னகைகள், கைகுலுக்கல்கள்.
சுஜாதா தி.ஜானகிராமனைச் சந்தித்ததைப் பற்றி எழுதியிருப்பார். ஒரு மேடையில் இருந்து தி.ஜா. இறங்கிச் செல்லும்போது சுஜாதா அவரைப் பார்க்கிறார். ஒரு புன்னகை, அவ்வளவுதான். ஆனால் அதை பத்திரமாக வைத்துக் கொண்டேன் என்று சொல்கிறார்.
மறைந்த ஃப்ரான்ஸிஸ் கிருபா என் தோளில் தொட்டு தமிழினி ஸ்டால் எங்கே இருக்கிறது என்று கேட்டார். அந்த தொடுகை இப்போதும் என் தோளில் இருக்கிறது
செல்வக்குமார்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

