Jeyamohan's Blog, page 825
February 17, 2022
அளவை – ஒரு சட்ட இதழ்
ஆசிரியருக்கு,
நீங்கள் கடந்த மாதம் ஈரோடு வந்தபோது நாம் நேரில் பேசியது தான். இதோ குறித்த நேரத்தில் இந்த இதழ் வெளியாகிவிட்டது.
இது “அளவை” என்ற பெயரில் மாதம் இருமுறை வெளியாகும் அரசியல் சார்பற்ற இணைய சட்ட இதழ். எங்களுக்கு வந்து சேரும் தீர்ப்புகள் அதன் எண்ணிக்கை குவியலால் கவனம் இழந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க இதில் இடம்பெறும் தீர்ப்புகள் கவனத்துடன் தேர்வு செய்து அதை சுருக்கமாக தமிழில் விளக்கி பின் அந்த தீர்ப்பை படிக்கத் தருகிறோம்.
இணைப்பு :
அளவை இணையப்பக்கம்கிருஷ்ணன்,
வழக்கறிஞர், ஈரோடு.
அன்புள்ள கிருஷ்ணன்,
நல்ல முயற்சி. இன்று ஒவ்வொரு துறையிலுமுள்ள சிக்கல் என்னவென்றால் அத்துறை சார்ந்த தேர்ந்த உரையாடல் இல்லை என்பது. தொழில்நுட்ப மொழியில் அல்லாமல் இயல்பான உரையாடலாக ஒவ்வொரு துறையிலும் இவ்வாறு நிகழும்போது தனிநபர் திறன்கள் ஓங்கும். உண்மையில் வாழ்க்கையே கொஞ்சம் சுவாரசியமாக ஆகும்.
இங்கே எதையுமே வேலை என மட்டுமே கொள்ளும் மனநிலை உண்டு. வேலையை கூடுமானவரை தள்ளிப்போடும், சமாளிக்கும் மனநிலையும் உண்டு. அம்மனநிலையை எதிர்கொண்டுதான் இதைச் செய்யவேண்டியிருக்கும்.
சில ஆலோசனைகள்
அ. முழுக்கமுழுக்க சட்டம் சார்ந்தே நடத்துங்கள். பொதுவாசகர்கள் சட்டம் பற்றிய ஆர்வமிருந்தால் படிக்கட்டும். வேறு எதை உள்ளே கொண்டுவந்தாலும் எங்கும் நீக்கமற நிரம்பியிருக்கும் அரசியல் உள்ளே வரும். இங்கே அரசியல் என்பதே சாதி,சமயப்பூசல்தான்.
ஆ. எதிர்வினைகள் தெளிவாகவும் விரிவாகவும் இருக்குமென்றால் தனியாக வெளியிடுங்கள். விவாதங்கள் எந்த ஒரு நல்ல இதழுக்கும் அவசியமானவை
இ. ஈரோட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். ஆனால் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் வெளியிடலாம்
ஈ.சட்டம் சம்பந்தமான கட்டுரைகளின் மொழியாக்கங்களை வெளியிடலாம். ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யும்போது சுருக்கி, தெளிவாக மொழியாக்கம் செய்யலாம். ஏனென்றால் சட்டமொழி ஏற்கனவே சிக்கலானது. அதை தமிழில் மேலும் சிக்கலாக ஆக்கினால் பயனில்லை. கட்டுரைகளின் சாராம்சச் சுருக்கம் இன்னும் நல்லது (மூலச் சுட்டியுடன்) என்பது என் கருத்து.
உ.சட்டத்துறையின் முக்கியமான ஆளுமைகளை அறிமுகம் செய்யலாம். பேட்டிகள் வெளியிடலாம். பேட்டிகளை மொழியாக்கம் செய்யலாம்
ஊ. சட்டத்துறையின் சென்றகால வரலாறு குறித்தும் எழுதலாம். உதாரணமாக கோமல் அன்பரசன் எழுதிய ‘தமிழகத்து நீதிமான்கள்’ ஒரு நல்ல நூல். தமிழகத்தின் புகழ்பெற்ற நீதியரசர்களைப் பற்றியது. அத்தகைய நூல்களை அறிமுகம் செய்யலாம். அதைப்போல முக்கியமானவர்களைப் பற்றி எழுதலாம்
எ.தமிழகத்தின் எல்லா பகுதியினரும் பங்களிக்கலாம்.
எந்த முயற்சியும் உண்மையானது என்றால் மெல்லமெல்ல அதற்கான வாசகர்கள் வருவார்கள்
ஜெ
அருண்மொழி விழா, யோகேஸ்வரன் ராமநாதன்
குருஜி சௌந்தரும், காளி பிரசாத்தும் அனங்கனும் விழா பேனரை, மேடையில் கட்டிக்கொண்டு இருக்கையில் நாலாவது ஆளாக அரங்கினுள் நுழைந்தேன். “முங்கிக்குளி 2.0” வாழ்முறையில் கிராமத்தில் இருப்பதால், தலைச்சங்காட்டில் இருந்து காலை ஆறு மணிக்கு கிளம்பி, மதியம் மூன்றரைக்கு அரங்கடைந்த முன்பதிவில்லா பயணம். சற்றைக்கெல்லாம் ராஜகோபாலனும், விக்னேஷும் வந்து இணைந்தனர். பிறகு முத்துச் சிதறல் முத்து.
விழா அரங்கத்தில் உள்ள எல்லா நாற்காலியும் வெள்ளை சட்டை போட்டு, பின்புறம் ஜரிகை துண்டு கட்டி இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொண்டு, விழா வளாகத்தின் எதிர்புறம் தங்கும் அறையில் இருந்த எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் கதவைத் தட்டினோம். பான்ஸ் பவுடர் அடித்து முடித்த கையோடு ரெடியாக இருந்தார்.
சென்ற முறை, விஷ்ணுபுர குழும நண்பர்களின் பத்து புத்தகங்கள் வெளியீட்டை முன்னிட்டு நண்பர்கள் இதே வளாகத்தில் தங்கியிருந்ததும், எதிர்புறம் இருந்த டீக்கடையில் மொத்தமாய் முப்பத்தாறு டீ சொல்லி, கிலியூட்டிய சம்பவம் நினைவில் வந்தது. அதே கடையை தேடினோம். கடைக்காரருக்கு நல்ல நேரம், பூட்டி இருந்தது.
மீண்டும் அரங்கிற்கு திரும்புகையில் கணிசமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். பல்லாவரம் டி.ஆர்.டி.ஓ. கெஸ்ட் அவுஸில் இருந்து, எழுத்தாளர் அருண்மொழி நங்கையின் கார் புறப்பட்டு விட்டது என்ற வாட்சப் செய்தி வந்து விழுந்தது.
பதிப்பாளர் ராம்ஜியும், பதிப்பாள எழுத்தாளர் காயத்ரியும் வந்திறங்கினார்கள். ராம்ஜி வாசுமுருகவேலுடன் பேசத்தொடங்க, வாசலின் இடப்புறம் வைக்கப்பட்டு இருந்த பறவைக்கூண்டின் அருகே சென்று பேச ஆரம்பித்தார் காயத்ரி.
”இந்த கோழி, நாட்டு கோழி முட்டையில இருந்து வந்தது. அதோ அது… ஒயிட்லக்கான் முட்டைலேருந்து வந்தது. கலர் வித்தியாசமா இருக்கு பார்...” சின்சியராய் பார்த்துக்கொண்டிருந்த காயத்ரிக்கு வர்ணனை செய்ய ஆரம்பித்தார் ராம்ஜி.
திடீரென அரங்க வாசலில் தோன்றிய ஜெயமோகனை நண்பர்கள் சூழ ஆரம்பித்தார்கள், செல்பிக்கள் சென்று கொண்டே இருக்க, அருண்மொழியும், எழுத்தாளர் யுவன் சந்திரசேகரும் அமர்ந்திருந்த சண்முகத்தின் கார் உள்ளே நுழைந்தது.
நெற்றி வியர்வையை ஒற்றியபடி, விழா தொகுப்புரைகளை மீண்டும் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கவிதா… நிகழ்ச்சி நிரலின் படி, முதல் நிகழ்வாக, புத்தக வெளியீடு. சாரு வெளியிட “இளம் எழுத்தாளர்” காளிப் பிரசாத் பெற்றுக்கொண்டார்.
முதல் உரை. எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களுடையது. புத்தகத்தின் ஒட்டு மொத்த மையச்சுழியாய் இருந்த ஜூனியர் அருண்மொழியின் இன்னோசென்ஸை குறிப்பிட்டு பேசி அமர்ந்தார்.
இரண்டாவதாக யுவன். இருமல் அனுமதிக்கும் வரை பேச முயல்கிறேன் என்று ஆரம்பித்தவர், மொத்த அரங்கையும் இலகுவாக்கினார். புத்தகமாக ஆவதற்கு முன், தனக்கும் அருண்மொழிக்கும் இடையே நடைபெற்ற காரசார சம்பாஷணைகளை, சிரிப்பும் புன்னகையுமாய் விவரித்து பேசினார்.
“இனிமேல் யுவன் கலந்து கொண்டு பேசும் இலக்கியக் கூட்டங்களில் வெறும் பார்வையாளனாகவே இருந்து விடுவது, பேசக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன். பார்வையாளர் அத்தனை பேரையும் அள்ளிக் கொண்டு போய் விடுகிறார். இதோடு இரண்டாவது கூட்டம்.”
யுவன் உரை குறித்து சாருவின் முகநூல் குறிப்பு.
இறுதியாக சாருவின் முறை. இவ்விழாவிற்கு முன்பாக வேளச்சேரிக்கு சென்றிருந்த சாருவிடம், அங்கிருந்து நிகழ்வு நடக்கும் வளசரவாக்கத்திற்கு சொற்ப நிமிடங்களில் வந்துவிடலாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். விழாவிற்கு சற்று தாமதமாக வந்து சேர நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ஆரம்பித்தார்.
சமகால படைப்புகள் மீது தனக்கு இருக்கும் ஒவ்வாமை பற்றியும், அந்த ஒவ்வாமையை ஓரங்கட்டி, தன்னுள் கொண்டிருக்கும் ஆர்ட் பார்மின் மூலம் இந்த புத்தகம் எவ்வாறு தன்னை வென்று எடுத்தது என்று விளக்கத்தோடு ஆரம்பித்தவர், கீழத்தஞ்சை மனிதர்களின்”ஹெடோனிஸ்ட் வாழ்க்கை முறை” என தொடர்ந்தார். புத்தகத்தின் பல வரிகளை பலதடவை காயத்ரியிடமும் மற்ற நண்பர்களிடமும் சொல்லி சிலாகித்ததை விவரிக்க, மேடையில் அருகில் அமர்ந்திருந்த அருண்மொழியின் காதில் ரகசியமாய் ஆமோதித்தார் காயத்ரி.
மேடைக்கு எதிரே இடது வலதான இரு பக்க இருக்கைகள் அனைத்தும் நிரம்பி, சுவரோரம் நண்பர்கள் நின்றபடி கலந்து கொண்டார்கள். எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்யா, அகர முதல்வன் உள்ளிட்டவர்கள் பின் இருக்கைகளில். கோபாலகிருஷ்ணன் பேசி முடித்த பின். யுவன் பேச ஆரம்பிப்பதற்கு முன், தான் வந்து அமர்ந்ததையும், நன்றியுரைக்கு முன்பாக கிளம்பி சென்றதையும் விவரித்து, சுகா அனுப்பிய வாட்சப் தகவலை, இரவுணவின்போது சொல்லிக்கொண்டு இருந்தார் அருண்மொழி.
ஜனவரி இரண்டாம் தேதி திட்டமிடப்பட்டு, பிப்ரவரி பதிமூன்றில் இனிதே நடந்தேறிய வெளியீட்டு விழா. விஷ்ணுபுர குழும நண்பர் சக்திவேலை முதல் முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு. மகன் அடையும் பரவசத்தை அருகில் நின்றபடி பார்த்துக் கொண்டே இருந்தார் சக்திவேலின் தகப்பனார். அருண்மொழி நங்கை, ஆலத்தூரின் சிறுமி ”சின்ன தாட்பூட்”டாய் மாறி கண்கள் படபடக்க, மூச்சி விட இடைவெளி இன்றி, துரித கதியில் பேசிமுடித்த ஏற்புரை.
சாருவுக்கும், யுவனுக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் கடந்துவிடாமல், அவர்களுடைய படைப்புகள், தனக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் இடையேயான பிணைப்பின் பின்னணி என்று விவரித்துவிட்டு, இப்புத்தகம் உருவான விதத்தை விவரித்து சொல்லி, நிறைவு செய்தார்.
மைக்குக்கு நேராக இரண்டாம் வரிசையில் சைதன்யா, நடு வரிசை ஒன்றில் ஜெயமோகன். பின்வரிசை ஒன்றில் அஜிதன்.
தற்செயலாய் அமர்ந்து கொண்ட இருக்கைகள் என்றாலும், எல்லாமே மைக்குக்கு நேர் எதிரே… அருண்மொழி ஏற்புரை ஆரம்பிக்கையில், எதிரே பார்த்து, ஒரு கணம் ஆனந்த அதிர்ச்சியாகி, பின்னர் சகஜமாகி, பேச ஆரம்பித்தார். ஜெயமோகன் கண்களை அவ்வப்போது பார்த்தபடி அருண்மொழியும், அவருடைய கண்களை தவிர்ப்பதுமாக ஜெயமோகனும் சில நிமிடங்கள் தொடர்ந்தார்கள்.
அடுத்து எழுதப்போகும் நாவலையும் தங்களின் பதிப்பகத்துக்கே தரவேண்டும் என்று துண்டு போட்டு நன்றியுரையை முடித்தார் காயத்ரி.
புத்தகத்தில் மொத்தம் இருபத்தி இரண்டு கட்டுரைகள் இருந்தாலும், ஆக பிடித்தது பதிநாலாம் நம்பர். “அரசி” கட்டுரையை, நிகழ்வில் பேசிய அனைவரும் துல்லியமாக குறிப்பிட்டனர்.
“புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பது போல அருணாவின் எழுத்து அவர் சொல்ல வந்த காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறது”
அ.முத்துலிங்கம் அவர்களின் முன்னுரை. ஜெயமோகன் என்ற ஆலமரத்தின் கீழே வேரூன்றுவதென்பது எத்தனை பெரிய சவால்…!
பின்னுக்கு பின் நகர்ந்து, அருண்மொழியில் இருந்து ஆலத்தூர் சிறுமியாக மாறி, எழுத்தில் வேரூன்றி இருக்கிறார் அருண்மொழி.
நட்புடன் ,
யோகேஸ்வரன் ராமநாதன்
முத்தங்கள் – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
முத்தங்கள் சிறுகதையை வாசித்தேன். புனைவுக் களியாட்டு சிறுகதைகளில் இது மாயத்தனம் கொண்ட கதை அல்லது ஒரு கிறுக்குத்தனம் கொண்ட கதை. ஒரு திசையில் பயணிக்கும் கதை அப்படியே செங்குத்தாக வேறொரு திசைக்கு செல்கிறது. கனவு அப்படியே நினைவில் நின்று எழுத்தாக மாறியது போலுள்ளது. கதை எதையோ உரக்கச் சொல்கிறது.
நாய் காட்டும் வாழ்க்கைப்பாடமா?அவன் வாழ விரும்பியவாழ்க்கையா?உங்கள் தளத்தில் பார்த்துதான் ஆல்பா திரைப்படத்தை பார்த்தேன். நாயுக்கும் மனிதனுக்கும் நட்பு உருவாகிய தருணங்கள் நாகரிக வளர்ச்சியல்லவா! இது சமமான இருவரின் நட்பல்ல. ஒன்று அண்ணாந்து பார்க்கிறது, இன்னொன்று இறங்கிக் கொஞ்சுகிறது. இருந்தும் நட்பு பலகாலம் நீடிக்கிறது. 2014 அல்லது 2015 பெங்களூரு மரத்தஹள்ளி சர்வீஸ் ரோட்டில் நடந்து வரும்போது முகநூலில் எழுதுவதற்காக நாயைப் பற்றி எனக்கு தெரிந்ததை யோசித்துக் கொண்டு வந்தேன். அன்று தோன்றிய யோசனை நம்மோடு சேர்ந்த நாய் புத்திசாலியா இல்லை நாயை சேர்த்த நாம் புத்திசாலியா? இந்த சிறுகதையைப் படித்தபின் நாய்தான் என்று நினைக்கிறேன். காட்டில் வாழ்ந்த நாய் இறைவனிடம் வரம் கேட்டது. நான் வாழும் வாழ்க்கையின் மொத்தத் துளியையும் அனுபவிக்க வேண்டும். அதற்கு இறைவன் கொஞ்சம் பொறுமை கொள், மனிதன் வருவான் அவனிடம் சேர்ந்துவிடு, நீ அவனை கொஞ்சம் பார்த்துக்கொள், அவன் உன்னை ரொம்ப பார்த்துக்கொள்வான். அன்பை கொடுப்பதில் அவன் கர்ணன் தான் ஆனால் முதலில் கொடுப்பதில்தான் கஞ்சன். அன்று முதல் நாய் நமக்காக காத்திருந்தது. நாம் சென்றோம், நம்மோடு வந்துவிட்டது. நம்மோடு வந்தபின் அன்பையும்,காதலையும், காமத்தையும் முழுவதுமாக அனுபவிக்கிறது. நமக்கும் அதைப் பார்த்து அதன்படி வாழ ஆசைதான் ஆனால் ஏதோ தடுக்கிறது. கடைசி தருணத்தில் வாழ விரும்பிய வாழ்க்கை கனவுக்குள் நினைவாய் வந்து செல்கிறது.
அன்புடன்
மோகன் நடராஜ்
இருட்கனி – பனியில் கதிரோன்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். தாங்கள் நலம் தானே ?
நேற்று இரவு இருட்கனியின் கடைசி அத்தியாயம் வாசித்து முடித்தேன். வெண்முரசு நாவல் நிரையில் இதுவரை நான் வாசித்தவற்றில் தனித்துவ அனுபவத்தை தந்தது இருட்கனி.
பெரும்பாலானவர்களுக்கு கர்ணன் என்ற பெயரை கேட்டவுடன் “அவனா , பெரிய வள்ளலாச்சே !” என்பது முதலில் நினைவிற்கு வரும். அதன் பின்னர் “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடல். சரி அவன் வள்ளல் என்பது நாம் அனைவரும் அறிந்தது. எதனால் அவன் வள்ளலாக இருக்கிறான். தன் ஆணவத்தாலா, தனக்கு அளிக்கப்பட்ட சிறுமைகளில் இருந்து வெளிவரும் உந்துதலாலா அல்ல தெய்வத்துடன் நிகர் நிற்கும் விழைவாலா என பல்வேறான கோணங்களில் அக்கேள்வியை அணுகியிருப்போமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். இவ்வனைத்து கேள்விகளும் அதற்கான விடைகளும் போக , அவனது வாழ்க்கை, அதன் சவால்கள், அரசனாய் நின்றும் அவன் அடைந்த சிறுமைகள், அதனைத்தையும் கடந்து நிற்கும் அவனது ஒளிர்விடும் ஆளுமை என அவனது முழு சித்திரத்தை வெய்யோன், கார்கடல் மற்றும் இருட்கனி நாவல்களில் அளித்திருக்கிறீர்கள்.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெண்முரசு வாசித்து வருகிறேன். எண்ணிலடங்கா உணர்வுநிலைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது வெண்முரசு, பலவற்றை புதிதாக கற்றிருக்கிறேன், மனதளவில் மாறியிருக்கிறேன். ஆனால் இதுவரையில் ஒரு அத்தியாயம் வாசிக்க துவங்கிய பின் எந்த ஒரு இடத்திலும் வாசிக்காமல் இடையில் நிறுத்தியதில்லை. ஒரு அத்தியாயம் தன் ஒழுங்கில் என்னை அழைத்துச் செல்லும். அது கரை சேர்த்து விட்டபின் என்னை தொகுத்துக்கொள்வேன். ஆனால் நான் சொல்லும் இந்த தொடர்ச்சி பலசமயம் தடைபட்டது இருட்கனியில், அதன் முதல் அத்தியாயத்தில் இருந்தே. பல முறை நான் வாசிப்பதை இடையில் நிறுத்திவிட்டேன் தொடர்ச்சியாக வாசிக்க முடிந்ததே இல்லை.
நினைவிருக்கிறது வெய்யோன் வாசிக்கையில் அறைக் கதவை சாத்திவிட்டு வெண்முரசின் வரிகளை உரக்கச் சொல்லி கத்தியிருக்கிறேன் ‘வெய்யோன் மைந்தன் வாழ்க! கொள்வதறியா கொடையன் வாழ்க! வெல்வோர் இல்லா வெம்மையன் வாழ்க!’ என. அதுவொரு கொண்டாட்டமான மனநிலை. ஆனால் இம்முறை இருட்கனி வாசிக்கும்போது அறைக் கதவை சாத்திவிட்டு கண்ணீர் விட்டேன்.‘அக்குழவி உதைத்திருக்கிறது’ என்ற வரியை படித்தவுடன் யாராக இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பர். மலை ஏறுகையில் சட்டென மேகம் விலக அதன் சிகரத்தை பார்க்கும் ஒரு உட்சதருணம் போல அமைந்தது இவ்வரி. சிகரத்தை போலவே இந்நிகழ்வும் அங்கேயேதான் காலகாலமாக இருக்கிறது. வெண்முரசு வாசிப்பால் நான் இதை அடைந்திருக்கிறேன். மேலும் கொடையில் துவங்கி கொடையில் முடியும் கர்ணனின் வாழ்வை மிக நேர்த்தியாக காட்டியிருக்கிறீர்கள்.
நான் வசிக்கும் கனடாவின் பிராம்ப்டன் நகரில் இப்பொழுது குளிர்காலம். மேலும் இவ்வருடம் பனிப்பொழிவு மிக அதிகம். சூரியனை சற்றும் பொருட்படுத்தாத உக்கிரமான குளிரில் தான் பலநாட்கள் கழிந்தது. அப்பொழுதெல்லாம் பலவாறாக எண்ணிப்ப்பார்த்தேன் கர்ணன் இந்நிலத்தில் எவ்வாறு பொருள்படுவான் என்று. அச்சமயம் ஒன்று தோன்றியது. பொதுவான சந்திப்புகளில் கனடாவில் பலவருடங்களாக வாழ்ந்துவருபவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் ‘இங்கு குளிர் காலம் மிகக் கடினமானது. சோர்வுறச்செய்வது. சாலைகள் ஆள் நடமாட்டம் அற்று இருக்கும். அனைவரும் வீட்டில் முடங்கிக்கிடப்பர். அதனால் அனைவரையும் போல இக்காலத்தை சகித்துக்கொள். இதுமட்டும் அல்ல கனடா. பொறுத்திரு, வெயில் வரும், அன்று பார். கனடாவின் உற்சாகத்தை காண்பாய்’ என. அதன் மூலம் தெரிந்தது சூரியன் இவர்களுக்கும் மிக உகந்தவன் என்று. இம்மக்களும் அவனை அறிவர். அதனால் கர்ணனும் அணுக்கமானவனாகத்தான் இருப்பான். நிலம் நிறைத்துக்கிடக்கும் பனியை கொண்டு பனிமனிதன் செய்து கடுங்குளிரையும் சற்று இனிமையானதாக ஆக்கிக்கொள்ளும் இம்மக்களுக்கு கர்ணன் அயலவனாக போய்விடமாட்டான் என்றே தோன்றுகிறது.
இருட்கனியின் முடிவில் வெறுமையே எஞ்சுகிறது. இதனைத்தும் எதற்காக , அடையபோவது தான் என்ற கேள்வி பெரும்பாறை போல் கண்முன் நிற்கிறது. உண்மையாக சொல்லவேண்டும் என்றால் பாண்டவர்கள் அல்லவா வெல்லவேண்டும் என்று போரின் வரை அரற்றிய மனம் இதுவரை தான் எண்ணிய அனைத்தையும் இன்று மறுபரிசீலனை செய்கிறது. துச்சாதனனின் மரணம் அனைவரும் அறிந்தது, ஆனால் அது நிகழ்ந்த இடம் அவ்வாரல்ல. துரியனோ, துச்சாதனனோ நினைத்திருந்தால் பாண்டவ மைந்தர்கள் என்றோ போரில் மாண்டிருப்பர். அவர்களை தடுத்து எது வெறும் குருதி உறவு மட்டுமா? திரௌபதியை, குந்தியை எதை எண்ணி அவைச்சிறுமை செய்யத்துணிந்தார்களோ அதை கொண்டே உபபாண்டவர்கள் அழித்திருக்கலாமே? நெறி பேண வேண்டிய இடத்தில் பேணாமல் போர்க்களத்தில் பேணுகிறார்கள். இவர்களுக்கு நேரெதிராக பாண்டவர்கள். முரண்களின் ஓயாத மோதல். இருட்கனியிற்கு பின் எதை எண்ணி ‘தீயின் எடை’யை எடுப்பது என்ற கேள்வியால் அந்நாவலை இன்னும் தொடமால் உள்ளேன்.
ஆனாலும் ஒன்று அறிவேன் வெண்முரசு இதனைத்தையும் கடந்த ஒன்று. வாசகரை ஒருபோதும் நம்பிக்கை இழக்கச் செய்வதல்ல. இன்னும் ஓரிரு நாட்களில் ‘தீயின் எடை’ வாசிக்கத் துவங்கி விடுவேன்.
இப்படிக்கு,
சூர்ய பிரகாஷ்
பிராம்ப்டன்
தே- ஒரு இலையின் வரலாறு, அறிமுகவிழா
சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்த ராய் மாக்ஸம் எழுதிய தே – ஓர் இலையின் வரலாறு நூலின் அறிமுக அரங்கு
காளிப்பிரசாத்
கார்த்திக் புகழேந்தி
அகர முதல்வன்
பாரதி பாஸ்கர்
யுவன் சந்திரசேகர்
19-2-2022 சனிக்கிழமை
மாலை 5 30
இடம்
அம்மாச்சி பார்ட்டி ஹால்
ஃப்ரன்ட்ஸ் பார்க்
எண் 3 ஸ்ரீதேவிக்குப்பம் பிரதானசாலை
வளசரவாக்கம்
சென்னை
தே ஓர் இலையின் வரலாறு வாங்க வரலாறு எனும் குற்றக்கதை- சௌந்தர் ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவிFebruary 16, 2022
இல்லாத நயம் கூறல்
அன்புள்ள ஜெ.,
தங்களுடைய சமீபத்திய ‘போலீஸ் ஸ்டோரீஸ்’ – ‘வேதாளம்’, ‘சடம்’ கதைகள் குறித்து. இறக்கி வைக்கமுடியாமல் தூக்கிச்சுமக்கிற வேதாளம் அநேகமாக எல்லோருக்கும் ஏதோ ஒன்று உண்டுதான். ‘தலையிலே பேளுகிற’ பெருங்கூட்டமே ஒரு வேதாளம்தான் ஏட்டையாவுக்கு. இங்கு துப்பாக்கி சரியான படிமம். ‘உச்ச வழு’ போல முழுக்க முழுக்க விவரணையிலேயே நகரக்கூடிய கதைகள் ஒரு வகை. இது உரையாடலிலேயே நகர்கிறது. கடைசிவரை ஒரு புன்னகை உறைந்த முகத்தோடேயே படிக்க முடிந்தது. ஆண்டுக்கணக்காக இயக்கப்படாமல் இருந்த துப்பாக்கிக்கு இன்றைக்கு வேலை வந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். சுடப்போவது கள்ளனா? காப்பானா? என்ற சிறு பதைப்பு கடைசிவரை இருந்தது. நான் நினைத்துக் கொள்வேன், ஒரு மிகச் சிறந்த நடிகனுக்கு சவாலைத் தரக்கூடிய பாத்திரம் என்று எதுவும் இருக்க முடியுமா? என்று. அதன் பின் கண்டுகொண்டேன். சுட்டுப்போட்டாலும் நடிப்பு வராத ஒருவனாக நடிப்பதே ஒரு சிறந்த நடிகனால் நடிக்க முடியாத பாத்திரம். (மிர்ச்சி சிவாவை இதில் யாரும் நெருங்க முடியாது. ஆனால் எந்தப் பாத்திரத்திற்கும் அதே நடிப்புதான்). துப்பாக்கி முனையில் கூட மிர்ச்சி சிவாவிடமிருந்து நல்ல நடிப்பையோ உங்களிடமிருந்து மோசமான கதையையோ வாங்கிவிட முடியாதென்றே நினைக்கிறேன்.
‘சடம்’ கதையும் உரையாடலிலேயே நகரும் கதை. ரெண்டு நிமிடத்துக்குள்ளேயே காமமும் குரூரமும் கலந்து கொப்பளிக்கும் சுடலைப்பிள்ளையை உரித்துக்காட்டி விடுகிறீர்கள். ‘நான் இங்கதான் இருக்கணும்’ னு சுடலை ‘பிட்’டப் போடும்போதே அவருடைய திட்டத்தை யூகித்திருந்தேன். ‘சிஜ்ஜடம்’ என்ற வார்த்தையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சித் + ஜடம் என்று கதையிலே விளக்கம் வருகிறது. சாமியார் தெரிந்துதான் ‘சிஜ்ஜடம்’ என்றாரா? சித்து ஜடத்தைச் சேர்ந்து தானும் ஜடமானதா அல்லது ஜடம்தான் சிஜ்ஜடம் ஆனதா என்பது கதைக்கு வெளியே உள்ளது. என்னதான் திரைப்படத்தில் உயர்வாகக் காட்டினாலும் காவலர்களைப் பற்றி சிறுவயதிலிருந்தே பெரியவர்களால், பத்திரிகைகளால் நமக்கு மோசமான பிம்பமே அளிக்கப்படுகிறது. குறைவான சம்பளம், பணிச்சுமையால் மனஅழுத்தம், உயரதிகாரிகளின் அளவுக்கு மீறிய கடுமை போன்ற பல காரணங்களால் அடிக்கடி காவலர்கள் தற்கொலை செய்துகொள்வதை செய்தித்தாள்களில் படிக்கிறோம். காவலர்களுக்கு வார விடுமுறை கண்டிப்பாகக் கொடுக்கவேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு சென்ற வருடம் உத்தரவு போட்டபோதுதான், அவர்களுக்கு வார விடுமுறை கூட இல்லை என்று தெரியவந்தது. காவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல சம்பளம் அளிக்கப்படவேண்டும் என்பார் மறைந்த ‘துக்ளக்’ ஆசிரியர் சோ. முதல் கதை ‘கிளைமாக்ஸ்’ சுக்கு முன்வரை ஒரு நகைச்சுவைக் கதையேதான். இரண்டாவது கதை சஞ்சலப்படுத்தியது. சிறப்பாக எழுதப்பட்ட இரண்டிலும் ஒப்புநோக்க எதனாலோ ‘வேதாள’மே சிறந்த கதை என்று தோன்றியது. காவலர்களிடமிருந்து இந்தக் கதைகளுக்கு ஏதாவது எதிர்வினை வந்ததா?
நிற்க. நான் ஆச்சரியப்பட்டது ‘சடம்’ கதைக்கு வந்த கடிதங்களைக்கண்டு. வேதாந்தம், பௌத்தமரபு, சைவசித்தாந்தம்,பிக் பாங் தியரி என்று பல தளங்களையும் தொட்டு,விரிந்து பல கோணங்களில் யோசிக்க வைத்த கடிதங்கள். ‘அவரவர் பூத்தது போல’ என்பார் லா.ச.ரா. தனிப்பட்ட முறையில் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் கருத்துதான் என்னுடையதும். எல்லா வாசிப்பும் சரியானவையே என்பீர்கள் நீங்கள். உ.வே.சா. நேர் முகத்தேர்வில் கி.வா.ஜ வைக் கேட்கிறார் ‘நயம் சொல்லுவீரா?’ என்று. ஆனால், கடிதங்களில் சொல்லப்பட்ட நயங்கள் எல்லாம் சரியானவைதானா? அல்லது சரியான நயம் என்ற ஒன்றே இல்லையா? நீங்கள் எதிர்பார்க்கும் நயங்கள் சொல்லப்படாமல் போன படைப்புகளும் உண்டா?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
***
அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,
ஏற்கனவே வெவ்வேறு வகையில் இந்தத்தளத்திலேயே நான் சொன்னவைதான். மீண்டும் தொகுத்துச் சொல்லலாம் என நினைக்கிறேன். அழகியல் சார்ந்த அடிப்படைகளை தொடர்ச்சியாக தொகுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது.
வாசிப்பின் இயல்பான வழியும், வாசிப்பு நிகழ்ந்தாக வேண்டிய முறையும் இதுதான். ஒருவாசகன் தன்னுடைய சொந்தவாழ்க்கையை, தான் அறிந்த வாழ்வுண்மைகளை கருவியாகக் கொண்டுதான் படைப்புகளை வாசிக்கிறான். ஒரு படைப்பு வாழ்க்கையைச் சரியாகச் சொல்கிறதா, உண்மையானதாக இருக்கிறதா, நுட்பமானதா என்று அவன் முடிவுசெய்வது அவனுடைய சொந்த அனுபவங்களைக் கொண்டுதான். உண்மை, நுட்பம், சரியான வெளிப்பாடு ஆகிய மூன்றும்தான் கலைப்படைப்பின் அடிப்படை.
இது ஒருவரிடம் நாம் நேரில் பேசும்போதும் நிகழ்வதுதான். ஒருவர் தன் சொந்த வாழ்க்கையை நம்மிடம் சொல்கிறார், உணர்ச்சிகரமாகவும் தர்க்கபூர்வமாகவும் பேசுகிறார் என்றுகொள்வோம். எப்படியோ அவர் உண்மையைச் சொல்கிறாரா, மிகைப்படுத்துகிறாரா, அவர் சொல்வதில் நுட்பம் உள்ளதா என்றெல்லாம் எப்படி நாம் புரிந்து கொள்கிறோம்? ‘எப்படியோ தோணிச்சு’ என்கிறோம். பொய்யும் உண்மையும் நமக்கு ’எப்படியோ’ தெரிந்துவிடுகின்றன. அதன் அடிப்படை நம் சொந்த அனுபவ உலகம்தான். நாம் உலகை அறிந்துகொண்டிருக்கிறோம். உலகை நாம் எப்படி அறிகிறோம் என நாம் அறிவோம். அந்த அறிதல்முறையின் வழிமுறைகளும் அதிலுள்ள பிழைகளும் பாவனைகளும் நமக்கு தெரியும். அதைக்கொண்டே பிறர் பேசுவதையும் அறிகிறோம். அதுவே இலக்கியவாசிப்புக்கும் அடிப்படை.
இலக்கியப்படைப்பு வாசகன் முற்றிலும் அறியாத எதையும் சொல்லிவிடமுடியாது. விமர்சகர்கள் அதை திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறார்கள். ஒன்றை வாசித்ததுமே ‘ஆம் சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது’ என நமக்கு ஏன் தோன்றுகிறது? அதை நாம் ஏற்கனவே ஆழத்தில் அறிந்திருக்கிறோம் என்பதனால்தான். ஆகவே இலக்கியப்படைப்பு ஒன்றை சொன்னால் போதும், முன்வைத்தால் போதும், கோடிகாட்டினால் போதும், குறிப்புணர்த்தினால்போதும், எதையும் நிரூபிக்கவேண்டியதில்லை, வாதிட்டு நிறுவ வேண்டியதில்லை. ‘இலக்கிய உண்மை என்பது ஆதாரம் தேவையில்லாத உண்மை’ என்று அதனால்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் காலம் முதல் அகத்தூண்டல் (evocation) என்னும் கலைச்சொல்லால் கூறப்பட்டு வருவது வாசகன் தன்னை கண்டடையும் இந்த தருணம்தான். படைப்பு வாசகனில் வளர்வது இந்தப் புள்ளியில் இருந்துதான். இங்கிருந்து விந்தையான ஒன்று நிகழ்கிறது. வாசகன் படைப்பை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறான், படைப்பை விளக்கவும் , வெவ்வேறு விஷயங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளவும் மட்டுமல்ல படைப்பை இன்னொன்றாக மாற்றியமைக்கவும் முயல்கிறான். படைப்பை ‘தன்வயப்படுத்தி’க் கொள்கிறான். அவனிடம் அதன்பின் இருப்பது அவனுடைய படைப்பே ஒழிய ஆசிரியன் எழுதியது அல்ல.
ஆகவே எழுத்தாளன் அவன் எழுதியபடியே வாசகன் வாசிக்கவேண்டும் என எதிர்பார்க்கமுடியாது, எதிர்பார்க்கவும்கூடாது. அப்படி நிகழ்ந்தால் அது மிகமிகக் குறுகிய வாசிப்பு. ‘சார், நீங்க இப்டி எழுதியிருந்தீங்க’ என்றல்ல ‘சார் நான் இப்டி வாசிச்சேன்’ என்றுதான் வாசகன் எழுத்தாளனிடம் சொல்கிறான். இலக்கிய வாசிப்பு என்பது ‘அறிந்துகொள்ளும்’ அனுபவம் அல்ல. வாசகன் ஒரு வாழ்க்கையை கற்பனை செய்துகொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பையே ஆசிரியன் வழங்குகிறான். வாசகன் கற்பனை செய்வது அவனுடைய சொந்த அனுபவங்களைக்கொண்டு, சொந்த கனவுகளைக் கொண்டு.
எந்த மாபெரும் புனைவையும் நாம் அப்படித்தான் படிக்கிறோம். எந்த அயல்படைப்பிலும் நம்மைப் பொருத்திக்கொள்ளும் ஒரு புள்ளியைக் கண்டடைகிறோம். அங்கிருந்து நம்மை விரித்துக்கொண்டு நாம் வாழ்வதை விட பலமடங்கு பிரம்மாண்டமான வாழ்க்கையை வாழ்கிறோம். போரில் இறக்கிறோம், தூந்திரநிலத்தில் வழிதவறுகிறோம். தத்துவச்சிக்கல்களில் அகப்படுகிறோம், ஆன்மிகமான அறிதல்களில் அமிழ்ந்தமைகிறோம்.
ஆகவே நான் இப்படி எழுதவில்லை என எந்த இலக்கியவாதியும் சொல்லமாட்டான். தன்னிடமிருந்து அந்தப்படைப்பு வாசகனிடம் சென்று தன்னிச்சையாக விரிந்து வளர்வதை, ஒரு கதை நூறுகதையாக ஆவதை, அவனே திகைப்புடன் பார்த்துக்கொண்டிருப்பான். நவீன இலக்கிய உரையாடல் என்பது நயம் பாராட்டல் அல்ல. வாசகன் தன்னிடம் படைப்பு வளரும் விதத்தை பகிர்ந்துகொள்வதுதான். பலருடைய பல வாசிப்புகள் பகிரப்படுகையில் அப்படைப்பு வளர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறது.
இந்த முடிவில்லாத சாத்தியக்கூறுகளைத்தான் பன்முகவாசிப்புத்தன்மை (Multiplicity of Reading) என்கிறோம். ஒரு கலைப்படைப்பின் அடிப்படை இயல்பே வாசகர்களிடம் வளர்வதுதான். தன்னில் இருந்து ஏராளமான கதைகளை உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான்.
அப்படியென்றால் வாசிப்பு வாசகனுக்கு ’புதியதாக’ என்ன அளிக்கிறது? இரண்டு நிகழ்கிறது. அவன் உணர்ந்த வாழ்வனுபவங்கள் அவன் வாசிக்கும் படைப்பின் வழியாக மறுதொகுப்பு செய்யப்படுகிறது, மறுஅமைப்பு கொள்கிறது. நம்மை அறியாமலேயே நமக்கு அது மாறிவிடுகிறது. இன்னொன்று, நம்மிடம் துளியளவே இருக்கும் அனுபவம் படைப்பு அளிக்கும் கற்பனைத்தூண்டல் வழியாக பிரம்மாண்டமாக ஆகிவிடுகிறது.
’ஏழாம் உலகம்’ அதை வாசிக்கும் அனேகமாக அனைவருக்குமே முற்றிலும் தெரியாத உலகம். மண்டையில் செங்கல்லால் அடிப்பதுபோன்ற அனுபவம் என ஒரு வாசகர் சொன்னார். ஆனால் முழுமையாக தெரியாததா ? அல்ல. பிச்சைக்காரர்களை பார்க்காதவர்கள் இல்லை. ஒருகணமேனும் அவர்களின் வாழ்க்கையை கற்பனையில் காணாதவர்களும் இல்லை. அவர்கள் அறிந்த அந்தச் சிறுதுளியை பயன்படுத்திக் கொண்டே ஏழாம் உலகம் வாசகனில் நிகழ்கிறது, விரிகிறது. அப்படி ஓர் உலகம் உள்ளது என்பதற்கு அவனுக்கு அது ஏதாவது சான்றை அளிக்கிறதா என்ன? ஆனால் அவன் அதை நம்புகிறான். அவனுக்கு அவனே அறியாத உலகம் ஒன்றை காட்டுகிறது. அவனை ஒவ்வாமையோ கசப்போ கொள்ளச் செய்கிறது. அதன் சாரமான ஆன்மிகத்தை கண்டடையவும் செய்கிறது.
ஆகவே எல்லா வாசிப்புகளும் சரியானவை. இதுதான் சரியான வாசிப்பு என்று சொல்லக் கூடாது, சொல்லவும் முடியாது. ஆனால் அதீத வாசிப்பு என சில உண்டு. அல்லது வழிதவறும் வாசிப்பு. அதை முன்னரும் எழுதியிருக்கிறேன். இப்படிச் சுருக்கிக் கொள்கிறேன்
அ. வாசகனின் அனுபவ உலகம் தீண்டப்பட்டு, அவன் மெய்யான உணர்வெழுச்சிக்கு ஆளாகி வெவ்வேறு வகையில் அவன் கற்பனை விரிவது இயல்பான வாசிப்பு. ஆனால் வெறுமே நினைவுத்தொகுப்புகள் தீண்டப்பட்டு அப்படைப்புடன் தொடர்புள்ளவை அவன் மனதில் எழுவது நல்ல வாசிப்பு அல்ல. Association Fallacy என இலக்கியத்தில் சொல்லப்படுவது அது. அவ்வாறு ‘இத வாசிக்கையிலே எனக்கு அது ஞாபகம் வந்திச்சு’ என்று சொல்வதும் நல்ல வாசிப்பு அல்ல. அது வாசிப்பு நிகழாமல் இருக்கும் நிலை. வாசிப்பை மறைக்கும் அகச்செயல்பாடு
ஆ. ஒரு படைப்பை பகுப்பாய்வு செய்யும் வாசிப்பு என்பது இலக்கிய வாசிப்பு அல்ல. அது கல்வித்துறை சார்ந்த ஒரு செயல்பாடு. அதற்கு முன்கூட்டியே வரையறை செய்யப்பட்ட விதிமுறைகள் உள்ளன. வாசகன் அங்கே மாற்றத்தை அடைவதே இல்லை. அவனுடைய ஆய்வுமுறைகளை அவன் நிலையாக வைத்துக்கொண்டால்தான் அவனால் ஆய்வு செய்ய முடியும். தன்னை மாற்றிக்கொள்ளாதவன், படைப்பு தன்னை குலைய வைக்க அனுமதிக்காதவன், அதன் வாசகன் அல்ல. அத்தகைய வாசிப்பு பெரும்பாலும் இலக்கணம், இலக்கியம் சார்ந்த கோட்பாடுகள், அரசியல் நிலைபாடுகள், சமூகவியல் போன்ற பிற அறிவுத்துறைக் கொள்கைகள் சார்ந்து நிகழ்வது. ஓர் அறிவுச்சூழலில் அதெல்லாம் தேவையான செயல்பாடுகள்தான். ஆனால் அவை இலக்கியவாசிப்பு அல்ல.
இ. ஓர் இலக்கியப்படைப்பை அதன் முழுமையுடன் உள்வாங்கியவரே அதன் வாசகன். ஒரு படைப்பின் முழுக்கட்டமைப்பையும், அதில் சொல்லப்பட்ட முழுக்கதையையும், அது முன்வைக்கும் முழுக்குறியீடுகளையும் வாசகன் கருத்தில்கொள்ளவேண்டும். அதற்காக முயலவேண்டும். ஒரு படைப்பின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் கருத்தில்கொண்டு மேலே கற்பனை செய்வதும் சிந்தனைசெய்வதும் இலக்கிய வாசிப்பு அல்ல.
ஜெ
தே- ஒரு கடிதம்
ராய் மாக்ஸமின் மூன்று நூல்கள் குறித்த அறிமுகத்திற்கு நன்றி. ‘தே – ஒரு இலையின் வரலாறு’ உப்பு வேலி வெளியீட்டுக்கு அடுத்து உடனடியாக மொழிபெயர்க்க ஆரம்பித்து இப்போதுதான் முடித்திருக்கிறேன். துண்டுக்குறிப்பைப் படித்துவிட்டு அதை நாடுகடந்து தேடிச் சென்ற ராயின் உத்வேகம் எனக்கில்லை என்பதுதான் உண்மை.
இரு புத்தகங்களையும் சேர்த்து ராயை ஒரு மக்களின் வரலாற்றாசிரியன் என அழைக்கத் தோன்றுகிறது. பொதுவாக வரலாறு பேரரசுகளையும் சாதனையாளர்களையும் பெரும் நிகழ்வுகளையும் முன்வைத்துப் பேசப்படும் ஒன்றாக இருக்கும்போது, ராய் அந்நிகழ்வுகளில், அவ்வரசுகளின் கீழ் மக்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். அதற்கான தகவல்களைத் தேடிச் செல்கிறார் அவற்றையே முன்னிறுத்தவும் செய்கிறார்.
‘தே’ புத்தகத்தை அவர் துவங்குவதே ஒரு கொள்ளைக்காட்சியிலிருந்துதான் ஒரு பொருள் எத்தனை முக்கியமாக இருந்தது என்பதற்கு அது எத்தனை தூரம் கொள்ளையடிக்கப்பட்டது அல்லது கடத்தப்பட்டது என்பது அருமையான சான்று. ஒரு வெஸ்டர்ன் சண்டைப்படத்தைப்போல விறுவிறுப்பாக அக்காட்சிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
நீங்கள் ரசிக்கும் ராயின் நுட்பமான, ஆங்கிலேய நகைச்சுவை உணர்வு தொடர்ந்து புத்தகத்தில் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதுவும் வலிந்து திணிக்கப்பட்ட கேலி போலல்லாமல் வரலாற்றுத் தகவல்களாகவே வருகின்றது. ராய் மக்களின் வரலாற்றாசிரியன் என்று சொல்வதற்கு அதுவும் ஒரு காரணம். உதாரணமாய் போர்ச்சுகீசிய மணப்பெண் காத்தரின் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லெஸை மணந்துகொள்ள துறைமுகத்துக்கு வந்திறங்குகிறாள். செய்தி நாடெங்கும் பரவுகிறது. மக்கள் வீட்டின்முன் பான்ட் ஃபையர் (கொண்டாட்ட நெருப்பு) மூட்டிக் கொண்டாடுகிறார்கள். சார்லஸ் நிறைமாதக் கர்ப்பிணியாயிருக்கும் தன் வைப்பாட்டியின் வீட்டில் இருக்கிறார். ‘அவள் வீட்டின் முன் பான்ட் ஃபயர் ஏற்றப்படவில்லை’ என்கிறார்.
காத்தரின் கொண்டு வந்த வரதட்சணைகளின் ஒன்று ஒரு பெட்டித் தேயிலை. அவர் தேயிலைக்கு ஏற்கனவே அடிமையாயிருந்தார். அவர் மூலம் இங்கிலாந்தின் மேட்டுக்குடிகளுக்குத் தேயிலை பயன்பாடு பரவியது. காத்தரின் கொண்டு வந்த இன்னொரு வரதட்சணை ‘பாம்பே’. இப்படி சிறுசிறு தகவல்களின் வழியே ஒரு பெரும் சித்திரத்தை, மாபெரும் மொசைக் ஒன்றை உருவாக்குவதுபோல உருவாக்கியுள்ளார் ராய்.
தேயிலை பொதுமக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதே புத்தகத்தின் மைய நோக்காக எடுத்துக்கொள்ளலாம், குறிப்பாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எப்படி கொடுந்துயரங்களால் வாடி மடிந்து போனார்கள் என்பதைக் குறித்த வரலாறுகள் மனதை வாட்டுபவை. அசாம் தோட்டங்களுக்காக ஆங்கிலேயர்த் தலைமையில் வட இந்தியக் ‘கூலிகள்’ வேட்டையாடப்பட்டுள்ளனர். ஆப்ரிக்கர்களை வேட்டையாடிச்செல்ல ஒரு வணிக அமைப்பு உருவாகியிருந்ததைப்போல இங்கும் ஒரு அமைப்பு இயங்கியிருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் தகவல்.
தமிழகத்திலிருந்து இலங்கைத் தோட்டங்களுக்கு கடுமையான வழித்தடங்களைத் தாண்டிச் சென்று சேர்ந்த தமிழர்களைப் பற்றியும் அவர்கள் பாதையெங்கும் மடிந்து பெயரற்ற கல்லறைகளில் புதைக்கப்பட்ட வரலாற்றையும் பின்னர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போருக்கும் இதற்கும் என்ன தொடர்புகள் இருந்தன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். இதனாலேயே இப்புத்தகம் தமிழில் வாசிக்கப்படவேண்டும் என அவரது முன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார்.
பாஸ்டன் டீ பார்ட்டி, ஈஸ்ட் இந்தியா கம்பெனி, ஓப்பியப் போர்கள், சிப்பாய்க்கலகம், ஹாங்காங் உருவான கதை என நாம் அறிந்த பல வரலாற்று நிகழ்வுகளையும் மேற்சொன்னது போன்ற சின்னஞ்சிறு தகவல்களின் வழியே நம் கண்முன்னே விவரிக்கிறார்.
அதேபோல தோட்ட மேலாளராகத் தான் கண்ட அன்பவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போதும் அப்பெரும் வரலாற்றின் நேரடி சாட்சியாக நம்முன் நிற்கிறார். ஆப்ரிக்காவின் புரட்சி வரலாற்றின் பக்கங்களையும் தொட்டுச் செல்கிறார்.
பல்துறைகளைச் சார்ந்த, நுண்தகவல்களுடன் எழுதப்பட்டிருக்கும் தே – ஒரு இலையின் வரலாற்றை தமிழ் வாசகர்களுக்கு சற்றுப் பிந்தியேனும் தர முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்புடன்
சிறில் அலெக்ஸ்
முப்பது வருட சிந்தனை -மஞ்சுநாத்
ஜெயமோகனின் நாவல் – கோட்பாடு [திறனாய்வு நூல்] வாசிப்பு விமர்சனம்
மனம் ஒரு வடிவமைப்புக்குள் பொருத்திக்கொள்ள விரும்புவதில்லை. அதன் இயல்பும் விரிவடையும் வெளியும் எல்லையற்றது. ஆனால் மன எல்லையின் விரிவடையும் சாத்தியத்தை வாசகன் தனது செளகரியத்தன்மைக்கு பங்கம் வராத விருப்பத்தால் முடமாக்கி விடுகிறான். தனக்கு அசெளகரியமான படைப்புகளின் தரிசனங்களை தவற விடுவதற்கு கூர்மையான வாசிப்பு திறன் போதாமையே காரணம். இதனால் தொடர்ந்து தனது விருப்பத்தை சொறிந்துவிடும் படைப்புகளை மட்டுமே நாடுகிறான்.
தமிழ் வாசகப்பரப்பு இதய பலவீனம் கொண்டதாகவும் எவ்வகையிலும் அதிர்ச்சியளிக்கும் நாவல்களை விரும்பாது ஒதுக்கி வைத்த காலங்கள் சற்று மாறி விட்டதாகவே கருதுகிறேன். இதன் விகிதச்சாரம் குறைவாக இருப்பினும் மாற்றம் நிகழ்ந்துள்ளதை உறுதியாக கூற முடியும்
முன்னெப்பதையும் விட தமிழ் வாசகப்பரப்பில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் அதிகளவில் வரவேற்கப்படுகின்றன. மொழிபெயர்ப்புகள் சொல்லப்படும் விஷயத்தில் மட்டுமல்லாது சொல்லும் விதத்திலும் வாசகனை கவர்வதோடு அவனது அட்ரினலின் சுரப்பையும் அதிகப்படுத்துகிறது. ஒரு ஜெயிண்ட் வீலில் அமர்ந்து சுழலும் போதும் அட்ரினலின் அதிகம் சுரக்கவே செய்கிறது. எந்த மொழி வேண்டுமானாலும் இருக்கட்டும், நாவல் வாசிப்பு என்பது வாசகனின் சுரப்பு தூண்டியாக மட்டும் செயல்படுவதென்பது வளர்ச்சியாக கருத முடியாது. ஒரு நாவலை தரிசனத்தின் மூலமாக செயல்பட வைப்பது அசாத்தியமானது என்றாலும் அதற்கான ஒளிக்கீற்றுகளை அது தன்னகத்தே கொண்டதாக திகழ வேண்டும்.
உண்மையில் தற்கால தீவிர வாசகர்களின் ஒரு பகுதியினர் தரிசனங்களுக்கான ஒளிக்கீற்றுகளை மறைத்து வைத்திருக்கும் நாவல்களை தேடுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஜெயமோகன் சொல்கிறார் “விரிந்த தளத்தில் உலகமெங்கும் நடைபெறும் பெளதிக வாழ்வின் அலைகளும் புயல்களும் தமிழ் வாழ்வைத் தாக்கும் விதம் எழுதப்படவில்லை. அதற்கு தேவையான தகவலறிவு தமிழ்ப் படைப்பாளிகளிடம் குறைவு.”
இன்னொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “மன விரிவு இல்லாதவன் நாவலாசிரியனல்ல. அவன் தன் மன உலகை நாவல் கோரும் அளவு விரிவுபடுத்தவது இல்லை. அதை அவன், தன் மனத்தை உருவாக்கியுள்ள பற்பல கூறுகளுடன் மோதவிடவில்லை என்பதுதான் அதற்குப் பொருள். அவன் அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருக்கிறான் அல்லது தனக்கு வசதியானபடி அவற்றைப் புறகணித்துவிடும் சோம்பல் கொண்டவனாக இருக்கிறான். இரண்டுமே நாவலாசிரியனுக்கு இருக்கக்கூடாத பண்புகள்.”
பெளதிக வாழ்வு மனிதனின் அகவெளியிலிருந்து முற்றிலும் அவனை அந்நியப்படுத்தி வைத்துள்ளதே தற்காலத்தின் வாழ்க்கைமுறை. ஆனால் தமிழ் எழுத்துலகில் பெளதிக விளிம்பிலிருந்து அகத்தின் மையம் நோக்கிய பயணத்திற்கான பரிசோதனைகள் விரிவடைவதற்கு பதிலாக அது திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கு வந்துள்ளதாக கருதுகிறேன்.
அமைப்புவாதத்தின் அடையாளம் கொண்டு இயங்கி வரும் பல எழுத்தாளர்கள் தங்கள் பிரக்ஞை உணர்வின் மீது எப்பொழுதோ சமாதி எழுப்பி விட்டார்கள். எல்லைக்குட்பட்ட பெளதிக தன்மையின் சுதந்திரம் என்பது நகைப்புக்குரியது. அது இலக்கியத்தில் பல ஆண்டுகளாக உறைந்து போன அருங்காட்சியகத்தின் கொண்டாட்டம். பிரக்ஞை உணர்வில்லாத எழுத்தாளர்கள் இருண்ட மூலையில் உழல்கிறார்கள். நாம் நகர வேண்டியது அகவிடுதலைக்கான மையம் நோக்கி. கண்ணாம்மூச்சை போல் வாசகனை சுழலவிடும் விளையாட்டுத் தனமான படைப்புகளை விட விளிம்பிலிருந்து மையம் நோக்கிய பயணத்திற்கான வரைபடங்களை ஒரு நாவல் உருவாக்க வேண்டும். அது சிக்கலானதாக இருந்தாலும் சரி.
மிலோராத் பாவிச் 1988-ல் எழுதிய கசார்களின் அகராதி தமிழில் 2019-ல் மொழியாக்கம் (ஸ்ரீதர் ரங்கராஜ்) செய்யப்பட்டுள்ளது. ஆண் பிரதி , பெண் பிரதி என்கிற இருதலைப்பில் மாறுதலின்றி ஒரே உள்ளடக்கத்துடன் இரண்டு புத்தகம். வெளிவந்த இந்த இரண்டு பிரதியில் சிறுவித்தியாசம் இரண்டு பத்திகள் மட்டுமே. அகராதி வடிவில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இந்நாவல் பல்வேறு வகையிலான ஒளிக்கீற்றுகளை கசிய விடுகிறது. இது போன்றதொரு சிக்கலான அதே சமயம் ஆழமான வாசிப்புக்கு வித்திடும் மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கிய பரப்பில் துணிச்சலாக கொண்டு வருவதற்கு காரணம் மேம்பட்ட வாசகப்பார்வையின் தேடல் தீவிரமாகி விட்டதாகவே கருதுகிறேன்.
இந்நூலை இளம் எழுத்தாளர் ஒருவருக்கு பரிந்துரை செய்தேன். ஆனால் அவருக்கு பா.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோனி வாசிப்பே சிரமம் என்று தெரிவிக்கிறார். மேலும் கடினமானதை சிரமப்பட்டு ஏன் வாசிக்க வேண்டும் அதன் அவசியம் என்ன என்று மறுத்து விடுகிறார். இப்படி தீவிர வாசிப்பு தன்மையிலிருந்து தங்களை விலகிக்கொண்டவர்கள் இன்று நிறைய எழுதுகிறார்கள். அவை கரையில் நிற்கும் வாசகனுக்கு கடல் அலையின் சுகத்தை மட்டும் தருகின்றன. ஆழ்கடலின் தரிசனங்களை புலப்படுத்துவதில்லை. கரையிலிருந்த வாசகன் ஆழ் கடலின் மீது என்றோ தனது பயணத்தை துவக்கி விட்டான் என்பதை நாவல் எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நூல் நாம் வாசித்து பெரிதும் கொண்டாடிய தமிழ் நாவல்களை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. புதிய நாவல்கள் மீதான வாசகர்களின் பார்வை புலத்தை கூர்மைப்படுத்துகிறது. நாவல் கலையின் துவக்கத்தையும் அது சென்றடைய வேண்டிய இலக்கையும் அதற்கிடையே உள்ள இடைவெளிகளையும் ஆய்வு செய்கிறது.
ஜெயமோகனின் வாசிப்பு எல்லை விசாலாமானது. வியப்பானது. நாவல்- கோட்பாடு என்கிற இந்நூல் இவரது முதல் திறனாய்வு நூல். 1992-ல் சமரசம் செய்து கொள்ளாத ஆழ்த்த இலக்கிய தேடலில் எழுதப்பட்ட காத்திரமான கட்டுரைகள். இது வெளிவந்தபோது அவருக்கு பலமான எதிர்வினைகளை பெற்று தந்த வகையில் மட்டும் இந்நூல் முக்கியத்துவம் பெறவில்லை. தற்போதைய தமிழ் இலக்கிய வாசக மற்றும் படைப்பு சுழலுடன் இவரது கோட்பாடுகள் நீண்ட விவாதத்துக்கும் ஆய்வுக்கும் பின்பும் பொருந்தி போவதாகவே இருக்கிறது.
தமிழ் நாவல்கள் மீதான ஆழ்ந்த சிந்தனைகளை விதைக் கூடிய இந்த கட்டுரைகள் 2010-ல் நூல் வடிவமாக தொகுக்கப்பட்டது . அதன் முன்னுரையில் ஜெமோ இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“இதில் இருந்து என் பார்வைகள் உருவாகி இப்போது நெடுந்தூரம் வந்திருக்கும் விதம் எனக்கே ஆச்சரியம் அளிக்கிறது. இந்நூலில் நான் பேசியிருக்கும் பல விஷயங்களை பிற்பாடு நான் எழுதிய விமரிசன நூல்களில் பல கோணங்களில் வளர்ந்து எடுத்திருக்கிறேன். பல இடங்களைத் தொட்டு விட்டிருக்கிறேன். பல இடங்களில் தடுமாறியும் இருக்கிறேன். ஆனாலும் அக்கருத்துகளின் விதைக்களம் என்ற முறையில் இந்நூல் பல கோணங்களில் சிந்தனையைத் திறப்பதாகவே உள்ளது எனக்கு. வாசகர்களுக்கும் அப்படியே இருக்கும் என நம்புகிறேன்.”
30 ஆண்டுகளுக்கு பிறகும் வாசகர்களை தேடிச் செல்லும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை விட வாசகன் தேடிச் செல்லும் எழுத்தாளர்கள் குறைவாகவே உள்ளனர். ஒரு எழுத்தாளன் வாசகர்களின் திணவிற்கான நகமாக தனது எழுத்தை பயன்படுத்தும்போது அவன் சிறந்த வியாபாரியாக மட்டுமே ஒளி வீசலாம். ஆனால் இலக்கிய நிழலாகக்கூட அவன் தடம் பதிப்பதில்லை.
விருதுகளுக்காகவும், அதிக பிரதிகள் விற்பனைக்காகவும், குறிப்பிட்ட குழுவினர்களின் திருப்திக்காகவும், அதிர்ச்சிகரமான எழுத்துகளை கொண்டு தங்கள் மீதான நேர் மற்றும் எதிர் கவன ஈர்ப்புக்காகவும் எழுதி வருபவர்களிடம் இயல்பான வகையிலான படைப்பூக்கத்திறனை எதிர்பார்க்க முடியாது. அப்படியானவை இலக்கிய ரகத்தில் நிலைப்பதில்லை.
மேலும் சிங்கப்பூரைப் பார், அமெரிக்காவைப் பார் என்கிற பொருளாதார சித்தாந்தங்கள் மீதான ஒப்பீட்டை போல் விருது வேட்கையோடு எழுதும் அயல் எழுத்தாளர்களின் இலக்கியத்துடன் நமது இலக்கியத்தை சில விமர்சகர்கள் முன் வைப்பது குறுகிய கருத்துரு மட்டுமல்ல அது முதிர்ச்சியற்ற புரிதலின் குறைபாடு. ஒரு மண்ணின் கலாச்சாரம், வரலாறு, பண்பாட்டு விழுமியங்களை தவிர்த்து விட்டு வரும் இலக்கியங்கள் வயிற்றுப்போக்குக்கு ஒப்பான வெறும் மனப்போக்கு மட்டுமே.
இந்நூல் தமிழில் கன்னடத்தில் மலையாளத்தில் வங்கத்தில் வெளியான முக்கிய நாவல்கள் மீதான விவாதங்களை எழுப்புவதுடன் வாசிக்க வேண்டிய தமிழ் நாவல்களின் பட்டியலை அதன் பிரதிமையுடன் வழங்குகிறது. எதிர்காலத்தில் நாவல் எழுதுபவர்களுக்கான மனவிரிவின் முக்கியத்துவத்தை கூர்மையாக பேசுகிறது.
எழுத்தாளனையும் நாம் படைப்பாளி என்றே அழைக்கிறோம். இது அவன் காண விழையும் தரிசனத்தைக் குறிக்கிறது. அத்தகைய எழுத்தாளனின் நாவல்கள் வாழ்வின் கர்மத்தை கரைக்கும் நதியாக பிரவாகமெடுக்கின்றன. நதிகள் குறிப்பிட்ட வாசகனுக்காக காத்திருப்பதில்லை என்றாலும் தேடல் நிறைந்த வாசகனின் பயணம் நதியின் உயிர்ப்பை நோக்கியே நகர்கிறது.
நன்றியும் அன்பும்
மஞ்சுநாத்
manjunath.author@gmail.com
***
நூல்:நாவல் கோட்பாடு
[திறனாய்வு நூல்]
கிழக்கு பதிப்பகம்
முதல் பதிப்பு:2010
பக்கங்கள்:128
ஏழாம் உலகம்- கடிதங்கள்
அறத்தைப் புறந்தள்ளி என்னால் எதுவும் எழுத முடியாது என்று ஜெமோ ஒரு மேடையில் சொன்னார். ஏழாம் உலகம் நாவலின் குரூரத்தை படிக்க தொடங்கும் முதலில் பெரும்அறத்தை சொல்லியிருப்பார் என்று காத்திருந்தேன்.
முத்தம்மை பிள்ளைப்பேறு பின் வேண்டாம். அது சாவட்டு… கிடந்து சீரழிய வேண்டாம். சாவட்டு. எனும் கதறல் காதில் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே நாவல் நகர்கிறது. மற்றொரு இடத்தில் முத்தம்மை எப்பவும் வல்ல குருடோ கூனோ தானே அணையைவிடுதாக என்பதொல்லாம் பெரும் வலியை விதைத்து கொண்டே நகர்கிறது.
பண்டாரம் வாசல் வரை ஒரு வாழ்க்கையும் வாசல் தாண்டி வேறு வாழ்க்கையும் வாழ்கிறார். இவ்வளவு அன்பு செலுத்தும் மனிதன் எப்படி ஒரு பச்சைக் குழந்தையை வெயிலில் போட்டு தண்ணீர் தெளிச்சு பிச்சை எடுக்கச் சொல்லும் அளவிற்கு குரூரமான என்று நம்பமுடியவில்லை. இளைய மகளுக்கு வளவி வாங்கி வருவது, பிரிந்த மகளை நினைத்து வருந்தும் போது இயற்கை மூலம் அதில் இருந்து மீண்டு வருதல் எல்லாம் அபாரம். எப்படியும் பண்டாரத்தின் மீது அன்பு அதிகமாக வழிகிறது.
உன்னியம்மை ஆச்சி போல் ஒருவரே எல்லோரும் நிச்சயம் பார்த்திருப்போம்.எருக்கி, மண்ணாங்கட்டி சாமி, பெருமாள், வடிவம்மை, சுப்பம்மை, ஏக்கியம்மை, பண்டாரத்தின் சம்மந்தி என யாரும் மறக்க முடியாத கதை மாந்தர்கள் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த குரூரமான நாவலில் எனக்கான அறமாக இந்த வரிகளை ஏற்றுக் கொள்கிறேன்.”நான் சொல்லுயத கேட்டுக்கோ. எந்த ஒரு விஷயம் வந்தாலும் ஒரு காரியம் நினைச்சுக்கோ. அந்த நிமிசத்தில இந்த நேரத்துல அது பெரிய காரியமாக இருக்கும். ஒரு பத்து நாள் போனால் எல்லாம் சின்ன காரியமா மாறிப்போகும்.”
எனக்கும் பத்து நாள் தேவைப்படுகிறது.
நன்றி
மணிகண்டன்
***
அன்புள்ள ஜெ
ஏழாம் உலகம் வாசித்துக்கொண்டிருந்தேன். மனிதன் மேல் மனிதன் காட்டும் குரூரத்தின் எல்லைகலை தாண்டித்தாண்டிச் சென்றுகொண்டிருந்த நாவல் குய்யனுக்கு அத்தனை உருப்படிகளும் சேர்ந்து சாப்பாடு வாங்கிக்கொடுக்கும் இடத்தை அடைந்ததும் என்னை நெகிழச்செய்துவிட்டது. உண்மையில் கண்கலங்கிவிட்டேன். சில படைப்புகளில்தான் இப்படி நெஞ்சில் கைவைத்து ‘மனிதன்!’ என நாம் சொல்லும் சந்தர்ப்பங்கள் அமைகின்றன. அன்றிர்வு பாடாத மாங்காண்டிச்சாமி பாடும்போது ஆன்மிகம் என்றால் என்ன என்றும் தெரிந்துகொண்டேன்.
கே.ஆர்.ஆறுமுகம்
பூர்த்தியூ- விவேக்
அன்பிற்குரிய ஆசிரியர் ஜே சார் அவர்களுக்கு,
சமீபத்தில் வாசித்து முடித்த ஒரு முக்கியமான புத்தகத்தை பற்றிய என்னுடைய ரசனை கட்டுரையைத் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எப்பொழுதும் சலிக்காமல் சொல்லிக்கொண்டிருக்கும் நவீன இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் சிலவற்றை ஒரு சமூகவியலாராக பியர் பூர்தியு (Pierre Bourdieu) எடுத்துக்காட்டுகிறார். இலக்கியம் மட்டுமல்லாமல் பண்பாட்டு தயாரிப்பு களங்களாக (cultural producers) விளங்கும் கலை, அறிவியல், தத்துவம் போன்ற அனைத்து துறைகளில் எவ்வாறு இதழியலாளர்கள் (journalists) மற்றும் தொலைக்காட்சியின் (TV) தாக்கம் இருக்கிறது என்பதை தனது ஆய்வறிக்கையில் மூலம் விளக்கியுள்ளார்.
ஆசிரியர் & புத்தகத்தின் பின்புலம்:
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான சமூகவியல் சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் பியர் பூர்தியு, எமில் துர்கம், மார்ஸ் வெபர் ஆகியோரின் வரிசையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவருடைய நூல்கள் உலகின் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன என்பதை விட, குறைந்த எண்ணிக்கை மக்கள் பேசும் காடலானிய, துருக்கிய, எஸ்டோனியா, நார்வீஜிய, ரோமானிய மொழிகள் போன்றவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது இவருடைய சிந்தனையின் தாக்கத்தைக் காட்டும். சிந்தனையாளர்களின் பணி மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் இவர் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார்.1996 பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட Sur la Television இக்கட்டுரை தொகுப்பு இவ்வாசிரியர் college de france இல் பேராசியராக பணிபுரிந்த பொழுது பாடத்திட்டமாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. College de france grants no degrees and gives professors (who are elected by other members) exceptional freedom to pursue their research and an especially public venue to present that research, all research are free and open to public. Prominent scholars of this institute include Louis Pasteur, Henri Bergson and Marcel Mauss and closer to present, Raymond Aron, Michel Foucault, Roland Barthes and Claude Levi Strauss.இப்புத்தகம் ஆங்கில மொழிபெயர்ப்பாக “On television”, translated from the french by Priscilla Parkburst Ferguson கிடைக்கிறது. இப்புத்தகத்தை பிரெஞ்சு இல் இருந்து நேரடியாக தமிழில் வே.ஸ்ரீராம் அவர்கள் மொழிபெயர்த்து Cre-A வெளியீடாக கிடைக்கிறது. நான் வாசித்தது தமிழ் மற்றும் ஆங்கிலம்.உள்ளடக்கம் :
செய்திகள், அறிவுபூர்வமான தகவல்கள், விவரங்கள் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரித்து பரப்பும் கருவி என்றளவில் தொலைக்காட்சி பற்றி பேசுவது இந்த புத்தகத்தின் நோக்கம் இல்லை. மாறாக, தொலைக்காட்சியின் முக்கியமான பணிகளில் ஒன்றான (சொல்லாடல் மூலமாக) விவரிப்பதை விட (காட்சிகளின் துணைகொண்டு) காட்டுவதன் மூலம் எவ்வாறு பிற அறிவுத்துறைகளில் இக்கருவி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை கூறுவதே நோக்கம்.இந்த ஆய்வின் மூலமாக pierre வலியுறுத்தும் இரண்டு முக்கியமான உண்மைகள், முதலாவதாக – எல்லாவற்றையும் எப்படி அளிப்பது, எப்படி விவரிப்பது என்பது குறித்து இந்த உலகத்தில் மேலோங்கி இருக்கும் வழக்கமான வழிமுறைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் தொலைக்காட்சியின் அடையாள செயல்பாடு இந்த உலகம் இருக்கும் நிலையை அப்படியே வைத்திருக்க முயல்கிறது. வரலாறு கண்டிராத அளவுக்கு பெருவாரியான மக்களை சென்றடையும் எல்லா எல்லாச் சாதனைகளையும் (தொழில்நுட்ப, பொருளாதார, அரசியல்) பெற்றிருக்கும் தொலைக்காட்சி, மக்களில் பெரும் பகுதியினரின் சிந்தனையை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தை தானாகவே அபகரித்துக் கொண்டு விட்டது. இரண்டாவதாக – எல்லாருக்கும் இசைவுடையதாக இருக்கும் தகவலை கொடுப்பதற்காக யதார்த்தத்திலிருந்து விலகி இருக்கும் வடிவத்தை பின்பற்றி, ஏராளமான மக்களை சென்றடையும் தொலைக்காட்சி கருவி ஒருவிதமான அடையாளச் செல்வாக்கை செலுத்துகிறது.பரபரப்பை நம்பியிருக்கும் பத்திரிக்கைகளின் பிரதான மேய்ச்சல் நிலமான துணுக்கு செய்திகளும், இரத்தமும், பாலியலும், திடுக்கிடும் நிகழ்வுகளும் எப்போதுமே நன்றாக விலைபோகின்றன. ஆகவே பத்திரிக்கைகளுடன் போட்டிக்கு இறங்கிய தொலைக்காட்சி எவ்வாறு இச்செய்திகளை மிகைப்படுத்தி, அசாதாரணமாக்கி, விஷேஷத்தமையை தங்களுக்கு தகுந்தமாதிரி உருவாக்கியது என்பதை தர்க்கபூர்வமாக தொகுத்துள்ளார். நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் ஒரு கருவியாக தன்னை அருவித்துக்கொள்ளும் தொலைக்காட்சி சிறிதுசிறிதாக யதார்த்தத்தை உருவாக்கும் கருவியாக ஆகிவிட்டது. சமூக வாழ்க்கை தொலைக்காட்சியால்தான் விவரிக்கப்பட்டு – பரிந்துரைக்கப்படுகிறது. தொலைக்காட்சியின் பரந்த வீச்சினாலும் முற்றிலும் அதனுடைய செல்வாக்கினாலும் தொலைக்காட்சி ஏற்படுத்துகிற விளைவுகள், அவற்றுக்கு முன்னுதாரணங்கள் இல்லாமல் இல்லை என்றாலும் கூட, இதுவரை முற்றிலும் அறிந்திராதவை.வாசிப்பனுபவம் :
ஜெ நீங்கள் எப்பொழுதும் வலியுறுத்தும் இலக்கியத்திற்கும் வணிக எழுத்துக்கும் உள்ள வேறுபாடு, மற்றும் உங்கள் தளத்தில் வெளிவந்த பரப்பியும், மின்பரப்பியம் போன்ற கட்டுரைகளை வாசித்த ஒருவர் இப்புத்தகத்தின் வாயிலாக ஒரு முழுமையான உரையாடலை, சிந்தனைக்கும்-பொழுதுபோக்கிற்கும் உள்ள வேறுபாட்டை கண்டடைய முடியும். பியர் பூர்தியு ஒரு சமூகவியலாளர் என்பதால் அவரின் ஆய்வின் மூலமாக வரலாற்று ரீதியாக கணிதம், இலக்கியம், கவிதை, தத்துவ சிந்தனை போன்ற மனிதகுலத்தின் மிக உன்னத படைப்புகளாக பலரும் கருதும் படைப்புகள் எல்லாமே தொலைக்காட்சி பார்வையாளர் கணிப்பு போன்றவற்றிற்கு எதிராக, வர்த்தக உலகின் நியதிகளுக்கு எதிராகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.மிக முக்கியமானதும் எதிர்பாத்திருக்க முடியாததுமான நிகழ்வு என்னவென்றால், எல்லாவிதமான பண்பாட்டுத் தயாரிப்புச் செயல்பாடுகளிலும் avant garde ஆன இலக்கியம், கலை தயாரிப்பு உட்பட தொலைக்காட்சியின் ஆதிக்கம் அசாதாரண முறையில் பரவியிருக்கிறது என்பது தான். வர்த்தக தளைகளிலிருந்து விடுபட்டுச் சுயேச்சையாக இருக்கும் படைப்புகளை உருவாக்குவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய பொருளாதார, சமூக சூழ்நிலைகளுக்கும், அப்படிப் பெறப்பட்ட படைப்புகளை எல்லாருக்கும் எடுத்துசெல்லத் தேவையான சமூக சூழ்நிலைகளுக்கும் உள்ள முரண்பாட்டை தொலைக்காட்சி அதீத அளவுக்கு எதுசென்றுவிட்டதை வருத்தத்துடன் பதிவுசெய்கிறார்.இப்புத்தகத்தில் உள்ள தொலைக்காட்சி பற்றிய அனைத்து விஷயத்தையும் நாம் இப்பொழுது எதிர்கொண்டிருக்கும் எல்லா காட்சி ஊடகத்திற்கும் (collective enterprise) பொருத்திப் பார்க்க முடிகிறது. ஒரு சின்ன குறை என்னவென்றால், இப்புத்தகம் பிரெஞ்சு பண்பாட்டு பின்புலத்தில் பிரான்ஸ் நாட்டு ஊடகவியலை அலசி ஆராய்ந்து அதன் வாயிலாக சமூகவியல் பிரச்சனைகளை முன்வைக்கிறது. எனவே வாசிக்கும் பொழுது இக்கருத்துகளை இந்திய/தமிழ் சூழ்நிலைக்கு பொருத்திப்பார்ப்பது சற்று சிரமமாக உள்ளது, மொழிபெயர்ப்பு ஆசிரியர் வே.ஸ்ரீராம் அவர்கள் முன்னுரையில் கொடுத்துள்ள கலைச்சொற்கள், மற்றும் இந்திய தொலைக்காட்சி பற்றிய ஒரு எளிய சித்திரத்தை பற்றிய கருத்துக்கள் போன்றவை இச்சவாலை எதிகொள்ள உதவியாக உள்ளது.இப்படிப்பட்ட ஒரு படைப்பை வாசித்து முடித்தவுடன் உங்களை தொடரும் என்னைப்போன்ற வாசகர்கள் வந்தடையும் இன்னொரு முக்கியமான இடம் தமிழ் சூழலில் உள்ள அறிவுசார் வெற்றிடமும் அதை நிரப்ப இங்குள்ள சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களின் தேவையும்…ஒரு வேலை மஹாபாரதத்தை வெண்முரசாக மாற்றிய அந்த உழைப்பு இதற்கெல்லாம் ஒரு அறைகூவலாக அமையலாம்.அன்புடன்,
விவேக்
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

