ஓர் அன்னையின் பயணம்

 

அன்புள்ள ஜெ,

என் 80 வயது அம்மா   தற்செயலாகத்தான் வெண்முரசு படிக்கத் தொடங்கினார். தம்பி வீட்டில் எனக்காகக் காத்திருந்த மாமலர் செம்பதிப்பை சும்மா புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தவர் ஒரு நாள் முதல் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்.  முன்பு அறம் படித்துவிட்டு  மணிக்கணக்காக என்னிடம் ஒவ்வொரு கதையையும் சிலாகித்திருக்கிறார்.‘‘இப்படிக்கூட ஒருத்தரால   எழுத முடியுமா? ஆயுசோட இருக்கணும்’.

புராண இதிகாசங்களில் நல்ல விரிவான பரிச்சயம் உண்டு. மாமலரை ஆழ்ந்து வாசித்தார்.  முதலிலிருந்து படிக்கட்டும் என்று முதற்கனலில் இருந்து படிக்கப் படிக்க order செய்தேன். முதுமையாலும் நோயாலும் மனம் சலித்திருந்தவருக்கு  வெண்முரசு வாசிப்பு ஆசுவாசமும் உற்சாகமும் தந்தது. வரி விடாமல் நிதானமாகப் படிப்பார். தொலைபேசியில் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம். தம்பிகள் முதலில் ‘என்ன இவ்வளவு நேரம் பாசமா பேசுதே ரெண்டும்’ என்று சந்தேகப்பட்டு என்னிடம் ,‘உடம்புக்கு ஒண்ணும் இல்லையே’  என்று கவலையுடன் விசாரித்தார்கள். அதற்கு முன்னால் பத்தாவது நிமிஷம் இருவருக்கும் சண்டை நிச்சயம்.

வரிசையாய், நிதானமாய்  மழைப்பாடல், வண்ணக்கடல் வாசித்து , நீலம் படிக்கக் கொடுத்தபின் அதிகம் பேச்சில்லை.ஒரு நாள் திடீரென்று ‘அஷ்டபதி கேக்கணும் போலிருக்குடீ’. தம்பி தேடித்தேடி போட்டுக் கொடுத்தான். கையில் நீலத்துடன் மணிக்கணக்காக அஷ்டபதி. நீலம் முடிந்தபின்னும்  மௌனம்.எப்படி இருந்தது என்ற கேள்விக்கு ‘என்னோடவே இருக்கட்டும்’.

ஆவணப்படம் பார்த்துவிட்டு  விவரமாக சொன்னேன். ‘பரவாயில்லையே, எழுத்தாளனை சிறப்பிக்கணும்னெல்லாம்  தோணுதே தமிழ் உலகத்துல. பாரதியாரையே அனாதைப் பிணமா போக விட்டவங்கதானே  நாம’. கண்ணானாய் பாட்டு  release  ஆனதும்  போட்டுக்  காட்டுவதாக சொல்லியிருந்தேன். பாடல் வெளியிடும்  தினம்  youtube live  ல் பார்க்க மிக ஆவலுடன் இருந்தேன்.

அம்மாவின்  கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கொண்டே இருந்த சிறுநீரகங்கள் சென்ற செப்டெம்பரில் முழுதாய் செயலிழக்கும் நிலை. வாரக்கணக்கில் மருத்துவமனை வாசம்.Dialysis ஐ உடல் தாங்காது என்பதால் உடலுக்குள் அறுவை சிகிச்சை மூலம் குழாய்களைப் பொருத்தி வீட்டிலேயே தினம் மும்முறை செய்யும் peritonal dialysis  மட்டுமே ஒரே வழி.If not, it is a matter of  a few very painful days  என்று சொல்லப்பட்டது. அம்மா சிகிச்சையை வெகு மூர்க்கமாக மறுத்து ‘என்னை அமைதியா சாக விடுங்க’ என்று வீடு வந்துவிட்டார்.

அக்டோபர் 9 இசை வெளியீடு அன்று முழுதும் விமானப்பயணம். ஒரு கைப்பிடிக்குள் அடக்கி விடக்கூடிய உருவம் கருக்குழந்தை போல கட்டிலில் சுருண்டிருந்தது. மனதில் எழுந்த அலறலையும்  அழுகையையும் அடக்கிக்கொண்டேன். மெல்லப் பேசி திரும்ப சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்க முயற்சிகள். திரும்பத் திரும்ப  ‘போதும்  என்னை விட்டுடுங்க’ .மாலையில் பேச்சை  மாற்ற வேண்டி அம்மாவை சாய்ந்தார் போல் அமர்த்தி  youtube ல் வெளிவந்திருந்த ‘கண்ணானாய்’  போட்டுக் காண்பித்தேன். கமல் குரலைக் கேட்டு மஹிமாவும் நிவிக்குட்டியும்  ஓடி வந்தன.  பின்னாலேயே எல்லாரும். பனிப்பாறையாக இறுகியிருந்த சூழல் சற்று இளகியது. பாட்டை அமைதியாகக் கேட்டு, ‘சிறுகுமிழ் விரல்களே அமைக என் தலைமேல்வரியில் கைகூப்பி  கிருஷ்ணா என்று கண்ணீர் விட்டார். பாடல் வரிகளைத் மெல்லத் திருப்பிச் சொன்னேன். ‘ஒரு பேப்பர்ல எழுதி குடுடீ,பிழைச்சுக் கிடந்தா திரும்பப் படிக்கணும்’.  ஸ்லோகம், பாசுரம் ஒண்ணும் வேண்டாம், அந்த ஒரு வரி போதும்டி’.   அப்படியே நைஸாகப் பேசி அடுத்த நாள் யோசிக்க விடாமல் ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு விட்டோம். அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த இரு நாட்களில் மீண்டும் மீண்டும் மடிக்கணினியில் ‘கண்ணானாய் காண்பதுமானாய் .அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்தில் வலி நிவாரணி அதிகம் தர முடியாத நிலையில் ‘ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது ‘அறம் ல கோமல் சுவாமிநாதன் சொல்வாரே அது மாதிரி பெருவலி’ ‘

கொஞ்சம் உடல் தெளிய இரண்டு மாதமானது. இன்னும் சில மாதங்களோ ஓரிரு வருடங்களோ கொஞ்சம் வலியில்லாமல் இருக்க முடியும். மருத்துவர் சொன்னது ‘She is on bonus time. Enjoy while it lasts’.

கதை இதோடு முடியவில்லை.டிசம்பர் கடைசியில்  தம்பியிடம் ‘ ரொம்ப போரடிக்குது. ஏதாவது புஸ்தகம் எடுத்து குடுடா’. HCL நூலகத்தில் நல்ல புத்தகங்கள் உண்டு. ‘என்னம்மா வேணும்?’  ‘விஷ்ணுபுரம் இருந்தா கொண்டுவாடா’ . சின்ன தம்பி மிரண்டு போய் ‘ அம்மா வேணாம்மா, இப்பொதான் செத்து பொழச்சு வந்திருக்கே’. பெரியவன்  ‘குடுடா, கிழவி படிச்சாலும் படிக்கும்’ .

பொங்கல் சமயத்தில் கௌஸ்துபம். ‘அப்படியே கோவிலை கண் முன்னாலே  கொண்டு வந்துட்டார்.என் மனசில முழுக் கோயிலையும் பார்க்க முடியறதுடி. எவ்வளவு தத்ரூபம்!’

‘அந்த ஆழ்வார் கதை கொஞ்சம் நம்மாழ்வார்  கதை மாதிரி இருக்கு. அதுக்காக அவர் நம்மாழ்வாரை சொல்றார்னு  எடுத்துக்கக் கூடாது. இந்த கதைகள் ஐதீகங்கள் எப்படி உருவாகுதுன்னு தான் சொல்ல வரார்- ஜெ இந்த தெளிவு எனக்கு 2000 ல் முதல் முறை விஷ்ணுபுரம்  படித்தபோது  இல்லை. அந்த இடத்தில் புத்தகத்தை தூக்கிப் போட்டுவிட்டு பத்து நாள்  பொருமிக் கொண்டிருந்தேன்.

நேற்று பேசும்போது  ‘மணிமுடி முக்கால்வாசி ஆச்சு. ஞான சபை விவாதம் முழுக்கப் புரிய இன்னும் பத்து தடவை படிக்கணும். ஆனா எனக்கு அஜிதரோட வாதம் தான் சரியா பொருத்தமா  இருக்கிற மாதிரி இருக்கு’.

இவ்வளவும் ஒரு ஒத்த மனுஷனோட மனசில, கையில் இருந்து வந்ததா? ‘ஞானபீடம் கிடைக்கணும்டி, எப்பவோ கிடைச்சிருக்கணும். இல்லேன்னா ஞானபீடத்துக்கு  என்ன மரியாதை?’

அஞ்சு வருஷம் முந்தி நானும் இதத்தான் சொல்லியிருப்பேம்மா. ஆனா வெண்முரசு எழுதினப்புறம், எழுதினவருக்கு அது ஒரு பொருட்டா? வேற எதுதான் பொருட்டு?

ஜெயஸ்ரீ சூரியநாராயணன்

அன்புள்ள ஜெயஸ்ரீ

அம்மாவுக்கு என் வணக்கததைச் சொல்லவும்.

அவரிடம் ஒன்று சொல்லவும், படைப்பியக்கம் என்பது ஒரு தனிநபர் சார்ந்தது அல்ல. தனிநபர் எவராயினும் சிறியவர். ஏரியின் நீரை மடை உரிமைகொள்ள முடியாது.

அனைத்தையும் நித்ய சைதன்ய யதி எழுதியதாகவும் கொள்ளலாம். அவருக்கு என்ன விருது கொடுக்க முடியும்?

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2022 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.