உதிர்பவை மலர்பவை- கடிதங்கள்

உதிர்பவை மலர்பவை

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

நலம் விழைகிறேன்.

இன்று அதிகாலையில் தங்களின் தளத்தில் வெளியான சதீஸ்குமார் சீனிவாசனின் ‘புகை’ப்படத்தையே வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். காலையில் அழக்கூடாது என்ற சங்கல்பத்தை என்னை அறியாமலேயே கடந்திருந்தேன். இன்று அனைவருமே ஒன்றுமே செய்யமுடியாது இப்படித்தான் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது. வேறொன்றும் செய்ய முடியாது. இந்த காலத்தின் கையறு நிலை இதுதான். ரத்தமும் வலியுமாக ஒன்றுமே செய்ய முடியாது.நம் குடும்பத்தில் தான் நடக்க வேண்டும் என்றில்லை. தெருவில்…உறவில் அனுதினமும் நிம்மதியிழக்கச் செய்கிறது.மனதிற்கு பிடித்த அண்ணன்,தம்பி,மாமா (ஊரில் முக்கால்வாசிப்பேர் மாமா தான் . அம்மா தம்பி என்று அழைப்பவரை நாம் வேறெப்படியும் அழைக்கமுடியாது) என்று வரிசையாக எத்தனை முகங்கள்.இதெல்லாம் விட நம்முடைய பிள்ளை போன்ற அல்லது பிள்ளைக்கு மேலான மாணவர்களை அப்படிக்காண்பது.

கல்வியியல் கல்லூரியில் படிக்கும் போது பள்ளியில் பயிற்சிகாலம் உண்டு. அப்படி என் முதல் மாணவனாக பனிரெண்டாம் வகுப்பில் என்னைப்பார்த்து முதன்முதலாக குட்மானீங் டீச்சர் என அழைத்து சிரித்தவன் இந்தப்பயலை போலத்தான் இருப்பான். அவனை இப்படி கண்ட போதுதான் முதன்முதலாக அறுத்துப்போட்ட மாதிரி இருந்துச்சு என்று வீட்டுப்பெண்கள் சொல்லும் வார்த்தையை உணர்ந்தேன்.

என் நடுநிலைப் பள்ளி வகுப்புத்தோழன் இருபத்தாறு வயதில் போய் சேர்ந்தான். நான் என் சகவயதினனின் இறப்பிற்கு முதன்முதலாக அவன்வீட்டு வாசலில் நிற்கும் போது கண்ணீரை விட கோபம்தான் அதிகமாக இருந்தது.

இதெல்லாம் மனிதனின் இயல்புகள். அதிகமாக உணர்ச்சிவசப்பட வேண்டாம்…க்ளீனாக காட்டிக்கொண்டு அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேண்டாம் என்று இவர்கள் சட்டென்று வெட்டிவிடுவதை அழகாக செய்கிறார்கள். நம் சமூகம் இன்னும் தனிமனிதன் என்ற கருத்துருவிற்கு தயாராகவே இல்லை. குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நன்றாக இருந்தால்தான் நம்மால் உறங்கமுடியும். அகக்கதவை சாத்திக்கொள்ள இன்னும் பழகவில்லை. என்னுடைய தனிப்பட்ட உரிமை என்று சொல்லியே நாட்களை கடத்துகிறார்கள். அவர்களிடம் பேசும்போது அலட்சியமான அவர்களின் சிரிப்பை போல வெறுக்கத்தக்கது எதுவும் இல்லை.

பெரும்பாலும் லௌகீகவாதிகள் இதிலும் கட்டுக்குள் இருந்து சமாளிக்கிறார்கள். கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், அன்பானவர்கள் தான் நன்றாக சிக்கிக்கொள்வதாக நினைக்கிறேன். கேட்டால் நாங்க எந்த கட்டுப்பாடுகளிலும் சிக்காத பறவைகள் என்பார்கள்.

மற்றபடி கவிதையில் காற்றில் வரையும் விரல்களுக்கு காற்றே மொழியென…விரல் என தொடுகை என சதீஸ் வந்தடையக்கூடிய இடம் உள்ளது. இலையில் நடுங்கும் பனியை தன்வயப்படுத்தும் சூரியனுக்கு மிகஅருகில் வந்துவிட்டார் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வதைப்போல எழுதிக்கடத்தல். புகைப்படங்கள் தற்படங்களாகி நாளாக்கிறது சதீஸ். இன்னும் அதிலேயேவா. புகையில்லாமல் இந்தப்படத்தை மனதில் வரைந்து பார்க்கிறேன். மிக அழகான மஞ்சள் பூ வொன்று தெரிகிறது.

அன்புடன்,

கமலதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2022 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.