ஊடகங்கள், அரசியல், விவாதங்கள்

சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் நீங்கள் பெரும்பாலும் மௌனம் சாதிக்கிறீர்களே ஏன்? உங்கள் கருத்துக்களை ஏன் எழுதுவதில்லை?

பொதுவாக ஊடகச் செய்திகளை நம்பி அரசியல் சமூகப்பிரச்சினைகளை அலசுவதில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை கிடையாது, ஏன் என்றால் எனக்கு ஊடகவியலாளர்களிடம் நெருக்கமான தொடர்புகள் பலவருடங்களாக உண்டு. அவர்கள் எப்படிச் செய்திசேகரிக்கிறார்கள், எப்படிச் செய்திகளை உண்டு பண்ணுகிறார்கள், எந்தெந்தச் சூழல்களில் செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று நான் நன்றாகவே அறிவேன். ஊடகம் எதுவானாலும் அவற்றின் நம்பகத்தன்மை கால்பங்குதான்.

ஒட்டுமொத்தமாக ஊடகங்கள் என்பவை பல்வேறு சக்திகளால் இயக்கப்படும் ஒரு பெரும் கருத்துத்தரப்பு என்று சொல்லலாம். ஊடகங்களின் கருத்துநிலையை உருவாக்கும் நான்கு சக்திகள் இவை.

அ. அரசியல்.

ஊடகங்கள் பல்வேறு அரசியல்கட்சிகளின் சார்புநிலைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை நம் அறிவோம். இவற்றில் இரண்டுவகை உண்டு . அதிகாரபூர்வமான கட்சி ஊடகங்கள். தற்காலிகமாகவும் மறைமுகமாகவும் கட்சிகளை ஆதரிக்கும் ஊடகங்கள். சன் டிவியும் ஜெயா டிவியும் முதல்வகைக்கு உதாரணம் என்றால் ராஜ் டிவி இரண்டாம் வகைக்கு உதாரணம். இவை செய்திகளை தங்கள் அரசியல் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகின்றன

ஆ. உரிமையாளர் நலன்

ஊடகங்களின் கருத்துக்களைத் தீர்மானிப்பதில் அவ்வூடகங்களின் உரிமையாளர்களின் தனிப்பட்ட நலன்கள் வகிக்கும் பங்கும் மிக முக்கியமானது.பெரும்பாலான ஊடகமுதலாளிகள் வேறு பல தொழில்களில் பெரும் முதலீடுசெய்திருப்பவர்கள். அவர்களுக்கு அங்கே போட்டியாளர்களும் எதிரிகளும் உண்டு. அரசாங்கத்தில் அவர்களுக்கு ‘லாபி’ கள் உண்டு. ஆகவே அந்த நலன்களுக்குச் சாதகமாகவே அவர்கள் செய்திகளை உருவாக்குகிறார்கள்.

இ. ஊடகவியலாளர்களின் நோக்கு

ஊடகங்களில் செயல்படுபவர்களின் தனிப்பட்ட விருப்பங்களும் வெறுப்புகளும் நோக்கங்களும் செய்திகளை பெருமளவில் பாதிக்கின்றன ஊடகவியலாளர்களின் நிலைபாடுகளைத் தீர்மானிக்கும் அம்சங்கள் பல. அவர்களின் இயல்பான அரசியல் நிலைபாடு முதல்வகையானது. ஆனால் அத்தகைய உறுதியான நிலைபாடு கொண்ட ஊடகவியலாளர்கள் மிக மிகக் குறைவே.

இரண்டாவதாகச் சொல்லப்பட வேண்டியது , அரசியல் சரிநிலை என்பதாகும்.[ பொலிடிகல் கரெக்ட்நெஸ்] ஒரு காலகட்டத்தில் ஒரு ‘ஜனநாயக, முற்போக்கு,மனிதாபிமான’ அரசியல் நிலைபாடு இப்படித்தான் இருக்கும் என்று ஒரு பொதுவான புரிதல் அறிவுச்சூழலில் உருவாகி நிலைபெற்றிருக்கும். அதுவே அரசியல்சரிநிலை என்று சொல்லப்படுகிறது. அது நெடுங்காலம் படிப்படியான அரசியல் பிரச்சாரம் மூலம் உருவாகி வருவதாகும். ஊடகவியலாளர்களில் பெரும்பாலானவர்களின் கண்ணோட்டங்களை தீர்மானிக்கும் அரசியல்சக்தி என்பது இதுவே. அரசியல்சரிகளை அப்படியே சொல்லிக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம்

மூன்றாவதாகச் சொல்லப்படவேண்டியது, வெளிப்பாதிப்புகள். ஊடகவியலாளர்களை பல்வேறுவகையில் பல அமைப்புகள் தங்களுடைய குரல்களை ஒலிக்கவைக்க பயன்படுத்திக் கொள்கின்றன. இந்திய ஊடகவியலாளர்களின் ஊதியம் ஒப்புநோக்க மிகவும் குறைவு. ஒரு வெளிநாட்டுப்பயணமோ சில லட்சம் ரூபாயோ அவர்களை கவர்ந்துவிடும். அதன்பின் மெல்ல மெல்ல அவர்கள் அவர்கள் இன்னதன்றே அறியாத மறைமுகச் சக்திகளின் குரல்களாக ஆகிவிடுவார்கள்.

சமீபகாலமாக இந்தப்போக்கு ஊடகத்துறையில் மிக அதிகமாக உள்ளது. பல ஊடகவியலாளர்கள் பெரும் செல்வம் ஈட்டுகிறார்கள் என்ற புலம்பல் ஊடகவியலாளர் நடுவே கேட்கிறது. அவர்கள் தங்களைத்தாங்களே காட்டிக்கொடுக்க விரும்பாத காரணத்தால்தான் அவை வெளிவரவில்லை. ஆனால் வரும் காலங்களில் சிலர் அவற்றை துணிந்து எழுதக்கூடும்.

பிராந்திய மொழிகளில் உள்ள ஊடகவியலாளர்கள் ஆங்கில ஊடகவியலாளர்கள் பெறும் சம்பளத்தில் பத்தில் ஒருபங்கு ஊதியம் பெறுபவர்கள். வருமானத்துக்காக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரைப்படத்துறையினரின் இனாம்களை நம்பி வாழ்பவர்கள். ஆகவே தன்னம்பிக்கை இல்லாதவர்கள். இவர்களில் படிக்கும்பழக்கமுள்ளவர்கள் மிக மிகக் குறைவே. பெரும்பாலானவர்கள் பாமரர்கள் என்றே சொல்ல வேண்டும். இவர்கள் ஆங்கில ஊடகவியலாளர்களை நம்பி அவர்களை பிரதிஎடுப்பதையே தங்கள் செயல்பாடாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஈ. வாசகர்களின் எதிர்பார்ப்பு

ஊடகங்கள் தங்கள் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செய்திகளை விரிவுபடுத்துகிறார்கள். ஒருசெய்தி வெளியாகும்போது வாசகர்களின் மனநிலையை கூர்ந்து அவதானித்து அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அச்செய்திகளை மேலே கொண்டுசெல்கிறார்கள். உதாரணமாக சமீபத்திய மும்பைக் குண்டுவெடிப்பு முடிந்து இரண்டுநாட்கள் கழிந்ததும் பெரும்பாலான ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரமான குரல்களை கொட்ட ஆரம்பித்தன. சென்ற காலங்களில் தீவிரவாதிகளுக்குச் சப்பைக்கட்டு கட்டிய ஊடகங்களும் இதில் அடக்கம்.

*

இந்த நான்குவகை திரிபுகளுக்கும் உள்ளாகி வெளிவரும் செய்திகளை முழுக்க நம்பி அவற்றைக்கொண்டு அரசியல் ஆய்வுகளைச் செய்வதில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் சாதாரணமாக நாம் செய்வது அதைத்தான். இந்தியாவில் விவாதங்கள் அதிகமாக நிகழ்வது இதன்பொருட்டே. இத்தகைய விவாதங்களினால் ஒரு ஜனநாயகத்துக்கு பயன் இருக்கும் என்றே எண்ணுகிறேன். ஏனெனில் சமகால அக்கறை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை விசை. அரசியல் நோக்கர்கள் அதைப்பற்றி பேசுவது இயல்பே.

ஆனால் என்னைப்போன்ற படைப்பிலக்கியவாதிக்கு அது மிகபெரிய நேர விரயம். நம் மக்கள் சினிமா,அரசியல் இரண்டைப்பற்றியும்தான் பேச விரும்புகிறார்கள். அந்த தளம் சார்ந்து எது சொன்னாலும் அதைப்பற்றி மாற்றுக்கருத்துக்கள் உணர்ச்சிபூர்வமாகவும் நுண்ணலசல்களாகவும் வந்து குவியும். மேலும் தமிழ்நாட்டில் எதுவும் உச்சகட்ட உணர்ச்சிக்கொந்தளிப்புடன் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. எந்தநிலை எடுத்தாலும் வசை உறுதி. இந்நிலையில் இதில் ஈடுபடும் எழுத்தாளன் தன் இலக்கியத்தை மொத்தமாக இழக்க வேண்டியதுதான்.

மேலும் செய்திகள் சூடாக இருக்கும்போது அதைச்சார்ந்த அனைத்து எழுத்துக்களையும் படித்து , அத்தனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் உட்கார்ந்து பார்ப்பதென்பது ஒரு படைப்பிலக்கியவாதி தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம். அவற்றை அல்லும்பகலும் நுணுகி ஆராய்ந்து விவாதிக்கும் ஒருவருடன் படைப்பிலக்கியவாதி எளிதில் விவாதிக்கவும் முடியாது. அவன் செய்திநிபுணன் அல்ல. அவனுக்குச் சொல்ல இருக்கும் சில தளங்கள் உண்டு, அந்த எல்லையை அவன் தாண்டக்கூடாது.

ஒருசெய்தி ‘ஆறிப்போன’பின்பு செய்தியாளர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளுடனும் சாதாரணமாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தால் அச்செய்தியின் உண்மையான அகம் தெளிவாகும். எந்தெந்த சக்திகளால் அந்தச்செய்திகள் உருமாற்றப்பட்டிருந்தன என்று தெரியவரும். அது மேல்தளச் சித்திரத்துக்கு முற்றிலும் வேறானதாக இருக்கும்.  உடனடி ஊடகச்செய்திகளைச் சார்ந்து எழுதிக்குவித்தவர்களை எண்ணும்போது பரிதாபமாகவும் இருக்கும்.

ஒருசெய்தியின் வீரியம் குறைந்தபின் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக ஒரு எளிய பயணம் மேற்கொண்டால்கூட உண்மைச்சித்திரம் நமக்குக் கிடைக்கும். நான் பெரும்பாலும் அப்படி நேரில்செல்ல முயல்வதுண்டு

ஆகவே நான் செய்திகள் மீது  உடனடியாகக் கருத்துச் சொல்வதில்லை என்ற நிலைபாட்டை கடந்த 20 வருடங்களாகவே மேற்கொண்டிருக்கிறேன். சில அபூர்வ தருணங்களில் மட்டுமே எனக்குச் சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறது, சொல்கிறேன். மற்ற தருணங்களில் என் காலகட்டத்தைப் புரிந்துகொள்ள நான் அறிவனவற்றைப் பயன்படுத்துகிறேன், அவ்வளவுதான்.

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Jan 3, 2009

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.