Jeyamohan's Blog, page 796

April 13, 2022

ஒற்றன் வாசிப்பு- சௌந்தர்

சங்கடம் துக்கம் என்று வரும்பொழுது எல்லோரும் மனிதர்களே என்று தனது அமெரிக்கப் பயணத்தில் சந்தித்த எழுத்தாளர்களின், மனிதர்களின் கதைகளை உணர்வுகளை சிறுகதைக்கான சாத்தியங்களுடன் இந்த நூலில், அசோகமித்தரன்  பகிர்ந்துகொள்கிறார்.

1993-ல் எனது நண்பனின் நண்பனுக்கு, பாஸ்போர்ட்டே இல்லாமல் , ஐரோப்பா கண்டத்தில் வேலை கிடைத்துவிட, அப்பொழுது எனக்கிருந்த அரசு வேலை செல்வாக்கில், நட்பின் பொருட்டு, ஜாயின்ட் செகரட்டரி ஒருவர் கையெழுத்துப்போட, அவருக்கு ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் கிடைத்தது. இந்தக் கையெழுத்து நம்பிக்கையின்பேரில் போடுவது. போலீஸ் வெரிஃபிகேஷன் அப்புறம் நடக்கும். அசோகமித்திரனுக்கு, 1973-ல் அயோவா சிடியில் நடக்கும் ஒரு எழுத்தாளர் மாநாட்டிற்கு அழைப்பு வருகிறது. அவருக்கும் கையில் பாஸ்போர்ட் இல்லை. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி கையெழுத்துப் போட பாஸ்போர்ட் பத்து நாளில் கிடைக்கிறது. நாம் இப்பொழுது கோவிட் டெஸ்ட் கொடுத்துவிட்டு பயணத்திற்கு காத்திருப்பதுபோல, அசோகமித்தரனும் அம்மை மற்றும் மஞ்சள் சுரத்திற்கு தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு இருவாரம் காத்திருந்திருக்கிறார்.

‘எமிக்ரேஷன்’ க்யூவில் (லைனில்?)  நிற்பதில் ஆரம்பிக்கும் அத்தியாயம், மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் பிற நாட்டின் எழுத்தாளர்களை பற்றிய அவதானிப்பு, பிரிவு உபசாரம் பெற்று கிளம்புதுவரை என பதினான்கு அத்தியாயங்களாக அவரது அனுபவங்கள் நகைச்சுவையுடனும் சுவராஸ்யத்துடனும் பகிரப்பட்டுள்ளன.

எமிக்ரேஷன் க்யூவில் ஒருவன் இருபது ஆட்களின் டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு நிற்கிறான். ஐந்து ஆட்களுக்குப் பின்னால் நின்றாலும் இருபது ஆட்களுக்குப் பின்னால் நிற்பதுபோல் என சொல்லி வாசகனை நகைக்க வைக்கிறார். இங்கே வாசகனின் முகத்தில் பரிணமிக்கும் புன்முறுவல், நூல் முழுதும் பரவியிருக்கும் அமி-யின் வர்ணனைகள், சித்தரிப்புகள், உரையாடல்கள், போகப்போக அவனை வாய்விட்டுச் சிரிக்கவைக்கும்.  அவர் தங்கியிருக்கும் மேஃபிளவர் கட்டடத்தில், லிஃப்ட்டில் சந்திக்கும் பெண்,  மொட்டையாக, “நீ இன்றைக்கு வரவில்லை?” என்று கேட்க, தலையும் புரியாமல் காலும் புரியாமல் “எங்கே?”  என்கிறார்.

“உனக்குத் தெரியாது? எட்டரை மணிக்கு நாமெல்லோரும் மிஸ்ஸிஸ்ஸிப்பி  நதிக்குப் போகிறோம்.”

“எல்லோருமா?”

“ஆமாம். நீ தபால் பெட்டியைப் பார்க்கவில்லையா?”

“என்ன தபால் பெட்டி?”

“உன்னுடையதுதான் . நேற்றே கடிதம் வந்து விட்டதே?”

“கடிதமா?”

முதல் ஒரு வாரத்தில் புதுச் சூழ்நிலையில் இருக்கும் எந்த ஒருவரும் எதிர்கொள்ளும் திண்டாட்டத்தை பிரதிபலிக்கும் உரையாடல்.

எத்தனை வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் மாமிசம் இல்லாமல் சாப்பிட உணவகங்கள் அருகில் இருக்காது என்பதற்காக நீண்ட நாட்கள் பயணம் செய்யும் வெஜிடேரியன் மட்டும் சாப்பிடும் நண்பர்கள் கூடவே குக்கரையும் அரிசியையும் எடுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரனுக்கும் சாப்பாட்டு கஷ்டம் பெருங்கஷ்டமாகத்தான் இருந்திருக்கிறது. சீரியல், கார்ன் ஃப்ளேக்ஸ் , ஃப்ரென்ச் ஃப்ரைஸ் , காப்பி மற்றும் காப்பி என்று அந்த ஏழு மாதங்களை ஓட்டியிருக்கிறார். மற்றவர்கள் இரண்டு முறை ஒயின் ஊற்றிக்கொள்கிறார்கள். இவர் இரண்டு கப் காப்பி குடிக்கிறார். மதியத்திற்கு கார்ன்ஃப்ளேக்ஸா என்று உடன் இருப்பவர்கள் அனுதாபமாக புன்னகைக்கிறார்கள்.

அமெரிக்க வாழ்க்கையில் இன்று வரை நான் ஷாக் ஆகும் ஒரு விஷயம், இந்த ஷிப்பிங்கிற்கு கொடுக்கின்ற தொகைதான்.  நூறு / நூற்றம்பது ரூபாய்க்கு இந்தியாவிலிருந்து வாங்கி வந்த புத்தகத்தை, வேறு நகரில் இருக்கும் நண்பனுக்கு அனுப்ப ஐந்து டாலர் போஸ்டலுக்கு கொடுப்பேன். அதுவும், எக்ஸ்ப்ரஸ், சிக்னேச்சர் க்யாரண்டி எல்லாம் வேண்டாம் என்று சொல்லவேண்டும்.  அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அலீசியா என்ற எழுத்தாளருக்கு அவள் வாங்கிய பரிசுப் பொருட்களை பார்சல் செய்து அனுப்ப உதவி புரிகிறார் அசோகமித்திரன். அந்தப் பெண் பத்து டாலருக்கு வாங்கிய பரிசை அர்ஜெண்டினாவிற்கு அனுப்ப முப்பத்தேழு டாலர் அறுபத்தெட்டு சென்ட் தபாலாபீஸிற்கு கொடுக்கிறாள். “அந்தச் செலவுதான் இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குவதுபோல அலீசியா தான் பேசுவதை எதுவும் கவனிக்காமல் கவலையில் இருந்தாள்” என்று இந்த ஷிப்பிங்க் அனுபத்தை ‘மகா ஒற்றன்’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

ஜூன் 1997-ல் ஹூஸ்டன் வந்திறங்கிய முதல் நாளில், அசோக் என்ற மும்பையை சேர்ந்த நண்பன், “Downtown-ல் தனியாக பஸ் ஸ்டாப்பில்  நின்றால், கண்டிப்பாக பர்ஸில் இருபது டாலர்களாவது வைத்துக்கொள், பனம் கேட்டு வருபவர்களிடம் இல்லையெனும் பட்சத்தில், அடிவாங்கவேண்டியது இருக்கும்.” என்று எச்சரித்தான்.

ஒற்றன் நூலிலிருந்து, அமி-யின் வரிகள்.“அமெரிக்காவில் எந்த ஊரிலிமே தனியாக, பாதசாரியாக, ஆறு மணிக்குப் பிறகு வெளியே செல்வது பைத்தியக்காரத்தனம் என்று ஒருவர் இல்லை ஒன்பதுபேர் சொல்கிறார்கள். பர்ஸில் பணம் நிறைய இருந்தால் எல்லாம் போயிற்று. பணம் இல்லாதுபோனால் வழிப்பறிக்காரன் கோபத்தில் என்ன செய்வான் என்று சொல்லமுடியாது. பாஸ்போர்ட்டைக் கிழித்துப் போடலாம். சுண்டுவிரலை வெட்டித் தள்ளலாம். காதில் துளை போடுவது போலச் சுட்டுவிட்டுப் போகலாம்.”

கே-மார்ட்டில் வாங்கிய ஜோடுகள் (அமி-யின் வார்த்தை), கடிகாரம் உள்ள பேனா, டைப்ரைட்டர் என்ற அவரது அனுபவங்கள் கடைசி பத்தி படிக்கும்வரை ஒரு சின்ன சஸ்பென்ஸுடன் சுவாரஸ்யமாக  எழுதப்பட்டுள்ளது. சில நவீன வாசகர்கள் அந்த சஸ்பென்ஸை முதலிலேயே ஊகிக்கலாம் என்றாலும், அசோகமித்திரன்  நடையில் உள்ள ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அன்றுக்கும் இன்றுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை என்ற காலத்தின் பதிவும் இருக்கிறது.

அவர் இருந்த ஏழு மாதங்களில், குளிர்காலத்தையும் பார்த்துவிடுகிறார். உறைபனி பெய்வதை , பனியில் நடப்பதை, கீழே மல்லாந்து விழுவதை, பகிர்ந்துள்ள பதிவுகள்,  நாம் மதிக்கும் ஒரு ஆளுமையை அருகில் இருந்து பாப்பதுபோல் ஒரு அனுபவத்தை தருகிறது. “அந்த ஆண்டு அயோவா சிடியில் உறைபனி பெய்த முதல் நாளன்றே  நான் சறுக்கி விழுந்தேன்.” – வீழ்ச்சி எனும் அத்தியாயத்தில்.

‘ஒற்றன்’ என்ற அத்தியாயத்தில், அபே குபேக்னா எனும் எத்தியோப்பியா  நாட்டு எழுத்தாளனையும், மகா ஒற்றன் என்ற அத்தியாயத்தில் ஹோஸே அண்டோனியோ பிராவோ எனும் பெரு நாட்டு எழுத்தாளனையும் அறிமுகப்படுத்துகிறார். ஒரு நாவல் எழுதினாலும், ஆங்கில மொழியாக்கம் செய்து சாதனை செய்யும் அபே குபேக்னா, கஜூஹா எனும் பெண்ணுடன் அமி-க்கு இருக்கும் தோழமையை தப்பாக  நினைத்து, இவரை முகத்திலும் தோளிலும் குத்துகிறான். பொறாமை?

பிரோவோ, தனது அறையின் சுவற்றில் அவன் எழுதவிருக்கும் நாவலில் வரும் பாத்திரங்களை வெவ்வேறு வர்ணத்தில் எழுதி ஒரு ‘சார்ட்’ போல் போட்டு வைத்திருக்கிறான். ஒவ்வொருவரும் மற்றவருக்கு என்ன உறவு என்று குறிகள் காட்டுகின்றன என இவருக்கு விளக்குகிறான். பிராவோவின் மேல் இவருக்கு எழுத்தாளனாக பெரும் மதிப்பு வந்துவிடுகிறது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அலீசியாவிற்கு, பெரு நாட்டின் பெருமை பிடிக்காது என்றாலும், அவளிடம் பிராவோ பற்றி பெருமையாக பேசுகிறார். ஒரு மாதம் வெளியே வராமல் நாவல் எழுதுகிறேன் என்று சொன்ன அவனுடன் , ஒரு பெண்ணும் உடன் இருந்திருக்கிறாள் என்று இவருக்குத் தெரிய வருகிறது. இவர்களைப் பார்த்துக்கொள்ளும் ஜான் என்பவன், “வா, இன்று போய் பிரோவாவின் மனைவியை ஏர்போர்ட் சென்று அழைத்து வருவோம்” என்று அமி-யை ஒரு நாள் அழைக்கிறான். காரில் ஜானுடன் இவரைப் பார்க்கும் பிராவோவிற்கு , ‘சங்கடம்’.

எழுத்தாளர்களாக கூடிய மாநாடு இந்த மாநாட்டில், விவாதங்கள், சந்திப்புகள் வெவ்வேறு நகரங்களிலும் நடக்கிறது. அயோவா மாநிலத்தின் தலைநகரான, டெமாய்ன் நகரில். ‘கவிதைவாசிப்பு’ நடக்கிறது. அசோகமித்திரன் , கவிதை எனது துறை இல்லை என்று சொல்லிப் பார்க்கிறார். அவர்கள் விடுவதாக இல்லை. ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’ கவிதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வாசிக்கிறார். பாடவும் வற்புறுத்துகிறார்கள். அன்று இரவு, அவருடன் தங்கியிருக்கும் எழுத்தாளருடனான உரையாடல்.

“உனக்குத் தெரியுமா? நான் பாட்டேதும் பாடவில்லை. எங்கள் தமிழ் மொழியின் முப்பது எழுத்துக்களைத்தான் ராகம் போட்டுப் பாடினேன். “

அவனும் வியப்பேதும் இல்லாமல்,“அப்படியா? நானல்லவா அப்படிச் சமாளித்ததாக நினைத்துக்கொண்டிருந்தேன். நானும் எங்கள் மொழி எழுத்துக்களைத்தான் பாட்டாகப் பாடினேன்.” என்கிறான்.

விக்டோரியா எனும் பெண் ஒவ்வொரு நாட்டினரும் சொன்ன அல்லது எழுதிய கவிதையை   இணைத்து  நாடகமாக உருமாற்றிஅரங்கேற்றுகிறார். அதில் ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’ நாடகமாக நடிக்கப்படுகிறது.

ஒருவர் பார்வையில் வாசிக்கப்படவேண்டிய இந்தக் கவிதையை இருவரின்  பார்வையில் எப்படி நாடகமாக மாற்றினாய் என்று அசோகமித்திரன் , விக்டொரியாவிடம் கேட்கிறார். அதற்கு அவள் “எனக்குப் பொய்கள் சொல்ல அம்மா மட்டும்தான் இருக்கிறாள், அப்பா யாரென்றே தெரியாது” என்கிறாள். துக்கம்.

ஹூஸ்டன் ப்ராஜெக்ட் முடிந்து , தெற்கு கலிஃபோர்னியா நகர் ஒன்றுக்கு என்னை இடம் மாற்றினார்கள். அந்த நகரை மிஸ்ஸன் வியாஜோ (Mission Viejo) என்று நான் உச்சரித்தேன். எனது மேலாளர், ‘மிஸ்ஸன் வியாஹோ’ என்று சொல்லவேண்டும் என்று ‘j’ வரும் இடங்களை ‘ஹ’ சொல்ல கற்றுக்கொடுத்தார். அமி-க்கு, இருந்த ஏழு மாதங்களில் அந்தக் கவனம் இருந்திருக்கிறது. Des Moines என்று ப்ரெஞ்ச் வார்த்தையை கொண்ட அயோவா மாநிலத்தின் தலைநகரை , டெமொய்ன் என்று S-ஐ விடுவித்து சரியாக பிரயோகப்படுத்தியுள்ளார். பெரு நாட்டின் எழுத்தாளனை,  ஹோஸே அண்டோனியோ பிராவோ என்று சரியாக சொல்கிறார். லிஃப்ட்டை எலிவேட்டர் என்றுதான் அமரிக்காவில் சொல்வார்கள் என்று அவர் கண்டுகொண்டிருப்பார். இருந்தும் இந்தியனாக, இந்திய-ஆங்கில உபயோக வழக்கத்தில் லிஃப்ட் என்றே இருக்கட்டும் என்ற அவருக்கே உரித்தான நுணுக்கத்துடன் கையாண்டிருக்கலாம்.

காலத்தைப் பதிவு செய்த, காலத்தால் அழியாத நூல், அசோகமித்தரனின், ‘ஒற்றன்’.

ஆஸ்டின் சௌந்தர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2022 11:34

தன்மீட்சி- கடிதம்

தன்மீட்சி வாங்க

அன்புள்ள ஜெ,

பல்வேறு வாழ்க்கைத்தளத்தில் இருப்பவர்கள், வாழ்க்கை தொடர்பாக பல கோணங்களில் கேட்ட கேள்விகளுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கடிதம் வாயிலாக அளித்த பதில்களைத் தொகுத்து வெளியான புத்தகம் “தன்மீட்சி”.

என்னைத் துளைத்துக் கொண்டிருந்த, விடை தெரியாத பல கேள்விகளுக்கு “தன்மீட்சி” யில் தெளிவு கிடைத்தது. இந்த சமுதாயமும் பள்ளிக்கல்வியும் சொல்லிக்கொடுத்த எளிய விளக்கங்கள் நம்முடைய அகக்கேள்விகளுக்கு, குழப்பங்களுக்கு பல நேரங்களில் பதில் சொல்லமுடிவதில்லை. அதற்கு நம்முடைய மரபில் இருந்து நடைமுறை சார்ந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.

செயல்படாமல் பல செயல்களுக்கான சாத்தியங்களாக மட்டுமே வாழும் நிலையிலிருந்து விடுவித்துக்கொள்ள இந்தப் புத்தகம் ஒரு ஆரம்பம். வாழ்க்கையின் நோக்கம் நிறைவாக வாழ்தல் மட்டுமே. அந்த நிறைவை அளிக்கும் செயலை ஒவ்வொருவரும் கண்டடைய வேண்டும். அதுவே “தன்னறம்”.

“தன்மீட்சி” மிக முக்கியமான செயலூக்கப் புத்தகம். ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் நிறைவாகவும், தீவிரமாகவும், செயலூக்கத்துடனும் எப்படிக் கொண்டு செல்கிறார் என்பதை அறிந்ததன் மூலம் நேரத்தையும், சமநிலையையும் கவனமாகக் கையாள உறுதி எடுத்துக்கொண்டேன். நேரத்தைக் கவனமுடன் கையாண்டு, சமநிலையைப் பேணி நிறைவளிக்கும் செயலில் ஈடுபடும் இன்பத்தை அனுபவிக்கத் துவங்கி இருக்கிறேன். அதைத் தொடர்தல் மிகப்பெரிய சவால்.

வாசிப்பு மற்றும் அறிவுலக ஈடுபாடு அனைவருக்குமானது அல்ல. அறிவியக்கத்தில் இருப்பவர்கள் அதில் இல்லாதவர்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் பல நடைமுறை சிக்கல்கள் மற்றும் அழுத்தத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். அதற்கான புரிதல் மற்றும் தயார்படுத்தல் வழிகள் “தன்மீட்சி” யில் உள்ளன.

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது

இந்தக் குறள் பெரிய செயல்களில் தீவிரமாக ஈடுபட ஒரு உந்துசக்தி.

மனச்சோர்வில் இருக்கும் போது “தன்மீட்சி” யின் அத்தியாயங்கள் பலமுறை என்னை வெளிக்கொண்டுவர உதவின.

அனைவருக்கும் தனக்கு நிறைவளிக்கும் செயலையே தொழிலாகக் கொண்டிருக்கும் பாக்கியம் அல்லது வாய்ப்பு அமையாது. தனக்கு நிறைவளிக்கும் செயல் முக்கியம் என நினைப்பவர்கள் வாழ்க்கை மற்றும் சமுதாயம் பற்றிய சரியான புரிதல் இருந்தால் மட்டுமே அந்தச் செயலில் வெற்றிகரமாக ஈடுபட்டு நிறைவடைய முடியும்.

பெற்றோருக்கான கடமை, சமுதாயத்திற்கான கடமை, பொருளீட்டுதலின் அவசியம், இவற்றை உதாசீனம் செய்வதால் வரும் நிர்த்தாட்சண்யமற்ற விளைவுகள் இவற்றை உணர்ந்தால் மட்டுமே சமநிலையுடன் அடிப்படைக் கடமைகளையும், நிறைவளிக்கும் செயல்களையும் ஆனந்தமாகச் செய்ய முடியும்.

சிந்திக்கும் திறனும், நுண்ணறிவும் அருளப்பெற்றவர்கள் இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. அதற்காக சில தியாகங்களையும் செய்யக் கடன்பட்டவர்கள். அதை உணராமல் எளிய பொருளியல் வாழ்க்கை அல்லது சோம்பலால் நேரத்தைக் கடத்துபவர்கள் நம்மைப் படைத்த இந்த இயற்கைப் பேராற்றலுக்குச் செய்யும் நுண்ணிய அவமதிப்பு.

மனம் இயல்பாகவே சோம்பலையும், சோகத்தையும் நாடிச்செல்லும். தன்முயற்சியால் அதை வெல்ல முடியும். மகிழ்ச்சி என்பது நம்முடைய தேர்வு. விழிப்புடனிருந்தால் மகிழ்ச்சியான உளநிலையை நம்மால் உருவாக்க முடியும். ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான வழிகளைத் தேடிக்கண்டடைய வேண்டும்.

நேரத்தை பயனற்ற செயல்களில் வீணடிக்காமல், தீவிரமாகச் செயலாற்றி, நிறைவான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஒவ்வொருவருக்கும் சாத்தியமும் கடமையும் உள்ளது.

சக்தி பிரகாஷ்

தன்மீட்சி – மைவிழிச்செல்வி

தன்மீட்சி, சாவு- ஒரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2022 11:32

ஷௌகத்தின் ஹிமாலயம்

இனிய ஜெயம்

மே இறுதி வாரம் எங்கள் கூட்டு குடும்பத்தில் மற்றொரு விழா. எனவே சில லெளகீக பயணங்கள். இடையே அவற்றிலிருந்து துண்டித்துக்கொண்டு ஒரு இரண்டு நாட்கள் அருணைமலை சென்றுவிட்டேன். மொபைலை சைலண்ட்டில் போட்டு விட்டு ரமணர் தங்கிய விருபாக்ஷ குகை சென்று விட்டேன். இரவில் தனியே கிரிவலம். விடிந்த பிறகு ராமணாஸ்ரமம் தங்கிவிட்டு இரவு வீடு வந்தேன்.

என்னிலிருந்து எப்போதோ கிளம்பி விட்டேன். போய் சேர வேண்டிய எந்தை ரமணரின் இணையடியும் கண்களில் கண்டு விட்டேன். எனது கேதார்நாத் பயணத்தில் மலைப் பாதை அளிக்கும் விசித்திரம் ஒன்றை முதன் முதலாக கண்டேன். கண்ணால் ஒரு இடத்தை பார்த்து விடுவோம். ஆனால் அங்கே சென்று சேர, மலை பாதாளம் பாயும் கங்கை என்று நாள் முழுக்க கடந்து கடந்து சென்றுகொண்டே இருக்க வேண்டும். அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். எந்தை திருவடி கண்டுவிட்டேன். நோக்கி நடந்து கொண்டே இருக்கிறேன் ஜென்ம ஜென்மம் கடந்து.

இம்முறை அண்ணாமலையார் ஆலயத்துக்கு செல்லவில்லை. இரண்டு வருட ஊரடங்கில் அக்கோயில் எனது அல்லாத கோவில் என்றாகிவிட்டது.  பெருமதில் கடந்தால் அதன் உள்சுற்றில் வணிக உணவு அங்காடிகள், கழிப்பிடங்கள் வந்து விட்டது. ராஜ கோபுர வாசல் தொட்டு பின் கோபுர வாசல் வழியே வெளியேறும் வகையில் சுற்றி சுற்றி பின்னிச் செல்லும் இரும்பு கூண்டு வழியாக மட்டுமே கோயிலுக்குள் சுற்ற முடியும்.

இரண்டு வருடமாக கிரிவலம் தடை. இப்போது அந்த தடை முடிந்து விட்டது. அநேகமாக இந்த சித்ரா பௌர்ணமியில் மக்கள் வெள்ளத்தால் மலையும் கோயிலும் குலுங்கப் போகிறது. கண் முன்னால் எல்லாமே மாறிவிட்டது. கோயிலுக்குள் ரமணர் தவம் செய்த பாதாள லிங்க சந்நிதியில் ரமணர் போலவே சில நாட்கள் வாழ்ந்திருக்கிறேன். ஏன் என்று கேட்க கூட ஒருவரும் இருக்க மாட்டார்கள்.  இன்று அந்த சன்னதிக்கே கூண்டு வழிகளை பிளந்து போவது பகீரத பிரயத்தனம்.

பொதுவாக ரஜினிகாந்த் இளையராஜா போன்றவர்கள் அங்கே கிரி வலம் செய்ய வருவது வார பத்திரிகைகள் வழியே பிரபலம் ஆக, முதல் எழுச்சி துவங்கியது, பின்னர் குமுதம் பக்தி ஸ்பெஷல் போன்ற இதழ்களின் பெருக்கம், அதில் பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் வீசிய வசிய வலை, ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரம் என்று இன்றைய பக்தர் கும்பலுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், இவற்றுக்கெல்லாம் துவக்கம் என்பது இன்னும் பின்னால் நிகழ்ந்த ஒரு தொடர். எண்பதுகளின் துவக்கத்தில் பரணீதரன் என்பவர் எழுதிய அருணாச்சல மகிமை எனும் இரண்டு பாக நூல். சேஷாத்ரி ஸ்வாமிகள் நூற்றாண்டு ஜெயந்திக்கு அவர் குறித்த கட்டுரை ஒன்று எழுத அங்கே சென்று, அவரிலிருந்து ரமணர் பூண்டி ஸ்வாமிகள் என்று துவங்கி அருணை மலையை வந்து சேர்ந்த ஆத்மீக ஆளுமைகள் பெரும்பாலோனரை கதை போல அவர்கள் வாழ்வை சொல்லி, அந்த உயர் ஜீவன்களை தமிழக பொது மனதுக்கு அறிமுகம் செய்தார் பரணீதரன். இன்று தமிழில் வாசிக்கக் கிடைக்கும் ஒரு யோகியின் சுய சரிதம், இமயத்து ஆசான்கள் போன்ற நூலுக்கு எல்லாம் முன்னோடி அருணாசல மகிமை நூலே.

இம்முறை என் கையில் இருந்தது (ஷெளக்கத் எழுதி kv ஜெயஸ்ரீ மொழியாக்கம் செய்த வம்சி வெளியீடான) ஹிமாலயம் எனும் நூல். கோடை பற்றி எரியும் அருணையின் ரமண குகை வாயிலில் அமர்ந்து மீண்டும் வாசித்தேன். வெந்து தணியும் உடல் விடுத்து எழுந்து, கற்பனை வழியே எலும்புகளை குளிர் கொண்டு குடையும் ஹிமாலய மலைச் சரிவுகளில் சென்று இறங்கினேன்.

குரு நித்யாவின் மாணவர்களான ஷெளக்கத்தும் காயத்ரியும் குரு சமாதி எய்திய ஒன்றரை மாதத்துக்குப் பிறகு இமாயல பயணம் ஒன்று செய்ய முடிவு செய்கிறார்கள். சீன ஞான நூல் நிமித்தம் அனுமதி அளித்த வகையில் காயத்ரி தனது பயணத்தில் ஷெளக்கத்தையும் இணைத்துக் கொள்கிறார். இமயமலைத் தொடரில் ஹரித்துவார், ரிஷிகேஷ், யமுனோத்ரி, உத்ரகாசி, கங்கோத்ரி, தபோவனம், கேதார்நாத், பத்ரிநாத் என்று அவர்கள் நிகழ்த்திய  அந்தப் பயணம் குறித்த ஷெளக்கத் அவர்களின் அனுபவப் பகிர்வே இந்த ஹிமாலயம் நூல்.

சூழச்சூழ அகல் விளக்குகள் எரியும் குரு நித்யாவின் சமாதியில் துவங்கும் இந்த நூல், ஹிமாலயத்தின் சிகரங்கள் தொட்டு, நதிகள் தொடர்ந்து முழு நிலவு வரை வர்ணனைகள் வழியே அளிக்கும் அனுபவம் இதை ஐம்புலன் வழியே அனுபவிக்கிறோம் என்ற உணர்வை கிளர்த்தும் வகையில் அலாதியானது. அழகு அழகு அந்த நிலவெளியின் அழகு மொத்தத்தையும் சொல்லில் அள்ளிய அழகு. எங்கள் இமயப் பயணத்தில் எனது நண்பர் காரைக்குடி பிரபு பனி போர்த்திய கிராத மலை முடி கண்ட கணம் என் போலவே பரவசமாக இருந்தார். இரவு உரையாடலில் அவர் வசம் கேட்டேன் “இதைக் காட்டிலும் பல மடங்கு அழகு கொண்ட பனி மலைகள் கொண்டதுதானே அமெரிக்கா” என்று. அவர்  “பார்த்திருக்கிறேன். அவை எல்லாம் அழகுதான். ஆனால் ஸோ வாட் என்றுதான் தோன்றும். இதில் உள்ள ஒன்று அதில் இல்லை. ஒரு வேளை நான் இன்னும் இம்தியா காரனாகவே இருக்கிறேனோ என்னவோ” என்றார். பின்னர் யோசிக்கயில் ஒன்று புரிந்தது. பண்பாட்டால் ‘சாரம்’ ஏற்றப்படாத அழகு ‘வெறும்’ அழகாக, ஜிட்டு உரைகளில் வரும் அழகாக,  மட்டுமே இருக்க முடியும். சாரம் இல்லா உப்பு போல. இங்கே எங்கள் கண் முன் சிகரம் என கிராத நாதனாக எழுந்து நிற்பவவன் கங்கைவார் சடையன் அல்லவா? இந்த ஹிமாலயம் நூலில் தொழிற்படும் நிலமும் அதன் அழகும் இந்திய மதப் பண்பாட்டு சாரத்தில் ஊறிய ஒன்றே. சென்ற பாதை குறித்த துல்லியமான பயணக் கையேடாக விளங்கும் அதே சமயம் அந்த நிலம் கொண்டிருக்கும் புராண, ஐதீக, வரலாற்று, ஆத்மீக சாரம் குறித்த அறிமுகமாகவும் இந்நூல் விளங்குகிறது.

சுகுமார் ஆழிக்கோடு உபநிஷதங்கள் குறித்து  எழுதிய ஆய்வு நூலான தத்துவமசி நூலை ( தமிழில் சாகித்ய அகாடமி வெளியீடு) உபநிஷதங்கள் அனைத்தையும் இமயத்துக்கு நிகர் வைத்தே துவங்குவார். அதுபோல  ஷெளக்கத் தும் உபநிஷத்கள், காளிதாசனின் காவிய சொற்கள் ராம சரித மானசம், மாபாரதம் இவை போன்ற இன்ன பிற தெய்வீக கதைகள் இதனூடாகவே பக்தி பூர்வமாக இமயத்தைக் கண்டு அதில் திளைக்கிறார். குரு நித்தியாவின் மாணவர் என இவர் அறியப்பட்டும் ஆசிரமங்களில் எல்லாம் சத்சங்கங்களில் இவர் வசம் கேட்கப்படும் வினாக்களுக்கு எல்லாம் ஒரு அத்வைதியாக ஷெளக்கத் அளிக்கும் பதில்கள் இந்த நூலின் முக்கிய அலகுகளில் ஒன்று. குறிப்பாக பக்தி குறித்து, மாதா பிதா குரு தெய்வம் எனும் வைப்பு முறைக்கு, ப்ரமச்சர்யம், க்ரகஸ்தம், சன்யாசம் வானப்ரஸ்தம் போன்ற நிலைகளுக்கு, உருவ வழிபாட்டில் குறிப்பிட்ட படிமம் ஒன்றுக்கு என ஷெளக்கத் கொடுக்கும் இன்டர்ப்ரடேஷன். இவை போக இப்பயணத்தில் அவரைத் தொடும் எதையுமே கூடவோ குறையவோ இன்றி ‘சரியான’ எல்லைக்குள் வைத்து பார்க்க முயலும் அவரது பார்வைக்கோணம் என இந்த நூலைத் தொகுப்பதே குரு நித்யா வழியாக ஷெளக்கத்  பெற்ற அறிதல் பார்வையே.

அடுத்ததாக இந்த நூலின் சிறப்பம்சம் நூல் நெடுக பெருகிப் பெருகி வந்துகொண்டே இருக்கும் ஆளுமைகளின் குணாதிசயங்கள். ஒரு பாபா அந்த மலையில் காலமெல்லாம் வெறும் மர உரி கோவணம் தரித்து, சொந்தமாக பயிரிட்டு அதை மட்டுமே உண்டு வாழ்ந்து போகிறார். மற்றோரு பாபா லட்சங்களில் பணம் சேர்த்து பாதை இல்லா இடங்களில் பாதை சமைக்கிறார். எவரையும் பார்க்க விரும்பாத பாபா ஒருவர். அவரை தவறுதலாக சென்று பார்த்துவிட்ட ஒரு காவல் அதிகாரியை கல்லை கொண்டு அடித்து கொன்று விடுகிறார். ராணா என்பவர் ஷெளக்கத்தை கண்டதும் வந்து விட்டீர்களா குரு தேவரே நான்தான் விவேகானந்தர் போன பிறவியில், நீங்கள்தான் பரமஹம்சர் போன பிறவியில். இந்த பிறவியிலும் உங்களை கண்டு விட்டேன். வாருங்கள் போய் இந்தியாவை புரட்டி போடுவோம் என்று கூப்பிடுகிறார் உண்மையாகவே. இப்படி பலப்பல ஆளுமைகள் நூல் நெடுக தோன்றி வந்துகொண்டே இருக்கிறார்கள்.

இவை போக இந்த நூலின் மற்றொரு தனித்தன்மை நூல் நெடுக வந்துகொண்டே இருக்கும் ‘ஒன்றின் இரு முகங்கள்’. இமயத்தின் தூய்மை அளவே தூசி பறக்கும் குப்பை கூளங்களும் காட்சியாகிறது. குளிர் வெட்டும் யமுனை வருணிக்கப்பட்ட அடுத்த பக்கம் அதன் வெந்நீர் ஊற்றுக்கள் அறிமுகம் ஆகிறது. தனது சிறிய குகைக்குள் இருக்கும் இடத்தை இந்த இருவருடனும் எலிகளுடனும் பகிர்ந்து கொள்ளும் பாபா. வாய்ப்புகள் இருந்தும் தங்க இடம் தராமல் வெளியேற்றும் ஆசிரமம். பைத்தியக்காரன் போல தோற்றம் ஆனால் அனைவராலும் போஷிக்கப்படும் பாபா. பித்தனா சித்தனா என வகை பிரிக்க முடியாத செருப்படி வாங்கி அமைதியாக நடந்து செல்லும் ஒருவன். தாழ்த்தப்பட்டடோருக்கான தனி கிருஷ்ணன் கோயில். எல்லோருக்கும் எப்போதும் வாசல் திறந்தே கிடக்கும் குருத்துவாரா, வாழ்நாளெல்லாம் இருக்கும் இடம் விட்டு எங்குமே போகாத, தன் முன் உள்ள எந்த எழிலையும் காண விரும்பாமல் கண்களை அவித்துக் கொள்ளும் ஃபல்ஹரி பாபா. திருமணமே செய்து கொள்ளாமல் இமயத்தொடரையே தனது காதலியாகக் கொண்டு ஆயுள் பரியந்தமும் அதில் அலைந்து திரிந்து திளைக்கும் நரேஷ் உத்ராகாண்ட் நெடுக ராம காதை சொல்லி வாழும் பெண், சோம்பேறி கணவருக்கு குடும்பத்துக்கு என உழைத்து உழைத்தே சாகும் கார்வாலி பெண்கள் என இத்தகு இருமைகளின் ஆடல் மேடையாக திகழ்கிறது இந்த நூலின் ஹிமாலயம்.

நூலின் தலையாய தருணங்கள் பலவற்றில் முதலிரண்டு என நூலாசிரியர் மிக அருகே காணும் முழு நிலவின் அழகையும், தபோவனத்தில் குரு நித்யாவையே மீண்டும் கண்டது போல எழும் உள மயக்கு சித்திரத்தையும் சொல்வேன்.  தனிப்பட்ட முறையில் என்னை கட்டிப்போட்டது குரு கோவிந்த் சிங் தனது பிறவிகளில் ஒன்றில் தவம் செய்த ஹேம் குண்ட் எனும் இடத்தில் அமைந்த குருத்துவாராவில், சீக்கியர்களின் புனித நூலுக்கு அவர்கள் கைங்கர்யம் செய்யும் காட்சி. அவர்களின் புனித நூலை நாள் முழுதும் உயிருள்ள குரு போலவே நடத்துகிறார்கள்.  இரவில் போர்த்தி விசிறி வீசி தூங்க வைத்து சத்தமின்றி அந்த அறை கதவை மூடி, கைங்கர்யத்தை நிறைவு செய்கிறார்கள்.

இப்படி இமயத்தின் எல்லா இடங்களும் சென்று பக்தி கொண்டு வணங்கி அவ்வனுபவதை இந்நூல்வழி பகிர்ந்திருக்கும் ஷெளக்கத் அவர்கள் பிறப்பால் ஒரு முஸ்லீம். மதங்கள் போட்டுவைத்திருக்கும் மதில்களுக்குள் சிக்காமல், அதன் சாரமான எல்லைகளோ தடைகளோ வரயரயோ அற்ற மெய்யியல் வானில் சிறக்கடிக்க எழுந்துவிட்ட பறவை.

இந்த எல்லா அனுபவங்களும் கால் நூற்றாண்டு பழையது. இன்று இப்படி ஒரு கலாச்சார முஸ்லீம் என்பதோ, அப்படிப்பட்ட ஒருவரின் இப்படிப்பட்ட உத்ராகண்ட் பயணம் என்பதோ சாத்தியமா என்று தெரியவில்லை. சுதந்திர இந்தியா அதன் தந்தையர் கனவிலிருந்து கைநழுவி இந்துத்துவ மதவாத அதிகார அரசியலின் யதார்த்தத்தில் விழுந்து விட்டது. பாரதம் நெடுகிலும் மத அரசியலின் சுவர்கள் எழுப்பப்பட்டு, பல்வேறு பிரச்சார வெறிகள் வழியே அது பலப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்த வரலாற்றுப் பிழைக்கு நாம் அளிக்கப்போகும் விலை இனி ஒருபோதும் நம்மால் மீண்டும் ஈட்டிக்கொள்ள இயலா ஒன்றாகவே இருக்கும். ஆக இன்றும் இனி வரப்போகும் சூழல்களிலும் துருவ மீன் போல நாம் தேற வேண்டிய ‘நமது’  பண்பாட்டு நிலையின் சாட்சியங்களில் ஒன்று இந்த நூல். Kv ஜெயஸ்ரீ அவர்களின் பணியில் அவர் என்றும் பெருமிதம் கொள்ளத்தக்க பணி இந்த மொழியாக்கம். நாம் இன்று நிற்கும் அரசியல் மற்றும் இன்னபிற லௌகீக இருளில் இருந்து ஆத்மீக ஒளிக்கு செல்ல ஒரு திசைகாட்டியே இந்த ஹிமாலயம் நூல். ஷெளக்கத் அவர்களுக்கு அன்பும் வணக்கமும்.

கடலூர் சீனு

ஹிமாலயம் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2022 11:30

நற்றிணை யுகன் -கடிதங்கள்

புதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு -நற்றிணை யுகன் பேட்டி

அன்புள்ள ஜெ

தமிழில் நாவல்களின் மலிவுப்பதிப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டுதான் இருந்தன. 1960களில் மு.வரதராசனாரின் நாவல்களின் மலிவுப்பதிப்புகள் வெளிவந்தன. 1970 களில் ராணிமுத்து மு.வரதராசனார், புதுமைப்பித்தன்,ஆர்.ஷண்முகசுந்தரம், நீல பத்மநாபன் போன்றவர்களின் நாவல்களை ஒரு ரூபாய் விலையில் ஒருலட்சம் பிரதிகள் அச்சிட்டு வெளிக்கொண்டுவந்தது. பாக்கெட் நாவல் சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையை மலிவுநூலாக முப்பது ரூபாய் விலையில் கொண்டுவந்தது.

ஆனால் மு.வரதராசனாரின் திருக்குறள் உரை மலிவுவிலையில் வெளிவந்தபோது ஆழமான ஒரு கலாச்சாரச் செல்வாக்கை உருவாக்கியது. நவீன இலக்கியங்கள் மலிவு விலையில் வெளிவந்தபோது அப்படி எந்த பெரிய பாதிப்பும் உருவாகவில்லை. வாசிப்பின் பேட்டர்ன் கூட மாறவில்லை. உதாரணமாக நீல பத்மநாபனின் உறவுகள், பள்ளிகொண்டபுரம் இரண்டும் மலிவு விலையில் ஒருலட்சம் பிரதிகள் விற்றன.ஆனால் அவரை தொடர்ந்து எவரும் வாசிக்கவில்லை. இலக்கியவாசகர் மட்டுமே வாசித்தனர்.

நவீன இலக்கியத்துக்கு ஒரு வாசிப்புப் பயிற்சி தேவை. அதை ஓர் இயக்கமாக உருவாக்கினால்தான் இலக்கியம் போய்ச்சேரும்

ஜெயராமன்

அன்புள்ள ஜெ

புதுமைப்பித்தன் கதைகளை முதலில் மலிவுவிலை பதிப்பாக கொண்டுவந்து பரவலான வாசிப்பை உருவாக்கியது சீர் வாசகர் வட்டம். அதன்பிறகே நற்றிணையின் மலிவுவிலைநூல்கள் வெளிவந்தன. இது பதிவுசெய்யப்படவேண்டும்.

ஆர்.ராகவேந்திரன்

அன்புள்ள ஜெ

மலிவுவிலை நூல்கள் வரவேண்டும் என்றால் அந்நூல்கள் பத்தாயிரக் கணக்கில் விற்கப்படவேண்டும். வெளியிடுபவருக்கு சொந்த அச்சகம் இருக்கவேண்டும். அவர் அச்சிட்ட நூல்களை முழுக்க நேரடியாக அவரே வாசகர்களுக்கு விற்கவேண்டும். அது எல்லா நூல்களுக்கும் சாத்தியம் கிடையாது. பலநூல்கள் மலிவு விலையில் வந்தாலும் நூல்விற்பனை குறைந்துவிடும்.

பரிதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2022 11:30

April 12, 2022

திருப்பூர் உரை,ஒரு நாள்

திருப்பூர் கட்டண உரைக்கு ஒன்பதாம்தேதிதான் கிளம்பிச் சென்றேன். ஒருநாள் முன்னர் சென்றிருக்கலாம். ஆனால் பேசிப்பேசி உடைந்த தொண்டையுடன் மேடையேறவேண்டியிருக்கும் என்பது என் அனுபவம். ஏற்கனவே எனக்கு தொண்டை மிக உடைந்தது என்று சொல்வார்கள்.

காலையில் நண்பர் அழகுவேலும் ராஜமாணிக்கமும் வந்து ரயில்நிலையத்தில் இருந்து விடுதிக்குக் கூட்டிச்சென்றார்கள். ஏழுமணிக்குப் படுத்து ஒரு தூக்கம்போட்டேன். பதினொரு மணிக்கு ஈரோடு கிருஷ்ணன் கும்பலுடன் வந்துவிட்டார். அதன்பின் வந்தபடியே இருந்தனர்.

நண்பர்கள் கூடினாலே பேச்சு எழுந்துகொண்டே இருக்கும். ஏதாவது கேள்விகள், பிரச்சினைகள், வேடிக்கைகள். பேசாதே, தொண்டை பத்திரம் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும், நமக்கு நாமே. அப்படியும் பேசிவிடுவோம். இரண்டுமணி நேர உரை என்பது அவ்வளவு மூச்சு தேவைப்படுவது. நானெல்லாம் அறைகளுக்குள் ஐந்தாறுமணிநேரம் பேசுபவன். மேடையில் குரல் வேறொன்றாகிறது.

எனக்கு பாடுபவர்கள் மேல் எப்போதுமே ஆச்சரியம். மூன்றுமணிநேரம் எப்படி மேடையில் பாடுகிறார்கள்? அதிலும் கதகளி பாடகர்கள் ஆறேழுமணிநேரம் மேடையில் பாடுவார்கள். அங்கங்கே சொல்லியாட்டம் வழியாக கிடைக்கும் மூச்சிடைவெளிதான்.

முன்பு 2000 ல் சொல்புதிது இதழுக்காக இசை ஆய்வாளர் நா.மம்முதுவை பேட்டி எடுக்க நானும் வேதசகாயகுமாரும் சென்றிருந்தோம். அன்று அவர் அறியப்படாத ஆளுமை. அரசுப்பணியில் இருந்தார். அவர் இல்லத்தை தேடிப்பிடித்து சென்று நீண்ட பேட்டி எடுத்து சொல்புதிதில் வெளியிட்டோம். அவருடைய முதல் பேட்டி.தமிழ் அறிவுச்சூழலுக்கு அவரை அறிமுகம் செய்தது அந்த உரையாடல்தான்.

அப்போது நான் அவரிடம் வியந்து சொன்னேன். ‘இந்த பாடகர்கள் எப்டித்தான் மூணுமணிநேரம் பாடுறாங்களோ! நினைக்கவே ஆச்சரியமா இருக்கு’.

அவர் புன்னகைத்தார். ‘எந்தக் கலையும் அதைச்செய்றவங்களுக்கு ஈஸிதான்’

நான் ”ஆமாம்” என்றேன். நான் எழுதுவதுபோல இன்னொருவர் எழுதுவது கடினம்.

பேச்சுநடுவே மம்முது ஏதோ ராகம் கூற அது வரை அவர் அருமே அமர்ந்திருந்த ராஜா முகம்மது என்னும் குண்டான இளைஞர் உச்சஸ்தாயியில் அதை பாடினார். அறையே அந்த நாதத்தால் நிறைந்தது. மம்முது விளக்க விரும்பிய பழந்தமிழ்ப்பண், கர்நாடக சங்கீத ராகம், இந்துஸ்தானி இசை, கூத்துப்பாட்டு, சினிமாப்பாட்டு எல்லாவற்றையும் அவர் உடனே பாடினார். (பேட்டி முழுக்க ராஜா முகம்மது பாடிய செய்தியும் வரும். அவர் படமும் வெளியானது)

நான் ராஜா முகம்மது பற்றி விசாரித்தேன். அவர் தெருக்கூத்து கலைஞர். ராஜபார்ட். அவ்வட்டாரங்களில் மிகப்புகழ்பெற்றவர். ‘ஒரு தெருக்கூத்து எவ்ளவு நேரம் நடக்கும்?” என்றேன்.

“அது இருக்குமுங்க. சாயங்காலம் ஏழு ஏழரைக்கு ஆரம்பிச்சா மறுநாள் காலம்பற கோழி கூவுறது கணக்கு. அஞ்சு அஞ்சர…”

ஏறத்தாழ பத்து மணிநேரம். “உங்க ரோல் எவ்ளவு இருக்கும்?” என்றேன் மூச்சுத்திணறலுடன்

“முழுநேரமும் ஸ்டேஜ்லே இருக்கணும்…நான் ராஜபார்ட்ல?”

”அவ்ளவும் பாட்டுதான், வசனம் அனேகமா இருக்காது” என்றார் மம்முது

”எவ்ளவு பாட்டு, சுமாரா?” என்றேன்.

”ஒரு பாட்டு சராசரியா ஏழெட்டு நிமிஷம் இருக்கும்… ஒரு மணிநேரத்திலே அஞ்சுபாட்டுன்னாக்கூட அம்பது பாட்டு”

“அம்பதா?”

“சில கூத்திலே சின்னச்சின்னதா நூறுபாட்டுக்குமேல உண்டு” என்றார் மம்முது

“அவ்ளவையும் நீங்களே பாடுவீங்களா?”

“ஆமா, ஏன்?”

“ஒண்ணுமில்லை”

“கூடவே டான்ஸும் ஃபைட்டும் உண்டு” என்றார் மம்முது.

ஆனால் ராஜா முகமதுவுக்கு அது பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நான் வியப்படைவதைக் கண்டு வியப்படைந்துகொண்டிருந்தார்.

அதன்பின் அமெரிக்காவில் இசைநாடகத்தில் அதற்கிணையான ஆற்றல் கொண்ட நடிகர்களைப் பார்த்தேன். லெ மிசரபில் நாடகத்தில் ஜீன் வல்ஜீன் ஆக நடித்தவர் முப்பது பாட்டை பாடி முழுவேடத்தையும் நடித்தார்.

அவர்கள் கலைஞர்கள். எனக்கு மேடையை பார்த்தாலே கால்கள் உதறத் தொடங்கிவிடுகின்றன.

மதியம் உரையை ஒருமாதிரி தயாரித்துக்கொண்டேன். சென்னிமலை நண்பர் சிவகுருநாதன் கொண்டுவந்து பரிசளித்த ஜிப்பாவை அணிந்துகொண்டு மேடையேறினேன். (https://www.nurpu.in/)

இந்த மேடையுரைகளில் நான் கண்ட பிரச்சினை சுத்தமாக தயாரித்துக்கொள்ளாமல் மேடையேறினால் சமயங்களில் மேற்கொண்டு ஒன்றும் தோன்றாது. முழுக்கமுழுக்க தயாரித்துக்கொண்டு மேடையேறினால் நினைவுகூர்ந்து சொல்வதுபோல் ஆகிவிடும். அடிப்படைக் கட்டுமானம் ஒன்று மட்டும் கையில் இருந்து மேடையில் உரை தானாக நிகழ்ந்தால் அது நல்ல உரை.

இருநூறுபேர் அமரும் அரங்கு. நிறைய கூட்டம் வரவர முந்நூறு பேர் அமரும்படி இருக்கை போட்டு நெருக்கிவிட்டார்கள். அங்கே வந்து டிக்கெட் எடுக்கலாமென வந்த ஒரு இருபது பேர் வரை இடம் இல்லாமல் அனுப்பப்பட்டார்கள். அமைப்பாளர்கள் நம் நண்பர்கள். அதீத உற்சாகத்தில் நகரெங்கும் ஃப்ளெக்ஸ் வைத்து போஸ்டரும் அடித்துவிட்டதன் விளைவு. இடம் கிடைக்காத பலர் கோபம் கொண்டார்கள். ஆனால் உள்ளே உண்மையாகவே கொஞ்சம்கூட இடமில்லை. ஏசி அறை கதவுகளை திறக்க முடியாது.

திரண்டிருந்த முகங்கள் முன் நின்றபோது முதலில் கொஞ்சம் திகைப்பை உணர்ந்தேன். அதன்பின் அங்கே இருப்பவர்களின் உள்ளங்களில் இருக்கும் சிந்தனையின் இயல்பான பெருக்கை சற்றே திசைமாற்றுவது மட்டுமே என் பணி என உணர்ந்தேன். எதையும் அறிவுறுத்த நான் அங்கே நிற்கவில்லை. இப்படியும் சிந்தித்துப்பாருங்கள் என்று சொல்லவே முயன்றேன்.

விழாவில் வசூலான தொகையில் செலவு போக எஞ்சியதை எனக்கு மேடையில் அளித்தனர். அதை கன்யாகுமரி மாவட்டத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், இதய நோயுற்று சிகிச்ச்சையில் இருப்பவருமான நண்பர் சிவசங்கரின் மருத்துவநிதிக்காக அளித்தேன்.

வீடு திரும்பினேன். தமிழகம் முழுக்கவே அக்னிநட்சத்திரம் கொஞ்சம் அணைந்து மென்மையான குளிர் வானிலிருந்து வந்துகொண்டிருந்தது. நாகர்கோயிலில் நான் கிளம்பிச் செல்லும்போதே பலநாட்களாக பலத்த மழை. திரும்பிவந்தால் ஜூன் தொடங்கிவிட்டதா என சந்தேகம் வரும்படி மரங்கள் புதியவையாக நின்றிருந்தன.

கூட்ட நிகழ்வுகளை அருண்மொழிக்குச் சொல்ல முயன்றேன். கேட்க அவள் தயாராக இல்லை. அவளுடைய கூட்ட நிகழ்வுகளைச் சொல்லி முடிக்கமுடியவில்லை. “அந்தப் பிள்ளை என்னமா பேசுது. பயங்கரக் கியூட். கொஞ்சலாம்போல இருந்திச்சு”

திருப்பூரில் அப்படி எந்தப் பிள்ளை? அது சென்னையில் பேசிய அருந்தமிழ் யாழினி. ”அ.வெண்ணிலா என்ன சொன்னாங்கன்னா…”

சரிதான். எழுத்தாளர்களுக்கு காதும் அவசியம். ஆனால் அதை நான் சொல்லமுடியாது.

பிகு: வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கு சிறிய எளிய வழி. இரண்டுபேருமே எழுத்தாளர் ஆகி, அவரவர் எழுத்தைப் பற்றி மட்டுமே பேசி, மற்றவர் பேசுவதை முற்றிலும் கேட்காமலிருப்பது.

எஸ்.ஜே.சிவசங்கர் மருத்துவ நிலை

எழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு உதவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2022 11:35

கங்கைப்போர் -கடிதங்கள்

கங்கைநதிக்கான அகிம்சைப் போராட்டத்தின் முதல் சட்டவெற்றி

அன்புள்ள ஜெ

காலையில் சிவராஜ் அண்ணாவின் கங்கைக்கான அகிம்சை போராட்டத்தில் சட்டவெற்றி பதிவை படித்தவுடன் ஓர் உணர்வெழுச்சி. அப்போது கடந்துவிட்டேன். பின்னர் பார்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த அவர்களின் ஊர்க்கிணறு புனரமைப்பு காணொளியில் சாது நிகமானந்தாவை பார்க்கையில் இப்போதும் அதே உணர்வெழுச்சி. கண்களில் நீர் தளும்பியது.

யோசித்து பார்க்கிறேன், இது எதனால் நடக்கிறது ? நான் நம்பி ஏற்றுக்கொண்ட இலட்சியவாதத்தின் இருப்பை காண்பதால். இன்றும் இங்கே நீரின் பொருட்டு, பல்லாயிரம் உயிர்களின் தன்னை கொடுப்பது எத்தனை மகத்தானது. ஆனால் இங்கே யதார்த்தம் மீண்டும் மீண்டும் இவை மிகையுணர்ச்சிகள், நடக்கவியலாதவை என சொல்கிறது. ஆம் ஒரு சாமானியன் தன் அன்றாடத்தில் இருந்து பார்க்கையில் இது பைத்தியக்காரத்தனம். அவனால் அடிப்பட்டு விழுந்து கிடப்பவனை கண்டு இரக்கப்பட முடியும். பல்லாயிரவரின் பொருட்டு தன்னை அர்ப்பணம் செய்பவன் அவனுக்கு புரியாதவனாக, பைத்தியக்காரத்தனமான கேலிக்குரியவனாகவே தென்படுகிறான். எங்கேனும் தன் உள்ளத்தில் இலட்சியவாதத்திற்கு இடம் கொடுத்தவனே நிகமானந்தாக்களை உணர்கிறான்.

வீடே நீ சொல்வது நடக்காது என சொல்லுகையில் தான் சொன்னது நடப்பதை பார்க்கும், அதனை மற்றவர்களுக்கு காட்ட எண்ணும் சின்னஞ்சிறு சிறுவனின் மகிழ்ச்சியே இந்த உணர்வெழுச்சி என தோன்றுகிறது.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள ஜெ

கங்கைக்கான போர் பற்றிய செய்திகளை இப்போதுதான் தொகுத்துப் படித்தேன். ஒரு பெரிய எபிக் போல இருக்கிறது. நம் சமகாலத்தில் நடந்த மாபெரும் தியாகப்போராட்டம். கண்ணீர் மல்க வாசிக்கவேண்டியது

ஆனால் ஏன் நம் ஊடகங்களில் இது ஒரு செய்தியாக மாறவில்லை? ஏன் நாளிதழ்கள்கூட கவனிக்கவில்லை? நான் எல்லா நாளிதழ்களையும் படிப்பவன். உங்கள் இதழ் வழியாக மட்டுமே இதை தெரிந்துகொள்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது, என்ன நடக்கிறது?

இங்கே வன்முறையை கொண்டாடுகிறார்கள். கங்கைக்கான போரில் பலர் கொல்லப்பட்டிருந்தால் தலைப்புச் செய்தியாக ஆகியிருக்கும். மறைமுகமாக செய்தி ஊடகங்களும், அவற்றை வாசிக்கும் மக்களும் வன்முறையை ஊக்குவிக்கிறார்கள்.

காந்தி காலகட்டத்தில் செய்தி ஊடகங்கள் அவருடைய தியாகத்தை மதித்தன. அவை செய்தியாயின. ஆகவேதான் அவை வெற்றி அடைந்தன். ஒரு சத்யாக்கிரகப்போராட்டம் மக்களின் மனசாட்சி நோக்கி பேசுகிறது. மக்கள் சக்தியை ஆதரவாக திரட்டுகிறது. அதற்கான ஒரு பிரச்சாரநடவடிக்கை அல்லது குறியீட்டு நடவடிக்கைதான் சத்யாக்கிரகம், உண்ணாநோன்பு போன்றவை.

ஆனால் நம் ஊடகங்கள் அதை மறைத்தால் அது அப்படியே கண்ணுக்குத்தெரியாமல் ஆகும். அர்த்தமில்லாமல் ஒரு தியாகி சாவதில் முடியும். ஏன் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை என்றால் மக்கள் அதை ஆர்வமாக கவனிப்பதில்லை, அதுக்கு நியூஸ் வேல்யூ இல்லை என்பதனால்தான். மக்களுக்கு பரபரப்பான வன்முறை தேவைப்படுகிறது. மக்களுக்கு இன்று தியாகத்திலும் இலட்சியவாதத்திலும் நம்பிக்கை குறைவு,

மக்கள் சக்தியே சத்யாக்கிரகத்தின் சக்தி. மக்கள் கவனிக்காதபோது, ஆதரவாகத் திரளாதபோது அதை அதிகார அமைப்பு கவனிக்காது.அந்தப்போராட்டங்கள் தோல்வியடையும். அவை தோல்வியடைந்தால் வன்முறையே உருவாகும்.வன்முறை எப்படி நடந்தாலும் கடைசியில் பாதிக்கப்படுபவர்கள் மக்களே.

அதைத்தான் இலங்கையிலே பார்க்கிறோம். நான் 1975 முதல் இலங்கையை பார்த்துவருகிறேன். அங்குள்ளவர்கள் முதலில் வன்முறையை ரொமாண்டிஸைஸ் செய்தார்கள். அதைப்பற்றி பேசி எழுதி கொண்டாடினர். எல்லா அகிம்சைவழி போராட்டங்களையும் ஏகடியம் செய்தார்கள். கடைசியில் வன்முறை வந்தது. போராடும் இரு தரப்பும் தோற்று தரைமட்டமாகியது. நடுவே புகுந்த சக்திகள் ரத்தம்குடித்தன. இன்றைக்கு இலங்கை கொடுத்துக் கொண்டிருக்கும் விலை என்பது வன்முறைமேல் அவர்கள் காட்டிய ஆர்வத்தின் விலைதான். இந்தியாவும் அந்தமனநிலையையே அடைந்துகொண்டிருக்கிறது

எஸ்.எம்.ராகவன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2022 11:34

புயலிலே ஒரு தோணி வாசிப்பு- அனங்கன்

ஒருமுறை 2015ல் நான் சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக எக்மோர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் தீவிர இலக்கியம் அப்போது தான் அறிமுகமாகி இருந்தது. கையில் புத்தகம் எடுத்து வரவில்லை. அதனால் புத்தகம் எதாவது வாங்கலாம் என்று  ரயில் நிலையத்திலிருந்த புத்தகக்கடைக்கு சென்றேன். வாரமலர்களும் பத்திரிக்கைகளும் தொங்கிகொண்டும் வரிசையாக அடுக்கப்பட்டும் வைக்கப்பட்டிருந்தன. அதில் பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் வரும் கப்பலின் புகைப்படத்துடன் பாக்கேட் நாவல் ஒன்று இருந்தது. அது “புயலிலே ஒரு தோணி” நாவல். சாணித்தாளில் 50 ரூபாய் விலைப் போட்டிருந்தது. அந்த நாவலை கவனிக்க வைத்தது அதன் முகப்பட்டையில் நாவலின் தலைப்பை விட பெரிய மஞ்சள் எழுத்துக்களில் எழுதியிருந்த அறிவிப்பினால். ‘ இந்த நாவலை பொழுது போக்குவதற்காகவோ, அலட்சியமாகவோ வாசிப்பதாக இருந்தால் வாங்க வேண்டாம், தயவு செய்து வேறு புத்தகம் வாங்கிக்கொள்ளவும். இது தீவிர வாசிப்புக்காக எழுதப்பட்ட நவீன நாவல்’ என்று இருந்தது . நான் வேறொரு மாத நாவலை வாங்கிக்கொண்டு திருச்சி போய் சேர்ந்தேன்.

இப்போது பல மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடைப்பெறுகிறது. அங்கு சென்று வருபவர்கள் ஒன்று கவனித்திருக்கலாம். அனேகமாக அனைத்து முக்கிய பதிப்பகங்களும் ப.சிங்காரம் நாவல்களை பதிப்பித்திருக்கும். பெரியப் பதிப்பகம் முதல் சாணித்தாள் மாத நாவல் வரை அனைவரும் பதிப்பித்திருக்கும் இந்த நாவல்களை ப.சிங்காரம் எழுதி பதிப்பிக்க பத்து வருடம் போராடி இருக்கிறார். நாவல்கள் வெளியாகியும் இங்கே அவை எந்த தீவிர, இடது, வணிக எழுத்துலகங்களையும் சென்றடையவில்லை. நாவல்களை பிரசுரிக்க அவர் அலைந்த அலைச்சலில் தனக்கு பதிப்பிக்கும் எண்ணமே போய்விட்டது என்று முன்னுரையில் கூறுகிறார். முதல் நாவலான ‘கடலுக்கு அப்பால்’ நாவலை 1956ல் எழுதினார். பிரசுரிக்க நிறைய பதிப்பகங்களை நாடி இருக்கிறார், யாரும் பிரசுரிக்காததால் வெறுமே வைத்திருக்கிறார். பின் அவருடைய நண்பர் நா.பாலசுப்பிரமணியம் வற்புறுத்தி நாராயண சாமி ஐயர் நாவல் போட்டியில் தேர்வாகி பிரசுரமாகியது. புயலிலே ஒரு தோணி 1963ல் எழுதப்பட்டது, 1972ல் பிரசுரமானது.

பிரசுரமாக தாமதமானதோ நாவல் கவனிக்கப்படாமல் போனதோ எது அவர் மேற்கொண்டு எழுத தடையாக இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய நாவல்கள் தமிழ்ச் சூழலில் கொஞ்சமும் கவனத்தை பெறவில்லை அவர் இருந்த காலத்தில். அதற்காக புறம்தள்ளப்பட்டு விட்டது, கவனிக்காமல் கைவிடப்பட்டது போன்ற வெற்று குற்றச்சாட்டுகளையும் வைக்க தேவை இல்லை. இந்த நாவல் வெளியாகிய போது தமிழ்ச் சூழலில் இந்த நாவல்களை புரிந்து உள்வாங்கிகொள்ளும் சூழலோ பயிற்சியோ இல்லாமல் இருந்தது என்பது தான் உண்மை. அதற்கு சில காரணங்களை சொல்லலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து பெரும் லட்சியத்தோடு முன்னெடுக்கப்பெற்று பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் தேங்கி நின்றுகொண்டிருந்தது. பொருளாதாரம் அவ்வளவு நன்றாக இல்லாத சமயம். இந்திய சீன எல்லைப்போரில் இந்தியா தோல்வி அடைந்திருந்தது. இயல்பாகவே எதிர் மனநிலைக்குச் செல்ல கூடியவாறு தான் இங்கே சூழல் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் தான் இங்கு தமிழ் தீவிர இலக்கிய சிறுகுழுவில் நவீனத்துவம் அறிமுகமாகியது. தமிழிலக்கியத்தின் நவீனத்துவ முகங்களான அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் 1960க்குள் எழுத வருகிறார்கள். இவர்களின் பின் இயல்பாகவே தமிழ் தீவிர இலக்கிய சிற்றிதழ்ச் சூழல் செல்கிறது. நவீனத்துவத்தின் குணநலங்களை நம் முன்னோடிகள் நிறைய எழுதியிருக்கிறார்கள். தனிமனித வாழ்க்கையை மையமாகக்கொண்ட நவீனத்துவ  இலக்கிய சூழலில், கிழக்காசியாவை சுற்றிக்காண்பிக்கும்  ப.சிங்காரம் நாவல்கள், நாவல்களாக எடுத்துக்கொள்ளப்படாமல் போனது இயல்பானதே. அதே சமயம் சிற்றிதழ் சூழலில் அதிகம்  வணிக எழுத்தில் இடம்பெறும் சாகசம், வீரம், காதல் போன்ற ‘சிறிய’ விஷயங்களில் மேல் கடும் எதிர்ப்பு மனநிலையில் இருந்ததால் பா.சிங்காரம் நாவல்கள் வெற்று உணர்ச்சிகளைப் பேசுபவையாக தெரிந்தது.

அப்போது இன்னொரு தரப்பாக இருந்த மார்க்சிய எழுத்துக்குள்ளும் ப.சிங்காரம் நாவல்கள் அடங்காது. இவ்வளவு போர் நடந்தும் புரட்சியைப் பற்றி பேசாததாக இருக்கிறது நாவல். பெட்டியடிப் பையன்களின் நாவலில் அங்கே முதலாளித்துவத்தை எதிர்த்து  பேசப்படாமல் போனாலும் சரி, அவர்களை புகழ்ந்து வேறு வருகிறது. அதனால் அவர்களும் பெரிதாக ப.சிங்காரத்தை கவனிக்கவில்லை என்பது மிகச்சாதாரண விஷயம்.

இன்னொரு சிக்கலும் அப்போது இந்த நாவலை வாசித்தவர்கள் சந்தித்திருக்கலாம். இந்த நாவல் போரை  மையாகக் கொண்டு எழுதப்படவில்லை என்றாலும் இது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடக்கிறது. நாவலில் இப்போது வரலாறாக  மாறிவிட்ட பெயர்கள் வந்து செல்கிறது. ப.சிங்காரமே இரண்டு மூன்று அத்தியாயங்களில் இரண்டாம் உலகப்போரில் நடந்து கொண்டிருந்தவற்றை விரிவாக சொல்லுகிறார். அந்த ‘வரலாற்று உணர்வு’ இந்த நாவல்களை அப்போது வாசித்தவர்களுக்கு கொஞ்சம் தடையாக இருந்திருக்கலாம்.  இரண்டாம் உலகயுத்த காலக்கட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உலகம் புரிந்து கொள்ள ஆரம்பித்தது. புத்தகங்கள், ஆவணத் திரைப்படங்கள், உலக சினிமாக்கள் வழியாக இப்போது நம்மால் அந்த காலக்கட்டத்தை புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் நாவலில் மெளண்ட் பேட்டன் பினாங் துறைமுகத்தை கைப்பற்ற வருவது  ஆகிய காட்சிகளை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் கூட இருந்திருக்கலாம்.

1990க்குப் பின் தமிழ் இலக்கியச் சூழலில் எழுத வந்த அடுத்த தலைமுறை எழுத்தாளர்களால்  பின்நவீனத்துவம் பேசப்பட்டது. தனிமனித வாழ்க்கையை பேசுபவை மட்டும் இலக்கியம் அல்ல, வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் பேசுபவையே நல்ல இலக்கியமாக முடியும் என்று அனைத்து தரப்புக்குள்ளேயும் விவாதங்கள் நடக்க ஆரம்பித்தன. டால்ஸ்டாய் மீண்டும் பேசப்பட்டார். தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று தமிழ் இலக்கியத்தில் பெரும் விவாதத்தை ஆரம்பித்து வைத்தார் ஜெயமோகன். அதன் தொடர்ச்சியாக நாவல் கோட்பாடு, நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் என்று இலக்கிய  திறனாய்வு நூல்கள் ஜெயமோகனால் எழுதப்பட்டன. பிற இந்திய மொழி பெரு நாவல்கள் முன்வைக்கப்பட்டு வாசிக்கப்பட்டன.

1987ல் சி.மோகன் புதுயுகம் பிறக்கிறது இதழில் எழுதிய நாவல்கள் பற்றிய கட்டுரையில் தமிழின் தலைசிறந்த நாவல்களில் மிகச்சிறந்த மூன்றில் ஒன்றாக புயலிலே ஒரு தோணியை குறிப்பிட்டார். (ஜே.ஜே.சில குறிப்புகள், மோகமுள் பிற இரண்டு) அது சிற்றிதழ்ச்சூழலில் பெரிய விவாதத்தை உருவாக்கியது. 1998 ல் ப.சிங்காரம் நாவல்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழினியால் வெளியிடப்பட்டபோது ஜெயமோகன் ப.சிங்காரத்தை வாசிப்பது எப்படி என நீண்ட ஆய்வுமுன்னுரை ஒன்றை எழுதினார். ப.சிங்காரம் பற்றி எழுதப்பட்ட முதல் விரிவான இலக்கிய விமர்ச்ன கட்டுரை அது.

2001ல் ஜெயமோகன் எழுதிய ‘தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு’ என்று நாவல் சிபாரிசு பட்டியல் வெளியிட்டார். அதில்  முதலில் 1997ல் வெளியாகிய விஷ்ணுபுரம், 1999 வெளியாகிய பின்தொடரும் நிழலின் குரல் ஆகிய நாவல்களுக்கு அடுத்து “புயலிலே ஒரு தோணி” மூன்றாம் இடத்தில் இருந்தது.  அப்போது இயல்பாகவே 1995க்கு முன் எழுதிய நாவல்களிலேயே அது தர அடிப்படையில் முதல் இடத்தில் வந்துவிடுகிறது. பின்னால் எழுத வந்த எழுத்தாளர்கள் ப.சிங்காரம் நாவல்களை பற்றி எழுதிப் பேசினார்கள். ப.சிங்காரம் நாவல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட பின் அனைத்து பதிப்பகங்களும் பதிப்பிக்க ஆரம்பித்தன. மேலும் இந்த நாவல்கள் மேல் வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

*****

ப.சிங்காரம் அளவிற்கு உலகை பார்த்து அறிந்து அனுபவம் அடைந்த எழுத்தாளர்கள் சிலர் தான் இருப்பார்கள். அ.முத்துலிங்கம் நினைவிற்கு வருகிறார். உலகப் போர் கிழக்காசியாவில் நடந்து கொண்டிருந்த போது ப.சிங்காரம் அங்கே ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். சரக்குக் கப்பல்களில் ஜப்பான் அரசின் அனுமதிப் பெற்று வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு பெண்ணை மணந்துகொண்டார். மனைவி பிரசவத்தில் குழந்தையுடன் இறந்து விடுகிறார். உலகின் மிகப்பெரிய சந்தைகளில் மலேசியா, இந்தோனேசியாவில்  அனைத்து போகங்களும் திரண்டோடும் வாழ்க்கையை வாழ்ந்தவர் ப.சிங்காரம். உலக யுத்தம் முடிந்தவுடன் இந்தியாவிற்கு திரும்பி வந்து தனிமையில் வாழ்ந்து மரணம் அடைந்தார். அனைத்து போகங்களையும் பார்த்து அனுபவித்த ப.சிங்காரம் கடைசி வரைக்கும் தனிமையிலிருந்து மரணம் அடைந்ததைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

அவர் வாழ்க்கையை சொல்லும் போதே ஒருவித சாகசம் வந்துவிடும். அவருடைய கதை நாயகர்கள் பாண்டியன் , செல்லையா, மாணிக்கம் ஆகியவர்களும் அவரைப் போலவே சாகசத்தை விரும்பி செய்பவர்கள், பெண்ணை மயக்குபவர்கள், வீரர்கள், தனியர்கள். சாகசம் செய்வதற்காகவே சாகசம் செய்பவர்கள் அவர்களுடைய மனதில் பொய் புரட்சியும் லட்சியமும் இருக்கவில்லை. கோட்பாடுகளுக்காக போராடுகின்றேன் என்று மக்களைக் கொன்று குவிக்கவில்லை. சின் பெங் ஒரு உதாரணம். அவர்கள் அராஜகவாதிகளும்  அல்ல, அவர்கள் எதற்கும் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் மாறாக இந்திய தேசத்தை விரும்புகிறார்கள். தேசப் பற்று உடையவர்களாக இருக்கிறார்கள். நேதாஜியின் மேல் பெருமதிப்பு கொண்டிருக்கிறார். தமிழ் பற்று இருந்தாலும் அதன் மேல் பொய் தற்பெருமைகளை ஏற்றி வருவதில் கடும் வெறுப்படைகிறார்கள். தமிழை விமர்சனமும் பகடியும் செய்து விளையாடுகிறார்கள்.

அதே சமயம் ப.சிங்காரத்தின் நாவல்களை வெறும் சாகச  பொழுதுபோக்கு நாவலாக மட்டும் வாசித்தால்  ஜேம்ஸ் பாண்ட் படத்தை அங்கங்கே கிழித்து ஒட்டி வைத்திருப்பது போலவே இருக்கும். கதையும் புரியாமல் வந்து போகும் பெண்கள் முழுவதுமாகக் காட்டப்படாமலும், சாகசங்களில் ஆரம்பித்து அப்படியே நடுவில் விட்டு வேறெங்கோ சென்றுவிடுவதும் நடக்கும். அதை வாசித்து குழம்பிப்போய் எரிச்சல் நிலைக்கு  தான் ஆளாவார்கள்.

நான் ப.சிங்காரம் நாவல்களை காவியங்களுடன் பொருத்திப் பார்த்து வாசிக்கிறேன். காவியங்களின் லட்சணங்களில் ஒன்று மிகையாக்கி பெரிது படுத்திக் கூறுவது. அதேசமயம் ‘மிகை’ என்பது காவியத்தை, அதற்கு வெளியிலிருந்து அதை பார்த்து சொல்வதே தவிர காவியங்களுக்குள் அது ஒருபோதும் மிகையாக இருக்காது. ஒரு குணத்தை மிகையாக கூறி அதை நிலைநாட்டுவது காவியத்தின் அம்சம்.  அப்படித்தான் காவியங்கள் தங்களுக்கான விழுமியங்களை உண்டாக்கி எழுப்பி சமூகத்திற்கு அளிக்கிறது. அந்த  குணம் அல்லது விழுமியம் சமூகத்திற்கு சென்று கூட்டு நினைவிலியில் தங்கி காலந்தோறும் தொடர்ந்து வருகிறது. நம்முடைய லட்சிய விழுமியங்களாக வைத்திருக்கும் கற்பு, வீரம், தியாகம், கருணை என்று அனைத்துமே காவியங்களுக்கு சென்று பெரிய விழுமியங்களாகி மீண்டும் நமக்கே திரும்பி வந்திருப்பவையே.

காவியங்கள் வாய்மொழியில் சொல்லப்படுவதால்  மிகைத்தன்மையோடு வெளிப்படலாம். கம்பராமாயணத்தில் சீதையின் சுயம்வரத்தில் வைப்பதற்காக சிவதனுசை 60 ஆயிரம் யானை பலம் கொண்ட வீரர்கள் எடுத்து வருகிறார்கள், ஆனால் ராமன் கோதை  என எடுத்து இற்றது கேட்க உடைத்தெரிகிறான் இதை காவியத்திற்கு வெளியில் வாசித்தால் முட்டாள்தனமாகவோ சிரிப்புப்போ கூட வரலாம் ஆனால் இது காவியத்தில் ராமனின் வீரத்திற்கு இமைப்பதற்குள் செய்து முடிக்ககூடிய சிறு செயல்.

உதாரணமாக ஒருவர் சிறுசாகசத்துடன் கலப்புத்திருமனம் செய்கிறார்  என்று வைத்துக்கொள்ளுவோம். அது காவியத்திற்கு சென்றால் பெரிதுபடுத்திக் காட்டப்படும். . இப்படி ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியையும் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் ஒன்று சேர்த்து திரட்டி ஒன்றாகச் சேர்ந்து காவியமாக ஆகிறது. அவை காவியங்களில் நிகழ்ந்து சாரமாகி நமக்கு வருகிறது. உலகில் உள்ள நல்ல குணங்களும் வீரமும், அறமும் சேர்ந்தால் ராமனாகிறது. தியாகம், அன்பு, கருணையின் உரு சீதை.

***

இந்த விழுமியங்களை வைத்துகொண்டு நாம் ப.சிங்காரம் நாவல்களைப் புரிந்துகொள்ளலாம். வீரத்திற்கும் சாகசத்திற்கு ‘புயலிலே ஒரு தோணி’, காதலுக்கும், தியாகத்துக்கும் ‘கடலுக்கு அப்பால்’ நாவலையும் போட்டுப்பார்க்கலாம். இந்த இரண்டு நாவல்களுமே ஒரே காலகட்டத்தில் நடப்பவை. புயலிலே ஒரு தோணி இரண்டாம் உலகயுத்தம் நடந்து கொண்டிருந்த காலம், கடலுக்கு அப்பால் நடந்து முடிந்த காலத்தில் நடக்கிறது.

ப.சிங்காரம் இந்த நாவல்கள் போர் காலக்கட்டத்தில் நடக்கிறபடியால் போரைச் சுற்றி கதையைக் காட்டுகிறார். ஆனால் போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று போரைக்காட்டி அல்ல, மாறாக அதன் விளைவுகளின் மூலம் சின்ன தருணங்களின் மூலம் காட்டுகிறார். உதாரணமாக வயிரமுத்துப்பிள்ளை தண்ணீர்மலையான் கோயிலுக்குச் சென்று வந்து கதவைத் தட்டுகிறார். கதவை மரகதம் திறக்கிறாள் அதற்கு அவர் காலம்கெட்ட சமயத்தில் நீ ஏன் வந்து திறக்கிறாய் என்று கோபித்து சத்தம் போடுகிறார். ஏனென்றால் போர் காரணமாக பாதுகாப்பு இல்லாமல் ஆகிவிட்டது, வேறெங்கோ வீட்டுக்கதவைத் திறந்த பெங்காளிப் பெண் பாதிக்கப் பட்டிருக்கிறாள். இப்படித்தான் அவர் போரைச் சொல்லுகிறார். உண்மையில் ப.சிங்காரத்திற்கு எதையும் சொல்லும் எண்ணம் துளிக்கூட இல்லை. கிழக்காசியாவில் வசிக்கும் செட்டித்தெரு மனிதர்கள், அவர்கள் வாழ்க்கை மதுரைக் கார் ஏஜண்டுக்கள் என்று அவர் எதையும் முழுவதாகச் சொல்லுவதில்லை. மாறாக கிழக்காசியாவையும் அங்கே வாழும் தமிழ், சீன, மலேய, ஜப்பான் மக்களை அப்படியே காட்டிக்கொண்டு செல்கிறார். வாசகர்களால் எதை பார்க்க முடிகிறதோ பார்த்துக்கொள்ளலாம்.

அவருடைய நாயகன் பாண்டியன் கடலில் செல்லும் தொங்கான் போல அலைந்து திரியும் பண்புகொண்டவன். பாண்டியன் தான் புயலிலே ஒரு தோணி நாவலை வாசித்து புரிந்துக்கொள்ள ஒரே சாத்தியம். அவன் வாழ்க்கையோடு நாவல் ஆரம்பித்து, விரிந்து பரவி, கரைச்சேர்கிறது.

பாண்டியன் ப.சிங்காரத்தின் காவியம் தோய்ந்த மனம்கொண்டு படைக்கப் பெற்ற நாயகன். நாவல் முழுக்க அனைவரும் அலைந்து திரிந்து நிலைத்து வாழ வழி தேடிக் கொண்டிருக்கும் போது பாண்டியன் அதன் மறு திசையில் சாவை நோக்கி, வீர மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான். அதுவும் அவன் லட்சியமாக எல்லாம் இல்லை, வாழ்க்கை போகிறபோக்கில் அவன் எதிர் கொள்ள வேண்டியதை எதிர் கொண்டு சென்று கொண்டே இருக்கிறான். ஜப்பான் படை மெடான் நகரத்தில் நுழையும் போது அவனுடைய பயணம் ஆரம்பிக்கிறது.

ஜப்பான் படை மெடானை கைப்பற்றுவது பிரமாண்ட சித்தரிப்புடன் காட்டப்படுகிறது. பெண்கள் நடுத்தெருவில் கற்பழிக்கப்படுவதை பார்க்கிறான். மெடானில் தலைமை இல்லாமல் நகரத்தில் நடக்கும் கலவரத்தை கசப்புடன் பார்த்துக்கொண்டு செல்கிறான். அவனுக்கு ஏற்படும் கசப்பு ஒட்டுமொத்த மானிடத்தின் மேலேயே தவிர ஜப்பானியர்கள் மேலோ அல்லது தனிப்பட்ட மனிதர்கள் இடமோ இல்லை அது மனிதர்களின் ஆதி மிருகத்தை பார்த்து. மனிதன் எத்தனை பெரிய நாகரீகத்தை சென்று அடைந்தாலும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் மிருகம்தானா என்ற கசப்பு. அந்தக் கசப்புடன் தான் அவன் நாவல் முழுக்க சென்று கொண்டிருக்கிறான் அந்த கசப்புடன் தான் தன்னை சுய விமர்சனம் செய்கிறான் தமிழ் பண்பாட்டை விமர்சிக்கிறான். தன்னை கசந்து “நான் மந்தையிலிருந்து விலகிக் பிரிந்த ஓடுகாலி, பிரிந்ததால் வெறுப்புக்கும் பிரிய நேர்ந்தால் தன் வெறுப்புக்கும் உண்டானவன்” என்று சொல்கிறான். இந்த கசப்பு வெளியிடும் போது பட்டினத்தாரையும் தாயுமானவரையுமே நினைத்துக்கொள்கிறான்.

புயலிலே ஒரு தோணி நாவல் முழுக்க கசப்பும், சுயஎள்ளலும் நிரம்பி இருக்கிறது. இந்த கசப்பும், சுயஎள்ளலுக்கும் தமிழ் சித்தர் மரபில் தான் வேர் இருப்பதாக ஜெயமோகன் கூறுகிறார். (காண்க : ப.சிங்காரம்- வரலாற்று அபத்தத்தின் தரிசனம்)

இப்படி கசப்பு மனநிலையுடன் பாண்டியன் இருந்தாலும் அவன் மனம் சாகசத் தன்மை கொண்டது தான். அவனால் பெண்களை தவிர்க்க முடியாது. அவனுடைய வாழ்வில் அத்தனை கண்ட பின்பும் இந்திய தேசிய ராணுவத்தின் மேலும் நேதாஜி மேலும் அவனால் உண்மையான அன்புடன்  இருக்க முடிகிறது. அதனால் தான் துரோகியான சுந்தரத்தை தேடி சென்று கொல்கிறான்.

ப.சிங்காரம் பாண்டியன் வழியாக காட்டுவது வாழ்க்கையின் அபத்தத்தை அதன் ஊகிக்க முடியாத தன்மையை. வயிரமுத்துப்பிள்ளை இந்த ஜப்பான்கார குள்ளன்கள் எங்கே வெள்ளைக்காரனை எதிர்க்கப்போகிறார்கள் என்று நினைக்கிறார். ஜப்பான் கிழக்காசியாவை கைப்பற்றுகிறது. அவர்கள் தங்களுடைய கப்பல் படையைக்கொண்டு அமேரிக்க ராணுவத்தை அழித்து போரை வெல்ல நினைக்கிறார்கள். அவர்களுடைய சங்கேத மொழியை ஒற்றறிருந்த அமெரிக்க ராணுவம் ஜப்பான் கடற்படையை அழிக்கிறது. இந்தியர்கள், இந்தியாவை படைகொண்டு தாக்கி வென்று சுதந்திரம் அடைய நினைக்கிறார்கள். நேதாஜி இறந்தவுடன் காற்று போல கனவு பறந்துவிடுகிறது.  ஐ.என்.ஏ தலைமையில்லாமல் உடைந்து ஒன்றும் இல்லாமல் ஆகிறது.

இப்படி காலம் தன் போக்கில் சென்றுகொண்டிருப்பதை பாண்டியனுடைய சாகசத்தோடு  இணைத்துக் காட்டுகிறார். பாண்டியனுக்கு எதற்கு இதைச்செய்கிறோம் என்று தெரியாது அவன் போக்கில் குறுக்கிடும் வேலைகளை செய்து கொண்டே செல்கிறான்.  ஜப்பான் படை மெடானுக்குள் நுழைந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தவுடன் அங்கே இருக்க பிடிக்காமல்,  அந்த வாழ்க்கை பிடிக்காமல் பினாங்கு சென்று எந்த  வகையிலாவது தமிழ் மக்களோடு சேர்ந்து தமிழ் இந்திய விடுதலைக்காக  போராடுகிறேன் என்று பினாங்கு செல்பவன் அங்கே மாணிக்கம் செல்லையாவுடன் கேளிக்கையில் திளைக்கிறான். அந்த நிலைமை தானாகவே மாறி இந்திய ராணுவம் ஆரம்பிக்கவே அங்கு சென்று சேர்ந்துகொள்கிறான். இப்படியே தன் போக்கில் சென்றுகொண்டிருக்கிறான்.

ப.சிங்காரம் தன் அபாரமான மொழித் திறமையால் எந்தவித திணிப்பும் இன்றி இயல்பாக பாண்டியன் வழியாக காலத்தை, வாழ்க்கையின் பெரும் விரிவை காட்டிசெல்கிறார். ஒரு வேளை பாண்டியன் இந்த கொந்தளிப்பான அவனுடைய நான்கு வருடத்தையும் கடந்து இந்தியா வந்திருந்தால் ப.சிங்காரம் போலவே தனிமையில் தன் முழுவாழ்க்கையும் வாழ்ந்திருக்கலாம் அதற்குண்டான சாத்தியங்களையும் காலம் தன்னுள் வைத்துள்ளது.

ப.சிங்காரத்தின் இன்னொரு நாயகனான செல்லையா பாண்டியனின் நீட்சிதான். பாண்டியன் வாழ்ந்த அதே புழுக்கமான கொண்டுவிற்கும் வாழ்க்கையை வாழும் செல்லையா வாழ்க்கையின் சாகசத்தின் வாயிலான ஐ.என்.ஏ.வில் சென்று சேர்ந்து பினாங் திரும்புகிறான். போர்ப்பயிற்சி,  ஜப்பான் ராணுவத்துடன் போர் என்று உச்ச தருணங்கள் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, பெட்டியடிப் பையனாக வட்டி செலவு கணக்கு எழுத முடியாமல் தவிக்கிறான். அவனுக்கு மிச்சம் இருக்கும் ஒரே சாகசம் மரகதம். அவளும்  அவன் வாழ்க்கையில் இல்லாமல் போன பின் மெல்ல வெள்ளம் வடிந்து ஆறு சமமாவது போல அமைதி அடைகிறான்.

கொந்தளிப்பும் வீரமும் சாகசமும் நிறைந்த வாழ்க்கையை மட்டும் ப.சிங்காரம் காட்டுவதில்லை. வயிரமுத்துப்பிள்ளையையும், ஆவ்வன்னாவையும் முக்கியப்படுத்துகிறார். அவருடைய நாயகர்களான பாண்டியன், செல்லையா, மாணிக்கம் போன்றவர்களுக்கு நேர்  எதிரான வாழ்க்கையை வாழ்ந்து அதையே கடைசி வரை நம்பிக்கையுடன் வாழும் மனிதர்களையும் அவர் படைத்திருக்கிறார்.

காமாட்சி அம்மாளும் மரகதமும் கூட வாழ்க்கையை நம்பிக்கையுடனேயே எதிர்கொள்கிறார்கள். இருவருமே அவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் நம்பிக்கைத் வைத்துள்ளனர். காமாட்சி அம்மாள் வடிவேலுடன் ஐந்து பிள்ளைகள் இழந்தவள் ஆனாலும் வாழ்க்கையில் பிடிப்புடனே இருக்கிறார்கள். மரகதமும் அவள் அம்மாவைப் போன்றவளே. செல்லையாவை காதலித்து அவனை மணம் செய்துகொள்ள முடியாமல் போனாலும் அதை கடந்து தன்னுடைய வாழ்க்கையில் நிச்சயம் மணம் புரிந்து கொண்டு தன் வாழ்க்கையை அதில் பொருத்திக்கொள்வாள். இது அவளுடைய மூத்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து அங்கிருந்து அவள் பெற்றுக்கொண்டது.

வயிரமுத்துப்பிள்ளையும் தன் மூத்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் தடம் புரளாமல் வாழக் கற்றவர். செல்லையாவை விட வாழ்க்கையில் அதிகம் நெருக்கடிகளை சந்தித்திருப்பார். அந்த வாழ்க்கையில் முட்டி மோதி மேலெழுந்து வந்தவர். அதனாலேயே தன் வாழ்க்கையின்  அனுபவத்தைகொண்டே மரகதத்தை செல்லையாவிற்கு மணம் முடித்துவைப்பது நலம் தராது என்று நினைக்கிறார்.  அவருடைய வாழ்க்கை என்பது தன் மனைவி, மகள் மட்டும் அல்ல. அவர் உழைப்பில் மேலெழுந்த அவருடைய தொழிலும் தொழில் சார்ந்த மக்களும் சேர்ந்து தான். அவர் கடைசி வரை செல்லையாவிற்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்கவே நினைக்கிறார். மற்றவர்களைவிட செல்லையாவை நன்கு அறிந்துகொண்டும் இருக்கிறார். அவனுடைய ‘டுப்பு டுப்பு’ மனம் இனிமேல் பெட்டியில் உட்கார்ந்துகொண்டு வட்டிகணக்கு எழுதிக்கொண்டு இருக்காது என்று செல்லையா ஊர் திரும்புவதற்கு முன்னேயே கணித்து வைத்திருக்கிறார். அதையும் அவனிடம் சொல்லி புரியவைக்க முயற்சி செய்கிறார்.

வயிரமுத்துப்பிள்ளையைப் போலவே ஆவன்னாவும் வாழ்க்கையில் மாறாத படிநிலைகளில் நின்று ஏறிவந்தவர். அவருடைய மனம் தன்னுடைய முதலாளிக்கு விசுவாசமும், குடும்பத்தில் பற்றும் கொண்டிருக்கிறது. அவரும் பாண்டியன் ஏறிச்சென்ற அதே தொங்கானில் தான் பினாங்கு செல்கிறார். வாழ்க்கையின் முழுமையை காட்டவே ஆவன்னா பாண்டியன் ஆகிய இருவருடைய முன் வாழ்க்கையை சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். மனைவி குடும்பத்தின் மேல் பற்று இல்லாமல் ஆகிவிட்ட மாணிக்கம் போன்றவர்கள் இருக்கும் அதே செட்டித் தெருவில் தான் வயிரமுத்துப்பிள்ளையும் ஆவன்னாவும் வாழ்கிறார்கள்.

ப.சிங்காரத்தின் இரு நாவல்களை ஒன்றாகக்கொண்டால், புயலிலே ஒரு தோணி கொந்தளிப்பான காலகட்டத்தில் பல ஊர்களில் பாண்டியனின் சாகசங்கள் வழியாக செல்லும். கடலுக்கு அப்பால் அதற்கு நேர்மாறாக தோணி கரையில் வந்து சேரும் இடத்திலிருந்து ஆரம்பிக்கும். பெருமழைக்காலம் முடிந்து ஆறு சலனமில்லாமல் செல்லுவது போல கூர்மையாக தாவல்கள் அற்ற நேர்கோட்டில் சொல்லப்பட்ட நாவல். பாண்டியனின் சாகசமும் வீரமும் செல்லையாவில் வடிந்து அமைதியாகிறது. பாண்டியனின் வீரத்தை சாகசத்தை காட்டிய சிங்காரம் செல்லையாவின் கையறு நிலையையையும் தத்தளிப்பையும் சொல்கிறார். நிலையற்ற வாழ்க்கையை மாணிக்கம் வழியாக காட்டியவர் வயிரமுத்துவின் பிடிவாதமான வாழ்க்கையையும் காட்டுகிறார். இந்த நாவல்கள் ஒன்றை ஒன்று நிரப்பி முழுவாழ்க்கையின் தரிசனத்தை காட்டுபவை. வீரம், சாகசம், கொந்தளிப்பு, அமைதி நிலையற்றவாழ்வு நிலையான வாழ்வு என வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் சமமாகக் காட்டுவதால் தான் ப.சிங்காரம் பெரும் எழுத்தாளர்கள் வரிசையில் நிற்கிறார். அவருடைய படைப்பு மேலும் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இப்போது தமிழ் இலக்கிய சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. நவீனத்துவத்தை மீறிய வரலாற்று தரினசங்கள் கொண்ட பெரும் நாவல்கள் நிறைய வந்திருக்கிறது.  உரைநடையில் காவியம்(வெண்முரசு) எழுதப்பட்டிருக்கிறது. வணிக எழுத்து, என்று வெகுமக்கள் எழுத்து என்றும் சொல்லப்பட்ட பொழுதுபோக்கு எழுத்து இப்போது இல்லவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகவும் குறைந்துவிட்டிருக்கிறது. இந்த சூழலில் ப.சிங்காரம் நாவல்கள் தீவிர இலக்கியத்திலும், பொழுதுபோக்கு இலக்கியத்திலும் வீரம், சாகசம், காதல் ஆகிய விழுமியங்களை மிகைத்தன்மையில்லாமல்  வாழ்க்கையின் சமன்பாடுகளை கூரிய சுயவிமர்சனத்துடனும் பகடியுடனும் அணுகிய முன்னோடி ஆக்கம்.

அனங்கன்

(27-3-2022  நற்றுணை இலக்கிய கலந்துரையாடலில் ப.சிங்காரம் நாவல்கள் குறித்து பேசியது)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2022 11:30

பனி உருகுவதில்லை- கடிதங்கள்

பனி உருகுவதில்லை, விமர்சன அரங்கு உரைகள்

அன்புள்ள ஜெ

சென்னையில் அருண்மொழி நங்கை அவர்களின் நூல் விமர்சனக் கூட்டம் உரைகள் கேட்டேன். எல்லா உரைகளுமே சிறப்பாக இருந்தன. அ.வெண்ணிலா, கார்த்திக் புகழேந்தி, ஜா.தீபா ஆகியோரின் உரைகள் சிறப்பு. அவர்கள் பரவலாக அறியப்பட்ட பேச்சாளர்கள். ஆனால் அவ்வளவாக தெரியாத பிகு, அருந்தமிழ் யாழினி உரைகள் கூட மிகச்சிறப்பாக இருந்தன.

அருண்மொழி நங்கை உரையை ஒரு அருமையான கலைநிகழ்வு என்று சொல்லவேண்டும். அந்த எனர்ஜி, அவையை தன் சொந்தக்காரர்கள் என்று எடுத்துக்கொள்ளும் நட்புணர்வு, எந்தக் கசப்பும் எதிர்ப்பும் இல்லாத நட்புணர்வு, இயல்பான தலையாட்டல் சிரிப்பு என்று அழகான உரை. ஆத்மார்த்தமான உரை. ஆனால் கூடவே சங்க இலக்கியம் முதல் தொட்டுத்தொட்டு க்ரியேட்டிவிட்டியின் பல நுட்பமான விஷயங்களை தொட்டுச்சென்ற உரை.

ஆனால் அரங்கில் ஓர் ஐம்பதுபேர்தான் இருந்தார்கள். சிறிய அரங்கு.நம் இலக்கியக்கூட்டங்களில் நீங்கள், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் பேசும்போது வரும்கூட்டம் அதேயளவே தீவிரமாகப் பேசும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் கூட்டத்திற்கு வருவதில்லை. இது வருத்தமான விஷயம். அடுத்த தலைமுறையை கவனிக்காவிட்டால் நமக்கு இலக்கியத்தில் என்ன நடக்கிறதென்றே தெரியாமலாகிவிடும்.

கே.ஆர்.ரகுநாதன்

அண்ணா வணக்கம்

அருண்மொழி உரைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன் . தமிழ் ஆசியா புக்ஸ் , பனி உருகுவதில்லை புத்தக வெளியீட்டு விழா , ஆகுதி ஒருங்கிணைத்த சென்னை விமர்சன அரங்கு ஆகிய உரைகளை கேட்டேன் . மிக செறிவான உரைகள். இவ்வளவு  dense உரை ஆற்றும் பொது கொஞ்சம் மெதுவாக பேசினால் நன்றாக இருக்கும். என் மனம் பின்னால் நின்று கொள்கிறதோ தெரியவில்லை , ஏனோ என்னால் சரியாக பின்தொடர்ந்து செல்ல முடியாமல் நிறுத்தி நிறுத்தி கேட்டேன். அருண்மொழி பேசியதில் தமிழ் ஆசியா புக்ஸ் உரை ஒரு கிளாசிக்.

உங்கள் உரையில் ஒரு மெதுவான flow இருக்கிறது . என் மனதால்  எளிதாக பின்தொடர்ந்து செல்ல முடிகிறது.பல முறை உங்கள் நேரடியான உரையை கேட்கும் போதும் நான் notes கூட எடுத்திருக்கிறேன்.

இதையே அருண்மொழி உரையில் செய்ய வேண்டுமானால் typewriter short hand முடித்தவர்களால் தான் முடியும்.இதை மறக்காமல் அக்காவிடம் சொல்லிவிடவும்.

அன்புடன்
பன்னீர் செல்வம் ஈஸ்வரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2022 11:30

சந்தையில் சுவிசேஷம்-கடிதங்கள்

சந்தையில் சுவிசேஷம்

அன்புள்ள ஜெ

உங்கள் விகடன் பேட்டிக்கு கீழே  உள்ள கமெண்டுகளில் சில. பெரும்பாலானவை இன்னும் மோசமான அப்பட்டமான வசைகள்.

ஒரு சதவீதம்பேருக்கு கூட நீங்கள் சொன்னதென்ன என்று புரியவில்லை. 1970 வரை சங்ககால நாகரீகத்துக்கு தொல்லியல் ஆதாரமில்லை என வெள்ளைக்காரன் சொல்லிக்கொண்டிருந்தான் என்று நீங்கள் சொன்னதை சங்ககாலமே ஆதாரமில்லாதது என நீங்கள் சொன்னதாக எடுத்துக்கொண்டு ஒரு கூட்டம் கம்புசுற்றுகிறது.

எவர்மேலும் விமர்சன அணுகுமுறை இல்லை. மூர்க்கமான நம்பிக்கை. அடிப்படையே இல்லாத பேச்சு. இவர்களில் பெரும்பாலானவர்கள் படித்த இளைஞர்கள்.

படிக்கப்படிக்க கண்ணீர்தான் வருகிறது. விதியே தமிழ்ச்சாதியை என்ன செய்ய நினைக்கிறாய் என கதறத் தோன்றுகிறது. இவர்களை இப்படி வைத்திருப்பவர்களை நினைத்து கொதிக்கிறது

அதைவிட தங்களை பகுத்தறிவுவாதிகள், அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொண்டு இவர்களை மௌனமாக ஆதரிப்பவர்களை எண்ணி குமட்டல் எழுகிறது

இத்தனை வசைகளையும் வாங்கிக்கொண்டு எவரோ ஒரு நல்ல வாசகனுக்காக உண்மையைச் சொல்லவேண்டும் என தனியாகத் துணிந்து நிற்கும் உங்களுடையது ஒரு மாபெரும் தியாகம்.

க.சிவக்குமார்

*

இந்தியாவில் ஆரிய பார்பணிய சமஸ்கிருதம் நுழையாமல் இருந்திருந்தால் தமிழ் தமிழர் தவிர வேறு வாரலாறே இருந்திருக்காது

*

உலகத்திலையே மிகவும் பழையமையான அகழ்வாராய்ச்சி திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கம் அகழ்வாராய்ச்சி 2 லட்சம் ஆண்டுகள் பழமையானது…… இது ஆப்பிரிக்காவை விட மிகவும் பழமையானது என நிரூபிக்கபட்டுள்ளது… எனில் உலகின் முதல் மாந்தன் தமிழன் தான்…

*

அறிவியல் பூர்வமாக நிருபித்து விட்டார்கள் கீழடி உலகின் பழமையான நகர நாகரிகம் என்று.. நீ எல்லாம் புராண கதைகளில் இருந்து வெளி வந்து அறிவியல் எழுத்தாளனாக பேசுங்கள்.. உங்களை போன்ற நபர்கள் கதறல் காரணமாக எங்கள் தமிழ் மொழி மற்றும் தமிழனின் பெருமை மேலும் வளருமே தவிர என்றும் அதற்கு அழிவே இல்லை.. பானையில் எழுதிய சமூகம்..அதற்கு சாட்சி கீழடி.. மீண்டும் கூறுவேன் இந்திய வரலாறு தென் தமிழகத்தில் இருந்து தான் எழுவது சிறப்பு..

*

. எவ்வளவு வண்மம் தமிழ்

மொழி மீதும் தமிழ் வரலாற்றின் மீதும்.

மனுஷன் கதறுறதா பார்க்க நல்லாத்தான் இருக்கு

அசோகர் மௌரியர்னு

*

எல்லாத்துக்கும் ஆதாரம் கேட்டா, உங்க அம்மாவுக்கு நீதான் பிள்ளைன்னு நிரூபிக்கக் கூட முடியாது உன்னால. புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

*

ராஜஸ்தானுக்கும் தமிழகத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு அப்படி இருந்த காரணத்தினால் தான் பாண்டிய மன்னன் தனது மகளையே அங்கு திருமணம் செய்து கொடுத்தார்.. என்பது வரலாறு இது தெரியாமல் சும்மா உளற கூடாது… முதல் தமிழ்ச்சங்கம் நடந்து முடிந்து 30,000 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பது வரலாற்று குறிப்பு தமிழர்களுக்கு வரலாறு இல்லை என்றான பொய்யான பிம்பத்தை கட்டியமைக்கும் ஜெய மோகன் அவர்களே இங்கு உள்ள புள்ளி கொற்றன் என்ற நாய் இனத்தை தான் தான் ராஜஸ்தானில் புள்ளி குட்டா என்று அழைக்கிறார்கள் வளர்ப்புப் பிராணிகளில் ஆரம்பித்து ஆடை அணிகலன்கள் முறுக்கு மீசை போர்க்குணம் என அனைத்தும் ராஜஸ்தானிய மக்கள் ராமநாதபுர மாவட்ட மக்களுடன் மிகவும் ஒத்துப் போவார்கள் சினிமாவுக்கு கதை வசனம் எழுதியதோடு போயிரு சும்மா கதை விடாதே

*

உயிறினங்கள் இந்த பூமியில் உருவாக வில்லை இப்பூமியில் தாவரங்கள் தான் முதலில் உருவானது அது கடவுளின் செயலாகவும் இருக்கலாம் அல்லது கண்டம் விட்டு கண்டம் செல்லும் பறவைகள் மாதிரி கோள்கள் விட்டு கோள்கள் செல்லும் பறவைகளாகவும் இருக்கலாம் அல்லது ஏலியன்ஸ் மாதிரி மனிதற்கள் கூட வந்திருக்கலாம் ஆனால் உயிரினங்கள் வருவதற்க்கு காரணம் தமிழ் மொழிதான் காரணம் தமிழ் மொழி மிகவும் சக்தி வாய்தது அது இன்னும் ரகசியமாகவே உள்ளது தமிழ் மொழிக்கு இலக்கனம் வகுத்தது சாதரனமானவை அல்ல ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி பிறப்பதற்காகவே இலக்கனத்தை உருவாக்கினார்கள் …

*

70,000 ஆண்டுகட்கு முன்பே ஆப்பிரிக்காவிலிருந்து தமிழர்கள் மதுரையில் குடியேறியதால் genetical match கச்சிதமாக உள்ளது என்கிறார்கள். மனிதர்களின் வாழ்வியல் நெறிகளையும் அக புற நன்னெறிகளை எடுத்து கூறுவது தானே இலக்கியங்கள். அப்படியென்றால் 70,000 வருட வரலாறுடைய ஒரு சமுதாயம் எத்தகைய இலக்கியங்களை இயற்றியிருக்க கூடும்? ஜெய மோகன் சங்க காலம் என்றே ஒன்று இல்லை என்கிறார். வரலாறு தெரியாதவரா ஜெயமோகன்? இல்லை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறாரா?

*

தமிழர் வரலாறு தெரிந்து கொள்ள வி. ஆர் .இராமச்சந்திர தீட்சிதர் கட்டுரை தமிழர் தோற்றமும் பரவலும் புத்தகம், பி. இராமழாதன் அவர்கள் படைப்பை படித்து தெளியவேண்டும். ஆதிச்சநல்லூர் தமிழர்பண்பாடு கிமு 8000 முதல் 10,000 என்ற வங்காள ஆய்வாளர் ஆர். டி. பானர்சி எழுதிய குறிப்புகளை படிக்கவும். தமிழர் வரலாற்றை மறைத்த ஆரியர் வழிப் பார்வையாளர் இப்படித்தான் பேசுவார்கள்.

ராஜஸ்தானின் புதைநகர்கள்- கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2022 11:30

நீர்ச்சுடர் முன்பதிவு

அன்புள்ள நண்பர்களுக்கு

வெண்முரசு வரிசை நூல்களில் இன்னும் எஞ்சியுள்ளவற்றை நானும் நண்பர்களும் நடத்தும் விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாகவே கொண்டுவர எண்ணியிருக்கிறோம். நீர்ச்சுடர் செம்பதிப்பு வரவிருக்கிறது. கூடவே பொதுப்பதிப்பும் வெளிவரும். முந்தைய பதிப்புகளை முன்பதிவுசெய்து வாங்கியவர்கள் இதையும் வாங்கவேண்டுமென கோருகிறேன்

ஜெ

நீர்ச்சுடர் முன்பதிவு அறிவிப்பு

நீர்ச்சுடர் – செம்பதிப்பு – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்து மூன்றாவது நாவல் விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். 648 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 900/-. (இப்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இடம்பெறவில்லை)

முன்பதிவுத்திட்டத்தில் வெளிவரும் இந்நாவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் பதிப்பக தள நிரலிலும் 9080283887 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் ஆர்டர் செய்யலாம்.  விபிபியில் புத்தகங்கள் அனுப்பி வைக்க இயலாது. முன்பணம் செலுத்துபவர்களுக்கே முன்பதிவு செய்யப்படும்.

முன்பதிவுக்கு : https://www.vishnupurampublications.c...

முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:

முன்பதிவு செய்தவர்களுக்கு பதிவு எண்ணுடன் (info@vishnupurampublications.com லிருந்து) ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். புத்தகங்கள் அனுப்பத்தொடங்கியவுடன் வாட்ஸப்பில், மின்னஞ்சலில் தெரிவிக்கிறோம்.

முன்பதிவு செய்பவர்கள் எந்தப்பெயரில் கையொப்பம் வேண்டும் என்பதைக் குறிப்பிடவும்.

முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.

ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் 9080283887 என்ற எண்ணில் அழைக்கலாம்.

விஷ்ணுபுரம் பதிப்பகம்

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2022 04:56

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.