Jeyamohan's Blog, page 795
April 15, 2022
கவிதைகள் இணைய இதழ்
அன்புள்ள ஜெ,
ஏப்ரல் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் கவிதையை புரிந்துக் கொள்ளுதல் பற்றி கவிஞர் அபி எழுதிய கட்டுரை “கவிதை புரிதல்” இடம்பெற்றுள்ளது. மேலும் சுகுமாரன், லட்சுமி மணிவண்ணன், சதீஷ்குமார் சீனிவாசன், பாபு பிருத்விராஜ் ஆகியோரின் கவிதைகள் பற்றிய குறிப்பை பாலாஜி ப்ருத்விராஜ், ஜி.எஸ்.எஸ்.வி.நவின், விக்னேஷ் ஹரிஹரன், மதார் எழுதியுள்ளனர்.
இனி வரும் கவிதைகள் இதழில் கவிதையை புரிந்து கொள்வதற்கான ஒரு கட்டுரையும், நான்கு கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெறும்.
http://www.kavithaigal.in/நன்றி,
ஆசிரியர் குழு
இரா முருகன் பற்றி ஆத்மார்த்தி
அன்புள்ள ஜெயமோகனுக்கு
வணக்கம். நலம் தானே!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாதம் தோறும் முதல் சனிக்கிழமையன்று ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் வாசிப்புக் குழுவின் மூலம் தமிழில் சிறந்த படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களைக் குறித்து கூகுள் மீட் சந்திப்பின் வழியாக இலக்கிய ஆய்வுரையினை நடத்திக் கொண்டு இருக்கிறோம். உங்களது கவனத்திற்கும் வந்து இருக்கும் என்று நம்புகிறேன். ஏற்கனவே நவம்பரில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறித்த எழுத்தாளர் காளிப்ரஸாத் ஆற்றிய உரையினை உங்களது தளத்தில் வெளியிட்டதன் மூலம் அது பரவலான கவனத்தைப் பெற்றது.
இதுவரை எழுத்தாளர் எம்.வி.வி குறித்து கவிஞர் ரவிசுப்ரமணியனும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறித்து எழுத்தாளர் காளிப்ரஸாத்தும், எழுத்தாளர் இமையம் குறித்து எழுத்தாளர் சுரேஷ் பரதனும், எழுத்தாளர்
வண்ணாதாசன் குறித்துp பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவனும், எழுத்தாளர் சு.வேணுகோபால் குறித்து எழுத்தாளர் ஜா.ராஜகோபாலனும், எழுத்தாளர் இரா.முருகன் குறித்து எழுத்தாளர் ஆத்மார்த்தியும் உரையாற்றினார்கள். சிறப்புரையைத் தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்விலும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
எழுத்தாளர் இரா.முருகன் குறித்து எழுத்தாளர் ஆத்மார்த்தி ஆற்றிய உரையின் லிங்கை உங்களது பார்வைக்கு அனுப்பி இருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=GziLcH7gCao
பிற எழுத்தாளர்களைக் குறித்த உரைகளையும் யூ ட்யுபில் காணலாம்.
மந்திரமூர்த்தி அழகு
இலக்கியம்- கடிதங்கள்
உங்கள் புத்தகங்கள் மற்றும் இணையதளத்தை கிட்டதட்ட பல வருடங்களாக படித்துவருகிறேன்.
எனக்குள் நடந்த மாற்றங்களை கீழே பட்டியலிட்டிருக்கிறேன்
1. Dialectical thinking – முரணியக்கம். முதல் முதலில் இந்த வார்த்தையையும் அதற்கான முழு அர்த்தத்தையும் அறிந்த அன்று என் மனம் அடைந்த பரவசம் இன்றும் அப்படியே நியாபகம் இருக்கிறது. முரணியக்கம் என்று கூகிள் தேடலில் முதலில் வரும் இணையதளம் www.jeyamohan.in
2. உண்மை என்பதற்கு பல முகங்கள் . நித்யா காந்தியிடம் இதை கேட்ட போது எப்படி இருந்திருக்கும் அவர் மனநிலை. இந்த வாசகம் என் மனதில் குறைந்தது ஒரு முறையாவது ஒரு நாளில் வந்துவிடும். என் நண்பர்களிடம் எந்த உரையாடலை தொடங்கும் முன் இதை மனதில் நினைத்து கொண்டுதான் தொடங்குவேன்.
3. எப்போதும் நேர்நிலையான மனநிலை – மேல் சொன்ன இரண்டிற்கும் இதற்குமான interconnectness மிக அதிகம்.
அன்புடன்
பன்னீர் செல்வம்
***
அன்புள்ள பன்னீர்செல்வம்,
ஒரு சூழலில் சுயமாகச் சிந்திப்பவருக்கான சவால்கள் சில உண்டு.
அ கூட்டமாக நிற்பதன் ஆற்றலை அனுபவிப்பவர்களின் எதிர்ப்பு.
ஆ நம்மைவிட அறிவில் குறைந்தவர்கள் தங்களை அறிவாளிகள் என (அவர்களின் முதன்மை அறிவின்மையே அதுதான்) முன்வைக்கும் ஏளனம்.
இ. நாமே அவ்வப்போது மிகையுணர்ச்சிக்கும் பற்றுக்கும் ஆளாகி தர்க்கத்தை கைவிட்டுவிடுதல்.
இம்மூன்றையும் எதிர்கொண்டு நிற்கும் ஆற்றல் அமைக
***
அன்பின் ஜெ,
இன்று எனக்கு 27வது பிறந்தநாள், பிற வருடங்களை காட்டிலும் கடந்த ஆண்டு குறித்து எண்ணும் போது வாழ்வின் மிகச்செறிவான ஆண்டெனும் தன்னிறைவு ஏற்படுகிறது, வெண்முரசு வாசிக்கத் தொடங்கியது இந்த ஆண்டில் தான், ஈரோடு ஜீவா விழாவில் தங்களை முதன்முதலில் கண்டது, பிறகு கோவையில், மீண்டும் ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில் என மூன்று முறை.
இலக்கியம் என்னும் இந்த பேராற்றில் கால் நனைத்த ஆண்டிது, இன்னும் வெகுதூரம் பயணிக்க இறை அருளட்டும், மானசீகமாக பாதம் பணிந்து வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
ஜெகத், அந்தியூர்
***
அன்புள்ள ஜெகத்
இலக்கியம் என்பதை அகங்காரச் செயல்பாடாக ஆக்கி, அரசியலையும் இணைத்துக்கொண்டு, வம்புவழக்குகளுக்குள் செல்லாமல் இருக்கும் வரை வாழ்க்கையிலுள்ள எல்லா இடைவெளிகளையும் நிரப்பி வாழ்க்கையை நிறைவும் இனிமையும் கொண்டதாக ஆக்கும் தன்மை அதற்குண்டு.
வாழ்த்துகள்
ஜெ
ஒரு பாடல் -கடிதம்
உங்கள் தளத்தில் கர்நாடக சங்கீதத்தை பற்றிய கட்டுரைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, அந்த தேடல் அப்படியே உங்களுக்கும் கர்நாடக சங்கீதப் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் அவர்களுக்கும் நடந்த கடிதப் பரிமாற்றங்களின் வழியே நடந்த உரையாடலுக்கு கொண்டு சேர்த்தது. “உங்கள் பல்லாயிரம் ரசிகர்களில் வரிசையில்கடைசிப் படிகளில் நிற்கக்கூடிய எளிய, தீவிர ரசிகன் நான்.” என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். புல்லரித்தது. அப்போதே போய் யூடியூபில் அவரது பாடல்களை அறிமுகப்படுத்திக்கொள்ள முயன்றேன். இதுவரையில் ‘துன்பம் நேர்கையில்’ பாடலை விட்டு வெளியே வரமுடியவில்லை. அந்த பாடல் மட்டும் என்னுள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த பாடலின் பொருள்கூட தெரியாது. ஏனென்றால் நான் சொல்லில் கவனம் செலுத்தவில்லை என்பதை பின்புதான் அறிந்தேன். நிறைய பாடகர்கள் இப்பாடலைப் பாடி இருந்தாலும் இவரது குரல் மட்டும் நம் கையை இறுகப் பிடித்து “இங்கேயே உக்காரு ” என்கிறது.
பின்பு, அக்கா மகன் பிறந்த போது பதினாறாம் நாள் பெயர் சூட்டு விழாவின் சடங்குகளை ஒளி வடிவில் ஆவணம் செய்ய வேண்டும் என்று பதிவு செய்தேன். அந்தக் காணொளிக்கு பின்னணியில் ஒலிக்கும் பாட்டாக சஞ்சய் சுப்பிரமணியம் அவர்களின் “துன்பம் நேர்கையில்” பாடலை உட்பொருத்தினேன். வேலை முடிந்ததும் காணொளியை பார்க்கத் தொடங்கினேன். அன்றுதான் அவரது குரல், வரிகள், வரிகளின் பொருள் அனைத்தையும் உணர்ந்தேன். அதற்கு பிறகு அதன் மேல் கைவைக்கவில்லை. முழுமை அடைந்துவிட்டது.
பிறகுதான் அந்த பாடலில் இருந்து வெளிவர தொடங்கியுள்ளேன்.
துன்பம் நேர்கையில் (Tunbam Nergaiyil – Desh) Sanjay Subrahmanyan
Arulmozhivarman Naming ceremony | 23.12.2021
நன்றி
கோ வெங்கடேஸ்வரன்.
April 14, 2022
இஸ்லாமியக் கடைகளுக்குத் தடை?
அன்புள்ள ஜெயமோக்ன் அவர்களுக்கு,
வணக்கம்.
ஹிஜாப் விஷயத்தில். எப்படி லிபரல்கள் ஹிஜாபை ஆதரித்தார்கள் என்றும், அது எப்படி பாஜகவுக்கே ஆதரவாக மாறுச்சின்னும் எழுதியிருந்தீர்கள்.
இப்போது கர்நாடகாவில், இஸ்லாமியர்களின் தொழில்களைப் புறக்கணிக்க வேண்டும் என இந்துத்துவக் குரல்கள் எழுந்திருக்கின்றன. இது ஏற்கனவே வரலாற்றில் நடந்த இன அழிப்பு யுக்தியின் காப்பி என எழுதலாம்னு யோசிச்சேன்.. ஆனா, அதை எழுதி, மேலும் இந்துக்கள் பாஜகவை ஆதரித்து விடும் அபாயம் இருப்பதால், உங்களுக்கே எழுதிரலாம்னு முடிவெடுத்தேன்
நீங்களே சொல்லுங்கள். இந்துத்துவர்கள் சொல்வது போல, இஸ்லாமியர்களின் தொழில்களை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டுமா? இந்துத்துவர்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?
அன்புடன்
பாலசுப்ரமணியம் முத்துசாமி.
அன்புள்ள பாலா,
உங்களை சென்ற சில ஆண்டுகளாகக் கூர்ந்து கவனித்து வருகிறேன். முகநூல் ஒருவரை என்ன செய்யும் என்பதற்கான இரண்டு சிறந்த உதாரணங்கள் நீங்கள் ஒன்று, இன்னொருவர் பி.ஏ.கிருஷ்ணன்.
முகநூலில் சீண்டும் விவாதங்கள் நிகழ்கின்றன. ஒத்தகருத்துள்ளோர் அணிசேர்கிறார்கள். அதன்பின் நிகழ்பவை அணிசேர்ந்த தாக்குதல்கள். நையாண்டிகள், குதர்க்கங்கள் வழியாக எதிர்தரப்பை மட்டம்தட்டுதல். தன் கருத்தை எவ்வகையிலேனும் மறுக்கும், ஐயப்படும் எவரையும் எதிரியாக்கி ஏளனம் செய்ய ஆரம்பித்துவிடுதல்.
நானறிந்த பி.ஏ.கிருஷ்ணன் அபாரமான நகைச்சுவை உணர்ச்சிகொண்டவர். மரபிலக்கியமும்,நவீன இலக்கியமும் பயின்றவர். மனிதநேயம் நிறைந்தவர். இணையத்தில் பரவலாக நம் நண்பர்கள் அறிந்திருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் வேறொரு ஆளுமை.
இன்று நீங்களும் அப்படித்தான் ஆகியிருக்கிறீர்கள். இன்றைய காந்திகள் எழுதிய பாலசுப்ரமணியம் முத்துசாமி அல்ல நீங்கள். முழுக்கமுழுக்க எதிர்மறையுணர்வுகள் நிறைந்த, கசப்பு மண்டிய இன்னொரு மனிதர். இது எல்லாருக்கும் ஓர் எச்சரிக்கை என நினைக்கிறேன்.
நான் பொதுவாக என் தளத்தில் இதைப்போன்ற ‘புத்திசாலித்தனங்கள்’, கசப்புகள், அதன் விளைவான நையாண்டிகளுக்கு இடமளிப்பதில்லை. அவைதான் முகநூல் முழுக்க நிரம்பி வழிகின்றன. இந்த தளம் முன்வைக்க விரும்புவது வேறொரு மனநிலையை.
*
முகநூலின் ’நானே புத்திசாலி, நானே சரியானவன்’ என்னும் மனநிலையில் இருந்து வெளியே நிற்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் நான் சொல்வது புரியும்.
ஹிஜாப், புர்க்கா போன்றவை மதஅடையாளங்கள். அந்த மதத்தின் இயல்பான அடையாளங்கள்கூட அல்ல. அந்த மதத்தை அடிப்படைவாதத்திலும் ஆசாரங்களிலும் கட்டிப்போட நினைப்பவர்களால் முன்வைக்கப்படுபவை, அச்சமூகம் மீது சென்ற இருபதாண்டுகளாக வன்முறை மற்றும் மிரட்டல் வழியாக சுமத்தப்படுபவை. உலகம் முழுக்க அந்த அடையாளத்தை முன்வைத்து வலியுறுத்துவதன் வழியாக தங்களை விலக்கிக்கொள்ள, பொதுச்சமூகத்தில் இருந்து நேர் எதிராக தங்களை வைத்துக்கொள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முயல்கிறார்கள். அச்சமூகத்தை அத்திசைநோக்கி கொண்டுசெல்கிறார்கள். அந்த மதத்திலேயே அதற்கு எதிராக நிலைகொள்ளும் முற்போக்கினர் உண்டு, பெண்விடுதலைபேசுபவர்கள் உண்டு.
இஸ்லாம் மீதான இந்துத்துவர் தாக்குதல்களை காரணம் காட்டி அந்த தீவிர மத அடையாளங்களை ’முற்போக்கினர்’ ஆதரிப்பதும், அதையே இஸ்லாமியரின் அடையாளமாகக் காட்டுவதும், இஸ்லாமியர் அனைவரையும் அடிப்படைவாதம் நோக்கி தள்ளிவிடுவதுதான். முற்போக்குப் பார்வைகொண்ட இஸ்லாமியர்களை அவமதித்து அவர்களையும் அடிப்படைவாதம் நோக்கி உந்துவது அது.
அதையே இந்துத்துவர் எதிர்பார்க்கிறார்கள். இஸ்லாமியர் தங்கள் தீவிர மத அடையாளத்தை முன்வைக்கும்தோறும் அதைச் சுட்டிக்காட்டி, இந்துக்களை தீவிர மறுபக்கம் இந்து அடையாளம் நோக்கி குவிக்க அவர்களால் இயலும். லிபரல்களை இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று காட்ட இயலும். இது ஒன்றாம் வகுப்புப் பாடம். கண்கூடான நடைமுறை உண்மை. முகநூல் குதர்க்கத்தால் மட்டுமே இதை புரிந்துகொள்ள முடியாது.
இஸ்லாமியர் எந்த அளவுக்கு தங்களை இந்தியாவின் பொதுச்சமூகத்துடன், பொதுச்சமூகத்திலுள்ள நடுநிலையான மக்களுடன், முற்போக்குத் தரப்புடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கே இந்தப்போரில் அவர்கள் வெல்ல முடியும். மதவெறியர்களை நோக்கிச் செல்லுந்தோறும் அவர்கள் தோற்கிறார்கள்.
இஸ்லாமியர்களிடமிருந்து மத அடையாளத்துடன் பேசாமல் தேசியநோக்குடன், சமூக நோக்குடன், அனைவருக்குமாகப் பேசும் லிபரல் தலைவர்கள் சிலர் உருவாகி வந்தால் மட்டுமே அவர்கள் மீதான மதத்தாக்குதல்களை ஜனநாயகரீதியாக எதிர்கொள்ள முடியும். அவர்களிடமிருந்து மதவெறியை முன்வைக்கும் தலைவர்கள் எழுந்து வந்தால் அது மதமோதல்களை மட்டுமே உருவாக்கும். அதன் லாபம் இந்துத்துவ அரசியலுக்கே. அத்தகைய தலைவர்கள் அங்கிருந்து உருவாகி வர லிபரல்கள் முயலவேண்டுமே ஒழிய அங்கிருக்கும் மதவெறியர்களை லிபரல்கள் முன்வைக்கலாகாது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவாதத் தாக்குதல் நிகழ்கையில் அவர்கள் தங்களை இந்தியர், தமிழர், பொதுக்குடிகள், அனைவருக்கும் உரிய வாழ்வுரிமை கொண்டவர்கள் என முன்வைப்பதொன்றே நடைமுறை அரசியல் காட்டும் வழி. மாறாக இஸ்லாமிய மதவெறியர்களை தங்கள் முகங்களாக மேடையேற்றிப் பேசவிடுவது அழிவுப்பாதை.
ஹிஜாப் தொடர்பான விவாதங்களில் தமிழகத்தில் இந்துக்களிலேயே நடுநிலையான பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாமியர்களின் உரிமைகளை ஆதரித்தனர்.லிபரல்கள் ‘நாங்களும் புர்க்கா போடுவோம்’ என ஆர்ப்பரித்தனர்.அந்த புர்க்கா ஆதரவுக் கோஷமெல்லாம் ஏன் இரண்டு வாரம்கூட நீடிக்கவில்லை? உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர்கூட பொது அரசியல்கட்சிகள் ஏன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை? ஏன் அந்த அமைதி?
ஏனென்றால் தமிழகமெங்கும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் இஸ்லாமிய மதவெறியர்கள் பேசிய பேச்சுக்கள் ஓரிரு வாரங்களில் அத்தனை ஆதரவு மனநிலையையும் இல்லாமலாக்கிவிட்டன என்பது கண்கூடு. தி.மு.க, இடதுசாரிகள் உட்பட அத்தனை அரசியல்வாதிகளும் அப்படியே பின்வாங்கி அமைதியாகிவிட்டது அதனால்தான். இந்த கொட்டை எழுத்துச் செய்தியைக்கூட நம் முகநூல் லிபரல்களால் வாசிக்கமுடியவில்லை என்பதனால்தான் அது ஒரு மனநோய்வட்டம் என்கிறேன்.
இஸ்லாமியக் கடைகளை புறக்கணிப்போம் என்னும் மதவெறிக் கூச்சல் ஓர் அரசியல் உத்தி. மதவெறியை அரசியலுக்கு பயன்படுத்தும் சூழ்ச்சி. அதை எதிர்கொள்ளவேண்டிய வழி இந்தியக்குடிமக்களாக, அத்தனை குடிமக்களுக்குரிய உரிமைகளும் கொண்டவர்களாக, அமைதியையும் வளர்ச்சியையும் நாடும் இந்தியப் பெரும்பான்மை மக்களில் பிரிக்கமுடியாத ஒருபக்தியாக தங்களை இஸ்லாமியர் உணர்வதும் முன்வைப்பதுமே.
நான் இஸ்லாமியர் கடைகளிலேயே பெரும்பாலும் பொருளை வாங்குகிறேன். இனியும் அப்படித்தான். அவர்கள் இஸ்லாமியர் என்பதனால் அல்ல, அவர்கள் ஒப்புநோக்க நல்ல வியாபாரிகள் என்பதனால், வீட்டுக்கே கொண்டுவந்து தருவதனால். அது என் உரிமை. முன்வைக்கவேண்டியது இதைத்தான்.
அதற்குப் பதிலாக அத்தனை இஸ்லாமியக் கடைகளிலும் பச்சைக்கொடி ஏற்றி, நாரே தக்பீர் என்று கூச்சலிடவேண்டும் என்று அவர்களில் ஒரு தீவிரவாதத் தரப்பு சொன்னால்; உடனே இங்குள்ள முற்போக்கினர் கொஞ்சபேர் பச்சைக்கொடியுடன் இஸ்லாமியர் கடைகளுக்கு முன் சென்று நின்று தாங்களும் அதே கூச்சலை எழுப்பினால் அது அழிவுப்பாதை. இஸ்லாமியரை தங்கள் சழக்குப்புத்தியால் குழிதோண்டிப்புதைக்கிறார்கள் லிபரல்கள் என்று பொருள்.
மற்றவர்களுக்கு தெளிவாகியிருக்கும். உங்களுக்கு இனிமேல் இந்த எந்த தர்க்கமும் புரியாது.
ஜெ
பறவைகளின் வானம்
விசும்பு அறிவியல் கதைகள் தொகுதி வாங்க
அன்புள்ள ஜெ,
வணக்கம். பறவைகள் திசையறியும் விதம் குறித்த இந்த ஆய்வுக்கட்டுரை கண்டபின் உங்கள் நினைவு வந்தது. எவ்வாறு மின்காந்த அலைகள் அவற்றைப் பாதிக்கிறதென்பது குறித்தும் எழுதியிருக்கிறார்கள்.How Migrating Birds Use Quantum Effects to Navigate
விஜயகுமார்
அன்புள்ள விஜயகுமார்,
விசும்பு சிறுகதை 2005 திண்ணை இணைய இதழில் வெளிவந்தது. 2006ல் பி.கே.சிவக்குமார் முன்னுரையுடன் எனி இண்டியன் பதிப்பகத்தில் இருந்து தொகுப்பாக வெளிவந்தது. அதன்பின் பல பதிப்புகள்
அக்கதை வெளிவந்தபோது அந்தக்கால ‘அறிவியலாளர்’ ( என்ன, ஒரு எம்.எஸ்.சி வாங்கியிருப்பார்கள்) பறவைகளுக்கு அப்படி மின்காந்த அலைகளை கண்டறியும் புலன்களெல்லாம் இல்லை (அதாவது கல்லூரிப் பாடத்தில் அப்படிச் சொல்லப்படவில்லை) என ஆவேசமாக மறுத்திருந்தனர். அப்படி ஒரு புலன் ஒரு பறவைக்கு இருப்பதை அறிவியல் ஆவணப்படுத்தவில்லை, மற்ற உயிர்களைப்போல கண்காதுமூக்குசெவிதான் அதற்கும் என்றனர்.
அந்த அறிவியலாளர்களில் ஒருவர் கிறிஸ்தவர். அவர் பறவைகளுக்கு ஆத்மா உண்டு என்னும் ‘இந்துத்துவ’ கருத்தை வலியுறுத்த நான் செய்யும் மோசடி அது, அதை அறிவியலாளர் ‘அணிதிரண்டு’ உடைக்கவேண்டும் என எழுதினார்.
நான் சயண்டிஃபிக் அமெரிக்கன் இதழில் அப்போது வெளிவந்த ஒரு கட்டுரையை ஆதாரமாக்கியே அதை எழுதினேன். அந்த அறிவியலாளருக்கு அனுப்பினேன். அவர் அதை படிக்கவில்லை. இன்னொருவர் அந்த அறிவியல்கட்டுரையில் இருக்கலாம் என்னும் ஊகம்தான் உள்ளது, அது அறிவியலுண்மை அல்ல என்று மீண்டும் பொங்கினார்
நான் அறிவியல்புனைகதைக்கு அறிவியலின் எல்லைதான் களம். நிரூபிக்கப்பட்ட உண்மை அறிவியல்புனைகதைக்கு தேவையில்லை. ஒர் அறிவியல் சாத்தியக்கூறு, ஒரு முகாந்திரம் இருந்தால்போதும் என எழுதினேன். ’அதெல்லாம் மோசடி’ என சொல்லிவிட்டார்.
சும்மா நினைத்துக்கொண்டேன்
ஜெ
நூலக இதழ்கள்- கடிதம்
மனுஷு,சமசு,அரசு
அன்புள்ள ஜெ..
நூலகங்களில் ஏற்கனவே வாங்கப்பட்டுக் கொண்டிருந்த பல நாளிதழ் / பருவ இதழ்களை நிறுத்தி , புதிதாக வாங்கப்படவுள்ள பட்டியல் வெளியிடப்பட்டது
நாளிதழ்களில் முரசொலி , தமிழ் முரசு , வார இதழ்களில் குங்குமம் , இனிய உதயம் , நக்கீரன் பெண்கள் இதழ்களில் குங்குமம் தோழி, ஆங்கில இதழ்களில் rising sun ,இலக்கியப் பிரிவில் உயிர்மை என லாகவகமாக அனைத்துப் பிரிவுகளிலும் ஆளும்கட்சி இதழ்கள் இருப்பதை கவனிப்பது சுவாரஸ்யமாக இருந்தது. ஆளும் கட்சியால் நேரடியாக நடத்தப்படாத , அவர்கள் ஆதரவாளர்களால் நடத்தப்படும் இதழ்களையும் அனைத்துப் பிரிவுகளிலும் பார்க்க முடிந்தது.
இதில் எனக்கு கருத்து ஏதும் இல்லை. தமது ஆட்களை உள்ளே கொண்டுவருவது எல்லோரும் செய்வதுதானே என நினைத்தேன் இந்த சூழலில் நூலக தேர்வுக்குழு உறுப்பினர் சமஸ் ஆவேசமாக அளித்த பேட்டி பார்வைக்கு வந்தது. முதல்வரும் , நூலகத்துறையும் நல்ல நோக்கத்துடன் செய்ய முனைந்த முயற்சி சிலரது புரியாமையால் உருப்படாமல் போனதை உணர முடிந்தது
500 இதழ்கள் வாங்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை கடைகளில் பார்க்கவே முடியாது. கடைகளில் இருபது இதழ்கள் தொங்கும். வீடுகளில் அதிக பட்சம் ஐந்து இதழ்களைத்தானே வாங்குவீர்கள்? 500 இதழ்களை வாங்க அரசு மட்டும் ஏன் வாங்க வேண்டும் ? எனவே அனைத்தையும் நிறுத்தினோம் என்கிறார் அவர்
கடைகளில் கிடைக்காத , வீடுகளில் வாங்க முடியாத இதழ்களைப் படிப்பதற்குத்தான் நூலகம் செல்கிறோம் என்ற அடிப்படையே அவருக்குத் தெரியவில்லை. திமுக , அதிமுக ஆட்சி என எதுவானாலும் நூலகங்களில் முரசொலி . நமது எம்ஜிஆர் , சங்கொலி என அனைத்தையும் படிக்க முடிந்திருக்கிறது. இவற்றை ஒரு சராசரி தமிழன் வீடுகளில் வாங்கிப் படிக்க முடியாது. அரசை விமர்சித்த / ஆதரித்த பாக்யா , குங்குமம் , முத்தாரம் என அனைத்தும் எந்தக்கட்சி ஆண்டாலும் கிடைத்தன
அதுபோல எத்தனையோ சிற்றிதழ்கள் , கவிதை இதழ்கள் நூலகங்களில் கிடைத்தன. சாதாரண தாள்களில் அச்சிடப்பட்டு மெலிதாக வெளிவரும் இவற்றை கடைகளில் வாங்க முடியாது. இணையம் இல்லாத காலத்தில் அவற்றை எங்கு வாங்குவது என்றும் தெரியாது.
நூலகம் மூலம்தான் இவற்றைப்பற்றிய அறிமுகம் கிடைத்தது. இவை அனைத்தையும் நிறுத்தி விட்டு , பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது தேர்வுக்குழு. ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக சிலர் செயல்பட்டுள்ளனர்.
கண்டிப்பாக இது ஆளும்கட்சியின் நோக்கமாக இருக்காது. காரணம் , நாளை வேறு கட்சிக்கு ஆட்சிக்கு வந்து இந்த முன்னுதாரணத்தை பயன்படுத்துவது ஜனநாயக விரோதமாகி விடும் என்பதை அறிவார்கள். கடந்த காலங்களில் இப்படி அவர்கள் செய்ததும் இல்லை
இதில் என்ன வேடிக்கை என்றால் நடுநிலைமைக் காட்டுவதற்காக ஆளும்கட்சிக்கூட்டணியில் இருக்கும் அப்பாவிக்கட்சிகளை புறக்கணித்து விட்டனர். எதிர்தரப்பில் வலுவான சிலருக்கு வாய்ப்பளித்துள்ளர்
வாசிப்புக்குறித்து எந்த அக்கறையும் இல்லாத ஆட்சிகளில்கூட நடக்காத சீரழிவு ,வாசிப்பு மீது அக்கறை கொண்ட முதல்வர் , அதிகாரிகள் இருக்கும் இச்சூழலில் நடந்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அல்லது இது திருப்திகரமானதுதான் , குறை சொல்ல இடமில்லை என நினைக்கிறீர்களா?
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்,
வாங்கப்பட்ட இதழ்களின் பட்டியலைப் பார்த்தேன். எல்லா வகை இதழ்களுக்கும் இடமளித்திருக்கிறார்கள் என்றே எனக்குப் பட்டது. நூலகத்துக்கு இதழ்கள் வாங்கும்போது பலவகையான சிக்கல்கள் உண்டு. பல இதழ்கள் நூலகத்துக்கென்றே நடத்தப்படும். ஒரே ஆள் ஏழெட்டு இதழ்களை நடத்துவதுண்டு.
ஆளுங்கட்சி இதழ்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. மற்ற இதழ்களும் உள்ளன. ஒருபக்கம் உங்கள் குற்றச்சாட்டு மறுபக்கம் திராவிட இயக்க இதழ்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு.
சரிதான். அதிகாரமென்பது சும்மா இல்லை.
ஜெ
அரசியல் கட்டுரைகள் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
2009ல் சாட்சி மொழி வெளியானதிலிருந்து தற்போது வரை ஏராளமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இடைப்பட்ட காலத்தில் நீங்கள் கட்டுரையாகவும், வாசகர் கேள்விக்கான பதில்களாகவும் இணையத்திலும் அச்சு ஊடகத்திலும் எழுதியவற்றைத் தொகுத்து தற்கால மற்றும் வருங்கால இளைஞர்களைக் கருதி ஆவணப்படுத்தப்படவேண்டும் என்று கருதுகிறேன். உங்கள் கருத்தை அறிய ஆவல்.
அன்புடன்
நெல்சன்
***
அன்புள்ள நெல்சன்
ஆம், ஆவணப்படுத்தப்படவேண்டும்தான். மேலும் பல அரசியல் நூல்கள் வந்துள்ளன. தினமலர் வெளியீடான ஜனநாயகச் சோதனைச் சாலைகள் அதிலொன்று. வலசைப்பறவை இன்னொன்று.
என்ன சிக்கலென்றால் சீராக தொகுத்து நூலாக்கவேண்டும். திரும்பத்திரும்ப ஒரு விஷயம் வந்துகொண்டிருக்கும். அது ஒரு தரப்பை எடுத்து விவாதிக்கும் அரசியலுக்கும், எழுத்தாளனின் அரசியலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்குவது.
எழுத்தாளனின் அரசியல் என்பது உறுதியான சார்புநிலை கொண்டதாக இருக்கமுடியாது. அது ஒருவகையில் பாமரர்களின் அரசியலுக்கு அணுக்கமானது. உள்ளுணர்வு, உணர்வுநிலைகள் சார்ந்தது. அது ‘சரியான’தாக இருக்கவேண்டுமென்பதில்லை. இயல்பானதாக, நேர்மையானதாக இருந்தால்போதும்.
அதை மீளமீள விளக்கிக்கொண்டே இருக்கிறேன். அவற்றை வெட்டி காலத்தில் நீடிக்கும் தன்மைகொண்ட விவாதங்களை மட்டும் எடுத்து தொகுக்கவேண்டும். பார்ப்போம்.
ஜெ
ரம்யாவின் ‘நீலத்தாவணி’ கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ரம்யா எழுதிய நீலத்தாவணி அழகான கதை. நீங்கள் சொல்வதுபோல மிகச்சிறிய விஷயத்தில் மிகமுக்கியமான ஒரு விஷயம் முனைகொள்வதனால் அழகாக வந்துள்ள கதை.ரம்யா தொடர்ந்து எழுதவேண்டும்.
தொடக்கநிலை கதையாசிரியர்கள் கவனிக்கவேண்டிய ஒன்று உண்டு. சரளமான இயல்பான உரையாடல்கள் கதைக்கு அவசியமானவை. ஆனால் அவை கூடவே சுவாரசியமாகவும் இருக்கவேண்டும். அழகும் வேடிக்கையும் ஏதோ ஒன்று இருக்கவேண்டும். அவை இரண்டும் இல்லாமல் சும்மா வாழ்க்கையில் நடப்பதுபோன்ற சாதாரணமான உரையாடலுக்கு கதையில் இடமில்லை. அதாவது சகஜமாகவும் இருக்கவேண்டும். அதில் ஒரு தனியழகும் இருக்கவேண்டும். இயல்பாக இருப்பது ஒரு பாவனைதான். இயல்பான உரையாடலுக்கு இலக்கியத்திலே இடமில்லை. தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, நீங்கள் ஆகியோர் கதையில் சாதித்தது அந்த உரையாடல் அழகைத்தான்
கே.வெற்றிவேல்
***
அன்புள்ள ஜெ
இரம்யா எழுதிய நீலத்தாவாணி கதைக்கான சுட்டியை தளத்தில் பார்த்தேன். மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. கதை எழுத போகிறேன், அது உங்களை தானாக வந்தடைய வேண்டும் என நினைக்கிறேன் என்று ஒரு கடிதத்தில் கூறியிருந்தாள். முதல் கதையிலேயே அது நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வளரிளம் பெண் தன்னை வகுத்து கொள்ளும் புள்ளி. ஆம் நீங்கள் சொல்வது உண்மை தான். அவளது மனம் முழுக்க நீங்கள் சொல்வது நானல்ல என்று தன்னை தனக்கென்று முன்வைக்க முயல்வது கதை நெடுக வருகிறது. இந்த கதையில் பிடித்ததே முதல் கதைக்குண்டான எந்த பிசிறும் இல்லாமல் வாழ்க்கையின் நுண்ணிய தருணத்தை அழகாக வெளிப்படுத்தியது தான்.
கீழ்வருவன அன்று நேரடியாக அக்காவுக்கே எழுதிய கடிதம். ஒருவித வாசிப்பு கோணம் உங்கள் பார்வைக்கு,
நீலத்தாவாணி கதையை வாசித்து விட்டேன். முதல் கதைக்கு வாழ்த்துகள். தேர்ந்த சிறுகதையாக வந்துள்ளது. உரையாடலில் பிசிறுகள் இல்லாமல், ஆற்றோழுக்கான நடையில் நல்ல கதை கருவுடன் ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கு உண்டான தடைகளின்றி அமைந்துள்ளது சிறப்பு.
நீலத்தாவாணியை வயதடைதல் வகைமையில் தாய்க்கும் மகளுக்குமான நுண்ணிய ஊடாட்டத்தை சொல்லும் கதையாக காண்கிறேன். இன்னொரு கோணமாக கன்னியாகையில் பெண் உணரும் சேயும் தாயுமான இரு நிலைகளை கச்சிதமாக வெளி கொண்டு வந்துள்ளது. பாண்டி பஜாரில் இந்துவின் கைப்பிடித்து நடக்கையில் சிறுமியாகவும் பாட்டிக்கு முதுகு தேய்த்து விடுகையில் அவள் கனிவின் வழியாக தாயாகவும் தென்படுகிறாள். இடையில் தாவாணி கட்டி முறை பையனிடம் தன்னை காட்டி கொள்ளும் கன்னியாகவும்.
பாட்டியிடம் நிகழும் உரையாடலில் சென்ற கால ஒழுக்க நெறிகளும் நடைமுறையும் கொள்ளும் மோதலும் தெளிவாக துலங்கி வருகிறது. அதில் ஆண்களின் பங்கு நுட்பமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. வளராத சிறுமியாக பெண்ணை வைத்து கொள்ளும் வரை தான் தாய்க்கு உள்ள முதன்மையிடம் என்பது.
மோனாவின் துள்ளலும் துடிப்பும் எல்லையை தாண்டும் வேகமும் சிறப்பாக அமைந்து முழுமை கொள்கிறது கதை. இளம்பெண்ணுக்கும் தாய்க்குமான நுண்புள்ளி ஒன்றை எளிய நேரடியான கதைக்கூறலின் வழி காட்சிப்படுத்திய அழகான கதை.
அன்புடன்
சக்திவேல்
***
April 13, 2022
மன்னிக்காதே நெல்லி
Ilustration for the novel The Insulted and Humiliated by Nikoly Karazinகோணங்கி வெளியிட்ட கல்குதிரை தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழில் நான் எழுதிய கட்டுரை, மன்னிக்காதே நெல்லி. 1992 வெளிவந்தது. தஸ்தயேவ்ஸ்கியின் அதிகம் பேசப்படாத நாவலான The Insulted and Humiliated லில் வரும் ஒரு கதாபாத்திரம் நெல்லி. அது அவருடைய தொடக்ககால நாவல். கச்சிதமான வடிவம் கொண்டது. அதில் அவர் பின்னாளில் உருவாக்கிய அத்தனை கதாபாத்திரங்களுக்கும் மூலவடிவம் எப்படி திகழ்ந்தது என இக்கட்டுரையில் பேசியிருக்கிறேன். கனலி தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழிலிருந்து.
மன்னிக்காதே நெல்லிJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers



