இஸ்லாமியக் கடைகளுக்குத் தடை?

அன்புள்ள ஜெயமோக்ன் அவர்களுக்கு,

வணக்கம்.

ஹிஜாப் விஷயத்தில். எப்படி லிபரல்கள் ஹிஜாபை ஆதரித்தார்கள் என்றும், அது எப்படி பாஜகவுக்கே ஆதரவாக மாறுச்சின்னும் எழுதியிருந்தீர்கள்.

இப்போது கர்நாடகாவில், இஸ்லாமியர்களின் தொழில்களைப் புறக்கணிக்க வேண்டும் என இந்துத்துவக் குரல்கள் எழுந்திருக்கின்றன. இது ஏற்கனவே வரலாற்றில் நடந்த  இன அழிப்பு யுக்தியின் காப்பி என எழுதலாம்னு யோசிச்சேன்.. ஆனா, அதை எழுதி, மேலும் இந்துக்கள் பாஜகவை ஆதரித்து விடும் அபாயம் இருப்பதால், உங்களுக்கே  எழுதிரலாம்னு முடிவெடுத்தேன்

நீங்களே சொல்லுங்கள். இந்துத்துவர்கள் சொல்வது போல, இஸ்லாமியர்களின் தொழில்களை  இந்துக்கள் புறக்கணிக்க வேண்டுமா?  இந்துத்துவர்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?

அன்புடன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி.

அன்புள்ள பாலா,

உங்களை சென்ற சில ஆண்டுகளாகக் கூர்ந்து கவனித்து வருகிறேன். முகநூல் ஒருவரை என்ன செய்யும் என்பதற்கான இரண்டு சிறந்த உதாரணங்கள் நீங்கள் ஒன்று, இன்னொருவர் பி.ஏ.கிருஷ்ணன்.

முகநூலில் சீண்டும் விவாதங்கள் நிகழ்கின்றன. ஒத்தகருத்துள்ளோர் அணிசேர்கிறார்கள். அதன்பின் நிகழ்பவை அணிசேர்ந்த தாக்குதல்கள். நையாண்டிகள், குதர்க்கங்கள் வழியாக எதிர்தரப்பை மட்டம்தட்டுதல். தன் கருத்தை எவ்வகையிலேனும் மறுக்கும், ஐயப்படும் எவரையும் எதிரியாக்கி ஏளனம் செய்ய ஆரம்பித்துவிடுதல்.

நானறிந்த பி.ஏ.கிருஷ்ணன் அபாரமான நகைச்சுவை உணர்ச்சிகொண்டவர். மரபிலக்கியமும்,நவீன இலக்கியமும் பயின்றவர். மனிதநேயம் நிறைந்தவர். இணையத்தில் பரவலாக நம் நண்பர்கள் அறிந்திருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் வேறொரு ஆளுமை.

இன்று நீங்களும் அப்படித்தான் ஆகியிருக்கிறீர்கள். இன்றைய காந்திகள் எழுதிய பாலசுப்ரமணியம் முத்துசாமி அல்ல நீங்கள். முழுக்கமுழுக்க எதிர்மறையுணர்வுகள் நிறைந்த, கசப்பு மண்டிய இன்னொரு மனிதர். இது எல்லாருக்கும் ஓர் எச்சரிக்கை என நினைக்கிறேன்.

நான் பொதுவாக என் தளத்தில் இதைப்போன்ற ‘புத்திசாலித்தனங்கள்’, கசப்புகள், அதன் விளைவான நையாண்டிகளுக்கு இடமளிப்பதில்லை. அவைதான் முகநூல் முழுக்க நிரம்பி வழிகின்றன. இந்த தளம் முன்வைக்க விரும்புவது வேறொரு மனநிலையை.

*

முகநூலின் ’நானே புத்திசாலி, நானே சரியானவன்’ என்னும் மனநிலையில் இருந்து வெளியே நிற்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் நான் சொல்வது புரியும்.

ஹிஜாப், புர்க்கா போன்றவை மதஅடையாளங்கள். அந்த மதத்தின் இயல்பான அடையாளங்கள்கூட அல்ல. அந்த மதத்தை அடிப்படைவாதத்திலும் ஆசாரங்களிலும் கட்டிப்போட நினைப்பவர்களால் முன்வைக்கப்படுபவை, அச்சமூகம் மீது சென்ற இருபதாண்டுகளாக வன்முறை மற்றும் மிரட்டல் வழியாக சுமத்தப்படுபவை. உலகம் முழுக்க அந்த அடையாளத்தை முன்வைத்து வலியுறுத்துவதன் வழியாக தங்களை விலக்கிக்கொள்ள, பொதுச்சமூகத்தில் இருந்து நேர் எதிராக தங்களை வைத்துக்கொள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முயல்கிறார்கள். அச்சமூகத்தை அத்திசைநோக்கி கொண்டுசெல்கிறார்கள். அந்த மதத்திலேயே அதற்கு எதிராக நிலைகொள்ளும் முற்போக்கினர் உண்டு, பெண்விடுதலைபேசுபவர்கள் உண்டு.

இஸ்லாம் மீதான இந்துத்துவர் தாக்குதல்களை காரணம் காட்டி அந்த தீவிர மத அடையாளங்களை ’முற்போக்கினர்’ ஆதரிப்பதும், அதையே இஸ்லாமியரின் அடையாளமாகக் காட்டுவதும், இஸ்லாமியர் அனைவரையும் அடிப்படைவாதம் நோக்கி தள்ளிவிடுவதுதான். முற்போக்குப் பார்வைகொண்ட இஸ்லாமியர்களை அவமதித்து அவர்களையும் அடிப்படைவாதம் நோக்கி உந்துவது அது.

அதையே இந்துத்துவர் எதிர்பார்க்கிறார்கள். இஸ்லாமியர் தங்கள் தீவிர மத அடையாளத்தை முன்வைக்கும்தோறும் அதைச் சுட்டிக்காட்டி, இந்துக்களை தீவிர மறுபக்கம் இந்து அடையாளம் நோக்கி குவிக்க அவர்களால் இயலும். லிபரல்களை இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று காட்ட இயலும். இது ஒன்றாம் வகுப்புப் பாடம். கண்கூடான நடைமுறை உண்மை. முகநூல் குதர்க்கத்தால் மட்டுமே இதை புரிந்துகொள்ள முடியாது.

இஸ்லாமியர் எந்த அளவுக்கு தங்களை இந்தியாவின் பொதுச்சமூகத்துடன், பொதுச்சமூகத்திலுள்ள நடுநிலையான மக்களுடன், முற்போக்குத் தரப்புடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கே இந்தப்போரில் அவர்கள் வெல்ல முடியும். மதவெறியர்களை நோக்கிச் செல்லுந்தோறும் அவர்கள் தோற்கிறார்கள்.

இஸ்லாமியர்களிடமிருந்து மத அடையாளத்துடன் பேசாமல் தேசியநோக்குடன், சமூக நோக்குடன், அனைவருக்குமாகப் பேசும் லிபரல் தலைவர்கள் சிலர் உருவாகி வந்தால் மட்டுமே அவர்கள் மீதான மதத்தாக்குதல்களை ஜனநாயகரீதியாக எதிர்கொள்ள முடியும். அவர்களிடமிருந்து மதவெறியை முன்வைக்கும் தலைவர்கள் எழுந்து வந்தால் அது மதமோதல்களை மட்டுமே உருவாக்கும். அதன் லாபம் இந்துத்துவ அரசியலுக்கே. அத்தகைய தலைவர்கள் அங்கிருந்து உருவாகி வர லிபரல்கள் முயலவேண்டுமே ஒழிய அங்கிருக்கும் மதவெறியர்களை லிபரல்கள் முன்வைக்கலாகாது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவாதத் தாக்குதல் நிகழ்கையில் அவர்கள் தங்களை இந்தியர், தமிழர், பொதுக்குடிகள், அனைவருக்கும் உரிய வாழ்வுரிமை கொண்டவர்கள் என முன்வைப்பதொன்றே நடைமுறை அரசியல் காட்டும் வழி. மாறாக இஸ்லாமிய மதவெறியர்களை தங்கள் முகங்களாக மேடையேற்றிப் பேசவிடுவது அழிவுப்பாதை.

ஹிஜாப் தொடர்பான விவாதங்களில் தமிழகத்தில் இந்துக்களிலேயே நடுநிலையான பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாமியர்களின் உரிமைகளை ஆதரித்தனர்.லிபரல்கள் ‘நாங்களும் புர்க்கா போடுவோம்’ என ஆர்ப்பரித்தனர்.அந்த புர்க்கா ஆதரவுக் கோஷமெல்லாம் ஏன் இரண்டு வாரம்கூட நீடிக்கவில்லை? உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர்கூட பொது அரசியல்கட்சிகள் ஏன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை? ஏன் அந்த அமைதி?

ஏனென்றால் தமிழகமெங்கும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் இஸ்லாமிய மதவெறியர்கள் பேசிய பேச்சுக்கள் ஓரிரு வாரங்களில் அத்தனை ஆதரவு மனநிலையையும் இல்லாமலாக்கிவிட்டன என்பது கண்கூடு. தி.மு.க, இடதுசாரிகள் உட்பட அத்தனை அரசியல்வாதிகளும் அப்படியே பின்வாங்கி அமைதியாகிவிட்டது அதனால்தான். இந்த கொட்டை எழுத்துச் செய்தியைக்கூட நம் முகநூல் லிபரல்களால் வாசிக்கமுடியவில்லை என்பதனால்தான் அது ஒரு மனநோய்வட்டம் என்கிறேன்.

இஸ்லாமியக் கடைகளை புறக்கணிப்போம் என்னும் மதவெறிக் கூச்சல் ஓர் அரசியல் உத்தி. மதவெறியை அரசியலுக்கு பயன்படுத்தும் சூழ்ச்சி. அதை எதிர்கொள்ளவேண்டிய வழி இந்தியக்குடிமக்களாக, அத்தனை குடிமக்களுக்குரிய உரிமைகளும் கொண்டவர்களாக, அமைதியையும் வளர்ச்சியையும் நாடும் இந்தியப் பெரும்பான்மை மக்களில் பிரிக்கமுடியாத ஒருபக்தியாக தங்களை இஸ்லாமியர் உணர்வதும் முன்வைப்பதுமே.

நான் இஸ்லாமியர் கடைகளிலேயே பெரும்பாலும் பொருளை வாங்குகிறேன். இனியும் அப்படித்தான். அவர்கள் இஸ்லாமியர் என்பதனால் அல்ல, அவர்கள்  ஒப்புநோக்க நல்ல வியாபாரிகள் என்பதனால், வீட்டுக்கே கொண்டுவந்து தருவதனால். அது என் உரிமை. முன்வைக்கவேண்டியது இதைத்தான்.

அதற்குப் பதிலாக அத்தனை இஸ்லாமியக் கடைகளிலும் பச்சைக்கொடி ஏற்றி, நாரே தக்பீர் என்று கூச்சலிடவேண்டும் என்று அவர்களில் ஒரு தீவிரவாதத் தரப்பு சொன்னால்; உடனே இங்குள்ள முற்போக்கினர் கொஞ்சபேர் பச்சைக்கொடியுடன் இஸ்லாமியர் கடைகளுக்கு முன் சென்று நின்று தாங்களும் அதே கூச்சலை எழுப்பினால் அது அழிவுப்பாதை. இஸ்லாமியரை தங்கள் சழக்குப்புத்தியால் குழிதோண்டிப்புதைக்கிறார்கள் லிபரல்கள் என்று பொருள்.

மற்றவர்களுக்கு தெளிவாகியிருக்கும். உங்களுக்கு இனிமேல் இந்த எந்த தர்க்கமும் புரியாது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.