Jeyamohan's Blog, page 791
April 21, 2022
நற்றுணை கலந்துரையாடல்.
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்
‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு வரும் ஞாயிறு, ஏப்ரல் 24 ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். இந்த அமர்வு நேரடி சந்திப்பாக வடபழனி சத்யானந்தா யோகா மையத்தில் நிகழவுள்ளது.
எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக நம்முடன் கலந்துகொள்கிறார்.
“உயிர் வளர்க்கும் திருமந்திரம்” புத்தகங்கள் சார்ந்து உரையாற்றுகிறார். அதன்பின் நண்பர்களுடனான கலந்துரையாடல் நிகழும்.
கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களின் புத்தகங்கள்
உயிர் வளர்க்கும் திருமந்திரம்இரு பாகங்கள் – ( பதிப்பகம் :- ஹிந்து தமிழ்திசை)
நட்ட கல்லைத் தெய்வமென்று – (பதிப்பகம்:- தமிழினி பதிப்பகம் )ஆறுமுகத்தமிழன் அவர்களின் கட்டுரைகள்
கலந்துரையாடல் நிகழும் இடம்:-
Satyananda Yoga -Centre
11/15, south perumal Koil 1st Street
Vadapalani – Chennai- 26
Contact:- +919965315137 / +919962524098 /9043195217
இந்த சந்திப்பிற்கு Zoom மூலமாக ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
இது வழக்கம் போலவே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் இந்த புத்தகங்கள் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.
அன்புடன்,
நற்றுணை
April 20, 2022
பிழைகளும் வாசிப்பும்
பின் தொடரும் நிழலின் குரல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பல வருடங்களாக உங்களை தினமும் தொடர்பவன் என்றாலும் இது என் முதல் கடிதம். ஒரு விரிவான கடிதத்திற்கு உத்தேசித்து தயங்கியபடியே சென்றுவிட்டது. இது வேறு ஒரு ஐயம் சம்பந்தமாக. சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். பின் தொடரும் நிழலின் குரல் முதல் முறை படித்தபோது, ஒரு ஐயம் எழுந்தது.
அதன் கடைசி கடிதத்தில், நீங்கள் அருணாச்சலத்திற்கு எழுதும்போது, லிங்கம் ஆவுடை ஒப்பீடு நினைவுகூறப்படுகிறது. அருணாச்சலம் கதிருக்கு எழுதிய கடிதம், கதையில் நீங்கள் கதிருடன் சம்பந்தப்படாதபோது, உங்களுக்கு எப்படி தெரியவரும். ஏனெனில் அக்கடிதத்தில்தான் அருணாச்சலம் அந்த ஒப்பீட்டை சொல்கிறான். அவ்வளவு பெரிய நாவலில் சொல்வதற்கு ஏதுமற்று, இந்த பிழையை (அல்லது ஐயத்தை) எழுதிக்கேட்கும் அபத்தத்தை தவிர்க்கவே முயன்றேன். ஆனால் அதன் மறுபதிப்பு இப்போது வரவிருப்பதால் இக்கடிதம்.
என்னுடைய புரிதல் பிழை என்றாலோ அல்லது இது தாமதமான கடிதம் என்றாலோ தயவுசெய்து மன்னிக்கவும்!
அன்புடன்,
சுரேந்திரன்
சென்னை-81
***
அன்புள்ள சுரேந்திரன்,
நான் எப்போதுமே சொல்லி வருவது ஒன்றுண்டு. ஓர் இலக்கியப்படைப்பு ‘பிழை’கள் அற்றதாக இருக்க முடியாது. கவனப்பிழைகள் இருக்கும். தட்டச்சுப்பிழைகள், நினைவுப்பிழைகள் போன்றவை. அவற்றில் பெரும்பகுதி பிழைதிருத்துநர்களால் சரிசெய்யப்படும். அவற்றை மீறியும் பல பிழைகள் இருக்கும். அப்பிழைகள் ஆசிரியரின் அந்த குறிப்பிட்ட படைப்புநிலையால் உருவாக்கப்படுபவை. ஓர் ஆறு அது செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் செல்வதாக ஒரு புனைவில் எழுதப்படலாம். ஒரு மலையின் அமைப்பு வேறுவகையில் இருப்பதாக எழுதப்படலாம். அதேபோல பல பிழைகள். இவற்றை படைப்பூக்கம் சார்ந்த பிழைகள் என விமர்சகர் வரையறை செய்கிறார்கள். (நல்ல பிழைதிருத்துநர் இவற்றை திருத்த மாட்டார்.)
இவை இடைவெளிகள் அல்லது விரிசல்கள் (Gaps) என்று விமர்சனத்தில் சொல்லப்படுகின்றன. தெரிதா முதல் வுல்ஃப்காங் ஈசர் வரை பலர் இதைப்பற்றிப் பேசியுள்ளனர். படைப்பில் வெளிப்படும் ஆசிரியரின் மனநிலையையும், படைப்பை உருவாக்கும் மனநிலையையும் வாசகன் கண்டறிய வழியளிப்பவை இந்த இடைவெளிகள் அல்லது விரிசல்கள். படைப்பிலுள்ள இடைவெளிகளை நிரப்புபவனே வாசகன். படைப்பில் அதன் கட்டமைப்பில் ஆசிரியன் அறிந்து உருவாக்கும் இடைவெளிகளைப்போலவே அறியாது விழும் இடைவெளிகளும் முக்கியமானவை. அவற்றுக்கான பதில்களை வாசகன் அப்படைப்பைக்கொண்டு உருவாக்கவேண்டும். அதன்பெயர்தான் படைப்பூக்க வாசிப்பு.
ஆகவே ஒரு படைப்பில் பிழை கண்டுபிடித்து ஆசிரியனிடம் சொல்பவன் நல்ல வாசகன் அல்ல. அது வாசகனின் சீண்டப்பட்ட ஆணவம் மட்டுமே. நானும் அறிவாளிதான் என அவன் ஆசிரியனிடம் சொல்கிறான். ஆசிரியனை விட தான் ஒரு படி மேல் என நினைத்து ஒரு வகை களிப்பை அடைகிறான். அந்த மனநிலை வந்துவிட்டால் பிழைகண்டுபிடிக்கும் கண் மட்டுமே அமையும், கற்பனை அமையாது. கற்பனையே இலக்கியத்தை வாசிப்பதற்குரிய முதற்தகுதி. அந்த ‘நோண்டும்’ மனநிலை ஆழ வேரூன்றிவிட்டதென்றால் எல்லாமே பிழையென தெரியும். ஆணவத்தை முன்வைத்து படைப்பை வாசிப்பதென்பது இரும்புக்கவசம் போட்டுக்கொண்டு பாலுறவு கொள்வதுபோல. நீங்கள் புணர்வது உங்களுடைய சொந்த இரும்புக்கவசத்தை மட்டும்தான்.
மேலும், ஓர் ஆசிரியன் அவன் எழுதியவற்றை பாதுகாத்து நின்றிருக்கவேண்டிய பொறுப்பு கொண்டவன் அல்ல. அவன் எழுதும்போதிருந்த மனநிலை எழுதி முடித்ததுமே நீங்கிவிடும். பலசமயம் அந்தப்படைப்புக்கும் அவனுக்கும் நெருக்கமே இருக்காது. மீண்டும் படிக்கவும் முடியாது. ஜெயகாந்தன் சொன்னதுபோல ‘செக்ஸ் வைத்துக்கொண்டதற்காக பிள்ளைகள் செய்யும் எல்லாவற்றுக்கும் அப்பன் பொறுப்பேற்கமுடியுமா?’ என்று கேட்கலாம். நான் அப்படிக் கேட்கமாட்டேன். ‘எந்த அளவுக்கு குறையிருக்கோ அந்தளவுக்கு குறைச்சுங்கங்க மகராஜா’ என்று தருமி மாதிரி சொல்லிவிடுவேன்.
*
நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் ’பிழை’யை (உண்மையில் அப்படி ஒன்று இருதால்) ஓர் எளிய வாசகன் மிக எளிதாக இப்படி விளக்கிக்கொள்வான். ஒரு நாவலில் சொல்லப்படுவன அச்சூழலில் நிகழ்ந்தவற்றின் ஒரு பகுதிதான். சொல்லப்படாதவையும் பல நிகழ்ந்திருக்கும். அருணாச்சலம் எஸ்.எம்.ராமசாமியிடம் பேசும்போது அதைச் சொல்லியிருக்கலாம். பலரிடம் சொல்லியிருக்கலாம். அந்தச் சொற்சூழலில் ஜெயமோகன் இருக்கிறான், அவன் காதில் விழுந்திருக்கலாம்.
மெட்டாஃபிக்ஷன் என்னும் மீபுனைவு என்பது என்ன என்று அறிந்த வாசகன் மேலதிகமாக ஒன்றை புரிந்துகொள்வான். அந்நாவலுக்குள் அதன் ஆசிரியனும் வருகிறான். அந்த ஆசிரியன் எழுதியதே அந்நாவல். அதாவது, எஸ்.எம்.ராமசாமிக்கு எழுதும் கடிதத்திலேயே தான் நாவல் எழுதப்போவதாகச் சொல்கிறான் ஜெயமோகன். அந்நாவல்தான் பின் தொடரும் நிழலின் குரல்.
அதாவது அந்நாவலின் முதல் வரி அந்நாவலின் நிகழ்வுகள் முடிந்த பின் எழுதப்பட்டது. அருணாச்சலத்தின் வாழ்க்கை, அவனும் நாகம்மையும் கொண்ட அந்தரங்க உரையாடல்கள் உட்பட எல்லாமே ஜெயமோகன் எழுதிய நாவலில் வருவனதான். அருணாச்சலம் எழுதியதாக பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் கடிதங்கள், வீரபத்ரபிள்ளையின் குறிப்புகள் எல்லாமே ஜெயமோகன் எழுதியவைதான். ஒரு படைப்பு தன்னையே தான் எழுதுவதற்குப் பெயர்தான் மீபுனைவு. விஷ்ணுபுரம் நாவலும் இந்த அமைப்பு கொண்டது. வெண்முரசு நாவல் தொடரில் ஓரளவு இந்த உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.
*
நாவல் எனும் கலைவடிவை புரிந்து கொள்வது சார்ந்த கேள்வி. ஒரு குறிப்பிட்ட சிந்தனை அல்லது அது சார்ந்த ஒரு படிமம் ஒரே வாழ்க்கைச்சூழலில், ஒரே உணர்வுச்சூழலில், ஒரே சிந்தனைச்சூழலில் வாழும் ஒருவரோடொருவர் சம்பந்தமற்ற பலர் உள்ளத்தில் எழுவதை நீங்கள் இதற்கு முன் கண்டதோ கேட்டதோ இல்லையா? நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பதை அதே சொற்களில் சம்பந்தமில்லாத ஒருவர் சொல்லிக் கேட்கும் திடுக்கிடல் நிகழ்ந்ததே இல்லையா? நுண்ணுணர்வுள்ள எவருக்கும் அத்தகைய அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்.
உலக இலக்கியத்தில் இந்தச் சந்தர்ப்பம், ஒரு கதைக்களத்தில் பலர் ஒரே படிமத்தை திரும்பத் திரும்பச் சொல்லி அதை வளர்த்துக் கொண்டுசெல்லுதல், ஓர் இலக்கிய உத்தியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தமில்லாதவர்கள் ஒரே கனவை காண்பதும் பலமுறை பயன்படுத்தப்பட்ட ஓர் உத்தியே.
பின்தொடரும் நிழலின் குரலில் அந்தப் படிமம் நாவலின் மிக அடிப்படையான ஒன்று. அப்படிமம் மிகுந்த பிரக்ஞையுடன் மூன்று கோணங்களில் மூவரால் சொல்லப்படுவதாக எழுதப்பட்டுள்ளது. (நீங்கள் வாசித்தது இருவர் சொல்வதை மட்டுமே) அதேபோல இன்னும் இரண்டு படிமங்களும் வெவ்வேறு மனிதர்களால் சொல்லப்படுகின்றன.
*
கடைசியாக, ஒரு நாவலை வாசிப்பவர் கூர்ந்து வாசிக்கும் பொறுப்பை கொண்டிருக்கிறார். அதன்மேல் ஒரு விவாதத்தை முன்னெடுப்பவர் குறைந்தபட்சம் அந்த விவாதத்தை முன்வைக்கத் தேவையானவற்றையாவது முழுமையாக வாசிக்க கடமைப்பட்டிருக்கிறார். மேலோட்டமான, கவனமற்ற வாசிப்பின் விளைவாக பிழை சுட்டிக்காட்டுபவர்கள்தான் எனக்கு வாரம் ஒரு கடிதமாவது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒரு சாரார் அவர்களின் வாசிப்புப் போதாமையை நான் சுட்டிக்காட்டினால் சீற்றம் கொள்வதுண்டு. அந்த விவாதத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்ததற்கு தாவுவார்கள். ஒரு பிழையை தெளிவுசெய்தால் ஐந்து பிழைகளை கண்டுபிடித்து வந்து நிற்பார்கள். விஷ்ணுபுரம் வெளிவந்த போது சுட்டிக்காட்டப்பட்ட ’பிழைகள்’ எல்லாவற்றுக்கும் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தேன். கோவை ஞானிதான் அது எழுத்தாளனின் வேலை அல்ல, அவன் எழுதப்பட்டவற்றை விளக்கும் பொறுப்பையும் ஏற்கமுடியாது என்றார். அதிலிருந்து இப்படிப்பட்ட பிழைசுட்டல்களில் சாரமில்லை என்றால் கண்டுகொள்வதில்லை.
ஆகவே ஏதேனும் ஒரு பிழைக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால் அதை நான் பொருட்படுத்தும் தகுதி கொண்டதாக நினைக்கவில்லை என்று பொருள். பொதுவாக வாசகர்கள் அறிந்தாகவேண்டிய ஏதேனும் சில அடிப்படைகளைப் பேசவேண்டும் என்றால் விளக்கம் அளிப்பேன். இது அத்தகைய விளக்கம். முறையான வரலாற்று- தத்துவ- அழகியல் விளக்கம் அளிக்கப்பட்டபின்னரும் சலம்பிக்கொண்டிருக்கும் வம்பர்களை முற்றாக விலக்கியும் இருக்கிறேன்.
உங்கள் வாசிப்பின் போதாமை என்ன? லிங்கம்– ஆவுடை பற்றிய உருவகம் முதலில் வருவது வீரபத்ரபிள்ளை குறிப்புகளில். அதன்பின் கதிருக்கு அருணாச்சலம் எழுதிய கடிதத்தில். அதன்பின் ஜெயமோகன் எஸ்.எம்.ராமசாமிக்கு எழுதிய கடிதத்தில். அக்கடிதத்தில் ஜெயமோகன் வீரபத்ரபிள்ளை எழுதிய குறிப்புகள், தனிப்பட்ட கடிதங்கள் உட்பட அனைத்தையும் படித்து அவற்றில் சிலவற்றை தன் நாவலில் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறான் (அந்நாவல்தான் பின் தொடரும் நிழலின் குரல்)
“அவன் என் கைப்பிரதிகளைக் கேட்டு எழுதியிருக்கிறான். இதை ஒரு நாவலாக ஆக்க விரும்புகிறான். இந்நாவலை எவர் படிப்பார்கள்?” என்று அருணாச்சலம் தன் கடிதத்தில் சொல்கிறான். “இன்று கைப்பிரதிகளை அந்த எழுத்தாளனுக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் ஒன்று மட்டும் நிபந்தனை விதித்தேன். தலைப்பு நான் சூட்டுவதுதான். பின்தொடரும் நிழலின் குரல்” என்கிறான்.
எஸ்.எம்.ராமசாமிக்கு அருணாச்சலம் எழுதிய கடிதத்தில் அருணாச்சலம் எஸ்.எம்.ராமசாமிக்கு எழுதிய கடிதத்தில் ஆவுடை பற்றிய குறிப்பு இருப்பதாக ஜெயமோகன் சொல்கிறான். வீரபத்ரபிள்ளை குறிப்புகளுக்கு மேலதிகமாக அருணாச்சலம் எஸ்.எம்.ராமசாமிக்கு எழுதிய கடிதத்திலும் ஆவுடை பற்றி சொல்லியிருந்ததை ஜெயமோகன் வாசித்திருக்கிறான் என அது காட்டுகிறது. ஏனென்றால் அது அருணாசலம் அடைந்த தரிசனம்.
இந்த ‘பிழை’கண்டுபிடிப்பை நிகழ்த்தியதுமே நீங்கள் கொஞ்சம் முயன்று ஆவுடை- லிங்கம் பற்றி எங்கெல்லாம் நாவலில் வருகிறது என்று பார்த்திருந்தாலே விரிவான தர்க்கத்தொடர்புடன் மட்டுமே இதெல்லாம் அமைந்திருப்பதை கண்டிருக்கலாம்.
ஜெ
***
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்
பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள நெருக்கத்தைப்பற்றிய சித்திரத்தை அளிக்கும் ஒரு கவிதை அழகான அனுபவம். இக்கவிதைகளை மூன்று காட்சிகளின் தொகுப்பாக ஆனந்த்குமார் பின்னியிருக்கிறார்.
பலப்பழத்தின் மணம் – பாவண்ணன்
பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள நெருக்கத்தைப்பற்றிய சித்திரத்தை அளிக்கும் ஒரு கவிதை அழகான அனுபவம். இக்கவிதைகளை மூன்று காட்சிகளின் தொகுப்பாக ஆனந்த்குமார் பின்னியிருக்கிறார்.
சந்தையில் சுவிசேஷம்-கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இந்த ’திரள்’ விவாதங்களை கொஞ்சம் அலுப்புடன் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள் ரவுடித்தனம் காட்டுவதனால் படிக்கவரும் ஏழை மாணவர்கள் படிக்க முடியாமலாகிறது, அந்த படிக்கவரும் மாணவர்களுக்கு மட்டும் தனியாக கற்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என ஒரு கட்டுரை எழுதுகிறீர்கள். பூடகமாக எல்லாம் கிடையாது. தெள்ளத்தெளிவாக. ஆனால் அரசுப்பள்ளி மாணவர்கள் எல்லாரும் ரவுடிகள் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் படிக்கத்தேவையில்லை என்று சொல்லிவிட்டீர்கள் என்று பயங்கரக் கூச்சல் போட்டார்கள், போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கீழடி உலகத்திலேயே தொன்மையான நாகரீகம் என்று சொல்லப்பட்டபோது இல்லையே, அரசே 2100 ஆண்டுகள் இருக்கலாம் என்றுதானே சொல்கிறது, அதைவிட தொன்மையான நாகரீகச் சான்றுகள் இந்தியா முழுக்க இருக்கின்றனவே என்றும், உலகில் இந்தியாவை விட மிகத்தொன்மையான நாகரீங்கள் பல உண்டு என்றும் சொல்கிறீர்கள். உடனே கீழடி தொன்மையான நாகரீகமே கிடையாது என்று சொல்லிவிட்டீர்கள் என்று கூச்சலிடுகிறார்கள். வசைபாடுகிறார்கள்.
தமிழில் சங்க இலக்கியம் பல்லவர்காலத்தைய கற்பனை, சங்க காலத்துக்கு தொல்லியல் சான்றுகள் இல்லை என்று வெள்ளைய ஆய்வாளர் சொன்னார்கள் என்றும் அதை நாகசாமியும் ஐராவதமும் எப்படி சர்வதேச அரங்கில் ஆதாரபூர்வமாக 1970ல் முறியடித்தனர் என்றும் சொல்கிறீர்கள். அதை நீங்கள் சங்ககாலம் என்று ஒன்று கிடையாது என்று சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லி கூச்சலிடுகிறார்கள்.
ஒவ்வொரு விஷயத்திலும் இப்படி நீங்கள் சொன்னதற்குச் சம்பந்தமே இல்லாமல் வந்து லபோ திபோ என்று கூச்சலிடுகிறார்கள். இவர்களை மிகப்பெரிய திரிபாளர்கள் என்று நினைத்தேன். இப்படி யூடியூப் வீடியோ எல்லாம் போடும் ஒருவரைச் சந்தித்தேன். திகைப்பு. அவர் உண்மையிலேயே அவ்வாறுதான் புரிந்து வைத்திருக்கிறார். இத்தனைக்கும் உங்கள் பேட்டிகள், கட்டுரைகள் எல்லாம் பலமுறை பார்த்திருக்கிறார். உண்மையிலேயே அவ்வளவுதான் புரிகிறது.
அதை உணர்ந்ததும் ஒன்றுமே பேசத்தோன்றவில்லை.
கிருஷ்ணராஜ்
***
அன்புள்ள ஜெ,
அயோத்திதாசரின் இந்தியா சம்பந்தமான ஊகங்கள் முன்வைக்கப்பட்டபோது அதீதமான வரலாற்றும் தொல்லியலும் இங்கே பேசப்பட்டன. இத்தனைக்கும் அவர் முன்வைத்தது ஒரு ஊகம், ஒரு மாற்றுப்பார்வை. ஆனால் இவர்கள் சொல்லும் கதைகளுக்கு ஏது தொல்லியல் சான்று என்று கேட்டதுமே தமிழர்விரோதிப் பட்டம். வசை. அப்போது அயோத்திதாசரை வசைபாட வந்த எந்த அறிஞர்களும் வந்து ஒரு லட்சம் வருசம் பழைய நாகரீகம் கீழடி என்பவர்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. இதைத்தான் நாம் கவனிக்கவேண்டும்.
முருகன் ராமலிங்கம்
சந்தையில் சுவிசேஷம்-கடிதங்கள்கன்யாகுமரி கவிதை முகாம் – ஒரு கடிதம்
கன்யாகுமரி கவிதை முகாம் பற்றி வ.அதியமான் லக்ஷ்மி மணிவண்ணனுக்கு எழுதியிருக்கும் கடிதம்
அன்புடன் திரு லஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
தாங்கள் குடும்பத்தினருடன் நலமாய் இருக்க விழைகிறேன்.
நான் வ. அதியமான்
கன்னியாகுமரி கவிதை முகாம் நிறைத்து, பத்திரமாய் வீடு வந்து சேர்ந்தேன். எவ்வொரு நுண்கலை துறையில் நுழைய விரும்பும் முயற்சியாளர்களுக்கும், இது போன்ற முகாம்கள், பயிற்சி பட்டறைகள், முன்னோடிகளுடன் உரையாடல் சந்திப்புக்கள் ஆகியவைகளே மெய் ஆசிரியனாகவும், விழா நாட்களாகவும் அமைகின்றன. அப்படியான இரு தினங்களை வாய்க்க செய்தமைக்கு தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.
இது போன்ற சந்திப்புகளிலிருந்து திரட்டியெடுத்து நாம் கையோடு கொண்டுவரும் உளப்பதிவுகளே இதன் ஆகச்சிறந்த விளைவாய் நிற்கிறது. அப்படியான என் ஒரு சில நினைவுகளை தொகுத்துக் கொள்வதற்கான சிறிய கடிதம் இது.
16 ம் தேதி காலை ஐந்து மணிக்கே தங்களின் வரவேற்பு என்னுடைய சிறு சோர்வையெல்லாம் விரட்டி, மிகுந்த உற்சாகமான நாளாக அக்கணமே மாற்றியது. தங்கும் வசதிகளும் விருந்துணவும் மிகச் சிறந்த தரத்தில் அமைந்திருந்தது.
திரு விக்கி அண்ணாச்சி அவர்களின் பாதம் பணிந்து ஆசி வாங்கியது ஒரு செல்வம் என்றே மனதில் நிற்கிறது. இரு தினங்களும் அணுவளவும் ஆற்றல் குன்றாமல் அவர் ஆற்றிய தொடர் உரைகள் மெய்யாகவே சிலிர்ப்பாக இருந்தது.
தங்களின் முதல் அமர்வே புதியவர்களுக்கு மிக மிக நம்பிக்கை தரும் விதமாய் இருந்தது. தோல்வியுறும் கவிதைளில் அழகு இத்தலைப்பே புதியவர்களுக்கு ஆசுவாசம் கொடுக்கிறது
1 அடிப்படையான கவிதை நுண்ணுணர்வு கொண்ட ஒருவன் எத்துறையைச் சார்ந்தவனாக இருப்பினும் அத்துறையின் திறனாளர்களை காட்டிலும் ஒரு படி மேலானவனாகவே இருப்பான்
2 மானுட மனதினை அன்றலர்ந்த மலராய் வைத்திருக்க, நமக்கு கைவசமிருப்பது கவிதை ஒன்றே
3 எந்த கலைஞனும் முதலிலிருந்தே மிகச் சிறந்த படைப்புகளையே கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. நிறையும் குறையும் தோல்விகளும் கொண்ட படைப்புக்களின் ஊடாகவே தன் பயணத்தை தொடங்குகிறான்
4 தேர்ச்சி கொண்ட கலைஞர்களுமே, தொடர்ந்து உச்சமான படைப்புக்களை மட்டுமே கொடுப்பதென்பதும் சாத்தியமில்லை. அவர்களும் தோல்வியான சராசரியான படைப்புக்களை எழுதுவதன் ஊடாகத்தான் சிறந்த படைப்புகளையும் மிளிரச்செய்கிறார்கள்
5 ஒரு கவிதையின் பணி என்பது எளிய ஒற்றைப்படையானது அன்று. அது ஒரே சமயத்தில் பல்வேறு பணிகளைச் செய்தாக வேண்டி இருக்கிறது. கவிதையின் ஒரு சில பணிகளை கொண்டு மட்டுமே அது சிறந்த கவிதை என்றும் அப்பணியை ஆற்றவியலாத கவிதைகளை தோல்வியான கவிதை என்றும் அணுகுவது முதிர்ச்சியான ரசனை அல்ல. முழுமையான பார்வை அல்ல.
உதாரணமாய் அழகியல் அம்சத்தை மட்டும் வெற்றிகரமாய் நிறைவு செய்வதே ஒரு சிறந்த கவிதையின் பணி அல்ல. அழகியல் வெற்றி என்பது கவிதையின் பணிகளில் ஒன்று மட்டுமே.
மானுட ஆழ்மனதின் வாசல்களை திறந்துவிடும் கவிதைகள் உடனடி கவனத்தை பெறாவிடினும் அதுவே கவிதையின் ஆகச்சிறந்த உயரத்தை எட்டக் கூடியனவாக இருக்கிறது. உதாரணம் திரு கல்பற்றா நாராயணன் அவர்களின் ‘விதிப்பயன்’ என்ற கவிதை
6 எனவே கவிதைகளின் முதற்கட்ட வெற்றிகளோடு நின்று விடாமல் அதன் ஆகச்சிறந்த உயரங்களை நோக்கியே ஒரு கவிஞன் தொடர்ந்து பயணிக்க வேண்டும்
7 வாக் தேவி (கவிதையின் தேவதை) என்பவள், அவளாக வந்தமர்பவள். உங்களை அவளுக்கு பலி கொடுக்க முழுதாக ஒப்புக்கொடுக்கையில் மட்டுமே அவள் உங்களில் கனிந்து வந்தமர்கிறாள். முழுமையாய் ஒப்பு கொடுத்தல் ஒன்றே கலைக்குள் நுழைவதற்கான ஒரே வாசல்
என் ஊரான வந்தவாசிக்கு அருகே விழுப்புரத்திலிருக்கும் கவிஞர் திரு கண்டராதித்தன் அவர்களை இங்கே தான் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். மிக இனிய அனுபவமாக இருந்தது அவரின் அறிமுகமும் அவரது உரைகளும்.
திரு சபரிநாதன் அவர்களின் தமிழ் கவிதையின் போக்குகள் என்ற தலைப்பிலான உரை மிகச் சிறப்பாக இருந்தது. எதையுமே தவிர்க்கவியாலாத செறிவான உரை
1 எந்த ஒரு மாபெரும் கலைஞனாயினும் அவன் தான் வாழும் காலத்தின் சூழல், அரசியல், தத்துவ நிலைப்பாடுகள், விழுமியங்கள் ஆகியவற்றால் ஆன ஒரு சட்டகத்தின் ஊடாகத்தான் தன் படைப்புகளை படைத்தாக வேண்டி இருக்கிறது
திரு போகன் சங்கர் அவர்களின் அடுத்த அமர்வும் மிக அடிப்படையான கேள்விகளை எழுப்புவனவாக இருந்தன. அவரின் பகடியான உரையும் அதனூடாக கவிதை துறையில் விடுபட்டவற்றின் மீதான மெய்யான ஆதங்கமும் மிக குறிப்பிட தகுந்ததாக இருந்தது. அவரின் இரு நாள் பங்களிப்பு நிகழ்வின் தித்திப்பை பலமடங்கு கூட்டியது
1 கவி என்பவன் ரிஷியாகவே இருந்துவந்திருக்கிறான். உலகின் எல்லா மொழிகளிலும் இப்படித்தான் இருந்தது.
2 தன் இருளை தின்னும் ஒளியை, கவிஞனிடமிருந்து பெற்று கொள்பவர்களாய் மானுடர் இருந்தனர்
3 இன்றைய நவீன யுகத்தில் நவீன கவிதைளை சமைக்கும் நவீன கவிஞர்கள் ரிஷி எனும் இடத்தினை நழுவவிட்டுவிட்டார்கள். பிறர் எவருக்கும் ஒளி தந்தாக வேண்டியவனாக தான் இருக்க வேண்டியதில்லை. தானும் அவர்களில் ஊடாக புழங்கும் ஒருவனே என்ற நிலைப்பாட்டையே இன்றைய கவிகள் எடுத்திருக்கிறார்கள்
4 கவி என்பவன் மீளவும் இருள் தின்னும் ஒளியை தரும் ரிஷியாக ஆக வேண்டாமா? அவனிடமிருந்து பெற்றுக் கொள்ள இவ்வுலகிற்கு அது ஒன்று தானே இருக்கிறது.
மதிய அமர்வாக மதார் மற்றும் ஆனந்த் குமார் ஆகிய இருவரின் அமர்வுகளும் மிக புத்துணர்வாய் இருந்தது.
நான்கு புது கவிதை தொகுதிகளிலிந்ந்து தன் கூரிய அவதானங்களின் மூலமாய் இன்றைய சமகால தமிழ் கவிதைளின் போக்கினை துல்லியமாக படம் பிடித்து காட்டினார் மதார். மதார் அவர்களுக்கு மேடை மொழியின் தேர்ச்சி இல்லை. அதனாலேயே இன்னும் உயிர்ப்பாக இருந்தது அவரது உரை
ஆனந்த் குமாரின் உரை மிக வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. சமகால நவீன மலையாள கவிதைகளின் போக்கினை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. மலையாள கவி மொழியில் சமஸ்கிருத ஆதிக்கம் குறைக்கப்பட்டு அதனை ஈடுசெய்யும் விதமாய் அங்கே தமிழ் மொழியின் பங்களிப்பு மற்றும் மலையாள பழங்குடிகளின் மொழியிலேயே நேரடியாக கவிதைகள் எழுதப்படும் செய்தியும் வியப்பையும் நிறைவையும் அளித்தது. ஆனந்த்குமார் நேரடியாக மலையாள பழங்குடி மொழியிலான கவிதையை வாசித்தது செவிக்கும் இனிமை சேர்த்தது.
லக்ஷ்மி மணிவண்ணனின் ‘வெள்ளைப்பல்லி விவகாரம்’ நூல் வெளியீடுஅந்தியோடு எழுந்த நிலவும், சதா பொங்கும் கடலும் மாலையினை ரம்மியமாக்கியது. முன்னோடிகளின் முன்பு கவிதை வாசிப்பு என்பது இதயத்தின் துடிப்பை கூடுதலாக்கியது. கவிதை வாசித்த முடித்த பிறகு அதன் மீதான மதிப்பீடு என்னவாக இருக்கும் என்ற நிமிட நேர எதிர்பார்ப்பு.
வாசிக்கப்பட்ட பெரும்பாலான கவிதைகள் ஏமாற்றத்தை தரக்கூடியதாகவே இருந்தது. ஆனால் ஒரு கவிதை எப்படி எல்லாம் இருக்க கூடாது என்று முன்னோடிகள் விளக்கி சொல்வதற்கான வாய்ப்பாகவும் அது அமைந்தது. அவ்வகையில் மிகச் சிறந்த கல்வியாகவே கவிதை வாசிப்பு அரங்கு அமைந்திருந்தது.
இரண்டாம் நாள் காலை, திரு ஜெயமோகன் அவர்களின் வரவினால் எழுச்சி கொண்டது.
முதல் நிகழ்வாக தங்களின் “வெள்ளை பல்லி விவகாரம்” புனைவு நூல் வெளியீடு இன்னமும் எனக்கொரு கனவு போலவே இருக்கிறது. அண்ணாச்சியுடனும், ஆசானுடனும் தங்களுடனும் ஒரே மேடையில் நிற்கும் வாய்ப்பினை தந்து அந்த நாளினை என் வாழ்வின் மறக்கவியலாத நாளாக ஆக்கினீர்கள்.
நன்றி என்ற சொல் மிகச்சிறியது. ஆயினும் இக்கணம் அச்சொல் ஒன்றே தங்களிடம் கொடுப்பதற்கு என்னிடமிருக்கிறது. தங்களுக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள். நன்றி கடனை திரும்ப செலுத்தும் வாய்ப்பினை எனக்கு இறை அருளட்டும்.
வழக்கம் போலவே நிகழ்வின் உச்சமாக அமைந்தது ஜெ அவர்களின் நிறைவுரை. அதில் வியப்பும் ஏதுமில்லை. அது அப்படி அமைவது தானே இயல்பு
1 கவிதை என்பது எக்காலத்திலும் மொழியில் அமைந்த தனித்த ஒரு மொழியாகவே இருக்கிறது
2 பொது மொழிக்கு எதிரான கலகம் என்பதே கவிதைக்கான மிகச் சிறந்த வரையறையாக இருக்க இயலும்
3 கவிதையின் சவால் என்பதே அதனை நினைவில் நிறுத்திக் கொள்ளும் தன்மை தான். கவிதை, ஏடுகளின் வழியே பரவுவது இல்லை. அது நினைவுகளின் வழியே பரவுவது, நீடிப்பது.
4 உரைநடை ஆசிரியனுக்கு இருப்பது போன்ற வரலாறு, தத்துவம், வாழ்வின் முழுமையான சித்திரம் ஆகியவற்றை திரட்டித் தரும் பொறுப்புக்கள் எந்த ஒரு கவிஞனுக்கு இருப்பதில்லை. முழுக்க முழுக்க மொழியை நம்பி செயல்படக்கூடியவனாகவே ஒரு கவிஞன் இருக்கிறான்
5 முகநூல் குறிப்பு தன்மையாய் நிறைந்த இன்றைய மொழியில் இல்லாத மூன்று இயல்புகள்
அ செறிவற்ற தன்மை
ஆ இசைமை அற்ற தன்மை
இ உட்குறிப்பற்ற அல்லது பண்பாட்டு பின்புலம் அற்ற தன்மை.
6 இந்த மூன்று இன்மைகளுக்கும் எதிராக படைக்கப்படுவதே இன்றைய கவிதையாக இருக்க இயலும். அதாவது செறிவும், ஒத்திசைவான இசைமையும், நீடித்த பண்பாட்டு உட்குறிப்புகளும் கொண்ட படைப்புளே இன்று கவிதையாக இருக்க இயலும்.
7 இன்றைய தரமற்ற கவிதைகளில் காணக்கிடைக்கும் பொதுவான மூன்று இயல்புகள்
அ சரளமும் ஒழுக்கும் அற்ற மொழி.
ஆ கோட்பாடுகளால் அமைந்த செயற்கையான மொழி
இ மொழிபெயர்ப்புகளை பிரதி எடுத்த மொழிபெயர்ப்பு பாணி மொழி
இம்மூன்று மோசமான இயல்புகளை மீறியே இன்றைய சிறந்த தமிழ் கவிதைகள் எழ வேண்டியதாக இருக்கிறது
8 இன்றைய கவிஞன் தவிர்த்தாக வேண்டியவைகள்
அ போலியான அரசியல் தன்மை
ஆ மிதமிஞ்சிய தன் மைய்ய தன்மை, அதீத சுய கழிவிறக்கம்
இ மலிந்து கிடக்கும், உயிரற்ற ஊடக மொழி
இம்மூன்றையும் தாண்டித்தான் இன்றைய கவிஞன் ஒரு நல்ல கவிதையை படைத்தாக வேண்டும்
தங்களின் உருக்கமான நன்றி உரையோடும், மதிய விருந்தோடும் பூரணமானது கவிதை முகாம்.
சிறு பிசிறும் இல்லாமல் முகாம் நிகழ்ந்தாக வேண்டுமென்ற பரபரப்பில் தாங்கள் இருந்ததாலும், இயல்பான என் அதீத கூச்ச சுபாவத்தாலும் தங்களுடன் அதிகம் உரையாடும் வாய்ப்பமையவில்லை.ஆயினும் தங்கள் அருகிருந்ததே மிக இனிப்பாக இருந்தது.
இவ்விரு தினங்களில் என் குறைகளாக நான் தெளிந்தவை
1 என் வாசிப்பின் போதாமை.
2 கவிதைக்கென ஒதுக்கும் நேரத்தின் அளவும் , அர்ப்பணிப்பின் அளவும் போதாமை
3 எழுதும் ஒவ்வொரு கவிதையும் மிகச் சிறந்த கவிதையாக மட்டுமே இருந்தாக வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு
4 மற்ற கவிஞர்களோடு சதா ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருப்பது
இது போன்ற குறைபாடுகள் என்னிடமிருப்பது இத்தினங்களில் எனக்கு உறுதி ஆயிற்று. இக்குறைகளை களைவதும் இயலக்கூடியதுதான் என்பதும் உறுதி ஆயிற்று
நான் எண்ணி வந்ததை காட்டிலும் இக்கவிதை முகாமில் பெற்றுக் கொண்டது அதிகம்.
இறுதியில் திரண்ட கனியாய் நான் அங்கிருந்து கையில் கொண்டு வந்தது என்னால் சிறந்த கவிதைகளை படைக்க முடியும் என்ற திடமான உணர்வைத்தான்.
ஒரு நம்பிக்கையாக அல்ல. எந்த தர்க்கத்தினாலும் அல்ல.
இயல்பான, மெய்யான, திடமான, பருவான ஒரு பேருணர்வாகவே மனதில் எழுந்து அமர்ந்து கொண்டது இந்த எண்ணம்
தங்களின் ஆசியாலும் இறை அருளாலும் இவ்வுணர்வு மெய் ஆகுக
மீண்டுமொரு சந்திப்பு கூடுமென நம்புகிறேன்
மாணவனாய் தங்களை பணிந்து வணங்குகிறேன்
தீரா அன்புடன்
வ. அதியமான்
யானைடாக்டரும் உயர்நீதிமன்ற ஆணையும்-கடிதங்கள்
அன்புள்ள அண்ணா
நான் எதிர்பார்த்த ஒரு விளைவை உங்கள் கதை ஏற்படுத்தி விட்டது மிகவும் மகிழ்ச்சி. நான் வால்பாறை அருகே காடம்பாறை என்னும் ஊரில் அப்பாவின் வேலை காரணமாக பல வருடங்கள் இருத்துரிக்கிறேன் ஆகவே காடுகள் மீது மிக அதிக பாசம். உண்டு யானை டாக்டர் படித்தபிறகு அவற்றின் வேதனை புரிந்தது! மாற்றம் வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுது நடந்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி .ஆனால் பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தினால் நிலைமை மோசமாகுமோ ஏன்ற பயம் உண்டு உங்கள் கருது என்ன ?
ஐசக் ராஜ்
***
அன்புள்ள ஐசக்,
காடுகளில் பிளாஸ்டிக் தடை இன்னும்கூட இறுக்கமானதாக தொடரவேண்டும் என்பதேன் என் எண்ணம். பிளாஸ்டிக்குக்கு பதிலாக அலுமினிய கேன்களில் மது விற்கப்பட்டால் இரண்டு நன்மைகள், ஒன்று அவை பெரும்பாலும் திரும்ப சுழற்சிக்கு வந்துவிடும். இரண்டு அவை சூழலை அழிப்பதில்லை.(பிளாஸ்டிக் அளவுக்கு)
ஜெ
***
அன்புடையீர்,
பயன்படுத்திய, காலியான மது பாட்டில்களை, உடையாமல், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படாமல், திரும்பப் பெற சுலபமான வழி உண்டு. காலி பாட்டில்களை, அதன் மூடி, இதர packing உடன் திரும்ப கொடுத்தால் ரூபாய் 10 வழங்கப்படும் என்று அறிவித்தல் வேண்டும். வெறும் bottle மட்டும் திரும்பக் கொடுத்தால் ரூபாய் 5 கொடுக்கலாம்.
இந்த மது அருந்தப் பயன்படுத்திய பிளாஸ்டிக் tumbler திரும்பக் கொடுத்தால் அதற்கு ஒரு ரூபாய் கொடுக்கலாம். இந்த திரும்பப் பெறும் மையங்களை, TASMAC கடைகள் அருகிலேயே அமைக்கலாம்.
மது பான பாட்டில்கள விற்கும்போதே, இந்த 10 ரூபாய் திரும்பத் தரும் தகவலை சொல்லி விற்கலாம். பின்னர், இது போன்ற திட்டங்களை மற்ற நுகர்வோர் பொருள்களுக்கும் செயல் படுத்தலாம்.
ராமசாமி தனசேகர்
***
அன்புள்ள ராமசாமி
முக்கியமான பிரச்சினை பாட்டில்களை வேண்டுமென்றே வீசி எறிந்து உடைப்பதுதான். அதைத்தவிர்க்கவே கண்ணாடிப்புட்டிகளை தடைசெய்கிறார்கள். அதற்கு மாற்றாக அலுமினிய கேன்களை பயன்படுத்துவதே சரியானது. அலுமினிய கேன் 99 சதவீதம் மறுசுழற்சிக்கு வரும் பொருள். மண்ணை கெடுக்காததும்கூட
ஜெ
கோவை சொல்முகம் வாசகர் குழுமம்,16
நண்பர்களுக்கு வணக்கம்.
சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை – 16, வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஆறாவது படைப்பான “வெண்முகில் நகரம்” நாவலின், 9 முதல் 12 வரையுள்ள பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
பெருவாயில்புரம்சொற்களம்முதற்தூதுநச்சுமலர்கள்
வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 24-04-22, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம் வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
April 19, 2022
அந்த இன்னொருவர்
வணக்கம் ஜெயமோகன் அவர்களே,
எனக்கு வயது 26 சமீப நாட்களாக தான் நல்ல இலக்கியங்களை நோக்கி செல்ல தொடங்கி இருக்கிறேன் அதில் தங்களின் பங்கும் நிறைய உண்டு. அதற்கு நன்றி.
என் கேள்வி, ஒவ்வொரு எழுத்தாளரையும் எழுத்தையும் விட சிறப்பானதாக வேறொரு புதிய எழுத்தாளரின் எழுத்து எல்லா வகையிலும் முன்னகர்ந்து புத்திலக்கியம் உருவாவது காலங்காலமாக உண்டாகி வரும் இலக்கிய மாற்றங்களில் ஒன்று. ஆனால் தங்களின் இலக்கிய பங்களிப்பை கணக்கிடும் போது இனி இப்படி ஒரு எழுத்தாளர் சாத்தியமா என்பது எனக்கு ஐயமாகவே தோன்றும்.
வெண்முரசு நாவல் வரிசையின் முதல் நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவில் தாங்கள் ஆற்றிய உரையில் “எனக்கு பின்னால் என்னை சிறிதாக்க கூடிய ஒரு படைப்பாளி வருவான் என்று நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு” என்றீர்கள். நான் மிக ரசித்து வியந்த பேச்சு அது. அதனால் எப்போதும் எனக்கு நினைவிருக்கும் ஏற்புரைகளில் அதுவும் உண்டு.
அந்த படைப்பாளி எத்தகையானவராக இருக்க வேண்டும் என்று ஏதாவது வரையறை உண்டா? உதாரணமாக வெண்முரசு மாதிரியான நீண்ட நெடிய இலக்கியம் படைக்கிறவராக இருக்க வேண்டுமா ?
அப்படி ஒன்று வேறொருவரால் இனி சாத்தியம் என்று நம்புகிறீர்களா ?
அன்புடன்,
ச.மதன்குமார்.
***
அன்புள்ள மதன்குமார்,
இலக்கியத்தில் ஒரு முதன்மையான படைப்பாளி தோன்றும்போது அவன் தனக்குரிய வாசகச் சூழலை, வாசிப்பு முறையை தானே உருவாக்கிக்கொள்கிறான். அவனுக்குரிய கருத்தியல் மண்டலத்தையே கட்டமைத்துக்கொள்கிறான். இரண்டாம் நிலை படைப்பாளிகளே ஏற்கனவே இருக்கும் சூழலை வாசகப்பரப்பை, வாசிப்பு முறையை, கருத்தியல் மண்டலத்தை ஒட்டி எழுதுபவர்கள். இரண்டாம்நிலை படைப்பாளிகளும் முன்னகர்பவர்களே, ஆனால் அவர்களின் வழிமுறை உடைப்பு அல்ல. மெல்லிய விரிவாக்கம் மட்டுமே. வேர்களின் பரவுதல்போல ஓசையற்றது அது.
முதல்நிலைப் படைப்பாளி ஒரு மீறலுடன், ஓர் உடைவென எழுகிறான். அவனுக்கான களம் ஏற்கனவே அங்கே இருப்பதில்லை.. முதன்மைப் படைப்பாளிகளை எப்போதும் அதுவரை வந்தடைந்து, அப்போது நிறைந்திருக்கும் படைப்பாளிகளை முன்வைத்தே சூழலில் உள்ளோர் மறுதலிப்பார்கள். அவன் அதுவரை இருந்த அனைத்தையுமே முற்றாக மறுத்து ஒன்றை உருவாக்குவான். அல்லது அவை அனைத்தையுமே விமர்சித்து, அவற்றிலிருந்து தனக்குரியதை எடுத்துக் கொண்டு, அவற்றை ஒட்டுமொத்தமாக தொகுத்து முடைந்து தன் உலகத்தை உருவாக்குவான்.
அவனுடைய படைப்புகள் அவனே உருவாக்கிய மாபெரும் அடித்தளத்தின் மேல் அமைந்திருக்கும். ஒரு வாசகன் அவனுக்குள்ளேயே முழுமையாக வாழ இடமிருக்கும். அவனுக்குரிய ஏற்பு மறுப்புமாக சூழல் நிறைந்திருக்கும். ஆகவேதான் பெரும்படைப்பாளிகள் உருவானதுமே வாசக சூழலில் ஒரு திகைப்பு உருவாகிறது. அடுத்து வரும் படைப்பாளிகள் அந்த வாசக சூழலுக்குள் இருந்து வருவார்களா, அதற்குள் நின்றபடி அவர்கள் எழுதுவார்களா என்ற எண்ணம் ஏற்படுகிறது.
அவ்வாறு நிகழவேண்டுமென்பதில்லை. இன்னொரு படைப்பாளி வரும்போது அவனும் அதேபோல முந்தையவற்றை நிராகரித்து தனக்குரிய உலகை உருவாக்கலாம். அதிலிருந்து சாரத்தை எடுத்து மறு ஆக்கம் செய்து தனக்கு உருவாக்கலாம்.
ஆனால் ஒரு பெரும்படைப்பாளிக்கு இன்னொரு பெரும்படைப்பாளியே எதிர்நிலை அல்லது அடுத்த நிலை என்றில்லை. மிக மெலிதாக, அணைகளை உடைக்கும் நண்டுவளைகள் போல அவன் உருவாக்கியவற்றை உடைந்து கரைந்தழிக்கும் படைப்பாளிகள் பலர் நிகழலாம். எல்லை கடப்பதே அறியாமல் எல்லையை உடைத்து மீறி முன்செல்லும் படைப்பாளிகளும் உண்டு. சிறிய அளவில் அவர்களின் படைப்பியக்கம் நிகழ்ந்தாலும் அவர்களும் முன்னகர்பவர்களே.
பண்பாடும் காலமும் என்றும் அசைவில்லாது நின்றிருக்காது. எவரையும் இறுதியாகக் கொள்ளவும் செய்யாது. புதியவை நிகழ்வதற்கான விதிகள் முன்னர் நிகழ்ந்தவற்றில் இருப்பதில்லை. ஷேக்ஸ்பியரை அதுவரைக்குமான ஐரோப்பிய கவிமரபை வைத்து புரிந்துகொள்ள முடியாது. ஷேக்ஸ்பியர் உருவாவதற்கு முந்தைய கணம் வரை ஷேக்ஸ்பியர் உருவாவதற்கான எந்தக்காரணமும் இல்லை. ஷேக்ஸ்பியர் காவியங்களை எழுதியிருக்க வேண்டியவர். ஆனால் அவர் நாடகங்கள் வழியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். அவ்வண்ணம் நாடகங்கள் மூலமாக ஒரு பெருங்கவி நிகழ முடியுமென்பது ஐரோப்பாவிற்குச் சற்று புதிது. ஆனால் அவருடைய வேர்கள் இருந்தது கிரேக்க மரபில்.
ஒரு மரபில் எல்லாத்தலைமுறைகளிலும் எல்லாக்காலகட்டத்திலும் பெரும்படைப்பாளி இருந்தாக வேண்டுமென்றில்லை. நிகழவில்லை என்றால் இலக்கியம் தேங்கிவிட்ட தென்றும் பொருள் இல்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ்க்குப்பிறகு மொத்த பிரிட்டிஷ் இலக்கியத்திலும் பெரும்படைப்பாளி என்று எவருமில்லை. ஆகவே நிகழும் என்று சொல்கையில் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பையே குறிப்பிடுகிறோம்.
ஆனால் அவன் இன்னார் என முந்தைய தலைமுறையினன் சொல்லக்கூடாது. தன்னைப்போன்ற அவன் சுட்டிக்காட்டக்கூடும். எழுந்து வருபவன் அவ்வாறு இருக்க வேண்டிய தேவை இல்லை. தன்னை வரையறுத்து எழுந்த ஒருவர் தனது எதிர்காலத்தையும் வரைறுத்துவிட்டு போவது பொருளற்றது. தன் சூழலை உருவாக்கியவர் அது இயல்பாக வளர்ந்து அடுத்த சூழலை உருவாக்கட்டும், அதில் அடுத்த படைப்பாளி எழட்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே கொண்டிருக்கவேண்டும்.
ஜெ
***
அறிவியக்கம், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
“அறிதலின் பொருட்டே அறிதல் என்பதே அறிவியக்கத்தை உருவாக்குவது. அதை நோக்கியே நம் இலக்கு இருக்க வேண்டும். “
உங்களுடைய இந்த வரிகளை கீதா அவர்கள் புத்தரின் படத்தோடு இணைத்திருந்தார். அது கண்டவுடன் நீண்ட நாள் தேடி கொண்டிருந்த கேள்விக்கொன்றான விடையை கிடைக்க பெற்றேன்.
பொதுவாக நாம் எல்லோரும் வாசிக்க தொடங்குகையில் வாசிப்பு தரும் இன்பத்தின் பொருட்டே அதை செய்திருப்போம். அப்படி குழந்தையாக வாசிக்கையில், புதிதாக ஒன்றை அறிந்து கொள்கிறோம் என்பதன்றி பிற எவையும் பொருட்டென தெரிவதில்லை. இலக்கிய வாசிப்பிலும் அதுவே முக்கியமென நினைக்கிறேன். ஆனால் இரம்யா அக்காவுடன் பேசும்போது ஒன்றை சொன்னால், வாழ்க்கையோடு எங்கு இணைக்கிறாய் என்ற கேள்வி தவறாமல் வரும். எனக்கோ அப்படி இணைக்கக் தான் வேண்டுமா என்று இருக்கும். ஏனெனில் வாசிக்கையிலும் பின்னர் அசைபோடுகையிலும் படைப்பில் இருந்து வாழ்க்கையுடன் இயல்பாக இணைபவை இணையட்டும். மற்றவை அழகுணர்வுக்காவே இருக்கலாமே என்று தோன்றும். கனவுகள் தன்னளவில் முழுமையுடன் இருக்க கூடாதா என்ன ! எனினும் மறுபக்கம் அவ்வண்ணம் சேர்க்கப்படும் அறிவும் அழகுணர்வும் வாழ்க்கையுடன் இணைக்கப்படாமல் போகுந்தோறும் ஆணவமாக திரிபு கொள்ளும். அது அறிவியக்கவாதி சென்று சேரக்கூடிய இழிநிலையில் அவனை ஆழ்த்தும். இப்படி எண்ணும்போதே அந்த அறிவை என் வாழ்க்கையுடன் இணைக்கையில் வருவது ஒரு சுயநலம் அல்லவா ! அந்த தூய கனவின் புனிதம் சற்று குறைகிறதே என நினைப்பேன்.
இவை மனதின் ஒரு மூலையில் இருக்கையில் கீதா அவர்கள் எடுத்தமைத்த மேற்கோள் படத்தை பாரத்தேன். அப்படம் உங்களுடைய இன்னொரு வரியை நினைவுக்கு கொண்டு வந்தது. இலக்கியத்தை வாழ்க்கையாலும் வாழ்க்கையை இலக்கியத்தாலும் அர்த்தப்படுத்திக் கொண்டே இருங்கள் என்ற வரி அது.
முதல் வரிகளை இவ்வரிகளுடன் இணைத்தவுடன் என் சந்தேகம் தீர்ந்தது. ஆம், இலக்கியம் வாழ்க்கையில் இருந்து எழுகிறது. மீண்டும் அது வாழ்க்கையை தொடுகையில் ஒரு வட்டம் முழுமையடைகிறது. எனவே என் வாழ்க்கையுடன் இணைத்து சுயநலமியாகிறேன் என வருத்தப்பட வேண்டியதில்லை. அதன் இயங்கியல் அது. இங்கே இலட்சிய வாதத்தை கைக்கொள்ள விரும்புபவன் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே. இலக்கியத்தை வாழ்க்கையுடன் இணைப்பதும் இலக்கியத்திற்காகவே. மெல்ல மெல்ல என் தனிவாழ்க்கையில் இருந்து பிரபஞ்ச கனவுடன் இணைவதற்கான வழியாக அமையும் அது.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பூமணியின் பிறகு வாசித்து விட்டு உங்கள் தளத்தில் அதை பற்றி படித்தேன். அதில் சோமனதுடி முக்கியமான படைப்பு என்று நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். சோமனதுடி வாசிக்க வேண்டும் என்று வாங்க முயற்சித்தேன், கிடைக்கவில்லை. Printed copy தமிழில் இல்லை என்று நினைக்கிறேன். இதற்கு இடையில் தான் மனதில் பட்டது, நீங்கள் உங்களின் தளத்தின் வாயிலாக ஆற்றும் பணி முக்கியமானது, அரிதானது. எங்கள் தலைமுறை, வர இருக்கும் தலைமுறையும் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. இந்த பணியை நீங்கள் படைப்புகளை படைத்து கொண்டே parallel-ஆக தொடர்ந்து செய்து வருவது இன்னும் பிரமிப்பூட்டுகிறது. நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டே இக்கடிதத்தை எழுதுகிறேன். நன்றி.
அன்புடன்,
எ.மா.சபரிநாத்,
சோளிங்கர்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

