அறிவியக்கம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

அறிதலின் பொருட்டே அறிதல் என்பதே அறிவியக்கத்தை உருவாக்குவது. அதை நோக்கியே நம் இலக்கு இருக்க வேண்டும். “

உங்களுடைய இந்த வரிகளை கீதா அவர்கள் புத்தரின் படத்தோடு இணைத்திருந்தார். அது கண்டவுடன் நீண்ட நாள் தேடி கொண்டிருந்த கேள்விக்கொன்றான விடையை கிடைக்க பெற்றேன்.

பொதுவாக நாம் எல்லோரும் வாசிக்க தொடங்குகையில் வாசிப்பு தரும் இன்பத்தின் பொருட்டே அதை செய்திருப்போம். அப்படி குழந்தையாக வாசிக்கையில், புதிதாக ஒன்றை அறிந்து கொள்கிறோம் என்பதன்றி பிற எவையும் பொருட்டென தெரிவதில்லை. இலக்கிய வாசிப்பிலும் அதுவே முக்கியமென நினைக்கிறேன். ஆனால் இரம்யா அக்காவுடன் பேசும்போது ஒன்றை சொன்னால், வாழ்க்கையோடு எங்கு இணைக்கிறாய் என்ற கேள்வி தவறாமல் வரும். எனக்கோ அப்படி இணைக்கக் தான் வேண்டுமா என்று இருக்கும். ஏனெனில் வாசிக்கையிலும் பின்னர் அசைபோடுகையிலும் படைப்பில் இருந்து வாழ்க்கையுடன் இயல்பாக இணைபவை இணையட்டும். மற்றவை அழகுணர்வுக்காவே இருக்கலாமே என்று தோன்றும். கனவுகள் தன்னளவில் முழுமையுடன் இருக்க கூடாதா என்ன ! எனினும் மறுபக்கம் அவ்வண்ணம் சேர்க்கப்படும் அறிவும் அழகுணர்வும் வாழ்க்கையுடன் இணைக்கப்படாமல் போகுந்தோறும் ஆணவமாக திரிபு கொள்ளும். அது அறிவியக்கவாதி சென்று சேரக்கூடிய இழிநிலையில் அவனை ஆழ்த்தும். இப்படி எண்ணும்போதே அந்த அறிவை என் வாழ்க்கையுடன் இணைக்கையில் வருவது ஒரு சுயநலம் அல்லவா ! அந்த தூய கனவின் புனிதம் சற்று குறைகிறதே என நினைப்பேன்.

இவை மனதின் ஒரு மூலையில் இருக்கையில் கீதா அவர்கள் எடுத்தமைத்த மேற்கோள் படத்தை பாரத்தேன். அப்படம் உங்களுடைய இன்னொரு வரியை நினைவுக்கு கொண்டு வந்தது. இலக்கியத்தை வாழ்க்கையாலும் வாழ்க்கையை இலக்கியத்தாலும் அர்த்தப்படுத்திக் கொண்டே இருங்கள் என்ற வரி அது.

முதல் வரிகளை இவ்வரிகளுடன் இணைத்தவுடன் என் சந்தேகம் தீர்ந்தது. ஆம், இலக்கியம் வாழ்க்கையில் இருந்து எழுகிறது. மீண்டும் அது வாழ்க்கையை தொடுகையில் ஒரு வட்டம் முழுமையடைகிறது. எனவே என் வாழ்க்கையுடன் இணைத்து சுயநலமியாகிறேன் என வருத்தப்பட வேண்டியதில்லை. அதன் இயங்கியல் அது. இங்கே இலட்சிய வாதத்தை கைக்கொள்ள விரும்புபவன் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே. இலக்கியத்தை வாழ்க்கையுடன் இணைப்பதும் இலக்கியத்திற்காகவே. மெல்ல மெல்ல என் தனிவாழ்க்கையில் இருந்து பிரபஞ்ச கனவுடன் இணைவதற்கான வழியாக அமையும் அது.

அன்புடன்

சக்திவேல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

பூமணியின் பிறகு வாசித்து விட்டு உங்கள் தளத்தில் அதை பற்றி படித்தேன். அதில் சோமனதுடி முக்கியமான படைப்பு என்று நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். சோமனதுடி  வாசிக்க வேண்டும் என்று வாங்க முயற்சித்தேன், கிடைக்கவில்லை.  Printed copy தமிழில் இல்லை என்று நினைக்கிறேன். இதற்கு இடையில் தான் மனதில் பட்டது, நீங்கள் உங்களின் தளத்தின் வாயிலாக ஆற்றும் பணி முக்கியமானது, அரிதானது. எங்கள் தலைமுறை, வர இருக்கும் தலைமுறையும் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. இந்த பணியை நீங்கள் படைப்புகளை படைத்து கொண்டே        parallel-ஆக தொடர்ந்து செய்து வருவது இன்னும் பிரமிப்பூட்டுகிறது. நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம்  வேண்டிக்கொண்டே இக்கடிதத்தை எழுதுகிறேன். நன்றி.

அன்புடன்,

எ.மா.சபரிநாத்,

சோளிங்கர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.