Jeyamohan's Blog, page 788

April 27, 2022

லோஹி- ஒரு கடிதம்

லோகிததாஸ்

லோகி நினைவுகள் மதிப்பீடுகள்

அன்புள்ள ஜெமோ

லோகி நினைவுகள் வாசித்தேன். மிகச்சிறந்த புத்தகம் என்பதை விட மிக முக்கியமான புத்தகம் என்றே சொல்லவேண்டும். அதற்கு என் அன்பும் நன்றிகளும். இப்புத்தகம் வாயிலாக அந்த மகா கலைஞன் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதை வியக்கத்தக்கது. ஏன் வியக்கத்தக்கது என்று வார்த்தையை பயன்படுத்தினேன் என்றால், நீங்கள் சுந்தர ராமசாமி, ஆற்றுர் ரவிவர்மா, சைதன்ய போன்றவர்கள் பட்டியலில் ஒரு சினிமா கலைஞனை வைத்திருப்பது.

லோகியின் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையிலும்அக்காலகட்டத்தியே எல்லா ஜாம்பவான்களின் சினிமாகளை ( பத்மராஜன், பரதன், சிபி மலையில், அரவிந்தன் போன்றவர்களின் படைப்புகள்) பார்த்து ரசித்தவன் என்ற முறையில் நான் உங்களிடம் முரண்படும் ஒரே இடம் என்பது. லோகி மகா கலைஞன் இல்லை என்று தாங்கள் சொல்லும் இடம் தான். லோகி மக்கள்கலைஞன் தான், ஆனால் நிகரற்ற மகா கலைஞனும் தான்.

உதாரணத்திற்கு பூதக்கண்ணாடி என்ற ஒரு அற்புத படைப்பை வேறு எவர் இயங்கினாலும் இந்த அளவுக்கு வீரியம் உள்ள கலா சிருஷ்டியாக வந்திருக்காது என்றே கருதுகிறேன். இதை சிபி மலையிலும் சமீபத்திய ஒரு நேர்காணலில் (The cue – Maneesh Narayanan interview) ஆமோதித்திருந்தார். நான் இப்போது மட்டுமல்ல எப்பொழுதும் லோகி ஒரு மகா கலைஞன் என்றே நம்புகிறேன். நீங்கள் லோகியை பற்றி நினைக்காத நாளில்லை என்று தெரியும். என் கடிதம் நீங்கள் வாசிக்க நேரும் சமையத்தில் லோகிக்கும் உங்களுக்குமான அந்தரங்கமான  உலகில் சஞ்சரிப்பிர் என்று தெரியும். இன்று ஒருநாள் அதற்கு நான் ஒரு சின்ன பொறி என்று நினைத்து சந்தோஷப்படுகிறேன்

தருண் வாசுதேவ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2022 11:31

April 26, 2022

அஞ்சலி, ஜான் பால்

நான் ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளாகச் சினிமாவில் இருக்கிறேன். இதுவரைச் சந்தித்த மனிதர்களில் தூயோன் என ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால் போளச்சனைத்தான். நிறைந்த மனிதர். நன்மை மட்டுமே அறிந்தவர் என சிலரை சொல்வோமே, அப்படிப்பட்டவர். இனியவர், இனிமை மட்டுமே கொண்டவர். இவ்வுலகின் எந்த மானுடர் மேலும் எந்த குறையும் சொல்லத்தெரியாதவர். மானுடரால் நிறைந்தவர். அவரைப் பற்றி என் நண்பர்கள் அனைவரிடமும் திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறேன். பெரும் பரவசத்துடன், பிரியத்துடன்.

பௌலோஸச்சன் என்னும் கிறிஸ்தவ அறிஞரின் மகன் ஜான் பால். புதுச்சேரி பி.வி.பௌலோஸ் ஆசிரியராக இருந்தார். அவர் எழுதிய கிறிஸ்தவ இறையியல் நூல்கள் கத்தோலிக்க இறையியல் கல்லூரிகளில் இன்றும் பாடமாக உள்ளன. பௌலோஸச்சனுக்கும் ரெபேக்காவுக்கும் 1950 அக்டோபர் 29ல் எர்ணாகுளம் அருகே புதுச்சேரி என்னும் ஊரில் ஜான் பிறந்தார். எர்ணாகுளம் செயின்ட் ஆல்பர்ட்ஸ் பள்ளி, செயிண்ட் அகஸ்டீன் பள்ளி, பாலக்காடு சிற்றூர் அரசுப்பள்ளி ஆகியவற்றில் பள்ளிக்கல்வியும் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பொருளியலில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.

ஜான் பால் 1972 முதல் கனரா வங்கி ஊழியராக இருந்தார். பதினொரு ஆண்டுக்காலம் வங்கி ஊழியராக பணியாற்றிய காலகட்டத்தில் ஜான் பால் எர்ணாகுளம் ஃபிலிம் சொசைட்டி எனும் அமைப்புடன் இணைந்து செயல்பட்டார். கேரளா டைம்ஸ் என்னும் இதழில் சினிமா பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்தார். எர்ணாகுளத்தில் மாற்றுத்திரைப்பட இயக்கத்தின் முகம் என அறியப்பட்டார்.

ஜான் பால்தான் பரதனுக்கு நல்ல சினிமாவை அறிமுகம் செய்தவர். பரதன் வெறும் கலை இயக்குநராக இருந்தபோது அன்று திரைப்படச்சங்கங்களில் முழுவேகத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரும், யூ.கே.குமாரன் பி.ஏ.பக்கர்  போன்ற மாற்றுத்திரைப்படக் காரர்களுக்கு அணுக்கமானவருமான ஜான் பால் அவரை ஒரு திரைப்படநிகழ்வில் சந்தித்தார். பரதனுடனான நட்பு இறுதிவரை தொடர்ந்தது. பரதன் பற்றி ஜான் பால் எழுதிய நூல் அழகான ஒன்று.

பரதன் ஜான் பாலை சினிமாவுக்குக் கொண்டுவந்தார். ஐ.வி.சசி இயக்கி 1978 ல் வெளிவந்த ஞான் ஞான் மாத்ரம் (நான் நான் மட்டுமே) என்பது ஜான் பாலின் முதல் படம். அவர் அதற்குக் கதை மட்டும் எழுதினார். அப்படத்திற்கு பரதன் கலை இயக்குநர். பின்னாளில் பரதனின் முதன்மையான திரைக்கதையாசிரியராக ஜான் பால் திகழ்ந்தார்.

மாக்டா என்னும் திரைத்தொழில்நுட்ப கலைஞர்களுக்கான சங்கம் ஜான் பால் உருவாக்கியது. நீண்டகாலம் அதன் நிர்வாகியாகவும் இருந்தார். எர்ணாகுளம் இலக்கிய அமைப்புகள் பலவற்றில் ஏதேனும் பொறுப்பில் அவர் எப்போதும் இருந்தார். சங்ஙம்புழா பார்கில் வாரந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நிகழும். நேர்பாதி ஜான் பால் ஒருங்கிணைத்தவை. மறைந்த பி.கே.பாலகிருஷ்ணனின் நண்பர். நான் ஒருமுறை பி.கே.பாலகிருஷ்ணனைப் பற்றியும் ஒரு முறை எம்.கோவிந்தனைப் பற்றியும் அங்கே உரையாற்றியிருக்கிறேன்.

படித்த நல்ல நூல்களை பரிந்துரைப்பதும், வாங்கி அனுப்புவதும் ஜான் பாலின் வழக்கம். அண்மையில் அல்ஷைமர்ஸ் நோய் வந்த தந்தையை கவனித்துக்கொண்ட ஒரு மகன் அந்த அனுபவங்களை எழுதிய நூலை சிலாகித்து தொலைக்காட்சியில் பேசியவர் பிரதிகளில் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார். அவருடைய ஆசிரியரும் நித்ய சைதன்ய யதியின் நண்பருமான பேராசிரியர் எம்.கே.சானுவின் பிறந்தநாளுக்கு ஒரு விழாவை ஒருங்கிணைத்து என்னை பேச அழைத்திருந்தார். பேராசிரியர் நூறாண்டு அகவையை நெருங்கிக் கொண்டிருக்கிறார். பேராசிரியரின் உடல்நிலை காரணமாக மூன்றுமுறை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அச்செய்தியைச் சொல்வதற்காக அவர் அழைத்தபோதுதான்  அவரிடம் கடைசியாகப் பேசினேன்.

ஜான் பால் தனக்கென திரைக்கதைக் கொள்கைகள் சில கொண்டவர். கலைப்படங்கள் தேவை என்றாலும் நடுத்தரப் படங்களால் பொதுமக்களின் ரசனை மேம்பட்ட பிறகே கலைப்படங்களை உருவாக்கவேண்டும் என்று எண்ணினார். அடூர் கோபால கிருஷ்ணனின் சுயம்வரம் போன்ற படங்களை மக்களிடம் கொண்டுசெல்ல பணியாற்றிய ஜான் பால் அவரே எழுதியவை அனைத்துமே நடுத்தரப் படங்கள். ஆனால் இன்று பார்க்கையில் அவற்றையும் முழுமையான கலைப்படங்கள் என்றே சொல்லமுடியும் – பாடல்கள் அவற்றிலுண்டு என்பது ஒன்றே வேறுபாடு. உண்மையில் அன்று அவற்றை மக்களிடையே கொண்டுசென்றவை பாடல்கள்தான்.

ஜான் பால் சினிமாவுக்கான கதையில் நாடகீயத்தன்மை கூடாது என்ற நம்பிக்கை கொண்டவர். உணர்ச்சிகரத்தன்மை சினிமாவின் காட்சியழகை அழிக்கும் என்றார். சினிமா அன்றாட வாழ்க்கைபோல, சாதாரணமாக, மெதுவாக நடக்கவேண்டும். நிகழ்ச்சிகள் தன்னியல்பாக ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குச் செல்லவேண்டும். உச்சகட்டம் என பெரிதாக ஏதும் தேவையில்லை, கதைக்கு ஒரு முடிவு வேண்டும், அவ்வளவுதான். அவருடைய திரைக்கதைகள் எல்லாமே அத்தகையவை. படமாக்கலில் சில சினிமாக்களில் சற்று உணர்ச்சிகரம் குடியேறியிருக்கும். இசை வழியாகவும் சற்று உணர்ச்சிகரம் குடியேறியிருக்கும். குடியேறாவிட்டால் மேலும் நல்ல படங்களாக இருக்கும்.

சினிமாவில் தத்துவமோ, வாழ்க்கையின் பார்வைகளோ வெளிப்படவேண்டியதில்லை என ஜான் பால் நினைத்தார். சினிமா அன்றாடவாழ்க்கையின் ஒரு பகுதியை நம்பகமாக காட்டினாலே போதுமானது. அந்த கட்டமைப்பில் அது சொல்லவேண்டியவை உணர்த்தப்பட்டால் போதும். ஆகவே ஜான் பால் எழுதும் வசனங்கள் மிகச் சாதாரணமாக இருக்கும். நிகழ்ச்சிகளும் மிகமிக சாதாரணமாக இருக்கும். கதாபாத்திரங்களும் எந்த வகையிலும் வித்தியாசமானவர்கள் அல்ல.

ஆனால் அவர் எழுதிய படங்களில் பல மலையாளிகளின் நெஞ்சில் நிறைந்தவையாக ஏறத்தாழ அரைநூற்றாண்டு கடந்தும் நீடிக்கின்றன. காரணம், அவர் மானுட உள்ளம் வெளிப்படும் சில அரிய தருணங்களை அந்த அன்றாடத்தின் இயல்புத்தன்மை மாறாமலேயே உருவாக்கியிருப்பார் என்பதுதான். அந்தத் தருணங்கள் பெரும்பாலும் அனைவரும் சற்றேனும் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்தவையாக இருக்கும். சாதாரணமாகக் காணத்தக்க கதாபாத்திரங்கள் மிகச்சரியாக சினிமாவில் தோன்றும்போது நம் நுண்ணுணர்வுகளில் ஓர் அதிர்வு உருவாகும்.

உதாரணம் மின்னாமினுங்கின்றே நுறுங்ஙு வெட்டம்  என்னும் சினிமாவின் இரு கதாபாத்திரங்கள். கதைநாயகியான பார்வதியின் அப்பாவாக வரும் நம்பூதிரி தீய மந்திரவாதங்கள் செய்பவர். தன் மகளை நகரில் ஒரு நாயர்வீட்டில் தங்கி படிக்கவைக்கும்பொருட்டு வருகிறார். அவர்களின் உதவிகோரவே வருகிறார். வந்ததுமே அண்ணாந்து தென்னைமரங்களை பார்க்கிறார். “அடேய், இந்த தென்னையில் எத்தனை தேங்காய் வரும் சராசரியாக?” என்கிறார். ”தெரியவில்லை” என வீட்டு உரிமையாளரான நெடுமுடி வேணு கடுப்புடன் சொல்ல “தெரியணும்டா. தன் சொத்தை தான் கணக்குபோட்டு வைக்கணும்…” என்பார். அவர் வாழ்வது நூறாண்டு முந்தைய ஓர் உலகில். அன்று நம்பூதிரிகள் மானுடதெய்வங்கள்.

அதே சினிமாவில் பென்ஷன் வாங்கச் செல்லும் நெடுமுடிவேணுவும் சாரதாவும் பென்ஷன் வாங்க வந்திருக்கும் அவர்களுடைய பழைய தோழர்களால் செல்லமாக நையாண்டி செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் (இன்னொசெண்ட்) வாயாடியான உற்சாகமான மனிதர். துருதுருப்பானவர்.  “நீங்க செத்து உங்க சாவுச்சோறெல்லாம் தின்னுட்டுதாண்டா போவேன்” என்பவர் முதலில் செத்துப் போகிறார். கேரளத்தில் எந்தத்தெருவிலும் காணத்தக்க மனிதர்களின் மிக இயல்பான சித்திரங்களால் ஆனது ஜான் பாலின் சினிமா.

ஜான் பால் பரதனுக்காக எழுதிய சாமரம், மர்மரம்,ஓர்மக்காய், காதோடு காதோரம், மின்னாமினுஙின்றெ நுறுங்ஙு வெட்டம்; மோகன் இயக்கத்தில் எழுதிய விடபறயும் முன்பே, ஆலோலம்,ரசன ; பரத் கோபி இயக்கத்தில் உத்சவப் பிற்றேந்நு; பி.என் மேனன் இயக்கத்தில் அஸ்த்ரம்; பாலு மகேந்திரா இயக்கத்தில் யாத்ரா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

போளச்சன் திரைக்கதைக்கு ஒரு பிரச்சினை உண்டு. அவர் மிகச்சாதாரணமான நிகழ்வுகளின் மென்மையான இயல்பான ஓட்டத்தையே எழுதுவார். அவற்றினூடாக ஓடும் மனித உறவுகளின் உரசல்களும் உள்ளங்களின் மெல்லிய அலைக்கழிதலும்தான் அவருடைய கலையின் வெளிப்பாடுகள். நடிகர்தேர்வு, நடிப்பு ஆகியவற்றில் சற்று பிழையிருந்தாலும் மொத்தப்படமும் சர்வசாதாரணமாக ஆகி அவர் எழுதியது திரையில் வராமல் போய்விடும். நல்ல இயக்குநர் படங்களில் மட்டுமே அவரால் நல்ல படங்களை அளிக்க முடிந்திருக்கிறது. அறுபது திரைக்கதைகள் அவர் எழுதியிருக்கிறார்.

போளச்சன் வாழ்க்கையில் இரண்டு நிகழ்வுகள் மிக நெருக்கடியானவை. அவருடைய மனைவி ஐஷா எலிசபெத் 1981 வாக்கில் நோயுற்றார். அது புற்றுநோய் என ஊகிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சாவின் விளிம்பில் ஊசலாடி இறுதியில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அது ரத்தத்தின் ஒரு குறைபாடு என கண்டறியப்பட்டது. தொடர்சிகிழ்ச்சையில் அவர் உயிர்பிழைத்தார்.

அப்போது போளச்சன் அவருடைய திரைவாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார்.அந்த ஓராண்டில் மட்டும் விடபறயும் முன்பே, கதயறியாதே, ஆரதி, ஓர்மைக்காய், தேனும் வயம்பும், பாளங்கள் என ஆறு படங்களுக்கு எழுதினார். எல்லாமே சென்னையில் படமானவை. போளச்சன் வேலூர் ஆஸ்பத்திரியின் கொசு மொய்க்கும் வராந்தாவில் அமர்ந்து மடியில் காகிதத்தை வைத்து, டியூப் லைட்டின் அதிரும் ஒளியில் அவற்றை எழுதினார். பகலில் ரயிலில் கொஞ்சநேரம் தூங்குவார். அப்படியே சென்னையில் திரைப்பணி. மீண்டும் வேலூர். இரவு முழுக்க மனைவியுடனேயே இருந்தார்.

மனைவி பிழைத்துக் கொண்டார். ஆனால் போளச்சனின் தைராய்ட் நிரந்தரமாக செயலிழந்தது. கொடும்பசி. உடல் எடை இரண்டு ஆண்டுகளில் இருநூறு கிலோவுக்குமேல் சென்றது. நான் அவரை சந்திக்கும்போது இரண்டு அறுவைசிகிழ்ச்சை வழியாக நாற்பது கிலோ கொழுப்பை உடலில் இருந்து வெட்டி அகற்றியிருந்தார். அதன்பின் நூற்றி முப்பத்தெட்டு கிலோ எடை இருந்தார். இந்தியாவின் மூன்றாவது எடைமிக்க மனிதர்.

அறுவை சிகிழ்ச்சைக்கு முன் அவரால் நடக்கவே முடியாது. நான் பார்க்கையில் அலுமினிய கூண்டுபோன்ற ஊன்றுகோலை பயன்படுத்தி மிக மெல்ல அடிமேல் அடிவைத்து நடப்பார். கால்களில் கட்டு போட்டிருப்பார். பலவகை வலிகள் உண்டு.  காரில் ஏறும்போது அவர் முதலில் ஏறிவிட்டு தன் வயிற்றை தன் கைகளால் அள்ளி தூக்கி காருக்குள் வைப்பார். விந்தையாக இருக்கும்.

இரண்டாவது இடர், அவர் சினிமா தயாரித்தது. எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கத்தில் 2000 த்தில் வெளிவந்த ஒரு செறு புஞ்சிரி என்னும் படம். அதன் கதை சி.வி.ஸ்ரீராமன். திரைக்கதை எம்.டி.வாசுதேவன் நாயர். வேறொருவர் தயாரித்து கால்வாசி முடிந்த படத்தை அவர் விட்டுச்சென்றுவிட்டார். ஏனென்றால் அது முழுக்க கலைப்படம். எம்.டி.வாசுதேவன் நாயரின் வணிகமதிப்புக்காக அவர் தயாரிக்க வந்தார். படம் விற்காது என தெரிந்ததும் சென்றுவிட்டார்.

எம்.டி.வாசுதேவன் நாயர் மனம் கலங்கியதை கண்ட ஜான் பால் அவரே அதை தயாரிக்க முன்வந்தார். ஜான் பாலுக்கு எம்.டி.வாசுதேவன் நாயர் மேல் இருந்த குருபக்தி அத்தகையது. விட்டுச்சென்றவர் ஏகப்பட்ட நிதியை அப்படம் மீது வாங்கியிருந்தார். அப்படத்தின் உரிமையை வாங்கியபிறகே ஜான் பாலுக்கு அது தெரிந்தது. ஜான் பாலின் மகள் ஜிஷா பேரில் தயாரிக்கப்பட்ட அப்படத்துக்காக அவர் தன் வீட்டை விற்க நேர்ந்தது. முழுப்பணமும் செலவுகணக்குமட்டுமே.

ஆனால் ஜான் பால் இருக்குமிடத்தில் வெடிச்சிரிப்புதான். எவரையும் எதையும் விமர்சிக்காமல் ஒருவர் மணிக்கணக்காக சிரிக்கச்செய்ய முடியும் என்பதை நான் ஜான் பாலின் பேச்சில் இருந்தே அறிந்தேன். வேடிக்கை நிகழ்ச்சிகள், விதவிதமான மனிதர்கள். நானும் போளச்சனும் இணைந்து ஒரு சினிமாவுக்கு எழுதினோம். அந்தப்படம் கைவிடப்பட்டது. எர்ணாகுளத்தில் ஜோளி ஜோசப் எனும் தயாரிப்பாளரின் உயர்தர ஓய்வுவிடுதியில் நான் ஒருமாதம் தங்கி அந்த திரைக்கதையை எழுதினேன்.

அது ஒன்பதாவது மாடியில் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட். மரைன் டிரைவ் நோக்கி திறந்திருக்கும் மாபெரும் கண்ணாடிச் சாளரம். மரைன் டிரைவின் மொத்த வளைகுடாவும் தெரியும். அது பருவமழை தொடங்கும் காலம். மழை திரண்டு இருண்டு வந்து கண்ணாடிச்சன்னலை அறைந்து மூடி நெளிந்தாடி அடங்கி வழிந்து ஓயும். மெல்லிய பொன்னொளி. அலையடங்கிய கடல் படிகவெளி போலச்  சுடர்கொண்டு ஒளிரும். மீண்டும் மெல்ல வானம் இருண்டு இருண்டு மூடத்தொடங்கும். என் வாழ்க்கையில் நான் மழையை மட்டுமே நேருக்குநேர் பார்த்தபடி இருந்த நாட்கள் அவை.

ஒவ்வொரு நாளும் போளச்சன் வருவார். என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். ஒன்றாகச் சாப்பிடுவோம். மாலையில் கிளம்பிச்செல்வார். பல எர்ணாகுளம் நண்பர்கள் வருவார்கள். சினிமாநண்பர்கள் இருப்பார்கள். அவர் பேசிக்கேட்டு  சிரித்துக்கொண்டே இருப்போம். பேச்சு நின்று மழையை பார்ப்போம். மீண்டும் சிரிப்பு. மழையொளியில் போளச்சனின் கண்ணாடிச் சில்லு ஜொலித்துக் கொண்டிருக்கும்.

போளச்சன் வாழ்க்கையின் துன்பம் என்பதே இல்லை. “என் அப்பா ஒரு புண்ணியாத்மா ஜெயா. அதனால் என் வாழ்க்கையில் ஒரு துளி துன்பம் கூட இல்லை” என்றார்

”அப்படியா? மனைவியின் நோயில் நீங்கள் துன்பப்படவில்லையா?”

“இல்லை. வருத்தம் இருந்தது. செய்யவேண்டியதைச் செய்தேன். தொடர்தூக்கமின்மையால் உடம்பு கெட்டது. ஆனால் நான் துன்பப்படவே இல்லை. அப்போதும் இதே சிரிப்புதான். நான் வேலூர் ஆஸ்பத்திரியில் இருப்பேன். பரதன் என்னைக் கூப்பிட்டு ‘போளச்சா ஏதாவது பேசு. சோர்வாக இருக்கிறேன். கொஞ்சம் சிரித்தால் சரியாகிவிடும்’ என்பார். நான் பேசுவேன்”

மலையாள சினிமாவின் பல புகழ்பெற்ற நகைச்சுவைப் பகுதிகள் போளச்சனின் வேடிக்கைபேச்சுகளில் இருந்து உருவானவை. ஆனால் அவர் தன் படங்களில் நகைச்சுவை எழுதமாட்டார். சேர்க்கவும் ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் படங்களில் கோபி மறக்கமுடியாத சில வேடிக்கைக் கதாபாத்திரங்களை நடித்திருக்கிறார், ஆனால் அவை அன்றாடவாழ்க்கையின் இயல்புத்தன்மைக்குள்ள்யே இருக்கும். நகைச்சுவைக்கு தேவையான திரிபு அல்லது மிகை அவற்றில் இருக்காது.

போளச்சன் சாப்பிடுவதை பார்க்க ஆனந்தமாக இருக்கும். ஒரு சப்பாத்தியை இரண்டாகக் கிழித்து இரண்டு வாயில் தின்பார். பல சப்பாத்திகள், பல கோழிகள். பசி அவரை மெலிய விடவில்லை. அதற்கு எந்த மருந்தும் இல்லை.

”அடுத்த ஜென்மத்தில் நான் என்ன என்று எனக்கு தெரியாது. போன ஏழு ஜென்மத்தில் சமையற்காரன்” என்றார். “அவன்கள்தான் சமைப்பார்கள், ஆனால் சாப்பிடப்பிடிக்காமல் டீயை வைத்தே வாழ்க்கையை ஓட்டுவார்கள். இந்த பசி ஏழு ஜென்மத்தில் நான் ஒத்திப்போட்டது”

போளச்சனை போன்ற அதிதூய மனிதர் ஒரு படத்தில் கொடூரமான நிழல் உலக டான் ஆக மம்மூட்டிக்கு எதிராக நடித்திருக்கிறார் என்பது வேடிக்கைதான். ஆனால் பொதுவாக நல்ல வில்லன்கள் எல்லாருமே அவரைப்போல அப்பாவிகள்தான்.

போளச்சன் எவரைப் பார்த்தாலும் “எந்தாடோ, ஆள் அங்ஙு மெலிஞ்ஞு போயல்லோ” என்பார். நூறு கிலோ எடையுள்ள தயாரிப்பு உதவியாளர் குரியனிடம் அப்படிச் சொன்னபோது நான் “இவரையா சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“எடா, இவன் என்னைவிட முப்பது கிலோ எடை குறைவு” என்றார் போளச்சன். “உலகத்திலுள்ள அத்தனைபேரும் மெலிந்துபோயிருக்கிறார்கள். ஏனென்றே தெரியவில்லை”

போளச்சனுக்கு அவருக்கான ஆன்மிகம் உண்டு. மாதாகோயில் போவது, பிரார்த்தனை கேட்பது எல்லாம் வழக்கமில்லை. போளச்சன் சொல்லி புகழ்பெற்ற ஒரு வரி பின்னாளில் சினிமாவில் வந்தது. மத்தாயி சொன்னார்.  “மத்தாயி கள்ளு குடிக்கும். மத்தாயி பெண்ணு பிடிக்கும். கர்த்தாவே மத்தாயியோடு பொறுக்கணே. பொறுத்தில்லெங்கில் மத்தாயிக்கு மயிராணே” ( மத்தாய் கள்ளு குடிப்பேன். பொம்புளை தேடுவேன். கர்த்தரே மத்தாயியை மன்னிக்கணும். மன்னிக்காவிட்டால் மத்தாயிக்கு மயிரே போச்சு)

போளச்சனும் நானும் எழுதியது ஒரு அருமையான கதை. ஒரு சர்ச் வார இதழில் வந்த ஒன்றரை பக்கக் கதையை ஒட்டியது. ஒரு ஃபாதருக்கு ஒரு திருடன் ஃபோன் செய்கிறான். அவர் வாழ்க்கையை தலைகீழாக்குகிறான். ஆமாம், அதே திருடன்தான். வேடிக்கையாகச் சிரித்துக்கொண்டே எழுதினோம். பிருத்விராஜ் நடிப்பதாக இருந்தது. திருடன் கடைசியில் ஒரே ஒரு ப்ரேம்தான் வருவான்.

திருச்சபைக்கு போளச்சன் பல பணிகள் செய்திருக்கிறார். பல பக்திப்பாடல்களை இசையமைப்பாளர்களை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு எல்லா மதமும் சமம்தான். இந்து கோயில்களுக்குச் செல்வார். இந்துப் பாடல்களுக்கும் அதேபோல பணியாற்றியிருக்கிறார். “நமக்கு என்ன தெரியும்? கடைசியில் மேலே இருப்பது இந்து தெய்வம் என்றால் அங்கே போனபின் சிக்கலாகிவிடும்” ஒரு பேட்டியில் சாவு பற்றி சொல்கிறார். பரதன், பத்மராஜன் எல்லாரும் போய்விட்டார்கள். மேலே போனபின் சாவு பற்றிய கருத்தை டெலிபதி வழியாகச் சொல்வதாக ஒப்பந்தம் இருந்தது. சொல்லவில்லை, காத்திருக்கிறேன் என சிரிக்கிறார்.

போளச்சன் சென்ற ஏப்ரல் 23, என் பிறந்தநாளுக்கு மறுநாள் மறைந்தார்.எனக்குச் செய்தி தெரியாது. நான் நேற்றுத்தான் மின்னஞ்சல்களைப் பார்த்தேன். அவர் மறைந்தது பெரிய துயரை அளிக்கவில்லை. போளச்சன் சென்ற மார்ச் மாதம் கீழே விழுந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கே அவர் உடல்நிலை நலிவடைந்தபடியே இருந்தது. அவர் மறைந்துவிடுவார் என பத்துநாட்களுக்கு முன்னரே சொல்லப்பட்டிருந்தது.

போளச்சன் ஒரு மாதம் முன்னர் நள்ளிரவில் படுக்கையில் இருந்து எழுந்தபோது கீழே விழுந்துவிட்டார். அவரே செல்பேசியில் நண்பராகிய இளம்நடிகரை அழைத்து விஷயத்தைச் சொல்ல அவர் நண்பர்களுடன் போளச்சனின் வீட்டுக்குச்சென்றார். ஆனால் அவரை தூக்க முடியவில்லை. ஆம்புலன்ஸ் காரர்கள் பலமுறை அழைத்தும் வரவில்லை என்றும், தீயணைக்கும்படை வீரர்களை அழைத்தபோது அது தங்கள் வேலையல்ல என்று சொல்லிவிட்டதாகவும் அந்த இளம் நடிகர் குற்றம் சாட்டினார்.

ஆறுமணி நேரம் போளச்சன் தரையில் கிடந்தார். அவர் உடல் நடுக்கம் கொள்ள தொடங்கியது. விடிந்தபின் காவல்துறையினர் வந்து அவரை தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கே சிகிழ்ச்சைகள் ஒவ்வொன்றாக பயனற்றுபோயின. மம்மூட்டிக்கு மிக நெருக்கமானவர் போளச்சன். அவர் வந்து நின்று கவனித்துக் கொண்டார். ஆனால் முடிவு வகுக்கப்பட்டுவிட்டிருந்தது.

போளச்சன் அதே வெடிச்சிரிப்புடன் மேலே சென்றிருப்பார். அவருக்குப் பிரியமான ஏசுவிடம் “எந்தாடோ, தான் ஆளு மெலிஞ்ஞு போயல்லோடா” என்று சொல்லி தோளில் ஓங்கி தட்டியிருப்பார் என நினைத்துக்கொள்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2022 11:35

உரையாடும் காந்தி, கடிதம்

உரையாடும் காந்தி வாங்க 

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். நான் இங்கு நலம். தாங்களும் நலம்தானே?

சமீபத்தில் தங்களின் ‘உரையாடும் காந்தி’ நூலை இரண்டாம் முறையாக வாசித்தேன். அது குறித்த எனது பதிவு.

பெரும்பாலானவர்களைப் போலவே காந்தி எனக்கு பள்ளி செல்லும் வயதில் அறிமுகமாகினார். நினைவிருக்கிறது நான் நான்காம் வகுப்பு படிக்கையில் என் பள்ளியில் ‘Pick & Talk ‘ எனும் ஒரு போட்டி. தேசத்தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களை ஒரு சிறு காகிதத்தில் எழுதி குலுக்கி வைத்துவிடுவார்கள். அவரவர் எடுக்கும் சீட்டில் வரும் நபரை பற்றி ஓரிரு நிமிடம் பேச வேண்டும். நன்றாக பேசுபவர் வெற்றியாளர். நான் எடுத்த சீட்டில் இருந்தது ‘காந்தி’. அச்சமயம் வரலாற்று பாடத்தில் காந்தி குறித்து படித்திருந்தேன். அவரை குறித்த ஒரு 10 மதிப்பெண் வினாவும் இருந்தது. அதை அப்படியே நினைவில் இருந்து முழுவதுமாக ஆங்கிலத்தில் சொன்னேன். நான் படித்தது தஞ்சாவூரில் உள்ள ஒரு நடுத்தர ஆங்கில வழிக்கல்வி பள்ளியில். 1998ம் வருடம் என் பள்ளியில் வேறெந்த சிறுவனும் அவ்வாறாக ஆங்கிலத்தில் பேசியது கிடையாது. இதன் காரணமாக நான் வெற்றியும் பெற்றேன். அத்தோடு நிற்கவில்லை , அவ்வருடம் தொடங்கி நான் அப்பள்ளியில் படித்து முடித்த காலம் வரை அனைத்து ஆண்டு விழா ஆங்கில நாடகங்களிலும் மாற்றமே அன்றி நான் தான் கதாநாயகன். இவ்வாறாக காந்தி என் வாழ்வில் ஆர்பாட்டத்துடனேயே நுழைந்தார்.

அதன் பிறகு பத்தாம் வகுப்பு துவங்கி நான் கல்லூரி படித்து முடித்த காலம் வரை காந்தியை நான் எவ்வகையிலும் கண்டடைய வில்லை. தேடி வாசிக்கவுமில்லை. ஓரிரு வரலாற்றுத் தகவல்கள், அவர் கடைபிடித்த அகிம்சை முறை அன்றி பிற எதுவும் தெரியாது. நான் இருந்த சூழலில் அவரை குறித்த ஒரு சிறு உரையாடல் கூட நிகழவில்லை. அக்காலத்தில் மெல்லிதாக என்னிடம் வாசிக்கும் பழக்கம் துவங்கியது. இந்திய விடுதலை போராட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது. தேடி வாசிக்க துவங்கினேன். முதலில் படித்தது ராமச்சந்திர குஹாவின் ‘India after Gandhi’. தலைப்பிற்காகவே அப்புத்தகத்தை எடுத்தேன். அன்று காந்தி மீண்டும் என் வாழ்வில் நுழைந்தார்.

ராமச்சந்திர குஹா தர்க்க ரீதியிலாக ஒவ்வொரு நிகழ்வுகளாக சொல்லிச் செல்வார். வாசிப்பின் துவக்க காலத்தில் இருந்த எனக்கு அது மிகப்பெரும் ஆச்சர்யத்தை அளித்தது. தெளிவாக வரலாற்றை புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்த காலம். அப்போது நான் வாசித்தவற்றை பற்றி என் உற்ற நண்பர்கள் இருவரிடம் பேசினேன். அதில் ஒருவர் தொடக்கத்திலேயே  ‘நான் காந்தியை மகாத்மாவாக ஏற்றுக்கொள்ளவில்லை’ என்றார். இன்னொருவர் ‘ பிரம்மச்சரிய பரிசோதனைக்காக வயது வித்தியாசம் பாராமல் பெண்களை பயன்படுத்திய காந்தியை எவ்வாறு தேச தந்தை என்று கூறமுடியும். மேலும் அவரும் காலன்பேக்கும் ஓரின சேர்க்கையளர்கள் என ஒரு சொல் இருக்கிறது ’ என அடுக்கடுக்காக வாதங்களை அடுக்கிச் சென்றார். இறுதியாக ‘உனக்கு தெரியுமா காந்தி அவரின் வாரிசுகளுக்காக எவ்வளவு சொத்து சேர்த்து வைத்து சென்றிருக்கிறார் என’ என்றார். நான் அப்பொழுது முழுவதுமாகவே சொல்லற்று போனேன். கல்லால் அடிபட்ட நாய் ஒருவாறு வீலிட்டுக்கொண்டு ஓடுமே அவ்வாறு மனம் ஓடிக்கொண்டிருந்தது. ‘அது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. எவ்வளவு இருக்கும்’ என்றேன் பரிதாபமாக. ‘அது இருக்கும் பல ஆயிரம் கோடிகளுக்கு மேல். அனைத்தும் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. பத்து தலைமுறைகளுக்கு கவலை இல்லை. இது எதுவும் அறியாமல் அவரை பற்றி தெரிந்து கொள்ள கிளம்பிவிட்டாயா. போ, போய் உன் வாழ்க்கையை பார் முதலில்’ என்று முடித்தார்.

அன்று இரண்டு பாதைகள் என் முன் இருந்தன. ஒன்று தர்க்க ரீதியில் வரலாற்று உணர்வோடு அவரை அணுகுவது, இன்னொன்று இது போன்ற உதிரி தகவல்கள், செவிவழிச் செய்திகள் வழியாக அணுகுவது. இரண்டாவது பாதையில் நான் பார்த்தது வெறும் காழ்ப்பே ஆனாலும் கேட்பவரின் சிந்தனையை  தீவிரமாக சீண்டக்கூடியவை இவை. உண்மை தானோ என மயக்குவதும் கூட.   Online-னிலும் இரண்டாவது வகையைசேர்ந்த தகவல்களே உடனடியாக கண்ணில் பட்டது. இவை எல்லாம் நடந்தது 2014ல். இருந்தும் ஒன்றை மிக ஆழமாக நம்பினேன். இந்நாடு தன் பல ஆயிரம் வருட வரலாற்றில் பல துறவியரை , ஞானியரை  பார்த்திருக்கிறது. மூன்று பெரும்மதங்கள் தோன்றியிருக்கின்றன. பல ஆயிரம் வருட ஞான மரபுத் தொடர்ச்சி இருக்கிறது. இவ்வாறிருக்க இம்மண்ணில் முழுவதுமாக ஒரு பிம்பத்தை போலியாக கட்டமைத்துவிட முடியாது. அப்படியே  செய்தாலும் அதை இத்தனை வருடங்களாக நிலை நிறுத்தியிருக்க முடியாது. இதை அன்று வாசிப்புப் பழக்கம் இல்லாத என் இயல்பான இந்திய மனம் சொன்னது. அன்று முடிவெடுத்தேன் முதலில் காந்தியை அறிந்து கொள்ள சத்திய சோதனையில் இருந்து துவங்கவேண்டும் என்று.

சத்திய சோதனை வாசிப்பு எனக்கு உண்மையான காந்தியை காட்டியது. அதை  ஆத்மாவுடனான ஒரு உரையாடலைப் போல, காந்தியே அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன். பல பகுதிகளை கண்ணீர் இன்றி படிக்க முடியவில்லை. எனினும் என் நண்பர்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லத்தெரியவில்லை. அதாவது நான் நன்கு உணரக்கூடிய ஒன்று ஒரு கருத்தாக, மொழியாக திரளாமல் எண்ணமாக மட்டுமே எஞ்சியிருந்தது. இந்த இடைவெளியை நிரப்பியது தங்களின் ‘இன்றைய காந்தியும்’, ‘உரையாடும் காந்தியும்’.

இவ்விரு புத்தகங்களிலும் நான் எதிர்கொண்டதை விட தீவிரமான , பல தளங்களில் இருந்து எழுந்த விரிவான கேள்விகளும் அவற்றுக்கான தங்களின் பதில்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘இன்றைய காந்தி’ வாசித்ததன் பிற்பாடு ‘உரையாடும் காந்தி’யை எடுத்தேன். துவக்கத்திலேயே சொல்லிவிட்டீர்கள் காந்தியை எவ்வாறு அணுகவேண்டும் என்று. விவாதம் மற்றும் உரையாடலுக்கான வேறுபாட்டை ஓரிரு வரியில் மட்டுமே சொல்லியிருந்தாலும் அந்தப் பதிவு இந்நூலை வாசிக்கையில் முழுவதுமாக என்னோடு பயணித்து வந்தது. அனைத்து பதில்களும் வரலாற்று தரவுகளோடு, இந்திய பெருமரபின் பல்வேறு கிளைகளை தொட்டு தெளிவாக அளிக்கப்பட்டிருந்தது. பதில்களின் இறுதியில் தங்களின் பதிவு அல்லது காணோட்டம். ஒரு சராசரி இந்தியனுக்கு அந்தக் கடைசி பதிவே போதும். கிட்டதட்ட அனைவருமே வெவ்வேறு வகையில், வெவ்வேறு அகமொழியில் அறிவது இது. எனினும் பிற தகவல்களுக்கான தேவை இக்காலத்தில் மிக அதிகமாக இருப்பதாக எண்ணுகிறேன். இணையத்தின் வளர்ச்சியில் அனைத்து ஆளுமைகளும் வெட்டவெளியில் நிற்கின்றனர்.அவ்வழியே வருவோரும் போவோரும் அவர்களின் மீது ஏதோ ஒன்றை உதிர்த்துவிட்டோ இல்லை  வீசிவிட்டோ செல்கின்றனர். இவை அனைத்தையும் மீறி அந்த ஆளுமையை புரிந்து கொள்வதற்கு பிற தகவல்கள் தேவை ஆகின்றன.

ஓஷோ, மார்ட்டின் லூதர் கிங் , மார்ஸ் மற்றும் காந்தி என இவர்களின் சிந்தனை போக்குகள், அதன் முரணியக்கங்கள் குறித்த பதில்களும் சிறப்பானவை. ஒவ்வொருவரைப் பற்றிய  சித்திரத்தை உருவாக்கி கொள்வதற்கும், மேலதிகமாக தெரிந்துகொள்வதற்கான ஆர்வத்தையும் வழங்குகின்றன.

இந்நூலை வாசிக்கையில் மனித மனம் செயல் படும் விதம் பற்றி தான் யோசித்துக்கொண்டிருந்தேன். யாராக இருந்தாலும் மனம் அவர்களை எதிர்மாறையாகவே அணுகுகிறதோ? காந்தி என்றால் மேற்சொன்னது உட்பட இன்னும் பிற  காழ்ப்புகள், நேரு என்றால் ‘பெரும் செல்வந்தர், பெண் பித்தர்’, வல்லபாய் படேல் என்றால் ‘அவர் ஒரு இந்துத்துவர்’, விவேகானந்தர் என்றால் ‘அவரால் விந்தணுவை வாய் வழியாக துப்பி விட முடியும்’ , சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங்க் என்றவுடன் மாற்றுச் சிந்தனை இன்றி அவர்கள் மேல் உடனடியாக பதிந்துவிடும் நாயக பிம்பம். இவ்வாறாக எண்ணி எண்ணி ஒரு இந்தியன் அடைவது தான் என்ன. நம்மை சுற்றிலும் உள்ள நாடுகள் பொருளாதாரத்தில், பாதுகாப்பில், பல உட்சிக்கல்களில் இன்னும் தத்தளித்துக்கொண்டிருக்க நாமோ சௌகரியமாக அமர்ந்து தேவையில்லாத வீண் அவதூறுகளை மட்டும் பகிர்ந்து வருகிறோம்.

‘உரையாடும் காந்தி’ அளிப்பது காந்தி குறித்த புரிதல்களை மட்டும் அல்ல, சிந்திக்கும் முறையையும், பயிற்சியையும் கூடத் தான். மனம் இனி ஒருபோதும் காரணமற்ற வீண் விவாதங்களில் சிக்கிக்கொள்ளாது. அடிப்படை தரவுகள் அன்றி ஒரு ஆளுமையை உயர்த்திப்பிடிக்கவோ, மட்டம்தட்டவோ செய்யாது. எவ்வித நிலையை எடுத்திருந்தாலும் அது உரையாடலுக்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கும்.

இவையனைத்திற்கும் மேலாக சொல்வதற்கு ஒன்றுள்ளது. ஒரு கனவு. அதில் நானும், நண்பர் பாலசுந்தரும் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்துக்கொண்டிருந்தோம். ஒரு நிறுத்தத்தில் காந்தியும் , கஸ்துரிபாவும் ரயில் ஏறினர். நான் அமர்ந்திருந்ததால் எழுந்து காந்தி உட்கார இடம் கொடுத்தேன். என்னை பார்த்து மெல்லிதாக புன்னகைத்தார். பின்னர் அவர் அமர்ந்துகொள்ள நான் அவர் அருகில் நின்று கொண்டேன். ரயில் சென்றுகொண்டிருந்தது.

காந்தி இன்னும் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்ற எண்ணமே  ஒவ்வொரு கணமும் என் கண்களில் நீர்கோர்க்கிறது. ஆசிரியரே, காந்தியை பற்றி புரிந்து கொள்வதற்கு உதவிய தங்களுக்கு என் நன்றிகள்.

பி.கு : ஒரு வருடத்திற்கு முன் தங்களை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடந்த ‘கல் எழும் விதை’ நிகழ்வில் சந்தித்து ‘இன்றைய காந்தி’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். எதேச்சையாக இன்று ‘உரையாடும் காந்தி’ குறித்து உங்களுக்கு எழுதுகிறேன்.

இப்படிக்கு,

சூர்ய பிரகாஷ்

பிராம்ப்டன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2022 11:34

வடுக்களும் தளிர்களும்

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022

அன்புள்ள ஜெ,

ஆனந்த்குமார் கவிதைகளைப் பற்றிய உங்கள் குறிப்புகளை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். அவருடைய தொகுப்பை இன்னும் வாங்கவில்லை. விருதுச்செய்திகளை பார்த்த பிறகு அவர் கவிதைகளை இணையத்தில் தேடிப்படித்தேன். மிக எளிமையானவை. ஆனால் மனதை மிக இயல்பாக ஆக்கி கற்பனையை தூண்டுவிடுபவை.

எல்லா இலையும்

உதிர்ந்த பின்னும்

மரம் எதை

உதறுகிறது?

அது

நினைத்து நினைத்து

சிலிர்க்கும் இடத்தில்தான்

மீண்டும் சரியாகத்

துளிர்க்கிறது

என்னும் வரி ஆச்சரியமான ஒன்று. இதிலுள்ள timelessness தான் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. காலம்கடந்தது என்று சொன்னால் இந்தக்கவிதை அப்படியே சங்கப்பாட்டில்கூட வைக்கலாம் இல்லையா? இதில் இரண்டு timeless அம்சங்கள் உள்ளன. இந்த இயற்கை வர்ணனை timeless ஆனது. அத்துடன் இது சொல்லும் ஓர் உணர்வு உள்ளது இல்லையா, அதுவும் timeless ஆனதுதான். இலைகளை உதிர்த்தபின்னரும் மரம் உதறிக்கொண்டே இருப்பது இழந்த இலைகளின் நினைவை. அதன்பின் நினைத்து நினைத்துச் சிலிர்ப்பது அந்நினைவுகளின் ஏக்கத்தை. அதை நினைத்து நினைத்துச் சிலிர்க்கும் இடங்களில்தான் அது மிகச்சரியாக பூக்கிறது.

நான் இந்தக் கவிதையை அப்படியே காட்சிப்படுத்திக்கொண்டே இருந்தேன். இந்த கோடையில்தான் நாம் மரங்கள் தளிர்ப்பதை அவ்வளவு தெளிவாக பார்ப்போம். மரம் தளிர்த்துக்கொண்டேதான் இருக்கும். ஆனால் கோடையில் தளிர்விடும் புங்கம் மாதிரியான மரங்களுக்குத்தான் ஒட்டுமொத்தமாக தளிர்விடும் தன்மை உண்டு. மற்ற மரங்கள் காய்ந்து நிற்பதனால் அது நம் கண்ணுக்கும் தெளிவாகத்தெரியும்.

புங்கமரம் தளிர்விட்டு தளிர் நமக்கு தெரிவதுக்கு 3 நாள் ஆகும். ஆனால் முதல் நாளிலேயே ஒரு மெல்லிய பச்சை fungi போல ஒரு பூச்சு கிளைகளின் முனைகளில் இருக்கும். அது ஒரு வகையான சிலிர்ப்பு என்று இந்தக் கவிதை சொல்கிறது. இழந்த இலைகளை நினைத்து உருவானது. அந்த இலைகளே திரும்ப தளிர்களாக வந்துவிடுகின்றன.

“உதிர்ந்த ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு வடுவாக எஞ்சுகிறது

வடுக்களுக்கு மேல் முளைக்கின்றன புதிய தளிர்கள்”

என்று ஒரு உருது கவிதை உண்டு. பெய்ஸ் அகமது பெய்ஸ் என நினைக்கிறேன். அந்த வரிகளை ஞாபகப்படுத்தியது இந்தக் கவிதை.  என் அனுபவங்களில் இருந்து இந்த உதிர்தலையும் முளைத்தலையும் உறவுகளாகவே புரிந்துகொள்கிறேன். உறவுகள் உதிவதும், எஞ்சுவதும், மீண்டும் முளைப்பதும்தான் வாழ்க்கை. வாழ்க்கை முழுக்க இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

நான் மொழிபெயர்த்த கவிதைகள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். நான் கவிதை எழுதுவதில்லை. ஆனால் கவிதை மொழிபெயர்ப்பதே எனக்கு கவிதை எழுதுவதற்குச் சமானமான மனநிலையை அளிக்கிறது.

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்

நன்று. உண்மையில் ஓவியங்களை நகல்செய்வது, பாடல்களுடன் சேர்ந்து பாடிக்கொள்வது போல கவிதைகளை மொழியாக்கம் செய்வதும் கவிதைகளை மிக ஆழமான அனுபவிக்க ஒரு சிறந்தவழி.

ஆனால் செப்பனிட்டுக்கொண்டும் இருக்கவேண்டும்

“உதிர்ந்த ஒவ்வொரு இலையும் வடு

மேலே முளைக்கின்றன புதிய தளிர்கள்”

என்று அந்த மொழியாக்கத்தை சுருக்கமாக அமைக்கையில் இன்னொரு ஆழம் நமக்கு அமைகிறது

ஜெ

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு

டிப் டிப் டிப் வாங்க டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2022 11:31

பறவைக் கணக்கெடுப்பு- கடிதம்


உலகம் எத்தனை அழகானது என நான் உணர்ந்தது முதல்முறை மூக்குக்கண்ணாடி அணிந்தபோதுதான். மீண்டும் அவ்வாறு உணர்ந்தது சமீபத்தில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புக்காக பறவைகளின் உலகுக்குள் நுழைந்தபோது. நீங்கள் தளத்தில் பிரசுரித்த வெங்கடேஸ்வரனின் கடிதம் ஒரு புது உலகை அறிமுகம் செய்துவைத்தது.

பார்வையை சற்றே இழந்து பெறுவதன் இன்பம் அபாரமானது. பெரும்பாலானோர் உணர்ந்திருக்கக்கூடியது.  மூக்குக்கண்ணாடிக்கான தேவை வந்தபிறகும் பல நாட்களுக்கு நான் அதனை தவிர்த்திருந்தேன். சற்று மங்கலான, கூர்மழுங்கிய உலகமே கண்களுக்கு பழகிவிட்டிருக்க வேண்டும். எனவே கண்ணாடி அணிந்தபோது அனைத்தும் கூர்கொண்டுவிட்ட உணர்வை அடைந்தேன். வடிவங்களும், வண்ணங்களும் துலங்கிப் பெருகின. மேகங்கள்கூட துல்லிய வடிவம்கொண்டன. இரவில் விண்மீன்களின் அடர்த்தி கூடியது. இலைகள் பளிச்சென கழுவி எடுத்ததுபோல இருந்தன.

இப்போது அதே அனுபவம் பறவைகளினூடாக கிடைத்தது. முன்பு பார்வை கூரிழந்தது போலவே புலன்களும் மழுங்கியிருக்கவேண்டும். சென்னையில் என் வீட்டின் சுற்றத்தை பறவைகள் தம் இருப்பால் நிறைத்திருந்தும் பலவருடங்களாக அவை சித்தத்தை எட்டவில்லை.  நெடுஞ்சாலையில் துயில்வோர் வாகன இறைச்சலை புறக்கணிப்பது போல பறவைகளின் குரல்களை முற்றிலும் புறக்கணிக்க பழகிவிட்டிருந்தேன். ஒரு பறவையைக் கூட நின்று கூர்ந்து பார்க்கவில்லை. திடீரென ஒரு வாரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளை அடையாளம் காணப்புகுந்ததில் புலன்களும் உள்ளமும் பறவைகளை நோக்கி கூர்கொண்டு குவியத்தொடங்கிவிட்டன.

சென்னைக்கு புலம் பெயர்வதற்கு முன் ஊரில் பறவைகள் தினசரி உணவில் ஒரு அம்சமாக இருந்தன. கொக்கு, மடையான், புறா, குயில், காடை, கவுதாரி, கானாங்கோழி, எல்லாம் வீடருகே கிடைக்கும் உணவுகள். அவ்வப்போது அலையாத்திக் காடுகளிலிருந்து நாரை. உணவுக்காக எனினும் இவற்றைப் பிடிப்பது சட்ட விரோதமானது என வன இலாகாவினர் துரத்திப் பிடிப்பது உண்டு.

ஆனால் மரவள்ளிக்கிழங்கின் உச்சபட்ச ருசி காச்சுலு எனப்படும் ஆறுமணிக்குருவியை குழம்பு வைத்து சேர்த்துக்கொண்டால் மட்டுமே வசப்படும் என்பதால் பலருக்கு கைது பற்றிய பயம் இரண்டாம் பட்சம்தான். சுவை மட்டும்தான் காரணமா என்று இப்போது யோசிக்கிறேன். ஊரில் இதை சாப்பிடுவார்கள் என்று சொல்லி காச்சுலு பறவையின் படத்தைக் காட்டினால், நகரத்திலிருக்கும் என் தங்கைகள் புறங்கையால் வாய்மூடி அலறுமளவு அதிர்ச்சி அடைகின்றனர். புத்தகங்களின் அட்டைப் படங்களில் இடம்பெறும் அளவுக்கு அழகு. ஹிந்தியில் இது நவ்ரங், ஒன்பது வண்ணங்கள் கொண்டது என்னும் பொருளில். வட இந்தியாவிலிருந்து வலசை வருவது. சமீபத்திய காணொளி  ஒன்றில் ப.ஜெகந்நாதன் சொன்னார் “வலசை என்பது நமக்குத்தான். அவற்றுக்கு நாடுகளின் அரசியல் எல்லைகள் தெரியாது, இயல்பான பயணத்தில் இருப்பவை”.

இவற்றையெல்லாம் பிடிப்பதற்கென தனிப்பொறிகள் இருந்தன. கண்ணிகள், வலைகள், விசைப் பொறிகள். சில அரிய உள்ளூர் கண்டுபிடிப்புகள் எல்லாம் இத்தகைய பொறிகளை மேம்படுத்தும் வகையில் அமைந்தவை. அவற்றின் நுட்பங்கள் பற்றி தனிப்புத்தகமே எழுதலாம்.  ஊரில் இப்போது யாரும் இவற்றுக்காக மெனக்கெடுவது இல்லை என நினைக்கிறேன். ஆட்டுக்கறி, கோழிக்கறி வாங்கிக்கொள்வது வழமையாகிவிட்டது.

உணவென எண்ணாது பறவைகளுக்கு கவனம் கொடுத்தது பள்ளி நாட்களில் வீட்டில் கூடுகட்டும் சிட்டுக்குருவிகள் மீது மட்டுமே. கல்லூரி சென்ற பிறகு மொத்த வெளி உலகத்தையும் பூட்டிவிட்டு கட்டிடங்களுக்குள், கணினிக்குள் புதைந்துகொண்டேன். வெளியில் வந்தபோது உலகை, பறவைகளை அவதானிக்கத் தேவையான புலன்கள் பயன்படாமல் மழுங்கியிருக்க வேண்டும்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பற்றிய வெங்கடேஷின் கடிதத்தை தளத்தில் பார்த்த பிறகு நான் மாலை நடை செல்லும் இடங்களில் இருக்கும் பறவைகள் சிலவற்றை பதிவிடலாம் என ஆரம்பித்தேன். செயல்முறை எளிதாக இருந்தது. கைபேசி மட்டுமே போதும். இரண்டு நேர்த்தியாக வடிவமைப்பட்ட பழுதற்ற செயலிகள்.  பொதுவாக நம் கவனத்தை சிதறடிக்க, நம்மை அடிமையாக்கவென்றே வடிவமைக்கப்பட்ட செயலிகள் போன்றவை அல்ல. மாறாக, Ebird மற்றும் Merlin செயலிகள் பறவைகளை நோக்கிக் கவனத்தை குவிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டவை. Ebird பறவைகள் கணக்கை பதிவுசெய்ய. Merlin  பறவைகளை அடையாளம் காண.

பறவைகள் கணக்கெடுப்பில் கிடைக்கும் அத்தனை தகவல்களையும் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் e-bird தளத்திலும் , Merlin செயலியிலும் திறந்து வைத்திருக்கின்றனர். மெர்லின் செயலியில் பறவைகளின் வாழிடங்கள் வண்ணங்கள் அவற்றின் அழைப்புகளின் ஒலிப்பதிவுகள் என அனைத்தும் உண்டு.  துவக்க நாட்களில் அந்த செயலியில் ஊர்ந்துகொண்டிருந்த என் இளையோன் சட்டென ஆர்வம் மேலோங்க “பறவைகள் பற்றி இவ்வளவு தகவல் இருக்கே,  இதில் நாம் எதையெல்லாம் சாப்பிடலாம்னு இருக்கா?” என்றான். நல்ல வேளை, “புறா இறைச்சியில் மார்பு இறைச்சியே மிகவும் சுவையானதாகும்.” என்று விக்கிப்பீடியாவில் இருப்பது போன்ற வரிகள் ஏதும் அதில் இல்லை.

Merlin செயலி தென் இந்தியாவில் மட்டுமே 500 பறவைகள் பற்றிய தகவல்களை படத்தோடு, அவற்றின் குரலோடு , வாழிடங்களையும் வலசை வரும் பாதைகளையும்கூட அடையாளப் படுத்தியுள்ளது. சமீபத்தில் பார்த்த அரிவாள் மூக்கன் என்ற பறவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது மட்டும் வடகிழக்கு சீனா எல்லையில். அங்கிருந்து தென்மேற்கு தமிழகம் வரை வந்துசெல்கிறது. அங்கிருந்து இங்குவரை என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானது என்கிறார் வனவிலங்கு உயிரியலாளர் முனைவர் ப.ஜெகன்னாதன். அனைத்துமே பறவைகளைப் பொறுத்தவரை அவற்றின் வாழிடமே. இந்தியப் பறவை என்றோ, சீனப் பறவை என்றோ அரிவாள் மூக்கனை வகுப்பது அபத்தமானது.

பெருங்கடலும் , பனிச்சிகரங்களும்கூட பறவைகளுக்கு பயணத் தடையாவதில்லை. மொத்த உலகையும் சிறகால் அளப்பவை. நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கோடுகளின் அபத்தத்தை உணர நாம் பறவைகளை நிமிர்ந்து பார்க்க வேண்டும்.

https://en.wikipedia.org/wiki/Black-headed_ibis#/media/File:Black-headed_Ibis_(Threskiornis_melanocephalus).jpg (பறவையின் படம் விக்கிப்பீடியாவில் ஹரிக்ரிஷ்ணன் என்பவருடையது)

எண்ணியதைவிட பல மடங்கு பறவைகள் என்னைச் சுற்றி இருப்பது ஒருநாள் நடையிலேயே தெரியவந்தது.  துல்லியமாக அடையாளம் காண வேண்டும் என்பது பறவைகள் கணக்கெடுப்பின் முதல் விதி. (அதற்கும் முந்தைய பொன்விதி கணக்கெடுப்புக்காக பறவைகளையோ , அவற்றின் வாழிடத்தையோ சலனப்படுத்தக் கூடாது என்பது). சரியாக அடையாளம் காண இயலாவிட்டால் அவற்றை பதிவேற்றாமல் விடுவதே சிறந்தது. அவற்றின் குரல், வண்ணங்கள், வடிவங்கள் என வரையறுக்காமல் அடையாளம் காண்பது கடினம். உதாரணமாக கொக்குகளில் மட்டுமே நான்கு வகைகள். உண்ணி கொக்கு தவிர மற்றவற்றை பிரித்தறிவதற்கு அவற்றிடையேயான நுண்ணிய வேறுபாடுகளை அறிந்திருக்க வேண்டும். பெரிய கொக்கின் அலகின் நிறம் பருவத்துக்கேற்ப மஞ்சளுக்கும் கருப்புக்கும் மாறுவது. கால் விரல்கள் மட்டும் மஞ்சளாக இருந்தால் அது சின்ன கொக்கு. ஆனால் அது எப்போதும் நீரில் கால் அமிழ்ந்தவாறுதான் காணக்கிடைக்கிறது. இன்னும் நான் சரியாக அடையாளம் காணமுடியாத சிட்டுக்குருவிகள் மட்டுமே பல உண்டு.

பறவைகளை அடையாளம் காண்பதில் உள்ள இடரே அதை ஒரு அபாரமான விளையாட்டாக்கியது. பின்னர் ஒரு புதிய பறவையை கண்முன் காண்பதும், அதை சரியாக அடையாளம் காண்பதும் இனிய நிறைவை அளிக்கத்தொடங்கின.

முதல் இரண்டு நாட்களில் அடையாளம் காண்பது மெல்ல பழகிவிட , மூன்றாவது நாள் இருபது வகையான பறவை இனங்களை அடையாளம் கண்டோம். அன்று பதிவேற்றிய பட்டியல் இது https://ebird.org/checklist/S100754306. என் தம்பி உள்ளூர் பறவைகள் பற்றி நன்கு அறிந்தவன். பார்த்த கணத்தில் அதன் தமிழ்ப் பெயரைச் சொல்லிவிடுவான். அந்த தமிழ்ப் பெயர்களைக் கொண்டு ஆங்கிலத்தில் பெயர் தேடிப் பிடிப்போம். நான் அப்பறவையின் கால் நிறம், கண் நிறம் தெளியும் வரை அதுதான் என ஏற்பதில்லை.  ஒருவழியாக இருவரும் ஒரே முடிவுக்கு வந்து சேர்ந்தால் மட்டுமே பதிவில் கணக்கேற்றுவது. என்னுடையது நத்தை வேகம் என்பான். நான் அது நிதானம் என்பேன்.

கணக்கெடுப்பின்போது ஒரு அறைதலாக நான் உணர்ந்தது, பறவைகள் தம் இருப்பை ஓய்வின்றி கூவி அறிவித்துக்கொண்டே இருக்கின்றன என்பதுதான்.  எங்கேனும் பறந்து செல்லும்போது கூட விளையாடக் கூடிவிட்ட சிறுமியர்போல ஊரையே நிறைத்துவிடும் கீச்சல்களுடன் பறக்கின்றன கிளிகள்.  நெடுந்தூரம் கேட்குமளவு நான் இங்கிருக்கிறேன் என முழங்குகின்றன செண்பகப்பறவைகள். எந்நேரமும் பாடலில் திளைத்திருக்கும் கருஞ்சிட்டுகள், தேன் சிட்டுகள், மைனாக்கள். உருவத்துக்கும் நிறத்துக்கும் இசைவில்லாத அலறலை எழுப்பும் பனங்காடைகள். பொதுவான இரைச்சல்களை சற்று புறக்கணித்துவிட்டு கூர்ந்து கேட்டாலே புறாக்கள் குனுகுவதை நாம் கேட்டுவிட முடியும். இக்குரல்களை முற்றிலும் புறக்கணிக்க நம் காதுகள் எப்படி பயில்கின்றன என்று இன்னும் வியந்தபடியே இருக்கிறேன்.

அப்படி பறவைகளின் பாடல்களை தொடர்ந்து கேட்கத் தொடங்கினால் பின் காதுகள் இயல்பாகவே அவற்றை ஈர்க்கத் தொடங்கிவிடுகின்றன. இந்த வருட புத்தகக் கண்காட்சியில் அரங்குகளுக்கு நடுவில் ஒரு குருவியின் சீரான பாடலைக் கேட்டு அரங்கினுள்ளேயே பரவசத்துடன் தேடி இறுதியில் கண்டடைந்தேன். அது ஒரு குழந்தையின் காலணி விசில்.

இந்த பறவைகள் கணக்கெடுப்பு அத்தியாயத்தின் உச்சம் என நீலக்கண்ணி என்றொரு அற்புதமான பறவையின் கண்களை நேர்நோக்கிய தருணத்தை சொல்வேன். ஏரிக்கரையில்  கருவேலம் புதர் மண்டியிருந்தது. அதிலிருந்து பத்தடி தூரத்தில் நின்றிருப்பேன். புதரினுள் முதலில் அசைவாக புலப்பட்டது மெல்ல கிளைகள்தோறும் தவ்வி வெளிக் கிளையில் வந்தமர்ந்தது. தலைசாய்த்து ஒற்றைக்கண்ணால் பார்த்தது. நான் பார்த்த பறவைகளில் நீலக்கண் அரிது. அந்த நீலம் அதன் கண்ணில் மிரட்சி துளிகூட இல்லை எனக் காட்டுவது. மூக்குகூட சற்றே நீலம் ஏறியதுதான். முன்பின் தெரியாதவர் வாசலில் நின்றால் “வாங்க” என்பதை விடுத்து “என்ன வேணும்” என்று கேட்பது போன்ற பாவனை. நான் ஒன்றும் சொல்லவில்லை, அசைவில்லாமல் நின்றிருந்தேன். ‘எனக்கு வேலை இருக்கிறது” என்ற தொனியில் திரும்பிச்சென்றது. சாம்பலும் நீலமும் என்ற இந்த கலவையை முன்னர் பார்த்ததே இல்லை. அதுவும் குயில் இனம்தான் என பின்னர் அறிந்தேன். காக்கை கூட்டைத் தேடாமல் தானே கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது.

பெரும்பாலான பறவைகள் நம்மை அருகே நெருங்கவிடுவதே இல்லை. கணக்கெடுப்புக்கு நடந்து செல்லும்போது நம்மைப் பார்த்து விலகிச்செல்லும் பறவைகளே மிகுதி. வெகு சில பறவைகள் மட்டுமே அணுக்கமாகின்றன.

எங்கள் வீட்டில் என் மகளின் கைக்கெட்டும் தூரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு கிளையில் தேன்சிட்டுகள் கூடுகட்டியுள்ளன. பளபளக்கும் கருநீலத் தலையும் , வெண்மஞ்சள் நிறமார்பும் நீண்டு வளைந்த அலகும் கொண்ட கை கட்டைவிரல் அளவேயான குருவி. ஒருநாள் அதன் கூட்டில் சாம்பல் முதுகும் வெண்மார்பும் கொண்ட குருவி வந்த அமர , ஒரே அமளி. என் இளையோன் இரண்டும் ஒரே கூட்டுக்காக சண்டையிட்டுக்கொள்வதைச் சுட்டிக்காட்டினான். பறவைகள் கணக்கெடுப்புக்காக அவற்றை அடையாளம் காணத்தொடங்கிய பின் அறிந்தோம். அவை இரண்டும் இணைகள். அந்த கண்களைக் கவரும் பளபளப்பான மின்னும் இறகுகள் கொண்ட குருவி ஆண். மங்கலான மற்றொன்று பெண். ஊதா தேன்சிட்டு வகைகளில் ஆண்கள் , இனப்பெருக்க பருவத்தில் மட்டும் மின்னும் ஊதா இறகுகளை வளர்த்துக்கொள்கின்றன. இத்தருணத்தில் மட்டும் இரண்டும் வேறு பறவைகள் என சந்தேகிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. வடிவம் மட்டுமே ஒன்று. குஞ்சு பொரித்த பின்னர் ஆண்கள் மீண்டும் பெண் குருவி போன்ற மங்கிய நிறத்துக்கு மாறிவிடுகின்றன.

இது ஊதா தேன்சிட்டு அலங்கரித்துக்கொள்ளும் சுழற்சி. தனியே பார்த்தால் இவை அனைத்தும் ஒரே இனம் என நம்பவே முடியாது. இனப்பெருக்க பருவத்தில் ஆண் பறவைகள் முழுதணிக்கோலம் கொள்கின்றன. படங்களின் காப்புரிமை இங்கே; https://ebird.org/species/pursun4

சென்னையிலிருந்து ஊருக்கு விழாவுக்காக சென்றபோது அங்கும் பறவைகளை கணக்கெடுப்பை தொடர்ந்ததில் , பார்த்த பறவை இனங்களின் எண்ணிக்கை ஐம்பதை எட்டியது. கணக்கெடுப்பை அறிமுகம் செய்த வெங்கடேஸ்வரனுக்கு இந்த அனுபவத்துக்காக நன்றி சொல்லி தனிமடல் அனுப்பினேன். அன்றே தொலைபேசியில் அழைத்தார்.  இன்று இத்தளம் வழியே இன்னொரு இளையோன் எனக்கு.

நான் இருக்கும் இடத்தில் இருந்து பைக் எட்டும் தூரத்தில் இருந்தார் வெங்கடேஸ்வரன். மறுநாள் காலை 6 மணிக்கு ஒரு கணக்கெடுப்பு நடத்த திட்டம் வைத்திருந்தனர். நானும் என் இளையோனும் அன்று அவர்களுடன் இணைந்துகொண்டோம்.  திரு நவநீதம் அவர்களும் உடனிருந்தது கணக்கெடுப்பின் நுட்பங்களை அறிய நல்வாய்ப்பாக அமைந்தது.

அன்று தேர்ந்தெடுத்த பகுதியில் நாய்களினால் ஆபத்து உண்டு என்பதால் நன்கு தெரிந்த பள்ளி மாணவர் ஒருவரின் உதவியுடன் அணுகினர். கூடவே கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், இதில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள். இரு நீர்நிலைகளை சுற்றி வந்தோம். எக்கச்சக்க பறவைகள். என்னுடைய பட்டியலில் 19 பறவைகள் அன்று பதிவேற்றினேன். அடையாளம் காணமுடியாதவற்றை படம் எடுத்துக் கொண்டோம். இயல்பாகவே அவ்வூரின் பறவைகளை அறிந்திருக்கும்  ஒரு இளையவரை இளம் சலீம் அலி என அடையாளப்படுத்தியுள்ளனர்.

எந்த ஒரு உலகியல் ஆதாயமும் இல்லாத ஒரு முன்னெடுப்பில் அவர்கள் காட்டும் தீவிரம் அபாரமானது. இளையோரை ஆக்கப்பூர்வமான திசைகளில் அழைத்துச்செல்லும் முயற்சியும், அதில் இளையோர் ஊக்கத்துடன் பங்கேற்பதும், அதில் காட்டும் தீவிரமும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. பெரும் நம்பிக்கையூட்டம் செயல்பாடு.

இன்னும் பெயர் உறுதியாகத் தெரியாத பறவைகளின் படங்களை நிபுணர்களுடன் தொடர்புகொண்டு அலசிக்கொண்டிருக்கின்றனர். உயிரியலாளர் முனைவர் ப.ஜெகன்னாதன் அவர்களை அழைத்து ஒரு காணொளி உரையாடல் ஒருங்கிணைத்தனர். யூடியூபில்பதிவேற்றப்பட்டுள்ளது  https://www.youtube.com/watch?v=YkbtgN4nlJc

பறவைகளை அறிமுகப்படுத்திக்கொள்ள பயனுள்ள ஒன்று. காட்டுமஞ்சரி என ஒரு உள்ளூர் இதழும் நடத்துகின்றனர். ஊருக்கென தனி இணைய தளம். அதில் வருடம்தோறும் பொங்கல் விளையாட்டுப்போட்டிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் கூட உள்ளன. நல்விதைகளை இளம் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மட்டும் நன்கு உணர முடிந்தது.

ஏற்கனவே நாங்கள் கணக்கெடுப்பில் பதிவு செய்த பட்டியலை அனுப்பியிருந்தேன். பறவைகளை அடையாளம் காண்பதில் இருக்கும் இடர்கள் பற்றி பேசியிருந்தோம். ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது “ஜெயமோகனின் வாசகர்கள் தீவிரமானவர்கள் என்று தெரியும். நிச்சயமாக யாரேனும் ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்த்தேன். நீங்கள் இந்த அளவு ஈடுபடுவது எதிர்பாராதது” என்றார் வெங்கடேஸ்வரன். ஆனால் நேரில் அவர்களின் ஈடுபாட்டைப் பார்த்தபோது அதில் துளியின் துமி அளவுதான் என்னுடைய ஈடுபாடு என உணர்ந்தேன். நாங்கள் சென்று சந்தித்ததில் அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. காலை தேநீரோடு சந்திப்பை முடித்துத் திரும்பினோம். இன்றும் பறவைகள் கணக்கெடுப்பின் பட்டியலை பகிர்கிறோம். தினசரி உரையாடல் தொடர்கிறது.

பறவைகளை கணக்கெடுக்க செல்லுமிடங்களில் கணக்கெடுத்தால் காசு கொடுப்பார்களா என்ற கேள்வியை ஒருசில சமயம் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இல்லை, இது வேறு, இது ஆராய்ச்சிக்காக என்று விளக்குவேன். பறவைகள் கணக்கெடுப்பின் வழியே என்ன அடைந்தேன் என்று திரும்பிப்பார்க்கிறேன். பறவைகள் பற்றிய ஆராய்ச்சிக்கு நம்மால் இயன்ற உதவி என்ற நிறைவு. நல்ல தீவிரமான நேர்நிலை எண்ணங்கள் கொண்ட வெங்கடேஸ்வரன் மற்றும் நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். பறவைகள் பற்றிய அறிதல் விரிவாகியிருக்கிறது. ஒவ்வொரு கணக்கெடுப்பும் ஒன்றையே நோக்கிய குவியம் கொண்ட செயல்பாடு என்ற வகையில் தியானம்தான். என் மகள் எப்போது வெளியில் இருந்தாலும் பறவைகளைப் பார்த்து அடையாளம் காண்கிறாள். என் இளையோருக்கு இதை அறிமுகம் செய்து , “அதிக பறவை இனங்களைப் பார்த்தவர் யார்”  என்று ஆரோக்கியமான ஒரு போட்டி தொடங்கியது – பங்கேற்பாளர்கள் அருகிவிட்டனர் – ஆனாலும் நிறுத்துவதாயில்லை. ஆக, ஏராளமாக அடைந்திருக்கிறேன். அந்த ஒரு கடிதத்துக்காக வெங்கடேஸ்வரனுக்கு மீண்டும் நன்றிகள்.\

விடுப்பு முடிந்து சென்னை வந்து வணிக உலகுக்குத் திரும்பி கணக்கெடுப்பு சற்று மட்டுப்பட்டது. மனம் மெல்ல வானை பறவைகளுக்கே விட்டுவிட்டு தரையிறங்கிவிட்டது. அவ்வளவுதான். அது ஒரு எழுச்சி. வழக்கம்போல அலை அடங்கிவிட்டது என்று நினைத்தேன். ஆனால் மாற்றம் சற்றேனும் நிரந்தரமாக தங்கிவிட்டது. முக்கியமாக காலையில் விழிப்புக்கும் உறக்கத்துக்கும் இடையில் ஊஞ்சலாடும்போது பறவைகளின் அழைப்பை உணர முடிகிறது. சற்று ஆபத்தானது எனினும் வாகனம் ஓட்டும்போதுகூட கண்கள் பறவைகளைப் பின்தொடர்வதை கட்டுப்படுத்த முடிவதில்லை. ஒரு புத்தகத்தை வாசித்து முடிப்பவன் வாசிக்க ஆரம்பித்த அவனாக திரும்ப முடியாது என்பர். மிகச் சிறிய அளவில் எனினும் அவன் என்றென்றைக்குமாக மாறிவிடுகிறான். பறவைகளின் உலகும் அப்படியே. அதை ஒருமுறை கண்டவர்கள் முழுவதும் திரும்பிச் சென்றுவிடமுடியாது என்றே நினைக்கிறேன். சிறகை சுமையாக எண்ணும் பறவை இருக்கக்கூடுமா என்ன?

இதனால் உலகியல் ஆதாயம் இல்லை, ஆனால் உலகுக்கு ஆதாயம் உண்டு என  வாசிக்கும்போதே உள எழுச்சி கொள்ளும் நண்பர்கள் இங்கு உண்டு என அறிவேன். அனைவரையும் பறவைகளின் உலகுக்கு அழைக்கிறேன்.

நன்றி
பா.விஜயபாரதி
சென்னை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2022 11:31

April 25, 2022

பெண்கள்,காதல்,கற்பனைகள்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 1 – அருண்மொழிநங்கை

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 2 – அருண்மொழிநங்கை

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 3 – அருண்மொழிநங்கை

அருண்மொழி எழுதிய கட்டுரைகளை பார்த்தேன், படித்தேன் என சொல்லமுடியாது. அது ஒரு வகைக் கூச்சத்தை அளிக்கிறது. அதிலுள்ளவன் வேறு எவரோ என தோன்றுகிறது. அதிலுள்ள அருண்மொழி படங்கள் அழகாக இயற்கையாக உள்ளன. என் படங்களைப் பார்த்தால் மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்துவிடத் தோன்றுகிறது.

முப்பது நண்பர்களுக்குமேல் மின்னஞ்சல் செய்து அருண்மொழி எங்கள் காதல் – திருமணம் பற்றி எழுதியவை நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அதில் பலர் இளைஞர்கள். பலருக்கு தங்கள் மனைவி, திருமணம் பற்றி கற்பனாவாதக் கனவுகள் இருப்பது தெரியவருகிறது. அக்கனவுகளை இந்தக் கட்டுரைகள் கிளறுகின்றன.

வந்த கடிதங்களில் இருந்து ஒரு ஃபார்முலாவை உருவாக்கலாமென்றால் இப்படிச் சொல்லலாம். கடிதமெழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் ஆகாத, கலையிலக்கிய ஆர்வமும், இலட்சியவாத நோக்கமும் கொண்ட, இளைஞர்கள். சிலர் திருமணமான அத்தகைய ஆண்கள். கடிதமெழுதிய பெண்கள் அனைவருமே திருமணமாகி, சில ஆண்டுகள் சென்றவர்கள். ஒருவர் கூட திருமணமாகாத பெண் இல்லை.

இதுதான் யதார்த்தம், ஆண்கள் இதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். நம் சூழலில் கலையிலக்கியங்களில் முதன்மையார்வம் கொண்டு அவற்றுக்காக உலகியல் வாழ்க்கையில் விட்டுக்கொடுக்கும் மனநிலை கொண்ட திருமணமாகாத இளம்பெண்கள் அரிதினும் அரிதினும் அரிதினும் அரிதானவர்கள். லட்சத்தில் ஒருவர் என்றே சொல்லத்துணிவேன்.

நானே சென்ற நாற்பதாண்டுகளில் ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்த்திருக்கிறேன், அவளை திருமணம் செய்துகொண்டேன். வேறு யாராவது இருக்கிறார்களா என எனக்கு தெரியாது. இருக்கலாம், நான் பார்த்ததில்லை. யாரும் சொல்லி கேள்விப்பட்டதுமில்லை.

ஆனால் அதுவே இயல்பானது, உலகியல்ரீதியாக  நிலைபெற்று வரும் ஒரு சமூகத்திற்கு அதுவே நல்லது. பெண்களின் உள்ளுணர்வு வலுவான நிலையான குடும்பத்தையே கணக்கிடுகிறது, அத்தகைய குடும்பமே அடுத்த தலைமுறை நல்ல கல்வி கற்று வாழ்க்கையில் வெல்வதற்கு இன்றியமையாதது. அருண்மொழி எடுத்தது மிகப்பெரிய ‘ரிஸ்க்’ என்றுதான் இப்போது தோன்றுகிறது. கொந்தளிப்பும் நிலையின்மையும் கொண்ட ஒருவனை அவனுடைய கலையின் பொருட்டு திருமணம் செய்துகொள்வதும், அதை நம்பி குடும்பத்தை அமைக்க முயல்வதும் ஒருவகையான மிகைசாகசங்கள். தலைகுப்புற விழுவதற்கே வாய்ப்பு மிகுதி.

(அதை அன்றே சங்க இலக்கியத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள். துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும்’ என. அருகே உறுதியான பாறை இருந்தும் மாணைக்கொடி ஒன்று தூங்கும் யானைமேல் படர்ந்து ஏறியது என. சில மாணைக்கொடிகளுக்கு அறிவு குறைவு)

வண்ணதாசனின் கதை ஒன்றில் ‘எழுத்தாளன் போன்ற’ ஒருவனை நம்பி, ஓர் உள எழுச்சியில் அவனை காதலித்து மணந்து, வாழ்நாள் முழுக்க அவனுடைய ஊதாரித்தனத்தையும் குரூரத்தையும் சந்தித்து அலைக்கழியும் புட்டா என்னும் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லியிருப்பார். சுந்தர ராமசாமி அக்கதையை சுட்டி ‘இப்போதுகூட பெண்கள் இப்படி ஏமாறுகிறார்களா’ என்று எழுதியிருந்தார். அது அந்தப்பெண்ணின் ஒரு தகுதி, அது சூறையாடப்படுகிறது. அது ஒரு நிதர்சனம்.

ஓர் எழுத்தாளன் காதலித்து திருமணம் செய்யும் பொழுதில் அவன் எழுத்தாளனாக மலர்ந்திருப்பதில்லை, அவன் ஒரு சாத்தியக்கூறு மட்டுமே. நான் மிக இளமையில் எழுத வந்தவன். ஆனால் நான் அருண்மொழியை காதலிக்கும்போது ரப்பர் என்னும் ஒரு நாவல் மட்டுமே வெளிவந்திருந்தது. சிலகதைகள் அச்சாகியிருந்தன. எழுத்தாளன் என்னும் தகுதி அவ்வளவுதான். ஒருவனை முழுமையாக மதிப்பிட அது போதுமா?

ஆகவே இளம்பெண்களின் மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன். அவர்களும் ஆளுமை உருவாக்கம் நிகழா நிலையில் இருப்பவர்கள். அவர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் சூழலில் இருந்து அவர்களுக்குக் கிடைப்பவை. ‘நாலுபேர் சொல்லி’ உருவாக்கிக்கொண்டவை. அந்த ‘நாலுபேர்’ எண்ணி ஏங்குமளவுக்கு ஒன்றை அடையவே அவர்கள் கனவு காண்பார்கள். அவை முழுக்க முழுக்க பொருளியல்தகுதியை மட்டுமே சார்ந்தவை. தோற்ற அழகு கூட அவர்களுக்கு முக்கியம் அல்ல.

(அவ்வாறன்றி, இவ்விதியை மீறி பொருளியலை பொருட்படுத்தாமல் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்கள் உண்டு. ஆனால் அது மிகப்பெரும்பாலும் அந்த ஆண் முழுமூச்சாக முயன்று, அந்தப்பெண்ணைச் சூழ்ந்துகொண்டு வெல்வதன் வழியாகவே நிகழ்கிறது. அந்த முற்றுகையை பெரும்பாலான பெண்களால் வெல்ல முடிவதில்லை. அத்துடன் அவ்வாறு ஒருவன் தனக்காக முழுவெறியுடன் முயல்வது பெண்ணின் அகங்காரத்தை குளிரச்செய்கிறது)

நம் சூழலில் எதையாவது, அதாவது மில்ஸ் ஆன்ட் பூன்  அல்லது ரமணி சந்திரனாவது, வாசிக்கும் இளம்பெண்களே பற்பல ஆயிரத்தில் ஒருவர். மொத்த தமிழகத்திலும் பத்தாயிரம்  பேர் தேறலாம். அவர்களில் இருந்து இலக்கியம் அல்லது கலைகளில் ஆர்வம் கொண்ட ஒருவரை கண்டடைவதென்பது எளிதல்ல. அவர்களுக்கும் கலைகள் அல்லது இலக்கியத்தில் முதன்மையார்வம் இருப்பதும் அதன்பொருட்டு வாழ்க்கையை அமைக்கத் துணிவதும் அதனினும் அரிது. அனேகமாக சாத்தியமே இல்லை என்பதையே இப்படிச் சொல்கிறேன்.

ஆகவே அத்தகைய இலட்சியக் கனவுகளுடன் ‘லாந்திக்கொண்டிருப்பது’ ஒரு இளமைக்கால விருப்பக்கனவு என்னும் வகையில் கொஞ்சநாளைக்கு நல்லது. அதன் பின் இளைஞர்கள் மண்ணுக்கு வந்து இயற்கையின் நெறிகளின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே உகந்தது.

ஒன்றைக் கவனிக்கிறேன், என் இளம் நண்பர்களில் பலர் கலையிலக்கிய ஆர்வமெல்லாம் இல்லாத, ஆனால் சூட்டிகையான பெண்களை மரபான முறைப்படி திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். எல்லா திருமணங்களையும்போல ‘கணக்கு பார்த்து’ நடத்தப்பட்ட திருமணங்கள் அவை. அந்தப்பெண்களும் வேலை, சம்பளம், சமூகநிலை ஆகியவற்றை மட்டுமே பார்த்துத்தான் அவர்களை மணம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் பின்னர் அவர்களுக்கு இடையே உருவாகும் நட்பு, நம்பிக்கை ஆகியவற்றால் அவர்களை கலையிலக்கிய உலகுக்குள் கொண்டு வர முடிந்திருக்கிறது.

அப்படி உறுதியாகச் சாத்தியம் என்று நான் சொல்ல வரவில்லை. இருக்கும் சாத்தியங்களில் அதுவே பெரியது என்று சொல்ல வருகிறேன். பெண்களுக்கு ஆண்களுக்காக கொஞ்சம் வளையும் இயல்பு உண்டு. வலுவான ஆணின் ஆளுமையை அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். ஆனால் வற்புறுத்த முடியாது, வற்புறுத்தினால் உறவுதான் சிக்கலாகும்.

*

பல கடிதங்களிலுள்ள வரி, எப்படி இவ்வளவு ஆண்டுகளாகியும் அந்தக் காதல் நீடிக்கிறது என்பது. ஏனென்றால் எங்களை தெரிந்த ஆயிரம்பேருக்காவது தெரியும், அருண்மொழி பாவனையாகவோ மிகையாகவோ ஏதும் எழுதவில்லை என. அவளுடைய குணச்சித்திரத்திலேயே மிகை இல்லை. எல்லாமே யதார்த்தம்தான்.

அதற்கான காரணம் எனக்கு அடுத்த தலைமுறையினரில் பலரை பார்க்கையில்தான் தெரிகிறது. உதாரணமாக, என்னைப் பார்க்க ஓர் இளம்நண்பர்  வருவார். வந்ததுமே எங்கே எவருடன் இருக்கிறேன் என மனைவிக்கு தெரிவிப்பார். எண்ணி இருபதே நிமிடம், மனைவியிடமிருந்து போன் வரும். இவர் நேரம் கேட்டு மனைவியிடம் மன்றாடுவார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை போன் வந்துகொண்டே இருக்கும். மன்னிப்பு கேட்டுக்கொண்டு கிளம்பிவிடுவார். நான் ஒருவரிடம் பாதி வேடிக்கையாகச் சொன்னேன். ”என்னை என் மனைவி ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை போனில் அழைத்தால் அடுத்த ஒரு மணிநேரத்தில் விவாகரத்து நோட்டீஸ்தான் அனுப்புவேன்” என்று.

இளைஞர்களில் பலர் சொல்வதுண்டு; எங்கள் பயணங்களில் சேர்ந்துகொள்ள ஆசைதான், ஆனால் மனைவி விடமாட்டாள் என்று. இப்போதெல்லாம் பலர் மாமியாரும் மாமனாரும் விடமாட்டார்கள் என்று சொல்கிறார்கள். மீறினால் என்ன ஆகும் என்பேன். உணர்ச்சிகர மிரட்டல், அடம் பிடித்தல், குடும்பமே நிம்மதியில்லாமல் ஆகிவிடும் என்பார்கள். ஒரு புத்தகம் வாங்கவோ படிக்கவோ மனைவி அனுமதிக்க மாட்டார் என்பவர்கள் ஏராளம். இளைஞர்களில் பத்துக்கு எட்டுபேரின் நிலைமை இது.

உண்மையில் இது ‘நெருக்கமான’ உறவு அல்ல. ஆழமான பாதுகாப்பின்மையில் இருந்து, அல்லது தன்முனைப்பில் இருந்து உருவாகும் ‘பிடி’தான் இது. இதில் இருப்பது அன்பே அல்ல. மிக அசௌகரியமானது. ஒரு செடிமேல் கல்லைத்தூக்கி வைப்பதுபோன்றது. உறவுகளில் மிகமிக துன்பமான விஷயமே இந்தப் பிடிதான். அன்பு என்பது மறுபக்கத்தை வளர அனுமதிப்பதாகவே இருக்கும். அந்த வளர்ச்சியில் பங்கு பெறும். சுதந்திரத்தை அளிக்காதது எதுவானாலும் அன்பு அல்ல. வெறும் தன்னலமும் தன்முனைப்பும் அன்பென வேடம் பூண்டிருக்கிறது அங்கே.

இப்படிச் சொல்கிறேனே ‘மிகக்குறைவான உறவே மிகச்சிறந்த உறவு’. ஓர் ஆளுமை இன்னொரு ஆளுமையுடன் கொள்ளும் மிகநல்ல உறவு எப்படி நிகழும்? அவர்கள் இருவருக்கும் பொதுவான இனிய தளத்தில் மட்டும்அந்த உறவு நிகழும்போதே அந்த உறவு சுமுகமாக,நன்றாக இருக்கிறது. எல்லா உறவுக்கும் அதுவே நெறி.

என் நண்பர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் வியப்புடன் இதைச் சொல்வார்கள். நான் வீட்டை விட்டு கிளம்பினால் எங்கிருக்கிறேன் என அருண்மொழிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதுடன் சரி. எத்தனை நாள் ஆனாலும், ஒரு மாதம்கூட ஆனாலும் அவ்வளவுதான் தொடர்பு. தேவை என்றால் பேசுவேனே ஒழிய நாள்தோறும் மணிதோறும் பேசுவதெல்லாம் இல்லை. அவளும் கூப்பிடுவதில்லை. மற்ற நண்பர்களுக்குத்தான் குறுஞ்செய்திகள், அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். அதிலும் சிலருக்கு செல்போன் ரீ ரீ என அழைத்துக்கொண்டே இருக்கும்.

அக்கறையே இல்லாமலிருக்கிறோம் என்று தோன்றும், அப்படி அல்ல. அவரவர் உலகத்தில் இருக்கிறோம். அருண்மொழி வேலை, சங்கம் என பல களங்களில் பரபரப்பானவள். சமையலும் சாப்பாடும் முடிந்தால் எங்களுக்கான பொதுப்பொழுது என்பதே ஒருநாளில் ஒருமணி நேரம்தான். அதை குறைசொல்ல, சண்டைபோட செலவழிப்பதில்லை. பேசினால் அது எப்போதுமே மகிழ்ச்சியான உரையாடல்தான்.

அருண்மொழியின் மொழிநடையில் என் செல்வாக்கு இல்லை என்பதை பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். அதுவே இயல்பானது. அவள் உலகமே வேறு. அவள் இன்னும் தஞ்சையில் இருந்து வெளிவரவே இல்லை. இப்போது அருண்மொழியின் நேரம் முழுக்க இலக்கியமும் இசைதான். முழுநேர வாசிப்பு, இசைகேட்பு, இசை ஆராய்ச்சி, எழுத்து. அந்த உலகில் நான் நுழைவதில்லை. என் உலகம் அதேபோல இலக்கியம், பயணம் என பரபரப்பானது. அவரவர் மகிழ்ச்சிகள், அவரவர் கொண்டாட்டங்கள், அவரவர் நட்புகள்.

இருவருக்கும் பொதுவான இனிய பொழுதை மட்டுமே பகிர்ந்துகொள்கிறோம். அவளுடைய படிப்பு எழுத்து பற்றிச் சொல்வாள். சிரிப்பும் வேடிக்கையுமாக அன்றி பேசிக்கொண்ட தருணங்கள் மிகமிகக் குறைவு. இருவருக்கும் மற்றவர் முக்கியமானவர்கள். என் பேச்சில் அருண்மொழி வந்துகொண்டேதான் இருப்பாள். ஆனால் அவள் உலகுக்குமேல் என் ‘ஆட்சி’ என ஏதுமில்லை. அவள் ஆளுமைக்குமேல் என் கட்டுப்பாடு என்றும் ஏதுமில்லை.

என் பிள்ளைகள்மீதும் இதுவே. அவர்கள் மேல் என் கட்டுப்பாடு அனேகமாக ஏதுமில்லை. அஜிதன் பார்வைக்கு நானேதான். என்னுடைய கோளாறுகள் எல்லாம் அவனுக்கும் உண்டு. ஆனால் உள்ளிருக்கும் ஆளுமை வேறு. சிந்தனைகள் முற்றிலும் வேறு. (ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் ஓர் பதற்றம் மிக்க எதிர்பார்ப்பின் சிக்கல் இருக்கவே செய்கிறது. முழுக்க விலக முடியாது)

மிகக் குறைவான உறவே மிக நல்ல உறவு. அந்த குறைவான உறவில் இனிய தருணங்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இன்னொருவரை மாற்றியமைக்க, ‘திருத்த’ முயலும்போதுதான் உரசல்களும் பிரச்சினைகளும் உருவாகின்றன. இன்னொருவர் தன் உடைமை, தன்னுடனேயே இருக்கவேண்டியவர் என எண்ணும்போதே பூசல்கள் உருவாகின்றன. கணவன்  மனைவி நடுவே மட்டுமல்ல, நண்பர்கள் அல்லது சக ஊழியர்கள் நடுவேகூட இன்னொருவரை சற்று மாற்றியமைக்க முயன்றாலும்கூட அந்த உறவு கசப்பை மட்டுமே அளிப்பதாக ஆகிவிடும்.

அப்படியென்றால் ஒருவர் மேல் இன்னொருவரின் செல்வாக்கு உருவாகவே கூடாதா? உருவாகும், அந்த இனிய தருணங்கள் வழியாக இயல்பாக அது உருவாகும். அதுவே உயர்வானது. நான் முப்பதாண்டுகள் அருண்மொழிக்கு அவளுக்குப் பிடித்த இலக்கியச்சூழலை அளித்திருக்கிறேன். இலக்கியவாதிகளுடனான உறவு, உலகமெங்கும் பயணம் என்னும் வாய்ப்புகளை அளித்திருக்கிறேன். என் வாசிப்பின் மிகச்சிறந்த பகுதிகளை பகிர்ந்திருக்கிறேன். அது உருவாக்கும் செல்வாக்கே உண்மையானது. எந்த கல்வியும் இனிய கொண்டாட்டமாகவே அமைய முடியும்.

இன்று திரும்பிப் பார்த்தால் அருண்மொழி பொருளியல் ரீதியாக எதையும் இழக்கவில்லை. அன்று மருத்துவப் படிப்புக்கு நிகரானதாக கருதப்பட்ட வேளாண்மைப் பட்டதாரியான அவள் எண்ணியிருந்தால் என்னைவிட மிகமேலான வேலையும் சமூகநிலையும் கொண்ட ஒருவரை மணந்திருக்கலாம். ஆகவே அன்று அது ஒரு தியாகம்தான். அவள் தோழிகள் அனேகமாக அனைவருமே மேலான பதவிகளில் அமர்ந்துகொண்டனர், மேலான பதவிகளில் இருப்பவர்களை மணந்தார்கள். ஆனால் இன்று அவர்கள் அனைவரைவிடவும் பொருளியல்ரீதியாகவும் சமூகநிலையிலும் நான் மிக மேலான இடத்தில் இருக்கிறேன். ஆனால் இது ஒரு வாய்ப்பு. இப்படி ஆகாமலும் இருந்திருக்கலாம்.

திருமணம் ஆன மூன்றாம் ஆண்டு, 1995ல் எனக்கு ஒரு தேசிய விருது வந்தது. மிகமுக்கியமான விருது. ஐம்பதாயிரம் ரூபாய் பணம். அது ஒரு ஒரு மத அமைப்பு அளிக்கும் விருது. அதை ஏற்கலாகாது என நான் எண்ணினேன், ஆனால் அந்த பணம் என்னை தொந்தரவுசெய்தது. அதை மறுப்பது அருண்மொழிக்குச் செய்யும் பிழையோ என எண்ணினேன். ஏனென்றால் அந்த ஆண்டு நான் அருண்மொழியின் நகைகளை முழுக்க விற்று நாற்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு நிலம் வாங்கியிருந்தேன். சொந்த வீடு இப்போது இருப்பது அங்குதான். அருண்மொழி கவரிங் நகை போட்டுக்கொண்டு தபால்நிலைய வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாள்.

இரண்டு நாள் குழம்பியபின் அவளிடம் அதைச் சொன்னேன். என் முகம் பார்த்தபின் ‘ஏன் அது புடிக்கலியா?’ என்றாள்.

ஆமாம் என்று சொல்லி ஏன் என விளக்கினேன். “சரி, அது வேணாம். சொல்லிடு. பின்னாடி மனசுக்கு சங்கடம் வரவேணாம்” என்றாள்.

நான் தயங்கி “அம்பதாயிரம் ரூபாய்” என்றேன்.

“அதுக்கென்ன?” என்று சாதாரணமாகச் சொல்லி அவளுக்கே உரிய புயல்வேகத்தில் சமையல் செய்ய ஆரம்பித்தாள். ஒரு கணம் அதைப்பற்றி நினைக்கவில்லை. ஓராண்டு கழித்து அந்த தருணம் பற்றிச் சொன்னபோதும் அதை தெளிவாக நினைவுகூரவுமில்லை.

பல ஆண்டுகளுக்குப்பின் பத்மஸ்ரீ விருதுக்கான அழைப்பு வந்தபோது எனக்கு தயக்கமே இல்லை. அவள் என்ன சொல்வாள் என எனக்கு தெரியும். என் அண்ணா அவள் அப்பா இருவரும்தான் திட்டினார்கள்.

இப்போது அருண்மொழிக்கு முழுக்கமுழுக்க இலக்கியம்தான் வாழ்க்கையை நிறைத்திருக்கிறது. அது அப்படித்தான், அவள் அதை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தாள். அந்தமனநிலை ஆரம்பம் முதலே அவளிடம் இருந்துகொண்டிருந்தது. அவள் நினைவுக்குறிப்புகளைப் பார்த்தால் தெரியும், அவள் மிக மிக இளமையிலேயே நூல்களின் உலகில்தான் வாழ்ந்திருக்கிறாள். எல்லா நினைவுகளும் வாசிப்பு சார்ந்ததே. வேறெதுவும் அவளுக்கு முக்கியமாக இருந்ததும் இல்லை.

நான் சொல்லவருவது இதுதான், அருண்மொழியைப் போன்றவர்கள் மிக அரிதானவர்கள். அவர்கள் உருவாகி வந்த சூழலும் இன்றில்லை. எழுபதுகளில் ஆசிரியர்கள் ஏதோ ஓர் இலட்சியவாதத்தால் செலுத்தப்பட்டனர். எழுதியும் வாசித்தும் விவாதித்தும் வாழ்ந்தனர். தங்கள் குடும்பச் சூழலை அப்படி அமைத்துக்கொண்டனர். அதிலும் பழைய தஞ்சை என்பது எல்லா அரசியலியக்கங்களும், கலாச்சார இயக்கங்களும் நிகழ்ந்த மண். அதாவது அந்த மாடல்கள் இப்போது வழக்கொழிந்துவிட்டன. அந்த டெக்னாலஜியே இப்போது கிடையாது.

அன்று சிறு கிராமங்களில் ஊடகத்தொடர்பு இல்லை. நவீனத் தொழில்நுட்பம் இல்லை. நுகர்வுக்கலாச்சாரம் இல்லை. அவர்கள் தங்களுக்கான உலகை உருவாக்கிக் கொள்ள, தங்கள் ஆளுமையை சமைக்க வழி இருந்தது. இன்று ஊடகமும் தொழில்நுட்பமும் நுகர்வும் சேர்ந்து ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கிறது. வாங்கு வாங்கு என இந்த உலகமே சேர்ந்து ஒவ்வொருவரையும் நோக்கிக் கூச்சலிடுகிறது. இன்று பணம் சார்ந்த, சமூகநிலை சார்ந்த கனவுகள் அன்றி எதையும் தக்கவைத்துக்கொள்ள எவரையும் அது அனுமதிப்பதில்லை. அதைமீறி தங்களுக்கான கனவுகளுடன் எழுபவர்கள் என் தலைமுறையில் இருந்ததை விட பல மடங்கு குறைவு. இளைஞர்கள் அதற்கேற்ப கனவுகளை நெய்வதே நல்லது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2022 11:35

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். கவிஞர் ஆனந்த்குமார் எழுதிய டிப் டிப் டிப் கவிதைத்தொகுதி,   இளைய கவிஞர்களுக்குரிய குமரகுருபரன் விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மிகவும்  மகிழ்ச்சியடைந்தேன். ஏற்கனவே தளத்தில் அவருடைய ஒருசில கவிதைகளைப் படித்துவிட்டு, நான் பின்தொடர்ந்து வாசிக்கும் கவிஞர்கள் வரிசையில் அவரையும் சேர்த்துக்கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு அவர் கவிதைகள் வசீகரம் கொண்டவையாக இருந்தன. அவருடைய முதல் தொகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கவிதையில் ஒரு நீண்ட பயணத்தை அவரால் மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். அடுத்தடுத்த தொகுதிகள் அவரை இன்னும் உயரத்துக்குக் கொண்டு செல்லக்கூடும்.

இத்தொகுதியை  விருதுக்குரிய தொகுதியாக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் தேர்வுக்குழுவினருக்கும் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனந்த்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

பாவண்ணன்

****

அன்புள்ள ஜெ

ஆனந்த்குமார் கவிதைத்தொகுப்புக்கு வழங்கப்பட்ட குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது மிகப்பொருத்தமானது. அண்மையில் வந்த பல நல்ல தொகுப்புகளில் ஒன்று அது. அதில் ஒரு கள்ளமற்ற தன்மை உண்டு.

நான் இதைப்பற்றி நினைத்துக்கொள்வேன். எந்தக்கூட்டத்திலும் குழந்தைகளின் சத்தம் தனியாகக் கேட்டுவிடும். ஏனென்றால் குழந்தைகளின் குரல்களுக்கு ஃப்ரிக்வன்ஸி ஜாஸ்தி. அப்படி கேட்டாகவேண்டும் என்பது கடவுளின் ஆணை. அதேபோல இலக்கியத்தில் கள்ளமின்மையின் குரல் துலக்கமாக கேட்கும். எத்தனை அறிவுஜீவித்தனம் ஒலித்தாலும் கள்ளமற்ற குரல் தனியாக கேட்கும். ஆனந்த் குமாரின் கவிதைக்குரல் அப்படிப்பட்டது.

ராஜ் முகுந்தன்

***

அன்புள்ள ஜெ

ஒருவரிக்கவிதைகளாகவே எனக்கு கவிதைகள் நினைவில் இருக்கின்றன. முழுக்கவிதையும் நினைவில் இருப்பதில்லை. முழுக்கவிதை ஒரு ட்ரீட்மெண்ட். அது ஒரு இண்டெலக்சுவல் எக்ஸஸைஸ். ஒரு வரி என்பது ஒரு தெறிப்பு. “கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய் வேருறுவேன்’ என்று ஒரு வரியாக நான் திருவாசகப்பாட்டை ஞாபகம் வைத்திருக்கிறேன். அந்த மொத்தப்பாட்டுக்கு நேர் எதிரான அர்த்தம். மழைமேகம் போன்ற குளிர்ந்த கண்கள் கொண்ட பெண்களின் அருகே ஐம்புலன்களும் ஆற்றங்கரை மரம்போல வேர் கொள்கின்றன எனக்கு. அவ்வளவுதான் எனக்கு கவிதை. மாணிக்கவாசகர் விடுபட்டாலென்ன படாவிட்டாலென்ன?

ஆனந்த்குமாரின் ஒரு வரி

கடையிலிருந்து வீடுவரை

நீந்தி நீந்திதான் வந்ததிந்த

குட்டி மீன்

ஒரு சின்ன தொட்டிக்குள் நீந்திக்கொண்டே கடைவீதியிலும் பஸ்ஸிலும் பயணம் செய்யும் அந்தக் குட்டிமீன். அதுதான் எனக்கு கவிதை. நான் அந்த குட்டிமீன். அல்லது என் மனசு அது

ஆனந்த்குமாருக்கு வாழ்த்துக்கள்.

செ.சரவணன்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு

டிப் டிப் டிப் வாங்க டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2022 11:33

விஷ்ணுபுரம் பதிப்பகம் மேலும் நூல்கள்

வணக்கம்.

வெண்முரசு முதலாவிண் நூல் Amazon Kindle இல் பதிவேற்றம் செய்வார்களா? தேடிக் காணவில்லை. மிகுதி வாசித்தாயிற்று.

Australiaவில் வசிப்பதால் Kindle மூலம் வாசிப்பதற்கே சாத்தியமாக உள்ளது. தயவுசெய்து அறியத் தருவீர்களா?

நன்றி.

அன்புடன்,
சுபா ஸ்ரீதரன்

***

அன்புள்ள சுபா,

என்னுடைய மின்னூல்களை கிழக்கு பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டிருந்தது. மின்னூல்களும் அவர்களே வலையேற்றியிருந்தனர். இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகம் அவற்றை வலையேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் அச்சுப்பிழை பார்ப்பது உட்பட அனைத்தையும் மீண்டும் செய்யவேண்டியிருப்பதனால் தாமதமாகிறது. விரைவில் வலையேற்றம் செய்வோம்

ஜெ.

***

அன்புள்ள ஜெ

இம்மாதம் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றின் சுட்டிகளை இணைத்துள்ளோம்.

நத்தையின் பாதை

மலை பூத்தபோது

இலக்கியத்தின் நுழைவாயிலில்

இன்னும் தொடர்ச்சியாக மின்னூல்கள் வெளிவரும்

அன்புடன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2022 11:31

திருப்பூர் கௌசிகா நதி (திரு வெண் ஆற்றங்கரை ) பசுமை நடை

அண்ணா வணக்கம்

திருப்பூர் கௌசிகா நதி (திரு வெண் ஆற்றங்கரை ) பசுமை நடை 24-04-2022 அன்று கௌசிகா நதி கரையோரத்தில் நடந்தது . குறிப்பாக பறவை பார்த்தல் மற்றும்  திரு. பாரதிதாசன் அவர்களின் “காட்டின் குரல்” மற்றும் “பாறு கழுகுகளைத் தேடி” ஆகிய நூல்கள் அறிமுகத்துடன் இயற்கை நடை நடைபெற்றது. இந்த உரைக்கு இந்த புத்தகங்களின் ஆசிரியர் திரு. பாரதிதாசன் அவர்களும் வந்தது மேலும் சிறப்பு.

பாறு  கழுகுகள் பற்றி பாரதிதாசன் youtube link –

https://www.youtube.com/watch?v=Up75zjrLaXE

இந்த நிகழ்வில் புத்தக அறிமுகத்திற்கே அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பறவை பார்த்தல் இந்த முறை அதிகம் இல்லாமல்போனது.

உரையின்போது உட்க்கார்ந்து கொன்டே  கரிச்சான் , ஈ பிடிப்பான், புள்ளி மூக்கு வாத்து, கொண்டைவால் குருவி, மீன் கொத்தி, நாரை, கொக்கு, ஆட்காட்டி , மைனா போன்ற பறவைகளை எளிதாக பார்த்தோம்.

மாதம் இருமுறை நிகழும் இந்த பசுமை நடைக்கு முன்பதிவு செய்ய
கிருஷ்ணராஜ் – 98949 07750
முருகவேள் –  90033  83214
https://www.facebook.com/KnowAboutOurEnvironment/

பன்னீர்செல்வம் ஈஸ்வரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2022 11:31

குமரித்துறைவியின் தருணம்

அன்புள்ள ஜெ,

இரவு முழுவதுமான பயணக் களைப்பிலிருந்து “விமானம் சற்றுநேரத்தில் தரையிறங்க இருக்கிறது”‘ என்ற அறிவிப்பில் விழித்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். பஞ்சு பஞ்சாகத் திரளாத மேகம் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தின் மணற்சாலைபோல மூடியிருந்தது.

இருக்கையை ஒழுங்குசெய்து பொருட்களை எடுத்துவைத்து திரும்பும் நேரத்தில் மேகத்தைத் தாண்டி விமானம் கீழே இறங்கியிருந்தது.

ஜன்னலைத் தாண்டிய இயல்பான பார்வையின் ஒரு கணத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்கள் நான்கும் அதனை அடுத்த உள் கோபுரங்களும் சட்டென கண்களுக்குள் தோன்றி மனதில் பரவசத்தை நிறைத்தது.

அன்னையே உன் காலடிக்கு வருகிறேன் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன். கட்டிக்கொண்டிருக்கும் வீட்டை ஒட்டிய ஒரு பகுதியை சிறு கடைகளாக வடிவமைத்து முடியும் நிலையில் இருந்தது. நான் வருவதால் அதைமட்டும் தொடங்கிவிடுவோம் என்று எங்கள் என்ஜினீயர் சொன்னார்.

அதை கணபதி ஹோமத்தோடு நடத்த வேண்டும் என்று குடும்பத்தினர் விருப்பப் பட்டனர். அதுதான் மரபு என்றார்கள்.

முன்பென்றால் வேண்டாம் என உறுதியாக நின்றிருப்பேன்.

உங்களுடைய பழைய “தலித் இலக்கியம் மரபை ஏற்பது/மறுப்பது” குறித்தான கேள்விக்கான பதில் ஒன்றை வாசித்தபிறகு சடங்குகளின் மீதான என் பார்வை வெகுவாக மாறியிருந்தது.

“ஞானம் மானுடகுலத்துக்கு உரியது என்றும் அதை நிராகரிப்பதன் மூலமல்ல; என்றும் மேலெடுப்பதன் மூலமே முன்னேற்றம் சாத்தியம் என்றும் நாராயணகுரு சொன்னார். ஒரு சமூகத்தின் அறிவார்ந்த வெற்றியே அதன் சமூக அதிகாரம் என்றார் ‘அறிவுக்கு குறுக்குவழிகள் இல்லை’ என்ற அவரது உபதேசம் முக்கியமானது. தன்னைப் பின்பற்றியவர்களிடம் வேதங்கள், உபநிடதங்கள், இந்தியத் தத்துவங்கள், சம்ஸ்கிருத மலையாளக் காவியங்கள், தமிழிலக்கிய மரபு அனைத்துமே அவர்கள் பாரம்பரியம் என்றுதான் நாராயணகுரு சொன்னார்.”

அதன் பின்பு தேங்காய் உடைப்பது, எலுமிச்சம் பழத்தை வெட்டி, குங்குமத்தில் தடவி பிழிந்து விடுவது போன்ற சடங்குகள் வேறு அர்த்தங்கள் கொடுக்க ஆரம்பித்தது.

என் திருமணத்திற்கும் இல்லாத புரோகிதம் முதன் முதலாக என் சார்ந்த ஒரு நிகழ்வில் ஏற்பாடு செய்தோம்.

அதற்கான முன் வேலைகள் நடந்துகொண்டிருந்த வேளையில் பாலா “மாமா உங்களுக்காக” என்று கையில் வைத்திருந்த புத்தகத்தைத் தந்தான்.

“பழனிவேல் ராஜாவுக்கு
அன்புடன்
ஜெயமோகன்”
என்று கையெழுத்திடப்பட்ட குமரித்துறைவி.

புதிய வாசகர் சந்திப்பில் பாலா, உங்களிடம் எனக்காக வாங்கியது. பரவசத்தில் மனம் குளிர்ந்துவிட்டது.

இதைவிட வேறு எந்தப் பரிசு என்னை மிதக்க வைத்திருக்கும்? அன்னை மீனாட்சியின் அருள், அத்தோடு ஆசிரியர்களின் ஆசி.

மந்திரங்கள் முழங்க, குமரித்துறைவியின் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.

அடுத்த மூன்று நாட்களில் கிளம்பி மறுபடியும் என் பணியுலகிற்கு வந்துவிட்டேன்.

அன்புடன்
சி. பழனிவேல் ராஜா.

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2022 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.