Jeyamohan's Blog, page 786
May 1, 2022
இருள்களி
ஜெ
இன்று ஆஸ்திரேலிய – நியூஸிலாந்து நாடுகளின் மாவீரர்கள் தினம். அன்சாக் தினம்.
1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி கருங்கடலை அண்மித்த கலிப்பொலி குடாவைக்கைப்பற்றி புதிய போர்முனை ஒன்றை திறப்பதற்காக ஆஸ்திரேலிய – நியூஸிலாந்து படையினர் உட்பட பல்லாயிரக்கணக்கான நேசநாட்டு துருப்புக்கள் துருக்கி பேரரசுடன் சமரிடுவதற்கு தரையிறக்கப்பட்டனர். இந்த தரையிறக்கத்துக்கு எதிராக ஜேர்மன் மற்றும் துருக்கி நாடுகளின் படையினர் எட்டு மாதங்களாக மேற்கொண்ட எதிர்த்தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் கொல்லப்பட்டனர். இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்திரேலிய – நியூஸிலாந்து துருப்புக்கள் ஆவர்.
ஆஸ்திரேலிய – நியூஸிலாந்து நாடுகளின் வரலாறு காணாத இந்த இராணுவ பேரிழப்பினையும் அதில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான படையினரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் அன்சாக் நாள் (Australian and New Zealand Army Corps Day) அனுட்டிக்கப்பட்டுவருகிறது.
இந்த வரலாற்றினைப் பின்புலமாகக்கொண்ட எனது “இருள்களி” – என்ற சிறுகதை அன்சாக் மாதத்தின்போது “வனம்” இதழில் வெளியாகியிருந்தது. நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.
இருள்களிநன்றி
தெய்வீகன்
April 30, 2022
அமெரிக்கா! அமெரிக்கா!
மீண்டும் ஓர் அமெரிக்கப் பயணம். இது நான் செல்லும் நான்காவது அமெரிக்கப் பயணம். அருண்மொழியுடன் செல்லும் இரண்டாவது பயணம். இன்று மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வழியாக நாளை விடியற்காலையில் அமெரிக்காவுக்கு விமானமேறுகிறோம்.
அமெரிக்காவின் பிரம்மாண்டமான நிலவிரிவு என்னை என்றும் பெரும் பரவசம் கொள்ளச் செய்கிறது. அமெரிக்காவிலேயே வாழும் நண்பர்கள் பலரை விடவும் நான் அமெரிக்காவை விரிவாகப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அமெரிக்காவில் இன்னமும் பார்க்கவேண்டியவையே எஞ்சுகின்றன.
அமெரிக்காவில் எது என்னை கவர்கிறது என எண்ணிப்பார்த்தேன். ஒன்று, கிரேட்டர் லேக், கிராண்ட் கான்யன் போன்ற இயற்கை அற்புதங்கள். இரண்டு அதன் அடிப்படையான கட்டமைப்பிலுள்ள இலட்சியவாதம். எமர்சனின் நினைவகமோ, எடிசனின் ஆய்வகமோ, ஜெபர்சனின் வீடோ அமெரிக்கா உலகுக்கு அளித்த இலட்சியவாதத்தின் குறியீடுகளாகவே எனக்கு கிடைக்கின்றன. அதன் மாபெரும் அடையாளமாக நின்றிருக்கும் சுதந்திரதேவியின் சிலை எனக்கு ஒரு தெய்வதரிசனமே.
அமெரிக்கா பற்றிய எதிர்மறை விமர்சனங்களைக் கேட்டே நான் வளர்ந்திருக்கிறேன். ஆனால் நான் மிகக்குறுகிய காலம், இடதுசாரிகளின் உளப்பாதிப்பில் இருந்தபோது மட்டுமே, அமெரிக்கா மேல் ஐயம் கொண்டிருந்தேன். ஆனாலும் அமெரிக்காவை வெறுத்ததில்லை. ஏனென்றால் நான் அமெரிக்காவை அறிந்துகொண்டிருந்தது அமெரிக்க எழுத்தாளர்கள் வழியாக. நான் அறிந்த அமெரிக்கா ஐசக் பாஷவிஸ் சிங்கரும், வில்லியம் சரோயனும், ஃபாக்னரும் காட்டியது.
இன்றும் அமெரிக்கா பற்றிய வசைகள் நம் சூழலில் நிறைந்து வழிகின்றன.ஆனால் அவ்வசைகளைச் சொல்பவர்கள் காட்டும் நாடுகள் கொடிய அடிப்படைவாதத்தையோ, அடக்குமுறை நிறைந்த சர்வாதிகாரத்தையோ தங்கள் முகமெனக் கொண்டவை. எந்த வகையிலும் எந்த மானுடரும் விரும்புபவை அல்ல. அதைச் சொல்பவர்களே தங்கள் குழந்தைகளை அங்கே வாழ அனுப்ப மாட்டார்கள். அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோதான் அவர்கள் செல்வார்கள், தங்கள் குழந்தைகளை அங்கே வாழவைப்பார்கள்.
அமெரிக்காவின் பொருளியலாதிக்கம் பற்றி, ஊழல் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் இங்கே ஆதரிக்கும் ஆட்சிகளில் அந்த சதவீதத்துக்கு எந்த அளவிலும் குறைவில்லாத பொருளாதாரச் சுரண்டலும் ஆதிக்கமும் இருப்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதன் பகுதியாக அமைந்து சில்லறை நன்மைகளை தேடிக்கொள்ளவும் அவர்களால் இயலும். முதலீட்டுவாத அரசியலின் இயல்பு அது என்ற நடைமுறைத் தெளிவும் அவர்களுக்கு உண்டு.
அமெரிக்கா பிழையற்றது என நான் சொல்லவில்லை. ஆனால் ஐரோப்பிய- அமெரிக்க ஜனநாயகமே உலகம் சென்றடைந்த ஆட்சியமைப்புகளில் உச்சம். அதிலிருந்து மேலே செல்வதெப்படி என்பது மானுடத்தின் சவாலாக இருக்கலாம். முழுக்கமுழுக்க அறிவுசார்ந்தே ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவது, அறிவையே வணிகமென்றும் அதிகாரமென்றும் கொள்வது உலகம் முழுமைக்கும் முன்னுதாரணமான அமெரிக்க மாதிரி. அமெரிக்கா அதன் பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படும் தேசம். அது என்றும் உளஎழுச்சி அடையச்செய்யும் முன்னுதாரணமேதான்.
அமெரிக்கா எப்போதுமே இந்தியாவின் இலட்சியவாதிகளை ஈர்க்கும் நிலமாக இருந்துள்ளது. விவேகானந்தர் முதல் காந்தி, அம்பேத்கர் வரை. அலையலையாக இந்தியத் துறவிகளும், யோகப்பயிற்சியாளர்களும் சென்றுகொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான பொதுநல நிறுவனங்கள் அமெரிக்காவின் குடிமக்களின் கொடையால் உருவானவை. இன்னும் நூறாண்டுக்காலம் அது அவ்வண்ணமே இருக்குமென நினைக்கிறேன்.
2019ல் சும்மா சட்டென்று கிளம்பி அமெரிக்கா சென்றேன். நண்பர்களுடன் சுற்றினேன், இலக்கியச் சந்திப்புகளே இல்லை.இம்முறை அமெரிக்காவில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்திற்கு முறையாகப் பதிவு செய்யப்பட்ட கிளை உள்ளது. அதன் ஏற்பாட்டின்பேரில் செல்கிறேன். என் நிகழ்ச்சிகள் முழுமையாகவே ஒருங்கிணைக்கப்பட்டவை.
இம்முறை செல்வதன் முதன்மை ஈர்ப்பு கிராண்ட் கான்யன் பள்ளத்தாக்கை மீண்டும் பார்க்கப்போகிறேன் என்பது. அந்தச் செய்தி காதில் விழுந்ததுமே ‘ஓல்ட் டர்க்கி பஸ்சாட், ஃப்ளையின் ஹை’ என்னும் பாடல் செவிகளில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இம்முறை பழைய ‘கௌபாய்’ நிலங்களில் ஒரு நல்ல பயணம் இருக்குமென நினைக்கிறேன்.
வடகரோலினாவில் பூன் என்னுமிடத்தில் ஓர் மூன்றுநாள் இலக்கிய முகாம் நிகழ்கிறது. இந்தியாவில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்துவதுபோன்ற அதே வகை சந்திப்பு. அதே நியதிகளுடன். முழுக்கமுழுக்க இலக்கியம் மட்டுமே.
இங்கே தமிழகத்தில் இந்திய தத்துவம் மற்றும் வேதாந்தக் கல்விக்காக மதச்சார்பும் சடங்குமுறையும் அற்ற ஒரு நவீன அமைப்பொன்றை உருவாக்கவேண்டும் என்னும் கனவில் இருக்கிறேன். அதன் பணிகள் நடைபெறுகின்றன. இனியொரு முறை அங்கே அடிப்படை இந்திய தத்துவம் மற்றும் வேதாந்தத்துக்கான கூடுகை ஒன்றை அமைக்கவேண்டும் என்னும் விருப்பம் உள்ளது
*
அமெரிக்கப் பயண நிரல் பற்றி நண்பர் சௌந்தர்ராஜன் எழுதிய மடல்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களையும், அருண்மொழி நங்கை அவர்களையும் அன்புடன் அமெரிக்காவில் வரவேற்க வாசகர்களும் நண்பர்களுமென காத்திருக்கிறோம். உங்கள் முழுப்பயணத்தில் நீங்கள் செல்லவிருக்கும் இடங்களையும், தங்கும் இடங்களையும் தகவலுக்காக குறிப்பிடுகிறோம்.
மே 02 – 05 – நியூ யார்க் / நியூ ஜெர்ஸி
மே 06 – 08 – வாஷிங்டன் டி.சி.
மே 07 – வாஷிங்டன் டி.சி, தமிழ் விக்கி – தொடக்கவிழா
மே 09 – 11 – ராலே, வட கரோலினா
மே 12 – 15 – பூன் , வட கரோலினா (இலக்கிய முகாம் – முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும். மேற்கொண்டு இடங்கள் காலி இல்லை).
மே 15 – 26 – வட கரோலினா மாநிலத்திலிருந்து தெற்கு கலிபோர்னியா மாநிலத்திற்கு நிலவழிப்பயணம்
மே 16 – 17 – டாலஸ், டெக்ஸாஸ்
மே 17 – 18 – ஆஸ்டின், டெக்ஸாஸ்
மே 19 – 20 – அல்புகர்க், நியூ மெக்ஸிகோ
மே 21 – 24 – யூடா, அரிஸோனா, நெவாடா மாநிலங்கள்
மே 25 – 26 – இர்வின், கலிபோர்னியா
மே 27 – 29 – வால்நட் க்ரீக் , கலிபோர்னியா
மே 28 – எழுத்தாளர் சந்திப்பு (Folsom Library – May 28, 2022 @ 1:00 PM , தொடர்புக்கு – அண்ணாதுரை +1-916-396-4702)
மே 30 – 31 – நியூ யார்க் / நியூ ஜெர்ஸி
அந்தந்த நகரங்களில் ஒருங்கிணைக்கும் நண்பர்கள் தக்க ஏற்பாடுகளை செய்துவிட்டதால் வேறு மாற்றங்கள் செய்யும் சூழ் நிலையில் இல்லை. குறிப்பிட்டுள்ள நகரங்களின் அருகில் வசிக்கும் நண்பர்கள், மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்கள் vishnupuramusa@gmail.com -க்கு, மின்னஞ்சல் அனுப்பி கேட்டுக்கொள்ளலாம்.
அன்புடன்,
அமெரிக்க வாசக நண்பர்கள்
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுகள்
குமரகுருபரன்விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது இவ்வாண்டு கவிஞர் ஆனந்த்குமாருக்கு வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்குட்பட்ட கவிஞர்களுக்கான விருது இது.
இதுவரை விருதுபெற்றவர்கள்
சபரிநாதன் 2017சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை
மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்
சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்
சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு
ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்
கண்டராதித்தன் 2018கண்டராதித்தன் விருது விழா -முத்து
கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்
எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன் காலம்-காதல்-சிதைவு -வே.நி.சூர்யா ஞானமும் சன்னதமும்’ – லக்ஷ்மி மணிவண்ணன் பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்
வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்
அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை
பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு
ச. துரைச.துரை 2019இருளுக்குள் பாயும் தவளை. ச. துரை கவிதைகள் – கடலூர் சீனு
ச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்
உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்
வேணு வெட்ராயன் 2020குமரகுருபரன் விருது- வேணு வேட்ராயன்- பேட்டி
வேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு
குளிர்ந்த நீரின் எளிய குவளை – -வேணு தயாநிதி
வெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு
வெண்மலர் பறவை – அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து
அலகில் அலகு – நதியின் நீர்க்கரங்கள்.
மதார்-2021குமரகுருபரன் விஷ்ணுபுரம் – விருதளிப்பு நிகழ்வு
அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி
அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்
மதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்
மதார் கவிதைகள் குறித்து- கா.சிவா
ஆனந்த்குமார் 2022சுடரென எரிதல்- “கனலி’ விக்னேஷ்வரன்
நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்
நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி
தம்பி -கடிதம்
அன்பு ஜெ,
தம்பி சிறுகதை வாசித்து முடிக்கும்போது இரவு பத்து மணியாகியிருந்தது. அறையில் மழைவிழும் சத்தமும் இடியும் குளிரும் நடுக்கத்தை உணரச் செய்தது. மண்டையெங்கும் சிற்றீசல் ஊர்வது போன்ற பிரமை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இருளறையின் பயம் தொற்றிக் கொண்டது.
நான் சிறுவயதிலிருந்தே தனியாகத்தான் இருந்திருக்கிறேன். தனிமை தான் பெரும்பாலும் நான் விரும்புவது. ஆனால் தோல்விகள் தந்த அழுத்தம் தனிமையை வெறுக்கச் செய்தது. எப்போதும் ஒற்றையறையில் வெளிச்சத்தோடு புத்தகக் குவியல்களுக்கிடையே எந்த சிந்தனையுமில்லாமல் மிக நிம்மதியாக உறங்க முடியும் என்னால். தனிமையில் இருக்கும் இருளும் என்னை எதுவும் செய்ததில்லை.
ஆனால் அழுத்தங்கள் என்னை பிறழச்செய்யும் விடயத்தை நான் கண்கூடாகக் கண்டேன். நான் மனம் பிறழ்வடையவில்லை. ஆனால் அதன் முனையைக் கண்டேன். சற்றே அந்த முனையைத்தாண்டினால் ’நான்’ இரண்டாகப் பகுத்துக் கொண்டு பிறழ்வடையும் என்று கூட தோன்றியது. அண்ணா நகரில் Study hall -கள் மிகவும் பிரபலம். காலை ஆறு மணிக்குச் சென்றால் இரவு பத்து மணிக்கு தான் அறைக்கு வருவேன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இந்த சுழற்சிக்குள் இருந்தேன்.. இறுதிவருடம் இந்த பிறழ்வுத்தன்மையின் நுனியைக் கண்டேன். தனி அறை பயத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. புத்தகங்கள் இல்லாத அறைக்குள் நின்று கொண்டு கை நடுக்கத்தோடு மாமாவுக்கு கூப்பிடுவேன். அவன் “நான் இருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி தூங்குகிறேன் என்றே தெரியாமல் தூங்கி அதிகாலை எழுந்து மீண்டும் ஸ்டடி ஹாலுக்கு ஆறுமணிக்கெல்லாம் ஓடி விடுவேன்…
தேர்வு நெருங்கும் போது மேலும் மேலும் இந்தத் தூங்கும் நேரம் குறையும்.. இரவு ஒரு மணிக்கு இரண்டு மணிக்கெல்லாம் கூட அந்த 13வது மெயின் ரோட்டில் நடந்து கொண்டிருந்திருக்கிறோம். சின்னதும் பெரியதுமான எல்லா கடைகளிலும் டீ குடித்திருக்கிறோம். இந்த உலகத்தையே நாம் தான் மாற்றப் போகிறோம் என்ற அதீத நம்பிக்கை இருந்தது. அந்த நடு இரவில் தோழியோடு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள். “என்ன டீ. ஏன்” என்று தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கேட்டேன். “முடியல ரம்யா. இந்த பாதை எப்ப முடியும். எல்லாரும் என்ன விட்டு போய்ட்டாங்க. அவனும் கூட” என்றாள்.
போட்டித்தேர்வுகளுக்கு படிப்பவர்களை காதலிப்பவர்கள் போன ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென நான் நினைத்துக் கொள்வேன். எந்த மகிழ்வும் அல்லது சாதாரண காதலர்களுக்குக் கிடைக்கும் எந்த உணர்வெழுச்சியும் கிடைக்காத ஒரு உறவாகத்தான் இந்தக் காதல் அமையும். “எங்காவது உள்ளூற அவர் வேண்டாமென நினைத்தாயா?” என்று கேட்டேன். அவள் யோசித்து “ஆமாடீ. எதுவும் இந்த எக்ஸாமுக்கு தடையா இருக்கக்கூடாதுனு நினைச்சேன். இவ்வளவும் எதுக்கு ரம்யா. ஐ யாம் டையர்ட். வயசாகிட்டே போகுது வேற” என்று அழுதாள்.
இது போன்ற நேரங்களில் சமாதானம் செய்ய முடியாது. நான் இருக்கிறேன் என்று அணைத்துக் கொள்வது மட்டுமே. இன்று அவள் ஐ.ஏ.எஸ் ஆகிவிட்டாள். என் நண்பர்கள் பலரும் ஏதோ ஓர் வகையில் பெரிய பணிகளில் தான் இருக்கிறார்கள். ஆட்சிப்பணிக்குச் சென்ற நண்பர்கள், சீனியர்கள் என யாவரும் பெரும்பாலும் உணர்வது ஓரிரு வருடங்களுக்குப் பின்னான வெறுமை தான். இந்த கல்வி நிறுவனங்கள் காட்டும் மாயவலை ஒன்று அண்ணா நகரைச் சூழ்ந்துள்ளது. மூன்று நான்கு வருடங்களில் இந்த மாயச்சுழற்சியை புரிந்து கொண்டு பிற வேலைகளுக்குச் செல்லாமல் இருப்பவர்கள் மனச்சிதைவுக்கு ஆளாகிறார்கள். ஆணவ நிறைவுக்காக மாண்டு போகிறவர்கள் தான் அதிகம்.
இன்று திரும்பிப் பார்த்தால் அண்ணாநகரே ஒரு மாய நகரம் போல இருக்கிறது. அங்கு வேறொரு வாழ்க்கை வாழும் புற்று மனிதர்களாகிய நாங்கள் இருந்தோம். இருக்கிறோம். இருப்போம். எல்லா நேரங்களிலும் அண்ணா நகரைப் பார்த்திருக்கிறோம். இரவும் பகலும், நாளும் எங்களுக்கு பேதமில்லை. சமீபத்தில் புத்தகத் திருவிழாவை ஒட்டி அண்ணா நகர் சென்றேன். நண்பர்களைப் பார்ப்பதற்காக. வேலை கிடைத்தபின் அண்ணா நகரை காலி செய்த நண்பர்கள் தவிர மிச்சமுள்ள நண்பர்கள். கனிந்து முதிர்ந்த போதிசத்துவர்கள் போலத்தான் அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். ஆனாலும் ஆழத்தில் அந்த பிறழ்வு பற்றிய அச்சம் என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.
இன்று நான் வேறோர் இடத்தில் நினறு அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். பொருள் கொள்ள முற்பட்டேன். ”இதுக்கெல்லாம் என்ன பொருள்” என்பது எப்போதும் நான் கேட்டுக் கொள்ளும் வினா. அதையே சரவணக்குமாரும் டாக்டரிடம் கேட்டபோது அவர், “மனித வாழ்க்கைக்கே என்ன பொருள்?” என்றார். உண்மையில் மீண்டும் இவற்றை நான் கேட்டுத்தான் கொள்கிறேன். எந்த விடையையும் கொண்டு என்னால் அமைய முடியவில்லை ஜெ.
மனித மனத்தை எதற்கும் பழகச்செய்யமுடியும். செயற்கையாகக் கொஞ்சினால்கூட மெல்லமெல்ல மனம் அதை பற்றிக்கொள்ள ஆரம்பித்துவிடும்
என்ற வரிகள் வந்தபோது இவற்றையெல்லாம் அசைபோட்டிருந்தேன். ஆம் மனத்தை பழக்கிவிட முடியும் என்று நினைத்துக் கொண்டேன். உறவுகளிலும், வாழ்க்கைப் பயணத்திலும் என எங்கும் இந்த உத்தியைக் கைக்கொள்ள முடியும். “மனம் விசித்திரமானது. ஆம்! அதை பழக்கிக் கொள்ள முடியும்” என்று சொல்லிக் கொண்டேன்.
மேலும் டாக்டர் சொல்லும் ஒரு வரி என்னை ஈர்த்தது “பழகுங்கள். செந்தில் மெதுவாக உங்கள் மீது சலிப்பு கொள்வான். உங்கள் பிரியம் உறுதியான பிறகு அவனுக்கு வேறு விஷயங்களில் ஆர்வம் திரும்பி விடும்” என்ற வரிகள். நான் இதை விரித்துக் கொண்டிருந்தேன் ஜெ. அப்படியானால் முழுமை கொண்டுவிடும் எந்த அன்பும் அமைந்துவிடுகிறது. சலிப்பென்னும் பாதை வழியாக அது தன்னை அங்கிருந்து நகர்த்திக் கொள்கிறது அல்லது ஒன்றாகிவிடுகிறது. நீண்ட காலம் இணக்கமாக வாழும் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் இருவரும் ஒருவரே என்று தோன்றுமளவு ஒரே மாதிரியான பாவனையைக் கொண்டிருப்பார்கள். சிரிப்பும், பேச்சுமென அவர்களின் முகச்சாயல் கூட ஒன்றாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
இந்த வரிகளின் எதிர்ப்புறத்தையும் சிந்தித்தேன். அப்படியானால் தீற்றலாக எஞ்சுபவை நிறைவடையாதவை தான். முழுமையாக சொல்லப்படாத காதல், அன்பு தான் தீற்றலாகிறது. நம் வாழ்க்கையில் நினைவுகளாக எஞ்சுபவை அவைதான். இனிமையும், வலியும் நிறைந்த அந்தத் தீற்றல்கள் யாவும் முழுமைகொள்ளாமல் தான் எஞ்சி நிற்கின்றன என்று தோன்றுகிறது. முழுமையாக கொடுக்கப்படாத போது, முழுமையாக பெறப்படாத போது அன்பு வலியைத்தருகிறது. முழுமையாக பகிர்ந்து கொள்ளப்படாமல், முழுமை செய்து கொள்ளாமல் அன்புக்குறியவர்களை மாற்றிக் கொண்டே இருப்பதால் வரும் வெறுமை, நிறைவின்மை ஆபத்து தான்.
கன்னியாக்குமரி நாவலின் ரவியை நினைத்துக் கொண்டேன். அவனின் நிறைவின்மை என்பது அது தான். கணவன் மனைவிக்குள் இந்த ஸ்வீட் மேட்னெஸ் இருக்க வேண்டும் என்பார்கள். தொடர்ந்து இந்த சலிக்கும் ஆடலை ஆடுவது. அதன் வழியாக மேலும் சலிப்படைந்து முழுமை கொள்வது. அமைந்துவிடுவது. அவரவர் வேலைகளைப் பார்க்க அதுவே உதவி புரியும் என்று கூறுவதன் உண்மையையும் இந்தப் பாதையின் வழி கண்டடைந்தேன்.
இறுதியாக உடற்குறை கொண்ட அண்ணனைப் பற்றிச் சொல்லும் போது “அவமதிப்பது அவனல்ல. வேறு யாரோ அல்லது எதுவோ. கடவுள் அல்லது இயற்கை” எனும்போது டாக்டர் “அத்துடன் அவனது களங்கமற்ற பிரியம். அதுவும் உங்களை அவமதிப்பது போலத்தான்” என்கிறார். “உண்மை. அவனது இயல்பு என்னை மோசமான தந்திரக்காரனாக, குரூரமானவனாகவும் எனக்குக் காட்டியது” என்கிறான்.
உண்மையில் அப்படி அப்பட்டமாக கள்ளங்கபடமில்லாமல் அன்பு செய்யும் மனிதர்கள் மிகக் குறைவு என்றே நான் நினைக்கிறேன். எனக்கு எல்லாரும் அப்படி இருப்பதாகக் கூட சில சமயம் பிரமை உண்டு. எந்த அன்பையும் பிரித்தறிய என்னால் இயலாது. எதுவாயிருந்தாலும் அன்பு தானே என்று தோன்றும்.
சமீபத்தில் லஷ்மி மணிவண்ணனின் ஒரு கவிதை மிகப் பிடித்து, விரும்பி எழுதிப்பார்த்து ரசித்திருந்தேன்.
“அன்பு எப்படிக் கிடைத்தாலும் வாங்கு.
எதிர்பார்த்துக் கிடைத்தாலும் வாங்கு ஏமாற்றிக் கிடைத்தாலும் வாங்கு
போலியாகக் கிடைத்தாலும் வாங்கு
பொய்யென்றாலும் கிடைத்தாலும் வாங்கு
விலைக்குக் கிடைத்தாலும் பரவாயில்லை வாங்கி வைத்துக் கொள்”
பார்த்த மாத்திரத்தில் சாதாரணமாகத் தெரியக்கூடிய கவிதை தான். அதன் ஆழத்தில் இருப்பதோ பெருங்கருணை.
அதீத அன்பு ஏன் விலக்கம் கொடுக்கிறது என்று யோசித்திருக்கிறேன். அது நம் மனதில் உள்ள சிறுமை தான் என்று தோன்றுகிறது. பல சமயம் நான் அதற்குத் தகுதியில்லை என்று நகர்ந்து செல்வது. எப்போதும் கிடைத்திராத இடத்தை நோக்கிய இந்த அன்பும் பெருங்கருணையும் அலைகிறது. இதை நான் மீண்டும் இயற்கையின் சம நிலைமையின்மை தத்துவத்திற்கே ஒப்பிடுகிறேன். சமன்வயப்படாமல் இந்த அன்பு இல்லாத இடத்தை நோக்கியே கொடுத்துக் கொண்டும் விரும்பப்படாத இடத்திலிருந்து பெற்றுக் கொண்டும் இருக்கிறது. காயப்பட்டுக் கொள்கிறது. சமன்வயப்படாமல் காலங்காலமாக பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் உலகம் உயிர்ப்புடனிருக்கிறது. பெற முடியாத இடங்களில் எவ்வளவு கொடுக்க முடியுமோ கொடுத்துவிட்டு திரும்பிப்பாராமல் நகர்வதே நல்லது. நம்முடைய அனுபவம் என்று சுருக்கிக் கொண்டால் இங்கு வலியும் வேதனையுமே மிஞ்சுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் இது ஒரு சிறு ஆடல் மட்டுமே எனும் போது மயக்கமில்லை. காலங்காலமாக இந்த இனிமையும் வலியும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்றே தோன்றுகிறது.
அதீதங்கள் பிறழ்கின்றன. மாய்த்துக் கொள்கின்றன. ஆனால் உலகம் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. முன் தினம் ஒரு பெண்னின் தற்கொலைச் செய்தி எங்களை வந்தடைந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அவளும் அவள் குடும்பத்துப் பெண்களும் சேர்ந்து மாமாவைப் பார்க்க வந்திருந்தார்கள். ”அண்ணே அவன எப்படியாவது என்கூட வாழ வைக்க முடியுமா” என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.
என் மாமா வக்கீலுக்குரிய ஒரே தோரணையோடு “இல்லம்மா.. ஒன்னா வாழச்சொல்லலாம். அவன் மாட்டேன்னு சொன்னா அவன ஜெயில்ல போடலாம் அவ்ளோதான்” என்றார். அவள் மீண்டும் மீண்டும் “அண்ணே அவன் என்கூட வாழறென்னு சொன்னான்ண்ணா. எப்படியாவது சேர்த்து வைங்க. ரெண்டு வருஷம். அவனுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு போவேன். கல்யாணம் பண்ணிக்கிறேன். ரொம்ப பிடிக்கும்னு சொன்னாண்ணா. எடைல கூட சொன்னேன்.. வேணாம்னா சொல்லுன்னு. இல்ல கண்டிப்பா நாம ஒன்னா இருப்பம்னு சொன்னான்ண்ணா” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
”யாரையும் யார்கூடையும் சேர்ந்து வாழச்சொல்லிலாம் வர்புறுத்த முடியாதும்மா” என்று மீண்டும் மீண்டும் இவர் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு மணி நேரமாக இதே தான் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவளின் தாய் பொறுமையிழந்து அவளை ஓங்கி அறைந்து “சொன்னதையே சொல்லிக்கிட்டு திரியாத. அவன் சொன்னான் சொன்னாங்கியே அந்த நேரத்துக்குச் சொல்லியிருப்பான். உண்மையா ஒருத்தவுக மனசுக்குள்ள என்ன இருக்குனு கண்டுபிடிக்க முடியுமா. வெளில ஆயிரம் சொல்லலாம்” என்றாள் அழுதுகொண்டே.
அந்த வரிகள் எத்துனை உண்மையானவை ஜெ. எத்தனை சொற்கள்!!! உண்மையில் நாம் மயங்குவதும் தேங்குவதும் சொற்களில் தான். ஒருவருடைய மனதில் சத்தியத்திற்கு என்ன இருக்கிறது என்பது அவனைத்தவிர யாரும் அறிந்திராததது தான். அந்தப் பெண் அந்தக் காலத்தில் உறைந்துவிட்டாள். அந்த வார்த்தைகளில் உறைந்துவிட்டாள் என்று தோன்றுகிறது ஜெ. அவளுக்கு சாவைத்தவிர மீட்பில்லை என்று தோன்றுமளவு பிறழ்ந்துவிட்டாள்.
சரவணக்குமாருக்கும் இறப்பே மீட்பு என்று கருதுகிறேன். அவன் உறைந்திருப்பது கொலை செய்த அந்த கணத்தில்! அருவருப்பின் உணர்வுகளில்! இவர்கள் இறந்துவிடுவது அவர்கள் அனுபவிக்கும் உணர்வின் வலியைவிட இவர்களுக்கு நல்லது. மேலும் மேலும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். கேள்விகளும் பதில்களுமாக நிறைந்து கொண்டே இருக்கிறேன்.
அருமையான கதை ஜெ.
நன்றி.
ரம்யா.
இலக்கணம், கடிதங்கள்
இலக்கணவாதிகளும் இலக்கியமும்
அன்புள்ள ஜெ,
மொத்தக் கட்டுரையும் ஒரு வாழ்க்கை சித்திரமாக என் வீட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பேத்தி வளர்கிறாள். காலையில் கண் விழித்ததும் கூடையில் கிடக்கும் அத்தனை விளையாட்டுச் சாமான்களையும் பொம்மைகளையும் எடுத்து கடை பரப்புவாள். வீடு முழுக்க நிறைந்திருப்பாள். பார்த்துப் பார்த்து தான் நடக்க வேண்டியிருக்கும். பத்தும் பத்தாதற்கு புதிது புதிதாக பொருட்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அலுத்துக் களைத்து மீண்டும் உறங்கச் செல்லும் போது ‘எனக்கென்ன?’ என்பது போல் அத்தனை பொருட்களும் அப்படியப்படியே கிடக்க இலக்கணவாதிகள் நாங்கள் தான் மீண்டும் அவற்றை எடுத்து அடுக்க வேண்டும்.
பொலிவதும் கலைவதுமாக நன்றாகத் தான் இருக்கிறது யாவும்.
நன்றியுடன்
அ. ராஜ்குமார்
பெங்களூரு.
அன்புள்ள ஜெ
இலக்கணம் பற்றிய கட்டுரையிலுள்ள தெளிவு மிக முக்கியமானது. அப்படித்தான் எழுதுவோம் என்னும் திமிர் படைப்பிலக்கியவாதிகளுக்கு உண்டு. அது தேவைதான். ஆனால் ஓர் அறிஞனுக்கு சூழலில் ஏன் இலக்கணநூல்கள் தேவை என்னும் புரிதலும் இருக்கவேண்டும். அந்த இரண்டு தரப்பையும் சொல்லி எழுதியிருக்கிறீர்கள். முக்கியமான கட்டுரை.
ரவீந்திரன். எஸ்
அன்புள்ள ஜெ,
இலக்கணத்தைப் பற்றிய தெளிவை அளிக்கும் கட்டுரை. நமக்குத்தேவை பழைய இலக்கணங்களை மூர்க்கமாக முன்வைக்கும் அறிவிலிகள் அல்ல. புதிய இலக்கணம் உருவாக்கும் அறிஞர்கள். ஆங்கிலம் வளர்வதே புதிய இலக்கணத்தால்தான். ஓர் ஆண்டில் ஆங்கிலத்தில் எத்தனை புதிய சொல்லாட்சிகள் புதிய சொற்றொடரமைப்புகள் வந்துள்ளன என்று பார்த்தால் ஆச்சரியம். ஆனால் அவையெல்லாமே ஒரு அகராதித்தொகுப்பிலும் இலக்கண அமைப்பிலும் சென்று சேர்ந்துகொண்டும் இருக்கும். அதற்காக ஒரு மாபெரும் அறிவியக்கமே செயல்படுகிறது. அப்படி ஓர் அறிவியக்கமே இங்கே இல்லை. உண்மையான பிரச்சினை அதுதான். அந்த இலக்கணப்பணிகளை செய்ய ஆளில்லை. ஆனால் இலக்கியமும் தெரியாமல் இலக்கணமும் தெரியாமல் ‘ஐந்தாம்கிளாஸ் கிராமர் புக்கை’ தூக்கிக்கொண்டு பாடம்நடத்த வருபவர்கள் தெருத்தெருவாக இருக்கிறார்கள்.
அர்விந்த்குமார்
வெண்முரசு நிறைவு -கடிதம்
ஆசிரியருக்கு,
பயணம் செய்யாத எவரேனும் இந்த உலகில் உள்ளனரா ? ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் எங்கெங்கோ பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். உடலாலும் உள்ளத்தாலும். ஒட்டுமொத்தத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை நடக்கும் வாழ்க்கையே ஒரு பயணம். அதனாலே நம் சொல் வழக்குகளில் வாழ்க்கை பயணம் என்றொரு சொல் உண்டு.
பயணம் நமக்கு ஏன் தேவைப்படுகிறது ? ஏனென்றிவது பயணத்தை அறிவதே. ஒரிடத்திலிருந்து இன்னொரிடத்திற்கு செல்வது பயணம். இடமென்பது ஒரு நிலை. நாம் இடமான நிலமென்பது நம் உடலின் உள்ளத்தின் நிலையே. இங்கிருந்து பெயர்ந்து செல்லுதல், இதனை மாற்றி கொள்ளுதலே. வளருதல் என்பது ஓர் மாறுதல். அதுவே உயிரின் இயல்பு. அதன்பொருட்டே பயணங்கள். உடலுக்கான பயணங்கள் உடலை போல வரையறைக்கு உட்பட்டவை. நிலைத்திருத்தலின் பொருட்டு தன் நிலையை வகுத்து கொள்பவை. உளமோ வடிவமின்மையால் பரந்து விரிந்து புடவியே தானென உணரும் தொலைவுக்கு பயணம் செய்வது.
நம் கதைகள் அத்தனையும் உள பயணமன்றி வேறென்ன ! விரிபவை வளர்பவை. வளர்பவை வாழ்பவை. அவையே பொருள்ளவை. கதைகளில் இருந்து உளமெழுபவனே வாழ்கிறான். ஏனெனில் இங்கே புவியென நம்மை சூழ்ந்து விரியும் இப்பெருக்கில் நாம் அறிந்து சமைப்பவையெல்லாம் கதையன்றி வேறில்லை ! அந்த கதைகளுக்குள் பெருங்கதையென காலமின்றி திகழ்வது மாபாரத கதை. அது காவியமாகி விரிந்தெழுந்து நம்மை அணைத்து கொண்டதே வெண்முரசெனும் பெருங்கதை. இது அக்கதையுலகில் தன்னையும் இணைத்து கொண்ட ஒரு குழந்தையின் கதை.
குழந்தையின் கதையுலகை போல் வசீகரமாவது வேறொன்று இல்லை. இந்த புவியே விரித்து வைத்த பெரும் கதைப்பரப்பாக அதன் கண்களுக்கு தென்படுகிறது. அறியாத ஒவ்வொன்றும் வந்து முன் நிற்கையில் மாயம் போல் உள்ளது. பறவை பறப்பதும் மானுடன் நடப்பதும் பாம்பு ஊர்வதும் வினோதமானவை. அந்த உலகின் பரிசுத்தம் நிஜமும் கற்பனையும் காணமலாகும் புள்ளியில் உள்ளது. அவர்களுக்கு வேறுபாடுகள் இல்லை. அங்கிருந்து மானுடன் வளர்ந்து சமைக்கும் அத்தனை கதைகளும் அறிதலால் விழுந்து விட்ட பெரும்பள்ளத்தை நிரப்பி அவனை சின்னஞ்சிறு குழந்தையாக்க முனைபவை. எந்த கதை தன் முடிவிலா மாயத்தை ஈட்டிக்கொண்டு அவனது வாழ்க்கையை தனக்குள் எடுத்து கொள்கிறதோ அதுவே பெருங்கதையென்றும் உயர் கதையென்றும் வாழ்கிறது. அதன் மகத்துவத்தை உணர்த்துவதே மாபாரத கதை. மூவாயிரம் ஆண்டுகள் இம்மண்ணை ஆள்வது. இன்னும் இதை யுகங்களுக்கு ஆளப்போவது. அது விதையில் இருந்து பிளந்தெழுந்த ஆலாக நம் முன் விரிவதே வெண்முரசு. அந்த காவிய கதையுலகில் தன்னை இழந்தவனின் கதை இது.
ஒரு மாலை நேரத்து இளைப்பாறலில் திண்ணையில் கீரை ஆய்ந்து கொண்டிருந்த அம்மாவை சுட்டி தெருவில் கலா அத்தை தூக்கி செல்லும் அச்சிறு குழந்தையின் பெயரென்ன என்று வினவினேன். பிரகதி என்றாள் அம்மா. ஆம் இந்த பெயரில் நான் யாரையோ அறிந்திருக்கிறேன் என உள்ளம் சொன்னது. பல நாள் பழகியவரும் கூட. ஒருவாரம் கழித்து களிற்றியானை நிரையின் யுயுத்ஸுவை பார்க்கையில் நினைவு வந்தது. திருதாராஷ்டிரரின் இசையை தன்னில் வாங்கி கொண்டவளான வைசிய குலத்து அரசி பிரகதியே அப்பெயர் கொண்டு நான்றிந்த ஓரே பெண் என்று. அது ஒரு திறப்பின் கணம் இந்த கதைகள், கதை என்பதற்கு அப்பால் வாழ்வென்றே என்னில் நிரம்பியுள்ளன.
அதற்கு சில வாரங்கள் கழித்து அருண்மொழி அம்மாவின் பனி உருகுவதில்லை விழாவில் பேச்சு இடைவெளியில் அஜிதன் அண்ணா தான் எழுதி கொண்டிருந்த புதிய நாவலின் பெயர் மைத்ரி என்றார். மைத்ரி மைத்ரி எங்கோ கேட்டிருக்கிறோம். அவ்வார முடிவில் சொல்வளர்க்காட்டின் பத்தாம் காடு மைத்ரேயானியம் என்பது நினைவில் உதித்தது. அங்கும் மீண்டும் கதையோடு ஒன்றான அறிதல் சிந்தையை அறைந்தது. இங்கெல்லாம் நேருக்கும் நிழலுக்கும் கோடுகள் மறைந்து என்னுள் இரண்டும் ஒன்றான நிலையை கண்டடைந்தேன்.
வெண்முரசை வாசிக்க தொடங்குகையில் எனக்கேன ஒரு வழியை உருவாக்கி கொண்டேன். இன்று சிந்தித்து பார்க்கையில் அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதும் அல்ல என்று உணர்கிறேன். அது என்னை வந்தடைந்த வெண்முரசு என் கையில் தானே உருவாக்கி கொண்ட வாசிப்பு முறை என்றே தோன்றுகிறது. வெண்முரசின் முதல் நாவலான முதற்கனல் சீறும் கனலாக உணர்ச்சிகளில் நம்மை இழுத்து தன்னுள் சுருட்டி கொள்வது. நாளின் பெரும் பொழுதை தனிமையில் கழிக்கும் வாழ்க்கை கொண்டவன் என்ற முறையில் பெரும்பாலும் விருப்ப பகற்கனவுகளில் பரப்பவனாகவே என் குழந்தை பருவம் முதற்கொண்டு இருந்திருக்கிறேன். ஒரு செவ்வியல் ஆக்கம் தருமளவு கற்பனை உலகத்தின் வீச்சை பிறிதெங்கும் நாம் அடைய முடிவதில்லை. அது வாழ்க்கையை தன் ஆற்றலால் ஒருங்கிணைத்து முடிவிலா ஆழமும் விசையும் கொண்டதாக்குகிறது. தனிமையில் கனுவுகளில் மிதந்தலையும் சிறுவனுக்கு அப்படியொரு உலகம கிடைத்தால் விடுவதற்கு இல்லை.
காணாது கிடைத்த பொன்னுலகத்தை இலக்கிய வாசகன் கொள்ளும் பிரக்ஞை பூர்வமான விரிவாக்க கற்பனைக்கு பின் கனவுகளில் இறக்க விரும்பவில்லை. இது கொடும் பசியில் இருந்தவனுக்கு உணவு கிடைக்கையில் ருசித்து சாப்பிடு என்பதை போன்றது. அவனுக்கு ருசி முக்கியமல்ல, உணவு தான் முக்கியமானது. அவனது பசி மட்டுமே அதை சுவையாக்குகிறது. அது வாரியடைத்து உண்டு, மெல்ல தணிந்து வருகையில் உணவின் இயல்பான சுவையை உணர்வது போன்றது.
அப்படித்தான் வெண்முரசை வாசித்தேன். அந்த பெருங்கனவில் மூழ்கி காணமலாகும் சுகத்திற்காக. கனவில் இருந்து விழிக்கையில் அதன் இறுதி பகுதிகள் சில நினைவில் எஞ்சி நிற்கும். அங்கிருந்து சில சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் வந்தடைவோம். அதுபோன்றதே வெண்முரசில் இருந்து இதுவரை என்னை வந்தடைந்த சிந்தனைகள். ஆனால் கனவுகளுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அவை சிந்தனையாகமல் நிகழ்ந்தோடினாலும் நாமறிய தாக்கத்தை நம்மில் செலுத்தி விடுபவை. அவற்றை அறிவது எதற்காக எனில் மேன்மேலும் அதன் அறியமுடியாமையின் உலகத்திற்குள் செல்வதற்காக. மொழியில் அமைந்த காவியமெனும் கனவுகளின் மைய முக்கியத்துவமே, இழந்து விடாமையே. மீண்டும் மீண்டும் நாம் சென்று திளைக்கும் பெருவெளி அது. உள்ளத்தின் இவை தோன்றியவுடன் வெறுமே வாசிப்பினூடாக தன்னியல்பில் எழுபவை எழட்டும். நான் இக்கனவை காண்பதில் திளைக்க விழைகிறேன் என்று சொல்லி பெருங்கடலில் குதித்து விட்டேன்.
ஆசிரியரே, அன்று வாழ்த்தளித்து குறைந்தது ஒராண்டிற்காவது பெரும் நிறைவான வாழ்க்கையை தரும், இருந்த இடத்தில் இருந்தே இது ஓர் பெரும் பயணம் என்றீர்கள். எனக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆயின. இப்பயணக்காலம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இது என் வாழ்க்கையின் அத்தனை அடிப்படைகளையும் வடிவமைக்க போகும் ஒன்று. இக்காலத்தில் வெண்முரசின் வழி அறிந்த அறிதல்களை இச்சிறு கடிதத்தில் கூறிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என் அறிதல்கள் பெரியவை என்பதனால் அல்ல. அவை எவற்றையும் உறுதியான நினைவாக ஆக்கி கொள்ளாமையால். எழுத்து என்பது நீரை உறைய வைக்கும் பனிக்கட்டியை ஒத்தது என்ற சாரம் அமைந்த வரியொன்று வெண்முரசில் உண்டு. சில அறிதல்களை அடைந்தேன், ஆனால் அவற்றை எழுத்தாக்கி கொள்ளவில்லை. நீரின் இயல்பே வழிந்தோடுதல். என் நினைவில் எங்கேனும் சென்று அமைந்திருக்கலாம். வலிய தேடும் நேரங்களில் அந்த கிணறு சுரப்பது இல்லை. தேடிச்சலித்த கணத்தில் நீரள்ளி வீசி விளையாட்டு காட்டுவது.
ஒவ்வொரு அறிதலும் முந்தைய அறிதல் ஒன்றை ரத்து செய்தோ, சற்றே மாற்றியமைத்தோ தன் இடத்தை நிறுவி கொள்கிறது. அது ஒன்றின் இறப்பின் கணம், மற்றொன்றின் பிறப்பின் கணம். அவ்விறப்பு நேரில் நடக்கையில் கிடைக்கும் அறிதல்களை இதுகாறும் மானுடம் சேர்த்து வைத்துள்ளது. அங்கே ஒவ்வொன்றும் முடிவாகின்றன. புதியன முளைத்தெழுகின்றன. போரை போல மனிதன் வேறெங்கும் இறப்பை அதன் முழுவீச்சில் காண்பது இல்லை. அது கொடுக்கும் அறிதல் ஏராளம். ஆகவே போர் ஒரு வேள்வி. வெண்முரசில் போரே அதன் உச்சம். பதினெழு நாவல்களின் வழி திரட்டி கொண்டுவந்த வாழ்க்கை பெருநதி காலமாகி நிற்கும் இளைய யாதவர் என்னும் பெருங்கடலை எதிர்கொள்வதன் முனை அது. அந்த கடலில் ஒவ்வொன்றும் முட்டி மோதி ஒன்றுமில்லாததாக அல்லது ஒன்றான ஒன்றாக ஆகிவிடுகின்றன.
முதற்கனலின் நாயகர் பீஷ்மர். அவரே களத்தில் முதல் பலியாகிறார். நெறிகளை ஐயமில்லாமல் கடைப்பிடித்தது சரிவின் சாட்சியாக நிற்கிறார். அம்பையின் கனல் அவளுடையது மட்டுமன்று. அது கங்கையின் சுனந்தையின் கனலுமாகும். அந்த தீக்கு நாக்கு கொடுத்தவர் பீஷ்மர். மகன்களை இழந்து பிச்சியாகி கானகத்தே கண்ணீரில் அலையும் கங்கையை காங்கேயன் தான் நம்பியவை போர்க்களத்தில் சரிகையில் கண்டுகொள்கிறார். நாகனின் கலத்தில் யாயதியாக தன்னை கண்டுகொண்டவர் வானம்பாடியின் குரலில் புரூ தன்னை உணர்கையில் ஒரு வட்டம் முழுமையடைகிறது. தந்தை மகனாகும் தருணத்தில் புவி நிறை கொள்கிறது. வாழ்நாள் முழுக்க காமத்துறப்பு நோன்பு கொண்டவர். விட்டு செல்வது என்பது எச்சமில்லாது ஒவ்வொன்றையும் தன் உள்ளத்தில் இருந்து அகற்றி கொள்வது தான். அஸ்தினபுரியின் காவலனாக நிறுத்தி கொண்ட பின் துறவியாக தன்னை எண்ணிய மாயையில் உழன்று தவித்தவர். அவ்வேடத்தை கலைத்து கொலை வேங்கையாக உருமாறி தன்னை அறிகிறார்.
பீஷ்மரை சொல்கையில் வியாசரை நினைவுகூற வேண்டும். வியாசர் வருகையில் சத்யவதியை காண வேண்டும். சத்யவதி சந்தானுவால் நினைக்கப்படுபவள். சந்தனுவோ தேவாபியாலும் பால்ஹிகராலும் துரத்தப்படுபவன். அவர்களோ பிரதீபராலும் சுனந்தையாலும் கைவிடப்பட்டவர்கள். மீண்டும் சத்யவதி அம்பையாலும் அம்பிகையாலும் அம்பாலிகையாலும் நினைக்கப்படுவாள். மூவருமே மூன்று முனைகளில் அவளை அறிந்தவர்கள். அங்கிருந்து மூவகை அனல் கொண்டவர்கள். இருவர் நஞ்சு கொள்கிறார்கள். அம்பை தீ புகுந்து தங்கைகளை வளர்க்க வழி செய்து போகிறார்கள். அவளது மகன் சிகண்டி பீஷ்மரால் ஏற்கப்படுகிறான். மானுட உறவுகளின் விளங்க முடியாமை நம் மனதை அறைந்து கொண்டே இருக்கிறது. ததும்பும் காதலுடன் வந்தவளை போழ்ந்து அனுப்பும் அவரே தீயுடன் வரும் குழந்தையை வெறியோடு அணைத்து கொள்கிறார். இந்த தீயை தானும் கொண்டதனால் தான் அவராலும் இறுதி வரை போரை தவிர்க்க முடியவில்லை போலும். அதற்காக ஏங்கி கொண்டிருக்கிறார். இவ்வண்ணம் தான் ஒன்றுடன் ஒன்றிணைந்து நம்மை காவியம் கவ்வி கொள்கிறது.
அம்பிகையும் அம்பாலிகையும் அம்பையின் தங்கைகளாக தோற்கடிக்கப்பட்டவர்களாக சத்யவதியை வெல்லும் விழைவை கொண்டவர்கள். ஒருவகையில் அது சத்யவதி அல்ல, அவளது ஆளுமையின் பகுதியான நெறிகளை கடந்து சென்று ஆளும் விழைவை என்று பார்க்கலாம்.
இன்னொரு புறம் மனைவிகளாக தங்கள் கணவனை தங்களுக்கு உகந்த வடிவில் வார்த்து கொள்கிறார்கள். அவர்களுடன் கூடியது உடலால் வியாசரெனினும் உள்ளத்தால் அவர்கள் அவரை தழுவி கொண்ட போது விசித்திரிய வீரனாகவே நினைக்கிறார்கள். விசித்திர வீரியனின் கனவை கொண்டவள் திருதராஷ்டிரனையும் அவனையே கனவாக கொண்டவள் பாண்டுவையும் பெற்றெடுக்கிறாள்.இந்த நீள்சரடு வெண்முரசில் குந்தியில் தொடர்ந்து சந்திரனின் கதையில் விரிவாகி உத்தரை வரை செல்கிறது. பெண் தான் நினைக்கும் ஆணின் வடிவை கருவில் சூடி கொள்கிறாள் என்பதன் நுண்மை ஆராயப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த வடிவம் ஆண் அவளில் ஏற்படுத்தும் தாக்கத்தை பொருத்து எவ்வண்ணம் மாறுபடுகிறது என்பதும். இது காவியத்தில் இருந்து நம் அன்றாடங்கள் வரை இறங்கி வந்து பேச்சுகளில் புழங்கும் தருணத்தை காண்கையில் காவியம் எப்படி காலமிலாத கருக்களை தீவிரமாக்கி ஆராய்கிறது என அறிந்தேன்.
சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் அரசு துறந்து கானேகுவது வாழ்க்கையின் அழியாத மர்மங்களில் ஒன்று. அவ்வண்ணம் பலநூறு அரசர்கள் கானேகுவதை வெண்முரசு முழுக்க கண்டு வருகிறோம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சூழ்நிலையில் அது என்ன என்ற வினா எழுந்து நிற்கிறது. மூன்றரன்னையரை பொருத்தவரை தங்கள் இடத்தை தங்களை விட சிறப்பாக ஆற்றும் பெண்கள் எழுந்துவிட்டதால் வரும் உளநிறைவும் வெறுமையுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. எனினும் அங்கே தூரத்து மலைமுடியாக தன் வசீகரத்தை இழந்துவிடாமல் நிற்கிறது.
இந்த பெண்களை நினைத்து கொள்கையில் விசித்திர வீரியனை நினைக்காது கடக்க முடிவதில்லை. என் உடலாலேயே விசித்திர வீரியன் மிக அணுக்கமாகி விடுகிறான். அவனது இருநிலை என்பது உலக சுகங்களை தன்னால் துய்க்க முடியாது என்ற அறிதலில் இருந்து வரும் பிரக்ஞை துறவு மனப்பான்மையும் கனவுகளில் நுரைத்தெழும் அடங்கா காமமும் தான். அம்பை வந்துவிட்டாளா என கேட்கும் தருணம் அவனது காமம் கூர்மையாக வெளிப்படும் இடம். அந்த கனவுகளை தன் இல்லாளுக்கு கொடுத்து விடுகிறான். கனவுகளுக்கு தன்னை உண்ண கொடுத்து விடுகிறான். எவரும் தன் கனவுகளில் இருந்து விடுபடுவதில்லை என்ற எண்ணத்தை இங்கிருந்து காவியம் முழுக்க காண்கிறோம். கனவுகளோ நாமறிந்த எந்த ஒத்திசைவும் இல்லாதவை. அவற்றை கண்டு திகைத்து மயங்கி ஆட்கொள்ளப்படுதலே மானுடர் இயற்றுவது.
விசித்திர வீரியனின் தொடர்ச்சியாக பாண்டுவே மிக பொருத்தமானவன். ஆனால் விசித்திர வீரியனில் இருந்து பாண்டு தனித்து தெரிவது அவனுடைய முழுமையான விழைவால். துளியும் அவனில் துறவு நிலைப்பதில்லை. இப்படியும் முற்றிலும் வகுத்தும் கூற முடியாது. விதுரனுக்கு அஸ்வதந்தத்தை கொடுக்கையிலும் சதசிருங்க மலைக்காடுகளில் துறவு செல்ல விரும்புவதிலும் அக்குணம் வெளிப்பாடு நிகழ்கிறது. எனினும் அவனது தந்தையை போலவே அவையும் எவையும் அவனது கனவுகள் அல்ல. இக்காரணத்தால் குந்தி அவனுக்கு மைந்தர்களை பெற்று தருகையில் முழுமையாக நிறைகிறான். பாண்டுவிற்கு குந்தியில் முதல் மைந்தன் யுதிஷ்டிரன் வரை தொடர்கையில் விசித்திர வீரியனில் தொடங்கும் ஒரு சரடு முழுமையடைகிறது. ஏனெனில் இறுதி வரை அறத்திற்கும் துறவுக்கும் ஊசலாடி கொண்டிருப்பவர் யுதிஷ்டிரன். இறுதியில் அறத்தில் ஊன்றி நின்று முழுமையை அடைகிறார்.
மறுபுறம் திருதராஷ்டிரனில் அவனது கனவு பேருருவம் கொள்கிறது. அது எல்லா கனவுகளையும் போல கட்டற்றது. கண்ணற்றது. அவரது நூறு மைந்தர்களிலும் ஆயிரம் பெயர் மைந்தர்களிலும் பரவி நிறைகிறது. அதன் முழுமை பேரரசனாக துரியோதனனில் திகழ்கிறது. இவையெல்லாம் இவர்களில் தொடங்கினாலும் அன்னையாரால் ஆடப்படுகிறது. அவர்கள் தொடங்கி வைத்து ஆடி முடித்தவை. களத்தில் மீண்டும் ஒருமுறை நிலை நிறுத்தப்படுகிறது,
அந்த அன்னையர் ஆட்டத்தின் முடிவு குந்திக்கும் காந்தாரிக்கும் நடுவே நிகழ்கிறது. குந்தியையும் காந்தாரியையும் குறிப்பிட மிகச்சரியான சொல் தங்களது இறுதி குகை பயணத்தில் அதன் சுவற்றோவியங்களில் இருந்து அர்ஜுனனில் எதிரொலிப்பது. காந்தாரி ஒருபுறம் வஞ்ச மகளென்றும் மறுபுறம் பேரன்னையாகவும் குந்தி ஒருபுறம் விழைவின் வடிவாகவும் மறுபுறம் முதன்னையாகவும் இருந்தாள் என்பது அது. அவர்கள் இப்படி முழுமையாக திகழும் இடம் இளமை பருவத்தில் மட்டுமே. மழைப்பாடலில் வஞ்சங் கொண்டே காந்தாரி சுயோதனன் எனும் நாமத்தை துரியோதனன் என திருப்புகிறாள். அவளது தங்கைகளில் முழுமையாக அவ்வஞ்சம் வெளிப்படுவதை காணலாம். தன் நிறை நிலையால் பேரன்னையாகிறாள்.
குந்தி வளர்ந்து வரும் சித்திரம் விழைவு கொண்ட சிறுமி எழுந்து நிற்கும் சாகச கதைக்கு இணையானது. இளவரசி கனவிற்குகாக தன் உறவுகளை பலியிடுகிறாள். அரசுக்காக தலைமகனை கொடுக்கிறாள். வெல்வதற்காக ஈற்றில் தன் மக்கள் ஐவரையும் கொடுத்து விடுகிறாள். விழைவின் வடிவாக திகழும் அவளை புரிந்து கொள்ளுதல் வெற்றியை புரிந்து கொள்ளுதலும் ஆகிறது. மனிதருக்குள்ள முதல் விழைவு வாழ வேண்டும் வளர வேண்டும் என்பதே. அது அடிநாதத்தில் பசியாக வெளிப்படுகிறது. அப்பசியை வளர்க்கும் விழைவு தீயை வைஸ்வாநரன் என்றழைக்கிறோம். தீயின் முதலும் முடிவான இயல்பு தன்னில் உள்ளவற்றை உண்டு தன்னையும் உண்டு இன்மையாகி நிறைவடைவது. பாண்டவர்களை யாரென்றே அறியாது போல் மாறும் குந்தியெனும் முதன்னையை இப்படியும் புரிந்து கொள்ளலாம். இதுவே வெற்றிக்கான இலக்கணமும். உலகை வென்ற பின் உள்ளையும் வெல்லுதல் அல்லது உலகத்தை வென்ற பின் அதன் எதிர்பாரமையால் அது நம்மை வெல்லுதல். குந்திக்கு நடப்பது பின்னது. மழைப்பாடலில் குந்தியின் முதல் வெற்றி ஊழால் நிகழ்கிறது. இரண்டாவது வெறுமை பாண்டுவின் இறப்பில் நிகழ்கிறது. போர் களத்தில் ஊழாகி வந்த இளைய யாதவர் முதலாவதை ஈட்டி தருகிறார். இரண்டாவது முழுமை பெயரர் தீயில் மடிகையில் ஊழால் நிகழ்த்தப்படுகிறது.
குந்தியின் ஆறு மைந்தர்கள் ஆறு முழுமை நிலையின் வடிவுகள். செங்கதிர் வடிவான கர்ணன் அவளது முதிரா இளமையின் கனவுகளில் உதித்தவன். எவரும் தன் இளமையை வெல்வதில்லை. ஒவ்வொரு முறையும் அதன் எழுச்சி கண்டு அவனை நசுக்குகிறாள். சூரியனை போல தன் பெருந்தன்மையால் வென்றெழுந்து கொண்டே இருக்கிறான். கார்க்கடலில் அவளுக்கு வரந்தருகையிலும் அவன் அவ்வாறே உள்ளான். கர்ணனின் அடையாளம் என்பது நாகமும் கதிரும். நாகம் விழைவின் வடிவம். அவன் பிறப்பில் இருந்து தொடரும் அரச நாகம் குன்றா விழைவின் வடிவம். தனக்கு மீறியதை எவரும் வைத்து கொள்ள விரும்புவதில்லை. ஒவ்வொரு முறையும் அது உலகால் விரட்டப்படுகிறது. அதுவே கதிர் மைந்தனுக்கு நிகழ்கிறது. அன்னை முதற்கொண்டு எல்லோராலும் அவன் துரத்தப்படுகிறான்.
கர்ணனின் பிறப்பில் இருந்து அவனை தொடர்ந்து வருவது அரச நாகமும் பொற்கதிரும். அதாவது பெருவிழைவும் விழைவால் உண்டான வஞ்சமும் இவ்விரண்டை கடந்து சென்று அள்ளிக் கொடுக்கும் பெருநிலையும் இயல்புகளாய் கொண்டு அதன் துருவங்களுக்கு இடையில் தத்தளிப்பவன். தன் வஞ்சத்தையும் விழைவையும் வள்ளல் பெருந்தன்மையால் வென்றெடுக்கும் காவியமே அவன் வாழ்வு. நாகர் குலத்து தட்சனை அவன் ஏந்தி கொள்வது தன் பெருநிலையால் அன்றி வஞ்சத்தால் அல்ல. அதை உணர்கையில் அவன் களத்தில் முழுயடைகிறான். சொல்லப்போனால் வெண்முரசின் போர்க்களத்தில் முதல் முழுமையின் மரணத்தை தழுவி கொள்பவன் கதிர் மைந்தனே. விழைவு வஞ்சமாக திரிவதில் தொடங்கி அளியாக பெருகி உலகை நிறைக்கும் உன்னதம் வரைக்கும் அவை ஒன்று பிறிதொன்றாக மாறும் ரசவாதம் மாமனிதன் ஒருவனுள் நடப்பதே கர்ணனின் கதை.
கர்ணனை பற்றி பேசுகையில் பெண்களை பேசாது கடந்து செல்வதில்லை. அவனது முழுமைத்தன்மையாலேயே பெண்களை ஈர்ப்பவன். அம்முழுமையே தடையென அமைந்து காதல் இன்பம் கிடைக்க பெறாதவன். திரௌபதி அவனை விலக்குவது அவளை முழுமையாக நிறைப்பவன். எனினும் அவளால் நிறைக்க ஏதுமில்லாதவன். வெல்பவனாயினும் வென்றவற்றின் மீது உளம் கொள்ளதவன். அக விரிவால் துரியோதனன் போன்றவனுக்கு கொடுப்பதில் ஒரு குறையும் இல்லாதவன். எனவே அகம் நிறைந்தவளால் அகற்றப்படுகிறான். இதன் முழுவீச்சு பிற மைந்தர்க்காக போர் களத்தில் கர்ணன் முன் இரக்க வரும் காட்சியில் விரிவும் ஆழமுமாக அமையும் உச்சக்கட்ட நாடக தருணம். தாயும் மகனும் கொள்ளும் நுண்ணிய உணர்வுகள் வெளிப்பாடு கொள்வது.
வைஷாலி நிலை மலர் சூரியனின் முன் கொள்ளும் மலர்வும் தன்னிரக்கமும் என இருநிலைகளால் அலைக்கழிக்கப் படுகிறாள். அது மஞ்சத்தில் மலர்வாகவும் தனிமையில் தன்னிரக்கமாக அதன் விளைவாக புறத்தே கசப்பாக நிற்கிறது. அக்கசப்பில் இருந்து அவள் அவனோடு உடனேறுகையில் கொள்ளும் மலர்வில் நிறைவுறுகிறது. காயில் துவர்த்து புளித்து கனியில் இனிப்பாகிறது.
சுப்ரியை மணக்கையில் தன் வஞ்ச முகத்துடன் வெளிப்படுகிறான். அவளும் அவ்வஞ்சத்தோடே அவனை எதிர் கொள்கிறாள். ஆனால் பெண் பெருங்கனிவுடன் வந்து நிற்கும் தருணமொன்று ஆணின் வாழ்க்கையில் உண்டு. அதை இழந்தவன் பெண்ணை அல்ல, பெண்ணென்று இங்கு சூழ்தமைந்த புவியின் கனிவை இழந்தவனே. நெடுந்தூரம் சுற்றி சென்று மட்டுமே மீண்டும் அடையத்தக்கது. அத்தருணம் முதற்கனலில் இருந்து தொடர்கிறது. அங்கே பீஷ்மர் அம்பையை விலக்குவது போன்றே, வேள்வி அவையில் வெளித்தள்ளப்பட்டு மது களியில் திளைக்கையில் சுப்ரியை வந்து நிற்கிறாள். இவனும் பீஷ்மராகிறான். இருவரும் சுற்று வழியில் சென்று உயிரை விலை கொடுத்து இழந்ததை பெற்று கொள்கிறார்கள்.
கர்ணனை தாண்டி சுப்ரியை வெண்முரசின் முதன்மை பெண்களில் ஒருத்தி. அவளுக்கு கணவனை தாண்டி உறுதியான தனியாளுமை உண்டு. நாகர் மகளுடன் நகரில் இறங்கி விடுபவள் கலைகளில் தோயும் பெண் மனம் ஏங்கும் விடுதலையை உணர்த்துவது. நிகராக தோற்கும் ஆண் எவ்வாறு சிறுக சிறுக சிறுத்து அவள் மனதில் இடமில்லாதவனாக மாறுகிறான் என்பதை வேள்வியவையில் ஜயத்ரதனை அவள் எதிர்கொள்கையில் காண்கிறோம். இதன் உக்கிரம் ஆணால் உணரப்படுவது யுதிஷ்டிரனில் மட்டுமே. சொல்வளர்காடு முழுமையும் அத்தனை தத்துவ சிந்தனைகளுக்கும் அடியில் எரியும் தீயென கிருஷ்ணை மேல் ஏக்கம் கொள்கிறார். இதனூடாக தத்துவ சிந்தனைகள் அவை வாழ்க்கையில் மலராதவரை வெற்று குப்பைகளா என கேள்வி எழும்புகிறது. யுதிஷ்டிரன் அத்தீயில் இருந்து அதற்கப்பால் தன்னுள் எரியும் பாசமெனும் தீயை கண்டு நிறைவடைகிறார்.
யுதிஷ்டிரனில் காண்பது ஆணின் ஒளிமிக்க பக்கத்தை என்றால் வேள்வி அவையில் சுப்ரியை சீண்டும் கர்ணனில் இருள் உலகை காண்கிறோம். தோற்கடிக்கப்பட்டவர்கள் தங்கள் தோல்விகளை மீண்டும் மீண்டும் ஆக்கி அகம் உருக விழைகிறார்கள் போலும். அந்த தோல்வி மகத்தான வெற்றியாக எந்த புள்ளியில் நிலை கொள்கிறது என்பது கர்ணனில் எழும் வினா.
இளைய யாதவரின் இறப்புடன் துவாபர யுகம் முடிந்து கலி பிறக்கிறது. கலியில் பாண்டவரும் அவர் துணைவியும் விண்ணேகுகிறார்கள். அந்த பயணத்தின் அறிவிப்பாளர் யுதிஷ்டிரரே. அதில் முழுமை காண்பவரும் அவரே.
குந்தியின் இரண்டாவது மகனும் பாண்டுவின் முதன்மை மைந்தனுமான யுதிஷ்டிரனின் பிறப்பு ஒரு திருப்புமுனை. அது விழைவு வெற்றிக்கு பதில் அறத்தை தேர்ந்ததன் சித்திரம். இது மிக துலக்கமாக குந்தி ஆற்றில் கர்ணனை பலிக்கொடுக்கையில் உறுதியாகிறது. அவள் ஏன் யுதிஷ்டிரனை தேர்ந்து கொண்டாள் ? இக்கேள்வி இடையறாது விவாதிக்கப்படும் ஒன்று. தன்னை கைவிடப்பட்டவளாக எங்கோ உணர்ந்ததன் விளைவால் அறத்தை தேர்ந்து கொண்டாள் என்று தோன்றுகிறது. கையறுநிலையில் கைக்கொடுப்பது வலிவோ விழைவோ அல்ல, சார்ந்துள்ள அறமே. அதுவே நம் மேல் புவியாளும் நியதி கருணை கொள்ள செய்வது. குந்திக்கும் பாண்டுவுக்கும் தனித்தனி திட்டங்கள் உண்டு. எனினும் அவர்களின் வழி ஊழால் நிகழ்த்தப்பட்ட பெருமாற்றம் அது.
யுதிஷ்டிரனின் தத்தளிப்பு விழைவும் நெறிக்கும் என ஒற்றை வரியில் வகுக்கலாம். இந்த இருமுனைகளுக்கு இடைப்பட்ட எண்ணாயிரம் நிற பேதங்களை அவரின் வழி அறிகிறோம். யுதிஷ்டிரன் மட்டுமே ஐவரில் பாண்டுவிற்காக பெரிதும் உளமுருகுபவர். பெரிதும் பாண்டுவின் குணங்களான அடைக்கலத்தையும் அடையும் விழைவை கொண்டவர். வெண்முரசின் மெய்ஞான பயணங்களை கூறும் மூன்று நூல்களில் முதன் நூலான சொல்வளர்காடு யுதிஷ்டிரனுடையது. பெரும் தத்துவங்களுக்கு அடியில் குமையும் மானுடனின் வேட்கைகளை அறிவது. அறிந்தறிந்து சென்று தன்னை கண்டடைகிறார்.
அத்தனை அறிதல்களும் குருதியை கொடுக்கையிலேயே முழுமை பெறுகின்றன. சில அறிதல்கள் அவற்றை தேர்ந்து நாமே என உணர்ந்த கணமே தங்கள் விளைவை கொடுக்க தொடங்குபவை. முதற்பாண்டவர் மூவரும் பயணம் செய்து அடைந்த அறிதல்களால் கைவிடப்படுதலை இந்த புள்ளியில் வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது. மூவரும் சென்று அடைந்தவற்றை அவற்றின் பொருட்டு மட்டுமேயாக்கி அமைந்தவர்கள் அல்ல. அதற்கு பின்னால் அவர்களின் ஆணவமும் உலகியல் வேட்கையும் உள்ளன. இங்கிருந்து பெற்றவற்றை துறந்து சென்று அடைந்தவற்றை இவற்றிற்காக பணயம் வைக்கையில் அவர்களையே பலி கொள்கின்றன அவை.
யுதிஷ்டிரனை பற்றி பேசுகையில் அவரது சிறிய தந்தையான விதுரரை நினைவு கூர்கிறேன். விசித்திர வீரியனின் கூறுகளே இல்லாத ஒரே மகன் விதுரனே. அதற்கான காரணமும் நாமறிவோம். சேடிப்பெண் சிவை வியாசரை விரும்பி ஈன்று கொண்ட வடிவம். இளம் விதுரன் அஸ்தினபுரியின் கைவிடு படைகள் ஏவப்படும் நாளே அனைத்தும் சீர்நிலை பெறும் என உளயெழுச்சியுடன் சொல்லும் தருணம் மழைப்பாடலில் உண்டு. அப்போது ஒருநாள் வேங்கை மரத்தை வேரோடு சாய்த்து உண்ணும் துதிக்கை கொண்ட வேழம் ஒன்று இளவெயிலில் சுடர்ந்து நின்ற மலர்களை உண்ணுவதை பார்த்து எவ்வகையிலும் நிறைவடைய செய்யாத பொருளில்லாத செயலென்று எண்ணுவான்.
ஒருவகையில் அஸ்தினபுரியின் பேரமைச்சரான விதுரர் தன் அமைச்சு திறனால் வேழம் தான். இளமையில் நாம் அபாயங்களை விரும்புகிறோம். அப்போது மட்டுமே நம்மை யாரென்று உலகிற்கு காட்ட இயலும். அதுவும் அவற்றிலிருந்து பிறரை காப்பவனாக எண்ணி மகிழ்கிறோம். விதுரருக்கு கண் முன் அப்படி அபாயம் நிறைந்த சாகசத்தருணம் அஸ்தினபுரியின் கைவிடுபடைகளை காண்கையில் கிடைக்கிறது. அவை செல்லாது இருக்கவே அவரது அத்தனை முயற்சிகளும். அவையோ யானை புஷ்பம் உண்டதை போன்றது. பூவை உண்பதால் நிறைவு ஏற்பட போவதில்லை. மரம் வளர்வது நிற்க போவதும் இல்லை. பூவிற்கும் ஒரு பற்றாக்குறையும் வரப்போவதில்லை. இந்த எளிய அறிதலின் மகிழ்ச்சியில் நின்று கொண்டு வாழ்க்கையில் தத்தளிப்பவர். அந்த ஆணவம் விரிசலிடும் கணம் பிரயாகையில் இளைய யாதவனால் நிகழ்த்தப்படுகிறது. இமைக்கணத்தில் அவராலேயே முற்றாக உடைத்து காட்டப்படுகிறது. அங்கே சிவையின் வஞ்சம் விதுரரின் ஆழத்தில் உறைந்து அவரது செயல்களை எப்படியெல்லாம் தீர்மானித்தது என்றும் காண்கிறோம்.
குந்திக்காக ஏங்குவதும் அத அஸ்வதந்தமாக அவரோடே தங்கி விடுவதும். ஆழத்தில் சிவையின் வஞ்சமாக வெளிவருவதும் ஒன்றுடன் ஒன்று கலந்து பிரிக்க முடியாத வண்ணம் கலந்துவிட்டவை. தன் கட்டுமானங்கள் என நினைத்தவை உளுத்து கொட்டிய பிறகே உள்ளம் ஓட்டி நிறைவை சென்றடைகிறார். பார்க்கப்போனால் எல்லோருக்கும் அதுவே கிடைக்கிறது.
யுதிஷ்டிரர் விதுரரிடமிருந்து பெற்று கொள்வது அறிதலின் இன்பத்தை. ஆனால் அவரில் அது ஆகங்காரமாக திரளாமல் தடுப்பது எது ? விதுரரை போல் நெறிகளை காக்கும் அமைச்சன் அல்ல, நெறி வேண்டி நிற்கும் மக்களின் கண்ணீரை துடைக்க நினைக்கும் அரசர் அவர். ஒவ்வொரு முறையும் ஒன்றை அறிகையில் அது எவ்வகையில் தனக்கும் தன் குடிகளுக்கும் பயன்படும் என ஆராய்ந்து கொண்டே இருக்கிறார். இத்தணியா துயரில் இருந்தே அவரது மீட்பு அமைகிறது.
யுதிஷ்டிரரை நினைக்கையில் அவரது மறுபாதியாகிய சகுனியை நினைவுகூராமல் செல்வதற்கில்லை. நீர்க்கோலத்தில் வரும் சகுனி வேடத்தில் இருந்து ஒன்றை சொல்லலாம். ஆளுமை திரிந்த யுதிஷ்டிரனே சகுனி என்று. இளமையில் நாம் பார்க்கும் சகுனி எத்தனை களங்கமற்றவன். தன் அக்காளின் பொருட்டு வாழ்க்கையை கொடுத்தவன். பிரயாகையில் தான் நம்பிய அறங்களால் கைவிடப்பட்டவன் பாலைவனத்து ஜரை அன்னையான ஓநாயை தேர்வு செய்து கொள்கிறான். தருமரும் சூதுக்களத்தில் தான் நம்பியவர்களால் கைவிடப்பட்டவர். முன்னவர் இருளின் பாதையில் செல்கையில் பின்னவர் ஒளிக்கு வருகிறார். கையறுநிலைகளில் ஒளியை நோக்கி வருவது தருமரின் தத்துவ கல்வி மூலமே என்று நினைக்கிறேன்.
சகுனி சொன்னவுடன் கணிகரை அழைத்து கொள்ள வேண்டும். வெண்முரசு முழுக்க இருவர் மர்மங்களால், அறியமுடியாமைகளால் நம்மை ஆட்கொள்பவர்கள். முதலாமவர் இளைய யாதவர். இரண்டாமவர் கணிகர். எங்கிருந்து வந்தார் என்பறியாது வந்தவர். இறுதியில் இளைய யாதவரில் கலப்பவர். ஆம் அவனே அவரும். தீமையை குற்றத்தை அதன்பொருட்டு மட்டுமே ஆற்றுபவர். ஆற்றுக ஆற்றி அமைந்தவனின் அடிகளில் கலந்தவர்.
யுதிஷ்டிரரை வெட்டி இருகூறாக்கி அவரது நீங்கா பற்றிற்கு உடலும் உள்ளமும் கொடுத்தால் பீமனும் ஆறாத அறிதலின் வேட்கைக்கு பொங்கும் காமம் பூத்த அர்ஜுனனும் நம் முன் நிற்பார்கள். இருவரும் வலமும் இடமும் என அமைந்த கைகள்.
பீமனின் பெருங்கைகளை மறக்கவோ துறக்கவோ எவரும் விழைவது இல்லை. நினைத்து கொள்கையில் அமுதால் நிறைந்தவன் நஞ்சை ஏற்று விழுந்து அமுதின் துளி கண்டு நிறைவடைந்தவன் என்றே எண்ணத் தலைப்படுகிறது. வெண்முரசின் வாசகர்கள் எவருக்கும் உணர்வெழுச்சி கொள்ள செய்பவன் பீமன். உணர்வுகளால் உறவுகளால் தன்னை நிறைத்து கொள்கிறான். உணவிடும் கைகள் அன்னையின் கரங்கள். அவனது பயணமும் வழிவழியான அன்னையரை சந்தித்து செல்வதாக மாமலரில் அமைகிறது. ஞானத்திற்கு பதில் உள்ளத்தமர்ந்தவளின் விருப்பத்து மலரை சூடி கொள்பவன். அவளது நறுமணத்தின் பொருட்டு தன்னை துளைக்கும் அழுகல் மணத்தில் அன்னையின் முன் படைத்து கொண்டவன்.
திரௌபதி ஏன் ஐவரில் பீமனில் நிறைவடைகிறாள் ? வெண்முரசில் கர்ணனுக்கு அடுத்தப்படியாக உணர்ச்சியில் கண்ணீர் விடும் பகுதிகள் பீமனுடையவை. அறிவல்ல, உணர்வே பெண்ணுக்கு நெருக்கமானது. தன்னை தாங்குபவனாகவும் தன்னால் தாங்கப்படுபவனாகவும் உணரும் ஆணாக திரௌபதிக்கு அவன் இருப்பதால் என சொல்லலாம்.
உணர்வுகளை அறுத்துவிட்டு அறிந்து கடத்தலை தன் பாதையாக கொண்ட அர்ஜுனன் மனிதனின் அடிப்படை உணர்ச்சியான காமத்தால் ஆட்டுவிக்கப்படுபவன். பிற எல்லாரையும் விட அவன் மட்டுமே எங்கும் அமையாது சென்று கொண்டே இருக்கிறான். காமம் என்பது நிறையாத பரவுதல். கூடலின் உச்சத்திற்கு பின் மீண்டும் புதிய ஒன்றை தேடி தவித்து கூடும் இணையரை போல் அர்ஜுனனும் ஒவ்வொரு அறிதலுக்கும் பின்பும் அமையாது சென்று கொண்டிருக்கிறான். அவனது விண்ணுலக பயணத்தில் தனித்தனி இருள்வழி பாதையில் அவன் வழி அமைந்து விடுவது இய
April 29, 2022
ஒரு கணத்தில்…
அன்புள்ள ஜெ
ஒரு தனிப்பட்ட கடிதம். ’கோச்சுக்க மாட்டீங்க’ன்னு நம்புகிறேன். அருண்மொழி நங்கை எழுதிய கட்டுரையில் நீங்கள் அவர்களைப் பார்த்த முதல் நாளே ஊருக்கு போய் காதலை தெரிவித்து நீண்ட கடிதம் எழுதிவிட்டீர்கள் என எழுதியிருக்கிறார். அப்படிச் சீக்கிரம் முடிவெடுக்க முடியுமா? அது சரிதானா?
(அடுத்த சந்திப்பிலேயே டி போட்டு வேறு கூப்பிடுகிறீர்கள்)
ரஞ்சனி சிவா
அன்புள்ள ரஞ்சனி,
முதல் சந்திப்பின்போது, முதல்முதலாக அவளைப் பார்த்த ஐந்தாவது நிமிடமே ஏறத்தாழ முடிவெடுத்துவிட்டேன். அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் உறுதியும் செய்துவிட்டேன். அந்த தருணத்தை நானும் எழுதியிருக்கிறேன்.
ஆனால் அது ‘கண்டதும் காதல்’ அல்ல. உள்ளுணர்வை நம்பி முடிவெடுப்பது. என் அணுக்கமான நண்பர்களுக்கு தெரியும், நட்பும் அப்படித்தான் என்னால் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. 1987ல் குற்றாலம் கவிதைப் பட்டறையில் யுவன் சந்திரசேகரைப் பார்த்தேன். ஒரு ஹாய் சொல்லிக்கொண்டோம். அவன் கவிதை பற்றி ஒரே ஒரு கேள்வியை முக்கி முனகி கேட்டான். அரங்கில் யாரோ சலிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர்.
சிகரெட் பிடிக்க அவன் வெளியே போனான். நான் கூடவே சென்றேன். ‘சிகரெட்?’ என்றான். ’சிகரெட்லாம் மடையன் தான் குடிப்பான்’ என்றென். ‘வாஸ்தவமான பேச்சு’ என்றான். அக்கணமே நண்பர்கள். அப்படியே கிளம்பி அவன் வீட்டுக்குச் சென்று ஓரிருநாட்கள் தங்கி பேசி, சண்டைபோட்டு, அதன்பிறகுதான் ஊருக்கே போனேன்.
என் அணுக்கமான நண்பர்கள் அனைவருமே அப்படித்தான் வந்து சேர்ந்திருக்கிறார்கள். மிஞ்சிப்போனால் ஐந்து நிமிடம் ஆகும் நட்பாக. அது வாழ்நாள் முழுக்க நீளும். அன்பு, அரங்கசாமி , கனடா செல்வம், சுகா, ஆஸ்டின் சௌந்தர், செந்தில்குமார், வசந்தபாலன், ஷாகுல் ஹமீது என எல்லாருமே கணநேரத்தில் நட்பானவர்கள்தான். அப்படி எத்தனை பேர். ‘எண்ணிச் சீர்தூக்கி’ நட்பென ஏற்றுக்கொண்ட எவரும் இல்லை.
ஈரோடு கிருஷ்ணன் என்னை தேடி ஈரோட்டில் இருந்து தன் நண்பர்களுடன் நாகர்கோயில் வந்திருந்தார். அப்போது அவருக்கு பரீக்ஷா ஞாநி, ஜென்ராம் போன்றவர்கள் ஆதர்சம். இலக்கியம் இசை எல்லாம் கவைக்குதவாத வேலை என எண்ணம். கணிதம், அறிவியல் ஆகியவை மானுடத்துக்கு போதும், எஞ்சியவற்றை ஒழிக்கவேண்டும் என உறுதி பூண்டிருந்தார். அவ்வாறு ஒழிக்கப்படவேண்டியவர்களில் ஒருவராக என்னை பட்டியலில் வைத்திருந்தார். ஆனால் என் எழுத்து எதையும் படித்ததில்லை. கேள்விப்பட்டதுடன் சரி. நேரிலும் பார்த்ததில்லை.
சந்தித்து அறிமுகம் முடிந்ததுமே ‘சில கேள்விகள் கேக்கலாமா?” என்றார். ’சரி’ என்றேன். நீண்ட ஒரு காகித ரிப்பனில் ஏராளமான கேள்விகள் எழுதி வைத்திருந்தார். பரிணாமம், இயற்பியல், உலகவரலாறு, இந்திய அரசியல்… நான் ஒவ்வொன்றுக்கும் பதில் சொன்னேன். அவர் கேள்வியே பட்டிராத பெயர்கள். ரோஜர் பென்ரோஸ் என்றும் ஆலிவர் சாக்ஸ் என்றும் சொன்னதும் குறித்துக்கொண்டார்.
டீ போட்டுக்கொண்டிருந்த அருண்மொழியை பார்க்கச் சென்றேன். சிரித்துக்கொண்டிருந்தாள். ‘என்ன?” என்றேன்.
“ஜெயன், இந்தாளு ஒரு லூசு. ஆனா ரொம்ப ரொம்ப நேர்மையான மனுஷன்’ என்றாள்.
அன்றே அவர் என் நண்பரானார். இன்றுவரை ஒருநாள்கூட விடாமல் பேசிக்கொள்ளும் நண்பர். இன்று எனக்கும் அருண்மொழி சொன்ன அதே கருத்துதான், என்னைப்போலவே லூசு, ஆனால் என்னை விட நேர்மையானவர்.
அரங்கசாமி எனக்கு ஒரு கடிதம் போட்டார். உடனே தன் குழந்தையும் மனைவியுமாக கிளம்பி நாகர்கோயில் வந்தார். பையனுக்கு நான் எழுத்தறிவிக்கவேண்டும் என்றார். அன்றே நண்பர்களானோம். நன்றாக நெருங்கியபின்னரே அவர் யார் எவர் என்று தெரிந்துகொண்டேன்.
ஆசிரியர்களையும் அப்படித்தான் தேர்வு செய்திருக்கிறேன். சுந்தர ராமசாமியை நேரில் சந்தித்தபோது ‘சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர்கள் இலக்கியம் எழுதமுடியுமா?” என்று கேட்டேன்.
“சில்வர்ஸ்பூன் பற்றி எழுதலாமே?” என்று சொல்லி சிரித்த ராமசாமி ’இருங்கோ, அப்டியே பேசிட்டே வீட்டுக்குப் போலாம்’ என்றார்.
சு.ரா வீட்டில் வந்து தங்கிய ஆற்றூர் ரவிவர்மாவுடன் நான் ஒரு சின்ன நடை சென்றேன். அவருக்கு ஒரு சவர பிளேடு வாங்கவேண்டியிருந்தது. ஒரு அன்னைப்பன்றி சாக்கடையில் இருந்து தலைநீட்டியது. “சார் , நில்லுங்க. ஒரு பண்ணிக்கூட்டம் ரோட்டை கிராஸ் பண்ணப்போகுது” என்றேன்
“எப்படி தெரியும்?” என்றார்
“அது தாய்ப்பன்னி. அதோட காது பின்னாடி மடிஞ்சு அசையுது. கீழே குட்டிகள் இருக்கு”
சட்டென்று ஒரு பன்றிக்குடும்பம் கரிய உருளைகளாக சாலையை கடந்தது. சுழித்த குட்டிவால்களுடன் சிறுகால்கள் வைத்து குடுகுடுவென ஓடின பன்றிக்குட்டிகள்
“கதைகள் எழுதுவாயா?”என்றார் ஆற்றூர்
“இல்லை” என்று பொதுவாகச் சொன்னேன்.
“நீ எழுத்தாளன்” என்றார்.
அவ்வாறு தொடங்கியது அவருடைய வாழ்நாள் இறுதி வரை நீண்ட ஆழமான நட்பு.
நித்ய சைதன்ய யதியை நான் ஆசிரியராக ஏற்றுக்கொண்ட தருணத்தையும் எழுதியிருக்கிறேன். நான் அவருடைய ஓரிரு கட்டுரைகளை வாசித்திருந்தேன், ஆனால் அவை முக்கியமான கட்டுரைகள் அல்ல. எனக்கு துறவிகள் மேல் ஆழ்ந்த சலிப்பு இருந்த காலம். என் நண்பர் நிர்மால்யா மணி என்னை கட்டாயப்படுத்தி அவரை பார்க்க அழைத்துச் சென்றார். அவருடன் ஊட்டி குருகுலத்துக்குள் நுழைந்தேன். நேர் எதிரில் நூறடி அப்பால் நித்யா ஒரு சிறு மாணவர்குழுவுடன் நின்று நின்று மலர்களை பார்த்தபடி வந்துகொண்டிருந்தார்.
நான் எண்ணியது நினைவிருக்கிறது. ஒரு பத்துவயது சிறுவன் போலிருக்கிறார் என. அத்தனை தெளிந்த கண்கள். அக்கணமே அவருடைய மாணவரானேன். முழுமையாக என் ஆணவத்தை அழித்து அவரை ஏற்றேன். அவர் காலடிகளை தொட்டு வணங்கியபோது ‘என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என மனதுக்குள் சொன்னேன்.
எல்லா முடிவுகளையும் அப்படித்தான் எடுக்கிறேன். அப்படி எடுக்கலாமா? கூடாது என்றே சொல்வேன். வணிகத்தில் என்றால் அது மாபெரும் பிழை. வாழ்க்கையிலும் அபாயம்தான். ஆனால் என்னால் அப்படித்தான் செயல்பட முடியும். என் இயல்பு முழுக்கமுழுக்க என் உள்ளுணர்வை மட்டுமே நம்பிச் செயல்படுவது.
ஜெ
பிகு
டி,டா போடுவது கேரள -குமரிமாவட்ட பண்பாடு. தமிழ்நாட்டில் நான் எவரையும் டா,டி போடுவதில்லை. அவன் இவன் என யுவன் சந்திரசேகரை தவிர எவரையும் சொல்வதுமில்லை. கேரளத்தில் நிலைமை வேறு. 1988ல் பாலசந்திரன் சுள்ளிக்காடு என்னை அறிமுகம் செய்துகொண்டார். இரண்டு நிமிடம் கழித்து என்னிடம் ‘டா, நீ சி.வி.ராமன்பிள்ளை எழுதிய சிதறால் மலைக்கு போயிருக்கியா?” என்றார். என் மலபார் நண்பர்கள், நண்பிகள் எல்லாமே டா, டிதான்.
கடலும் கவிதைகளும் -லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
கடந்த ஜனவரியில் பிரபல வார பத்திரிக்கையின் பெண்களுக்கான பிரத்யேக இதழொன்றில் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன்,அப்பகுதியில் மிகத் தரம் குறைவான, கவிதை என்றே கருத இடமில்லாத , மடக்கி எழுதப்பட்ட பொருளற்ற வரிகளுக்கு கணிசமான பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் அப்படியான கவிதைகளே அப்பக்கத்தில் இடம்பெறுகின்றன.
ஒரு காலத்தில் அந்த பத்திரிகையில் என் படைப்பு ஏதேனும் வெளிவர வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. எனக்கு கவிதைகளில் நல்ல ரசனை உண்டு ஆகச்சிறந்த கவிதைகள் வாசிப்பவள். எனினும் கவிதை முயற்சிகள் செய்திருக்கிறேனே தவிர நல்ல கவிதையொன்றை இன்று வரை எழுதவில்லை. அந்த பத்திரிகையில் வந்திருப்பவைகளைப்போல ஒரே நாளில் பல நூறு கவிதைகள் என்னால் எழுத முடியும். எனவே அப்போதே வெகு சுமாரான சில வரிக்கவிதை ஒன்றை எழுதி அனுப்பினேன். இரண்டு நாட்களில் என் கவிதை பிரசுரிக்க தேர்வான தகவல் வந்து, இரண்டாவது வாரம் பிரசுரமாகி அடுத்த மாதம் சன்மானத்தொகையும் வந்தது.
ஆனால் அச்சில் என் பெயருடன் கவிதையை பார்த்ததும் எனக்கு என்னை குறித்தே மிக தாழ்வான அபிப்பிராயம் உண்டானது. ஏதோ உள்ளுண்ர்வின் தூண்டுதலால் அக்கவிதைக்கு பிழை என்றே தலைப்பிட்டு இருந்தேன். எப்போதும் வாட்ஸ்அப் நிலைத்தகவல்களில் என் படைப்புகள் குறித்த தகவல்களை வைக்கும் நான் இதை ரகசியமாக வைத்துக் கொண்டேன்.போகன் சங்கரின் ‘’ஒரு தோல்வியை எங்கு வைப்பது என்று தெளிவாக தெரிந்திருந்தும் ஒரு வெற்றியை ஒளித்து வைப்பது’’ என்னும் அருமையான கவிதை ஒன்று இருக்கிறது.
அப்படி அந்த கவிதை பிரசுரத்தை ஒளித்து வைத்துக் கொண்டேன். நல்லவேளையாக எனக்கு தெரிந்த யாரும் இதுவரை அதை பார்க்கவில்லை. எனினும் நல்ல கவிதையொன்றை எழுதும் கொதி அதிகரித்திருந்தது.
மார்ச்சில் நண்பர் சாம்ராஜ், லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் ஆனந்த்குமார் நடத்தும் கன்னியாகுமரி கவிதை அரங்கு குறித்து தகவல் சொன்னார். அந்த கவிதை பிரசுரமானதன் பிழையீடாக இக்கவிதை அரங்கில் கலந்து கொள்ள விரும்பினேன். மேலும் சித்திரை முழுநிலவன்று கடற்கரை கவிதையரங்கு என்னும் கற்பனையே வசீகரமாக இருந்தது.
கடல் எனக்கு அத்தனை பரிச்சயமில்லை. இத்தனை வயதில் நான் மொத்தமாக நாலோ ஐந்தோ முறை தான் கடற்கரையில் இருந்திருக்கிறேன். சென்னை மெரினா, திருச்செந்தூர்,ராமேஸ்வரம் என்று. ஆனால் அங்கெல்லாம் சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது போல கூடியிருந்த ஜனக்கூட்டங்கள் தான் கடலா கடலலையா என்று எண்ண வைக்கும் . கடல்கண்டு திரும்பிய பின்னரும் எனக்கு நினைவில் கடலோ அலையோ இருந்ததில்லை. உடல் கசகசப்பு, மாங்காய் பத்தை, குதிரை சவாரி, பலூன், நெரிசல் இவைகளே நினைவிலிருக்கும்
எனவே கடல், அங்கு நடக்க இருக்கும் கடற்கரை கவியரங்கம் என்று உற்சாகமாக புறப்பட்டேன். ரயிலில் உடன் தம்பி கதிர்ருமுருகனும் வந்தார். கோவிட் தொற்றுக்கு பிறகு இப்போதுதான் ரயிலில் போர்வை கம்பளி எல்லாம் கொடுக்கிறார்கள். எங்கள் பெட்டியில் இரு இளைஞர்கள் இருந்தார்கள் மிக உரக்க பேசிக்கொண்டு பாடல்கள் ஒலிக்க செய்து கொண்டுமிருந்தார்கள். கதிர் மென்மையாக சொல்லி பார்த்தும் பிரயோஜனமில்லை. பின்னர் டிக்கெட் பரிசோதகரை அழைத்துவந்து கண்டித்த பின்னர் அவர்கள் அமைதியானார்கள்.முப்பது வயதுக்குள்தான் இருக்கும் அவர்களுக்கு
குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி முன்னதாகவே நாகர்கோயில் வந்துசேர்ந்தோம் ரயில் நிலைய வாசலிலேயே எங்களை வரவேற்க இலைகளைக் காட்டிலும் அதிக மலர்களுடன் தங்க அரளிச்சிறு மரமொன்று நின்றிருந்தது
அதே ரயிலிலும் ,சில நிமிட இடைவெளியில் வந்த மற்றொரு ரயிலிலுமாக சுதா மாமி, மதார், ஆனந்த ஸ்ரீனிவாசன்,நேசன் உள்ளிட்ட பதினைந்து பேர் இருந்தோம் அந்த நேரத்திலேயே ஆனந்தகுமார், லக்ஷ்மி மணிவண்ணன் இருவரும் காரில் வந்திருந்தார்கள் எல்லாருமாக புறப்பட்டு லக்ஷ்மி மணிவண்னன் அவர்களின் கடையருகில் தேநீர் அருந்திவிட்டு அந்த கடற்கரை விடுதிக்கு வந்தோம்
முதலில் எனக்கு கடலின் சீற்றம் மனசிலாகவே இல்லை. அருகில் எங்கோ பேருந்துகள் சீறிக் கொண்டு செல்கின்றன என்றே நினைத்தேன் . அத்தனை அருகில் கடலை, அத்தனை நீண்ட தூய மணற் கடற்கரையை, புரண்டு வந்துகொண்டிருந்த அலைகளை பார்த்ததும் முதலில் திடுக்கிட்டேன் கற்பனையில் நான் நினைத்திருந்ததை காட்டிலும் மிக வசீகரமான கடல் யாருமற்று தன்னந்ததனித்திருந்தது.அந்த கடற்கரையில் பாறைகள் அதிகம் என்பதால் யாரும் அங்கு குளிக்க இறங்க வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கப்பட்டோம்.
தனித்தனி குடில்களாக தங்குமிடம். நானும் சுதா மாமியும் ஒரு குடிலில். அந்த குடிலின் கட்டுமானம் பிரமிப்பளித்தது, மிகச்சிறிய ஒழுங்கற்ற இடங்களை மிக சமார்த்தியமாக உபயோகித்து அறையை வடிவமைத்திருந்தார்கள். குடிலறையிலும் அரங்கிலும் எங்கெங்கும் மணல் காலடியில் நெறி பட்டது.
குளித்து கடல் பார்த்து ,கால் நனைத்து நல்ல உணவுண்டு அமர்வுகளுக்கு தயாரானோம். விஷ்ணுபுரம் வட்ட நண்பர்கள் பலர் இருந்தார்கள் அவர்களை எல்லாம் எப்போது பார்த்தாலும் ’குடும்பத்தில் எத்தி’ என்று நினைத்து நெஞ்சம் பொங்கும் எனக்கு.
விஷ்ணுபுரம் இலக்கிய விழாக்களில் பார்த்திருக்காத பலர் இருந்தார்கள். அதிகம் இளைஞர்களும் லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களின் மனைவி மக்களும் வந்திருந்தார்கள் அவர் மனைவி சுதந்திர வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு பறவையுடையதைப் போல மிக இனிமையான குரல் அவருக்கு. பேசப் பேச கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருந்தது
அருண்மொழியும் வந்துவிட்டார்கள் அமர்வுகள் துவங்கும் முன்பே. .அருணாவை 2017 ஊட்டி காவிய முகாமில் சந்தித்து அறிமுகமாயிருந்தேன். இந்த வருடம்தான் அவரது தொடரை வாசித்து, பின்னூட்டமிட்டு, அடிக்கடி பேசி என்று நெருக்கமாயிருந்தேன். உங்களையோ அருணாவை வெண்முரசையோ கொஞ்சமும் அறியாதவர்களும் இருந்தார்கள் அவர்கள் பல எதிர்பாராத ஆனால் சுவாரஸ்யமான கேள்விகள் கேட்டார்கள். அவற்றிற்கெல்லாம் நான் முன்புபோல பதட்டப்படாமல் கோபித்துக் கொள்ளாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். மனமுதிர்ச்சி மட்டுமல்ல எனக்கு வயதாகிவிட்டதையும் முதன்முதலாக அப்பதில்களின் போது உணர்ந்தேன் . ஒரு சிலர் மறக்க முடியாதர்வளாகிவிட்டிருக்கிறார்கள்
அமர்வுகள் துவங்கும் முன்பு அனைவரும் அறிமுகம் செய்து கொண்டோம் அருணா தான் கவிதைகளை கொஞ்சம் தள்ளி வைத்திருப்பதாக சொன்னார். இளைஞர்களின் இருவர் சிறுவர்களைப்போல 7 அல்லது 8ல் படிப்பார்கள் என்று எண்ணத்தக்க தோற்றத்தில் இருந்தார்கள் எனக்கு எப்போதுமே இலக்கிய கூட்டங்களில் இளைஞர்களின் பங்கேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.
ஆனந்த் சீனிவாசன் மிக இனிமையான, பொருத்தமான சரஸ்வதி துதியொன்றை பாடி அமர்வுகளை துவக்கி வைத்தார்,தாடி இல்லாமல் இருந்த அண்ணாச்சியை வெகு நேரம் கழித்தே அடையாளம் கண்டு கொண்டேன்.
கண்டராதித்தன், சபரி, அதியமான் உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள் லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் அமர்வுகள், பின்னர் தேநீர் இடைவேளை அதன் பிறகு போகன் சங்கர் அமர்வு
கவிதைகளில் என்ன இருக்கலாம், இருக்கவேண்டியதில்லை, தோல்வியுறும் கவிதைகளின் அழகு என்று மிக விரிவான, வேறெங்கும் கிடைக்கப் பெறாத தகவல்களுடன் அமர்வு களைகட்டி இருந்தது
மதிய உணவு முதன் முதலாக வல்லரிச்சோறுடன் நாகர்கோவில் பக்க உணவுஎனக்கு இந்த முகாம் கலந்து கொண்டதில் பல முதன் முதலாக இருந்தன. அப்படி துவரன், தீயல், வல்லரிச்சோறு, பிரதமன் என்று சிறப்பான உணவு. விஷ்ணுபுர குழுமம் எப்போதும் குடும்பமாக கூடியிருந்தே விழாக்கள் நடைபெறும் என்பதால் இங்கும் விளம்புவதும், இலைபோடுவதும், சுத்தம் செய்வதுமாக பலர் முனைந்திருந்தனர் புதியவர்களும் இதைக்கண்டு இயல்பாக கலந்து புழங்கினார்கள்
கவிழ்ந்து விழுந்த எச்சில் இலைகள் நிறைந்து இருந்த ஒரு பீப்பாயை சிவாத்மா பொறுமையாக நிமிர்த்தி சரியாமல் நிற்கவைத்து கொண்டிருந்தார்.அருணாவும் சுதந்திராவுமாக எனக்கு நாகர்கோவில், கன்னியாகுமரி உணவு வகைகளின் செய்முறைகள் சொல்லிக்கொடுத்தார்கள் இருவருமாக ஒரு புத்தகம் எழுதினால் பிரமாதமாக இருக்கும். அருணா சக்கையை அரைத்து செய்யும் ஒரு இனிப்பை அவரது வழக்கம்போலான அபிநயத்தில் சொல்லி அங்கே காணாப்புலத்தில் எங்கள் முன்னிருந்த அந்த இனிப்பை ஒரு கரண்டி எடுத்து , ரொட்டியில் தடவி சுவைத்ததை பார்க்கவே நாவூறியது. அவசியம் செய்து பார்க்க போகிறேன் அவற்றை.
மதிய அமர்வுகளில் மதாரும் ஆனந்தும். மதார் புதுக்கவிதை தொகுப்புக்களிலிருந்து உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். ஆனந்த்குமார் அமர்வு அபாரம் குறிப்பாக அந்த பழங்குடியினரின் மொழிக் கவிதையை அவர் மொழியாக்கம் செய்து, அவர்களின் மொழியிலும் வாசித்தது இன்னும் காதில் ஒலிக்கிறது
’வீழ்ந்து கிடந்த மரக்கொம்பில் உயிர் இருக்கோ இல்லியோ’ என்று துவங்கிய அக்கவிதை, அக்கொம்பில் முளைக்கும் இருதளிர்களில் ஒன்றில் அன்பென்றும் மற்றொன்றில் வாழ்வென்றும் எழுதியதாக செல்கின்றது.முகாமில் வாசிக்கப்பட்ட அனைத்திலுமே அதுவே அபாரமானது
மாலை கதிரணைவை பார்க்க கடற்கரை சென்றோம். கடலுக்குள் மெல்ல இறங்கும் மாபெரும் தீக்கோளம் கண்ட பிரமிப்பு நீங்கு முன்பே சுதந்திரா சுட்டிக்காட்டியதும் எதிர்திசையில் திரும்பினால் வெள்ளித்தாம்பாளமாக முழுநிலவு மெல்ல எழுந்துகொண்டிருந்தது, உண்மையில் அத்தனை பரவசமாக இருந்தது. நெஞ்சு பொங்குதல் என்றால் என்ன என்று அப்போது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனந்த்குமார் அங்கிருந்தவர்களுக்கு மணலில்அமர்ந்து சில கவிதைகளை வாசித்து காட்டினார் . குளித்துவிட்டு வீடு நுழையும் ஒருவனுடன் பிரியமான நாய்க் குட்டியை போல தொடர்ந்து நீர்த்துளிகளும், ஈரக்கால்சுவடும் வருவதை சொல்லும் கவிதை. அருமையான இனி ஒருபோதும் மறக்கவியலாத கவிதை அது
நிறைய கிளிஞ்சல்கள், கடல் குச்சிகள், சங்குகள் சேகரித்தேன். சர்காசம் என்னும் ஒரு கடற்பாசி உலர்ந்து கரை ஒதுங்கி இருந்தது. இராவணன் மீசை என்னும் ஒரு கடற்கரை மணலை பிணைக்கும் வேர்களை கொண்ட, கொத்துக் கொத்தாக புற்களை கொண்டிருக்கும் புல்வகையை பல வருடங்களுக்குப் பின்னால் பார்த்தேன்.Spinifex littoreus என்னும் அதை எனக்கு ராமேஸ்வரத்தில் காட்டி விளக்கிய மறைந்த என் பெருமதிப்புக்குரிய பேராசிரியரை நினைத்துக்கொண்டேன். மலையாளத்தில் எலிமுள்ளு எனப்படும் இப்புல் C4 மற்றும் CAM ஒளிச்சேர்க்கைகளை விளக்கும் மிக முக்கியமான பரிணாம வரலாற்றை கொண்டிருப்பவை. இவற்றின் கூரிய விதைகள் காற்றிலும் நீரிலும் பரவி மணலில் குத்தி நின்று கடற்கரை எங்கும் வளரும்.
இரவு கவிதை அமர்வில் பல புதியவர்களும் இளைஞர்களும் கவிதைகள் வாசித்தார்கள் பல கவிதைகள் கறாராக விமர்சிக்கப்பட்டன. யாமம், பிரளயம் போன்ற சிக்கலான வார்த்தைகளை தேவையற்று உபயோகிப்பதை குறித்தும் சொல்லப்பட்டது. சிலர் அவர்களுக்கு பிடித்த கவிதைகளையும் வாசித்தார்கள். கவிதைகள் சாதாரணமாக இருந்தாலும் அந்த நான்கு நாட்கள் விடுமுறையில் பொதுவாக இளைஞர்கள் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களுக்கு செல்லாமல் கவிதை முகாம் வந்து சாதாரமாகவேனும் கவிதைகளை வாசிக்கும் இளைஞர்கள் குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
அந்த இளைஞர்கள் நிச்சயம் பேரருவியின் முன் நின்று ஊளையிடமாட்டார்கள் காடுகளில் பீர்பாட்டிலை உடைத்து வீசமாட்டார்கள் ரயிலில், பிற பொது இடங்களில் சகமனிதர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்னும் உறுதி எனக்கு இருந்தது
கவிதை முகாமின் முதல் நாள் நிறைவாக பள்ளி மாணவனை போலிருந்த அந்த துடிப்பான இளைஞன் ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு அஞ்சலி செலுத்தும் கவிதையாக ,
’’சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்’’
என்பதை வாசித்தார்
கடல்மணல் காலடியில் நெறி பட்டுக்கொண்டிருந்த, கடலின் சீற்றம் கேட்டுக் கொண்டிருந்த ஓர் அரங்கில் அக்கவிதை அன்றைய நிகழ்வை முடித்துவைக்க மிகப்பொருத்தமானதாக இருந்தது.மனம் கனத்திருந்தது.
இரவுணவிற்கு பிறகு அனைவருமாக முன்னிரவில் கடற்கரை சென்றோம் ஆங்காங்கே சிறு குழுக்களாக அமர்ந்து கொண்டு கடல் பார்த்தோம். முழு நிலவின் ஒளி புறண்டெழுந்து மடங்கி, உருண்டு, பாறைகளில் அறைபட்டு வேகம் குறைந்து தவழ்ந்தபடி கரை நோக்கி வரும் அலைகளின் நுனிகளை வெள்ளியாக மினுக்கியது. எனக்கு கடலே புதிது, அதுவும் இந்த கடல் தூய கடற்கரையுடன் மிகப்புதிது, சித்திரை முழுநிலவில் இப்படி நிலவொளியில் மினுங்கும் அலைவிளிம்புகளை பார்த்துக்கொண்டிருந்தது மிகமிக புதியது. காரணமில்லாமல் கண் நிறைந்தது.
முதலில் பேசிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பின்னர் அமைதியனோம் அனைவருமே அவரவர் கடலுடனும், நிலவுடனும் தனிக்திருந்த கணங்கள் அவை. கடற்கரையில் விடுதியின் ஏராளமான நாய்கள் திடீரென வெறியேறி ஒன்றுடன் ஒன்று உருண்டுபுரண்டு சண்டையிட்டுக் கொண்டன பின்னர் தனித் தனியே அவையும் அமர்ந்து அமைதியாக கடலை பார்த்துக்கொண்டிருந்தன. அவை எப்போதும் முழுநிலவில் அப்படி பார்க்குமாயிக்கும். நாங்கள் தான் எப்போதாவது பார்க்கிறோம்.
மனம் துடைத்து கழுவியது போலிருப்பது என்பார்களே உண்மையில் அப்படித்தான் இருந்தேன். எந்த பராதியும் யார் பேரிலும் அப்போது இல்லை மிகத் தூய தருணம் என் வாழ்வில் அது. கரையை மீள மீள தழுவிக்கொள்ள யுகங்களாய் புரண்டு வந்துகொண்டிருந்த அலைகளை, பொழிந்துகொண்டிருந்த நிலவொளியில் பார்க்கையில் என்னவோ உள்ளே உடைந்தும், முளைத்தும் இழந்தும் நிறைந்தும் கலவையாக மனம் ததும்பி கொண்டிருந்தது.
எனக்கு ஒருவரிடம் தீராப்பகை இருந்தது. சாதரணமான கோபம் இல்லை மாபெரும் வஞ்சமிழைக்கப்பட்ட. உணர்வில் நான் கொந்தளித்த காலத்தின் கோபம்.
நீங்கள் நஞ்சு சிறுகதையில் சொல்லி இருந்தது போல அது வெறும் அவமதிப்பல்ல, இளமை முதலே பேணி வந்திருந்த ,என் அகத்தில் இருந்த, நான் என்று எண்ணி வருகையில் திரண்டு வரும் ஒன்று உடைந்த நிகழ்வது, அதன் பின்னால் அந்த நபரின் எண்ணை நான் தடைசெய்து விட்டிருந்தேன். அந்த வீழ்ச்சியிலிருந்தும் எழுந்துவந்து விட்டிருந்தேன்.
அத்தனை வருடங்கள் கழித்து, கவிதை முகாமிற்கு வரும்போது ரயிலில் தடைசெய்யப்பட்டிருந்த அந்த எண்ணிலிருந்து பலமுறை தவறிய அழைப்புக்கள் வந்திருந்ததை பார்த்தும் பொருட்படுத்தாமலிருந்தேன்
நிலவைப்கண்டுவிட்டு நள்ளிரவில் குடிலறைக்கு திரும்பிய பின்னர் மீண்டும் வந்த அழைப்பை எடுத்து எந்த கொந்தளீப்புமில்லாமல் சாதரணமாக பேசிவிட்டு வைத்தேன். நிலவு மேலிருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தது. பெரும் விடுதலையுணர்வை அடைந்தேன். முழுவதுமாக அதிலிருந்து என்னை நான் மீட்டுக் கொண்டிருந்தேன். என் வாழ்வை நான் மீண்டும் திரும்பி பார்க்கையில் என்னைக்குறித்து நானே பெருமை பட்டுக்கொள்ளும் ஒரு சிலவற்றில் இதுவும் இருக்கும். அந்த நஞ்சை நான் கடந்து விட்டிருந்தேன்.
வழக்கம்போல கனவும் நனவுமாக இல்லாமல் ஆழ்ந்து உறங்கி அதிகாலை எழுந்தேன் கடலின் இரைச்சல், இடியின் ஒலி, இளமழையின் குளிர்ச்சியுமாக இருந்தது புத்தம் புது காலை
யாரும் எழுந்திரித்திருக்க வில்லை நான் குளித்து தயராகி அந்த அதிகாலையில் கடலுக்கு சென்றேன். முந்தியநாளின் இரவில் நாங்கள் அமர்ந்திருந்த இடங்களில் அப்போது கடல் இருந்தது.ப்நிலவு மிச்சமிருந்தது தூரத்தில்அலைகள் உயரத்தில் இருந்து கொண்டிருந்தது. கரையோரம் நடந்தேன். அங்கேயே பலமணி நேரம் இருந்தேன்
நானும் கடலும் மட்டும் தனித்திருந்தோம். எங்களுக்குள் உரையாடிக் கொள்வதுபோல அலைகள் என்னை தொட்டுத்தொட்டு திரும்பிக்கொண்டிருந்தன. கிளிஞ்சல்களை கொண்டு வந்து அளிப்பதும் பிறகு அவற்றை எடுத்து செல்வதுமாக விளையாடிக்கொண்டிருந்தது கடல். மிகச்சிறிய மணல் நிறத்திலேயே இருந்த நண்டுகள் ஊர்ந்துசென்ற புள்ளிக்கோலங்களையும் அலை அழித்தழித்துச் சென்றது.
என்னை தழுவிக்தழுவி ஆற்றுப்படுத்தி. கழுவிக்கழுவி தூயவளாக்க அலைகளை அனுப்பிக் கொண்டே இருந்தது கடல்.
சில பேரலைகள் காலடி மண்ணுடன் என்னையும் சேர்த்து உள்ளே இழுத்தன. பிரிய நாய்குட்டிகள் வா வாவென்று நம்மையும் விளையாட அழைக்குமே அப்படி அலைகள் என்னை அழைத்தன. ஒரு கட்டத்தில் அந்த அழைப்புக்களை தட்ட முடியாதவளாகி இருந்தேன் ஒரு பித்துநிலை என்று இப்போது நினைக்கையில் தோன்றுகிறது.
கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்று முறை கடலுக்குள் இறங்க நினைத்தேன். கடலுக்குள் இறங்கி அப்படியே காணாமலாகிவிடுவதை எந்த பயமும் இன்றி விரும்பி எதிர்பார்த கணம்அது. எப்படி அவ்விழைவிலிருந்து மீண்டு வந்தேன் என இப்போதும் தெரியவில்லை
அலைகள் வேகம் குறைந்தன, காலடியில் இருந்த .சில சங்குகளில் உள்ளே மெல்லுடலிகள் உயிருடன் இருந்தன.அத்தனை மெல்லிய உடலுக்கு எத்தனை கடின ஓடு? மிகஅருகே வந்த அலையொன்று ஒரு பெரிய வெள்ளை சிப்பியை கொண்டுவந்து தந்தது.
பட்டாம்பூச்சியின் ஒற்றைச்சிறகு போன்ற அச்சிப்பியின் மேற்புறத்தில் ஒரு புள்ளியிலிருந்து துவங்கி அகல விளிம்பு வரை நீளும் நூற்றுக்கணக்கான மெல்லிய வரிகள் இருந்தன
அந்த வரிகளை அதே அளவில் , அதே இடைவெளிகளில் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் தவறில்லாமல் வரைய சில நாட்களாவது வேண்டும் மனிதனுக்கு. எப்படி, எதற்கு ஒரு சிப்பிக்கு இத்தனை ஒரு அழகு வடிவம்?அந்த சிப்பியை மொழுக்கென்று ஒரே வெண்பரப்பாக கூட படைத்திருக்கலாமல்லவா இந்த பேரியற்கை?
இப்படி கோடானுகோடி சிப்பிகளை, கோடானுகோடி வடிவங்களை, உயிர்களை, ரகசியங்களை கொண்டிருந்த கடல் கண்முன்னே இருந்தது. அச்சிப்பியை பத்திரமாக எடுத்துக்கொண்டேன். என் மகன்களை காட்டிலும் முக்கியமென நான் ஒருவேளை யாரையேனும் நினைப்பேனேனெறால் அவளுக்கு அல்லது அவனுக்கு அதை பரிசளிக்கவிருக்கிறேன்
சரியான முக்கோண வடிவில் ஒரு கல் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல ஒவ்வொருவராக கடல் காண வந்தார்கள் சுதா மாமியும் ஜெயராமும் மணல் வீடு கட்டினார்கள் நீங்கள் சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களை மறப்பதில்லை என்று.
ஜெயராம் மணல்மேட்டில் ஒரு வினாயகர் முகத்தை அமைத்து அதன் தந்தங்களை நீட்டி நீட்டி கடலலயை பருகும்படி அமைத்தான் தும்பிக்கை ஒரு மாநாகம் போல வெகுதூரம் சென்றிருந்தது.
ஜெயராமுடன் நாய்கள் ஓடிப்பிடித்து கடற்கரையில் விளையாடின. திடீரென ஒரு மாபெரும் வானவில் எங்கள் முன்னே எழுந்தது. ஒரு நாளில் எத்தனை பரிசுகள் ? திகைப்பாக பரவசமாக இருந்தது
அங்கே அமர்ந்திருக்கையில் ஒரு புதியவர் வேல்பாரியையும் வெண்முரசையும் ஒப்பிட்டால் எது சிறந்தது என்னும் கேள்வியை முன்வைத்தார். அப்படி வெண்முரசுடன் ஒப்பிடும் படியான படைப்புக்கள் ஏதும் இல்லை என்று புன்னகை மாறாத முகத்துடன் சொல்லியதோடு அக்காலை இனிதே நிறைவுற்றது.
பின்னர் நீங்கள் வந்ததும் மேலும் மெருகேறியது அமர்வுகள். அருணா உணர்வுபூர்வமாக முந்தின நாளின் அமர்வுகளை குறித்தும் கவிதைகளை குறித்தும் உரையாற்றினார். அவர் பேசுவதை கேட்பதைக் காட்டிலும் பார்ப்பது மேலும் அழகு கண்களின் உருட்டல், உணர்வு மேலீட்டில் மிகலேசாக திக்குவது, கம்மலும் தெளிவுமாக கலவையான அவர் குரல், விரல்களின் நாட்டியமும் உடலசைவுமாக ரம்மியம் எப்போதும் போல
அவரது நினைவாற்றலையும் வாசிப்பின் வீச்சையும் வழக்கம் போலவே பிரமிப்புடன் கவனித்தேன். வெள்ளைப் பல்லி விவகாரம் வெளியிடப்பட்டது.வாங்கி வந்திருக்கிறேன் வாசிக்கவேண்டும்.பிறகு உங்களின் ஆக சிறந்த அந்த உரை. கவிதைக்கு இன்றியமையாத மூன்று இன்மைகளை பற்றி சொன்னீர்கள்.
கூடவே இன்றைய கவிஞர்களின் கவிதைகளில் இருக்கும் மூன்று தேவையில்லாதவைகளையும் விளக்கினீர்கள், அந்த பிரபல பத்திரிகையில் வந்த என் கவிதையின் நினைவு வந்து வெட்கினேன் ஊருக்கு வந்ததும் என் இணையப் பக்கத்திலிருக்கும் அதை போன்ற அசட்டுக்கவிதைகளையெல்லாம் ஒரேயடியாக நீக்கிவிட முடிவு செய்துகொண்டேன்
அந்த அமர்வுடன் அன்றைய நிகழ்வும் கவிதை முகாமும் முடியவிருந்தன . மதிய உணவிற்கு பின்னர் கலையலாம் என்றும் சொல்லப்பட்டது அனைவரும் இறுதி நிகழ்வில் லக்ஷ்மி மணிவண்னன் அவர்களின் உரையை கவனித்துக்கொண்டிருந்தோம் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் உணவுண்ணும் மேசைகளை ஒரு பழந்துணியால் பொறுமையாக ஒருமுறைக்கு பலமுறையாக துடைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தார். கண்ணும் நெஞ்சும் நிறைந்தது இது குடும்பம் இது குடும்பம் என்று மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அந்த விடுதியின் ஆரஞ்சு வண்ன சீருடையிலிருந்த முதல்நாளிலிருந்தே வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு துரும்பை கூட எடுத்து போடாத, நான் குந்தாணி என்று மனதிற்குள் சொல்லிக்கொண்ட அந்த பெண் பணியாளர் அவர் துடைப்பதை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
லக்ஷ்மி மணிவண்ணன் நிறைவுரையில் சரஸ்வதி தேவி பலிக்கல்லில் இருபது வருடங்களாவது படுக்கப்போட்டு பலிகொடுத்த பின்னரே நல்ல கவிதை வருமென்றார்.
அப்படியனால் நான் என் அபத்தக்கவிதைகளை அழிக்க வேண்டியதில்லை. இன்னும் 19 வருடங்களில் நிச்சயம் செறிவும் கவிதைக்கணங்களும் நிறைந்த, புரட்சியும் தன்னிரக்கமும், பொய்யுமில்லாத நல்ல கவிதையை என்னாலும் எழுத முடியும்
சிவாத்மாவின் சுருக்கமான இனிமையான பாடலுடன் விழா நிறைவுற்றதுமதிய உணவுக்கு பின்னர் ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டனர்.
என்னை அருணா கன்னியாகுமரி சுற்றி காண்பிப்பதாக சொல்லி இருந்ததால் நான் அனைவரும் புறப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் லக்ஷ்மி மணிவண்ன அவர்களும் ஆனத்குமாரும் ஒய்வொழிச்சலும் உறக்கமும் இன்றி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தார்கள். ஆனந்த் சோர்வை காட்டிக்கொள்ளவே இல்லை பம்பரமாய் சுற்றி புறப்பட ஏற்பாடு செய்வது, அங்கிருந்த நாய்களுக்கு அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாத படிக்கு தனிதனியே உணவிடுவது, எல்லா வேளைக்கும் அந்த குந்தாணி அம்மாவுக்கு அவர் கொண்டு வந்த அனைத்து பாத்திரங்களிலும் நிறைய உணவை கொடுப்பதுமாக இருந்தார்.
ஆனந்துக்கு விருது என தெரியவந்ததும் அவர் நாய்களுக்கு சோறிட்டதும் அந்த அம்மாளுக்கு அவரளித்த சோறும் அதன் பின்னரே அவர் கவிதைகளும் நினைவுக்கு வந்தன.இவ்விருதை வாங்க மிக பொருத்தமான கவிஞர், மிகப் பொருத்தமான மனிதரும் கூட
அனைவரும் சென்ற பின்னர் நான் அருணா, கதிர் மற்றும் நவீன் கன்னியாகுமரி சென்றோம்.நல்ல கடைத்தெருவொன்றை அங்கு பார்த்தேன்.பலவித பொருட்கள் சங்கு, சங்கு வளை, கிளிஞ்சல், சோழி, சங்குகளில் திரைச்சீலை, தொப்பிகள், மலிவு விலை உடைகள் பொம்மைகள் என்று ஏராளம். ஒவ்வொன்றாக பார்த்ததே எல்லாவற்றையும் வாங்கியதுபோல மகிழ்ச்சி அளித்தது
முதன்முதலாக மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டேன் அருணா வாங்கிக்கொடுத்து. நான் நினைத்திருந்தது போல அது பயங்கர காரமெல்லாம் இல்லை கடலை மாவு தோல் போர்த்திய பசுதான் அது. காந்திமண்டபம் சென்றோம். குமரி முனையில் பாசம் வழுக்கி விடாமல் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நானும் அருணாவும் கால் நனைத்துக்கொண்டோம்.
வள்ளுவர் சிலை, மாயம்மா ஆலயம், காந்திமண்டபம் என்று ஒவ்வொன்றாக பார்த்தோம். அருணா எல்லாவற்றையும் புத்தம் புதிதாக பார்க்கும் உற்சாக மனநிலையிலேயே இருக்கிறார். எங்களை யாரேனும் கவனித்திருந்தால், கன்யாகுமரியில் பிறந்து வளர்ந்த நான் அருணாவை அங்கு அழைத்து வந்திருக்கிறேன் என்று நினைத்திருக்க கூடும் அப்படி எல்லாவற்றையும் ஒரு சிறுமியின் குதூகலத்துடன் பார்க்கிறார் ரசிக்கிறார். அருணாவே எனக்கு ஓரிரவில் திடீரென வளர்ந்து பெரிதாகிவிட்ட சிறுமியை போலத்தான் தெரிந்தார்.
மேலும் அருணா ஒரு தகவல் சுரங்கம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் வள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்குமான படகுச்சவாரி குறித்து கேட்டதும் அந்த இரு படகுகளின் பெயர்களையும் சவாரி நேரங்களையும் கூட துல்லியமாக சொன்னார். பிறகு குமரி அன்னை ஆலயம் . திரையிட்டிருந்தார்கள். கூட்டமே இல்லை
சிறப்பு அனுமதியில் முன்னால் ஒரு இளம் தம்பதியினர் சிறுமகளுடன் அமர்ந்திருந்தனர். நீலப்பட்டாடை அணிந்திருந்த அந்த குழந்தை தன் சதங்கைச்சிறுகாலினால் முன்னிருந்த ஒரு கயிற்றை உதைத்துக்கொண்டும் அவள் முன்னே ஒரு வாளியில் கொட்டிகிடந்த செந்தாமரை மொட்டுக்களை எடுக்க தாவுவதுமாக இருந்தாள். குமரித்துறைவி நினைவுக்கு வந்தது.
திரை விலகி பல சுடராட்டுக்களில் அன்னையும் சிறுமியுமாக கண்ணார தரிசனம் கிடைத்தது.சங்குவளைகள் இரு ஜோடிகள் வாங்கிக்கொண்டேன். வெளியேவந்தோம் வள்ளுவர் சிலை ஜகஜோதியாக விளக்குகளுடன் ரம்மியமாக இருந்தது.
பிறகு சுசீந்திரம். ஓட்டுநர் சந்தேகித்த படி வாகன நெரிசல் இல்லாமல் விரைவில் போய் சேர்ந்தோம் அங்கே காரில் காத்திருந்த ஆனந்த் என்னிடம் ’’அக்கா உங்களுக்கு பழம் பறி வாங்கி கொடுக்க நினச்சிருந்தேன் இந்தாங்க’’ என்று நீட்டினர் குடும்பமல்லாது இது வேறென்ன?
கோவிலுக்குள் நுழைகையில் தலவிருட்சம் சரக்கொன்றை பொன்னாய் பூத்து நிறைந்திருந்தது வாசலிலேயே. நல்ல தரிசனம் அங்கே. வெளியே போலி முத்து மாலைகளும் பலவித உணவுகளும் விற்றார்கள்.கடலை வறுபடும், கடலை மாவு, வேகும், சோளம் வாட்டும் வாசனை கூடவே வந்தது. பல வண்ண ரப்பர் பேண்ட் களை விற்கும் இரு சிறுமிகள் அங்கமர்ந்திருந்த முழங்கால்களுக்கு கீழ் இரு கால்களையும் இழந்த்திருந்த ஒரு பிச்சைக்காரரிடம் பணத்தை கொடுத்து சில்லறை மாற்றி கொண்டிருந்தார்கள்
ஒரு நல்ல உணவகத்தில் இரவுனவு .முதன்முதலாக ரசவடை. என்னது ரசத்தில் வடையை போடுவார்களா? என்று முதலில் துணுக்குற்றாலும் சரி சாம்பார் வடை இருக்கிறது தயிர் வடையும் இருக்கிறது இடையில் இருக்கும் ரசத்திலும் இருப்பதுதானே நியாயம் என சமாதானமானேன்
இனிய தோழி அருணா, அவருடன் பழகுகையில் பேசுகையில் எனக்குள் எந்த தயக்கமும் இல்லை பல்லாண்டுகள் பழகிய உணர்வை அவரால் அவரருகிலிருப்பவர்களுக்கு அளிக்க முடிகின்றது.
என்னையும் கதிரையும் ரயிலடியில் விட்டுவிட்டு அருணா சென்றார் நினைவுகளின் எடையில் மூச்சு திணறிக்கொண்டு உறக்கமின்றி ரயிலில் இரவு கழிந்தது. காலை கோவையில் கதிரும் நானும் விடைபெற்றுக்கொண்டோம். சொந்த தம்பியை காட்டிலும் அன்புடனும் பொறுப்புடனும் என்னுடன் கதிர் வந்தார்
பொள்ளாச்சி வந்து கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு ளிக்கச் செல்ல கைக்கடிகாரத்தை கழற்றினேன். கடிகார பட்டைக்குள்ளிருந்து மேசையில் உதிர்ந்தது கொஞ்சம் கடற்கரை மணல் என்னை வா வாவென்று அழைத்தும் நான் வராததால், கடல் தானே கொஞ்சம் என்னுடன் வந்துவிட்டிருந்தது.
ஸ்ரீபதி பத்மநாபாவின் மற்றொரு கவிதை இருக்கிறது. ஒரு காதலனும் காதலியும் சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் நடந்து சென்று ஒரு பேருந்துக்காக காத்து நிற்பார்கள் வழக்கத்துக்கு மாறாக காதலி அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டதும் காதலன் இனி காதலை பற்றி தான் கவிதை எழுத வேண்டியதில்லை என்று நினைப்பதாய் முடியும் அது
மனம் முழுக்க ராவணப்புல்லாக பிடித்து இறுக்கியபடி நிறைந்திருக்கும் கவிதை முகாமின் இனிய நினைனவுகளே போதும், ஒருபோதும் நல்ல கவிதைகளை எனனால் எழுதமுடியாவிட்டலும் என்று தோன்றியது.
உங்களுக்கும், லக்ஷ்மி மணிவண்னனுக்கும் ஆனந்த்குமாருக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும்
லோகமாதேவி
ஆனந்த் குமார்- கடிதம்
அன்புள்ள ஜெ,
நலம்தானே? நானும் நலம்.
ஆனந்த் குமார் அவர்களுக்கு விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்வைத் தருகிறது. அவர் பற்றிய ஒர் அறிமுகப்படுத்தல் செய்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். இப்போது உங்கள் தளத்தில் அவரைப்பற்றி ஏராளமான கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் படித்து அவரைப்பற்றி ஒரு பதிவை உருவாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அவருக்கு இணையப்பக்கம் ஏதாவது உள்ளதா?
ரவீந்திரன் சாமிவேலு
அன்புள்ள ரவீந்திரன்,
ஆனந்த்குமார் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். ஆனால் நாகர்கோயிலில் இருந்து சென்று நீண்டநாட்களாகிறது. கணிப்பொறித்துறை ஊழியராக திருவனந்தபுரத்தில் வேலைபார்த்தார். கொரோனா காலகட்டத்தில் நீண்ட காலத்துக்குப்பின் நாகர்கோயிலில் சிறிதுகாலம் இருந்தார். இப்போது கோவையில்.
ஆனந்த்குமாரின் இரண்டு விருப்பங்கள் கவிதையும் புகைப்படக்கலையும். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்து எடுத்த ஆவணப்படம் ஒன்று யூடியூபில் உள்ளது. சுரேஷ்குமார இந்திரஜித் பற்றிய ஆவணப்படமும் ஆனந்த்குமார் எடுத்தது.
ஆனந்த்குமார் புகைப்படக்கலையை தொழிலாகத் தெரிவுசெய்து கொண்டிருக்கிறார். இப்போது கோவையில் வாழ்கிறார். குழந்தைகளை புகைப்படம் எடுப்பது அவருக்கு பிடித்தமானது. அதையே தொழிலென்றும் செய்கிறார். ஆனந்த் குழந்தைகளை எடுத்த படங்கள் மட்டுமே கொண்ட தும்பி குழந்தைகள் இதழ் வெளிவந்துள்ளது.
பிறந்தநாள் முதலிய நன்னாட்களில் குழந்தைகளை நல்ல புகைப்படநிபுணர்களைக் கொண்டு புகைப்படம் எடுத்துச் சேமிப்பது உலகமெங்குமுள்ள வழக்கம். கேரளத்திலும் அவ்வழக்கம் உண்டு. ஆனந்த் திருவனந்தபுரத்தில் அதையே முழுநேர தொழிலாகச் செய்துகொண்டிருந்தார். இப்போது மனைவியின் பணிநிமித்தம் கோவைக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.
புகைப்படங்கள், குறிப்பாக குழந்தைப்படங்களுக்காக கோவை வாசிகள் அவரை அணுகலாம்
ஆனந்த்குமார் மின்னஞ்சல் ananskumar@gmail.com
ஆனந்த்குமார் தொலைபேசி 7829297409
ஆனந்த் குமார் இணையப்பக்கம் https://anandhkumarpoems.wordpress.com/
ஜெ
யுவன் – ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
சியமந்தகம் இணையதளத்தில் கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். யுவன் சந்திரசேகர் எழுதிய கட்டுரை மிக உணர்ச்சிபூர்வமானது. யுவனும் நீங்களும் கொண்ட முப்பத்தைந்தாண்டுக்கால நட்பு, அவருடைய படைப்புக்கள் மேலும் அவர் மேலும் நீங்கள் கொண்டிருக்கும் அன்பு என பல தளங்கள் வெளியான கட்டுரை. தமிழில் இப்படி பல இலக்கிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். சுந்தரராமசாமி -கிருஷ்ணன் நம்பி. கி.ராஜநாராயணன் – கு.அழகிரிசாமி. அதற்கு முன் கு.ப.ராஜகோபாலன் – ந.பிச்சமூர்த்தி. இந்த இலக்கிய நட்பில் புனிதமான ஒன்று உள்ளது. ஏனென்றால் இரண்டு இலக்கியவாதிகள் இணைவது கடினம். இலக்கியவாதியின் ஈகோ பெரியது. ஒவ்வொரு இலக்கியவாதிக்கும் அவர்களுக்குண்டான அழகியலும் வாழ்க்கைப்பார்வையும் இருக்கும்.
கட்டுரையில் எனக்கு கொஞ்சம் சங்கடமோ வருத்தமோ ஊட்டியது அஞ்சலிக்கட்டுரை பற்றிச் சொல்லியிருப்பது. இருவருமே என் எழுத்தாளர்கள். அப்படியெல்லாம் கற்பனைசெய்வதே கடினமானது.
எம்.பாஸ்கர்
அன்புள்ள பாஸ்கர்,
அது ஓர் உணர்வு மட்டும்தான். நிரந்தரமானது, நீடிப்பது என நாம் எதை எண்ணினாலும் மரணம் அங்கே வந்துவிடும். மரணம் பற்றி நினைக்காமல் எவரும் எந்த அரிய உணர்வையும் எண்ணிக்கொள்ள முடியாது.
யுவன் கட்டுரை எனக்கும் அணுக்கமானதுதான். அவன் என்றுமே உணர்ச்சிகரமானவன். மிகச்சிறிய ஒரு துளிக்குள் ஆழ்ந்து ஆழ்ந்து செல்பவன் என்பது என் எண்ணம். அவனை நினைக்கையில் அவனுக்கு மிக நெருக்கமான ஆயுட்கால நண்பனாகிய தண்டபாணியையும் என்னால் நினைக்காமலிருக்க முடியாது. இருவரையும் ஒரே நாளில்தான் சந்தித்தேன்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

