Jeyamohan's Blog, page 784
May 4, 2022
முக்தியின் வழி…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
புத்தாண்டு நல்வாழ்த்துகள். நான் ஒரு நடுத்தர வயது ஆண் வேலை செய்துவருகிறேன். சிறு வயது முதல் கடவுள் வழிபாடு என்றால் ஸ்லோகங்கள் சொல்வது , கோவில்களுக்கு செல்வது என்று இருக்கிறேன். கெட்ட பழக்கங்கள் இல்லை. இந்து மரபில் இதே வழியில் சென்றால் முக்தி கிடைக்குமா , என்னால் அளவற்ற பக்தி செலுத்த முடியாது இதனால் பக்தியோகம் கைகூடுமா என்று தெரியவில்லை. அளவற்ற ஞானத்தை பற்றி சிந்திக்கவும் முடியாது இதனால் ஞானயோகமும் சரிவருமா என்று தெரியவில்லை. ராஜ யோகி அளவு மனதை அடக்குபவனும் அல்ல. சிலர் மெய்வழிசாலை போன்ற மறுப்புகளை பரிந்துரைக்கின்றனர் ஆனால் என்னால் நான் வணங்கிவரும் கடவுள்களை அருவமாக மட்டும் என்ன முடியாது. ஒரு சராசரி வேலை செல்லும் ஒரு தற்கால இந்து கடவுள்களில் , நம்பிக்கைகளில் உள்ள ஒருவன் எப்படி முக்தி அடைவது அல்லது அதனை நோக்கி பயணிப்பது ? தயவு செய்து விளக்குங்களேன்
நன்றி,
இராமகுமரன்
அன்புள்ள இராமகுமரன்,
மிக எளிமையான ஒரு களங்கமின்மையுடன் கேட்கப்பட்ட இந்தக்கேள்வி என் வரையில் மிக முக்கியமானது. ஏனெனில் இப்படி எளிமையாகவும் நேரடியாகவும் கேட்பதற்கான துணிவின்றி பல சமயம் மிகச் சிக்கலான சொற்களால் இதே கேள்வியைக் கேட்போம். ஒருவர் தன்னுடைய மீட்சியை அடையவேண்டுமெனில் அவர் ஐயம் திரிபற அனைத்து நூல்களையும் ஆழ்ந்து கற்றாக வேண்டுமா? மூச்சை அடக்கி சிந்தையை அடக்கி செயலடக்கி யோகம் புரிந்தாகவேண்டுமா? எளிய பக்தியால் மீட்படைய இயலாதா அவ்வண்ணம் எளிய பக்தி நோக்கிச் செல்லும்போது அதை மறுக்கும் ஞானமும் யோகமும் பெரிய தடைக்கல்லாக ஆகின்றனவா?
ஏதோ ஒரு வகையில் இந்த வினாக்களை வெவ்வேறு கட்டங்களில் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் சோர்வூட்டும் ஒரு கூறு உண்டு. தத்துவத்திற்கும் சரி ,யோக மரபிற்கும் சரி, அவற்றின் மறுப்பாளர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திராணி உண்டு. மிக வலுவான தர்க்கங்களின் மூலம் யோகம் பயில்பவர்களும் வேதாந்திகளும் அவர்களின் எதிர்ப்பாளர்களை நொறுக்கி மேலே செல்வதைக் காணலாம். ஒரு நாத்திகனைக்கண்டு சொல்லின்றி தயங்கி நிற்கும் ஒரு வேதாந்தியையோ யோகம்பயில்பவனையோ நீங்கள் ஒருபோதும் கண்டிருக்க இயலாது.
ஆனால் எளிய பக்தன் திகைத்துவிடுகிறான். சிவன் தலையிலிருந்து கங்கை வருகிறதென்றால் கங்கோத்ரிதான் சிவனுடைய தலையா என்று ஒரு நாத்திகன் கேட்டால் சிவபக்தன் ’தெரியலிங்க என்னமோ என் நம்பிக்கை அது’ என்று சொல்லி அமைதியாவதே வழக்கம். ஒவ்வொரு மறுப்புக்கும் எள்ளலுக்கும் பதிலாக என்னுடைய நம்பிக்கை இது, நான் விவாதிக்க விரும்பவில்லை என்பதையே பக்தனால் சொல்ல முடியும். ஆகவே தான் முழு நாத்திகர்களும் பக்தர்களுக்கு எதிராகவே களமாடுகிறார்கள். ஏனெனில் எளிய இரை அவர்களே.
இந்து மரபில் இந்த மூன்று வகையான மரபுகளும் ஒரே புள்ளியையே சென்றடைகின்றன என்பதை மீண்டும் மீண்டும் நூல்களும் ஞானிகளும் வரையறுக்கிறார்கள். மெய்யான அத்வைதிகள், மெய்யான ஞானிகள், யோகிகள் வழிபாடுகளை மறுத்தவர்களல்ல. அது எவருக்கானவை, அவற்றின் நிகர் பயன் என்ன என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.
ஒருவன் முதலில் நோக்கி அறியவேண்டியது தன்னைத்தான். தன்னுடைய இயல்பை, தன் அகத்தை. ஆன்மீகமான பாதையில் மிகப் பிழையான திசையில் நெடுந்தொலைவு செல்பவர்கள் யார், வீண் அலைச்சலுக்கு உள்ளாகி அழிப்பவர்கள் யார் என்று பார்த்தால் தன்னைப்பற்றிய பிழையான அல்லது தவறான மதிப்பீடுகள் கொண்டவர்கள்தான் என்பதைக்காணலாம்.
ஒருவன் தன்னை மிகக் கூர்மையானவன், நுண்மாண் நுழைபுலம் கண்டு எதையும் தெளியும் தன்மை கொண்டவன் என்று பிழையாக எண்ணிக்கொள்கிறான் என்று கொள்வோம்.உண்மையில் அவன் உணர்ச்சிகரமானவன், அறிவார்ந்த தேடலை தொடர்ந்து வாழ்நாள் முழுக்கச் செய்யும் ஆற்றலற்றவன் எனில் அவன் சென்றடைவது ஒரு விந்தையான குழப்ப நிலை. அவன் உள்ளே அவன் நாடுவது ஆழ்ந்த நம்பிக்கையை. அவன் தனக்கென தேர்வது அறிவின் சமரசமின்மையை. அது அவனை இரட்டைநிலை கொள்ளச்செய்கிறது.
அறிவின் பாதையில் ‘குறிக்கோள் எய்தும்வரை நில்லாமல் செல்வது’ மிக அடிப்படையான பண்பு. உணர்ச்சிகரம் என்பது அறுபட்டு அறுபட்டு நீள்வது. தீவிரமான தொடக்கம், உச்சம், கீழிறங்கி அறுபடல், இடைவெளி, மீண்டும் மற்றொரு தொடக்கம் என நீள்வது. உணர்ச்சிகரமானவன் அறிவின் பாதையை தெரிவுசெய்தால் அதை விரைவிலேயே ஒரு மிகைவெளிப்பாடாக ஆக்கிக் கொள்வான். அறிவார்ந்த விஷயங்களை உணர்ச்சிகரமாக கையாண்டு சிதைப்பான், தானும் சிதைவான்.
அல்லது அகத்திலொன்றும் புறத்திலொன்றுமாக அவன் நடிப்பா, தனது அறிவார்ந்த தகைமையின்மையை தனக்குத்தானே மறைத்துக்கொள்ளும் பொருட்டு மிகையாக வாதிடுவான். எந்த இடத்திலும் சென்று எதையும் எதிர்கொண்டு பேசுவான். பெரும்பாலான மார்க்சியர்களிடம் இந்த இயல்பு உண்டு. நானறிந்த பெரும்பாலான மார்க்சியர்கள் அறிவார்ந்த தகுதி கொண்டவர்களல்ல. எளிமையான நம்பிக்கை கொண்ட தொண்டர்கள். ஆனால் கட்சி அவருக்கு அறிவுஜீவி என்னும் பாவனையை அளிக்கிறது. அந்தப்பாவனையை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் தொடர்ச்சியாக எதிலும் எங்கும் விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதன் வழியாக தங்கள் சொற்களை தங்களுக்கே சொல்லி நிறுவி அதைத் தங்களுக்கே ஒரு ஆணையாக மாற்றிக்கொள்கிறார்கள்.
ஒருவன் குறிப்பிட்ட வயதில் தன்னை எவரென்று ஓரளவு வகுத்துக்கொள்ள முடியும். மிக இளமையில் தன்னை எல்லாமாகவும் வகுத்துக்கொள்ளும் ஓர் எண்ணம் அவனிடம் இருக்கும். தன்னை சிந்தனையாளராக, கவிஞனாக ,யோகியாக ,கலகக்காரராக எல்லாமாகவும் மாறி மாறி சித்தரித்துக்கொண்டே இருப்பான். பின்னர் தான் இயல்வது இது அல்லது எது என்ற தெளிவை வந்தடைவான். தன்னால் செல்லக்கூடிய தூரமும் தெளிவடைந்திருக்கும். அதன்பின்னர் அவர் தனது பாதையை எளிதில் வகுத்துக்கொள்ள முடியும்.
உணரச்சிகரமானவர், கவித்துவமானவர், உலகியல் சார்ந்தவர் மூவருக்கும் உரியது பக்தியே.பக்தியென்பது மூன்று படிகள் கொண்டது. முதல்படி உலகியல் சார்ந்த பக்தி. அதுவே பக்தியின் கடைநிலை. வாழ்வில் தனக்கு வேண்டியதை தெய்வங்களிடம் கேட்டுப் பெறுதல். ஆனால் அதுவும் பிழையானதல்ல. ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்பதும் ஆன்மிகத்தின் கோரிக்கையே.
அதற்கு அடுத்த படிநிலை ஆசார அனுஷ்டானங்களாலானது. அவை வாழ்க்கையை ஒரு நெறிக்குள் நிறுத்துகின்றன. அனைத்துச் செயல்பாடுகளையும் வகுத்து, ஒன்றுடன் ஒன்று சரியாக பிணைத்து, சிதைவுகளற்ற திசை திரும்பலற்ற சீரான வாழ்க்கை ஒன்றை உருவாக்குகின்றன அனுஷ்டானங்கள். ஆன்மீகமான அல்லது அறிவார்ந்த அலைபாய்தல் இல்லாத ஒருவருக்கு ஆசாரவாழ்க்கை என்பது ஒரு பெருங்கொடை.
எந்த ஒரு மதமரபையும் சார்ந்து அவ்வண்ணம் தெளிவாக வகுக்கப்பட்டுவிட்ட ஒரு வாழ்க்கை கொண்டிருத்தல் என்பது உலகியலாளனுக்கு மிக சிறப்பானதே. இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய மதங்களும் இந்த ஆசாரநிலையையே உச்சகட்டமாக வாக்களிக்கின்றன.
பெரும்பாலும் நாம் காணும் பக்தியென்பது இவ்விரு நிலைகளைச் சார்ந்ததே. இதனூடாக ஒருவன் அடையக்கூடியதென்ன எனில் இங்கு உலகியல் சார்ந்த அனைத்துக்கும் ஆதாரமாக நிலைகொள்வதாக, நம் கோரிக்கைகளைக் கேட்பதாக இறைச்சக்தி ஒன்று உள்ளது என்ற நம்பிக்கை உலகை எதிர்கொள்ளும் நம்பிக்கையை பக்தனுக்கு அளிக்கிறது.இழப்புகளிலிருந்து எளிதில் மீளச்செய்கிறது. சோதனைகளை துணிவுடன் சந்திக்கச் செய்கிறது. தன்னை மீறிய எதையும் என்ணி எண்ணி சோர்வுறாது செய்கிறது.
இதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். தன்னை மீறிய நிகழ்வுகள், இழப்புகளின்போது பக்தி கொண்ட மனிதர்கள் அதை இறைவனுக்கு அளித்து எளிதில் அடுத்த கட்டத்திற்கு வருகிறார்கள். பக்தி இல்லாதவர்கள் பழியை தங்கள் மேல் சுமத்திக் கொள்கிறார்கள். பிறர் மேல் சார்த்துகிறார்கள். தன்னையும் வதைத்து பிறரையும் வதைக்கிறார்கள் .மீளமுடியாமல் பெரும் சுழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். சோர்விலும் தத்தளிப்பிலும் வாழ்வை அழிக்கிறார்கள்.
ஆகவே இவ்வாறு வகுத்துரைக்க எந்த தயக்கமும் இல்லாமல் துணிவேன். ‘பக்தி இல்லாத உலகியலாளன் துயர் மிக்கவனாகவே இருக்க முடியும்’. ஏனெனில் இந்தப் பிரபஞ்ச இயக்கம் ஒரு உலகியளாளனின் எளிய புரிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. பிறப்பும் இறப்பும், எய்தலும் இழத்தலும் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதவை. இங்கு நிகழ்வன ஒன்றும் இன்னொன்றும் எவ்வகையிலும் அர்த்தபூர்வமாக இணையாதவை. பக்தி அளிக்கும் உறுதியான விடை உலகியலாளனை அடிப்படைத் தெளிவொன்றைச் சார்ந்து நிலைகொள்ளச் செய்கிறது.
பக்தி இல்லாமலிருக்க வேண்டும் என்றால் பக்திக்கும் மேலான மெய்ஞானத் தேடலோ ஊழ்கப்பயிற்சியோ இருந்தாகவேண்டும். பக்தி அளிக்கும் விடைகளை நிராகரித்தால் அதற்கு நிகரான முழுமையான தத்துவத்தரிசனம் அந்த விடைகளுக்கு இணையான விளக்கங்களை அளிக்கவேண்டும். அல்லது, வினாக்கள் கரைந்தழியும் ஊழ்கநிலை அமையவேண்டும்.
பக்தி இல்லாதிருக்கும் உலகியலாளன் அதற்கு மாற்றாக அறிவார்ந்த பெரும் தேடல் அல்லது ஊழ்கம் அற்றவன் எனில் வெற்றுக்கூச்சலிடுபவனாக, தன்னையும் பிறரையும் வதைப்பவனாக, உளச்சோர்வின் ஆழங்களுக்கு மிக எளிதில் செல்பவனாக இருப்பான் .இருபத்து நான்கு மணிநேரமும் நாத்திகம் பேசும் என் நண்பர் ஒருவரை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். அவர் இன்றிருக்கும் உளச்சோர்வு நிலை இவ்வாறு அமையுமென்பதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே உறுதியாக நான் கணித்துவிட்டிருந்தேன். ஒன்றும் செய்ய இயலாதென்றும் அப்போதே தெளிந்துவிட்டிருந்தேன். கடவுளை அவர் அகற்றிவிட்டார். அங்கே வைக்குமளவுக்கு தத்துவக்கல்வியும் அவருக்கு இருக்கவில்லை.
ஆசாரங்கள் உலகியல் மனிதனுக்கு ஏன் தேவை?ல் நமது உலகியல் வாழ்க்கை என்பது இயற்கையின் நெறி ஒன்றால் வகுக்கப்பட்டது. அத்தனை உயிர்களும் அந்த நெறியில் ஒழுகுகின்றன. அவை பசிக்கும்போதெல்லாம் உணவு தேடி அலைகின்றன. உணவுண்டபின் ஓய்வெடுக்கின்றன. மீண்டும் இரை தேடித் திரள்கின்றன. இது இயற்கையின் ஓர் ஒழுங்கு—இது ஓர் அனுஷ்டானம். இந்த ஆசாரத்தால் அவற்றின் வாழ்க்கையும் இயல்பும் வகுக்கப்பட்டிருக்கின்றன.
மனிதன் தேவைப்படும்போது தேவையான உணவு வந்தடையும் எனும் உறுதிப்பாடு கொண்ட வாழ்க்கையை உருவாக்கிவிட்டான். இயற்கையின் அந்த ஆசாரத்தை நிறைவு செய்துவிட்டான். அந்த இயற்கை நெறி இல்லையேல் எந்த ஒழுங்குமற்ற ஒரு வாழ்க்கையே நமக்கு எஞ்சுகிறது. எதையும் எப்போதும் செய்யலாமெனும் நிலை எதையும் ஒழுங்காகச் செய்யாத நிலையாக மாறிவிடுகிறது.
இன்று நமது கல்விநிலையங்கள் ஒரு ஆசாரத்தை வகுத்து நமக்கு அளித்திருக்கின்றன. பத்து மணிக்கு அலுவலகம் சென்றாக வேண்டும், ஐந்து மணிக்கு அலுவலகம் முடியும் என்பதே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு வகையான அன்றாடக் கட்டமைப்பை அளிக்கிறது என்பதைக் காணுங்கள். கொரோனா காலகட்டத்தில் அந்த கட்டமைப்பு இல்லாதானபோது இரவும் பகலும் மயங்கி, துயிலும் விழிப்பும் மயங்கி ஆழ்ந்த உளச்சோர்வையும் கசப்பையும் அடைந்து சிதைந்த பலருடைய கதைகள் எனக்குத் தெரியும்.
ஏதேனும் ஒருவகை ஆசாரம் இல்லாத மனிதன் உலகியலில் வாழமுடியாது. அப்படி வாழவேண்டுமென்றால் அதற்கு அப்பாற்பட்ட சலியாத அறிவுத்தேடலும் ஊழ்கமும் தேவை. உலகியலாளன் வெவ்வேறு ஆசாரங்களை நம்பி தன் வாழ்க்கையை பகுத்து வகுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவேதான் ஐவேளைத் தொழுகையோ, அல்லது வாரமிருமுறை தேவாலயத்திற்குச் செல்வதோ, நாள் தோறும் ஆலயம் தொழுவதோ, அந்திக் கடன்களை நிறைவேற்றுவதோ, அவ்வகையான பிற ஆசாரங்களோ மிக இன்றியமயாதவை என்பேன்.
ஒருவன் உலகியல் சார்ந்த பக்தி, ஆசாரங்கள் சார்ந்த பக்தி இரண்டினூடாகவே தன் விடுதலையை அடைய முடியுமா? அவனுடைய தரம் என்ன என்பதே அதற்கான கேள்வி. அவற்றை இயற்றி ஒருவன் முழுமையாகவே தன்னை நிறைவென உணர்வானெனில் அவனுக்கு அது போதுமானது. அவன் விடுதலை அடைந்தவனே. உலகியல் பக்தி மட்டுமே கொண்டவர்களில் முழுதுறக் கனிந்தவர்களை நான் கண்டிருக்கிறேன். ஆசாரங்களினூடாக ஒழுகிச்சென்று நிறைவடைந்தவர்களையும் கண்டிருக்கிறேன்.
அதற்கு அப்பால் இருப்பது மூன்றாம் நிலையான ஃபாவ பக்தி. ஃபாவம் என்பது தன் வாழ்வைத் தன் உணர்வு நிலையால் வகுத்துக்கொள்வது. தான் அறிந்த யதார்த்தத்தை முற்றிலுமாக மறுபுனைவு செய்து கொள்வது. அதற்கு சராசரிக்கு மேலான கற்பனை வளமும், சராசரிக்கு பல மடங்கு மேலான உணர்ச்சித்தீவிரமும் தேவை. அது உங்களிடம் இருக்கிறதென்று மெய்யாகவே தோன்றினால் அதற்கு செல்லலாம். கண்ணனை தன் காதலனாக நினைத்துருகும் ஒரு பக்தை, சிவபெருமானை தன் தந்தையென்றே எண்ணி அருகிருப்பை உணரும் ஒரு பக்தன் ஃபாவ பக்தியில் இருக்கிறான். அது அவனை விடுதலை செய்யும். மெய்ஞானிகள் பலருடைய பாதை அது.
ஆகவே பக்தி எவ்வகையிலும் குறையானதல்ல. வீடுபேறு அளிக்காததும் அல்ல. ஒருவனின் இயல்பு என்ன என்பது மட்டுமே கேள்வி. உங்கள் இயல்பு பக்திக்குரியதெனில் இம்மூன்று பக்தியில் நீங்கள் ஏதேனும் ஒன்றில் நிறைவு கொள்ள முடியுமெனில் அதை கைக்கொள்ளுங்கள்.
அதை உங்களுக்கு வழிகாட்டக்கூடியவர் யார்? உங்களுக்கு மெய்யாசிரியர், குரு என ஒருவர் இருந்தால் அவர் உங்களுக்கு ஆணையிடுவார்- இது உன்னது என்று. அவ்வண்ணம் ஒரு மெய்யான குரு அமையாவிடில் உங்கள் அகமே உங்களுக்கு குரு. ஆத்மகுரு என்று அதைக் கூறுவார்கள். உங்கள் அக ஆழம் உங்களை மிக நன்கறியும் .அது எதைச் சொல்கிறதோ அதைக்கேளுங்கள். ஆணவமோ வெற்றுக்கற்பனைகளோ அந்த அகத்தின் வழிக்காட்டல்களை மறைக்காமலிருக்க நீங்கள் உளம் கொண்டால் மட்டு போதும்.
அதற்கப்பால் ஒருவனுக்கு அறிவார்ந்த தேடலும், இறுதி வரை அதைக்கொண்டு செல்லும் அறிவுத்திடமும் இருப்பின் மெய்ஞானத்தின் வழியை நாடலாம். மெய்மையின் பொருட்டு பிறிதனைத்தையும் துறக்கும் மனநிலை இருந்தால் தன்னில் ஆழ்ந்து இவ்வுலகை அகற்றும் தன்மை இருந்தால் யோகத்தின் வழியை நாடலாம். யோகம் முறையான ஆசிரியரின்றி அமையலாகாது.
ஞானமார்க்கம் மெய்நூல்களைச் சார்ந்து நிகழ்வேண்டும் ஒருகட்டத்திலேனும் அதற்கு ஆசிரியர் அமையவேண்டும். ஒருவர் உலகியல் பக்தியில் மிக எளிய நிலையிலிருந்தால் அதற்கு அடுத்த ஆசார அனுஷ்டானங்களின் பக்தி நிலை நோக்கி மேலெழ முடியும். அதிலிருந்து ஃபாவ பக்தி நோக்கி நகர முடியும். அல்லது ஆசார அனுஷ்டாங்களிலிருந்து அறிவார்ந்த தேடல் நோக்கி செல்ல முடியும். அறிவார்ந்த தேடலிலிருந்து மெய்யுசாவல் நோக்கிச் செல்ல முடியும்
அதே போல மெய்யுசாவல், ஊழ்கம் என்று சென்ற ஒருவர் திரும்பி எளிய ஃபாவ பக்தியை நோக்கி வருவதும் நிகழ்ந்திருக்கிறது. பல மெய்ஞானிகளின் கதையை உதாரணமாக சொல்ல முடியும்
உங்களை நீங்களே உசாவிக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு அப்பால் உங்கள் கேள்விக்கு பதிலொன்றுமில்லை.
ஜெ
பறவை -கடிதம்
அன்புடையீர்! வணக்கம்!
பறவை கணக்கெடுப்பு பற்றிய..அந்தக் கட்டுரை…நிச்சயம்…சுவாரசியமானது! நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்! அவர் பாசாங்கில்லாமல்…தமிழ் வார்த்தைகளை கையாண்டவிதம்…பாராட்டுக்குரியது! புறாக்களின்…குனுகு கூட கேட்டது என்று எழுதும் போது …அட…ஒரு புதிய வார்த்தை புறாக்களின் கூவல் பற்றி.அறிந்து கொண்டதாக மகிழ்ந்தேன்!
பறவைகள் வலசை செல்கின்றன..என்று கூட சொல்லக்கூடாது….என்பதும்…அவை இந்த நாட்டுப் பறவை என்று வகைப்படுத்துதல்கூட கூடாது என்பதும்…எல்லாமே..அவைகளின் வாழ்விடங்கள்…என்னும் சிந்தனையும் முற்றிலும் புதியது!
தங்கள் இணையதளம்..இது போன்ற புதிய அனுபவங்களுக்கும்….சிந்தனைகளுக்கும் பால்மா இருப்பதில் மகிழ்ச்சி!
அன்புடன்
இரா இரவிச்சந்திரன்
சென்னை
அன்புள்ள ஜெ
பொதுவாக எழுத்தாளர்களின் இணையப்பக்கங்களுக்கு ஒரு குணம் உண்டு. அது அவர்களின் வரவேற்பறை. ஜெயமோகன் இணையதளம் ஒரு முழுமையான இணைய இதழ். ஒரே சமயம் உங்கள் வரவேற்பறையும் ஓர் இதழுமாக இருக்கிறது. இதில் உங்கள் வாசகர்களும் நண்பர்களும் எழுதும் வெவ்வேறு கட்டுரைகள் அளிக்கும் வாசிப்பனுபவமும் அறிவனுபவமும் அலாதியானவை. பறவைகளை கணக்கிடுவது பற்றிய கடிதமும் குறிப்பும் அழகாக எழுதப்பட்டவை. பறவை கணக்கிடுதலை பறவை நிபுணர்கள் எழுதினால் அதில் அழகுணர்வே இருக்காது. இக்கட்டுரையில் இருக்கும் நெகிழ்ச்சி அற்புதமானது
ராஜன் குமாரசாமி
இணையதளம் சந்தா
ஐயா,நான் தங்கள் ஜெயமோகன் வலைதளத்தை Subscribe பண்ண விரும்புகிறேன்.
தங்கள் தொடர்பு லிங்கை அனுப்பவும்.நன்றி.தா.சிதம்பரம்.அன்புள்ள சிதம்பரம்https://feedburner.google.com/fb/a/ma... இரு இணைப்புகள் உள்ளன. அவற்றின் வழியாக சப்ஸ்கிரைப் செய்யலாம். ஆனால் கட்டணம் ஏதும் இல்லை. பெரும்பாலானவர்கள் இப்போது தங்கள் கணிப்பொறியில் நிரந்தர இணைப்பு வைத்து வாசிக்கிறார்கள்.ஜெஅன்புள்ள ஜெஉங்கள் இணையதளத்தை பல ஆண்டுகளாக வாசிக்கிறேன். அதற்கு நான் பணம் செலுத்தவேண்டுமென்று எண்ணுகிறேன். எப்படிச் செலுத்துவது?ஆர்.கே.எம்.அன்புள்ள ஆர்.கே.எம்நாங்கள் இணையதளத்தை இலவசமாகவே நடத்துகிறோம். ஆகவே இணையதளத்துக்கு நன்கொடை பெறுவதில்லை. விஷ்ணுபுரம் விருதுவிழா போன்றவற்றை ஒட்டி, அனேகமாக ஆண்டுக்கு ஒருமுறை நிதி பெறுகிறோம். அப்போது அறிவிப்போம். அவ்வகையில் நிதியளிக்கலாம்ஜெசர்மாவின் உயில்- கடிதம்
ஒரு எழுத்தாளன் படைப்பில் தனது வாழ்க்கையின் தரிசனங்களையே முன் வைக்கிறான் . அந்த வகையில் க.நா .சு வின் “சர்மாவின் உயில்” மிக முக்கியமான படைப்பு .இதையே நாவலின் முன்னுரையில் சொல்கிறார் .இரண்டு மாதங்களில் ஒரே மூச்சாக எழுதியது என்றும், தனக்கு மிக அணுக்கமான நாவல் என்றும் கூறுகிறார் .இந்த நாவலில் இரண்டு கதாபத்திரங்களாக க.நா .சு வே நமக்கு தெரிகிறார் .எழுத்தாளன் சிவராமன் மற்றும் சர்மா என இரண்டு பாத்திரங்களும் க.நா .சு என்பதை கொஞ்சம் கவனித்தாலே எளிதில் புரியும் .
சிவராமன் ஒரு எழுத்தாளன் தான் பார்த்த நல்ல வருமானம் வரும் அரசு வேலையை விட்டுவிட்டு, எழுத்தே வாழ்க்கை என தீர்மானித்து வாழ்கிறான் .ஆனால் வருமானம் இல்லாததால் அவன் மனைவி ராஜம் அவனை சமயம் வாய்க்கும் போதெல்லாம் குறை சொல்கிறாள் .தன் எழுத்தை தன் மனைவியே மதிக்காமல் இருப்பது சிவராமனுக்கு ஒரு பெரும் குறையாக இருக்கிறது .ரூ 200 செலவு செய்து புத்தகம் போட்டால் ,ராஜம் அந்த பணத்தில் எனக்கு ஒரு வைரத் தோடு வாங்கலாமே என அங்கலாய்க்கிறாள்
இதே சமயத்தில் சிவராமனின் எழுத்து மீது அவன் அத்தை மகள் பவானிக்கு பெரும் மரியாதை உண்டு. தன் அத்தான் நல்ல கதை ஆசிரியர் என்று தன்னளவில் உணர்கிறாள் . .சிவராமன் சுவாமிமலையில் இருந்து தன மனைவியுடன் சென்னை சென்ற பின் அந்த வீட்டிற்கு பவானி அடிக்கடி வருகிறாள் .சென்னையில் விடுதியில் தங்கி படிக்கும் பவானிக்கு தன் அத்தான் வீடு தான் ,வார இறுதி நாட்களில் அவளுக்கு புகலிடம் . சிவராமனுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை என்பது பெரும் குறையாகவே இருந்தது. .பணம் பற்றாக்குறை, குழந்தை இல்லை என்ற கவலைகளால் இறுக்கமாகவே வாழும் ராஜத்திற்கு பவானி வருவது ரொம்பவே ஆறுதலாய் இருந்தது .அவ்வப்போது தானும் கதை எழுதி தன அத்தானிடம் காட்டுவாள் பவானி . பவானி இளம் வயதில் திருமணம் முடிந்து கணவனை இழந்தவள் . அதை மறக்கவே சென்னையில் கல்லூரியில் விடுதியி ல் தங்கி படிக்கிறாள் .கவலைகளை மறக்கவே சிறுகதை எழுதுவாள் . சமயங்களில் தன்னை விட தன் கணவனுக்கு பவானி பொருத்தமோ என ராஜமே நினைப்பாள்.
சிவராமனின் சித்தப்பா சர்மா கல்கத்தாவில் சாகும் தருவாயில் இருக்கிறார் .சர்மா தன் கடைசி தம்பி வேங்கட்ராமன் வீட்டில் குடியிருக்கிறார் .பெரிய வணிகரான சர்மா கல்கத்தாவில் பெரும் செல்வந்தராக இருக்கிறார் தன் மனைவி திருமணமான சில ஆண்டுகளில் இறந்து போனதால், தன் கடைசி தம்பியை குடும்பத்துடன் கல்கத்தா வர வைத்து அவன் குடும்பத்துடன் வாழ்கிறார்.அன்று இரவு நடை போனவர் திரும்பி நெடு நேரம் கழித்து வந்து படுக்கிறார் .நெஞ்சு வலி வந்து இறக்கபோவதை உணர்கிறார் உடனே தன தம்பியிடம் உயில் என்று கூறிவிட்டு இறக்கிறார் .சர்மாவிற்கு தன அண்ணன் மகன் சிவராமனையும்,தங்கை மகள் பவானியையும் ரொம்ப பிடிக்கும் .ஆதலால் சிவராமனுக்கு தந்தி அனுப்பி சர்மாவுக்கு இறுதி காரியங்கள் செய்கின்றனர் .சில நாட்கள் கழித்து பவானிக்கு ஒரு கடிதம் வருகிறது . அது இறக்கும் முன் சர்மா அவளுக்கு எழுதியது .அதில் இந்த கடித உறைக்குள் ஒரு உயில் உள்ளது இதை இப்போது பிரிக்க வேண்டாம் .ஒரு வருடம் கழித்து குடும்பத்தினருக்கு சொல்லவும் என எழுதிவுள்ளது .பவானிக்கு ஒன்றும் புரியவில்லை .ஆயினும் அதை பிரிக்கவில்லை .
ஒரு வருடம் கழித்து சிவராமனின் பாட்டி சுவாமிமலையில் இறக்கும் தருவாயில் உள்ளார் .சிவராமன் தன் மனைவி ராஜத்துடன் சுவாமி மலை வருகிறான்.பவானியும் சென்னையில் இருந்து வருகிறாள். சிவராமனின் மாமனார் ஒரு வக்கீல் ஆதலால் சர்மாவின் சொத்துக்களில் தன் மருமகன் சிவராமனுக்கும் பங்கு இருக்கும் என்று நினைத்து சுவாமிமலைக்கு தன மனைவியுடன் வருகிறார் .அனால் உயில் பற்றி யாருக்கும் தெரியவில்லை, எனவே சில நாள் தங்கி விட்டு போகிறார் . சில நாள் கழித்து சர்மாவின் உயில் இறுதியில் பவானி மூலம் கிடைக்கிறது .இதனிடையே சிவராமனின் அப்பா ராஜத்தின் அப்பாவை உடனே சுவாமிமலைக்கு வர வேண்டும் என கடிதம் எழுதுகிறார் .கடிதத்தை கண்டவுடன் கண்டிப்பாக உயில் கிடைத்திருக்கும் அதன் பொருட்டே தன்னை சம்பந்தி அழைத்துள்ளார் என ராஜத்தின் தந்தை உடனே தன மனைவியுடன் சுவாமிமலை வருகிறார் .
வீட்டுக்குள் வந்ததும் எல்லோரும் அமைதியாய் உள்ளனர் , ஒன்றும் புரியவில்லை ராஜத்தின் தந்தைக்கு . அப்போது ராஜம் ஓடி வந்து அப்பாவை கட்டி பிடித்து அழுகிறாள் .ராஜத்தின் தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை . சிவராமனின் தந்தை சொல்கிறார் “.சர்மாவின் உயில் கிடைத்தது, அதில் தனக்கு ஜோதிடம் தெரியும் என்றும் சிவராமனின் ஜாதகத்தை பார்த்ததில் அவனுக்கு இரண்டு மனைவி என்று இருந்தது மேலும் இரண்டாவது மனைவி வந்த பிறகே அவனது முதல் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என இருந்தது மேலும் பவானியின் ஜாதக பிரகாரம் அவளுக்கு மறு திருமணம் நடக்கும் என்று இருந்தது ஆகவே சிவராமனுக்கு பவானியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தால் பவானிக்கும் குழந்தை உண்டு, ராஜத்திருக்கும் குழந்தை உண்டு .எனவே சிவராமனுக்கும் பவானிக்கும் திருமணம் செய்து வைக்கவும் அவர்களுக்கு என் எல்லா சொத்துக்களும் சென்று சேர வேண்டும் ” என எழுதிஉள்ளார் .இதற்கு ராஜம் உடன்பட்டாள் என சிவராமனின் தந்தை கூற இறுதியில் சிவராமனுக்கும் பவானிக்கும் திருமணம் முடிகிறது
ஒரு குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட நாவல் “சர்மாவின் உயில் “. க.நா .சு எனும் பெரும் கலைஞனின் இயல்பான நாவல் .”பொய்த்தேவு” போன்று தத்துவம் பேசாமல் யதார்த்தம் பேசும் நாவல் .
மாறா அன்புடன் ,
செல்வா ,
திசையெட்டும் தமிழ் ,
பட்டுக்கோட்டை
பித்தப்பூ- பிரவீன்எழுத்தாளனும் குற்றவாளியும் -கடிதம்
அன்புள்ள ஜெ
எழுத்தாளனும் குற்றவாளியும் ஓர் அற்புதமான கட்டுரை. வெளியே இருப்பவர்கள் என்பது இருவருக்கும் பொது. அதன் திரிபுகள் சிக்கல்கள் எல்லாமே பொது. வெளிப்பாடு என்பது வேறுவேறு. ஒருவருக்கு இலக்கியம். இன்னொருவருக்குக் குற்றம்.
ஆனால் எழுத்தாளனை சான்றோன் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் சமூகம் வெவ்வேறு கோணங்களில் அவனைப் புரிந்துகொள்ள இந்தவகை கட்டுரைகள் முக்கியமானவை என நினைக்கிறேன். நான் இதை யோசிப்பதுண்டு. நம்மூர் ஜனங்களுக்கு பெரிய பண்டிதர்கள்மேல் அபாரமான மரியாதை. அவர்களுக்கு மாலை செல்வம் பதவி எல்லாம் உண்டு. எழுத்தாளன் மேல் இளக்காரம். அது எழுத்தாளன் வெளியே இருப்பதனால்தான். பண்டிதன் மையத்தில் இருக்கிறான்.
வாழ்நாளில் பெரும் பண்டிதர்களுக்குக் கிடைத்த மதிப்பில் அரைக்கால்வாசி கூட பெரும் கவிஞர்களுக்குக் கிடைத்ததில்லை. ஒட்டக்கூத்தன் அரசக்கவிஞர். கம்பன் நாடோடி, ஊதாரி, ஸ்த்ரீலோலன். இதுதான் கதை
லக்ஷ்மிநாராயணன்
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
‘எழுத்தாளனும் குற்றவாளியும்’ கட்டுரை வெகு அழகாக ஒன்றைச் சொல்கிறது – இயல்புத்தன்மையால் இருவரும் அணுக்கம் என்றாலும், வெளிப்படுத்தலில் வேறாகிறார்கள் – அறிவுச் செயல்பாடு ஒருவரை ‘பிரம்மன்’ (படைப்போன்) என்றாக்கும் போது, இன்னொருவர் ‘தன்னை அழித்தலில்’ தானே கரைகிறார் எச்சம் இன்றியே.
கலையரசியின் கருணை (சரஸ்வதி கடாட்சம்) எழுதுகோல் ஏந்தியவரில் ஆக்கமாக மலரும் போது, இன்னொருவரில் இயைந்து நிற்கும் தேவதையும் ஒன்று உண்டல்லவா. ‘குற்றவாளியும்’ தன்னை மீறிய ஒன்றால் இயக்கப்படும் ஒருவனே என்னும்போது விலக்கமோ வெறுப்போ இன்றி மனிதரைப் புரிந்து கொள்ள ஒரு புதிய கோணத்தை, ஒரு திறப்பை இக்கட்டுரை அளிக்கிறது.
இன்னொன்றும் தோன்றுகிறது – ஒருவருக்குள் படைப்பியக்கத் தளிரையும் மற்றொருவரில் தன்னழிப்புத் துளியையும் பொதிந்து அனுப்பவது எது? குருவருள் / இயற்கை நியதியின் பெருங்கருணை சிப்பிக்குள் முத்தாக ஒருவரை மலரச் செய்வது எவ்விதம்? தேர்வு செய்யும் பெரும் கரம் ஒத்த கூறுகளிலேயே எதிரெதிர் தன்மைகளை எழச் செய்வது எங்ஙனம்? – பெரு விந்தை தானே!!
அன்புடன்
அமுதா
May 3, 2022
நண்பர்கள் நடுவே பூசல்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காதலைப் பற்றியும் நட்பைப் பற்றியும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். உள்ளுணர்ச்சி சொல்வது பெரும்பாலும் சரியே. ஏனெனில் அது தர்க்கம் செய்வதில்லை.
ஒரு கேள்வி.அருமையான நண்பர் குழாமுடன் பயணங்கள் மேற் கொள்ளுகிறீர்கள். பல சந்திப்புகளை நடத்துகிறீர்கள். உங்கள் நண்பர்களிடையில் கருத்து மோதல்கள், மனப் பேதங்கள், பூசல்கள் வரூம் போது அவை ஒருவேளை பெரிதாகும் போது எப்படி சமாளிக்கிறீர்கள்? தீர்த்து வைக்கிறீர்கள்?
அன்புடன்
எஸ். கணேஷ்
***
அன்புள்ள கணேஷ்
நண்பர்களுடனான உறவு எந்த ஓர் அமைப்பிலும் முற்றிலும் சிக்கலான ஒன்று. ஓர் அறிவார்ந்த அமைப்பில் மேல்-கீழ் எனும் அடுக்கு இருக்க முடியாது. அனைவருமே தங்களுக்கென தனிச்சிந்தனையும் தனித்துவமான ஆளுமையும் கொண்டவர்கள். சாதாரணமாக நீண்டகால வாசிப்புக்கு பிறகுதான் ஒருவர் என்னுடைய எழுத்துகளுக்கு வந்து சேருகிறார். இயல்பாகவே அவருக்கு முன்னரே தெளிவான இலக்கியக் கொள்கைகளும் அரசியல்கொள்கைகளும் உருவாகியிருக்கும்.
என்னுடைய வாசகர்கள் நண்பர்களிலும் இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்கள், இந்துத்துவ அரசியல்சார்பு கொண்டவர்கள், தீவிரமான திராவிட இயக்க ஆதரவு கொண்டவர்கள் என மூன்று தரப்பினருமே உள்ளனர். மத அடிப்படையிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், இந்துக்கள் என மூன்று தரப்பினரும் விஷ்ணுபுரம் அமைப்பின் முதன்மைப் பங்களிப்பாளர்களாக இருக்கிறார்கள். ஆகவே ஓர் ஒத்திசைவின் அடிப்படையில்தான் இது செயல்பட முடியும்.
இந்த வகையான அமைப்புகளின் அடிப்படை என்பது அவற்றை ஒருங்கிணைத்து நிறுத்தும் விசை என்ன என்பதுதான். அந்த விசை அவ்வமைப்பின் நோக்கத்தில் இருந்து எழுவது. அதிகாரம் சார்ந்த அமைப்புகளுக்கு அந்த அதிகாரமே நோக்கமாகிறது. ஒருவர் ஓர் அரசியல் கட்சி அல்லது நிறுவனத்தில் பணியாற்றுகையில் அவருடைய தனிப்பட்ட நலன்கள்தான் அவரை அங்கே நிறுத்தி வைக்ககூடியவை. அந்த கட்சியின் அல்லது நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, பலவகையான சமரசங்கள் வழியாக ஒத்திசைந்து, தனது பங்களிப்பை அவர் ஆற்றினால் அதற்கு அவருக்கு தனிப்பட்ட முறையில் அதிகார லாபமோ பொருளியல் லாபமோ அடையாளமோ உண்டு.
பெரும்பாலான அமைப்புகள் இத்தகைய உலகியல் நன்மைகள் அளிப்பவை. அங்கு பூசல்கள் எழுவதென்பது பங்குவைத்தலில்தான். தனிப்பட்ட லாபத்தின் பொருட்டு ஒர் அமைப்பில் அல்லது நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தனக்குரிய இடமோ பங்கோ அளிக்கப்படவில்லை எனும்போது சீற்றம் கொள்கிறார். தன்னைவிடக் குறைவான ஒருவர் தன்னை முந்திச் செல்கிறார் என உணரும்போது முரண்படுகிறார். பெரும்பாலான அரசியல் கட்சிகளும் நிறுவனங்களும் தொடர்ச்சியாக இந்தப் பகிர்வில் ஒரு சமரசத்தை செய்துகொண்டே இருக்கின்றன. முரண்படுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் சிலவற்றை அளிக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று கிடைக்கும்படி பார்த்துக்கொள்கின்றன. சில தருணங்களில் அமைப்பு சிலரை பொருட்படுத்தாமல் இருக்கக்கூடும். அல்லது சிலருடைய எதிர்ப்பார்ப்புகள் அவர்களுடைய தகுதியை விட மேலானதாக, எந்த வகையிலும் அந்த அமைப்பால் ஈடுசெய்ய முடியாததாக இருக்கும். அச்சூழ்நிலையில் அவர் அந்த அமைப்புடன் முரண்பட்டு வெளியேறுகிறார்.
விஷ்ணுபுரம் போன்ற அமைப்பின் முதன்மையான வேறுபாடென்பது இதில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாரமோ பணமோ எதுவுமே அளிக்கப்படுவதில்லை என்பது தான். அவ்வாறெனில் இந்த அமைப்பில் அவர்கள் சேர்ந்து செயல்படுவதற்கான விசையாக இருப்பதென்ன? எந்த நோக்கம் இதை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறதோ அதுதான். அது ஒரு இலட்சியவாதம். தமிழில் இலக்கிய அறிவுச்சூழலில் சிலவற்றை செய்யவேண்டும் என்னும் எண்ணம். இங்கிருக்கும் சில விடுபடல்களை நிரப்பவேண்டும், குறைபாடுகளைக் களைய வேண்டும் என்னும் நோக்கம். அதைச் செய்வதனூடாக வரும் தனிப்பட்ட தன்னிறைவு.
இங்கே ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான அன்றாடப் பணிகள் உள்ளன. அங்கேயே அவர்களுடைய அடையாளங்கள் அமைந்துள்ளன. அவர்கள் பணம் ஈட்டவும் உலகியல் லாபங்களை ஈட்டவும் வேறு களங்கள் உள்ளன. அதற்கப்பால் அவர்களுக்கு ஒன்று தேவைப்படுகிறது. கொஞ்சம் இலட்சியவாதம், கொஞ்சம் கனவு, அவை அளிக்கும் அகநிறைவு. அதன்பொருட்டே விஷ்ணுபுரம் போன்ற ஒரு அமைப்பில் ஒருவர் பங்காற்ற முடியும். அதன்பொருட்டு மட்டும் இங்கு வருபவர்களே இங்கு நீடிக்கவும் செய்கிறார்கள்.
ஆச்சரியம் என்னவெனில் ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்புக்குள் அன்று முதல் இன்று வரை வந்து சேர்ந்தவர்களில் ஓரிருவர் மட்டுமே அகன்று சென்றிருக்கிறார்கள். மற்றவர்கள் அதே விசையுடன், அதே தீவிரத்துடன் இன்றும் நீடிக்கிறார்கள். மிகமிகக்குறைவாகவே பூசல்களோ கருத்துமுரண்பாடுகளோ நடந்துள்ளன. அவை மிக விரைவில் சரிசெய்யப்பட்டும் உள்ளன. அது இந்த அமைப்பின் அடிப்படையான நோக்கம் நேர்மையானது, வலுவானது என்பதற்கான சான்று.
இத்தகைய இலட்சியவாத அமைப்புகளை நடத்துவதற்கான சில நிபந்தனைகள் உண்டு. பிற எந்த ஒரு ஒருங்கிணைப்பாளரிடம் இருந்தும் கற்பதைவிட பல மடங்கு நுட்பமாகவும் விரிவாகவும் இதன் நெறிகளை நாம் காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். காந்திய இயக்கங்கள் அல்லாத இயக்கங்கள்கூட, குறிப்பாக இடதுசாரி இயக்கங்கள், இந்தியாவில் ஜனநாயகச் சூழலில் காந்தியிடமிருந்து கற்றுக்கொண்ட நெறிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். நம் காலகட்டத்தின் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பாளர் காந்திதான்.
ஒருங்கிணைப்புக்கான முதன்மை நெறியென்பது இதற்கு அதிகார மையம் ஒன்றிருக்கலாகாது என்பதுதான். வழிகாட்டி ஒருவர் இருக்கலாம். ஆனால் அந்த வழிகாட்டுபவர் அதன்மூலம் தனக்கு நன்மைகளைத் தேடிக்கொள்வார் என்றால், தன்னை அதிகார மையமாக ஆக்கிக்கொள்வார் என்றால் அந்த அமைப்பின் நோக்கம் அவரை நிலைநிறுத்துவதாக ஆகிறது. அவ்வண்ணம் அவர் தன்னை ஆக்கிக் கொள்ளவேண்டும் என்றால் மற்ற அனைவருக்கும் அவர் தான் அடைவதில் ஒரு பகுதியை முடிவிலாது பங்கிட்டாகவேண்டும். மாறாக, மையத்திலிருப்பவரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் வழியாகவே லட்சியவாத அமைப்புகள் நிலைகொள்ளும். காங்கிரஸிலிருந்து காந்தி எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை என்பது காங்கிரஸின் இணைப்புவிசையாக அவரை நிலைநிறுத்தியது.
எளிய முறையிலேனும் விஷ்ணுபுரத்தின் இயங்குமுறை அதுதான். இந்த அமைப்பு எந்த வகையிலும் என்னையோ என் படைப்புகளையோ முன் நிறுத்தாது. இதிலிருந்து நான் அடையக்கூடியதென எதுவுமில்லை. அது இதிலுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்போதுதான் அவர்கள் தங்கள் பங்களிப்பை ஆற்ற முடியும். அவர்கள் என்னுடைய நெருக்கமான நண்பர்கள், என்மீது தனிப்பட்ட பிரியம் கொண்டவர்களே ஆனாலும் அவர்கள் எவரும் எனக்காக உழைக்கவில்லை. தமிழ்ச்சூழலில் ஒரு பண்பாட்டு மாற்றத்திற்காகவும் இலக்கிய வளர்ச்சிக்காகவும்தான் அவர்கள் தங்கள் பங்களிப்பை ஆற்றுகிறார்கள். அந்த உணர்வு அவர்களிடம் இருக்கும்போது மட்டும்தான் நான் அவர்களை இந்த அமைப்புக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும்.இதை தொடக்கத்திலேயே நான் உணர்ந்திருக்கிறேன். வெவ்வேறு தருணங்களில் எனது படைப்புகள் சார்ந்து நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்று நண்பர்கள் கூறும்போதெல்லாம் கடுமையாக மறுத்து என் கருத்தை தெரிவித்ததெல்லாம் இதன் பொருட்டே.
அதேசமயம் முற்றிலும் பின்னணியில் என்னை நான் நிறுத்திக்கொள்ள முடியாது. பல அமைப்புகளில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஏறத்தாழ அறியப்படாதவர்களாக பின்னணியில் செயல்படுவதுண்டு. ஆனால் இந்த அமைப்பு என்னுடைய தனி ஆளுமையை நம்பி, எனது எழுத்துகளின் வழியாக தொடர்ந்து இங்கே உள்ளே வருபவர்களால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதன் ஈர்ப்பு விசை நானே என்றவகையில் இதன் முகஅடையாளமாக என்னை முன்னிறுத்தாமலிருக்க முடியாது. https://www.jeyamohan.in என்னும் இணையதளம்தான் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம். தமிழ் விக்கி உட்பட எல்லா அமைப்புச் செயல்பாடுகளுக்கும் அடிப்படை. அது ஒவ்வொரு நாளும் வெளியாவதும், அதில் எனது கருத்துக்கள் வெளியாவதும், நான் பரிந்துரைக்கும் படைப்புகள் வெளியாவதும் இதை நிலைநிறுத்தும் முக்கியமான சக்தி. இது என்னை முன்னிறுத்துவது அல்ல, என்னை முன்வைப்பது மட்டும்தான்.
ஒரு பொது நோக்கத்துடன் கூடும் பலரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையானவர்கள். ஏறத்தாழ நிகரான தகுதிகொண்ட பலர் ஒன்றிணைந்து செயலாற்றும் இன்னொரு அமைப்பு மிக அரிதானது. ஓர் இலட்சியவாதம் அதற்கு தகுதியானவர்களையே ஈர்க்கும். ஆகவே இதில் செயலாற்றும் ஒவ்வொருவரும் தனக்கு இணையானவர் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். எவரும் எவரையும் ஆள முடியாது, மாற்றியமைக்க முடியாது. தங்கள் தளங்களில், தங்கள் இயல்புக்கேற்ப ஒவ்வொருவரும் பணியாற்றுவதே இயல்வது. கூடுமானவரை மற்றவர்களிடம் ஒத்திசைவது ஒன்றே செய்யக்கூடுவது.
இணையானவர்கள் என்பதனால் ஒவ்வொருவருக்கும் இன்னொருவரிடமும் சிறு முரண்பாடுகள் எழும். அதை தவிர்க்க முடியாது. சிலர் சிலருடன் இயல்பிலேயே இணைய முடியாது. ஆளுமை சார்ந்த முரண்பாடுகள் இருக்கும். சிலருக்கு சிலருடைய செயல்முறையில் முரண்பாடுகள் உருவாகும். உதாரணமாக, மிகக்கவனமாக எண்ணிச் செயல்படக்கூடிய ஒருவர் மிகுந்த விசையுடன் செயல்படக்கூடிய ஒருவருக்கும் கடுமையான ஒவ்வாமையை அளிக்க வாய்ப்புண்டு. ஆனால் இரு சாராரும் ஆற்றக்கூடிய வெவ்வேறு பணிகள் உண்டு.
இத்தகைய அமைப்புகளில் தொடர்ச்சியாக நிகழும் உரையாடல்களில் தவறான புரிதல்கள், ஒரு தருணத்தில் உருவாகும் சீற்றங்கள் என பல நிகழும். அத்தகைய சிறு உரசல்கள் விஷ்ணுபுரம் அமைப்புக்குள் அரிதாகவேனும் நிகழ்ந்துகொண்டுள்ளன. அத்தருணங்களில் அவர்களை சமரசம் செய்யும் விசையாக இருப்பது என்னுடைய நட்பும். அவர்கள் என் மேல் கொண்டுள்ள மரியாதை ஆகியவையே. பலதருணங்களில் இருவருக்கிடையே உள்ள பூசல் என் வரையில் வந்துவிடக்கூடாதென்று இருவருமே கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் சமரசமாகி இணைந்த பிறகு நெடுங்காலம் கழிந்துதான் அந்த செய்தி எனக்கு வந்து சேர்கிறது.
அதற்கும் அப்பால் ஒரு முரண்பாடு வருமெனில் இருதரப்பினரை அழைத்து என் பொருட்டும், நான் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட என் கனவுகளின் பொருட்டும் அவர்கள் ஒத்திசைந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்வது என்னுடைய வழக்கம். ஒவ்வொரு முறையும் சமரசம் செய்வதற்குரிய காரணமாக நான் முன்வைப்பது நம்மை இணைக்கும் பொதுக்கனவையே. நாம் சிறிய அளவிலேனும் ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளை கவனித்தாலே அது தெரியும். அந்தக் கூற்று ஒவ்வொரு முறையும் பயனளித்திருக்கிறது. ஏனெனில் இதில் பங்கேற்கும் அனைவருக்கும் அது உள்ளூரத் தெரியும்.
இங்கு அவர்கள் செய்யும் ஒவ்வொன்றும் அவர்களிக்கும் தனிப்பட்ட நிறைவை வெளியே அவர்கள் ஈட்ட முடியாது. மிகச்சிறிய கருத்துமுரண்பாடுகளுடன் விலகிச் சென்றவர்கள் எவரும் வெளியே சென்று எதையும் ஆற்றவில்லை. தங்கள் எளிய அன்றாடத்திற்குள் சுருண்டு மறைந்து போனார்கள். இங்கு இருக்கையில் இருந்த நட்பார்ந்த சூழல், படைப்பூக்கம் கொண்ட தருணங்களை அவர்கள் அந்தரங்கமாக எண்ணிப் பார்த்தால் அவர்கள் இழந்ததென்ன என்று அவர்களுக்கே தெரியும். அவ்வாறு விலகிச்சென்ற ஓரிருவர் சென்றமைந்த சோர்வின் இருளை மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறு முரண்பாடின் வழியாக, சிறு ஆணவச் சீண்டலின் வழியாக விலக்கம் அடைவோம் என்றால் தாங்கள் இழப்பது எத்தனை பெரிய வாழ்க்கையை என்று அவர்களுக்குத் தெரியும். அதுவே இணைக்கும் சக்தி.
ஒவ்வொருவரிடமும் நான் மீண்டும் சொல்வது அதைத்தான். பெருங்கனவுகள் அளவுக்கு வாழ்வை நிறைவுறச் செய்பவை வேறில்லை. பகிர்ந்துகொள்ளப்படுகையில் கனவு மீண்டும் பெரிதாகிறது. பலருடைய கனவுகள் சேர்ந்து ஒன்றாகும்போது அது இயக்கமாகிறது. ஓர் இலட்சியவாத இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது என்பதைப்போல இனிய அனுபவம் வேறில்லை. இன்று விஷ்ணுபுரம் அமைப்பிலிருக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் தங்கள் மிக இனிய தருணங்கள், கொண்ட்டாட்டமான நாட்கள் இங்கே செயல்பட்டபோது அவர்கள் அடைந்ததுதான் என்பதை காணமுடியும். அவ்வகையில் பார்த்தால் வேறு எதைவிடவும் அதிகமான ஊதியம் தரும் செயல் இது என்று அவர்கள் அறிவார்கள். அது ஒன்றே மீள மீள ஒவ்வொருவரிடமும் நான் கூறுவது.
அத்தனைக்கும் அப்பால் ஒன்றுண்டு. இத்தகைய இலட்சியவாதம் சார்ந்த அமைப்புகளில் உள்ள நட்பார்ந்த சூழல் வேறெந்த உலகியல் அமைப்பிலும் இருக்காது. இங்கே போட்டி இல்லை. ஆகவே வெற்றி தோல்வி இல்லை. இங்கு ஒருவர் பேச, ஒருங்கிணைக்க, செயல்பட கற்றுக்கொள்வது மிக எளிது. மகிழ்ச்சியும் களியாட்டமும் நிறைந்த கல்வி இது. இங்கே பெறும் பயிற்சி அவர்களுக்கு வெளியே உலகியல் சூழலிலும் உதவுவது.விஷ்ணுபுரம் விழா போன்ற ஒன்றை ஒருங்கிணைப்பவர் அவருடைய வணிகத்தில், தொழிலில் எதையும் ஒருங்கிணைக்கலாம். இந்த அனுபவம் விலைமதிப்பற்றது.
அடிப்படை நன்னோக்கம் கொண்ட எந்த கூட்டமைப்பும் நம் ஆளுமையை பெரிதாக்குவதுதான். நமக்கு நம்மைப்பற்றி நம்பிக்கையும் நிறைவும் அளிக்கும் செயல்களை அதன் வழியாக நாம் செய்கிறோம். வாழ்க்கையின் மிகமிக மதிப்புமிக்க தருணங்களை அடைகிறோம். நாம் அளிப்பவற்றை கணக்கு வைத்துக்கொள்வதுபோல பெறுபவற்றை கணக்கிட்டால் நாம் கொள்முதல்தான் செய்கிறோம் என உணர்வோம். சில்லறை உறவுகளில், அன்றாடத்தொழிலில் ஆயிரம் சமரசங்களைச் செய்துகொள்ளும் நாம் இதைப்போன்ற பொதுச்செயல்பாடுகளில் எளிய தன்முனைப்பால் புண்படுவதும் விலகுவதும் அறிவின்மை என்றே கொள்ளப்படும்.
நாம் இங்கே மும்மடங்கு சமரசம் செய்துகொள்ளவேண்டும். ஏனென்றால் நம் சமூகத்தின் எல்லா வகைமாதிரிகளும் கொண்டவை இத்தகைய அமைப்புகள். மேலும் பற்பல நூற்றாண்டுகளாகவே கூட்டாகச் செயல்படும் குடிமைப்பண்புகள் இல்லாமல் சிறு சிறு சமூகக்குழுக்களாக வாழ்ந்து பழகிய சமூகம் நாம். கூடிச்செயல்புரியும் இயல்பை நாம் கற்கத்தொடங்கி நூறாண்டுகள்கூட ஆகவில்லை. ஆகவே நாம் கூட்டுச்செயல்பாட்டுக்கான குடிமைப்பண்புகளை கற்கவேண்டும். கற்காத பிறரை தாங்கிக்கொண்டு செயல்படவும் வேண்டும். இச்செயல் அளிக்கும் நன்மைகளுக்காக அச்சமரசங்களை செய்யலாம்.
இவ்வளவும் சொன்னபின்னரும் ஒருவர் தனிப்பட்ட உரசல்களையே முன்வைப்பார் என்றால், முனகுவார் என்றால், செயல்களுக்கு தடையென அமைவார் அது ஊழ், அவ்வளவுதான்.
ஜெ
***
புதுமைப் பெண்ணொளி- கடலூர் சீனு.
இனிய ஜெயம்
அன்றொருநாள் அஜிதனுடன் சாரநாத் அருங்காட்சியகத்தில் நின்றிருந்தேன். அதுவரை பாடத்திட்டம் வழியாகவும், இந்திய அரசின் சின்னம் என்ற வகையிலும் புகைப்படங்களிலும் பின்னர் விஷ்ணுபுரம் நாவல் போல பல கலாச்சார பின்புலங்கள் வழியே அறிந்திருந்த சிற்பத்தை முதன் முறையாக நேரில் கண்டேன். என் வாழ்நாளின் மகத்தான தருணங்களில் அதுவும் ஒன்று.
நாற்றிசையும் தம்மத்தின் மேன்மை உரைக்க, அறவாழித் தேரேறி புறப்பட்டுவிட்ட சிம்மங்கள். சிம்மங்கள் உடலின் ஒவ்வொரு தசைத் திணிவிலும் தெறிக்கும் வலிமை. இச்சகத்தில் எதன்மீதும் அச்சமற்ற விழிகள், திசைகள் அதிரும் கர்ஜனையை சிலைக்கச் செய்தமை போன்ற சிற்பம். 2000 வருடம் கடந்து வந்து உலகோர் கேட்க ஒலிக்கும் கர்ஜனை. சுதந்திர இந்தியா தமக்கென தேர்ந்து கொண்ட, உலக முழுமைக்குமான பதாகைச் சின்னம். உலகின் தலைசிறந்த அரசு சின்னம் நமதே என்று நெடுநாள் இறுமாந்திருந்தேன், பிற தேசங்களின் சின்னங்களை அதன் சமூக பரிமாண பின்புலத்துடன் அறிந்து கொள்ளும் வரை. குறிப்பாக அமெரிக்க சுதந்திர தேவி சிலையை.
என் சிறு வயதில் சுதந்திர தேவி சிலை (அதன் உயரம்) குறித்து அறிந்து கொண்டது என் தந்தை வழியேதான். அன்று (ம்) உலகை ஆட்டிவைத்த ஹாலிவூட் திரைப்பட நாயகர்களில் ஒருவர் சூப்பர் மேன். ஏதோ ஒரு பாகத்தில் சூப்பர் மேனும் வில்லனும் கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசி சண்டை போடுவார்கள். அந்த வரிசையில் வில்லன் சுதந்திர தேவி சிலையை பிடுங்கி சூப்பர் மேன் மேல் வீசுவர். சூப்பர் மேன் அதை பத்திரமாக கேட்ச் பிடித்து மீண்டும் பீடத்தில் நிறுவி விட்டு சண்டையை தொடர்வார். அந்த படத்தின் அக்காட்சிக்கு பிறகே அப்பா அந்த சிலையின் உயரம் குறித்து சொன்னார்.
அங்கே துவங்கி நூறாண்டு ஹாலிவூட் வரலாற்றில் ஒரு 100 திரைப்படத்திலேனும் சுதந்திர தேவி சிக்கி சீரழித்திருக்கிறாள். ஒரே ஒரு படம் மட்டுமே விதி விலக்கு. டைட்டானிக். இங்கிலாந்தில் இருந்து சீமாட்டியாக கிளம்பி, ஒரு வாழ்நாள் அனுபவம் அனைத்தையும் கண்டு, மழை பெய்யும் இரவில் அனாதை அகதியாக தீவுக்கு வந்து நின்று, சுதந்திர தேவி சிலையை ரோஸ் அண்ணாந்து பார்க்கும் காட்சி.
அவள் அகதிகளின் அன்னை என்றே கொல்யா சொல்கிறார்.கொல்யா. ருமேனியா காரர். கொடுங்கோல் அரசில் இருந்து மனைவியுடன் தப்பி வருகிறார். கனவு முழுக்க சுதந்திர தேவியின் நிலத்துக்கு வந்துவிடவேண்டும் என்பது மட்டுமே. முயற்சியில் தனது அரசின் எல்லையில் சிக்கிக் கொள்கிறார். விடுமுறை இன்றி நாளொன்றுக்கு 12 மணிநேர உழைப்பை அளிக்கிறார். அரசியல் மாற, ஆறாண்டு சிறை வாசம் முடிந்து வெளியே வந்து, விட்ட இடத்திலிருந்து கனவை துரத்துகிறார். சுதந்திர தேவியின் காலடிக்கு வந்து சேர்கிறார். சுதந்திரம். சுதந்திரம். இனி இங்கே எதையும் செய்யலாம். என்ன செய்வது? கொல்யாவுக்கு பொம்மைகள் செய்யத் தெரியும். சுதந்திர தேவியை பொம்மையாக செய்து விற்கும் கடையை துவங்குகிறார். வணிகம் பெருக, நிறுவனத்தை பெரிதாக மாற்றுகிறார். லாபத்தில் பாதியை சுதந்திர தேவி பராமரிப்பு நல்கைக்கு வழங்குகிறார். அன்னையின் காலடியில் நிறைவாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இவரில் துவங்கி, தீவில் வித விதமான முறைகளில் சுதந்திர தேவியை வரைந்து விற்று வாழும் தெரு ஓவிய கலைஞன், அங்கே அகதியாக வந்தவர்களுக்கு பிறந்து லிபர்டி எனும் பெயர் சுமந்த குழந்தைகள், தலைமுறை தலைமுறையாக அங்கே வரும் பயணிகளுக்கு தெய்வ காரியம் போல வழிகாட்டும் கப்பல் ஊழியர் குடும்பம் என இப்படி தேவி குறித்த பல பத்து உளம் பொங்க வைக்கும் கட்டுரைகள் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.
அன்னையின் காலடியில் கடல் போல் அலையடிக்கும் வரலாற்றில் ஐந்து தருணங்கள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. முதலாவது சிலை நிறுவப்பட்ட (1886) சில ஆண்டுகளில் அமெரிக்க பெண்கள் பெரும் திரளாக அன்னையின் காலடியில் கூடி தங்களுக்கு ஓட்டு உரிமை கேட்டு நிகழ்த்திய போராட்டம்.
இரண்டாவது எல்லா காவலையும் மீறி அகதி ஒருவர் அன்னை நிற்கும் பீடத்தில் ஏற்றிய எல்லா அகதிக்கும் நல்வரவு எனும் சேதி தாங்கிய பிரம்மாண்ட பதாகை.
மூன்றாவது டேவிட் காப்பர் ஃபீல்ட் எனும் மாயக் கலைஞன் மொத்த தேவி சிலையையும் சில நிமிடங்கள் மறையச் செய்தமை. அது வெறும் சிலை மறையும் மாயக் காட்சி நிகழ்வு மட்டுமே அல்ல. ஒரு விழுமியம் ஒன்று கண் முன்னால் மறைந்து போனது என்று ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.
நான்காவது. ஒரு கருப்பினப் பெண் அமெரிக்காவின் நிற வெறியை எதிர்த்து சட்டத்துக்கு புறம்பாக அன்னையின் பீடம் மீதேறி கால் விலங்கு துணித்த அன்னையின் காலடியில் அமர்ந்து போராடியது.
ஐந்தாவது, இரட்டை கோபுரம் தகர்க்க பட்ட நாள். தீவில் சுதந்திர தேவி காலடியில் உள்ள அமெரிக்க கொடியை தாழ்த்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவு வருகிறது. அதிகாரி கெட்ட வர்த்தையுடன் பதில் சொல்கிறார். வேண்டுமானால் இக்கணம் நான் ராஜினாமா செய்கிறேன். கீழ்படியாமைக்கு என்ன தண்டனையோ அதையும் ஏற்கிறேன். ஆனால் அன்னையின் காலடியில் நிற்கும் கொடியை தாழ்த்தும் பணியை மட்டும் நான் செய்ய மாட்டேன். அன்னை அமெரிக்க அரசியலுடன் சுருங்கியவள் அல்ல. அதிகாரி செய்தது சரியே என்று பல பத்திரிக்கைகள் எழுதின.
யார் இந்த அன்னை? எவர் கனவில் எழுந்த தெய்வம் இவள்? இத்தெய்வத்தின் விதையும், உயிரும், உடலும் என்று அமைத்தவர் மூவர். முதலாமவர் எட்டவர்ட் ஜெனே டி லாபுலே எனும் பிரெஞ்ச் சட்ட வல்லுநர். அடிமை எனும் நிலைக்கு எதிராக தொடர்ந்து போராடியவர். அமெரிக்க அரசியலில் நிகழ்ந்து வரும் குடியரசு எனும் நிலை நோக்கிய மாற்றத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அமெரிக்க லட்சியவத சமூக அரசியல் கண்ணோட்டத்தை பிரஞ்சில் விதைப்பதை தனது வாழ்நாள் பணியாக கொண்டவர். அதன் பொருட்டு பிரஞ்சின் ஆளும் வர்க்கத்துக்கு நிரந்தர எதிரியாக மாறிப்போனவர். இவரே பிரான்ஸ்கும் அமெரிக்காவுக்கும் இடையே இப்படி ஒரு பரிவர்த்தனை நிகழ வேண்டும் என்னும் கனவை விதைத்தவர்.
இரண்டாமவர். பிரெஞ்சு நிலத்தின் புகழ் வாய்ந்த சிற்பி ஃபிரெட்ரிக் ஆகஸ்டே பார்தோல்டி. இவரே மேற்கண்ட கனவுக்கு உயிர் தந்தவர்.
மூன்றாமவர் ஐஃபில் டவர் கட்டிய ஐஃபில். இவரே இந்த பிரம்மாண்ட உயிர் கொண்டு எழுந்த கனவுக்கு உடல் தந்தவர்.
1857 இந்தியாவுக்கு முக்கியமான ஆண்டு. உலகின் சரிபாதியை சுரண்டி வாழ்ந்த பிரிட்டன் அரசின் மாட்சிமை தாங்கிய மகாராணி இந்திய அரசாட்சியை ‘எடுத்துக்கொண்ட’ ஆண்டு. இதன் பிறகான கால் நூற்றாண்டு அமெரிக்க பிரெஞ்சு சமூக அரசியலில் எழுந்த ‘குடியரசு’ சார்ந்த லட்சியவாத கனவே சுதந்திர தேவி எனும் படிமை. இந்த கால் நூற்றாண்டு காலம் என்பது அமெரிக்க பிரெஞ்சு நிலம் இரண்டிலுமே கொந்தளிப்பான காலம், அங்கே நிறவெறி, அடிமை ஒடுக்குமுறை, நீண்டுகொண்டே போகும் உள்நாட்டு கலவரங்கள், இங்கே முடியாட்சியை எதிர்த்து அடிமை வாழ்வை எதிர்த்து தொடர்ந்து கொண்டே இருக்கும் நெடிய போராட்டம். இரண்டு தேசமுமே அரசியல் ரீதியாக இதுவரை மானுடம் காணாத புத்தம் புதிய வாழ்வை நோக்கி புரண்டு திரும்ப கடும் ப்ரயத்தனத்தில் இருந்த காலம். இந்த கொந்தளிப்பான சூழலில்தான் பிரான்சில் எட்வர்ட்ன் கனவுக்கு உயிர் கொடுக்க களம் இறங்குகிறார். ஃபிரெட்ரிக்.
பிரான்சில் தயாராகி அமெரிக்காவில் நிறுவப்படப்போகும் சிலை எனும் செய்தியே தன்னளவில் இரண்டு நிலத்தின் ஆளும் அரசுக்கு உகக்காத ஒன்றே. ஆகவே இப்பணி மக்கள் பங்கேற்பின் மூலம் மட்டுமே நிகழ முடியும் எனும் நிலை. ஃபிரெட்ரிக் கின் சாதனை என்பது அவர் அன்னை சிலையை உருவாக்கியவர் என்பதைக் காட்டிலும், அதற்கான பணியில் மக்கள் பங்கேற்பை முதலீட்டை வெற்றிகரமாக உள்ளே கொண்டு வந்தவர் என்பதே முதன்மையானது என்று எண்ணம் எழச் செய்யும் வகையில் இருக்கிறது ஃபிரெட்ரிக்கின் பணிகள்.
தனது சொத்தில் கணிசமான அளவை செப்புத்தகடுகள் பெற விற்கிறார். அன்னையின் வலது கை ஜோதி. அதுவே சிலையில் முதலில் உருவானது. அதையே காட்சிக்கு வைக்கிறார் ஃபிரெட்ரிக். அடுத்த வந்த வருடங்கள் முழுக்க ஒவ்வொருநாளும் இச்சிலை உருப்பெறும் வகைமையை காண தனது பட்டரையை உலகோர் முன் திறந்து வைக்கிறார். குறிப்பிட்ட கட்டணம் கட்டி மக்கள் தேவி சிலை உருவாவதை பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக 4 லட்சம் பேர் வரை வந்து காசு கட்டி தேவி உருவம் கொள்வதை பார்த்து சென்றிருக்கிறார்கள்.
கிரேக்க தெய்வம் லிபெர்டா துவங்கி, எகிப்தின் சிலை வரை சுதந்திர தேவி சிலை வடிவமைப்புக்கு முன்மாதிரியாக குறைந்தது 5 சிலைகள் இருந்திருக்கின்றன. தேவி சிரம் சூடிய கிரீடம் முதல், வலக்கையில் ஏந்திய ஒளிப்பந்தம் துவங்கி, இடக்கையின் சாசனம் தொட்டு, உடை, உடைந்த கால் விலங்கு வரை பல்வேறு அலகுகள் கூடி தேவி உருவான விதம் குறித்து பல்வேறு ஆவணங்கள் கிடைக்கின்றன.
இந்த ஆவணங்கள் அனைத்திலும் உள்ள ஒரு சுவாரஸ்யமான பொது அம்சம் இந்த அன்னயின் சிலைக்கு ஃபிரெட்ரிக் யாரை ‘மாடலாக’ பயன்படுத்தினார் என்பதில் உள்ள முரண். ஒரு கட்டுரை இந்த சிலைக்கு மாடல் செலினா எனும் பெயர் கொண்ட அன்றைய பிரான்சின் பிரபலமான விபச்சாரி என்கிறது. மற்றொரு கட்டுரை சிங்கர் மெரிட் எனும் தையல் இயந்திர தொழில் அதிபரின் மனைவி இசபெல் தான் மாடல் என்கிறது. அன்றைய பிரஞ்சின் கத்துக்குட்டி எழுத்தாளர் எவரோ ஃ பிரெட்ரிக் வசம் ஒருமுறை தனது மனைவியை ஓவியமாக வரைந்து தர சொல்லி கேட்டதாகவும், அப்போது ஃபிரெட்ரிக் வரைந்த தனது மனைவி ஓவியங்களில் ஒன்றே இந்த சிலையின் மாடல் என்று நூல் ஒன்றை எழுதி இருக்கிறார். ஃபிரெட்ரிக் இன் அம்மா மற்றும் சகோதரர் இருவர் முகத்தின் கலவையே சுதந்திர தேவியின் முகம் என்று வாதிடுகிறது ஒரு கட்டுரை. ஃபிரெட்ரிக் மட்டும் இறுதி வரை இது குறித்து எதையும் தெரிவிக்க வில்லை.
பிரஞ்சின் செப்பு வணிக முதலாளி ஒருவர் கிட்டத்தட்ட தனது சொத்து முழுமையும் இந்த சிலை செய்யும் பணிக்கு அர்ப்பணிக்கும் சூழலில் சிலை செய்யும் பணி வேகம் கொள்கிறது. 3000 செப்பு தகடுகள். ஒவ்வொன்றும் 20 பவுண்டுகள் எடை. 2 அரை மி மீ தடிமன். என பகுதி பகுதியாக ஒட்டுமொத்த சிலையும் தயாராகி, பிரெஞ்சு துறைமுகம் விட்டு நீங்குகிறது. என் மகள் போகிறாள். இனி அவள் என் மகள் அல்ல. இந்த மானுடத்துக்கு சொந்தம் அவள் என்று சொல்லி ஃ பிரெட்ரிக் விடை கொடுத்ததாக இணையம் சொல்கிறது.
இனி இந்த சிலையை நிறுத்தும் பீடத்தை அமெரிக்க மக்கள் நிதி திரட்டி உருவாக்க வேண்டும். பணியில் முதன்மை கொள்கிறார் ஜோசப் புலிட்ஷர் எனும் பத்திரிக்கை அதிபர். ஒரே ஒரு டாலர் எனினும் இயன்ற எல்லா தொகையையும் ஜோசப் திரட்டுகிறார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இச் சிலையின் கனவை சொல்லி நிதி திரட்டுகிறார். அதன் பொருட்டு எழுந்த விமர்சனங்களுக்கு ‘ இந்த அன்னையின் பீடத்துக்கு என் தாத்தா பள்ளி செல்லும் சிறுவனாக இருக்கும்போது ஒரு டாலர் அளித்திருக்கிறார் என்று பெருமிதம் பொங்க சொல்லப்போமும் வரும் தலைமுறைதான் என் இலக்கே அன்றி இந்த விமர்சனங்கள் எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்று சொல்லி கடந்து விடுகிறார். இவ்வாறான நெடிய ஓட்டத்தில் சுதந்திர தேவி சிலை நிற்பதற்கான தலைவாயில் தீவும், பீடத்துக்கான காசும் திரள 1886 இல் சுதந்திர தேவி எனும் கனவு, கன்னியா குமரி அன்னைக்கு இணையானதொரு நவீன கனவு மண்ணில் நிலை கொண்டது.
உலகமே அன்னையின் நிலையை அறிய ஆவலுடன் காத்திருந்த 9 நாட்கள் இந்த தேவியின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட தருணம். நியூயார்க் இதுவரை காணாத பெரும்புயல் ஒன்று தீவை தாக்கியது. 9 நாட்கள் அலைகள் பேருரு கொண்டு அறைந்து கொந்தளிக்த கடலில் அன்னை நிலை என்ன என்று எவருக்கும் தெரிய வில்லை. 9 ஆம் நாள் அமைதி திரும்ப, ஒரு குழு லிபர்டி தீவுக்குள் நுழைந்தது. மொத்த தீவும் சிதைந்து கிடந்தது. அன்னை மட்டும் துளி கீறல் இன்றி அவ்விதமே நின்றிருந்தாள். உலகே ஆர்ப்பரித்தது. அன்னையை உள்ளே சட்டகம் அமைத்து பீடத்தில் பதிட்டை செய்த ஜஃபில் அவர்களின் மேதமை, மீண்டும் உலகின் உரையாடலுக்குள் வந்தது.
ஐஃபில் அவர்கள் தனது வாழ்நாள் சாதனை அனைத்திலிருந்தும் தனது பெயரை விலக்கிக் கொள்வதாக அறிக்கை அளித்திருந்தார். ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கி அதன் தார்மீக பொறுப்பை தான் ஏற்று அவ்வாறு செய்திருந்தார். அதன் பின்னர் தனது பணிகள் அனைத்தையும் விட்டு விட்டு ஏரோடைனமிக்ஸ் இல் சில ஆய்வுகள் செய்ய திரும்பினார். காற்றின் ரகசியங்கள் குறித்த முக்கியமான பல கட்டுரைகளை எழுதினார். அதன் வழியேதான் ரைட் சகோதரர்கள் விமானம் கண்டடைந்தனர். தனது அத்தனை சாதனைகளில் இருந்தும் தனது பெயரை ஐஃபில் விலக்கிக் கொண்டிருந்தாலும், அவரது சாதனைச் செயல் அவரை விட்டுவிட வில்லை. இம்மூவரின் கரங்களை எடுத்துக்கொண்டு தன்னைத் திரட்டி உருக்கொண்ட மானுடக் கனவு என்றே சுதந்திர தேவி சிலையை சொல்லவேண்டும். ஆம் அவள் அமெரிக்காவில் இருக்கலாம். ஆனால் அமெரிக்கர்களுக்கு மட்டும் சொந்தமானவள் இல்லை. என்னால் மூச்சுவிட முடியவில்லை என்பதை இறுதி சொல்லாக விட்டுவிட்டு அதிகாரத்தின் காலடியில் கழுத்து முறிந்து இறந்து போனார் ஒரு ஒடுக்கப்பட்டவர். லிட்டில்பாய் முதல் வியட்நாம் அழிவுகள் முதல் என்னென்னவோ கீழ்மைகளை நிகழ்த்திய அமெரிக்க நிலம் தான் அவள் நிற்கவேண்டிய நிலம். அவள் பணி அங்குதான். ஆனால் அங்கு மட்டுமே அல்ல அவள் கொண்ட பணி. அவளது சேதி மானுடப் பொதுவானது.
மானுடத்தின் என்றும் அழியாத பெருங்கனவொன்றின் கலைச் சாட்சியம் நமது சுதந்திர தேவி சிலை. அவளை மீண்டும் ஒரு முறை பார்க்கப் போகிறீர்கள். Dear je அக்கணம் மானசீகமாக உங்கள் தோளருக்கே நானும் நின்றிருப்பேன் :).
கடலூர் சீனு
தமிழ்விக்கி- கடிதங்கள்
அன்புள்ள ஜெ.
வணக்கத்துடன் கௌதம்
விக்கிப்பீடியாவை (தமிழ் சார்ந்த) அணுகும் ஒவ்வொரு கணமும் எனக்குள் பெரும் கோபம் ஆவேசம் கொள்ளும். மிகப் பழமையான மொழிப் புலமை கொண்ட நபர்கள் ஆக்கிரமித்திருக்கும் அதன் செயல்பாடுகளின் மீதும், தன்னைச் சுற்றிலும் இரும்புத்திரை போட்டுக் கொண்டிருக்கும் அதன் இறுகிய வலைப்பின்னல்களின் மீதும். பிறகு கலைஞனுக்கே உரித்தான ஒரு கையறு நிலையில் விலகி வந்து விடுவேன்.
இப்பொழுது, நீங்கள் “தமிழ் விக்கி” ஆரம்பிக்கிறீர்கள் என்ற செய்தியைக் கேட்டவுடன், மனம் பெரும் கொண்டாட்டமாய் குதூகலிக்க ஆரம்பித்தது. வெறுமனே, தொழில்நுட்ப வாதிகளோ, ஸ்டார்ட் அப் நிறுவனங்களோ ஆரம்பிக்கும் தளம் போலில்லாமல், இந்த தமிழ் விக்கி கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்ற தமிழின் செழுமையான விஷயங்களை முன்னிறுத்தும் ஒரு வரலாற்றுக் காட்சியை, இந்த நூற்றாண்டின் மகத்தான தமிழ் கலைஞன் ஒருவன்தான் நிகழ்த்த முடியும்..
வெறுமனே, வெட்டி அரட்டைகளில் வீண் விவாதங்களில் காலத்தை தின்று கொண்டிருக்கும் பொழுதுகளிலிருந்து, உங்கள் பொழுது வேறுபட்டது. வரலாற்றுத்தன்மை மிக்கது.
2000 ஆண்டு தமிழ் மொழி மரபின் நீட்சியில் மாபெரும் மகத்தான பங்களிப்பை செய்திருக்கிறீர்கள். அரசு, பெரும் நிறுவனங்கள், தமிழைச் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கும் அமைப்புகள், என எவரொருவரும் செய்யாத பிரம்மாண்டமான செயல்பாட்டை நீங்கள் செய்திருக்கிறீர்கள். தமிழ் மொழியின் மகுடத்தில் ஒரு மாணிக்கக் கல்லை சூட்டியிருக்கிறீர்கள். நவீன டிஜிட்டல் உலகின் அடுத்த பரிமாணம் இணையம் சார்ந்த செயல்பாடுகள்தான் என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு, எல்லையற்ற கலை உணர்வுகள் கொண்ட நவீன கலைஞனாக உணர்த்தியிருக்கிறீர்கள். தமிழ் மொழி உள்ள வரைக்கும் இந்த “தமிழ் விக்கி” யும் உங்கள் பெயரும் அழியாது. அழிக்க முடியாது.
கொந்தளித்தெழும் என் தீவிர மனவெழுச்சி சார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்கும், உங்கள் எழுத்தியக்கம் சார்ந்த நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்!
அன்புடன்
கௌதம சித்தார்த்தன்
தமிழ்விக்கி அறிவிப்பைப் பார்த்தேன். மெய்யாகவே பிரமிப்பாக இருக்கிறது. செயற்கரிய செய்வர் பெரியர்! மனமார்ந்த வாழ்த்துக்கள்
பா.வெங்கடேசன்
போளச்சனும் ஔசேப்பச்சனும்-கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஜான்பால் பற்றிய கட்டுரையை வாசித்தேன். உணர்ச்சிகரமான கட்டுரை. ஆனால் கூடவே நகைச்சுவையும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த மத்தாயி குறிப்பைப் பார்த்ததும் போளச்சனுக்கும் ஔசேப்பச்சனுக்கும் என்ன சாம்யம் என்ற எண்ணம் ஓட ஆரம்பித்துவிட்டது.
ஔசேப்பச்சன் கதைகளிலுள்ள முக்கியமான அம்சமென்னவென்றால் அதிலுள்ள ஒரு யுனீக் ஆன பண்பாட்டு களம்தான். ஒரு சாதாரண துப்பறியும் கதையில் வருவது அல்ல. கொஞ்சம் இலக்கியப்பரிச்சயம் உள்ளவர்களுக்கு மட்டும் புரிவது அது. அந்தக் களம் கேரளக் கிறிஸ்தவர்களின் மனநிலையுடன் சம்பந்தப்பட்டது. அந்த மத்தாயி மனநிலை. அது ஒருவகையான திக்காரம். அதுதான் அவர்களின் பண்பாடு.
ஔசேப்பச்சனுக்காக மீண்டும் காத்திருக்கிறேன்.
ஆனந்த்ராஜ்
அன்புள்ள ஜெ
போளச்சனின் நினைவுக்குறிப்பு அருமை. அவருடைய காணொளிகளில் நீங்கள் சொல்வதுபோலவே ஒரு மென்மையான புன்னகையுடன் பேசுகிறார். தன்னம்பிக்கை கொண்ட உடல்மொழி. தெளிவான உச்சரிப்பு. அற்புதமான ஒரு மனிதர் என்னும் எண்ணம் ஏற்பட்டது. போளச்சனுக்கு அஞ்சலி
ராஜ்குமார்
வாடிவாசல் வாசிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்புக்கு அருகில் இருக்கும் சேதுநாராயணபுரம் அந்த நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு பிரபலம். ஊருக்கு அருகில் இருக்கும் சதுரகிரி மலையடிவாரத்திலும் அதன் அருகில் இருக்கும் “ஓனாக் குட்டம்’ “ஆனைக் குட்டம்” போன்ற சிறு குன்றுகளிலும் மேய்க்கப்படும் “பளிஞ்சி” (மலை மக்கள் பளியர்கள்) மாட்டுக் காளைகள் ஜல்லிக்கட்டுக்கு ஏற்றது.
மலையில் வளர்வதால் அதன் கால்கள் பலம் கொண்டு, பழகாத மனிதர்களை கிட்டத்தில் அண்டவிடாமல் (சிறிய கன்றிலிருந்து கையில் பிடித்து வளர்க்கப்படும் காளைகளும் இருந்தது) ஜல்லிக்கட்டுக்கு உரிய இலக்கணங்களை இயல்பாகக் கொண்டிருந்தது.
எங்களூரில் மேய்ச்சல் மற்றும் காவல் சாதிகள் நிலவுடமை கொண்டதாக மாறியபோது பளிஞ்சி மாடுகள் வளர்ப்பது அவர்களின் அந்தஸ்த்தின் அம்சமாக இருந்தது. ஜல்லிக்கட்டின்போது அவர்கள் அனைவருக்குள்ளும் வெளித்தெரியாத போட்டிகள் மாடுகளை வைத்து நடக்கும். மதுரை, திருச்சி போன்ற வெளியூர்களில் இருந்தும் ஏராளமான காளைகள் வரும்.
கல்லூரியில் படிக்கும் காலம்வரை வாடிவாசலுக்கு அருகில் இருக்கும் காரை வீட்டு மாடியில் நிரம்பி வழியும் கூட்டத்தில் ஒருவனாக கரும்பைக் கடித்துக் கொண்டே ரசிக்கும் வாய்ப்பைத் தவற விடுவதே இல்லை. உரசிக்கொண்டிருக்கும் சாதிகளுக்குள் “பற்றி” கொள்ளும் வாய்ப்பிருந்ததால் சில சமயம் கல்லுரி விடுதியிலிருந்து வர வேண்டாம் என்று கட்டுப்படுத்தப் பட்டதும் உண்டு.
அப்போதெல்லாம் தைமாதத்திற்கு முன்பாகவே அறுவடை ஆரம்பித்துவிடும், அறுவடை செய்த நிலத்தில் மலையிலிருந்து “பளிஞ்சி” மாடுகளை இறக்கி, நிலம் நிறைத்து “கிடை” அமர்த்துவார்கள். “இரண்டுநாள் கிடை” “மூன்று நாள் கிடை” என்று அடுத்த போகத்திற்கு முன்னேற்பாடுகள் நடக்கும்.
ஜல்லிக்கு நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே காளைகளை “சுருக்காங்’ கயிறுகளை வீசி அதன் தரத்தைப் பொறுத்து “மூன்று கட்டு” “நான்கு கட்டு” கட்டி பிரித்து வைப்பார்கள். சுட்டியான கன்றுகள் அடையாளம் காணப்பட்டு கைக்காளையாக வளர்க்க அழைத்துவரப்படுவதும் உண்டு.
ஜல்லிக்கட்டு ஆரம்பிப்பதற்கு முன்பு கிராம தெய்வத்தை வணங்கி அலங்கரிக்கப்பட்ட கோவில் காளை முன்னாள் வர மூங்கில்குச்சிகள் வைத்துப் பூசாரிகள் ஆடிவருவார்கள். அவர்கள் வந்தவுடன் கோவில் காளை முதலாவதாக விடப்பட்டு ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கும்.
சி. சு. செல்லப்பா அவர்களின் “வாடிவாசல்” அந்த நினைவுகளை எழுப்பி துல்லியமான காட்சிப்படுத்தல் மூலமாக மறுபடியும் அந்த வாழ்க்கையைக் கிளறியது. நாவலில் வரும் மொக்கையாத் தேவர், பிச்சி, அம்புலித்தேவர் எல்லாம் உயிரோடு எனக்குமுன் இருந்தவர்கள்.
மாடுகளை வாடிவாசல் வரை கொண்டுவந்துஅது செல்லவேண்டிய இடத்திற்கு வழிகாட்டும் நிகழ்வு, “பெயர்பெற்ற” காளைகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்துவரும் சிறப்பு, முதன் முதலாக விடப்படும் கோவில் காளையை யாரும் அணையாமல் தொட்டுக் கும்பிடுவது, தொழுவதத்துள் உள்ள காளைகளை வாடிவாசல் கட்டிய பலகைகள் நடுவில் உள்ள ஓட்டைகள் வழியாக மாடணைபவர்கள் கவனித்துக்கொண்டே இருப்பது, நின்று விளையாடும் “மதிப்பு மிகுந்த” காளைகள் என மிக நுணுக்கமான தகவல்களுடன் காரை வீட்டு மாடியில் இருந்தது போன்ற பரபரப்புடன் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.
பிச்சியைப் போல எங்களூரில் சில “தேர்ந்த” காளைகளை அணைய வருடக்கணக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்தார்கள். அதற்கு அவர்களும் ஒரு சில காரணங்கள் வைத்திருந்தனர். மாடணைபவருக்கு வெறும் துண்டு மட்டுமே அந்த நாட்களில் பரிசாகக் கொடுக்கப்பட்டது. பரிசாகக் கிடைக்கும் துண்டை எண்ணிக்கை சொல்லி பெருமைப்படுவார்கள்.
அணைகொடுத்த காளைகளுக்கு மதிப்பு குறையும். தொடர்ந்து அணைகொடுக்கும் காளைகளுக்கு இணை காளைகள் அடையாளம் காணப்பட்டு, காயடித்து (இப்போது காயடிப்பதில் வலிகுறைந்த எளிதான முறை வந்துவிட்டது. அன்றெல்லாம் காயடிப்பது கொட்டைகளை நசுக்குவதுதான்), வசக்கி உழவுக்கும் செக்குக்கும், கமலை ஏற்றத்திற்கும் கொண்டுசெல்வார்கள். வசக்குவதில் காயடிப்பு, தலைகீழ் V வடிவ கட்டைகளைக் கழுத்தில் தொங்கவிடுதல், குறைந்த உணவு கொடுப்பது என்று பல படிநிலைகள் இருந்தது.
ஒரு மலைமாடு ஜல்லிக்கட்டு காளையாகி வண்டி மாடாகி, கமலை இழுக்கும் மாடாக வருவது ஒரு பயணம். அந்த சங்கிலித் தொகுப்பில் ஜல்லிக்கட்டு ஒரு கண்ணி. அது காளைகளைத் தேர்ந்தெடுக்கும் இடமாகவும் இருந்தது. ஜல்லிக்குப் பிறகு அநேக காளைகள் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்குக் கைமாறும். சில பத்து வருடங்களுக்கு முன்பு மனிதக் காளைகளையும் அங்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
கால மாற்றத்தில் இந்த சங்கிலித் தொகுப்பில் பல கண்ணிகள் உடைந்து இப்போது ஒரு தொன்மம்போல ஏனோதானோ என்று எப்போதாவது நடக்கிறது.வாடிவாசல் நாவலில் ஜமீன் தனது “காரி” காளை அணைகொடுத்ததும் கொன்றுவிடுகிறார்.
எங்கள் பகுதியில் மாட்டைக் கொல்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது (எங்கள் ஊரில் ஜமீன்தார்கள் இல்லை, நிலச் சுவான்தார்கள் மட்டுமே). மாடுகளைக் கொல்வது எங்கள் ஊர் நம்பிக்கையின் படி பரம்பரை பரம்பரையாகத் தொடரும் “பாவம்”. அணைகொடுத்த காளைகள் வசக்கப்பட்டு ஏர் மாடாகவோ செக்கு மாடாகவோதான் மாற்றப்படும்.
“வாடிவாசல்” விறுவிறுப்பான ஜல்லிக்கட்டை கண்முன் கொண்டுவரும், எடுத்தால் வைக்கவிடாமல் வாசிக்க வைத்த நாவல்.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

