சர்மாவின் உயில்- கடிதம்

சர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம்

ஒரு எழுத்தாளன்  படைப்பில் தனது வாழ்க்கையின் தரிசனங்களையே முன் வைக்கிறான் . அந்த வகையில் க.நா .சு வின் “சர்மாவின் உயில்” மிக முக்கியமான படைப்பு .இதையே  நாவலின் முன்னுரையில் சொல்கிறார் .இரண்டு மாதங்களில் ஒரே மூச்சாக எழுதியது என்றும், தனக்கு மிக அணுக்கமான நாவல் என்றும் கூறுகிறார் .இந்த நாவலில் இரண்டு கதாபத்திரங்களாக க.நா .சு வே நமக்கு தெரிகிறார் .எழுத்தாளன் சிவராமன் மற்றும் சர்மா என இரண்டு பாத்திரங்களும் க.நா .சு என்பதை கொஞ்சம் கவனித்தாலே எளிதில் புரியும் .

சிவராமன் ஒரு எழுத்தாளன் தான் பார்த்த நல்ல வருமானம் வரும் அரசு வேலையை விட்டுவிட்டு, எழுத்தே வாழ்க்கை என தீர்மானித்து வாழ்கிறான் .ஆனால் வருமானம் இல்லாததால் அவன் மனைவி ராஜம் அவனை சமயம் வாய்க்கும் போதெல்லாம் குறை சொல்கிறாள் .தன் எழுத்தை தன் மனைவியே மதிக்காமல் இருப்பது சிவராமனுக்கு ஒரு பெரும் குறையாக இருக்கிறது .ரூ 200 செலவு செய்து புத்தகம் போட்டால் ,ராஜம் அந்த பணத்தில் எனக்கு ஒரு வைரத் தோடு வாங்கலாமே என அங்கலாய்க்கிறாள்

இதே சமயத்தில் சிவராமனின் எழுத்து மீது அவன் அத்தை மகள் பவானிக்கு பெரும் மரியாதை உண்டு. தன்  அத்தான் நல்ல கதை ஆசிரியர் என்று தன்னளவில் உணர்கிறாள் . .சிவராமன் சுவாமிமலையில் இருந்து தன மனைவியுடன் சென்னை சென்ற பின் அந்த வீட்டிற்கு பவானி அடிக்கடி வருகிறாள் .சென்னையில் விடுதியில் தங்கி படிக்கும் பவானிக்கு தன் அத்தான் வீடு தான் ,வார இறுதி நாட்களில் அவளுக்கு புகலிடம் . சிவராமனுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை என்பது பெரும் குறையாகவே இருந்தது. .பணம் பற்றாக்குறை, குழந்தை இல்லை என்ற கவலைகளால் இறுக்கமாகவே வாழும் ராஜத்திற்கு பவானி வருவது ரொம்பவே ஆறுதலாய் இருந்தது .அவ்வப்போது தானும் கதை எழுதி தன அத்தானிடம் காட்டுவாள் பவானி . பவானி இளம் வயதில் திருமணம் முடிந்து கணவனை இழந்தவள் . அதை மறக்கவே சென்னையில் கல்லூரியில்  விடுதியி ல் தங்கி படிக்கிறாள் .கவலைகளை மறக்கவே சிறுகதை எழுதுவாள் . சமயங்களில்  தன்னை விட தன்  கணவனுக்கு பவானி பொருத்தமோ என ராஜமே நினைப்பாள்.

சிவராமனின் சித்தப்பா சர்மா கல்கத்தாவில் சாகும் தருவாயில் இருக்கிறார் .சர்மா தன் கடைசி தம்பி வேங்கட்ராமன் வீட்டில் குடியிருக்கிறார் .பெரிய வணிகரான சர்மா கல்கத்தாவில் பெரும் செல்வந்தராக இருக்கிறார் தன் மனைவி திருமணமான சில ஆண்டுகளில் இறந்து போனதால், தன் கடைசி தம்பியை குடும்பத்துடன் கல்கத்தா வர வைத்து அவன் குடும்பத்துடன் வாழ்கிறார்.அன்று இரவு நடை போனவர் திரும்பி நெடு நேரம் கழித்து வந்து படுக்கிறார் .நெஞ்சு வலி வந்து இறக்கபோவதை உணர்கிறார் உடனே தன தம்பியிடம் உயில் என்று கூறிவிட்டு இறக்கிறார் .சர்மாவிற்கு தன அண்ணன் மகன் சிவராமனையும்,தங்கை மகள் பவானியையும் ரொம்ப பிடிக்கும் .ஆதலால் சிவராமனுக்கு தந்தி அனுப்பி சர்மாவுக்கு இறுதி காரியங்கள் செய்கின்றனர் .சில நாட்கள் கழித்து பவானிக்கு ஒரு கடிதம் வருகிறது . அது இறக்கும் முன் சர்மா அவளுக்கு எழுதியது .அதில் இந்த கடித உறைக்குள் ஒரு உயில் உள்ளது இதை இப்போது பிரிக்க வேண்டாம் .ஒரு வருடம் கழித்து குடும்பத்தினருக்கு சொல்லவும் என எழுதிவுள்ளது .பவானிக்கு ஒன்றும் புரியவில்லை .ஆயினும் அதை பிரிக்கவில்லை .

ஒரு வருடம் கழித்து  சிவராமனின் பாட்டி சுவாமிமலையில் இறக்கும் தருவாயில் உள்ளார் .சிவராமன் தன் மனைவி ராஜத்துடன் சுவாமி மலை வருகிறான்.பவானியும் சென்னையில் இருந்து வருகிறாள். சிவராமனின் மாமனார் ஒரு வக்கீல் ஆதலால் சர்மாவின் சொத்துக்களில் தன் மருமகன் சிவராமனுக்கும் பங்கு இருக்கும் என்று நினைத்து சுவாமிமலைக்கு தன மனைவியுடன் வருகிறார் .அனால் உயில் பற்றி யாருக்கும் தெரியவில்லை, எனவே சில நாள் தங்கி விட்டு போகிறார் . சில நாள் கழித்து  சர்மாவின் உயில் இறுதியில் பவானி மூலம் கிடைக்கிறது .இதனிடையே சிவராமனின் அப்பா ராஜத்தின் அப்பாவை உடனே சுவாமிமலைக்கு வர வேண்டும் என கடிதம் எழுதுகிறார் .கடிதத்தை கண்டவுடன் கண்டிப்பாக உயில் கிடைத்திருக்கும் அதன் பொருட்டே தன்னை சம்பந்தி அழைத்துள்ளார்  என ராஜத்தின் தந்தை உடனே தன மனைவியுடன் சுவாமிமலை வருகிறார் .

வீட்டுக்குள் வந்ததும் எல்லோரும் அமைதியாய் உள்ளனர் , ஒன்றும் புரியவில்லை ராஜத்தின் தந்தைக்கு . அப்போது ராஜம்  ஓடி வந்து அப்பாவை கட்டி பிடித்து அழுகிறாள் .ராஜத்தின் தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை . சிவராமனின் தந்தை சொல்கிறார் “.சர்மாவின் உயில் கிடைத்தது, அதில்  தனக்கு ஜோதிடம் தெரியும் என்றும் சிவராமனின் ஜாதகத்தை பார்த்ததில் அவனுக்கு இரண்டு மனைவி என்று இருந்தது மேலும் இரண்டாவது மனைவி வந்த பிறகே அவனது முதல் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என இருந்தது மேலும் பவானியின் ஜாதக பிரகாரம் அவளுக்கு மறு திருமணம் நடக்கும் என்று இருந்தது ஆகவே சிவராமனுக்கு பவானியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தால் பவானிக்கும் குழந்தை உண்டு, ராஜத்திருக்கும் குழந்தை உண்டு .எனவே சிவராமனுக்கும் பவானிக்கும் திருமணம் செய்து வைக்கவும் அவர்களுக்கு என் எல்லா சொத்துக்களும் சென்று சேர வேண்டும் ” என எழுதிஉள்ளார் .இதற்கு ராஜம் உடன்பட்டாள் என சிவராமனின் தந்தை கூற இறுதியில் சிவராமனுக்கும் பவானிக்கும் திருமணம் முடிகிறது

ஒரு குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட நாவல் “சர்மாவின் உயில் “. க.நா .சு எனும் பெரும் கலைஞனின் இயல்பான  நாவல் .”பொய்த்தேவு” போன்று தத்துவம் பேசாமல் யதார்த்தம் பேசும் நாவல் .

மாறா அன்புடன் ,

செல்வா ,

திசையெட்டும் தமிழ் ,

பட்டுக்கோட்டை

பித்தப்பூ- பிரவீன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.