Jeyamohan's Blog, page 783
May 6, 2022
ரப்பர் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சென்ற ஆண்டு குமரித்துறைவியை படித்து முடித்தகையோடு உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னதின் மகிழ்ச்சி இன்னும் இருக்கிறது. நீங்கள் இன்று இதை பார்க்கமாட்டீர்கள் என்றாலும் உங்களை வாழ்த்துவது அந்த மகிழ்ச்சியை நீடித்துக்கொள்ளத்தான்.
கொஞ்ச நாளாகவே உங்கள் ரப்பர் நாவலை நினைத்துக்கொண்டிருக்கிறேன். இன்றும் நம்பமுடியாததாக இருப்பது ஒரு தலைமுறை காலத்துக்கு முன் இருபது நான்கு வயதில் எப்படி அதை எழுதினீர்கள் என்பதுதான். சூழல் சீர்கேடு மனித ஆன்மாவின் வீழ்ச்சியின் வெளித்தோற்றம்தான் என்று என்னுடைய பேராசிரியர் சொல்வதுண்டு. திணையையும் ஒழுக்கத்தையும் இணைத்துப்பார்த்த நம் முன்னோருக்கு இது நன்றாகவே தெரிந்திருந்திருக்கிறது. ஆனால் நவீன இலக்கியத்தில் ரப்பர் நாவல்தான் அதனை முதலில் சொன்னது. அது ஒரு முக்கிய வரவு என்று அன்றே தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் சொன்னதில் வியப்பு ஏதுமில்லை.
நான் தேடிப்படித்த அளவில் ரப்பர் நாவல் இன்னும் உரிய அளவில் உணரப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை என்று எண்ணுகிறேன். தவறாகவும் இருக்கலாம். கடந்த முப்பது ஆண்டுகளில் சூழல் அழிவு இன்னும் அதிகமாகவும் சிக்கலாகவும் ஆகியிருக்கிறது. ஆனால் அதை நாம் எதிர்கொள்வது ‘மரம் வளர்ப்பீர், மழை பெறுவீர்’ என்ற எளிய அளவிலேயே உள்ளது. உள்ளே சரி செய்ய வேண்டியதிற்கு தீர்வை வெளியே தேடுகின்ற இன்றைய நிலையில் ரப்பர் சொல்லும் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையிலிருந்து கற்பதற்கு நிறைய இருக்கிறது. இன்று மட்டுமல்ல என்றுமிருக்கிற ஒன்றை எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
இன்னோரு முறையும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
நிக்கோடிமஸ்
***
அன்புள்ள நிகோடிமஸ்
நான் நீண்ட இடைவெளிக்குப் பின் ரப்பர் நாவலை வாசித்தேன். அன்று யோசிக்காத தளத்தில் பல இணைப்புகள் அதில் இருப்பதைக் கண்டேன். உதாரணமாக மிக ஆடம்பரமான தோட்டம் வீட்டில் மிக ஆடம்பரமான ரெம்ப்ராண்டின் மாபெரும் ஓவியம் உள்ளது. ஆனால் அது ஏசு மாட்டுக்கொட்டிலில் பிறந்தது பற்றியது. எளிமையும் ஆடம்பரமும் என்னும் அந்த முரண்பாடு ரப்பர் நாவல் முழுக்க ஓடுகிறது. கிறிஸ்துவின் எளிமையை பிரான்ஸிஸ் கண்டடைவதில் முடிகிறது. அன்று ஏதோ ஒரு பிரக்ஞை நிலையில் எழுதியது. ஆனால் அது ஆழ்ந்த ஒரு முழுமையை உருவாக்கியிருக்கிறது. உண்மைதான், அதை மறுவாசிப்பு அளித்தவர் சிலரே.
ஜெ.
இலக்கணவாதம்- கடிதம்
அன்புள்ள ஜெ..
இலக்கணவாதிகளும் இலக்கியமும் என்ற கட்டுரையில்
இலக்கணவாதி ஒரு மொழியில் செயல்பட்டாக வேண்டும். பொதுமொழி மேல் அவனுடைய ஆட்சி இருந்தாக வேண்டும் என குறிப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் இன்று வெகு ஜன இதழ்கள், தமிழுக்குப் போராடும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், அரசு அலுவலங்களின் அறிவிப்புகள் என எதிலும் இலக்கணவாதிகளின் பங்களிப்பு இல்லை. இதழ்களில் அரசு தொலைக்காட்சிகளில் ஒரு சின்ன எழுத்துப்பிழை என்றாலும் அதைக்கண்டிப்பதும் அவர்கள் வருத்தம் தெரிவிப்பதும் எல்லாம் பழங்கதை ஆகி விட்டது.
வெகு ஜன இதழ்களுக்கே அந்த தரம் குறித்து கவலை இருப்பதில்லை. அவற்றை வாசிப்பவர்களே குறைவு என்பதால் வாசிப்பவர்களும் பிழைகளை பெரிதாக நினைப்பதில்லை.
விளைவாக ஒருமை பன்மை குழப்பங்கள், ஒற்றுப் பிழைகள், எழுத்துப் பிழைகள் போன்றவை வெகுஜன இதழ்களில் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கட்சி போஸ்டர்கள், விளம்பரங்கள், டிவி அறிவிப்புகளை எல்லாம் சொல்லவே வேண்டாம். நீதிமன்ற மொழிகள் குழப்பமின்றி அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.
சமீபத்தில் நீதித்துறை சார்ந்த ஒரு நாளிதழ் அறிவிப்பு பார்த்தேன்.
எங்களது கட்சிக்காரரின் வழிகாட்டுதலின்படி XYZ நிறுவனம் கட்டிய கட்டடம் குறித்தான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தோம்
இப்படி ஆரம்பிக்கிறது அந்த அறிவிப்பு
அவர்கள் சொல்ல விரும்புவது,
XYZ நிறுவனம் கட்டிய கட்டடம் குறித்தான எச்சரிக்கை ஒன்றை, எங்களது கட்சிக்காரரின் வழிகாட்டுதலின்படி வெளியிட்டு இருந்தோம்
ஆனால் அவர்களது அறிவிப்பை படித்தால், அவர்கள் கட்சிக்காரர்கள் வழிகாட்டுதலின்படிதான் கட்டடம் கட்டப்பட்டது போல தொனிக்கிறது
பொதுவான புழக்கத்தில் தமிழ் எழுத்துத்தரம் வீழ்ச்சி அடைந்து அது வெறும் பேச்சு மொழியாக மாறிக் கொண்டிருப்பதைப்பற்றி இலக்கணவாதிகள் கவலைப்படுவதில்லை
இங்கே கூல் விற்க்கப்படும். குப்பையை கெட்ட வேண்டாம் என கேட்டு கொல்கிறோம். பூட்டை அட்ட வேண்டாம் என சில எழுதும் சாமான்யர்களை கேலி செய்வது (நேரில் அல்ல அவர்கள் பார்க்க வாய்ப்பற்ற முக நூலில்), இலக்கியவாதிகளுடன் மோதி லைக்ஸ் பெறுவது போன்றவற்றில்தான் பலரது கவனம் இருக்கிறது
சில ஆண்டுகளுக்கு முன் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்
உங்கள் நூலின் உள்ளடக்கம் சிறப்பு. ஆனால் படிமம், தொன்மம் அகதரிசனம், முரணியக்கம் போன்றவை போன்ற சொற்கள் எல்லாம் பொது வாசகனுக்கு அந்நியமாக இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தேன்.
எல்லாத்துறைகளிலும் அந்தந்த துறைசாரந்த கலைச்சொற்கள் தேவை என்பதை விளக்கி எழுதியிருந்தீர்கள். எனக்கு என்ன வியப்பு என்றால் அப்போது பொதுவாசகனுக்குப் புதிதாக இருந்த பல சொற்கள் தற்போது இலக்கியவாதிகள் புண்ணியத்தில் பொதுப்புழக்கத்துக்கு வந்து விட்டன. சொல்லாடல், கட்டுடைப்பு, படிமம் போன்ற பல சொற்களை தினத்தந்தி, தினமலரில்கூட பார்க்க முடிகிறது. வெண்முரசு நாவலில் வந்த பல புதிய சொற்களையும் ஆங்காங்கே காணமுடிகிறது.
எனவே இலக்கியவாதிகளை விட்டுவிட்டு பொதுச்சூழலின் மீது இலக்கணவாதிகள் கவனம் செலுத்த வேண்டும். கட்சியினர், அரசு இயந்திரம், நாளிதழ்கள், மாத வார இதழ்கள் என பல இடங்களில் இவர்களது வழிகாட்டுதலும் பங்களிப்பும் தேவைப்படுகிறது.
இணையம் அறிமுகமான வரலாற்றுத் தருணத்தில் அதை சரியாக பயன்படுத்தி, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி ஏற்படுத்திய பெருமை இலக்கியவாதிகளுக்கு உண்டு.
அதுபோன்ற வரலாற்றுத்தருணம்தான் இது. முகநூல் வம்புகளில் ஈடுபடாமல் கட்சிக்காரர்களை, பத்திரிக்கையாளர்களை, அரசு இயந்திரத்தை இலக்கணவாதிகள் வழிநடத்தினால், வழி நடத்த முடிந்தால் மிகவும் நல்லது.
அன்புடன்
பிச்சைக்காரன்
***
ஆழம் நிறைவது -கடிதம்
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
நன்றிகள் பலப்பல.
‘ஆழம் நிறைவது’ வெகு அழகு.
‘காண்டீபம்’ வாசிக்கும் போது, மாலினியின் கூற்று புரியாமல், மீண்டும் மீண்டும் வாசித்து, வெண்முரசு நிரையில் பின்னால் வரும் பிற நாவல்களில் தெளிவு கிடைக்கும் என்றெண்ணி குறித்தது வைத்த கேள்வி இது. ரம்யாவிற்கும் நன்றிகள்.
(2020 முதல் தளத்தில் வெண்முரசு வாசிக்கத் தொடங்கினேன். இப்போது பீஷ்மர், கர்ணன் என்று ஆரம்பித்து அர்ஜுனனை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.)
தங்களது பகிர்வை கீழ்காணும் வகையில் தொகுத்துக் கொள்கிறேன்:
ஒரு சொல் – பயன்பாட்டால் வேறு வேறு பொருள்களைச் சுட்டுவதால் – படிமம் என்றாகிறது. தத்துவ விவாதங்களில் சொல்லின் பொருள் வரையறுக்கப்பட்டு பொதுப்புரிதலுடனே பயன்படுத்தப்பட வேண்டும். (சொல்லின்/படிமத்தின் வரையறை)
மானுட சிந்தனை என்பது தொடர்ச்சியானது – இதுவரை இம்மண்ணில் எழுந்த சிந்தனைகளில் இருந்தே புதியது முளைத்து வர இயலும். (சிந்தனையின் தொடர் நிகழ்வு & அறுபடாமல் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம்)
அறியாத்தளமே ‘ஆழம்’ என்றாகிறது. (உரையாடலுக்காக, பல தளங்களாகப் பகுத்துணரலாம்)
முதல் தளம்
விழிப்பு நிலை – காமம், குரோதம் & மோகம் என்று அலை கொள்வது. (தன்னிலையின் இருப்பு)
அடுத்த தளம்
கனவு நிலை – தன்னிலை சற்றே மறைதல் – தான் என்பதன் மீச்சிறு அழிவில். (மயங்கிய தன்னிலை) தான் என வகுக்கப்பட்டதன் வரையறைகள் கரைந்தழிதல். (சற்றேனும் பெரிய/விரிந்த ‘நான்’)
அதற்கும் அடுத்த தளம்
துரியம் – நான் என்பதன் எல்லைகள் மீப்பெரு வரையறையில் ஒன்றாதல் (பார்வையாளனாக வெளியில் இருந்து துரியானுபவத்தை மீட்டிப் பார்க்கையில் காணுவது; ஒன்றான நிலை என்ன என்று பின்னே அவதானிக்கையில் அறிவது.)
துரியம் ஒவ்வொருவருக்குமே சற்றேனும் நிகழும் ஒன்று – தானழிந்து கரையும் தருணங்களைக் கூர்ந்து கவனித்தலே ‘தியானம்’.
(தன்னறம் எதுவென்று ஒருவர் எவ்வண்ணம் கண்டுகொள்வது என்ற கேள்வி இருந்தது – தானழியும்/தன்னிலை கரைந்து போகும் கணங்களைக் கவனித்தால் ‘தன்னறம்’ எதுவெனத் தேறலாம் – சரிதானே?)
“அந்த ஆழத்தை நாம் அடையும்தோறும் வெளியே நாமறியும் இயற்கையும் ஒத்திசைவும் அழகும் கொள்கிறது. அதன் ஆழம் வெளிப்பட ஆரம்பிக்கிறது. அது நிறைவும் முழுமையும் கொண்டதாக நம்மைச் சூழ்கிறது. அகமும் புறமும் ஒன்றையொன்று சரியாக நிரப்பிக்கொள்ளும்போது, ஒன்றில் இன்னொன்று வெளிப்படும்போது நிறைவு அமைகிறது.”
அப்படியென்றால் எனக்கு “நானே” தான் தடை அல்லவா? ஊசலாட்டமாய் முன்னும் பின்னும் மேலும் கீழும் என அலை கொள்வதை எங்ஙனம் கடப்பது?
அதற்கு எங்கும் செல்ல வேண்டியதில்லை. எதையும் செய்ய வேண்டும் என்பதுமில்லை. உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிப்பவை என்னென்ன என்று தேடித்தேடி கூடுமானவரை அவற்றைச் செய்துகொண்டே இருந்தால் மட்டுமே போதும்… இன்னொருவரை கருத்தில் கொள்ளாமல் முழுக்க முழுக்க நமக்கே என நாம் செய்துகொள்பவை மட்டுமே உண்மையான மகிழ்ச்சியை அளிப்பவை.
தனி மனிதன் என்றில்லாது குடும்பம்/சமூகம் என்றியைந்து செயல்பட்டாக வேண்டிய நிலையில் இது சாத்தியமா? எனில் எவ்வாறு செயல்பட வேண்டும்?
’சிறந்த வழி செயல். நம்மை நாமே குவித்துக்கொள்ளும் செயல்.’
“…. அகம் ஒருங்கிணைந்து அமைதியை அடையும். அப்படி உங்களுக்கு என்ன என்பதை நீங்கள் கண்டடைய வேண்டும். எதுவானாலும் சரி. கூடை முடைவதனாலும் கட்டுரை எழுதுவதனாலும்.”
“அடுத்த செயல் என்பது உங்கள் ஆழம்நோக்கிச் செல்லும் தீவிரச்செயல். அதை அந்தர்யோகம் எனலாம். அது எச்செயலாக இருப்பினும் ஊழ்கம் என அதைச் சொல்லலாம். ஆழம்நோக்கிச் செல்லும் எல்லாமே ஊழ்கம்தான். ஜாக்ரத்தை கடந்து, கனவுகளை அடைந்து, துரியநிலையை தீண்டுவதே இலக்கு. இசை ஊழ்கமாகலாம். கலை ஊழ்கமாகலாம். பயணத்தையும் சேவையையும் ஊழ்கமென கொண்டவர்கள் உண்டு. எனக்கு அது புனைவும் சிந்தனையும். மொழியே என் ஊழ்கத்தின் கருவி.”
(இதைவிடக் கூர்மையாக செறிவாக தெளிவாக சுருக்கமாக யாரே சொல்ல முடியும்! அனுபவம் சொல்லாகிறது!)
” …நாம் இங்கு வந்தோம், நமக்குரிய ஒன்றை செய்தோம், இப்பெரும்பெருக்கில் ஒரு துளியைச் சேர்த்தோம், நம் பணி முடித்து மீள்வோம், அவ்வளவுதான் என உணர்வோம். அதுவே நிறைவு, அதுவே முழுமை.”
(உண்மையில் உணர்ந்தவர் மட்டுமே சொல்லக்கூடிய அறுதிமொழி!)
நிறைவின்மை என்பது ஒரு தொடக்கமே அன்றி இறுதிப்புள்ளி அல்ல. நிறைவின்மையே அலை கொள்ளலைத் தாண்டும் தேடலைத் தரட்டும். களம் பல கடந்து துரியம் நோக்கி செலுத்தட்டும். அன்றாடச் செயல்பாட்டையும் தீவிரச் செயலையும் கையாள/கைக்கொள்ள ஊக்கமும் உறுதியும் கொடுக்கட்டும். செயல்படல் ஒன்றே செய்யத்தக்கது. செயலின் வழியே முழுமையும் நிறைவும் வந்தமையும். ஆகவே செயல் புரிக! இப்படித்தான் உங்களது சொற்களை நான் பொருள் கொள்கிறேன்/உணர்கிறேன்.
தங்களது அனுபவங்களையே சொல்லென்றாக்கித் தருவதனால், மானிடர்க்கு சாத்தியம் என்றுள்ள ஒன்றையும், அதனை அடையும் வழியையும் ஒருசேர உணர்த்துவதனால் – இச்சொற்கள் தரும் உறுதியும் உற்சாகமும் அளப்பரியன.
நன்றி எனும் சொல்லன்றி வேறில்லை எம்மிடத்தில்.
அன்புடன்
அமுதா
***
அன்புள்ள அமுதா,
ஒரு தத்துவக் கட்டுரை மேலும் மேலும் விளக்கங்களை கோருவது இயல்பு, ஆனால் அந்த வினாக்களுக்கு வாசகர் விடையை தானே தேடத் தொடங்கும்போதே அக்கட்டுரை உயிர்கொள்ளத் தொடங்குகிறது.
பிறர் பற்றிய கவலை இல்லாமல் ‘வாழ’ வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது இயல்வதல்ல, நல்லதும் அல்ல. பிறர் நாம் அடையும் தனிப்பட்ட உவகையை, நிறைவை தீர்மானிக்கக் கூடாது என்று மட்டுமே சொல்கிறேன். நாம் செய்யும் அந்த செயல் பிறருக்கு காட்டுவதற்காக, பிறர்முன் நிரூபிப்பதற்காக நிகழக்கூடாது. அது முழுக்கமுழுக்க நாமே அறிந்து, நாமே மகிழ்ந்து, நாமே நிறைவடைவதாக இருக்கவேண்டும்.
ஒரு தத்துவக் கட்டுரையை வாசிக்கையில் வரும் இடர்களில் முக்கியமானது இது. மொழி அளிக்கும் ஏமாற்று. நாம் ஒரு கருத்தை எண்ணிக்கொண்டு வாசித்தால் அந்த வரியும் அக்கருத்தை நமக்கு அளித்துவிடும். அதற்கு நேர் மாறாகவே அங்கே எழுதப்பட்டிருக்கும்போதுகூட
ஆகவே எப்போதும் நம் அக ஓட்டத்தை முடிந்தவரை ரத்து செய்துவிட்டு தத்துவக் கட்டுரைகளை வாசிக்கவேண்டும். ஐயம் ஏற்படும் வரிகளை நிறுத்தி சொல் சொல்லாக மறுமுறையும் வாசிக்கவேண்டும்.
ஜெ
இன்று தமிழ் விக்கி தொடக்கவிழா
நண்பர்களே
இன்று (7-5-2022) காலையில் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக்களஞ்சியத்தின் தொடக்கவிழா அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்பிள்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெறுகிறது.
நண்பர்கள் அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு அழைப்பிதழ் பெற்று விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கிறேன்.
சௌந்தரராஜன்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்கா
தொடர்புக்கு : vishnupuramusa@gmail.com
வரவிருக்கும் நண்பர்கள் முன்பதிவு செய்துகொள்ளவும் – https://www.signupgenius.com/go/10C0E4EAAAA29A7FBC70-tamil
***
தேவிபாரதியின் நீர்வழிப்படூஉம்…
அன்புள்ள ஆசிரியருக்கு,
இருபது வருடங்களுக்கு முன் வார இதழ்களில் வெளிவந்து கொண்டிருந்த ம.செ. மற்றும் ஷ்யாமின் ஓவியங்கள் எனக்கு அந்த வயதில் வெவ்வேறு விதமான சிலிர்ப்பை தந்து கொண்டிருந்தது. இருவரும் அவரவர் பெண் பாத்திரங்களுக்கான முகத்தை ஒரே சாயலுடன் வரைவார்கள். அந்த நேரத்தில் பழைய விகடனில் சில்பி வரைந்த ஒரு ஓவியத்தை எதிர்பாராமல் பார்க்க நேர்ந்தது. அந்தக் கோட்டோவியம் பெரும் திகைப்பை உண்டாக்கியது. எத்தனையோ வண்ணங்களுடன் வரையப்படும் ம.செ மற்றும் ஷ்யாமின் ஓவியங்கள் தராத வேறுவிதமான பரவசத்தை இந்த ஓவியம் தந்தது. பென்சிலால் எளிதாக வரையப்பட்டது போன்று தோற்றமளித்த அவ்ஓவியம் ஒரு கலைப் பொருள்போல தனித்து ஒளிர்ந்தது . ஒசிந்தபடி சிலையாகி நின்ற பெண்ணை உயிருள்ள பெண்னெணவே உணரவைத்தது.
பெருங் கற்பனைகளுடன் பெருநாவல்கள் வந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் எளிமையாக எழுதப்பட்டதென்று தோற்றமளிக்கக் கூடிய தேவிபாரதி எழுதிய “நீர்வழிப்படூஉம்” என்ற சிறிய நாவல் கண்ணில்பட்டது. ஆனால் சிறிய நாவலல்ல இது. கட்டடங்கள் கட்டுவதற்கான ப்ளூ ப்ரிண்ட் போன்றது. வாசிப்பவர்கள் மனதின் விரிவிற்கேற்ப கட்டடம் வளர்ந்துகொண்டே செல்வது என்பதை வாசித்தபின் உணர்த்தேன்.
தேவிபாரதி இந்நாவலில் எந்த நகரத்தையும் காட்டவில்லை. சிதைந்துபோன உடையாம்பாளையம் என்ற சிறிய கிராமத்தை காட்டுகிறார். மெல்லிய கோட்டுச் சித்திரம்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கோடுகளை இடுகிறார். சில மனிதர்களின் வாழ்க்கை தீற்றல்களை சுட்டுகிறார் அவ்வளவுதான். அது வாசிப்பவரின் மனதில் பெரும் சித்திரமாக உருவாகியபடியே வளர்கிறது.
காருமாமா எனும் நாவிதர் இறந்துவிட்ட நிகழ்வோடு தொடங்கும் நாவல் காருமாமாவை மட்டுமில்லாமல் ஒரு சமூகத்தின் வாழ்வை எந்தப் புகார்களோ பழியோயில்லாமல் அடங்கிய குரலில் பதிவு செய்கிறது. நாவிதன் என்பவன் ஒவ்வொரு கிராமத்திற்கும் மனித உடலில் இருக்கும் நரம்புகளைப் போல. பிறப்புக்கும் வேலைகளுக்கும் வைத்தியத்திற்கும் இறப்புக்கும் அவர்களின்றி எதுவும் நிகழமுடியாது. ஊரின் பண்ணயக்காரர்கள் அத்தனை பேருக்கும் அவன் பணி மிகத் தேவையானதாக இருக்கிறது. அவர்கள் செய்யும் பணிகளை சில வாக்கியங்களில் சொல்லிச் செல்கிறார் தேவிபாரதி. சற்று யோசித்தால் திகைப்பு ஏற்படுகிறது. மொத்த கிராமத்தின் இயக்கத்திற்குமே நாவிதன் முக்கியமானவனாக இருக்கிறான். ஊருக்கு நாவிதனின் இருப்பு எத்தனை தேவையோ அதே அளவு தேவை அவன் மனைவிக்கும் உள்ளது.
உடையாம்பாளையம் கிராமத்தில் காருமாமா செய்த வேலைகளைக் கூறுவதோடு பண்ணயக்காரர்களுடனான அவரின் உறவையும் குறைவான சொற்களில் கச்சிதமான சித்திரமாகக் காட்டுகிறார் தேவிபாரதி.
நாவலில் பெரியம்மாவின் பாத்திரப்படைப்பு துல்லியமாக உள்ளது. அவரின் பணிகள் விவரிக்கப்படும்போது வாசிப்பவர்களின் மனதில் ஏற்கனவே தங்கள் ஊரில் பார்த்த பெரியம்மாவின் தோற்றத்தில் இவரை பொருத்திக் கொள்வார்கள். சிறு கத்தியை இடுப்பில் சொருகிக் கொண்டு திரியும் பெரியம்மா தான் பிரசவம் பார்த்த பிள்ளைகளிடம் எப்போதும் பிரியமாய் இருப்பதோடு அவர்களின் வாழ்வை தூரநின்று கவனித்துக் கொண்டேயிருக்கிறார். இது, இப்போது மகப்பேறு பார்க்கும் மருத்துவர்களால் இயலாது. ஊர்களில் மருத்துவச்சிகளாக இயங்கிய ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மட்டுமேயான இயல்பு அது.
ஒரே ஊருக்குள் புதிதாக வரும் நாவிதனுக்கும் ஏற்கனவே இருப்பவருக்குமான பிணக்கையும், ஒரு காலத்திற்கு பின் அந்தப் பிணக்கின் அர்த்தமில்லா தன்மையையும் நாவல் காட்டுகிறது. அறிவுறுத்தல் போலவோ தத்துவம் போலவோ கூறாமல் நிகழ்வுகளை மட்டுமே ஆசிரியர் கூறிச் செல்கிறார். உணர்ந்துகொள்வது வாசிப்பவர் திறன்.
பெரியம்மாவும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரிக்குமான இணக்கமும் நெருக்கமும் யாருக்குமே ஒருவித பொறாமையை தோற்றுவிக்கக் கூடியது. அத்தனை சிரிப்பும் களிப்புமாய் இருந்தவரின் இறப்புக்குக் கூட பெரியம்மாவை செல்லவிடாதவாறு ஏதோவொன்று நிகழ்ந்துவிட்டது. அது என்னவென்று ஆசிரியர் கூறவில்லை. ஆனாலும், அது மிகச்சிறிய விசயமாகவே இருந்திருக்கும். ஆனால் மனதில் மயிரிழை அளவு விரிசல் ஏற்பட்டாலும் அது எப்போதுமே சீர் செய்ய இயலாமல் போய்விடுவதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
சிறு சிறு நிகழ்வுகளாய் தேவிபாரதி காட்டிச் செல்கிறார். குறைவான சொற்களில் கூறிய போதும் சித்தரிப்பின் துல்லியத்தால் காட்சி மனதில் பெரிதாக விரிகிறது. சின்னப் பிள்ளைகளின் விளையாட்டு, ரேடியோவில் பாட்டு கேட்பது, தாயம் விளையாடுவது போன்றவை வாசகன் மனதில் எப்போதும் நீடிக்க கூடியவை.
கதை சொல்லியின் பெயர் ராசன் என்று ஒரே முறைதான் சொல்லப்படுகிறது. அதுவும் பெயர்தானா அல்லது செல்லமாக அழைக்கப்படுவதா என்பதும் கேள்விக்குரியதே. தந்தையின் மரணத்திற்கு பிறகு இளம் பிள்ளைகள் வேலைக்கு செல்வதும் சாயப்பட்டறையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளால் அரிக்கப்படும் கைகளின் வலி பல ஆண்டுகளுக்குப் பிறகும் மறக்காமல் நினைவில் இருப்பதும் பெரிய துயரச் சித்திரம். ஆனால் எவ்வித உணர்வுமின்றி கூறிச் செல்கிறார் ஆசிரியர்.
பாசமலர் திரைப்படம் இந்நாவலில் பெரும் பங்கு வகிக்கிறது. காருமாமாவிற்கும் அம்மாவிற்குமான உறவை விளக்குவதாக உள்ளதுடன் அம்மாவிற்கும் ராசம்மாள் அத்தைக்கும் மனதளவில் விலக்கத்தை உண்டாக்குவதும் அதே படம்தான். அந்த திரைப்படம் பார்க்கும் காட்சி எல்லோருடைய உணர்வுகளையும் விவரித்துவிடுகிறது. கடைசியில் ராசனையும் சாவித்திரியையும் ஜெமினி கணேசன் சாவித்திரி என அழைக்கும்போது முந்தைய காட்சி முழுவதுமாக மீண்டும் நினைவிலெழுகிறது.
கி. ராஜநாராயணன் தன் கோபல்ல கிராமம் நாவலில் மொத்த கிராமத்தின் கதையை நாவலாக்கி இருப்பார். ஆனால் நீர்வழிப்படூஉம் நாவலில் ஒரு எளிய மனிதரின் வாழ்வை கூறியதின் வழி மொத்த கிராமத்தின் வாழ்முறையையும் மக்களின் மனநிலைகளையும் காட்டிவிடுகிறார் தேவிபாரதி.
துக்கம் நிகழ்ந்த களமாகக் கொண்ட நாவலில் சாவித்திரிக்கும் கதை சொல்லிக்குமான பார்வையாடல்கள் மற்றும் உரையாடல்கள் மொட்டைப் பாறையில் ஏறும்போது எதிர்ப்படும் தண்சுனைபோல வாசகனுக்கு பெரும் ஆசுவாசம் அளிக்கிறது. இயல்பான அந்தச் சித்தரிப்பு, வாசித்து முடித்த பின்னும் மென்மலர் தொடுகையென மனதை வருடுகிறது.
மிக நிதானமாக நகரும் நாவலின் கடைசி அத்தியாயம் இத்தனை விறுவிறுப்பானதாக இருக்கக்கூடும் என யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள். முதல் அத்தியாயத்தில் இருந்து நாவல் முழுக்க அத்தையை வசைபாடிக் கொண்டிருக்கும் அம்மா இறுதி அத்தியாயத்தில் அவருடன் இணக்கமாவதும் மகனின் வாழ்வையே நிர்ணயிக்கக்கூடிய அப்படியொரு வாக்குக் கொடுப்பதும் மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. முடிவு என்னவென்பதை வாசகரின் யூகிப்பிற்கு விட்டதுதான் ஆசிரியரின் உச்சகட்டத் திறன் எனத் தோன்றுகிறது.
கோட்டோவியக் கோடுகளென துண்டு துண்டு சம்பவங்களாக ஆசிரியர் கூறிச் செல்வதாலேயே ஒவ்வொரு வாசகனும் தானறிந்த தனக்குந்த வண்ணங்களைத் தீட்டிக் கொண்டு அக்கிராமத்து வாழ்வை தன் கிராமத்து வாழ்வாக்கிக் கொள்வதற்கு வாயுப்பாக அமைகிறது.
எளிய பென்சிலால் வரையப்பட்ட கோட்டுச் சித்திரம் என்ற பாவனையுடன் இந்நாவல் தோற்றமளிக்கிறது. இதனை எளிமையான நாவலென்று வாசிக்கத் தொடங்கும் வாசகனை ஏமாற்றி பிரமாண்ட வண்ண வண்ணச் சித்திரங்களை மனதில் உருவாக்கி வாழ்வில் மறக்கவே முடியாத சில மனிதர்களுடன் தொடர்ந்து வாழ வைப்பது இந்நாவலின் ஆகப்பெரிய பணியாகும்.
ஆசிரியர் தேவிபாரதிக்கு என் வாழ்த்துகள்.
கா. சிவா
May 5, 2022
க.நா.சு- வாசகன், விமர்சகன்,எழுத்தாளன்
நவீன இலக்கியம் தொடர்பான தமிழ்ச்சிந்தனைகளில் க.நா.சு ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி. ஏற்கனவே வ.வே.சு அய்யர், ரா.ஸ்ரீ .தேசிகன், ஆ.முத்துசிவன், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் ஆகியோர் உருவாக்கிய இலக்கிய அழகியல் ஆய்வுமுறையையே க.நா.சு.முன்னெடுத்தார். ஆனால் அவர் அதை தொடர்ச்சியாகப் பேசி விவாதித்து படிப்படியாக வளர்த்து ஒரு கருத்துப்பள்ளியாக ஆக்கினார்.
அதன்பின்னர் வந்த அழகியல் விமர்சகர்கள் பெரும்பாலும் அனைவருமே அப்பள்ளியைச் சேர்ந்தவர்கள்தான். வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி, வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன், க.மோகனரங்கன் என மூன்று தலைமுறைக்காலமாக அந்தப்பள்ளி மையப்போக்காகவே இன்றும் தமிழிலக்கியச் சூழலில் நீடிக்கிறது.
இப்பள்ளியைச்சேர்ந்த இலக்கியவிமர்சகர்களுக்கு அவர்களுக்கே உரிய சொந்தக்கருத்துக்கள் உண்டு, தங்களுக்கே உரிய இலக்கிய ஆய்வுமுறைகள் உண்டு. இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான விவாதங்களில் அவர்கள் முரண்படுவதும் சாதாரணம். ஆனால் அவர்கள் பொதுவாக ஒன்றுபடும் சில அடிப்படைக்கருத்துக்கள் உள்ளன. அவற்றை க.நா.சுவே தமிழில் நிலைநாட்டினார். ஆகவேதான் ஒட்டுமொத்தமாக இவர்களை க.நா.சு.பள்ளி என்கிறோம். பிற்பாடு க.நா.சுவின் எதிரிபோல செயல்பட்டாரென்றாலும் சி.சு.செல்லப்பாவும் க.நா.சுவின் பள்ளியைச் சேர்ந்தவரே.
இலக்கியத்தின் அடிப்படைகள் இன்று பரவலாக அறியப்பட்டுவிட்டன. தரமான எழுத்துக்களுக்கான வாசகர்கள் இன்று பலமடங்குபெருகிவிட்டனர். கேளிக்கைக் கலைகள் பூதாகரமாக வளர்ந்தமையால் வணிக எழுத்து மிகமிகப் பலவீனப்பட்டு ஒரு சிறிய ஓட்டம் மட்டுமே என்ற நிலையை அடைந்திருக்கிறது தமிழில். இருந்தாலும்கூட பிரபலமான ஓர் எழுத்தாளர் மேல் எளிமையான விமர்சனத்தை முன்வைக்கையில்கூட எதிர்கொள்ள நேரும் மனக்கசப்புகளைப் பார்க்கையில் க.நா.சு நடத்திய கருத்துப்போரின் உக்கிரம் பிரமிப்பூட்டுகிறது
க.நா.சு விமர்சகராக மலர்ந்த காலகட்டம் ’கல்கியுகம்’ எனலாம். கல்கியின் மேலோட்டமான நகைச்சுவையும், மேலைநாட்டு கற்பனாவாத நாவல்களையும் தேசிய பெருமிதங்களையும் கலந்து உருவாக்க்கப்பட்ட அவரது நாவல்களும் தமிழில் காவியச்சுவையாகவும் காவியங்களாகவும் புகழப்பட்ட காலம். அவரை முன்னுதாரணங்களாக கொண்டு வந்த நா.பார்த்தசாரதி, அகிலன், ஜெகசிற்பியன் போன்றவர்கள் மக்களிடையே உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்துடன் திகழ்ந்தார்கள். அவர்களின் எழுத்தை ஒருபக்கம் மரபுவாதிகள் கொண்டாடினார்கள். மறுபக்கம் பல்கலைகள் ஆய்வுசெய்தன. விருதுகளும் அங்கீகாரங்களும் முழுக்க அவர்களுக்கே அளிக்கப்பட்டன. அவர்களின் எழுத்தை ஒட்டியே இலக்கிய அளவுகோல்கள் உருவாக்கப்பட்டன.
மறுபக்கம் நவீனத்தமிழிலக்கியத்தின் சிகரங்களான புதுமைப்பித்தன் போன்றவர்கள் முற்றாகவே மறக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை வாசிக்க சிலநூறுபேர் கூட இருக்கவில்லை என்ற நிலை. அவர்களின் மரபுவழி வந்தவர்கள் எழுதுவதற்கு ஊடகங்கள் இல்லை. அவர்களின் நூல்கள் அச்சேறுவதில்லை. அவர்களின் எழுத்துமுறையை முழுமையாக நிராகரிக்கும் அழகியல்நோக்கே அன்று நிலவியது. உலக இலக்கியங்களைப்பற்றிய அறிமுகமே தமிழின் பொதுச்சூழலில் இல்லை. முந்தைய காலங்களில் டி.எஸ்.சொக்கலிங்கம்,க.சந்தானம் போன்றவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட உலகப்பேரிலக்கியங்களும் த.நா.குமாரசாமி , த.நா,சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர்.ஷண்முகசுந்தரம் போன்றவர்களால் செய்யப்பட்ட இந்தியப்பேரிலக்கியங்கலும் கவனிப்பாரற்று மறைந்தன. மொத்த தமிழிலக்கியச் சூழலும் மேலோட்டமான கேளிக்கை வாசகர்கள் மற்றும் அவர்களால் போற்றப்பட்ட கேளிக்கை எழுத்தாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்த இருண்ட காலகட்டம் என்று அதைச் சொல்லலாம்.
க.நா.சு தன்னை இலக்கிய விமர்சகர் என்று சொல்லிக்கொண்டவரல்ல. அவர் நாவலாசிரியர். ’ஒருநாள்’, ’பொய்த்தேவு’ ஆகிய இருநாவல்களும் தமிழிலக்கியத்தின் சாதனைகளே. இலக்கிய விமர்சனத்தின் முறைமைகளில் அவருக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால் அன்று ஏறி ஏறி வந்த மேலோட்டமான கூச்சல்களை தாங்க முடியாமல் அவர் இலக்கிய விமர்சனக்குறிப்புகளை எழுத முன்வந்தார். கல்கி குறித்தும் பின்னர் அகிலன் குறித்தும் அவர் எழுதிய விமர்சனங்கள் அவருக்கு கடுமையான வசைகளையும் ஏளனங்களையும் பெற்றுத்தந்தன. அவற்றுக்கெல்லாம் அவர் பொறுமையாக நீண்ட விளக்கங்களை அளித்தார். மீண்டும் மீண்டும் ஒரே கேள்விகளே அவரிடம் கேட்கப்பட்டன. அவற்றுக்கு அவர் மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்தார். இரண்டுதலைமுறைக்காலம் அவர் தன் தரப்பை சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார்.
க.நா.சு சொன்னவற்றை அவரால் எளிதில் நிறுவ முடியவில்லை என்பதே உண்மை. கல்கி ஒரு கேளிக்கை எழுத்தாளர்தான் என்பதையும் நா.பார்த்தசாரதியின் இலட்சியவாதம் என்பது கேளிக்கை எழுத்தின் ஒரு பாவனை மட்டுமே என்பதையும் அறுபதுகளில் ஒருவர் சொல்லி நிறுவுவது சாதாரணமா என்ன? ஆனால் அவர் சலிக்கவில்லை. இருதளங்களில் சோர்வேயில்லாமல் போரிட்டார். தன் வாழ்க்கையையே அதற்காக அவர் அர்ப்பணித்தார்
முதலாவதாக , கநாசு சிற்றிதழ் என்ற கருதுகோளை அவர் உருவாக்கினார். அவருக்கு முன்னால் இருந்த இலக்கிய இதழ்களான மணிக்கொடி போன்றவை உண்மையில் சிற்றிதழ்கள் அல்ல. மணிக்கொடி இன்றைய உயிர்மை, காலச்சுவடு இதழ்களை விட அதிகமாக விற்றது. ஐம்பதுகளுக்குப் பின்பு அத்தகைய தரமான இதழ்கள் சாத்தியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டிருந்தது. க.நா.சு தரமான வாசகர்கள் மட்டுமே வாசிக்கக்கூடிய தனிச்சுற்று இதழ்களே இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல போதுமானவை என்ற கருத்தை முன்வைத்தார். அவரே சூறாவளி போன்ற பிரபல இதழை நடத்தி கைப்பணத்தை இழந்தவர்தான். இலக்கியவட்டம் தமிழில் சிற்றிதழ் பற்றிய பிரக்ஞையுடன் தொடங்கப்பட்ட முதல் இதழ். வெற்றிகரமான முதல் சிற்றிதழ் எழுத்து.
சிற்றிதழ்கள் சம்பந்தமாக க.நா.சுவின் இரு கோட்பாடுகள் முக்கியமானவை. ஒன்று, அது ஆயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படக்கூடாது. அப்படி அச்சிடப்பட்டால் அதற்கு அமைப்பு தேவையாக ஆகும். பணம் தேவைப்படும். அப்போது சமரசமும் தேவைப்படும். விளைவாக நோக்கம் தோற்கடிக்கப்படும். இரண்டாவதாக சிற்றிதழ்கள் அதிகபட்சம் ஐந்து வருடங்களுக்கு மேல் நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் அது ஒரு சம்பிரதாயமாக மாறிவிடும். அதில் படைப்பூக்கம் இருக்காது.
க.நா.சு சந்திரோதயம், சூறாவளி போன்று பல பேரிதழ்களையும் இடைநிலை இதழ்களையும் பின்னர் இலக்கியவட்டம் என்னும் சிற்றிதழையும் நடத்தினார். அவற்றில் தொடர்ச்சியாக இலக்கிய விமர்சனங்களையும் இலக்கிய ஆக்கங்களையும் வெளியிட்டு ஒரு மாற்று இயக்கத்தை அறுபடாமல் முன்னெடுத்தார். அச்சிற்றிதழ்கள் பலசமயம் 300 பிரதிகளே அச்சிடப்பட்டன. ஆனால் நாம் இன்று காணும் நவீன இலக்கியம் என்ற அமைப்பே அந்த முந்நூறு பிரதிகள் வழியாக உருவாகி வந்த ஒன்றுதான்.
இரண்டாவதாக, தான் சொல்லிவந்த கருத்துக்களை நிறுவும்பொருட்டு க.நா.சு மொழியாக்கங்களைச் செய்தார். அவரது காலகட்டத்தில் ருஷ்ய இலக்கியங்கள் இடதுசாரிகளால் மொழியாக்கம் செய்யப்பட்டன. அமெரிக்க இலக்கியங்கள் ராக்பெல்லர் அறக்கொடை சார்பில் பெர்ல் பதிப்பகத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டன. க.நா.சு அவற்றை கவனப்படுத்தியதோடு கவனிக்கப்படாமலிருந்த ஐரோப்பிய இலக்கியங்களை மொழியாக்கம் செய்தார்.
க.நா.சு ஐரோப்பிய இலக்கியங்களை மொழியாக்கம் செய்ய ஒரு காரணம் உண்டு. அவர் இங்கே உருவாகவேண்டுமென எண்ணிய இலக்கியம் ‘மண்ணின்’ இலக்கியம். அதாவது ஒரு வட்டாரத்தின் அல்லது ஒரு சிறுமக்கள்க்குழுவின் மொழியையும் பண்பாட்டையும் மனநிலைகளையும் நுட்பமாகவும் நேர்மையாகவும் முன்வைக்கும் இலக்கியம். அவ்வகை இலக்கியங்கள் ஐரோப்பிய மொழிகளிலேயே அதிகம் என அவர் நினைத்தார். க.நா.சுவின் மொழிபெயர்ப்புகளே தங்களுக்கு தூண்டுதலாக இருந்தன என பின்னர் வந்த பல எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
வட்டாரம் சார்ந்த , அடிமட்ட மக்கள் சார்ந்த எழுத்துக்களை க.நா.சு முழுமூச்சாக ஆதரித்தார். அன்று வணிகரீதியாக எழுதப்பட்ட எழுத்தில் எந்தவகையான தனிப்பண்பாட்டு அம்சமும் இருக்காது – இருந்தால் அது நகர்ப்புற பிராமணப் பண்பாட்டு அம்சமாக மட்டுமே இருக்கும். அந்த எழுத்துக்களை நிராகரித்து க.நா.சு கவனப்படுத்திய எழுத்துக்களே இன்று தமிழின் சாதனைகளாக கருதப்படுகின்றன. அவற்றின் வழிவந்த யதார்த்தவாத எழுத்திலேயே இன்றும் தமிழில் சாதனைகள் நிகழ்கின்றன. ஆர்.ஷண்முகசுந்தரம், நீல.பத்மநாபன் முதல் பூமணி வரை க.நா.சு கவனப்படுத்திய எழுத்தாளர்களின் வரிசை பெரிது. இன்று சு.வேணுகோபால், கண்மணிகுணசேகரன், சோ.தருமன், இமையம், ஜோ.டி.குரூஸ் என அவ்வரிசையிலேயே புதிய கலைஞர்கள் உருவாகி வருகிறார்கள்.
க.நா.சு அவரது காலகட்டத்தில் வணிக எழுத்தாளர்களாலும் அவர்களின் வாசகர்களாலும் மிக மோசமாக வசைபாடப்பட்டார். அவர் சிபாரிசு செய்த சிறந்த நாவல்களின் பட்டியலில் எப்போதும் தன் இருநாவல்களையும் அவர் சேர்ப்பதுண்டு. ’பொய்த்தேவு’ ’ஒருநாள்’ என்ற இரு நாவல்களையும் சொல்லாமல் எந்த விமர்சகரும் தமிழ்நாவல் பட்டியலைச் சொல்லிவிட முடியாது. க.நா.சு தன்னடக்கம் காரணமாக அவற்றை தவிர்த்திருக்க வேண்டும் என்றார்கள் சிலர். ஆனால் அவர் ஒரு இலக்கிய மதிப்பீட்டை கறாராக முன்வைத்தார், ஆகவே தன் நாவல்களை தவிர்க்கவில்லை.
அதைச்சுட்டிக்காட்டி அவர் கல்கிக்கு எதிராக தன் நாவல்களை முன்வைத்து சுயப்பிரச்சாரம்செய்யவே அந்த விமர்சனங்களை எழுதுகிறார் என்று கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் பலநூறு கட்டுரைகள் எழுதப்பட்டன. அத்துடன் அவர் தன் விமர்சனங்களை எழுத பல்வேறு இடங்களில் இருந்து பணம் வாங்குகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அவர் சி.ஐ.ஏ ஒற்றர் என்று கைலாசபதி போன்ற இடதுசாரிகள் எழுதினார்கள்.
க.நாசு.எழுத்தை நம்பி வாழ்ந்தார். ஆனால் முதல் இருபதாண்டுகள் அவர் அவரது அப்பா சம்பாதித்த சொத்துக்களை விற்றுத்தான் வாழ்ந்திருக்கிறார். அதன்பின்னர் அவரது போராட்டங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட ஆங்கில நாளிதழாசிரியர்கள் அவரது ஆங்கிலக்கட்டுரைகளை வெளீயிட்டு அளித்த சன்மானத்தால் வாழ்ந்தார். எம்.கோவிந்தன் போன்ற மலையாளச் சிந்தனையாளர்களும் அவருக்கு உதவியிருக்கிறார்கள். க.நா.சுவுக்கு உணவு தவிர செலவே கிடையாது. அதுவும் இருவேளை எளிமையான சிற்றுண்டி மட்டுமே அவர் விரும்பியது. அவர் தாக்குப்பிடித்தமைக்குக் காரணம் அதுவே.
இந்தக்காலகட்டத்தில் க.நாசுவின் விமர்சனங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கான எதிர்வினையே நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையிலும் இருக்கிறது. பிரபலமான எழுத்தாளர்கள் ‘நாங்கள் லட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறோம். எங்களுக்கு இந்த சிறு கும்பலின் அங்கீகாரம் ஒரு பொருட்டே அல்ல’ என்று சொன்னார்கள். ‘கோடிக்கணக்கானவர்களால் ஆராதிக்கப்படும் இவர்களை விமர்சிக்க நீ யார்?’ என்று கேட்டார்கள்.
இன்னொருபக்கம் ‘இலக்கியம் என்பதே வாசகனுக்காகத்தான். அவன்தான் இலக்கியத்தின் தரத்தையும் முதன்மையையும் தீர்மானிக்கவேண்டும்’ என்று சிலர் வாதிட்டார்கள். ‘நல்ல இலக்கியமென்பது வாசகனுடனான உரையாடலாக வாசக ரசனையை திருப்தி செய்வதாக அமைய வேண்டும்’ என்றார்கள். ஆகவே எது பிரபலமாக இருக்கிறதோ அதுவே சிறந்தது என்பது இவர்களின் கருத்து. மிக அப்பட்டமான அபத்தம் இந்த கருத்தில் உள்ளது. இப்படிச் சொல்பவர்கள் கல்கியின் எழுத்தை அதைவிட பிரபலமான ஒரு கீழ்த்தரப் பாலியல் எழுத்துடன் ஒப்பிட்டு அந்தப் பாலியல்எழுத்தே மேல் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? அப்போது தரம்தானே அவர்களின் அளவுகோலாக அமையும்?
இந்தவிவாதங்களை க.நா.சு எதிர்கொண்ட விதத்தின் சிறந்த உதாரணம் இக்கட்டுரை. க.நா.சு அந்த கேளிக்கை எழுத்தாளர்-வாசகர்களை பொருட்படுத்தவில்லை. அவர்களிடம் தனக்கு விவாதிக்க ஏதுமில்லை என்று ஒதுங்கிக்கொண்டார். வாசகர்களுக்கு கேளிக்கை எழுத்து தேவை, அதை எழுத்தாளர்கள் கொடுக்கிறார்கள் என்றால் அது அவர்களின் உலகம், அவர்களிடம் சென்று அப்படி எழுதுவதும் வாசிப்பதும் தவறு என அவர் சொல்ல முனையவில்லை. அவர்களை சொல்லி திருத்துவதும் சாத்தியமல்ல. வணிக எழுத்து எப்போதும் இருக்கும். நான் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே வாசிக்கிறேன் என்பவர்களும் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் கலாச்சார சக்திகள் அல்ல. அப்படி தவறாக கருதப்படக்கூடாது என்று க.நா.சு கருதினார்
க.நா.சு இலக்கியம் சார்ந்த தேடல்கொண்டவர்களை நோக்கி மட்டுமே பேசினார். அன்று இலக்கிய நுண்ணுணர்வு கொண்டவர்களில் கணிசமானோர் வாசகர்களுக்கான எழுத்துதானே இயல்பானது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம்தான் அவர் இக்கட்டுரையில் உரையாடுகிறார். இலக்கிய ஆக்கத்தில் வாசகனின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்க முடியும் என்பதை ஆராய்கிறார். உலக அளவில் செயல்படும் இலக்கிய இயக்கத்தைக் கருத்தில் கொண்டு அதை விவாதிக்கிறார். அவருக்கே உரித்தான முறையில் மென்மையாக, சற்றே ஐயத்துடன், அதைச் சொல்லி முடிக்கிறார்
பொதுவாக க.நா.சுவுக்கு இலக்கியத்தின் ஒழுக்க ரீதியான பயன், அதன் சமூகப் பங்களிப்பு , அதற்கும் தத்துவத்துக்குமான உறவு போன்றவற்றைப்பற்றி ஐயங்கள் இருந்தன. ஆகவே அவர் எப்போதும் அவ்வளவாக அழுத்தாமல்தான் அவற்றைப்பற்றி பேசுகிறார். இலக்கிய உருவாக்கம் என்பதில் ஆழ்மனம் சார்ந்த பல மர்மமான தளங்கள் உள்ளன என்பதை அவர் அறிவார். ஆகவே அவர் அதைப்பற்றி எளிய கோட்பாடுகளை முன்வைப்பவர்களை நிராகரிப்பார் , அதேசமயம் அதை அதீதமாக மர்மப்படுத்தவோ புனிதப்படுத்தவோ செய்வதில்லை. க.நா.சுவின் சிறப்பியல்பே அவரது நிதானம் மற்றும் சமநிலைதான்.
இவ்வாறு இலக்கிய நுண்ணுணர்வு கொண்ட ஒரு சாராரிடம் எது நல்ல இலக்கியம், எது நல்ல வாசிப்பு, அதன் சாத்தியங்கள் என்ன என்பதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார் க.நா.சு. அவர்களிடம் நல்ல இலக்கியமென்பது எழுத்தாளனின் ஆழம் அந்தரங்கமான ஒரு தருணத்தில் மொழியைச் சந்திப்பதன் விளைவு என்று சொன்னார். அது பெருவாரியான வாசகர்களிடம் உடனடியாக தொடர்பு கொள்ள முடியாமலிருக்கலாம். அதற்கு மிகச்சில வாசகர்களே சாத்தியமாகலாம். அது அல்ல இலக்கியத்தின் அளவுகோல். இலக்கியம் அதன் அந்தரங்கமான நேர்மை, அதன் வெளிப்பாட்டில் உள்ள நேர்த்தி, அதன் சாராம்சமான அற எழுச்சி ஆகிய மூன்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படவேண்டும்.
அவ்வாறு இலக்கியத்தை நுட்பமாகவும் முழுமையாகவும் மதிப்பிடுவதற்கு வாசகனுக்கு இரு அடிப்படைகள் தேவை என்றார் க.நா.சு. ஒன்று, அந்தரங்கத்தன்மை. இலக்கிய ஆக்கத்தை தன் அகத்துக்கு ஏற்புள்ள நேர்மையுடன் அணுகுதல். பெருவாரியானவர்கள் கொண்டிருக்கும் கருத்துக்களால் அடித்துச் செல்லப்படாமல் தன் கருத்தை தன் அந்தரங்கத்தாலும் தன் வாழ்க்கை அனுபவத்தாலும் புரிந்துகொள்ள முயல்தல். இரண்டு, பயிற்சி. எந்த நல்ல கலையும் அதற்கான பயிற்சியை தேவையாக்குகிறது. இலக்கியமும் அக்கறையுடன் பயிலப்படவேண்டும். உலக இலக்கியப்போக்குகளையும் தன் இலக்கிய மரபையும் இலக்கியத்துடன் உறவாடும் தத்துவம் போன்ற துறைகளையும் இலக்கிய வாசகன் அறிந்துகொள்ள வேண்டும்
இவ்வாறு தகுதிகொண்டு வாசிக்கும் வாசகர்களின் ஒரு சிறுவட்டம் இருந்தாலே போதும், அவர்களின் கருத்துக்கள் காலப்போக்கில் அந்தச் சமூகத்தையே பாதிக்கும், வழிநடத்தும். எந்த ஒரு அறிவியக்கமும், பண்பாட்டியக்ககும் அத்தகைய சிறு எண்ணிக்கையினராலேயே முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. பெருவாரியினர் எப்போதுமே கவனமில்லாமல், மேம்போக்காகவே கலையிலக்கியத்தை அணுகுகிறார்கள். ஏற்கனவே தங்களுக்கு பழக்கமானவற்றையே மீண்டும் கோருகிறார்கள். அவர்களால் கலையிலக்கியம் வளர்வதில்லை என்றார் க.நா.சு
இக்கட்டுரையுடன் சேர்த்து யோசிக்கவேண்டிய ஒரு தகவல். ஜெயகாந்தனை இலக்கிய ஆசிரியராக கருதும் க.நா.சு அவர் பெருவாரியான வாசகர்களின் ரசனைக்கும் விருப்புக்கும் ஏற்ப எழுதி மெல்லமெல்ல நீர்த்துப்போன ஓர் எழுத்தாளராக விமர்சித்தார். அவரது பல கதைகளை ஆழமற்றவை, அதிர்ச்சி மதிப்பு மட்டுமே கொண்டவை என்றார். இன்றும் சிற்றிதழ்ச்சூழலில் உள்ள பொதுவான கருத்து அதுவே. அக்காலகட்டத்தில் ஜெயகாந்தன் க.நா.சுவுக்கு தன் முன்னுரைகளில் கடுமையான பதிலைச் சொல்லியிருக்கிறார். தன் ’சஹிருதய’னுடன் தான் கொள்ளும் ‘சம்பாஷணை’களே தன் எழுத்துக்கள் என்றார் ஜெயகாந்தன்.
ஆனால் 1998 ல் நான் அவரை எடுத்த ஒரு பேட்டியில் ஜெயகாந்தனிடம் ‘நீங்கள் வாசக ரசனையால் அடித்துச் செல்லப்பட்டீர்களா?’ என்று கேட்டேன். ‘இல்லை.நான் ஒருபோதும் வாசகர் கடிதங்களை படிப்பதில்லை. பத்திரிகை அலுவலகத்துக்கு கட்டுகட்டாக கடிதங்கள் வரும். நான் அவற்றில் ஒன்றைக்கூட பிரித்து பார்க்கமாட்டேன். நான் எனக்கு தோன்றியதை மட்டுமே எழுதினேன்’ என அவர் பதிலளித்தார்.
ஜெயகாந்தனின் நல்ல கதைகள் அவர் சொன்னதுபோல அவருக்கு ’தோன்றியது’ போல எழுதப்பட்டவைதான். ஆனால் பெரும்பாலான கதைகள் க.நா.சு சொன்னதுபோல வாசகர்களுக்காக எழுதப்பட்டவை. அந்த வாசகர்களும் அந்த காலகட்டமும் காலப்பெருக்கில் மூழ்கிப்போய்விட்டன. கூடவே அக்கதைகளும். நல்ல இலக்கிய ஆக்கங்கள் எழுத்தாளனின் ஆழ்மனத்தின் வெளிப்பாடுகள். அவன் தன் ஆழ்மனத்துடன் கொள்ளும் உரையாடல்கள். அப்படியானால் ‘சமூகம்’ எங்கே இருக்கிறது அதில்? எழுத்தாளனின் ஆழ்மனம் என்பது அச்சமூகத்தின், மானுட இனத்தின், ஆழ்மனமேதான்.
விக்கிப்பீடியாவின் அடிப்படைகள்
ஜெ,
தமிழ் விக்கி குறித்த இணைய சழக்குகளை சிறிது நேரம் வாசிக்க நேர்ந்தது. அந்த நேர விரயத்திற்கு வருந்துகிறேன். ஆயினும், சில அடிப்படைகளை தெளிவுபடுத்தி விடுவது நல்லது என தோன்றியது.
விக்கிக்கு முன்:
அ) விக்கி என்பது வட பசிபிக் தீவுக்கூட்ட மொழிகளில் ஒன்றான ஹவாயன் மொழி வார்த்தை. தமிழில் அதற்கு இணையாக துரிதம் என்ற வார்த்தையை குறிப்பிடலாம்.
ஆ) நியுரான்களின் இணைப்புகளால் ஆன மனித மூளை, ஒன்றுடன் ஒன்றை தொடர்புறுத்துவதன் மூலம் செய்திகளை கற்கிறது, நினைவுறுத்துகிறது. இந்த associative learning, association என்பதை உபயோகித்து தகவல்களை சேகரிக்கும் / நிர்வகிக்கும் முறைமைகள் (information management systems) பல உருவாகியுள்ளன. zettelkasten இதில் பிரபலமானது. ஆரம்ப கால முறைமைகள் அட்டைகள் போன்ற பொருட்களை (Physical) அடிப்படையாக கொண்டது. கணினி தொழில்நுட்பம் வளர வளர, டிஜிட்டல் முறையில் இந்த தகவல்களை நிர்வகிக்கும் முறைமைகள் பல முன் வைக்கப்பட்டன. இதன் நீண்ட தொடர் வளர்ச்சியின் ஒரு பகுதியாக hypertext உருவாகி வருகிறது. https://www.nngroup.com/articles/hypertext-history/. இன்று நமது இணையத்தின் அடிநாதம் இந்த hypertext.
விக்கியின் தொடக்கம்
புதிய நிரல் மொழிகள் உருவாகிவந்த 1990களின் தொடக்கத்தில், நிரல் மொழிகளின் அமைப்புகள் பற்றி மின்னஞ்சல் மூலம் நடந்து வந்த உரையாடல்களை தொகுக்க வார்ட் கன்னிங்ஹாம் Ward Cunningham என்பவர் விக்கிவிக்கிவெப் Wiki Wiki Web (c2.com) என்ற தளத்தை 1995ல் வடிவமைக்கிறார்.
Hypertext-ஐ அடிப்படையாக கொண்ட இந்த தளம், எவரும் எளிதாக தொகுக்க (edit), பங்களிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு இணைப்பு கொடுக்கும் வசதியும் இதில் இருந்தது.
– அவர் உபயோகித்த விக்கி என்ற வார்த்தை பொதுச்சொல். அதற்கு trademark கிடையாது.
– இந்த தளத்திற்கான வடிவமைப்பை அவர் பேடண்ட் செய்யவில்லை. பார்வையாளர்கள் எடிட் செய்து பங்களிக்கக்கூடிய வகையில் ஒரு இணையதளத்தை அமைக்க தேவையான மென்பொருளை விக்கி மென்பொருள் என குறிப்பிடலாம். கன்னிங்ஹாம் அவர் அமைத்த விக்கி மென்பொருளை open sourceஆக விக்கிபேஸ் என வெளியிடுகிறார். அதை மாதிரியாக கொண்டு பல்வேறு விக்கி மென்பொருட்கள் வெளிவரத் தொடங்கின. அவற்றில் பல விக்கி என்பதை தங்கள் பெயரில் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு TWiki, UseModWIki, DidiWiki.
– முதல் விக்கி தளத்தை உருவாக்கியவர் என்ற அடிப்படையில், கன்னிங்ஹாம் விக்கி என்ற கருத்தியலுக்கு சில அடிப்படைகளை Bo Leuf என்பவருடன் இணைந்து 2001ல் அவர் எழுதிய The Wiki Way புத்தகத்தில் முன்வைக்கிறார்
o பார்வையாளர்கள் தாங்கள் பார்வையிடும் இணையதளத்தை எந்த கூடுதல் உதவியும் இல்லாமல் நேரடியாக எடிட் செய்ய இயல்தல்.
o அதன் பல்வேறு பக்கங்களிடையே அர்த்தபூர்வமான இணைப்புகளை உருவாக்குதல். இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் உருவக்கப்பட்டுள்ளனவா இல்லையா என எளிதில் அறிதல்.
o பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இணையதளமாக இல்லாமல் இணையதள உருவாக்கத்தில் பங்களிக்க பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் தளமாக இருத்தல்
o விக்கி உள்ளார்ந்த அளவில் ஜனநாயகமானது.
அவரது கருத்துகளை ஏற்றும், மாற்றியும் விக்கி என்ற கருத்தியல் இன்று ஒரு பெரும் இயக்கமாக வடிவெடுத்துள்ளது.
விக்கி இன்று:
இன்று விக்கி என்பது வாசகர்கள் பங்களிக்கக்கூடிய எந்த ஒரு வலைதளத்தையும் குறிப்பிடப்படக்கூடிய பொதுச்சொல். 2007 முதல் விக்கி என்ற வார்த்தையை பெயர்ச்சொல்லாக ஆக்ஸ்போர்ட் பேரகராதி பட்டியலிடுகிறது. இன்று விக்கி கருத்தியலை ஒத்த ஒரு வலைதளத்தை நிறுவ 81 முக்கியமான விக்கி மென்பொருட்களும் பல நூறு சிறு மென்பொருட்களும் உள்ளன. DocuWiki, FlexWiki, PhpWiki, PBWiki, PmWiki, Mediawiki போன்றவை அவற்றில் சில.
இன்று வெளிவரும் எந்த ஒரு நிரல்மொழிக்கும் ஒரு விக்கி தளம் என்பது இன்றியமையாதது. நிரல்மொழி/மென்பொருள் மட்டுமல்லாமல், இன்று வெளியாகும் திரைப்படங்கள், தொடர் சித்திரங்கள், வீடியோ கேம்கள் என அனைத்திற்கும் ஒரு விக்கி உடனடியாக உருவாகிறது. சரும பராமரிப்பு, அல்லது எடை குறைத்தல் குறித்த ஒரு இணைய உரையாடல் குழுமம் இருந்தால், அதன் ஒரு பகுதியாக விக்கியும் அவசியம் இருந்தாக வேண்டியுள்ளது. (Redditல் பங்களிப்போர் இதை அறிந்திருப்பார்கள்)
இவ்வாறு பொது பார்வைக்கு உள்ள விக்கிகள் மட்டுமல்லாமல், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான தகவல்களையும் தனிப்பட்ட விக்கி தளங்களாக வடிவமைத்துள்ளன. (Google, NASA, Cisco, Philips, HP, FedEx போன்றவை). அரசுகள் தாங்கள் சேகரிக்கும் தகவல்களை தொகுக்க விக்கி தளங்களை பயன்படுத்துகின்றன. அமெரிக்காவின் உளவுத்துறை உட்பட பல துறைகள் தங்களுக்கான தனி விக்கி அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இந்தியாவில், கேரள மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கல்வி சார்ந்த தகவல்களை பொது விக்கியாக வெளியிட்டுள்ளனர்.
வளர்ந்து வரும் விக்கியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இணையதள முகவரிகளை நிர்வகிக்கும் ICANN நிறுவனம், 2013ல் .விக்கி என முடியும் முகவரிகளை அனுமதிக்க தொடங்கியது (Top Level Domain, TLD). மென்பொருள் அமைப்பு சார்ந்து (platform based) வழங்கப்பட்ட முதல் TLD இது என கூறப்படுகிறது. விக்கி கருத்தியல் சார்ந்து செயல்படும் இணையதளங்களை ஒருங்கிணைக்க இந்த பெயர் உதவும். இன்று 25,396 இணையதளங்கள் .விக்கி என்ற பெயரை உபயோகிக்கின்றன. (இந்த தகவலை அளித்த இணையதளம் ICANNWiki.org). ICANNWiki போல், .விக்கி என்ற முகவரியை உபயோகிக்காமல், பெயரில் விக்கி என்ற வார்த்தையை பயன்படுத்தும் இணையதளங்கள் பல்லாயிரம். விக்கி என்ற பெயரை கொண்ட பொது தளங்கள் சில: archwiki, localwiki, hitchwiki, wikitravel, wikitree. இந்த பல்லாயிரம் தளங்களில் ஒன்று தான் விக்கிப்பீடியா.
விக்கிப்பீடியாவும் விக்கியும்:
ஜிம்மி வேல்ஸ், பொமிஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன், நியுபீடியா என்ற இணைய கலைக்களஞ்சியத்தை 1999ல் தொடங்குகிறார். அதன் முதன்மை ஆசிரியராக லாரன்ஸ் சாங்கர் என்பவர் நியமிக்கப்படுகிறார். முழுவதும் நிபுணர்களால் மட்டுறுத்தப்பட்ட அந்த களஞ்சியத்தின் முதல் வருடத்தில் 12 பதிவுகள் மட்டுமே வெளிவருகின்றன. பொதுமக்களின் பங்களிப்பை விரிவாக்க, நியுபீடியாவின் ஒரு பகுதியாக ஒரு விக்கி தளத்தை தொடங்கலாம் என லாரன்ஸ் முன்மொழிகிறார். விக்கியின் மூலம் உருவாகும் பதிவுகளை பிறகு மட்டுறுத்து நியுபீடியவில் வெளியிடலாம் என்பது அவர்களது எண்ணம். விவாதங்களுக்கு பிறகு நியுபீடியா தளத்தில் இருந்து தனித்து இந்த விக்கியை தொடங்கலாம் என விக்கிப்பீடியா.காம் என்ற தளம் 2001ல் தொடங்கப்படுகிறது. முதலில் Usemodwiki என்ற விக்கி மென்பொருளை பயன்படுத்தி தொடங்குகிறார்கள்.
தங்கள் கலைக்களஞ்சியத்திற்கு பக்கங்களை உருவாக்க விக்கி என்ற கருதுகோளையும், ஏற்கனவே உருவாகி பொதுவெளியில் இருந்த விக்கி மென்பொருளையும் உபயோகித்துக்கொண்டது விக்கிப்பீடியா.
இன்று விக்கிப்பீடியா சார்ந்த அமைப்புகளை நிர்வகிக்கும் விக்கிமீடியா ஃபௌண்டேஷன் விக்கிப்பீடியா என்ற வார்த்தைக்கும், அவர்கள் தொடங்கிய தளங்களின் பெயர்களுக்கு மட்டுமே உரிமை கொண்டாடுகிறது. அதன் முழுமையான பட்டியலை இங்கு பார்க்கலாம். Wikimedia trademarks – Wikimedia Foundation Governance Wiki விக்கி என்ற வார்த்தைக்கோ, ஏற்கனவே இருந்த விக்கி மென்பொருளை பொது பங்களிப்போடு மேம்படுத்தி அவர்கள் உபயோகிக்கும் மீடியாவிக்கி மென்பொருளுக்கோ எவரும் உரிமையாளர் கிடையாது.
விக்கிப்பீடியாவிற்கு துளியும் தொடர்பில்லாத விக்கி என்ற இயக்கத்திற்கு விக்கிப்பீடியா தான் உரிமையாளர் என்பது போல் எழும் கூச்சல் முழு மடமை.
மானுட ஞானத்தை ஒன்றாக தொகுப்பதில் மிக முக்கிய பங்களித்த விக்கி என்ற இயக்கத்தை மேலும் தீவிரமாக தமிழில் முன்னெடுத்து செல்ல தமிழ்.விக்கி ஒரு முன்மாதிரியாக அமையும் என உறுதியாக நம்புகிறேன். தமிழ் விக்கி போல் தகவல்களுக்கான கலைக்களஞ்சியம் ஒரு புறம் இருக்க, புனைவுலகங்களுக்கான மிக விரிவான விக்கி தளங்கள் உலகம் முழுதும் உள்ளன. ஆனால் தமிழில் பரவலான வாசிப்பு பெற்ற பொன்னியின் செல்வனின் உலகிற்கு ஒரு விக்கிதளம் இல்லை. நமது இந்த முன்னெடுப்பு விக்கி என்ற இயக்கத்தை தமிழுக்கு விரிவாக அறிமுகம் செய்து, அது அனைத்து வகையிலும் பரவலாக உதவும் என உறுதியாக நம்புகிறேன்.
அன்புடன்,
சந்தோஷ்
***
பொன்னின் மாயம் -கடிதங்கள்
இது கடலூரிலிருந்து மஹிந்தீஷ் சதீஷ்.
தங்களின் ‘மாயப்பொன்’ வாசிக்க நேர்ந்தது.
அற்புதம், அபாரம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட சிறுகதை!
படித்துக்கொண்டிருக்கும் போதே ‘பழ வாசனை’ அடிப்பது மாதிரி அத்தனை நுணுக்கமான ‘தொழில்’ நுட்பங்களோடு நகர்கிறது இப்படைப்பு! ‘சாராயம் காய்ச்சும் அவனுக்குள் ஜெயமோகன் புகுந்து கொண்டானா…? ஜெயமோகனுக்குள் சாராயம் காய்ச்சுபவன் புகுந்து கொண்டானா…!?’ தெரியவில்லை..!
அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது மாதிரி கிளைமாக்ஸ். மற்றும் அது உணர்த்தும் விஷயம் ‘பரிபூரணமான, அதி உன்னதமான, ஆத்ம நிறைவான படைப்பிற்கு பின்னால், அப்படி ஒரு உருவாக்கம் உருவாக்கியவனுக்கே தெரியாமல் உருவான பிறகு அந்தப் படைப்பாளி வாழக் கூட அவசியமில்லை என்பதே…! இது பிறவிப்பயன் அடைந்தபின் பிறவியின் அவசியமற்றுப் போகும் ஒர் ஞானியின் நிஜ ‘ஆன்ம இளைப்பாற்றி’ற்கான தேடலின் முடிவுக்கு சற்றும் குறையாத அனுபவமாக அக்கதாபாத்திரத்திற்கும், ஏன் வாசகனுக்குமே கூட அமைகின்றது!
ஒரு உன்னத படைப்பு என்பது படைப்பாளியின் அந்நேர உணர்வை மிகச்சரியாக வாசகனுக்கு கடத்துவதே ஆகும்!
அதற்கு எழுத்தில் ஓர் அநியாயமான நேர்மை தேவைப்படுகிறது!
தங்களின் ஒவ்வொரு படைப்பும் அதைக் குறைந்தபட்சம் 95 சதவிகிதமாவது பூர்த்திசெய்து விடுகிறது
வாழ்த்துக்கள் தோழர்!
தவிர்க்க இயலா அன்புடன்,
மஹிந்தீஷ் சதீஷ்
***
அன்புள்ள ஜெ
மாயப்பொன் கதையை முதலில் வாசித்தபோது அந்தச்சூழல், அந்த இடம், அந்த மணம் கூட தெரிந்தது. அது ஓர் அனுபவமாக இருந்ததே ஒழிய அதன் தத்துவார்த்தமான சாரம் பிடிகிடைக்கவில்லை. ஆனால் பின்னர் தன்மீட்சி படித்தேன். அதன்பின் அண்மையில் ஆழத்தின் நிறைவு படித்தேன். ஆகா, இதைத்தானே அந்தக்கதையும் சொல்கிறது என்று புரிந்துகொண்டேன். அக்கதை கலை அதன் உச்சியில் பொன்னாக ஆவதை குறிக்கிறது. Nature’s first green is gold, என்ற வரி ஞாபகம் வந்தது. எல்லாம் அதி தூய நிலையில் பொன். பொன் என அவனுக்குச் சாவு வருகிறது. அது சாவுதானா? அவனுடைய உபாசனா மூர்த்தியா? சாவு என அதைச் சொல்லலாமா? அந்த வேங்கைப்புலியை இன்னமும் கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மிக அண்மையில் இருக்கிறது அது
எம்.கே.கிருஷ்ணன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
பெண்கள்,காதல்,கற்பனைகள்- கடிதம்
அன்புள்ள ஜெ
அருண்மொழி அவர்களின் எழுத்து எப்படியிருந்தது என்றால், இன்னும் ஒரு மாதம் கழித்து புதிதாக காதலிப்பவர்களை(இளம்) நீங்கள் ஜெமோ & அருண்மொழி வாசகரா என கேட்கும் அளவிற்குஉச்சம் தொட்டு நின்றுள்ளது.
அருண்மொழி அவர்களின் எழுத்து நடையில் உங்கள் இருவரின் காதல் திருமண வைபோகம் ரசிக்கும்படியாக, மிகையில்லாமல், அழகாக இருந்தது. சமீபகால வாசகி என்பதால் உங்களுக்குள் இப்படியொரு பக்கமா என்று ஆச்சரியமாகவும் இருந்தது.
இதனைப்படிக்கும் இளம் பெண்களுக்கு, வளரும் எழுத்தாளருக்கு வாழ்க்கைப்படும் ஆசை மற்றும் நம்பிக்கை எழலாம். துணைக்கு காத்திருக்கும் இளம் எழுத்தாளனுக்கு எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்ற யோசனைகள் கிட்டலாம்.
திரு. பவா நடத்திய ‘செல்லாதபணம்’ என்ற நாவலுக்காக சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் இமையத்தின் உண்டாட்டு நிகழ்வில் நீங்கள் கூறிய நிதர்சனமான வரிகள் நினைவுக்கு வந்தன. பெண் என்பவள் தன் அகங்காரத்தின் வழியே பலி கேட்கக்கூடிய தெய்வம், அவள் கையில் பூ வைத்திருப்பவனைவிட தனக்காக கையறுத்து ரத்தம் விடுபவனையே ஏற்பாள். இதில் அவள் அறியாத ஒன்று, ‘உனக்காக சாவேன்’ என்பவனின் அடுத்த நிலை எனக்கு நீ இல்லையென்றால் அதற்காக ‘உன்னையும் கொல்வேன்’ என்பது. மேலும் சமுதாயத்தின் முரண்களால் ஒன்றிட்ட காதல் திருமணத்தின் சறுக்கல்களையும், விளைவுகளையும் இக்கதையில் இமையம் நன்கு சாடியிருப்பார்.
சாமியாராகி விட வேண்டும் என்று சுற்றிய மனிதன் ஏதோ motivational(jkd) வகுப்புகளால் ஈர்க்கப்பட்டு,ஒரு அரசாங்க உத்யோகத்தை பெற்றவுடன் தன் மீது கூடுதலான நம்பிக்கையடைந்து, ஒரு பெண்ணை காதலித்து மணம் முடிக்க எவ்வாறல்லாம் உடையணிவானோ அப்படியே இருந்தீர்கள் உங்கள் புகைப்படங்களில். அதுவும் ஒருவித அழகே.
அரசாங்க பணியுடன் இருந்தவரை நிராகரிக்க அல்லது அரசாங்க பணியில் இருந்த பெற்றோர்களிடம் காதலை எடுத்துரைக்க அருண்மொழி அவர்களுக்கும் பெரிதான தயக்கம் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஆனால் அவ்வயதில் இவ்வளவு யோசித்திருக்கமுடியுமா என்பது காலத்தையும் வைத்து பார்க்கும்பொழுது ‘தலைகுப்புற விழுதல்’ என்ற சொல் பதட்டத்தைத்தான் தருகிறது.
ஆணின் நியாயமான தீர்மானங்களுக்கு பெண் என்றும் துணை நிற்கவே விரும்புகிறாள்.அதில் அருண்மொழி அவர்களின் நம்பிக்கையையும் உங்களின் அயராத உழைப்பையும் ஒன்றாய் இணைத்திட்டது கடவுளின் சித்தம்.
உங்கள் இருவரோடும் இணைந்து, நான் ஏனோ குறிப்பிட்டு பாராட்ட விரும்புவதுஎழுத்தாளர் எஸ் ராவின் மனைவியை, அவர்களதும் காதல் திருமணமே. எந்த வேலைக்கும் செல்ல மாட்டேன், எழுத்து ஒன்றே பணி என்பவரை துணிந்து திருமணம் செய்தவர் அவர்.
”ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் ஓர் பதற்றம் மிக்க எதிர்பார்ப்பின் சிக்கல் இருக்கவே செய்கிறது. முழுக்க விலக முடியாது” – இதனை உங்களிடமிருந்து கேட்ட போது ஊருக்கே உள்ள பிரச்சனை என்று மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.
ஊடகமும்,தொழில்நுட்பமும், நுகர்வும் என்ற சிக்கல்களில்நகரங்களைத்தாண்டி, கிராமங்களும்வீழ்ந்து வருவது வருத்தத்துக்குரியதே, இதில் சிக்குபவர்கள் பெரும்பாலும் இளவயது ஆண், பெண் கூட்டம் என்பதே வேதனைக்குள்ளாக்குகிறது. பொருளாதாரத்தில் பெண்ணின் முன்னேற்றம், ஆணின் குடும்ப பகிர்வு, சமுதாய நெருக்கடிகள் வைத்து பார்க்கும் பொழுது வருங்கால திருமணங்கள் கொஞ்சம் பயத்தைத்தான் உண்டுபண்ணுகின்றன.
நல்லவேளை 90களில் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள், 2000த்தை தாண்டியிருந்தால் இந்த ஒரு பெண்ணும் கிட்டியிருப்பது கஷ்டமாயிருக்கலாம். பல்லாண்டு இணையொத்த தம்பதியராய் நீடுழி வாழ இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
நன்றி
இந்து.
காந்தியை அறிதல்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
மகாத்மா காந்தி அவர்களின் சத்திய சோதனை வாசித்து முடித்தேன். தமிழ் இணைய நூலகம் தமிழக அரசினால் நடத்தப்பட்டு வருகிறது.
( https://www.tamildigitallibrary.in/ ) . அதை எனக்கு வழி காட்டிய கடலூர் சீனு சார் அவர்களுக்கு மிக்க நன்றி. அதிலிருந்து தான் , சத்திய சோதனை, அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, போன்ற தேசிய உடமையாக்கப் பட்டுள்ள பதிப்பில் இல்லாத நிறைய நூல்களை வாசிக்க இயன்றது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்தியாவும் விஷ்ணுபுரம் கெளஸ்தூபம் பகுதியில் வரும் பொலிவை இழந்த நகரம் போலத் தான் இருந்தது. ஆனால் அதை முற்றிலும் அழிந்து விடாமல் காப்பாற்றி மறு கட்டமைப்பு செய்தது காந்தி, அம்பேத்கர், நேரு, படேல், மற்றும் பல தலைவர்கள் தான். புத்தகத்தில் ஐந்து பாகங்கள் இருந்தது, அவரின் இளமைக் காலம் தொடங்கி , பாரிஸ்டர் படிப்பு, தென்னாப்பிரிக்கா (நேட்டால்) காங்கிரஸ், தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகம், சம்பரான் சத்தியாகிரகம்,ஒத்துழையாமை இயக்கம், நாகபுரி காங்கிரஸ் ஆரம்பம், கைராட்டினத்தின் வளர்ச்சி வரையில் இருந்தது.
காந்தியின் மீது அவதூறுகள் எவ்வளோ இன்னமும் சொல்லி வருகிறார்கள். அவர்களில் யாரேனும் காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்தால் கொஞ்சம் அறிவு பெறலாம் என்று தோன்றுகிறது.
காந்தி என்பவர் நம்மைப் போலவே சாதாரண மனிதர் தான், அவரின் வாழ்க்கையில் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியாகவே இருக்க முடியாது. அவர் எல்லா வேலைகளிலும் Trail and Error ஆகத் தான் பரீட்சித்துப் பார்த்து பின்னர் அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார். அதில் சில வெற்றிகளும் தோல்விகளும் இருக்கவே செய்யும். அவர் இளமைக் கால வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவரின் அடுத்த வந்த வாழ்வில் ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் ஒரு வகையில் அவரை செதுக்கியிருக்கிறது. உதாரணமாக அவர் அரையாடைக்கு மாறியது, இங்கிலாந்து பாரிஸ்டர் படிப்பு படிக்கும் போது ஹேமச்சந்திரர் என்பவரை சந்திக்கிறார், அவரின் ஆடை முறை காந்தியின் மனதில் பதிகிறது. என்றேனும் இது போன்று தன்னால் இருக்க முடியுமா என்று எண்ணுகிறார். அது எத்தனையோ காலத்திற்கு பின்னர் மதுரையில் நடக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து நாளிதழில் ஒரு செய்தி, ஒரு ஓரமாகத் தான் இருந்தது.ஆனால் அது எனக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது. தென்னாப்பிரிக்காவில் இந்திய மாம்பழ வகை ஒன்று பயிரிடுவதற்கு ஏற்ற வகையில் அங்கே நிலத்தை தயார் செய்து வருகிறார்கள் என்று. இந்தியாவின் அதிகாரம் பரந்து வருகிறதோ என்று எண்ணி கொஞ்சம் மகிழ்ச்சியாக தான் இருந்தது.
ஆனால் சத்திய சோதனை படித்த போது தான் தெரிந்தது, அங்கே பயிர் செய்வதற்காக அடிமைகளாக (ஒப்பந்த கூலிகள் என்ற பெயரில்) இந்தியர்களை , ஆங்கிலேயர்கள் எப்போதோ கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று.
காந்தி ஏன் இந்தியர்களின் நலனை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை. ஏன் ஆங்கிலேயர்களிடம் கூட கருணையுடன் நடந்து கொண்டார். ஏன் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு அதிக பணத்தை கொடுக்கும் படி உண்ணாவிரதம் இருந்தது ஏன்? ஏன் அம்பேத்கரை பூனா ஒப்பந்தத்திற்கு வலியுறுத்தினார் என்பது வரை. இதற்கெல்லாம் காந்தியின் வாழ்வை புரிந்து கொண்டால் மட்டுமே , அவரோடு சேர்ந்து அந்த பயணத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போது மட்டுமே உணர முடிகிறது. தென்னாப்பிரிக்காவில் அவர் சந்தித்த வெவ்வேறு நாட்டை சேர்ந்த மனிதர்களும் அவர்களுடனான உரையாடல்களும் , நட்பும், உழைப்பும், வாழ்வும், இன்னமும் சொல்லப் போனால் இந்தியாவைப் பற்றிய ஒரு மேலோட்டமான ஒரு வடிவமே அவருக்கு தென்னாப்பிரிக்காவில் தான் கிடைக்கிறது. காந்தியின் கொள்கைகள் , அது உருவான சூழல், அப்போதிருந்த நிலைமை , மற்றும் அந்த கொள்கைகள் சமூகத்தில் தீர்க்க முற்பட்ட பிரச்சினைகள் என்ன என்பதையும் வைத்தே காந்தியை புரிந்து கொள்ள முடியும். காந்தியை முழுமையாக புரிந்து கொள்ள அவரின் கொள்கைகளை தனித்தனியாக பார்த்து மூர்க்கத்தனமாக அதை பின்பற்ற முயன்றோம் என்றால், we will be missing the forest for the Tree’s.we shouldn’t be grasping the finger of principles and miss out the palm of gandhi.அவருடைய பயணம் ஒட்டு மொத்த மனித குலத்தை மனிதநேயம் நோக்கி செல்லவே , அமைதியான, ஆரோக்கியமான, தன்னிறைவான உலகத்தை உருவாக்கவே முயல்கிறது. இதில் அவரால் எந்த மனிதனையும் பிரித்து பார்க்கவே முயல்வதில்லை.
பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒவ்வொரு மனிதனும், மக்களின் குணங்களை சந்திக்க நேரும் போது, அவர்களை வெறுத்தே , அடுத்த படிநிலையை அடைய முடியும்.அவர்கள் தான் ஆட்சியாளர்களாகவும் ஆக முடியும்.அதனால் தான் அவர்களால் வலிமையான ஆட்சியை நடத்தவும் முடியும்.
காந்தி ஏன் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை என்பதும் சத்திய சோதனை படித்த போது தான் தெரிந்தது. ஏனெனில் அவருக்கும் பொது வாழ்வில் ஈடுபடும் போது, மக்களின் குணங்கள் (பணக்காரர்கள்,ஏழை,சாதி மத பேதமின்றி எல்லோரிடமும்) தெரிய வந்தாலும், ஒருபோதும் அவர்களை வெறுத்து ஒதுக்க முயல்வதில்லை. அவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கான வழியையே செய்கிறார். மக்களுக்கு வன்முறையின் மேல் தான் ஆர்வம் இருந்தாலும், அதில் அவர்களை மிகச் சுலபமாக ஈடுபடுத்தியிருக்க முடியும் என்றும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.ஆனால் அதனுடைய பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதும் தெரிந்தே இருந்தது.அதனால் தான் அவர் அஹிம்சையை பரப்பினார். மக்களை ஒருபோதும் அவரால் விலக்கி வைக்க முடிவதில்லை. மனிதர்களை நேசிப்பவர், ஆட்சியாளராக இருக்க முடியாது. அதனால் தானோ என்னவோ அவர் இந்திய சுதந்திரத்தின் போது ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டார்.
இந்திய தேசம் முழுக்க அவரது பயணம், பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள். இப்போது கூட இரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு அதே அளவிற்கான தீவிரத்துடன் அனுபவம் கிடைக்கும். மக்கள் இன்னமும் அப்பிடியே தான் இருக்கிறார்கள். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அவர் சந்திக்கும் பிராமணர் , இப்போது வரைக்கும் அப்பிடியே தான் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நம்முடைய காணிக்கையை பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் , அந்த பாவம் நமக்கே பாவம் சேரும் என்ற பயமுறுத்தல் இருக்கிறது. ஆனால் காந்தி அப்போதே காணிக்கை வேண்டாம் என்றால் அந்த காசை திருப்பி எடுத்துச் செல்லும் அளவிற்கு மூட நம்பிக்கை இல்லாதவராகவே இருக்கிறார்.நல்ல வேளை எனக்கு அப்போது மகாத்மா பட்டம் கொடுக்கவில்லை என்று அவர் சொல்லிச் செல்லும் இடங்களில் நம்மையும் சேர்த்து சிரிக்க வைக்கிறார்.
துணி ஆலை முதலாளிகளிடம் அவருடைய உரையாடல்,அதைப் படிக்கும் போது அப்படிப்பட்ட சூழலில் கூட வணிக நோக்கத்துடன் செயல்பட்ட இந்திய துணி ஆலை அதிபர்களின் மேல் கோபம் வருகிறது.ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் கூட காந்தி மிக அமைதியாகவே தன்னுடைய தீர்மானத்தை அவர்களிடம் முன் வைத்து செல்கிறார்.
மருத்துவ முறைகளில் அவருக்கு இருந்த குழப்பமும், அறிவியல், அல்லோபதி வைத்தியத்தை ஏற்றுக் கொள்ளாத மனமும், பொது வாழ்வில்(அரசியலில்) எடுத்த சில தவறிய தீர்மானங்களும் , மனைவியினிடத்தில் எடுத்துக் கொண்ட அதிகாரங்களும் , அவர் நம்மைப் போலவே , சராசரி மனிதர் தான் என்பதை, எல்லாவற்றிலும் அவர் சரியான முடிவையே எடுத்திருக்க வேண்டும் என்று , அவரின் மீது அவதூறுகள் கற்பிப்போருக்கு புரிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
தன்னுடைய பிள்ளைகளின் கல்வி முறையில் அவர் நடந்து கொண்ட விதமும் , ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. அவர்களுக்கு வாழ்வின் முறையில் கல்வியை கற்பிக்க முயற்சிக்கிறார்.ஆனால் அந்த முறையெல்லாம் நன்றாக வளர்ந்த தன்னிறைவான மனித குலத்துக்கான கல்வி முறை, அதை அந்த காலகட்டத்தில் அவர் முயற்சித்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.
எந்த ஆளுமைகளைப் படித்தாலும், வெண்முரசின் கதாபாத்திரங்களுடன் அவர்களை ஒப்பிட்டு பார்க்க முடியாமல் இருக்க முடிவதில்லை.
கர்ணணுக்கு நேரும் தாழ்ந்த குலம்,சூத்திரன், சூதன் எனும் அவமதிப்புகள், காந்திக்கும் கறுப்பன், இந்தியன், என்று தென்னாப்பிரிக்காவில் நேருகிறது. கர்ணன் எவ்வளவு மன திடத்துடன் இருந்து யாவற்றையும் சகித்து முன் செல்கிறானோ அதே போல் காந்தியும் அந்த அவமதிப்புகள் எல்லாவற்றையும் சகித்து முன் செல்கிறார். நேட்டால் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்குகிறார்.போனிக்ஸ்-ல் குடியேற்றத்தை உருவாக்குகிறார். சத்தியாகிரகப் போராட்டத்தில் வெற்றி பெறுகிறார்.
காந்தியிடம் தருமனின் அறக் குழப்பமும் இருக்கிறது.(தென்னாப்பிரிக்கா போயர் யுத்தத்தில் பங்காற்றியது, இரண்டாம் உலகப் போருக்கு படையை திரட்டியது) இதில் யாவற்றிலும் வெண்முரசில் வரும் தருமனின் அறக் குழப்பத்தையே நினைவூட்டுகிறது.
பீமனின் உடல் வலிமை என்றால் , காந்தியிடம் மன வலிமை மிகுந்துள்ளது. அதை தீவிரமாக அவர் நம்பியிருக்கிறார்.செயல் படுத்தியிருக்கிறார்.
அர்ஜூனனுக்கு காண்டீபம் போல் காந்திக்கு சத்தியாகிரகம் (அஹிம்சை) ஓர் வலிமையான ஆயுதம்.
பீஷ்மர் அஸ்தினபரி விட்டு நகர் நீங்கிச் செல்வதே , திரும்பவும் அந்த நகரை வந்தடையத் தான். காந்தி மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் அவரை மீண்டும் அற வழியில் செல்வதற்கான பாதையில் தொடர்ந்து செல்வதற்கான உத்வேகத்தை அளிப்பது தான்.
கிருஷ்ணனிடம் இருக்கும் அனைவரையும் அனுசரித்து தன் வழிக்கு கொண்டு வரும் பண்பும், அது சரிப்படாத போது போரின் மூலம் வழிக்கு கொண்டு வருவதும் காந்தியிடம் உள்ளது. ஆங்கிலேய அதிகாரிகளிடம் முடிந்த வரை சமரசமாக இருந்து தன்னுடைய போராட்டங்களையும், தீர்மானங்களையும் முன்னெடுத்து செல்கிறார். அது சரிப்படாத போது ஒத்துழையா இயக்கத்தை ஆரம்பிக்கிறார்.
ஜெயகாந்தன் அவர்களின் கங்கா எங்கே போகிறாள் என்ற நாவலின் இறுதி அத்தியாயத்தில் சில வரிகள் பின் வருமாறு,
சரயு நதியிலே ராமன்
பூமி பிளந்து சீதா தேவி
தெரியாமல் பட்ட அம்பினால் கிருஷ்ணன்
என்று முடியும்.
இதைப் படிக்கும் போது, இவர்கள் அனைவரும் அவர்களின் நோக்கமும், இலட்சியமும் நிறைவேறிய பின்னர் வாழ்வு போதும் என்று முடிவெடுத்த போது தான் உலக வாழ்வை நிறைவை செய்கிறார்கள், அதற்காகவே ஒவ்வொரு நிமித்தமும் அவர்களின் இறுதி கணத்தை நடத்துகிறது என்று தோன்றியது.
காந்திக்கும் அது தான் நிகழ்ந்ததா? அவரின் நோக்கமும் பயணமும் இந்திய சுதந்திரத்துடன் முடிந்ததா?அவருடைய ஊழ் அது தானா?
இன்றைய தலைமுறை சத்திய சோதனை புத்தகத்தை படிப்பதால் பின் வரும் பலன்களை அடைய முடியும்.
தன்மீட்சிகாந்தி , படித்து முடித்ததும் உடனடியாக அந்த படிப்புக்கு உண்டான வேலையில் பெரிதாக வெற்றி பெறுவதில்லை. படிப்பு வேறு அதை நடைமுறைப் படுத்தும் போது வரும் சிக்கல்கள் வேறு. அதில் தனக்கு ஆரம்பத்தில் எழுந்து பேசக் கூட தைரியமில்லாமல் நீதி மன்றத்தை விட்டு வெளியேறிய காந்தியும், ஆனால் அதையே நினைத்து துவண்டு விடாமல் அடுத்து வந்த சில வருடங்களில் வழக்காடுவதில் அவர் பெற்ற புகழும் தன்மீட்சி தான்.
உலகியல் வேறு, பொதுப் பணி வேறுபொதுப் பணியில் ஈடுபடும் பலர் இன்று பொதுப் பணத்திலேயே வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
ஆனால் காந்தி தன் தனிப்பட்ட வாழ்க்கைக்கு தன்னுடைய வக்கீல் தொழில் மூலம் சம்பாதித்து தான் வாழ்க்கை நடத்துகிறார். அவருடைய கனவுகளுக்காக உலகியலை ஒருபோதும் விட்டுவிடுவதில்லை.
3.பயணங்களை மேற்கொள்ள வழிமுறைகள்;
குறைவான பணத்தில், இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். காசு விசயத்தில் கறாராக சிக்கனமாக இருந்திருக்கிறார். முடிந்த வரை கால்நடையாகவே நகரங்களை சுற்றிப் பார்த்திருக்கிறார். எல்லா விதமான மக்களுடனும் பயணித்திருக்கிறார். அதிக சிரத்தை தேவைப்படாத ஆடைகள் என தன்னந் தனியான பயணம்.என்ன அப்போது அவரிடம் கேமரா இல்லை. அனைத்தையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். இருந்திருந்தால் இப்போது இருக்கும் (Life of Ram_சினிமா பாடல்) காந்தியை சித்தரிப்பதாகவே தோன்றுகிறது. பயணம் மேற்கொள்ள விரும்புவோர்க்கான குறிப்புகளும் சத்திய சோதனையில் இருக்கிறது.
4.அநீதிக்கான குரல்
இப்போது பரவலாக இருப்பது வெறும் துவேச உணர்வுகளும்,எதிர் மறையான எண்ணங்களும், வன்முறையை கிளர்த்தும் பேச்சுக்களுமே உள்ளன. அது ஒருவரது வாழ்வையே அழித்து விடும் அபாயம் உள்ளது. ஆனால் காந்தி அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கிறார், அது எதையும் தீர அலசாமல் வரும் வெற்றுக் கூச்சல் இல்லை.எதையும் ஆராயாமல் களத்தில் இறங்குவதில்லை. எல்லா தரப்பினர்களின் நிலைப்பாட்டையும் புரிந்து கொண்டு, அதில் அறம் எதுவோ அதை நோக்கியே பயணம் செய்கிறார்.சட்டத்தை மதித்து அதிகாரிகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிறார்.
எந்த காலத்திலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரே போல் தான் இருக்கிறார்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியாவிலும், சுதந்திரம் அடைந்த குடியரசு இந்தியாவிலும் சரி. அவர்களும் சராசரி மனிதர்கள் தான்.அவர்களுக்கு இடப்பட்ட பணிகளை அவர்களின் எல்லைக்குட்பட்டே செய்து வருகிறார்கள். எனவே அவர்களிடம் தேவையில்லாத வன்முறை உணர்வைத் தவிர்த்து , அவர்களுடன் இணைந்தே சமூகத்திற்கான எந்தவொரு நன்மையையும் செய்ய முடியும். காந்தி செய்தது அது தான்.இப்போது இருப்பவர்களும் அதை பின்பற்றினால் தனிப்பட்ட முறையில் வாழ்வை இழப்பதை தவிர்க்க முடியும்.
5.ஆன்மிகம்
ஆன்மீகம் என்பது வெறுமனே கடவுளை வணங்குவது அல்ல. அது அனைத்து மதங்களையும், அதன் அடிப்படைகளையும் ஆராய்ந்து, அதன் சாரங்களை எடுத்துக் கொண்டு, அதில் மெய்மையை அடைவது என்பதையே செய்கிறார்.
6.சமூகத்துடனான தொடர்ந்து உரையாடல்
அவர் எந்த தனிமனிதனுக்கும் வெறும் உபதேசத்தை கொடுப்பதில்லை. எல்லா தரப்பினருடனும் தொடர்ந்து உரையாடலில் இருக்கிறார்.அதிலிருந்து தானும் கற்றுக் கொள்கிறார்.
7.எழுதி தன்னை தொகுத்துக் கொள்ளுதல்
தற்போது ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய வாழ்வை செம்மைப்படுத் எடுத்துக் கொள்ளும் journling என்று சொல்லப்படுகின்ற எழுதித் தன்னை தொகுத்துக் கொள்ளும் முறையும் காந்தி செய்கிறார்.நிறைய எழுதுகிறார் அதன் மூலமே தன் பணியையும் தன்னையும் அறிந்து கொள்கிறார்.
இது போன்று சத்திய சோதனை படிக்கும் ஒவ்வொருவருக்கும், அவர்களின் அகத் தேடல் பொறுத்து நிறைய விசயங்களை அள்ளிக் கொள்ள முடியும்.
காந்தியுடனான பயணம் , சராசரி மனிதர்களுக்கு சோர்வைத் தரும்.உடனடியான எந்த பலனையும் தராது. ஆனால் தன்னிறைவான சமூகத்திற்கு அவருடைய தொலைநோக்கு பார்வை மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.
சத்திய சோதனை (முழுமை) ஒலி வடிவில்:
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsABk36ek1VM6BpxNPy29sfm3
காந்திக்குள் ஒரு அம்பேத்கரும், அம்பேத்கருக்குள் ஒரு காந்தியும் இருக்கிறார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். காந்தியை வாசித்தேன் இப்போது அம்பேத்கரையும் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.மிக்க நன்றி.
அன்புடன்,
மனோபாரதி விக்னேஷ்வர் .
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


