தேவிபாரதியின் நீர்வழிப்படூஉம்…

அன்புள்ள ஆசிரியருக்கு,

இருபது வருடங்களுக்கு முன் வார இதழ்களில் வெளிவந்து கொண்டிருந்த ம.செ. மற்றும் ஷ்யாமின் ஓவியங்கள் எனக்கு அந்த வயதில் வெவ்வேறு விதமான சிலிர்ப்பை தந்து கொண்டிருந்தது. இருவரும் அவரவர்  பெண் பாத்திரங்களுக்கான முகத்தை ஒரே சாயலுடன் வரைவார்கள். அந்த நேரத்தில் பழைய விகடனில் சில்பி வரைந்த ஒரு ஓவியத்தை எதிர்பாராமல் பார்க்க நேர்ந்தது. அந்தக் கோட்டோவியம் பெரும் திகைப்பை உண்டாக்கியது. எத்தனையோ வண்ணங்களுடன் வரையப்படும் ம.செ மற்றும் ஷ்யாமின் ஓவியங்கள் தராத வேறுவிதமான பரவசத்தை இந்த ஓவியம் தந்தது.  பென்சிலால் எளிதாக வரையப்பட்டது போன்று தோற்றமளித்த அவ்ஓவியம் ஒரு கலைப் பொருள்போல தனித்து ஒளிர்ந்தது . ஒசிந்தபடி சிலையாகி நின்ற பெண்ணை உயிருள்ள பெண்னெணவே உணரவைத்தது.

பெருங் கற்பனைகளுடன் பெருநாவல்கள் வந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் எளிமையாக எழுதப்பட்டதென்று தோற்றமளிக்கக் கூடிய தேவிபாரதி எழுதிய “நீர்வழிப்படூஉம்” என்ற  சிறிய நாவல் கண்ணில்பட்டது. ஆனால் சிறிய நாவலல்ல இது. கட்டடங்கள் கட்டுவதற்கான ப்ளூ ப்ரிண்ட் போன்றது. வாசிப்பவர்கள் மனதின் விரிவிற்கேற்ப கட்டடம் வளர்ந்துகொண்டே செல்வது என்பதை வாசித்தபின் உணர்த்தேன்.

தேவிபாரதி இந்நாவலில் எந்த நகரத்தையும் காட்டவில்லை. சிதைந்துபோன உடையாம்பாளையம் என்ற  சிறிய கிராமத்தை காட்டுகிறார். மெல்லிய கோட்டுச் சித்திரம்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கோடுகளை இடுகிறார். சில மனிதர்களின் வாழ்க்கை தீற்றல்களை சுட்டுகிறார் அவ்வளவுதான். அது வாசிப்பவரின் மனதில் பெரும் சித்திரமாக உருவாகியபடியே வளர்கிறது.

காருமாமா எனும் நாவிதர்  இறந்துவிட்ட நிகழ்வோடு  தொடங்கும் நாவல் காருமாமாவை மட்டுமில்லாமல் ஒரு சமூகத்தின் வாழ்வை எந்தப் புகார்களோ பழியோயில்லாமல் அடங்கிய குரலில் பதிவு செய்கிறது. நாவிதன் என்பவன் ஒவ்வொரு கிராமத்திற்கும் மனித உடலில் இருக்கும் நரம்புகளைப் போல. பிறப்புக்கும் வேலைகளுக்கும் வைத்தியத்திற்கும் இறப்புக்கும் அவர்களின்றி எதுவும் நிகழமுடியாது. ஊரின்  பண்ணயக்காரர்கள் அத்தனை பேருக்கும் அவன் பணி மிகத் தேவையானதாக இருக்கிறது. அவர்கள் செய்யும் பணிகளை சில வாக்கியங்களில் சொல்லிச் செல்கிறார் தேவிபாரதி. சற்று யோசித்தால் திகைப்பு ஏற்படுகிறது. மொத்த கிராமத்தின் இயக்கத்திற்குமே நாவிதன் முக்கியமானவனாக இருக்கிறான். ஊருக்கு  நாவிதனின் இருப்பு எத்தனை தேவையோ அதே அளவு தேவை அவன் மனைவிக்கும் உள்ளது.

உடையாம்பாளையம்  கிராமத்தில் காருமாமா செய்த வேலைகளைக் கூறுவதோடு பண்ணயக்காரர்களுடனான அவரின் உறவையும் குறைவான சொற்களில் கச்சிதமான சித்திரமாகக் காட்டுகிறார் தேவிபாரதி.

நாவலில்  பெரியம்மாவின் பாத்திரப்படைப்பு துல்லியமாக உள்ளது. அவரின் பணிகள் விவரிக்கப்படும்போது வாசிப்பவர்களின் மனதில் ஏற்கனவே தங்கள் ஊரில் பார்த்த பெரியம்மாவின் தோற்றத்தில் இவரை பொருத்திக் கொள்வார்கள். சிறு கத்தியை இடுப்பில் சொருகிக் கொண்டு திரியும் பெரியம்மா தான் பிரசவம் பார்த்த பிள்ளைகளிடம் எப்போதும் பிரியமாய் இருப்பதோடு அவர்களின் வாழ்வை தூரநின்று கவனித்துக் கொண்டேயிருக்கிறார். இது,  இப்போது மகப்பேறு பார்க்கும் மருத்துவர்களால் இயலாது.  ஊர்களில் மருத்துவச்சிகளாக இயங்கிய ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மட்டுமேயான இயல்பு அது.

ஒரே ஊருக்குள் புதிதாக வரும் நாவிதனுக்கும் ஏற்கனவே இருப்பவருக்குமான பிணக்கையும், ஒரு காலத்திற்கு பின் அந்தப் பிணக்கின் அர்த்தமில்லா தன்மையையும் நாவல் காட்டுகிறது. அறிவுறுத்தல் போலவோ தத்துவம் போலவோ கூறாமல் நிகழ்வுகளை மட்டுமே ஆசிரியர் கூறிச் செல்கிறார். உணர்ந்துகொள்வது வாசிப்பவர் திறன்.

பெரியம்மாவும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரிக்குமான இணக்கமும் நெருக்கமும் யாருக்குமே ஒருவித பொறாமையை தோற்றுவிக்கக் கூடியது. அத்தனை சிரிப்பும் களிப்புமாய் இருந்தவரின் இறப்புக்குக் கூட பெரியம்மாவை செல்லவிடாதவாறு ஏதோவொன்று நிகழ்ந்துவிட்டது. அது என்னவென்று ஆசிரியர் கூறவில்லை. ஆனாலும், அது மிகச்சிறிய விசயமாகவே இருந்திருக்கும். ஆனால் மனதில் மயிரிழை அளவு விரிசல் ஏற்பட்டாலும் அது எப்போதுமே சீர் செய்ய இயலாமல் போய்விடுவதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

சிறு சிறு நிகழ்வுகளாய் தேவிபாரதி காட்டிச் செல்கிறார். குறைவான சொற்களில் கூறிய போதும் சித்தரிப்பின் துல்லியத்தால் காட்சி மனதில் பெரிதாக விரிகிறது. சின்னப் பிள்ளைகளின் விளையாட்டு, ரேடியோவில் பாட்டு கேட்பது, தாயம் விளையாடுவது போன்றவை வாசகன் மனதில் எப்போதும் நீடிக்க கூடியவை.

கதை சொல்லியின் பெயர் ராசன் என்று ஒரே முறைதான் சொல்லப்படுகிறது. அதுவும் பெயர்தானா அல்லது செல்லமாக அழைக்கப்படுவதா என்பதும் கேள்விக்குரியதே. தந்தையின் மரணத்திற்கு பிறகு இளம் பிள்ளைகள் வேலைக்கு செல்வதும் சாயப்பட்டறையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளால் அரிக்கப்படும் கைகளின் வலி பல ஆண்டுகளுக்குப் பிறகும் மறக்காமல் நினைவில் இருப்பதும் பெரிய துயரச் சித்திரம். ஆனால் எவ்வித உணர்வுமின்றி கூறிச் செல்கிறார் ஆசிரியர்.

பாசமலர் திரைப்படம் இந்நாவலில் பெரும் பங்கு வகிக்கிறது. காருமாமாவிற்கும் அம்மாவிற்குமான உறவை விளக்குவதாக உள்ளதுடன் அம்மாவிற்கும் ராசம்மாள் அத்தைக்கும் மனதளவில் விலக்கத்தை உண்டாக்குவதும் அதே படம்தான்.  அந்த திரைப்படம் பார்க்கும் காட்சி எல்லோருடைய உணர்வுகளையும் விவரித்துவிடுகிறது. கடைசியில் ராசனையும் சாவித்திரியையும் ஜெமினி கணேசன் சாவித்திரி என அழைக்கும்போது முந்தைய காட்சி முழுவதுமாக மீண்டும்  நினைவிலெழுகிறது.

கி. ராஜநாராயணன் தன் கோபல்ல கிராமம் நாவலில் மொத்த கிராமத்தின் கதையை நாவலாக்கி இருப்பார். ஆனால் நீர்வழிப்படூஉம் நாவலில் ஒரு எளிய மனிதரின் வாழ்வை கூறியதின் வழி மொத்த கிராமத்தின் வாழ்முறையையும் மக்களின் மனநிலைகளையும் காட்டிவிடுகிறார் தேவிபாரதி.

துக்கம் நிகழ்ந்த களமாகக் கொண்ட நாவலில் சாவித்திரிக்கும் கதை சொல்லிக்குமான பார்வையாடல்கள் மற்றும்  உரையாடல்கள் மொட்டைப் பாறையில் ஏறும்போது எதிர்ப்படும் தண்சுனைபோல வாசகனுக்கு பெரும் ஆசுவாசம் அளிக்கிறது. இயல்பான அந்தச் சித்தரிப்பு, வாசித்து முடித்த பின்னும் மென்மலர் தொடுகையென மனதை வருடுகிறது.

மிக நிதானமாக நகரும் நாவலின் கடைசி அத்தியாயம் இத்தனை விறுவிறுப்பானதாக இருக்கக்கூடும் என யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள். முதல் அத்தியாயத்தில் இருந்து நாவல் முழுக்க அத்தையை வசைபாடிக் கொண்டிருக்கும்  அம்மா இறுதி அத்தியாயத்தில் அவருடன் இணக்கமாவதும் மகனின் வாழ்வையே நிர்ணயிக்கக்கூடிய அப்படியொரு வாக்குக் கொடுப்பதும் மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. முடிவு என்னவென்பதை வாசகரின் யூகிப்பிற்கு விட்டதுதான் ஆசிரியரின் உச்சகட்டத் திறன் எனத் தோன்றுகிறது.

கோட்டோவியக் கோடுகளென துண்டு துண்டு சம்பவங்களாக ஆசிரியர் கூறிச் செல்வதாலேயே ஒவ்வொரு வாசகனும் தானறிந்த தனக்குந்த வண்ணங்களைத் தீட்டிக் கொண்டு அக்கிராமத்து வாழ்வை தன் கிராமத்து வாழ்வாக்கிக் கொள்வதற்கு வாயுப்பாக அமைகிறது.

எளிய பென்சிலால் வரையப்பட்ட கோட்டுச் சித்திரம் என்ற பாவனையுடன் இந்நாவல் தோற்றமளிக்கிறது. இதனை எளிமையான நாவலென்று வாசிக்கத் தொடங்கும் வாசகனை ஏமாற்றி பிரமாண்ட  வண்ண வண்ணச் சித்திரங்களை மனதில் உருவாக்கி வாழ்வில் மறக்கவே முடியாத சில மனிதர்களுடன் தொடர்ந்து வாழ வைப்பது இந்நாவலின் ஆகப்பெரிய பணியாகும்.

ஆசிரியர் தேவிபாரதிக்கு என் வாழ்த்துகள்.

கா. சிவா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.