Jeyamohan's Blog, page 797

April 11, 2022

கலைஞனின் முழுமை

Shakespeare with children

தேவதேவன் ஒரு கவிதையில் திருவிழாக்களில் பலூன் விற்றுக்கொண்டு அலையும் ஒரு வியாபாரியாக குழந்தைகளும் கொண்டாட்டமும் சூழ வாழவேண்டுமென விரும்புவதாக தன் ’தந்தை’யிடம் கோருகிறார். நான் அதை வாசிக்கையில் புன்னகை செய்துகொண்டேன். அவர் உண்மையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக, வாழ்நாள் முழுக்க குழந்தைகளுடன் இருந்தவர். ஆனாலும் அது பள்ளி. கல்வி எனும் சுமைகொண்ட குழந்தைகள் அவை. அவர் விரும்புவது சுதந்திரமான குழந்தைகளை. அவர்களுக்கு அவர் தரவிரும்புவது மண்ணில் திரட்டிய கல்வியை அல்ல. விண்ணில் அவர்களை தூக்கிக்கொண்டே இருக்கும் பலூன்களை.

நான் கலைஞனின் உன்னத நிலை என நினைப்பது என்றுமுள்ள கொண்டாட்டம் ஒன்றில் எப்போதுமிருப்பதைத்தான். பண்டாரங்கள் அப்படி இருப்பதை நான் திரும்பத்திரும்ப கண்டிருக்கிறேன். நம் காலகட்டத்தின் பெருங்கவிஞன் அப்படி திளைப்பு நிலையில் இருப்பதை சென்ற முப்பத்தைந்தாண்டுகளாகக் கண்டுகொண்டிருக்கிறேன்.

அதுவரை எனக்கு திரும்ப திரும்ப சொல்லப்பட்டது கலைஞன் என்பவன் தத்தளிப்பு கொண்டவன், முட்டிமோதிக்கொண்டிருப்பவன், அலைமோதுபவன், அங்குமிங்கும் பார்ப்பவன் என்று. ஜே.ஜே சில குறிப்புகளில் ஓர் இடம் வருகிறது. துறவியொருவர் ‘பாலுவிடம் அங்குமிங்கும் பார்க்காதே’ என்கிறார். பாலு பின்னர் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிறான் ‘அங்குமிங்கும் பார்த்து அழிவதற்கே பிறந்தவன் நான்’ என்று. ஏனென்றால் அவன் கலைஞன் என தன்னை உணர்கிறான்.

இருத்தலியல் காலகட்டத்தில்தான் கலைஞன் அவ்வாறு வரையறுக்கப்பட்டான். அன்று எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளில், அவற்றை ஒட்டி எழுதப்பட்ட நாவல்களில் எல்லாம் எழுத்தாளன் என்பவன் சூளைச் செங்கல் குவியலிலே சரியும் தனிக்கல்லாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். எல்லா கலைஞர்களையும் அப்படிச் சித்தரித்து ஒரு கட்டத்தில் எல்லா கலைஞர்களும் அச்சித்தரிப்பை நோக்கி தங்கள் வாழ்க்கையைச் செலுத்தலானார்கள்.

அந்தச்சூழலிலிருந்து யோசிக்கும்போது அதுவே உண்மை என்றும் மற்றொன்று இல்லையென்றும் தோன்றும் ஆனால் உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் மனநிலை மட்டுமே. ஒரே ஒரு சாத்தியக்கூறு மட்டுமே. உலகவரலாற்றில் பெரும் இலக்கியங்களை எழுதியவர்கள் அனைவரும் அந்த ஒற்றை இயல்பு கொண்டவர்கள் அல்ல. அந்த ஒற்றை ஆளுமையாக படைப்பாளியை எவரும் வகுத்துவிட முடியாது.

கலைஞர்கள் பலவகையானவர்கள். அவர்களில் தன்னை வில்லாக்கி ஆத்மாவை இலக்கு நோக்கித் தொடுத்துவிட்ட யோகி நிகர்த்தவர்கள் உண்டு. உண்மையில் அவர்களே பேரிலக்கியங்களை எழுதியிருக்கிறார்கள். சிதைந்து அழிந்தவர்கள் தங்கள் சிதைவின் தடயத்தை மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறார்கள், அவ்வளவுதான். இங்கு பிறர் வாழும் வாழ்க்கையின் உயர்நிலையில் வாழ்பவனும் கீழ்நிலையில் வாழ்பவனும் அவர்கள் அறியாத உலகைச் சொல்லமுடியும். இருவகைக் கலைஞர்கள் என்றுமுள்ளனர்.

நடுத்தரவர்க்கத்து வாழ்வில் சிக்கி அதன் ஓயாத தறியோட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எளிய வாசகனுக்கு வீழ்ந்துபட்ட, சிதைவுற்ற கலைஞன் மேல் ஒரு பரிதாபமும், அதன் விளைவான கரிசனமும் உருவாகிறது. சமீபத்தில்கூட பிரான்ஸிஸ் கிருபா மறைந்தபோது அந்த அனுதாப வெளிப்பாடு ஒரு கொண்டாட்டமாகவே வெளிப்பட்டது.

வென்றமைந்த கலைஞன், ஞானிக்கு நிகரானவன். அவன் இந்த நடுத்தரவர்க்க மனிதர்களுக்கு அளிக்கும் மிரட்சியையும் தாழ்வுணர்ச்சியையும் அர்த்தமின்மையுணர்ச்சியையும் சிதைந்தழியும் கலைஞன் அளிப்பதில்லை. சிதையும் கலைஞனை நோக்கி உள்ளூர ‘நல்லவேளை, நானெல்லாம் தப்பித்தேன்’ என சொல்லிக்கொண்டு அவன் அக்கலைஞனை நோக்கி ‘அய்யய்யோ, என்ன ஒரு கலைஞன்!” என வியக்கிறான்.

christ-with-children-christopher-santer

வீழ்ந்த கலைஞர்களைப் பற்றிப் பேசும்போது ‘உண்மையான கலைஞன்யா, குடிச்சே அழிஞ்சான்’ என்று சொல்பவர்களின் பாமரத்தனம் எரிச்சலை ஊட்டினாலும் அவர்களை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் பார்வையாளர்கள் என அமர்ந்திருக்கும் மேடையில் சிதையும் கலைஞனின் வேடம் புனைந்து நடிக்கும் அப்பாவிகள்தான் எரிச்சலூட்டுகிறார்கள்.

எழுத்தாளன் மீதான அனுதாபத்துடன் படிக்கப்படுகையில் எழுத்து தன் கம்பீரத்தையும் நிமிர்வையும் இழந்துவிடுகிறது. அக்கலைஞனை பார்க்கையில் ஏற்படும் மெல்லிய குற்ற உணர்வை அதைப்புகழ்வதினூடாகத் தீர்த்துக்கொள்கிறான் எளிய வாச்கான். கற்பனை வழியாக அதில் சிக்கிக்கொண்ட இன்பக்கிளுகிளுப்பையும் அடைகிறான்.இவையனைத்துமே பொய்யான உணர்வுகள். கலை என்பது உண்மையின் அரங்கே ஒழிய எழுதுபவனும் வாசிப்பவனும் சேர்ந்து ஆடும் பாவனைநாடகம் அல்ல. படைப்பாளனுக்கு முன் வாசகன் கொள்ள வேண்டிய உறவு இப்படி ஒற்றைப்படையானதும் அல்ல.

வீழ்ந்த பெருங்கலைஞர்கள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் நான் ஓர் எழுத்தாளனை என் முன் சென்ற பாதத்தடமாகவே பார்க்கிறேன். அவ்வண்ணம் ஒரு அடியேனும் எனக்கு முன்னால் வைக்காதவர்கள் மீது தொடர்ந்த ஈடுபாடு எனக்கு இருப்பதும் இல்லை. முன்சென்றவர்கள் தொடர்பவர்களின் வழிகாட்டிகள், ஆசிரியர்கள் என்பதனால் இது ஒரு ஆசிரிய- மாணவ சரடும் கூடத்தான். ஆசிரியர் நமது அனுதாபத்துக்குரியவரல்ல. நமது மதிப்புக்கும் வழிபாட்டுக்கும் உரியவரே. காலம் என, வரலாறு என ,பண்பாடு என திரண்டு நம் முன் நின்றிருக்கும் ஆளுமை அவர்.

அவர் மேல் நமக்கு இருப்பது பரிதாபமெனில் நாம் எதைப்பார்த்து பரிதாபமும் அனுதாபமும் கொள்கிறோம்? ஒட்டு மொத்த மூதாதையர் மேலும் அனுதாபமும் இளக்காரமும் கொண்ட ஒருவனால் எதை உண்மையில் உணர்ந்துவிட முடியும்? வரலாறெனும் நீண்ட காலப்பரப்பிலிருந்து, பண்பாடெனும் சூழ்வெளியிலிருந்து அவன் பெற்றுகொண்டதுதான் என்ன? அவன் எதைச் சேர்க்க முடியும்? உருவாகி எழும் புதிய தலைமுறை அவனிடமிருந்து எதைக்கொள்ள முடியும்?

நவீனத்துவ எழுத்தாளனின் மிகப்பெரிய சிக்கல் என்னவெனில் அவன் தன்னில் தொடங்கி தன்னில் முடிகிறான் என்பதுதான். விந்தையான ஒரு மனநிலை அது.கண்மூடித்திறப்பதற்குள் இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து செல்கின்றன. இருபத்தைந்து ஆண்டுகளில் முழுமூச்சாக எழுதினால் கூட பத்துப்பன்னிரண்டு நாவல்கள் எழுதிவிட முடியும். அதற்குள் அடுத்த தலைமுறை வந்து வாசலைத் தட்டுகிறது. அவ்வளவுதானா என்று உள்ளம் துடிக்கிறது. கையிலிருப்பவற்றை கொடுத்துவிட்டு உனக்குரிய வரலாற்று இடத்தில் சென்று நின்றுகொள் என்று காலம் சொல்கிறது. அப்போதே நாம் உணரவேண்டும். இது ஒரு தொடர்பயணம் நாம் ஒரு கண்ணி மட்டும்தான் என.இயல்பாக அரங்கொழிய நம்மால் இயலவேண்டும்.

அதை உணர்வதில் நவீனத்துவ  எழுத்தாளர்களுக்கு இருக்கும் பெரும் துயரத்தையும் அலைக்கழிப்பையும் இன்று எண்ணிப்பார்க்கையில் திகைப்பு ஏற்படுகிறது. சுந்தர ராமசாமி காலம் தன்னைக்கடந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத பெருந்துயரத்தில் இறுதி ஆண்டுகளைக் கழித்து மறைந்தார். அது தெய்வத்தால் கூட மற்றொன்று எண்ணமுடியாத இயற்கையின் நெறியென ஏன் அவரால் உணர முடியவில்லை என நான் எண்ணி எண்ணி வியக்காத நாள் இல்லை.

எழுதியவற்றை கைவிட்டுவிட்டு ஜெயகாந்தன் விட்டு அமர்ந்திருந்தது போல் சுராவால் அமர்ந்திருக்க முடியவில்லை. ஏனெனில் அவர் நவீனத்துவர். ஜெயகாந்தன் தன்னை கைவிட்டுவிட்டு வள்ளலாரில், தாயுமானவரில் சென்றமைய முடிந்தது. கையில் ஒரு சிவமூலிச் சிலும்பியை ஏந்தி தன்னை ஒரு பண்டாரம் என உணர முடிந்தது.

நவீனத்துவரால் அது இயலாது. ஏனென்றால் அவன் உலகமே தன்னில் தொடங்கி தன்னில் சுழல்கிறது. தன் அறைவாசலை வந்து தட்டும் காலப்பெருக்கைக்கண்டு எப்போதும் அஞ்சுகிறது. என் அறைவாசலை சுண்டாதே தயவு செய்து என்று சுந்தர ராமசாமியின் கவிதை ஒன்று. அவர் வாசலில் எப்போதுமே காலம் சுண்டிக்கொண்டிருந்ததை கவிதைகள் காட்டுகின்றன. அந்தக்காலம் நேற்றைய காலம் அல்ல. சமகாலமும் அல்ல எதிர்காலம்.

எழுத்தாளன் சிதறிப் பரந்தாக வேண்டுமென்றில்லை. சரியான முறையில் ஓர் ஆசிரியர் அமைவாரென்றால் அவன் தன் தேடலை தெளிவாகத் தொகுத்துக்கொள்ள முடியும். பதில்களால் எவரும் தொகுக்கப்படுவதில்லை. ஏனெனில் அவை எய்தப்படுமிடத்திலேயே இருக்கின்றன. கேள்விகளால்தான் தேடல்கொண்டவன் தொகுக்கப்படுகிறான். தனது உசாவல் என்ன என்று தானே அறிந்துகொண்டு, அவற்றை தனக்கென வகுத்துக்கொள்பவனுக்கு சிதறல் இல்லை.

மெய்யான ஆசிரியன் என்பவன் மாணவனுக்கு விடைகளை அளிப்பவன் அல்ல. அவனுடைய கேள்விகளை அவனுக்கே தொகுத்து அளிப்பவன். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு முன் சரியான ஆடி என நின்றிருப்பவன். அவன் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள உதவுபவன்.

ஆகவேதான் மெய்யான ஆசிரியன் தொடக்கத்தில் மாணவனுக்கு சீற்றத்தை அளிக்கிறான். ஏனெனில் மாணவனின் நடிப்புகளை, வீண் பற்றுகளை, இழிந்த ஆணவத்தை முதலில் ஆசிரியன் அவனுக்கு காட்டுகிறான். பின்னர் அவற்றை அவனே புரிந்துகொண்டு கடந்தானெனில் தனது மெய்யான தேடல் என்ன என்று கண்டுகொள்வான் ,அவ்வாறு கண்டுகொண்ட பின்னர் அவனுக்குத் தன் அடையாளத்தை தானே வகுத்துக்கொள்ளவேண்டிய தேவை எதுவுமே இல்லை. தன்னிச்சையாக அவன் வெளிப்படலாம். ,சூழ்ந்திருப்பவர்கள் தன்னைப் புரிந்துகொள்வதற்கென ஒரு புறத்தோற்றத்தை அவன் சமைக்க வேண்டியதில்லை. எக்கணத்திலும் இயல்பாக திகழலாம்.

தேவதேவனின் கவிதை

விரும்பினேன் என் தந்தையே

பேயோ தெய்வமோ
எந்த ஓர் அச்சம்
ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே

நீ படித்தது போதும்
எல்லாரும் மேற்படிப்பு படித்தேகிவிட்டால்
இருக்கும் பிற வேலைகள் எல்லாம்
யார் செய்வார் என்றறைந்தீர்.
கடும் உழைப்பை அஞ்சினேனா ?
கூட்டாகப் புரியும் பணிகளிலே
இருக்க வேண்டிய தாளம்
இல்லாமை கண்டு அஞ்சினேனா ?

விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்து புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதி கொண்டு முடிவின்றி இப்புவியை
பார்த்துக்கொண்டு இருப்பதற்கும்

காலமெல்லாம் திருவிழாவும்
மழலைகளின் கொண்டாட்டமுமாய்
என் வாழ்வை இயற்றிடலாம் என்று எண்ணி
ஊர் ஊராய் சுற்றிவரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்

மொய்க்கும் குழந்தைகளின் நிர்மால்யம் தேடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்து காத்துக் கிடப்பதற்கும்

விரும்பினேன் நான் என் தந்தையே
வியர்வை வழிந்தோட வீதியிலும் வெயிலிலும்
உழைப்ப்போர் நடுவே
அடுப்பு கனலுகிற சுக்கு வெந்நீர் காரனாகிநடமாடவும்

சாதி மதம் இனம் கடந்து அலைகிற
யாத்ரிகப் புன்னகைகள் அருந்தி என் உள்ளம் குளிர
வழிகாட்டி வேடம் தரிக்கவும்

விரும்பினேன் என் தந்தையே
அன்பர் குழுக்கள் நடுவே வாத்தியமிசைக்கவும்
பாடவும் நடமிடவும்
விரும்பினேன்

இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்
இன்று நினைத்துப் பார்க்கிறேன் உம்மை என் தந்தையே
நம்மை ஆட்டிப் படைத்த மறைபொருளின் நோக்கையும்

தேவதேவன் கவிதைகள் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2022 11:35

கதையியல் – கடலூர் சீனு

இனிய ஜெயம்

இந்த 2020 இல் தமிழ் நிலத்தின் பொது வாசிப்பு சூழல் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதைக் காண முடிகிறது. மொபைல் புரட்சியும் ஜியோ புரட்சியும் இதன் துவக்கம்.ஒரு பெட்டிக்கடையில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் விற்பனை உள்ள பல்வேறு தினசரிக்கள் இடத்தை 24 மணி நேர செய்தி சானல்கள் இடம் மாற்றி விட்டன. இன்று 25 வயதுக்கு உட்பட்டவர்களில் ஒரு செய்தித்தாளைக் கொண்டு தங்கள் காலையை துவங்குவோர் அநேகமாக எவரும் இல்லை.பத்திரிக்கையில், சமையல் பத்திரிக்கை, ஆத்மீக ஜோதிட பத்திரிக்கை பெண்கள் பிரத்யேக பத்திரிக்கை அனைத்தையும் யூ டியூப் இடம் மாற்றி விட்டது. அரசியல் சமூக குற்ற விஷயங்களை ஆய்வு செய்யும் ஜர்னலிச பத்திரிகைகள் கிட்டத்தட்ட அதன் இறுதி மூச்சை தக்க வைக்க போராடிக்கொண்டு இருக்கின்றன. விகடனும் குமுதமும் வெறும் விளம்பரங்களால் நிறைந்து, ஒரு பக்கத்தில் ஒரு பெரிய படம் அதில் கீழே மூன்றே வரிகள் மட்டுமாக நெட் ப்ளிக்ஸ் அமேசான் போன்ற தளங்களின் தொடர்கள் படங்கள் குறித்த அறிமுகம், முகநூல் அரட்டைகளின் மீள் பதிவு சினிமா செய்திகள் tv செய்திகள் என பத்திரிக்கை என்பதன் அடையாளத்தையே இழந்து தள்ளாடிக்கொண்டு இருக்கின்றன.இதே நிலைதான் பொழுதுபோக்கு வாசிப்புக்கும். அநேகமாக இந்திரா செளந்தர்ராஜனுடன் அவரை இறுதியாக கொண்டு இந்த வெகுஜன மாத எழுத்து வரலாறு முடிவுக்கு வருகிறது என்று சொல்லிவிட முடியும்.இந்த தலைமுறையில் ஒரு 25 வயது யுவனோ யுவதியோ அமேசான், நெட்ப்ளிக்ஸ்,  தாண்டி வந்து புத்தகத்தை கையில் ஏந்தி அதுவும் தமிழில் வாசிக்க வரும் நிலை மிக அரிதான ஒன்றாகவே படுகிறது. அப்படி வாசிக்க வருகையில் இன்று கேளிக்கை எழுத்து என்ற ஒன்றோ சுஜாதா போன்ற ஒருவரோ களத்தில் இல்லை. களத்தில் இருப்பது தீவிர இலக்கியப் புனைவுகள் மட்டுமே. இந்த தீவிரக் களத்துக்கு  வாசகர்களை கொண்டு வருவதில், யூ டியூப்பில் கதை சொல்லும் பவா செல்லத்துரை, பாத்திமா பாபு போன்ற பலர் முக்கிய காரணிகள். அந்த யூ டியூப் களத்தில் கதை சொல்லிகளுக்கு இருக்கும் ஒரே கருவூலம் தீவிர புனைவுகள் மட்டுமே கொண்டது. அங்கேயும் வெகு மக்கள் கேளிக்கை எழுத்துக்கள் எதுவும் கதைகளாக சொல்லப்படுவதில்லை.இது ஒரு முக்கியமான தருணம். தங்களை மடைமாற்றும் எல்லா கேளிக்கைகளில் இருந்தும் மீறி, வாசிக்க வருவோருக்கு வாசிக்க கிடைப்பது ஒரு நேரடியான தீவிர புனைவு உலகம். இப்படித் தீவிர இலக்கியத்தின் உள்ளே வரும் வாசகருக்கு முன் ஒரு முக்கியமான பிரச்னை உள்ளது. அது ‘சொல்லப்படும்’ கதையின் தாக்கம் என்பது வேறு. அந்தக் கதையை எழுத்தாக வாசிக்கையில் அந்த எழுத்து குறி வைக்கும் தாக்கம் என்பது வேறு. சொல்லப்பட்ட   கதையை எழுத்தில் வாசிப்பதன் வழியே, கேட்கப்பட்ட கதையை எழுத்து வடிவில் வாசிக்கும் இன்பத்தை மட்டுமே பெற்று கொண்டு, ‘எழுத்து’ வழியே சென்று எதை அடைய வேண்டுமோ அதை அடைவதை வாசகர்கள் தவற விட்டு விடுவார்கள்.காரணம், மரபார்ந்த இசையை ரசிக்க அதன் ஆழங்களுக்கு செல்ல, அதன் அடிப்படை குறித்த சில விஷயங்கள் எவ்வாறு பரியச்சயம் கொண்டிருக்க வேண்டுமோ, அதே நிபந்தனை தீவிர இலக்கியத்துக்கும் உண்டு.அப்படி தீவிர இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தவர்கள் அதிலேயே நிலைபெறும் வண்ணம் அதன் அடிப்படைகளை கற்றுத் தரும் நூல்கள் மிக மிக குறைவே. ஜெயமோகன் எழுதிய நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், நாவல் கோட்பாடு, எழுதும் கலை போன்ற  இலக்கிய அடிப்படை குறித்த நூல்கள் வரிசையில் நான் வாசிக்க நேர்ந்த நூல் , எதிர் வெளியீடாக க.பூர்ணசந்திரன் எழுதிய – கதையியல் – எனும் நூல்.ஓவியத்தை எடுத்துக்கொண்டால் எக்கலையும் போலவே அதிலும் கலை கலையல்லாதது எனும் அடிப்படை வேறுபாடு துவங்கி, கலையில் உள்ள பல்வேறு அழகியல் ஓடைகள் எனும் பிரிவுகள் வழியே நீளும் நெடிய மரபு அது. அதில் நுழைய அறிமுக ரசிகன் கவனம் குவிக்க வேண்டிய கற்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் (சட்டகத்தினுள் கோடுகள், வடிவங்கள், உருவங்கள், அவை அமைத்திருக்கும் பின்னணி முன்னணி இடங்கள் அவற்றின் நிலைகள், வெளி, தூரம், வண்ணம், ஒளி, இருள், நுண் விவரனை) சில உண்டு. கோடுகள் குறித்த பயிற்சியே ஓவியத்தின் இம்ப்ரஷனிசம் கியூபிசம் போன்ற அழகியல் வகை மாதிரிகளை அணுக முதல் படி.இப்படி ஓவியத்தின் ஒவ்வொரு அலகையும் நுணுகி அணுகி அறிவதைப்போல, இலக்கியத்திலும் அதன் தொழில்நுட்ப கட்டுமானத்தை புறவயமாக அணுகி அறியும் வகைமையை பயிற்றுவிக்கிறது இந்த நூல். புனைவு வகைகளில் சிறுகதைகள் எனும் வகையை மட்டும் பேசுபொருளாக எடுத்துக்கொள்ளும் இந்த நூல் 15 இயல்களில், முதலில் கதைகளின் தோற்றுவாய் என்னவாக இருந்தது, குட்டிக்கதைகள் நீதிக்கதைகள், தேவதைக்கதைகள், உருவகக் கதைகள் என அவற்றின் வகை மாதிரிகள் வழியே, பாரதியார் சிறுகதைகள் வரை அதன் வளர்ச்சி முகம் விளக்கப்படுகிறது.அடுத்து இலக்கிய வாசிப்பில் கேளிக்கைக்கும் தீவிர கலைக்கும் உள்ள அடிப்படை வித்யாசம் விரிவாக விளக்கப்படுகிறது. பின்னர் பாரதி முதல் இன்று வரை தீவிர இலக்கிய  சிறுகதை வரலாற்றை அதில் நிகழ்ந்த பரிணாமகதியை சுருக்கமாக சொல்லி, அதிலிருந்து சிறுகதை எனும் செவ்வியல் வடிவம் சார்ந்த கதைக்கட்டுமான அலகுகளை விளக்கப் புகுகிறது இந்நூல்.கருப்பொருள், கதையமைப்பு,கதைப்பின்னல், பாத்திர உருவாக்கம், நோக்குநிலை, முரண், பெர்செப்ஷன், எமோஷன், மனவுணர்வு, பின்னணி, சூழல் வர்ணனை, துவனி, மொழிநடை, குறிப்பாலுணர்த்தும் பாங்கு, என கதைக்கட்டுமானத்தில் எவற்றை வாசகர் நெருங்கி அறிய வேண்டுமோ அவை ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கி இறுதியாக கதை வாசிக்கும் முறை எனும் அத்தியாயத்தில் முழுமை கொள்கிறது இந்நூல்.இந்த நூலின் பலம் என்பது இது ‘ரசனை’ என்பதை மையமாகக் கொண்ட பயிற்சி நூல் என்பது. நூலுக்குள் திட்டவட்டமாகவே அகடமிக் பயிற்சிக்கு மாற்றாக மாணவர்களுக்கு உண்மையாகவே பயனுள்ள வகையில் இலக்கியத்தை ரசனை அடிப்படையில் அறிமுகம் செய்ய வேண்டிய தேவை பேசப்படுகிறது. உணர்வையும் கற்பனையையும் கொண்டு இந்த வாழ்வை உள்ளார்ந்து அறிய ஒரு பாதையே இலக்கியக் கலை எனும் நோக்கிலேயே இதிலுள்ள கல்வி அமைந்திருக்கிறது.  கேளிக்கைக்கும் கலைக்கும் உள்ள வித்தியாசம் துவங்கி செண்ட்டிமெண்ட்டுக்கும் உணர்ச்சிகர்த்துக்கும் உள்ள பேதம் வரை, கலை சார்ந்து வாசகரை ஆற்றுபடுத்தும் அனைத்து கூறுகளையும் புதுமைப்பித்தன் துவங்கி, கு பா ரா, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் செக்காவ் ஆகியோரின் முக்கிய கதைகள் வழியே (சில கதைகள் முழுமையாகவே தரப்பட்டிருக்கிறது) விளக்குகிறது இந்நூல். ஒவ்வொரு அத்தியாயம் வழியாகவும் வாசகர் நகர நகர அந்த அத்தியாயம் வழியே பிற கதைகளுக்கு சென்று இந்நூல் கூறியவற்றை  கற்பனை செய்ய கண்டடைய சிந்தனை செய்ய ஊக்கம் பெறும் நிலையை இலக்கிய அறிமுக வாசகர் அடைய உத்தேசித்து உருவாக்கப் பெற்ற இந்த நூலின் பலவீனம் என்று நான் கருதுவது இறுதியாக வரும்1. சில புதிய நோக்குகள், 2.புனைகதைகளை மதிப்பிடுத்தல் எனும் இரண்டு அத்தியாயங்களை.புதிய நோக்குகள் அத்தியாயத்தில் பேசப்படும் ஸ்டக்சுரலிசம் வழியாக கதைக் கட்டுமானத்தை அறிவது குறித்த அறிமுகம் வேறு தனி நூலாக வர வேண்டிய இந்த நூலுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. இந்த நூலின் ஒருமையை குலைப்பதாகவே இந்த அத்தியாயம் இருக்கிறது.புனைகதைகளை மதிப்பிடுதல் அத்தியாயத்தில்,  எழுத்துக்கு இருக்க வேண்டிய சமூக பிரக்ஞ்சை, எளியோர் பக்கம் ‘ நிற்க’ வேண்டிய  கலை, வாசகன் எழுத்தாளர் படைப்பை விமர்சன நோக்குடன்தான் அணுகவேண்டுமேயன்றி ஹீரோ ஒர்ஷிப் செய்யக்கூடாது போல இன்னபிற குறித்தெல்லாம் பூர்ணசந்திரன் பேசுகிறார். இதெல்லாம் அவரது தனிப்பட்ட கருத்தே தவிர அவற்றுக்கும் இந்த நூலுக்கும் தொடர்பு ஏதும் இல்லை. தேடித் தேடி வாசித்து அதன் இறுதியில் இவர் ‘தன்னுடைய’ எழுத்தாளன் என்று எப்போது ஒரு வாசகன் சொல்லத் தலைப்படுவானோ  அப்போதே அங்கு இலக்கியம் அளிக்கும் ‘பண்பாட்டு’ தாக்கம் தொழில்படுகிறது என்று பொருள். செக்காவை தன்னுடைய எழுத்தாளன் என்று உணராத ஒரு வாசகன் செக்காவை வாசிக்கவே இல்லை என்றுதான் பொருள். டால்ஸ்தாய் பற்றி எழுதும் க நா சு, எழுதி எழுதி இறுதியில் டால்ஸ்தாயை ‘மகரிஷி’ என்று விளித்து நிறைவு செய்கிறார். இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள நூலாசிரியர் இன்னும் வெகுதூரம் போக வேண்டும்.ஆக,  இந்த இரண்டு அத்தியாயங்களை தவிர்த்துவிட்டால் தீவிர இலக்கியச் சிறுகதை என்றால் என்ன? அதை ‘எதற்காக’ வாசிக்க வேண்டும்? வாசிக்கையில் ‘எவற்றையெல்லாம்’ கவனம் குவித்து வாசிக்கவேண்டும் என்று அறிமுக வாசகன் கற்றுக்கொள்ள உதவும் ஒரு முக்கியமான நூல் க. பூர்ணசந்திரன் எழுதிய இந்த – கதையியல் – எனும் பயிற்சி நூல்.கடலூர் சீனு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2022 11:32

டார்த்தீனியம் -கடிதம்

அன்புள்ள ஆசிரியரே!!

வணக்கம். நான் தீபிகா அருணின் “கதை ஓசை” என்னும் போட்காஸ்த் தளத்தில் பல ஒலிப்புத்தகங்களை  கேட்டு வருகின்றேன். அதில் சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய “டார்த்தீனியம்” குறுநாவலை ஒலிவடிவில்  கேட்டேன். “டார்த்தீனியம்” பெயரே மிக வித்யாசமாக இருந்தது எனக்கு. சரி கதையை கேட்போம் என்று  ஆரம்பிதேன். கேட்க கேட்க என்ன ஆவலை தூண்டியது. முதல் மூன்று அத்தியாயங்களில் இது ஒரு பேய் அல்லது அமானுஷ்யம் கலந்த கதையோ? என்று எண்ணினேன். அடுத்துக் கேட்ட அத்தியாயங்களில் அது முற்றிலும் வேறு என்பதை உணர்ந்தேன். மிக ஆழமாக சிந்திக்க வைத்த ஒரு கதை இது. கடைசியில் ஒரு வரி எழுதியிருந்தீர்கள், ” அதன் கிளைகள் முழுக்க கொத்து கொத்தாக விதைகள் அடர்ந்திருப்பதை மூச்சடைய வைத்த அச்சத்துடன் கண்டேன்!”. நிஜமாகவே என்னால் இரண்டு மூன்று நாட்கள் என் எண்ணங்களில் இருந்து இக்கதை அகலவில்லை. நம்முடைய ஒரு சிறிய கெட்டபழக்கம் நம்மை எவ்வளவு தூரம் வரை நம்மை ஆட்டிப்படைக்கிறது. நம்மை மட்டும் அல்லாமல் நம்மை சுற்றியுள்ள அனைவரையுமே அது பாதிக்கிறது என்பதை தங்கள் எழுத்துகளின் கூர்மையில் மிக ஆழம்.

ஒலிப்புத்தகி சகோதரி தீபிகா அருண் பற்றி நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். தங்களின் எழுத்துகள்அவருடைய குரலில் மிக அருமையாக பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். என் மேனி பல இடங்களில் திடுக்கிடுவதை நான் உணர்தேன்.அது என்னை மிகவும் பயமுறித்தியது என்றே சொல்ல வேண்டும், அவ்வளவு ஆழம் சகோதரியின் குரலில். ஒரு சின்ன நாய் “மக்ரூணி” அதற்கு கூட அவருடைய மெனக்கெடல் தெரிந்தது. அவருடைய குரலில் தங்களின் கதைகள் பல வர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

இக்கடித்ததுடன் இணைய லிங்கை கொடுத்துளேன்

https://www.youtube.com/watch?v=AnKQS8LdJ50&list=PL-huV8UkorxtKBSDPOwksIAID4nON6O_v&index=4

நன்றி ஆசிரியரே!!!

இப்படிக்கு வாசகி,
ஸ்ரீநித்யா சுந்தர்.

***

அன்புள்ள ஸ்ரீநித்யா

டார்த்தீனியம் ஒரு காலகட்டத்தின் அச்சத்தின் பதிவு. என் தனிப்பட்ட வாழ்க்கையின் அச்சம் மட்டுமல்ல, அந்தக் காலகட்டமே அப்படி கொந்தளிப்பும் அச்சமும் நிறைந்ததாகவே இருந்தது என அக்கால எழுத்துக்கள், சினிமாக்கள் அனைத்திலிருந்தும் தெரிகிறது. வாசிப்புக்கு நன்றி

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2022 11:31

அறம் ஒரு கனவு

பேரன்புக்குரிய ஜெ அவர்களுக்கு,

தருமபுரி மாவட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2005-ஆம் ஆண்டு கல்வியை முடித்து அதே ஊரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டப்படிப்பை முடித்து, முதுகலை பட்டப்படிப்பிற்காக கோயம்புத்தூர் சென்று ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து அதனையும் நன்முறையில் முடித்து வேலைக்காக சென்னை, பெங்களூர், சேலம் என பல ஊர்களைச் சுற்றிய பின்பு இன்றும் பள்ளி நாட்கள் மீதும், பள்ளிச் சூழலின் மீதான காதல் சிறிதளவும் மாறவில்லை.

அரசுப் பள்ளிகளில் அன்றைய கால கட்டத்தில் கட்டுப்பாடுகள் என பெரிதாக இருந்ததில்லை எனினும் சுய கட்டுப்பாட்டுடன் கல்விகற்று ஆசிரியர்களிடம் எவ்விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லாமல் வெளி வந்த மாணவர்களில் நிச்சயம் நானும் ஒருவன் என்பதை இன்று நினைக்கையில் எனக்கு  வியப்பாகவும் உவகையாகவும் உள்ளது.

ஆசிரியர் பணி அறப்பணி என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு எனக்கு. ஆசிரியர்கள் எப்போதும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை நான் என் தந்தை வாயிலாக கற்றுக் கொண்ட பெரும் பாடம். அப்படி என் ஆசிரியர்கள் அப்போதும் இப்போதும் உயர்ந்த நிலையிலேயே என் மனதில் குடிகொண்டுள்ளனர். ஒருமுறை ஆசிரியரின் அறிவுரையை கேட்ட என்னை பிரிந்து சென்ற என் நண்பனை நினைவு கூர்கிறேன். சில மாதங்களுக்கு பின்னரே மீண்டும் என்னிடம் அவன் பேசினான்.

விடுமுறை நாட்களில், மகிழ்ச்சியான தருணங்களில், மனம் உளைச்சல் அடையும் சந்தர்ப்பங்களில் என நான் தேடிச் செல்லும் இடம் பள்ளி தான் . அங்கு சென்று மரத்தின் நிழலிலோ அல்லது மைதானத்திலோ அமர்ந்து கொண்டு சில மணி நேரம் இருக்கும் போது என்னை முழுமையாக மீட்டுக் கொடுக்கும் இடமாக-நிலமாக இருந்து வந்துள்ளது. இப்போது அதேபோன்ற உணர்வு குக்கூ காட்டுபள்ளி நிலத்தில் எனக்கு கிடைக்கின்றது.

கொரொனா அலைகள் தொடங்கி கிட்டத்திட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்கு சென்று பெரிதாக நேரம் செலவிடவில்லை. நேரமின்மை என்று சொல்லிவிட முடியாது ஆனாலும் வேறு வழியின்றி அதையே காரணமாக எண்ணிக்கொள்கிறேன்.

என் பள்ளி நாட்களில் தமிழ் வகுப்பை மட்டும் ஏனோ மர நிழலில் மண் தரையில் அமர்த்தியே பாடங்களை கற்றுக் கொடுக்கும் வழக்கத்தை எங்கள் தமிழ் ஆசிரியர்கள் பின்பற்றினர். அறுபது மாணவர்களுக்கும் மேலாக இருக்கும் எங்கள் வகுப்பு. மரக்குச்சிகளை வைத்து நிலத்தை ஆராய்வது, எறும்புகளை வதைப்பது, தும்பி பிடிப்பது, அத்தும்பிகளை சிறு சிறு கற்களை தூக்க வைத்து தண்டிப்பது, மண்ணில் ஓவியங்கள் வரைவது, புற்களை நிலத்தை விட்டுப் பிரித்து எடுப்பது, வார்த்தை விளையாட்டு, புத்தக கிரிக்கெட் விளையாடுவது என பாடத்தை தவிர மற்ற செயல்களில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்துள்ளேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளியில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்தேன் உறக்கத்தில். உறங்கும் போது வரும் கனவுகள் கடினமான மனங்களை மிக எளிதாக ஆக்கி விடுவதை உணர முடிந்தது.

எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை, தமிழாசிரியர் ஒரு போட்டி ஒன்றை அறிமுகம் செய்தார். ஒரு சொல்லை சொல்வார், அதற்கு இணையாக நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு சொல்லை கூறவேண்டும். (உண்மையில் பள்ளி காலத்தில் இப்படி ஒரு போட்டியோ விளையாட்டோ நடந்ததில்லை). முடிந்த வரை நேர்மறை எண்ணங்களை விதைக்கும் சொற்களாக இருக்க வேண்டும். மேலும் அச்சொல்லைப் பற்றிய எங்கள் பார்வையை அவருக்கு ஒரு கடிதமாகவோ இல்லை மின்னஞ்சலாகவோ எழுதி அனுப்ப கேட்டுக் கொண்டார்.

எல்லோரும் ஒத்துழைப்பு தருவதாக கைகளை உயர்த்தி சம்மதம் தெரிவிக்க போட்டி தொடங்கியது. ‘அறம்’ என்ற சொல் ஆசிரியரின் குரலில் ஒலித்தது. தன்னிலை மறந்து நான் சில நொடிகள் உள்ளூர புன்னகைத்துக் கொண்டேன். அதற்கு இணையான சொல்லை முதலில் கூறிவிடுவது என்று முடிவு செய்து கையை உயர்த்தி ஐயா “அறம்-” என்பதற்குள் அறம் – ஆனந்தம் என்றான் என் அருகில் இருந்த நண்பன்.

பந்திக்கு முந்து பரீட்சைக்கு பிந்து என்ற கொள்கையுடன் வாழும் பல சக மாணவர்கள் உடனடியாக பதில் கூற ஆரம்பித்ததைப் பார்த்து நான் சில நிமிடங்கள் வாயடைத்து போனேன். சற்று சுதாரித்துக் கொண்டு நான் பதில் சொல்ல முற்பட்ட ஒவ்வொரு முறையும் எனக்கு முன்பாக ஒரு குரல் ஒலித்தது. அறம்-அடையாளம் என்றான் ஒருவன், அறம் – அடைக்கலம் என்றான் மற்றவன், அறம் – கல்வி, அறம் – கொடை, அறம் – கணிவு, அறம் – தைரியம், இன்பம், இல்லாமை, ஈகை, உண்மை, உழைப்பு, உயிர், உயர்வு என அடுத்தடுத்து இணைச்சொற்களின் மழை பெய்யத் தொடங்கியது.

இப்படியே சென்றுக் கொண்டிருந்த போட்டியை பார்த்தபோது எங்கே நான் கூற நினைத்து வைத்திருக்கும் சொல்லை வேறு யாரும் சொல்லி விடுவார்களோ என பதட்டம் கொண்டேன். அறம் – பொறுமை, அறம் – செம்மை, அறம் – மேன்மை, அறம் – உச்சம், அறம் – ஊக்கம், நிதானம், நிதர்சனம், நாணயம், நம்பிக்கை, பணிவு, பாசம், செயல், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, துணிவு, அன்பு, அடக்கம், முயற்சி, தெளிவு என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்ல நான் ஒரு கட்டத்தில் சோர்வடைந்தேன்.

எனக்கான வாய்ப்பு கிடைக்குமா என்ற ஐயமும் நான் சொல்லும் போது ஆசிரியரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பெருகியவண்ணம் இருந்தது.

அறம் – கர்ஜனை என்று கம்பீரமாக ஒருவன் உரக்க கூற, அவனைக் கடந்து அறம் – ஜெயமோகன் என்றான் ஒருவன் மேலும் உயர்ந்த குரலில். அறம் – நயன்தாரா என்ற ஒருவனை ஆசிரியர் அதட்டினார், என் குரல் ஒலிக்கவே இல்லை என்பதை அப்போது தான் உணர்ந்தேன். என்னை அழைத்து ஆசிரியர் கேட்க மாட்டாரா என்ற ஏக்கத்துடன் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர் செவிகளை என் குரல் எட்டவில்லை என்பதும் அவர் பார்வையில் நான் விழவே இல்லை என்பதனையும் கண்டு கொண்டேன்.

அடப்போங்கடா என்று கட்டெறும்பு ஒன்றை சீண்டத் தொடங்க அறம் – கருணை என்று ஒரே நேரத்தில் இரண்டு குரல்கள், நான் மிரண்டு போனேன். சக மாணவர்களின் சொற்கள் அறம் – அர்ப்பணிப்பு, ஆற்றல், ஆக்கம், ஏற்றம், வெற்றி, வெளிச்சம், போராட்டம், ஒற்றுமை, தாகம், தவிப்பு, ஞானம், தாய்மை, ஒளி, கடவுள், வானவில், தேடல், நேர்மை, அற்புதம், தடம், யாகம், மருத்துவம், புன்னகை, அறம் – தர்மம் என ஒலித்துக் கொண்டே இருந்தது.

சட்டென்று கனவு கலைந்து எழுந்து அமர்ந்து கொண்டு அறம் என்ற சொல்லிற்கு இணைச் சொல்லை ஆசிரியரிடம் நான் பதிவு செய்யவில்லையே என்ற உணர்வுடன் கடிகாரத்தை பார்த்தேன், மணி அதிகாலை 3.55. அறம் – ஜெயமோகன் என்று ஒரு நண்பன் கூறியது நினைவிற்கு வந்தது.

வெண்முரசில் – போருக்கு செல்வதற்கு முன் வெற்றி சூழ்க என ஆசி கேட்கும் சகுனியிடம் ராஜமாதாவாக உறுதியாக உணர்ச்சி மிகுதியாக காந்தாரி சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

“அறம் வெல்லும், அறம் வெல்லும், அறமே வெல்லும்”

“அறம் – பேரழகு”.

நன்றி கலந்த பேரன்புடன்

இரா.மகேஷ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2022 11:31

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன – வாசிப்பனுபவம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் வாசித்த இ.பா அவர்களின் முதல் ஆக்கம் இது. எளிமையான மொழி நடையால் வாசிக்க மிகவும்இலகுவாகவும், உவகையாகவும் இருந்தது. சிக்கலான மனவோட்டங்களை, தத்துவார்த்த விசாரங்களைசிறகுகள் காற்றில் பறப்பது போன்ற மொழியில் எழுத முடியும் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களுக்கிடையில் நடக்கும் உறவுச்சிக்கல்களை மையமாக கொண்டே கதைநகrகிறது. கதையின் நாயகன் அமிர்தம் டெல்லியில் மத்திய அரசாங்க அலுவலகத்தில் உயர் பதவிவகிக்கிறான். அவனது மனைவி திலகத்தின் வற்புறுத்தலின் பேரில் ஒரு நாடகம் பார்க்க செல்கிறான் அங்குபானுவை பார்க்கிறான். அவள் அவனது இளமை கால காதலி நித்யாவை போலவே இருக்கிறாள். நித்யாவுடனானகாதல் நாட்கள் நினைவேக்கமாக அவனுள் எழ ஆரம்பிக்கிறது. அங்கிருந்து அவன் மனதில் ஹெலிகாப்டர்கள்பறக்க தொடங்குகின்றன.

அவன் பானுவிடம் பழக ஆரம்பிக்கிறான் அதனால் அவனது மனைவிக்கும்அவனுக்கும் இடையில் பிரச்சனைகள் எழுகிறது. பானுவின் பேச்சு, நடவடிக்கைகள் அனைத்தும் அவனுக்குநித்யாவுடனான காதல் நாட்களை நினைவிலெழச் செய்கிறது. அவன் தனது இழந்த இளமையை பற்றிய கற்பனைகளிலேயே இருக்கிறான். அவன இளமை நாட்களின்துடிப்பை, ஆற்றலை பானுவுடன் பழகுவதின் மூலம் மீட்டு விடலாம் என்று கனவு காண்கிறான். ஆனால் அவனதுகனவுகளை சுமந்து பறந்த அந்த ஹெலிகாப்டர் ஒரு கட்டத்தில் கீழே இறங்குகிறது. அது என்றென்றைக்கும்கீழே இறங்கியதா அல்லது மீண்டும் பறந்திருக்குமா என்று வாசகர்கள் கற்பனை செய்து பார்க்ககூடிய ஒருநிகழ்வுடன் நாவல் முடிகிறது.

திலகம் கணவன் என்ற தனி மனிதனை விட, கணவன் என்ற ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கிராமத்துபெண். நாவலில் அமிர்தம் சொல்வது போல ‘Established values’ ல் முரட்டுதனமான நம்பிக்கை வைத்துள்ளஅரைகுறை படிப்புள்ள பெண். அவர்கள் இருவரின் ரசனையும் ஒன்றுவதே இல்லை. அதனாலேயே அவனதுதிருமண வாழ்வு சலிப்புற்றதாகிறது. நித்யா நவீன விழுமியங்களை கொண்டிருக்கும் யதார்தமான, கூர்மையான பெண். திலகத்தின் அடுத்ததலைமுறைப் பெண். அவளை போன்ற பெண்ணையும் அவனால் கையாள முடிவதில்லை. அவளது சூட்சுமம், சமயோசிதம், பொறுமை அவனது ஈகோவை சீண்டி கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அதுவே பிரிவில்முடிகிறது.

பானுவும், நித்யாவை போலவே நவீனப் பெண். இன்னும் இளமையானவள். இருவருக்கும் நிறைய பொதுவானவிஷயங்கள் இருக்கின்றன அதில் ஒன்று அவர்கள் இருவருக்கும் தந்தை இல்லை என்பது. தாயுடனேயேவளர்கிறார்கள். நித்யாவுக்கு அவள் தாயுடன் இருக்கும் நெருக்கம், பானுவுக்கும் அவளது தாய்க்கும் இல்லை. பானுவுக்கும் அவளது தாய்க்கும் இருக்கும் விரோதம் Electra complex க்கு கூறப்படும் கிரீக்க தொன்மத்தைஒட்டி சிந்திக்க தூண்டுகிறது (இ.பா வின் 1970 காலகட்ட எழுத்துகளில் இருத்தலியல் மற்றும் ப்ராய்டியதத்துவங்களின் தாக்கம் இருந்தது என்று ஜெமோ ஒரு பதிவில் குறிப்பிடுகிறார்). அவளுக்குள் ஒருநுண்மையான உள சிக்கல் இருப்பதை உணர முடிகிறது. தனது மகள் வயதிருக்கும் அவளுடன் பழகுவதில் அவனுக்கு தயக்கமும் அதே சமயம் இளமையாக உணர்கிறநிறைவும் இருக்கிறது. எனினும் பானுவும் அவனால் சமாளிக்க முடியாத பெண்ணாகவே இருக்கிறாள்.

இந்த மூன்று பெண்களுக்குள்ளும் எந்த கேள்விகளோ, சிக்கல்கள்களோ இல்லை. அமிர்தம் பல்வேறுவினாக்களால் குழம்பி அலைக்கழிகிறான். அவனது குழப்பஙகளும் கேள்விகளுமே அவனைகோழையாக்குகிறது. அவனை எங்கும் தொடர்ந்து நிலைகொள்ள விடாமல் செய்கிறது. நாவலில் பானர்ஜி (அமிர்தத்தின் நண்பன்-பெண்களை வெறுக்கும் நிரூபனவாத அறிவியல் மீது நம்பிக்கைகொண்ட அறிவுஜீவி) அமிர்தத்தின் குழப்பங்கள், பிரச்சனைகளையெல்லாம் கேட்டுவிட்டு. உன்னுடைய பிரச்சனை நீதான், என்கிறான். உன்னுடைய் பலவீனங்களை சமாளிப்பதற்கு பல தத்துவ காரணங்களை உற்பத்தி செய்து கொள்கிறாய்என்கிறான். இறுதியாக எதை செய்தாலும் நாணயமாக செய். அதுவே பிரதியட்ச உண்மை என்கிறான்.

இந்த நாவலில் அமிர்தம்(ஆண்களின்) அடிப்படை பண்பான ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவுவதற்கு பலதத்துவ, இருத்தலியல் காரணங்களை தானே உற்பத்தி செய்து கொண்டு முழுவதுமாக அந்த பலவீனத்தை ஏற்றுகொள்ளவும் முடியாமல், அதனை கடக்கவும் முடியாமல் அல்லாடும் சித்தரமே காண்பிக்க படுகிறது. நாவலின் பெண்கள் அவர்களது அடிப்படை இயல்பிலிருந்து பெரிதும் மாறுபடாமலே அனைத்தையும்எதிர்கொள்கிறார்கள். அவன் மனதில் பறந்த ஹெலிகாப்டர்கள் அனைத்துமே ஆண்கள் இங்கு பல ஆயிரம்தத்துவங்களாலும், கோட்பாடுகளாலும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் குழப்பங்களே. அது எதுவாக இருந்தாலும்அடிப்படை இச்சைகளிலிருந்து நாம் சில பறத்தல்களை மட்டுமே செய்துள்ளோம், அந்த ஹெலிகாப்டர்கள்இன்று வரை சிறிது பறந்து நம் அடிப்படைகளுக்கே திரும்பி வந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையேகாட்டுகிறது.

அசோகமித்ரனின் பிரயாணம் சிறுகதையை பற்றிய கட்டுரையில் அந்த சீடன் அடையும் அபத்த தரிசனத்தைபற்றி ஜெ கூறியிருப்பார். இந்த நாவல் வாசகர்களுக்கு அளிப்பதும் ஒரு அபத்த தரிசனத்தையே. நாம் எத்தனைஆயிரம் ஆண்டுகள், எத்தனை தடைகளை கடந்து இந்த பூமியின் உச்ச உயிரினமாக பரிணமித்திருக்கிறோம். ஹெலிகாப்டர்கள் எல்லாம் கண்டுபிடித்து விட்டோம். ஆனாலும் நம் அடிப்படை இச்சைகளே இன்னும் நம்மை ஆட்கொண்டிருக்கின்றன என்று எண்ணி பார்க்கையில்எத்தனை சிறுமையை அடையச் செய்கிறது அவ்வெண்ணம். அதனை இவ்வளவு எளிமையான மொழியில்இனிமையான வாசிப்பனுபவமாக அளிக்க முடிந்ததே இ.பா அவர்களின் இலக்கிய மேன்மைக்கு சான்றாகும்.

அன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

https://www.commonfolks.in/books/d/helicoptergal-keezhe-irangivittana

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2022 11:30

April 10, 2022

புதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு -நற்றிணை யுகன் பேட்டி

புதுமைப்பித்தனின் கதைகளை மலிவு விலையில் வெளியிட வேண்டுமென்னும் எண்ணம் எப்படி உருவானது?

வணக்கம் . நற்றிணை பதிப்பித்த ரூ.100 விலை கொண்ட புதுமைப்பித்தன் கதைகள் தொடர்பாக, தாங்கள் வெகுவாகப் பாராட்டியது என்னைப் பெரும் மகிழ்ச்சி அடையச் செய்தது. அத்துடன் ஒரு நேர்காணலும் செய்வது நற்றிணை பதிப்பகத்தையும், என்னையும் ஒரு சேர பெருமைப்படுத்தியது ஆகும்.

புதுமைப்பித்தன் கதைகளைப் பதிப்பிப்பது என்பது எந்த ஒரு பதிப்பகத்திற்கும் போலவே இலக்கியப் பதிப்பகமான நற்றிணைக்கும் பெருங் கனவு. நற்றிணை பதிப்பகம் தொடங்கி 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நற்றிணையின் முதல் புத்தகம் நான் மொழிபெயர்த்த ‘சினிமா பாரடைசோ’ என்னும் இத்தாலியத் திரைப்படத்தின் திரைக்கதை தான். அப்புத்தகம் 2006இல் வெளிவந்தது. அப்போது நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக இருந்தேன். அங்கே நிலை கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன். ஐந்து வருட சினிமா முயற்சிக்குப் பின் வாழ்க்கை குறித்த பயம் தோன்ற பதிப்பகத்தைத் தீவிரமாக நடத்தலாம் என்று முடிவு செய்து 2011 முதல் முழுக் கவனத்தையும் பதிப்பகத்தில் செலுத்தத் தொடங்கினேன்.

அப்போதுமுதல் ஒவ்வொரு வருடமும் புதுமைப்பித்தன் கதைகளைப் பதிப்பிக்க வேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருக்கும். எப்படியோ அது தள்ளிப் போய்விடும். நற்றிணை தொடங்கி இந்தப் பதினைந்தாவது ஆண்டில் எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று பெரும் முனைப்புடன் செயல்பட்டோம். அப்போதுதான் விலை பற்றிப் பேச்சு வந்தது. நானும் என் மனைவியும் பதிப்பகம் தொடர்பாகப் பேசிக்கொள்ளும் போது சக்தி வை. கோவிந்தன் அந்த உரையாடலில் தவறாமல் இடம்பெற்று விடுவார். என் மனைவிதான் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே,  அது போன்று மலிவுப் பதிப்பு கொண்டு வந்தால் என்ன என்றார். 1957இலேயே பாரதியார் கவிதைகளை வை.கோ என்றழைக்கப்பட்ட சக்தி வை. கோவிந்தன் ஒரு ரூபாய்க்கு வெளியிட்டார்.  ஒரே வாரத்தில் 1 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. அதை அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர்தான் வெளியிட்டார். நாமும் அதே போன்று செய்யலாமே என்ற எண்ணமும், புதுமைப்பித்தனுக்கும் எனக்கும் ஒரு ஆத்மார்த்தமான உறவு உண்டு என்ற வலுவான நம்பிக்கையின் அடிப்படையிலும் புதுமைப்பித்தனை நற்றிணை புதிதாக உருவாக்கிய வாசகர் எளிய விலை நூல் வரிசையில் வெளியிட்டோம்.

புதுமைப்பித்தனின் இன்றைய பொருத்தப்பாடு என்ன ?

புதுமைப்பித்தன் 1906இல் பிறந்தவர். 1948இல் தன் இளம்வயதிலேயே மறைந்துபோனவர்.  12-15 ஆண்டுகள்தான் படைப்பு உருவாக்கத்தில் தீவிரமாக இயங்கினார். இந்தக் குறுகிய காலத்திலேயே சத்திய ஆவேசத்துடன் எழுதியிருக்கிறார் என்பதற்குச் சாட்சி எழுதப்பட்டு 80 ஆண்டுகள் கடந்தும் அவர்கள் கதைகள் இன்றும் மூப்படையாமல் சிரஞ்சீவித் தன்மையுடன் இருப்பதே ஆகும்.

புதுமைப்பித்தன் கதைகளை வாசகனாக வாசித்ததைவிட, பதிப்பித்தற்காக வாசித்தது ஒரு பெரும் விருந்தாகவே இருந்தது. நற்றிணை பதிப்பித்த தலைசிறந்த புத்தகங்களில் ஒன்றாக புதுமைப்பித்தன் கதைகள் இருக்கும் என்பதே, ஊக்கத்துடன் உருவாக்கக் காரணமாக இருந்தது..

புதுமைப்பித்தனின் படைப்புகள் செவ்வியல் தன்மையை அடைந்துவிட்ட ஒன்று எந்த ஒரு தீவிர வாசகனும் உணர்ந்துகொள்வார். அவர் கதைகள் இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் பொலிவு குன்றாமல் இருக்கும் என்பதே வாசகனாக என் எண்ணம். அதனால் நவீன இலக்கியம் வாசிக்க வரும் இளம் வாசகர்கள் புதுமைப்பித்தனிலிருந்து தங்கள் வாசிப்பைத் தொடங்க வேண்டும். அவர்கள் வாங்குவதற்கு விலை தடையாக இருக்கக் கூடாது என்பதும் இந்தப் பதிப்பின் இன்னொரு உபநோக்கமாகும்.

இந்த மலிவுவிலைப் பதிப்பால் என்ன நிகழுமென எதிர்பார்க்கிறீர்கள்?

இந்த மலிவு விலை பதிப்பால் உடனடியாக நிகழ்வது அதிகபட்ச புத்தக எண்ணிக்கை. மற்றொன்று பதிப்பித்த பதிப்பகத்திற்கு ஒரு நற்பெயர். இதனால் வணிக இலக்கிய நூல்கள் போல் நவீன இலக்கியங்கள் விற்காது என்ற எண்ணம் காலப்போக்கில் மறையும்.  ஆயிரக்கணக்கில் புத்தகங்களை அச்சிடுவதும் விற்பதும் ஒரு புதுக்கிளர்ச்சியையும் பெரும் மன உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது என்பதைப் பதிவு செய்துதான் ஆகவேண்டும் மகிழ்ச்சி பாதி பலம் என்பார்கள். பதிப்பாளராக இப்புத்தகத்தால் நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்..

இலக்கிய முன்னோடிகளில் புதுமைப்பித்தனை நீங்கள் தெரிவுசெய்தமைக்குக் காரணம் உண்டா ?

இந்த இடத்தில் புதுமைப்பித்தன் தொடர்பான என் வாழ்வின் முக்கியமான விசயத்தைச் சொல்வது  பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் புதுமைப்பித்தன் கதைகளை அடிக்கடி எடுத்து வாசித்துக் கொண்டிருப்பேன். அப்படி ஒரு நாள் ‘பொய்க் குதிரை’ என்னும் கதையை வாசிக்க நேரிட்டது.  அதில் ஒரு இடம் வரும். கதை நாயகனுக்கு அன்று சம்பளம் போட்டிருக்க மாட்டார்கள். அவர் மாலை மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பும் வழியில் சாலையோரத்தில் ஒரு பிச்சைக்காரன் தன் குழந்தையுடன் விளையாடுவதைப் பார்ப்பார். அப்போது அவர் மனதில் என்னைப் போல் தான் அவனும்,  ஆனால் அவனுக்கு குழந்தை இருக்கிறதே, கமலாவுக்கு குழந்தை இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பார். அந்த வரியை வாசித்ததும் என் மனதில் பெரும் அதிர்வு உண்டானது. எங்களுக்கும் திருமணமாகி 9 வருடங்களாக குழந்தை இல்லை. என் மனைவி பெயர் கோமளா. நான் உடனே கோமளாவுக்கு ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்குமே என்று மாற்றி வாசித்தேன். இதை வாசித்த ஒரே மாதத்தில் என் மனைவி கருத்தரித்துவிட்டாள். அப்போது நாங்கள் சீரடி சாய்பாபாவைக் கும்பிட்டுக் கொண்டிருந்தோம். என் மனைவி சீரடி சாய்பாபா கொடுத்தது என்றாள். நான் புதுமைப்பித்தன் கொடுத்தது என்றேன். அந்த வகையில் நற்றிணையின் புதுமைப்பித்தன் கதைகள், நான் புதுமைப்பித்தனுக்கு செலுத்திய நேர்த்திக்கடன் தான்.

மலிவுவிலை நூல்கள் வீணாகக்கூடும் , தேவையற்றவர்கள் அவற்றை வாங்கிச் செல்வார்கள் என்று ஒரு பேச்சு உண் டே?

மலிவு விலை நூல்கள் வீணாகும் என்ற சிந்தனையில் எனக்கு உடன்பாடில்லை.  ஒரு முறை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் புகழ் பெற்ற ரஷ்ய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பை ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் விற்றபோது ஒரு மூட்டை நிறைய வாங்கி ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு வந்தேன். அதில் செம்மணி வளையல், ஆண்டன் செக்காவ் கதைகள், டால்ஸ்டாய் கதைகள் அடங்கும்.  மலிவு விலை என்பதனாலேயே அதை வாங்கினேன். ஆனால் படைப்புகள் பொக்கிஷங்கள் என்பதைப் படித்ததும் அறிந்துகொண்டேன். ஒரு உண்மையான விசயம் விலை குறைவான புத்தகங்கள் தான் பெரும்பாலும் அதிகம் விற்கின்றன. குடோனில் விற்காமல் அடைந்து கொண்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்துச் சலிப்பதைவிட  விற்றுத் தீரும்  புத்தகங்களைப் பார்ப்பது பெரும் மகிழ்ச்சி தான்.  தொ.ப.வின் அறியப்படாத தமிழகத்தை நாங்கள் 20 ரூபாய்க்குக் கொடுத்ததன் மூலம் வாசகர்கள் அதை ஆயிரக்கணக்கில் வாங்கி பள்ளி, கல்லூரி, திருமண வீடுகள் எனப் பரிசுகளாக வழங்கினார்கள்.  நற்றிணையில் அதிகம் விற்ற புத்தகம் அறியப்படாத தமிழகம் தான். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தமிழில் அதிகம் விற்ற புத்தகமாக அது மாறும் என்பது என் நம்பிக்கை.

ஒரு வாசகச் சமூகம் தயாராக இல்லாதபோது மலிவுவிலையில் பல்லாயிரம் பிரதிகள் மக்களிடையே சென்றால் பயன் உருவாகாது என்று ஒரு தரப்பு உண்டு. 1972 ல் ராணிமுத்து இதழ் புதுமைப்பித்தன் உட்ப தமிழின் நவீன இலக்கியவாதிகளின் படைப்புகளை ஒரு ரூபாய் விலைக்கு லட்சம் பிரதிகள் அச்சிட்டு விற்றது. ஆனால் அவை வாசிக்கப்படவே இல்லை எனப்படுகிறது.  

வாசிப்பில் நிறைவடையும் ஒரு வாசக சமூகம் தமிழ்நாட்டில் எப்போதும் இருந்தது இல்லை. நாம் சில முன்னெடுப்புகளைச் செய்யும் போது  நிச்சயமாக சிறிய மாற்றமாவது நிகழும். மலிவு விலைப் புத்தகங்கள் வீணானாலும் அது நிச்சயம் தேவையான முயற்சிதான். மகத்தான ஆளுமைகளின், மகத்தான படைப்புகளின் மலிவு விலைப் பதிப்புகள் நிச்சயம் நிறைய புதிய வாசகர்களை உருவாக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை. மலிவு விலை நூல்கள் நிச்சயம் விற்றுவிடும் என்பது இதன் பலம். லாபம் மிகக் குறைவு என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.  இனி நற்றிணையின் பெரும்பாலான நூல்கள் மலிவு விலை நூல்களாகத் தான் இருக்கும்.  மலிவு விலை நூல்கள் பதிப்பாளனுக்கு ஒரு புதிய அந்தஸ்தை ஏற்படுத்துகிறது. முகமற்ற அவனுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை நாமாகவே அறிந்து கொள்ளலாம்.  பதிப்புத் துறையில் தற்போது மிக முக்கியமான பிரச்சனை p.o.d. எனப்படும் print on desk புத்தகங்கள். குறைவான புத்தகங்கள் அடித்துக்கொள்ளலாம். முதலீடு குறைவு, புத்தகங்களை எப்பொழுதும் இருப்பில் வைத்துக் கொள்ளலாம் என்பது சில சாதகமான அம்சங்கள் தான். ஆனால் முக்கியமான பாதகம் மிக அதிக விலை. மிக அதிக விலை நிச்சயம் வாசகர்களின் பங்கேற்பைக் குறைக்கும்.

இதைப்போல எல்லா நூல்களையும் பொதுவாகவே மலிவு விலையில் வெளியிட முடியுமா ?

மலிவு விலை நூல்கள் என்பது தன்னை நிறுவிக்கொண்ட ஆளுமைகள் அல்லது தன்னை நிறுவிக் கொண்ட படைப்புகளுக்கு மட்டுமே  பொருந்தும். எல்லா நூல்களையும் மலிவு விலையில் வெளியிடுதல் சாத்தியமற்றது

என்னைப் பொறுத்தவரை மலிவு விலை நூல்களைப் பதிப்பிப்பது என் கடமை என்று கருதுகிறேன். என்னால் இயன்ற அளவில் தொடர்ந்து இதைச் செய்வேன். புதுமைப்பித்தன் கதைகளை அடுத்து, லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ நாவலை, அதாவது 2224 பக்கங்கள் கொண்ட இந்நாவலை மூன்று கெட்டி அட்டைத் தொகுதிகளாக வெளியிட்டு 400 ரூபாய்க்குத் தர இருக்கிறோம். பேப்பர் பேக் 300 ரூபாய்க்குத் தரப் போகிறோம். 704 பக்கங்கள் என் சரித்திரம் 125 ரூபாய்க்குத் தரப்போகிறோம். ப. சிங்காரம் நாவல்கள் 416 பக்கங்கள் கெட்டி அட்டையில் ரூபாய் 100 விலைக்குத் தரப்போகிறோம். அடுத்த 10 வருடங்களில் குறைந்தது 200 புத்தகங்களாவது இது போன்ற எளிய விலையில் வெளியிட வேண்டுமென்பது என் விருப்பம். ஆனால் அச்சுக்குத் தேவையான பொருட்களின் விலை பதிப்புத் துறைக்குச் சாதகமாக இல்லை என்பதையும் நாங்கள் உணர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.

இது புத்தகங்களை வாங்கி விற்பவர்களுக்கு கட்டுபடியாகாது. இது வினியோகச் சங்கிலியை இல்லாமலாக்குகிறதா ?

மலிவு விலை நூல்களைப் பொறுத்த வரையில் பதிப்பாளர்களும் புத்தகக் கடைக்காரர்களும் புதிய உடன்பாட்டுக்கு வந்துதான் தீர வேண்டும். தற்போது விற்பனையாளர்களுக்கு 30 சதவிகித கழிவு தருகிறோம். மலிவு விலை நூல்களில் அதே சதவிகிதத்தை விற்பனையாளர்கள் நிச்சயமாக  எதிர்பார்க்க  முடியாது. விற்பனையாளர்கள் மலிவு விலைப் புத்தகங்களைக் FMCG என்று சொல்லப்படும் Fast moving consumer goods போன்று கருத வேண்டும்.  FMCG பொருட்களில் மிகக் குறைவான லாபம் தான் கிடைக்கும். ஆனால் அதிகம் விற்கும். பணம் புரண்டுகொண்டே இருக்கும். விற்பனையாளர்கள் இந்தப் புதிய மாற்றத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டால் மலிவு விலை நூல்கள்  இன்னும் பல மடங்கு விற்பனையாகும். வாசகர்களுக்கும் தபால் செலவு இல்லாமல் மலிவு விலையிலேயே புத்தகங்கள் கிடைக்கும்.  எப்படிப் பார்த்தாலும் கிண்டில். மின் நூல் இவற்றுடன் போட்டு போட்டுக் கொண்டு அச்சுப் புத்தகங்களை அதிகம் விற்க வேண்டுமென்றால் மலிவு விலை, அல்லது நடுத்தரமான விலை தான் சிறந்தது.

 

பேட்டி ஜெயமோகன்

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2022 11:35

பனி உருகுவதில்லை, விமர்சன அரங்கு உரைகள்

சென்ற 9-4-2022 அன்று சென்னை கூகை அரங்கில் நடந்த, அருண்மொழி நங்கை எழுதிய ’பனி உருகுவதில்லை’ நூல் விமர்சன அரங்கு. உரைகள்அருந்தமிழ் யாழினி உரை

—ஜா.தீபா உரை

—கார்த்திக் புகழேந்தி உரை

—பி.கு உரை

—அ.வெண்ணிலா உரை

அருண்மொழி நங்கை ஏற்புரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2022 11:34

மனிதகுலம் ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு- கடலூர் சீனு

இனிய ஜெயம்

தீவிர இலக்கியம் மற்றும் வெகுமக்கள் தளம் இரண்டும் யுவால் நோவா ஹராரி அளவே இணையாக அறிந்து வைத்திருக்கவேண்டிய மற்றொரு பெயர் ருட்கர் பிரெக்மன். கடந்த ஆண்டு யுவால் நேர்காணல்கள் காணொளிகள் வழியே பயணிக்கையில் தற்செயலாக ருட்கர் அவர்களின் நேர்காணல் ஒன்று காணக் கிடைத்தது. மானுட குலத்தின் நடத்தை சார்ந்து யுவால் கூறிய சிலவற்றை அவர் அதில் மறுத்திருந்தார். மேலும் அவரது சில காணொளிக்களை தேடிப்பார்த்தேன். ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் “எந்நிலையிலும் நான் நம்பிக்கைவாதி” என்று பிரகடனம் செய்திருப்பார். அவரது வகையராவை சேர்ந்தவர் ருட்கர். அங்கே துவங்கி அவரையும் அவரது நூல்களையும் விக்கி வழியே அறிந்தேன்.

https://en.wikipedia.org/wiki/Rutger_Bregman

அவரது நூல்களில் ஒன்றான – மனிதகுலம்: ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு – எனும் நூல்  இவ்வாண்டு தமிழாக்கம் கண்டுள்ளது. யுவால் அவர்களை தமிழுக்கு கொண்டு வந்த அதே மஞ்சுள் பப்ளிகேஷன், சிறப்பாக மொழியாக்கம் செய்த நாகலட்சுமி சண்முகம் கூட்டணியே ருட்கர் அவர்களையும் தமிழ் நிலத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

அழகான பிரிட்டிஷ் நகைச்சுவை ஒன்றுடன் துவங்குகிறது நூலின் முதல் அத்தியாயம். உலகப்போரின் துவக்கம். லண்டன் நகரில் குண்டு போட்டு அப்பாவிகளை பலி போட்டு, சிவில் மனநிலையை குலைப்பதன் வழியே அரசின் மோனோதிடத்தை உடைக்கும் திட்டத்துடன் ஜெர்மனி வான் படையை அனுப்புகிறது.

லண்டனில் அப்போது ஒரு உளவியலாளர் இந்த சூழலை கண்காணித்து ஆய்வு செய்ய முடிவு செய்கிறார். போர் மனித நடத்தையை என்ன செய்யும்? மனிதர்கள் மீண்டும் காட்டு மிராண்டிகள் ஆகி ஒருவரை ஒருவர் கொன்றுணத் துவங்கி விடுவார்களா? கேள்விகளுடன் குண்டு விழும் நகரில் முதல் நாள் சுற்றி அலைந்து கண்காணிக்கிறார். சில நாட்கள் மட்டுமே இழப்பின் துயர், மரண பீதி எல்லாம். கடந்து மொத்த சிவில் சமூகமும் கூட்டு வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறது.

குண்டு விழுந்து தகர்ந்து விழுந்த தனது கடையில் எஞ்சிய பொருட்களை ஒரு மேஜையில் சேகரித்து வைத்து அந்த மேஜையில் கடைக்காரர் இப்படி ஒரு பலகை எழுதி வைத்திருக்கிறார்.

” ஜெர்மன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நல்ல ஒளி நல்ல காற்றோட்டம் என இப்போது கடையை மேலும் பொலிவு செய்திருக்கிறேன். வாடிக்கையாளர்கள் விரைந்து வந்து சூழலை அனுபவித்து பொருட்களை வாங்கி செல்லவும்”. (எனது நடையில் எழுதி இருக்கிறேன். வாசகர்கள் நூலில் இந்த ஜோக் ‘இப்படி’ இல்லையே என்று அழுகாச்சி வைக்கக்கூடாது.)

இப்படித் துவங்கும் இந்த நூல்,  உன்னால் முடியும் தம்பி என்று கிளுகிளுப்பூட்டும் தன்னம்பிக்கை கதைகள் கொண்ட நூலோ,அல்லது முழு  தீமை என ஒன்றில்லை மையத்தில் நன்மை உண்டு வகையில் டாக்சிக் குட்னஸ் மீது மையம் கொள்ளும் நூலோ அல்ல. கற்காலம் துவங்கி, நிலவுடைமை காலம் தொட்டு, காலனியாதிக்க காலம் தொடர்ந்து, இன்றைய சிரியா யுத்தம் வரை நமது மானுட குல நடத்தையை, “மனிதர்கள் அடிப்படையில் இப்படிப்பப்பட்டவர்கள்தான்” என்று வரையறை செய்யும் எதிர்நிலை கருத்தியல் அனைத்தையும் அதற்கு காரணமாக அவை காட்டும் சூழலையும் கேள்விக்கு உட்படுத்தும் நூல். மானுட அடிப்படை இயல்பு குறித்து இது வரை பேசப்பட்ட அனைத்து எதிர்நிலைக் கூறுகளையும் தீஸிஸ் எனக் கொண்டு அதற்கு இணையாக (விதி விலக்கு ஒன்று இரண்டு இருக்கலாம் எனும் வாதகதியில் புறம்தள்ளப்பட்ட) அதே சமயம் செயல்பாட்டில் இருந்த நேர்நிலை விஷயங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சி அவற்றை ஆண்ட்டி தீஸிஸ் என முன்வைக்கும் நூல். இனி வரும் காலம் இந்த தீஸிஸ் ஆண்ட்டி தீஸிஸ் வழியாக முரண் இயக்கம் கொண்டே மானுட நடத்தையை வரையறை செய்ய வேண்டும் என்னும் வகையில் வலிமையான தரவுகளுடன் தனது ஆண்ட்டி தீஸிஸ் ஆன நேர்நிலைப் பண்பை அதன் வாதகதிகளை சுவாரஸ்யமான உதாரணங்களுடன் முன்வைக்கும் நூல்.

பொதுவாக மானுட நடத்தை விதிகளை அதன் எதிர்நிலைப் பண்புகளை சிம்பன்சி யின் தனி நடத்தை, சமூக நடத்தை இவற்றைக் கொண்டு இணை சொல்வது வழக்கம். ஜீன் குடாலும் சிம்பன்சி மரபணுவுக்கும் மனித மரபணுவுக்கும் உள்ள ஒற்றுமை இந்த இரண்டும் கூடி நிகழ்த்திய கருத்தியல் தாக்கம் அது. அதனை சிம்பன்சி போலவே இருக்கும் போனபோ குரங்குகள் வழியே எதிர்கொள்கிறார் ருட்கர். சிம்பன்சி உலகில் உள்ள மேலோர் கீழோர் சமூக அமைப்போ, உளவு அமைப்போ, குறிப்பாக கற்பழிப்போ இங்கே போனபோ சமூகத்தில் இல்லை. ஒவ்வொரு போனபோவும் தனியே மிகுந்த விளையாட்டு உணர்வும் தோழமையும் கொண்டது. அதன் சமுக வாழ்வு என்பது கூட்டுறவு செயல்பாட்டில் கிடைப்பதை பகிர்ந்துண்டு இணையுடன் இறுதி வரை காதல் வாழ்வில் திளைத்திருக்கிறது. குறிப்பாக ரேப்புகள் இல்லை. சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்று அறிவியல் சொல்கிறதோ கொஞ்சம் கூட குறைய அத்தனையும் கொண்டது போனபோ. எளிய கேள்விதான். சிம்பன்சி மட்டும் என்பதில் இருந்து வெளியேறி நாம் ஏன்  போனபோகளையும் இணைத்து அதன் வழியே மனித நடத்தை விதிகளை மறு பரிசீலனை செய்யயக்கூடாது?  (நூலைத் தொடர்ந்து போனபோவின் கலவி கொண்டாட்ட காணொளி ஒன்று கண்டேன். மனிதனுக்கு இணையாக காம சூத்திர பொசிஷன்கள் அனைத்தையும் அவை கைக்கொள்ளுகிறது).

பொதுவாக புழக்கத்தில் இருக்கும் மற்றொரு கருத்தாக்கம் ஹோமோ சேபியன்ஸ் ஆகிய நாம் நியாண்டர்தால் எனும் பிறனை கொன்றொழித்தோம். நானும் அவ்வாறே நம்பி இருந்தேன் பில் ப்ரைசன் வரும் வரை. இதுவரை உலகம் நமக்கு கிடைத்த மானுட வகைமை எலும்புகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் தகுதி கொண்டவை என்பது 400 கிலோ கூட தேறாது. (அதாவது வெறும் 4 மனிதன் அளவு) என்று ப்ரைசன் சொல்லுகிறார். அதை வைத்துக் கொண்டு நாம் வளர்த்துக்கொண்ட பல யூகங்களில் ஒன்றே இந்த நியாண்டர்த்தால் ஹாலோகாஸ்ட். நூல் எழுப்பும் கேள்வி, நியாண்டர்தால், அறிவில் சிறந்த ஆனால் சமூகத்தில் வாழ முடியாத ஆட்டிசம் போன்ற குறைபாடு கொண்டிருந்திருக்கலாம் என்று நம்மால் ஏன் யோசிக்க முடியவில்லை என்பது. நியாண்டர்தாலுக்கு கொம்பு வாத்தியம் ஒலிக்கத் தெரியும். மனித மரபணுவில் நியாண்டர்தால் மரபணுவும் கண்டுபிடிக்க பட்டிருக்கிறது. ஆக அவர்கள் நம்மிலும் அறிவாளிகள் நாமும் அவர்களும் கூடி வாழ எண்ணிய முயற்சிக்கான ஆதாரம் மட்டுமே நம்மிடம் உள்ளது.

இப்படி வளரும் இந்த நூலை இரண்டு தத்துவவாதியர் நோக்கை அடிப்படையாகக் கொண்டு பின்னி விரித்திருக்கிறார் நூலாசிரியர். ஒருவர் ஹாப்ஸ். அடிப்படையில் மனிதன் காட்டுமிராண்டி. குடிமையியல் முறையே அவனை கட்டுப்படுத்தி நாகரீகமானவனாக வைத்திருக்கிறது என்பது இவர் தரப்பு. மற்றவர் ரூஸோ. மனிதன் அடிப்படையில் கூடி வாழும் இயல்பினன். விவசாயமும் நிலவுடமையும் அதன் விளைவாக உருவான குடிமையலும் தான் மனிதனை அவன் இயல்பிலிருந்து திரிபடைய வைத்தது என்பது இவர் தரப்பு. இந்த இரண்டு தரப்பில் இப்போது மையத்தில் இருக்கும் ஹாப்ஸ் தரப்பால் விளிம்புக்கு தள்ளிவிடப்பட்ட ரூஸோ தரப்பை பின்தொடர்கிறார் ருட்கர்.

நிலவுடைமை சமுதாயம் இல்லையேல் உபரி இல்லை. கலைகள் இல்லை. பேராலயங்கள் இல்லை. மதம் இல்லை. இப்படி மனிதனை மனிதனாக இன்று வைத்திருக்கும் எல்லாமே நிலவுடைமை சமூகம் வழியே அடைந்தது எனும் ஹாப்சியர் தரப்பு வாதத்தை, 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி மனிதர்களால் கட்டப்பட்ட கொபக்லி தபே பேராலயம் கொண்டு மறுக்கிறார். ஆதி வாசிகள் எதிர் எதிர் குழுக்களாக ஒருவரை ஒருவர் கொன்று ஒழித்தனர் எனும் வாதத்தை, அப்படி வாழ்ந்த குடியினர் மிக சிலர் மட்டுமே, மாறாக ஐரோப்பியர் கப்பல் கப்பலாக பிடித்து சென்று அடிமைகளாக விற்ற ஆதிவாசிகள் பல லட்சம். இவர்களில் எவருக்கும் வன்முறை என்றால் எதிரிகள் என்றால் என்னவென்றே தெரியாது என்று இந்த நூலில் நிறுவும் ருட்கர் நிலவுடைமை சமூகம் தோன்றுவதற்கு முன்பான எந்த குகை ஓவியத்திலும் மனிதரை மனிதர் கொல்லும் சித்திரம் என ஏதும் இல்லை என்கிறார்.

அன்றைய புனைவுகள் பல, காலனிய ஆதிக்கம் தனது மேலாண்மையை சொந்த மண்ணில் அதன் சிவில் மனம் ஒப்புக்கொள்ள வைக்க புனையப்பட்டவை என்பது இன்று வெளிப்படை. இப்படி புனைவுகள் உருவாக்கிய கருத்தியல் தாக்கத்தை கோல்டிங் எழுதிய லார்ட் ஒப் தி பிலைஸ் நாவலை முன்வைத்து விவாதிக்கிறார் ருட்கர்.  நாவல் சில சிறுவர்கள் தனியே தீவில் மாட்டிக்கொண்டு மீட்கப்படும் வரை எவ்விதம் ‘காட்டுமிராண்டி’ வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை மையம் கொண்டது. ருட்கர் 1966 இல் இவ்வாறே நடந்த உண்மை சம்பவம் ஒன்றில் அதன் பாத்திரங்களை இன்று நேரில் கண்டு நேர்காணல் செய்கிறார். கொல்டிங் புனைந்து போல இல்லை யதார்த்தம். தீவில் சிக்கிய அந்த இரண்டு வருடமும் அவர்கள் ஒரே ஒரு பிணக்கு கூட இன்றி, கூடி வாழ்ந்து,  சூழலை அனுசரித்து தகவமைத்து, அதன் பயனாக மீண்டிருக்கிறார்கள்.

இப்படி தத்துவாதிகள், இலக்கியவாதிகள் உருவாக்கிய கருத்தியல் தாக்கம் அளவே உளவியலாளர்கள் (குறிப்பாக அமெரிக்கா) உருவாக்கிய தாக்கம் அளப்பரியது. அதையும் பரிசீலிக்கிறது இந்த நூல்.

சில மாதங்கள் முன்பு ஜெயமோகன் எழுதிய பத்துலட்சம் காலடிகள் சிறுகதையை கட்டுடைத்து அக் கதையை எழுதியவர் ஒரு பாசிஸ்ட். சிறுபான்மையினருக்கு எதிரி என்று நிறுவினார் ராஜன் குறை என்றொரு சமூக அறிவியல் ஆய்வாளர். அதைத் தொடர்ந்து ராஜன் குறை தலித்துகளின் சமூக நடத்தை குறித்து கீழ்மை தொனிக்கும் வண்ணம் எழுதிய ஆய்வு கட்டுரை விவாதத்துக்கு வந்தது.

https://www.jeyamohan.in/133952/

இந்த ராஜன் குறை போன்றவர்களை வடிவமைக்கும் ‘உடைந்த ஜன்னல்’ போன்ற  பல அறிவியல் பூர்வமான சமூக ஆய்வுகள் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. (ராஜன் குறை அமெரிக்காவில் கற்றவர்) .

https://en.wikipedia.org/wiki/Broken_windows_theory

என்னால் மூச்சு விட முடியவில்லை என்பதை இறுதி சொல்லாக விட்டு விட்டு காவல்துறை கால்களால் செத்துப்போனாரே ஒரு ஒடுக்கப்பட்டவர், அந்த நிலைக்கு இந்த ஆய்வேடுகள் போன்றவை காவல் நீதி துறை இவற்றில் செலுத்திய தாக்கமே முக்கிய காரணி.இத்தகு மனித நடத்தைகள் சார்ந்த பல ஆய்வுகளை அறிமுகம் செய்து , அதில் விவாதிக்கப்படாமலே உள்ள கோணல் பலவற்றை அம்பலப்படுத்துகிறது இந்த நூல்.

இப்படி, பொதுவில் ஒரு மனிதன் கொலை செய்யப் படுகையில் அங்கே இருந்தும் உதவி எதுவும் செய்யாமல் இருக்கும் சக மனிதர்கள் எனும் நிலை துவங்கி, யூதப் படுகொலைகள் வரை பல்வேறு சமூகவியல் ஆய்வுகள் வழியே மனிதன் அடிப்படையில் தீயவன் என்று நிறுவப்பட்டு விட்டதாக இன்றுவரை நாம் நம்பிக்கொண்டிருக்கும் பல கூறுகளை உடைத்துப் பரிசீலிக்கிறது இந்த நூல்.

ஹிட்லர்,ஸ்டாலின், போல்பால்ட் இவர்களால் மட்டுமே ஆனதல்ல வரலாறு. இவர்கள் அத்தனை பேருக்கும் எதிர் நிலை வகிக்கும் நெல்சன் மண்டேலா போன்றவர்களே வரலாறை முன்செலுத்துபவர்கள் என்கிறார் ருட்கர். விடுதலை பெறுகிறார் மண்டேலா. மிகப்பெரிய போர் ஒன்று மூளும் சூழல். மண்டேலா மீண்டும் ஆயுதம் தூக்குவாரா? அல்லது எதிர் தரப்பின் ராணுவ தளபதி வசம் போரை தவிர்த்து அரசை ஒப்படைப்பாரா? உலகம் எதிர்பார்த்த இந்த இரண்டுமே நிகழவில்லை. மாறாக ராணுவ தளபதி ஆயுதங்களை கைவிட்டார். மண்டேலா தேர்தல் வழியே அதிபர் ஆனார்.  ராணுவ தளபதி பின்னர் சொன்னது ” மண்டேலா என் கைகளை விடவே இல்லை. நூறு சதவீதம் அவர் என்னை நம்பினார்”.

போரில் துவங்கி போரில் நிறையும் இந்த நூல் நமது கண் முன்னால் இருந்தும் குருட்டுப் புள்ளியில் விழுந்து காணாமல் போகும் பொருட்களை போல போரில் நாம் காணாமல் விட்ட பல விஷயங்களை முன்வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட நகரத்தில் இருந்து சிரியாவுக்கு ஜிகாதியாக செல்ல பல இளைஞர்கள் முடிவு செய்கிறார்கள். ஊரே கூடி அதை நேர்நிலை பண்புடன் அணுகுகிறது. விளைவு. 2013 இல் அங்கிருந்து ஜிகாதி ஆக சென்றோர் 300 பேர். 2014 அந்த எண்ணிக்கை வெறும் மூன்று பேர்.

ஒரு சமயம் ஒரு அமெரிக்க உள்நாட்டு போர். அது இழுத்துக்கொண்டே போகிறது. எல்லாம் முடிந்த பின்னர், பரிசோதிக்கையில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் சுடப்படாமலே இருந்திருக்கிறது. எதிரிகள் தம்மை கொன்றாலும் பரவாயில்லை என்று சுடாமல் இருந்திருக்கிறார்கள். இதே போல மற்றொரு போர். துவங்கி இரண்டு மணி நேரமாக ஒரே ஒரு உயிர் பலி கூட இல்லை. காரணம் இரு தரப்புமே எதிரிகள் தலைக்கு அரை அடி மேலே சுட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்கள். முதல் உலகப்போர். பல தேச எல்லைகளில் கிரிஸ்துமஸ் இரவில், அதுவரை சண்டை போட்டுக்கொண்டு இருந்தவர்கள் எந்த தலைவனது உத்தரவுக்கும் கீழ்பாடியாமல்  எல்லா நாட்டு வீரர்களும் கூடி தேவ மைந்தன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள். இப்படிப் பற்பல நேர்நிலை அம்சங்களை கடந்து வந்தே லிட்டில்பாய் பூமி மீது விழுந்திருக்கிறது.

இப்படி பள்ளிக்கல்வி, காவல் அமைப்பு, சிறை அமைப்பு, பொருளாதார அமைப்பு, ஜனநாயக அமைப்பு, வணிக அமைப்பு என ஒவ்வொன்றிலும் ‘மனித நடத்தை இத்தகையதுதான்’ என்ற எதிர்நிலை கருத்தியல் முன் முடிவுடன் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் நவீன வரலாறு முழுமையையும் அதற்கு இணையான நேர் நிலை பண்பு கொண்ட அதே அமைப்பின் வெற்றிகரமான வேறு வகை முன்மாதிரியை கொண்டு விவாதிக்கும் இந்த நூலாசிரியர் இறுதியாக மனிதன் ‘யதார்த்தமாக’ இருக்க செய்ய வேண்டியவை என்ன என்று ஒரு பத்து வரையறையை அளிக்கிறார். நூலாசிரியர்க்கு அசாத்தியத்தை சாத்தியமாகும் மண்டேலாவின் முன்மாதிரி காந்தி என்பதை தாண்டி காந்தி குறித்து ஏதும் தெரியும் என்பதற்கு அந்த நூலில் சாட்சியங்கள் இல்லை. ஆனால் நூலாசிரியர் வகுத்து வைத்த பத்து வரையரையும் சற்றே முன் பின்னாக இருந்தாலும் புற வாழ்வில் அப்படியே கடைபிடித்தவர் காந்தி என்பதை இதை வாசிக்கையில் வாசகர் அறியலாம்.

இத்தனை விவாதித்த பிறகும் இந்த நூல் மானுட நடத்தையின் நேர்நிலை தரப்புக்கான அவ்வளவு வலுவான நூல் இல்லை என்றும் பலருக்குத் தோன்றலாம் காரணம். ராணுவ எறும்புகள் சிக்கிக்கொள்ளும் மரண வளையம் போன்ற நிலையில் நாம் இருக்கிறோம் என்பதே உண்மை. கூடி வாழும் இயல்பு கொண்ட எறும்புக் கூட்டம் அது. முன்னால் சென்ற எறும்பின் ரசாயன தடத்தை நுகர்ந்தே அடுத்த எறும்பு செல்லும் இப்படி அடுத்தடுத்த எறும்புகள். இந்த வரிசையில் முதல் எறும்பு திசை விட்டு ஒரு ரசாயன வளையத்தை உருவாக்கி விடும் என்றால், ஒட்டுமொத்த எறும்புப் படையும் அந்த வளையத்தில் சுற்றி சுற்றி வரும். எது வரை? சாகும் வரை.

https://youtu.be/LEKwQxO4EZU

முதல் உலகப்போர் துவங்கிய பிறகே முன் சென்ற கருத்தியல் எறும்பு வட்டம் போட துவங்கியது

இப்படி ஒரு வளையத்தை உண்டாக்கி விட்ட முதல் எறும்பாகத்தான் இந்த மனித நடத்தை விதி குறித்த எதிர்நிலை கருத்தியலாளர்களை குறிப்பிடுகிறார் ருட்கர்.

நாம் மீள இயலாமல் சிக்கிக்கொண்ட அந்த மரண வளைய சிந்தனை ரசாயணத்தை அழிக்கவேண்டிய காலம் இது. அந்த முயற்சிக்கான தாக்கத்தை உருவாக்குவதில் மிக பலவீனமான ஒன்றாக கூட இந்த நூல் இருக்கலாம்.ஆனால் இந்த நூல் அந்த முயற்சியை துவங்கிய முதல் நூல் என்றவகையில் முக்கியமானது. 10 ஆம் வகுப்புக்கு மேல், வாசிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் பரிசாக அளிக்கப்படும் அப்துல் கலாமுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு பள்ளிகள் இந்த நூலை பரிசளிக்கலாம். முதல் அத்தியாயத்தை வாசித்துவிட்டால் உள்ள 500 பக்கத்தில் எதையுமே விட்டு விடாமல் வாசிக்க வைத்து விடும் இந்த நூல். மற்றபடி நான் எப்போதும் சொல்வதே இப்போதும். தமிழறிந்தோர் அனைவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய மற்றொரு நூல் இந்த மனிதகுலம் ஒரு நம்பிக்கையியூட்டும் வரலாறு.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2022 11:31

வழிதவறிய இறகுகள்

அண்ணா  வணக்கம்

நலமா.    நேற்று நேற்று சலீம் அலி எழுதிய பறவை உலகம் படித்து கொண்டிருந்தேன். நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, எனது பேராசிரியர் preface (முன்னுரை) பற்றியான முக்கியத்துவத்தை சொன்னார். அப்போதிருந்து முன்னுரையை படிக்காமல் எந்த புத்தகத்தையும் படித்ததில்லை.

பறவை உலகம் புத்தகத்தில், இந்தியாவில் பறவைகளின் இரண்டாவது கட்ட ஆராய்ச்சி முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் ஆலன் அக் டேவியன் ஹுயூம்   ( AA . Hume) என்ற  பெயரை படித்தவுடன் இதை எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று யோசித்து கொண்டே அடுத்த வரியை படித்தால் இவர் இந்தியா சுதந்திர போராட்டத்திற்கு வழிகோலிய இந்தியா நேஷனல் காங்கிரஸின் அமைப்பாளாளர்களில் ஒருவர் என்ற வரியும் வருகிறது.

அவர் Stray feathers (சிதறி கிடக்கும் இறகுகள் என்று ஆசிரியர் மொழிபெயர்த்திருக்கிறார்) என்னும் இதழை 1872 முதல் 1888 வரை பறவை ஆராய்ச்சிக்காக நடத்திவந்திருக்கிறார் . என்ன ஒரு கவிதை போல் அமைந்த பெயர் . நான் இதை வழி தவறிய இறகுகள் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

பின்பு விக்கிப்பீடியாவில் அவரை பற்றி படிக்கும்போது,  Pope of Indian  Orinthology  என்ற அடைமொழியும் அவருக்கு  இருந்திருக்கிறது .

https://www.biodiversitylibrary.org/item/94983#page/18/mode/1up

அன்புடன்
பன்னீர் செல்வம் ஈஸ்வரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2022 11:30

கம்பன் கனவு

கடந்த ஜூலை 14, 2021-இல் உங்களுடைய சீவகசிந்தாமணி உரையின் விளைவாக காவியம் வாசிக்கும் ஆவல் எழுந்தது. புதிய வாசகர் சந்திப்பு’21 மூலம் அறிமுகமான நண்பர் ஸ்ரீனிவாசுடன் – ஆங்கில வழியில் வெண்முரசின் கூறுமுறையினூடாக கீதையின் தத்துவக்கட்டமைப்பை ஆராய்ச்சி செய்யும் முனைவர் பட்ட மாணவர் அவர் – இணைந்து கிளப்ஹவுஸ் செயலி வழியாக ‘புதுப்புனல்’ என்ற பெயரில் தொடர்ந்து அமர்வுகளை நிகழ்த்தி வருகின்றோம். வாரத்திற்கு மூன்று அமர்வுகள் என்று வகுத்துக்கொண்டபோது இதை நம்மால் தொடர்ந்து செயல்படுத்திவிட முடியுமா என்ற ஐயம் இருந்தது. கம்பன் வரிகளில் கூறுவதென்றால் பாற்கடலை நக்கிக்குடிக்க எண்ணும் பூனை போல ஆசைப்பற்ற குதித்துவிட்டோம்.

கம்பன் கனவு- பார்கவி

Kamban and sexuality – A letter
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2022 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.