Jeyamohan's Blog, page 778
May 18, 2022
ரா.கி.ரங்கராஜன் -நன்கறிந்த முகம்
ரா.கி.ரங்கராஜனுக்குப் போடப்பட்ட முதல் கலைக்களஞ்சியப் பதிவு இது என நினைக்கிறேன். ஆனால் தொட்டு இழுத்தால் பெரும் படலமாக வரும் நீர்ப்பாசிப்பரப்பு போல அவருடைய வரலாறு ஒரு காலகட்டத்தின் இதழியல் வரலாற்றையே கொண்டு வந்து சேர்க்கிறது
ரா.கி.ரங்கராஜன்
ரா.கி.ரங்கராஜன்
கன்னி நிலம்,கடிதம்
இன்று கன்னிநிலம் நாவலை வாசித்து முடித்தேன். இடையில் வாசிப்பு இல்லாமல் நீண்ட நாள் கழித்து வாசித்த நாவல். நாவலை குறித்து என்னால் நினைத்ததை எழுத முடியவில்லை. இருப்பினும் இன்று தற்செயலாக முகதூலில் இதே நாளில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் பதிவிட்டிருக்கிறேன். அதை கண்டதும் கதையின் லயத்திலிருந்த எனக்கு மிகுந்த மனவெழுச்சியை அளித்தது. இந்த படத்தில் இருப்பது போல இந்த வேளிக்கு அப்பால் போர்களும், சண்டைகளுமாய், வேளியை கடந்து ‘நோ மேன் லேன்டில்’ நெல்லையப்பனும் ஜவாளாமுகியும் மதூக பூக்களாய் மகிழ்ந்திருந்தனர்.
சரண்ராஜ்
***
அன்புள்ள ஜெ
உங்கள் நாவல்களில் ‘சாதாரணமான’ நாவல்கள் என்றால் உலோகம், கன்னிநிலம் இரண்டும்தான். பொதுவான வாசகர்கள் வாசிக்கலாம். நான் உங்கள் நாவல்களை வாசிக்க விரும்பும் புதிய வாசகர்களுக்கு அவை இரண்டையும்தான் பரிந்துரை செய்வது வழக்கம்.
கன்னிநிலம் ஒரு எளிமையான துப்பறியும் கதை. ஆனால் அதில் ஷிராய் லில்லி என்னும் படிமம் அழகானது. அர்ஜுனனில் இருந்து இன்று வரை மலர்ந்திருக்கும் ஒரு மலர். அந்த மலர் மட்டுமே விரிந்திருக்கும் ஒரு நோ மேன்ஸ் லேண்ட். அந்த ரொமாண்டிக் கற்பனைதான் நாவலின் அழகே.
செல்வராஜ் குமார்
***
கொற்றவை, கவிதைகள்
அன்புள்ள ஜெ,
கொற்றவை படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் வருகிறது இப்பாடல்
கருங்கழல் அணிந்தவளே – கன்னி
கருங்கூந்தல் அவிழ்ந்தவளே
கலைமான் அமர்ந்தவளே – கன்னி
கண்மூன்று எரிபவளே
ஆயிரம் கைகள் கொண்டாள் – கன்னி
ஆயிரம் படைகள் கொண்டாள்
தாயின் அறம் மறந்தாள் – கன்னி
சேயின் குருதி கொண்டாள்
இப்பாடலைக் கேட்டு கோவலன் அஞ்சியதில் வியப்பேதும் இல்லை. நீங்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாக கவிதை எழுதுவதை தவிர்த்து வருகிறீர்கள்?
மணிமாறன்
அன்புள்ள மணிமாறன்
என் படைப்புகளில் வரும் எல்லா கவிதைகளும் செய்யுட்களும் என்னால் எழுதப்படுபவை. ஆனால் என்னால் கவிதைகள் எழுத முடியாது.
நான் என் புனைவில் ஒரு சொல்மண்டலத்தை, ஒரு வாழ்க்கைக் களத்தை உருவாக்குகிறேன். அதன் பகுதியாக எதையும் எழுதமுடியும். ஏனென்றால் அவற்றை எழுதுபவன் நான் அல்ல, அந்த சொல் மண்டலத்தின் உள்ளே வாழும் ஒருவன்.
வெளியே வந்து ஏன் கவிதை எழுத முடியவில்லை என்றால் கவிதை என்பது உலகளாவிய ஒரு சொல்மண்டலம் என்பதனால்தான். அது வேறொரு உலகம். அதன் பார்வையாளனாகவே என்னால் இருக்க முடிகிறது.
ஜெ
தமிழ் விக்கி, தாவரவியல் அகராதி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தமிழ் விக்கி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றதில் எங்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி. அந்த தடங்கலை குறித்து பெரிதாக நான் கவலைப்படவில்லை. நீங்கள் நல்ல நோக்கத்துடன் துவங்கி இருக்கும் இவ்வரிய பணி அப்படி ஒருசிலரால் நிறுத்திவிட முடியும் ஒன்றல்ல. சொல்லப்போனால் அப்படி ஒரு தடங்கல் உருவானதால் தான் தமிழ் விக்கி எத்தனை பெரிய பணி என்பதை மேலும் பலரும் அறிந்து கொள்ள முடிந்தது. அருஞ்செயல்களுக்குத்தானே தடைகளும் எதிர்ப்புகளும் வரும்.
தமிழ் விக்கி பணியில் ஈடுபட்ட பிறகு தமிழுக்கு பங்காற்றியிருக்கும், கலைத்தொண்டாற்றியிருக்கும் முந்தைய தலைமுறையை சேர்ந்த ஆளுமைகள், அவர்களின் தனி வாழ்க்கை இலக்கிய பங்களிப்பு ஆகியவற்றை அறிந்து கொண்டபின் பிரமிப்பும் திகைப்பும் பல சமயங்களில் அதிர்ச்சியும் உண்டாகிறது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் விக்கி பதிவுகளை மனதிற்குள் தொகுத்துக் கொண்டு பெரும் குற்ற உணர்வுடன் தான் உறங்கச் செல்கிறேன்.
தொலைத்தொடர்பு வசதிகளும், நகலெடுக்கும் வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் பொருளாதார வசதிகளும் இல்லாத காலங்களில் அம்மாமனிதர்களின் கடும் உழைப்பும் அதன் பயனான அரும்பணிகளையும் எண்ணிப்பார்க்கையில், எல்லா வசதிகளும் கொண்டிருக்கும், விரல்நுனியில் உலகமே குவிந்திருக்கும் இக்காலத்தில் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் செய்யாமல் இருக்கும் குற்ற உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
பழங்கால சுவடிகளை தேடி சேர்த்து, ஆயிரக்கணக்கான பக்கங்களை, தகவல்களை கையெழுத்துப் பிரதி எடுத்து, உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருக்கும் ஒருவரிடம் அப்பிரதிகளை பத்திரமாக வைத்துக் கொள்வதாக சொல்லி மருத்துவர் வாங்கி கொள்கிறார். அவற்றை தவறுதலாக மருத்துவரின் மனைவி நெருப்பிலிட்டு எரித்துவிடுகிறார். ஆனால் மருத்துவமனையில் இருப்பவரோ பரவாயில்லை என்று அவற்றை மீண்டும் கைகளில் எழுத துவங்குகிறார்.
இப்படி பலநூறு ஆளுமைகளின் வாழ்வை அர்ப்பணிப்பை கற்பனை கூட செய்ய முடியாத அவர்களின் கடின உழைப்பை வாசிக்கிறேன், அவர்களின் பங்களிப்பை அதிசயிக்கிறேன். இதுநாள் வரை நான் வாசித்திருக்கும் புனைவு அதிபுனைவு போன்ற எதிலும் அடக்க முடியாத திருப்பங்கள் சுவாரஸ்யங்களுடன் இருக்கிறது அவர்களின் தனி வாழ்க்கை தகவல்கள்.
வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து கல்வித்தொண்டும் இறைத்தொண்டும் ஆற்றியவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரும் பற்பல குழந்தைகளுமாக இருந்தவர்கள். குழந்தைப்பேறில்லாததால் தத்தெடுத்துக்கொண்டவர்கள், திருமணம் செய்து கொள்ளாதவர்கள், மனைவி இறந்தபின்னர் மறுமணம் குறித்து சிந்திக்காமல் வாழ்ந்து முடித்தவர்கள், மணம் புரிந்த பின் துறவு வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு மனைவியை பிரிந்து சென்றவர்கள். என பல்வேறு ஆளுமைகள் பல்வேறு வாழ்க்கைக் கதைகள்.
ஒரு பெண்ணை விரும்பும் இஸ்லாமிய அறிஞர் அப்பெண்ணை கேட்டு பெண் வீட்டினரை அணுகுகிறார். ஆனால் பெண் தர மறுக்கிறார்கள். மறுநாள் அப்பெண் பாம்பு கடித்து இறக்கிறாள். பெண் வீட்டார் தேடி வந்து இளைய மகளை அவருக்கு மணமுடித்து தருகிறார்கள்.
வெளி நாட்டிலிருந்து இந்தியா வந்த ஒருவரின் மனைவி பிரசவத்தில் சிறுமகளை விட்டுவிட்டு இறந்து, அம்மகளும் 5 வயதில் இறந்த பின்னர் அவர் தொண்டாற்றி மரணித்து மனைவியின் அருகிலே புதைக்கப்படுகிறார். இரு பெரிய கல்லறைகளுக்கு அருகில் அம்மகளின் சிறு கல்லறையும் இருக்கிறது.
நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு இளம்பெண் இறைச்சேவைக்கென இந்தியா வந்து தங்கி இருக்கும் இடத்தில் எதேச்சையாக சில ஊமைப்பெண்களை சந்திக்கிறார். அதுவே இறை நிமித்தம் என்றெண்ணி ஊமைப்பெண்களுக்கு கல்வியும் கைத்தொழிலும் கற்பிப்பதில் தன் வாழ்நாளை அர்ப்பணிக்கிறார். அவரே பெண்களின் மார்பகங்களை மறைக்க முன்பக்கம் முடிச்சிட்டு கொள்ளும் வகையில் எளிய ரவிக்கையையும் வடிவமைத்து அறிமுகப்படுத்துகிறார்.
தீண்டாமைக் கொடுமைகளில் ஒன்றாக தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் குளித்துக்கொண்டிருக்கும் கிணற்றில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு கொல்லப்பட்டதை கவிதையாக பதிவு செய்கிறார் ஒரு கலைஞர்.
இசைக்கலைஞர்களின் தனிவாழ்க்கையை வாசிக்கையிலெல்லாம் ஒவ்வொருவரின் வாழ்வையும் ஒரு முழுநாவலாகவோ அல்லது திரைப்படமாகவோ விரித்தெழுதலாமென்று தோன்றும். பல நாதஸ்வர கலைஞர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் அதில் பலர் சகோதரிகளை மணந்திருக்கிறார்கள். ஒருவரின் நான்கு மனைவியரில் மூவர் சகோதரிகள்.
நீண்ட நாதஸ்வரக் கச்சேரிக்கு பிறகு அயர்ந்து போன கலைஞர் ஒருவரிடம் உயரதிகாரி ஒருவர் பொருட்டு மீண்டும் வாசிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது மீண்டும் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக வாசித்தவர் நெஞ்சுவலியென்று அருகிலிருக்கும் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து அங்கேயே உயிர் விடுகிறார்.
மற்றொரு பிரபல நாதஸ்வர கலைஞர் தேர்வீதியில் சுவாமி ஊர்வலத்தில் வாசித்துக்கொண்டு வருகையில் தெருவிலிருந்த ராஜ தேள் கடித்து அங்கேயே உயிர்விடுகிறார். கல்நாதஸ்வரம் வாசிக்கும் போட்டியில் வெற்றிபெற்றவர், எப்போதும் இருவராக இரட்டை நாதஸ்வரம் வாசித்தவர்கள் என பற்பல ஆளுமைகள் அவர்களின் வாழ்வுகள்.
இவற்றுடன் முன்பு வந்துகொண்டிருந்த நாளிதழ்கள், அவற்றின் மொழிநடை அவை எத்தனை பிரதிகள் வெளிவந்தன போன்ற தகவல்கள். சிற்றிதழ்கள், சிறுகதைகள், நாவல்கள், கோவில்கள், சமணப்படுகைகள், பெண்களின் இலக்கியப்பணிகளும் பதிவாகி இருக்கின்றன. திருக்குறளுக்கு உரை எழுதிய ஜமீந்தாரிணி, மகனிடம் தன் நாவலை எந்த சேதாரமுமில்லாமல் பதிப்பிக்க சொல்லிய அன்னையொருவர், பால்யவிவாகத்திற்கு பின்னர் பல வருடங்கள் கணவனின் அனுமதியுடன் கதைகள் எழுதிய பெண், பழங்காலக் கோவில்கள், நாட்டார் கலைகள், இசைக்கருவிகள், சிறுவர் இதழ்களின் முழுதொகுப்பு, இப்படி தமிழ் விக்கி வேலைகளில் நான் பெற்றவை இத்தனை வருட வாசிப்பில் கிடைத்ததை காட்டிலும் பன்மடங்கு அதிகம்.
ஸ்டெல்லா புரூஸ், ஆத்மாநாம் பக்கங்களை சரிபார்த்த அன்றெல்லாம் உறங்கவே முடியவில்லை. ஒருநாள் வீட்டிலிருந்து புறப்பட்டுப்போன இன்னொரு ஆளுமை வீடுதிரும்பவேயில்லை ஒரு கிணற்றில் சடலமாக மறுநாள் மிதக்கிறார். அன்னை இறந்த பின்னர் சிற்றன்னையால் அன்புடன் வளர்க்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். தந்தையால் குழந்தையாக இருக்கையில் வேலைக்கு அனுபட்ட ஒருவர் மாபெரும் கலைதொண்டாற்றுபவராக உருவாகிறார். சொல்லிக்கொண்டே போகலாம்.
எந்த நேரமானாலும், நாளின் எத்தனை அசதியான அந்தியாக இருந்தாலும் தமிழ் விக்கி வேலைகளை செய்யாமல் உறங்கப் போவதில்லை, போக முடிவதில்லை. விஷ்ணுபுரம் குடும்பம் போலவே இப்போது விக்கி குடும்பம் என்றும் சொல்லலாம் என்னும் அளவுக்கு இதில் ஈடுபட்டிருக்கும் நாங்கள் மேலும் நெருங்கி இருக்கிறோம். பல நாட்கள் விக்கியில் குறிப்பிடப்பட்டிருக்கும், நாங்கள் பங்களித்திருக்கும், திருத்தங்கள் செய்திருக்கும் பக்கங்களில் இருக்கும் ஆளுமைகளை குறித்து பேசிக்கொள்கிறோம். பேசிக்கொள்ளாத நாட்களிலும் இம்மாபெரும் வலையில் பல்வேறு இடங்களில் இருக்கும் நாங்கள் உணர்வால் இணைந்திருக்கிறோம்.
இந்த வேலைகளின் அருமையை இவற்றால் எங்களுக்கு கிடைப்பவற்றை நிச்சயமாக எழுதியும் சொல்லிம் விளக்கியும் பிறருக்கு புரியவைக்க முடியாது. ஆனால் இப்போது உணர்வது போல் என் வாழ்வை பொருளுள்ளதாக முன்னெப்போதும் உணர்ந்ததே இல்லை.
எத்தனை காலம் இதை செய்யப்போகிறேன் என்னும் கேள்வியை சில சமயம் எதிர்கொள்கிறேன். எப்போதும் செய்துகொண்டிருப்பேன் என்று பதில் தருகிறேன்.
சமீபத்தில் நண்பர் ராஜமாணிக்கம் பேசிக்கொண்டிருக்கையில் கல்வெட்டுக்களில் கோவில்களுக்கு ஆடுகளை தொடர்ந்து தானமாக ஒரு குடும்பம் கொடுக்க வேண்டும் என்பதை ’’சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருப்பதை சொன்னார். அப்படி சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அல்லது நானிருக்கும் வரை அதை முழு அர்ப்பணிப்புடன் விரும்பி செய்துகொண்டிருப்பேன்.
சென்ற வாரம் கவிஞர் ஒருவர் அவரது விக்கி பக்கத்தின் திருத்தம் குறித்து என்னை தொடர்பு கொண்டார் அதை திருத்தினேன் எனக்கு அவர் நன்றி சொல்லி ’’நீங்கள் கல்லூரியில் பணியாற்றுகிறீர்கள் என்று நினைக்கிறேன் ஓய்வு நேரத்தில் இதை செய்கிறீர்கள் போலிருக்கிறது வாழ்த்துக்கள்’’ என்று தகவல் அனுப்பினர். அவர் எனக்கு அப்போதுதான் பரிச்சயம் நான் அதற்கு நன்றி என்றோ ஆம் என்றோ பதிலளித்திருந்தால் போதும் ஆனால் “ஓய்வு நேரங்களில் அல்ல, கல்லூரிப்பணிக்கும் இல்பேணுதலுக்கும் அளிக்கும் அதே முக்கியத்துவத்தை கொடுத்து தமிழ் விக்கி பணியில் ஈடுபட்டு இருக்கிறேன்’’ என்று நீண்ட விளக்கமளித்தேன். தமிழ் விக்கி பணி என்பது அத்தனை முக்கியமானது.
உருவாக்கிக் கொண்டிருக்கும் தமிழ் விக்கி பக்கங்களில் இருக்கும் ஆளுமைகளின் செயல்களுக்கு ஈடாக ஏதேனும் செய்வது என்பதெல்லாம் எனக்கு சாத்தியமில்லை எனினும் தாவரவியல் துறையில் இத்தனை வருடங்கள் ஆழ்ந்த பிடிப்புடன் பணியாற்றிக்கொண்டு, அரசுச்சம்பளமும் வாங்கிக்கொண்டிருப்பவளாக குறிப்பிட்டு சொல்லும்படியாகவாவது ஏதேனும் செய்ய நினைக்கிறேன்.
இத்துறையில் புழங்கும் லத்தீன் பெயர்களுக்கிணையான தமிழ் சொற்களும், ஆங்கில தாவரவியல் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களும் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பாக பல வீடுகளில் அழகுச்செடியாக இருக்கும், பிளவுபட்ட இதழ்களுடன் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும் செம்பருத்தி மலரின் தமிழ் பெயர் என்ன என்று நண்பர்கள் கேட்கையில் அதற்கு இணையத்தில் ’ஜிமிக்கி செம்பருத்தி’ என்றிருப்பது தெரியவந்தது. அது பொருத்தமாகவே இல்லை. அறிவியல் பெயரிலேயே அத்தாவரத்தை அறிந்துகொள்ளும் குறிப்புகள் இருக்கையில் தொடர்பே இல்லாமல் ஜிமிக்கி என்று குறிப்பிட்டிருந்ததில் எனக்கு ஆட்சேபணை இருந்தது.
இதன் அறிவியல் பெயர் Hibiscus schizopetalus. schizo -petalus என்பதற்கு பிளவுபட்ட இதழ்கள் என்று பொருள் எனவே நான் இந்த மலருக்கு ‘பிளவிதழ் செம்பருத்தி’’ என்று பெயரிட்டேன். இப்படி flower bed என்பதை பூம்பாத்தி, aggregate fruit என்பதை திரள் கனி, petiolule என்பதை சிற்றிலைச்சிறுகாம்பு, parthenocarpy என்பதை கன்னிக்கருவுருதல் என்று தமிழ்ப்படுத்துகிறேன்.
பல தாவரவியல் சொற்கள் தூய தமிழில் சங்க பாடல்களில் இருக்கின்றன. அல்லியும் புல்லியும் இணைந்த பகுதியை தாவரவியல் ஆங்கிலத்தில் tepal அல்லது perianth என்கிறது. சங்கப்பாடல்கள் இதை அதழ் என்கின்றன. வெண்முரசிலும் Dicotyledon என்பதை குறிக்கும் ஈரிலைமுளை போன்ற பல சொற்கள் இருக்கின்றன குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இதற்கென இரண்டுமணி நேரம் வேலை செய்கிறேன்.
2000 ஆங்கில தாவரவியல் சொற்களும், ஓரிரு வரிகளில் அதற்கான ஆங்கில விளக்கமும், இணையான தமிழ் சொல்லும், தேவைப்பட்டால் எளிய கோட்டு சித்திரமுமாக ஒரு தாவரவியல் கலைச்சொல்லகராதியை உருவாக்க நினைக்கிறேன். இறுதியில் அகராதியை மேலும் செம்மைப்படுத்தி திருத்தங்கள் செய்ய விஷ்ணுபுரம் நண்பர்களின் உதவியும் இருக்குமென்பதால் தரமான ஒரு அகராதியை என்னால் நிச்சயம் உருவாக்க முடியும். 20000 சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் கிடைக்குமா, இதை தனியாக என்னால் செய்துவிட முடியுமா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. இதை தொடங்கி முடிக்க முடியும் என்று நம்புகிறேன் உங்கள் வாழ்த்துக்களை வேண்டுகிறேன்.
தமிழ் விக்கியில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றியும் அன்பும்
லோகமாதேவி
May 17, 2022
கொதித்தலுக்கு அப்பால்…
வணக்கம் ஜெ
நேரம் இருந்தால் தயவுசெய்து இந்த கேள்விக்கு பதிலளியுங்கள். இது என்னுடைய தனிப்பட்ட கேள்வி.
என்னைச் சுற்றியுள்ள சமூக சூழலை என்னால் சரியாக புரிந்துகொண்டு அவற்றிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள இயலவில்லை. சுற்றி நடக்கும் சில சம்பவங்களுக்கு தேவையில்லாமல் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறேன்.
அவற்றை மாற்ற முற்படாமல் ஒதுங்கி செல்லவும் முடியவில்லை அதனுடன் ஒன்றி இருக்கவும் மாட்டேன் என்கிறது. ஒரு சான்றிதழோ அல்லது அரசு வழங்கும் உதவிதொகை பதிவு செய்யவோ அதை முறையாக பெறவோ அரசு அலுவலகத்திற்கு லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலை இன்னும் மாறாமல் இருப்பது
பெண்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் கற்பழிப்புகள். குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், சாலை விபத்துகள், அலச்சியப் போக்கு அதனால் ஏற்படும் உயிர்ப்பலிகள், ஆட்சியாளர்களின் மத மற்றும் சாதி ரீதியலான போக்கு, பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், போன்றவற்றிற்கு அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுகிறேன்.
சில நேரங்களில் இலக்கியம் படிப்பதை அடியோடு நிறுத்திவிட்டு சமூக ஈடுபாடு ஏதும் இல்லாமல் சமுதாயத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாம் உண்டு நம் வாழ்க்கை உண்டு என்று இருந்து விடலாம் என்றிருக்கிறது. மற்றவர்கள் போல இப்பிரச்னைகளுக்கு உடனடியாக நான் react செய்ய வேண்டுமா அல்லது இந்தச் சமூக சூழல்கள் இப்படித்தான் இருக்கும் என்று அதற்கேற்ப ஒதுங்கி வாழ வேண்டுமா
என்னை சுற்றியுள்ள பிரச்னைகள் இந்த மாநிலத்தில் மற்றும் நாட்டில் தினசரி நிகழும் விரும்பத்தகாத ஒவ்வொன்றிற்கும் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு அதற்கேற்ற செயலை செய்ய வேண்டுமா அல்லது நமக்கு நிகழாதவரை பிரச்சனையில்லை என வாழ முற்படுதல் உத்தமமா?
தயவுகூர்ந்து சிறு ஆலோசனை வழங்குங்கள்.
அ.பழனிசாமி
மேட்டூர்,சேலம்
***
அன்புள்ள நண்பருக்கு
உங்கள் கேள்விக்கு ஒற்றை வரியில் சுருக்கமான பதில் ஒன்று உண்டு. பொதுவாக ஆன்மிக ஞானிகள் அதைத்தான் சொல்வார்கள். ஒப்புநோக்க இலக்கியவாதிகள் மேலும் கருணை கொண்டவர்கள். ஆகவே கேட்பவனை தன்னைப்போல் எண்ணி இன்னும் சற்று இறங்கி அதற்கு பதில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லக்கூடிய பதில் இதுதான். அநீதிகளைக்கண்டு கொதிக்கிறீர்கள், கலங்குகிறீர்கள். சரி அதற்காக என்ன செய்கிறீர்கள்? ஒன்றும் செய்யப்போவதில்லை என்று நீங்கள் சொன்னால் ”எனில் அந்த சிக்கலே செயலின்மை தான். செய்யுங்கள் தீர்ந்துவிடும்” என்பார்கள்.
அவ்வளவுதான் உங்கள் கேள்விக்கான உண்மையான பதில் ஆனால் நானும் உங்களைப்போலவே அநீதிகளை கண்டு கொதிப்பவன், துன்பங்களைக்கண்டு இரங்குபவன் .ஆகவேதான் நான் எழுத்தாளனாக இருக்கிறேன். என்னுடைய உள்ளக் கொதிப்புகளை எழுத்தாக்குகிறேன். சில சமயம் நேரடியாகவே வெளிப்படுத்துகிறேன். ஆனால் இவற்றினூடாக நான் கசப்பு நிறைந்தவனாக, ஒவ்வாமை கொண்டவனாக ,எதிர்மறைப்பண்பு நிறைந்தவனாக ஆகாமல் இருக்கிறேன் எனில் அது இரண்டு காரணங்களால். ஒன்று நான் வெறுமே எதிர்வினை மட்டும் ஆற்றுவதில்லை. எனது எதிர்வினையே ஒரு எதிர்ப்புச் செயல்பாடுதான்.
என்ன செய்கிறேன் என்று கேட்டால் எழுதுகிறேன் என்றே சொல்லமுடியும். உதாரணமாக யானை டாக்டர் போல ஓர் ஆளுமை தமிழ்ச் சூழலில் அடையாளமின்றி மறைந்து சென்றுவிட்டதை எண்ணி அடைந்த உளக்கொதிப்பு யானை டாக்டர் என்றொரு கதையாக மாறுகிறது. இன்று தமிழ்சமூகம் என்றும் மறக்க முடியாத ஒரு ஆளுமையாக அவரை ஆக்க எனது ஒரு அக்கதையால் இயன்றிருக்கிறது. இன்று அவர் ஒரு தொன்மம். பள்ளிகளில் அவரைப்பற்றி மாணவர்கள் படிக்கிறார்கள். ஒரு தலைமுறைக்கே அவர் பெயர் தெரிந்துவிட்டது.
இச்செயல்பாடு நான் முதலில் கொண்ட கசப்பை நீக்குகிறது. அந்தக்கொதிப்பிலிருந்து ஒரு மெல்லிய நிறைவு நோக்கி அது செல்ல வைக்கிறது. சில சமயம் இந்த எழுத்துக்கு கூடுதலாக நான் சில பணிகளையும் செய்கிறேன். அவையும் எதிர்வினையளிக்கும் கசப்பிலிருந்து என்னை மீட்கின்றன.
எதையாவது செய்யுங்கள் நீங்கள் மீண்டு விடுவீர்கள் என்பதே நான் எப்போதும் எவருக்கும் என் அனுபவத்திலிருந்து சொல்லக்கூடிய பதிலாக இருக்கிறது. செய்வதனால் அச்சிக்கல்கள் தீர்ந்துவிடுமா என்ற கேள்விக்கு அது நமது கையில் இல்லை என்பதே எனது பதில். இந்த பூமி பல்லாயிரம் கோடி உயிர்களால் ஆனது. கோடி கோடி மனிதர்களால் ஆனது. அவர்களது முடிவில்லாத இச்சைகளும், அச்சங்களும், சீற்றங்களும் விரவி நிகழ்ந்துகொண்டிருப்பது. இந்தக்கடலில் நாம் அளிப்பதென்ன இயற்றுவதென்ன என்பதை ஒருபோதும் அளந்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால் நம் வரையில் அது நமக்கு முக்கியமானது. நம்மால் இயன்றதைச் செய்துவிட்டோம், நான் வெறும் சாட்சியல்ல என்று நமக்குத் தோன்றும்போது நாம் விடுதலை அடைகிறோம்.
செயலெனும் விடுதலை என்று மூவாயிரம் ஆண்டுகளாக இங்கு சொல்லப்படுவதன் சாராம்சம் இதுதான். கர்மயோகம் என்பது இவ்வுலகை மாற்றுவதல்ல, தன்னை மாற்றுவது. இவ்வுலகை மேம்படுத்துவதல்ல தன்னை மேம்படுத்துவது. ஆனால் இவ்வுலகை மேம்படுத்த முயல்கையில் மாற்ற முயல்கையிலேயே ஒருவன் தன்னை மாற்றிக்கொள்கிறான். எச்செயலுக்கும் அதற்கான விலை உண்டு எனும்போது நாமறியா ஒரு தளத்தில் எல்லாமே முளைத்தெழுந்து பொலிந்து கனிந்து கொண்டிருக்கிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
சில தருணங்களில் இதனால் என்ன பயன் என்று தோன்றும். அப்போது இரண்டு சான்றுகளை நான் தொட்டெடுப்பதுண்டு. இப்பூமி முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பது. இன்று நாம் அநீதிகளை, சுரண்டலை, துயரங்களை காண்கிறோம். இன்னமும் கூட பூமியில் போரும் பஞ்சமும் எஞ்சியிருக்கிறது ஆனால் நூறாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை என்பது இதைவிட பலமடங்கு அநீதியும், பலமடங்கு சுரண்டலும், பல மடங்கு அடிமைத்தனமும் கொண்டது. கற்பனைக் கெட்டாத பெரும்போர்களும் பஞ்சங்க்ளும் இங்கு நிகழ்ந்து நூற்றைம்பது ஆண்டுகள் தாண்டவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கொரொனா நோய் வந்தபோது உலகமே பீதியில் ஆழ்ந்தது இந்தியாவில் ஒருலட்சம் பேர் வரை அதனால் இறந்திருக்கலாம் என்ற கணக்கு . அது பலரை உலகம் எங்கே செல்கிறது என்ற கேள்வியை நோக்கி எழுப்பியது. வெறும் ஒரு தலைமுறைக்கு முன்பு ஸ்பானிஷ் காய்ச்சல் போன்ற நோய்களில் இந்தியாவில் ஒருகோடி பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள் எந்த குடும்பக் கதையையும் எடுத்துப்பாருங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் விஷக் காய்ச்சலால் இறந்தார்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்கும். நாவல்களில் தொடர் இறப்பு நிகழ்ந்து கொண்டே இருப்பதைப் பார்க்கலாம். உதாரணம் க.நா.சுவின் சர்மாவின் உயில் அதில் வரும் அக்கா எனும் பாட்டி இறப்பவர்களைவிட அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்தால் மட்டும் போதும் என்பதே தன் வாழ்க்கை குறிக்கோளாக வைத்திருக்கிறாள்.
இன்று மூன்றாம் பாலினத்தோர், மரபு சாரா பாலுறவு கொண்டவர் ஆகியோருக்கான ஜனநாயக உரிமை ஆட்சி அதிகாரம் ஆகியவற்றைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக அத்தகைய ஒரு எண்ணமே மனிதகுலத்திற்கு வந்தது கிடையாது. அனைவருக்கும் அதிகாரம், அனைவருக்கும் தங்கள் இன்பத்தையும் நிறைவையும் தேடும் உரிமை என்று இன்று நாம் சில விழுமியங்களை முன்வைக்கிறோம். அவற்றின் அடிப்படையில் இவ்வுலகம் அவ்வாறு இல்லையே என்று எண்ணி மனம் புழுங்குகிறோம். நண்பரே இந்த விழுமியங்கள் எல்லாமே சென்ற நூறாண்டுகளுக்குள் உலகத்தில் நிலைபெற்றவைதான். அதற்கு முன்பு உலகின் எந்த மூலையிலும் எந்தப்பண்பாட்டிலும் அவை எல்லாம் இருந்ததில்லை.
இந்த மண்ணில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பிடிக்கப்பட்டு துறைமுகங்களில் விற்கப்பட்டார்கள். நிலத்தோடு சேர்த்து அடிமைகளாக அதில் வேலை செய்பவர்களையும் விற்றார்கள். குமரிமாவட்டத்தின் அடிமை ஆவணங்களை பார்த்துக்கொண்டிருக்கையில் எங்கிருந்து எங்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்னும் பெரும் திகைப்பு ஏற்படுகிறது. நமது மூதாதையருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மனிதர்கள் என்றும் அவர்களுக்கு இன்பமும் கனவும் உண்டென்றும் உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை. அவர்களின் மதமோ ஆன்மீகமோ அதைக்கற்பிக்கவில்லை.
எனில் இந்த நூறாண்டுகளில் உலகம் முழுக்க இவற்றைப்பேசி நிறுவிய தத்துவ மேதைகள் ,இலக்கியவாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள், அரசியல் சித்தாந்திகள் ஆகியவற்றின் பங்கு எத்தனை மகத்தானதென்பதை எண்ணிப்பாருங்கள். மனித சமத்துவம் பற்றிய பேசிய வால்டேர் ஒருகணத்திலாவது தான் வெறுமே கற்பாறை நோக்கிக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறோமா, ஒன்றும் நிகழவில்லையா என்ற சலிப்பை அடைந்திருப்பாரா? உறுதியாக அடைந்திருப்பார். ஆனால் அவர் இந்த உலகை மாற்றிக்கொண்டிருந்தார். மனித குலம் தோன்றிய நாள் முதல் இல்லாதிருந்த விழுமியங்களை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அமெரிக்க அரசியல் சாசனத்தை எழுதிய தாமஸ் ஜெஃபர்ஸன் மனித குலம் முழுமைக்குமான ஒரு கனவை உருவாக்கிக்கொண்டிருந்தார். அன்று அதைக்கேட்கும் செவிகளே சிறிதாக இருந்திருக்கலாம். ஆகவே செயல் வீணாவதில்லை.
அடுத்ததாக நான் எப்போதும் என்னைப் பார்த்துக்கொள்கிறேன். நான், நான் நம்பிய துறையில் செயலாற்றத் தொடங்கி முப்பதாண்டுகளாகின்றன. அன்று நான் எண்ணிய எவையும் எண்ணியவாறு நிகழுமென்னும் மிகை நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. இயன்றதை தீவிரமாக செய்வோம் என்றே எண்ணினேன். ஆனால் இன்று திரும்பிப்பார்க்கையில் நான் எண்ணியிராத அளவுக்கு அதன் விளைவுகள் நிகழ்ந்திருப்பதை பார்க்கிறேன். செயல் வீணாவதில்லை என்று எனக்கே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். செயல் ஒன்றே விடுதலைக்கான வழி.
செயலின்மையிலிருந்தே ஐயங்கள் வெற்றுக்கோபங்கள் உருவாகின்றன. செயலற்றவர்களே அனைத்திற்கும் தானன்றி பிறரே பொறுப்பு என்று சமைத்துக்கொள்கிறார்கள். செயலுக்கு எதிராக போலி அறச்சீற்றம் அல்லது அரசியல் சீற்றம் கொள்பவர்கள் வெட்டியாக இருப்பவர்கள். வெறுமே குறைகள் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் சழக்கர்களாகிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே வெறுக்கிறார்கள். ஆகவே மேலும் கசப்பு கொண்டவர்கள் ஆகிறார்கள்.
எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாமல் அன்றாடத்தில் இயல்பாக பொருந்தி முற்றிலும் தன்னலமியாக வாழ்வதற்கு முற்றிலும் சிறந்த வழி ’இவை அனைத்திற்கும் அவர்கள் காரணம் அது காரணம்’ என்று கற்பித்துக்கொண்டு, அவர்கள் மேல் அதன்மேல் உச்சகட்ட வெறுப்பை உருவாக்கி பொதுவெளியில் ஓலமிட்டுக் கொண்டிருப்பது. அத்தகைய கொதிப்புகளால் எந்தப்பயனுமில்லை .அவை இருவகை. ஒன்று தன்னை நியாயப்படுத்திக்கொள்ளவும் தன்னலத்தில் ஊறி வாழவும் செய்துகொள்ளும் ஒரு பொதுவெளிப் பாவனை. அல்லது குற்ற உணர்வால், செயலின்மையின் வெறுமையால் தனக்குத்தானே நோயைத் தேடிக்கொள்ளுதல்.
இரண்டுக்குமான பதில் ஒன்றே செயலாற்றுக உங்கள் களம் எதுவென்று கண்டுபிடியுங்கள். அது எதுவாயினும் அச்செயல் உங்களை விடுவிப்பதைக் காண்பீர்கள்.
ஜெ
திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர்
தமிழகத்தில் ஒன்றுடனொன்று இணைத்து மெல்லமெல்ல விரித்தெடுத்து ஒரு பெரிய பரப்பென ஆக்கப்படவேண்டிய வரலாறுகளில் ஒன்று சமணம். தமிழகத்தின் சமணநிலைகளை ஆவணப்படுத்தும் ஒரு தொடர்ச்செயல்பாட்டின் பகுதியாக கிட்டத்தட்ட நூறு சமணநிலைகளை தமிழ் விக்கி பதிவு செய்திருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இப்பதிவை முழுமைசெய்வதே எண்ணம்.
திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் கோயில்
திருநறுங்கொண்டை அப்பாண்டை நாதர் ஆலயம்
தமிழ்விக்கி, இறுதிச்சொல்
தமிழ் விக்கியுடன் தொடர்புள்ள நண்பர்களுக்கு இன்று இச்செய்தியை அனுப்பினேன்.
தமிழ் விக்கி தொடங்கப்பட்டு பத்துநாள் ஆகிறது. அவ்வளவுதான், அதைப்பற்றிய எல்லா விவாதங்களையும் முடித்துக்கொள்வோம். இனி பொதுவெளியில் எவருக்கும், எதற்கும் பதில் அளிக்கத் தேவையில்லை. இனி எவர் சொல்லும் எந்த விவாதங்களையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை.
இங்கே பொதுவெளியில் பேசும் மிகப்பெரும்பாலானவர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. விக்கி என்னும் சுதந்திரக் கருத்துப்பரவல் அமைப்பு பற்றியே தெரியாதவர்களின் கருத்துக்கு என்ன மதிப்பு?
பலர் பேசுவது வெவ்வேறு சொற்களில் ‘நானும் உள்ளேன்’ என்னும் ஒற்றை வரியைத்தான். அப்படி பேசுபவர்களில் ஏதேனும் துறையில் நூல் வடிவில் எழுதி இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றவர்களை மட்டுமே கருத்தில் கொள்வோம்.
இனி நம் வேலை இதை முழுமை செய்வது மட்டுமே. இதைச் செய்வதில் நமக்கு பெரும் களிப்பு இருக்கிறது. சாதனையுணர்வு. கூட்டாகச் செயல்படுவதன் இன்பம். அறிதலின் கொண்டாட்டம்.
தமிழ் விக்கி சார்ந்த இணையக்கூச்சல்களை நம்மில் பெரும்பாலானவர்கள் படிப்பதில்லை. படிப்பவர் சிலருண்டு, அவர்களுக்கே இது. இன்றுடன், இக்கணத்துடன் தமிழ் விக்கி சார்ந்து எவர் எழுதும் எதையும் படிக்கவேண்டாம். எவரேனும் எந்த வம்பையேனும் நம் குழுமங்களில் பகிர்வார் எனில் பகிர்பவரை சிறிதுகாலம் விலக்கி வைப்போம்.
நூறாண்டுகளுக்கு முன் உ.வே.சாமிநாதையருக்கு எதிராக காழ்ப்புகளும் அவதூறுகளும் பெருகியபோது அவருடைய ஆசிரியர் அளித்த அறிவுரை இது என தன் வரலாற்றில் எழுதுகிறார். சாமிநாதையர் ஒரு சொல் கூட எதிர்வினை ஆற்றியதில்லை. அவர் எழுதியதெல்லாம் பிழை என்றும், அவர் பெரும் பணம் ஈட்டினார் என்றும் எழுதிக் குவிக்கப்பட்டது. அவருடைய செயலே நிலைகொள்கிறது. பேசியவர்களின் பெயர்கள் வரலாற்றில் இல்லை.
செயல் என்பது நேர்நிலையானதாகவே இருக்கவேண்டும். அப்போதே அதில் நம்மை ஆட்கொள்ளும் திளைப்பு உருவாக முடியும். நம்மை விடச் சிறியோரை நோக்கி நாம் எதிர்வினை ஆற்றலாகாது. நாம் பேசிக்கொண்டிருப்பது வருங்காலத்துடன்.
ஆகவே செயல்புரிக!
சியமந்தகம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெமோ,
உங்களின் இந்த புகைப்படம் இதற்கு முன்பு பொது வெளியில் இருந்ததா என்று தெரியவில்லை. இன்று தான் முதல் முறை தங்கள் தளத்தில் சியமந்தகம் கட்டுரையில் பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருக்கிறேன். சிறிது நேரம் பார்த்தால் உங்கள் சிரிப்பு இன்னும் விரிவது போல் உள்ளது. இன்னும் சற்று நேரம் பார்த்தால் பேசி விடுவீர்கள் என்று தோன்றுகிறது. உங்களை மிக அணுக்கமாக உணர வைக்கும் ஏதோ ஒன்று இதில் உள்ளது. அதுவும் தற்போது தான் தங்களை ஈரோடு சந்திப்பில் பார்த்ததால் இன்னும் அணுக்கமாக தெரிகிறது. இது வரைய பட்ட ஓவியமா அல்லது புகைப்படம் ஓவியம் ஆக்கப்பட்டதா..? எதுவாயினும் இந்த “ஜெயலிசா” ஓவியத்தை வரைந்தவருக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்.
நன்றி
பிரதீப்
***
அன்புள்ள ஜெ
நான் இப்போது மிக ஈடுபட்டு வாசிக்கும் தளம் சியமந்தகம். அருண்மொழி நங்கையின் கட்டுரைகளுக்காக வாசிக்க ஆரம்பித்தேன். அதன் பின் என் பிரியத்துக்குரிய நாவலான இரவு பற்றி பெருந்தேவி எழுதிய கட்டுரைக்காக வாசித்தேன். அதன்பின் தொடர்ச்சியாக கட்டுரைகள். உங்களை வெவ்வேறு கோணத்தில் காட்டுபவை. அரிய புகைப்படங்கள். மிக முக்கியமான ஒரு ஆவணத்தொகை இது
ராஜன் மகாதேவன்
***
கேட்பவனும் சொல்பவனும்- கடிதம்
மரியாதைக்குரிய ஜெ அவர்களுக்கு.
உங்களது “லட்சியவாதிக்கு கிடைப்பது என்ன ” என்ற காணொளி கண்டேன். 45000 பேர் சொச்சம் மட்டுமே கண்டிருந்தார்கள். ஆனால் நீங்கள் திரைக்கதை எழுதும் திரைபடத்தின் முன்னோட்டத்தை 10 லட்சம் பேர் பார்ப்பார்கள். நல்ல வேளை, எல்லோருக்கும் புரிந்து விட்டதோ என்று பயந்து விட்டேன்.
பரிணாம வளர்ச்சியில் சிலர் முன்னோடிகளாக இருப்பார்கள். நீங்கள், இளையராஜா அவர்கள். (வேறு யாரும் இணையாக தோன்றவில்லை). நிச்சயம் முகஸ்துதியாகத்தான் இருக்கும் இந்த பார்வை. ஆனால் என்னுடைய சிலாகிப்பை, உணர்வை, புரிதலை வெளியே கண்ணாடி போல காட்டும் ஒருவரை, மனதிற்குள் புலம்புவதை, ஒன்றிணைக்க முடியாமல் தவிப்பதை, ஒருவர் மிகச்சரியாக வார்த்தைகளால் வெளிக்கொணரும் பொழுது புகழ்ச்சி மொழி தவிர்க்க முடியாதது.
உண்மையில் ஏறக்குறைய நீங்கள் கூறிய அனைத்து நிலைகளிலும் என்னை ஒப்பீடு செய்து பார்த்தேன், முதலில். மிகப்பெரிய ஆன்ம சந்தோசம் என்னவென்றால், உங்களுக்கு அருகில், மிக நெருக்கமாக வந்திருப்பதாக உணர்தேன். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் செருப்பை கழற்றி அடிப்பது போலவே இருக்கும். உங்களுக்குள்ளே (self-content) ஆக இல்லையென்றால் என்று பேசி, ஒரு குன்றுதல், அதை மறைப்பதற்காக செயற்கையான நிமிர்தல் என்ற செய்தி பல மனிதர்களை பல முகங்களை சட்டென கண் முன்னே காண்பித்தது. (ஒவ்வொரு முறையும் முதலில் என்னை பொருத்தி பார்த்துக்கொண்டே பின்னர் மற்றவர்களை தொடர்பு படுத்துவேன், ஏனென்றால் நமது பார்வையில் நாம் படுயோக்கியன்) idealist ஆக இருக்கிறேன், இருக்க விரும்புகிறேன், எங்கும் குன்றாத தோள்களை உடையவனாக இருக்க முயல்கிறேன், ஆனால் என் மனைவி குழந்தை உட்பட அதை விரும்புவதில்லை.
நீங்கள் பேசும்பொழுது கைதட்டல்கள் உங்களை சிதறடிப்பதே இல்லை, உங்கள் கவனம் பேச்சு, பேச்சு மட்டுமே. எந்த இழி சொல்லுக்கும், புகழ்ச்சிக்கும், அமளிக்கும், இடையூறுக்கும் இடமே இல்லை. அந்த நிலையை நோக்கியே என் பயணம். வெகு சீக்கிரம் உணர்ச்சிவசப்படும் எனக்கு நீங்கள் ஒரு மூலப்படிமம்.
என் மனைவி, பெண்குழந்தை முன் நிமிர்த்து நிற்கும் எனக்கு உங்களது வார்த்தை மிகப்பெரிய திருப்தி. இந்த காணொளியை பலமுகங்களுக்கு மேலனுப்ப நினைத்தேன், எந்த இடத்திலும் தன்னை பொருத்தி பார்க்க முடியாமல், என்ன பதில் சொல்லுவது என்றும் தெரியாமல், தன்னை திருத்திகொள்ள முடியாமல் அருமை என்று பதில் குறும் செய்தி அனுப்புவர்.
நிச்சயம். ஒரு நேர்மையானவர் ஈட்டிக்கொள்வது நிறைவு தான். 55 வயதில் நமது வாழ்வின் எல்லை என்னவென்று அனைவருக்கும் தெரிந்து விடும் என்பது எவ்வளவு நிதர்சனம். நிச்சயம் இவர்களில் ஒருவன் நானில்லை. அந்த தெளிவு எனக்கு கிடைக்க இந்த காணொளி மிகச்சிறந்த பதிவு. என்ன சார் வார்த்தை. ஆன்மீக கீழ்மை. எப்படி உணர்வுகளோடு பொருத்தி சொல்ல முடிகிறது? இந்த வார்த்தையை உணரும் பொழுது மற்றவர்களுக்காக நான் கூச்சம் அடைகிறேன. தன்னை நியாயப்படுத்துதல் எவ்வளவு கீழ்மையானது என்ற புரிதல் எனக்கு திருப்தியாக இருந்தது. இனி தெரிந்தும் செய்ய மாட்டேன்.
நம்ப மாட்டீர்கள், பேஸ்புக்கில் இருந்து இதை உணர்ந்து, ஆனால் புலப்படாமல் பத்து வருடங்களுக்கு முன்பே வெளிச்சென்று விட்டேன்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நோய்க்கூறு நையாண்டி, கேலி என்பது முற்றிலும் உண்மை. கருத்துக்களை உள் வாங்கும் தன்மையை இழந்து கொண்டே இருப்பார்கள் என்பதும் மிகச்சரியான உண்மை மற்றும் புரிதல். இந்தக்கோமாளிகளை பத்து நிமிடங்கள் அல்ல, பல நூற்றாண்டுகளாக ஆட விட்ட காரணம்தான் இன்று இந்த நிலைமை.
நீங்கள் நிச்சயமாக டால்ஸ்டாயை விட சிறிய குமிழி அல்ல. நிச்சயமாக மிகப்பெரிய சுழல். ஒரு முறை கோவையிலும், திருப்பூரிலும் உங்களை சந்தித்துள்ளேன். வெகு சுலபமாக எங்கள் எண்ண ஓட்டத்தின் ரகசியத்தை புரிந்து கொண்டு வெகு இயல்பாக சிரிக்கும் உங்களிடம் கவனமாக இருப்பது நன்று.
தெளிவுடன் .
திருப்பூரில் இருந்து
விஜி.
***
அன்புள்ள விஜி,
ஓர் எழுத்தாளன் தான் வாழும் சமூகத்தை விமர்சனத்துடன் மட்டுமே அணுக முடியும். மனசாட்சியை நோக்கி அவன் பேசுவதெல்லாமே ஒருவகை ‘கண்டித்தல்’தான். நானல்ல, என் முன்னோடிகள் அனைவருமே அவ்வாறுதான் பேசியிருக்கிறார்கள்.
அது இருவகை எதிர்வினைகளை உருவாக்கும். மிகப்பெரும்பாலானவர்கள் கசப்பும் கோபமும் அடைவார்கள். ஏனென்றால் அவர்களின் ஆணவம் சீண்டப்படும். பொதுமக்கள் பொதுவாக அவர்களின் ஆணவத்தைக் குளிரவைக்கும் பேச்சாளர்களையே விரும்புவார்கள். அவர்களை கண்டிப்பவர்களை வெறுப்பார்கள்.
அத்துடன் பொதுமக்கள் ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்தவற்றை மீண்டும் கேட்கத்தான் விரும்புவார்கள். புதிய விஷயங்களை அஞ்சுவார்கள், எதிர்ப்பார்கள்.
ஆகவேதான் நான் மாபெரும் பொதுப்பேச்சுக்களைப் பேசுவதில்லை. என் உரை மிகச்சிறுபான்மையினருக்காக. அவர்கள் என் உரையால் சீண்டப்பட்டு நிலைகுலைந்தாலும் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளவும் கூடும். உங்கள் கடிதம் அத்தகையது. நன்றி.
ஜெ
May 16, 2022
மாயை
அன்பு ஜெ,
இன்று ஏனோ மாயை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன் ஜெ. “INSIGHT IS NOT INTUTION” என்ற தலைப்பில் ஜிட்டு பேசியிருந்தார். அறிதலுக்கும் மாயைக்குமான வித்தியாசத்தை சொல்லிக் கொண்டிருந்தார். அறிதலினால் தான் நாம் செயல் செய்கிறோம். செயலும் அறிவும் வேறுவேறல்ல என்கிறார். செய்யும் செயல்கள் யாவும் நாம் நன்கு அறிந்திருப்பதால் செய்கிறோம் ஆனால் எல்லாச் செயல்களும் நினைத்த பலனைக் கொடுப்பதில்லை. பலனைக் கொடுக்காத செயல்களுக்காக நாம் வருந்துகிறோம். கூர்ந்து நோக்கினால்… இவையாவுமே மாயையின் மிகப்பெரிய சட்டத்துள் இயங்குகிறது என அறியலாம் (If u watch carefully you see instantly the whole structure of illusion) என்கிறார். இந்தக் கண்டடைதலே ஞானம் என்கிறார். “structure of illusion” என்ற வார்த்தையை நான் பிரம்மாண்டமாக கற்பனை செய்து கொண்டிருந்தேன்.
யாவற்றையும் சற்று “நான்” என்பதை விலக்கி தள்ளி நின்று பார்த்தால் “மாயை” என்பதை உணரலாம் என்று தோன்றுகிறது ஜெ. வியாச பிரசாத் அவர்கள் “Speclation on Maya and Absolute” பற்றி கூறும்போது “நீ தான் மாயா; Absolute/முழுமை என்பது கடவுள்” என்கிறார். Absolute தன்னை நிகழ்த்திக் கொள்வதற்காக படைக்கப்பட்டது தான் மாயை. நான் என்பதே மாயையை உய்த்துணர்வதற்கே; மாயை என்பது முழுமையின் ஒரு சாயை என்கிறார். மாயா தன்னை ஆத்மன் என்ற ஒரு ஏஜென்சி மூலமாக நிகழ்த்திக் கொள்கிறது என்கிறார். முழுமை என்பது ஒருமையைக் குறிக்கிறது. அது தன்னை நிகழ்த்திக் கொள்வதற்கு மாயை தேவைப்படுகிறது. அதனால் இரண்டாகப் பகுக்கிறது என்கிறார். இரண்டு எதிரெதிர் துருவங்கள் தான் எதேச்சையாக ஒரு பயணத்தில் சந்தித்துக் கொள்கிறது என நிக்கோலஸ் கூறுவதாக ஒரு கூற்றையும் முன் வைத்தார்.
உண்மையில் மகிழ்வு, துக்கம், அறிவு, ஞானம், வெற்றி, புகழ், காதல், காமம் என நாம் உணர்வது யாவுமே நாம் மாயையில் இருப்பதால் தான் என்ற சிந்தனை வந்தது ஜெ. முழுமையின் இடத்தில் நின்று நாம் இவற்றையெல்லாம் உற்று நோக்கினால் இவையாவும் மாயை/மாயையின் ஆடல் என்பதை அறியலாம் என்கிறார்.
அப்படியானால் முழுமை தன்னை நிகழ்த்திக் கொள்வதற்கு பல நிறைவின்மைகளை உருவாக்கிக் கொள்கிறது. இந்த நிறைவின்மைகளாகிய ’மாயை/நான்’ முதலில் தன்னை முழுமையின் கூறான “நிறைவின்மை” என்பதை உணரவேண்டும். உண்மையில் ’நான்’ என்ற ஒன்றால் மட்டும் முழுமையை அடைந்துவிட முடியாது என்பதால் தான் நீங்கள் ”ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவினமையை அடைக!” என்றீர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
பெரும்பான்மையான துக்கங்கள், மகிழ்ச்சிகள், இச்சைகள், தருணங்கள் எதிர்காலத்திலிருந்து பார்க்கும் போது “நான்” அல்ல என்றோ அதை அனுபவித்ததற்கான எந்த போதமோ இல்லாமல் தான் இருக்கிறது. Absolute மாயையைப் பயன்படுத்திக் கொள்கிறது என்றால், மாயை ஆத்மனைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆத்மன் உடலைப் பயன்படுத்திக் கொள்கிறது. காலத்தின் முன் சென்று இறந்த காலத்தைப் பார்த்தால் அது நான் அல்ல என்றே தோன்றுகிறது. அப்படியானால் நிகழ்வதற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பு என்ன? செய்து முடித்த பிழைகளிலிருந்தும், செயல்களிலிருந்து நமக்குக் கிடைத்த ஞானம் ஒன்று மட்டுமே நம்மால் தொகுத்துக் கொள்ளக் கூடியது.
“நான் அல்ல” என்று எதிர்கால ’நான்’ நினைத்துக் கொள்கிறது என்பதாலேயே தான் மீண்டும் மீண்டுமென நாம் அதை நோக்கி சென்றுகொண்டே இருக்கிறோம். இங்கு நான் காலத்தை யோசித்துப் பார்த்தேன் ஜெ. “காலம் அனைத்தையும் தீற்றலாக்குகிறது” இன்று அந்தத் தீற்றல்களை யோசித்துப் பார்த்தால் அவையாவும் Absolute-ன் ஒரு பகுதி என்றே தோன்றுகிறது.
இங்கு தான் ஐன்ஸ்டீன் காலத்தை Absolute அல்ல Relative என்பதைக் கண்டறிந்திருப்பார் என்று தோன்றுகிறது. காலத்தை மாயம் என்று கொண்டால் திறக்கும் வாசல்கள் ஏராளம். அதைவிட “நான்” என்பதையே மாயம் என்று கொண்டால் அது இன்னும் பல்லாயிரம் வேறு வாசல்களைத் திறக்கிறது ஜெ. “நான்” மாயமாகும் போது கண்டறிந்த/கண்டறியப்படாத அனைத்துப் பரிமாணத்தையும் மாயம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. அப்படியானால் இருப்பது “Time, Space, Gravity” என்ற பரிமாணம் மட்டுமல்ல. இந்தப் பரிமாணங்கள் முடிவிலி என நீண்டு கொண்டே இருப்பவை. ஒவ்வொரு பரிமாணத்தையும் கண்டறிந்து உலகை அறியும்போது வியப்பு கொள்கிறோம். ஒன்றை Absolute ஆக்கும்போது ஒரு வாசல் திறக்கிறது. அதையே Relative ஆக்கும் போது வேறு பல வாசல்கள். புதிய பரிமாணத்தின் சாத்தியங்கள் வரும்போதெல்லாம் அதில் திறக்கும் முடிவிலி வாசல்களைப் பார்த்துத் திகைக்கிறோம். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து மனிதகுலம் எத்தனை பரிமாணங்களைக் கண்டடைந்திருக்கும் என்று கூற முடியவில்லை. ஆனால் அங்கு நின்றும் அவை அடையப் போகும் உச்ச சாத்திய ஞானம் ஒன்று என்றே தோன்றுகிறது ஜெ. அறிவியலிலும் இது நிறைவின்மையின் பாதை தான். Absolute க்கு சென்றடைய அவர்களுக்கு இருப்பதும் நிறைவினமையின் பாதை தான். தத்துவத்திலும் ஆன்மீகத்திலும் அதே நிறைவின்மையின் பாதை தான்.
அப்படியானால் சுயம் என்பதை எப்படி முழுமையாக உணர்வது? நீங்கள் சொல்வது போல செயல் செயல் என நிகழில் திகழ்ந்து சென்றுகொண்டே இருப்பது தான். நிகழில் மட்டுமே “நான், ஆத்மன், மாயை, முழுமை” என யாவற்றையும் உணர முடியும் என்று நினைக்கிறேன் ஜெ. உண்மைதானா?
இது அறுதியான உண்மை என்றும் தோன்றவில்லை. ஏனென்றால் வித்யையும் மாயை என்கிறார்கள். ஞானமும் கூட உளமயக்கைத் தரக் கூடியது என்கிறார்கள்! மண்டை வெடித்துவிடும்போல இருக்கிறது. அதனால் இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன் ஜெ.
பிரேமையுடன்
ரம்யா.
***
அன்புள்ள ரம்யா
மாயை போன்ற கலைச்சொற்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அவை பெரிய மரங்களைப் போன்றவை ஆழத்தில் புதைந்து எண்ணமுடியாத தொலைவுகளுக்கெல்லாம் சென்று பரவிய வேர்கள் உண்டு. கண்ணுக்குமுன் தூலமாக எழுந்து எப்படி சென்றாலும் முட்டிக்கொள்ளும் அளவுக்கு பிரம்மாண்டமாக நின்றிருக்கும் அடிமரங்கள் உண்டு. தலைக்குமேல் நிழலென விரிந்து பல்லாயிரம் நாக்குகளென துடிதுடித்துக்கொண்டிருக்கும் இலைப்பரப்புகள் உண்டு. தளிர்கள் உண்டு, மலர்கள் உண்டு, கனிகளும் உண்டு. உலகெங்கும் பரவும் விதைகளும் உண்டு. ஆகவே இக்கலைச்சொற்களில் ஒரு குறிப்பிட்ட விவாதச் சூழலில் ஒரு குறிப்பிட்ட களத்தில் திட்டவட்டமாக வரையறை செய்துகொண்டு பேசுவதே உசிதமானது.
தத்துவத்தில் மிகப்பிழையான ஒன்று என்பது மேற்கோள் வழியாக யோசிப்பது. தத்துவத்திற்குள் தொடக்ககால வாசகர்களை, மாணவர்களை உள்ளே கொண்டு வருவதற்கு மேற்கோள்கள் உதவியானவை. அவை மூளையைத் தொட்டு உசுப்புகின்றன. புதிய கேள்விகளை உருவாக்கி அலைக்கழிய வைக்கின்றன. அவற்றிலிருந்து வாசகன் தத்துவத்திற்குள் வருவான். தத்துவத்திற்குள் வந்த பெரும்பாலானவர்கள் அப்படித்தான் நுழைந்திருப்பார்கள்.
ஆனால் மேற்கோள்கள் ஒரு விரிந்த விவாதப்புலத்தில் முன்வைக்கப்பட்டவை. ஒரு பொதுச்சித்தரிப்பின் ஒரு பகுதியாக அமைபவை. அந்த விவாதக்களத்தில் அச்சித்தரிப்பில் அம்மேற்கோள் உருவாக்கும் கருத்தும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்களும் என்னவாக இருக்கின்றன என்று அறியாமல் நாம் புழங்கிக்கொண்டிருக்கும் அறிவுத்தளத்தில் விவாதக்களத்தில் அந்த மேற்கோள்களின் கருத்தையும் கலைச்சொற்களையும் எடுத்து புரிந்துகொள்வது என்பது பெரும்பாலும் பிழையாகவே அமையும்.
ஆகவே ஒரு கட்டத்துக்கு மேல் உதிரி மேற்கோள் வழியாக யோசிப்பதை முழுமையாகவே நிறுத்திக்கொள்ளவேண்டும். எந்த தத்துவ விவாதமானாலும் அதனுடைய தொடக்கம், முதிர்வு, எதிர்நிலை ஆகிய மூன்று நிலைகளையும் அறிந்த பிறகு நம்முடைய சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
இந்தக்கடிதத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாயை எனும் சொல் சார்ந்த கருத்துக்களை ஒன்றாகத் தொகுத்து உங்களுக்கான ஒரு தரப்பை உருவாக்க முயல்கிறீர்கள். தத்துவத்தில் இது பிழையென கருதப்படும். ஒரு முழுக்கட்டுரையுமே மேற்கோளாக்கி இந்த விவாதத்தை நீங்கள் தொடங்கியிருந்தால் அந்த கட்டுரைக்கான எதிர்த்தரப்பு, அக்கட்டுரையின் முந்தைய பரிணாம வளர்ச்சி, அக்கட்டுரையின் எதிர்கால வளர்ச்சிச் சாத்தியங்கள் ஆகியவற்றைக்கொண்டு இவற்றை விவாதிக்க முடியும்.
இது ஆழ்ந்த தத்துவ விவாதம் போல் தோன்றினாலும் இதிலுள்ள அடிப்படையான பிழை என்ன என்று சுட்டவே இதைச் சொன்னேன். மாயை என்னும் கருதுகோள் இந்திய தத்துவ மரபிலேயே வெவ்வேறு வகையில் வெவ்வேறு பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது.
அத்வைத மரபில் பிரம்மம் ஒன்றே மெய்யானது. பிற அனைத்துமே அதனுடைய மாயத்தோற்றங்கள் தான். பிரம்ம சத்யம், ஜகன்மித்யை. இப்பிரஞ்சத்திலுள்ள அனைத்தும் தோற்ற மயக்கங்கள் தான் ஆனால் வெவ்வேறு பக்தி மரபுகளில் இறைவனின் அழகிய லீலையாகவே மாயை கருதப்படுகிறது. இறைவனிடம் அழைத்துச் செல்லும் பாதையாக மாயை கருதப்படுகிறது. மனிதனை செயல்களத்தில் ஈடுபடவைத்து விவேகத்தையும் ஞானத்தையும் பெறச்செய்து பரம்பொருளின் தோற்றத்தை மாயை வழங்குகிறது. ஆகவே அதுவும் பரம்பொருளே. இங்குள்ள எதுவும் பிரம்மமன்றி வேறில்லை என்று வரும்போது மாயையும் பிரம்மத்தின் தோற்றமே.
மாயையை பழித்தல் என்பது அத்வைதத்தில் உள்ளது. ஆனால் மகாமாயை என்று உலகளந்த பராசக்தியை வழிபடும் மரபு சாக்தமரபில் உள்ளது. இன்று கேரளத்தில் சென்றால் பெரும்பாலான தேவி கோயில்களில் ‘அம்மே மகாமாயே’ என்று கூவி வழிபடுபவர்களை நீங்கள் பார்க்கலாம். மாயா வடிவமாக அங்கிருப்பவள் உலகளந்த அன்னை. ஆகவே மாயை என்பதற்கு ஒரு பொருள் மட்டும் இல்லை. அது ஒரு கருத்தோ ஒரு பொருளோ அல்ல.
இங்கு நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்? ஒரு செயல்; அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உளமயக்குகள் எதிர்பார்ப்புகள், விளைவை எண்ணி செய்யப்படும் செயல்களுக்கு இருக்கக்கூடிய பொருளின்மை, உலகச் செயல்களை இயற்றிச் சென்றடையும் வெறுமை என நீங்கள் கொடுக்கும் அர்த்தங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இங்கு அச்சொல்லுக்கு ஒரு அறுதியான பொருளை நீங்கள் வகுத்துக்கொண்டு மேற்கொண்டு சிந்திக்கும்போது தெளிவை அடைவீர்கள். எந்த சிந்தனை மரபுக்குள் நீங்கள் நிற்கிறீர்கள் என்பதை அதற்கு முன் வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்திய மரபில் ஒருவர் முதலில் தன்னை வேதாந்தி என்றோ சைவ சித்தாந்தி என்றோ உறுதியாக வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் ஒவ்வொரு விவாதத்திலும் உனது ஆசிரியர் யார், உனது நூல் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவ்வாறன்றி வெவ்வேறு தரப்புகளின் அறிதல்களை கலந்து தனக்கென ஒன்றை உருவாக்கிக்கொண்டால் அத்தரப்பை ஒருவர் ஒரு முழுமையான தத்துவத் தரப்பாக தானே வரையறுத்துக்கொள்ளும் வரைக்கும் அது விவாதத்துக்குரியதல்ல. அதாவது நீங்களே ஒரு சங்கரரோ மத்வரோ ஆகும்வரை அத்தரப்பு தத்துவத்திற்குள் பேசப்படாது.
இறுதியாக இச்சொல்லை மிக எளிய உலகியல் அர்த்தத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு மேலே பேசுகிறேன். இங்கு நாம் வாழும் வாழ்க்கை ஒரு மாயத்தோற்றம் என்று உணர்கிறீர்கள். இங்கு வாழ்ந்து உறவுகளைப்பின்னி அவற்றுக்கான கடமைகளை நிறைவேற்றி மடிகிறோம். இந்த வாழ்க்கைச் செயல்பாடுகளை இலக்குகளை வைத்து உழைக்கிறோம். எய்தியதும் நிறைவுறுகிறோம். கடமைகளை இயற்றும்போது தன்னிறைவையும் அவற்றுக்கான பயன்கள் விளையும்போது மகிழ்வையும் அடைகிறோம். இவ்வாறு வாழ்ந்த வாழ்க்கையின் இலக்குகள் நடைமுறைகள் விளைபயன்கள் ஆகிய மூன்றுமே வெறும் மனமயக்கங்கள் தானா என்று நீங்கள் இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதாக புரிந்துகொள்கிறேன்.
அதற்கு மாயை என்ற சொல்லை பயன்படுத்த வேண்டியதில்லை. அச்சொல்லின் தத்துவ அர்த்தம் மிக விரிவானது, மிகப்பெரிய சொல் அது. ஆணி அடிப்பதற்கு கல்லுடைக்கும் இரும்புக்கூடத்தை எடுக்க வேண்டியதில்லை. உண்மையில் மாயை என்ற சொல்லை இந்த விவாதத்தின் இறுதியில் இருந்து உண்மையான தத்துவ விவாதத்துக்குள் செல்லும்போது பயன்படுத்தலாம். அதுவரைக்கும் அதை அப்பால் நிறுத்தி வைப்போம்.
உலகியல் செயல்பாடுகள் பொருளற்றவையா? அவ்வப்போது நமக்குத் தோன்றுவது அது. நமது பெரும்பாலான மனநிறைவுகள் மகிழ்ச்சிகளும் உலகச் செயல்பாடுகளில்தான் உள்ளன. ஒரு நல்ல வேலை கிடைத்தால், பணம் கிடைத்தால், நல்ல பொருள் வாங்கினால் உரியவர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் மகிழ்கிறோம். அம்மகிழ்ச்சி பொய்யானதா என்ன? அவ்வண்ணம் எண்ணியது நிகழாத போது இவை அனைத்தும் பொய் என எண்ணுவோம் எனில் அது நமது உளச்சோர்வுக்கான ஒரு காரணத்தை நாம் கண்டுபிடிப்பது தவிர மெய்யானதல்ல. மகிழ்ச்சி உண்மை, துயரம் மாயை என எண்ணுவீர்கள் என்றால் அது எப்படிப்பட்ட மடமை. உலகியல் என்பது பொய் என்று சொல்லவேண்டும் என்றால் அதன் மகிழ்ச்சிகளும் பொய் என உண்மையாகவே உணரும் மனநிலை இருக்கவேண்டும்.
பாரதி ஒருவேதாந்தியாக நின்று சொன்னதுதான் இது. இவ்வுலகத்திலுள்ள இன்பங்கள், கடமைகள், இலக்குகள் எவையும் பொய்யானவை அல்ல. அவற்றைத் துறந்துவிட்டு நாம் இங்கு வாழவும் இயலாது. உறவுகளும் கடமைகளும் தவிர்க்கக்கூடியவை அல்ல. ஆனால் அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை உணர்ந்திருப்பதற்கு இத்தகைய சில தத்துவத் தெளிவுகள் பயன்படும். உலகியல் இலக்குகள் முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவு. ஆனால் அவை மட்டுமே முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவின்மை.
அது ஒரு பொருளுக்கு அதற்கு தகுதியில்லாத பல மடங்கு விலை அளிப்பது போல. நூறு ரூபாய் மதிப்புள்ள சட்டையை நூறு ரூபாய்க்கு வாங்குவதென்பது பொருளுள்ள செயல். முழு வாழ்க்கையையும் கொடுத்து அந்த சட்டையை ஒருவர் வாங்கினாரென்றால் அது அபத்தமானது. உலகியல் வாழ்க்கைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே அளிப்பவர் உலகியல் வாழ்க்கை பொருளற்றது என்ற இடத்துக்கு சென்று சேர்வதில்லை. அது அளிக்கும் இன்பங்கள் இவ்வளவுதான் என்பதை உணர்பவர்கள் அது அளிக்கும் துன்பமும் அவ்வளவுதான் என்பதை வகுத்துக்கொள்ள முடியும்.
உங்கள் உறவுகளில் ஒரு நன்று நடந்தால் அது முழு வாழ்க்கையின் வெற்றி என்று நீங்கள் துள்ளிக் கொண்டாடுவீர்கள் என்றால் உங்கள் உறவுகளில் ஒரு தீது நடந்தால் முழு வாழ்க்கையும் அழிந்துவிட்டதென்ற பெருந்துயரை அடைவீர்கள். முழு வாழ்க்கையின் அர்த்தமே உலகியல் சார்ந்ததென்று எண்ணுவீர்கள் என்றால் உலகியலில் அடையும் தோல்வி முழு வாழ்க்கையையும் பொருளற்றதாக்கிவிடும் என்றும் அறிவீர்கள்.
உலகியல் என்பது என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி. அது மனமயக்கல்ல பொய்யல்ல. மாயை அல்ல. இங்கு நாம் உடல்கொண்டு இருப்பதனாலேயே வேறு வழியில்லாமலேயே அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம். உணவுண்டால் தான் பசி தீருமே ஒழிய எந்த தத்துவத்தை வைத்தும் பசியை தீர்க்க முடியாது. பொருளீட்டினால் தான் வாழ்வே ஒழிய உள எழுச்சிகளைக்கொண்டு வாழ்ந்துவிட முடியாது. உணவுக்கும் உலகப்பொருளுக்கும் உகந்ததை இயற்றுவது எவ்வகையிலும் பொய்யல்ல. தேவையற்றதல்ல.
ஆனால் அதற்கப்பால் நமக்குரிய அகக்களங்கள் வேறு .நாம் இங்கு ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன. நாம் அடையவேண்டிய நுண்ணிய இன்பங்கள் ,ஆழ்ந்த நிறைவுகள் பல உள்ளன. நமக்குள் அவற்றை நிகழ்த்திக்கொள்வதற்கு உரிய புறத்தை உருவாக்குவதே உலகியலில் நாம் செய்யவேண்டியது. நமது தெய்வத்தை நிலை நிறுத்தும் கல்பீடம் இது என்று கொள்க. இங்கிவற்றை இயற்றும்போது அகத்தை நம்மை ஆக்கிக்கொள்வதற்கான சில நிபந்தனைகளை நிறைவேற்றுகிறோம்.
ஆகவே பொய்யென்றும் வீணென்றும் இவற்றை நினைக்க வேண்டியதில்லை. உல்கியல் ஒரு சிறிய தெய்வம் இந்த தெய்வத்திற்குரிய படையலையும் பூசையையும் கொடுப்போம். தலை கொடுக்க தகைமை கொண்ட பெருந்தெய்வம் நமக்குள் நமக்காக காத்திருக்கிறது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


