Jeyamohan's Blog, page 776
May 22, 2022
அலை – போகன் சங்கர்
முதலில் கேட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. துறவுக்கான எந்த அறிகுறியையும் அவன் முன்பு காட்டியிருக்கவில்லை. அவன் ஓரளவு வெற்றிகரமான வியாபாரி. நகரத்தின் மையமான பகுதியில் தலைமுறைகளாக நடத்திவரும் ஒரு கடையின் மூன்றாம் தலை வாரிசு. வாரிசுகளுக்கே உரிய இன்ப வேட்கையும் புதுப்பிக்கும் துடிப்பும் கொண்டவன். வார இறுதிகளில் நானும் அவனும் சேர்ந்த பணம் வாங்கக்கூடிய எல்லாவற்றையும் வாங்கியிருக்கிறோம். பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று நம்பியிருக்கிறோம். எங்கள் அனுபவங்கள் அப்படித்தான் அமைந்தன.
நான் முதலில் அவனுக்கு வேறு ஏதோ இக்கட்டு என்று நினைத்தேன். வியாபாரிகளுக்கே வரக்கூடிய இக்கட்டுகள். கொடுக்கல் வாங்கல் அல்லது பெண் விவகாரம். அவற்றிலிருந்து தற்காலிமாக தப்பிக்கவே இந்த வேஷத்தை அவன் எடுத்திருக்கிறான். வார இறுதிகளில் நாங்கள் கோவாவுக்குச் சென்றது போல இப்போது அவன் இமாலயத்துக்குச் சென்றிருக்கிறான். அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் நிஜமாகவே அவன் சன்னியாசி ஆகிவிட்டான் என்று சொன்னார்கள்.
நான் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். முடியவில்லை. இமாலயத்துக்கே போய் அவனைச் சந்திக்கலாம் என்று நினைத்தேன். சந்தித்து எங்கள் பழைய களியாட்டாங்கள் பற்றிப் பேசலாம். எங்கள் பயணங்கள், மலை ஏற்றங்கள், கூட்டாக அனுபவித்த பெண்கள். அவன் திடீரென்று இந்த சாகசத்தில் என்னை மட்டும் கழற்றிவிட்டுப் போனது சினம் அளித்தது. நான் அதை அப்படித்தான் பார்த்தேன். இன்னொரு சாகசம்
எனது பணி நெருக்கடியில் உடனடியாக அது முடியவில்லை. எனது ‘உடனடி’என்ற வார்த்தைக்கு இரண்டு வருடங்களாகிவிட்டன. ஒரு நாள் அவன் சில சட்ட ஆவணங்களில் கையொப்பமிட்டு ஒப்படைப்பதற்காக ஊருக்கு வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டுப் போனேன்.
அவன் எதிர்பார்த்தது போலவே காவியில் இருந்தான். மற்றபடி எந்த மாற்றமும் தெரியவில்லை. இல்லை கண்களில் அவற்றை அவன் நகர்த்தும் விதத்தில் ஏதோ மாற்றம் வந்திருந்தது.
அவன் என்னைக்கண்டதும் புன்னகைத்து “வா” என்றான். அவன் வீடு பரபரப்பாய் இருந்தது. நான் அது அடங்கக் காத்திருந்தேன். அவன் அன்று முழுவதும் பத்திரங்களில் கையொப்பமிட்டுக்கொண்டே இருந்தான்.
மாலையில் ஒரு இடைவெளியில் அவன் சட்டென்று பேச ஆரம்பித்தான். “நான் ஒரு விளக்கம் தரவேண்டும் என நீ நினைக்கிறாய் இல்லையா?” என்று தொடங்கினான்.
‘சொன்னால் உனக்கு ஆச்சரியமாக இருக்கும். எல்லாம் ஒரு நாள் காலைக்குள் மாறியது. நான் வழக்கம்போல் காலையிலேயே கடைக்கு வந்து கல்லாவில் உட்கார்ந்திருந்தேன். அன்றைய நாளுக்குரிய சில பிரச்சினைகள், அவற்றைச் சரி பண்ணவேண்டிய வழிகள் பற்றி யோசித்துக்கொண்டு. சாலையில் ஜனங்கள் நிறைவதைப் பார்த்துக்கொண்டு. அந்த சாலையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் வியப்பாக இருக்கும். எட்டு மணி வரைக்கும் ஹோவென்று இருக்கும். பத்து நிமிஷத்தில் ஆபீஸ் போகிறவர்கள், பள்ளி போகிறவர்கள் என்று நிரம்பிவிடும்.முக்கால் மணி நேரத்தில் வடிந்துவிடும். அதன் பிறகு மாலை ஒரு முறை எதிர்த் திசையில் நடக்கும்.இது என் கண் முன்னால் நடந்துகொண்டேதான் இருந்திருக்கிறது.தெரியும். ஆனால் அன்றுதான் முதல் முறையாகப் பார்த்தேன். நான் அன்றைய காலை செய்தித் தாள்களைப் பார்த்தேன்.எல்லா செய்திகளும் புதியவையாகவும் பரிச்சயமாகவும் ஒரே நேரத்தில் தோன்றின. கடை மேலாளர் வந்து உடனே வாங்க வேண்டிய பொருட்களின் ஜாபிதாவைக் கொடுத்தார். கல்யாண சீசன் வருது சார் என்றார். கடைக்குள் அன்றைய முதல் வாடிக்கையாளர் வந்தார். வீட்டிலிருந்து இவள் போனடித்துக்கொண்டே இருந்தாள். ஏதோ சண்டை.அது அவள் மாதாந்திர சமயம்.அடுத்த வாடிக்கையாளர் வந்தார். இதன்பிறகு ஒரு இரண்டு மணி நேரம் வந்துகொண்டே இருப்பார்கள். பிறகொரு ஓய்வு. மறுபடியும் மாலையில் வரத் துவங்குவார்கள்.
எனக்கு மெல்ல எல்லாம் விளங்கத் துவங்கியது. இது ஒரு அலை.எல்லா வியாபாரிகளுக்கும் இந்த அலைகளின் போக்கும் நீங்கலும் தெரியும். இதே போல்தான் எல்லாம். எல்லாவற்றிலும் கடையில், வீட்டில், உலகில். என் உடலில், என் மனைவியின் உடலில் எல்லாம்… என் வெற்றி, தோல்வி, காமம், வெறுப்பு எல்லாமே இந்த அலைகளின் போக்குவரத்துதான்.
முன்பே சொன்னது போல் இது என் கண் முன்னால் நடந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. தெரியும். ஆனால் அன்றுதான் முதல் முறையாகப் பார்த்தேன்.
எனக்கு வியர்க்கத் தொடங்கியது. நான் ஒரு போஞ்ச் வாங்கச் சொல்லிக் குடித்தேன். வெளியே போய்ட்டு வரேன். கடையைப் பார்த்துக்கோங்க. அப்பா தாத்தா படத்தில எல்லாம் சரம் மாத்துங்க என்று சொல்லிவிட்டு வந்தேன். அப்போது கூட நினைக்கவில்லை. ஒரு சிகரெட்டுக்காக வெளியே வந்திருக்கிறேன் என்றே நினைத்தேன். பஸ் ஸ்டாண்டில் உறுமிக்கொண்டிருந்த ஒரு பஸ்சில் பையன் ‘சாமிமலை! வாங்க வாங்க! சீக்கிரம்! சாமிமலை!’ என்று கத்திக்கொண்டிருந்தான். என்னை ஏதோ ஒன்று வந்து மூடியது போல் இருந்தது ஏறிவிட்டேன்.”
நான் மவுனமாக அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“எது வந்து மூடியது உன்னை?” என்றேன் பலவீனமாக. கேட்கும்போதே எனக்குப் பதில் தெரிந்தே தான் இருந்தது. அவன் சொல்லிக் கேட்கநினைத்தேன் போல.
அவன் சொன்னான்.
அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். ”ஒரு அலை” என்றான். “ஆனால் இம்முறை ஒரு பேரலை.”
அலை– போகன் சங்கர்
முதலில் கேட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. துறவுக்கான எந்த அறிகுறியையும் அவன் முன்பு காட்டியிருக்கவில்லை.அவன் ஓரளவு வெற்றிகரமான வியாபாரி.நகரத்தின் மையமான பகுதியில் தலைமுறைகளாக நடத்திவரும் ஒரு கடையின் மூன்றாம் தலை வாரிசு.வாரிசுகளுக்கே உரிய இன்ப வேட்கையும் புதுப்பிக்கும் துடிப்பும் கொண்டவன்.வார இறுதிகளில் நானும் அவனும் சேர்ந்த பணம் வாங்கக்கூடிய எல்லாவற்றையும் வாங்கியிருக்கிறோம்.பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று நம்பியிருக்கிறோம்.எங்கள் அனுபவங்கள் அப்படித்தான் அமைந்தன.
நான் முதலில் அவனுக்கு வேறு ஏதோ இக்கட்டு என்று நினைத்தேன்.வியாபாரிகளுக்கே வரக்கூடிய இக்கட்டுகள்.கொடுக்கல் வாங்கல் அல்லது பெண் விவகாரம்.அவற்றிலிருந்து தற்காலிமாக தப்பிக்கவே இந்த வேஷத்தை அவன் எடுத்திருக்கிறான்.வார இறுதிகளில் நாங்கள் கோவாவுக்குச் சென்றது போல இப்போது அவன் இமாலயத்துக்குச் சென்றிருக்கிறான்.அவ்வளவுதான் என்று நினைத்தேன்.ஆனால் நிஜமாகவே அவன் சன்னியாசி ஆகிவிட்டான் என்று சொன்னார்கள்.
நான் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.முடியவில்லை. இமாலயத்துக்கே போய் அவனைச் சந்திக்கலாம் என்று நினைத்தேன்.சந்தித்து எங்கள் பழைய களியாட்டாங்கள் பற்றிப் பேசலாம்.எங்கள் பயணங்கள்.மலை ஏற்றங்கள். கூட்டாக அனுபவித்த பெண்கள்.அவன் திடிரென்று இந்த சாகசத்தில் என்னை மட்டும் கழற்றிவிட்டுப் போனது சினம் அளித்தது.நான் அதை அப்படித்தான் பார்த்தேன்.இன்னொரு சாகசம்
எனது பணி நெருக்கடியில் உடனடியாக அது முடியவில்லை.எனது ‘உடனடி’என்ற வார்த்தைக்கு இரண்டு வருடங்களாகிவிட்டன.ஒரு நாள் அவன் சில சட்ட ஆவணங்களில் கையொப்பமிட்டு ஒப்படைப்பதற்காக ஊருக்கு வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டுப் போனேன்.
அவன் எதிர்பார்த்தது போலவே காவியில் இருந்தான்.மற்றபடி எந்த மாற்றமும் தெரியவில்லை. இல்லை கண்களில் அவற்றை அவன் நகர்த்தும் விதத்தில் ஏதோ மாற்றம் வந்திருந்தது.
அவன் என்னைக்கண்டதும் புன்னகைத்து “வா” என்றான்.அவன் வீடு பரபரப்பாய் இருந்தது.நான் அது அடங்கக் காத்திருந்தேன்.அவன் அன்று முழுவதும் பத்திரங்களில் கையொப்பமிட்டுக்கொண்டே இருந்தான்.
மாலையில் ஒரு இடைவெளியில் அவன் சட்டென்று பேச ஆரம்பித்தான்.”நான் ஒரு விளக்கம் தரவேண்டும் என நீ நினைக்கிறாய் இல்லையா?”என்று தொடங்கினான்.
‘சொன்னால் உனக்கு ஆச்சரியமாக இருக்கும். எல்லாம் ஒரு நாள் காலைக்குள் மாறியது.நான் வழக்கம்போல் காலையிலேயே கடைக்கு வந்து கல்லாவில் உட்கார்ந்திருந்தேன்.அன்றைய நாளுக்குரிய சில பிரச்சினைகள்,அவற்றைச் சரி பண்ணவேண்டிய வழிகள் பற்றி யோசித்துக்கொண்டு.சாலையில் ஜனங்கள் நிறைவதைப் பார்த்துக்கொண்டு.. அந்த சாலையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் வியப்பாக இருக்கும். எட்டு மணி வரைக்கு ஹோவென்று இருக்கும்.பத்து நிமிஷத்தில் ஆபீஸ் போகிறவர்கள்,பள்ளி போகிறவர்கள் என்று நிரம்பிவிடும்.முக்கால் மணி நேரத்தில் வடிந்துவிடும்.அதன் பிறகு மாலை ஒரு முறை எதிர்த் திசையில் நடக்கும்.இது என் கண் முன்னால் நடந்துகொண்டேதான் இருந்திருக்கிறது.தெரியும்.ஆனால் அன்றுதான் முதல் முறையாகப் பார்த்தேன்.நான் அன்றைய காலை செய்தித் தாள்களைப் பார்த்தேன்.எல்லா செய்திகளும் புதியவையாகவும் பரிச்சயமாகவும் ஒரே நேரத்தில் தோன்றின.கடை மேலாளர் வந்து உடனே வாங்க வேண்டிய பொருட்களின் ஜாபிதாவைக் கொடுத்தார்.கல்யாண சீசன் வருது சார் என்றார்.கடைக்குள் அன்றைய முதல் வாடிக்கையாளர் வந்தார்.வீட்டிலிருந்து இவள் போனடித்துக்கொண்டெ இருந்தாள்.எதோ சண்டை.அது அவள் மாதாந்திர சமயம்.அடுத்த வாடிக்கையாளர் வந்தார்.இதன்பிறகு ஒரு இரண்டு மணி நேரம் வந்துகொண்டே இருப்பார்கள்.பிறகொரு ஓய்வு.மறுபடியும் மாலையில் வரத் துவங்குவார்கள்.
எனக்கு மெல்ல எல்லாம் விளங்கத் துவங்கியது.இது ஒரு அலை.எல்லா வியாபாரிகளுக்கும் இந்த அலைகளின் போக்கும் நீங்கலும் தெரியும்.இதே போல்தான் எல்லாம்.எல்லாவற்றிலும்.கடையில்,வீட்டில்,உலகில்.என் உடலில்,என் மனைவியின் உடலில் எல்லாம்…என் வெற்றி,தோல்வி,காமம்,வெறுப்பு எல்லாமே இந்த அலைகளின் போக்குவரத்துதான்.
முன்பே சொன்னது போல் இது என் கண் முன்னால் நடந்துகொண்டேதான் இருந்திருக்கிறது.தெரியும்.ஆனால் அன்றுதான் முதல் முறையாகப் பார்த்தேன்
எனக்கு வியர்க்கத் தொடங்கியது.நான் ஒரு போஞ்ச் வாங்கச் சொல்லிக் குடித்தேன்.வெளியே போய்ட்டு வரேன்.கடையைப் பார்த்துக்கோங்க.அப்பா தாத்தா படத்தில எல்லாம் சரம் மாத்துங்க என்று சொல்லிவிட்டு வந்தேன்.அப்போது கூட நினைக்கவில்லை. ஒரு சிகரெட்டுக்காக வெளியே வந்திருக்கிறேன் என்றே நினைத்தேன்.பஸ் ஸ்டாண்டில் உறுமிக்கொண்டிருந்த ஒரு பஸ்சில் பையன் ” சாமிமலை! வாங்க வாங்க! சீக்கிரம்! சாமிமலை!’ என்று கத்திக்கொண்டிருந்தான்.என்னை ஏதோ ஒன்று வந்து மூடியது போல் இருந்தது ஏறிவிட்டேன்”
நான் மவுனமாக அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“எது வந்து மூடியது உன்னை?” என்றேன் பலவீனமாக.கேட்கும்போதே எனக்குப் பதில் தெரிந்தே தான் இருந்தது.அவன் சொல்லிக் கேட்கநினைத்தேன் போல..
அவன் சொன்னான்.
‘அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.ஒரு அலை”என்றான்.”ஆனால் இம்முறை ஒரு பேரலை”
Dilemma
அன்புள்ள ஜெ,
அ. முத்துலிங்கம் அய்யாவின் தீர்வு சிறுகதை Dilemma என்ற பெயரில் என் மொழியாக்கத்தில் Defunct magazine இலக்கிய இதழின் பத்தாவது பதிப்பில் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு இரு பதிப்புகள் மட்டுமே வெளிவரும் இவ்விதழின் முதல் எட்டு பதிப்புகள் அயோவா பல்கலைக்கழகத்தின் அபுனைவு மாணவர்களால் 2010-2013 காலகட்டத்தில் வெளிவந்தன. எட்டு ஆண்டுகள் இடைவேளைக்குப் பின் மீண்டும் இப்போது ப்ரூக்ளின் லாங் ஐலண்ட் பல்கலைகழகத்தின் படைப்பியக்கப் பிரிவிலிருந்து வெளிவர ஆரம்பித்திருக்கிறது. அதில் ஒரு தமிழ்ச் சிறுகதையின் மொழியாக்கமும் இடம் பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணினேன்.
We are live! https://defunct.site நன்றி.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்.
May 21, 2022
எழுத்தாளனின் தீமை
Angel and devil is a painting by Bozena Simeth
என் குறைபாடுகள்
எழுத்தாளனும் குற்றவாளியும்
அன்புள்ள ஜெ
நேற்றைய என் குறைபாடுகள் பதிவின் தொடர்ச்சியாக இன்றைக்கு வந்திருந்த எழுத்தாளனும் குற்றவாளியும் பதிவை வாசிக்கையில் ஒரு அதிர்ச்சி. ஆனால் பெரிய அதிர்ச்சியாகவும் இல்லை, என்னுடைய சிறிய வாசிப்பிற்குள்ளேயே சிலரை நினைவுகூர முடிகிறது.
நீங்கள் சொல்லியவற்றை ஒட்டி சிந்திக்கையில் மேலும் ஒன்று தோன்றுகிறது. இயற்கை இயங்குவதன் அடிப்படையிலேயே குற்றவாளிக்கான தேவை உள்ளது. குற்றவாளி நிகழ்த்துவது சமூகம் விரும்பாத ஒரு மீறலை. சமூகம் இந்த மீறலை தடுக்கவும் தனதாக்கி கொள்ளவும் முற்படுகையில் மீண்டும் சமூகத்தின் முயற்சிகளுக்கு அப்பால் சென்று ஒரு குற்றம் நிகழ்கிறது. இந்த சுழற்சியில் நம் சமூக அமைப்புகளின் படிநிலை வளர்ச்சியின் ஒரு பட்டையை அளந்துவிட முடியும்.(இதை படைப்புகளுக்கும் படைப்பாளிக்களுக்கும் பொருத்தலாம்) நீங்கள் சொன்ன சாகசத்தன்மை என்ற வார்த்தையில் இருந்து விரிவானது இச்சிந்தனை. தன்னை தானே வென்று முன் செல்லும் இயற்கையின் பேராடல் என சொல்லலாம்.
இந்த பதிவை வாசித்து முடித்தவுடன் எழுந்த கேள்வி ஒன்றை எழுப்புகிறேன். நேற்று என் குறைபாடுகள் பதிவில் உங்களுக்கும் பொதுவில் படைப்பாளிகளுக்கும் உள்ள மையமான தன்னல நோக்கு குறித்து விரிவாக விளக்கியும் முடிந்தவரை அதை என் படைப்புலகில் மட்டுமே வைத்துள்ளேன் என்று கூறியிருந்தீர்கள்.
இன்று எழுத்தாளர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள அணுக்கத்தை கூறி எடுத்துக்காட்டுகளையும் சுட்டியிருக்கிறார்கள். ஒரு வாசகனாக உங்களது படைப்புலகின் ஒருபகுதி குற்றங்களின் உலகால் நிரம்பியது என அறிவேன். அவற்றில் மிக வலுவான பிரக்ஞையுடன் குற்றச் செயல்களை ரசித்து மகிழ்பவர்கள் உண்டு. உதாரணமாக வெண்முரசின் கணிகர். (தீமையின் குற்றங்களின் முழுதுருவானவர். அதை தன் இயல்பாகவே கொண்டவர்). இப்படிப்பட்ட கதைகளை எழுதும் போது படைப்பாளியாக அவ்வுணர்வு நிலையால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். அந்நேரங்களில் உங்களுக்குள்ளிருந்து குற்றவாளி ஒருவன் எழுந்துள்ளனா ? ஆம் எனில் எவ்வண்ணம் அவ்வியல்பை கடந்து வென்றீர்கள் ?
அன்புடன்
சக்திவேல்
***
அன்புள்ள சக்திவேல்,
ஒரு படைப்பிலுள்ள தீமைகள் எல்லாமே அந்த ஆசிரியனுடையதும் கூடத்தான். அவனுள் இருந்தே அனைத்தும் எழுகின்றன. அவன் இயற்றாதவை பல. எண்ணியவையே அனைத்தும். ஆகவேதான் வியாசர் காவிய ரிஷி, ஞானி அல்ல.
எழுத்தாளன் எழுதும்போது தன்னுள் நோக்கியே எழுதுகிறான். அவனுக்குள் இருக்கும் தன்னலம், வன்முறை, காமம், வஞ்சம் எல்லாமே அவனால் அருகிலென பார்க்கப்படுகின்றன. அதை அவன் எழுதுகிறான். அவை உண்மை என இருப்பது அவை அந்தரங்கமானவை என்பதனால். ஒரு மனிதனின் ஆழம் அனைத்து மனிதர்களின் ஆழமும்தான் என்பதனால்.
ஆகவேதான் அவன் அகம் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. அவனுடைய அகவெம்மையை அத்தனை எளிதாகச் சொல்லிவிடமுடியாது. என் நண்பர்கள் கேட்பார்கள், எப்படி நான் எல்லா எழுத்தாளர்கள் மீதும் ஒரேவகையான பெருங்கனிவுடன் இருக்கிறேன் என்று. என்னை வசைபாடியவர்களுக்குக் கூட அவர்களின் இடர்களில் உடன் நின்றிருக்கிறேன். என் நண்பர்களையும் இழுத்துச்செல்கிறேன்
ஏனென்றால் அவர்களை நான் என்னை வைத்து புரிந்துகொள்கிறேன். என்னுடைய அதே கொந்தளிப்பும் முரண்பாடும் அவர்களுக்கும் இருக்கிறது. எனக்கு என்னை ஆளும் சில கருவிகள் அமைந்துள்ளன. சில ஆசிரியர்களின் வாழ்த்தும் வழிகாட்டும் அமைந்தன. பெரும்பாலானவர்களுக்க்கு அவை அமைவதில்லை.
இதை வாசகன் அல்லாத சாமானியனால் உணர முடியாது. சாமானியர்கள் தங்களுக்கென ’சரியான’ ஒரு பிம்பத்தை உருவாக்கி முன்வைப்பவர்கள். சொல்லி சொல்லி அதை நம்பிக்கொண்டிருப்பவர்கள். சாமானியர்கள் சொல்லும் சொற்களைக் கவனியுங்கள். ”நாம யார் வம்புக்கும் போறதில்லை” “நாம எல்லாருக்கும் நல்லதைத்தான் நினைப்போம்” “நான் நல்லவனுக்கு நல்லவன்” “நான் என்னிக்குமே நியாயத்தச் சொல்றவன்….’
இந்தமனநிலையின் கொஞ்சம் விரிவாக்கமே முகநூல் போன்றவற்றிலுள்ள பாவனைகள். அத்தனைபேரும் அரசியல்சரிநிலைகள் பேணுபவர்கள். அத்தனைபேரும் நியாயத்தின் தராசுமுட்கள். அத்தனைபேரும் பெருங்கருணையின் உருவங்கள். அத்தனைபேரும் எந்த பலவீனங்களுமற்ற தூயவடிவங்கள். அந்தப்பாவனையில் நின்றபடி எவர்மேலும் கல்லெறிவார்கள். கொந்தளிப்பார்கள்
இவர்கள் முன் எழுத்தாளன் தன் கொந்தளிப்புடன் நிற்கிறான். தன் சிறுமைகளை முன்வைக்கிறான். அவர்கள் அரசியல்சரிநிலைகளால் அவனை அடிக்கிறார்கள். ஒழுக்கநெறிகளால் அடிக்கிறார்கள். அரசியல்கோட்பாடுகளால் அடிக்கிறார்கள். ஆனால் வேறுவழியில்லை, எழுதவேண்டுமென்றால் அகத்தை நிர்வாணமாக்கியே ஆகவேண்டும்.
எனில் இத்தீமைகளை ஆசிரியன் அவனே கையாள்வது எப்படி? இரு கருதுகோள்களுண்டு. விக்ஷேபணம் என்பது முதல் கருத்து. வெளிவீசுதல் என்று சொல்லலாம். சரியாகச் சொன்னால் உள்ளிருப்பதை வெளியே விரித்துக்கொள்ளுதல். அரிஸ்டாட்டில் சொல்லும் catharsis என்பதற்கு கொஞ்சம் அணுக்கமான கருத்து இது. ஆனால் வேறுபாடு கொண்டது. அரிஸ்டாட்டில் சொல்வது ஒன்றை உணர்வுரீதியாக நிகழ்த்திக்கொண்டால் அதிலிருந்து விடுபட்டுவிடலாம் என்று. அதை விலகியிருந்து பார்த்து அதன் சாரம் நோக்கிச் செல்லமுடியும் என்று.
விக்ஷேபணம் என்பது அப்படியே நிகழ்த்திக் கொள்வது அல்ல. ஏனென்றால் அது மனிதரால் இயலாது. உள்ளிருப்பது வெளியே நிகழ்கையில் வெளியே உள்ள நியதிகளுக்கு ஆட்படுகிறது. மாறுபட்ட உருவம் கொள்கிறது. அப்படி அதன் மேல்தளம் மாறுபடும்போது மாறாமல் நின்றிருக்கும் சாரம் துலங்குகிறது. படைப்பில் வெளிப்படும் தீமை தீமையல்ல. குரூரம் குரூரம் அல்ல. அவை நடிப்புகள்தான். அவை குறியீட்டுச்செயல்பாடுகள்தான்.
ஆசிரியனின் உள்ளே இருப்பது படைப்பாக வெளியே விரிந்ததுமே அது அவனிடமிருந்து சற்று விலகிவிடுகிறது. அதற்கு ஓர் அன்னியத்தன்மை வந்துவிடுகிறது. அது ஒரு ஆய்படுபொருள் ஆகிவிடுகிறது.
உணர்வுகள் உள்ளிருக்கையில் இயல்பாக உள்ளன. வெளிப்பாடு கொள்ளும்போதே அவை வடிவம், மையம் என்னும் இரண்டு குணங்களை அடைகின்றன. அவை ‘கையாளப்படக்கூடியவை’ ஆக மாறிவிடுகின்றன
மதயானை காட்டிலிருந்து இழுத்துவரப்பட்டு வீட்டு யானையாக ஆக்கப்படுவதுபோன்றது படைப்பில் வெளிப்படும் தீமை. அது விக்ஷேபணம் செய்யப்பட்டதுமே ‘திருந்தி’விடுகிறது. பிரபஞ்சமெய்ப்பொருளின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது. அது ஒரு செவ்வியல்நூலில் அது முன்வைக்கும் முழுமையின் ஒரு பிரிக்கமுடியா பகுதியாக ஆகிவிடுகிறது.
இரண்டாவது, தீமைக்கு நிகராக படைப்பு கண்டடையும் நன்மை. துளியளவிருந்தாலும்கூட அது பெருந்தீமையை நிகர்செய்துவிடும். முற்றிலும் தீமையையே சொல்லும் படைப்பு என ஏதுமில்லை. சீற்றம்கொண்ட, முழுமையாக நிராகரிக்கும் தன்மை கொண்ட படைப்புகள் உண்டு. அவற்றிலும்கூட நோக்கம் நன்மைநோக்கியதே.
இலக்கியப்படைப்பின் அந்த உள்ளார்ந்த நன்மை, ஒளியும் ஆசிரியனிடமிருந்து வெளியாவதே. எழுதும் கணங்களில் அவன் அடையும் உன்னதம் அதன் விளைவு. அது நஞ்சை நிகர்ப்படுத்திவிடுகிறது. அரைத்துளியேனும் அமுதத்தை எஞ்சவைக்கிறது
ஜெ
சிரித்திரன், வென்ற சிரிப்பு
இந்தியமொழிகள் எதிலும் முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக வெளிவந்த எந்த இதழும் நீண்டகாலம் நடைபெற்றதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. பொதுவாக நகைச்சுவை மிக்க கேரளச் சூழலில் கூட பாக்கனார் போன்று வெவ்வேறு நகைச்சுவை இதழ்கள் வெளிவந்து நின்றுவிட்டன. நகைச்சுவையை அரசியல் கிண்டலாக ஆக்கிக்கொண்டு சில இதழ்கள் நீடித்தன
அவ்வகையில் மிக முக்கியமான ஒரு விதிவிலக்கு சிரித்திரன். இலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ். அதைப்பற்றிய இப்பதிவு சிரித்திரனின் ஆசிரியர் சி.சிவஞான சுந்தரம் என்னும் சிரித்திரன் சுந்தர் இன்னும் பல ஆளுமைகளை நோக்கி விரிகிறது
சிரித்திரன் – தமிழ் விக்கி
சிரித்திரன்
எளிய கவிதையின் இன்றைய குரல்- கடலூர் சீனு
எல்லா நல்ல கவிகளை போலவே ஆனந்த் குமாரும் முன்னோடிக் கவிகளின் வழியே நீளும் சரடில் ஒரு கண்ணியாக சென்று இணைகிறார். மேற்கண்ட கவிதையில் இருந்து பிரமிளுக்கு ஒரு வாசகனால் சென்று விட முடியும் என்பதைப் போலவே ஆனந்த் குமாரின் பிற கவிதைகளில் இருந்து கல்பற்றா நாராயணன், இசை, சுகுமாரன் என்று பிற கவிகளை நோக்கி பயணிக்க முடியும்.
கவுண்டர்?
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி பற்றிய கேள்விகளை முடித்துவிட்டீர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். இருந்தாலும் ஒரு கேள்வி. ஏனென்றால் இப்போது இந்தக்கேள்விதான் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதுதான். நீங்கள் கோவயையும் ஈரோட்டையும் மையமாக்கி இந்த விழாக்களை நடத்துவதும் விருதுகள் வழங்குவதும் கவுண்டர்களை வளைத்துப்போடுவதற்காகத்தான் என்கிறார்கள். பெரியசாமித் தூரன் பெயரில் விருது வழங்குவதே கவுண்டர்களை தாஜா செய்வதற்காகத்தான் என்று சொல்கிறார்கள். உங்களிடமே கேட்டுவிடலாம் என இதை எழுதுகிறேன்.
செந்தில்ராஜ்
அன்புள்ள செந்தில்,
விஷ்ணுபுரம் அமைப்புக்கு அப்படி எந்தச் சாதிப்புலமும் இல்லை. எல்லா சாதியினரும் எல்லா மதத்தினரும் உள்ள அமைப்பு இது. இது ஒரு பெரிய நண்பர் கூட்டமைப்பு மட்டுமே. கோவையில் நிகழ்த்துவது ஒரே காரணத்தால்தான். இதன் நிறுவனரான கே.வி.அரங்கசாமி கோவையைச்ச் சேர்ந்தவர். இப்போது இதன் மைய ஒருங்கிணைப்பாளரான செந்தில்குமார் கோவைக்காரர் (இருவருமே கவுண்டர்கள் அல்ல) .எங்கே நண்பர்கள் இருக்கிறார்களோ அங்குதான் விழா நடைபெற முடியும். நான் எதையும் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டவன் அல்ல. விஷ்ணுபுரம் விழாவன்று காலையில் சென்று இறங்கி திருதிருவென விழிப்பவன் நான்.
நாங்கள் இதுவரை எந்த நிறுவன நிதியும் பெற்றுக்கொண்டதில்லை. விஷ்ணுபுர நண்பர்களின் கொடையால்தான் இந்த அமைப்பு நிகழ்கிறது. நிரந்தர வைப்பு நிதி இன்றுவரை இல்லை. அவ்வப்போது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே நிதி பெற்று வருகிறோம்.தூரன் விருது ஒரு தனிப்பட்ட நண்பரின் நிதிக்கொடை. அவர் கவுண்டர் அல்ல. வெவ்வேறு கவுண்டர் அமைப்புகளிடம் தூரன் எவ்வளவு முக்கியமானவர், அவர் நினைவாக கோவையில் ஏதேனும் அவர்கள் செய்யவேண்டும் என சொல்லியிருக்கிறேன். எதுவும் நிகழ்ந்ததில்லை.
நான் சொல்லிவருவது ஒன்றுண்டு. நம்மவர்களின் உள்ளம் பெரிய அளவில் ஊழல்மயம் ஆகிவிட்டது. எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஏதாவது லாபம் பார்க்கவே முயல்கிறார்கள். ஒரு செயலை எண்ணிக்கொண்டாலே லாபக் கற்பனைக்குச் செல்கிறார்கள். ஆகவே வேறொருவர் எதையாவது செய்தாலும் அதில் அவருக்கு லாபம் உண்டு என கற்பனை செய்கிறார்கள். இன்னொரு கோணத்தில் யோசிக்க மூளை ஓடுவதே இல்லை. இது ஒரு கூட்டு உளநோய்.
நிற்க, இப்போது என் எண்ணங்களில் ஒன்று எஸ்.வையாபுரிப்பிள்ளை நினைவாக ஒரு விருது. மூத்த தமிழறிஞருக்கு வழங்கப்படுவது. ரூ ஐந்து லட்சம். இன்னொரு மூன்று லட்சம் விழாவுக்கு. திருவனந்தபுரத்தில் அல்லது நெல்லையில் நடைபெறவேண்டும் என்பது விழைவு. நண்பர்கள்மேல் சுமையை ஏற்றுகிறேனோ என்றும் தயக்கம் உள்ளது.
ஜெ
புகைப்படங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். வாஷிங்டன் டி.சி. மெட்ரோ பகுதியில் நடந்த தமிழ் விக்கி தொடக்க விழாவிற்கு வேறு பல மாநிலங்களிலிருந்து வாசக நண்பர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள். அவர்களில், ரஜினிகாந்த் அய்யாதுரையும் ஒருவர். பவாவும் ஷைலஜா அவர்களும் அமெரிக்கா வருவத்தைப்பற்றிய திட்டமிடல் கூட்டமொன்றில், அறிமுகமானார். புளோரிடா மாநிலத்தில் உள்ள இன்வெர்நெஸ் எனும் நகரில் வசிக்கும் மருத்துவர். இலக்கியம் வாசிக்கும் இவர், தன்னுடைய வேலை கல்லுடைப்பது என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்புறம்தான் தெரிந்தது தான் சிறுநீரக மருத்துவராக வேலை பார்ப்பதை அப்படி சொன்னார் என்று.
அறம் நூலின் வழியாக தங்களின் வாசகர் ஆனவர். உரையாடலின் ஊடே, தமிழ் விக்கி விழாவிற்கு வரும்படி அழைப்பை சொன்னேன். டிக்கெட் புக் செய்த கையோடு திரும்பவும் அழைத்து விழாவில் எனக்கு ஏதாவது வேலை சொல்லுங்கள், உதவுகிறேன் என்றார். உங்களுக்கு நன்றாக படம் எடுக்கத் தெரியுமா என்றேன். எனக்கு Photography ஹாபி என்றார். அப்படியா அது பெரும் உதவி என்றேன். விழா நடக்கும் காலையில், நேராக வந்ததும் ஹலோ சௌந்தர் என்று கைகுலுக்கினார். அமெரிக்க மருத்துவர்களை கூகுளில் தேடி கண்டுபிடித்து அவர்களை பற்றிய விபரங்களும் புகைப்படங்களும் அறிந்துகொள்வதில் ஒன்றும் கஷ்டம் இல்லை. அப்படி நான் சேகரித்து வைத்த புகைப்பட புன்னகையுடன், நேரிலும் அதையே பார்க்க, ‘ஹலோ ரஜினி’ என்றேன். அவர் விழாவில் எடுத்த புகைப்படங்களின் கூகுள் டிரைவ் சேமிப்பில் இங்கே.
அன்புடன்,
சௌந்தர்
May 20, 2022
அடிப்படைகளில் அலைதல்-பதில்
அன்புள்ள சோழராஜா
உங்களுடைய நீண்ட கடிதத்தை ஒட்டி நீண்ட பதிலை எழுதவேண்டும் என்ற தேவை இல்லை என்று தோன்றியது. பொதுவாக மிக நீண்ட கடிதங்கள் கேள்விகளல்ல. அவை ஒருவகையான சிந்தனைத் தொடர்கள். கேள்வியில் தொடங்கி இயல்பாக அவை ஒரு சிந்தனையில் சென்று முடிகின்றன. கண்டடைவில்லாத ஒரு நீண்ட பதிவிருக்க முடியாது ஒருவர் எதன்பொருட்டேனும் ஓரிரு ஆயிரம் வார்த்தைகளை எழுதிவிட்டார்கள் என்றால் அந்த ஆழ்ந்த தீவிரச் செயல்பாடு வழியாகவே அவர் சிலவற்றைக் கண்டடைந்திருப்பார்.
திரும்ப உங்கள் கடிதத்தை நீங்கள் படித்துப் பார்த்தால் அதிலேயே உங்களுக்கான தெளிவு திரண்டிருப்பதைக்காண முடியும். அதே கடிதத்தை இன்னொரு முறை எழுதினால் எவற்றை தவிர்ப்பீர்கள், எவற்றை வளர்ப்பீர்கள் என்று பார்த்தாலே இது தெரியும். அதாவது அக்கடிதத்திற்கு மிகச்சிறந்த பதிலை நீங்களே எழுதிக்கொள்ள முடியும். ஆகவே அதனுள் புகுந்து நான் விவாதிக்க விரும்பவில்லை.
நான் மீள மீளச் சொல்லும் ஒன்றுண்டு. மனிதர்கள் தங்களுக்குள் ஆழத்தில் ஒரு சுயகண்டனத்தை கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இங்கு வந்தது தின்று குடித்து உண்டு புணர்ந்து பெற்று வளர்த்து மறைவதன் பொருட்டு அல்ல. உலகியல் செயல்பாடுகளை மிகுந்த வெறியுடன் செய்பவர் எவராயினும் அதன் முடிவில் அவர்கள் வெறுமையைக் கண்டடைகிறார்கள். எந்த ஆன்மீகப் பயிற்சியும் இல்லாதவர்கள் கூட ஓர் உலகியல் செயல்பாட்டின் முடிவில் அந்த நிறைவின்மையை முன்வைத்து பேசுவதைப்பார்க்கலாம்.
உலகியலாளர்கள் அடிக்கடி சொல்லும் சில உணர்ச்சி வெளிப்பாடுகள் உண்டு ஒன்று, நான் செய்தவற்றுக்கு நன்றியில்லை. இரண்டு, என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இவ்விரண்டு வழியாகவுமே உலகியல் செயல்பாட்டில் அவர் அடைந்த வெறுமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். உலகியல் செயல்பாடுகளுக்கு இருக்கும் இந்த அடிப்படையான போதாமையை உணர்ந்தமையால் தான் அதில் ஈடுபடுபவர்கள் தொடர்ச்சியான அதிருப்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிருப்தியைத்தான் அவர்கள் பிறரிடம் வெளிப்படுத்துகிறார்கள்.
இரு வகையில் அதை வெளிப்படுத்துகிறார்கள் ஒன்று பிறரை மட்டம் தட்டி சிறுமைப்படுத்தி அதன் வழியாக தனக்குத்தானே மேல் என்று நிறுவிக்கொள்கிறார்கள். பொருளியல் சார்ந்தும் தோற்றம் சார்ந்தும் தன்னைவிட ஒருபடி கீழானவரைப் பார்க்கையில் பெரும்பாலானவர்கள் கொள்ளும் ஒருவகையான மகிழ்ச்சி இந்த நிறைவின்மையின் வெளிப்பாடு மட்டுமே. இவரோடு ஒப்பிடும்போது நான் எவ்வளவோ பரவாயில்லை என்று அவர் சொல்லிக்கொள்கிறார். தனது ஆற்றாமையை அதனூடாக நியாயப்படுத்திக்கொள்கிறார். ஏனெனில் பொருளியலும் தோற்றமும் மறுக்கமுடியாதபடி புறவயமானவை.
ஆனால் அது அவருக்கு உண்மையில் நிறைவை அளிக்காது. ஏனெனில் அது பொய் என்று அவருக்கே தெரியும். உண்மையாக மகிழ்ந்து வாழும் ஒருவரைப் பார்த்தவுடன் உலகியலாளன் ஆழ்ந்த சீற்றத்தைக் கொள்கிறான். உயர்ந்த உணர்வுகள் அவனை பதற்றமடையச் செய்கின்றன. தன்னுடைய வாழ்க்கையை ஆன்மிகமாக தெளிந்த உணர்வுகளுடன் அமைத்துக்கொண்ட ஒருவரை அவன் உள்ளூர வழிபடவும் வெளிப்படையாக கசந்து ஏளனம் செய்யவும் முற்படுகிறான். இந்த ‘வெறும்’ உலகியலாளர்கள் கொள்ளும் அவஸ்தையை ஒருவர் புரிந்துகொண்டால் மட்டுமே அவரால் உலகியலிலிருந்து விடுதலை பெற முடியும். ஒருவர் உங்களை ஏளனம் செய்கையில் தன்னை அவர் செயற்கையாக மேலே தூக்கி ஒரு மாபெரும் வெறுமையை ஈடுசெய்ய முயல்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்தாகவேண்டும். அப்போது அந்த ஏளனம் செய்யும் மனிதரை ஒரு பரிதாபத்துக்குரிய மனிதரென்று உங்களால் புரிந்துகொள்ள முடியும். அவர் சற்று உளம் திறக்ககூடியவர் என்றால் உண்மையில் அவருக்கு நீங்கள் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை, அது அளிக்கும் நிறைவையும் மெய்யான மகிழ்ச்சியையும் அறிமுகம் செய்யக்கூட முடியும்.
ஆனால் அத்தகையவர்கள் நம் சூழலில் மிக அரிதானவர்கள். பெரும்பாலானவர்கள் மூடிய உள்ளம் கொண்டவர்கள். அவர்கள் மேல் என்றும் அனுதாபத்துடன் இருங்கள். அவர்கள் மேல் பிரியத்துடன் இருங்கள். ஆனால் அவர்களிடமிருந்து விலகியும் இருங்கள். உங்கள் கருணை உங்களை விடுதலை செய்யும். ஆனால் அவர்களிடமிருந்து விலகி நிற்கவில்லை என்றால் அவர்களின் ஆன்மிகக்கருகல் உங்களை பாதித்து கசப்பு கொண்டவராக ஆக்கிவிடும்.
எளிய மனிதர்கள். இத்தகைய பலவகையான பாவனைகள் நடிப்புகள் வழியாக ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நழுவிச்சென்று வாழ்க்கையை முடித்துவிட்டு செல்பவர்களே பெரும்பாலானவர்கள். அது அவர்களின் ஊழ் என்று மட்டுமே சொல்ல முடியும். மெய்யாக நுண்ணுணர்வும் அறிவுத்திறனும் உடையவர் தோற்றம் காரணமாகவோ செல்வம் காரணமாகவோ வேறு ஏதேனும் காரணமாகவோ அந்த உலகியலாளனின் மேலோட்டமான அற்பமான எதிர்வினைகளுக்கு எதிர்வினையாற்றி தன் பொழுதையும் சிந்தனையையும் வீணடிப்பார் என்றால் அவர் அந்த உலகியலாளனை விட மிகக்கீழானவர்.
ஏனென்றால் எதற்கு நீங்கள் எதிர்வினையாற்றினாலும் நீங்கள் அந்த எதிர்வினையாற்றப்படும் விஷயத்தையும் மனிதர்களாஇயும் விட ஒருபடி கீழாகத்தான் தெரிவீர்கள். எதிர்வினையாற்றும்போது எதிர்வினையாற்றப் படுவதைவிட மேலே செல்வதாக ஒரு பாவனை நமக்கு இருக்கிறது. அது உண்மை அல்ல. மிக உன்னதமான ஒன்றை நோக்கி எதிர்வினையாற்றுகிறீர்கள். அது நேர்நிலை எதிர்வினை என்றால் நாம் அதை நோக்கி மேலே செல்கிறோம். நம்மைவிடக் கீழான ஒன்றை நோக்கி எதிர்வினையாற்றினால் நாம் இருக்கும் நிலையிலிருந்து கீழே செல்கிறோம்..
இதை ஒவ்வொரு தருணத்திலும் எதிர்வினையாற்றிய பிறகு உருவாகும் எரிச்சலிலிருந்து நாமே உணர்கிறோம். நாம் ஆற்றிய எதிர்வினையை பிறகு நாமே படிக்கும்போது ஒவ்வாமையும் சிறுமையுணர்வும் கொண்டு நம்மை நாமே கசந்து கொள்கிறோம். நமது எதிர்வினைகளை நம்மால் அந்த உணர்வு நிலையிலிருந்து சற்று விலகிய பிறகு சற்றும் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதுவே அந்த எதிர்வினை எத்தனை பயனற்றது மேலோட்டமானது என்பதற்கு சான்று.
ஒருவன் பிறருக்கு ஆற்றும் எதிர்வினைககளை ஒட்டியே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வான் என்றால் அவன் தன் வாழ்க்கையை தானே தோற்கடிக்கிறான் என்றே பொருள். ஒருவருடைய வாழ்க்கை அவருடைய அகம் சார்ந்தே முடிவெடுக்கப்படவேண்டும். அவருடைய தன்னிறைவு சார்ந்து நிகழ்த்தப்படவேண்டும். நீங்கள் அறிவியக்கத்தில் ஆர்வமும் திறனும் கொண்டவர் என்றால், கலை நுண்ணுணர்வு கொண்டவர் என்றால் ,உங்கள் பணியும் நிறைவும் முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்தது மட்டுமே. அதற்கு இன்னொருவருடைய ஏற்போ, இன்னொருவர் அளிக்கும் இடமோ எவ்வகையிலும் தேவையானதல்ல. உண்மையில் இன்னொருவர் அளிக்கும் பாராட்டு கூட பெருமளவுக்கு பெறுமதி கொண்டது அல்ல.
அறிவியக்கவாதி தன் செயல்பாடுகளினூடாக தொடர்ந்து தன்னைத்தானே நிறைத்துக்கொள்ள முடியும். இங்கிருந்து பெற்று, தனக்குள் திரட்டி, தன்னுடைய பங்களிப்பை சேர்த்து அளித்துவிட்டு நிறைந்து அவன் மீள முடியும். இங்குள்ள பல்லாயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே அதற்கான அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் அமைந்துள்ளது. அதிலும் பல ஆயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே அதை ஒட்டி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக்கூடிய பொருளியல் விடுதலையும் சமூக வாய்ப்பும் உள்ளது. அத்தகைய ஒருவருக்கு வெளியிலிருந்து அளிக்கப்படுவது எதுவுமில்லை. நீங்கள் இரண்டும் உடையவர், அவ்வகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
உங்கள் அகவையில் அகவாழ்க்கை மிக முக்கியமானதாகத் தோன்றும் சரியான துணைவியைக் கண்டடைதல், குடும்பத்தை அமைத்துக்கொள்ளுதல் ஆகியவை சார்ந்து தத்தளிப்புகளும் கனவுகளும் இருக்கும். ஆனால் என் வரையில் அதிலுள்ள வெற்றியோ தோல்வியோ ஒரு அறிவியக்கவாதிக்கு இலக்கியவாதிக்கு எந்தவகையிலும் பொருட்டானது கிடையாது. அவற்றுக்கு அப்பால் தன்னில் ஊறி தானே நிரப்பிக்கொள்ளும் ஒன்றால் அவன் இங்கு வாழ்கிறான்.
ஜெயமோகன்
கவிதை விதைத்தல்- பாலாஜி ராஜு
ஆனந்த்குமார் எனும் கவிஞன் ஒரு தந்தையாக, மகனாக, கணவனாக, சினேகம் மிக்க அண்டை வீட்டுக்காரராகப் பல கவிதைகளில் வெளிப்படுவதைக் காணலாம், அவை நம்முடைய கற்பனைகயைத் தீண்டி பலபடிகள் எழுந்துவிடும் கவித்துவம் அடர்ந்த கவிதைகளுமாகின்றன.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

