உன்மத்தத்திற்கும் பேரரறிவுக்குமிடையே- அழகுநிலா

இளங்கோ கிருஷ்ணன்- தமிழ் விக்கி

அழகுநிலா – தமிழ் விக்கி

“இரண்டாயிரம் வருடங்கள் நீளமுள்ள
பறவை பூமியைக் கடந்து செல்கிறது
அதன் அலகை சங்கக் கவி எழுதினான்
வாலை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்”

இளங்கோ வாலை எழுத வந்திருக்கிறாரென்பதை அவரது முதல் தொகுப்பின் தலைப்பே (காயசண்டிகை) தமிழ் இலக்கிய உலகிற்கு உரத்துச் சொன்னது. கடும்பசி எனும் பிணியால் பீடித்தவளின் பெயரைத் தலைப்பாக்கி அவர் எழுதி இருக்கும் கவிதையில் உன்மத்தம் முற்றிய ஒரு பௌர்ணமியில் பிச்சைப் பாத்திரம் அட்சயப் பாத்திரமாகிறது. ஆனால் வாழ்வில் அப்படியான அற்புதங்கள் ஏதும் நடக்காது என்பதை அவரது தர்க்க மனம் சுட்டிக்காட்ட தனது நான்காவது தொகுப்பில் (வியனுலகு வதியும் பெருமலர்) பசி சாஸ்வதமானது என்ற முடிவுக்கு வந்து சேர்கிறார்.

“எவ்வளவு இட்டாலும் நிறையவே நிறையாத என் வயிறோ இக்கடலிலும் பெரிது அதன் பொருட்டே கடலில் மிதக்கிறோம் நானும் என் கட்டுமரமும்” என்று தனது முதல் தொகுப்பில் தன்னிருப்பு சார்ந்து மட்டும் பேசியவர் “நூற்றி முப்பது கோடி வயிற்றில் நீ மட்டும் என்ன சிறப்பென” கேட்பதன் வழி வந்து அடைந்திருக்கும் புள்ளி முக்கியமானது. “பசியை எழுதுகிறவன் அபாயமானவன். பசி போல் அவனும் இவ்வுலகில் அழிவதில்லை” என்று சொல்வதன் மூலம் பசியோடு சேர்த்து தன்னையும்  சாஸ்வதத்திற்குள் அமர்த்திக் கொள்கிறார்.

“சிறுவயதில் நல்ல பசியில் சுரக்காத அம்மையின் முலையைக் கடித்துத் தின்றேன்” என்று சொல்லுமிடத்தில் பசியின் தொடக்கப்புள்ளியே வன்முறையாய் இருக்கிறது. இந்த பசிக்கும் அடுத்த பசிக்கும் இடையிலுள்ள இந்த வன்முறை வாழ்வில் ஒரு மனிதனுக்குத்தான் எத்தனை துயர்கள்! அதுவும் அந்த மனிதன் உன்மத்தமும் பேரரறிவும் ஒருசேர அலைக்கழிக்கும் கவிஞனாக இருந்துவிட்டால் என்ன நடக்கும்?  நான்கு கவிதைத் தொகுப்புகளாக மாறிப்போகும். இத்தனை அலைக்கழிப்புகளுடன் எழுதுவதன் நோக்கம் என்னவாக இருக்குமென்று யோசித்தால் அதற்கும் தனது கவிதையில் “நான் நெஞ்சிலிருந்து ஓர் அன்பை எடுத்து வானில் எறிகிறேன். அது சொல்லாகிப் பறக்கிறது. எல்லா கவிதையிலும் படர்வது அதன் நிழலே” என விடை தருகிறார். பித்து நிலையில் கூறப்பட்ட இப்பதிலைக் கொண்டு தமிழ்ச்சமூகம் தன்னை ரொமான்டிசைஸ் செய்துவிடுமோ என்ற பதற்றத்தில் “போ போய் வேறு வேலையைப் பார் பொருளீட்டு புணர் சிரி மரி கவிதையாம் மயிராம்” என்றும் “மற்றபடி ஒரு வியாபாரியோ பைத்தியமோ கவிஞனோ எல்லாம் ஒரே இழவுதான்” என்றும்  சொல்லிப் பெருமூச்சு விடுகிறார்.

இளங்கோவின் நான்கு தொகுப்புகளையும் ஒரு சேர வாசிக்கையில் என்னருகில் நின்று என்னை உற்றுநோக்கி கொண்டிருந்தது மரணம். டீசல் நிரப்பிக்கொண்டு என்னருகே நின்ற மரணத்தின் லாரியைக் கண்டு அச்சத்தில் உறைந்து போனேன். பிறந்த கணம் முதல் நம்மை விட்டு ஒருகணம் கூட அகலாது தொடரும் மரணத்தைப் பாடிய இளங்கோவிற்கு ‘மரண பயத்தைக் காட்டிய கவிஞன்’ என்று பட்டமே  கொடுக்கலாம்.

“நாம் சொல்லலாம்
நான் இங்கு செல்கிறேன்
அங்கு செல்கிறேனென
நீ எங்கு சென்றாலும்
டிக் டிக் டிக்கென உடல்
குழி நோக்கி
சென்றுகொண்டே இருப்பதைப் பார்”

வயிற்றிலிருந்து வயிறு நோக்கிச் செல்லும் இந்தப் பயணம் குழி நோக்கித்தான் என்பதைச் சொல்லும் இளங்கோ பசி, மரணம் என்ற இரண்டு சாஸ்வதங்களுக்கிடையேயான வாழ்வில் உண்டாகும் மன சஞ்சலம், மன நெருக்கடி, சமூக ஊடாட்டம் ஆகியவற்றை கொந்தளிப்பாகவும் எள்ளலாகவும் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்.

“நம்பிக்கையின் தேவதை ஒரு கொடுங்கோலனின் இருதயத்தால் செய்யப்பட்டவள்” என்று அறிவின் துணை கொண்டு நம்பிக்கையின் மீதான அவநம்பிக்கையைப் பேசுபவர்தான் “ஒரு விடியல் போல் உங்களுக்கு நம்பிக்கை தரும் நண்பன் வேறு யாருமே இல்லை” என்று விடியலின் பூங்கொத்தைக் கையில் ஏந்திக்கொள்கிறார். “பொருளும் அதிகாரமுமற்ற சாமானியன் என்ன செய்யமுடியும் ஒரு கரப்பானையோ சிறு செடியொன்றையோ இம்சிப்பதன்றி” என்று யதார்த்தம் பேசும் சாமான்ய பஷீர்தான் “நான் கண்ட குரங்கும் கழுதையும் குட்டிச்சாத்தானும் பேயும் நீதானே” என்று பித்து மனநிலையில் தன் முன் தோன்றும் அல்லாவைக் கிண்டலடிக்கிறார்.

“உங்களின் நல்வரவின் பொருட்டு எதிர்பார்ப்பு வளர்த்துக் காத்திருக்கிறார்கள் உங்களின் முதிர்ந்த பெற்றோரும் மனைவியும் குழந்தைகளும்” என்று வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தையும் சட்டைப்பையில் வீட்டைச் சுமந்துகொண்டிருப்பவனின் அவலத்தையும் பேசுபவர்தான் “மேல் ஜோப்பில் பத்திரமாக வைத்திருந்த வீட்டைத் தொலைத்துவிட்டேன்” என்கிறார். “இந்த வாழ்வு குறித்துச் சொல்ல ஏதுமில்லை” என்று தர்க்க அறிவுடன் திட்டவட்டமாகச் சொல்பவர்தான் “எந்த நிலத்தில் விடியல் இல்லையோ அங்கிருந்து எனக்கு ஒரு சொல் வேண்டும். எவரின் ஆன்மா துயரில் இற்றதோ அங்கிருந்து எனக்கு ஒரு சொல் வேண்டும்” என்று அம்மையிடம் மந்திரம் போன்ற ஒரு சொல்லுக்காக உன்மத்தத்துடன் கோரிக்கை வைக்கிறார்.

“என் பயணம் இலக்குகளோடு தொடர்புடையதல்ல. உங்கள் பந்தய மைதானங்களில் முதலிடம் வருபவர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஒருநாள் என் வாகனம் ஒரு மண்ணாங்கட்டியை நசுக்குவது போல் தூளாக்கும் அவர்களை” என்று ஆவேசமாக முழங்குபவர்தான் மெல்ல நிதானத்திற்குத் திரும்பி ‘இன்றின் வேங்கை மரத்தில் சீற்றம் அறவே இல்லை’ என்கிறார்.

பேரரறிவு கவிஞருக்குப் பல சமயங்களில் பெருஞ்சுமையாக இருக்கிறது. அது அனைத்தையும் அவருக்குப் பழசாகக் காட்டுகிறது. “பழைய பொருட்களை வாங்குபவன் சைக்கிளில் என் வீதிக்கு வர நான் இந்த பூமியை தூக்கித் தருகிறேன் பட்டாணி கூட பெறாது இந்த மசுரு எனக் கையில் திணித்துவிட்டு நகர்கிறான்” என்று அரத பழசான பூமியைக் காட்டுகிறார். தான் அறியாத புத்தம் புது பூமிக்காக ஏங்கி “என் குட்டிப் பூவே எனை எங்காவது அழைத்துச் செல்லேன் நிஜமாகவே ஏதும் பழசற்ற புதுசுக்கு” என்று கெஞ்சுகிறார். பேரரறிவால் தான் பார்க்க நேர்ந்த கசடையும் கீழ்மையையும் உதைக்க பூமிக்கு வந்த சின்னஞ்சிறு மனுஷியை “நீ எத்தி எத்தி உதைப்பது இந்தப் பழைய பூமியை இதன் கசடை கீழ்மையைத்தானே என் செல்லமே புதுப்பொன்னே!” என்று மகிழ்வோடு வரவேற்கிறார். பேரரறிவால் தான் அறிய நேர்ந்த நேற்றைய வரலாறுகளையும் நாளைய கணிப்புகளையும் துறந்து “இன்றே எங்கள் தியானம், இன்றே எங்கள் கடவுள், இன்றில் பூமி நிலைக்கட்டும்” என்று சொல்வதன் வழி இன்றில், இத்தருணத்தில் வாழ விரும்புகிறார்.

ஆனால் சாத்தானென அவர் குறிப்பிடும் அந்தப் பேரரறிவுதான் உன்மத்தம் கொண்டு பித்து மனநிலையில் எதையும் ரொமான்டிசைஸ் செய்துவிடக்கூடாது என்பதை அவருக்குத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் பொதுப்புத்தியில் ரொமாண்டிசைஸ் செய்யப்படும் அனைத்தையும் தனது கவிதைகளில் உடைக்கிறார். “ஒரு சின்னஞ்சிறு மலர் மனதுக்குள் கொண்டுவரும் சூரிய வெளிச்சத்தை பெரிய விஷயங்களின் கடவுளால் அருள முடிந்ததே இல்லை” என்று சொல்வதன் மூலம் பெரிது, பெரிது என நாம் பீற்றிக்கொள்ளும் அத்தனை பெரிய விஷயங்களையும் அடித்து நொறுக்குகிறார். “ஓர் இலை இவ்வளவு வரலாற்று உணர்வுடன் இருப்பது ஆபத்தானது நண்பா” என்று நம் வரலாற்றுப் பெருமித உணர்வைப் பொசுக்குகிறார். “ஒரு தேசத்தை உருவாக்குவது ஒரு கவிதையை உருவாக்குவதை விடவும் எளிது” என்று சொல்லி தேசம் என்று நாம் கொண்டுள்ள கற்பிதத்தைக் கேள்வி கேட்கிறார். “பாம்புகள் தேள்கள் மட்டும் அல்ல பூக்களும் விஷமாகும் வண்ணத்துப்பூச்சிகளும் விஷம்தான்” என்று சொல்லி பேரன்பின் வேட்டை நிலத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இவை எல்லாவற்றையும் விட என்னை வியப்புக்குள்ளாக்கியது காலங்காலமாய் கவிஞர்கள் வியந்தோதி உள்ள மழையைக் கூட இவர் விட்டுவைக்கவில்லை என்பதுதான்.

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று”

என்று பசி போக்கும் அமிழ்தமென மழையின் சிறப்பைச் சொல்லும் வள்ளுவனின்  மரபில் வந்தாலும், தலை வள்ளுவன் தான் வாலென சொல்லிக்கொண்டாலும் இளங்கோ காட்டும் மழை முற்றிலும் வேறொன்றாய் இருக்கிறது.

“கொட்டும் மழையில் எங்கொதுங்கி தப்பிக்க எங்கொதுங்கி தப்பிக்க ஓடும் ஒரு லாரியின் சக்கரத்தினடியில்” என்று மழையையும் மரணத்தையும் அவர் இணைக்கையில் அத்தனை ஈரத்திலும் மனம் வெம்புகிறது. ‘மழை வாழ்த்து’ என்று தலைப்பிட்ட கவிதையில் “எம் மக்களை நாளையற்றவர்கள் ஆக்குகிறாய் இவ்வளவு பெரிய நகரத்தில் ஒரு பூச்சி போல் எங்களை உணரச்செய்கிறாய்” என்று வாழ்த்துவது போல் தூற்றுகிறார். “சோவென மழை பெய்த நாளில்தான் என் தாத்தா காலமானார் இந்த மனுஷனுக்கு வாழத்தான் தெரியலைன்னா சாகவும் தெரியலை” என்றும் “கொட்டும் மழையில் சவ ஊர்வலத்தில் செல்பவனே என்ன பீடை உற்றாய் இந்த இழிவு கொள்வதற்கு” என்றும் சொல்வதன் மூலம் மழையும் மரணமும் பீடையும் ஒன்றிணைகின்றன. இவரது கவிதைகளில் வரும் மழை சித்திரம், மரபான மனதை மீறி ஒரு நகரத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்ட நவீனக் கவிஞனாக அவர் வெளிப்படும் புள்ளியைக் காட்டுகிறது.

‘சிங்காதி சிங்கம்’ என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் தான் சிங்கம்தானா என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. “நான் நிலைக்கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம் எனை நோக்கும் ஒரு பெப்பரப்பே” என்று சொல்லி பெப்பரப்பே ஆகிறார். “உன் அழகான கழுதைக் குட்டி அதன் காதுகளில் அதை ஒரு குதிரை எனச் சொல்லியிருக்கக் கூடாது நீ” என்று சொல்வதன் மூலம் தான் ஒரு கழுதைக்குட்டிதான் என்பதை ஒப்புக்கொள்கிறார். இப்படியான சுய பகடிகள் மூலம் ஒரு சிறந்த நவீன கவிஞனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார் இளங்கோ.

‘காயசண்டிகை’, ‘பட்சியன் சரிதம்’, ‘பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்’, ‘வியனுலகு வதியும் பெருமலர்’ என்ற நான்கு தொகுப்புகளையும் ஒரு சேர வாசித்து முடித்த போது ஒரு வாசகியாக இரண்டாயிரம் வருடங்கள் நீளமுள்ள பறவையின் வாலைப் பற்றிக்கொண்டு உன்மத்தத்திற்கும் பேரரறிவுக்குமிடையே அலைவுறும் பட்சியனாகத்தான் இளங்கோவைப் பார்த்தேன். இந்தப் பட்சியனின் வாலைப் பற்றிக்கொண்டு பறக்க அடுத்த தலைமுறை தமிழில் நிச்சயம் எழுந்து வரும். அதற்கான வலுவும் திராணியும் கொண்டது அவரது கவிதை உலகம் என்பதைத் துணிந்து சொல்வேன்.

வியனுலகு வதியும் இளங்கோ கிருஷ்ணன் என்ற பெருமலர் என்றென்றும் மணம் வீசட்டும்!

**********************************

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.