Jeyamohan's Blog, page 743
July 20, 2022
யுவன், பேட்டி- கமலதேவி
அன்பு ஜெ,
யுவன் சந்திரசேகர்
கமலதேவி
வணக்கம்.
நலம் விழைகிறேன்.யுவன் சாரின் தமிழ்விக்கிப் பதிவை பார்த்ததும் இந்த நேர்காணலை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன். கானல்நதி நாவலை மையமாக்கி புரவி இதழிற்காக செய்யப்பட்ட நேர்காணல். அவருடன் பேசிய இரண்டு மணி நேரத்தை மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். என்னுடைய குரல் மிக மெதுவானது. அதுவும் இயல்பாக பேசத்தொடங்கும் போது அதனுடைய இயல்பான நிலைக்கு சென்றுவிடும். முதல் பத்து நிமிடங்களுக்குப்பிறகு அவருடன் இயல்பான பேசத்தொடங்கினேன். அவர் அடிக்கடி குரல் உள்ளே போயிடுத்தே..கீழப்போயிச்சேம்மா என்று பொறுமையாக நினைவுபடுத்தினார். நான் அவரை இப்படி தொந்தரவு செய்தாலும் கூட நல்ல நேர்காணலாக அமைந்தது. அவர் அப்படி நினைவுபடுத்துப் போது“நான் உன்ன கஸ்ட்டப்படுதறேன்னாம்மா..”என்று ஆதுரத்துடன் கேட்டார். நான் தான் அவரை என் குரலால் இம்சை படுத்தினேன்.அன்புடன்,கமலதேவி எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்தேடலின் ஆடல்- விஜய் கிருஷ்ணா
ஆதிகாலத்தில் இருந்தே மனிதகுலம் வானத்தைக் கண்டு பிரம்மித்த வண்ணமே உள்ளது. அதன் நீட்சியாக விஞ்ஞானிகள் குழு ஒன்று JWST என்ற பெயரில் பூமியிலிருந்து வெகு தொலைவில் ஒரு தொலைநோக்கியை விண்வெளியில் மிதக்க விட்டு எடுத்த படங்களை சமீபத்தில் பகிர்ந்தனர். இது விண்வெளியை நமக்கு காட்டும் அதி தொழில்நுட்பம் வாய்ந்த சாளரம் என்றும் சொல்லலாம். இந்த சாளரத்தின் வழியே நமக்கு கிடைத்த அனைத்து படங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான் என்றாலும் முதல் படமாக அவர்கள் வெளியிட்டது Deep field என்னும் படம் தான்.
தரையில் இருந்து ஒருவர் கைக்கு எட்டிய தூரத்தில் வைத்திருக்கும் ஒரு மணல் துகள் அளவுக்கு வானத்தின் சிறு பகுதியை உள்ளடக்கியது இந்த படம். ஒரு முக்கியமற்ற புள்ளி போல் தோன்றினாலும் அதற்கு பின்னால் மறைந்திருப்பது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்மீன் மண்டலங்கள் (galaxyகள்) என்று இந்த படம் நமக்கு காட்டுகிறது. அதாவது ஒளியின் துகள் என இந்த படத்தில் இருப்பது ஒவ்வொன்றும் நட்சத்திரங்கள் அல்ல விண்மீன் மண்டலங்கள்.
நாம் இருக்கும் பால்வழி மண்டலத்தில் மட்டும் சுமார் பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம். அதன் விளிம்பில், அளவில் சராசரியான ஒரு நட்சத்திரத்தை தான் சூரியன் என்று பெயரிட்டு அதை சுற்றி வரும் எட்டுக் கோள்களில் மூன்றாவதிற்கு பூமி என்று பெயரிட்டு அதில் பார்க்கும் கேட்கும் உணரும் தொடர்பு கொள்ளும் கைகால் கொண்ட 800 கோடி தூசிகளாக ஒட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இந்த விஞ்ஞானிகள் தரும் செய்தி என்னவென்றால், வானத்தில் ஒரு புள்ளிக்கு பின்னால் சுமார் ஒரு லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்பதும் இதைப் போல் பல லட்சம் புள்ளிகள் நோக்க காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் தான்.
இந்த ஒவ்வொரு புள்ளியிலும் எவ்வளவு விண்மீன் மண்டலங்கள் உள்ளன, ஒவ்வொரு மண்டலத்திலும் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளன, அதில் எத்தனை நட்சத்திரங்களை எத்தனை கோள்கள் சுற்றுகின்றன, அதில் எவ்வளவு நகரும் மற்றும் நகரா உயிரினங்கள் உள்ளன, அதில் எத்தனை உயிருக்கு சிந்திக்கும் திறனும் தான் என்ற உணர்வும் உள்ளன என்பது இன்னும் அவிழ்க்கப்படாத ஒரு புதிர் தான். இப்போதைக்கு நாம் மட்டும் தான் இந்த வகைக்குள் அடங்கும் ஒரே உயிரினம் என்பதே விடையாக உள்ளது.
இந்த உயிரினத்தில் 1889ல் வாழ்ந்த ஒருவன் தான் இருந்த பைத்தியக்கார விடுதியின் சாளரத்தில் தெரிந்த காட்சியை கற்பனையையும் வண்ணங்களையும் தனது தூரிகையால் தொட்டுத் தொட்டு வரைந்த உலக புகழ் பெற்ற ஓவியம் தான் ‘விண்மீன்கள் நிறைந்த இரவு‘. நாசா குழு வெளியிட்ட திகைப்பூட்டும் அந்த முதல் படமும் வின்சென்ட் வான் கோ வரைந்த அந்த மகத்தான ஓவியமும் மனித குலத்தின் பொதுப் பிரக்ஞையின் ஆழத்தில் என்றும் நிலைத்திருக்கும் என்னும் ஒரு புள்ளியில் இணைகின்றன.
ஒன்று கலைஞன் என்னும் தனி மனிதனால் வரையப்பட்டது. மற்றொன்று அறிவு ஜீவிகள் குழுவால் உருவாக்கப்பட்டது. ஒன்று இயற்கையை அவதானித்து எந்த சட்ட திட்டத்திற்கும் கட்டுப்படாமல் வெளிப்படுத்துவது. மற்றொன்று இயற்கையின் விதிக்கு கட்டுப்பட்டு அதன் சாத்திய எல்லைக்குள் நின்று செயலாற்றுவது. ஒன்றிலோ அகப்பயண ஆழங்களும் அது தரும் அலைக்கழிப்புகளும் மேலோங்க மற்றொன்றிலோ புறப் பொருட்களின் இயல்பும் அதுவரையிலான கண்டுபிடிப்புகளின் அறிவும் மேலோங்குகிறது.
முரணான இருவேறு வழிகள். ஒன்று கலை மற்றொன்று அறிவியல். மானுட உச்சங்களான இவை போன்றவை இந்த நிலையில்லா பிரபஞ்சத்தில் மனித குலம் பிழைத்திருக்கும் வரை நிலைக்க இருப்பவை. இதெல்லாம் ‘உண்மை‘ தேடலின் தணியாத தாகத்தில் இருந்து பிறந்தவை என்று மட்டும் உறுதியாக சொல்லலாம். மனிதனுக்கே உண்டான தனித்துவ உணர்வு இது.
என்றோ ஒரு நாள் இந்த நிலையற்ற காலவெளியும் அதில் வாழும் மனித குலமும் இருந்த தடையமே இல்லாமல் ஆகிவிடும் என்று சில மனிதர்களின் ஆழ் உள்ளத்திற்கு தெரியுமோ என்னவோ. அதனால் தான் குறைந்தது தான் வாழும் காலத்தை தாண்டி நிலைத்து இருப்பவற்றை விட்டுச் செல்லும் செயலில் தீவிரமாக இறங்குகிறார்கள் அவர்கள். வாழும் காலத்தில் வெகு சிலரால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடிந்த இவர்களே வரலாற்று நாயகர்களாக என்றென்றும் நினைவு கூரப்படுபவர்களாக பரிணமித்தும் உள்ளார்கள்.
காணக்கூடிய பிரபஞ்சம் என்பதைப் பற்றி மட்டும் தான் நாம் அண்டவியல் என்ற பெயரில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்சத்தின் விரிவு கணம் கணம் அதிகரித்துக் கொண்டே இருப்பதனால் ஓர் எல்லைக்கு மேல் இருக்கும் ஒளிகள் நம்மை என்றுமே வந்து அடையாது என்பதே அதற்கு காரணமாகும். பிரபஞ்சத்திற்கு எல்லை உண்டா இல்லை அது முடிவிலியா என்ற கேள்விக்கு நிச்சயமான பதில் எப்படி இல்லையோ அதேபோல் மனித குலத்தின் தேடலுக்கும் எல்லை உண்டா இல்லை அது ஒரு முடிவில்லாச் செயல்பாட என்றும் நிச்சயமாக சொல்லிவிட முடியாது.
சிலரோ ஆடும் தன்னை பற்றிய ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சிலர் தாங்கள் ஆடும் மேடையின் தன்மையை அறிவதில் அதிக விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இரண்டுமே ஒருவகை ஆடலாகதானே வெளிப்படுகிறது. ஆடினால் உண்மை புலப்படும் என்று ஏன் நம்புகிறோம்? ஒருவேளை ஆடலை நிறுத்தி விட்டால் உன்மையை தானாக உணர்ந்துகொள்ள முடியுமா? அமர முடியாததால் தானே ஆடுகிறோம். அந்த தேடலின் ஆடலை கொண்டாடுவோம்.
வியப்புடன்,
விஜய் கிருஷ்ணா.
அறம் ஆங்கிலத்தில்…கடிதம்
அன்புள்ள ஜெ
அறம் கதைகள் ஆங்கிலத்தில் முதன்மைமுக்கியத்துவத்துடன் வருவது மிகமிக நல்ல ஒரு தொடக்கம். உங்கள் கதைகள் வருவதற்கும் இன்னொரு ஆசிரியர் எழுதிய கதைகள் வெளிவருவதற்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. நீங்கள் ஒரு தனிநபர் அல்ல. ஒரு வெறும் எழுத்தாளர் அல்ல. இங்கே மொழியாக்கம் செய்யப்படும் பல எழுத்தாளர்களுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அவர்கள் ஒருவகையில் naive ஆன , எளிமையான எழுத்தாளர்கள். இலக்கிய வாசிப்பு கிடையாது. எதைப்பற்றியும் பேசவும் தெரியாது. எங்கேயும் வெள்ளந்தியாக தான் எழுதியதைப் பற்றி மட்டும் சொல்வார்கள். தமிழில் ஓர் இலக்கிய இயக்கம் இருப்பதையே சொல்ல மாட்டார்கள். சொல்லவும் முடியாது. இதுவரை இத்தனைபேர் தமிழில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். யாருமே புதுமைப்பித்தன் பெயரைக்கூட சொல்வதில்லை. ஆகவே உண்மையில் தமிழில் இலக்கியம் இருக்கும் செய்தியே தமிழகத்துக்கு வெளியே (நான் பணியாற்றும் கல்லூரியில்கூட) எவருக்கும் தெரியாது. தமிழகம் இலக்கியத்தில் பின்னடைவு கொண்ட ஒரு மாநிலம், இங்கே இருந்து எப்படியோ ஒன்றிரண்டுபேர் எழுதி வந்துவிட்டார்கள் என நினைப்பார்கள்.அல்லது அப்படி நினைக்க விரும்புவார்கள். (அவர்களில் ஒருவர் இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்கள் தன்னை அடிக்க வருகிறார்கள் என்றுதான் எல்லா மேடைகளிலும் அழுவார்) அந்த கூட்டு அறியாமையை உங்கள் வருகை உடைக்க முடியும். நீங்கள் கவனிக்கப்பட்டால் தமிழ் நவீன இலக்கியத்தையே கொண்டுசெல்வீர்கள். 1992 வாக்கில் மலையாளத்தில் அகிலன் தவிர எவர் பெயரும் தெரியாது. இன்றைக்கு தமிழ் எழுத்தாளர் அனைவருமே அறியப்பட்டவர்கள். அது நீங்கள் சலிக்காமல் அவர்கள் அனைவரைப்பற்றியும் எழுதியமையால்தான். எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட பலர் பற்றி நீங்கள் எழுதியதையும், பேசியதையும் கேட்டிருக்கிறேன். அது இப்போதும் நடக்கட்டும்
சந்திரசேகர்
Watch | #KamalHaasan in conversation with #Jeyamohan on the new English translation of the writer-critic's novel, #Aram.
Coming soon on July 21!https://t.co/VVHmf2FgBN pic.twitter.com/6qHeS6P07O
— The Hindu (@the_hindu) July 20, 2022
July 19, 2022
Stories of the True
Containing iconic stories like ‘Elephant Doctor’ and ‘A Hundred Armchairs’, this collection by the great Tamil writer Jeyamohan, brings together twelve inspiring and imaginative narratives, all based on the lives of real people.
To Buy
Stories of the True : Translated from the Tamil by Priyamvadaவரலாற்று ஆய்வைப் புதைத்துவைப்போம்!
மறைந்த தமிழறிஞர் வ.அய். சுப்பிரமணியம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மைதானத்தில் மாலை வேளையில் நடைப்பயிற்சிக்கு வருவதுண்டு. நடுவே ஒரு சிறிய சுவரில் அமர்ந்து ஓய்வெடுப்பார். பல சமயம் அவருடன் நண்பர்கள் இருப்பார்கள். நான் ஓரிரு முறை சென்று மரியாதை நிமித்தம் வணக்கம் சொல்லிவிட்டு வந்தேன். அதிக நெருக்கமில்லை.
ஒருநாள் அவர் தனியாக அமர்ந்திருந்தார். என்னுடன் ஒரு தமிழறிஞர் இருந்தார். அவர் வ.அய். சுப்பிரமணியத்திடம் பேச விரும்பினார். நான் தயங்கினாலும் தமிழறிஞர் நேராகச் சென்று அறிமுகம் செய்துகொண்டார். ‘ஐயா அவர்கள் எனக்கு ஆய்வுக்கு உதவிசெய்ய வேண்டும். உங்கள் நிறுவனத்தின் ஏதாவது சிறிய நிதியுதவியாவது கிடைத்தால் போதும்‘என்றார். வ.அய். சுப்பிரமணியம் அப்போது குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புகொண்டிருந்தார்.
‘நீங்கள் ஏன் ஆய்வுசெய்ய வேண்டும்?’என்றார் வ.அய். சுப்பிரமணியம்.
‘அய்யா, புரியவில்லை”
‘நீங்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை என்ன?’
‘அய்யா…அதாவது இந்த விஷயம்…இது…’ தமிழறிஞர் எதையோ விளக்க முற்பட்டார்.
‘அதை நாங்கள் பல்கலைக்கழகத்திலே செய்துகொள்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’
‘நான் அரசு ஊழியர்…’
‘அதைச் செய்யுங்கள்…போகலாம்‘என்று கைகூப்பிவிட்டார்.
நான் மேலும் சில நாட்கள் கழித்து வ.அய். சுப்பிரமணியத்தை மீண்டும் சந்தித்தேன். ‘முறையான கல்வித் தகுதி உடையவர்கள் மட்டும்தான் ஆய்வுசெய்ய வேண்டும், மற்றவர்கள் வேறு வேலை பார்க்கட்டும் என நினைக்கிறீர்களா?’என்றேன்
‘கே.என். சிவராஜ பிள்ளைதான் தமிழிலக்கிய வரலாற்றாய்வுக்கு முன்னோடி. அவர் தமிழ் படித்த பேராசிரியர் இல்லை. காவல் துறை அதிகாரியாக இருந்தவர்‘என்றார் வ.அய். சுப்பிரமணியம்.
‘ஆனால்..’என நான் ஆரம்பித்தேன்.
கையை ஆட்டி இடைமறித்து ‘உலகம் முழுக்கத் தொழில்முறை ஆய்வாளர்கள் அல்லாத ஆய்வாளர்கள் பெரிய பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அவர்களை எல்லாம் கொஞ்ச காலத்துக்கு முழுமையாகவே தவிர்க்க முடிந்தால்தான் ஏதாவது உருப்படியாக நடக்கும்‘என்று உரத்த குரலில் சொன்னார்.
அன்று வ.அய். சுப்பிரமணியம் சொன்னவற்றை இவ்வாறு சுருக்கிச் சொல்லலாம். எந்த ஓர் ஆய்வுக்கும் அதற்கான முறைமை என ஒன்று உண்டு. ஆய்வாளனுக்கும் அவனுடன் விவாதிப்பவர்களுக்கும் அது இன்றியமையாதது.
ஓர் ஆய்வாளன் முதலில் எல்லாத் தரவுகளையும் முழுமையாகத் திரட்டவேண்டும். அந்தத் தரவுகளைச் சீராகத் தொகுத்து அதன் வழியாக தன் முடிவுகளை அடைய வேண்டும். அந்த முடிவுகளை அடைந்த தர்க்க முறையை விளக்கி அம்முடிவுகளைப் பொதுப் பார்வைக்கு வைக்க வேண்டும்.
எந்த ஓர் ஆய்வு முடிவும் அதை மறுப்பதற்கான வழி என்ன என்பதையும் சேர்த்தே முன்வைக்கப்பட வேண்டும். அதாவது பொய்ப்பித்தலுக்கான பாதை திட்டவட்டமாக இல்லாத முறைமை என்பது அறிவுலகில் இருக்க முடியாது. இந்தந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தந்த தர்க்கங்களைச் சார்ந்து இக்கருத்தை நான் உண்மை என முன்வைக்கிறேன், இந்த ஆதாரங்களைத் தவறென நிரூபித்தாலோ இந்த தர்க்க முறைகள் பொருத்தமற்றவை என்று நிறுவினாலோ நான் இந்தக் கருத்து பொய் என ஒப்புக்கொள்கிறேன் என்று சொல்லி முன்வைக்கப்படுவதே ஆய்வுண்மை.
ஆனால் நம் அறிவுச் சூழலில் முறைமையே காணக் கிடைப்பதில்லை. இங்கே பலரால் ஆய்வு என்ற பேரில் முன்வைக்கப்படுபவை பெரும்பாலும் உணர்ச்சிரீதியான நம்பிக்கைகள்தான். அந்த நம்பிக்கைகளுக்கான ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதைத்தான் ஆய்வு என்ற பேரில் முன்வைக்கிறார்கள். அந்தத் தரப்பு மறுக்கப்பட்டால் கொதித்து எழுகிறார்கள். ஆய்வாளர்களுக்கான சமநிலையை இழந்து தாக்குதல்களை ஆரம்பிக்கிறார்கள்.
இன்று தமிழகத்தில் சாதி அரசியலின் காலகட்டம். இன்று ஒவ்வொரு சாதியும் ஒருபக்கம் தன்னை ஒடுக்கப்பட்ட சாதியாக முன்வைக்கிறது. மறுபக்கம் தன்னை ஆண்ட பரம்பரை என்று சித்தரிக்க முயற்சி எடுத்துக்கொள்கிறது. அதற்கு அவர்கள் படையெடுக்கும் களம் வரலாற்றாய்வும் இலக்கிய ஆய்வும். உண்மையான போர் இன்று அங்கேதான் நடந்துகொண்டிருக்கிறது. எந்த நெறிகளும் இல்லாத நேரடியான வன்முறை அது.
சாதாரணமாக நம் சுவரொட்டிகளைப் பார்த்தாலே போதும் வரலாறு என்ன பாடுபடுகிறது என்று தெரியும். தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் தாங்களே என்று தமிழகத்தின் ஐந்து சாதிகள் அறைகூவுகின்றன. பல்லவர்கள் தாங்களே என்று சொல்கிறார்கள் சிலர். முந்நூறு வருடம் தமிழகத்தை ஆண்ட களப்பிரர் நாங்களே என்று இரண்டு சாதிகள் முட்டிக்கொள்கின்றன. இந்தச் சண்டை அதன் கீழ்த்தர எல்லையில் இணைய உலகில் வசை மழையுடன் நடந்துவருகிறது.
தமிழ்ப்பெருமித வரலாற்றை நீங்கள் எழுதுவதாக இருந்தால் ஆதாரமே தேவையில்லை. ஓங்கிச்சொன்னாலே போதும், அது வரலாறு என கொள்ளப்படும். இன்னொரு பக்கம் ஒவ்வொரு சாதியும் தனக்கான வீர நாயகனை வரலாற்றில் இருந்து கண்டெடுக்கிறது. நேற்றுவரை இவர்கள் எங்கிருந்தார்கள் என்று ஆய்வாளர் கேட்க முடியாது. கேட்டால் அவர்களை மறைத்த பழிக்கு கேட்டவர்களே ஆளாக நேரிடும்.
தமிழக வரலாறு என்பது மிகமிகக் குறைவான தகவல்களின் அடிப்படையில் பெரும்பாலும் ஊகங்களாக மட்டுமே எழுதப்பட்டிருக்கும் ஒன்று. இலக்கியச் செய்திகள், ஓரிரு கல்வெட்டு வரிகளைக் கொண்டு நம் வரலாற்றை எழுதியிருக்கிறோம். சங்க காலத்து மாமன்னர்கள் பலரைப் பற்றி ஒரு தொல்லியல் ஆதாரம்கூடக் கிடையாது
இந்தக் குறைவான ஆதாரங்களில் இருந்து ஒரு வரலாற்றை ஊகிக்க முடிந்த நம் முன்னோடி வரலாற்றாசிரியர்கள் வணக்கத்துக்குரியவர்கள். எஞ்சியவற்றை எழுதும் பெரும் பணி மிச்சமிருக்கிறது.
சாதியவாதிகள் இந்தத் தெளிவின்மையைத்தான் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இலக்கியச் சொற்களை விருப்பம்போல திரித்து ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஒவ்வொரு சாதியும் வரலாற்றை ஒவ்வொரு திசைக்கு இழுக்கும்போது உண்மையான வரலாற்று விவாதத்துக்கான இடமே இல்லாமல் ஆகிறது.
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை மாதிரி இருக்கிறது தமிழக வரலாற்றாய்வு. அதை மீட்க இப்போதைக்கு ஒருவழிதான் உள்ளது. வரலாற்றாய்வையும் இலக்கிய ஆய்வையும் அறிவுலக எல்லைக்குள்ளேயே நிறுத்தச் சொல்வோம். அதற்கு வெளியே சொல்லப்படும் எந்த ஒரு வரியையும், அது நம் சாதிக்கோ மதத்துக்கோ சாதகமானதாக இருந்தாலும், செவிகொடுக்க மறுப்போம். ‘உன் ஆய்வை சக ஆய்வாளர்களிடம் போய் சொல், அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய், அதன்பின் எங்களிடம் பேச வா‘என்று இந்த கத்துக்குட்டி ஆய்வாளர்களிடம் சொல்வோம்.
அறிவியக்கம் என்பது சமநிலை கொண்ட விவாதங்கள் மூலம்தான் நிகழ முடியும். பிரச்சாரம் மூலம் அல்ல. காலப்போக்கில் அவற்றில் தகுதியுள்ளவை தங்களை நிறுவிக்கொள்ளும். அதுவே வரலாறு என்பது!
Sep 23, 2013 தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரை
கற்பு
மீண்டும் ஒரு சொல். ஒரு கருத்துருவமே ஒரு சொல் ஆகிறது. அது பண்பாட்டின் வழியாக வளர்ந்து பொருளேற்றம் கொண்டபடியே உள்ளது. கற்பு என்னும் சொல்லைக்கொண்டு தமிழ்ப் பண்பாட்டையே தொகுத்துவிடமுடியும்
கற்பு- தமிழ் விக்கி
கற்பு – தமிழ் விக்கி
நாமக்கல் உரை, கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நாமக்கல் கட்டண உரையில் தங்களை சந்தித்தேன்.உங்களின் நேரம் கருதி இரண்டு நிமிட உரையாடலுக்கு பின் நகர்ந்துவிட்டேன்.உரை மிகவும் செரிவானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. மிகவும் கவனமாக கேட்டேன். விடுதலையென்பது யாதென்றுணர்ந்தேன்.மிக்க நன்றி.
குருபூர்ணிமாவிலிருந்து நானும் நண்பன் மூர்த்தியும் வெண்முரசு மீள்வாசிப்பை தொடங்கிவிட்டோம். மீள்வாசிப்புதான் வாசிப்பை முழுமையாக்குகிறது என்பதை உணர்ந்துள்ளேன். ஏனைய வாசகர்களும் உணர்வார்களாக.தங்களை ஆகஸ்ட்14ல் ஈரோடில் சந்திப்பதாக எண்ணம்.
அன்புடன்
விஸ்வநாதன்
வாழப்பாடி.
விடுதலை என்பது என்ன – நாமக்கல் உரை
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
கடந்த 17.07.2022 (ஞாயிறு) அன்று நாமக்கலில் நடைபெற்ற கட்டண உரை “விடுதலை என்பது என்ன” என்ற தலைப்பின் கீழ் தாங்கள் ஆற்றிய உரையின் கூட்ட நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களின் வாயிலாக பெற்றேன்.
தங்களின் மேடை பேச்சுகளை காணொளியில் மட்டுமே கண்டு வந்தவன் என்ற வகையில், நேரில் பார்க்கவும் பேராவல் கொண்டிருந்தேன். தங்களை நேரில் சந்தித்த வகையில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
நேற்றைய நிகழ்வில் விடுதலை என்பது என்ன என்பதை மிகவும் அறிவுப்பூர்வமாகும் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் தெரிவித்து, ஒரு விதையை தூவுவது போல உள் மனதில் ஊன்றி விட்டீர்கள்.
மேலும், தத்துவம், இந்திய பண்பாடு, ஆன்மீகம் போன்றவை குறித்து அதிகம் வாசிக்காத வாசகன் என்ற வகையில், எனக்கு நேற்றைய தங்களின் உரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
மேலும், தங்களது உரையில் ஓரிடத்தில் Frame என்ற ஒன்றை சுட்டிக் காட்டியதை போல, மேற்படி தத்துவம், இந்திய ஞானம், ஆன்மீகம் போன்றவற்றை வாசித்து உணர்வதற்கும் ஒரு Frame அதாவது ஒரு முழுமை பெற்றச் சட்டகமாவும், வாசித்து உணர்வதற்கான நுழைவாயில் போலவும் நேற்றைய தங்களின் உரையானது அமைந்தது.
மேலும், தங்களது உரையின் ஆரம்பத்தில் ஆன்மீகம், தத்துவம் அதாவது இலக்கியம் சார்ந்து அல்லாத முதல் மேடை பேச்சு என்று தாங்கள் சொல்லிய வகையில், எனக்கும் நேரில் தங்களின் முதல் மேடைப்பேச்சு என்ற வகையிலும் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன்.
மேற்படி தத்துவம், இந்திய ஞானம், ஆன்மீகம் போன்றவற்றிற்கும், விடுதலை என்பது என்ன என்ற வினாவிற்கும் நேற்றைய தங்களின் உரையானது என்னுள் தெளிவான பாதையை வகுத்தது. இதே உணர்வு நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எழுந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.
வணக்கம் நன்றி
கலை கார்ல்மார்க்ஸ்
கார்கடல், கடிதம்
நலம்தானே? உங்களின் குருபூர்ணிமை வாழ்த்து மிகவும் அணுக்கமாக இருந்தது. ஒரு நல்லாசிரியாராக, நண்பராக, தமையனாக… அக்கறையுடன், பேரன்புடன் சொன்ன சொற்கள் அவை. அந்த வாழ்த்துக்களை பார்த்தபிறகு கார்கடலை கையில் எடுத்தேன். எனக்கு பிடித்தமான பகுதிகளை வாசித்தேன்.
அறத்தையும், உன்னத விழுமியங்களையும் முழு சோதனையிட்டு பார்க்கும் ஆகப்பெரும் தருணம் என்பது மரணம்தான். அதுவும் ‘அவன் நானேதான்‘ என்று உணரும் மைந்தனை இழக்க நேரிடும் தருணம். வெண்முரசின் இந்த நாவல் அவ்வாறான தந்தைகளின் அரற்றல்களால் ஆனது. அர்ஜுனன்– அபிமன்யு, பீமன்–கடோத்கசன், ஜயத்ரதன்– பிருஹத்சகாயர், துச்சகன்–த்ருமசேனன், சோமதத்தர்–பூரிச்ரவஸ்… இப்படி வரிசை நீள்கிறது.
கர்ணனின் அம்புகள் பட்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் அர்ஜுனன் மீண்டு வர ‘உன்னில் சிறப்பான பாகம் ஒன்றை இழக்க நேரிடும். அது உன் மரணத்துக்கும் நிகரானதாகவும் இருக்கலாம்‘(மன்னித்து விடுங்கள் இவை உங்கள் சொற்கள் அல்ல) என்கிறான் கண்ணன். அதற்க்கு இணைந்துதான் அர்ஜுனன் மீள்கிறான். மீண்ட பிறகும் அவனுக்கு தெரிகிறதா அபிமன்யுவை இழக்க போகிறோம் என்று? உண்மையில்– அர்ஜுனன் அபிமன்யுவின் பிறப்பில் இருந்தே அவனது அகால மரணம் பற்றி பயந்தவனாகவே இருக்கிறான். யமனின் துலாத்தட்டில் ஜாதவேதனின் மைந்தனின் உயிருக்காக… அர்ஜுனன் நிகர் வைத்தது அபிமன்யுவின் உயிரைத்தானே? அவனில் இருந்து விலகி விலகி சென்றதும் இதனால்தானே?
ஆனால், அவ்விருவரின் உறவை பற்றி நீங்கள் இன்னும் ஆழமாக செல்வீர்கள் என்று நான் எதிர்பாத்தேன். முக்கியமாக இருவரின் நடுவே உத்தரயை வைத்து பார்தால் தன்னளவே அதுவொரு குறு நாவலுக்கு உரிய களம் என்று படுகிறது. நான் சிறுபிராயத்தில் இருந்தே அர்ஜுனனை காதலித்த உத்தரையை… ‘தான் அவளின் நடன குரு என்பதனால், அது தந்தைக்குரிய ஸ்தானம் என்பதனால் ஏற்றுக்கொள்ள கூடாது. அதனால்தான் அபிமன்யுவுக்கு மனம் முடித்தான்‘ என்ற ஒற்றை வரியுடன் மட்டுமே கடந்து சென்றுள்ளேன். அதற்க்கு மேல் அதைப்பற்றி யோசித்தது இல்லை. அதில் ஒரு அற்புதமான மூன்று கோண காதல் கதை உள்ளதை நீர்க்கோலத்தின் கடைசி அத்தியாயங்கள் காட்டுகின்றன. ஆனால் அது கோட்டு சித்திரம் மட்டும்தான். அடுத்தடுத்து, வெண்முரசு நாவல்களில் அதை நீங்கள் விரித்து எடுப்பீர்கள் என்று நினைத்தேன். அவ்வாறு ஆக வில்லை. செந்நாவேங்கையில் இருந்தே அபிமன்யுவில் இருக்கும் அந்த வெறி, முண்டியிட்டு மரணத்தின் முன் நிற்பது… இதற்கு காரணம் எல்லாம் உத்தரை–யுடன் அவனின் சிதைவுற்ற உறவுதான் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள். கார்கடலில் கௌரவர்கள் சிலர் நேரடியாகவே அவனை இதைப்பற்றி இகழ்கிறார்கள்.
இத்தனைக்கும் அர்ஜுனன் நீர்க்கோலத்தில் சொல்லும் அந்த கடைசி வரிகள் காரணம் என்று படுகிறது. அந்த காட்சி இப்படி வரும்…
‘அவள் உடலின் அசைவின்மை அவனை நிலையழியச் செய்தது. பின்னர் “அவனை நீங்கள் பார்க்கையில் உணர்வீர்கள்” என்றான். மெல்ல நகைத்து “தெய்வங்கள் வனைந்து வனைந்து மேம்படுத்திக்கொள்கின்றன என்பார்கள். அவன் பணிக்குறை தீர்ந்த பழுதற்ற அர்ஜுனன். இளையவன், நானே அஞ்சும் வில்திறலோன்” என்றான். அவள் தலைதூக்கி நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவன் நோக்கை விலக்கிக்கொண்டபின் “அனைத்தும் நன்மைக்கே. நம் குடி பெருகும்… இப்பெருநிலம் நம் கொடிவழியினரால் ஆளப்படும்” என்றான்.’
அவளின் நோக்கிற்கு விழி விளக்கிக்கொள்ளாமல் பார்த்து இருந்தால் அர்ஜுனன் என்ன கண்டிருப்பான். அவனை பொசுக்கும் கோபத்தையா? இல்லை வெறுப்பயா? இல்லை துக்கத்தைய்யா… எதை? எதுவாக இருந்தாலும் அது அபிமன்யுவிற்கு எந்த வகையிலும் நன்மை தருவது அல்ல. மற்ற பெண்களை போல் உத்தரை அர்ஜுனனனை மனதில் இருந்து விலக்கி அவனை நேசிக்க முயற்சி செயதும் இருக்கலாம். ஆனால்… அர்ஜுனனின் இந்த வார்த்தைகள் அதை எப்போதைக்குமே செய்ய முடியாமல் ஆக்கின. ஒரு வேளை அவள் நேசித்தாலும் அது அவரைத்தானே இருக்கும். அதனை அபிமன்யு ஊகித்திருக்க மாட்டானா? அவன் யார்? தான் அடைய விரும்பும் எந்த பெண்ணும் தான் அன்றி வேறல்லாமல் தன்னை நேசித்தே தீரவேண்டும் என்று உறுதியோடு இருக்கும் ‘காண்டீப‘ அர்ஜுனனின் மைந்தன் இல்லையா? தன்னில் இன்னொருவனை பார்க்கும் ஒருத்தியை எப்படி சகித்துக்கொள்வான்? அந்த இன்னொருவன் வேறு யாராக இருந்தாலும் வெட்டி வீழ்த்தியிருப்பான். ஆனால், அங்கு இருப்பது தந்தை ஆயிற்றே! இப்படி இருந்தும் இவர்களுக்கு பரீட்சித் பிறக்கிறான். எனில், அவர்கள் இருவரின் சமரச புள்ளி தான் என்ன? வெறும் காமமா? இல்லை ஏதும் அறியா சிறுபிள்ளை தனமா? அப்படி யானால் அபிமன்யுவில் அந்த தற்கொலை தனமான துணிச்சல் எதனால்? ஏன் இந்த உள் மடிப்புகளை நீங்கள் வாசகர்களுக்கு விட்டு விட்டீர்கள்?
இத்தனைக்கும், வெண்முரசுவில் சிக்கலான ஆண்–பெண் உறவை பற்றி எத்தனையோ சிறு பாத்திரங்களில் வழியே பேசியிருப்பீர்கள். நீர்க்கோலத்தில் ‘கஜன்–முக்தன்–சுபாஷினி என்று, திசைதேர் வெள்ளத்தில் அசங்கன்–சௌம்யய் என்று. அபிமன்யுவின்–உத்தரயின் கதையில் அந்த சிக்கல்களை இன்னும் நுணுக்கமாக தொடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
இந்த நாவலில் வரும் 71வது அத்தியாயத்தை அப்படியே வெட்டி… பிரசுரித்தாலும் உலகின் சிறந்த கதைகளில் ஒன்றாக நிக்கும். அதில் அப்படியொரு உள விளையாட்டுக்கு. துச்சகன்– த்ருமசேனனின் மரணத்தை பெரிதும் அஞ்சுகிறான். ஆனால், அதை வெளிக்காட்டுவது கீழ்மையாக எண்ணுகிறான். ஒரு கட்டத்தில் ‘அவன் முடிசூட தேவை இல்லை. இளவரசானகவும் இருக்க அவசியம் இல்லை. எங்கோ எப்படியோ வாழ்ந்தால் போதும்…’ என்று இறைஞ்சுகிறேன். போரில் அவன் முன்னணியில் இருக்கக்கூடாதென்று கேட்கிறான். த்ருமசேனனோ எது அறமோ அதை செயகிறான். அவன் இறந்த பிறகுதான் அரங்கேறுகிறது உச்சக்கட்டம். இதுவரைக்கும் பெரும் தந்தையாக மட்டுமே திகழும் துரியன்… மிக மேம்போக்கான வார்த்தைகளில் துச்சகனின் துக்கத்தில் பங்கு கொள்கிறான். அவன் மட்டுமல்ல எல்லோருமே… அதை ஒரு பெரிய விஷயமாக எண்ணவில்லை. கடோத்கசனின் வீழ்ச்சியின் களிப்பில் இருக்கிறார்கள். படைகளின் அந்த களிப்பு திருமசேனனின் மரண செயதியால் அடங்கிவிடும் என்கிறார்கள். இல்லையென்றால், இதை அவர்கள் முதலிலேயே எதிர்நோக்கி இருந்தார்களா? தனக்குமட்டுமல்ல கௌரவ படைகளுக்கும் பிடித்த வீரனான அபிமன்யுவை கொன்றவனின் மரணத்திற்கு இந்த முடிவுதான் சரியானது என்று உள்ளுக்குள் உவகை கொள்கிறார்களா… தம்மை அறியாமல்! யுதிஷ்டிரர்–சகதேவனின் சொல்லாடலின்படி பீஷ்மரின் மரணத்துக்கு… அபிமன்யுவின் உயிர்தான் ஈடு என்றால், அவனின் மரணத்திற்கு ஜயத்ரதன் உட்பட எல்லாரின் உயிர்களும் ஈடா?
அதை சொல்லத்தான்… யுதிஷ்டிரருக்கு வந்து சேரும் ஜயத்ரதனின் மரண செயதியுடன் தொடங்கி, அதை ஒரு முடிச்சாக மாற்றி, முன்னுக்கும்–பின்னுக்குமாக ஒரு அற்புதமான காட்சி வலைபின்னி மற்றவர்களின் மரணத்தை விவரித்து இருப்பீர்கள். அவர்களில் லக்ஷ்மணன், விகர்ணன் மரணங்கள் போக, துரியனுடன் சேர்ந்து என்னையும் மிகவும் பாதித்தது குண்டாசியின் மரணம்தான்.
நம் நாட்டின் மகாபாரத கதை வெளிக்கு நீங்கள் அளித்த ஒரு அற்புதமான பாத்திரம் அவன்தான்(அவர் என்று சொல்ல தோன்றுகிறது!). மற்ற மொழிகளில் வெண்முரசு சென்றால்… இந்த மண்ணில் இன்னும் பல நூற்றாண்டுகள் அவன் வாழமுடியும்! எத்தனையோ சோகங்கள், மனசாட்சியை உலுக்கும் எத்தனையோ கேள்விகளுடன் நம் முன் வந்த குண்டாசியின் மரணம்… வெறும் செய்தியாகவே வந்து செல்கிறது. பீமனின் கதைக்கு மண்டை பிளவுபட்டு… குதிரைகளின் உடல்களில் நடுவே கிடக்கிறானாம்!
துரோணரின் மரணத்தை அஸ்வத்தாமனுக்கு அறிவிக்க கிருபர் செல்லும் இடத்தில், மீண்டும் அறவீழ்ச்சியின் மேல் கேள்விகள் எழுகிறது. கிருபர் துரியனை கேட்கும் கேள்விகள்… வாசகனுக்கு உள்ளவையே. கர்ணனுடன் தொடங்கி– அவனிடமே முடிகிறது இந்த நாவல்… அடுத்த நாவலில் அவனின் வீழ்ச்சிக்கு வித்திட்டு. நடுவில் குந்தி–கர்ணனின் சந்திப்பு… மற்றுமொரு ஜெயமோகன் முத்திரை. குந்தி தனக்கே உரிய நகைப்புடன் கர்ணனின் உயரத்தை பற்றி கேள்விகேட்பதும், அதற்கு கர்ணனின் மறுமொழியும் மற்றுமொரு இணையில்லா காட்சி. குந்தி பாண்டவர்களில் யாருடன் தான் இப்படி நகையாடுவாள்…? யுதிஷ்டனிடமா… அவன் பாதி ரிஷி, பீமன்… நகைப்புடன் சேர்ந்து கசப்பையும் கொட்டுவான், அர்ஜுனன்… அவனுடன் எந்த சொல்லாடலுமே இல்லை, நகுலனும் சகதேவனும் சிறுபிள்ளைகள். யாருடன் அப்படி அவள் அப்படி சிரிப்பாள்? கண்ணனிடம் இருக்கலாம். .
மிக்க அன்புடன்,
ராஜு
July 18, 2022
தேவநேயப் பாவாணர், சந்திரசேகர சரஸ்வதி, மொழியியல்
தமிழ் விக்கியில் தேவநேயப் பாவாணரின் பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டேன் ஆகா ஓகோ என எழுதியிருந்தீர்கள். நான் அறிந்த வரை இன்றைக்கு சீமான் போன்றவர்கள் தாக்கு – அட்டாக்கு என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதற்குக் காரணமாக அமைந்தவர் அவர்தான். அவரைப்பற்றி அப்படி ஒரு நீண்ட பதிவு எதற்காக? அவருக்கு நீங்கள் அளிக்கும் அறிவுத்தகுதி என்ன?
ஸ்ரீராம் மகாதேவன்
தேவநேயப் பாவாணர்அன்புள்ள ஸ்ரீராம்,
இது இன்னொரு நண்பர் முகநூலில் இருந்து வெட்டி எடுத்து அனுப்பி உண்மையா என்று கேட்டது
கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்
“கலிஃபோர்னியா” என்ற இடத்துக்குப் பெயர்க் காரணம் சொல்கிறார் பெரியவா.
கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக்கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு வம்சத்து சகரர் என்னும் அரசர் அச்வமேத யாகம் செய்தார். இந்த யாகத்தைச் செய்ய வேண்டுமென்றால்,முதலில் ஒரு குதிரையை எல்லா தேசங்களுக்கும் அனுப்புவார்கள்.
அதை எந்த அரசனாவது பிடித்துக் கட்டிப் போட்டால் அவனுடன் யுத்தம் செய்து வென்று, பிறகு எல்லோரும் பாராட்ட இந்த யாகம் செய்யப்படும். பொதுவாக எல்லா அரசர்களும் வம்பு செய்யாமல் அந்தக் குதிரைக்குரிய கப்பம் செலுத்திவிட்டு அரசனைச் சக்ரவர்த்தி என்று ஒப்புக்கொண்டு விடுவார்கள்.
ஆனால் இந்த யாகத்துக்கு முதலில் இந்திரன்தான் தடங்கல் செய்வான். ஏனெனில் நூறு அஸ்வமேத யாகம் செய்து விட்டால் இந்திர பதவி ஒருவனுக்குக் கிடைத்துவிடும். தனது பதவி பறி போகாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வது இந்திரன் வழக்கம். எனவே அவன் சகரர் விட்ட குதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாதாள உலகில்
கபிலர் தவம் செய்யும் ஆஸ்ரமத்தில் கொண்டு யாருக்கும் தெரியாமல் கட்டிவிட்டான்.அதைத் தேடிக்கொண்டு வர சகரன் தன் நூறு பிள்ளைகளையும் அனுப்பவே, அவர்களும் எப்படியோ கபிலாச்ரமம் வந்து சேர்ந்து, கபிலர்தான் பிடித்துக் கட்டிவிட்டதாக நினைத்து அவரிடம் சண்டைக்குப் போனார்கள். அதனால் கோபங்கொண்ட கபிலர் ஒரு முறை முறைத்தார். அவ்வளவுதான்! அங்கு வந்த நூறு பேரும் சாம்பலாகிப் போனார்கள். இது சகரனுக்குத் தெரிந்து அவன் சென்று கபிலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அசுவமேத யாகம் செய்து முடித்தானென்பது ராமாயண முன்கதையில் தெரிகிறது.
அந்தக் கபிலாரண்யம்தான் “கலிஃபோர்னியா” என்று திரிந்து விட்டது.சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLAND என்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது.
இப்படியாகப் பெயர் காரணங்ளை அலசி ஆராய்ந்துபெரியவா சொன்னால் திகைப்பு அடங்கவே அடங்காது.
Jaya Jaya Shankara hare hare shankara
*
இதை என்ன சொல்வீர்கள்?
இதில் உள்ள நுண்ணடுக்குகள் பல. அமெரிக்காவை ‘பாதாள’ உலகமாக நினைப்பது முக்கியமானது.
சாங்கிய யோகத்தை உருவாக்கிய கபிலர் ‘பாதாளத்தில் தவம் செய்பவர்’ என்னும் தொன்மத்தின் உட்பொருளும் நோக்கத்தக்கது. பல பௌத்த கதைகளில் அவர் வைதிகர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார் என வருகிறது. மிகப்பின்னரே அவர் ஏற்படைந்தார் என கோசாம்பி போன்றவர்கள் சொல்கிறார்கள்.
ஆக இந்த சொற்பகுப்பையும், விரும்பிய அர்த்தம் கொள்ளுதலையும் எல்லாரும்தான் செய்கிறார்கள்.
*
உண்மையில் சொல்வழியாகச் சிந்திப்பது என்பது இந்திய சிந்தனை முறையில் மிக அடிப்படையான ஒன்று. ஏனென்றால் இந்தியாவில் குறைந்தது ஐந்து மொழிகள் மிகத்தொன்மையான வேர்ச்சொல் அடுக்கு கொண்டவை. தமிழ், சம்ஸ்கிருதம் பாலி, பிராகிருதம், மற்றும் முண்டா மொழிகள். ஒரு கருத்தைப் பற்றிப் பேச அதற்குரிய சொல்லை எடுத்து, அதன் வேர்ச்சொல் கண்டடைந்து, அதிலிருந்து தொடங்குவதை இந்தியாவின் மரபுசார் அறிஞர்கள் அனைவரிடமும் காணலாம். குருகுலங்களில் அம்முறை இன்றும் உள்ளது
கருத்து என்ற சொல்லையே எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வேர் கரு. கரு என்றால் உள்ளிருப்பது. மறைந்திருப்பது என்னும் பொருள் அதிலிருந்து எழுந்தது. கரவு போன்ற சொற்கள்.இருண்டது என்னும் பொருள் மேலும் வந்தது. கார் முகிலுக்கும், யானைக்கும் எல்லாம் அச்சொல் விரிந்து கொண்டே சென்றது. இந்த பெருஞ்சித்திரத்தை உருவாக்கிக் கொண்டால் முன்னோர் கருத்து என்பதை எப்படி பார்த்தார்கள், கருத்து என்னும் கருத்துருவம் எவ்வாறு வளர்ந்தது என்பதெல்லாம் வெளிப்படும். அச்சொல் இன்றைய நடைமுறையில் எப்படி செயல்படுகிறது, அது குறிப்பிட்ட தத்துவக் களங்களில் என்னென்ன பொருள் கொள்கிறது என்று ஆராய்ந்து மேலே செல்லலாம். அதன் அர்த்தவேறுபாடுகளை பற்றிப் பேசினாலே கருத்து என்னும் கருத்துருவின் எல்லா தளங்களையும் விரிவாகப்பேசிவிடலாம்.
ஆனால் இப்படிச் செய்ய வேண்டுமென்றால் சில தகுதிகள் தேவை. கலைச்சொல்லை கண்டறிதலும் சரி பொருள் கொள்ளுதலும் சரி இஷ்டத்துக்குச் செய்யக்கூடுபவை அல்ல. அதற்குச் சில முறைமைகள் உள்ளன. அந்த முறைமைகள் பழங்காலம் முதல் வளர்ந்து வந்துள்ளன. சென்ற நூறாண்டுகளில் மொழியியல், நாட்டாரியல், சமூகவியல், மானுடவியல், நவீன வரலாற்றெழுத்து ஆகியவை சார்ந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றை எல்லாம் கற்று, பயன்படுத்திக் கொண்டு செய்யப்படும் சொல்லாய்வே பயனுள்ளது.
ஆனால் அறிஞர்கள் சொல்லாய்வு செய்வதைக் கண்டு அனைவருக்கும் அதை தாங்களும் செய்யலாம் என்னும் நம்பிக்கை வருகிறது. அதற்கு பெரிய படிப்போ, நூல்களை மேற்கோள்காட்டும் நினைவுச்சக்தியோ தேவையில்லை. விரும்பியபடிச் செய்யலாம். பாமரர் நடுவே அறிஞர் என்ற பாவலாவையும் காட்டிக்கொள்ளலாம்.
சுந்தர ராமசாமி சொல்வார். எந்த ஒரு கருத்தைச் சொன்னாலும் தமிழ்ச்சமூகத்தில் இருந்து அதற்கு எதிர்வினையே வராது, ஆனால் சொல்லாய்வு செய்தால் மட்டும் எதிர்வினைகள் வந்து குவியும். சொல்லாய்வு செய்பவரைச்சுற்றி மட்டும் பெருங்கூட்டம் கூடிவிடும். ஏனென்றால் நம்மவர்களுக்கு புரிபடுவது, அவர்களாலும் செய்யக்கூடுவது அது ஒன்றென.
ஆகவே இங்கே சொல்லாய்வு என்றபேரில்தான் மொத்த ’சிந்தனை’யும் நடந்துகொண்டிருக்கிறது. வரலாற்றய்வு, பண்பாட்டாய்வு எல்லாமே சொற்களை எடுத்து விருப்பப்படி பொருள் அளிப்பதாகவே உள்ளது. அதை அறிஞர் முதல் பாமரர் வரை அனைவரும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு டீக்கடையில் பதினைந்து நிமிடம் நின்றாலே எவரேனும் ஒருவர் சொற்பகுப்பு செய்ய ஆரம்பிப்பதை காணலாம். ‘அதாவது இப்ப ஆரல்வாமொழின்னா என்ன? ஆரல்ங்கிற்து ஒரு மீனாக்கும்…’
சொற்பொருள் கொள்வதற்கு பழங்காலத்தில் சம்ஸ்கிருத மரபிலும், தமிழ் மரபிலும் இலக்கண நெறிகளும், வழக்கு நெறிகளும் பல உள்ளன.சொற்கள் எப்படி புணரும், எப்படி நீளும், எப்படி ஒலித்திரிபடையும், எப்படி ஒலிக்குறிப்பு வளரும் என்பதறான இலக்கணங்கள் அவை. சத்யகனின் மகன் சாத்யகி ஆவான். பாண்டுவின் மகன் பாண்டவன் ஆவான். குருவம்சத்தவன் கௌரவன் ஆவான். இந்த இலக்கணத்தை உதாரணமாகச் சொல்கிறேன். பூச்சை என்னும் தமிழ்ச்சொல் (பூனை) பூசை என திரிபடையும்.( கம்பராமாயணம்)
இந்த இலக்கணத்தை ஒருவர் நன்றாக அறிந்திருக்கவேண்டும். தான் ஒரு சொல்லைப் பற்றிப் பேசுகையில் அதன் இலக்கணக்குறிப்பைச் சொல்லி அதை நிறுவவேண்டும். அச்சொல்லை அப்படி பொருள் கொள்வதற்கான இலக்கிய முன்னுதாரணங்களை முன்னோடிப் பெரும்படைப்புகளில் இருந்து குறிப்பிடவேண்டும். அப்படிச் சொன்னால்தான் பழங்கால அவைகளில் மதிப்பார்கள். இல்லாவிட்டால் கல்லாதான் கற்ற கவி. அல்லது முகநூலான் உதிர்த்த முத்து. அவ்வளவுதான்.
ஆனால் இன்று அது மட்டும் போதாது. இன்றைய அறிவுத்துறைகளில் அறிமுகம் இருக்கவேண்டும். மொழியியல், நாட்டாரியல், மானுடவியல், சமூகவியல் மற்றும் நவீன வரலாற்றெழுத்துமுறை ஆகியவற்றில் அறிமுகமில்லையேல் மரபார்ந்த பேரறிஞர்கள் கூறுவதுகூட உளறலாக ஆகிவிடும்.
ஒன்று சொல்கிறேன், என் இல்லத்தருகே வாழ்ந்தவர் எனக்கு மிக அணுக்கமானவரும் ஆசிரியர்போல இருந்தவருமான மலையாள நாட்டாரியல் பேரறிஞர் திரிவிக்ரமன் தம்பி. இடப்பெயர் வரலாறு போன்ற பெருநூல்களின் ஆசிரியர். அவர் நாட்டாரியல் உலகம் முழுமையிலும் இருந்து கண்டடைந்த ஒரு பொதுவிதியையும், தமிழ்ச்சூழலில் அதற்கு இருக்கும் ஒரு விதிவிலக்கையும் பற்றிச் சொன்னார்.
அதாவது ஓர் ஊரின், அல்லது ஒரு பொருளின் பெயர் ஒருபோதும் செவ்வியல் வழக்கில் இருந்து போடப்பட்டிருக்காது. எந்த ஊருக்கும் அரசாங்கமோ, கவிஞனோ பெயர் சூட்டுவதில்லை. மக்கள் வழக்கில் இருந்தே பெயர் உருவாகி வந்திருக்கும். ஆனால் நம் தொடக்ககால அறிஞர்களுக்கு ஒரு மயக்கம் இருந்தது. எல்லா சொற்களும் தொடக்கத்தில் ‘தூய’ நிலையில் இருந்தன, பின்னர் பேச்சுவாக்கில் திரிந்தன என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது. ஆகவே எல்லா சொல்லுக்கும் தூயவடிவை கண்டடைய முயல்வார்கள். அதுவே மூலம் என்று சொல்லி வைப்பார்கள்.
நாட்டாரியலின்படி அந்தப்பார்வை பிழையானது. அப்படி செவ்வியல் பெயர் திரிந்து உருவானவை அல்ல ஊர்ப்பெயர்களில் பெரும்பாலானவை. அவை மக்கள் வழக்கில், அன்றாட நடைமுறையில், இயல்பாக அமைந்த பெயர்கள்தான். பலசமயம் பின்னர் அவை செவ்வியல்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே பெயர்களை செவ்வியல் உச்சரிப்பு நோக்கி கொண்டுசென்று பொருள்கொள்ளும் பிழையை ஆய்வாளர் செய்ய மாட்டார்கள்.
ஆனால் விதிவிலக்கு உண்டு. அரசனால் உருவாக்கப்பட்ட ஊர்கள், ஆலயம் அமைந்து அதன்பின் உருவான ஊர்கள் செவ்வியல்பெயர்கள் கொண்டிருக்கும். அவற்றுக்கு கவிஞர்கள் போட்ட பெயர் இருக்கும். ஆனால் ஆராய்ந்து சென்றால் அப்படி அந்தப் பெயர் போடப்படுவதற்கு முந்தைய நாட்டார் மரபு சார்ந்த ஒரு பெயரும் அந்த ஊருக்கு இருக்கும்.
திரிவிக்ரமன் தம்பிதிரிவிக்ரமன் தம்பி அளித்த இந்த புரிதல் விஷ்ணுபுரம் நாவல் முழுக்க இருப்பதை வாசகர்கள் உணர்ந்துகொள்ள முடியும். அந்தில் எல்லா ஊர்களுக்கும், மலைகளுக்கும், ஆறுகளுக்கும் ஒரு பழங்குடிப்பெய, ஒரு நாட்டார் பெயர், ஒரு செவ்வியல் தமிழ்ப்பெயர், ஒரு சம்ஸ்கிருதப்பெயர் இருக்கும்.
திரிவிக்ரமன் தம்பியும் சரி, வையாபுரிப் பிள்ளையும் சரி, அவர்களின் வழிவந்த அ.கா.பெருமாளும் சரி, ஒரு சொல்லை பொருள்கொள்ளும்போது கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் அச்சொல் எப்படி உள்ளது என்பதை பார்க்கிறார்கள். முதன்முதலில் அச்சொல் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதில் இருந்தே ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு சொல்லுக்கு ஒரு குறிப்பிட்ட வகையில் பொருள்கொள்வது என்றால் அதற்குமுன் அதேசொல்லை, அல்லது அதைப்போன்ற சொல்லை எப்படி பண்டைய இலக்கியங்களில் பொருள்கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவார்கள்.
இதுதான் அறிவியல் முறைமை. துரதிருஷ்டவசமாக நாம் சயன்ஸ் என்றும் அறிவியல் என்றும் பேசுவதெல்லாம் தொழில்நுட்பம் பற்றி மட்டுமே. அறிவியல் முறைமைகளின்படியே மொழியும்,சமூகமும், பண்பாடும், வரலாறும் ஆராயப்படமுடியும் என நாம் உணர்வதே இல்லை.
*
தேவநேயப் பாவாணரும் சரி, காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியும் சரி பேரறிஞர்கள் என்றே நான் நம்புகிறேன். அவர்களின் ஒட்டுமொத்த பேச்சு, எழுத்தை வைத்து அதைச் சொல்கிறேன். ஆனால் நவீன அறிவியல்முறைமைகள் பற்றிய அறிதல் இன்மையாலும், பலவகை பண்பாட்டு முன்முடிவுகளாலும் அவர்கள் இழைக்கும் பிழைகளும் பல உண்டு.
அறிஞர்கள் சொல்லும் சரிகள் வளர்வதைவிட பிழைகள் பலமடங்கு பெரிதாக வளர்கின்றன. ஏனென்றால் வழிவருவோருக்கு அவைதாம் புரிகின்றன. மேலே வளர்த்துக்கொள்ள எளிதாக உள்ளன. அவர்களைக்கொண்டு நாம் அறிஞர்களை கணக்கிடக்கூடாது.
தேவநேயப் பாவாணரின் மொழியாய்வில் பல எல்லைமீறல்களும் அதன் விளைவான பெரும்பிழைகளும் உண்டு. இன்று அவை நகைப்புக்கிடமானவையாக தெரியலாம். அவர் நவீன மொழியியலையோ நாட்டாரியல் , சமூகவியல் ஆகியவற்றையோ அறியாதவர். அவர் தமிழாசிரியர் மட்டுமே. அவருக்கு வரலாற்றின் எழுத்துமுறை, தொல்லியல் மற்றும் அதன் அறிவியல் சார்ந்த எந்தப்புரிதலும் இல்லை என அவர் தமிழிலக்கியங்களுக்கு காலக்கணிப்பு செய்தமையே சான்று.
அதேபோலத்தான் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியும். அவர் சம்ஸ்கிருதப்பேரரறிஞர். ஆகமங்கள், நிகமங்களில் ஆராய்ச்சி கொண்டவர். ஆனால் நவீனச் சொல்லாய்வுக் களங்களை அறியாதவர். அறிஞர்களின் எல்லைகளை அறிந்திருக்கவேண்டும், அதைவைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது.
தமிழின் மாபெரும் வேர்ச்சொல் தொகுதியை, அச்சொற்க்களஞ்சியத்தின் வளர்ச்சிமுறையை, அதன் பல உள்ளுறைந்த நெறிகளை அடையாளம் காட்டியவர் அவர்தான். அதன் அரசியலில் எனக்கு ஈடுபாடில்லை. ஆனால் அது இலக்கியவாதியாகவும், தத்துவ மாணவனாகவும், பண்பாட்டு ஆய்வாளனாகவும் எனக்கு மிகமிக முக்கியமானது.
ஜெ
மைத்ரி – லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்
அஜிதனை நான் முதலில் பார்த்தது பல வருடங்களுக்கு முன்னர் ஊட்டி காவிய முகாமில், அப்போதுதான் அருண் மொழியை முதலில் பார்த்ததும்.
நானும், அடர் நீலச் சதுரங்கள் கொண்ட வெண் பருத்தி புடவையில் அருண்மொழியும் குருகுலத்தின் உணவுக் கூடத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மண் மேட்டில் அமர்ந்திருந்தோம், உணவுக் கூடத்திலிருந்து நண்பர்களுடன் மேலேறி வந்து கொண்டிருந்த நீங்கள் அருணாவின் முதுதில் ஒரு தட்டு தட்டி ’வா நேரமாச்சு’ என்றபடியே கடந்து சென்றீர்கள். அடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டது. அருணா ’இதை பிடிங்க’ என்று என்னிடம் கைப்பையை கொடுத்துவிட்டு எழுந்து, உங்களை தொடர்ந்து வந்து பலமாக ஒரு அடி முதுகில் வைத்து ’எதுக்கு ஜெயன் அடிச்சே’? என்றார்கள் . நீங்கள் திரும்பி’ ’இல்லடி செஷனுக்கு நேரமாச்சு அதான்’ என்றதும் ’அதுக்கு? அடிப்பியா? வலிக்குது தெரியுமா? என்று சொல்லிக் கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் எங்கிருந்தோ அஜிதன் வந்து நின்றான். (வெண்முரசில் இதுபோலவே பீமனும் இடும்பியும் பேசிக்கொண்டிருக்கையில் கடோத்கஜன் இருவருக்கும் இடையில் வந்து நிற்பான்). பின்னர் விஷ்ணுபுரம் விழாக்களில் சில சமயம் அஜிதனை பார்த்திருக்கிறேன்
அஜிதன் எடுத்த குறும்படத்தை பார்த்தபோது அந்த அஜிதனா என்று பிரமிப்பாக இருந்தது. சென்ற மாதம் ஒரு கூடுகையில் தத்துவ விளக்கங்கள் குறித்து உரையாற்றிய அஜிதன் அதுவரை நான் பார்த்திருந்த., நான் கொஞ்சமாக வேணும் அறிந்திருந்த அஜிதனே இல்லை
அஜிதன் அன்று பேசியவை அனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள் என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது. அவற்றை பேசுகையில் அஜிதனின் உடல்மொழியும் ஆச்சர்ய மூட்டியது மிக மிக சாதாரணமாக, எளிய அன்றாட நிகழ்வுகளை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான் அத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்
இளைஞர்கள் முக்கியமான, தீவிரமான விஷயங்களை பேசிக் கேட்கையில் நான் பிறரைக் காட்டிலும் மிக அதிகம் மகிழ்ச்சியடைவேன் ஏனெனில் ஏழாயிரம் இளைஞர்கள் படிக்கும் கல்லூரியில் பல வருடங்களாக பணியிலிருக்கிறென். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு கொஞ்சம் அதிகப்படியான அறிவுடன் இருப்பவர்கள் என்றுகூட விரல்விட்டு எண்ணிச் சொல்லக் கூடிய அளவில்தான் சிலர் இருக்கிறார்கள் எனவே அஜிதனை போன்ற அரிதினும் அரிய இளைஞர்கள் எனக்களிக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளப்பரியது
ஆனால் மைத்ரியில் கண்ட அஜிதன் முற்றிலும் வேறு. ஹரனின் பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே அஜிதன் என்னும் அரிய படைப்பாளியை கண்டுகொள்ள முடிந்தது. ஹரனின் பயணம் வாசிப்பவர்களின் பயணமும் ஆகிவிடுகிறது.
உடல் சூட்டை இருக்கைக்கு அளித்து அதை வாழ்விடமாக்க வேண்டும் என்னும் வரியில் இது நான் முன்பு அறிந்திருந்த அஜிதனல்ல என்று மீண்டும் எனக்கே சொல்லிக்கொண்டேன்
மிக புதிய நிலப்பரப்பில் நாவல் விரிவதால் அக்கதையுடன் இன்னும் அணுக்கமாகி கதையையும் நிலப்பரப்பையும் சேர்ந்தே ரசிக்கவும் முடிந்தது அது மேலும் சுவாரஸ்யம் ஆக்கிவிடுகிறது வாசிப்பனுபவத்தை
முழுவதும் வாசித்து முடித்த பின்னர் சில நாட்கள்தான் அந்த பயணமும் அக்கதை நிகழ்வதும் என்பதை நம்ப முடியவில்லை.பல நூறு வருடங்களுக்கான பயணம் அது. கதையை முழுக்க சொல்லி இன்னும் வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்பத்தை குலைக்கவிரும்பவில்லை
ஹரனை பசுமைப் பெருக்கும் பெண்மைப்பெருக்கும் தொடர்ந்து சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளரியும், அன்னையும், ரிது பெரியம்மாவும், சிவப்பு ஆடை அணிந்த சிறுமிகளும், மணப்பெண்ணும் மைத்ரியும் இன்னும் பலருமாக.
உணவை, கட்டிடங்களை, மனிதர்களை, நிலப்பரப்பை, வசந்த காலத்தை, காதலை, உறவுகளை, பிரிவை, வலியை என்று ஹரன் வாழ்வை முழுக்க அறிந்துகொள்ளும் அந்த அழகிய அரிய பயணத்தில் அஜிதன் எங்களையும் கைப்பிடித்தும் கச்சரில் ஏற்றியும், பேருந்திலும், ஜீப்பிலும் கூட்டி செல்கிறான்
பைன் மரங்களின் ஊசியிலை சருகுகளும், கோன்களும் நிறைந்த அந்த பாதை வழியே சோனியாவின் கடிவாளக் கயிற்றை பிடித்துகொண்டு ஹரனையும் அவன் மொத்த வாழ்வையும் அத்தனை அழகாக அவள் எடுத்துச் செல்கிறாள். மறக்க முடியாத பயணம் எனக்கும்
அன்னையை நினைத்து கொள்கையில் ’’தூய அன்பென்னும் திரைக்கு அப்பால் தன்னை மறைத்து வைத்திருந்தார்’’ என்னும் வரிகள் கண்ணீர் விடச் செய்தன
குழந்தை போன்ற உடல் கொண்ட தெய்வ வடிவங்களை, காதில் கேட்கும் இசையை, புதிய உணவை,கண்கூசும் பின்னொளியில் நிழலுருவாக தெரியும் கோவிலை சொல்லுகையிலும். இளமைக்காலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் மைத்ரியை மேய்ச்சல் நிலமகள் என்கையிலும் அஜிதன் என்னும் திரைவிலகி நீங்கள் தெரிந்தீர்கள்
மைத்ரி முழுவதுமே எனக்கு தனித்த பிரியத்தை உண்டாக்கி இருக்கும் படைப்ப தான் எனினும் ஹரன் நினைப்பதுபோல் ’’ஒளியாலான, மனதில் என்றும் தங்கிவிடும் தருணமாக’’ எனக்கிருப்பது இருவரும் திரும்பும் வழியில் அந்த உன்னத பின்மதியவேளையில் பொன்மழையின் ஆயிரம் ஊசிகள் புல்வெளியில் பெய்திறங்குவதை பார்த்தபடி குளிரில் இனிப்பை கொறித்துக்கொண்டு நெருங்கி அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் அந்த சித்திரம்தான் கூடவே .ஃபெர்ன்களின் அந்த சுருண்ட இளம் குருத்திலை உணவும், அந்த புக்யால் புல்வெளியும்.
மைத்ரிக்கு ஹரன் கஸ்தூரி மிருகு, மாயப்பொன்மான். அவனுக்கு அவள் வனதேவதை ஜீதுவைப்போல அந்த 3 நாட்கள் ஹரனுக்கும் பலநூறு வருட வாழ்வு. அந்த நினைவுகளுடன் அந்த பெரு வலியுடன் ஹரன் வாழ்ந்துவிடுவான் அவனுக்கான மீதமிருக்கும் வாழ்வை என்றும், மைத்ரி மற்றுமொரு ரிது என்றும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்.
கோட் பைக்குள் ஹரனறியாமல் மைத்ரி வைத்திருந்த வாடியிருந்தும் நிறம் இழக்காமலிருந்த புல்வெளியின் பலவண்ண மலர்கள் மைத்ரி அவனுக்கு மீட்டுக்கொடுத்த கெளரி
இந்த வாசிப்பனுபவம் எனக்கும் ஒரு பெருங்கனவுதான்.எழில் நிறைந்த கனவு,என்றென்றும் மனதில் எஞ்சி நிற்கும் கனவு.
அன்பும் ஆசிகளும் அஜிதனுக்கு
அன்புடன்
லோகமாதேவி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers



