கார்கடல், கடிதம்

அன்புள்ள ஜெ. ,

நலம்தானே? உங்களின் குருபூர்ணிமை வாழ்த்து மிகவும் அணுக்கமாக இருந்தது. ஒரு நல்லாசிரியாராக, நண்பராக, தமையனாக… அக்கறையுடன், பேரன்புடன் சொன்ன சொற்கள் அவை. அந்த வாழ்த்துக்களை பார்த்தபிறகு கார்கடலை கையில் எடுத்தேன். எனக்கு பிடித்தமான பகுதிகளை வாசித்தேன்.

அறத்தையும், உன்னத விழுமியங்களையும் முழு சோதனையிட்டு பார்க்கும் ஆகப்பெரும் தருணம் என்பது மரணம்தான். அதுவும் ‘அவன் நானேதான்‘ என்று உணரும் மைந்தனை இழக்க நேரிடும் தருணம்.  வெண்முரசின் இந்த நாவல் அவ்வாறான தந்தைகளின் அரற்றல்களால் ஆனது. அர்ஜுனன்– அபிமன்யு, பீமன்–கடோத்கசன், ஜயத்ரதன்– பிருஹத்சகாயர், துச்சகன்–த்ருமசேனன், சோமதத்தர்–பூரிச்ரவஸ்… இப்படி  வரிசை நீள்கிறது.

கர்ணனின் அம்புகள் பட்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் அர்ஜுனன் மீண்டு வர ‘உன்னில் சிறப்பான பாகம் ஒன்றை இழக்க நேரிடும். அது உன் மரணத்துக்கும் நிகரானதாகவும் இருக்கலாம்‘(மன்னித்து விடுங்கள் இவை உங்கள் சொற்கள் அல்ல) என்கிறான் கண்ணன். அதற்க்கு இணைந்துதான் அர்ஜுனன் மீள்கிறான். மீண்ட பிறகும் அவனுக்கு தெரிகிறதா அபிமன்யுவை இழக்க போகிறோம் என்று? உண்மையில்– அர்ஜுனன் அபிமன்யுவின் பிறப்பில் இருந்தே அவனது அகால மரணம் பற்றி பயந்தவனாகவே இருக்கிறான்.  யமனின் துலாத்தட்டில் ஜாதவேதனின் மைந்தனின் உயிருக்காக… அர்ஜுனன் நிகர் வைத்தது அபிமன்யுவின் உயிரைத்தானே? அவனில் இருந்து விலகி விலகி சென்றதும் இதனால்தானே?

ஆனால், அவ்விருவரின் உறவை பற்றி நீங்கள் இன்னும் ஆழமாக செல்வீர்கள் என்று நான் எதிர்பாத்தேன். முக்கியமாக இருவரின் நடுவே உத்தரயை வைத்து பார்தால் தன்னளவே அதுவொரு குறு நாவலுக்கு உரிய களம் என்று படுகிறது. நான் சிறுபிராயத்தில் இருந்தே அர்ஜுனனை காதலித்த உத்தரையை… ‘தான் அவளின் நடன குரு என்பதனால், அது தந்தைக்குரிய ஸ்தானம் என்பதனால் ஏற்றுக்கொள்ள கூடாது. அதனால்தான் அபிமன்யுவுக்கு மனம் முடித்தான்‘ என்ற ஒற்றை வரியுடன் மட்டுமே கடந்து சென்றுள்ளேன். அதற்க்கு மேல் அதைப்பற்றி யோசித்தது இல்லை. அதில் ஒரு அற்புதமான மூன்று கோண காதல் கதை உள்ளதை நீர்க்கோலத்தின் கடைசி அத்தியாயங்கள் காட்டுகின்றன. ஆனால் அது கோட்டு சித்திரம் மட்டும்தான். அடுத்தடுத்து, வெண்முரசு நாவல்களில் அதை நீங்கள் விரித்து எடுப்பீர்கள் என்று நினைத்தேன். அவ்வாறு ஆக வில்லை. செந்நாவேங்கையில் இருந்தே அபிமன்யுவில் இருக்கும் அந்த வெறி, முண்டியிட்டு மரணத்தின் முன் நிற்பது… இதற்கு காரணம் எல்லாம் உத்தரை–யுடன் அவனின் சிதைவுற்ற உறவுதான் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள். கார்கடலில் கௌரவர்கள் சிலர் நேரடியாகவே அவனை இதைப்பற்றி இகழ்கிறார்கள்.

இத்தனைக்கும் அர்ஜுனன் நீர்க்கோலத்தில் சொல்லும் அந்த கடைசி வரிகள் காரணம் என்று படுகிறது. அந்த காட்சி இப்படி வரும்… 

‘அவள் உடலின் அசைவின்மை அவனை நிலையழியச் செய்தது. பின்னர் “அவனை நீங்கள் பார்க்கையில் உணர்வீர்கள்” என்றான். மெல்ல நகைத்து “தெய்வங்கள் வனைந்து வனைந்து மேம்படுத்திக்கொள்கின்றன என்பார்கள். அவன் பணிக்குறை தீர்ந்த பழுதற்ற அர்ஜுனன். இளையவன், நானே அஞ்சும் வில்திறலோன்” என்றான். அவள் தலைதூக்கி நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவன் நோக்கை விலக்கிக்கொண்டபின் “அனைத்தும் நன்மைக்கே. நம் குடி பெருகும்… இப்பெருநிலம் நம் கொடிவழியினரால் ஆளப்படும்” என்றான்.’

அவளின் நோக்கிற்கு விழி விளக்கிக்கொள்ளாமல் பார்த்து இருந்தால் அர்ஜுனன் என்ன கண்டிருப்பான். அவனை பொசுக்கும் கோபத்தையா? இல்லை வெறுப்பயா? இல்லை துக்கத்தைய்யா… எதை? எதுவாக இருந்தாலும் அது அபிமன்யுவிற்கு எந்த வகையிலும் நன்மை தருவது அல்ல. மற்ற பெண்களை போல் உத்தரை அர்ஜுனனனை மனதில் இருந்து விலக்கி அவனை நேசிக்க முயற்சி செயதும் இருக்கலாம். ஆனால்… அர்ஜுனனின் இந்த வார்த்தைகள் அதை எப்போதைக்குமே செய்ய முடியாமல் ஆக்கின. ஒரு வேளை அவள் நேசித்தாலும் அது அவரைத்தானே இருக்கும். அதனை அபிமன்யு ஊகித்திருக்க மாட்டானா? அவன் யார்?  தான் அடைய விரும்பும் எந்த பெண்ணும் தான் அன்றி வேறல்லாமல் தன்னை  நேசித்தே தீரவேண்டும் என்று உறுதியோடு இருக்கும் ‘காண்டீப‘ அர்ஜுனனின் மைந்தன் இல்லையா? தன்னில் இன்னொருவனை பார்க்கும் ஒருத்தியை எப்படி சகித்துக்கொள்வான்? அந்த இன்னொருவன் வேறு யாராக இருந்தாலும் வெட்டி வீழ்த்தியிருப்பான். ஆனால், அங்கு இருப்பது தந்தை ஆயிற்றே! இப்படி இருந்தும் இவர்களுக்கு பரீட்சித் பிறக்கிறான். எனில், அவர்கள் இருவரின் சமரச புள்ளி தான் என்ன? வெறும் காமமா? இல்லை ஏதும் அறியா சிறுபிள்ளை தனமா? அப்படி யானால் அபிமன்யுவில் அந்த தற்கொலை தனமான துணிச்சல் எதனால்? ஏன் இந்த உள் மடிப்புகளை நீங்கள் வாசகர்களுக்கு விட்டு விட்டீர்கள்?

இத்தனைக்கும், வெண்முரசுவில் சிக்கலான ஆண்–பெண் உறவை பற்றி எத்தனையோ சிறு பாத்திரங்களில் வழியே பேசியிருப்பீர்கள். நீர்க்கோலத்தில் ‘கஜன்–முக்தன்–சுபாஷினி என்று, திசைதேர் வெள்ளத்தில் அசங்கன்–சௌம்யய் என்று. அபிமன்யுவின்–உத்தரயின் கதையில் அந்த சிக்கல்களை இன்னும் நுணுக்கமாக தொடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

இந்த நாவலில் வரும் 71வது அத்தியாயத்தை அப்படியே வெட்டி… பிரசுரித்தாலும் உலகின் சிறந்த கதைகளில் ஒன்றாக நிக்கும். அதில் அப்படியொரு உள விளையாட்டுக்கு. துச்சகன்– த்ருமசேனனின் மரணத்தை பெரிதும் அஞ்சுகிறான். ஆனால், அதை வெளிக்காட்டுவது கீழ்மையாக எண்ணுகிறான். ஒரு கட்டத்தில் ‘அவன் முடிசூட தேவை இல்லை. இளவரசானகவும் இருக்க அவசியம் இல்லை. எங்கோ எப்படியோ வாழ்ந்தால் போதும்…’ என்று இறைஞ்சுகிறேன். போரில் அவன் முன்னணியில் இருக்கக்கூடாதென்று கேட்கிறான். த்ருமசேனனோ எது அறமோ அதை செயகிறான். அவன் இறந்த பிறகுதான் அரங்கேறுகிறது உச்சக்கட்டம். இதுவரைக்கும் பெரும் தந்தையாக மட்டுமே திகழும் துரியன்… மிக மேம்போக்கான வார்த்தைகளில் துச்சகனின் துக்கத்தில் பங்கு கொள்கிறான். அவன் மட்டுமல்ல எல்லோருமே… அதை ஒரு பெரிய விஷயமாக எண்ணவில்லை. கடோத்கசனின் வீழ்ச்சியின் களிப்பில் இருக்கிறார்கள். படைகளின் அந்த களிப்பு திருமசேனனின் மரண செயதியால் அடங்கிவிடும் என்கிறார்கள். இல்லையென்றால், இதை அவர்கள் முதலிலேயே எதிர்நோக்கி  இருந்தார்களா? தனக்குமட்டுமல்ல கௌரவ படைகளுக்கும் பிடித்த வீரனான அபிமன்யுவை கொன்றவனின் மரணத்திற்கு இந்த முடிவுதான் சரியானது என்று உள்ளுக்குள் உவகை கொள்கிறார்களா… தம்மை அறியாமல்! யுதிஷ்டிரர்–சகதேவனின் சொல்லாடலின்படி  பீஷ்மரின் மரணத்துக்கு… அபிமன்யுவின் உயிர்தான் ஈடு என்றால், அவனின் மரணத்திற்கு ஜயத்ரதன் உட்பட எல்லாரின் உயிர்களும் ஈடா?

அதை சொல்லத்தான்… யுதிஷ்டிரருக்கு வந்து சேரும் ஜயத்ரதனின் மரண செயதியுடன் தொடங்கி, அதை ஒரு முடிச்சாக மாற்றி, முன்னுக்கும்–பின்னுக்குமாக ஒரு அற்புதமான காட்சி வலைபின்னி மற்றவர்களின் மரணத்தை விவரித்து இருப்பீர்கள். அவர்களில் லக்ஷ்மணன், விகர்ணன் மரணங்கள் போக, துரியனுடன் சேர்ந்து என்னையும் மிகவும் பாதித்தது குண்டாசியின் மரணம்தான்.

நம் நாட்டின் மகாபாரத கதை வெளிக்கு  நீங்கள் அளித்த ஒரு அற்புதமான பாத்திரம் அவன்தான்(அவர் என்று சொல்ல தோன்றுகிறது!). மற்ற மொழிகளில் வெண்முரசு சென்றால்… இந்த மண்ணில் இன்னும் பல  நூற்றாண்டுகள் அவன் வாழமுடியும்! எத்தனையோ சோகங்கள், மனசாட்சியை உலுக்கும் எத்தனையோ கேள்விகளுடன் நம் முன் வந்த குண்டாசியின் மரணம்… வெறும் செய்தியாகவே வந்து செல்கிறது. பீமனின் கதைக்கு மண்டை பிளவுபட்டு… குதிரைகளின் உடல்களில் நடுவே கிடக்கிறானாம்!

துரோணரின் மரணத்தை அஸ்வத்தாமனுக்கு அறிவிக்க கிருபர் செல்லும் இடத்தில், மீண்டும் அறவீழ்ச்சியின் மேல் கேள்விகள் எழுகிறது. கிருபர் துரியனை கேட்கும் கேள்விகள்… வாசகனுக்கு உள்ளவையே. கர்ணனுடன் தொடங்கி– அவனிடமே முடிகிறது இந்த நாவல்… அடுத்த நாவலில் அவனின் வீழ்ச்சிக்கு வித்திட்டு. நடுவில் குந்தி–கர்ணனின் சந்திப்பு… மற்றுமொரு ஜெயமோகன் முத்திரை.  குந்தி தனக்கே உரிய நகைப்புடன் கர்ணனின் உயரத்தை பற்றி கேள்விகேட்பதும், அதற்கு கர்ணனின் மறுமொழியும் மற்றுமொரு இணையில்லா காட்சி.  குந்தி பாண்டவர்களில் யாருடன் தான் இப்படி நகையாடுவாள்…? யுதிஷ்டனிடமா… அவன் பாதி ரிஷி, பீமன்… நகைப்புடன் சேர்ந்து கசப்பையும்  கொட்டுவான், அர்ஜுனன்… அவனுடன் எந்த சொல்லாடலுமே இல்லை, நகுலனும் சகதேவனும் சிறுபிள்ளைகள். யாருடன் அப்படி அவள் அப்படி சிரிப்பாள்? கண்ணனிடம் இருக்கலாம். .

மிக்க அன்புடன்,

ராஜு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.