Jeyamohan's Blog, page 744
July 18, 2022
காடையூர் வெள்ளையம்மாள்
தமிழக நாட்டுப்புற தெய்வங்களில் காவல்தெய்வங்கள் உண்டு. குலதெய்வங்கள் உண்டு. குடும்ப தெய்வங்கள் உண்டு. அவற்றை விரிவாக ஆவணப்படுத்தி சீராகத் தொகுத்தால் உருவாகும் வரலாற்றுச் சித்திரம் மிகப்பிரம்மாண்டமானதாக இருக்கும். இதுவரை எழுதப்பட்ட வரலாறு கைக்குழந்தையாக அதன் ஒக்கலில் அமர்ந்திருக்கும்.
இது காடையூர் வெள்ளையம்மாள் கதை. இதைப்போல ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வக்கதைகளை எழுதி அனுப்பலாம்.நூல்களைச் சார்ந்து, ஆதாரங்களுடன்.
காடையூர் வெள்ளையம்மாள்
காடையூர் வெள்ளையம்மாள் – தமிழ் விக்கி
பெண் எழுத்தாளர்கள், கடிதங்கள்
குமுதினி
எம்.எஸ்.கமலா
குமுதினி நான் அறிந்திராத எழுத்தாளர். நல்ல தொகுப்பு. நல்ல கதை அல்லது கட்டுரை போல் சுவாரசியமாக இருந்தது. இவர்கள் எழுத்தை மேலும் படிக்க தூண்டுகிறது.
இதில் கண்ணுக்கு தெரியாத ஒன்று.. பல தரப்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் இணைந்து தொகுத்தது. இவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்.
தமிழ் விக்கியில் பல தொகுப்புகள் அரியனவாகவும், படிப்பதற்கு எளிமையாகவும் உள்ளன. மலேசிய எழுத்தாளர்கள் பற்றியும் ம.நவீன் செய்யும் மறுபதிவில் அறிந்து கொள்கிறேன்.
தமிழில் இயங்கி கொண்டு இருந்த பாடப் பெறாத நாயக நாயகிகளை பற்றி வியப்படைகிறேன். அதிகம் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன். மனதில் ஒரு தளத்தில் எழுதவும் தூண்டுகிறது.
குழுவினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்.
அன்புடன் முரளி
அன்புள்ள ஜெ,
குமிதினி அவர்களின் ஆளுமை பிரமிப்பு அளித்தது , எனக்கு விக்கி பக்கம் என்பது விதி சமைத்தவர்களின் பட்டியல் என்று தோன்றியது !
ராதாகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
குமுதினி, வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்ற சாதனையாளர்கள் மறக்கப்பட்டமைக்கு அவர்கள் பெண் என்பதும் ஒரு காரணம் என நினைக்கிறேன். தமிழ் விக்கி வழியாக தொடர்ச்சியாக அவர்கள் வரலாற்றில் நிறுத்தப்படுகிறார்கள். நன்றி
இரா. அமுதச்செல்வி
அசலாம்பிகைஅம்மணி அம்மாள்அழகியநாயகி அம்மாள்ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள்ஆர்.சூடாமணிஆர்.பொன்னம்மாள்எஸ். விசாலாட்சிஎஸ். அம்புஜம்மாள்கமலா சடகோபன்கமலா பத்மநாபன்கமலா விருத்தாசலம்கிருத்திகாகிருபா சத்தியநாதன்கி.சரஸ்வதி அம்மாள்கி.சாவித்ரி அம்மாள்கி.சு.வி.இலட்சுமி அம்மாள்குகப்பிரியைகுமுதினிகெளரி அம்மாள்சகுந்தலா ராஜன்சரஸ்வதி ராம்நாத்சரோஜா ராமமூர்த்திசெய்யிது ஆசியா உம்மாசெய்யூர் சாரநாயகி அம்மாள்ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன்டி.பி.ராஜலட்சுமிநீலாம்பிகை அம்மையார்மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார்மீனாட்சிசுந்தரம்மாள்வி. விசாலாட்சி அம்மாள்வி.சரஸ்வதி அம்மாள்விசாலாட்சி அம்மாள்வை.மு.கோதைநாயகி அம்மாள்ஹெப்சிபா ஜேசுதாசன்கபிலர் குன்று, கடிதம்
கபிலர் கபிலர் குன்று
அன்புள்ள ஜெ, வணக்கம்.
கபிலர் குன்று கட்டுரை கண்டேன். மகிழ்ச்சி.2007 இல் ஒரு கட்டுரை கபிலர் குன்று தொடர்பாக எழுதியுள்ளேன்.http://muelangovan.blogspot.com/2007/04/blog-post_599.htmlஇதற்கு முன்பாகவே இக்கட்டுரை தினமணி(?) அல்லது தமிழோசை நாளிதழில் வெளிவந்ததாக நினைவு. கட்டுரைப் பிரதி வைத்துள்ளேன்.இக்குறிப்பையும் கட்டுரையில் இணைத்தால் பலரின் பார்வைக்கு இக்குறிப்புகள் செல்லும்.பணிவுடன்மு.இளங்கோவன்புதுச்சேரி மு.இளங்கோவன்July 17, 2022
தேவிபாரதியின் ‘நொய்யல்’ முன்வெளியீடு
எழுத்தாளர் தேவிபாரதியின் ‘நொய்யல்’ நாவலைத் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிட எண்ணம் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட அறுநூறு பக்கங்கள் கொண்ட நாவலாக நொய்யல் உருப்பெறவுள்ளது. இத்தகையதொரு ஆக்கத்தின் அச்சுப்பதிப்பு உரிமை சமகாலத்தில் தன்னறத்திற்கு நேர்ந்தமை மிகுந்த மகிழ்வையும் நிறைவையும் அளித்துள்ளது. இந்நாவலை அதற்குரிய பதிப்புநேர்த்தியில் அச்சுப்படுத்த வாசகத் தோழமைகளின் நல்லுதவி மிகவும் அவசியமாகிறது. ஆகவே, இந்நாவலுக்கான முன்வெளியீட்டுத் திட்டத்தை அறிவிக்கிறோம்
தன்னறம் பதிப்பகம்
முன்வெளியீட்டுத் திட்ட விபரங்கள்:
நொய்யல் (நாவல்)
தேவிபாரதி
புத்தக விலை (கெட்டி அட்டை / 600 பக்கங்கள்) ரூ: 700
முன்வெளியீட்டுத் திட்ட விலை (அஞ்சல் செலவு உட்பட) ரூ: 500
முன்பதிவு செய்ய: https://thannaram.in/product/noyyal-devibharathi/
~
வங்கிக்கணக்கு விபரங்கள்:
THUMBI
Acc.no : 59510200000031
Bank of Baroda
Branch : Moolapalayam – erode
IFSC : BARB0MOOLAP (fifth letter is zero)
Gpay No – 9843870059
(வங்கிக்கணக்கில் நேரடியாக தொகை செலுத்தும் தோழமைகள் தங்களுடைய முழுமுகவரியை அஞ்சல் எண் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிட்டு எங்களுக்கு குறுஞ்செய்தி / வாட்சப் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டுகிறோம். தொடர்புக்கு: 9843870059, thannarame@gmail.com)
முன்பதிந்த தோழமைகளுக்கு எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் கையெழுத்துடன், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புத்தகம் கிடைக்கப்பெறும். தன்னறத்தின் இம்முயற்சிக்குத் துணைநிற்கும் எல்லா மனிதர்களுக்கும் பணிந்த வணக்கங்கள்.
~
கரங்குவிந்த நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி
www.thannaram.in
குறளறம்
அன்புள்ள ஜெ,
நலமா?
தங்களிடம் நெடுநாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்வி ஒன்று.
இதற்கிணையான அல்லது இதைப்போன்ற ஒரு மன ஆழத்திலேயே அந்தக் குறள் உங்கள் படைப்பில் மேற்கோள் காட்டப்பட்டதாக நான் உணர்கிறேன். தங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு முன் “அறத்தாறு இதுவென வேண்டா” என்ற குறளை குறிப்பிட்டிருப்பீர்கள். அந்த குறள் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் குறிப்பிடும் வழமையானஅர்த்தத்தில் பொருள் தராமல் வேறொரு பொருளில் இந்த நாவலில் இயங்குவதாக நினைக்கிறேன். உண்மையில் பரிமேலழகர் அந்தக் குறளை சிவிகை பொறுப்பவனுக்கு சாதகமாக பொருள் கூறுவதாகவும்; தாங்கள் அதன் வேறொரு பக்கமான ஊர்பவனுக்கும் சாதகமாக இருக்க சாத்தியமான மற்றும் யார் ஒருவருக்கும் சாதகமற்ற நடுநிலையான, உண்மையை தேடுகிற கவித்துவ பொருளை வலியுறுத்துவதாகவும் நான் புரிந்து கொண்டுள்ளேன். இது சரியா?
உண்மையில் உங்களது பொருளே (எனது பார்வையில்) அந்தக் குறளை மேலும் அதிக ஆழமாக்குகிறது என நினைக்கிறேன். பொறுப்பவனையும், ஊர்பவனையும் கொண்டு அறத்தாறு இதுவென முடிவு செய்ய நாம் யார்? உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ அவர்கள் முதல் கல்லை எறியுங்கள் என்ற வசனத்தை கிறிஸ்து தலையை கவிழ்ந்தவாறு நிலத்தில் எதையோ கிறுக்கியபடி சொல்வதாக ஒரு திரைப்படத்தில் காட்டுவார்கள். உண்மையில் அந்த வசனம் சொல்லப்பட்டது கூட்டத்திற்கன்று தனக்கே. அவள் பாவப்பட்டவள் என தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு எப்படி வந்தது என்ற குற்றவுணர்வின் வெளிப்பாடு அந்த வசனம் என்பதாக காட்டுவார்கள். தீர்ப்பு என்பதுதான் முதல் கல் அன்றோ.
இளங்கோ கிருஷ்ணன்
***
அன்புள்ள இளங்கோ கிருஷ்ணன்,
தமிழின் கவனிக்கப்படும் கவிஞர்களில் ஒருவர் நீங்கள். உங்கள் கவிதைகள் நீங்கள் உத்தேசிக்கப்படாத தளத்தில் வாசிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? அதை உங்கள் கவிதையின் வெற்றி என்றே சொல்வீர்கள் இல்லையா? குறளாசிரியனும் கவிஞனே.
பன்முகப்பொருளை அளிக்கும்போதுதான் கவிதை கவிதையாகிறது. முடிவிலாத வாசிப்புச்சாத்தியத்தை அளிப்பதே நல்ல கவிதை. முடிவிலாத வாசிப்புச்சாத்தியத்தைக் கண்டுகொள்வதே நல்ல வாசிப்பு.
நல்ல கவிதை என்பது சொல்லமைவினால் மட்டுமல்ல சொல் மயக்கத்தால் கூட மேலும் பொருள் அளிக்க வல்லது. வில்லியம் எம்சன் என்னும் திறனாய்வாளர் சென்ற நூற்றாண்டில் பொருள்குழப்பம் கவிதைக்கு அளிக்கும் புதிய வாசிப்புச் சாத்தியக்கூறுகளைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்
கவிதையை ஒரு குறிப்பிட்ட கருத்துத்தளத்தில் நின்றபடி ஒரு குறிப்பிட்ட பொருளை வாசகனுக்கு அளிக்கும்பொருட்டு நிகழ்த்தப்பட்ட முயற்சி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அது மொழியின் புறவயமான சமூகக் கட்டுமானமும் மொழி என்னும் அகவயமான அந்தரங்க நிகழ்வும் ஒரு தருணத்தில் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு. மொழியின் சாத்தியங்கள் வழியாக ஒரு அகம் தன்னை முன்வைக்கும் முயற்சி. மொழியின் சாத்தியங்கள் எப்படி முடிவிலி வரை செல்லுமோ அப்படியே அகத்தின் சாத்தியங்களும் செல்லக்கூடும்.
ஆனால் தத்துவ, நீதி நூல்களின் இயல்பு அது அல்ல. அவை திட்டவட்டமான செய்தி ஒன்றை சொல்லக்கூடியவை. பொருள் மயக்கம் அவற்றில் கருத்துக்குழப்பமாகவே அர்த்தப்படும். அவை கூறும் நீதியை அவை முன்வைக்கப்பட்ட காலத்தை கருத்தில் கொண்டு அச்சொற்கள் வழியாக கறாராக வாசித்தெடுப்பதை மட்டுமே ஒரு வாசகன் செய்ய வேண்டும்.
குறளை ஒரு கவிதை நூலாக எடுத்துக்கொள்வதா இல்லை தத்துவ – நீதி நூலாக எடுத்துக்கொள்வதா என்னும் குழப்பம் நெடுங்காலமாகவே தமிழில் இருந்து வந்துள்ளது. பொதுவாக அதை ஒரு நீதி நூலாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அதே சமயம் அதில் உள்ள கவித்துவத்தை ஓர் உபரியான கொடையாக எண்ணுகிறார்கள். ஆகவே குறள் சொல்வதென்ன என்ற கேள்வியே எப்போதும் முக்கியமானதாகப் படுகிறது.
ஒருவகையில் இது சரிதான். ஆனால் இதையே வறட்சியாகச் செய்து, ‘அமுதினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறு கை அளாவிய கூழ்’ என்ற குறளையெல்லாம் கறாரான நீதியாகக் கொள்ளும் தமிழ்ப்பண்டிதர்கள் உருவாகி குறள் மேல் உட்கார்ந்துகொண்டு குறளின் எல்லா கவித்துவ சாத்தியங்களையும் உலரச்செய்துவிட்டார்கள். இன்று தமிழில் குறளின் அரிய கவித்துவத்தை அடையாளம் காட்டும் ஒரு உரை கூட கிடைப்பதில்லை. குறளை இந்தியன் பீனல் கோடு போல விளக்கும் உரைகள் ஏராளமாகக் குவிந்துகிடக்கின்றன.
கூடவே நம் பள்ளி ஆசிரியர்கள். குறள் மனப்பாடம், குறள் ஒப்புவித்தல், குறள் அரும்பதவுரை, குறள் பொழிப்புரை, மூன்று பக்கத்துக்கு மிகாமல் நின்று எழுதுதல் என குறளை ஒரு வகை உலோகக் கட்டுமானமாக ஆக்கி பிரித்து மாட்டி அதற்கு கோனார் ‘பயனர் கையேடு’களும் போட்டு வருகிறார்கள். ஆகவே இன்று குறளின் கவித்துவத்தைப் பற்றிப் பேசினாலே ”எந்தக் குறளைச் சொல்றீங்க? திருவள்ளுவர் எழுதி இந்த பஸ்ஸிலே எல்லாம் எழுதி போட்டிருப்பாங்களே, அதானே?” என்று கேட்கும் அளவுக்கு ஆகியிருக்கிறது.
குறளை எப்போதுமே கவிதையாக மட்டுமே காண்பதை நான் ஜெயகாந்தனிடம் மட்டுமே கண்டிருக்கிறேன். அவரைப்பொறுத்தவரை குறள் வாசிப்பு என்பது குறளில் இருந்து சிறகடித்துக் கிளம்பிச்செல்வதுதான். அவரது உரையாடல்களில் குறள் பலப்பல ஆழமான அர்த்தங்கள் கொண்டு விரிவதைக் கேட்டிருக்கிறேன்.
குறளை நீதி நூல் என்றே எடுத்துக்கொண்டு அந்த நீதியை அது கவிதையாக முன்வைக்கிறது என்று புரிந்துகொள்வதே குறளை உள்வாங்குவதற்கான ஆகச்சிறந்த வழிமுறை என்பது என்னுடைய எண்ணம். அதாவது குறள் சொல்வது ஒரு மாபெரும் மானுட நீதியை என்று எடுத்துக்கொண்டு அந்த நீதியின் பல்வேறு சாத்தியங்களுக்குள் செல்வதாக அதன் வரிகளை வாசிப்பது.
”தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்ற வரியை கற்கும்தோறும் அறிவு,தோண்டும்தோறும் ஊற்று என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் வள்ளுவர் மணற்கேணி என்கிறார். தோண்டுவதை நிறுத்தினால் விரைவிலேயே தூர்ந்து இல்லாமலாகி விடும் ஊற்று அது என எண்ணும்போது மேலதிகப் பொருள் சாத்தியமாகிறது. என்னுடைய கட்டுரைகளில் குறள் மீதான இந்த அணுகுமுறை இருப்பதைக் கவனிக்கலாம்.
குறள் மீதான தமிழ்ச்சமூகத்தின் வாசிப்பு மூன்று பொதுக்காலகட்டங்களாகப் பிரிக்கத்தக்கது. அது ஒரு சமண- ஆசீவக நூல் என்றே நான் எண்ணுகிறேன். சமணர்களின் கல்விச்சேவை நீதிநூல்களையும் இலக்கண நூல்களையும் உருவாக்கியது. அவ்வாறு உருவான நூல்களில் முதன்மையானது குறள். சமணத்தை மீறி அது ஒரு பொது நீதி நூலாக தனியிடம் பெற்றது. அக்காலத்தில் குறள் வாசிக்கப்பட்டது சமணக் கோணத்தில்.
பின்னர் சோழர்காலகட்டத்தில், பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர், அது உரையாசிரியர்களால் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. பரிமேலழகர், மணக்குடவர் உரைகள் குறளை மிகவிரிவான ஒரு தத்துவ தளத்தில் பொருத்தி விளக்கின. ஆனால் இக்காலகட்டம் சைவ, வைணவப் பெருமதங்களின் காலகட்டம். ஆகவே குறள் அந்தப் பெருமதங்களால் முன்வைக்கப்பட்ட நீதித்தத்துவங்களின் ஒளியில் விளக்கப்பட்டது.
பின்னர் குறள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு வடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அதற்கு புதியவகையான வாசிப்புகள் உருவாயின. இவ்வாசிப்பை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அன்று மேலோங்கியிருந்த சைவ நோக்கில் குறளை ஒரு சைவநூலாகச் சுட்டும் முயற்சி. வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் போன்றவர்கள் இதன் தொடக்கப்புள்ளிகள். ஜமீந்தாரிணி உரை [திருக்குறள் தீபாலங்காரம்] கா.சு.பிள்ளை திருக்குறளும் சைவமும் போல ஏராளமான சைவ விளக்க நூல்கள் அக்காலத்தில் வெளிவந்துள்ளன.
தமிழ்நாட்டில் சமணர்களுக்கும் சைவத்துக்கும் இடையேயான உறவு சிக்கலானது. சமணத்தை மறுத்து வென்று உருவானது தமிழ்நாட்டின் இன்றைய சைவமும் அதன் அடிப்படைத் தத்துவமான சைவ சித்தாந்தமும். இக்காரணத்தால் அவற்றில் ஒரு ‘போரிடும்தன்மை’ இன்றும்கூட இருந்துகொண்டே இருப்பதைக் காணலாம். ஆனால் தமிழ்நாட்டுச் சைவர்களில் பெரும்பாலானவர்கள் சமணர்களாக இருந்து மாறியவர்கள். ஆகவே சமணர்களின் ஆசாரங்கள் -சைவ உணவு சிறந்த உதாரணம் – அவர்களிடம் நீடித்தன. மனநிலைகள், சடங்குகள், தத்துவங்கள் ஆகியவையும் நீடிக்கின்றன.
ஆகவே சமணநூலான குறள் அவர்களுக்கு மிக உவப்பானதாகவும், சைவநூலாக விளக்கத்தக்கதாகவும் இருந்தது. அவர்களின் விளக்கங்கள் வழியாகவே நவீன காலகட்டத்தில் குறள் மறுபிறப்பு எடுத்தது. திருவள்ளுவரின் இன்றைய தோற்றம் என்பது அவர் சமணராக அடையாளப்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் சைவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. திருவள்ளுவ நாயனார் புராணம் போன்ற பல கதைகளும் திருவள்ளுவர் குறித்து உருவாக்கப்பட்டன.
இன்னொரு நவீன வாசிப்பு இந்தியாவில் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்புகள் உருவானபோது அதற்குரிய நூலாக குறள் அடையாளப்படுத்தப்பட்டதுதான். அதற்கான எல்லா அடிப்படைகளும் கொண்ட நூல் என்றே குறளைச் சொல்லமுடியும். குறள் சமண தெய்வங்களைச் சொல்லும் வரிகள் பொதுவான கடவுள் உருவகத்துக்கு உரியனவாகவே உள்ளன. அதன் நீதி என்பது பெரும்பாலும் காலம் கடந்த விவேகத்தைச் சார்ந்ததாகவே உள்ளது.
சைவ அறிஞர்களின் உரையில் இருந்து மேலெழுந்து உருவாக்கப்பட்ட உரைதான் இந்த நவீன ஜனநாயக உரை. கச்சிதமான உதாரணம், மு.வரதராஜனின் பெரும்புகழ்பெற்ற உரைதான். கா.சு.பிள்ளை உரையில் இருந்து மு.வ உரை வரையிலான இடைவெளியில் குறைந்தது 100 உரைகளையாவது காணமுடியும். இந்த பண்பாட்டுப் பரிணாமம் விரிவாக ஆராயத்தக்க ஒன்றாகும்.
இந்த வாசிப்புகளில் விடுபட்ட அல்லது சேர்க்கப்படவேண்டிய இரு கூறுகள் என நான் நினைப்பவை இரண்டு. ஒன்று குறள் மீதான சமண நோக்கு தமிழில் அரிதாகவே உள்ளது. சமணசூத்திரங்களுக்கும் பிற முக்கியமான சமண நெறிநூல்களுக்கும் இடையேயான ஆழமான ஒப்பீட்டு வாசிப்பு இன்றுவரை நிகழவில்லை. அது குறளின் தமிழ்த்தனித்தன்மையை இல்லாமலாக்கிவிடும் என தமிழாய்வாளர் அஞ்சுகிறார்கள் என நினைக்கிறேன். அந்த ஒப்பீட்டு ஆய்வு குறள் மீதான பல புதிய திறப்புகளைச் சாத்தியமாக்கும்.
குறளை நவீன கவிதை வாசிப்பின் வழிமுறைகளைக் கொண்டு வாசிப்பதென்பது அதை கிட்டத்தட்ட புதிதாகக் கண்டுபிடிப்பதுதான். அதன் சாத்தியங்களை எல்லாம் திறந்து விடுவதுதான். அதன் மூலம் நாம் குறளை முழுமையாக வாசிக்க ஆரம்பிக்கிறோம் என நினைக்கிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட குறள் மீதான என் வாசிப்பு என்பது இந்த இரண்டு சாத்தியங்களையும் ஒட்டியது. அக்குறள் அதிகமாகப் புகழ்பெற்ற ஒன்றல்ல. ஏனென்றால் விதிவலிமையைச் சொல்லும் எளிய குறளாக மட்டுமே அது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அது மட்டும்தானா?
தமிழில் குறள் மீதான உரைகளில் வடமொழி அறிவு இன்மையின் பெரும் பிழைகளும், இந்தியஞானமரபில் பழக்கம் இல்லாததனால் இந்திய ஞானமரபின் விவாதங்களில் வைத்து குறளைப் பார்க்க முடியாமையின் விடுபடல்களும் நிறைந்திருக்கின்றன.
பரிமேலழகர் ”அறத்து ஆறு இது எனல் வேண்டா. அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா, சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை- சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானோடு காட்சியளவை தன்னானே உணரப்படும்” என்று சொல்கிறார்.
இதில் இருந்து எளிமையான ஓர் உரையை பிற்காலத்தவர் தருவித்துக்கொண்டார்கள். அதாவது ‘அறத்தின் வழி இது என்பதற்கு சான்றாக பல்லக்கு தூக்குபவனையும் அதில் ஏறிச் செல்பவனையும் எடுத்துக்கொண்டாலே போதுமே’ என்பதே அக்குறளின் பொருள் என்று கொண்டார்கள். பரிமேலழகர் சொல்லுவதாக இவர்கள் எடுத்துக்கொண்ட அந்த உரையையே நாம் இன்றுவரை எல்லா நூல்களிலும் காண்கிறோம். கணிசமான குறள் உரைகள் ஒரு அடுப்பில் தீ வாங்கி ஊரே சமைப்பது போன்றவை.
அக்காலத்து தத்துவ விவாதத்தின் தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய குறள் இது. அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா என்கிறார் பரிமேலழகர். ஆகம அளவை என்றால் என்ன?
அளவைவாதம் என்பது மீமாம்சத்துக்கு தமிழில் சுட்டப்பட்ட பெயர். இதை நாம் மணிமேகலையில் காணலாம். இதில் ஆகம அளவைவாதம் என்பது பூர்வ மீமாம்சை. வேதங்களை தன் முழுமுதல் அடிப்படையாகக் கொண்ட ‘வேதமுதன்மைவாதம்’ அல்லது ‘வேள்விமையவாதம்’ என்று பூர்வ மீமாம்சையைச் சொல்லலாம்.
பூர்வ மீமாம்சையின் அடிப்படையான கருத்துக்களில் ஒன்று ‘அபூர்வம்’ என்பது. ஒரு செயலைச் செய்தால் அதற்கான பயன் உண்டு என்பதும் அந்தப்பயன் செய்தவனும் செய்யப்பட்டவனும் இல்லாமலான நிலையில் கூட இருந்துகொண்டிருக்கும் என்றும் மீமாம்சகர் சொன்னார்கள். அவ்வாறு திகழும் செயல்பயனே அபூர்வம். இது வேள்விக்கருமங்களை விளக்கும் கருதுகோள். வேள்விகளின் மூலம் கிடைக்கும் ‘பயன்’ அல்லது ‘லாபம்’ எங்கோ ஓர் இடத்தில் இருந்து உரிய நேரத்தில் வந்து சேரும் என்று மீமாம்சம் சொன்னது.
அபூர்வம் என்னும் கருத்து பிறவிவினை வாதத்துக்குச் சமானமானதாக சிலரால் இப்போது கொள்ளப்படுகிறது. அது பிழை. வேள்விசெய்தால் அதன் பயன் ஒருவனை அடுத்த பிறவியானாலும் வந்து சேரும் என்று பூர்வமீமாம்சம் தன் அபூர்வம் கோட்பாட்டில் சொல்கிறது என்பது உண்மை. ஆனால் அது பிறவிவினைவாதம் அல்ல.
பிறவிவினைவாதம் என்பது ஒருவனின் எல்லா நன்மை தீமைகளும் அவன் முற்பிறவியில் செய்தவற்றின் விளைவுகளே என்கிறது. அபூர்வவாதம் ஒருவன் எந்தப்பிறவி எடுத்தாலும் வேள்விகள் செய்தால் அப்பிறவியிலேயே எல்லா மேன்மைகளையும் அடையலாம் என்கிறது. அசுரர்களும் ராட்சதர்களும்கூட வேள்விசெய்து பயன்பெற்றார்கள். அது சிலருக்கு வேள்விகளை தடைசெய்ததுகூட அவ்வேள்விகளை அவர்கள் செய்தால் தங்களை விட மேலே சென்று விடுவார்கள் என்பதனால்தான்.
பூர்வமீமாம்சத்தின் அபூர்வம் அல்லது வேள்விப்பயன் வாதத்துக்கு எதிராக வள்ளுவர் பிறவி வினை வாதத்தை முன்வைக்கிறார் என்றுதான் தன் உரையில் பரிமேலழகர் சொல்கிறார். அளவைவாத அடிப்படையில் பார்க்காதே, முன்னைவினையின் பயன் என்ன என்பதை சிவிகை சுமப்பவனையும் ஏறுபவனையும் கண்ணால் பார்த்தாலே தெரிகிறதே என்பதுதான் குறளின் பொருள் என்கிறார் அவர். இந்த விவாதம் சமணத்துக்கும் சைவத்துக்கும் நடுவே அக்காலத்தில் தீவிரமாக நடந்த ஒன்று.
வள்ளுவர் அப்படிச் சொல்கிறாரா , அது உண்மையா என்பது வேறு விஷயம். ஆனால் நம் பிற்கால உரைக்காரர்களுக்கு அளவைவாதம் என்றால் என்னவென்றே தெரியாததன் விளைவே அவர்களின் எளிமையான புரிதல். இன்று வரை ஒரு தட்டையான வரியை இக்குறளின் பொருள் என்று கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
உரைகளுக்குள் போகாமல் ஒரு நவீன வாசகன் வாசிப்பானாகில் அவனுக்குக் கிடைப்பவை இரண்டு விஷயங்கள். ஒன்று இவ்வரிகளின் சொற்கள். இப்பிரதி. இரண்டு திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக் கூடும் என்ற ஊகம். இவ்விரண்டின் அடிப்படையில் அவன் தன் வாசிப்பை நிகழ்த்தலாம். நான் செய்திருப்பது அதைத்தான்.
சமணர்களுக்கு பிறவிப்பயன் என்பது முக்கியமான கோட்பாடு. இப்பிறவியில் அடையும் நன்மைகள் எல்லாம் முற்பிறவிப்பயனே என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் சமணம் தமிழகத்தில் ஒரு பெரிய விடுவிக்கும் சக்தியாக வந்த ஒன்று. அதை சிரமண மதம் என்று சொன்னார்கள். உழைப்பவர்களின் மதம். அந்நிலையில் பல்லக்கு சுமப்பதை மாற்றமுடியாத விதி என்றா அது சொல்லியிருக்கும்?
அவ்வரிகளைப் பார்க்கும்போது ‘அறத்தின் வழி இது என்று நினைத்தல் வேண்டாம்’ என்கிறார் வள்ளுவர். யாருடன்? ‘இதுவே அறத்தின் மாற்றமில்லா வழி’ என்று நம்புகிறவர்களிடம் தானே. அப்படியானால் மாற்றம் உண்டு என்பதைத்தானே அவர் சொல்கிறார்? அவ்வரிகள் அளிக்கும் பொருள் அதுதானே? சிவிகை பொறுப்பவனுக்கும் ஊர்பவனுக்கும் நடுவே உள்ள வழியே அறத்தின் வழி என்று எண்ணவேண்டாம் என்பதே அக்குறள் என்பதுதான் கவிதையின் தரிசனம் என்பதே என் வாசிப்பு.
ஜெ
***
மறுபிரசுரம், முதற்பிரசுரம் ஜூன் 17, 2009
==========================
இந்திய சிந்தனை மரபில் குறள் 5இந்திய சிந்தனை மரபில் குறள் 4இந்திய சிந்தனை மரபில் குறள் 3இந்திய சிந்தனை மரபில் குறள் 2இந்திய சிந்தனை மரபில் குறள்.1யுவன் சந்திப்பு – கி.ச.திலீபன்
அன்புள்ள ஜெ,
எழுத்தாளரும் உங்களின் உற்ற நண்பருமான யுவன் சந்திரசேகரைச் சந்திக்கச் சென்றேன். விகடன் இணையதளத்தில் நான் எழுதிய பேக் பேக் எனும் பயணத்தொடர் நடுகல் பதிப்பகத்தின் மூலம் நூலாக வரவிருக்கிறது. அந்நூலுக்கு அவரிடம் முன்னுரை கேட்டிருந்ததை அடுத்து அதன் ப்ரிண்ட் அவுட்டைக் கொடுப்பதற்காக நண்பர் தமிழ்செல்வனோடு சென்றேன். எழுத்துக்கப்பாற்பட்ட அவரது ஆளுமையை நான் உங்கள் கட்டுரைகள் வழியாக அறிந்திருக்கிறேன். அங்கத உணர்வு மிகுந்த நபர் அவர் என்கிற சித்திரம் உங்கள் கட்டுரைகள் வழியாக எனக்குள் உருவாகியிருந்தது. அதனை நேரில் கண்டுணர்ந்த தருணமாக இச்சந்திப்பு இருந்தது.
அவரைச் சந்தித்ததும் நான் தமிழ்ச்செல்வனை அறிமுகப்படுத்தினேன்…
“இவர் தமிழ்செல்வன், உங்க வாசகர்… உங்க நண்பர் ஜெமோவின் தீவிர பக்தர்” என்றேன்.
“கோயில் கட்டியாச்சா”
“சீக்கிரம் கட்டிருவார்”
இப்படித்தான் உரையாடல் தொடங்கியது.
பேக் பேக் பயணத்தொடர் ஒவ்வொரு சாப்டராக எழுதியது. அதனை மொத்தமாக வாசிக்கையில் எப்படியிருக்கும் என்பது பற்றிய தெளிவு என்னிடமே இல்லை. ஒரே தொகுப்பாக அதனை வாசித்து திருத்தம் செய்ய வேண்டியிருக்கலாம். அதுவும் சிறிய அளவிலான திருத்தங்கள்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவர் இன்னும் 10 நாட்களில் மும்பைக்குச் செல்வதாகச் சொன்னதையடுத்து விகடனில் வெளியான வெர்சனையே ப்ரிண்ட் அவுட் எடுத்துச் சென்றிருந்தேன். சிறிய அளவில் திருத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை முன்னறிவிப்பாகச் சொல்லி விட வேண்டும் என்கிற யத்தனிப்புடனே இருந்தேன்.
“பிப்ரவரியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஓர் பயணம் போயிருந்தேன். முதல் முறையா 21 நாட்கள் போன பயணம் அது. அந்த அனுபவங்களை விகடன்ல தொடரா எழுதுறதுக்கான வாய்ப்பு கிடைச்சதும் எழுதினதுதான் இந்த புத்தகம். இதுல வரலாற்று விசாரணையோ, மானுடவியல் ஆய்வோவெல்லாம் இல்லை” என்றேன்.
“அப்படின்னா இதன் மூலமா நீங்க ஜெயமோகனைக் குறிப்பிடுறீங்கன்னு எடுத்துக்கலாமா” என்றார்.
“என் கான்டேக்ட் லிஸ்ட்ல இருக்கிற பலருக்கும் இதோட சாப்டர்ஸை அனுப்பினேன். அவங்கள்ல பலர் சிற்றிதழ் வட்டத்தோட தொடர்புடையவங்க. அவங்க கருத்தும் நல்லபடியாத்தான் வந்தது. ஆனா, விகடன் வெப்சைட்ல யார்னே தெரியாத பொது வாசகர்களுடைய கருத்துகள் இன்னும் ஊக்கம் கொடுத்துச்சு.” என்றேன்.
“இப்ப நீங்க என்னை சொல்றீங்கன்னு எடுத்துக்கலாமா… இலக்கிய வாசகனாவெல்லாம் இல்லாம பொது வாசகனா படிச்சிப்பாருன்னு சொல்ல வர்றீங்க அதானே”
“அப்படியில்லை சார்… ஒரு தகவலுக்காக சொன்னேன்”
“ஏங்க எனக்குப் படிக்கிற சுதந்திரம் கூடக் கிடையாதா? இதை இப்படித்தான் வாசிக்கணும்னு டிஸ்க்ளைமர் போட்டுட்டா நான் அதுபடிதான் வாசிக்கணுமா? என்னோட அடுத்த புத்தகத்தோட பின்னுரையில நீங்க இதுவரை வாசிச்சுட்டு வந்ததில்லை இந்த புத்தகம்… அதை இப்படித்தான் வாசிக்கணும்னு ஒரு குறிப்பு எழுதிடலாம்னு இருக்கேன்.” என்றார்.
ப்ரிண்ட் அவுட்டின் சில பக்கங்களை புரட்டிய பிறகு…
“RAC-னு போட்டிருக்கீங்க அதைத் தமிழ்ப்படுத்த முடியாது… தமிழ்ப்படுத்தினாலும் நல்லாருக்காது. ஆனால் கூடாரம்னு ஒரு சொல் இருக்கும்போது ஏன் டென்ட்–ங்குற வார்த்தையைப் பயன்படுத்துறீங்க?”
“வெகுஜன ஊடகத்துல வரும்போது அவங்களுக்குப் புரியுற மாதிரியான வார்த்தையா இருக்குமேன்னு போட்டிருப்பேன்”
“ஏன் கூடாரம்ங்குற வார்த்தை புரியாதா… இவங்களுக்கு இது போதும்னு நீங்க நினைக்குற மாதிரி இருக்கு”
“இல்லை சார் உள்ள கூடாரம்னு சில இடங்கள்ல குறிப்பிட்டிருக்கேன்…”
“இதை ஒரு குற்றச்சாட்டாவெல்லாம் நான் சொல்லவேயில்லை… ஆனா நீங்க ஏன் Defend பண்ணிக்கிட்டே இருக்கீங்க… நானும் உங்களை மாதிரி இருந்திருக்கேன்… இப்பவெல்லாம் 19 வயசுலயே முதல் கவிதைத்தொகுப்பு போட்டுடுறாங்க… என் முதல் தொகுப்பு வரும்போது எனக்கு 35 வயசு… தேவதச்சன்கிட்ட ரொம்ப படபடப்பா இருக்குன்னு சொன்னேன். அவர் இந்த வருசம் தமிழ்ல எத்தனை புத்தகம் வெளியாகும்னு நினைக்குற?ன்னு கேட்டார். ஆயிரம் புத்தகம் நிச்சயம் வெளியாகும்னேன். அதுல கவிதைத் தொகுப்பு எத்தனை இருக்கும்னார். ஒரு நூறு இருக்கலாம்னேன். அந்த நூறு தொகுப்புல உன்னோடதும் ஒன்னு… அவ்ளோதான் அதுக்கு மேல ஒன்னுமே இல்லைன்னார். ஆக, நல்ல பிரதியே தன்னை நிறுவிக்கும். நாம அதுக்காக Defent பண்ணத்தேவையில்லை. என்னோட குள்ளச்சித்திரன் சரித்திரம் நாவல் வந்தப்போ பக்கம் பக்கமா கடுமையா விமர்சனம் பண்ண கட்டுரைகள் வந்துச்சு. எதுக்குமே நான் வாய் திறக்கலை. ஜெயமோகன் பார்க்காத வசவா… அந்த வசவுக்கெல்லாம் அவன் பதில் சொல்லிட்டிருந்தா வேறு எதையுமே செய்ய முடியாது. இன்னைக்கு தமிழ் இலக்கியத்தில் அவனை நீங்க எந்தத் தளத்திலயும் தவிர்க்கவே முடியாத ஸ்கேலா இருக்கான்னா எதுக்கும் அவன் Defend பண்ணாம அவனோட நோக்குல போய்க்கிட்டிருக்குறதுதான் காரணம். அதனால சொல்றேன் எதுக்கும் Defend பண்ணாதீங்க… உங்க படைப்பு மீதான விமர்சனம் எல்லாத்தையும் ஏத்திக்கிட்டு பரிசீலனை பண்ணுங்க… நல்லா இருக்குன்னு பாராட்டினாக்கூட அந்தப் பாராட்டு நியாயமானதான்னு யோசிங்க.. அப்படித்தான் நீங்க உருவாக முடியும்” என்றார்.
சந்தித்த அரை மணி நேரத்துக்குள்ளாகவே என்னைப்பற்றிய துல்லியமான அவதானிப்பை முன் வைத்தார். இயல்பான உரையாடலின் போக்கிலேயே வெகு நுட்பமான அவதானிப்பை வெளிப்படுத்தும் ஆளுமை கண்டு வியந்தேன். நண்பர் தமிழ்செல்வன் எதுவுமே பேசாமல் உட்கார்ந்திருந்தார்.
“நீங்க ஏன் எதுவும் பேச மாட்றீங்க”
“சார் இவரு பயங்கரமா படிப்பாரு… ஆனா எழுத்தாளர்களை நெருங்க மாட்டாரு… தினசரி ஜெமோ வெப்சைட்லதான் கண் விழிப்பார்… ஆனா இதுவரைக்கும் அவரை சந்திக்கவே இல்லை”
“எழுத்தாளர்களை சந்திக்குறதுக்கும் ஒரு தைரியம் வேணும்தான்”
இப்படித்தான் அந்த உரையாடல் நிறைந்திருந்தது. உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசிடாதடா என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.
உரையாடலின் போக்கில் இளையராஜா குறித்துப் பேசினோம்.
“எங்கிட்ட இளையாராஜாவா? விஸ்வநாதன் ராமமூர்த்தியா?-னு கேட்டா நான் விஸ்வநாதன் – ராமமூர்த்தின்னுதான் சொல்வேன். அதுவே விஸ்வநாதன் ராமம்மூர்த்தியா? ராமநாதனா?ன்னு கேட்டா ராமநாதன்னு சொல்வேன். இது என் தனிப்பட்ட ரசனை. அதைத்தாண்டி இளையராஜாவைப் பத்தி சொல்லனும்னா அவர் ஓர் மகான். அந்த உழைப்பு மனித செயல்களுக்கு அப்பாற்பட்டது. ரெக்கார்டிங் தொடங்குறதுக்கு முன்னாடியே நோட்ஸ் எழுதிக்கிட்டே இருப்பாராம். அதாவது அந்த இசையை அவர் கற்பனையிலேயே கேட்கிறது எவ்வளவு பெரிய தரிசனம். இந்தக் வீட்டைக் கட்டின என்ஞ்சினியர் அஸ்திவாரம் போடும்போதே முழு வீட்டையும் பார்க்குறது மாதிரி.”
“மோடியைப் புகழ்ந்து பேசிட்டார்ங்குறதுக்காக ஃபேஸ்புக்ல உட்கார்ந்துக்கிட்டு எதையும் பண்ணாதவன்லாம் அவரை வசைபாடுறத என்னால ஏத்துக்க முடியலை. அறிவுலகச் செயல்பாட்டுல ஒரு புல்லைக்கூட பிடுங்காதவங்கதான் இளையராஜாவை இப்படிப் பேசிட்டுட் திரியுறாங்க” என்று உணர்ச்சி வயத்தின் உச்சத்தில் சொன்னேன்.
“நீங்க சொல்ற அறிவுலகச் செயல்பாட்டுல பல ஆண்டு காலமா இருக்கவங்களும் இதைச் செய்யுறாங்களே திலீபன்” என்றார்.
எங்களுக்கு இரண்டாவது காபி வந்தது. அவரது மனைவி உரையாடலுக்கு இடையூறில்லாமல் கொடுத்துச் சென்றார்.
“நான் அறிமுகப்படுத்த மறந்துட்டேன்… இவங்கதான் என்னோட மனைவி. எனக்கு ஒரு மனைவி மட்டும்தான்”
நாங்க அதுக்குக்கூட வழியில்லாம இருக்கோம் என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
ஒன்றரை மணிநேர உரையாடலுக்குப் பின் நேரத்தின் நெருக்குதலால் கிளம்பினோம். இது போதாது இன்னும் நிறைய பேச வேண்டும். புத்தகம் அச்சான பிறகு ஞாயிற்றுக்கிழமை நாளாகப் பார்த்து அதைக் கொடுப்பதற்காக வருவோம். அப்போது கூடுதல் நேரம் கிடைக்கும் என தமிழிடம் சொன்னேன்.
உங்களை நேரில் சந்திக்காதவர்கள் உங்களது எழுத்து மற்றும் உங்களது உரைகளை மட்டுமே கேட்டவர்களுக்கு நீங்கள் எத்தனை குசும்பு மிக்கவர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “ஃபேஸ்புக் புரட்சியாளர்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை சாம்பார்னு நினைச்சுட்டிருக்காங்க… ஆனா இவங்களை விடவும் அவங்கதான் ஜெமோவை இன்னும் சிறப்பா கலாய்ப்பாங்க” என்று தமிழிடம் சொல்லியிருக்கிறேன். திரும்பிப் போகையில் தமிழ் கேட்டார் “ஏந்தம்பி இவர் ஒருத்தரே இப்படின்னா இவர் கூட ஆசானும் சேர்ற அந்த டெட்லி காம்போ எப்படியிருக்கும்?” என்றார். சிரித்தோம். “அறிவுலகச் செயல்பாட்டுல இருக்கவங்களும் இப்படித்தான இருக்காங்கன்னு சொன்னது எப்பேர்ப்பட்ட observation பார்த்தியா என்றார்.
தமிழை வீட்டில் விட்டு விட்டு என் மேன்சனுக்குச் சென்றேன். உரையாடலை நினைத்து நினைத்துக் கொஞ்ச நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். தமிழ் எனக்கு மெசேஜ் செய்திருந்தார் ‘He made my day’ என்று. ஆமென்.
– கி.ச.திலீபன்
ந.பழநிவேலு- திராவிட இயக்கத்தில் இருந்து ஒரு தொடக்கம்
சிங்கப்பூர் இலக்கியத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவர் ந.பழநிவேலு. சிங்கப்பூரின் இலக்கியம் திராவிட இயக்கத்தின் செல்வாக்கு வழியாக தொடங்கியது. அதற்குக் காரணம் அவர்தான். பெரியாரின் நண்பர். சுயமரியாதை இயக்கததவர். அன்றையசிங்கப்பூரில் சுயமரியாதை என்பது முற்றிலும் வேறுபொருள் கொள்ளும் ஒன்றாக இருந்திருக்கக் கூடும்
ந.பழநிவேலு
ந.பழநிவேலு – தமிழ் விக்கி
கவிதைகள்,இந்த இதழில்…
அன்புள்ள ஜெ,
ஜூலை மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் யவனிகா ஸ்ரீராம், பெரு விஷ்ணுகுமார், மதார், வே.நி. சூர்யா, கல்பனா ஜெயகாந்த, ஆகியோரின் கவிதைகள் பற்றிய வாசிப்பு அனுபவத்தை பெரு விஷ்ணுகுமார், மதார், பண்ணாரி சங்கர், ஆனந்த்குமார் எழுதியுள்ளனர்.
கட்டுரை பகுதியில் அபி கவிதையையும், சங்க பாடல்களையும் ஒப்பிட்டு கவிஞர் மோகனரங்கன் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது.
நன்றி,
ஆசிரியர் குழு.
வெண்முரசு வாசிப்பில் மீண்டும்…
வெண்முரசு நாள் நினைவில் தங்கும் ஒரு நாளாகக் கடந்து சென்றிருக்கும் என நம்புகிறேன். உங்களது நெடு நாள் கனவு. வாழ்நாள் கனவு என்று கூட சொல்லலாம். ஒத்த கருத்துடைய ஒரு நண்பர் குழாம் உருவாகச் சாத்தியமான ஒரு ஆரோக்கியமான உரையாடல் வெளி. அதை இணையத்தைப் பயன்படுத்தி சாதித்து விட்டீர்கள். ஆனால் அது என்றென்றும் நிலைத்து நிற்க ஒரு அடையாளம் தேவை. தத்துவம் சிற்பமாகும் போதே, தரிசனம் ஆலயமாகும் போதே தலைமுறைகள் தாண்டி நிற்க இயலும். நம் ஞானிகள் குருகுலங்களை, ஆரண்யகங்களை அமைத்து நிலை நிறுத்தியதால் தானே இன்றும் வேதாந்தம் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
வெண்முரசு துவங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையும் ஒரு நாள் கூட அதை எண்ணாமல் கடந்து போனதில்லை. ஒரு வரியையாவது வாசிக்காமல் இருந்ததில்லை. சில சமயங்களில் முழு அத்தியாயங்களையும் வாசித்து இருக்கிறேன். இன்றளவும் வெண்முரசில் இருந்து வெளிவரவில்லை. வெளிவர இயலவில்லை என்பதே உண்மை. வேறு எந்த ஒரு படைப்பையும் முழுமையாக மனமொன்றி வாசிக்க இயலவில்லை. (அஜிதனின் மைத்ரி விதிவிலக்கு. முழுமையாக வாசித்து முடித்தேன். அதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.)
கிடைக்கும் குறைவான சமயங்களையும் வெண்முரசே எடுத்துக் கொள்வதைப் பற்றி பெரும் விசனமே வந்தது ஒரு நாள். பெரும் குழப்பங்களை எப்போதும் வெண்முரசிடமும், உங்களிடமும் எடுத்து வருவதே என் வழக்கம். இத்தனை நாட்களிலும் உங்களுடனான என் மானசீக உரையாடல் ஒரு நாள் கூட அறுபட்டதில்லை. ஒவ்வொரு முறையும் எனக்கான தெளிவை நீங்களும் சரி, வெண்முரசும் சரி அளிக்கத் தவறியதும் இல்லை. அதே மனநிலையில் தான் இந்த விசனத்துக்கும் வெண்முரசிடமே வந்தேன்.
இம்முறை வாசிக்க தேர்ந்தெடுத்தது, இமைக்கணத்தில் இளைய யாதவரிடம் திரௌபதியின் கேள்விகளுக்கான பதில்கள் வெளிப்படும் பகுதி. அதில் வரும் இவ்வரிகளை வாசித்ததும் ஒரு கணம் உறைந்து விட்டேன்.
“எந்தப் பாதை ஒவ்வொரு அடியிலும் இது சரியே எனச் சொல்கிறதோ அதுவே சரியான பாதை. எதில் ஒவ்வொரு கணமும் கைவிடுகிறோமோ எதில் கைவிட்ட ஒவ்வொன்றுக்கும் நிகராக பெறுகிறோமோ அதுவே உரிய பாதை. அறிக, பாதையின் இறுதியில் அது இல்லை! பாதையென்பதும் அதுவே. எத்தனை இன்சுவைகளின் வழியாக அன்னையை அறிகிறது குழந்தை!”
ஆம். ஒரு முறை கூட வெண்முரசு எனக்கான பதிலைத் தரத் தவறியதில்லை. இதுவே என் நூல். இதைக் கடப்பதைப் பற்றிய எண்ணம் அதை வாசித்த அக்கணத்தில் இருந்து இல்லை. மனம் நிறைந்திருந்தது. எச்சலனமும் இன்றி கண் முன் உலகு ஒழுகிச் செல்வதைக் கண்டேன். நீர் வழிய மீண்டு வந்தேன். இப்பிறவியில் இமைக்கணத்தில் ஒவ்வொருவரும் கண்ட அந்த புடவி நிறை பூரண தரிசனம் சித்திக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதை நோக்கிய பிறவிப் பயணங்களில் முக்கியமான நகர்வை உலகியலில் இருந்து கொண்டே சாத்தியப்படுத்தியது வெண்முரசும், நீங்களும் தான். குருபூர்ணிமா வெண்முரசு நாள் என்பது எத்தனை பொருத்தம்!! என்றும் போல் உங்கள் ஆசி என்னுடன் இருக்கட்டும்.
அன்புடன், அருண்
July 16, 2022
தமிழில் சிறுபான்மை இலக்கியம்
வீரமாமுனிவர்பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுதத் துணிகிறேன். வகைப் படுத்தாமல் இலக்கியத்தை அறிந்து கொள்ளுவது சிரமம் என்பதனால், வரலாற்றுப் பின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு, எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற பிரிவினையைச் செய்யலாமே ஒழியச் சாதாரணமாக இப்படி ஒரு பிரிவினையைச் செய்வது அபாயகரமான ஒன்று. வகுப்பு வாதத்தின் பிடியில், அழிவை நோக்கி செல்லும் இந்த தேசத்தில், அது மேலும் பிளவு உருவாகவே வழி வகுக்கும். விமரிசன தளத்துக்கு அப்பால் வாசக தளத்தில் இப்பிரிவினை ஒரு போதும் நிகழ்ந்து விடலாகாது . காரணம் இலக்கிய அனுபவத்தில் மத, இன, மொழி பிரிவினைகள் இல்லை .
மதச் சிறுபான்மையினரால் எழுதப் பட்ட ஆக்கங்களே இக்கட்டுரையில் சிறுபான்மை இலக்கியம் எனும்போது குறிக்கப் படுகிறது. பிற மதங்கள், கருத்தியல்கள் ஆகியவற்றின் பாதிப்பே ஒரு இலக்கியத்தை அடுத்த கட்டம் நோக்கி நகரச் செய்கிறது. பெளத்த, சமண மதங்களின் வருகையினாலேயே தமிழிலக்கியம் காப்பிய கால கட்டம் நோக்கிய பாய்ச்சலை நிகழ்த்தியது என்பது நாமறிந்ததே. இந்திய மொழிகளிலேயே தமிழுக்கு மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு. முழுமையான பெளத்த காவியமும் [மணிமேகலை], இஸ்லாமிய காவியமும் [ சீறாப்புராணம்] உள்ள ஒரே மொழி தமிழ் தான். பல காரணங்களினால் இவ்விரு காவியங்களின் முக்கியத்துவமும் இங்கு உணரப் படவில்லை. நவீனச் சூழலிலும் பேசப் படவில்லை. [சீறாப்புராணம் குறித்து நான் மலையாளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்] தமிழின் நீதி, மருத்துவ, இலக்கண நூல்களில் கணிசமானவை பெளத்த, சமண மதங்களின் கொடையாகும். விவாதத்துக்கு உரிய கணிப்பென்றாலும், என் தரப்பு தத்துவ விவாதத்தை இம்மதங்களே தமிழுக்கு கொண்டு வந்தன என்பதே உண்மை.
ஹெப்ஸிபா ஜேசுதாசன்தமிழகத்துக்கு அடுத்து வந்த பெரும் மதம் இஸ்லாம். வெகுகாலம் இஸ்லாம் வணிகர்களின் மதமாக, அரபு மொழி சார்ந்ததாக இருந்து வந்திருக்க வேண்டும். அதைத் தமிழக வெகு ஜன மொழிக்கும் இலக்கிய தளத்துக்கும் கொண்டு வந்தவர் தமிழக இஸ்லாமிய வரலாற்றின் திருப்பு முனையான மார்க்க மாமேதை சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள். அவரது மாணவரான வள்ளல் சீதக்காதி இரண்டாமர். இருவருமே இலக்கியவாதிகளல்லர். துரதிர்ஷ்டவசமாக தமிழ்க் கலாசாரத்தின் முக்கியமான ஆளுமைகளான இவர்களைப் பற்றி இங்கு அதிகம் பேசப் பட்டதில்லை. [ஆழமாக இவர்களை படித்தும் கூட நானும் மலையாளத்திலேயே இவர்களைப் பற்றி எழுத முடிந்துள்ளது. அதற்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் மனநிலை குறித்த என் அச்சமே காரணம். மேலும் சிறு விமரிசனக் குறிப்பைக் கூட அபாயகரமாக திரித்து விடும் அளவுக்கு எனக்கு இலக்கிய எதிரிகள் இங்கு உண்டு].
சமகாலத்தவர்களான இவ்விருவருக்கும் உள்ள பொது அம்சம் அது வரை கலாச்சார ரீதியாக இஸ்லாமுக்கும், பிறருக்கும் இடையே இருந்த இடைவெளியை இவர்கள் குறைத்தார்கள் என்பதுதான். ஹிஜ்ரி 1042 ல் காயல் பட்டினத்தில் பிறந்த சதக்கா தன் அரபு மொழிப் புலமையாலும் மார்க்கத் தேர்ச்சியாலும் சதக்கத்துல்லாஹ் என புகழ்பெற்றார். இல்லறத் துறவு வாழ்க்கையை மேற் கொண்ட இவர் தமிழிலும் பெரும் பண்டிதர். படிக்காசுத் தம்புரான், நமச்சிவாயப் புலவர் போன்ற அக்கால சைவ அறிஞர்கள் பலர் இவருடைய மாணவர்களாக இருந்தனர். ஏராளமான மாற்று மதத்தினர் — அவர்கள் எண்ணிக்கை ஐயாயிரத்துக்குமேல் — இவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள். தமிழகம் முழுக்க பெரும்பாலான ஊர்களில் இவர் வந்து சென்றதாக ஐதீகக் கதை உள்ளது. அக்கால சூஃபி க்கள் பெரும்பாலானவர்களிடம் இவர் உரையாடியுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது . 73 வயது வரை உயிர் வாழ்ந்தார் .
‘ ‘ செத்தும் கொடுத்த சீதக்காதி ‘ ‘ என்று படிக்காசுப் புலவரால் பாடப்பட்ட சீதக்காதியின் இயற் பெயர் ஷேக் அப்துல் காதர். சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மாண்வர் இவர். கடல் வணிகம் செய்த பெரும் செல்வந்தர். ராமநாதபுரம் கிழவன் சேதுபதியிடம் அமைச்சராக இருந்த போது இவர் பொறுப்பில் தான் ராமநாதபுரம் கோயில் புதுப்பிக்கப் பட்டு இன்றைய நிலையில் அமைக்கப் பட்டது. மேலும் பல ஆலய்ங்களுக்கு திருப்பணியும் குடமுழுக்கும் செய்வித்துள்ளார். இந்தியக் கட்டடக் கலையின் அமைப்பில் பல மசூதிகளை கட்டியுள்ளார். ராமநாதபுரம், மதுரை பகுதிகளில் ஏராளமான அன்னச் சத்திரங்களும் அமைத்தவர். தமிழறிவு மிகுந்த சீதக்காதி தமிழறிஞர்களின் புரவலராக இருந்தார். இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழில் உருவாக இவர் பெரு முயற்சி எடுத்தார்.
எச். ஏ.கிருஷ்ணபிள்ளைதமிழ்க் காவியங்களில் இலக்கியச் சுவையில் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றுக்கு நிகராக வைக்கத் தக்க பெருங்காப்பியமான ‘சீறாப்புராணத்தை’ எழுதிய உமறுப் புலவர், வள்ளல் சீதக்காதி கேட்டுக் கொண்டதற்கேற்ப , சதக்கத்துல்லா அப்பா அவர்களிடமும் அவரது மாணவர் மஹ்மூது தீபி அவர்களிடமும் மார்க்க கல்வி பெற்று, அதன் பின்னரே எழுதினார் என்பது வரலாறு. இவர் முடிக்காமல் விட்ட நபியின் வரலாற்றை பனீ அஹம்மது மரைக்காயர் என்பவர் இயற்றியுள்ளதாகவும் அது சின்ன சீறா எனப் படுவதாகவும் தெரிகிறது. பின்பு முன்னா முகம்மது காதிரி என்பவர் இரு பகுதியையும் இணைத்து தானும் சில பகுதிகளை சேர்த்து முழுமைப் படுத்தியதாக தெரிகிறது. இந்நூல்களை நான் பார்த்ததில்லை. அச்சில் உள்ளனவா என்றும் தெரியவில்லை.
இங்கு ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். சதக்கத்துல்லாஹ் அப்பா உள்ளிட்ட கணிசமான இஸ்லாமிய அறிஞர்கள் அரபு மொழியில் எழுதியுள்ளனர். அவற்றை தமிழ் இலக்கியம் என்று கொள்ளாவிட்டாலும் தமிழக இலக்கியத்தின் பகுதியாக கருத வேண்டும். வட மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப் பட்ட தமிழர் ஆக்கங்கள் அவ்வண்ணமே கருதப்படுகின்றன.
தமிழிலக்கியத்தில் செவ்வியல் பண்பு கொண்ட இஸ்லாமிய இலக்கியங்கள் குறைவெனவே கொள்ள வேண்டும். சீறாப்புராணம் போல காவியச் சுவை உடைய எந்தப் படைப்பும் இல்லை என்பது என் எல்லைக்குட்பட்ட வாசிப்பிலிருந்து அடைந்த முடிவு. பிற்கால இஸ்லாமிய இலக்கியங்கள் நாட்டார் இலக்கியங்களின் தொடர்ச்சியாக எழுதபட்டவை. மாலை, கண்ணி எனும் வடிவங்கள் பிரபலமாக இருந்திருக்கின்றன. இன்று இவை தற்செயலாக கிடைத்தால்தான் உண்டு. இஸ்லாமிய இலக்கியங்களுக்கான ஆய்வு மையமும், ஆவணக் காப்பகமும் இன்று பெரிதும் தேவையாகின்றன. ஹிஜ்ரி 1270 களில் கண்ணகுமது மகதூம் முகம்மது புலவர் தன் தனிப்பட்ட முயற்சியால் அச்சில் ஏற்றி வெளிக் கொணராவிடில் இஸ்லாமிய இலக்கியங்கள் முற்றிலும் அழிந்து விட்டிருக்கும். ஏறத்தாழ் அறுபது நூல்களை இவர் பதிப்பித்திருக்கிறார். உ.வே.சாமிநாதய்யர் தமிழுக்கு செய்த சேவையுடன் ஒப்பு நோக்கத் தக்க இப்பெரும் பணி எவ்வகையிலும் தமிழில் அங்கீகரிக்கப் படவில்லை.
செய்குத்தம்பிப்பாவலர்இன்று ஒரு கூர்ந்த வாசகனுக்கு கூட இஸ்லாமிய இலக்கியங்களின் பெரும் பகுதி கிடைப்பதில்லை. சிற்றிலக்கியங்களில் பெரும்பாலோர் வாசித்திருக்கக் கூடிய குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களையே நானும் வாசித்திருக்கிறேன். ஹிஜ்ரி 1207 ல் பிறந்த சுல்தான் அப்துல் காதிர் ஒரு பக்கீராக சென்னையில் ராயபுரத்தில் வாழ்ந்து குணங்குடி சித்தர் என அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டு அங்கேயே இறந்தார். இவரது பாடல்கள் இவர் மாணவர் முஹம்மது ஹுசைன் புலவர் என்பவரால் எழுதியெடுக்கப் பட்டு சீயமங்கலம் அருணாசல முதலியார் என்பவர் பதிப்பித்தார் என்பதும் வரலாறு. என் பெரியப்பா குணங்குடியார் பாடல்களை சிறப்பாகக் கற்றிருந்தார். தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தில் சீறாப்புராணம் ஒரு சிகரம் என்றால் குணங்குடியார் பாடல்கள் இன்னொரு சிகரம்.
இசைப் பாடல்களில் இஸ்லாமியப் பாடல்கள் பெரும் புகழ் பெற்றிருந்த காலம் ஒன்று இருந்தது. பல பாடல்களை நானே கேட்டதுண்டு. கோட்டாறு சையிது அபூபக்கர் புலவர் எழுதிய சீறா கீர்த்தனைகள் ஒருகாலத்தில் குமரி மாவட்டத்தில் புகழ் பெற்றிருந்தன. சதாவதானி செய்குத்தம்பி பாவலர் தமிழிசை இயக்கத்தில் தீவிரப் பங்கு பெற்றதும் முக்கியமான பல கீர்த்தனைகளை எழுதியதும் குறிப்பிடத் தக்கவை.
வீரமாமுனிவர் தமிழின் நவீன மயமாக்கலை தொடங்கி வைத்தவர். உரை நடையின் பிதா மகர்களில் ஒருவர் என்பது நாம் அறிந்ததே. அவரது தேம்பாவணி ஒரு முக்கியமான ஆக்கம். ஆனால் அது இலக்கியச் சுவை உடைய முக்கியமான காவியமாக எனக்குப் படவில்லை. இன்னொரு கிறித்தவக் காவியமான எச் . ஏ கிருஷ்ண பிள்ளையின் இரட்சணிய யாத்ரீகமும் வெறும் செய்யுளாகவே நின்று விட்டது. ஆனால் இன்னொரு கவனமான வாசிப்புக்குப் பிறகே இது குறித்து திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியும்.
கிறிஸ்தவ இலக்கியத்தின் மிக முக்கியமான தமிழ்ப் பங்களிப்பு பைபிள் மொழிபெயர்ப்பு தான். விவிலியத்தின் எளிய கம்பீரமான நடையின் தாக்கம் தமிழில் எழுதப் புகுந்த முக்கியமான எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. மூத்த தலைமுறையில் சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், வண்ண தாசன் ஆகியோரின் உரை நடையிலும் புது படைப்பாளிகளில் நான், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் உரை நடையிலும் விவிலியத்தின் மொழித் தாக்கம் மிக வெளிப்படையானது. சரோஜினி பாக்கியமுத்து எழுதிய ‘விவிலியமும் தமிழும் ‘ என்ற ஆய்வு நூல் விவிலியத்தின் தமிழ் தாக்கம் குறித்து பேசும் முக்கியமான நூல்.
மாயூரம் வேதநாயாம்பிள்ளைஅதே சமயம் பொதுவான இலக்கியப் போக்கில் குர் ஆனின் தாக்கம் அனேகமாக ஏதுமில்லை என்றே சொல்ல வேண்டும். விவிலியத்தின் நடை உணர்ச்சிகரமான கவித்துவம் கொண்டது என்றால் குர் ஆனின் நடை கச்சிதமும் வீரியமும் உடையது. ஆனால் குர் ஆன் இஸ்லாமிய எழுத்தாளர்களில் கூட தாக்கம் செலுத்தவில்லை. இதுவே மலையாளத்திலும் உள்ள நிலைமை என விமரிசகர் குறிப்பிடுகின்றனர். அதற்குக் காரணம் என்ன என்பது யோசிக்கத் தக்கது . குர் ஆன் வெறும் வழிபாட்டுப் பொருளாகவே இஸ்லாமியரால் கூட எண்ணப் பட்டது என்பதும், அனைத்து மானுடருக்குமான இறைச் செய்தி என்ற முறையில் அது பரவலாக எடுத்துச் செல்லப் படவில்லை என்பதும் முக்கியமான காரணங்கள் என்று படுகிறது.
பைபிளை மனம் தோய்ந்து நான் படிக்கும் போது என் வயது பதினாறு. ஆனால் இருபது வருடம் கழித்தே குர் ஆன் என்னை ஆட்கொள்ளும் நூலாக ஆகியது. என் ஆசிரியரான நித்ய சைதன்ய யதி [நாராயண குருவின் மாணவரான நடராஜ குருவின் மாணவர். தத்துவப் பேராசிரியராக மேலை நாடுகளில் பணியாற்றியவர். 150 நூல்களை ஆக்கியவர்] தன் வாழ்வின் இறுதி வருடத்தில் குர் ஆனை கற்கவும் ஒரு பகுதியை அழகிய கவித்துவ மொழியில் மலையாளத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார். அவருடைய மாணவரான உஸ்தாத் ஷெளக்கத் அலியிடமிருந்து நான் குர் ஆனின் சில பகுதிகளை அறிந்த பிறகு தான் அம்மாபெரும் நூலை பயில ஆரம்பித்தேன் . குர் ஆன் அனுபவம் குறித்து மலையாளத்தில் இரு கட்டுரைகளையும் ஆக்கினேன். இந்த ஐந்து வருடங்களில் குர் ஆனை சற்றேனும் படித்த இஸ்லாமியரல்லாத ஒரே ஒரு தமிழ் எழுத்தாளரைக் கூட நான் கண்டதில்லை. அடிப்படையில் இது இஸ்லாமிய அறிஞர்களின் தோல்வியே.
நவீன இலக்கியத்தின் துவக்க காலத்தில் பண்டைய இலக்கியத்தை சமகாலத்துடன் பிணைக்கும் பணியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெரும் உறுப்பினராக இருந்த குலாம் காதிர் நாவலரின் பங்களிப்பு முக்கியமானது. இவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். நன்னூலுக்கு இவர் எழுதிய எளிய விளக்கம் பிற்பாடு தமிழை நவீன காலகட்டத்துக்கேற்ப கற்பிக்கும் முயற்சிகளுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது ‘.
நவீன உரை நடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் ஈழ எழுத்தாளரான சித்தி லெவ்வை மரைக்காயர் முக்கியமானவர். [1838 – 1898] அவரது இயற்பெயர் முகம்மது காசிம். இவர் எழுதிய ‘அசன்பே சரித்திரம்’ தமிழின் முதல் கட்ட நாவல்களில் ஒன்று என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் ஈழ இஸ்லாமியர்களின் உரிமைக்காக வாதாடும் ‘முஸ்லீம் நேசன் ‘ என்ற இதழை நடத்தியவர் .
சித்தி லெப்பை மரைக்காயர்நவீன இஸ்லாமிய படைப்பாளிகள் பலர் முக்கியமானவர்கள் பெயர்களையெல்லாம் இங்கு சொல்லி விட முடியாது. ஆரம்ப கால எழுத்தாளர்களில் ‘கருணாமணாளன் ‘ இஸ்லாமிய வாழ்க்கையை பற்றிய சித்திரங்களை அளித்திருக்கிறார். ‘ ஜெ எம் சாலி ‘ நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். களந்த பீர்முகம்மது முக்கியமான படைப்புகளை ஆகியுள்ளார். ஆயினும் பொதுவாக இலக்கிய வீச்சும் வேகமும் கொண்ட முதன்மையான இஸ்லாமிய படைப்பாளி ‘தோப்பில் முகம்மது மீரான் ‘ என்றே ஓர் இலக்கிய விமரிசகனாக நான் கூறுவேன் . [அவரைப்பற்றி நான் விரிவாக எழுதியதுமுண்டு]. சமீபகாலமாக ‘மீரான் மைதீன் ‘ கவனிப்புக்குரிய கதைகளை எழுதிவருகிறார் .
கவிஞர்களில் அப்துல் ரஹ்மான், மு. மேத்தா ஆகியோர் அதிகமும் பேசப் படும் இஸ்லாமியக் கவிஞர்கள். ஆனால் இவர்கள் எழுத்து மீது எனக்கு மிகக் கடுமையான எதிர் விமரிசனம் உண்டு. ரகுமானின் பாண்டித்யம் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றாலும் அரசியல் நிலை பாடுகளை ஒட்டி போலியாக உருவாக்கப் படும் கவிதைகள் அவை என்பது என் எண்ணம். அத்துடன் ஒரு கவிஞன் கண்டிப்பாக காத்துக் கொள்ள வேண்டிய அறிவார்ந்த சுயமரியாதையை அவர் காத்துக் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளை புகழ்ந்து தரமிறங்கி அவர் எழுதிய வரிகள் மிக மோசமான முன்னுதாரணங்கள்.
மூத்த தலைமுறை தமிழ் கவிஞர்களில் அபி முக்கியமானவர். இஸ்லாமியக் கவிஞர்களில் பரவலாக அறியப்பாடாத நவீனக்கவிஞர்கள் ‘நாகூர் ரூமி ‘, ‘ஷாஅ ‘. இஸ்லாமிய கருக்களை எடுத்து எழுதுவதனால் கவனிக்கப் பட்ட முக்கிய கவிஞர்கள் ஹெச் ஜி ரசூல், ஹமீம் முஸ்தபா ஆகியோர். சல்மா சமீப காலமாக கவனிக்கப் பட்டு வரும் தமிழ்க் கவிஞர்.
தோப்பில்ஆனால் இளைய தலைமுறை தமிழ் கவிஞர்களில் முக்கியமான நால்வரில் ஒருவராக நான் எப்போதுமே குறிப்பிட்டு வரும் ‘ மனுஷ்ய புத்திரன் ‘ தான் இவர்களில் முதன்மையானர். இஸ்லாமிய வாழ்க்கை சார்ந்த சித்திரங்களோ இஸ்லாமிய பிரச்சினைகளோ அவர் கவிதைகளில் அதிகமில்லை. ஆனால் இஸ்லாமிய தரிசன அடிப்படையின் உச்ச நிலையில் நின்று கனிவும், கூர்மையும் கூடிய பல கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார்.
நவீனத் தமிழில் கிறித்தவ இலக்கியம் அழுத்தமான பதிவை உருவாக்கியுள்ளது. பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு ஒரு திருப்பு முனையாக அமைந்த படைப்பு என்பது இலக்கிய வரலாறு. கிறித்தவ வாழ்க்கைச்சித்திரங்களை முன்வைத்தவர்கள் டேவிட் சித்தையா ,ஐசக் அருமைராசன், மார்க்கு ,எம். ஜேக்கப் போன்றவர்கள். அவ்வரிசையில் கலையமைதிகூடிய படைப்புகளை எழுதியவர் காஞ்சிபுரத்துக்காரரான அ.எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்கள்தான்.முகையூர் அசதா சமீப காலமாக கவனத்துக்கு உள்ளாகி வரும் படைப்பாளி.
இஸ்லாமிய இலக்கியத்தை தமிழுக்குத் தொகுத்து தருவதில் மணவை முஸ்தபா அவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமான ஒன்று. ‘ தமிழில் இஸ்லாமிய இலக்கியம் ‘ அவருடைய முக்கியமான நூல். இஸ்லாமிய பண்பாட்டை விரிவாக அறிய உதவும் மாபெரும் ஆக்கம் 1977ல் ‘அப்துற்- றகீம் ‘ அவர்களால் தொகுக்கப் பட்ட இஸ்லாமிய கலைக் களஞ்சியம். நான்கு தொகுதிகள் வெளி வந்த இப்பெரும் பணி இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப் படாமல், தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு ஆளாகி முழுமை பெறாது நின்று விட்டது.
பொதுவாக சொல்லப் போனால் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் கால கட்டத்தில் நடந்த ஒரு படைப்பூக்கக் கொந்தளிப்பை தவிர்த்தால் தமிழில் சிறுபான்மை இலக்கியம் தீவிரமான வளர்ச்சி எதையும் அடையவில்லை என்றே எனக்குப் படுகிறது. சீறாபுராணம் ஒரு சிகரம். குணங்குடியார் பாடல்கள் அபூர்வமான விதிவிலக்கு. தோப்பில் முகம்மது மீரானும் மனுஷ்ய புத்திரனும் மட்டுமே நாம் உலக இலக்கிய மரபை நோக்கி முன் வைக்க ஓரளவேனும் தகுதிவாய்ந்த படைப்பாளிகள். அண்டை மொழியான மலையாளத்திலோ அவர்களின் மிகச் சிறந்த படைப்பாளிகளே சிறுபான்மையினர்தான். வைக்கம் முகம்மது பஷீரும், சக்கரியாவும் எந்த உலக பெரும் படைப்பாளிக்கும் நிகரானவர்கள்.
இது ஏன் என நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நமது பொதுச் சூழல் சிறுபான்மையினரின் எழுத்தில் அவர்களுடைய மிகச் சிறந்த தளத்தை எதிர்பார்ப்பதாக இருக்கிறதா? சிறுபான்மையினரின் கலாச்சார, இலக்கிய மரபு குறித்த போதிய புரிதல் பொதுச் சூழலில் இல்லை என்பது ஒரு பெரும் குறை. ஆகவே சிறுபான்மை சமூக எழுத்தாளன் தன் வாழ்க்கை குறித்து நேர்மையாக எழுதினால் அது பொதுச் சூழலுக்கு புரிந்து கொள்ளக் கூடியதாகவோ, ஏற்கக் கூடுவதாகவோ இல்லை. தோப்பில் முகம்மது மீரான் தன் நாவல்களின் நடையையும், சூழலையும் புரிய வைக்கவும், ஏற்கச் செய்யவும் கடுமையாக போராட வேண்டியிருந்தது.
மறுபக்கம் சிறுபான்மை சமூகம் தன் எழுத்தாளர்களை மதிப்பதாகவோ, அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பதாகவோ இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். அதற்கும் தோப்பில் முகம்மது மீரான் போராட வேண்டியிருந்தது நாமறிந்ததே. சகஜமான சுதந்திரத்துடன் எழுத்தாளர்கள் எழுதும் போதும், அவர்களை சமூகம் கூர்ந்து கவனிக்கும் போதும் மட்டுமே உயர்ந்த இலக்கியம் உருவாகிறது. பஷீர் தன் சமூகத்தை மிகக் கடுமையாக விமரிசித்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதுமே உச்ச கட்ட அங்கீகாரத்தையே அடைந்திருக்கிறார்.
ஒரு மொழிச் சூழலில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளன் தன் அடையாளத்தைத் தவிர்த்து விட்டு எழுதுகிறான். பொது மொழியையும், பொதுவான சூழலையும் தேர்வு செய்கிறான் என்றால் அச்சமூகம் கருத்தியல் அடக்குமுறை கொண்ட சமூகம் என்றே பொருள். படைப்பூக்கம் கொண்ட சுதந்திர சமூகத்தில் தன்னுடைய தனித் தன்மை கொண்ட மொழியும், சூழலும் அவனுக்கு ஒரு பெரிய சொத்தாகவே இருக்கும். வாழும் சமூகமும், மொழியும் ஒருபோதும் ஒற்றைப் படையான இயக்கம் கொண்டிருக்காது.
================================
[பூங்காற்று இஸ்லாமிய சிறப்பிதழுக்கு எழுதப் பட்டது. ஷிபா மீடியா 142/2வது தள/ வடக்கு வெளி வீதி, யானைக்கல், மதுரை 625001]
முதற்பிரசுரம் Apr 5, 2002/ மறுபிரசுரம்
கோட்டாறு ஞானியார் சாக்பு அப்பா
——————————
ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர் – தமிழ் விக்கி
து.ஆ.தனபாண்டியன்
து.ஆ.தனபாண்டியன் – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


