யுவன் சந்திப்பு – கி.ச.திலீபன்

யுவன் சந்திரசேகர், தமிழ் விக்கி 

அன்புள்ள ஜெ,

எழுத்தாளரும் உங்களின் உற்ற நண்பருமான யுவன் சந்திரசேகரைச் சந்திக்கச் சென்றேன். விகடன் இணையதளத்தில் நான் எழுதிய பேக் பேக் எனும் பயணத்தொடர் நடுகல் பதிப்பகத்தின் மூலம் நூலாக வரவிருக்கிறது. அந்நூலுக்கு அவரிடம் முன்னுரை கேட்டிருந்ததை அடுத்து அதன் ப்ரிண்ட் அவுட்டைக் கொடுப்பதற்காக நண்பர் தமிழ்செல்வனோடு சென்றேன். எழுத்துக்கப்பாற்பட்ட அவரது ஆளுமையை நான் உங்கள் கட்டுரைகள் வழியாக அறிந்திருக்கிறேன். அங்கத உணர்வு மிகுந்த நபர் அவர் என்கிற சித்திரம் உங்கள் கட்டுரைகள் வழியாக எனக்குள் உருவாகியிருந்தது. அதனை நேரில் கண்டுணர்ந்த தருணமாக இச்சந்திப்பு இருந்தது.

அவரைச் சந்தித்ததும் நான் தமிழ்ச்செல்வனை அறிமுகப்படுத்தினேன்… 

“இவர் தமிழ்செல்வன், உங்க வாசகர்… உங்க நண்பர் ஜெமோவின் தீவிர பக்தர்” என்றேன். 

“கோயில் கட்டியாச்சா” 

“சீக்கிரம் கட்டிருவார்” 

இப்படித்தான் உரையாடல் தொடங்கியது. 

பேக் பேக் பயணத்தொடர் ஒவ்வொரு சாப்டராக எழுதியது. அதனை மொத்தமாக வாசிக்கையில் எப்படியிருக்கும் என்பது பற்றிய தெளிவு என்னிடமே இல்லை. ஒரே தொகுப்பாக அதனை வாசித்து திருத்தம் செய்ய வேண்டியிருக்கலாம். அதுவும் சிறிய அளவிலான திருத்தங்கள்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவர் இன்னும் 10 நாட்களில் மும்பைக்குச் செல்வதாகச் சொன்னதையடுத்து விகடனில் வெளியான வெர்சனையே ப்ரிண்ட் அவுட் எடுத்துச் சென்றிருந்தேன். சிறிய அளவில் திருத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை முன்னறிவிப்பாகச் சொல்லி விட வேண்டும் என்கிற யத்தனிப்புடனே இருந்தேன். 

“பிப்ரவரியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஓர் பயணம் போயிருந்தேன். முதல் முறையா 21 நாட்கள் போன பயணம் அது. அந்த அனுபவங்களை விகடன்ல தொடரா எழுதுறதுக்கான வாய்ப்பு கிடைச்சதும் எழுதினதுதான் இந்த புத்தகம். இதுல வரலாற்று விசாரணையோ, மானுடவியல் ஆய்வோவெல்லாம் இல்லை” என்றேன். 

“அப்படின்னா இதன் மூலமா நீங்க ஜெயமோகனைக் குறிப்பிடுறீங்கன்னு எடுத்துக்கலாமா” என்றார். 

“என் கான்டேக்ட் லிஸ்ட்ல இருக்கிற பலருக்கும் இதோட சாப்டர்ஸை அனுப்பினேன். அவங்கள்ல பலர் சிற்றிதழ் வட்டத்தோட தொடர்புடையவங்க. அவங்க கருத்தும் நல்லபடியாத்தான் வந்தது. ஆனா, விகடன் வெப்சைட்ல யார்னே தெரியாத பொது வாசகர்களுடைய கருத்துகள் இன்னும் ஊக்கம் கொடுத்துச்சு.” என்றேன். 

“இப்ப நீங்க என்னை சொல்றீங்கன்னு எடுத்துக்கலாமா… இலக்கிய வாசகனாவெல்லாம் இல்லாம பொது வாசகனா படிச்சிப்பாருன்னு சொல்ல வர்றீங்க அதானே” 

“அப்படியில்லை சார்… ஒரு தகவலுக்காக சொன்னேன்” 

“ஏங்க எனக்குப் படிக்கிற சுதந்திரம் கூடக் கிடையாதா? இதை இப்படித்தான் வாசிக்கணும்னு டிஸ்க்ளைமர் போட்டுட்டா நான் அதுபடிதான் வாசிக்கணுமா? என்னோட அடுத்த புத்தகத்தோட பின்னுரையில நீங்க இதுவரை வாசிச்சுட்டு வந்ததில்லை இந்த புத்தகம்… அதை இப்படித்தான் வாசிக்கணும்னு ஒரு குறிப்பு எழுதிடலாம்னு இருக்கேன்.” என்றார். 

ப்ரிண்ட் அவுட்டின் சில பக்கங்களை புரட்டிய பிறகு… 

“RAC-னு போட்டிருக்கீங்க அதைத் தமிழ்ப்படுத்த முடியாது… தமிழ்ப்படுத்தினாலும் நல்லாருக்காது. ஆனால் கூடாரம்னு ஒரு சொல் இருக்கும்போது ஏன் டென்ட்–ங்குற வார்த்தையைப் பயன்படுத்துறீங்க?”

“வெகுஜன ஊடகத்துல வரும்போது அவங்களுக்குப் புரியுற மாதிரியான வார்த்தையா இருக்குமேன்னு போட்டிருப்பேன்” 

“ஏன் கூடாரம்ங்குற வார்த்தை புரியாதா… இவங்களுக்கு இது போதும்னு நீங்க நினைக்குற மாதிரி இருக்கு” 

“இல்லை சார் உள்ள கூடாரம்னு சில இடங்கள்ல குறிப்பிட்டிருக்கேன்…” 

“இதை ஒரு குற்றச்சாட்டாவெல்லாம் நான் சொல்லவேயில்லை… ஆனா நீங்க ஏன் Defend பண்ணிக்கிட்டே இருக்கீங்க… நானும் உங்களை மாதிரி இருந்திருக்கேன்… இப்பவெல்லாம் 19 வயசுலயே முதல் கவிதைத்தொகுப்பு போட்டுடுறாங்க… என் முதல் தொகுப்பு வரும்போது எனக்கு 35 வயசு… தேவதச்சன்கிட்ட ரொம்ப படபடப்பா இருக்குன்னு சொன்னேன். அவர் இந்த வருசம் தமிழ்ல எத்தனை புத்தகம் வெளியாகும்னு நினைக்குற?ன்னு கேட்டார். ஆயிரம் புத்தகம் நிச்சயம் வெளியாகும்னேன். அதுல கவிதைத் தொகுப்பு எத்தனை இருக்கும்னார். ஒரு நூறு இருக்கலாம்னேன். அந்த நூறு தொகுப்புல உன்னோடதும் ஒன்னு… அவ்ளோதான் அதுக்கு மேல ஒன்னுமே இல்லைன்னார். ஆக, நல்ல பிரதியே தன்னை நிறுவிக்கும். நாம அதுக்காக Defent பண்ணத்தேவையில்லை. என்னோட குள்ளச்சித்திரன் சரித்திரம் நாவல் வந்தப்போ பக்கம் பக்கமா கடுமையா விமர்சனம் பண்ண கட்டுரைகள் வந்துச்சு. எதுக்குமே நான் வாய் திறக்கலை. ஜெயமோகன் பார்க்காத வசவா… அந்த வசவுக்கெல்லாம் அவன் பதில் சொல்லிட்டிருந்தா வேறு எதையுமே செய்ய முடியாது. இன்னைக்கு தமிழ் இலக்கியத்தில் அவனை நீங்க எந்தத் தளத்திலயும் தவிர்க்கவே முடியாத ஸ்கேலா இருக்கான்னா எதுக்கும் அவன் Defend பண்ணாம அவனோட நோக்குல போய்க்கிட்டிருக்குறதுதான் காரணம். அதனால சொல்றேன் எதுக்கும் Defend பண்ணாதீங்க… உங்க படைப்பு மீதான விமர்சனம் எல்லாத்தையும் ஏத்திக்கிட்டு பரிசீலனை பண்ணுங்க… நல்லா இருக்குன்னு பாராட்டினாக்கூட அந்தப் பாராட்டு நியாயமானதான்னு யோசிங்க.. அப்படித்தான் நீங்க உருவாக முடியும்” என்றார்.

சந்தித்த அரை மணி நேரத்துக்குள்ளாகவே என்னைப்பற்றிய துல்லியமான அவதானிப்பை முன் வைத்தார். இயல்பான உரையாடலின் போக்கிலேயே வெகு நுட்பமான அவதானிப்பை வெளிப்படுத்தும் ஆளுமை கண்டு வியந்தேன். நண்பர் தமிழ்செல்வன் எதுவுமே பேசாமல் உட்கார்ந்திருந்தார். 

“நீங்க ஏன் எதுவும் பேச மாட்றீங்க” 

“சார் இவரு பயங்கரமா படிப்பாரு… ஆனா எழுத்தாளர்களை நெருங்க மாட்டாரு… தினசரி ஜெமோ வெப்சைட்லதான் கண் விழிப்பார்… ஆனா இதுவரைக்கும் அவரை சந்திக்கவே இல்லை” 

“எழுத்தாளர்களை சந்திக்குறதுக்கும் ஒரு தைரியம் வேணும்தான்” 

இப்படித்தான் அந்த உரையாடல் நிறைந்திருந்தது. உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசிடாதடா என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். 

உரையாடலின் போக்கில் இளையராஜா குறித்துப் பேசினோம். 

“எங்கிட்ட இளையாராஜாவா? விஸ்வநாதன் ராமமூர்த்தியா?-னு கேட்டா நான் விஸ்வநாதன் – ராமமூர்த்தின்னுதான் சொல்வேன். அதுவே விஸ்வநாதன் ராமம்மூர்த்தியா? ராமநாதனா?ன்னு கேட்டா ராமநாதன்னு சொல்வேன். இது என் தனிப்பட்ட ரசனை. அதைத்தாண்டி இளையராஜாவைப் பத்தி சொல்லனும்னா அவர் ஓர் மகான். அந்த உழைப்பு மனித செயல்களுக்கு அப்பாற்பட்டது. ரெக்கார்டிங் தொடங்குறதுக்கு முன்னாடியே நோட்ஸ் எழுதிக்கிட்டே இருப்பாராம். அதாவது அந்த இசையை அவர் கற்பனையிலேயே கேட்கிறது எவ்வளவு பெரிய தரிசனம். இந்தக் வீட்டைக் கட்டின என்ஞ்சினியர் அஸ்திவாரம் போடும்போதே முழு வீட்டையும் பார்க்குறது மாதிரி.”

“மோடியைப் புகழ்ந்து பேசிட்டார்ங்குறதுக்காக ஃபேஸ்புக்ல உட்கார்ந்துக்கிட்டு எதையும் பண்ணாதவன்லாம் அவரை வசைபாடுறத என்னால ஏத்துக்க முடியலை. அறிவுலகச் செயல்பாட்டுல ஒரு புல்லைக்கூட பிடுங்காதவங்கதான் இளையராஜாவை இப்படிப் பேசிட்டுட் திரியுறாங்க” என்று உணர்ச்சி வயத்தின் உச்சத்தில் சொன்னேன். 

“நீங்க சொல்ற அறிவுலகச் செயல்பாட்டுல பல ஆண்டு காலமா இருக்கவங்களும் இதைச் செய்யுறாங்களே திலீபன்” என்றார். 

எங்களுக்கு இரண்டாவது காபி வந்தது. அவரது மனைவி உரையாடலுக்கு இடையூறில்லாமல் கொடுத்துச் சென்றார். 

“நான் அறிமுகப்படுத்த மறந்துட்டேன்… இவங்கதான் என்னோட மனைவி. எனக்கு ஒரு மனைவி மட்டும்தான்” 

நாங்க அதுக்குக்கூட வழியில்லாம இருக்கோம் என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். 

ஒன்றரை மணிநேர உரையாடலுக்குப் பின் நேரத்தின் நெருக்குதலால் கிளம்பினோம். இது போதாது இன்னும் நிறைய பேச வேண்டும். புத்தகம் அச்சான பிறகு ஞாயிற்றுக்கிழமை நாளாகப் பார்த்து அதைக் கொடுப்பதற்காக வருவோம். அப்போது கூடுதல் நேரம் கிடைக்கும் என தமிழிடம் சொன்னேன். 

உங்களை நேரில் சந்திக்காதவர்கள் உங்களது எழுத்து மற்றும் உங்களது உரைகளை மட்டுமே கேட்டவர்களுக்கு நீங்கள் எத்தனை குசும்பு மிக்கவர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “ஃபேஸ்புக் புரட்சியாளர்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை சாம்பார்னு நினைச்சுட்டிருக்காங்க… ஆனா இவங்களை விடவும் அவங்கதான் ஜெமோவை இன்னும் சிறப்பா கலாய்ப்பாங்க” என்று தமிழிடம் சொல்லியிருக்கிறேன். திரும்பிப் போகையில் தமிழ் கேட்டார் “ஏந்தம்பி இவர் ஒருத்தரே இப்படின்னா இவர் கூட ஆசானும் சேர்ற அந்த டெட்லி காம்போ எப்படியிருக்கும்?” என்றார். சிரித்தோம். “அறிவுலகச் செயல்பாட்டுல இருக்கவங்களும் இப்படித்தான இருக்காங்கன்னு சொன்னது எப்பேர்ப்பட்ட observation பார்த்தியா என்றார்.

தமிழை வீட்டில் விட்டு விட்டு என் மேன்சனுக்குச் சென்றேன். உரையாடலை நினைத்து நினைத்துக் கொஞ்ச நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். தமிழ் எனக்கு மெசேஜ் செய்திருந்தார் ‘He made my day’ என்று. ஆமென்.

– கி.ச.திலீபன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2022 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.