Jeyamohan's Blog, page 746

July 14, 2022

அரவாணிகள்- இரு பதிவுகள்

தமிழகத்தில் ஆண்டுதோறும் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறும்போது அரவாணிகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளிவரும். ஒருநாளுடன் அச்செய்திகள் மறைந்துவிடும். அந்த வழிபாட்டுமரபு என்ன, அதையொட்டிய கதைகள் என்ன, சடங்குகள் என்ன, ஏன் அது திருநங்கையருக்கு அத்தனை முக்கியமானதாக ஆகியது என்ற வினாக்கள் எதற்கும் உடனடியாகத் தேடி பதில் கண்டுபிடிக்கமுடியாது.

இரு விரிவான பதிவுகள் தமிழ் விக்கியில் உள்ளன. கரசூர் பத்மபாரதி எழுதிய திருநங்கையர் நூலையும் அ.கா.பெருமாள் எழுதிய நாட்டார் தெய்வங்கள் நூலையும் ஒட்டி உருவாக்கப்பட்ட இப்பதிவுகள் முதன்மையான பண்பாட்டு ஆவணங்கள்.

கூத்தாண்டவர் திருவிழா அரவான் களப்பலி – அம்மானைப்பாடல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2022 11:34

தமிழ் விக்கி வம்புகள்- கடிதங்கள்

தமிழ் விக்கி வம்புகள்

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

அன்புள்ள ஜெயமோகன்,

தமிழ் விக்கி வம்புகள் பதிவை படித்தேன். பின் தமிழ் விக்கி லோகோவை திறந்து விமர்சனம் வைக்க ஏதேனும் உள்ளதாவென நுண்மையாய் தேடினேன். என்னுடைய வன்மையான கண்டனம் ஔவையாரின் கூந்தல் அடர்த்தியாக இல்லை. பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலே மணமுண்டாவென சிந்தித்த தமிழ் சமூகத்தில் வந்த ஔவையாரின் கூந்தல் அடர்த்தி இல்லாமல் இருப்பது தமிழ் பெருமையை மறைப்பதாகும். அதற்கு என் கண்டனங்கள்.

அன்புடன்
மோகன் நடராஜ்

***

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி வம்புகள் பதிவை படித்து மகிழ்ந்தேன். ஆழ்ந்த ஆய்வுகள் நம் சூழலில் நடைபெறுகின்றன. நம் பேராசிரியர்கள் எழுதியதை எல்லாம் பார்த்தால் இதைவிட சிரிக்க வழி உண்டு. ஒருவர் எழுதுகிறார், இதெல்லாம் எழுத்தாளர்களை அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுப்பதற்கான சூழ்ச்சியாம். நம் எழுத்தாளர்கள் எல்லாம் சேகுவேரா போல காட்டில் ஒளிந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறார்.

என் பங்குக்கு நான் ஒரு கேள்வி. விக்கி என்றால் விக்னேஷ்வரன். அது சம்ஸ்கிருதப் பெயர். தமிழ்ப்பிள்ளையார் என்று வைத்திருக்கலாமே? சுருக்கமாக தமிழ்ப்பிள்ளை என்று வைக்கலாம். அழகாக பிள்ளைத்தமிழ் என்று வைக்கலாம். எளிய தமிழ்ப்பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே?

மகேஷ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2022 11:31

அறம், பக்தி, இன்னபிற -கடிதம்

அறம் தமிழ் விக்கி பக்தி தமிழ் விக்கி

அன்பு ஜெ,

தமிழ் விக்கியில் உங்களுடைய ”அறம்” பதிவு மிகப் பிடித்திருந்தது. ஒரு பரந்துபட்ட பொருளுடைய கலைச்சொல்லை நம் பண்பாட்டிலிருந்தே எடுத்து அதை தொகுத்திருப்பது மிகவும் பயனுள்ளது. ”அறம்” என்ற கலைச்சொல் கடந்த பத்தாண்டுகளில் மிகப் பிரபலம். வெறுமே உழைப்பு, அறிவு (Intelligent quotient) என்பதைத் தாண்டி உணர்வு ரீதியான அறிவுக்கு (emotional intelligence), decision making ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வந்த பிறகு போட்டித்தேர்வுகளிலும் அறம் என்ற விடயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொண்டுவரப்பட்டது. மத்தியத்தேர்வாணயம் நடத்தும் குடிமைப்பணித்தேர்வில் ப்ரிலிமினரி தேர்வில் decision making, logical reasoning, mental ability க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  2013இல் “Ethics, Integrity and Aptitude” என்ற நான்காவது பொதுத்தாள் (General studies 4) முதன்மைத்தேர்வில் சேர்க்கப்பட்டது.

இதன் பாடத்திட்டதில் இருந்தவை பெரும்பாலும் படிப்பறிவு சார்ந்தில்லாமல் சிந்தனை சார்ந்து அமைந்திருந்தது. (Syllabus: Ethics and Human Interface, Attitude, Aptitude and Foundational Values for Civil Service, Emotional Intelligence, Contributions of Moral Thinkers and Philosophers from India and World, Public/Civil Service Values and Ethics in Public Administration, Probity in Governance) பாடத்திட்டம் வந்த சில வருடங்களுக்குப் பின் தான் போட்டித்தேர்வு பயிற்சி அமைப்புகள் இந்த பாடத்திட்டம் சார்ந்த விஷயங்களுக்கான புத்தகங்களைக் கொண்டுவந்தன. சிறப்பாக தொகுக்கப்பட்டது என்று பெரும்பாலும் கருதப்பட்ட புத்தகங்களில் கூட போதாமைகள் இருந்தது. ஒரு வாரம் உட்கார்ந்து இந்த ஒட்டு மொத்த பாடத்திட்டத்துக்கும் தனியாக குறிப்புகள் எடுத்தால் நாமே அவற்றை அறிந்து கொண்டு, சிந்தித்து, தொகுத்துக் கொள்வதற்கு பயன்படும். குடிமைப்பணித்தேர்வை தமிழில் எழுதலாம் என்று முடிவெடுத்தபோது இந்த பொதுத்தாளுக்கு தனியாக நானே குறிப்புகள் எடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். இதிலுள்ள கலைச்சொற்களை மட்டும் பட்டியலிட்டு அவற்றை தமிழில் விரித்துக் கொள்ள முற்பட்டேன். அந்த சமயத்தில் இந்தத்தாளின் முதல் முக்கியமான கலைச்சொல்லாக என் முன் வந்து நின்றது “அறம்”.

ஆங்கிலத்தில் இதற்கான குறிப்புகளே கூட கோர்வை செய்ய முடியாமல் ஒரு அகாடமிக் தன்மையில் தான் இருக்கும். அறம் சார்ந்த நிலைப்பாடுகளுக்கான கோட்பாடுகளை வாசித்தபின்னும் இதற்காக ]புகழ்பெற்ற மேலை நாட்டு ஆசிரியர்கள், நீதிபதிகளின் இறுதித்தீர்ப்புகளை பார்ப்பது, உரையாடுவது என தொகுத்துக் கொள்வோம். அப்படி ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் “மைக்கேல் சாண்டல்” என்ற ஆசிரியர், ஃப்ராங்க் காப்ரிக்கோ என்ற நீதிபதி என பலரும் அறிமுகமானார்கள். குறிப்பாக சாண்டலின் கேள்விகளும், அவர் அறம் சார்ந்த நிலைப்பாடுகளை நம்மை சிந்திக்க வைக்கும் முறையும் காணொளிகள் வாயிலாகவே எங்களை அவரின் மாணவர்களாக்கியது.

சிந்தனை சார்ந்து இவைகள் இருந்தாலும் சிந்தனைகள் கட்டற்று இருக்காமல் அவற்றிற்கு ஒரு வழியை அமைத்துக் கொடுக்க ஏற்கனவே இருந்த சிந்தனையாளர்கள் பற்றிய அடிப்படைப் புரிதல் அவசியமாகிறது. மேலை மற்றும் கீழைத் தத்துவம் சார்ந்து அடிப்படையான சிந்தனைவாதிகளையும் அவர்களின் கோட்பாடுகளையும் முதலில் தெரிந்து கொண்டோம். பின் ஒவ்வொரு கலைச்சொல்லையும் தனியே எடுத்து விவாதிப்பது அதற்கான கோட்பாடுகள், அது சார்ந்த சிந்தனைகளை தொகுப்பது போன்றவற்றை செய்ய வேண்டியிருந்தது. இவை யாவும் ஒரு அறம் சார்ந்த கேள்விக்கு, ஒரு முடிவைக் கோரும் கேள்விக்கு நம் நிலைப்பாடு என்ன என்பதைத் தேர்ந்தெடுத்து அதை நிலை நிறுத்த பயன்படுகிறது. இது மாதிரியான கேள்விகள் சார்ந்த கலந்துரையாடலுக்குப் பின் நண்பர்கள் நாங்கள் பகடியாக “எல்லாம் சரி ‘what is ethics’? இதுக்கு மொதல்ல விடை சொல்லு” எனக் கேட்டுக் கொண்டு.. ”மறுபடியும் மொதல்ல இருந்தா” என்பது போல கலைந்து செல்வோம்.

தமிழில் குடிமைப்பணி எழுதலாம் என்று தேர்ந்தெடுத்த காலகட்டத்தில் அதற்கான தயாரிப்பில் முதலில் வந்து நின்றது “அறம்” தான். பேசிப்பேசி தீராத தலைப்பு இந்த ”அறம்” என்பது. ஒட்டு மொத்த தாளுக்கும் முதலில் எனக்கு உறுதுணையாக இருந்தது “திருக்குறள்” தான். அவற்றையுமே கூட நமக்கானதாக தொகுக்க சிரத்தையாக முயல வேண்டியிருந்தது. அறத்துப்பாலைத்தவிரவும், பொருட்பாலில் உள்ள அரசியலும், அமைச்சியலும் உதவியது. உரை நடையாக மு.வ. வின் “அறமும் அரசியலும்” சில நிலைப்பாடுகளுக்கு உதவியது. இந்த பொதுத்தாளைப் பொறுத்தவரையிலும் எப்போதும் ஒரு நிறைவின்மையோடு தான் தேர்வு எழுதச் செல்வோம்.

இன்று அங்கிருந்து வெகு தொலைவில் வந்துவிட்டேன் ஜெ. ஆனால் “அறம்” என்ற பதிவைப் பார்த்தவுடன் அதன் முக்கியத்துவம் என்ன என்பது புரிந்தது. ஒரு பக்கம் மகிழ்வும் மறு பக்கம் நீங்கள் அந்த பரந்து பட்ட பொருள் ஒன்றை எப்படியாக கோர்த்து ஒரு சட்டகத்துக்குள் அடைத்திருந்தீர்கள் என்பதை ஆர்வமாக வாசித்தேன். நீங்கள் அடுக்கிய முறை அறிதலாக இருந்தது. உங்களுக்கே உரிய பாணியில் மூலத்திலிருந்து வரலாறு, பண்பாடு என்பவற்றிலிருந்து அதன் பொருளை விளக்கி அறத்தொடு நிற்றல், அறம் பாடுதல், அறம் படுதல் என விரித்த விதம் பிடித்திருந்தது. மேலும் இதை நீங்கள் விரிப்பீர்கள் என்று கூட நினைத்துக் கொண்டேன்.

அன்று நண்பர்களிடம் அந்தப் பதிவைப் பற்றி பேசி தொகுத்துக் கொண்டேன். அதன் பிறகு ஒரு நாள் ஜி.எஸ்.எஸ்.வி நவீன் “ரம்யா.. சார் ’அறம்’ சீரீஸ்ல ’பக்தி’ எழுதறாங்க கவனிச்சீங்களா?” என்று கேட்டார். பொதுவாக நீங்கள் எழுதும் பதிவை நீங்கள் முடிக்கும் வரை காத்திருந்து தான் படிப்போம். “பக்தி” பதிவு மட்டும் ரன்னிங் கமெண்ட்ரி போல படித்துக் கொண்டிருந்தோம். ”பக்தி” க்ரீன் டிக் வந்ததும் நவீன் அலர்ட் செய்தார். வாசித்து விட்டு சிலாகித்துக் கொண்டோம்.

“பக்தி” பதிவு வந்தபோது களப்பணிக்காக சென்று கொண்டிருந்தேன். வழிதோறும் வாசித்து, நெகிழ்ந்து என பயணித்திருந்தேன். செல்லும் வழியில் சென்னிகுளம் என்ற ஊரில் கவிராயரின் சிலை ஒன்று இருப்பதாக எழுத்துக்காரர் சொன்னார். “ஓ.. அப்படியா சரிங்க” என்பது போல படித்துக் கொண்டிருந்தேன். நான் ஆவல் அடையாததைக் கண்டு “காவடிச்சிந்து எழுதினாருல்ல ம்மா அவரு” என்றார். காவடிச்சிந்து என்பது என் மூளையில் முட்டியதும் தமிழ்விக்கியில் பதிவு போட்டது நினைவிற்கு வந்தது. நான் சட்டென திரும்பி “அண்ணாமலை ரெட்டியார்” என்றேன். அவருக்கு ஒரே மகிழ்ச்சி. தன் ஊரிலுள்ள பெரிய மனிதரை தெரிந்து வைத்திருப்பது கண்டு பெருமிதமும் தெரிந்தது. அண்ணாமலை ரெட்டியாரை எடுத்து மீட்டு வாசித்து விட்டு அந்த மணிமண்டபத்தை தமிழ்விக்கியில் இணைக்க புகைப்படம் எடுத்துக் கொண்டேன். ஊருக்கு நடுவில் மிகப்பெரிய இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. பூட்டி வைத்திருந்த அந்த காம்பவுண்டை திறந்து காணிப்பதில் அங்கிருந்தவர்களுக்கு ஆர்வம் அதிகமிருந்தது தெரிந்தது. அவர்களிடம் தமிழ்விக்கி பதிவை காணித்து இவரைப் பற்றி ஆவணப்படுத்தியிருக்கோம் என்றேன். ”அவங்க சந்ததிகள்” என்று வாயெடுக்கும் முன் அவருக்கு குழந்தைகள் இல்லை என்பது ஞாபகம் வந்தது. அந்த மணிமண்டபத்திற்கு பின்னாலேயே அவர் நினைவாக ஒரு ஆரம்பப்பள்ளி செயல்படுவதைக் காணித்தார்கள். மிக இள வயதில் இறந்த கவிராயரை இன்றும் மக்கள் நினைவு கொண்டிருப்பதன் முக்கியத்துவம் புரிகிறது. எங்கோ மூலை முடுக்கில் பிறந்து இன்றும் சிலாகிக்கும் ”காவடிச்சிந்தை” எழுதிய அண்ணாமலை ரெட்டியாரை எழுதும்போது அவரின் பாடலை சிலாகிக்கும்போது கிடைத்த நிறைவு அந்த இடத்தில் கிடைத்தது.

பக்தி என்பது ஏதோ ஆன்மீகம் சார்ந்ததோ, கடவுள் நம்பிக்கை சார்ந்ததோ மட்டும் அல்ல. ஒன்றுக்காக தன்னை அர்ப்பணிப்பது, அதில் திழைப்பது. அப்படியான மனிதர்களை தான் இந்த பதிவுகளின் வழி தரிசித்துக் கொண்டிருக்கிறேன். ”பக்தி” பதிவுடன் அண்ணாமலை ரெட்டியாரின் இந்த நினைவும் ஒட்டிக் கொண்டது. வரும் வழியில் “ஒப்புக் கொடுத்தல்” என்ற வார்த்தை ஒன்று என்னை தொற்றிக் கொண்டிருந்தது. சிறு வயதிலிருந்தே தினமும் சர்ச்சில் கேட்ட வார்த்தை தான். மானுட மகன் தன்னையே ஒப்புக் கொடுத்திருக்கிறார்.  ஆன்மீகத்தில், கலையில், எழுத்தில், அரசியலில், சேவையில், செயலில் என தன்னை ஒப்புக் கொடுத்தவர்களைத்தான் தொகுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் மட்டுமே மகிழ்வையும் நிறைவையும் தேடிய மனிதர்களை தொகுத்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் அனைவரிடமும் இருப்பது “பக்தி” தான். எங்கோ அதன் உன்னதத்தை கண்டு கொண்டவர்கள்.. அதன் தரிசனத்தை கண்டடைந்து திரும்புதலில்லாத வாழ்வைக் கை கொண்டு  பிறருக்காக இருந்தவர்கள். ஆம் ஒப்புக் கொடுத்தவர்கள். பக்தி என்ற கலைச்சொல்  பற்றிய பதிவு சிந்தனைக்கான ஊற்றுமுகமாகக் கருதுகிறேன் ஜெ. அன்று முழுவதுமாக ”பக்தி” என்பதை உங்கள் பதிவின் வழியாக விரித்துக் கொண்டிருந்தேன். இந்த கலைச்சொற்கள் யாவும் ஒரு சிந்தனைக்கான தொடக்கப் புள்ளியாக அமைத்திருக்கிறீர்கள்.

“அறம்” பதிவிற்காகவும், “பக்தி” பதிவிற்காகவும் மிக்க நன்றி ஜெ. இந்த வரிசையில் நீங்கள் அடுத்து என்ன எழுதுவீர்கள் என்பதை நாங்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அறிதலை அளித்துக் கொண்டிருப்பதற்காக நன்றி ஜெ.

பிரேமையுடன்

ரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2022 11:31

பொன்னிநாதர் -கடிதம்

அன்புள்ள ஜெ

இன்று பூண்டி – பொன்னி நாதர் ஆலயம் குறித்த தமிழ் விக்கி பதிவை சுட்டி அளித்திருந்தீர்கள். வழக்கம் போல முற்றிலும் புதிய ஒன்றை குறித்த அறிதல். தமிழ் விக்கியில் இருந்து அக்கோயில் குறித்து விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

பதிவை படிக்கும் போது, இக்கோயில்கள் உள்ள இடத்திற்கான கூகுள் மேப் வழிகாட்டியை பதிவின் இறுதியில் இணைத்தால் நன்றாக இருக்குமா என்றொரு யோசனை தோன்றியது. பெரும்பாலும் இது கிறுக்குத்தனமானதாக இருக்கவே வாய்ப்பு. அல்லாவிடில் இதை செய்யலாம். முடிவு உங்களுடையது.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்

செய்யலாம்தான். ஆனால் அப்படிச் செய்யவேண்டியவை மிக ஏராளமாக உள்ளன. ஒன்று தொட்டு ஒன்றாகச் செய்துகொண்டே இருக்கவேண்டும். இன்னும் புதுமைப்பித்தனுக்கே பதிவு முழுமை பெறவில்லை.

ஜெ

பூண்டி பொன்னிநாதர் ஆலயம்

பூண்டி பொன்னி நாதர் கோயில் பூண்டி பொன்னி நாதர் கோயில் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2022 11:31

பாடத்திட்ட அரசியல் திணிப்பு

அன்புள்ள ஜெ,

வணக்கம். சியமந்தகம் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை வாசித்து வருகிறேன். உங்கள் ஆளுமை, படைப்பு, அனுபவம் என நீளும் வகைமையில் ஒவ்வொன்றும் சிறப்பாக வந்திருக்கின்றன; குறிப்பாக கவிஞர்களின் பார்வை.

கர்நாடக பள்ளிப் பாடத்திட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்த செய்திகளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அது குறித்த எதிர்ப்புகள், ஒரு எழுத்தாளர் இத்தகைய பாடத்திட்டத்தில் தன்னுடைய படைப்புகள் இடம்பெற விருப்பமில்லை என அறிவித்தமை,  இக்கடிதம் எழுதப்படும் நாளின் செய்தியாகிய ஒக்கலிக சமூகத்தின் எதிர்ப்பும், அதை சரி செய்ய அச்சமூகத்தை சேர்ந்த அமைச்சரை வைத்து விளக்கம் கொடுக்கும் முடிவும் என.

கர்நாடக பாடத்திட்ட மாறுதல். இந்த செய்தி என்னென்ன பாடங்களெல்லாம் நீக்கப்பட்டிருக்கின்றன என்பதை தொகுத்திருக்கிறது. காந்தி, அம்பேத்கர், சாவித்திரி பாய் பூலே, நாராயண குரு உள்ளிட்ட அரசியல்/சமூக பங்களிப்பாளர்கள், கோவில் நுழைவுப் போராட்டம், மகர்/சம்பாரண் சத்தியாகிரகம் உள்ளிட்ட நிகழ்வுகள், லங்கேஷ், ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் உள்ளிட்டோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய மாற்றங்களை ஆசிரியர்கள் தரப்பிலிருந்தோ, ஒரு இயக்கமாகவோ அல்லது நீதிமன்றம் வழியோ எதிர்க்கவியலா நிலையை அடைத்திருக்கிறோமா? அப்படி கேள்வி கேட்பதற்கான பயம் இங்கு மெல்லமெல்ல உருவாக்கி வருகிறதா? இல்லை இவை எல்லாம் என் அரசியல் நிலைப்பாட்டின் குறுகிய பார்வையா? இதை எழுதும் நாளின் இன்னொரு செய்தி: உபி அரசு வீடுகளை இடித்தமை சட்டத்திற்கு உட்பட்டதே என உயர்நிதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

விஜயகுமார்.

***

அன்புள்ள விஜயகுமார்,

மார்க்ஸியச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக வெளிப்படையாகவே ஜோஷி – பி.டி.ரணதிவே அறிவித்தது கல்விமுறையைக் கைப்பற்றுதல். அதை அவர்கள் இருபத்தைந்தாண்டுகளில் செய்தனர். எவர் நம் பாடத்திட்டத்தில் இருந்து நம் தத்துவமரபுகள் அனைத்தையுமே ஒட்டுமொத்தமாக வெளியே தள்ளினார்கள்? நம் கலைக்கோயில்கள் பற்றிய எச்செய்தியும் இல்லாமல் பாடத்திட்டங்களை வடிவமைத்தது யார்?

அது ஓர் எல்லை. அதற்கு எதிர்வினையாக இந்த எல்லை. இவர்கள் மிக எளிய அன்றாட மதவழிபாட்டை அன்றி எதையும் அறியாதவர்கள். மத அடையாளங்களே மதம் என நினைப்பவர்கள். அவர்களின் அரசியலுக்குகந்தவையே ஆன்மிகம் என நம்புபவர்கள். அவர்கள் அதை திணிக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் இன்று வென்றிருக்கிறார்கள்.

நம் கல்வியமைப்புகள் முழுமையாகவே அரசின் கட்டுப்பாட்டில் இன்று உள்ளன. கல்வித்துறைக்குள் அரசியலை நுழைப்பதை நாம் இந்திய சுதந்திரம் கிடைத்து, முதல் பாடத்திட்ட வடிவமைப்பின்போதே தொடங்கிவிட்டோம். அவரவர் அரசியலை நுழைத்துக்கொண்டே இருக்கிறோம். எந்த நிரூபணமும் இல்லாத ஆரிய திராவிட் கோடபாடு பாடமாக ஆனபோதே இது தொடங்கிவிட்டது. தமிழ்ப்பாடநூல்களில் இல்லாத அரசியல் திணிப்பும் அழிப்புமா?

இதில் எவருக்கும் எவரையும் குறைசொல்ல உரிமை இல்லை. முன்பிருந்தோர் எட்டடி பதினாறடி என பாய்ந்தனர், இப்போது வருவோர் நூற்றெட்டடி பாய்கிறார்கள். உங்கள் அரசியல் இடம்பெறலாம் என்றால் எங்கள் அரசியல் ஏன் இடம்பெறக்கூடாது என்று கேட்பார்கள் அல்லவா? எங்களுக்குத்தான் மக்கள் ஓட்டுபோட்டார்கள் என்று சொல்வார்கள் அல்லவா?

ஒன்றே செய்யக்கூடுவது, கல்வியில் எந்த அரசியலும் இடம்பெறக்கூடாது என்னும் ஒரு பொதுப்புரிதல் நாடளாவ உருவாக வேண்டும். அதன்பொருட்டு கல்வியாளர்கள் முன்னெழவேண்டும். அரசியலை, அதை உணரும் வயது வந்தபின் மாணவர்கள் அரசியல்பாடமாக பயிலட்டும். அங்கே எதை மறைத்தாலும் சென்று சேர்ந்துவிடும். அதை மக்களிடையே கொண்டுசென்றால் ஏற்கபப்டும்

மாறாக, எங்கள் அரசியல் நல்லது, அதை திணிப்போம், உங்கள் அரசியல் கெட்டது, அதை எதிர்ப்போம் என்பவர்களின் கூச்சல்களால் கல்விமுறை இன்னும் கீழேதான் செல்லும்.ஆனால் அதைத்தான் செய்வார்கள், அவ்வளவுதான் இவர்களின் முதிர்ச்சி. அந்த எல்லையைச் சுட்டிக்காட்டுபவர்களை முழுக்க முத்திரை குத்தி மறுபக்கம் தள்ளுவார்கள். தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொண்டே இருக்கிறது இந்திய முற்போக்கு – லிபரல் தரப்பு.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2022 11:30

July 13, 2022

கதிரும் கிளியும்

கபிலர் தமிழ் விக்கி கபிலர் கபிலர் – தமிழ் விக்கி

தொண்ணூறு கடந்த காளிக்குட்டி பாட்டியிடம் அமர்ந்து ‘பேச்சு கேட்பது’ எனக்கெல்லாம் அன்று பெரிய பொழுதுபோக்கு. காளிக்குட்டிப் பாட்டி ஒரு தொல்பொருள். காலம் முப்பதாண்டுகளுக்கு முன்னரே உறைந்துவிட்டது அவருக்கு. நான் சந்திக்கும் எழுபதுகளின் இறுதியில் அவர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்தார்.

அப்போது அவருடைய கணவர் உயிருடன் இருந்தார். அவருடைய ஒரே மகளும் உயிருடன் இருந்தாள். கணவர் எண்பது வயதில் மறைந்து முப்பதாண்டுகள் ஆகிவிட்டிருந்தன அப்போது. மகள் எழுபது வயதாகி மறைந்துவிட்டிருந்தாள். பேரப்பிள்ளைகளிலேயே நாலைந்துபேர் நாற்பது கடந்து இயற்கை மரணம் அடைந்துவிட்டிருந்தனர். பாட்டி பேரனின் மகனின் இல்லத்தில் ஒரு திண்ணையில் நடமாட்டம் இல்லாமல் அமர்ந்தும் படுத்தும் காலமில்லாத காலமொன்றில் வாழ்ந்தார்.

எல்லாமே ஒளிமிக்க நினைவுகள். முதல் நீலநிற ஜாக்கெட் தைத்துக்கொண்டது. முதல் பொன் கம்மல் அணிந்தது. திருவனந்தபுரம் ஆறாட்டுக்குப் போனது. திருவட்டாறிலும் திர்பரப்பிலும் பார்த்த கதகளிகள். திருவாதிரைக்களியில் பார்க்கவியையும் அம்புஜத்தையும் வென்று நின்று ஆடியது. நள்ளிரவில் குளிக்கச்செல்லும் நோன்புகாலம். இரவெல்லாம் அடைப்பிரமனுக்காக அடை அவிக்கும் ஓணத்துக்கு முந்தைய நாட்கள்.

பாட்டி தன் கணவரை நினைவுகூரும்போது எப்போதுமே முதல் வரி “என்ன உயரம்…நிலை தட்டும்…அப்படி ஒரு எடுப்பு!” உயரம் அவ்வளவு ஆழமாக பதிந்துவிட்டிருந்தது போல. பன்னிரண்டு வயதில் இருபத்திமூன்று வயது கணவனை ஏறிட்டுப்பார்க்கும் அளவுக்கே பாட்டி இருந்திப்பாள். அடுத்த நினைவு ‘வெள்ளிச்சரிகை போட்ட நேரியது….அந்தக்காலத்திலே ஊரிலே ஒரே சரிகைத்துணி அதுதான்…அறைக்கல் மகாராணிய விட்டா சரிகைத்துணி வச்சிருந்தது நான்தான்’

ஆனால் அந்த ஓரிரு வரிகளுக்குப் பின் ஆரம்பிப்பது ஒரு மாபெரும் விருந்து வர்ணனை. ”ஏழு கோட்டை அரிசி பொங்கியிருக்கு. சோறு வடிச்சு கொட்டுறதுக்கு பதினெட்டு பாயி. அதிலே ரெண்டாள் உயரத்திலே சோறு…ஆளுக்காள் வந்து சோறப்பாத்து அன்னலட்சுமீன்னு கும்பிடுறாங்க… பின்னே, அன்னம் தெய்வமாக்குமே? கண்கண்ட தெய்வமாக்குமே… “

“குழம்புகளை ஊத்தி வைக்கிறதுக்கு ஆத்திலே இருந்து தோணிய கொண்டுவந்து கழுவி உலத்தி வச்சிருக்கு….நாலு பெரிய தோணி. ஒண்ணிலே எரிசேரி, ஒண்ணிலே புளிசேரி, ஒண்ணிலே கூட்டுகறி, ஒண்ணிலே எரிவுகறி….உருளியிலே குழம்ப காய்ச்சி எடுத்து அப்டியே கொட்டி அதுக்குள்ள நல்லா அடுப்பிலே போட்டு சுட்டு பழுத்த கல்லுகளை போட்டு மூடிவைச்சா தளதளன்னு கொதிச்சுக்கிட்டே இருக்கும்…”

“எட்டூருக்குச் சோறு….ஒரு ஊரிலே ஒரு அடுப்பு எரியப்பிடாதுன்னு அப்பா சொல்லிட்டார்…வந்துகிட்டே இருக்காங்க.பன்னிரண்டு கொட்டகையிலே பந்தி. கைகழுவுறதுக்கு ஆத்துத் தண்ணிய அணகட்டி வாய்க்கால் வெட்டி கொண்டுவந்து ஓடவைச்சிருக்கு… ஒருவேளைச் சோறில்லை…ஒம்பதுவேளைச் சோறு. மூணுநாள் கல்யாணம். மருமக்கத்தாயம் மாதிரி இல்ல. எங்க மக்கத்தாய முறையிலே கல்யாணம்னா சோறாக்கும்… ஊருக்கே சோறு….”

“ஏன்னா, அப்டி சோறுபோட்டா ஆயிரம்பேரு வந்தா அதிலே அம்பதுபேரு அன்னம் தேடிவாற பேய்பூதங்களாக்கும். ஆவிரூபங்களுண்டு. தேவரூபங்களும் உண்டு. அம்பிடுபேருக்கும் அன்னம். அன்னமிட்டு நிறைஞ்சபிறகுதான் கல்யாணம்…”

அதுபோய்க்கொண்டே இருக்கும். ஒவ்வொரு கறியும், அதன் மணமும், அதன் காய்களும். அன்றெல்லாம் கடுகு தாளிக்கும் வழக்கம் இல்லை. கடுகே இல்லை. பச்சைமிளகாயும் கறிவேப்பிலையும்போட்டு தாளிப்பார்கல். கமுகுப்பாளை கோட்டிய கிண்ணங்களில் பாயசம். சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு…

நான் பேச்சை அவர்கள் குடும்பவாழ்க்கை நோக்கி கொண்டுசெல்வேன். ஆனால் பாட்டியை எவரும் வெளியே இருந்து தொடர்புகொள்ள முடியாது. உள்ளிருந்து காலத்தில் மறைந்தவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தனர். நாலைந்து வரி வேறேதேனும் பேசினால் மீண்டும் அந்தச் சோற்று வர்ணனை

“அந்தக்காலத்திலே சோறு அவ்ளவு அருமையாட்டு இருந்திருக்கு” என்று வெட்டுகத்தி தாமு சொன்னான்

திண்ணையில் அமர்ந்திருந்த குஞ்சன் பாட்டா “ஏலே, அப்பமும் இப்பமும் இங்க தீனிக்கு பஞ்சமில்லை. காய்ச்சிலும் கிழங்கும் இருக்க வேணாட்டிலே வேறெது தீனி? அது பஞ்சத்துக்க கொண்டாட்டம் இல்ல. ருசிக்கொண்டாட்டம்” என்றார். சீவிய பாக்கை வாயில் போட்டு “ஆனா அந்த ருசி சோத்துக்க ருசி இல்லடே. அது கூடி இருந்து திங்குறதுல இருக்குத ருசி… இப்பவும் காணிக்காரன் அப்டித்தான் திங்குதான். காக்காக்கூட்டம் அப்டித்தான் திங்குது. கிளிக்கூட்டம் அப்டித்தான் திங்குது”

”ஒரு சோற பத்தாளு தின்னா பத்துமடங்கு ருசி. பத்தாயிரம்பேரு தின்னா பத்தாயிரம் மடங்கு ருசி…எதுக்கு எட்டூரு சேத்து கூப்பிடுதாரு அவளுக்க அப்பா? ருசிய கூட்டுறதுக்காகத்தாண்டே…அதெல்லாம் உன்னை மாதிரி ரேடியோ கேட்டு சீரளியுதவனுக்கு மனசிலாகாது”

பாட்டியின் உள்ளத்தில் அவள் திருமணம் ஒரு பெருங்கொண்டாட்டமாக, தீனிக்களியாட்டாக பதிந்துவிட்டிருக்கிறது. உண்டாட்டு என்கிறார்கள் பழந்தமிழில். பழையகாலத்தவர் நினைவில் எல்லாமே கல்யாணம் என்றால் அதுதான். பெருமை என்றால் அந்த உணவுத்திருவிழாவின் பங்கேற்பும் உணவின் அளவும்தான்

சங்ககாலம் முதலே அப்படித்தான் போல. கபிலரின் நற்றிணை 376 ஆம் பாடல்.

முறஞ்செவி யானைத் தடக்கையில் தடைஇ

இறைஞ்சிய குரல பைந்தாள் செந்தினை

வரையோன் வண்மை போலப் பலவுடன்

கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்

குல்லை குளவி கூதளங் குவளை

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்

சுற்றமை வில்லன் செயலைத் தோன்றும்

நற்றார் மார்பன் காண்குறின் சிறிய

நன்கவற்கு அரிய உரைமின் பிற்றை

அணங்கும் அணங்கும் போலும் அணங்கி

வறும்புனங் காவல் விடாமை

அறிந்தனிர் அல்லிரோ அறனில் யாயே.

முறம்போன்ற செவிகொண்ட யானை

தும்பிக்கையை வளைப்பதுபோல

முதிர்ந்து வளைந்த செந்தினையை

கூவி அழைக்கும் கூச்சல்களுடன்

வள்ளல் வழங்க களியாடும் மக்கள் போல

சுற்றத்துடன் உண்ணும்

வளைந்தவாய் பசுங்கிளிக்கூட்டமே

துளசி, காட்டுமல்லி, கூதாளி, குவளை

என மலர்சேர்த்த மாலையை அணிந்து

தோளிலமைந்த வில்லுடன் வந்து

அசோகமரத்தடியில் நின்றிருப்பவனைக் கண்டால்

அவனிடம் கூறுங்கள்

நாளை அணங்கும் அணங்குகொள்ளும் போலும்!

அணங்கை உணர்ந்து

தினைப்புனக் காவலுக்கு என்னை விடுதில்லை

கருணையற்ற அன்னை என்று

அறியமாட்டீர்களா என்ன?

இற்செறிப்புக்கு அன்னை ஆணையிட்டுவிட்டாள். ஏனென்றால் தலைவிக்கு அணங்கு கூடியிருக்கிறதென்று நினைக்கிறாள். நாளை வரும் வேலன் வெறியாட்டில் அணங்கு என்ன என்று சொல்லப்போகிறான். அவனிடம் திருமணம் பேசச்சொல்லுங்கள் என்கிறாள். அவனை அவள் வில்லேந்தியவன் ஆயினும் குளிர்மலர் மாலை அணிந்தவன். அசோகமரத்தடியில் வந்து நிற்பவன்.

ஆனால் கிளிகளைச் சொல்லுமிடத்தில் அவள் கனவு வந்துவிட்டது. உண்டு களியாடும் கிளிக்கூட்டம்.அது ஒரு மாபெரும் விருந்தின் காட்சி. சங்க இலக்கியங்களில் தலைவி திருமணம் குறித்து பேசும்போதெல்லாம் இந்த ஊண்களியாட்டு குறிப்புணர்த்தப்பட்டு விடுகிறது.

அத்துடன் கவிதை வாசிப்பில் எப்போதுமே கொஞ்சம் வழிவிட்டு செல்ல, அத்து மீற இடமுள்ளது. அந்தக் கிளிகளைத்தானே அவள் அத்தனை நாள் ஆலோலம் பாடி துரத்திக் கொண்டிருந்தாள்? சுற்றம் அலர்பேசும் நாவும் நோக்கும் கண்களுமாக மட்டும்தானே இருந்தது?

அதற்குமேல் கபிலனுக்கே உரிய அந்த உவமை. இலைமடல்கள் செவிகளென்றாக, விளைந்த கதிர் தும்பிக்கை என கீழே சரிந்த தினை. தினையை முன்னரே கண்டவர் ஒருகணம் அகம் மலர்ந்து ஆம் எனும் தருணம்.செம்பூக்கள் பரவிய மதகளிற்றின் துதிக்கையைத்தான் தினை மெய்யாகவே நடிக்கிறது. கவிதை நமக்களிக்கும் உச்சம். கபிலனுக்கும் நமக்குமிடையே அந்த ஈராயிரம் ஆண்டுகள் இல்லையென மறையும் மாயம்.

கபிலர் குன்று தமிழ் விக்கி

கபிலர் குன்று கபிலர் குன்று – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2022 11:35

கதிரும் கிளியும்

கபிலர் தமிழ் விக்கி

யுவன் சந்திரசேகர், மாற்று மெய்மை

ஓர் எழுத்தாளரை கலைக்களஞ்சியம் அறிமுகம் செய்யும்போது முழுமையாக முன்வைக்கவேண்டும் என்பது ஒரு நெறி. முதன்மைக் கலைக்களஞ்சியங்களில் அவ்வெழுத்தாளர்களின் எழுத்தின் இயல்பு, அவர் முன்வைக்கும் அடிப்படைக் கொள்கைகள் ஆகியவையும் வரையறை செய்யப்பட்டிருக்கும். மாற்றுமெய்மை என்று யுவன் சந்திரசேகர் சொல்வதை வரையறை செய்யாமல் அவரைப் பற்றிய பதிவை முன்வைக்க முடியாது. ஆனால் அவர் வரையறைகளுக்கு எதிரானவர். குறைந்தபட்ச விளக்கம் மட்டுமே அளிக்கவேண்டும் என்னும் கொள்கை கொண்டவர். கலைக்களஞ்சியம் அவரை அவர் படைப்புகளில் இருந்தே தொகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது

யுவன் சந்திரசேகர்  யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2022 11:34

புதுக்கவிதை என்னும் சொல்

சி.மணி சி.மணி சி.மணி – தமிழ் விக்கிஅன்புள்ள ஜெ,தமிழ் விக்கி புதுக்கவிதையை Revival Poetry என்று மொழிபெயர்க்கிறது. (https://tamil.wiki/wiki/C._Mani). இதுதான் சரியான மொழிபெயர்ப்பா? நான் Modern Poetry என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இதைப் பற்றி இணையத்தில் தேடியபோது Modernist Poetry என்ற பெயரும் தென்பட்டது (https://en.wikipedia.org/wiki/Modernist_poetry).Revival Poetry என்பதற்கு மதம் தொடர்பான ஒரு பொருளும் இருப்பது போல் தெரிகிறது.https://oxford.universitypressscholarship.com/view/10.1093/oso/9780197510278.001.0001/oso-9780197510278-chapter-1https://www.amazon.com/Things-Above-Revival-Poetry/dp/B09TBB3FYQநன்றிடி.கார்த்திகேயன்அன்புள்ள கார்த்திகேயன்,புதுக்கவிதை என்னும் சொல்லாட்சி எஸ்ரா பவுண்ட் பயன்படுத்திய New Poetry என்பதன் நேரடி மொழியாக்கம். க.நா.சு. அதைச் செய்தார். அதன்பின் அச்சொல் ஒரு கலைச்சொல்லாக நிலைகொண்டது. ஆனால் ஆங்கிலத்துக்கு தமிழில் இருந்து புதுக்கவிதை என்னும் சொல்லை மொழியாக்கம் செய்யும்போது  Modern Poetry என்பதே சரியான சொல். மறுமலர்ச்சிக்கால கவிதை என்னும் சொல்லாட்சிக்கே Revival Poetry என்பது பொருந்தும். இச்சொல்லாட்சிகள் பலசமயம் குழம்பிவிடுகின்றன. மாற்றிவிடுகிறோம். நன்றிஜெக.நா.சுப்ரமணியம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.