Jeyamohan's Blog, page 748

July 9, 2022

பொன்னியின் செல்வன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

நடு நிசியில் தான் பொன்னியின் செல்வன் டீசர் லான்ச் நிகழ்ச்சியில் நீங்கள் பேசியதை கேட்டேன். சிலிர்ப்பாக இருந்தது.

பல வருடங்களாக இங்கு ஏராளமான எழுத்தாளர்களின் பெயர் கூட நில்லாமல் மறைந்திருக்கிறது. இன்றும் சுந்தர ராமசாமி என்ற பெயரை பலர் அறிந்திலர். புதுமைப்பித்தன் சிகிச்சைக்கு கூட பொருளின்றி துயர்ப்படும் நிலை இருந்தது. அப்படியிருக்க, இன்று நீங்கள் ஒரு எழுத்தாளராக அம்மேடையில் நின்று பேசினீர்கள். மனதில் தோன்றியது ஒன்றுதான். பகீரதன் தன் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்ய கங்கையை பல காலம் தவமிருந்து உலகிற்கு கொணர்ந்தான். இன்று நீங்கள் செய்ததும் அதை தான். 

நீங்கள் அங்கு ஜெயமோகனாக நிற்கவில்லை, மொத்த எழுத்தாளர்களின் ஓர் வடிவாக நின்றிருந்தீர்கள். விஷால் ராஜா தங்களைப் பற்றி எழுதிய கட்டுரையில் ஒரே நேரத்தில் நீங்கள் எளிதில் அணுகமுடிகிற அதே சமயத்தில் நெருங்கவே முடியாத ஆளுமையாக இருப்பதை சுட்டிக்காட்டி இருந்தார். அது மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகிக்கொண்டே வருகிறது. சாணி குழைத்து வைத்தால் நம்மருகே அசையாமல் அமர்ந்திருக்கும் பிள்ளையார், சற்று உற்று நோக்கினால் வியாசன் சொல்ல தந்தமுடைத்து எழுதும் பேராசான். வெண்முரசு மற்றும் தமிழ் விக்கி இவ்வெற்றியை விட மிகப்பெரியவை. ஆனால் பொன்னியின் செல்வன் பொதுமக்களிடம் விரைவில் சென்றடைகிறது. இன்று நீங்கள் பேசிய அந்த ஏழு நிமிடங்கள் மூலம் அவ்வளவாக வாசிப்பு பழக்கம் இல்லாத பலர் வெண்முரசின் மீதும் தமிழ் விக்கியின் மீதும் திரும்ப வாய்ப்பிருக்கிறது. 

பொது மேடைகளில் பேசுகையில் நீங்கள் முதலிலேயே அவையின் கவனத்தை பெற்றுவிட அவர்களுக்கு அறிமுகமில்லாத பெயருடன் தொடங்குகிறீர்கள் என்று நினைக்கிறேன். முதல் வார்த்தையே பாலா சாம்ராஜ்யம் என்று ஆரம்பித்தீர்கள். ஒரு பொறியியல் கல்லூரியில் ரோஜர் பென்ரோஸ் என்று தொடங்கியதாக சொன்னீர்கள். இன்றே பலர் பாலா சாம்ராஜ்யம் மேல் ஆவல் கொண்டிருப்பர்(நான் உட்பட). ‘வெந்து தணிந்தது காடு‘ டீசரில் தங்களின் பெயர் முதலில் வந்தது. சினிமா அனைவரிடமும் எழுத்தாளரை முன்னிறுத்தும் ஊடகமாக திகழ்கிறது. எழுத்துலகைப் பற்றி சொல்லாப் பிழை உங்களால் அகல வேண்டும்.

நன்றி

அன்புடன்

சீரா

***

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசியது சிறப்பாக இருந்தது. மிகக்குறைவான நேரத்தில், மிகச்சுருக்கமாகவும் ஒன்றும் விட்டுப்போகாமலும் பேசினீர்கள். பொன்னியின் செல்வன் ஏன் சினிமாவாக எடுக்கப்படவேண்டும், அதன் விளைவு என்னவாக இருக்கும், அதை திரைக்கதையாக ஆக்குவதன் சிக்கல்கள், அது சினிமாவாக ஆனால் என்ன கூடுதலாகச் சேரும் ஆகிய அனைத்தும் அந்த ஆறு நிமிட உரையில் இருந்தன. வாழ்த்துக்கள்

செல்வ பிரபாகரன்

***

அன்புள்ள செல்வ பிரபாகரன்

ஏழு நிமிட உரை என்பது இன்று உலகளாவ புகழ்பெற்று வரும் ஒன்று. ஏழுநிமிட உரைகளை ஆற்றுவதற்கு சில நெறிகள், சில உத்திகள் உள்ளன.

ஏழுநிமிட உரைக்கான ஒரு பயிற்சி முகாம் நடத்தினாலென்ன என்னும் எண்ணம் உள்ளது. பார்ப்போம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2022 11:31

அமெரிக்கா, அறம் -கடிதங்கள்

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது குழந்தைகளின் முன்…

அன்புள்ள ஜெ

அமெரிக்கா பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யலாமென்று நினைத்தேன். ஆனால் என் ஆங்கிலம் எவ்வளவு குறைவானது என்று ஒரு பத்திக்குமேல் காட்டிவிட்டது. புழக்க ஆங்கிலமும் தொழில் ஆங்கிலமும் அதற்கு போதாது.

அமெரிக்கக் கட்டுரைகள் மிகக்கூர்மையானவை. ஆணியடிப்பவை. ஆனால் வழக்கம்போல ‘அதிலே ஒரு நுட்பமான அரசியல் இருக்கு…’ என்ற பேச்சுக்கள் ஆங்காங்கே நடக்கின்றன மற்றபடி அமைதிதான். ஏனென்றால் அக்கட்டுரை நேரடியாகவே பெற்றோரை தகுதிப்படுத்திக்கொள்ளச் சொல்கிறது. இங்கே பெற்றோர் ஏற்கனவே வாழ்க்கையில் வெற்றிபெற்று அமெரிக்கா வந்துவிட்டவர்கள் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ’ஆட்டம் பாட்டமெல்லாம் தமிழ் கலாச்சாரம் கெடையாது. கொஞ்சம் படிச்சுப்பாருங்க’ என்கிறீர்கள்.

நான் சொல்வதும் நீங்கள் சொல்வதுதான். நான் என் நண்பர்களிடம் சொல்வேன். நம் இல்லங்களில் தமிழ்நாடு பற்றிய ஆங்கிலப்புத்தகங்களின் ஒரு நூலகம் இருக்கவேண்டும். நம் பிள்ளைகள் படிக்கிறார்களா என்பது அவர்களின் தேர்வு. நாம் அளிக்கவேண்டும். அவர்களின் பள்ளிகளில் எதையாவது எழுதிக்கொண்டுவரச்சொன்னால் தமிழ்நாடு பற்றி எழுதச் சொல்லவேண்டும்.

தாமஸ் புய்க்ஸ்மா மொழியாக்கம் செய்த திருக்குறள் பற்றி ஒரு எட்டாம் கிளாஸ் பெண் ஒரு கட்டுரை எழுதி வகுப்புக்கு கொண்டுசென்றால் கெத்துதானே?

ஆனந்த் சேஷாத்ரி

Aram அறம்

அன்புள்ள ஜெ,

நானும் என் இரண்டு மகன்களும் தமிழ் விக்கியில் அறம் பற்றிய கட்டுரையின் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்தோம். ரெண்டுபேருக்கும் சரியாகத் தமிழ் தெரியாது. ஆங்கிலமும் பேச்சுமொழியாக இந்தியும்தான் தெரியும். அவர்களுக்கு அந்தக் கட்டுரை spellbinding அனுபவமாக இருந்தது. மொத்த தமிழ்ப்பண்பாட்டையும் குறுக்காக வகுத்துவரும் ஒரு சொல் அது. அற்புதமாக மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. தமிழ் விக்கி ஏன் தேவை என்று புரிந்தது. நம் அடுத்த தலைமுறைக்கு தமிழ்ப்பண்பாடு இப்படித்தான் சென்று சேரமுடியும்.

கல்யாணி மாதவ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2022 11:31

July 8, 2022

எழுத்து எழுதியவனை மீட்காதா?

அன்புள்ள ஜெ

“படைப்பியக்கச் செயல்பாடு என்பது ஒருவன் தன்னுள் உள்ள அனைத்தையும் குத்திக் கிளறிவிடுவதுதான். காமம், வன்முறை, கீழ்மைகள், இருள்கள். அவற்றை அவன் தெளியவைக்க கொஞ்சம் தாமதமாகும். அதற்கான வழி இலக்கியத்துக்குள் இல்லை. இலக்கியம் இலக்கியவாதிக்கு வழிகாட்டாது. வாசகனுக்கே வழிகாட்டும். எழுதுவது அதுவாகி நடிப்பது. வெளியே வர வேறொரு பிடிமானம் தேவை.” – ஜெ

எந்த உணர்ச்சியையும் நடிக்க முடியாது. எத்தனை தூரம் அதற்குள் ஆழமாக இறங்கி செல்கிறோமோ அந்தளவுக்கு அவ்வுணர்ச்சியால் மெய்யாக ஆட்கொள்ளப்படுகிறோம். படைப்பியக்க செயல்பாட்டில் கிளறிவிடப்படும் உணர்ச்சியின் தீவிரம் என்பது சமூக ஆழ்மனம் வரை செல்லக்கூடியது. எந்த உணர்ச்சியும் அதை தாங்கப்படுபவனால் அறிய முடியாதவை. பார்க்கப்படுபவனால் புரிந்து கொள்ள இயல்பவை. இலக்கியம் வாசகனுக்கு வழிகாட்டுவது அவன் பார்வையாளன் என்ற நிலையில் இருப்பதாலேயே. இங்கே வாசகனின் பார்வையாளன் என்ற நிலை என்பது வெளியிலிருந்து பார்த்தல் அல்ல. வாசிக்கப்படும் படைப்பின் உணர்ச்சி தீவிரத்தில் கரைந்து போனாலும் அது எழுத்தாளனால் தனக்கு கொடுக்கப்பட்டது என்னும் தன்னுணர்வில் இருந்து எழுவது.

மறுபுறம் தனக்குள்ளிருந்தே எழுப்பும் படைப்பு என்னும் நிலையில் எழுத்தாளன் நாம் உணர்ச்சி வசப்பட்டால் சென்றடையும் நிலையிலேயே இருக்கிறான். நாம் யாரும் சொந்த உணர்ச்சிகளின் தீமைகளிலிருந்து தானே மீள்பவர்கள் அல்ல, வேறொன்றின் துணை கொண்டே வெளிவருபவர்கள். எழுத்தாளனும் இதே நிலையிலேயே இருக்கிறான். நமக்கும் அவனுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவெனில், நாம் சுயநலத்தால் உந்தப்படுகையில் அவனோ மேலான அறவுணர்வால் அவ்வுணர்ச்சிகரத்தை அடைகிறான். ஆகவே அது மகத்துவம் கொள்கிறது.

எனினும் உணர்ச்சிகளின் இயல்பினால் எத்தனை உயரம் சென்றாலும் அதிலேயே சிக்குண்டவன். வாசகனை பொறுத்தவரை தான் எதிர் படைப்பு என்ற புற இருமை நிலையால் உணர்ச்சிகரமாக ஆட்கொள்ளப்பட்டாலும் வெளிவருவதும் அதிலிருந்து அறிதலை தொகுத்து கொள்ள முடியும். எழுத்தாளனை பொறுத்தவரை அவன் படைப்பு என்பது அவனே தான். எனவே அவனுக்கு இலக்கியம் வழிகாட்டாது. இலக்கியம் கையாளும் கருக்களை வாழ்விலிருந்து சாரம்சப்படுத்தி தரிசனமாக்கும் தத்துவமும் அந்த உணர்வறிதலை ஆளுமையாக கொள்ள செய்யும் மெய்ஞான மரபுகளும் தான் அவனது வழிகாட்டியாக இருக்க முடியும். இந்த வழிகளில் செல்லும் எழுத்தாளன் தன் படைப்புகளில் இருந்து விலக்கத்தை அடைகிறான். அவற்றை தொகுத்து கொள்கிறான். செயலூக்கம் கொண்ட எழுத்தாளன் அடுத்தக்கட்ட உச்சங்களை நோக்கி செல்ல வழி வகுக்கிறது.

மேலுள்ள நீண்ட விளக்கம் கடிதத்தின் ஆரம்பத்தில் உள்ள உங்களுடைய வரிகளை புரிந்து கொள்ள எழுதியது. அவ்வரிகள் என்னை சீண்டி சமனிழக்க செய்தன. இலக்கியவாதிக்கு ஏன் இலக்கியம் வழிகாட்டாது ? என்ற கேள்வியாக மனதில் இருந்தது. அவ்வினாவிற்கு விளக்கம் தேடுகையில் முதலில் கடலூர் சீனு அண்ணாவை தொடர்பு கொண்டேன். அவரது பதிலை பின்வருமாறு சுருக்கலாம். ( பிழைகள் இருந்தால் அவை என்னுடையவை )

தத்துவாதி(கீழை) தன் தேடலில் வாழ்க்கை குறித்த முழுமை பார்வை, அதாவது ஒரு தரிசனத்தை சென்றடைகிறான். தன் அறிவாலும் தியானத்தாலும் சென்றடைந்த அத்தரிசனத்தை வாழ்க்கையின் பல்வேறு களங்களில் பரிசோதித்து பார்த்து விடைகளை அடைகிறான். அவற்றின் மூலம் மேன்மேலும் சமனிலை கொள்கிறான்.

கலையின் பாதை இதற்கு நேர் எதிரானது. கலைஞனுக்கு அடிப்படையில் ஓர் தேடல் உள்ளது. அவனது தேடலுக்கேற்றவாறு குறிப்பிட்ட கனவை சென்றடைகிறான். கனவின் மூலம் ஒரு விடையை அடைகிறான். ஆனால் கனவு கலைந்தவுடன் முழுமையாக அதிலிருந்து வெளிவந்து விடுகிறான், – நாம் எப்படி தூக்கத்தில் கனவு கண்டு விழிக்கிறோமோ அப்படி – இப்போது மீண்டும் அத்தேடலின் ஊக்கிரம் அதிகமாகிறது. முந்தைய கனவை மேலான கனவிற்கான ஏக்கம் அவனில் குடி கொள்கிறது. அது நிறைவின்மையின் சுழல் பாதை. எனவே இலக்கியம் இலக்கியவாதிக்கு வழிகாட்டாது.

அடுத்து தொடர்பு கொண்ட சுனீல் அண்ணாவின் பதில் என்னவெனில்,

ஜெ வை பொறுத்தவரை இலக்கியப் படைப்பின் உருவாக்கம் என்பது ஒருவகையான பீடிக்கப்பட்ட நிலை, சாமியாடி. அந்நிலைக்கு ஆட்கொள்ளப்பட்டவனால் சுயமாக அதை புறவயமாக விளங்கி தெளிவு கொள்ள முடியாது. இதுதான் இலக்கியம் இலக்கியவாதிக்கு வழிகாட்டாது என்பதன் விளக்கம்.

இருவரின் பதில்களும் ஒரு திருப்தியை கொடுத்தாலும் நிறைவின்மையை என்னில் எஞ்ச செய்தன. அதற்கான காரணமாக தோன்றுவது அவற்றின் மாயத்தன்மை தான். உங்களுடைய வரி ஒரு சூத்திரம் போல மின்னி செல்கிறது. அதற்கு விளக்கம் வேண்டி நான் சென்றவர்களோ செய்யுளுக்கு செய்யுள் புனைந்துவிட்டனர். உங்கள் வரியின் இறுக்கத்தை சற்று இளகச் செய்து நெருங்குவதற்கு வழியமைத்தன. நான் சென்றடைந்த விளக்கம் மாயத்தை நீக்கி மண்ணில் நிலை நிறுத்துகிறது. ஆனால் முழுமையானதல்ல. மூன்றும் தனித்தனியாக நிற்கின்றன. இவற்றை இப்படி இணைக்கலாம். சீனு அண்ணாவின் கனவு விளக்கத்திற்கு கீழ் புறக்காட்சிகளில் உணர்வேற்றம் செய்யப்பட்ட அகநினைவுகளை கனவுகள் என்கிறோம் என்ற வரியை இணைத்து என் விளக்கத்தை பிணைக்க வேண்டும். இறுதியில் கனவென்பது பீடிக்கப்பட்ட நிலை என்ற சுனீல் அண்ணாவின் விளக்கத்தை இணைத்தால் முழுமையை எட்டும் என நினைக்கிறேன்.

இவை இப்படியே இருக்கட்டும். என் விளக்கத்தின் இறுதி பகுதி இன்னொரு கேள்வியை தூண்டிவிட்டது. தன் முந்தைய படைப்பிலிருந்து தத்துவார்த்தமாக படைப்பாளி அடையும் விலக்கமே அவனை அடுத்தக்கட்ட உச்சத்திற்கு செல்ல வழி வகுக்கிறது என எழுதியுள்ளேன். எழுதுகையில் தன்னியல்பாக அப்படி வந்தது. ஆனால் அது குறித்த முழுமையான புரிதலில்லை. ஆனால் அந்த வரி உங்களை பார்த்து வந்தது என்பதில் துளி ஐயமும் இல்லை. ஏனெனில் சமகால எழுத்தாளர்களில் தன் படைப்பில் இருந்து முழுவதுமாக தன்னை விடுவித்து கொள்ளும் வேறொருவர் இல்லை என்பது என் சிறிய வாசிப்பு எல்லையின் அறிதல். இந்நிலையில் தனது முந்தைய படைப்பிலிருந்து உள ரீதியாகவும் தத்துவார்த்தமாகவும் படைப்பாளி கொள்ளும் விலக்கம் அவனது படைப்பியக்கத்தில் எவ்வகையான பாதிப்பை செலுத்துகிறது என்பதை கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா ?

அன்புடன்

சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்

இலக்கியம் ஏன் அதை எழுதுபவனுக்கு மீட்பளிக்காது என்பதை நான் எப்போதுமே சொல்லி வருகிறேன். ஆனால் அது வாசிப்பவனுக்கு உறுதியாக மீட்பளிக்கும்.இந்த முரண்பாட்டை பலமுறை பலகோணங்களில் விளக்கியிருக்கிறேன். மீண்டும் இவ்வாறு கூறுகிறேன். பிரமிள் ஒருமுறை கலைஞன் என்பவன் ஞானமடைய முடியாத ஞானப்பயிற்சி செய்பவன் என்று சொன்னார். முக்தி அடையமுடியாத யோகி

ஞானத்திற்கும் இலக்கியத்திற்கும் இடையே இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக காளிதாசனையும் கம்பனையும் பயின்று ஞானமடைந்தோர் பலர் உள்ளனர். பெரும் யோகியரின் உரைகளில் அவர்கள் மேற்கோளாக்கப்படுகிறார்கள். காளிதாசனின் வரி இலாத நடராஜகுருவின் உரை அரிது. கம்பன் பலருக்கு தெய்வ உருவம் ஆனால் அவர்க்ளைப்பற்றீய தனிப்பட்ட கதைகளில் அவர்கள் காமத்தால் அலைக்கழிந்தவர்களாக நிலையற்று அலைபாய்ந்து கொண்டிருந்தவர்களாக மிகையுணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக காட்டப்படுகிறார்கள். அந்தகதைகள் பொய்யாக உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை ஏனெனில் அத்தகைய ஏற்பு கதைகளுக்கு நீண்ட காலம் அமைவதில்லை.

ஓர் இலக்கியப்படைப்பை படிக்கும்போது அதன் வாசகன் அதன் கருத்துக்களை தெரிந்துகொள்வதில்லை.  திரும்பத்திரும்ப நமது கல்வி முறையில் அவ்வாறு நமக்கு சொல்லப்படுகிறது. ஒரு நீதி நூலில் இல்லாத எந்தக்கருத்தையும் இலக்கியம் சொல்லிவிடமுடியாது. இன்னும் சொல்லப்போனால் நீதி நூலில் மிகச்செறிவாகவும் அழுத்தமாகவும் சொல்லப்பட்ட ஒரு கருத்து இலக்கியப்படைப்பில் அனுபவங்களாகவும் உணர்ச்சிகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. நீதியைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நீதிநூல்களே உசிதமானவை. திருக்குறளுக்கு நிகராக தமிழில் வேறெந்த நூலும் நீதியை சொல்லிவிட முடியாது. திருக்குறள் இருக்கையில் இன்னொரு நீதி நூலை நாம் உருவாக்க வேண்டிய தேவையும் இல்லை.

எனில் இலக்கியத்தின் செயல்பாடு என்ன? இலக்கியம் ஒரு நிகர் வாழ்க்கையை உருவாக்குகிறது. நீதிகளை நாம் தெரிந்துகொள்வது வேறு நமது வாழ்க்கை அனுபவத்தில் அவற்றை வாழ்ந்து அடைவது வேறு ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை தீவிரமாக நடத்திக்கொண்டிருந்தாலும் அவரது அனுபவ மண்டலம் என்பது மிகச்சிறியதுதான். ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களை நோக்கி  ஒருவர் திறந்துகொண்டே இருந்தாலும் கூட அவருடைய உலகம் சிறியதுதான். ஆனால் இலக்கிய வாசகனுக்கு பலநூறு  வகையான வாழ்க்கைகளை வாழ்வதற்கான வாய்ப்பு அமைகிறது. கற்பனையில் அவன் இடங்களில் சூழல்களில் காலங்களில் பயணம் செய்து பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை வாழ்கிறான். ஆணாகவும் பெண்ணாகவும் வாழ்கிறான். ஏழையாகவும் செல்வந்தனாகவும் வாழ்கிறான். வீரனாகவும் கோழையாகவும் நல்லவனாகவும் தீயவனாகவும் வாழ்கிறான்.அவன் வாழ்க்கை பலமடங்கு பெரியது. எல்லையில்லாமல் விரியக்கூடியது.

இந்த வாழ்க்கை அனைத்துமே வாசகனைப் பொறுத்தவரை ஒருவகையான நடிப்புகள். அது நடிப்பென்று அவனுக்குத் தெரியும். ஆகவே அதிலிருந்து எது கொள்ள வேண்டுமோ அது மட்டுமே கொள்ளப்படுகிறது. ஒவ்வாதவை விளக்கப்படுகிறது. வீரியம் குறைய வைத்த வைரஸ் மருந்தென்றாவது போல இலக்கியத்தில் உள்ள தீமையும் நன்மையே செய்கிறது .மிக எதிர்மறை தோரணையும் கடும் வண்ணங்களும் கொண்ட நூல்கள்கூட,  குருதியும் சீழும் கண்ணீருமாக வந்தறையும் நூல்கள் கூட, அவற்றின் வாசகனை நேர்நிலை உச்சம் நோக்கி தான் கொண்டு செல்கின்றன. (அவை கலைப்படைப்பாக இருக்கும்போது)

ஏனெனில் அவை அவனை மெய்யான வாழ்க்கை ஒன்றை வாழச் செய்கின்றன. அவ்வாழ்க்கை வழியாக  அவன் இயல்பாகவே தனது தேடல் எதுவோ அதை நோக்கி செல்கிறான். கசங்கிய  காகிதத்தில் மை விரிசல்கள் வழியாக பரவுவது போல ஒரு இலக்கியப்படைப்பு ஏற்கனவே அந்த வாசகனின் உள்ளத்திலிருக்கும் தேடல்களைத்தான் நிரப்பிக்கொண்டு செல்கிறது. ஆகவே அவன் தனக்குரிய தலைசிறந்த படைப்பைத்தான் இலக்கியத்திலிருந்து உருவாக்கிக்கொள்கிறான்.

ஆகவே ஞானத்தேடலில் இருக்கும் ஒருவனுக்கு இலக்கியம் வழிகாட்டியும் ஆசிரியனும் என ஆக முடியும் .ஆனதற்கான பல்லாயிரம் உதாரணங்கள் உலகெங்கும் உள்ளன. தாந்தேயிலிருந்து ஷேக்ஸ்பியர் வரை, காளிதாசனிலிருந்து கம்பனிலிருந்து பாரதி வரை, நாம் மிக இயல்பாக ஏற்றுக்கொண்ட ஞானவழிகாட்டிகள் இலக்கியத்தில் உள்ளனர்.

இலக்கியம் விடுதலைக்கு வழிகாட்டாது என்பவர்கள் நவீனத்துவர்களில் ஒரு சிறு சாரார் மட்டுமே. அவர்கள் இலக்கியத்தை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதற்கும், வரலாறெங்கும் இலக்கியம் என்னென்ன செய்திருக்கிறது என்று  தெரிந்துகொள்வதற்கும் முயற்சி எடுக்காதவர்கள். பெரும்பாலும் தங்களுடைய சிறுஅனுபவங்களை மட்டும் எழுதும் சிறு எழுத்தாளர்கள். அவ்வாறு அவர்கள் கூறுவதை அவர்களின் படைப்பை வைத்தே நாம் மறுக்க முடியும். அவர்கள் சொல்வதை ஒரு தரப்பென்று எடுத்துக்கொள்ளவேண்டியது தான்

இலக்கியப்படைப்பு வாசகனுக்கு பலமடங்கு பெருகச்செய்யப்பட்ட வாழ்க்கையை அளித்து, அவனுடைய ஞானத்தேடலை பல மடங்கு தீவிரமாக்குகிறது. அவனது அறிதல்களை பலமடங்கு பெருக்குகிறது. வாசிப்பே ஒரு ஞானசாதகம் என்றும் ஒரு யோகம் என்றும் சொல்லலாம். அவ்வண்ணம் கொள்ளும் ஒரு வாசகன் இலக்கியப் படைப்புகளினூடாகவே தனது விடுதலையை அடையமுடியும்.  பாரதியைப்பற்றி ஜெயகாந்தன் பேசுகையில் பாரதி இலக்கியவாதி என்னும்  இடத்திலிருந்து ஞானாசிரியனாக எழுந்தார். அவ்வெழுச்சி அவன் பாடல்களுக்குள்ளே நடந்து முடிந்தது என்று கூறுகிறார்.

ஆனால் எழுத்தாளன் அந்த விடுதலையை தன் படைப்புகளினூடாக அடையமுடியாது. ஏனெனில் அவன் தன்னுள் அனைத்தையுமே பெருக்குகிறான். தன்னுள உச்சங்களையே அவன் படைப்பின் உச்சங்களாக நிகழ்த்துகிறான். அவ்வாறு பெருக்கும்போது தொட்டதும் பலமடங்கெனப் பெருகுவது காமமே. இதை ஒரு ஆசிரியனாக மீளமீளச் சொல்லி வருகிறேன். ஏனெனில் மனித உணர்வுகளில் பெருக வேண்டும் என்று இயற்கை விரும்புவது காமமே. ஆணின் காமமோ தன்னைப் பரப்புவதற்கென்றே அனைத்து வடிவங்களையும் உருவாக்கிக்கொண்டது. இலக்கிய ஆசிரியன் தன்னைப் பெருக்கிக்கொள்ளத் தொடங்குகையில் முதலில் அவன் தொட்டு விரியச்செய்வது காமமே .அது கட்டற்றது. அதை அவன் எளிதில் ஆளமுடியாது .முன்னரே அவனுக்கு வலுவான கடிவாளச்சரடுகள் இருக்குமெனில் அதை அவன் தன் ஆளுகைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் முற்றிலும் வெல்ல இயலாது.

இணையானது வன்முறை. வன்முறை தன்னை உளரீதியாகப் பெருக்கிக்கொள்ளக் கூடியது .அதன் விந்தையான முரணியக்கங்களில் ஒன்று குறிப்பிடத்தக்கது. வன்முறை உடல் சார்ந்து நிகழ்த்தப்படும்போது குறைகிறது. உடலின் எல்லை அதை கட்டுக்குள் வைக்கிறது. உடல்சார்ந்து வன்முறையில் ஈடுபடுபவர்கள் எப்படியோ வன்முறையின் எல்லையையும் அறிந்தவர்கள்.

(வன்முறையை நிகழ்த்தாமல், அதை உடல்நிகழ்வாக நடிப்பவர்களே போர்க்கலை பயில்பவர்கள். அவர்கள் வன்முறையை கடந்துவிட்டிருப்பதை நான் எப்போதும் கண்டுவருகிறேன். சிறந்த உதாரணமாக பல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்களைச் சொல்வேன். அவர்கள் மிக அமைதியான, வெள்ளந்தியான மனிதர்கள். அண்மையில் அப்படித் தோன்றியவர் தேகி பட தயாரிப்பாளரும், களரி பயிற்றுநடுமான நிரஞ்சன். நாளெல்லாம் வன்முறையை நடிப்பவர். பயிற்றுவிப்பவர். மிகமிக அமைதியானவர், அகிம்சையும் கருணையும் கொண்டவர்)

மாறாக உடல்சார்ந்த வன்முறையை அச்சத்தால், ஒழுக்கத்தால், உடல்வலிமையின்மையால் தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்பவர்கள் உள்ளத்தால் உச்சகட்ட வன்முறை நோக்கி செல்பவர்களாக இருப்பார்கள். அந்த வன்முறை கட்டற்றது. ஏனெனில் அங்கே அதைக்கட்டுப்படுத்தும் கூறு என உடல் இல்லை. நெறி மட்டுமே உள்ளது. ஆனால் ஆழுள்ளம் நெறியை அறியாது. நெறிகளால் கனவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. சாமானியனின் கட்டற்ற வன்முறையையே நாம் சினிமாக் கதைநாயகனில் காண்கிறோம்.

எழுத்தாளனில் எழும் காமமும் வன்முறையும் படைப்பின் வழியாக வெளிப்படுகையில் கலையென ஆகுகையில் அவை பிறிதொரு வடிவு கொள்கின்றன. கலையின் ஒழுங்கு கலையின் நோக்கம் ஆகியவை அந்தக்காமத்தையும் வன்முறையையும் செம்மையாக்கம் செய்து வாசகனுக்கு அவற்றின் சாராம்சமாக எழும் முழுமை அறிதல் ஒன்றை அளிக்கின்றன. ஆனால் ஆசிரியனுக்கு அவை வெறும் காமமும் வன்முறையுமாகவே நின்றுவிடுகின்றன. கலையாக அவை மாறும்போது அவை அவனிலிருந்து மிக விலகி பிறிதொன்றாகிவிடுகின்றன.

எனவே அவன் தொட முடியாத ஒன்றாகிவிடுகின்றன. அவன் தன் படைப்பில் தன்னுடைய வெறும் காமத்தையும் வன்முறையையுமே பார்ப்பான். மறுபக்கமிருந்து அதைப்பார்க்கும் ஒரு வாசகன் அதில் வாழ்வின் மெய்மையை இப்பிரபஞ்சத்தின் முழுமையின் சாராம்சத்தை காணமுடியும். கம்பன் கம்பராமாயணத்தில் காமமும் வன்முறையும் மட்டுமே நிறைந்திருப்பதையே காண்பான் நான் காணும

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2022 11:35

பொன்னியின் செல்வன் விழா உரை

பொன்னியின் செல்வன் ‘டீசர்’ வெளியீட்டு விழா 8-ஜூலை-2022 அன்று சென்னையில் நிகழ்ந்தபோது ஆற்றிய சிறிய உரை.  இந்த படத்தின் ஆதார நோக்கம் மற்றும் இது உருவான விதம் ஆகியவற்றைப்பற்றி சில சொற்கள். பொன்னியின் செல்வன் விக்கி [image error] பொன்னியின் செல்வன் (நாவல்) – தமிழ் விக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2022 11:34

மீரா – மறக்கக்கூடாத ஒரு பெயர்

போகிற போக்கிலான ஒரு குறிப்பாக அல்லாமல் அதிகாரபூர்வமான ஓர் ஆவணப்பதிவாகவே வரலாற்றில் எஞ்சவேண்டியவர் மீரா. அவருடைய பணிகள் அத்தகைய அர்ப்பணிப்பு கொண்டவை. அவர்களைப் போன்றவர்களை அடையாளம் காண்பதன் வழியாகவே நாம் நம்மை வகுத்துக் கொள்கிறோம். நமக்கு அடையாளமும் இலக்கும் அளித்துக்கொள்கிறோம்

மீரா 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2022 11:33

 பதேர் பாஞ்சாலி வாசிப்பு.

ஆர். ச ண்முகசுந்தரம்

பதேர் பாஞ்சாலி 

பதேர் பாஞ்சாலி பதேர் பாஞ்சாலி – தமிழ் விக்கி

விபூதிபூஷண் பந்தோபாத்யாய

[image error] விபூதிபூஷண் பந்தோபாத்யாய – தமிழ் விக்கி

வணக்கம்.. இந்திய நாவல்கள் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது தங்கள் கட்டுரைகள்.. சுரா அவர்கள் இந்திய இலக்கியங்கள் பால் பெரிய கவனம் கொள்ளாமல் இருந்தது.. அவரது கடைசிக் காலங்களில் தங்கள் சிபாரிசின் பேரில் இந்திய இலக்கியங்களை வாசித்தது.. இவை ஆழமான மன நகர்வுகளைத் தருவதாக சுரா கூறியது போன்ற அனுபவங்களை அம்மாதிரி கட்டுரைகளில் பதிந்துள்ளீர்கள்.

இந்திய  இலக்கியங்களை  நான் ஓரளவேனும் வாசிக்க காரணம் தங்கள் கட்டுரைகளும் அவற்றில் இடம் பெற்ற மேற்கண்டவை போன்ற செய்திகளும் எனில் அது மிகையன்று..

இன்று அத்தகைய வகைமைகளில் முக்கியமான படைப்புகளை நானறிவேன் எனில் அதற்கும் தாங்களே அதிகளவு காரணம்.. சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்றவை வெளியிட்டுள்ள முக்கியப் படைப்புகளை பேசும் தங்களின் இணைய கட்டுரை நினைவிற்கு வருகிறது.

வாசிப்பில் உள்ளோரை பதேர் பாஞ்சாலி ஏதோ ஒரு விதத்தில் செய்தியாக வந்து சேர்ந்த வண்ணமாக இருக்கும்.. எனக்கும் இந்நாவல் குறித்த அப்படியான செய்தி சேர்க்கைகள் நிறைய உண்டு..

துர்க்காவும், அப்புவும் தங்களது  துன்பங்களை தங்களைச் சூழ்ந்துள்ள இயற்கையைக் கண்டு அதில் கரைந்து இன்னல்களை கரைத்துக் கொள்கின்றனர் என்ற இந்நாவல் பற்றிய வாசித்த வரி மனதில் நின்று விட்டது.. இதன் பிறகு  பதேர் பாஞ்சாலியை வாசிக்க என்னுள் வேகம் அதிகமானது..

வாசிப்பதற்கு முன் தங்களது, எஸ் ரா வினது என இவ்விரு எழுத்தாளுமைகளின் பதேர் பாஞ்சாலி விமர்சனத்தை வாசித்தேன்.. பிறகு நாவலை வாசித்தேன்.. மீண்டும் அவ்விருவர் விமர்சனங்களை வாசித்தேன்.. தாங்கள் நாவலை உயர்த்த, எஸ் ரா சத்ய ஜித்ரே திரைபடத்தை சிலாகிக்கிறார்.

அப்பு, துர்க்கா இருவர் வழியே எனது பால்யங்களின் அமிழ்ந்து போன அதே நேரம் முக்கியமான எனக்கே எனக்கான அனுபவங்களை மீட்டுக் கொள்ள முடிந்தது.. அவ்வனுபவங்களை நன்கு சிந்திக்க அவை இன்னும் ஆழமாக  என்னை மாற்றுவதை  உணர்ந்தேன்.

நதி , காடு என இயற்கையின் பெரிய படைப்புகளெல்லாம் நாவலில் நிறைவாக வந்து மனதில் நிறைகின்றன.

அந்த வயது முதிர்ந்தவள் , அப்புவின் தந்தை மரணங்களை விட துர்க்காவின் மரணம் தரும் வலி வேறு மாதிரியானது. ஓட்டம், நடையென ஒரு வித துள்ளலோடே இருந்தவள், இல்லாமல் போகிறாள் என்பது மனதில் தரும் பிசைவு  அதிகமானது.

இந்த நாவலின்  சிறுவர்கள் பேசிக் கொள்ளும் பகுதிகள், தஸ்தாவஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை நினைவுபடுத்துகிறது.. கரமசோவிலும் சிறுவர்கள் மட்டுமே வரும் பேசிக் கொள்ளும் பகுதிகள் முக்கியமானவை.

நீண்ட நாள் (ஆண்டுகள்)  எண்ணம் நிறைவேறியது. பதேர் பாஞ்சாலி வாசிப்பை எனது வாசிப்பில் மிக முக்கிய ஒன்றெனவே   எண்ணுகிறேன். …நன்றி.

முத்தரசு

வேதாரண்யம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2022 11:31

July 7, 2022

அமெரிக்கா, சிங்கப்பூர் -கல்வி

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது குழந்தைகளின் முன்…

அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை…

அன்புள்ள ஜெ,

அமெரிக்கக் குழந்தைகள் பற்றிய உங்கள் கருத்தை வாசித்தேன். இந்தியக் கல்விமுறை பற்றிய கடுமையான விமர்சனமும் அதில் இருந்தது. என் கேள்வி, நீங்கள் சிங்கப்பூரில் மூன்றுமாதம் இருந்தீர்கள். அங்கே பல்கலைக்கழகத்தில் பணியாற்றினீர்கள். சிங்கப்பூர் குழந்தைகள், கல்விமுறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

(பெயர் வேண்டாம்)

அன்புள்ள நண்பருக்கு

பெயர் சுட்டி இக்கேள்வியை ஒரு சிங்கை குடிமகன் கேட்டிருந்தால்தான் ஆச்சரியம்.

நான் சிங்கப்பூரில் கவனித்தவை.

சிங்கப்பூரில் இருந்த நாட்களில் பள்ளிமாணவர்களுக்கான வகுப்புகள் இருந்தன. ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான வகுப்புகளும் இருந்தன.

பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை முற்றிலும் எதிர்மறையான உளப்பதிவே எனக்கு உருவாகியது. சிங்கப்பூர் கல்விமுறை என்பது ஜப்பானைப் பார்த்து நகலெடுத்தது. மிகமிகக் கடுமையான வீட்டுப்பாடங்கள் வழியாக நிகழ்வது. ஆகவே மாணவர்கள் பயிற்சிக்குத் தயாராக இருந்தனர். மிகப்பணிவானவர்களாகவும் இருந்தனர். ஆனால் கவனிக்கும் பயிற்சி அறவே இல்லை. இந்திய மாணவர்களில் பத்துக்கு ஒருவர் சற்று கவனிப்பார்கள். சிங்கப்பூரில் சொல்லப்படுவதை கவனித்த ஒரு மாணவரைக்கூட நான் பார்க்கவில்லை. அது தேர்வுக்கான பாடம் அல்ல, அதில் வீட்டுப்பாடம் இல்லை என்று சொன்னதுமே முழுமையாக ‘ஆஃப்’ ஆகிவிட்டனர்.

அமெரிக்கா போல மொழியால் சிங்கப்பூர் குழந்தைகள் அகன்றுவிடவில்லை. தமிழ் பேசுகிறார்கள், தமிழ் புரிகிறது. அவர்களின் ஆங்கிலம் மிகப்பலவீனமானதும்கூட. மிகக்குறைவான சொற்களைக்கொண்டு பேசப்படும் ஒரு பேச்சுமொழிதான் அது. அங்குள்ள சிக்கல் அங்குள்ள கல்விமுறை புத்தகங்களை வாசிப்பதை ஊக்குவிப்பதில்லை. அமெரிக்கக் கல்விமுறை முழுக்கமுழுக்க மாணவர்களின் சொந்த வாசிப்பை ஊக்குவிப்பது. சிங்கப்பூர் கல்விமுறை குறிப்பிட்ட பாடங்களை ஓர் உச்சகட்ட பயிற்சியாக பயில்வது. ஜப்பானிய, கொரிய கல்விமுறை அது

(ஆனால் கொரியாவும் சிங்கப்பூரும் இப்போது கல்விமுறையை அமெரிக்க பாணிக்கு மாற்ற  மிகத்தீவிரமாக முயல்கிறார்கள். வாசிப்பை ஊக்குவிக்கிறார்கள். அதனால்தான் நான் அழைக்கப்பட்டேன். அங்கே இந்த தகவல்தொழில்நுட்ப யுகத்தின் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்னும் தெளிவும் அதற்கான திட்டங்களும் கொண்ட கல்வியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர், மாணவர் , பெற்றோர் நிலைகளில் அதன் விளைவுகள் தெரிய பல ஆண்டுகளாகும்).

இன்று சிங்கப்பூர் மாணவர்களில்  ஒருவருக்குக் கூட கதைகளில் ஆர்வமில்லை. கதை எழுத, வாசிக்க நான் சொல்லித்தரவேண்டும். கதை என்னும் வடிவம் பற்றி பேசவேண்டும் என ஜுராசிக் பார்க் படத்தில் இருந்து தொடங்கினேன். அதுகூட எவருக்கும் நினைவில்லை. அவர்கள் ஜுராசிக் பார்க் என சொன்னது ஒரு வீடியோ விளையாட்டு. ஒவ்வொரு குழந்தையிடமும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடியோ விளையாட்டுக்கள் இருந்தன.

அவர்கள் கவனிக்காமைக்கு ஒரு காரணம் பெற்றோர். சிங்கப்பூர் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மிக உயர்தரமான கல்வியை அடைவதாக நினைக்கிறார்கள். அவ்வெண்ணத்தை குழந்தைகளுக்கும் அளித்துவிட்டிருக்கிறார்கள். ஆகவே குழந்தைகள் தன்னம்பிக்கையுடன், மேற்கொண்டு கற்கும் ஆர்வமில்லாமல் உள்ளன. ஏற்கனவே உயர்தரக்கல்வியை பெறுவதாக எண்ணுகின்றன. அது உண்மை அல்ல. சிங்கப்பூரின் பள்ளிகள் மிக உயர்தரமான கட்டமைப்பு கொண்டவை, ஆனால் பயிற்றுமுறை மிகப்பின்தங்கியது.

இந்திய மாணவர் அளவுக்குக்கூட நூல்களை வாசிப்பவர்கள் அல்ல சிங்கப்பூர் மாணவர்கள். சிங்கப்பூரின் பல்கலைக் கழக நூலகத்திலேயே ஒரு மாணவன் புத்தகம் எடுப்பதும் வாசிப்பதும் மிக அரிது.சிங்கப்பூர் இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் தொழில்நுட்ப அடிமைகள். பலவகை விளையாட்டுகள், சூதாட்டங்கள், தொடர்புத் தொழில்நுட்பங்களில்தான் ஆர்வம். சிங்கப்பூரின் சீன மாணவர்கள் வகுப்பிலேயே பங்குமார்க்கெட்டில் பல ஆயிரங்களை சம்பாதித்துவிடுகிறார்கள் என்பதை கண்டேன்.

ஆனால் ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் வேறுவகையில் இருந்தனர். அவர்களுக்கு இலக்கிய அறிமுகம் பெரும்பாலும் இல்லை. பாடங்களை மட்டுமே அறிந்திருந்தனர். தமிழகத்து கல்லூரி மாணவர்களின் அதே தரநிலை. ஆனால் கவனித்தனர், ஆர்வமாக முயன்றனர், இரண்டு மாதங்களில் முப்பதுபேரை கதை எழுதச்செய்தேன். பிரசுரத் தகுதி கொண்ட பன்னிரு கதைகள் தேறின. மூன்று கதைகள் சிறந்த கலைப்படைப்புகள்.

சிங்கப்பூர் பள்ளி மாணவர்கள் தங்களைப் பற்றி கொண்டிருக்கும் அசாதாரணமான  திருப்தியே பெரியதடை. குறைபாடு இருப்பதை எவரும் அவர்களிடமோ, பெற்றோரிடமோ சொல்வதில்லை. சிங்கப்பூர் வாழ்க்கை வசதிகளில் முதல் உலகைச் சேர்ந்த நாடு. ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் முதல் உலகமாக திகழ்வது அந்த உலகியல் வசதிகளால் அல்ல. அங்குள்ள முதன்மையான கல்விமுறையாலும், மிக விரிவான பண்பாட்டுச் செயல்பாடுகளாலும்தான். அமெரிக்காவும் ஐரோப்பாவும் அவற்றின் மகத்தான பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்டவை. அந்நாடுகளை கோலம் என்றால் புள்ளிகள் அப்பல்கலைக்கழகங்களே.

முதல் உலக நாடுகளில் உள்ள கல்விமுறை உருவாக்கிய ஒரு ‘கலாச்சார பதப்படுத்தல்’ அங்குண்டு. அமெரிக்கா சென்றவர்கள் அறிவார்கள், அங்கே வாசிப்பு ஒரு மாபெரும் சமூகச்செயல்பாடாக நடந்துகொண்டிருக்கிறது. நான் பார்ப்பது கண்ணில்படும் பத்துபேரில் ஒருவர் எதையேனும் வாசிப்பதைத்தான். அந்த வாசிப்பே அவர்களை முதல் உலகமாக வைத்துள்ளது. அம்மக்களை அந்த வாசிப்பு கற்பனையில், ஆராய்ச்சியில் முன்னிலையில் நிறுத்துகிறது. அதுவே அவர்களின் வெற்றிக்கு அடிப்படை.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கலையிலக்கியங்களில் படைப்பாக்கம் செய்வதற்கான, சிந்தனைக்கான அத்தனை நெறிகளும் மிக இளமையிலேயே அறிமுகமாகிவிடுகின்றன. சிந்தனைக்கான எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன. சிந்தனையில் ஈவிரக்கமில்லாத போட்டியும் உள்ளது. அதில் வெல்லாதவர்களை தவிர்த்துவிட்டு, அந்தப் பண்பாடு வெல்பவர்களை நம்பி முன் செல்கிறது. ஆகவே அதன் விசை மிக அதிகம்.

(ஆனால் அமெரிக்க இந்தியர்கள், குறிப்பாக தெலுங்கர்களும் தமிழர்களும், பெரும்பாலும் எதையும் படிப்பதில்லை. அமெரிக்க மலையாளிகள்கூட உள்ளூர் மலையாளிகளை விட வாசிப்பு மிகக்குறைவானவர்கள். அவர்கள் இந்திய மனநிலையை அங்கே அப்படியே தக்கவைத்துக் கொள்கிறார்கள்.  அந்த நாடுகள் அளிக்கும் மாபெரும் வாய்ப்புகளை பெரும்பாலும் அவர்கள் அறிவதே இல்லை. அங்குள்ள இந்தியர்களை, அங்குள்ள சூழலின் பின்னணியில் சந்தித்தால் மிக வெள்ளந்தியானவர்களாக தெரிகிறார்கள்)

அப்பட்டமாகச் சொன்னால், இன்றுள்ள சூழலில் மேகனாவோ ஸ்ரேயாவோ சிங்கப்பூர் கல்விச்சூழலில் இருந்து உருவாகவே முடியாது. அதற்கான ஒரு சின்ன சான்றைக்கூட சிங்கப்பூரில் நான் சந்தித்த ஏறத்தாழ இருநுறு குழந்தைகளில் நான் காணவில்லை. இந்தியாவோ சிங்கப்பூரோ அமெரிக்காவை, ஐரோப்பாவைச் சென்றடைய இன்னும் நூறாண்டுகள் ஆகும் – இப்போதே முழுமூச்சாக முயன்றால்…

ஆனால் இந்திய நிலைமை நேர் எதிர். நேற்று என்னை ஒரு கல்லூரிப்பேராசிரியர் வந்து சந்தித்தார். அவர் சொன்னார் பாடத்திட்டத்தில் அவர் கொஞ்சம் வாசிக்கத்தக்க ஒரு நூலை பரிந்துரை செய்தாலே ‘பிள்ளைகளுக்கு புரியாது சார்’ என தவிர்க்கச் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டம் மேலும் மேலும் எளிமையாக ஆக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சொந்தமாக ஒரு பத்தி எழுதத்தெரியாமல் இன்று தமிழ், ஆங்கில மொழிகளில் முனைவர் பட்டம் பெற்றுவிட முடியும்.

(தமிழகம் முழுக்க ஏறத்தாழ முந்நூறு கல்லூரிகளில் ஆங்கிலம் முதுகலைப் படிப்பு உள்ளது. ஆண்டுக்கு ஐந்தாயிரம் பேர் வரை முதுகலை ஆங்கிலம் பட்டம் பெறுகிறார்கள். தேடிக்கொண்டே இருக்கிறோம், ஒருசில ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களை கண்டுபிடிப்பது திகைப்பூட்டும் அளவு அரிதாக இருக்கிறது. தமிழகத்தில்  ஆங்கிலக் கல்வி அனேகமாக இல்லாமலேயே ஆகிவிட்டிருக்கிறது. எவருக்கும் ஆங்கிலத்தில் உரைநடை எழுத தெரியவில்லை. தேர்வு ஆங்கிலமும், முகநூல் ஆங்கிலமும் மட்டுமே தெரிகிறது)

என்ன காரணம்? இன்று கல்லூரிகள் தங்களுக்கான நிதியை தாங்களே தேடவேண்டும். அதற்கு எளிமையான கல்வி அளித்து பட்டங்களை அள்ளி வீசவேண்டும். அப்போதுதான் மாணவர் எண்ணிக்கை பெருகும். கல்லூரிக்கு நிதி வரும். அந்தப் பட்டங்களால் எப்பயனும் இல்லை. ஆனால் இது ஒரு வகை ‘கல்விப்பெருக்கம்’ என்றும் ‘ஜனநாயக வளர்ச்சி’ என்றும் கருதப்படுகிறது. இதற்காக வாதிட பெரிய ‘நிபுணர்குழு’வே உள்ளது.

சிங்கப்பூரில் நான் பள்ளி மாணவர்களுக்கு கருக்களை அளித்து மறுநாள் கதையாக எழுதிவரச்சொன்னேன். அனேகமாக எவருமே எதையுமே எழுதிவரவில்லை. நாலைந்துபேர் கொண்டுவந்த கதைகளை பார்த்ததுமே தெரிந்தது, அவர்களின் பெற்றோரால் எழுதப்பட்டவை. அப்பெற்றோரிடம் பேசி, அந்தக்குழந்தை பயில்வதற்காகவே அப்பயிற்சியை அளித்தேன் என விளக்கமுயன்றேன். தோல்விதான். ஒரு மாணவர்கூட சாமானியமாக படிக்கத்தக்க உரைநடையில் ஒரு பத்தி கூட எழுதவில்லை. தேர்வு ஆங்கிலம்தான்.  இத்தனைக்கும் நான் சந்தித்தவர்கள் தெரிவுசெய்யப்பட்ட நல்ல மாணவர்கள்.

அமெரிக்கப் பெற்றோருக்கு சொல்வது இது, உங்கள் பிள்ளைகள் உலகின் மிகச்சிறந்த கல்விமுறையில் பயில்பவர்கள், அவர்களுக்கு மிகச்சிறந்ததை அளிக்க நீங்கள் தயாராகிக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் பெற்றோருக்கு கொஞ்சம் மாற்றிச் சொல்வேன். உங்கள் குழந்தைகள் மூன்றாமுலகத் தரம் கொண்ட ஒரு கல்விமுறையில்தான் பயில்கிறார்கள். அதை தரமான கல்வி என எண்ணி மயங்காதீர்கள். அவர்களுக்கு அக்கல்விக்குமேல் ஒரு தற்கல்வியும் தேவை. அவர்களை வாசிக்கப்பழக்குங்கள். நூல்களை அளியுங்கள். அதற்கு நீங்கள் தயாராகிக்கொள்ளுங்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2022 11:35

குமுதினி, எல்லாமே அற்புதங்கள்.

[image error]

குமுதினியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்டு ஒரு பெண் எழுதியிருந்தார்.

‘குமுனிதிக்கு 10 வயதில் 16 வயதான ஸ்ரீனிவாச ஐயங்காருடன் மணம் நிகழ்ந்தது. கணவனின் ஆதரவில் இலக்கியங்களை வாசித்தார். அவருக்கு இளமையில் ஒரு காய்ச்சல் வந்தபின் செவிகள் கேட்காமலாயின. அதன் தனிமையே அவரை எழுதத் தூண்டியது. ஆனால் நகைச்சுவையான எழுத்தின் வழியாக அந்த தனிமையை கடந்தார்’

”மேலே சொன்ன ஐந்து சொற்றொடர்களில் ஒரு நாவல் இருக்கிறது. எல்லா வரியுமே நம்பமுடியாமல் இருக்கிறது”

குமுதினி  குமுதினி குமுதினி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2022 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.