Jeyamohan's Blog, page 752
July 2, 2022
ஆறுமுகப்பெருமாள் நாடார், நாட்டாரியல் உ.வே.சா.
1998 முதல் அ.கா.பெருமாள் அவர்களை அனேகமாக நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருந்தேன். அ.கா.பெருமாளின் பேச்சில் வந்துகொண்டே இருக்கும் பெயர்களில் ஒன்று ஆறுமுகப்பெருமாள் நாடார். ஒருமுறை அவர் பேசிக்கொண்டிருந்தபோது ஆவேசமாக “உ.வே.சாவை மட்டுமே போற்றுறோம்… ஆறுமுகப்பெருமாள் நாடாரை மறந்திடறோம். ஏன்னா நம்ம மனசுலே கிளாஸிசம்தான் தேவைன்னு பதிஞ்சிருக்கு” என்றார்
அவரிடம் ஆறுமுகப்பெருமாள் நாடார் பற்றி ஒரு கட்டுரை எழுதித்தரச்சொல்லி சொல்புதிது இதழில் வெளியிட்டோம். ஆறுமுகப்பெருமாள் நாடார் பற்றிய விரிவான வாழ்க்கைக்குறிப்பு முதல்முறையாக அச்சேறுவது அப்போதுதான் என நினைக்கிறேன். அக்குறிப்பின் விரிவாக்கம் பின்னர் அ.கா.பெருமாளின் நூலில் இடம்பெற்றது.
இப்போது அது தமிழ் விக்கி வழியாக வரலாற்று ஆவணமாகியுள்ளது
ஆறுமுகப்பெருமாள் நாடார்
ஆறுமுகப்பெருமாள் நாடார் – தமிழ் விக்கி
அமெரிக்கா, கடிதங்கள் 4
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை…
அன்புள்ள ஜெ
அமெரிக்கக் குழந்தைகள் பற்றிய கடிதம் கண்டேன். அதிலிருக்கும் ‘பணிவின்மை’தான் எனக்கு மிகவும் பிடித்தது. நம்மவர்கள் அமெரிக்கா சென்றாலே பணிவானவர்கள் ஆகிவிடுகிறார்கள். அமெரிக்காவுக்குச் சென்றதன் நன்றிக்கடன் செலுத்தும் மனநிலை வந்துவிடுகிறது. அமெரிக்காவுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் கனவு கொண்டவர்கள்தானே அவர்களெல்லாம். ஆகவே அவர்களும் அதே பக்திப்பரவச மனநிலையில்தான் பேசுவார்கள். அமெரிக்காவுக்கு வந்துவிட்ட தங்கங்கள் நீங்கள் என்று சொல்வார்கள். அவர்களின் பணம், கார் எல்லாவற்றையும் பார்த்து ஒருவிதமான பணிவு வந்துவிடும்.
நீங்கள் அவர்களை விட பலமடங்கு மேலான ஒரு நிலையில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அவர்களை ஆற்றுப்படுத்தும் பொறுப்புடன் பேசுகிறீர்கள். தமிழில் ஓர் எழுத்தாளரிடம் நாம் எதிர்பார்ப்பது இந்த கெத்துதான். பழங்காலம் முதல் இரண்டு மனப்பான்மைகள் இருந்து வந்துள்ளன. மன்னரையும் வள்ளலையும் பாடும் மனநிலை. நாமார்க்கும் குடியல்லோம் என்னும் மனநிலை. இரண்டாவது மனநிலை உள்ளவருக்கே ஆலோசனை சொல்லும் உரிமை உள்ளது.
அமெரிக்காவில் கொஞ்சம் சம்பாதித்து, கொஞ்சம் மேட்டிமைத்தனத்துடன் வாழ்பவர்களுக்கு இந்தக் குரல் எரிச்சலை அளிக்கும். ஆனால் அவர்களில் உங்களை வாசித்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு உங்கள் மேல் மதிப்பிருக்கும். நீங்கள் அவர்களை நோக்கியே பேசுகிறீர்கள் என நினைக்கிறேன்.
ஜெகன்
***
அன்புள்ள ஜெ,
கடைசியில் நீங்களும் பிள்ளைகளை ஹார்வார்ட் அனுப்புங்கள் என்றுதான் சொல்கிறீர்கள். ஆனால் ஹார்வார்ட் போகாமல் அவர்கள் வேறெங்காவது போனால் பதற்றப்படாமல் இருங்கள் என்றும் சொல்கிறீர்கள். அவர்களில் ஒருசாரார் நாளை இலக்கியம் நோக்கி வந்தால் அவர்களுக்காக தமிழ்ப்பண்பாட்டை விரித்து வையுங்கள் என்கிறீர்கள். நல்லது, பார்ப்போம்.
மகேந்திரன் ராமசாமி
***
தக்கலை புத்தகக் கண்காட்சி
முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஷ் குறிப்பு:
இன்று ஒரு நகராட்சி ஆணையாளரை சந்தித்து முதற்சங்கு இதழின் இரண்டு இதழ்களை கொடுத்தேன்… அவர் சில நிமிடங்கள் புரட்டிப் பார்த்துக் கொண்டு ‘பொன்னீலன், ஜெயமோகன் எல்லாம் எழுதுகிறார்கள் இல்லையா?’ என்றார்.
நான் பதிலுக்கு ‘உங்களுக்கு எந்த மாவட்டம்? பொன்னீலன், ஜெயமோகன் எல்லாம் தெரிகிறதே’ என்றேன்.
‘நெல்லை மாவட்டம், நான் கொஞ்சம் புத்தகப் பிரியன்’ என்றார்.
ஒரு மாதத்துக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, எனக்கு மிகவும் தெரிந்த RI யிடம் முதற்சங்கு இதழை கொடுத்தேன். அட்டைப் படத்தில் இருந்த ஜெயமோகன் அவர்களைப் பார்த்து ‘இவர் தொழில் அதிபரா? அட்டைப்படத்தில் போட நல்ல காசு வாங்கி விட்டாயா’ என்றார் … இந்த RI குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். தேர்வு எழுத மட்டுமே புத்தகங்களை படித்தவர்.
குமரி மாவட்டம் கல்வி அறிவில் சிறந்த மாவட்டமா? நெல்லை மாவட்டம் கல்வி அறிவில் சிறந்த மாவட்டமா?… என்பதை குமரிமாவட்ட மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.
இதனால்தான் குமரி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்த சென்னை பதிப்பகங்கள் அஞ்சுகின்றன.எனவேதான் குமரி மாவட்ட மக்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க ஜூலை 15ஆம் தேதி தக்கலையில் புத்தகக் கண்காட்சியை நடத்த இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை தனது ஆயத்தப் பணிகளை செய்து கொண்டிருக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ஆம் தேதி முதல் தக்கலையில் 11 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. புத்தகக் கண்காட்சி அரங்கில் தினசரி மாலையில் நடைபெற உள்ள இலக்கிய நிகழ்வில் புத்தகங்களுக்கு விமர்சன அரங்கு நடைபெற இருக்கிறது. இந்த விமர்சன அரங்கில் உங்கள் நூல்கள் பங்கு பெற வேண்டும் என்றால் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை, தக்கலை.9442008269.சிவனி சதீஷ்
முதற்சங்கு.
இரு இணைய இதழ்கள்
வணக்கம் ஜெ
கடந்த ஒரு மாதமாக எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் ‘மெட்ராஸ் பேப்பர்’ இணைய இதழும், சமீபத்தில் கிழக்கு பதிப்பகத்தின் ‘கிழக்கு டுடே’ இதழும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. கவனித்து வருகிறீர்களா ?
விவேக் ராஜ்
https://www.youtube.com/channel/UCUa6gmXOzNEefCGnNvU0klA
அன்புள்ள விவேக்ராஜ்
பார்த்தேன் இரண்டுமே மிகச்சிறப்பான வடிவமைப்புடன் வெளிவருகின்றன. தி ஹிந்து போன்ற ஒரு மரபார்ந்த ஆங்கில இதழின் தோற்றம் மெட்ராஸ் பேப்பருக்கு உள்ளது. ஓர் வலைத்தளம் மட்டுமாக இல்லாமல் இதழாகவே தயாரிக்கப்படுவது தெரிகிறது.இரண்டு இதழ்களுமே இலக்கியம், அரசியல், தொழில்நுட்பம் என மூன்று களங்களிலும் நேர்த்தியான செயல்பாடு கொண்டுள்ளன.
ஆசிரியர் என நமக்கு ஆசிரியர் என ஒருவர் பின்னால் இருந்து செயல்படும் இணைய இதழ்களை நோக்கி வாசிப்பை குவிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. முகநூல் போன்றவற்றின் கட்டற்ற பிரசுரவெளியில் எதை கவனிப்பதென்றே தெரியாத நிலை உள்ளது. வெறும் வம்பர்களையே ஒருவர் நாள் முழுக்க கவனிப்பாரென்றால் அவர் தன் வாழ்க்கையை இருட்டாக்கிக் கொள்கிறார்
பொதுவாக இன்று நம்மில் பலர் முகநூல் வாசிப்பில் மிகுதியான நேரத்தைச் செலவிடுகிறார்கள். நம்மைப்போன்றே ஒருவர் எழுதுகிறார், நாம் அவருக்கு பதில் எழுதலாம் என்பதனால் நமக்கு ஓர் ஆர்வம் உருவாகிறது. ஆனால் இணைய அரட்டை என்பது இந்தக் காலத்தில் பாலுறவுப்படம், ரம்மி ஆட்டம் போல இணையம் வழியாக நம்மை ஆட்கொள்ளும் ஒரு போதை. நாம் அதற்குள் சென்று செலவழிக்கும் பொழுது மட்டும் வீணாவதில்லை. எதையாவது தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் மூடுகின்றன.அது சாதாரண இழப்பு அல்ல
ஒருவர் விட்ட மூச்சை இன்னொருவர் இழுக்கும் சமூக வலைத்தளச் சூழலில் மிக விரைவில் நம் உள்ளம், சிந்தனை, மொழி எல்லாமே குறுகிவிடுகிறது. சற்று விலகி நின்று நாம் சென்ற ஓராண்டில் எதைப்பற்றி பேசியிருக்கிறோம். எதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறோம் என்று பார்த்தாலே தெரியும். முகநூலில் மூன்றுநாட்களுக்கு ஒருமுறை உருவாகும் வம்புகளிலேயே உழன்றிருப்பதை காண்போம்.
இணைய இதழ்கள் நமக்கு வாசிப்பின் பழைய பொற்காலத்தை அனேகமாக இலவசமாக அளிக்கின்றன. இவை மிகப்பெரிய வாய்ப்புகள்.
ஜெ
July 1, 2022
வெந்து தணிந்தது காடு, எதைப்பற்றி?
அன்புள்ள ஜெ
வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் பார்த்தேன். ஏற்கனவே அற்புதமான ஒரு பாடலும் வெளிவந்திருந்தது.
இப்போது விக்ரம் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் டீசர்களிலும் துப்பாக்கி தென்படுகிறது. இதுவும் ஒரு வழக்கமான கேங்ஸ்டர் படமா என்ற எண்ணம் ஏற்படுகிறது.
நீங்கள் சினிமா பற்றி பேச விரும்புவதில்லை. இருந்தாலும் ஒரு தனிப்பட்ட ஆர்வத்தால் இந்தக் கடிதம்.
கிருஷ்ணமூர்த்தி
**
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
சினிமா பற்றிப் பேச விரும்பாதவன் நான். ஏனென்றால் இந்தக் களம் சினிமா விமர்சனத்தின் களமாக, சினிமா அரட்டைக்கான களமாக ஆகிவிடக்கூடாது என்பதனால்.
வெந்து தணிந்தது காடு நான் எழுதிய ஒரு கதை. அக்கதையை வாசித்த கௌதம் மேனன் அக்கதையின் நாயகன் பிறகு என்ன ஆனான் என்று கேட்டார். அவருடைய வாழ்க்கையை நான் சொன்னேன். அதுவே கதையாகியது.
விக்ரம் வேறொரு வகை அழகியல்கொண்டது. அது புராணக்கதைகளைப்போல. எல்லாமே பெரியவை. எல்லாமே கற்பனை. ஹாலிவுட்டில் அந்தவகையான படங்கள் நிறைய வருகின்றன. சில்வஸ்டர் ஸ்டாலோன், ஆர்னால்ட் ஷ்வார்ஸ்நெகர் நடித்தவை. அவற்றுக்கு நூறாண்டுக்கால வரலாறுண்டு. அவை எங்கே நடக்கின்றன என்றால் நம் கற்பனைக்களத்தில். அந்தக் கதைமாந்தர் எங்குள்ளனர் என்றால் நம் கற்பனையில். நம் அச்சம், நம் சீற்றம் ஆகியவையே விக்ரம் படமாக ஆகின்றன. அவை மனிதர்களால் ஆன கதைகள் அல்ல. அந்த மனிதர்கள் எல்லாம் உருவகங்கள் மட்டுமே. வெவ்வேறு உணர்வுநிலைகளை, கருத்துநிலைகளை அவர்கள் பிரதிநித்துவம் செய்கிறார்கள். வன்மேற்கின் கௌபாய் படங்கள் முதல் எல்லாமே அந்த வகைதான்.
வெந்து தணிந்தது காடு படத்தின் அழகியல் நேரடியான வாழ்க்கை. 99 சதவீதம் அது வாழ்க்கை. உண்மையில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையை ஏறத்தாழ அடியொற்றிச் செல்கிறது. அதிலுள்ள சூழல், அதிலுள்ள வன்முறை எல்லாமே உண்மை. அதிலுள்ள அந்த வாழ்க்கை அப்படியே உண்மை. நீங்கள் கிளம்பிச்சென்றால் அதை பார்க்கமுடியும். கொஞ்சம் தேடினால் இதழாளர்களால் ஆளையே கண்டுபிடித்துவிட முடியும். (ஆனால் எல்லாமே கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கும், சினிமாவுக்காக. சட்டத்துக்காக)
ஆகவே உண்மையான வாழ்க்கை எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் வெந்து தணிந்தது காடு. திரையில் நீங்கள் பெறவிருப்பது ஒரு வாழ்க்கையை சன்னல்வழியாகப் பார்த்த அனுபவம்.
நான் இப்போது தமிழ் விக்கி பணிகளில் ஈடுபட்டிருப்பதனால் எது வாழ்க்கையோ அது மட்டுமே கவர்கிறது. வாழ்க்கைக்கு மிகமிக அண்மையில் என்பதே என் ஆர்வமாக இருக்கிறது.
ஜெ
தமிழ் விக்கிசயாம் மரண ரயில்பாதை – ஒரு பெருங்கதை
அன்புள்ள ஜெ
கோ.புண்ணியவான் பதிவு வழியாகச் சென்று கையறு வழியாக சயாம் மரண ரயில்பாதை என்ற பதிவை அடைந்தேன். இரவு 12 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். அத்தனை ஹைப்பர் லிங்குகளையும் படித்து முடிக்கையில் காலை நான்கரை. கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.
எவ்வளவு பெரிய அழிவு. தமிழர் வரலாற்றின் மாபெரும் அழிவு. ஆனால் அதைப்பற்றி ஒரு பதிவுகூட இல்லாமல் அரைநூற்றாண்டை தமிழகம் தாண்டிவந்துவிட்டது என்று படித்தபோது, இன்றுகூட ஒரு நினைவுச்சின்னம் இல்லை என்று தெரிந்துகொண்டபோது கண்ணீர் கோத்துக்கொண்டது.
அங்குமிங்கும் மேலோட்டமான பதிவுகளை நானும் கண்டதுண்டு. சயாம் மரணரயில் நாவலைக்கூட படித்திருக்கிறேன். இந்தப் பதிவு வெறுந்தகவல்கள் வழியாகவே நாவல்களை விட உக்கிரமான சித்திரத்தை அளிக்கிறது. எவ்வளவு லிங்குகள். அந்த பேரழிவை வரைந்த ஓவியர்கள். அவர்களின் பிற்கால வாழ்க்கை. அந்த பேரழிவை நிகழ்த்திய ஜப்பானிய ஜெனரல்கள். அதைப்பற்றி எழுதிய எழுத்தாளர்கள்….ஜாக் சாக்கர் ஓவியர் ,பிலிப் மெனின்ஸ்கி ,ஜான் மென்னி ,ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட், ரொனால்ட் சியர்ல், ஜான் கோஸ்ட் ,ஏர்னஸ்ட் கோர்டான், ஹிரோஷி ஆபே ,எகுமா இஷிடா
பிரம்மாண்டமான ஒரு வரலாறு. முழுமையாக பதிவாகியிருக்கிறது அது. அண்மையில் இதற்கிணையான ஒரு நூலைக்கூட படித்ததில்லை
சயாம் மரண ரயில்பாதை
சயாம் மரண ரயில்பாதை – தமிழ் விக்கி
ஜாக் சாக்கர் ஓவியர்
பிலிப் மெனின்ஸ்கி
ஜான் மென்னி
ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட்
ரொனால்ட் சியர்ல்
ஜான் கோஸ்ட்
ஏர்னஸ்ட் கோர்டான்
ஹிரோஷி ஆபே
எகுமா இஷிடா
சயாம் மரணரயில்
கரசூர் பத்மபாரதி, ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்
தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் தான் வரலாறு, கலை, தொன்மம் பேணப்படுகிறது என எனக்கு ஒரு மனப்பதிவு இருந்தது. அதற்கு முதன்மையான காரணம் இங்கிருந்து வந்த வரலாற்று ஆசிரியர்கள். கால்டுவெல், ஹெக்.ஆர்.பெட் தொடங்கி, நீலகண்ட சாஸ்திரி, எஸ். வையாபுரிப்பிள்ளை, கே.கே. பிள்ளை, ஆறுமுகப் பெருமாள் நாடார், கா. அப்பாதுரை, நா. வானமாமலை என நீளும் பட்டியல் அ.கா. பெருமாள் வரை வருகிறது. அதற்கு பின்னால் வரும் தலைமுறையினரை ஒரு தனி பட்டியல் போடலாம்.
எழுத்தாளர்களும் இதே போல் தான் அவர்கள் எழுதி எழுதி இரு மாவட்டங்களின் மண்ணையும் அதன் வரலாற்றையும் நிறுவியிருக்கின்றனர். மாறாக தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளைப் பற்றிய தகவல் என் வரை பெரிதாக வந்து சேரவில்லை (தஞ்சை விதிவிலக்கு). இதனை எழுதும் போது சோதனை செய்ய உங்கள் வரலாற்று நூல்களை வாசிக்க பதிவை எடுத்துப் பார்த்தேன். என் மனப்பதிவு சரியே என அது சொல்லியது.
எனக்கு தமிழ் விக்கி எழுத வரும் வரை கொங்கு மண்டலத்தில் ஒரு ஆய்வாளர் நிறையும், நாட்டார் சடங்குகள் கொட்டிக் கிடப்பதையும் பற்றி தகவல் தெறிந்திருக்கவில்லை. தக்கை ராமாயணம் சங்ககிரியில் இயற்றப்பட்டது என இப்போது தான் தெரியும். நீங்கள் எழுதிய பின்னே கு. அருணாச்சலக் கவுண்டர், தி.அ. முத்துசாமி கோனார், வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் என கொங்கு மண்டலத்தின் ஆய்வாளர்களைப் பற்றி அறிய முடிந்தது. அ.கா.பெருமாளின் தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் மூலமே வடதமிழகத்தில் கதைப்பாடல், தெருக்கூத்து, திரௌபதி விழா, பெரிய மேளம் வாசாப்பு நாடகம் என கலைகள் இன்றளவும் செழிப்புடன் வழக்கிலிருப்பதை அறிந்தேன்.
இந்நேரத்தில் தான் உங்களிடமிருந்து பெரியசாமித் தூரன் விருது அறிவிப்பு வந்தது. இன்று அவரின் கூத்தாண்டவர் திருவிழா குறுஆய்வேட்டை தமிழ் விக்கியில் பதிவேற்றிய போது ஒரு வித பெருமிதம் உண்டானது. அக்குறு ஆய்வேடு சந்தேகமே இல்லாமல் தமிழ் நிகழ்த்தப்பட்ட ஆய்வு சாதனைகளுள் ஒன்று. நாட்டார் ஆய்வுகளில் உள்ள மிகப் பெரிய சவால் என நான் நினைப்பது ஒரு சடங்கு அல்லது தொன்மக் கதை ஒன்றாக இருப்பதில்லை. அவை ஒன்றிலிருந்து வேறொரு வடிவம் கொண்டு வளர்ந்திருக்கும். நீங்கள் அனந்தாயி கதையை பற்றி என்னிடம் சொன்னீர்கள். அது சமணக் கதையில் உள்ள கீரிப்பிள்ளையைக் கொல்வதிலிருந்து எப்படி ஸ்ரீவைகுண்டம் வந்தது என. தமிழக நாட்டார் வழக்கில் மகாபாரதக் கதைகளும் அவ்வண்ணம் ஒவ்வொரு கதை பல தனி வடிவம் கொண்டவை.
உதாரணமாக பத்மபாரதி ஆய்வு செய்த கூத்தாண்டவர் கதையில் வரும் மகாபாரதக் கதாபாத்திரம் அரவான். அரவானின் கதை வியாச பாரதத்திற்கும், வில்லிபுத்திர பாரதத்திற்கும் கூட வித்தியாசம் உள்ளது. வியாச பாரதத்திலிருந்து மணியாட்டி மகாபாரதமும், இசை நாடகமும் முற்றிலுமாக வேறுபடுகிறது. மணியாட்டி மகாபாரதத்தில் திரௌபதியே அரவானை பலியிடுகிறாள். அரவான் எனத் தெரிந்ததும் கிருஷ்ணன் மேல் கோபம் கொண்டு கிருஷ்ணனைக் கொல்லச் செல்கிறாள். இதிலிருந்து திரௌபதியை ரேணுகா தேவியாக, காளியாக வழிபடும் வழக்கம் தக்காண பீடபூமியில் இருக்கும் வழக்கத்திற்கு ஒரு கோடு இழுக்க முடிகிறது. வில்லுப்பாட்டு கதைகளில் கிருஷ்ணனின் மோகினி அவதாரம் வருகிறது. அதிலிருந்து திருநங்கையர் தங்களை கிருஷ்ணனின் அம்சமாக காணும் கதை விரிகிறது.
கோமுட்டி செட்டியாருக்கும் ஜமத்கினி முனிவர், பரசுராமருக்கும் என்ன தொடர்பு என்பதை பத்மபாரதியே வரலாற்று, தொன்ம தகவல்கள் மூலம் விளக்குகிறார். திருவிழாவில் ஒரு சின்ன சடங்கு கூட விடுபடாமல் மொத்தமாக தொகுத்து எழுதியிருக்கிறார். இது பத்மபாரதி தன் முனைவர் பட்டத்திற்காக செய்த முதல் ஆய்வு இதில் இத்தனை நேர்த்தி, கச்சிதம், இறங்கிய செயலில் முழுமையாக தன்னைக் கொடுக்கும் தீவிரம் என பிரமிக்க வைக்கிறது.
அவரது திருநங்கையர் சமூக வரைவியல் நூல் மேலே சொன்ன குறு ஆய்விலிருந்து விரிகிறது. திருநங்கையரின் அன்றாட வாழ்க்கை முறையில் தொடங்கி அவர்களின் சமூக பொருளாதார அமைப்பைச் சொல்லி அவர்களின் விழாக்கள், மருத்துவ முறை வரை ஒவ்வொன்றாகத் தொகுத்துள்ளார். அனைத்து தகவல்களும் தமிழ் சூழலில் அதிகம் பேசப்படாதவை, முற்றிலும் புதியவை, சுவாரஸ்யமானவை.
இன்று உங்கள் தளத்தில் வந்த ‘இலக்கியமும் சமூகமும்’ கட்டுரையில், “நண்பர்களே, நாம் தமிழகத்தில் பயணம் செய்தால் இங்குள்ள அத்தனை ஏரிகளும் கரையிடிந்து கிடப்பதைக் காணலாம். பாழடைந்து குப்பைமேடாகக் கிடக்கும் ஏரிகள் போல ஆகிக்கொண்டிருக்கிறது தமிழ்ப்பண்பாடும்.எங்கோ சிலர் அந்த ஏரிக்கரைகளுக்காக கவலைப்படுகிறார்கள். அந்த ஏரிக்கரைகளை பாதுகாக்க போராடுகிறார்கள். அவர்களை நாம் அறிவதே இல்லை.அப்படிப் போராடுபவர்கள் தான் நவீன எழுத்தாளர்கள் அவர்களுக்கு புகழ் இல்லை. பணம் இல்லை. அவர்களை நீங்கள் கேள்விப்பட்டே இருக்கமாட்டீர்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். பத்மபாரதியின் இன்றைய பொருளாதார நிலை நீங்கள் சொல்லி அறிந்தேன். கூடவே ஒன்றைச் சொன்னீர்கள், “ஆனால் அதைப் பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை. அடுத்தடுத்து என தங்கள் பணியிலேயே மூழ்கி இருக்கிறார்” என்றீர்கள்.
உண்மை தான், பத்மபாரதி போன்றவர்கள் இச்சமூகத்திற்கு முற்றிலுமாக கொடுக்கப் பிறந்தவர்கள் கொடுப்பது ஒன்றே அவர்களின் கொடையாக இருக்க முடியும். பிரதி எதிர்பாராமல் அவர்கள் அடுத்த பணியை நோக்கி தங்களை திருப்பிக் கொள்கின்றனர். மொத்த பாரதத்திற்காகவும் அரவான் எந்த தயக்கமும் இன்றி மறுசிந்தனையில்லாமல் தன்னைக் கொடுத்தான். பத்மபாரதி போன்றவர் இந்நூற்றாண்டின் அரவான். அவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இப்பாண்பாட்டிற்கு தங்களை முற்றளிப்பது ஒன்றையே அவர்கள் செய்கின்றனர்.
விஷ்ணுபுரம் தூரன் விருது முதலாம் ஆண்டு கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்படுவதில் நாம் கௌரவிக்கப்படுகிறோம் என நினைக்கிறேன். பத்மபாரதிக்கு வணக்கங்கள்.
நன்றி,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
அமெரிக்கா, கடிதங்கள்
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
அன்புள்ள ஜெ
நமது அமெரிக்க குழந்தைகள் தொடரை வாசித்து வருகிறேன். அங்குள்ள மெய்யான சிக்கலை அறிமுகப்படுத்தி விரிவான அளவில் தீவிரமாக அச்சிக்கலை கையாளும் கட்டுரை. பலமுறை நீங்கள் தனித்தனியாக குறிப்பிட்டு வந்ததெனினும் தொகுத்து ஒரே வீச்சில் சொல்கையில் அழுத்தம் கூடுகிறது. இக்கட்டுரை தொடர் எந்தளவு அங்குள்ளவர்களுக்கு முக்கியமோ அதே அளவிற்கு இங்குள்ள நம் அறிவார்ந்த வாசக சமுதாயத்திற்கும் முக்கியமானது. நமது பண்பாட்டு மரபென குழந்தைகளுக்கு கையளிக்க வேண்டியது எது என்பதற்கான தெளிவான வழிகாட்டல்.
இந்த கட்டுரை தொடர் வரிசையிலேயே இன்றைக்கு வெளியாகியிருக்கும் நம் குழந்தைகள் முன் பதிவில் இருக்கும் மேகனாவின் கடிதம் ஓர் உச்சம். படித்தது முதல் ஏற்பட்ட வியப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. உண்மையில் இந்த கடிதமே அந்த வியப்பை பகிரத் தான். பெரியம்மாவின் சொற்களுக்கு வந்த உச்சமான கடிதமாக இதுவே இருக்கும். தமிழகத்தில் வாழும் ஒருவனாக 15 வயது பெண் ஒருவரின் கடிதம் அது என்பது பெரும் வியப்பை அளிக்கிறது. அமெரிக்க கல்வித்தரமும் அங்கிருந்து வரும் ஒருவரின் சிந்தனையும் எந்தளவுக்கு வீரியமானது என்பதன் சான்று.
இவ்வளவு அறிவுத்தகுதி மிக்க குழந்தைகளிடம் தமிழ் பண்பாடு என நாலாந்தர மேடைப் பேச்சாளர்களையும் வெற்று சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் கோஷங்களையும் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும். இந்த குப்பைகளை முன்வைத்தால் அவர்களின் ஏளனம் மட்டுமே கிடைக்கும். சற்றேனும் அறிவும் நுண்ணுணர்வும் உள்ளவர்கள் செய்ய கூடாதது.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள ஜெ
அமெரிக்கக்குழந்தைகள் தொடரை வாசித்தேன். மிக மிக யதார்த்தமான பரந்துபட்ட ஆய்வு என்று சொல்லவேண்டும். உங்கள் இத்தகைய கருத்துக்களின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் அந்த நூல், இந்த கோட்பாடு, இந்த தரவு என்றெல்லாம் ‘ஆய்வு’ பாவனை காட்டுவதில்லை. அந்தவகையான ஆய்வுகளைச் செய்பவர்கள் எல்லாருமே மலையைக் கெல்லி கடைசியில் எலியைத்தான் பிடிப்பார்கள். ஏற்கனவே முடிவுசெய்து வைத்திருக்கும் சர்வசாதாரணமான சில கருத்துக்களைச் சொல்வார்கள். அவை முற்போக்காக இருக்கவேண்டும், ஆய்வுநிறுவனம் விரும்புபவதாக இருக்கவேண்டும் என்றெல்லாம் பல நிபந்தனைகள் உண்டு.
நீங்கள் உங்கள் சுய அனுபவம், உங்கள் உள்ளுணர்வு ஆகியவற்றை நம்பி சொல்கிறீர்கள். உண்மையில் இதுதான் எழுத்தாளரின் வழி. இதைப்போல ஆய்வுகள் கூர்மையாக அமைய முடியாது. ஆய்வாளர்கள் தரவுகள் எங்கே என்று கேட்பார்கள். இதற்கு தரவுகள் தர முடியாது. வேண்டுமென்றால் ஒரே நாளில் தரவுகளை அள்ளிக் குவிக்கவும் முடியும். இதை வாசிப்பவர்கள் இதில் ஆதாரம் தேடுவதில்லை. உள்ளூர அவர்களுக்கும் இது சரி என அவர்களின் அனுபவங்கள் வழியாகத் தோன்றும். அதன்வழியாகவே இவை ஏற்கப்படுகின்றன.
ஸ்ரீனிவாஸ்
அரசியல் கவிதை பற்றி கடைசியாக- கடலூர் சீனு
இரண்டாவது சூரிய உதயம்.
நமது அரசியல் கவிதைகள் – கடலூர் சீனுஅன்றைக்குக் காற்றே இல்லை.
அலைகளும் எழாது செத்துப்போயிற்று
கடல்.
மணலில் கால் புதைத்தல் என
நடந்து வருகையில்,
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.
இம்முறை தெற்கிலே.
என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது.
எனது மக்கள் முகங்களை இழந்தனர்.
எனது நிலம் எனது காற்று
எல்லாவற்றிலும்
அன்னியப் பதிவு.
கைகளை பின்புறம் இறுக்கிக்கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது நெருப்பு
தன் சேதியை எழுதியாயிற்று
இனியும் யார் காத்துள்ளனர்?
சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து
எழுந்து வருக.
சேரன்
இனிய ஜெயம்,
நமது அரசியல் கவிதைகள் பதிவு குறித்து, மனுஷ்ய புத்திரன் அவரது சக சல்லிகள், இன்குலாபிய தோழர்கள் அனைவரது வசைகளும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கப்பெற்றேன். நன்றி :) இந்த சில்லறைக் கூச்சல்களுக்கு வெளியே இந்த சூழல் வழியே உள்ளே வந்து, அரசியல் கவிதைகள் மற்றும் அவை குறித்து மேலதிகமாக வாசிக்க ஈடுபாடு கொண்ட ஒன்றிரண்டு புதிய வாசகர்களுக்கு அந்த பதிவின் சில விஷயங்களை சற்றே விரித்து விளக்கிவிட்டு, இத்துடன் இதை இங்கே நிறுத்திக்கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி பாரதி எழுதிய அரசியல் கவிதைகளில் முக்கியமானது பாஞ்சாலி சபதம். அவரது தேர்வு மிக முக்கியமானது. திரௌபதி வஸ்திராபரணம் பெரும்பாலும் வட இந்திய மகாபாரதத்தின் மூலத்தில் இல்லாத தமிழ்நாட்டுக்கு சொந்தமானதொரு வழக்கு.
பல்லவர் காலத்தில் பொது மனதில், வரும் எதிரி நாட்டுடன் போர் நிகழ்த்த வீரம் சார்ந்த மன நிலையை அவ்வாறே பேண, இங்கிருக்கும் கூத்து பிரதிகளை இடம் மாற்றி முன்பே இங்கு பரவலாக நாட்டார் வழக்கிலிருந்த திரௌபதி துகிலுரிப்பு அங்கே நிகழ்ந்தது.
பாரதியும் முந்தைய மரபில் இருந்து இதையே எடுத்துக்கொண்டு, செவ்வியல் பாரத பிரதியில் உள்ள உணர்வுகள் சமன் கொண்ட கலை அமைதி நிலையை உதறி, நாட்டுப்புற வடிவில் இசையில் உள்ள, உணர்ச்சிகளை உச்சம் வரை கொண்டு சென்று அதை திரள் மீது ஏவும் வகையை தேர்ந்து கொள்கிறார்.
இன்று பாரதி பாஞ்சாலி சபதம் எழுத நேர்ந்த பின்னணி காலாவதி ஆன பின்னும், அந்தப் புனைவு செவ்வியல் மரபிலும் நாட்டார் மரபிலும் சமமாக இழை கொண்டு பின்னி விரிந்த வகைமை கொண்டு, அந்த தனித்துவம் வழியே இன்றும் அது முக்கிய இலக்கியப் புனைவாக நிலை கொள்கிறது.
பாரதிக்குப் பிறகு எழும் நவீனத்துவ அலை காலத்தில் மார்க்சியம் உள்ளிட்ட நவீன கோட்பாடுகள் உள்ளே வருகிறது. தீவிர இலக்கியம் முன்வைத்த கலைக் கூறுகள், இடதுசாரி முன்வைத்த அழகியல் இரண்டையுமே சம காலத்தில் மிகுந்த அளவில் பாதிப்பை செலுத்தியவர் பாப்லோ நெருடா.
அதன் வழியே நவீனத்துவ அழகியல் ஓடை கண்ட முக்கிய ஆளுமை சுகுமாரன். இப்படி இன்னும் சிலர் உண்டு. நேரெதிராக வானம்பாடி இயக்கம், இடதுசாரி அழகியல் இரண்டிலுமே பொய்யான மனநிலையோடு நெருடாவை போலி செய்து நிறைத்த கவிதைக் குப்பை மலை, தனக்கு கீழே தமிழில் அரசியல் கவிதைகள் எனும் வகை மாதிரியையே போட்டு புதைத்தது.
அடுத்து கிளம்பி வந்தது, அதுவரையிலான காலத்தை வடிவமைத்த தத்துவவாதிகளை திண்ணையை காலி செய்ய வைத்து, கோட்பாட்டு புற வாசல் வழியே உள்ளே வந்து அந்த திண்ணையை ஆக்கிரமித்துக் கொண்ட அக்காடமிக் கோஷ்டி, சும்மாத்தானே இருக்கோம் கொஞ்சம் கோட்பாட்டை சொல்லி வைப்போமே என்று திருவுளம் கொண்டு அவர்கள் சொல்லிவைத்த கோட்பாடுகளை, தமக்கு புரிந்த வரையில் உருப்போட்டு, ’ஸோக்கா ஸொன்னாம்பாரு ஃபூக்கோ, அட்சாம்பாரு ஆல்துசாரு, கவுதுத்னாம்ப்பாரு தெரிதா, படுக்க போட்டாம் பாரு பார்த்து’ என்றபடி ஒரு பின்நவீன கோஷ்டி.
பிறப்பெடுத்த காரணம் சாக்கடையில் பீ வார மட்டுமே என்று ஒரு வாழ்வு. இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்த வாழ்வில் இருந்து ஒருவன் வெளியேற அவனுக்கு உள்ள முதல் பாதை. அவனது சுயம். அவனது சுயத்தில் சூடு விழும் போதுதான் இது அவமானம் என்பதை அவன் முதன் முதலாக உணர்கிறான். அதுவே அவனை கொதித்தெழச் செய்கிறது. புற வயமான பிற அனைத்து மாற்றங்களும் இந்த முதல் அக மாற்றத்தில் இருந்தே துவங்குகின்றன. அதைச்சொல்வதே மெய்யான அரசியல் கவிதை. அதை அகவயக்கவிதை என்று முத்திரைகுத்தி, கட்சிக்கோஷங்களை மடக்கி எழுதிவைத்தால் அது அரசியல் கவிதை ஆகாது.
தமிழ் நிலத்தில் கலை இலக்கியம் முதல் சமூக அறிவியல் அரசியல் வரை இந்த வாழ்வினது விடுதலைக்காக ரூம் போட்டு சிந்தித்து கொண்டு வந்த சர்வரோக நிவாரணியான வெளிநாட்டு பின்நவீன கோபாட்டு முதலில் சொல்வதே சாரம் என்ற ஒன்று இல்லை இருப்பதெல்லாம் சாரமின்மைதான் , சுயம் என்ற ஒன்று இல்லை அது ஒரு சமூக உற்பத்தி, அதிகாரம் என்று ஒன்றில்லை இருப்பதெல்லாம் நுண்ணதிகாரம் மட்டுமே, அறம் என்பது ஆதிக்க வர்க்க பெருங்கதையாடல், யதார்த்தம் என்ற ஒன்று ‘உண்மையில்’ இல்லை … இன்னும் இன்னும் என எத்தனை உண்மைகள் . அந்த தோட்டி வாழ்வின் சாக்கடை அளவு கூட அந்த தோட்டியுடன் சம்பந்தம் இல்லாத உண்மைகள்.
ராஜன் குறை என்ற சமூக சீர்திருத்த செம்மல் தலித்துகள் நடத்தை குறித்து நிகழ்த்தி சமர்ப்பித்த ஆய்வு மீது அதன் அறமின்மை குறித்து வினா எழுகையில் அவர் அளித்த பதில் வரலாற்று சிறப்பு மிக்கது.
” சமூக அறிவியல் ஆய்வு மீதான கோட்பாட்டுப் புரிதல் உள்ளவர்களுக்கு மட்டுமே அது விளங்கும்” இதுதான் பதில்.
இப்படி இதே போல கோட்பாடுகளால் அறமும் சுயமும் காயடிக்கப்பட்ட கவிஞர்களே இன்று தமிழ் நிலத்தில் அரசியல் கவிதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பலர். உதாரணத்துக்கு மட்டுமே இன்குலாப் மனுஷ்யபுத்திரன் கவிதைகளை சுட்டினேன்.
இரண்டாவதாக இவர்கள் அரசியல் கவிதையில் போடும் போலிக் கூச்சல்களுக்கும் இவர்கள் ஆதரிக்கும் அரசியலின் கள யதார்த்துக்கும் உள்ள தூரம். இன்குலாப் இந்து மதத்தை மட்டும் சாடு சாடு என்று சாடி தனது அரசியலில் ஃபார்ம் ஆனவர். பிற மதங்களையும் சாடி இருந்தால் அதுதானே புரட்சி. கவிஞர் என்று ஃபார்ம் ஆக சிச்சுவேஷனுக்கு இன்குலாப் எழுதிய பாடல்தான் புரட்சியை வெடிக்க வைக்க வந்த புரட்சி கீதம் என்றால், தமிழ் சினிமாவில் சிச்சுவேஷனுக்கு எழுதிய “மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்” பாடலும் புரட்சி கீதம்தான். (உண்மையில் நாங்க மனுஷங்கடா பாடலை விடவுமே இது நல்ல பாடல்.)
இது போக இவர்கள் பேசும் அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்து கொள்வோம். இந்த 60 வருட வரலாற்றில் மொத்த இடத்துசாரிகளும் அதிகாரமற்ற அரசியல் அனாதை என்றான பிறகு இன்றுதான் (ராம் சந்திர தோம்) ஒரே ஒரு பட்டியல் பிரிவை சேர்ந்தவர் அதன் போலீட் பிரோ வில் அருள் கூர்ந்து சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறார். பிரகாஷ் காரத் அளவு கட்சிக்குள் எந்த தலித்தும் உளைக்க வில்லை போலும். இதுதான். புரட்சிக்கும் இன்குலாபுக்கும் உள்ள தூரம்தான் அவர்களின் கவிதையில் உள்ள கலை அழகியலுக்கும், அரசியல் கூச்சலுக்கும் உள்ள தூரம்.
மனுஷ்ய புத்திரன் அவர்களை எடுத்துக்கொண்டால் அவரால் எதிர் கட்சியில் இருக்கும் டான்சி அரசி குறித்து மட்டுமே அரசியல் கவிதை எழுதி சாமியாட முடியும். டான்சி நில முறைகேடு என்ன முறையில் எவ்விதம் நிகழ்ந்து என்ன தீர்ப்பு வந்ததோ, அதே முறையில் நிகழ்ந்து முடிந்து போனதே 2 g அலைக்கற்றை முறைகேடு. இந்த 2g அரசி கவிஞர் முன்னால் வந்தால் சாமி மலையேறி விடும். அதனால்தான் அவரது அரசியல் கவிதைள் நீதி உணர்வை இழந்து தி மு க வுக்கு ஒட்டு போடுங்க கவிதை என்றாகி விடுகிறது.
இத்தகு கவிதைகள் முக நூல் சராசரி கும்பல் மத்தியில் புழங்கிக்கொண்டு இருக்கும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை. இன்று உடு கண்ணி வைரல், நேற்று வடிவேலு கொண்டை வைரல், அதற்கு முன் அரசி கவிதை. ஆனால் அதை நவீன தமிழ் இலக்கியத்தின் தீவிர தளத்தில் கொண்டு வைத்து அதற்கு உரிமை கோரினால் கூரிய உணர்வு கொண்ட வாசகன் அவற்றைக் கொண்டு போய் வெளியே மக்கும் குப்பை டப்பாவில்தான் போடுவான்.
இறுதியாக எனக்குப் பிடித்த சேரனின் கவிதையோடு எது அரசியல் கவிதை எனும் மதிப்பீட்டை மீண்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட கவிதை 1980 வாக்கில் ஈழப் போர் சூழலில் சேரன் அவர்களால் எழுதப்பட்டு இன்றும் ஒளி குன்றாது திகழ்வது. இந்த கவிதையிலிருந்து ஒரு வாசகனால் போர்ச்சுக்கீஸ் படையெடுப்பால் எரிந்த கோவா துவங்கி, பிரிவினை காலம், இந்திரா பலிக்கு பிறகான சீக்கியர்கள் படுகொலை, குஜராத் கலவரம், மும்பை அட்டாக், இப்படி தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு வரை இந்திய வரலாறு நெடுக மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு சமூக வெளித் துயரை சென்றடைந்து விட முடியும்.
இந்த பின்புலம் ஏதும் இல்லாவிட்டாலும் இக்கவிதை தன்னவில் கொண்டிருக்கும் அழிவின் தனித்துவமான சித்தரிப்பு. அதன் வழியே அது தீண்டும் மானுடத் துயர் இதை காலம் கடக்கும் என்றும் ஒளி குன்றாத கவிதை என்று உயர்த்துகிறது. அதன் வழியே தமிழில் நிகழ்ந்த தனித்துவமிக்க அரசியல் கவிதைகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட கவிதை. நிற்க. நான் சொல்ல வேண்டியவை அனைத்தும் முடிந்ததால் இங்கே இதை நிறைவு செய்கிறேன்.
June 30, 2022
ரோஸ் ஆன்றோ இல்லத்திறப்புவிழா, ஓவியர் சந்துரு
29 ஜூன் 2022ல் படிகம் இதழாசிரியர் ரோஸ் ஆன்றோவின் இல்லம் திறப்புவிழா. வில்லுக்குறியில் இருந்து திரும்பிச் செல்லும் பாதையில் மேலும் பிரிந்து குளுமைக்காடு என்னும் ஊர். குளுமையை உருவாக்குபவை மழைக்காடு போல செறிந்த மரங்கள்.
ரோஸ் ஆன்றோ இல்லத்தை நான் திறந்து வைக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். அருண்மொழி, நான், லட்சுமி மணிவண்ணன் மூவரும் கிளம்பி சென்றோம். அங்கே ஏற்கனவே சந்துரு மாஸ்டர் துணைவியுடன் வந்திருந்தார். புகைப்பட நிபுணர் ஜவகர்.ஜி , நட சிவகுமார், முஜிபுர் ரஹ்மான், ஆகாசமுத்து, ஓவியர் நடராஜன் கங்காதரன் என நண்பர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
அழகான வீடு. இப்போதெல்லாம் கன்யாகுமரி மாவட்டத்தில் வீடுகள் பெரும்பாலும் நேர்த்தியானவை. இந்த ஊர் கொத்தனார்களுக்கு சமானமான கைத்திறனை இந்தியாவிலெங்கும் பார்க்கமுடியாது. அகன்ற கூடம். மாடியில் ஒரு குட்டி நீச்சல்குளம். அங்கே தண்ணீருக்காக கட்டிய தொட்டியில் தன் சொந்தக்கார பையன்கள் குளிப்பதை கண்டு அதையே நீச்சல்குளமாக ஆக்கிவிட்டதாக ஆன்றோ சொன்னார்.
காலை ஒன்பதரை மணிக்கு திருத்தந்தையர் பைபிள் உரையாற்றி புனித நீர் தெளித்து இல்லத்திறப்புவிழாவை தொடங்கினர். நான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தேன். ஆன்றோவின் மனைவி முதல் அடியெடுத்து உள்ளே சென்றார். வழக்கம்போல பால் காய்ச்சும் விழா.
காலையுணவு ஆன்றோ இல்லத்தில். மாடியில் ஓர் இலக்கியநிகழ்வை ஒருங்கமைத்திருந்தார். ஓவியர் சந்துரு எழுதிய ’திருத்தப்பட்ட பதிப்பு ‘என்னும் நூல். அவருடைய ஓவியங்களைப் பற்றிய உதிரிக் கருத்துக்களும் ஓவியத்துக்கான முன்குறிப்புகளும் கொண்டது.
நூலை நான் வெளியிட லக்ஷ்மி மணிவண்ணன் பெற்றுக்கொண்டார். ஜவகர் ஆகியோர் பேசினர். நான் ஒரு சிற்றுரை ஆற்றினேன்
ஒருமுறை ஓவியர் எம்.வி.தேவனை பார்க்கச் சென்றிருந்தேன். வீட்டுக்கு வெளியே காத்திருக்கையில் ஒரு உள்ளே பாடல் கேட்டுக் கொண்டிருந்தது மெல்லிய சொற்களான இசை. நான் அது என்ன பாட்டு என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று முயன்றேன். அது இசையாகவும் இல்லை, இசைத் தன்மையும் இருந்தது.
பின்னர் அறைக்குள் சென்றபோது ஓவியர் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த ஓவியத்தின் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருந்தது அந்த இசை. அந்த இசையை அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. பாறையின் இடைவெளியை நீர் நிரப்புவதுபோல ஓவியத்தை அந்த இசை நிரப்பியது.
இந்நூல் சந்துருவின் ஓவியங்களின் இடைவெளியை நிரப்புவது. அவருடைய ஓவியங்களை புரிந்துகொள்வதற்கான ஒரு மேலதிக துணை. அந்நூலில் அவர் போகிற போக்கில் பல குறிப்புகளை எழுதிச் செல்கிறார்.எல்லாமே கிறுக்கல்கள். ஓவியக் கிறுக்கல்கள். மொழிக் கிறுக்கல்கள்.அவருடைய உள்ளம் செயல்படுவதை காட்டுவது இந்நூல். அவருடைய ஆழுளம் பதிவானது.
இந்த நூலுக்கு இணையான நூல்களை டாவின்சி போன்றவர்கள் வரைந்துள்ளனர். அதில் ஏராளமான ஓவியக்கிறுக்கல்கள் உள்ளன. அவர் எண்ணிய ஓவியங்கள், பின்னர் வரைந்த ஓவியங்கள்,அவருடைய கனவுகள். குழந்தைத்தனமாக வெளிப்படும் அவருடைய ஆழ்மனத்தின் சிதைவும் சிதறலும். ஓவியம் வரைந்த பின் ஓவியர் தூங்கும்போது உளறுவதுபோன்ற நூல். அதைப்போன்ற ஒன்று சந்துருவின் நூல்.
நான் முன்பு ஒரு முறை ஓவியர் சந்துருவுடன் சென்னை மியூசியம் இசை அரங்கில் பேசிக்கொண்டிருந்தேன் .அது கௌதம் சன்னாவின் குறத்தியாறு என்னும் நூல் வெளியீட்டு விழா .அப்போது என்னிடம் அவர் கரியுரித்த பெருமான் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஹொய்ச்சாள கரியுரித்த பெருமான் முதல் சோழர், நாயக்கர் காலம் வரை அவர் கொண்ட உருமாற்றங்கள் பற்றி.
பேசப்பேச அவரால் சொல்லமுடியாதவற்றை தன் நோட்டுப் புத்தகத்தில் வரைந்து கொண்டிருந்தார். பேசிமுடித்தபோது தரையெங்கும் தாள்களில் ஏராளமான கரியுரித்த பெருமான்கள். அங்கே பேச்சை ஓவியம் நிரப்பியதுபோல இங்கே ஓவியத்தை பேச்சு நிரப்புகிறது.
இந்நூலில் சோழர்கால பட்டிகை ஒன்றில் இருந்த ஓரு சிற்பத்தை கோட்டோவியமாக ஆக்கியிருக்கிறார் சந்துரு. ராமனிடம் கணையாழி கொண்டு வந்து கொடுக்கும் அனுமன். ராமன் முன் பணிந்து வாய்பொத்தி நிற்கிறது அனுமக்குரங்கு. அதற்கருகே இன்னொரு வடிவை வரைந்திருக்கிறார். ராமனின் பின்பக்கம் நிஜக்குரங்கு மிக அலட்சியமாக, மிகமிகக் குரங்குத்தன்மையுடன் நின்றுகொண்டிருக்கிறது. குரங்கு நாம் அதை பிடிப்போம் என அஞ்சுவதில்லை. பிடித்துத்தான் பாரேன் என்னும் உடல்மொழி கொண்டிருக்கும். அப்படி நிற்கிறது அந்தக் குரங்கு.
ஒரு காட்சியில் அதை வரைந்தவனும் ககல்லும்போதே அது ஓவியம். அந்தக்காட்சியில் அக்குரங்கில் இருக்கிறார் சந்துரு. நாமெல்லாம் அறிந்த அந்த சின்னக்குரங்கு. அடங்காதது. மையப்பாதைகளில் செல்லாமல் கிளைதாவிச் செல்வது.
இன்னொரு ஓவியம். அதில் மேயும் மாட்டின் முழு எலும்புக்கூடும் தெரிகிறது. அந்த ஓவியம் எது? அதை நான் பிம்பேத்கா குகை ஓவியங்களில் கண்டிருக்கிறேன். குகை ஓவியர்கள் விலங்குகளுக்கு எலும்புகளை வரைந்துவிடுவார்கள். முழு எலும்புக்கூட்டையும் உயிருள்ள விலங்குக்குள் வரைவார்கள். ஏனென்றால் அவர்கள் மாட்டை உரித்து அறிந்த உடற்கூறு அது. அந்த விலங்கு அவர்களின் கனவில் வருவது. அவர்கள் வரைந்தது தங்கள் கனவுகளைத்தான்.
முப்பதாயிரமாண்டுகள் கடந்து வந்து இன்றுள்ள கலைஞனில் அந்த கனவு வெளிப்படுகிறது. அதை ஏந்திக்கொள்ளும் கிறுக்குத்தனங்களுடன் சுட்டித்தனங்களுடன் அவன் திகழ்கிறான். அவருக்கு என் வணக்கம்.
பேசி முடித்ததுமே நான் திரும்பவேண்டியிருந்தது. மதியம் கடந்து ஒருவரைச் சந்திக்கவேண்டும். அதற்கு முன் தக்கலைக்குச் சென்று சிவசங்கரை பார்க்கவேண்டும். அவர் நோயுற்றபின் சென்று பார்க்கவில்லை. தள்ளித்தள்ளிச் சென்றுகொண்டிருந்தது. ஆகவே உடனே கிளம்பினேன். ரோஸ் ஆன்றோ தந்த ஒரு கோப்பை அடைப்பிரதமனை மட்டும் குடித்தேன். அற்புதமான பிரதமன்.
தக்கலைக்குச் சென்று சிவசங்கரை பார்த்தேன். கொஞ்சம் தளர்ந்திருக்கிறார். அது இதயநோய்க்கான மருந்துகள் அளிக்கும் களைப்பு. ஆனால் தொடர்ந்து பணியாற்றுகிறார். அம்பேத்கர் பற்றிய ஒரு நூலை மொழியாக்கம் செய்கிறார். ஒரு நாட்டாரியல் தொகுப்பு உருவாக்குகிறார். இந்த உடல்நிலையில் வேலைசெய்வது கடினம். ஆனால் வேலை செய்தாகவேண்டும். இல்லையேல் எழுத்தாளனின் அகம் சோர்ந்துவிடும். நான் விடாமல் வேலைசெய்யவே சொன்னேன். அரைமணி நேர அலகுகளாக நடுவே ஓய்வெடுத்தபடி வேலைசெய்வதே நல்லது.
பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். மழை ஒன்று நடுவே வந்து சென்றது. ஒளிகொண்ட மலைகளைப் பார்த்தபடி பார்வதிபுரம்.
புகைப்படங்கள் ஜவகர் ஜி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

