Jeyamohan's Blog, page 756
June 25, 2022
நாகை புத்தகக் கண்காட்சி
நாகப்பட்டினத்தில் ஜூன் 24 தொடங்க ஜூலை நான்குவரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. உண்மையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாசகர்களை முக்கியமான புத்தக அரங்குகளில் காண முடிந்தது. சாகித்ய அகாடமி, தமிழ்நாடு பாடநூல் கழகம்,கிழக்கு, காலச்சுவடு என பல முக்கியமான பதிப்பகங்களில் ஸ்டால்கள் உள்ளன. மொத்தம் 115 ஸ்டால்கள்.
முக்கியமான எழுத்தாளர்கள் அழைக்கப்படாதது ஒரு குறைதான். ஆனால் இந்த ஒரு குறைபாட்டைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த நூற்காட்சி ஏற்பாடுகள் நிறைவு தருகின்றன. (இந்த கடிதத்தை தளத்தையும் படங்களையும் தளத்தில் வெளியிட்டால் நாகையைச்சுற்றி உள்ள வாசகர்கள் பயனடைவார்கள்)
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
இடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
கரசூர் பத்மபாரதி – கடிதம்
அன்புள்ள ஜெ
கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் விக்கி – தூரன் விருது பாராட்டுக்குரியது. தமிழ்ச்சூழலில் இன்று எந்தத் தரப்பினராலும் பாராட்டப்படாதவர்கள் என்றால் ஆய்வாளர்கள்தான். ஆய்வுகள் பெருகிவிட்ட சூழலில் எவரும் ஆய்வேடுகளைப் படிப்பதில்லை. நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது ஆய்வேடுகளும் படிக்கப்படும் தகைமை கொண்டவை அல்ல. ஆய்வேடுகளை எழுதியவர்களே அவற்றை எவரும் படிப்பதை விரும்புவதுமில்லை.
இன்னொரு பக்கம் சரியான ஆய்வேடுகள் சரமாரியாகத் திருடவும் படுகின்றன. கரசூர் பத்மபாரதியின் இரண்டு ஆய்வேடுகளின் தரவுகளை வெவ்வேறு ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளில் அவர் பெயர் சொல்லப்படாமல் சொந்தமான கள ஆய்வுகளாக எடுத்தாண்டிருப்பதை நானே கண்டிருக்கிறேன். அந்த ஆய்வுலகம் வேறு. அது ஆங்கில ஆய்வுலகம். அதற்கு சர்வதேச நிதி உண்டு. அந்த நிதி அளிப்பவர்கள் விரும்பும்படி ஆய்வைச் செய்து அளிக்கவேண்டும். அதற்குரிய தரவுகளை இந்த கள ஆய்வுகளில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். நாங்கள் இதை ஒட்டுத்தாவர ஆய்வு என்று சொல்வோம். கரசூர் பத்மாவதி போன்றவர்கள் வேர் போன்றவர்கள். அவர்களுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. அரசுவேலை, பணம் மட்டுமல்ல அறிவுலக இடம்கூட இல்லை.
அந்த குறையை இத்தகைய விருதுகள்தான் போக்கமுடியும். ஆனால் விருதுகளை மட்டும் அறிவிப்பதில் பொருளில்லை. மற்ற விருதுகளில் இருந்து மாறுபட்டு தமிழ்விக்கி விருது தொடர்ச்சியாக கரசூர் பத்மபாரதியை முன்னிறுத்துகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் கரசூர் பத்மபாரதியின் ஆய்வுகள் பற்றி எழுதவேண்டும். அவ்வாறு எழுதப்பட்ட எதையும் நான் காணவில்லை.
உதாரணமாக, கரசூர் பத்மபாரதி இரண்டு நூல்களிலுமே அந்த மூடுண்ட குழுக்கள் தங்களுக்கான தனிமொழியை உருவாக்கிக்கொண்டிருப்பதையும், தங்களுக்கான தனி ஆசாரங்களும் நம்பிக்கைகளும் கொண்டிருப்பதையும் விவரிக்கிறார். மிக ஆழமான பகுதிகள் அவை.
மொழி எப்படி உருவாகிறது, மதம் எப்படி கூடவே உருவாகிறது என்று சிந்திப்பவர்களுக்கு மிகமிக அடிப்படையான ஒரு புரிதலை உருவாக்கும் பகுதிகள் அவை. அதைப்பற்றி இந்த பத்தாண்டுகளில் தமிழ் அறிவுலகம் எதையுமே எழுதியதில்லை. தமிழ் அறிவுலகத்தை சமகால அரசியல்பிரச்சினையிலேயே கட்டிப்போட விரும்பும் சிலரின் வெற்றியாகவே நான் இதை கருதுகிறேன். விளைவாக அடிப்படை ஆய்வுகளுக்கே இடமில்லாமல் ஆகிவிட்டது இங்கே.
இனிமேலாவது கரசூர் பத்மபாரதி போன்றவர்கள் அளிக்கும் மூலத்தரவுகளில் இருந்து சிந்திப்பதற்கு தமிழ் அறிவுஜீவிகள் தயாராகவேண்டும். அதற்கு இந்த பரிசு உதவுமென்றால் நல்லது.
ஸ்ரீனிவாஸ்
முதற்கனலும் தத்துவமும் – விவேக்
முதற்கனல் தத்துவ விவாத நூல் அல்ல, எந்த தரிசனத்தையும் முன்னிலைப்படுத்துவதில்லை. ஆனால் தத்துவத்தில் அறிமுகம் உள்ள ஒருவர், அதில் நடக்கும் உரையாடலை, தரிசனத்தை மிக அருகில் சென்று உணர முடியும்.
நீங்கள் வெண்முரசு வாசகர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியது போல, ‘அறிவு என்பது ஞானம் என்பது தன்னை விலகி, ஒட்டுமொத்த உண்மையை அறிவது’.
சரி முதற்கனல் வாசிக்க தத்துவ அறிமுகம் அவசியமா என்று நண்பர்கள் கேட்டார்கள், முதலில் இல்லை என்பேன், அப்புறம் ஆம் என்பேன். இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் புத்தகத்தில் ‘அபாவம் (இன்மை) என்பதும் ஒரு பொருண்மை இருப்புதான் என்று நியாய சாஸ்திரம் கருதுகிறது. அதாவது, ஒரு பொருள் இல்லாமலிருப்பதும் ஒருவகை இருப்பே. இச்சிந்தனை வெறும் தருக்கம்தான். நடைமுறைக்குப் பயன்படாது. ஆனால் இது குறியீட்டு ரீதியாக விஞ்ஞானி சந்திரசேகருக்குக் கருந்துளைகள் (Black holes) குறித்த ஆய்வுக்கு உதவியது’. இதையே மகாவாக்கியமாக கூறுவேன், ஏன் அறிமுகம் வேண்டும் என்பதுக்கு இதுவே பதில். இத்தருக்க நிலைகளை அந்தந்தத் துறைகளைச் சார்ந்த நிதரிசனங்களுடன் பொருந்திப் பார்த்து விரித்தெடுத்துக்கொள்ளும் போது படைப்பிற்கு மிக அருகில் செல்லலாம். தத்துவார்த்த ரீதியாக ‘படைப்பும், நாமும் வேறல்ல என்று உணரும் தருணத்துக்கு நாம் செல்லலாம்.’
முதற்கனலில் வரும் பாரதவர்ஷத்தில் கல்வி கற்ற அனைவரும் ஆறு மதங்களையும் ஆறு தரிசனங்களையும் மூன்று தத்துவங்களையும் குருமுகமாகக் கற்றவர்கள், கலைஞானமும் காவியஞானமும் கொண்டவர்கள். முதற்கனலில், ஆறு தத்துவங்களில் சாங்கியமும், வேதாந்தமும் பலமுறை விவாதங்களில் வருவதை நாம் காணலாம்.
“வேதாந்தம் பிரம்மத்தை மையமாக்கி பிரபஞ்ச இயக்கத்தை அளப்பது. வேதாந்தத்தின் முக்கிய தேடல் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த சாராம்சமாக உள்ள பிரம்மத்தைப் பற்றியதாகும். வேதாந்தம் பிரம்மத்தை மையமாக்கி பிரபஞ்ச இயக்கத்தை இயக்கத்தை விளக்க முயலும் ஒரு தரிசனம்.”
வியாசரும், ஆஸ்திகன், ஜனமேஜயன், விசித்திரவீரியன், பீஷ்மர், சத்தியவதி, சுகதேவன், வைசம்பாயனர் பிரம்மத்தை குறித்த தங்கள் விளக்கங்களில் வெளிப்படுத்துவார்கள். அவர்கள் யாவரும் தத்துவத்தை போதிக்கவில்லை. சூழ்ச்சி, கவர்தல், நாடு பிடித்தல், க்ஷத்ரிய நெறி, அறம், போர் பயிற்சி, குரு மரபு என்று பலதளங்களில் அவர்கள் பிரம்மத்தை குறிப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.
வியாசரின் தந்தை கூறுவது போல் “மண்ணுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஞானம் கடமையாக்கப்பட்டுள்ளது. புள்ளும் புழுவும் பூச்சியும் கிருமியும்கூட ஞானத்தையே உண்டு வாழ்கின்றன என்று அறிக”. அதை நாம் முதற்கனலை வாசித்தவுடன் உணரலாம்.
ஜனமேஜயன் தன்னறத்தின் பொருட்டு “குருஷேத்ர மண்ணில் செத்து விழுந்த ஐந்துலட்சம் மனிதர்களிடம் நான் சொல்லவிரும்புகிறேன் குருநாதரே, எங்கள் மூதாதையர்களே நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். இனிமேல் நாங்கள் போர் செய்ய மாட்டோம். இனிமேல் நாங்கள் சகமனிதனை வெறுக்க மாட்டோம். நீங்கள் உங்கள் உயிரைக்கொடுத்து கற்றுத்தந்த பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டோம்… அப்படியொரு சொல்லை என்னால் சொல்லமுடிந்தால் நான் குருகுலத்தின் வாழ்க்கையை நிறைவுசெய்தவன் ஆவேன். களத்தில்பட்ட அத்தனை குருவம்சத்தினருக்கும் என் கடனைச் செய்தவனாவேன்”
ஆஸ்திகனை மறுக்கும் போது தர்மத்தை மீறிய அறத்தை பேசாதீர்கள் என்று தான் கூறுவார். ஜனமேஜயன் நான் பிரம்மத்தின் இயல்பான சாத்வ குணத்தை இங்கே நிலைநிறுத்துகிறேன் என்று வேதாந்தத்தை எடுத்து கூறி ஆஸ்திகரிடம் விவாதிப்பான். அன்பும் அறமும் நன்மையும் நலமும் மட்டுமே மனுக்குலத்தில் வாழவேண்டுமென விழைகிறேன் என்பார்.
ஆஸ்திகன் கபில முனியின் மாணவரான சமரமுனிவரிடம் ஆதியிலிருந்தது ஒன்றே. முதல்முடிவற்ற, இதுஅதுவற்ற, முதலியற்கை. அது பிளவற்ற காலத்தில் இருந்தது. அதில் முதல் எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன. பிரபஞ்சப்பேரியக்கம் தொடங்கியது என்பார்.
ஆஸ்திகன் ஜனமேஜயரிடம் “மாமன்னரே, சத்வ, ரஜோ, தமோ குணங்களுடன் இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும். நீங்கள் சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க நினைத்தீர்கள். அதன் வழியாக இவ்வுலகையே அழிக்கவிருந்தீர்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் தட்சனின் உயிரை கோரிப்பெற்றேன்” என்று சாங்கியத்தின் தத்துவத்தை விளக்கி சர்ப்பவேள்வியை நிறுத்தவேண்டும் என்று கூறுவான்.
ஜனமேஜயனோ அவருடைய முதுதந்தையை, அறத்தை முற்றிலுமறிவதற்காக ஏழு தலைமுறைக்காலமாக தவமியற்றிக் கொண்டிருப்பவரை அழைத்து நியாயம் கேட்பான். ஜனமேஜயன் சினத்துடன், “நீங்கள் சொல்லும் தரிசனத்தை நானறியமாட்டேன். நான் கற்ற வேதாந்தம் அதைச் சொல்லவில்லை… ஆஸ்திகரே, நீங்கள் தப்பவிட்டது இருட்டை… தீமையை” என்றார்.
ஆஸ்திகன் உறுதியான குரலில், “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுசக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என்பான்.
சித்ரகன் என்ற பருந்தும், சிபி மன்னன் உரையாடும் போது தன்னறத்தை இப்படி விளக்கும் ‘தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்’
சுயம்வரத்துக்கு செல்லும் முன் பீஷ்மரிடம் வியாசர் தன்னறத்தை விளக்கும் போது ‘சுதனே. பசுவைக்கொல்வதுதான் சிங்கத்தின் தர்மம். ஆகவே சிங்கத்துக்கு பசுவதையின் பாவம் கிடையாது’, அதை புரிந்து கொண்டு எந்த சொல்லும் சொல்லாமல் காசிக்கு படையெடுப்பார் பீஷ்மர்.
சுயம்வரப்பந்தலில் நிமித்திகர் அம்பை அம்பிகை, அம்பாலிகை மூவரையும் அறிமுகம் செய்யும் போது இப்படி ரஜோ குணம், தமோ குணம், சாத்வ குணங்களாக சாங்கியத்தின் தத்துவங்களிலிருந்து அறிமுகம் செய்வதை காணலாம்.
“முதல் இளவரசியின் பெயர் அம்பை. ஆறு மதங்களையும் ஆறு தரிசனங்களையும் மூன்று தத்துவங்களையும் குருமுகமாகக் கற்றவர். கலைஞானமும் காவியஞானமும் கொண்டவர்.
“இரண்டாவது இளவரசியின் பெயர் அம்பிகை. சித்திரை மாதத்தின் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தார். பதினெட்டு வயதாகிறது. தமோகுணவாஹினியான கங்கையின் அம்சம் கொண்ட இளவரசி ஓர் இசையரசி.”
“மூன்றாவது இளவரசியின் பெயர் அம்பாலிகை. ஐப்பசி மாதத்து மகநட்சத்திரத்தில் பிறந்தார். வயது பதினாறாகிறது. சத்வகுணவதியான இளவரசி ஓவியத்திலே திறமை கொண்டவர்”
அமைச்சர் ஸ்தானகருக்கும், விசித்திரவீரியனுக்கும் நடக்கும் உரையாடலில், ஒருவொருக்கொருவர் குருவாகவும், சிஷ்யராகவும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். விசித்திரவீரியன் “ஸ்தானகரே, இனி என் உடலை நான் வழிபட முடியாது. பொய்த்தெய்வங்களை வழிபடுபவன் நரகத்துக்குச் செல்கிறான் என்று அறிந்திருக்கிறேன். புகழும், செல்வமும், உடலும்தான் மூன்று பொய்த்தெய்வங்கள் என்பார்கள். நான் உடலையே வழிபட்டு இதுநாள் வரை வாழ்ந்துவிட்டேன். இனி அதை செய்யப்போவதில்லை. இந்த உடல் இருந்தாலும் அழிந்தாலும் எனக்கு ஒன்றுதான்”
“அரசே, உடல் ஆன்மாவின் ஆலயம்” என்றார் ஸ்தானகர். “இல்லை ஆன்மாவின் சிதையா?”
“அரசியல் விவாதத்துக்கு வேதாந்தத்தை பயன்படுத்துவதற்கு வேதவியாசரின் அனுமதி உண்டா என்று தெரியவில்லை” என்றார் ஸ்தானகர்.
“அந்த ஆராய்ச்சி எதிரிநாட்டுக்கு தீவைக்கும்போது ஓதவேண்டிய வேத மந்திரம் என்ன என்ற இடத்திற்குத்தான் சென்று நிற்கும். ஸ்தானகரே புனுகை அள்ளும் குறுதோண்டியால் கடலை அள்ளுவது போன்றது இப்பிரபஞ்சத்தை புலன்களால் அறிய முயல்வது. ஒருநாளில் ஒருநாழிகையில் நம்மைச்சுற்றி வந்து நிறையும் உலகை அள்ள நமக்கு கோடி புலன்கள் தேவை.”
மேலும் சத்யவதியின் ‘நீ இருக்கிறாய்’ என்ற சொல்லே அவனை இத்தனை காலம் இழுத்து செல்கிறது, அதுவே அவனுக்கு ஆப்தவாக்கியமானது. “நானறிந்த ஞானமெல்லாம் அதன்மேல் கனிந்ததுதான். நான் இருக்கிறேன். அதை பலகோடிமுறை எனக்குள் சொல்லிக்கொண்டேன். இங்கே இதோ நானிருக்கிறேன். அவ்வரியிலிருந்து ஒவ்வொருகணமும் நான் முடிவில்லாமல் விரிகிறேன்…” என்கிறான் விசித்திரவீரியன்.
விசித்திரவீரியன் சத்தியவதியை பற்றி கூறும் போது “அவர் கடலாமை போல. முட்டைகளைப் போட்டுவிட்டு திரும்பிப்பார்ப்பதேயில்லை. அவை தானே விரிந்து தன்வழியை கண்டுகொள்ளவேண்டும்…” என்றான்.
ஸ்தானகர் “திரும்பிப் பார்ப்பவர்களால் ஆணையிடமுடியாது அரசே” என்றார்.
விசித்திரவீரியன் திருவிடநாட்டில் இருந்து வந்து சித்தர் அகத்தியரை சந்தித்த முதல் சந்திப்பில் வைத்தியம் பார்க்கும் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டான். மூலாதார சக்கரம் வலுவிழந்திருக்கிறது என்று சொல்லும் அகத்தியர் “உங்கள் உயிர் சிலந்திவலையில் ஒளிரும் நீர்த்துளி” என்கிறார்.
“வணங்குகிறேன் சித்தரே, தாங்கள் இங்கேயே இருந்து என்னை இதமாக வழியனுப்பிவிட்டுச் செல்லவேண்டும் என்று கோருகிறேன்” என்றான்.
அகத்தியர் “ஆம், அதுவே மனம் முதிரும் நிலை. ஒரு துளி உதிர்வதற்கு அப்பால் இதில் ஏதும் இல்லை. இத்துளி இங்கே இவ்வடிவில் இந்த ஒளியுடன் இருப்பதென்பது நிகழ்வுகளின் தகவெனும் முடிவின்மையில் ஒரு கணம். துளியென வந்தாலும் அது முடிவிலா நீர்க்கடலேயாகும். அக்கடலை உணர்ந்தவன் துளியுதிர்வதையும் கடலெழுச்சியையும் ஒன்றாகவே பார்ப்பான்” என்கிறார்.
நியோகத்திற்கு முன்பு குஹ்யஜாதை என்ற கழுதைபுலிக்கும் வியாசருக்கும் நடக்கும் விவாதம் குறிப்பிடத்தக்கது. “நான் என் அன்னையையே அறியாமல் வளர்ந்தவன்.” குஹ்யஜாதை “அன்னையை அறியும் கணம் வாய்க்காத மைந்தர் எவரும் மண்ணில் இல்லை” என்றது.
வியாசர் புன்னகைசெய்து “ஆம் தாய்மையை அறியும் கணமொன்று எனக்கும் வாய்த்திருக்கிறது.”
குஹ்யஜாதை முன்னால் வந்து முகத்தை நீட்டி “அதனால் நீ ஞானம் அடைந்தவனானாய்” என்கிறது.
சத்யவதி மீது சினம் கொண்டு தந்தை பராசர முனியுடன் வியாசர் முறையிடும் போது பராசர இப்படி போதிப்பார். “மைந்தா, நீ ஞானத்தின் முடிவில்லா வல்லமையை அறியாமல் பேசுகிறாய். மண்ணுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஞானம் கடமையாக்கப்பட்டுள்ளது. புள்ளும் புழுவும் பூச்சியும் கிருமியும்கூட ஞானத்தையே உண்டு வாழ்கின்றன என்று அறிக. ஞானத்தால் முழுமைபெற்ற ரிஷிகளின் பிறப்புகள் அறியப்படாதவையே. ரிஷ்யசிருங்கர் மானின் மைந்தர் எனப்படுகிறார். கண்வர் மயிலுக்கும் சோமஸ்ரவஸ் நாகத்துக்கும் பிறந்தவர் என்கிறார்கள் சூதர்கள். வசிட்டரும் அகத்தியரும் ஊர்வசியின் மைந்தர்கள். ஞானமே அவர்களை முனிவர்களாக்கியது. பிறப்பு ஒரு தொடக்கம் மட்டுமே. உன் பிறப்புக்கு என்ன காரணமென்று நீ என்றோ ஒருநாள் அறிவாய். அன்று உன்னை கருவிலேற்றிய அன்னைக்குள் வாழும் பெருநெறியை வணங்குவாய். அதுவே உன் ஞானம் தொடங்கும் கணமாகவும் அமையும்”.
ரிஷிகள் சூழ்ந்த ஞான சபையில், வியாசரின் தந்தை “ வானிலிருந்து மழைபொழிகின்றது விண்ணகத்தின் மையத்திலிருந்து பொழிபவை எந்த நீர்கள்? நீருக்குள் வாழும் நெருப்பு எது?”
அதற்கு வியாசர் “யமுனையின் அடித்தட்டில் நூறுநூறாயிரம் முட்டைகள் பரவியிருப்பதைக் கண்டிருக்கிறேன். மீனின் முட்டைகள். புழுக்களின் முட்டைகள். நத்தைகள் சங்குகள் சிப்பிகளின் முட்டைகள். அவற்றையெல்லாம் விரியவைக்கும் வெம்மை எது? அந்த உயிர்நெருப்பின் பெயர் வைஸ்வாநரன் என்று அறிக! வானக மையத்தில் விண்மீன்களை விரியவைக்கும் அக்கினியும் அவனே. அங்கிருந்து வருகின்றன அன்னைநீர்கள்”.
“இது முதலுண்மை முனிவர்களே. இனி உய்த்துண்மை. நீரென்பது நீர்மையேயாகும். நீராகித் திகழும் விதிகளே நீரென்று அறிக! வைஸ்வாநரனால் முடிவிலா விண்மீன்கள் விரியச்செய்யப்படும் பெருவெளி விரிவைத் தழுவியும் ஓடுகின்றன அலகிலா நீர்மைகள்.”
வைஷ்வாநரன் – ஆத்ம தத்துவத்தை குறித்த மிகச்சிறந்த விளக்கத்தை அளிக்கிறார் வியாசர். ‘நாம் ஏடுகளில் இருந்தது கற்றுக்கொண்டதை இவன் கங்கையில் கற்றுக்கொண்டான்’ என்று வியாசரிடம் வேதங்களை தொகுக்கும் பனி அளிக்கப்படுகிறது.
நியோக ஏற்பாடுகளின் போது காவிய ரிஷியான வியாசருக்குக்கும், சூதப்பெண்ணான சிவைக்கும் நடக்கும் உரையாடலில் “இனி வேதங்களைத் தீண்டும் தகுதி எனக்கில்லை. என் ஞானத்தில் விஷ அம்பு ஊடுருவிவிட்டது”.
சிவை “துளைவிழுந்த மூங்கில்தான் பாடும் என்பார்கள் சூதர்கள்” என்றாள்.
“ஆம் பெண்ணே, இந்நாட்களில் என் ஆன்மாவில் துளை விழுந்துவிட்டது. இந்த பூமியின் அத்தனை காற்றையும் இசையாக்கினாலும் அந்தத் துளை மூடப்போவதில்லை. மூன்று தளங்கள் கொண்டது காவியம் என்பார்கள் ரிஷிகள். வம்சகதை, விவேகம், கண்ணீர். கண்ணீரை இப்போதுதான் அடைகிறேன். இது எனக்குள் சிந்தாமல் தேங்கிக்கிடக்கும். காமகுரோதமோகங்களை அறிந்தவனே கவிஞன் என்பார்கள்” என்று சொல்கிறார்.
சிவை “உண்மை… நான் அனைத்தையும் இந்த மூன்றுநாட்களில் கற்றுக்கொள்வேன் என்று நினைக்கிறேன்”
சுகதேவனை சந்திக்க செல்லும் வியாசர், பெருஞ்சாத்தனாரை சந்திக்கிறார். சுகதேவனின் ஞானத்தை குறித்து வியாசர் இவ்வாறு கூறுகிறார். ‘ரகுகுல ராமனின் துணைவி சீதையன்னையின் தந்தை ஜனகர். அந்த ஜனகரின் வழிவந்தவர் இவர். கற்றறிந்தும் உற்றறிந்தும் துறந்தறிந்தும் அனைத்துமறிந்த அரசர். அவரது அவையில் சென்று இவன் அமர்ந்தான். ஒவ்வொருநாளும் அங்கே நிகழும் நூலாய்வையும் நெறியாய்வையும் கற்றான். ஒருநாள் ஜனகமன்னர் தன் அவையில் ஓர் அறவுரை நிகழ்த்துகையில் அறம் பொருள் இன்பம் மூன்றையும் அறிபவனுக்கே வீடு திறக்கும் என்றார். அவ்விதி எந்நூலில் உள்ளது என்று சுகன் கேட்டான். அது நூலில் உள்ள நெறியல்ல கண்முன் இயற்கையில் உள்ள நெறி என்றார் ஜனகர். மலர் பிஞ்சாகி காயாகித்தான் கனிய முடியும் என விளக்கினார்’.
உத்தாலகர், ஸ்வேதகேதுக்கு நடக்கும் நெறி குறித்த உரையாடலில், சுகதேவன் “மிருகங்கள் நடந்தும், பறவைகள் பறந்தும், புழுக்கள் நெளிந்தும் அறத்தை அறிந்துகொள்கின்றன. அவையறியும் அறம் ஒன்றே, பிறப்பை அளித்தலே உடலின் முதற்கடமை. மண்ணில் தன் குலத்தையும் அக்குலத்தில் தன் ஞானத்தையும் விட்டுச்செல்வது மட்டுமே மனித வாழ்வின் இறுதியுண்மை என மனிதர்களும் கருதிய காலத்தின் அறத்தையே உத்தாலகரும் அந்தப்பிராமணரும் சொன்னார்கள். அவர் மனைவியும் அதை ஏற்றுக்கொண்டாள்” என்று சுகன் ஜனகருக்குச் சொன்னான்.
‘அந்த அறத்தில் அனைத்தும் பிறக்கும் குழந்தைகளால் நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் அக்குழந்தைகள் திரும்பிநின்று அது பிழையெனச் சொல்லும்போது அந்தக்காலம் முடிவுக்கு வந்துவிடுகிறது. தாய்தந்தையரின் கற்பொழுக்கம் பிள்ளைகளால் கட்டுப்படுத்தப்படும் புதியகாலம் பிறந்துவிட்டது. இனி அதுவே உலகநெறியாகும் அதை உணர்ந்தே உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் காட்டுக்குள் சென்றார்’ என்று சுகன் அவ்வரங்கில் சொல்கிறான்.
இங்கு சுகதேவன் வியாசருக்கு ஞானத் தந்தையாக இருப்பதை காணலாம். வியாசர் சுகதேவரிடம் “என் நெஞ்சு காலத்துக்கு அப்பால் நோக்கித் திகைக்கிறது…” என்று கூறும்போது, “தந்தையே, மண்ணில் ஒழுக்கமென ஏதுள்ளது? அன்றிலின் ஒழுக்கம் காக்கைக்கு இல்லை. தட்சிணத்தின் ஒழுக்கம் அஸ்தினபுரியிலும் இல்லை. கருணைகொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே” என்றான் சுகன்.
“நான் கருணையோடிருந்தேன் என்றால் ஏன் என் மனம் தவிக்கிறது? தவறு செய்துவிட்டேனா என்று ஒவ்வொரு புல்புழுவிடமும் ஏன் கேட்கிறேன். தீர்ப்பு சொல்லவேண்டியவர்கள் என்னில் தொடங்கிய தலைமுறையினர்… அவர்கள் சொல்லப்போவதென்ன என்று நான் எப்படி அறிவேன்?” என்றார். “…உன் மனம் ஒரு படிகவெளி… காலங்களை எல்லாம் உன்னால் காணமுடியும்… நீ சொல்!”
“தந்தையே, அவற்றை நான் ஒரு சொல்லில் சொல்லமுடியாது. கோடி சொற்களால் சொல்லவேண்டியவர் நீங்கள்” என்றான் சுகன். “நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர்முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள். ஆம், உன் சொல் காலத்தின் சொல்… அது நிகழும்”
சிகண்டிக்கும் அக்னிவேசருக்கும் நடக்கும் குரு-சிஷ்ய உரையாடல் தத்துவத்தின் உச்சம் என்றே கூறலாம். “ரஜோகுணத்தை ஆள்பவன் ஷத்ரியன். நீ ஒவ்வொரு அணுவிலும் ஷத்ரியன். என் வித்தையெல்லாம் உன்னுடையது” என்று சிகண்டி தலையில் அக்னிவேசர் கைவைத்தார். “மானுடனுக்கு பிரம்மம் இட்ட தளைகள் அனைத்தையும் கடந்தவன் நீ. கர்மத்தை யோகமாகக் கொண்ட ஞானியை தெய்வங்கள் அறியும். எளியவனாகிய இந்த ஆசிரியன் யுகபுருஷனாகிய உன் முன் பணிந்து உன்னை வாழ்த்துகிறேன் மகனே, நீ வெல்க!” என்றார்.
அக்னிவேசர் தனுர்வேதங்களை போதிக்கும் போது மாணவர்களுக்கு போதிக்கும் கல்வி நாம் எதிலும் பொருத்திப் பார்க்கமுடியும்.
சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும்.சினத்தை வெல்லவே அனைத்து போர்க்கலைகளும் கற்றுக்கொடுக்கின்றன. சினம் என்பது அகத்தின் கொந்தளிப்பு. அகத்தின் கண்முன் தோற்றமே புறம். ஆகவே புறத்தை வெல்லுதல் அகத்தை வெல்லுதலேயாகும். புறத்தை வெல்ல புறத்தில் உள்ள ஏதேனும் ஒன்றைப் பற்றுக. அதில் புறவுலகம் அனைத்தையும் கொண்டுவந்து ஏற்றுக. கைக்குச் சிக்கும் ஒன்றில் அனைத்தையும் காண்பவன் மெல்ல அதுவே உலகமென்றாகிறான். அது அவன் கையில் நிற்கையில் மொத்தப்பருப்பிரபஞ்சமும் அவன் கையில் நிற்கிறது. அது வில்லாகலாம் வாளாகலாம். உளியாகலாம் முரசுக்கோலாகலாம்செயல்மூலம் தன்னை வென்றவன் யோகி. அவன் உலகையும் வெல்வான். யோகியின் கையில் இருப்பது எதுவோ அதுவே இறுதியான ஆயுதம். அதுவே அவன் மந்திரம், அதை ஆள்வதே அவன் சாதகம்.புறத்தை கட்டுப்படுத்தியவன் அதன் அகப்பிம்பமான அகத்தையும் கட்டுப்படுத்தியவனாவான். இருபுடை வல்லமைகொண்ட அவனையே ஸவ்யசாச்சி என்று தனுர்வேதம் போற்றுகிறது” என்றார் அக்னிவேசர். “ஒருகையால் உள்ளத்தையும் மறுகையால் உடலையும் கையாள்பவன் அவன். ஒருமுனையில் அம்பும் மறுமுனையில் இலக்கும் கொண்டவன். அவன் ஒருமுனையில் பிரபஞ்சமும் மறுமுனையில் பிரம்மமும் நிற்கக்காண்பான்.சிகண்டிக்கு போர் பற்றிய நுணுக்கங்களை கற்று தரும்போது, அக்னிவேசர் இவ்வாறு கூறுகிறார். “கருவுறுதல் என்றால் என்ன? காமத்தால்தான் கருவுறவேண்டுமா, கடும் சினத்தால் கருவுறலாகாதா? உடலால்தான் கருவுறவேண்டுமா, உள்ளத்தால் கருவுறலாகாதா?”
மேலும் சாந்தோக்கிய உபநிடத்தில் வரும் இந்த கதையை கூறுகிறார். “உத்தாலகர் மைந்தன் ஸ்வேதகேது, தந்தையிடமிருந்து நூல்களைக் கற்றபின் ஏழு குருகுலங்களுக்குச் சென்று வேதவேதாங்கங்களையும் ஆறுதரிசனங்களையும் ஆறுமதங்களையும் மூன்று தத்துவங்களையும் கற்றபின் திரும்பிவந்தான். தந்தையைக் கண்டு தந்தையே உங்களுக்கு மெய்ஞானத்தில் எந்த ஐயமிருப்பினும் என்னிடம் கேட்டு தெளிவுகொள்ளுங்கள் என்று சொன்னான்.”
“மைந்தனின் ஆணவத்தைக் கண்டு உத்தாலகர் வருந்தினார். அவன் ஆணவத்தை அடக்கினாலன்றி அவனால் ஞானத்தைக் கடந்து விவேகத்தை அடையமுடியாதென்பதை உணர்ந்து பிரம்மஞானத்தைக் கொண்டு மட்டுமே விளக்கிவிடக்கூடிய வினாவைக் கேட்டார். எவற்றை அறியமுடியுமோ அவற்றையெல்லாம் அறிந்துவிட்டாய். எதை அறியமுடியாதோ அதை அறிந்துவிட்டாயா? ஸ்வேதகேது பதிலின்றி திகைத்துவிட்டான். தந்தையின் காலடியைப் பணிந்து தன் ஆணவத்தைப் பொறுத்தருள வேண்டினான். அவர் அந்த மெய்ஞானத்தை ஒரு அகச்சொற்றொடராக அவனுக்கு அளித்தார்.”
அக்னிவேசர் மிகமெல்ல அந்த மந்திரத்தை சொன்னார் “அது நீயே.” அக்னிவேசர் புன்னகையுடன் “சிகண்டியே, அந்தப் பதிலை ஆருணியாகிய உத்தாலகர் தன் மைந்தன் ஸ்வேதகேதுவை மடியில் வைத்து முன்பொருமுறை சொன்னதுண்டு. அது நீயே என. அன்று மைந்தன் என்ன கேட்டிருப்பான்? அவன் சுட்டிக்காட்டி வினவிய முதல்வினா தந்தையை நோக்கி நீ யாரென்பதாகத்தானே இருக்கமுடியும்? அதற்கான பதில் ‘மைந்தா நானே நீ’ என்பதன்றி வேறெப்படி இருக்கமுடியும்”
சிகண்டியின் இந்த பார்வை மிகமுக்கியமானது, போர் வெறி கொண்ட குரோதத்தில் இருக்கும் சிகண்டி “தந்தையர் அதை உணர்வதற்கு ஞானம் கனியும் ஒரு புள்ளி தேவையாகிறது. நான் நான் என்றெழுந்த மனமும் எனது எனது என விரிந்த கைகளும் குறுகிச்சுருங்கும் ஒரு பருவம்… குருதிகுளிர்ந்தபின் தன் வற்றிய கைகளால் மைந்தனைப்பற்றும்போது அந்த மாபெரும் திரை அறுந்துவிழக் காண்கிறான் மனிதன். மகனே நானே நீ என்கிறான்…”
நிறைந்த வாசிப்பனுவத்தை தந்த உங்களுக்கு நன்றியும், அன்பும்.
விவேக்
ராலே
***
June 24, 2022
நம் அமெரிக்கக் குழந்தைகள்
அமெரிக்க நண்பர்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அறிவுரை ஆலோசனை சொல்வதெல்லாம் எப்படியோ ஒருவர் தன்னை சற்று மிகைப்படுத்திக்கொள்வது தான். எத்தனை பணிவாகச் சொன்னாலும் அதிலொரு அதிகப்பிரசங்கித்தனம் உள்ளது. சொல்பவனுக்கு இன்பக்கிளுகிளுப்பும் இல்லாமலில்லை.
ஆனால் அமெரிக்கா சென்றுவிட்டவர்கள் அங்கிருந்து நமக்கு பத்தி பத்தியாக ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை, இடித்துரைப்புகளை சொல்லும்போது நாமும்தான் சற்று சொல்லி வைப்போமே என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே சந்திப்புகளில் சொன்னவற்றை பதிவு செய்து வைக்கலாம் என்று தோன்றுகிறது.
அமெரிக்காவுக்கு நான் நான்குமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சராசரியாக ஒரு மாதகாலம் தங்கியிருக்கிறேன். பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு ஊரில் என தொடர்ந்து அமெரிக்கா முழுக்க பயணம் செய்து கொண்டே இருந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அமெரிக்காவை அமெரிக்காவில் பலகாலமாக வாழ்ந்தவர்களை விட அதிகமாக பார்த்திருக்கிறேன்.
ஆகவே இந்தக்கருத்துகளை சொல்வதற்கான ஓர் அடிப்படைத் தகுதி இருப்பதாக நினைக்கிறேன். இவை என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புகள், என் தனிப்பட்ட பார்வை ஆகியவை சார்ந்தவை. பிடிக்காவிட்டால் கடந்துசென்றுவிடலாம். இந்த அவதானிப்புகளை தாங்களும் அடைந்தவர்கள் யோசிக்கலாம்.
அமெரிக்க நண்பர்கள் பெரும்பாலானவர்களின் முதன்மைக் கவலை என்பது அவர்களின் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா என்பது. ஆனால் அது சட்டைமாற்றி வந்த கவலை. தங்கள் குழந்தைகள் தமிழர்களாக நீடிப்பார்களா என்பது அக்கேள்வியின் உள்ளடக்கம். ஆனால் அதுவும் சட்டைதான். அதற்கு அடியில் இருப்பது தங்கள் பிள்ளைகளுக்கும் தங்களுக்குமான எதிர்கால உறவு என்னவாக இருக்கும் என்பதே.
அமெரிக்க நிகழ்ச்சி ஒன்றில், நிகழ்ச்சி முடிந்தபின் அங்கே வந்திருந்த ஒரு மூதாட்டி மிக உருக்கமாக ‘அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்!’ என்று கூவினார். ‘ஐயா, உங்கள் பிள்ளைகளை தமிழ் பேச வையுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுங்கள். தமிழை அழியவிடாதீர்கள்’ என்றார்.
அது ஓரு தமிழிலக்கிய நிகழ்ச்சி என்பதனால் அக்குரலுக்கு மதிப்பிருக்கும் என அவர் எண்ணியிருக்கலாம். அமெரிக்காவில் உண்மையில் பெரும்பாலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் யாராவது ஒரு முதியவர் அந்த கோரிக்கையை உணர்ச்சிகரமாக முன்வைப்பார். ஒரு மாதிரி போர்வஞ்சினம் போன்ற ஒரு சூழல் உருவாகும்.
அவர்களில் ஒருவரை கொஞ்சநேரம் தனியாகச் சந்தித்து சில கேள்விகளை கேட்கவேண்டும் என்னும் துடிப்பு எனக்கு உருவாகும். வந்த இடத்தில் எதற்கு வம்பு என்று அடக்கிக் கொள்வேன். அந்த தமிழ்ப்பற்றுகொண்ட முதியவர் இந்தியாவிலிருக்கையில் வாழ்நாள் முழுக்க கனவு கண்டது தன் பிள்ளைகள் அமெரிக்கா சென்றுவிடவேண்டும் என்பதாகவே இருக்கும். முழுவாழ்க்கையில் ஈட்டிய செல்வத்தை முழுக்க அதற்கே செலவிட்டிருப்பார்.
இந்தியப் பண்பாட்டையோ, தமிழ்ப்பண்பாட்டையோ தன் பையன் அறிந்துகொள்வதும் ஈடுபடுவதும் அவனுடைய அமெரிக்கப் பயணத்துக்கு தடையாக அமையும் என கற்பனை செய்து பையனை எந்தப் பண்பாட்டு அறிமுகமும் இல்லாமல், சொந்தக்காரர்களுக்குக் கூட அறிமுகம் செய்யாமல் வளர்க்கும் பெற்றோரையே நான் திரும்பத் திரும்ப காண்கிறேன். அவர்களில் ஒருவராகவே இருப்பார் அந்த முதியவர் என்பது அவருடைய நடையுடை பாவனையிலேயே தெரியும். அதில் ‘வந்துட்டம்ல?’ என்ற தோரணை இருக்கும்.
அந்தப் பெற்றோரின் மகன்கள் உள்ளூர் திருவிழாவுக்கு ஒருமுறைகூட சென்றிருக்க மாட்டார்கள். உள்ளூர் கோயிலை பார்த்திருக்க மாட்டார்கள். சொந்தக்காரர்களின் திருமணத்துக்கு சென்றிருக்க மாட்டார்கள். குலதெய்வம் என்ன, குடும்ப மரபு என்ன என்று தெரிந்திருக்காது. தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அமைப்பு பற்றி எந்த நேரடி அறிதலும் இருக்காது. எட்டாம் வகுப்பில் ரகசியமாக பொன்னியின் செல்வன் அல்லது ராஜேஷ்குமார் படித்தவர்கள் ஒரு இரண்டு சதவீதம் பேர் இருப்பார்கள். எஞ்சியவர்களுக்கு தமிழில் போஸ்டர்கள் எழுத்துகூட்டிப் படிக்குமளவுக்கே தமிழ் அறிமுகம் இருக்கும். அவர்கள் அறிந்ததெல்லாம் படிப்பு மட்டுமே. படிப்பு அல்ல அது, தொழில்நுட்பப் பயிற்சி. அப்படியே அமெரிக்கா.
தன் பையனோ பெண்ணோ அமெரிக்காவில் இருப்பதைப் பற்றி அத்தனை பெற்றோரும் பெருமிதமடைகிறார்கள். செல்லுமிடமெல்லாம் சொல்கிறார்கள். அது தங்கள் வாழ்க்கையின் வெற்றி என எண்ணுகிறார்கள். ஆனால் அந்த வெற்றியின் திளைப்பினூடாக ஒரு கட்டத்தில் அவர்கள் அறியும் ஒன்று, தங்கள் பேரப்பிள்ளைகள் இந்தியர்களோ தமிழர்களோ அல்ல என்பது. அந்த கண்ணியுடன் தங்கள் மூதாதையர் மரபு அறுபடுகிறது என்பது. முதிய வயதில் அது பகீரிடும் ஓர் அறிதல். அதன் பதற்றத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால் அப்போதுகூட அது தாங்களே விரும்பி ஏற்றுக்கொண்டது என அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒப்புக்கொள்வதில்லை. அமெரிக்காவுக்கு எவராவது இவர்களின் பிள்ளைகளை நாடுகடத்தினார்களா என்ன? அமெரிக்க தூதரகம் முன்னால் தவமிருந்து சென்றவர்கள்தானே அனைவரும்? அதற்குப்பின் ஏன் இந்த உணர்ச்சிகரப் பாவலாக்கள்? தமிழ்மேல் உயிரையே வைத்திருப்பதுபோன்ற மிகையுணர்ச்சிகள்? மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே நடிப்பதுதான் அதிகம்.
*
இதற்கு நான் ஏன் பதில்சொல்கிறேன் என்றால் நான் செல்லுமிடமெல்லாம் இக்கேள்வி எழுகிறது என்பதனால்தான். திரும்ப திரும்ப இத்தலைப்பு சார்ந்து அவ்வளவு பேசியிருக்கிறேன். இந்த அமெரிக்க பயணத்தில் ‘பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பது, தமிழர்களாக வளர்ப்பது பற்றிய கேள்விகள் வேண்டாம்’ என பல கூட்டங்களில் முன்னரே அறிவிக்கக்கூடச் செய்தோம்.
இந்த விவாதத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டியது ஒன்றுதான். கேள்வி இது ‘அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளை தமிழர்களாக வளர்ப்பது எப்படி?’ என் பதில் ‘குழந்தைகளை வளர்ப்பது இரண்டாவது விஷயம். நீங்கள் உங்கள் அறிவுவாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை பற்றி கொஞ்சம் கவலை கொள்ளுங்கள். குழந்தைகளை வளர்ப்பது நீங்கள் அல்ல, சமூகம்’
நடைமுறையில் நிகழ்வதை வைத்துப்பார்த்தால், அமெரிக்கத் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழ் பேசவோ, தமிழர்கள் என்னும் அடையாளத்துடன் வாழவோ எந்த வாய்ப்பும் இல்லை. அவர்களை ‘தக்கவைத்துக் கொள்ள’ செய்யப்படும் எல்லா முயற்சிகளும் கடப்பாரைக்கு சுக்கு நியாயம் கொண்டவை மட்டும்தான். இதுவே உண்மை.
(வழக்கமாக அமெரிக்காவிற்கு விருந்தினர்களாக வருகை தருபவர்கள் “அமெரிக்காவிலே தமிழ் வாழும்!” என முழங்கி கைத்தட்டல் அள்ளிச் செல்வார்கள். என் வழக்கம் உண்மையைச் சொல்லி வசைகளை பெறுவது. அதை இம்முறையும் தவறவிட விரும்பவில்லை. பழகிவிட்டது.)
அடுத்த தலைமுறை அமெரிக்கக் குழந்தைகள் எங்குமே தமிழ்க்குழந்தைகளாக இல்லை. நான் எங்குமே அவ்வண்ணம் எவரையுமே பார்க்கவில்லை. சிலருக்கு கொஞ்சம் தமிழ் முனகத் தெரிகிறது, அதுவும் அப்பா அம்மா கட்டாயப்படுத்தினால். அது ஒரு இழப்புதான். ஆனால் அந்த இழப்புக்கு தயாராகத்தான் அவர்களின் பெற்றோர் இங்கிருந்து அங்கு செல்கிறார்கள். அதன்பிறகு அதைக்குறித்து வருந்தி பயனில்லை.
அமெரிக்காவில் இருக்கும் இந்தியக்குழந்தைகளின் சவால்கள் முற்றிலும் வேறானவை. அவர்கள் தங்கள் மரபுக்கு முற்றிலும் அந்நியமான, மேலும் நவீனமான, மேலும் ஜனநாயகமயமாக்கப்பட்ட, மேலும் நுகர்வுமயமாக்கப்பட்ட ஒரு பண்பாட்டை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் அம்மாவும் அப்பாவும் இருக்கும் பண்பாட்டுக் காலத்தில் இருந்து மிகமிக முந்தியது அவர்கள் பள்ளியிலும் வெளியுலகிலும் சந்திக்கும் பண்பாட்டு வெளி. அக்குழந்தைகளின் சவால் என்பது தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து அந்த புதிய, நவீனச் சூழல் நோக்கி வளர்ந்து எழுந்து செல்வது. கூட்டுப்புழு நிலையில் இருந்து கூடு உடைத்து எழும் பட்டாம்பூச்சி சந்திக்கும் அறைகூவல்.
இந்திய அமெரிக்கக் குழந்தைகள் அங்கே ஒரு பல்லினச் சமூகத்தில் வாழ்கிறார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஒழுக்கம், பண்பாடுதான் உயர்ந்தது என்று அவர்கள் எண்ண வாய்ப்பில்லை. ஒரு குறிப்பிட்ட வகையான வாழ்க்கையே இயல்பானது அல்லது சரியானது என அவர்கள் நம்ப வழியில்லை. அப்படிச் சொல்லிக்கொடுத்தால் அவர்களை நாம் பண்பாட்டுரீதியாக முன்முடிவுகள் கொண்டவர்களாக ஆக்குகிறோம். அது சிந்தனையில் ஊனமுற்ற நிலை.
அத்துடன் நம்குழந்தைகள் தங்கள் நிறத்தாலும் வாழ்க்கை முறையாலும் எப்போதும் அந்நியர்கள் என்று அங்குள்ள புறச்சூழலில் அடிக்கோடிடப்படுகிறார்கள். அவர்கள் அதை வென்று அங்குள்ளவர்களாக திகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் அங்கே அவர்களுக்குச் சுற்றம் இல்லை. அந்நிலை முற்றிலும் இயல்பானது. நம் குழந்தைகள் டெல்லி சென்றாலே இச்சிக்கலை எதிர்கொள்வார்கள்.
அச்சூழலில் அவர்கள் தங்கள் அடையாளத்தை எந்த அளவுக்கு கரைத்துக்கொண்டு, எந்த அளவுக்கு அமெரிக்க பண்பாட்டின் ஒரு பகுதியாக பொருந்திக் கொள்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்கள் வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் அமைகிறது. தன்னை எப்படி முன்வைப்பது என்று அச்சூழலைக் கொண்டு அவர்கள் முடிவெடுக்கவேண்டுமே ஒழிய, வீட்டில் இருந்துகொண்டு நாம் சொல்லக்கூடாது.
ஆகவே கிண்டர்கார்டன் பள்ளியில் படிக்கும் இந்திய அமெரிக்கக் குழந்தையிலிருந்து அடுத்தடுத்த எல்லா படிநிலைகளிலும் உள்ள அத்தனை குழந்தைகளுமே எந்த அளவுக்கு அமெரிக்க தன்மையைக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு அமெரிக்கத் தன்மையை அள்ளிக்கொள்கின்றன. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தங்களை மாற்றிக்கொள்கின்றன. அவற்றின் இயல்பான வளர்ச்சி அத்திசை நோக்கி இருக்கிறது, சூரிய ஒளியை நோக்கி செடிகள் செல்வது போல.
அதற்கு நேர் எதிராக அவர்களை தமிழை நோக்கி இழுக்க, தமிழ் அடையாளத்தில் அவர்களை சிறைப்படுத்த, அவர்களின் பெற்றோர் முயன்றார்கள் என்றால் அது தோல்வியாகவே முடியும். அவர்களை அவ்வண்ணம் சிறைப்படுத்தி வளர்ப்பது பான்சாய் மரம் வளர்ப்பதுபோல. தொடர்ச்சியாக வேர்களையும் கிளைகளையும் வெட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.
‘எப்படி என் குழந்தையை தமிழனாக நீடிக்க வைப்பது?’ என்று கேட்கும் எவரும் அக்குழந்தை அமெரிக்கச் சூழலில் அங்கே அளவிடப்படும் வெற்றியை அடையவேண்டியதில்லை என்று சொல்வதில்லை. அத்தனைபேருக்கும் பிள்ளைகள் ஹார்வார்ட் செல்வதைப் பற்றிய கனவுதான். அதற்காக சிக்கனமாக சேர்த்துக்கொண்டே இருப்பதுதான் அவர்களின் முழுவாழ்க்கையே.
அவர்களிடம் “சரிங்க, உங்க பையன் சுத்தத் தமிழனா இருப்பான். ஆனா ஹார்வார்ட் போகமுடியாது. சரியா?” என்று கேட்டால் பதறிவிடுவார்கள். அதன்பின் தமிழாவது, பண்பாடாவது.
அப்படியென்றால் இக்கேள்வியின் உண்மை அர்த்தம் என்ன? அவர்கள் சொல்வது இவ்வளவுதான். ‘என் குழந்தை அமெரிக்காவில் வெற்றியடையவேண்டும். அதற்கு அவன் நல்ல அமெரிக்கனாக ஆகவேண்டும். எனக்கு மட்டும் தமிழனாகவும் மகனாகவும் நீடிக்கவும் வேண்டும்’.
இது இதைச்சொல்லும் இவர்களின் பெற்றோருக்கு இருந்த அதே இரட்டை ஆசைதான். பையன் அமெரிக்காவிற்குச் செல்லவேண்டும். பேரன் தூயதமிழ் பேசவும் வேண்டும். ’நாந்ந்தான் ங்கொப்பண்டா நல்லமுத்து பேரண்டா’ என பேரன்கள் அமெரிக்காவில் கபடி ஆடவேண்டும். சின்னவயசில் நான் ஜேம்ஸ்பாண்ட் ஆகவும் விவேகானந்தர் ஆகவும் ஒரே சமயம் ஆசைப்பட்டேன்.
இதுவரைக்கும் உலகத்தில் பிற நாடுகளில் குடியேறி வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மக்களில் மிகச்சில இனங்கள் தவிர பிற சமூகங்கள் தங்கள் பண்பாட்டு அடையாளத்தை ஓரிரு தலைமுறைக்குள் முழுமையாகவே இழந்து, குடியேறிய நாட்டின் பண்பாட்டில் கரைவதே நடந்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான சமூகங்கள் அப்படி கரைந்து அமெரிக்கச் சமூகமாக ஆகிவிட்டவைதான்.
அப்படிக் கரைந்தாலும் அவர்களிடம் மாறாமல் இருப்பவை என்ன? முதலில் தோல்நிறம், அந்நிறம் அளிக்கும் அடையாளம் எப்போதும் மிச்சமிருக்கிறது. அதை ஒன்றும் செய்யமுடியாது. மிக அரிதாக மதம் எஞ்சுகிறது. ஏனென்றால் மதத்துக்கு மொழி தேவையில்லை. அது ஆழ்படிமங்கள் மற்றும் குறியீடுகளால் ஆனது. நமீபியா தலைநகர் விண்டூக்கில் முந்நூறாண்டுகளுக்கு முன்பு சென்று குடியேறிய தமிழர்களிடம் மதம்சார்ந்த சில குறியீடுகள், சடங்குகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவர்களுக்கு தமிழ்நாடு, இந்தியா பற்றிக்கூட ஏதும் தெரியாது என்பதை கவனித்துள்ளேன்.
யூத மதம் போன்று மிக நெருக்கமான நெறிமுறைகள் கொண்ட, திட்டவட்டமான கட்டமைப்பு கொண்ட, ஒரு மதம் ஒருவேளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஒரு தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ள உதவக்கூடும். அனைவருக்குமல்ல, ஒரு சாராருக்கு மட்டும். மற்றபடி மதமே கூட குறியீட்டுத் தொகையாக, தனிப்பட்ட நம்பிக்கையாகவே எஞ்சும்.
எஞ்சியோர் தங்கள் அடையாளத்தை தாங்கள் வாழும் நவீன சூழலிலிருந்து உருவாக்கிக்கொள்வது இயல்பானது, எப்போதும் நடப்பது, எவ்வகையிலும் தவிர்க்க முடியாதது. அதுவே வாழ்வின் இயல்பான போக்கு. அப்படித்தான் நாம் காணும் இந்த உலகம் உருவாகி வந்துள்ளது. அதே திசையில்தான் அது வளர்ந்துசெல்லும்.
அமெரிக்க- இந்தியக் குழந்தைகள் ஆங்கிலம் பேசுவதை, தங்கள் வாயை அவர்கள் வைத்திருக்கும் விதத்தை, அவர்கள் உடல்மொழியை நான் எப்போதும் வேடிக்கையுடன் கூர்ந்து பார்க்கிறேன். அதில் வெளிப்படுவது அவர்கள் சென்று வழங்கும் சூழலில் உள்ள ஒரே ஒரு பண்பாட்டுக்கூறுதான். அதைக்கவனித்தால் அவர்கள் முயற்சி எதை நோக்கி என்பது தெரியும்.
அமெரிக்காவில் நம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் கருப்பினக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஜமைக்கன் குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்பானிஷ் குழந்தைகளும், சீனக்குழந்தைகளும் உண்டு. நிறம் மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நம் குழந்தைகள் பெரும்பாலும் கறுப்பினத்தார், ஜமாய்க்கன் இனத்தார், ஸ்பானிஷ் இனத்தாருக்கே நெருக்கமானவர்கள். பண்பாடு என்றால் சீன இனத்தாருக்கு அணுக்கமானவர்கள்.
ஆனால் இவ்வினத்தாரின் நடைஉடை பாவனையையோ, மொழியையோ நகல் செய்யும் ஒரு இந்தியக்குழந்தை கூட கிடையாது. அத்தனை இந்தியக் குழந்தைகளும் அமெரிக்க வெள்ளையினக் குழந்தைகளை – இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலோ-சாக்ஸன் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க உயர்குடிக் குழந்தைகளை மட்டும் – நகல் செய்கிறார்கள். அவர்களின் மொழியையும் நடையுடை பாவனைகளையும் அப்படியே ஏற்கிறார்கள். அவர்கள் ஆகவிரும்பும் அடையாளம் அது. அவர்கள் தேடும் பண்பாட்டு இடம் அது.
தப்பித்தவறி ஓர் இந்தியக் குழந்தை ஆங்கிலோ சாக்ஸன் வெள்ளையர் அல்லாதோரின் மொழியையும் பாவனையையும் தானும் கொள்ள ஆரம்பித்தால் நம் இந்தியப் பெற்றோர் பதறிவிடுவார்கள். குழந்தையை சொற்களால் குளிப்பாட்டிக் குளிப்பாட்டி, தேய்த்துத் தேய்த்துக் கழுவி, அந்த அடையாளங்களை விலக்கி மீட்டாலொழிய நிம்மதி அடைய மாட்டார்கள்.வெள்ளையினத்தாரின் மொழியும் அடையாளமும் மட்டும்தான் நமக்கு வேண்டும். இது இனவெறி அல்ல. அமெரிக்கப் பண்பாட்டின் மையம் எது என நாம் அனைவருக்குமே தெரியும்.
உண்மையில் நம் இந்தியப் பெற்றோர் தங்கள் குழந்தை பள்ளியில் கற்றுவரும் ஆங்கிலோ சாக்ஸன் வெள்ளையின உச்சரிப்பையும் உடல்மொழியையும் அவர்களிடமிருந்து தாங்களும் கூர்ந்து கற்றுக்கொள்கிறார்கள். அமெரிக்கச் சமூகத்தில் நுழைய பெற்றோருக்கு இருக்கும் வழி அக்குழந்தைகள்தான். தங்கள் குழந்தைகளின் ஆங்கிலேயத்தன்மைகளை இந்தியப்பெற்றோர் ரசிக்கிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள். அக்குழந்தை வளர்ந்து பதின்பருவத்தில் முழு அமெரிக்கனாக மாறி நிற்கையில்தான் தமிழ்ப்பதற்றம் வந்தமைகிறது.
நம் அமெரிக்கத் தமிழ்க்குழந்தைகள் அமெரிக்கர்களாகும் பயிற்சியையே கல்வி என அடைகிறார்கள். அதற்கு எதிராகத் தமிழைக்கொண்டு நிறுத்தினால் அவர்கள் தமிழை நோக்கி எதன்பொருட்டு வரவேண்டும்? அவர்கள் வருவதனூடாக அவர்கள் பெறுவது என்ன ?வந்தால் அவர்கள் இழப்பதே மிகுதி. அடிப்படைத் தமிழ்க்கல்வி பெற்ற ஒரு தமிழ்க்குழந்தை அக்கல்வியை முழுமையாக மறந்தாலொழிய அதற்கு நாவில் அமெரிக்க ஆங்கிலம் அமையாது. அமெரிக்க உடல்மொழி வராது.
ஆகவே பெற்றோரின் செல்வாக்கு செல்லுபடியாகும் மழலைவயதில், வேறுவழியின்றி அக்குழந்தை தமிழையோ, தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையோ கற்றுக்கொள்கிறது. பெற்றோரை மீறிச்செல்ல முடியும் எனும் அகவை வரும்போது எளிதில் தமிழை உதறிச் செல்கிறது. பெற்றோர் அந்த வயதில்தான் கவலை கொள்கிறார்கள். தங்கள் குழந்தைகள் தங்களிடமிருந்து விலகிச்செல்வதை உணர்கிறார்கள். அவர்கள் வேறொருவராக ஆகிவிட்டதை, தங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு ஆங்கிலேயருக்கும் தனக்குமான ஒரு கலாச்சார இடைவெளி இருப்பதை அவர்கள் உணருகிறார்கள்.
நிறத்தாலன்றி மற்ற அனைத்தாலும் அயலான ஆளுமையாக மாறியிருக்கும் தன் குழந்தைகளை தங்களிடமிருந்து விலக்கும் மாபெரும் விசையெது என்று அறியாமல் திகைக்கிறார்கள். அல்லது தெரிந்து அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அல்லது அந்தப் பொறுப்பை வேறெதன்மீதாவது சுமத்த விரும்புகிறார்கள். அத்தனை வினாக்களும் அங்கிருந்துதான் வருகின்றன.
அமெரிக்கப் பெற்றோரிடம் குழந்தைகளுக்கு மூர்க்கமாக தமிழை வலியுறுத்துங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். தமிழை கற்றுக்கொடுங்கள், தமிழ்பேச வற்புறுத்துங்கள் என்று கூறமாட்டேன். தமிழ் அழிந்தால் அக்குழந்தைகளுக்கு அடையாளம் இல்லாமல் ஆகிவிடும் என்று நான் எண்ணவில்லை. நான் அக்குழந்தைகளின் தரப்பிலிருந்தே யோசிப்பேன். ஒரு குழந்தையின் அடையாளம் அதன் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் தன் அடையாளம் எது என அதுவே முடிவெடுக்க வேண்டும். பிறர் அதை புகுத்த முடியாது.
(மேலும்)
கோ.புண்ணியவான், அழிவின் கதை
கோ.புண்ணியவான் பற்றிய ஒரு நல்ல ஆவணப்பதிவு. வல்லினம் சார்பில் எடுக்கப்பட்டது. இன்று மலேசிய இலக்கியத்தின் முதன்மைக்குரல்களில் ஒன்றாக ஆகியிருக்கிறார் கோ.புண்ணியவான். சயாம் மரண ரயில்பாதை பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவலாக அவருடைய கையறு கருதப்படுகிறது
கோ.புண்ணியவான் கையறு நாவல் கையறுநிலை
கோ. புண்ணியவான் – தமிழ் விக்கி
தமிழ் விக்கி தூரன் விருது , கடிதங்கள்
தமிழ் விக்கி தூரன் விருது
தமிழ் விக்கி சார்பில் முதல் தூரன் விருது கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிடவியல் போன்ற இன்னும் தமிழில் வலுவாக நிலைகெள்ளாத அறிவுத் துறையில் மிக முக்கியமான பங்களிப்பாளர் பத்ம பாரதி.
நாம் சமூக அடுக்கில் அலட்சியமாக கடந்து செல்லும் பிரிவினரான நரிக்குறவர் மக்களின் வாழ்க்கை முறை என்பது நமது திரைப்படங்களின் அபத்த நகைச்சுவைத் துணுக்குகள் வழியே கண்ட திராபைக்காட்சிகள் மூலம் நம் மனதில் பதிந்ததே.. ஆனால் உண்மையில் மூடுண்ட கூட்டிற்குள் கடும் ஒழுங்குமுறைகள் பேணும் சமூகம் அது.. அவர்களுக்குள் கலந்து பழகி அவர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு நெறிகளுக்குட்பட்டு அதே நேரம் வாசிப்பு ஆர்வத்தை குலைக்காமல் அவர் எழுதிய “நரிக்குறவர் இனவரைவியல்” இந்த வகைமையில் ஒரு முன்னோடியான ஆவணம். அதனை படித்த காலத்தில் தமிழின் அறிவுச்சாளரம் ஒரு போதும் மூடுண்டு போகாது என்கிற நம்பிக்கையை அளித்த நூல் அது. அவரின் இன்னொரு நூலான “திருநங்கைகள் சமூகவரைவியல்” நூலும் முக்கியமான ஒன்று. நான் இன்னும் வாசிக்கவில்லை.
கல்விப் புலம் சார்ந்த அத்தனை தகுதிகளும் இருந்தும் மிகசொற்பமான காலம் இலயோலா கல்லூரியில் தொகுப்பூதிய பேராசிரியராக இருந்ததைத்தவிர குறிப்பிடத்தக்க பணியில் அவர் இல்லை என்பது உண்மையில் நமது உயர்கல்வி அமைப்புகள் வெட்கிக்குனிய வேண்டிய ஒரு அவமானம்.. ஆனால் அதிலெல்லாம் அதற்கு சுரணை வந்து விடப் போவதில்லை. அரிய இரு வரைவியல் ஆவணங்களை தந்த அவர் கடந்த 7 ஆண்டுகள் எதுவும் எழுதாமல் இருக்கிறார் என்பதன் இழப்பு எத்தனை கனமான ஒன்று..
இந்த விருது அவரை மீண்டும் எழுத உந்துமானால் தமிழின் அரிய பொக்கிஷம் ஒன்று மீண்டும் ஒளிர காரணமான வகையில் அது மகத்தான ஒன்றாக நிலைபேறு கொள்ளும்..
விருது பெறுபவருக்கு எனது வணக்கம்..!
விருது தேர்வுக்கு எனது நன்றி..!
முருகானந்தம் ராமசாமி
(முகநூலில்)
***
அன்புள்ள ஜெ
கரசூர் பத்மபாரதியின் எழுத்துக்கள் பற்றி ஆய்வுத்துறையில் ஒரு கவனம் உருவாக இந்த விருது வழிவகுக்கட்டும். இன்றைக்கு தமிழில் ஆய்வுசெய்வதற்கு நேர் எதிரான ஒரு சூழல் நிலவுகிறது. இன்று ஆய்வாளர் என அறியப்படவேண்டும் என்றால் பொதுவெளிக்கு வந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கவேண்டும். முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக தென்படவேண்டும். சர்ச்சைகளில் ஈடுபடவேண்டும். அரசியல்நிலைபாடுகள் எடுக்கவேண்டும். இதெல்லாம் செய்தால்தான் ஆய்வாளரை கவனிப்பார்கள்.
ஆனால் ஆய்வு என்பது இதற்கு நேர் எதிரானது. ஒரு நல்ல ஆய்வைச் செய்ய நாலைந்து ஆண்டுகள் ஆகும். அதுவரை வேறெதுவும் செய்யாமல் அதில் மூழ்கவேண்டும். அந்த ஆய்வு முடிவடையும் வரை எதையும் பொதுவெளியில் சொல்லவும் முடியாது. முடிவுகளை அடையவே ஆய்வில் பல ஆண்டுகளாகும். ஆய்வு செய்யுந்தோறும் பேசுவது ஆய்வுக்கே எதிரானது. ஆகவே ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் வெளியேதெரியாமல்தான் இருப்பார்கள். அவர்களின் ஆய்வுகளின் பெறுமதிதான் அவர்களின் அடையாளம்
ஆனால் நாம் நம் முன் வந்து பேசிக்கொண்டும் பூசலிட்டுக்கொடும் இருப்பவர்களை ஆய்வாளர்கள் என்கிறோம். இதனால் நல்ல ஆய்வாளர்கள் கவனிக்கப்படாமலாகிறார்கள். இந்தவகை விருதுகள் வழியாக அவர்கள் அடையாளம் காட்டப்படுவது அவசியம்
கரசூர் பத்மபாரதி ஆய்வாளர் என்னும் முழுத்தகுதி கொண்டவர். வெளியே தெரியாத ஆய்வாளர். அவருக்கு விருது மிக உகந்த ஒரு செயல்
ரா.முருகசாமி
தமிழ் விக்கிஎண்ணும்பொழுது – கடிதம்
Murals depicting Ramayana and Mahabharat on ceiling in Chennakeshavaraya temple ; Adiyamankottai near Dharmapuri ; Tamil Nadu ; Indiaஅன்பின் ஜெமோவிற்கு வணக்கம்.
நலம்.நலமே சூழ்க.
புதுவையில் மணிமாறனை மட்டுறுத்தியாகக்கொண்டு செயல்படும் சிறுகதைக் கூடலில் கடந்த சில வாரங்களாக சொத்தையான கதைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டதால் உறுப்பினர்கள் சோர்வடைந்திருந்த நிலையில் மணிமாறன்தான் நாம் மீண்டும் ஜெவுக்கே சென்றுவிடுவோம் என்று எங்களை ஆற்றுப்படுத்தினார். ஏனென்றால் யானை படுத்தாலும்.. படுக்காது.. படுத்தாலும் குதிரை மட்டந்தான் என்பதாக எங்களைத் தேற்றிக்கொண்டு புனைவுக்களியாட்டக் கதைகளில் ஒன்றான ‘எண்ணும்பொழுது’ கதையை இந்த வாரம் எடுத்துக் கொண்டு விவாதித்தோம்.
’எண்ணும்பொழுது’ கதையை இப்பொழுது விவாதத்திற்காக வேண்டி மறு வாசிப்பு செய்யும்போது அதன் வாசகர் கடிதங்களையும் சேர்த்தே வாசித்தேன்.அப்ப்..பா எத்தனை கடிதங்கள்.எத்தனை விதமான அலசல்கள். எத்தனை பேர் அதில் மூழ்கி முத்தெடுத்திருக்கின்றனர்.சரி நாமும் நம் பங்கிற்கு ஏதாவது செய்து கதை விவாதத்தில் வைத்துப் பார்ப்போம் என்று எத்தனித்த போது என் கைகளில் அகப்படுவதென்னவோ வெற்றுக் கிளிஞ்சல்கள்தானோ என்ற ஐயம் வருகிறது. அக்கதை இன்னும் மூடுசூளையாக நின்று யாரும் எளிதில் அணுக முடியாத தூரத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறது.அந்த வகையில் அது ஒரு வெற்றிக் கதைதான்.
தெற்குத்திரு வீட்டின் கன்னி கதையில், முதலில் சந்தேகப்பட்டது போம்பாளரா இல்லை தெற்குத்திரு வீட்டின் கன்னியா என்ற கேள்வியை பெரும்பாலரான வாசகர்கள் முன் வைத்திருந்தார்கள்.
என்னைக் கேட்டால் போம்பாளர்தான் என்பேன்.என் தரப்பு இதுதான், கடலில் தத்தளித்து உயிர்ப் போராட்டத்தில் இருக்கும் நிலையிலும் ஒற்றைக் கையால் நீந்திக் கொண்டே அந்த முல்லைக் கொடியை விட்டு விடாமல், போராடி கரை சேர்த்ததிலிருந்தே போம்பாளரின் மனதில் சந்தேகத்தின் நிழல் படிந்து விட்டது என்பது வெளிப்படையாகிறது.முல்லைக் கொடியில் பூ உதிர்ந்துவிட்டதாக அவர் கனவு காண்கிறார். திடுக்கிட்டு விழித்து தோட்டத்திற்கு வந்து பூக்களை எண்ணிப் பார்க்கிறார். சந்தேகம் அவரது ஆழ் மனதில் எந்த அளவிற்கு இறங்கியிருந்தால் அது கனவின் வழி வெளிப்படும்? அப்படியென்றால் முதலில் எண்ணியவர் போம்பாளர்தானே?
ஆனால் கதையில் கடைசிவரை அவர் கடலுங்கரை வீட்டின் கன்னி விரிக்கும் வலையில் சிக்காமல் தூய்மையானவராகவே சித்தரிக்கப் பட்டாலும் அவரது மனம் சந்தேகத்தால் திரிபடைந்ததாலேயே அங்கே அவரது மோதிரம் வெளுக்கத்தொடங்கி விட்டது.வெளுத்த மோதிரத்தைக் கண்ட கன்னியின் மனதிலும் சந்தேகம் குடிகொண்டதால் இங்கே முல்லைக் கொடியும் வாடி விட்டது .இரண்டும் ஒரு சேர ஒரே கணத்தில் நிகழ்ந்ததாகவே கொள்ள என் மனம் ஒப்பவில்லை.என்ன இருந்தாலும் தெய்வமாகிப்போன கன்னியை நாம் சந்தேகப் படலாகாது.ஒரு அணுவிடைக்கால வேறுபாடாவது இருந்திருக்கும்.
ஆனால் இரண்டு ஆத்மாக்களும் அப்பழுக்கற்றதாக இருந்ததால்தான் அவை சொர்க்கங்கள் நோக்கி வெவ்வேறு திசையில் பயணப்பட்டன. நாட்டார் கதை தன்னளவில் தெளிவாக இருப்பதாகவே நாம் கொள்ளலாம்.
சரி இங்கே நிகழ் உலகத்திற்கு வருவோம்.போம்பாளரின் மறுபதிப்பாகவே கதையில் வரும் ’அவன்’ பிரதி பலிக்கிறான்.அவர் அங்கே தெற்குத் திரு வீட்டின் கன்னியை நீரின் பிம்பத்தில் பார்த்து காதல் கொள்கிறார் என்றால், இங்கே இவன் ’அவளை ‘ கண்ணாடியில் பார்த்து மயக்கம் கொள்கிறான். எழுத்தாளரின் இந்த உத்தியால் வாசகன் வெகு இயல்பாக இரண்டு கதைகளையும் ஒன்றெனப் பார்த்து கதைக்குள் தங்களைப் பொருத்திக்கொள்ள முடிகிறது.
எழுத்தாளர் இக்கதையில் வரும் அவனையும் அவளையும் ஒர் ஆதர்ச தம்பதிகளாகக் காட்டுகிறாரா என்றால் அதற்கான குறிப்புகள் எதுவும் வாசகனுக்குக் கிடைக்கவில்லை.போம்பாளராவது கன்னியுடன் பதினாறு ஆண்டு காலம் மனமொன்றி சேர்ந்து வாழ்ந்தார் என்று வருகிறது.இங்கே இவர்கள் தம்பதிகளாக சேர்ந்து வாழ்வது எப்போதிருந்து,எத்தனைக் காலமாய் என்ற குறிப்புகளை ஆசிரியர் ஞாபகமாய் கொடுக்கவில்லை.மாறாக அவர்கள் உறவு திருமணம் தாண்டிய வேறு ’ஏதோ’ ஒரு பிணைப்பின் வழியாக ஒடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் படியான உரையாடல்களை கதையில் ஊடாட விட்டு மேற்கொண்டு வாசகனின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார்.அதுதான் ஜெமோ.
அவன் அந்த நேரத்தில் அவளைச் சீண்டும்போது அவள் பிகு பண்ணிக் கொள்கிறாள்.அதற்கு அவன் “நீ என்ன பெரிய இவ மாதிரி” -என்கிறான்.அதற்கு அவள் “ஆமாம் நான் பெரிய இவதான்.அதற்குத்தானே இங்கே ஓடி வர்றீங்க” என்கிறாள்.
அதேபோல் அவள் தாலிக்கொடியைக் கழற்றி கண்ணாடியில் மாட்டுகிறாள்.மற்ற நகைகளை கிண்ணத்தில் போட்டு அதை மட்டும் ஏன் அங்கே மாட்டுகிறாய் என்று கேட்கிறான்.கிண்ணத்தில் போட்டு எடுக்கும்போது சிக்கலாகி பின் அதை சிக்கெடுப்பது சிரமமாகி விடுகிறது என்று பதில் கூறிய அவளுக்கு “ஆமாம் தாலிச் சிடுக்கு” என்று அவளுக்குப் புரிந்தும் புரியாததுமான ஒரு முனகல் வார்த்தையை உதிர்க்கிறான்.கதையில் இதுவும் அவிழ்க்கப்படவேண்டிய முடிச்சு.
கதையில் வரும் இந்த இரண்டு வரிகளும் உண்ணிப்பாகக் கவனிக்கப் பட வேண்டியவை.அங்கு உறவுச் சிக்கல் இருப்பதை வாசகனுக்குக் கூறாமல் கூறும் வரிகள்.
அவள் இவனைத் தன் ’விளையாட்டே’ போன்ற உதாசீனத்தால் சீண்டுகிறாள்.அதுவும் ஒவ்வொரு முறை அறிவார்ந்த உரயாடலின்போதும்.அதன் வழி அங்கே ஒரு மெல்லிய வெறுப்பு அவன் மனதில் அரும்புவதை நம்மால் அவதானிக்க முடிகிறது.இதுவரை அவளது பேரழகுதான் அவனைக் கட்டிப் போட்டு வந்திருக்கிறது.அந்தக் கட்டு இனி மெல்லத் தளரும்.கூடவே அவ நம்பிக்கை வளரும்.அதன் தொடக்கம்தான் இன்று அவனை அந்த தெற்குத் திருவீட்டுக் கன்னியின் கதையை அவளிடம் கூறவைத்திருக்கிறது.கதையைக் கூறும்போது அவள் கண்களில் தெரியும் சிறு சலனத்தை கவனிக்கவும் அவன் தவற வில்லை.(வாசகர்களும் இந்த ’சலனம்’ என்ற ஒற்றை வார்த்தைப் பிரயோகத்தின் ஓராயிரம் அர்த்தங்களை அனுவித்து ரசித்திருப்பார்கள் என்று நினக்கிறேன்) அவளும் இவன் எதற்காக அந்தக் கதையைக் கூறுகிறான் என்று உணராமலில்லை.அதையும் அவள் விளையாட்டே போன்ற உதாசீனத்தின் வழி கடக்க முயன்று தோற்றுப் போகிறாள்.அவனுக்கு இதில் வெற்றிதான்.
அவளும் ஏதோதோ சிந்தனை வயப்பட்டவளாக இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பதை அவள் வாய்மொழியாகவே கூறவைத்து இரண்டு பேரும் ஒரே அலை வரிசையில் வந்திருப்பதை ஆசிரியர் நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இருவருக்கும் இடையில் ’எண்ணம்’ குடி கொண்டுவிட்டது. இனி என்ன? இனி இருவரும் எண்ணி எண்ணிப் பார்ப்பார்கள்.எண்ணும்பொழுதும் எண்ணும்பொழுதும் சந்தேகம் கூடும். நம்பிக்கை குறையும், அவ நம்பிக்கை வளரும்.
அங்கு கோணச்சி மந்திர உச்சாடனம் பண்ணி இருவரையும் எண்ண வைத்துப் பிரித்தாள். ஆனால் இவர்கள் தங்கள் கோண புத்தியால் பிரியப் போகிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.
நன்றி ஜெமோ,இந்த அற்புதமான கதையைக் கொடுத்ததிற்கு.
என்றும் அன்புடன்,
இரா.விஜயன்
புதுச்சேரி-10
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
அஞ்சலி, மருத்துவர் திருநாராயணன்
சித்த மருத்துவத்தின் ஆற்றலை விஞ்ஞான பூர்வமாக நிறுவ வேண்டும் என்றால் அதற்கு அலோபதி பயன்படுத்தும் அதே ஆய்வு உபகரணங்களை பயன்படுத்தி உலகளவில் அங்கீகரிக்கப்ட்ட விஞ்ஞான உரையாடல் (Scientic discourse) வழியாக வாதிடவேண்டும் என்பது ஐயாவின் நிலைப்பாடு . சித்த மருத்துவர்கள் ஆய்வு கட்டுரைகள் எழுத வேண்டும் ; சித்த மருந்துகளின் drug action mechanism த்தைஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் ; சரியான புள்ளியியல் அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் .
அஞ்சலி – திருநாராயணன்கோவை கண்ணதாசன் விருதுவிழா
கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் கலை இலக்கிய விருதுகள் 26 ஜூன் 2022 ஞாயிறு மாலை கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் நிகழ்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் இந்த விழாவில் எழுத்தாளர் வண்ணநிலவன் இயக்குனர் திரு வி.சி.குகநாதன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர்.
இந்த விருதுகள் ரூபாய் ஒரு லட்சம் பணமுடிப்பும் பாராட்டுப் பட்டயமும் கொண்டவை.
இந்த விழாவுக்கு மலேசிய அரசின் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம் சரவணன் அவர்கள் தலைமை தாங்குகிறார்
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனங்களின் தலைவர் திரு கிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.
மாலனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது.
2021 ஆம் ஆண்டுக்கான மொழியாக்கத்துக்கான சாகித்ய அக்காதமி விருது மாலனுக்கு அவர் மொழியாக்கம் செய்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்னும் நூலுக்காக வழங்கப்படுகிறது.
மாலனுக்கு வாழ்த்துகள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


