Jeyamohan's Blog, page 759
June 23, 2022
கரசூர் பத்மபாரதி -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி- தூரன் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய இரண்டு ஆய்வேடுகளையும் படித்துள்ளேன். முக்கியமான நூல்கள். மானுடவியலாளர் என்றுதான் அவரை அறிந்திருக்கிறேன். அவர் கசடதபற இதழ் பற்றியும் ஆய்வு செய்துள்ளார் என அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய தமிழ்விக்கி பக்கம் சிறப்பானது.
’நலம்’ சந்திரசேகர்
***
அன்புள்ள ஜெமோ
கரசூர் பத்மபாரதிக்கு அளிக்கப்பட்டுள்ள தமிழ்விக்கி தூரன் விருது சிறப்பானது. அவர் தமிழில் மிகத்தகுதி வாய்ந்த ஆய்வேடுகளை எழுதியவர். களஆய்வு புரிந்து ஆய்வேடு எழுதுவதொன்றும் எளிய செயல் அல்ல. கரசூர் பத்மபாரதியின் இரண்டு ஆய்வேடுகளையும் ஒட்டி தமிழில் பல நல்லநாவல்கள் எழுதப்படலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன.
கரசூர் பத்மபாரதிக்கு உரிய கல்வித்துறை பதவி இல்லை என எழுதியிருந்தீர்கள். இன்று மிகமிக ஊழல்மயமாகியிருப்பது உயர்கல்வித்துறைதான். இதைப்பற்றி பலரும் எழுதிவிட்டனர். பள்ளிக்கல்வியில்கூட ஆசிரியர்கள்தேர்வில் கொஞ்சம் தகுதி அடிப்படை உண்டு. கல்லூரி ஆசிரியர் வேலை என்பது ஏலம்போட்டு விற்கப்படுகிறது. கல்லூரிகள் பெரும்பாலும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இல்லை. அவற்றுக்கு அரசு நிதியளிக்கிறது, ஆனால் கட்டுப்பாடு இல்லை.
கல்லூரி ஆசிரியர் தேர்வில் கையூட்டு ஒரு ஏற்கப்பட்ட வழக்கமாக ஆனபின்னர் நம் கல்லூரிப்படிப்பின் தரம் அதலபாதாளம் நோக்கிச் சென்றுவிட்டது. இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. நீண்டகால அளவில் நம் சமூகத்தின் அறிவுத்தகுதியையே பாதிக்கும் பிரச்சினை. இதை இங்கே எந்தக் கல்வியாளர்களும் எழுதுவதில்லை. எந்த அறிவுஜீவிகளும் பேசுவதுமில்லை.
எஸ்.கே
சுஜாதா, கடிதம்
சுஜாதா
சுஜாதா பற்றி…
அன்புள்ள ஜெ
சுஜாதா பற்றிய பதிவை வாசித்தேன். சுஜாதா பற்றிய தமிழ் விக்கி பக்கத்தை வம்புகள் வழியாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். வேறு எல்லா விக்கி பக்கங்களையும் அவர்களின் சாதனைகளைச் சொல்லி அடையாளம் காட்டினீர்கள். சுஜாதா பக்கங்களில் மட்டும் விவாதங்கள் ஏன் சொல்லப்பட்டுள்ளன? சுஜாதாவின் இடம் அதுதான் என்று தமிழ் விக்கி சொல்ல நினைக்கிறதா? இது வருந்தத் தக்கது.
எம்.ராஜகோபால்
***
அன்புள்ள ராஜகோபால்,
சுஜாதா என்றில்லை, எல்லா விக்கி பக்கங்களிலும் விவாதங்கள் என தனிப்பகுதியாக முக்கியமான விவாதங்கள் உள்ளன. சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என அனைவருக்கும்.
ஆனால் அதில் ஓர் அளவுகோல் கைக்கொள்ளப்பட்டது. அவை இலக்கியம் சார்ந்து, இலக்கியவாசகன் இலக்கியத்தை புரிந்துகொள்ள உதவக்கூடியவையாக நிகழ்ந்த விவாதங்களாக இருக்கவேண்டும். வெறும் வம்புகள் சேர்க்கப்படவில்லை.
சுஜாதா பற்றிய வம்புகள் அந்தப்பதிவில் இல்லை. அவ்விவாதங்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையில் முக்கியமானவை, அவரை புரிந்துகொள்ள மிக அவசியமானவை.
மேலும் அது நான் அவரை அறிமுகம் செய்து எழுதியதல்ல. அது எனக்கு வந்த ஒரு கடிதம்
ஜெ
June 22, 2022
தமிழ் விக்கி, வாசகர்கள் என்ன செய்யலாம்?
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓரு வாசகனாக நான் இதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஒருநாளில் ஒரு மணிநேரத்துக்கு மேல் நான் தமிழ் விக்கியில் நேரம் செலவிடுகிறேன். இதன் மிகச்சிறந்த இயல்பு என்பது தேர்ந்தெடுத்து அமைக்க பட்டிருக்கும் இணைப்புகள்தான். ஒரு சுழல்போல நம்மை சுற்றி உள்ளே கொண்டுசென்றுவிடுகின்றன. நான் எவ்வகையிலாவது பங்களிப்பாற்ற முடியுமா?
ராஜேந்திரன் எஸ்.
தமிழ் விக்கி முகப்புஅன்புள்ள ராஜேந்திரன்,
தமிழ் விக்கி போன்ற ஓர் அமைப்பு நிலைகொள்ள வேண்டும் என்றால் அதற்கு பரந்துபட்ட பங்களிப்பு தேவை.
அ. எங்களுக்கு கட்டுரையாசிரியர் தேவைப்படுகிறார்கள். தமிழ் விக்கியில் இல்லாத கட்டுரைகளை நூல்களில் இருந்து உசாத்துணையுடன் எடுத்து எழுதி அனுப்பலாம். அக்கட்டுரை ஏற்கனவே இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்
ஆ. எங்களுக்கு ஆங்கில மொழியாக்கங்கள் நிறையவே தேவையாகின்றன. தமிழ் விக்கியில் உள்ள பதிவுகள் ஏற்கனவே ஆங்கிலத்தில் இல்லை என்றால் மொழியாக்கம் செய்து அனுப்பலாம். தமிழ் விக்கி தொடர்புக்கு
இ. தமிழ் விக்கியை தொடர்ச்சியாக வாசிப்பதே அதற்கு அளிக்கும் பங்களிப்புதான். ஆகவேதான் இணைப்பு அளித்துக்கொண்டிருக்கிறேன். பலர் அக்கட்டுரைகளை சொடுக்கிவிட்டு தமிழ் விக்கிக்குள் செல்லாமலேயே சென்றுவிடுகிறார்கள் என்றனர். நண்பர்கள்கூட அதைச்செய்கின்றனர். அது தமிழ் விக்கிக்குச் செய்யும் ஒருவகை துரோகம். உள்ளே சென்று கூடுமான வரை நேரம் செலவிடுவதே ஒருவர் தமிழ் விக்கிக்கு மிக எளிமையாகச் செய்யக்கூடிய பங்களிப்பு. அது தமிழ் விக்கி வாசிக்கப்படுகிறது என்பதற்கான சான்று. இன்றைய சூழலில் தமிழ் விக்கிக்குள் நுழையும் ஒவ்வொரு சொடுக்குக்கும் பெருமதிப்பு உண்டு. வாசகர்களிடம் கோருவது குறைந்தபட்சம் அதுவே.
ஈ. கூடுமான இடங்களில் எல்லாம் தமிழ் விக்கியை இணைப்பு அளிப்பது இன்றியமையாதது. இனி எழுதும் குறிப்புகள், கமெண்டுகளில் மட்டுமல்ல; ஏற்கனவே எழுதப்பட்டவற்றிலும் தமிழ் விக்கியை சுட்டிகொடுக்கலாம். அது தொடர்ச்சியாக வாசகர்களை உள்ளே கொண்டுவரும். வலைப்பக்கங்களில் நிரந்தர இணைப்பு அளிக்கலாம். கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இணைப்புகள் அளிக்கலாம்,
உ. வாட்ஸப், விவாதக்குழுமங்கள் போன்றவற்றில் இணைப்பு அளிக்கலாம். கட்டுரைகளை பகிர்ந்துகொள்ளலாம்.
பங்களிப்பது என எண்ணினால் ஏராளமாகச் செய்யமுடியும். மனமிருக்கவேண்டும். பொதுவாக நம் உள்ளம் பெருஞ்செயல்களை கண்டால் அச்சமும் விலக்கமும் கொள்கிறது. பெரும்பாலானவர்கள் சலிப்பு என்னும் மனநிலையிலேயே அன்றாடம் இருக்கிறார்கள். நான் எப்போதும் அவ்வாறல்லாத சிலரையே கருத்தில்கொள்கிறேன். அவர்களிடமே எதிர்பார்க்கிறேன்.
ஜெ
சுவாமி விபுலானந்தர்- முளைத்தெழும் சிலைகள்
சுவாமி விபுலானந்தர் பற்றிய தமிழ் விக்கி பதிவை வாசிக்கையில் ஒன்று தோன்றியது, அவர் ஈழத்தில் பிறந்தது அவருடைய நல்லூழ். அங்கே இனக்கலவரத்தில் அவருக்கு வைக்கப்பட்ட சிலைகள் உடைக்கப்பட்டன. உடைக்க உடைக்க அவை மீள மீள முளைத்தெழுந்துகொண்டே இருக்கின்றன. ஈழ அறிவுலகம் அவரை கைவிடவே இல்லை
நான் 2001 ல் கனடா சென்றபோது அங்கே சிவதாசன் என்னும் ஈழநாட்டு நண்பர் சொந்தப்பணத்தில் யாழ்நூலை மறு அச்சு கொண்டுவரும் முயற்சியில் இருந்தார். பிரமிக்கச்செய்யும் அச்சுநுட்பத்துடன் அந்நூல் வெளிவந்தது. எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
விபுலானந்தர் என்றால் பெரும்பாலானவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்காது. சிலர் யாழ்நூல் என்பார்கள். யூபிஎஸ்சி போட்டித்தேர்வு எழுதுபவர்கள் தகவல்களை தேடி அலைவதைக் காணமுடிகிறது. இந்த விக்கிப்பதிவு, இதன் இணைப்புகள் ஒரு முழுமையான நூல் அளவுக்கே விபுலானந்தரை அறிமுகம் செய்கின்றன
விபுலானந்தர்
சுவாமி விபுலானந்தர் – தமிழ் விக்கி
தமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்
நலம்தானே?
கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி தூரன் விருது வழங்கப்பட்டிருப்பது சிறப்பு. பெரியசாமித் தூரனுக்கு தமிழ் நாட்டாரியல் -சமூகவியல் ஆய்வாளர் என்னும் வகையிலும் முக்கியமான ஒரு தொடக்க இடம் உண்டு. அவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டருடன் இணைந்து வாய்மொழி நாட்டார் இலக்கியங்களை பதிப்பித்திருக்கிறார்.
கரசூர் பத்மபாரதி புறக்கணிக்கப்பட்ட ஓர் ஆய்வாளர். அவருடைய நூல்கள் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டாலும் ஓர் ஆய்வாளராக அவர் கல்விப்புலத்தால் இன்னும்கூட எங்கும் மதிக்கப்படவில்லை. அவர் பேராசிரியர் பணியில் இல்லை என்பதே காரணம். கரசூர் பத்மாவதிக்கு அளிக்கப்பட்ட இந்த விருது மிகப்பெரிய மதிப்பு மிக்கது.
தொடரட்டும் உங்கள் பணி
மா.செல்வராசன்
பெரியசாமித் தூரன் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்அன்புள்ள ஜெயமோகன்,
கரசூர் பத்மபாரதியின் தமிழ் விக்கி இணையப்பக்கத்துக்குச் சென்று பார்த்தேன். அத்தனை விரிவாக அவரை ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள். இதேபோல காத்திரமான ஆய்வுகளைச் செய்து இன்னமும் கவனிக்கப்படாத பல ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர தமிழ் விக்கி பரிசு அமைப்பினர் முன்வரவேண்டும். சரியான ஆய்வுகள் கவனிக்கப்படுவது ஆய்வுத்துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கும்
சி.சீரங்கன்
பூன், இர்வைன் – அருண்
நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் அம்மாவிடம் இரு கரங்களை நீட்டி உள்ளங்கையிலும் விரல் ஓரங்களிலும் ஆங்காங்கே காய்ந்து போன fevicol உரிந்து வருவது போல தோல் உரிந்துவருவதை காண்பித்தேன். அம்மா நீ வளரப்போகிறாய் அதனால் தான் புதிய தோல் வருகிறது என்றார். அதன்பின் பலமுறை உள்ளங்கையில் தோல் உரிந்து வந்திருக்கிறது. எவ்வளவுதான் பழைய தோல் உரிந்து புதிய தோல் தோன்றினும் கைரேகை மாற்றமடைவதேயில்லை. பாம்புகள் புதிய சட்டையை அணிந்தபின் பழைய சட்டையை மெல்ல மெல்ல கைவிடுகின்றன. அதன்பின் திரை மூடிய மங்கிய பார்வை மறைந்து தெளிவு உண்டாகிறது. தன்னைத்தானே உரித்தெடுத்து புதியதாய், தூயதாய், மேலும் பொலிவுடன், புதுப்பாய்ச்சலுடன், முன்பைக்காட்டிலும் தீவிரமாய் மாறுகிறது. பூன் முகாமும் அப்படி ஒரு தருணம் தான்.
முகாமின் நிகழ்வுகளை அனைத்தையும் தொகுத்து எழுத முயலவில்லை, மனதில் தோன்றிய சில விஷயங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் ஒரு இமயம் என்பது அறிந்த ஒன்றே. ஆனால் நேரில் சந்தித்தபோது தான் இமயத்தின் பிரம்மாண்டத்தை உணர முடிந்தது அதேவேளையில் நான் எந்த அளவு சிறியவன் என்றும் உணர்ந்தேன், நினைத்ததை காட்டிலும் சிறியவனாக.
பூன் முகாமில் களித்த ஒவ்வொரு காலத்துளியும் சிதறி வடிந்து மறைந்துவிடாமல் நினைவில் ஏற்றி தங்கு… தங்கு… வடிந்துவிடாதே என்று மூளை நரம்புகளை ஆணையிட்ட தருணம் பிறிதொன்றில்லை. கோடை காலங்களில் மாதம் ஒருமுறை வீட்டுக்குழாயில் வரும் பஞ்சாயத்து குடிநீரை அண்டா, குண்டா, தொட்டி, தவலை, குடங்கள் என பெரிய பாத்திரங்களில் நிரப்பிய பின்னரும் மனமடங்காமால் போதாது போதாது என்ற பதற்றத்துடன் வீட்டிலுள்ள ஜாடி, குவளைகள், டம்ளர், இட்லி பாத்திரம், போசி, டிபன் பாக்ஸ், என அடுமனையில் நிரப்பயேதுவான அனைத்திலும் நீரை நிரப்பி வைப்பதில் ஒரு மனநிம்மதி இருக்கத்தான் செய்கிறது.
ஒத்த ரசனையுள்ள நண்பர்கள் இவ்வளவு பேரை ஒரேவேளையில் இதற்குமுன் சந்தித்ததில்லை. அமெரிக்கா முழுக்க எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது கனவுபோல தோன்றுகிறது.
முகாமில் ராஜன் சோமசுந்தரம் காலை அமர்வின் தொடக்கத்தில் பாடிய கம்ப ராமாயணம் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் அப்பாடல் எனக்கு புரிந்தது தான். இதுவரை நான் கேட்டிராத ஒன்று. ராஜன் அப்பாடலை தெளிவாக விளக்கிய பின்னர் பாடலை பாடினார்.
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல கேள்வி மேவலால்
ஏற்கனவே பலமுறை சில கம்பராமாயண வரிகள் கேட்டிருந்தாலும் கம்பராமாயணத்தை முழுவதும் வாசிக்க உந்துதல் ஏற்பட்டதில்லை. இப்பாடலில் உள்ள முரண், குறு நகை, கம்பரின் குறும்புத்தனம் என்னை ஈர்த்திருக்கலாம். அடுத்தடுத்து நடந்த பாலாஜிராஜுவின் கவிதையரங்கு, விசு மற்றும் செந்திலின் கம்பராமாயணம் அமர்வு கவிதையின் மேலும் கம்பராமாயணத்தின் மேலும் ஒளிபாய்ச்சி உந்தியது என்றே கூறுவேன்.
முன்பு தளத்தில் கவிதை பற்றிய கட்டுரைகள் வந்தால் தவிர்த்துவிடுவேன், இப்போது வாசிக்கிறேன். கம்பராமாயணம் பாடலை எப்படி உச்சரித்து வாசிக்க வேண்டும் என்றும் கூட்டு வாசிப்பின் பயனையும் எடுத்துக்கூறி வலியுறுத்தினீர்கள். கவிதை அரங்கில் பாலாஜி ராஜு திரும்ப திரும்ப கவிதை வரிகளை வாசிக்க நேரும் போது மங்கலான உருவங்கள் கூட வடிவங்கள் எடுப்பதை உணர்தேன். கூட்டுக் கவிதை வாசிப்பு கவிதையின் நுண்மையும், ஆழத்தையும் அறியச் செய்யும், ஒவ்வொரு திரையை விலக்கி உள் நுழையும் அனுபவம் தருமென்றே நினைக்கிறேன். நிலத்தை நீரால் ஊறவைத்து துளையிடுவது போல.
குழந்தை வளர்ப்பு பற்றி வெவ்வேறு வடிவங்களில் கேள்விகள் எழுந்தபோது. இறுதியாக இந்த பந்து இனிமேல் கண்ணில் படவே கூடாது என்று எண்ணியவராய் ஆடுகளத்திலிருந்து இறங்கி வந்து சுழன்று அடித்த அடியில் பந்து வீர் என்று மைதானத்தை விட்டு வெகுதொலைவில் சென்று மறைந்து. நீங்கள் ஆற்றிய அச்சிறு உரை, பல முறை எழுதியிருந்தாலும் உரையை அங்கமர்ந்து கேட்ட அனைவரின் காதுகளில் என்றுமே எதிரொலிக்கும். சில வினாடிகளில் தத்துவத்தின் சாரத்தை பஞ்சுமிட்டாய் வைத்து புரியவைத்தீர்கள். தத்துவம் பற்றி பல கட்டுரைகள் வாசித்தாலும் எப்போதுமே ஒரு குழம்பிய நிலையில் தான் இருப்பேன். தத்துவ அமர்வுக்கு கிழக்கு மேற்கு தத்துவம் பற்றிய ஆழமான எளிய ஆரம்பகட்ட புரிதலை உண்டுபண்ணியது, பெரிய திறப்பாக அமைந்திருந்தது. மேலும் தத்துவத்தை பயில, அதில் பயணிக்க வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
இலக்கியம், ஈகோ, suspension of consciousness, life after death, ஊட்டி கதைகள், நான் உரையாற்றும்போது ஜெயின் இங்க இருக்கக் கூடாது என்று புன்னகையுடன் கூறிய அருண்மொழி நங்கை, செயலில் தீவிரத்தன்மை, படகு குழி புறம் கொண்ட யக்ஷி, இத்தியாதி என பூன் முகாமின் ஏதாவது ஒரு நினைவுத்துளிகளை சிறிதளவேனும் பருகுவது அன்றாடத்தின் ஒரு நிகழ்வாகவே அமைந்துவிட்டது.
***
இர்வைன் சந்திப்பு மனதிற்கு மிகவும் அணுக்கமான ஒன்று. ஸ்ரீராம் இச்சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார். சந்திப்பிற்கு சான் டியாகோ’வில் இருந்து அப்பா, மனைவி, ஐந்து வயது மகனை உடன் அழைத்து வந்திருந்தேன். சில மாதங்கள் எங்களுடன் செலவிட அம்மா அப்பா இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அப்பா உங்கள் வாசகர் அதனால் தவறாமல் அழைத்து வந்திட்டேன். மனைவி புதிய வாசகி அறம் கதைகளை வாசித்து வருகிறார்.
ஜெ, ஒரு உரையில் கூறியிருப்பீர்கள் ‘சருகுகளால் சூழப்பட்ட விதை’ என்று. இவ்வாக்கியம் என் தந்தைக்கு பொருந்தும் என்றே நினைக்கிறேன். பொருளியல் வெற்றியடையாத எந்தவொரு வாசகனும் ஏளனத்திற்குரியவனாகிறான். வண்ணங்களற்ற நாட்களான அன்றாடத்தின் உலோகச் சுவரை சிறு துளையிட்டு அத்துளையின் வாயிலாக வேற்றுலகை கண்டு தன் அகத்தில் நிரப்பி அதில் விடுதலை கண்டு திளைப்பவரை சருகுகளால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.
“ஏன் பெரும்பாலான ஊர் பெயர் எல்லாம் பாளையம் என்று முடியும்படி வைத்திருக்கிறார்கள்?” என்று பேச்சை ஆரம்பித்தால் எந்த உறவினர் தான் காது கொடுத்து கேட்பார்கள். எப்படி கடன் அடைப்பதென்றே தெரியல, பிள்ளைகளுக்கு வரன் அமையவே மாட்டிங்குது என்று சுவாரஸ்யமாகவும் பேசத் தெரியாது. அதனால் அப்பா தனிமையே விரும்புவார். பெரும்பாலான உரையாடல்கள் சிறுவர்களுடன் தான்.
என் தந்தை கோவையில் உள்ள மில் தொழிற்சாலையில் சுமார் 30 ஆண்டுகாலகம் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். உடல் வேலை, வாரம் ஒருநாள் விடுப்பு, மாறி மாறி வரும் பகல் இரவு ஷிப்ட். இளமையிலிருந்தே வாசிக்கும் பழக்கம் உடையவர் ஆரம்பத்தில் கல்கி, சாண்டில்யன், அகிலன் ஆகியோரின் படைப்புக்களை வாசித்திருக்கிறார். அதன்பின் வேறெந்த புனைவும் வாசிக்கவில்லை. எதையும் வாசிப்பார். காகித பொட்டலங்களை கூட வாசிக்காமல் கசக்கி எரிய மாட்டார். வரலாறு, யோகாசனம், சித்த மருத்துவம் சார்ந்த நூல்களை வாசிப்பார். ‘ஏம்பா கத புக்கு எல்லாம் படிக்கமாட்டயா?’ என்றால் அதெல்லாம் சகிக்க முடியாது என்று கூறிவிட்டு அப்பால் சென்று விடுவார். இலக்கிய அறிமுகம் வாய்க்கப்பெறாத நல்ல வாசகர். பக்தியில் நாட்டம் இல்லை இருப்பினும் எந்த புராதன கோயில் சென்றாலும் கோவில் வரலாற்றை அறிந்துகொள்வதில் பெருமுனைப்பு உடையவர். இயல்பிலேயே வரலாற்று கோணத்தில் வைத்து எதையும் பார்ப்பார். கோவில் ஸ்தலபுராணம் நூலை வாங்கிவிட்டுத்தான் வீடு திரும்புவார். நாடார் தெய்வம், குலதெய்வ வழிபாடு, பெருந்தெய்வம் பற்றி நான் சிறுவனாக இருந்தபோது அப்பா விலக்கி கூறியது இன்றும் நிவிருக்கிறது.
உலகியல் சிக்கல்களால் வாசிப்பு குறைந்து வந்தது, ஒருகட்டத்தில் நின்றே விட்டது. எப்போவாவது நாளிதழ் மற்றும் சோ. இருக்கும் வரை துக்ளக். யோகாசனத்தில் தீவிரமான அர்ப்பணிப்பு கொண்டவர். சர்வாங்காசனம் முதல் மயிலாசனம் வரை அசால்டாக செய்து காட்டுவார். எனக்கு நினைவு தெரிந்தது முதல் அப்பாவால் கண்ணாடி அணியாமல் வாசிக்க முடியாது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக கண்ணாடியே அணிவதில்லை ஏன் என்று கேட்டால் யோகாசனம் செய்கிறேன் தானாக சரியாகிவிட்டது என்கிறார் (நிஜமாகவே கண்ணாடி அணிவதில்லை)
சரியாக சொல்லப்போனால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் உங்கள் படைப்புக்களை என் தந்தைக்கு அறிமுகப்படுத்தினேன். முதலில் விஷ்ணுபுரம் வாசிக்கும் முன் ஒரு தயக்கம், கதைகளே அவருக்கு பிடிப்பதில்லை. நான் கூறியதால் மட்டுமே வாசிக்கலானார். தங்குதடை இல்லாமல் வாசிதேவிட்டார். இதுதான் நாவல் என்றார். அடுத்து கொற்றவை, முதற்கனல், வண்ணக்கடல், மழைப்பாடல், 6 தரிசனம் இது போக இன்றைய காந்தி, இந்திய ஞானம், அருகர்களின் பாதை, காந்திக்கு பின் இந்தியா 1&2, இந்தியாவின் இருண்ட காலம், அ.கா.பெருமாளின் நாட்டாரியல் நூல்கள் இவையனைத்தும் வாசித்துவிட்டார். பின்தொடரும் நிழலின் குரல் வசித்து வருகிறார். அப்பா இப்போது தீவிரமான இலக்கிய வாசகர். தன் 62’வது வயதில் உங்களை கண்டடைந்திருக்கறார். இத்தனை ஆண்டுகாலம் ஜெயமோகன் என்ற ஆளுமையை அறியாமல் போனோமே என்ற ஏமாற்றம் உண்டு. தற்சமயம் கைபேசியில் இணையம் பயன்படுத்த கற்றுக்கொண்ட பின் உங்கள் தளத்தை தினமும் வாசித்து வருகிறார். தளத்தில் உள்ள பல கட்டுரைகளை தேடித்தேடி வாசித்து வருகிறார்.
கோவையில் நீங்கள் ஆற்றிய ஓஷோவின் உரையை மூன்று நாளும் தவறாமல் வந்து அமர்ந்து கேட்டிருக்கிறார். சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விழாவிற்கும் பார்வையாளராக வந்து அமர்ந்திருக்கிறார். பெரும்பாலும் அறுபதை கடந்தோர் உடல் உபாதைகள், குடும்பம், கவலை, பக்தி என்று அவர்கள் சிறு வட்டத்திற்குள் சுருங்கி ஒடிந்து உறைந்துவிடக்கூடும். என் தந்தை உறையாமல் இருப்பது உங்கள் எழுத்துக்களால் தான். அக உலகத்தை விரித்து எடுத்து அதில் உரையாடல் நிகழ்த்தவும் சிந்திக்கவும், கற்பனை செய்யவும் கோருகிறது, அதற்கான கருவிகளையும் சமைத்துக்கொள்ள வழிவகுக்கிறது உங்கள் எழுத்து. அவர் உள்ளத்தில் புது பாய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்கூடு.
இப்படியிருக்க அப்பா உங்களை இர்வைனில் சந்தித்தது எனக்கு நெகிழ்வை தந்தது. அப்பாவுக்கோ குதூகலம், பரவசத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். எந்தப் புத்தகமானாலும் நேர்த்தியாக அட்டை போட்டு பாதுகாத்து வைப்பார், புக் மரக்குக்காக தாள்களை மடக்குவது அறவே பிடிக்காது. இர்வைன் சந்திப்பின்போது தன்னுடைய ஒளிபுகும் அட்டைபோட்ட இரண்டு புத்தகங்களை உங்களிடம் கையெழுத்து வாங்க எடுத்துவந்தார். அட்டை கழன்று வராதவாறு துண்டு பழுப்பு டேப் போட்டு ஒட்டி இருந்தது. நீங்கள் அப்புத்தகத்தை சில வினாடி புரட்டி அவருடைய பெயரை கேட்டு ‘அன்புள்ள அருணாசலத்திற்கு…’ என்று கையெழுத்து போட்டபோது அப்பாவின் உள்ளம் சிறுவனைப்போல துள்ளிக் குதித்ததை அருகில் இருந்த நான் உணர்ந்தேன்.
மகன் திகழ்வன், வயது ஐந்து. கிண்டர் கார்டன் செல்கிறான். அவனுக்கு உங்களை நன்றாகவே தெரியும். ஜெயமோகனை பார்க்க போகலாம் என்று சொன்னதும் மின்னல் வேகத்தில் புறப்பட்டுவிட்டான். சந்திப்பின்போது திகழ்வனை நீங்கள் மடியில் உட்க்காரவைத்தது, தூக்கி முத்தமிடும் போது எடுத்த புகைப்படம் குடும்ப பொக்கிஷமாக ஆகிவிட்டது. காரில் வீடு திரும்பும்போது ‘அப்பா, நானும் ஜெயமோகன் மாதிரி ரைட்டர் ஆகணும்’ என்றான் (தமிழ் நன்றாக பேசுவான்). சென்ற வாரம் மருத்துவமனை காத்திருப்பிருக்கையில் அமர்ந்திருந்தபோது சட்டென்று ‘அப்பா ஜெயமோகன் எந்த வயசுல இருந்து எழுத ஆரம்பிச்சார்?’ என்றான். இன்னொருநாள் வீட்டிற்கு வந்த என் நண்பனிடம் தனிச்சையாக நான் ஜெயமோகன் மாதிரி ரைட்டர் ஆகா போறேன், ஒன் பேஜ் ஸ்டோரி எல்லாம் எழுதிட்டு இருக்கேன்’ என்றான். நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
அன்புடன்,
அருண்
காடு, ஒரு கடிதம்
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அன்பு வணக்கம்!
என்னுடைய பெயர் பிரதாப். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சொந்த ஊர். தற்போது கொரியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். தங்களுடைய காடு நாவலை கடந்த வெள்ளிக்கிழமை வாசித்து முடித்தேன்!
நீங்கள் எழுதியதைப் போலவே “முடிவு ஒரு பித்துநிலை” தான். நாவலை படித்து முடித்து விட்டு ஒரு பித்துப்பிடித்த பற்றற்ற பெருமௌனம் எனக்குள் சூழ்ந்துகொண்டது. ஒரு பிரிவின் தாக்கத்தில் இருந்து மீள முயன்று கொண்டிருந்தபோது இந்நாவலை வாசிக்க நேர்ந்தது. காதல், காமம், நிலையின்மை போன்ற வாழ்வின் பல்வேறு நிலைகளின் மீது ஒரு மாறுபட்ட புரிதலை உண்டாக்கியது இந்நாவல் எனலாம்.
நீலியைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்! மோகமுள் நாவலில் வரும் கங்காவிற்கு பிறகு, நீலியைத் தான் என் இதயத்துக்குள் ஊறல் போட்டு வைத்திருக்கிறேன். எழுத்துகளின் வாயிலாக நமக்குத் தெரியவரும் கதாப்பாத்திரங்களின் மீதான காதல் என்ன வகைப் பைத்தியக்காரத்தனம் என்று தெரியவில்லை. ஆனால் அவற்றை ரசிப்பதில் ஒரு தனி போதை இருக்கத்தான் செய்கிறது. இந்நாவலின் தாக்கம் எனக்குள் நெடுநாட்கள் இருக்கப் போகிறது என்பது மட்டும் உண்மை!
இந்த ஆராய்ச்சி எல்லாம் இல்லை என்றால் உண்ணாமல் உறங்காமல் கூட வாசித்து முடித்திருப்பேன் போலும். அப்படி ஒரு கட்டிப்போட வைக்கும் நடையை உங்கள் எழுத்தில் கண்டேன். “எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் பண்ணீட்டு, கருமத்த! கழுவி ஊத்தி மூடீட்டு போய் நிம்மதியா சுவாசிக்கலாம்!” என்றெல்லாம் கூடத் தோன்றியது. ஆனால் என்னுடைய தேடலுக்கும், பேராசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுக்கும், பயணங்களுக்கும் தீனி போடுவதாக இந்த நாவல் அமைந்தது எனக்கு பெருமகிழ்வைத் தந்தது.
பிரதாப்
June 21, 2022
என் சமரசங்கள் என்ன?
அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?
‘என்னுள் இருந்த சுய அடையாளம் தேடிப் பரிதவித்த அந்த இளைஞன் மன எழுச்சி தாளாமல் கண்ணீர் மல்கினான். ஞானம் மட்டுமே தன் சுயமாகக் கொண்டு இப்படித் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தால், இந்த உலகின் பணம், அதிகாரம், அற்ப வேட்கைகள் அனைத்தையும் இப்படி காலடி வைத்து இலகுவாகத் தாண்ட முடிந்தால் மட்டுமே நான் வாழ்ந்தவன், வென்றவன் என்று எண்ணிக் கொண்டேன்’
‘இவர்கள் இருந்தார்கள்’ நூலில் பெரும் பணக்காரர்கள் மத்தியில் ஞானம் ஒன்றை மட்டுமே தன் இயல்பாகக் கொண்ட க.நா.சு. பற்றி நீங்கள் எழுதியுள்ள வரிகள். (’இவர்கள் இருந்தார்கள்’ பக்கம் 81)
தற்போது (2022) நீங்கள், உங்களை இம்மாதிரி உணர்கிறீர்களா? சாகித்திய முதலிய விருதுகள் வேண்டாம் என்று நீங்கள் விலக்கியதை நான் அறிவேன். ஆயினும், கொண்ட கொள்கைகள், பொருளியல் சார்ந்து உங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாற வேண்டிய, விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டா? நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களைக் கடக்கவும், சில குழுக்களிடம் ஒத்துப் போகவும் சமரசங்கள் செய்துகொள்ள வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? இது, இலக்கிய வாழ்க்கை குறித்தான கேள்வியே தவிர, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்வியன்று.
சுருக்கமாக : உங்களை அந்த 1985 க.நா.சு. இடத்தில் பொருத்திப் பார்க்க உங்களால் முடிகிறதா?
நன்றி
ஆமருவி தேவநாதன்
***
அன்புள்ள ஆமருவி தேவநாதன்,
என்னுடைய வாழ்க்கையை கொஞ்சம் அடுத்து அறியும் எவருக்கும் இந்தக் கேள்வி எழாது என நினைக்கிறேன். இக்கேள்வி மிக அப்பாலிருந்து எழுகிறது. சரிதான், அதற்கான பதில் இது.
என்னிடம் பல குறைபாடுகள் உண்டு. குணக்கேடுகளும் உண்டு. அவை பெரும்பாலும் ஒருமுனை நோக்கி தன்னை குவித்துக் கொள்வதனால் விளைபவை. அத்துடன் படைப்பியக்கச் செயல்பாடு என்பது ஒருவன் தன்னுள் உள்ள அனைத்தையும் குத்திக் கிளறிவிடுவதுதான். காமம், வன்முறை, கீழ்மைகள், இருள்கள். அவற்றை அவன் தெளியவைக்க கொஞ்சம் தாமதமாகும். அதற்கான வழி இலக்கியத்துக்குள் இல்லை. இலக்கியம் இலக்கியவாதிக்கு வழிகாட்டாது. வாசகனுக்கே வழிகாட்டும். எழுதுவது அதுவாகி நடிப்பது. வெளியே வர வேறொரு பிடிமானம் தேவை.
அந்தக் கொந்தளிப்பும், நிலையழிவும், சமநிலையின்மையும் என்னிடமுண்டு. அதன்பொருட்டு நட்பு, உறவு அனைவரிடமும் எப்போதும் மன்னிப்பு கோரிக்கொண்டேதான் இருக்கிறேன்.
ஆனால் சமரசங்கள்? அதுவும் கொள்கைகளில்? இல்லை.
எங்கும் எப்போதும் குறைந்தது ஐம்பதுபேர் சூழத்தான் சென்ற இருபதாண்டுகளாக வாழ்கிறேன். அந்தரங்கம், தனிப்பட்ட வாழ்வு என ஒன்று இல்லை. அணுக்கமுள்ளோர் அறியாத ஒன்றும் என் வாழ்வில் இல்லை.
அவ்வண்ணம் அணுகியறிந்தோர் எவரும் ஐயமின்றி உணர்வது ஒன்றே, இலக்கியத்தில், கருத்தில் எங்கும் எவ்வகையிலும் நான் சமரசம் செய்துகொள்வதில்லை.
அவ்வண்ணம் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பதனாலேயே ஒரு இலக்கியப் பார்வையை தத்துவப் பார்வையை, ஆன்மிகப் பார்வையை தீவிரமாக முன்வைப்பவனாக இருக்கிறேன். அதையொட்டியே என்னைச் சுற்றி இத்தனை பேர் திரண்டிருக்கிறார்கள்.
இவர்கள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். அத்தனைபேரும் வாசிப்புப் பழக்கமும், இலட்சியவாத நோக்கமும் கொண்டவர்கள். கலைகளில், இலக்கியத்தில், சேவைக் களத்தில் பெரும்பங்களிப்பாற்றுபவர்கள்.
சொல்லப்போனால் இன்று இவ்வண்ணம் முதன்மைப் பங்களிப்பாற்றும் ஏறத்தாழ அனைவரையுமே எங்கள் திரள் என ஆக்கிக் கொண்டிருக்கிறோம். வெளியே இத்தரத்தில் அதிகம்பேரை நீங்கள் பார்க்கமுடியாது. வெளியே பேசும்குரல்களென தெரியவருபவர்கள் மிகப்பெரும்பாலும் ஏதேனும் அரசியல் நம்பிக்கை சார்ந்து திரண்டவர்களாகவே இருப்பார்கள். கூட்டுக்குரல்களே அவ்வாறு ஒலிக்கின்றன, தனிமனிதக்குரல்கள் மிகமிக அரிது.
என்னை சூழ்ந்திருப்போர் எவருக்கும் உலகியல் சார்ந்து எதையும் நான் அளிப்பதில்லை. அவர்களிடமிருந்து நேரமும் பொருளும் பெறவே செய்கிறேன். அளிப்பது நான் கொண்டிருக்கும் இலட்சியவாதத்தை மட்டுமே. அந்த நம்பிக்கையை மட்டுமே.
இலட்சியவாதம் மீதுதான் எல்லாக் காலகட்டத்திலும் ஆழமான அவநம்பிக்கை மனிதனிடம் இருக்கிறது. ஏனென்றால் உலகியல் சார்ந்தே அன்றாட வாழ்க்கை உள்ளது. சமூகமதிப்பு உள்ளது. லட்சியவாதம் அதற்கு எதிரானது.
அந்த அவநம்பிக்கையுடன் வருபவர்களே அனைவரும். அவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். பலகோணங்களில் பரிசீலிப்பார்கள். எப்படியேனும் இலட்சியவாதத்தைப் பொய்யென்றாக்கிவிடவேண்டும் என்றே அவர்களின் அகம் ஏங்கும். அதையும் மீறி ஆணித்தரமான நம்பிக்கை உருவான பின்னரே அவர்கள் இலட்சியவாதத்தை ஏற்கிறார்கள்.
அப்படி வந்தவர்கள்தான் என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே. அவ்வண்ணம் கூர்ந்து நோக்கி, ஐயப்பட்டு, மெல்லமெல்ல ஏற்று ஓர் அமைப்பென ஆனவர்கள் நாங்கள். சென்ற பதிநான்கு ஆண்டுகளாக ஏறத்தாழ அனைவருமே அதே தீவிரத்துடன், அதே நம்பிக்கையுடன் இருந்துகொண்டிருக்கிறோம். மேலும் மேலும் புதியவர்கள் வந்து சேர விரிந்துகொண்டும் இருக்கிறோம்.
காரணம் நான் முன்வைக்கும் அந்தச் சமரசமின்மை. அதன் மூலம் முன்வைக்கப்படும் மதிப்பீடுகள். மனிதர்கள் எப்போதும் இன்னொரு மனிதனையே நம்புகிறார்கள். வெறும் கொள்கைகளையோ தத்துவங்களையோ அல்ல. ஒருவனால் மெய்யாகவே முன்வைக்கப்படும்போது மட்டுமே கொள்கையும் தத்துவமும் இன்னொரு மனிதனால் ஏற்கப்படுகிறது.
*
அத்தகைய முழுமையான சமரசமின்மை சாத்தியமா? ஆம், அதற்கான வழி ஒன்றே. எதைச் செய்கிறோமோ அதில் உச்சமாக ஆதல். ஒரு துறையின் முதன்மை நிபுணர் எவ்வகையிலும் எவர் முன்னாலும் சமரசம் செய்துகொள்ளவேண்டியதில்லை என்பதை உங்கள் தொழிலை கொஞ்சம் கவனித்தாலே தெரிந்துகொள்ளலாம்.
சமரசம் தேவைப்படுவது, நமது போதாமைகள் மற்றும் பலவீனங்களால்தான். எந்த அளவுக்கு போதாமையும் பலவீனமும் இருக்கிறதோ அந்த அளவுக்குச் சமரசம் தேவையாகிறது.
ஒரு துறையின் முதன்மைத் திறன் கொண்ட ஒருவரின் சமரசமின்மை என்பது அவருடைய மேலதிகக் குணமாகவே உண்மையில் கருதப்படுகிறது. சொல்லப்போனால் அவர் திமிருடன் இருப்பதேகூட ஏற்கப்படுகிறது. பலசமயம் அந்த திமிரை விரும்பவும் செய்கிறார்கள்.
நான் என் தொழிலில். சினிமாவில், நுழைந்து 18 ஆண்டுகள் ஆகின்றன. என்னுடன் சினிமாவில் நுழைந்த பலர் இன்றில்லை. நான் புகழ்பெற்ற எழுத்தாளனாக, என் நண்பர் லோகிததாஸால் வலுக்கட்டாயமாக இழுத்து சினிமாவுக்கு கொண்டு செல்லப்பட்டேன். என் நண்பர்கள் சுகா, வசந்தபாலனால் அடுத்தடுத்த படங்கள் வந்தன. நான் இன்றுவரை எவரையும் தேடிச்செல்லவில்லை.
இந்த பதினெட்டு ஆண்டுகளில், ஒருவர்கூட ஒரு பைசா கூட எனக்கு பணம் பாக்கி வைத்ததில்லை. நின்றுவிட்ட படத்துக்குக் கூட பணம் தந்திருக்கிறார்கள். நான் எழுதியதை எடுக்காதபோதுகூட பேசிய பணத்தை அளித்திருக்கிறார்கள்.
காரணம் நான் எங்கும் வளைவதில்லை என்பது. அது உருவாக்கும் ஆளுமைச்சித்திரம். இன்றுவரை முதன்மை மதிப்பு இல்லாமல் எங்கும் எவரிடமும் பணியாற்றியதில்லை. வாசல்வரை வந்து வரவேற்காத எவரையும் பார்த்ததில்லை.
ஏனென்றால், நான் ஒரு தனிமனிதனாக தனிப்பட்ட பலவீனங்களே இல்லாதவன். சினிமாவில் அதற்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு. அத்துடன் ஓர் எழுத்தாளனாக நான் பொதுவாக எதிர்பார்க்கப்படும் அளவுகோல்களுக்கும் பலமடங்கு மேல் பங்களிப்பாற்றுபவன். ஒரு படத்தை முழுமையாக எழுதி, முழுமையான ஆராய்ச்சிச் செய்திகளுடன் அளிப்பேன். எனக்குரிய ஊதியத்துடன் என்னை அமர்த்தும் இயக்குநர் நேரடியாகவே படப்பிடிப்புக்குச் செல்லமுடியும்.
அந்த இரண்டுமே மதிப்பை, நிமிர்வை உருவாக்குகின்றன. தமிழில் இதுவரை எழுதிய எழுத்தாளர்களில் எல்லாவகையிலும் முதலிடத்திலேயே இருக்கிறேன் என சினிமாத்துறையினர் அறிவார்கள். அது பங்களிப்பின் விளைவாக மட்டுமல்ல, நிமிர்வின் வழியாகவும் அடைந்தது. வெளிப்படையாகச் சொன்னால் நிமிர்வே ஊதியத்தையும் வரையறை செய்கிறது.
*
ஆனால், இத்தனை ஆண்டுகளில் வேறுசில சமரசங்களை அடைந்துகொண்டிருக்கிறேன். அது என் ஆளுமையில் இயல்பாக உருவாகி வருகிறது.
முதலில் பிறரது தனிமனித பலவீனங்கள், குணக்கேடுகள் முன்பு போல எரிச்சலை அளிப்பதில்லை. உடனடியாக சில சமயம் எதிர்வினை ஆற்றினாலும் மனிதர்கள் எவர் மீதும் நீடிக்கும் ஒவ்வாமை என ஏதுமில்லை. முன்பு ஒழுக்கம் ஓர் அளவுகோலாக இருந்தது. இன்று அதெல்லாம் ஒரு விஷயமே அல்ல என நினைக்கிறேன்.
ஆகவே எவராயினும் ஏற்பதற்கு இன்று எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அது என் நண்பர்கள் பலருக்குச் சில சமயம் திகைப்பை அளிக்கிறது என தெரியும். ஆனால் எதுவும் அவ்வளவெல்லாம் பெரிய விஷயம் அல்ல என்னும் உளநிலை நோக்கிச் செல்கிறேன்.
அதேபோல, இலக்கிய மதிப்பீடுகள். முன்பு திறனற்ற அல்லது மேலோட்டமான எழுத்துக்கள் மேல் ஓர் ஒவ்வாமையை அடைவேன். போலி எழுத்துக்கள் எரிச்சலூட்டும். இலக்கிய அளவுகோல்களில் சமரசமே இல்லாமல் இருக்கவேண்டும் என்றும், கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டும் என்றும் உறுதி கொண்டிருந்தேன்.
இன்று அப்படி அல்ல. இந்த வாழ்க்கையில், தமிழ்ச்சூழலில், ஏதாவது கலை, இலக்கியம் மற்றும் அறிவுச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பற்பல பல்லாயிரங்களில் ஒருவர் என அறிந்திருக்கிறேன். ஆகவே எல்லா செயல்பாடுகளுமே நல்லவைதான், உயர்ந்தவைதான், செயலாற்றும் எல்லாருமே எனக்கு வேண்டியவர்கள்தான்.
கலையில், சிந்தனையில் கொஞ்சம் தர வேறுபாடு இருக்கலாம். அந்த வேறுபாட்டை மழுங்கடிக்கவேண்டியதில்லை. அதை முன்வைக்கலாம். ஆனால் எதிர்ப்பதும், நிராகரிப்பதும், எரிச்சல்கொள்வதும் தேவையற்றவை என்று தோன்றுகிறது. ஏதேனும் ஒருவகையில் பங்களிப்பாற்றிய எல்லாரையுமே அரவணைக்கவே நினைக்கிறேன்.
அதை இப்போது எல்லாரையும் தழுவிக் கொள்கிறேன், எல்லாரையும் பாராட்டுகிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். இருக்கட்டும், அது என்னுடைய இன்றைய மனநிலை, அவ்வளவுதான்.
*
நம் சமூகத்தில் பல்லாயிரம் பேரில் ஒருவர்தான் ஏதேனும் தளத்தில் தனித்திறனும், அதை மேம்படுத்திக்கொள்ளும் சலியா உழைப்பும் கொண்டவர். அவர் அடையும் வெற்றிகளை மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் போதாமையால், தங்கள் பலவீனங்களால் தொடர்ச்சியாகச் சமரசங்கள் செய்துகொண்டு வாழ்பவர்கள்.
ஆகவே அவர்கள் வெற்றிபெற்றவர்கள் தங்கள் சமரசங்களைப் போல மேலும் சமரசங்கள் செய்துகொண்டவர்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அவர்களால் வேறுவகையில் கற்பனை செய்ய முடியாது. வென்றோர் மற்றும் முதன்மையானவர்களின் சரிவுகளை சாமானியர் உள்ளூர விரும்புகிறார்கள். ஆகவே புகழ்பெற்றவர்களின் சமரசங்கள் மற்றும் சரிவுகளைப் பற்றி வம்புபேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வம்புகள் வழியாகவே சாமானியர் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள முடியும். தங்கள் எளிய வாழ்க்கையை பெரிய மனசோர்வில்லாமல் வாழ்ந்து தீர்க்க முடியும். தங்கள் இருப்பு, தங்கள் வாழ்க்கை பற்றி அவர்களுக்கே இருக்கும் அகக்கூச்சத்தை கடக்கமுடியும்.
எளிய மனிதர்கள் தங்கள் கால்களால், தங்கள் எண்ணங்களால் நிற்கமுடியாதவர்கள். அவர்களுக்கு அமைப்புகளாகத் திரண்டே நிலைகொள்ள முடியும். சாதி, இனம், மதம், கட்சி, கோட்பாடு என பல திரள்கள். அதிலொன்றாக தங்களை உணர்ந்தால் மட்டுமே அவர்களால் தன்னம்பிக்கை கொள்ள முடியும். அவர்களால் நிமிர்ந்து நடந்து வாழ்வைக் கடப்பவர்களைப் புரிந்துகொள்ள முடியாது.
வம்புகள் வசைகள் அவதூறுகள் என எல்லா பொதுவெளியிலும் கொப்பளிப்பவர்கள் அவர்கள்தான். அவர்கள்மேல் அனுதாபமும் பிரியமுமே எனக்கு உள்ளது. பெரும்பாலும் அவர்களை ஒரு புன்னகையுடன் அணுகுகிறேன். வாழ்ந்தாள் முழுக்க க.நா.சு. எளிமையான அமைப்புசார்ந்த மனிதர்களின் அவதூறுகளையும் காழ்ப்புகளையும் ஏளனங்களையும் சந்தித்துக்கொண்டிருந்தார். இன்று அவரைப்பற்றிய அவதூறுகளை எண்ணினால் புன்னகையே எழுகிறது. அவரும் இந்தப் புன்னகையை வந்தடைந்திருந்தார்.
சுருக்கமாகச் சொல்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. சிறுவனாகவே அவருக்கு அது தேவைப்படவில்லை. போராடி மேலே வந்த இளையராஜா போராடும் காலத்திலேயே சமரசம் செய்யத் தெரியாதவர்தான். மணிரத்னமோ, கமல்ஹாசனோ, சச்சின் டெண்டுல்கரோ எவருடன் எதன்பொருட்டு சமரசம் செய்துகொள்ளவேண்டும்?
இலக்கியமாயினும் சினிமாவாயினும் என் களத்தில் நான் முதன்மையானவனாகவே நுழைந்தேன். அவ்வண்ணமே இருப்பேன். பிறர் என்னுடன் போட்டியிடுவதைப் பற்றி கற்பனைசெய்யக்கூட முடியாத தொலைவிலேயே திகழ்வேன். அந்த உச்சத்தை கீழே நிற்பவர்களிடம் எளிதில் விளக்க முடியாது. கீழிருக்கும் எதுவும் அங்கில்லை. சமரசங்கள் மட்டுமல்ல, சஞ்சலங்களும் ஐயங்களும்கூட இல்லை.
கீழிருக்கும் பெரிய மலைகள் எல்லாம் அந்த உயரத்தில் வெறும் கூழாங்கற்கள். நீங்கள் நினைக்கவே மலைக்கும் செயல்களெல்லாம் அங்கே எளிமையானவை. ஆனால் அங்கே வேறு அழுத்தங்கள் உண்டு. கீழிருப்போர் எண்ணிப்பார்க்கமுடியாத தீவிரங்கள் அவை. மிக நுண்மையானவை. அங்கே ஒரு படியில் இருந்து அடுத்த படிக்கு ஏறவேண்டும் என்றால் பல்லாயிரம் காதம் பறக்கவேண்டும்.
அங்கே சென்றபின் கீழிருந்து அடையத்தக்கதாக ஒன்றுமில்லை. பாராட்டுக்கள், விருதுகள், அங்கீகாரங்கள் எவற்றுக்கும் எப்பொருளும் இல்லை. எவருடைய பாராட்டு? நாம் எந்த தளத்தை விட்டு முற்றிலும் விலகிச் சென்றிருக்கிறோமோ அங்கிருந்து ஒரு பாராட்டு வந்து என்ன ஆகப்போகிறது?
நாம் எய்தவேண்டியவை அங்கே அதற்கும் அப்பால் உள்ளன. நாம் அடைந்த உச்சங்களுக்கு அப்பால் அடுத்த உச்சமாக. அடைய அடைய எஞ்சும் ஒன்றாக. அதை நோக்கிச்சென்றுகொண்டே இருப்பதன் பேரின்பத்தை அடைந்தவர்கள் உச்சத்தில் திகழ்பவர்கள். அவர்களின் உளநிலைகளை கீழிருந்து எவரும் அளந்துவிடமுடியாது.
ஆனால் இன்னொன்று உண்டு. அங்கே அவ்வுயரத்தில் சட்டென்று வந்து கவியும் வெறுமை. அனைத்தையும் விட்டுவிடவேண்டும் என எழும் ஒரு வகை அகத்துடிப்பு. அதை வெல்ல வலுக்கட்டாயமாக கீழே வந்தாகவேண்டியிருக்கிறது. இங்கே எதையாவது பற்றிக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.
*
அந்த உயரம் பற்றி நான் உங்களுக்காகச் சொல்லவில்லை. பொதுவாக இதை வாசிக்கும் இளைஞர்களுக்காகச் சொல்கிறேன். அவர்களில் பலர் அந்த உச்சம் நோக்கி வரவிருப்பவர்கள் என்பதனால்.
ஒருவன் வாழ்நாளில் கொள்ளவேண்டிய முதல் ஞானம் என்பது தன்னைவிட அறிவால், செயலால், எய்தியவையால், இயற்றியவையால் முன்சென்ற பெரியவர்களிடம் கொள்ளும் அடக்கம்தான். என்றேனும் அவனும் அத்தகையோன் ஆக அதுவே முதல்படி.
அப்படி ஓர் உயரம் உண்டு என உணரவேண்டும். அதைச் சென்றடைதல் அரிது என அறியவேண்டும். அதை நோக்கி தவமிருக்கவேண்டும். அதற்கு அந்த உயரத்தை அடைந்தவர் மீதான மதிப்பு மிக அடிப்படையானது. எனக்கு அது இருந்தது. நான் தேடித்தேடிச்சென்று அடிபணிந்துகொண்டிருந்தேன்.
அப்படி ஓர் உயரம் இல்லை என்று எண்ணிக்கொள்ளலாம். எல்லாரும் சமம்தான், சாதிப்பவனும் சாமானியனும் ஒன்றுதான் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அப்படி சொல்பவன் ஒருபோதும் உயரமென்ப ஒன்றையும் எய்தப்போவதில்லை. அவன் இருந்த இடத்தை தேய்க்கும் எளியவன், வம்புபேசி வாழ்ந்து தீரவேண்டியவன்.
அந்த அடக்கத்தை இழந்து, உயர்ந்து எழுந்தவர்களை தன் அன்றாடத்தாலும் தன் சிறுமையாலும் அளவிட முயல்பவன் தன் ஞானத்துக்கான முதல் வழிதிறப்பையே மூடிக்கொள்கிறான். எளிய வம்பனாகி, தன்னை மேலும் சிறியோனாக்கிக் கொள்கிறான். உள்ளூர தன் சிறுமையை எண்ணி கூசி, அதை வெல்ல வெளியே மேலும் சிறுமையை கொட்டிக்கொண்டிருக்கிறான்.
சில விஷயங்கள் மிக மிக எளிமையானவை, கண்கூடானவை, வழிமுன் மலை என தூலமாக நின்றிருப்பவை.
*
சரி, அசாதாரணமான திறன்கள் கொண்டவர்கள், செய்துகாட்டியவர்கள் மட்டுமே சமரசம் இன்றி இருக்க முடியுமா? இல்லை. முதன்மையானவர்கள் எந்த இழப்பும் இன்றி சமரசம் இல்லாமல் இருக்க முடியும் என்றே சொல்லவந்தேன். அவர்களின் உலகை பொதுவாக நம் சூழல் அனுமதிக்கிறது. ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் பயனுள்ளவர்கள். வண்டு எல்லா சிலந்திவலையையும் அறுத்துச்செல்லும். சிலந்திவலை இருப்பதையே அது அறியாது.
அவ்வாறல்லாதவர்கள், சற்று குறைவான தனித்திறனும் தீவிரமும் கொண்டவர்கள், சமரசமின்மை கொண்டிருந்தால் அதன் விளைவாக சில இழப்புகளுக்கு ஆளாவார்கள். அவ்விழப்புகளை உற்றார் சுட்டிக்காட்டவும் செய்வார்கள். அவ்விழப்பு குறித்த பிரக்ஞை அவர்களுக்கும் இருந்துகொண்டே இருக்கும்.
ஆனால் சமரசமில்லாமல் இருப்பதன் தன்னிமிர்வு மிகப்பெரிய சொத்து. சிறுமைகளற்றவன் என ஒருவன் தன்னைத்தானே உணர்வது மிகப்பெரிய வெற்றி
ஜெ
முத்தம்பெருமாள், நடிகர் சிம்பு
தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் தொடங்கியபோது எழுந்த பலநூறு ஐயங்களுக்கு விடையாக தமிழ் விக்கியே அமையட்டும் என்று நான் நண்பர்களிடம் சொன்னேன். முத்தம்பெருமாள் கணியன் போன்ற ஒரு கலைஞர் ஏன் முக்கியமானவர், அவர் ஏன் பண்பாட்டு வரலாற்றில் பதிவாகவேண்டியவர் என நாம் பண்பாட்டறிவே இல்லாத பொதுப்புத்தியாளர்களிடம் விளக்கவேண்டிய தேவையே இல்லை. தமிழ் விக்கியிலுள்ள இப்பதிவுக்கு இணையான ஒரு வரலாற்றுப்பதிவு அவருக்கு அமையப்போவதுமில்லை. இனி இங்கிருந்தே அவர் வரலாறு எழுதப்படும்.
(முத்தம்பெருமாளுக்கும் சிம்புவுக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது…)
முத்தம்பெருமாள் கணியான்குமரகுருபரன் விழா- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
ஆனந்த்குமாருக்கு விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியை அளித்தது. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதை அறிந்தேன். வேறெந்த இதழிலும் செய்தி வரவில்லை என்றாலும் உங்கள் தளம் வழியாகவே அறிய முடிந்தது. அது மிகுந்த மனநிறைவை அளித்தது. ஒரு நாள் முழுக்க கவிதை பற்றிய உரையாடல் என்பது இன்றைய சூழலில் மிகப்பெரிய ஒரு நிகழ்வு. அரங்கிலும் மேடையிலும் தமிழின் முக்கியமான இளம் முகங்களை பார்க்க முடிந்தது. வாழ்த்துக்கள்.
எஸ்.ராஜ்குமார்
***
அன்புள்ள ராஜ்குமார்,
நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. வீரான்குட்டி மலையாளக் கவிஞர். மலையாள இலக்கியவாதிகள் ஒரு விழாவில் கலந்துகொண்டால் மலையாள இதழ்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடாமலிருப்பதில்லை. ஆகவே விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா செய்தியை மாத்ருபூமி இதழ் வெளியிட்டிருக்கிறது. மகிழ்ச்சி அளிக்கும் செய்தி அது.
இளம்கவிஞர்கள், இளம் வாசகர்கள் என அரங்கு நிறைந்திருந்தது நாங்கள் செல்லும் பாதை பற்றிய நம்பிக்கையை உருவாக்குகிறது.
ஜெ
நிறைந்து நுரைத்த ஒரு நாள் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது, மதார் அரங்கு குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது வேணுவேட்ராயன் அரங்கு குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார் குமரகுருபரன் விழா, வீரான்குட்டி உரையாடலும் உரையும் குமரகுருபரன் விழா உரைகள்- போகன், ஜெயமோகன்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers


