Jeyamohan's Blog, page 761
June 16, 2022
அப்பம் வடை தயிர்சாதம்
அன்புள்ள ஜெ
பாலகுமாரனின் தீவிர வாசகன் நான். அவருடைய எல்லா பதிவுகளையும் படித்திருக்கிறேன். அவருடைய தமிழ் விக்கிப் பக்கம் பார்த்தேன். பாலகுமாரன். மிக விரிவாக இருந்தது. உடையார் உட்பட அவருடைய எல்லா முக்கியமான நாவல்களுக்கும் தனிக்கட்டுரைகளும் தொடுப்புகளும் இருந்தன. மகிழ்ச்சி.
அதன் வழியாக அப்பம் வடை தயிர்சாதம் கட்டுரையை வாசித்தேன். நான் அவருடைய நாவல்களிலேயே வீக் ஆன நாவல் என நினைப்பது அப்பம் வடை தயிர்சாதம்தான். ஆமாண்டா நாங்கள்லாம் அப்டித்தான் என்று சொல்வதுபோல எழுதப்பட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த கட்டுரை வாசித்தபோது நான் வாசித்த முறையே தப்பு என்று தோன்றியது. அது மூன்று தலைமுறை இடப்பெயர்வின் மனநிலைகளையும் அதன் பிரச்சினைகளையும் பேசும் படைப்பு.
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். அந்நாவலைப் பற்றி தமிழ் விக்கியில் உள்ள அந்த மதிப்பீடு சரியாக இருந்தாலும் ஒரு கலைக்களஞ்சியத்தில் அப்படி இருக்கலாமா? கலைக்களஞ்சியம் தகவல்களை அல்லவா தரவேண்டும்? அபிப்பிராயங்களைச் சொல்லலாமா?
ராம் முகுந்த்
***
அன்புள்ள ராம்,
உலகம் முழுக்க கலைக்களஞ்சியங்களில் வகுத்துரைப்புகள் உள்ளன. அவை இல்லாவிட்டால் அந்தப் பதிவு ஏன் கலைக்களஞ்சியத்தில் உள்ளது என்பதற்கு காரணம் இல்லை. ஏன் இன்னொரு நாவலுக்கு பதிவு இல்லை?
ஆனால் விக்கிப்பீடியாவில் கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் அதற்கு ஆசிரியர் என எவருமில்லை. எவரும் எதுவும் எழுதலாம். ஆகவே எதற்கும் உசாத்துணை, சான்றாதாரம் தேவை. கருத்து என்றால்கூட அது மேற்கோள் ஆகவே வரமுடியும். அதற்கும் மதிப்பில்லை.
தமிழ்விக்கி ஒரு Peer Reviewed கலைக்களஞ்சியம். இதற்கு ஆசிரியர் குழு உள்ளது. அது வெளிப்படையாக உள்ளது. மதிப்பீடு அல்லது கருத்து என்பது ஆசிரியர்குழுவின் திரண்ட கருத்து என்றே எடுத்துக்கொள்ளப்படவேண்டும். ஆசிரியர்குழு கல்வியாளர் அடங்கியது. ஆகவே இக்கருத்துக்களை கலைக்களஞ்சியத்தின் கருத்துக்களாக எந்த ஆய்வேட்டிலும் மேற்கோள் காட்டலாம்.
ஜெ
அப்பம் வடை தயிர்சாதம்உரை, கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நான் உங்கள் உரைகளை விரும்பிக் கேட்பவன். எனக்கு வாசிப்பதை விட உரைகள் இன்றைக்கு நெருக்கமாக உள்ளன. ஏனென்றால் வாசிப்பதற்குரிய இடமும் சூழலும் இல்லாதபோதுகூட நம்மால் உரைகளைக் கேட்கமுடியும். நீங்கள் உரையாற்றுவது அவ்வளவு முக்கியமல்ல என்ற என்ணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். ஆனால் எங்களைப்போன்றவர்களுக்கு உரைகளும் மிகவும் தேவை என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்
செல்வராஜ் மோகன்
***
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் திருப்பூர் கட்டண உரைக்கு ஆவலாக வந்தேன். உங்களை சிங்கப்பூரில், ஊட்டியில், ஈரோட்டில், கோவையில் தொலைவிலிருந்து சந்தித்திருக்கிறேன். என் சொந்த ஊரில் சந்திப்பது கொஞ்சம் ஸ்பேசல்தான். திருப்பூர் உரையில் நீங்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தேன். ஓரிரு வரிகள் மட்டுமே குறிப்பெடுத்தேன். நிற்பது நிற்கட்டுமென விட்டுவிட்டேன். நேற்று இரவு மாடியில் நடந்து கொண்டிருக்கும் போது, மென்பொருளில் கருவிக்கும்(tool) பொருளுக்கும்(product) என்ன வேறுபாடென யோசித்துக் கொண்டிருந்தேன். கருவி ஒரு தனிப்பட்ட வேலையை மட்டும் செய்யும் பொருள். பொருள் என்பது வளரக்கூடிய ஒன்று. பல புது விசயங்கள் பொருள்மேல் ஏற்றி அதைப் புதுப்பொருளாக மேறு கேற்றலாம். இந்த வித்தியாசத்தை கத்தி,நெகவெட்டி,ஏசி,ஏசி ரிமோட்டையெல்லாம் உதாரணமாகக் கொண்டு மேடை மேல் என்னுடன் பணிபுரிபவர்களுக்கு விளக்குவது போல் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
சிந்தனைப் போக்கு அப்படியே கிரியேட்டிவிட்டி பக்கம் சென்றது. அப்பத்தான் வீட்டுக்கு பின்புறமிருக்கும் மரத்தை புதிதாகப் பார்த்தேன். திருப்பூர் உரையின் சாரம் கனிமரம் மனதில் எழுந்தது. கையை விரித்து நீங்கள் கனிமரம் டைனமிக் என்று சொல்வதாய் நினைத்துக் கொண்டேன். கிரியேட்டிவ் மனம் கனிமரம் போல். என்றும் வளரக் கூடியது. அழிவில்லாதது. தன்னை அழித்து அதன் விதையால் வேறொன்றை உருவாக்கும். அதுவும் பழைய கனிமரம்தான் இருந்தும் புதிய கனிமரம். பின் சிந்தனை அப்படியே மேடையில் நிற்கும் நான் தனியன் அல்ல. என் பின்னால் தந்தையும், அவர் பின்னால் தாத்தனும்,அவர் பின்னால் பாட்டனும், அவர் பின்னால் முப்பாட்டனும் அப்படியே தொடர்ந்து பின்னால் போய்க் கொண்டேயிருந்தால் பிரபஞ்சம் உருவாகிய கணம் வரும். பிரபஞ்சமாகிய அதை உணரமுடியும். அதுவே பிரம்மம். அதன் பாதையே அத்வைதம் எனச் சொல்லி முடித்தேன்.
கனிமரம் என்னுள் பிரம்மம் வரை வளர்ந்துள்ளது.
அன்புடன்
மோகன் நடராஜ்
***
கல்குதிரை, மதார் கவிதைகள்
அன்புள்ள ஆசிரியருக்கு,
பூன் காவிய முகாமில் கவிதைகளுக்கான அமர்வில் உங்களுடைய உரைக்குப் பிறகு அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவில் கவிதைகள் குறித்த விவாதங்கள் பரவலாக நடைபெறுகின்றன. பல நண்பர்களுக்கு கவிதைகளின் மேல் ஒரு ரகசிய ஈர்ப்பு இருப்பது தெரிகிறது. உங்கள் வருகைக்குப் பின் எண்ணங்களை வெளிப்படையாக முன் வைக்கிறார்கள். கவிதைகளை எப்படி அணுகுவது, புரிந்துகொள்வது என்பதே விவாதங்களின் சாரம். ‘கவிதைகளைப் புரிந்துகொள்தல் என்பதை புறவயமாக வரையறுத்துக்கொள்ள முடியுமா’ என்பதற்கு என்னிடமும் ஒரு தெளிவு இல்லை. கவிதைகளை வாசித்தல், புரிந்துகொள்தல் என்பதையெல்லாம் ஒரு வாசகனின் உள்ளுணர்வு சார்ந்தவை என்றே எண்ணுகிறேன்.
இந்த உள்ளுணர்வு தொடர்ச்சியாக கவிதைகளையும், கவிதைகளைக் குறித்தும் வாசிப்பதனால் மனதில் ஏற்படும் அகவயமான ஒரு தெளிவு அல்லது முதிர்ச்சி என்பதே இப்போதைக்கு என்னுடைய நிலைப்பாடு. ‘Intuition’ என்ற ஆங்கில இணை வார்த்தைக்கு கூகுள் ‘the ability to understand something immediately, without the need for conscious reasoning’ என்று அர்த்தம் தருகிறது. நண்பர் சங்கர் பிரதாப் தளத்திலுள்ள https://www.jeyamohan.in/157730/ சுட்டியைப் பகிர்ந்திருந்தார். இந்தச் சுட்டி கவிதைகளின் உலகுக்குள் நுழைய மிகப் பெரிய நுழைவாயில், ஒரு ‘மாயச் சாளரம்’ (நன்றி: பனி உருகுவதில்லை), தொடர்ந்து இங்குள்ள கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இந்தக் கடிதம் கவிஞர் மதாரைப் பற்றியது. கல்குதிரை இதழில் அவருடைய ஆறு கவிதைகள் வெளிவந்துள்ளன. அவை குறித்த சில எண்ணங்கள்,
1.
கண்ணை மூடிக்கொண்டே
இருந்த பொழுது
குருடனானேன்
எங்கும் ஒரே நிறம்
வானை பார்த்துக்கொண்டே
இருந்த பொழுது
குருடனானேன்
எங்கும் ஒரே நிறம்
போகிற போக்கில்
பார்வை தந்து போனது
ஒரு பறவை
ஒரு நல்ல கவிதையை, கவிதை அனுபவத்தை வாசிக்கும் போது குலைத்துக்கொள்ள முடியுமா? முடியும். ஏனென்றால் நான் இதைச் செய்திருக்கிறேன், என்னுடைய இந்தச் செயலுக்கு மதாரின் கவிதைகளும் தப்பவில்லை. ஆனால் இந்தக் கவிதையை அப்படியே விட்டுவிடுகிறேன், இது கவிதை, அவ்வளவுதான். இந்தக் கவிதையில் ஒரு தூய்மையிருக்கிறது, நல்ல கவிதைக்கே உரிய தூய்மை. கடைசி மூன்று வரிகளை விட்டு மனம் நகர மறுக்கிறது, தோன்றியதை வரையறுத்துக் கூற முடியவில்லை, அது நல்ல கவிதையை வாசித்தவுடன் எழும் ஒரு உணர்வு என்று மட்டும் சொல்லமுடிகிறது. இது நல்ல கவிதை என்று வகைப்படுத்துவது ரசனை சார்ந்ததாக இருக்கலாம், ஆனால் அதீதமான எண்ணங்களை இந்தக் கவிதையின் மேல் செலுத்தாமல் இரு என்று மனதில் ஏதோ ஒன்று சொல்கிறதே, அதையே உள்ளுணர்வு என்று இப்போதைக்கு நம்பிக்கொள்கிறேன்.
*
2.
இயக்கத்தில் உள்ள
புலியைச் சுட
வெற்று வெளியைத்தான்
சுடவேண்டியிருக்கிறது
புலி ஓடி வெற்று வெளியை
அடைந்து மரணிக்கிறது
குறி பார்ப்பதென்பது
குறி தப்பிப் பார்ப்பதா
தலைக்குக் குறி வைப்பது
வாலை வீழ்த்தவா
வாலிபன் மரணித்துவிட்டான்
கிழவன் தப்பி
குருவி மடிந்தது
வானைக் காப்பாற்றி
ஆற்றின் தவளைக்கல்
நீர்த்தவளையை ஓடச் செய்கிறது
மூன்று நான்கு முறைகள்
நான்கு ஐந்தில்
சடலம் மூழ்குகிறது
நீருக்குள்
அடி ஆழம் நோக்கி
உக்கிரமான கவிதை. இயக்கத்தில் இருக்கும் புலியைச் சுட வேறெங்கோ சுட வேண்டியிருப்பது ஆழமான படிமம். அன்றாடச் செயல்களில் கால இடப் பரிமாணங்களின் பங்கை எத்தனை குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறோம். வாலிபன் மறைந்து கிழவன் தப்புவதும், குருவி மடிந்து வானைக் காப்பாற்றுவதும் பிரபஞ்சத்தின் சமநிலைப் படுத்தும் ஒரு போக்குதான்.
தர்க்கரீதியாக எனக்கு ‘Sniper’ களின் பிம்பம் மனதில் எழுகிறது. பார்வைத்திறன், கவனக் குவிப்பு, காற்று, வெளி, தற்செயல், இலக்கின் நிலைத்தன்மை என்று பல காரணிகளை உத்தேசித்து செயல்படுபவர்கள். குண்டு விடுபடும் தருணத்திற்கும், இலக்கை அடைவதற்கும் உள்ள இடைவெளிகள் யாரால் நிர்ணயிக்கப்படுகின்றன?
‘தவளைக்கல் வீழ்த்தும் தவளை‘ எனும் குறியீடு தொந்தரவு செய்கிறது, மதாரை மீறி எழுந்த வரிகள் என்றே எண்ணுகிறேன். சில நேரங்களில் கவிஞர்களின் கடிவாளங்களுக்கு சொற்கள் அடங்குவதில்லை, இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டு வீரன் மெல்லத்தான் நிலைத்தன்மைக்கு வரமுடியும், எல்லைக்கோட்டைத் தாண்டி சில அடிகளேனும் ஒட்டம் எனும் விசை அவனை நகர்த்திவிடக்கூடும், கவிமனதின் ஓட்டங்களும் அப்படித்தான். என்னால் கடைசி ஏழு வரிகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை, கவிதையில் இந்த வரிகளின் தேவை ஒரு புகைமூட்டக் காட்சியாய் தெரிகிறது. அர்த்தம் இல்லாமலேயே கவிதை வரிகள் மனதுக்குப் பிடிப்பது, சலனங்களை ஏற்படுத்துவது, கவிதை வாசிப்பின் வினோதம்தான். இந்தக் கவிதையில் எனக்கு தேவதச்சன் தெரிகிறார் என்பதைப் பாராட்டாகவே முன்வைக்கிறேன்.
கவிதையின் கடைசி ஏழு வரிகள், கவிதைகளைப் புரிந்துகொள்தல் எனும் புறவயமான வரையறையின் கைகளிலிருந்து நழுவிப் பறந்துவிடும் தன்மைக்கு மிகச் சரியான ஒரு மாதிரி. நீண்ட நாட்கள் என் மனதில் நிலைக்கப்போகும் கவிதை இது, மதாருடைய அடுத்த தொகுப்பில் பரவலாகப் பேசப்படும் ஒன்றாகவும் அமையலாம்.
3.
இனி எனக்கு
வேண்டாமென
பந்தைக் கீழே
குத்துகிறது
குழந்தை
துள்ளியெழும் அதன் செய்கை கண்டு
கத்துகிறது
துள்ளித் துள்ளி
உயரம் குறையும் பந்தின் அன்பில்
குழந்தைக்கு
அழுகையே வந்துவிடும் போல் தெரிகிறது
குழந்தை பந்தைத் தூக்கி முத்துகிறது
கொழகொழக்கும் எச்சிலோடு
பந்து கீழே விழுந்து துள்ளி ஓடுகிறது
குழந்தை சிரித்துக்கொண்டே
பின்னால் ஓடுகிறது
சமாதானப்படுத்த
மதாருடைய கவிதைகளில் குழைந்தைகள் பரவலாக வருகிறார்கள். குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் மேல் இருக்கும் உறவை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஒரு குழந்தையின் மனதுக்குள் புகுந்து அவர்கள் தீண்டும் பொருட்களைப் பார்த்தால் எண்ணற்ற படிமங்கள் கிடைத்துவிடும். இந்தக் கவிதையில் குழந்தையும் பந்தும் ஒன்றுதான். குழந்தைகளுக்கு மனதின் மேல் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லை, அவர்களுடைய மன ஓட்டங்களை இயக்கும் சக்தி அருவமானது.
4.
வந்த வேகத்தில்
திரும்பிச் சென்ற மழை
வந்தது எதற்கு
மறதி மேக தயவில்
வாசல்
நனைந்தது
இனி
கோலப் பொடியுடன்
நீ வரலாம்
அழகிய கவிதை. எதையாவது செய்யச் சென்று போகும் வழியில் அப்படியே மனதில் வெற்றிடமாய், வந்த வேலையை மறந்து சில நொடிகள் தவிக்கும் அனுபவத்தை எண்ணிக்கொள்கிறேன், சிறு வயதிலேயே எனக்கு இது ஏற்பட்டிருக்கிறது. இங்கு மேகத்தை ‘Dementia’ உள்ள ஒரு பெரியவரோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன், கொஞ்சம் சிரிப்பு வருகிறது, ‘பிறசண்டு’ சிறுகதையின் சிரோமணி நினைவுக்கு வருகிறார். பாவம் மேகம், சில கோலங்கள் வரையப்படுகின்றன…
5.
என் கைக்குட்டை பறந்தது காற்றில்
தலையிலிருந்து வானத்தில்
இதுவரை
நான் வாய் துடைத்தது
ஒரு சிறகின் முனையில்
சட்டைப்பைக்குள்
ஒளித்து வைத்திருந்தது
ஒரு பறவையை
கூண்டை உதறி
அது இப்போது
பறந்துவிட்டது
மழையில் நனைகிறது
என் கேசம்
கைக்குட்டைக் கம்பளத்தில்
ஏறிப் பறக்கிறது
வானின் ஒரு துளி
கைக்குட்டைக் கம்பளத்தில்
பறக்கிறது
வளி
கைக்குட்டை பறவையாக மாறி, ஒரு கம்பளமாக பரிணமித்துவிடுகிறது, வானின் ஒரு துளியை, வளியைச் சுமந்துகொள்கிறது. ஒரு குழந்தையாக என்னைக் கற்பனை செய்துகொண்டு இந்தக் கவிதையை வாசித்தால் மிகுந்த எழுச்சி தருகிறது, இன்னொரு அழகிய கவிதை.
6.
மூக்குக் கண்ணாடி அணியாமல்
தூரக்காட்சிகளின் மங்கல்
எனக்கொரு தைரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது
மேடை பயம் விலக
பள்ளி நாடகமொன்றில்
மூக்குக் கண்ணாடி அணியாமல்
நடித்த நாள்
நினைவிற்கு வந்தது
எதிர்வரும் மனிதர்கள்
கலங்கலாகிவிட்டனர்
இப்போது பயம் நீங்கிவிட்டது
பார்வைத் தெளிவெனும் அச்சம்
என் வீட்டுப் பரணில் கிடக்கிறது
எத்தனை நாள்
அதை
தூசி போகத்
துடைத்திருப்பேன்
அறியாமை
அறியாமை
அந்த பைனாக்குலர்
இனி எனக்கு வேண்டாம்
இனி தூரத்துப் பறவை
என் கண்களில் பறக்காது
அது வானத்தில் பறக்கிற செய்தியை ஏந்தி வரும்
தபால்காரர் போதுமெனக்கு
நம் எல்லோரிடமும் இந்த மூக்குக் கண்ணாடி இருக்கிறது, அதைத் துடைத்து பளபளவென்று வைத்திருப்பதை சமூகம் பாராட்டிக்கொண்டே இருக்கும், நாமும் அந்தச் செயலால் உவகையடைகிறோம். ஆனால் கண்ணாடியை வீசியெறிந்துவிடக்கூடிய துணிவு மிகச் சிலருக்கே வாய்க்கிறது, அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், ‘விதி சமைப்பவர்கள்’, சிலர் அவ்வப்போது தூக்கியெறிகிறார்கள். இதில் நீ எந்த வகை என இந்தக் கவிதை கேள்வி கேட்கிறது. கவிஞர் அபி ‘என்னுடைய தோல்விகளைத்தான் கவிதைகளாக எழுதுகிறேன்’ என்று சொன்னார், மதார் எப்படியோ!
மதார் தேவதேவன், தேவதச்சன், அபி, லக்ஷ்மி மணிவண்ணன் என மூத்தவர்களுடன் எப்போதும் ஒரு உரையாடலில் இருக்கிறார். நித்தியமான கவிதைகளை எழுதிவிட்டோம் போன்ற உளமயக்குகள் அவருக்கு இல்லை, திறந்த மனதோடு உலகை நோக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு உரையாடலில் தேவதேவனைச் சந்திகப்போவதாகச் சொன்னார், ‘அவரைப் பார்த்துவிட்டு வரும்போதெல்லாம் உத்வேகத்தில் நான்கைந்து நல்ல கவிதைகளை எழுதுவிடுகிறேன்’ என்றார். அவருடைய கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பவனாக, மிகச் சிறந்த கவிதைகளை அவரிடம் எதிர்பார்க்கும் ஒருவனாக இருப்பதில் ஒரு மன நிறைவுடன் இந்தக் கவிதைகளை உங்கள் முன் வைக்கிறேன்.
அன்பும் நன்றிகளும்,
பாலாஜி ராஜூ
June 15, 2022
முத்தப்பனும் பகவதியும் முப்பதாண்டுகளும்
காசர்கோடு தொலைபேசி நிலையத்திற்கு நான் பிறிதொரு முறை சென்றதில்லை. கே.எஸ்.அப்துல்லா அவர்களின் அந்தப் பழைய கட்டிடம் சிதிலமாகி அப்படியே நின்றிருக்கிறது. அதற்கப்பால் பிரம்மாண்டமாக எழுந்த புதிய தொலைபேசி நிலையம் மெல்ல மெல்ல ஆளோய்ந்து இன்று ஒரு சரித்திர சின்னம் போல அமைதியில் ஆழ்ந்திருக்கிறது.
பி.எஸ்.என்.எல்லிலிருந்து எனது தோழர்கள் ஒட்டுமொத்தமாக கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வெளியேறினார்கள். விருப்ப ஓய்வு என்று அதற்குப்பெயர். ஆனால் அந்த விருப்பத்தை தெரிவிக்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு இடமாற்றம் பெற்று அலையவேண்டியிருக்கும். முறையான மாத ஊதியம் கிடைக்காமலும் ஆகும். மும்மடங்கு நான்கு மடங்கு ஐந்து மடங்கு பணிச்சுமை கூட்டப்படும். ஆகவே அவர்கள் வெளியே வந்தனர். கேரளத்தில் இன்று அடுத்த தலைமுறைகள் விரைவாக ஏதேனும் வேலைக்கு சென்றுவிடுவதனால் அவர்கள் எவரும் பொருளியல் நெருக்கடியில் இல்லை என்பது ஓர் ஆறுதல்.
2019-ல் என் நண்பர்கள் ஒட்டுமொத்தமாக விருப்ப ஓய்வு கொடுத்தபோது நிகழ்ந்த விழாவுக்கு நான் சென்றிருந்தேன். அப்போது ஒரு கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டது. தனியார் செல்பேசி சேவைகளையும் மக்களுக்கு வழங்கும் நோக்கம் கொண்ட ஒரு வணிக அமைப்பு அது. வணிக லாபத்தை விட ஓய்வு பெற்றவர்கள் மேலும் சில ஆண்டுகள் ஏதேனும் செய்யவேண்டும் ,ஒவ்வொரு நாளும் கிளம்பி எங்காவது செல்லவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. அதற்குள் கோவிட் தொற்று ஏற்பட்டது. கோவிட் காலம் முடிந்து மீண்டும் இப்போது அந்த கூட்டுறவு அமைப்பும் அதன் பணிகளும் ஒவ்வொன்றாக மேலெழுந்து வருகின்றன.
சென்ற ஏப்ரலில் கருணாகரனும் பாலசந்திரனும் என்னை அழைத்திருந்தார்கள். எனக்கு அறுபது ஆண்டு நிறைவு வருவதை நினைவூட்டி, அவர்களிலும் ஒன்பது பேர் அறுபது ஆண்டு நிறைவுபெறுவதை தெரிவித்தார்கள். நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் என்றார்கள். நான் அப்போது அமெரிக்காவுக்கு செல்லும் திட்டத்தில் இருந்தேன். பொழுதில்லை என்று அவர்களிடம் சொன்னேன். எனில் சென்று வந்த உடனேயே கொண்டாட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என்றார்கள். ஆகவே ஜுன் ஐந்தாம் தேதி அளித்தேன்.
ஜுன் 2ம் தேதிதான் நான் இந்தியா வந்து சேர்வதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக ஒருநாள் விமானம் தாமதமாகி தோஹாவில் ஒருநாள் விமானநிலையத்தின் விருந்தினர்களாகத் தங்கி 3ம் தேதிதான் வந்து சேர்ந்தேன். மே 4ம் தேதி மதியமே கிளம்பி திருவனந்தபுரம் போய் ,அங்கிருந்து காசர்கோடுக்குச் சென்றேன்.
காசர்கோடு என்று சொல்லக்கூடாது. காசர்கோடுக்கு முன்னரே பையனூர் அருகே செறுவத்தூர்ன. பாலசந்திரனும் கருணாகரனும் அவர்களின் மகன்களும் நண்பர்களும் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்கள். பாலசந்திரனின் இல்லத்தில் தங்கினேன். கேரளத்தில் நண்பர்கள் அனைவருமே ஏறத்தாழ 2005-ல் வீடு கட்டியிருக்கிறார்கள். எல்லா வீடுகளுமே நன்கு திட்டமிடப்பட்ட அழகான வீடுகள். நகரப் பகுதியில் இருக்கும் இடுங்கல் இல்லாமல், கிராமத்தில் உள்பகுதிகளில், தோட்டங்களுக்கு நடுவே போதிய இடம் எடுத்து கட்டப்பட்ட வீடுகள். சுற்றிலும் பூந்தோட்டங்கள்.
குறிப்பாக பாலசந்திரனின் வீட்டின் வலது பக்கம் மிகப்பெரிய வயல்வெளி திறக்கிறது. அவனுடைய வீட்டு சன்னல் வழியாக எடுக்கும் புகைப்படத்தை உலகின் தலைசிறந்த இயற்கைக்காட்சிகளில் ஒன்று என்று எங்கும் சொல்லமுடியும். பசுமை நிறைந்து ததும்பிக் கிடக்கும் வயல்வெளி. அருகில் ஒரு நீர் நிறைந்த குளம்.அதன் அருகே சிறு வேளாண்மைக்குடில் சலனமின்றி பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். வெயில் விழும்போது ஒளிரும் பசுமை என்பது நம்முள் ஒரு இனிய மோனநிலையை அளிக்ககிறது. வாழ்தல் ஒவ்வொரு கணமும் இனிதாக துளித்துளியாக நம்முள் இறங்குகிறது
ஆனால் இது காலை பத்து மணி வரைதான் .அதன்பின் வயல்வெளியின் நீர்ப்பரப்பிலிருந்து எழும் நீராவி வந்து நனைந்து மூச்சுத்திணறத் தொடங்குகிறது. உடல் எரிகிறது .வியர்த்து வழிகிறது. மின்விசிறிக்கு அடியில் மட்டுமே அமர்ந்திருக்க முடியும். அந்த வெக்கை ஏறி ஏறி வந்து, மதியத்துக்குப் பிறகு மழை பெய்யுமோ என்ற மயக்கத்தை உருவாக்குகிறது .சில தருணங்களில் ஒரு சிறிய மழை வெறியுடன் அடித்து ஓய்கிறது. மீண்டும் நீராவி செறிவு தாகம் கோழிகளைப்போல வாய் திறந்து அமர்ந்திருக்கவேண்டும்.
பரஸ்ஸினி கடவுஅந்தியில் பசுமையின் மணம் கொண்ட நீராவிக்காற்று. இன்னும் சற்று அப்பால் ஏரியிலிருந்து வரும் பாசி மணம் கொண்ட காற்று. மெல்ல மெல்ல வெக்கை அடங்கி காற்றில் குளிர் ஏறுகிறது. ஏழு மணிக்கு நன்றாகவே குளிரத்தொடங்கியது. அதற்குள் கதவுகளை எல்லாம் நன்றாக மூடவேண்டும். இங்கே கொசுவலையில்லாத சாளரங்களைப்போல ஆபத்து எதுவுமில்லை. நீரும் வெயிலும் பசுமையும் அழகு மட்டுமல்ல அவை பிரம்மாண்டமான உயிர் வெளிகளும் கூட. பல்லாயிரக்கணக்கான பூச்சிகள் .பலநூறு வகை உயிர்கள். வெளிச்சம் கண்ட இடம் நோக்கி அவை பெருகி படையெடுத்து வருகின்றன.
இயற்கையுடன் வாழ்வதென்பது அத்தனை எளிதல்ல. அது இயற்கையுடன் அதன் கடுமையையும் சீண்டலையும் தாங்கி வாழும் பழக்கம் கொண்டவர்களுக்கே இயல்பானது .மற்றவர்களுக்கு புகைப்படத்தில் தான் இயற்கை இனிதாக இருக்கும்.
பாலசந்திரனின் வீட்டில் பகலிலேயே என்னை தூக்கம் தள்ளியது. என்னுடல் அமெரிக்க காலத்தில் இருந்தது. ஆனால் நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். ரவீந்திரன் கொடகரா, எம். ஏ. மோகனன், பவித்ரன் என… ஒவ்வொருவருடனும் உரையாடி, சிரித்து, நினைவுகளைப் பகிர்ந்து தூக்கத்தை வென்றேன்.
மாலை ஐந்து மணிக்கு நிகழ்வு .அதற்கு முன் மதிய உணவு கருணாகரனின் இல்லத்தில். கருணாகரனின் மனைவி ஆசிரியை. மிக விரிவாக சமைத்திருந்தார். கேரள பாணி மீன் உணவு, சிக்கன் பொரியல். கூடவே கேரள பாணி பிரதமன், பலாக்காய் அவியல், அன்னாசிப்பழ புளிசேரி, வெள்ளரிக்காய் போட்டுவைத்த எரிசேரி என அற்புதமான உணவு .
ஆனால் விந்தையான கலவை. மலபாரில்கூட பாயசத்துடன் கூடிய உணவில் மீன் சேர்ப்பதில்லை. நான் சிரித்தபடி கேட்டபோது “ஒருவருக்கு பிடித்தமான அனைத்தையும் தேடிச் சமைத்துவிட்டேன். ஏனென்றால் அவர் ஒருவேளை மட்டுமே என் வீட்டில் சாப்பிடுகிறார்’ என்றார் கருணாகரனின் மனைவி. அனைத்தையும் வளைத்துக்கட்டி உண்ட பின்னர் வாழ்க்கை ஒரு மயக்க நிலையை எய்தியது.கருணாகரன் எதிரே அமர்ந்து திரைச்சீலை ஓவியம் போல அலையடித்துக்கொண்டிருந்தார்.
வேறு வழியின்றி ஒரு இருபது நிமிடம் தூங்கிவிட்டு வருகிறேன் என்று அவன் வீட்டு மாடியில் சென்று படுக்கையில் படுத்து தூங்கினேன். அங்கிருந்து வீட்டுக்கு வந்து ஆடைமாற்றிக்கொண்டேன். வேட்டி, சிவகுருநாதன் அளித்த தவிட்டு நிற சட்டை. சிவகுருநாதன் சட்டைகள் ஒரு தனி கௌரவத்தை வழங்குவதை இதற்குள் கவனித்திருக்கிறேன். முதன்மை நிகழ்வுகளில் நாம் அணிவதற்குரியவை அவை.
முதன்மை நிகழ்வுகளில் இரண்டுவகையான சட்டைகளைத்தான் அணிய முடியும். ஒன்று மிக உயர்ந்த விலை கொண்ட பிராண்டட் சட்டைகள். பத்து பதினைந்தாயிரம் ரூபாய் இல்லாமல் அவற்றை நாம் வாங்க முடியாது. கொள்கை அடிப்படையில் அவற்றிற்கு நான் முற்றிலும் எதிரானவன். அல்லது சிவகுருநாதனின் நூற்பு அமைப்பு உருவாக்குவது போன்ற கைத்தறி நெசவு, இயற்கை வண்ண ஆடைகள் .அவை எளிமையான நிமிர்வு ஒன்றை நமக்கு அளிக்கின்றன. அவற்றை பார்ப்பவர்கள் ஆடையையன்றி கூடவே ஒரு கொள்கையையும் பார்ப்பதனால் நமது கவுரவம் ஒருபடி கூடுகிறதே அன்றி குறைவதில்லை. புகைப்படத்தில் அவை மிக தெளிவான தனித்தன்மையைக் காட்டுகின்றன.
ஒரு பொது நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே எந்த தயக்கமும் இல்லாமல் நூற்பு ஆடையைத்தான் நான் சிபாரிசு செய்வேன். நான் கலந்துகொள்ளும் உயர்வட்ட நிகழ்வுகளிலும் சரி, சிறப்பு நிகழ்ச்சிகளிலும் சரி, வேறு எந்த சட்டையை அணிந்தாலும் அதன் விலை பதினைந்தாயிரம் ரூபாய்க்கு குறைவென்றாலும் ஒரு அன்றாட மலிவுத்தோற்றத்தை அளிப்பதாக ஆகிவிடும்.
நண்பர் ரவீந்திரன் கொடகரா எங்கள் பி.எஸ்.என்.எல் தொலைபேசி சங்கத்தின் பொறுப்பிலும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பிலும் இருந்தவர். அவருடைய தந்தை கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ் பெற்ற தியாகிகளில் ஒருவர். நண்பர் வி.பி.பாலசந்திரனின் தந்தை வி.பி.சிந்தனைப்போல அவரும் அப்பகுதியில் சிலைகள், நூலகங்கள் வழியாக நினைவு கூரப்படுபவர் .ரவீந்திரன் கொடகரா முன்னரே உருவாக்கிய ஓர் அமைப்பு கதலீவனம். ஒரு கூட்டுறவு நிறுவனம். கேரளத்தில் இடதுசாரிகளின் கூட்டுறவு நிறுவனங்கள் பெரும்பாலும் மிக வெற்றிகரமானவை. நிர்வாகிகள் யோக்கியமாக இருந்தால் கூட்டுறவு போல மிகச்சிறந்த தொழில்முறை வேறில்லை.
செறுவத்தூரில் அமைந்திருக்கும் இந்த அமைப்பு அங்கிருந்த ஒரு பழைய நம்பூதிரி ஒருவரின் இல்லத்தை வாங்கி புதிதாகக் கட்டி எழுப்பப்பட்டது. ஆயுர்வேத மருத்துவம் யோகப்பயிற்சி மற்றும் கலைப்பயிற்சிகளை வழங்கக்கூடியது. பத்து ஏக்கர் நிலத்தில் வேளாண்மையும் செய்கிறார்கள்..வெளிநாட்டில் இருந்தெல்லாம் பயணிகள் வந்து தங்கி ஆயுர்வேத சிகிச்சைகள் எடுத்து செல்கிறார்கள். அங்கு இருந்த பொது அரங்கில்தான் நிகழ்ச்சி.
எனது நண்பர்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள். நினைவில் இருந்து முகங்கள் உருபெருகி வந்துகொண்டிருந்தன. நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்தித்த நாராயண நம்பீசன் “டேய் நீ இன்னும் நகங்கடிக்கிற பழக்கத்தை விடலையா? என்னிக்குடா மனுஷனாகப்போற?” என்று கேட்டான். சிலர் உடல்நலம் குன்றியவர்களாகத் தெரிந்தார்கள், சிலர் முன்னிலும் இளையவர்களாகவும். தளர்ந்த தோற்றம் கொண்டவர்கள் அனைவருமே மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பது தற்செயல் அல்ல.
விழாவில் என்னுடன் அறுபது ஆகும் நண்பர்கள் அனைவருக்கும் நான் பொன்னாடைபோர்த்தி மரியாதை செய்தேன். அவர்கள் எனக்கு பொன்னாடை போர்த்தி ஒரு சால்வையை அணிவித்தார்கள். ஒரு பெரிய நிலக்காட்சி ஓவியம் எனக்கு பரிசாக அளிக்கப்பட்டது அதை வரைந்த ஓவியரே வந்து வழங்கினார். நான் உரையாற்றினேன்.
என்னை வாழ்த்தி உரையாற்றுவதற்கு வருவதாக இருந்த சி.வி.பாலகிருஷ்ணன் அன்று வரமுடியவில்லை. அவர் அமைச்சர் பங்கு கொள்ளும் வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நிகழ்ச்சி தாமதமாக அங்கே சிக்கிக்கொண்டார். அது உலகச்சுற்றுச்சூழல் நாள் என்பதனால் எல்லா இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தது.மறுநாள் காலை பாலசந்திரனின் இல்லத்துக்கு சி.வி.பாலகிருஷ்ணன் வந்து நெடுநேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.
உலகச்சுற்றுச்சூழல் நாளை ஒட்டி கதளீவனத்தில் நான் ஒரு இலஞ்சி மரம் கன்றை நட்டேன். என்னுடைய உரையில் காசர்கோடுக்கும் எனக்குமான உறவைச் சொன்னேன். காசர் கோடு தொலைபேசி நிலையத்திற்கு ஒருபோதும் திரும்பிப்போகாத நான் மீண்டும் மீண்டும் காசர்கோடின் நண்பர்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன். ஏனென்றால் அந்நண்பர்களால் ஆனது அத்தொலைபேசி நிலையம்.
என் வாழ்க்கையின் மிகக் கொந்தளிப்பான நாட்களில் என்னுடன் இருந்த நண்பர்கள். விழாவில் கருணாகரனின் அன்னையை நினைவு கூர்ந்து பேசினேன். நான் காசர்கோடில் தனிமையை உணர்வது ஓணம் போன்ற நாட்களில் மொத்த விடுதியும் ஊருக்குச் சென்றுவிடும் .தன்னந்தனிமையில் நான் எஞ்சுவேன். அதற்கு ஆயிரம் சாக்குகள் சொன்னாலும் கூட என்னுடைய தனிமையை உணர்ந்த கருணாகரன் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அவன் வீட்டில் தங்கவைப்பான்.
அன்று அவனுடைய அன்னையின் கையால் உணவுண்டேன். நீண்ட இடைவேளைக்குப்பிறகு ஒரு அன்னையின் கையால் உணவுண்டபோது மிகுந்த அகக்கொந்தளிப்பை அடைந்தேன். என்னுடைய அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொண்ட செய்தியை நான் காசர்கோடில் ஒரு நண்பரிடமும் சொன்னதில்லை .மிக நெருக்கமாக இருந்த கருணாகரனிடமும் பாலசந்திரனிடமும் கூட .ஏனெனில் அவர்களுடன் உறவை ஒரு இலக்கிய கொண்டாட்டமாக களியாட்டாக மாற்றி வைத்திருந்தேன். அதில் துயரம் ஊடாட நான் விரும்பவில்லை. எந்த வகையான பரிதாபத்தையும் நான் எதிர்பார்க்கவுமில்லை.
ஆனால் கருணாகரனுடைய அம்மா என்னிடம் ‘உனக்கு ஏதோ துயர் இருக்கிறது, என்ன அது மகனே?’ என்று கேட்டார். நான் அவரிடம் என் அம்மா அப்பா இறந்து போனதைச் சொன்னேன். “அஞ்சாதே உனக்கு தெய்வம் துணையிருக்கும்” என்று சொன்னார். மறுநாள் என்னை பரஸ்ஸினிக் கடவு முத்தப்பன் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு கள்ளும் வேகவைத்த பயறும் பிரசாதமாகக் கிடைத்தது. கள்ளைப் பார்த்து நான் தயங்கினேன். அம்மா என்னிடம் புன்னகைத்தபடி “குடி, முத்தப்பன் பிரசாதம். பழி ஒன்றுமில்லை” என்றார். மது அருந்தலாகாது என்ற என் அப்பாவின் கட்டளையை அன்னையின் ஆணையால் மீறினேன். ஆனால் அன்று முதல்முறையாக என் உள்ளத்தில் அனைத்துக்கட்டுகளும் விலகி ஒரு எளிதான நிலையை உணர்ந்தேன்.அந்த மேடையிலேயே கருணாகரன் அன்னையை நினைவுகூர்ந்தது உள்ளத்தில் பெரிய நிறைவை உருவாக்குவதாக அமைந்தது.
விழாவுக்குப்பின் ரசாக் கரிவள்ளூர் நிகழ்த்திய கசல் இசை நிகழ்ச்சி நடந்தது .ஒரு கசல் பாடல், பாபுராஜ் இசையமைத்த கசல் பாணியிலான திரைப்பாடலின் கசல் வடிவம் என மாறி மாறி பாடினார். பாபுராஜ் ஒரு கசல் பாடகராக மும்பையில் அலைந்தவர். திரையில் அவர் போட்ட அத்தனை பாடல்களுமே கசல் பாணியிலானவை தான். அந்தப்பாடல்களை ஆர்.கே சேகர் பின்னணி இசை கொடுத்து ஒழுங்கு படுத்தியிருப்பார்.
ஆர்கே சேகரின் பின்னணி இசை அதை மேலை இசையுடன் பொருத்துவது போலிருக்கும். ஆனால் அந்தப்பகுதிகளை நீக்கிவிட்டு பாபுராஜின் பாடல்களை மட்டுமே பாடும்போது அது தூய கசலாகிறது. அன்று காலையிலிருந்தே வெவ்வேறு பாபுராஜ் பாடல்களை நினைவு கூர்ந்து நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘கடலே நீலக்கடலே’ ;பாதிராவாயில்ல’ போன்ற பாடல்கள். அன்று மாலை அவற்றையே ரசாக் கரிவள்ளூர் பாடியபோது பாபுராஜ் இறக்கவில்லை என்ற நிறைவை அடைந்தேன் .தலைமுறை தலைமுறைகளாக அவர் வாழ்கிறார்.
ரஸாக் கரிவெள்ளூர்(கோட் போட்டிருப்பவர்) நீலச்சட்டை எம்.ஏ.மோகனன்அரங்கிலிருந்த கணிசமானவர்கள் அடுத்த தலைமுறையினர். அவர்களும் அந்தப்பாடலில் ஊன்றி அமர்ந்திருப்பதை பார்க்க முடிந்தது. ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வு இசையுடன் முடியும்போது கிடைக்கும் நிறைவு எளிதல்ல. கரிவெள்ளூர் ரசாக் எம். ஏ. மோகனுடன் சேர்ந்து படித்தவரும் கூட அவரைத்தழுவி அவரிடம் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.
ரசாக் தொழில்முறை பாடகர். பள்ளிக்கல்விக்கு மேல் பாடலையே தன்னுடைய வாழ்க்கையாக எடுத்துக்கொண்டார். எம் .ஏ .மோகன் சொன்னான், “அன்று அவனிடம் நான் வேலைக்கு போகும்படி சொன்னேன். உறுதியாக மறுத்துவிட்டான் .இன்று அவனுக்கு புகழும் பணமும் வருகிறது. நான் வேலை பார்த்து ஓய்வு பெற்று ஓய்வு பெற்றவன் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”. தன் கலையை உறுதியாக தொடர்பவரை கலை கைவிடுவதில்லை என்று நினைத்துக்கொண்டேன்
மறுநாள் பாலசந்திரனின் குடும்பத்துடன் கருணாகரன் ரவீந்திரனின் கொடகரா குடும்பமும் இணைந்து ஒரு பெரிய வேனில் அப்பகுதியைச் சுற்றி வந்தோம் .மாடாயிக்காவுக்கு சென்றோம். அங்கிருந்து பரசினி கடவு. மலபார் பொதுவாக பெரிய தேவாலயங்கள் இல்லை. இப்பகுதி பெரும்பாலும் நாட்டார் வழிபாட்டுக்குள்ளேயே நெடுங்காலமாக இருந்துவந்தது. பையனூரில் உள்ள முருகன் ஆலயம் சற்று பெரியது. மற்றபடி மலபாரின் புகழ் பெற்ற தெய்வங்கள் எல்லாமே தொல்குடி தெய்வங்கள்தான்.
முதன்மை தெய்வம் பரசினிக்கடவு முத்தப்பன். முத்தப்பன் என்றால் தாத்தா . ஒரு வேட்டைக்காரர். அவர் 1700-களின் இறுதியில் வாழ்ந்தவர். அவர் வாழ்க்கை பதிவாகியிருக்கிறது.இன்று அவர் மலபாரின் மிகப்புகழ்பெற்ற காவல் தெய்வமாக திகழ்கிறார்.
மாடாயி காவிலம்மா என்று அழைக்கப்படும் பகவதி ஆலயம் மாடாயி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் மிகச்சிறிய கோயிலாக இருந்தது. பிடாரர்கள் என்று குறிப்பிடும் குறிப்பிட்ட குடியினர் மட்டுமே அங்கு பூசை செய்கிறார்கள். கர்நாடகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அங்கு வருகிறார்கள். இப்போது எடுத்து கட்டி கட்டி பெரிய ஆலயமாக ஆக்கியிருக்கிறார்கள். ஆயினும் மலபாரின் பகவதி ஆலயங்களில் விந்தையானதொரு கலாச்சார சூழல் நிலவுகிறது. உள்ளூர் முகங்களையும் கர்நாடக முகங்களையும் பார்க்க முடியும்.
பெரிய கான்கிரீட் கட்டிடத்துக்குள் பொட்டலம் கட்டிவைத்தது போல் பழைய ஆலயத்தின் சிறிய மரக்கட்டிடம் அமைந்திருந்தது. அதற்குள் பகவதி மாடாயி காவில் பகவதி. சற்று பெரிய உருவம். கடுசர்க்கரை என்னும் பொருளால் அமைக்கப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தின் பெருமாள் உருவமும் கடுசர்க்கரையால் அமைக்கப்பட்டதுதான். சுண்ணாம்புடன் வெவ்வேறு கலந்து உருவாக்கப்படுவது அது.மாடாயிக்காவில் கேரளத்தின் புகழ் பெற்ற ஏழுகன்னியர் அல்லது ஏழு மாதாக்கள் சிலைகள் உள்ளன இரண்டுமே வழிபடப்படுகின்றன.
அங்கிருந்து பரஸ்ஸினிக்கடவு. பரஸ்ஸினிக்கடவு முத்தப்பன் ஆலயம் வளபட்டினம் ஆற்றின் கரையில் அமைந்த ஒரு கட்டிடமாக இருந்தது.மேலிருந்து படிகளில் இறங்கி அதை நோக்கி செல்லவேண்டும் என்பது என்னுடைய நினைவு. ஆனால் இப்போது கார் ஆலயம் வரை சென்று நிற்கும் .ஏராளமான விடுதிகள், உணவகங்கள், கடைகள் .வளபட்டினம் ஆற்றங்கரை முழுக்க கல் பதித்த பெரிய நடைப்பாதை. தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தாலும் கூட பழைய நாட்டார் தன்மை தனிமை அகன்றுவிட்டிருந்தது.
ஒருநாள் அந்நிலத்தில் சுற்றி வந்தபோது ஒரு வாழ்க்கையை வாழ்ந்த நிறைவை அடைந்தேன். முப்பதாண்டுகள் பின் சென்று இளைஞனாக இருந்தேன்.மாலையில் நண்பர்களிடம் விடை பெற்று ரயிலேறினேன் இந்த மண்ணுக்கு மீண்டும் வந்துகொண்டே தான் இருக்கப் போகிறேன்.
இராயகோபுரம், மதுரை
அண்மையில் நான் கீழடியில் காலம் பற்றி, அதிகாரபூர்வமாகச் சொல்லப்பட்ட காலக்கணிப்பை ஏற்றுக்கொண்டு, அதை இந்திய வரலாற்றுப் பின்னணியிலும் உலகவரலாற்றுப் பின்னணியிலும் வைத்து பேசிய ஒரு காணொளி விவாதமாகியது. வசைகள், கொந்தளிப்புகள், தமிழ்ப்பெருமை பேசும் பொங்குதல்கள் இணையத்தை கலக்கின.
மெய்யாகவே நமக்கு நம் பாரம்பரியம் பற்றி அப்படி ஒரு பெருமிதம் உள்ளதா என்ன? இருந்தால் நம் கலைச்செல்வங்கள், நம் மாபெரும் சாதனைகள் இப்படி சீரழிய விடப்பட்டிருக்குமா? மதுரை புதுமண்டபம், ராயகோபுரம், பத்துத்தூண் ஆகியவை நம்மால் சீரழிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் எவருக்கும் நாம் வரலாற்றுணர்வே இல்லாத வெறும்கும்பல் என்றே தோன்றும். உலகில் எங்கும் இத்தகைய வரலாற்றுச்சின்னங்கள், கலைச்சின்னங்கள் இப்படி அழியவிடப்பட்டு நான் கண்டதில்லை. பலமுறை மதுரைக்கு வெளிநாட்டவருடன் சென்று அந்தக் கலைச்சீரழிப்பை கண்டு அவர்கள் கண்களைப் பார்க்கமுடியாமல் கூசி நின்றிருக்கிறேன்
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது, மதார் அரங்கு
2021 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது முகமது மதாருக்கு வழங்கப்பட்டது. அப்போது கோவிட் தொற்று காரணமாக முறைப்படி விழா நிகழவில்லை. ஆகவே இந்த ஆண்டு காலையில் ஒரு தனி அமர்வாக அவ்விழாவை நடத்தினோம். அதில் சுரேஷ் பிரதீப், கவிதா ஆகியோர் மதார் பற்றிப் பேசினர். மதார் ஏற்புரை வழங்கினார்.
சுரேஷ் பிரதீப் தமிழ் விக்கி மதார்- தமிழ் விக்கிபொன்னியின் செல்வன் – கடிதம்
பொன்னியின் செல்வன் பற்றி…
அன்புள்ள ஜெ,
பொன்னியின் செல்வன் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைத் தொடரை வாசித்தேன். இப்படத்தின் உடை, அலங்காரங்கள் எல்லாமே சிலரால் விமர்சனத்துக்குள்ளாயின. நீங்களே எடுத்துக் கொடுத்திருக்கும் படத்தில் திரிஷாவின் தலையலங்காரம் விசித்திரமானதாக இருந்தது. இந்த அலங்காரங்களை மும்பை தலையலங்கார நிபுணர்கள் செய்கிறார்கள் என்று சொன்னார்கள். இங்கே திரிஷாவின் தலையலங்காரத்தை பலர் கிண்டல் செய்தார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு ஆதண்டிக் என்று சொல்லமுடியுமா?
கார்த்திக் ராஜ்
அன்புள்ள கார்த்திக்,
பொன்னியின் செல்வன் பற்றி பேசவேண்டியவற்றை பேசிவிட்டேன். அது சினிமா பற்றிய பேச்சு என்பதற்காக அல்ல. இலக்கியம் சினிமாவாக ஆவது சார்ந்து ஓர் இலக்கியக் களத்தில் பேசவேண்டிய சில அதில் இருந்தன என்பதனால். மேற்கொண்டு பேசிக்கொண்டே செல்ல நான் விரும்பவில்லை. தமிழகத்தில் சினிமா பற்றிய சர்ச்சை என்றால் நீட்டி நீட்டி கொண்டுசெல்ல நம்மவர் துடிப்பார்கள்.
இதைப்பற்றி கேலியும் நக்கலுமாக சில கடிதங்கள் எனக்கு வந்தன. அவர்கள் சோழர்காலச் சிற்பங்களை மட்டுமல்ல, மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் ஓவியங்களைக் கூடப் பார்த்ததில்லை என தெரிந்தது. அவர்கள் எம்.ஜி.ஆர் சினிமாவின் ராஜாராணி உடைகளை சோழர்கால உடைகளாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
கல்கி பொன்னியின் செல்வன் எழுதிய காலகட்டத்தில் தமிழில் அச்சுத்தொழில் தொடக்கநிலையில் இருந்தது. தமிழக ஆலயங்களும், ஓவியங்களும் விரிவாக ஆராயப்படவில்லை. இருந்தாலும் ஓவியம் மணியம் அந்த நாவலுக்கான ஓவியங்களை ஆராய்ச்சி செய்துதான் வரைந்தார். அஜந்தா சுவரோவியங்களையும் தன் முன்னுதாரணமாகக் கொண்டார்.
மணியம் ஒரு முதல்பாதையை திறந்தவர். அஜந்தா சுவரோவியப் பாணியில் தமிழில் ஒரு கதைக்கு படம் வரையப்பட்டது வியப்புக்குரிய தொடக்கம். பின்னால் வந்த ஓவியர்கள் மணியம் வரைந்ததை அலங்காரமாக திரும்ப வரைந்தனர்.
இன்று ஏராளமான ஆய்வுகள் கிடைக்கின்றன. குறிப்பாக தாராசுரம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சோழர்கால ஓவியங்கள் ஏதும் கிடைப்பதில்லை. கோயில் அடித்தளத்தில் வரியாகச் செதுக்கப்பட்டுள்ள சிறிய சிற்பங்களே முதன்மையான நேரடிச் சான்று. அவற்றை ஆராய்ந்து, அவற்றை ஒட்டியே பொன்னியின் செல்வன் படத்தின் ஆடைகளும் ஆபரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மணியம் வரைந்த ஓவியங்களும் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டுள்ளன.
ஜெ
விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்
ரம்யா
அரவிந்த் சுவாமிநாதன்
அன்பு ஜெ,
அரவிந்த் ஸ்வாமிநாதன் அவர்களின் இரு தொகுப்பு புத்தகங்களை (யாவரும் பப்ளிஷர்ஸ்) தமிழ் விக்கி பதிவுகளுக்காக பரிந்துரைத்திருந்தீர்கள். மிக அருமையான புத்தகம் ஜெ. ஒன்று “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் பாகம் 1”, இரண்டாவது ”விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்: பெண்ணெழுத்து”. 1892-1947 காலகட்டத்தில் எழுதிய எழுத்தாளர்களையும், அவர்களின் எழுத்துக்களையும் இந்த புத்தகங்களில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
**
தொகுப்பு நூல்கள் பல வகைகளில் வருகின்றன. சமீபத்தில் புத்தகத் திருவிழாவில் புதுமைப்பித்தனின் தொகுப்பு நூல் மலிவான விலையில் கிடைத்தது. அது தவிரவும் அ. மாதவையா, அசோகமித்திரன் என முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். இதேபோல தேவதச்சன், தேவதேவன் கவிதைத் தொகுப்புகளும் வந்திருந்தன. இப்படி எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புகளின் தொகுப்புகளைத் தாண்டி அ.கா. பெருமாள் ஐயாவின் “தமிழறிஞர்கள்” போன்ற அறிஞர்களின் இலக்கியவாழ்க்கையைப் பற்றிய தொகுப்புகள் உள்ளன. நாட்டுப்புறக்கலைகள் சார்ந்த தொகுப்புகள் வருகின்றன. தமிழ் விக்கி பதிவுகளுக்காக தேடும்போது புலவர் கா. கோவிந்தன் அவர்கள் சங்கப்பாடல்களை புலவர்கள் வாரியாக தொகுத்திருந்தார். புலவர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புடன் அவர் சங்கத்தொகை நூல்களில் அந்தப் புலவர் எழுதிய அனைத்துப் பாடல்களையும் தொகுத்திருந்தார். ஒரு புலவரின் வாயிலாக, வரலாற்றோடு இணைந்து அவர் எழுதிய சங்கப்பாடலை சிலாகிக்க ஏதுவாக அமைத்திருந்தார்.
கருப்பங்கிளர் சு.அ. ராமசாமிப்புலவர் “தமிழ்ப்புலவர் வரிசை” என்னும் பெயரில் 31 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் மேலான தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார். அதே போல தமிழகத்திலுள்ள சமண, பெளத்த தலங்களைப் பற்றிய தொகுப்புகளை ”தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள்” போன்ற புத்தகங்கள் வழி ஏ. ஏகாம்பர நாதன் சாத்தியப்படுத்தியுள்ளார். ஈழத்து கூத்து கலைஞர்கள், கூத்துக்கலை பற்றிய தொகுப்புகளாக பேராசிரியர் மெளனகுரு ஐயாவின் “பழையதும் புதியதும்”; ”கூத்த யாத்திரை” புத்தகங்கள் ஒட்டுமொத்த கூத்துக் கலைஞர்கள், அண்ணாவியார்கள் பற்றிய விரிவான சித்திரத்தை அளிக்கக்கூடியதாக இருந்தது. இப்படி தொகுப்பு நூல்கள் பலவகைகளில் வருகின்றன. சமீபத்தில் அழிசி ஸ்ரீநி “எழுத்து” இதழ்களை கிண்டிலில் குறிப்பிட்ட காலத்து வாசிப்பதற்கு இலவசமாக அளித்தார். இதழ்கள் வாயிலாக முன்னோடி எழுத்தாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்தலின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மாதிரியான தொகுப்புகள் வர வேண்டும்.
சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கியம், நவீன இலக்கியம் என தமிழ் இலக்கியத்தை பயில்வதற்கு எளிமையாக பல்வேறு காலகட்டங்களாக தமிழறிஞர்கள் பகுத்துள்ளனர். இன்று இந்த பின் நவீனத்துவ காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கும் நமக்கு (1892-1947) காலகட்டம் என்பது தொகுக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. உண்மையில் நவீன இலக்கிய காலகட்டத்தை ”விடுதலைக்கு முன்”; ”விடுதலைக்கு பின்” என்று பிரித்துக் கொள்வது மிகவும் சரியான பகுப்பென்றே கருதுகிறேன். சிந்தனைகள், பேசுபொருட்கள், எழுத்தாளர்கள், கதைக்களம் என பல மாறுதல்களை விடுதலைக்கு முன், பின் என்றே பிரிக்கலாம். ”பிறகு” நாவலில் பூமணி அவர்கள் அந்த கிராமத்திலுள்ளவர்களுக்கு சுதந்திரம் என்பது எந்த அளவிற்கு பொருட்டில்லாமல் இருக்கிறது என்பதை பகடியாக சொல்லியிருப்பார். கிராமங்களில் அவை பொருட்டில்லையானாலும் இலக்கியத்திற்கான பேசுபொருள் என்பதையும், எழுத்தாளர்கள் எல்லா மட்டத்திலிருந்தும் வருவதற்கும் விடுதலை அவசியமாயிருந்தது. அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் (1892-1947) காலகட்டத்தை எடுத்துக் கொண்டு தொகுப்பு நூல் செய்திருப்பது இவ்வகையில் சிறப்பான ஒன்று.
முதலில் அவர் ”விடுதலைக்கு முந்தைய தமிழ்ச்சிறுகதைகள் பாகம் 1” செய்யும்போது இருபத்தியைந்து எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதற்காக எண்ணற்ற இதழ்களை வாசித்திருக்கிறார். அதனைத் தொகுத்திருக்கிறார். அந்த இருபத்தி ஐந்தில் ஐந்து பெண் எழுத்தாளர்கள் இருந்தனர். பின்னரும் வெளியுலகில் பெரிதும் அறியப்படாத பல நல்ல பெண் எழுத்துக்களைப் பார்த்து ஊக்கமடைந்து தனியாக “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் – பெண்ணெழுத்து” என்ற புத்தகத்தை எழுதியதாகச் சொன்னார்.
இந்த புத்தகத்தின் உள்ளடக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் முதல் பகுதியில் உள்ளன. இந்த சிறுகதைகளின் முகப்பில் அந்த சிறுகதை எந்த இதழில் வெளிவந்தது, வெளிவந்த ஆண்டு, இதழின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுகதை இதழில் வெளிவந்தது போல அதன் முகப்புப் பக்கம் கொடுத்திருப்பது நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. இரண்டாவதாக “கதைகளின் கதை” பகுதி அமைந்துள்ளது. இதில் அந்தக் கதை வெளிவந்த இதழ் பற்றிய வரலாறு, எழுத்தாளர் பற்றிய குறிப்புகள் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களுடைய புகைப்படங்கள், இதழ்களின் முகப்புப் புகைப்படங்கள் மேலும் ஆழமான சித்திரத்தை அளிக்கிறது. புத்தகத்தை ஆரம்பிக்கும் போது வலையின் கண்ணியின் முனையில் நின்று கொண்டிருப்பது போன்று தோன்றினால் வாசித்து முடிக்கும் போது ஒரு கண்ணிவலையின் முந்நூற்றியருபது டிகிரி கோணத்தை வாசகனால் கண்டடைய முடியும். அங்கிருந்து அவன் மேலும் விரித்துச் செல்வதற்கான சாத்தியமுள்ளது.
எனக்கு வெண்முரசின் சொல்வளர்காடு நாவலில் வரும் வரிகள் நினைவிற்கு வந்தது “மானுடன் பெருவெளியின் துளி. அங்கு அவ்வாறு அமைந்தது இங்கு இவ்வாறு அமைகிறது. குடத்தில் அடங்கக்கூடியதே விண் என்பதனால் மட்டுமே அறிவு பயனுள்ளதாகிறது.” உண்மையில் அப்படியான மகத்தான துளியைத்தான் அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் இந்த புத்தகத்தின் வழியாக வாசகனுக்கு எடுத்துக் காணித்திருக்கிறார். சிறுகதைகளுக்கான தன் தேர்வைப் பற்றி அவர் சொல்லும் போது “என் ரசனை, எனக்கு பிடித்த கதைகள் என்றில்லாமல் அந்த காலகட்டத்தை பிரதிபளிக்கக் கூடிய சிறுகதைகளையே நான் தேர்வு செய்தேன்” என்றார். சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தபோது அதை உணர முடிந்தது.
சொல்வளர்காடு நாவலின் இன்னொரு வரியும் நினைவிற்கு வந்தது “இப்பருவெளிப்பெருக்கு ஒரு நெசவு. ஊடுசரடென செல்வது அறிபொருள். பாவுசரடென ஓடுவது பிரக்ஞை. பிரக்ஞை உறையாத ஒரு பருமணலைக்கூட இங்கு நீங்கள் தொட்டெடுக்க முடியாதென்றறிக!” இந்த புத்தகத்தின் வழி அவர் காட்டும் இந்த சிறு நெசவுத்துணியின் ஊடுபாவின் வழி ஒட்டுமொத்த விடுதலைக்கு முந்தைய சிறுகதைகளின் போக்கை தொட்டு விரித்தெடுக்கலாம் என்று தோன்றுகிறது.
இன்று இணைய காலகட்டத்தில் இதழ் ஆரம்பிப்பது பொருட்செலவு அதிகமல்லாத, ஆனால் உழைப்பை மட்டுமே கேட்கக் கூடிய ஒன்றாக உள்ள காலம். மின்னிதழ்களின் பெருக்கம் மற்றும் தொடர் செயல்பாடுகளால் சிறுகதைகளின் பெருக்கம் நிகழ்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இதற்கிணையாகவே விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் அத்தகைய வீச்சான எழுத்து நிகழ்ந்திருக்கிறது. நவீனத்தமிழ் இலக்கியத்தில் முதல் சிறுகதை எது என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன. பெரும்பான்மையானோர் 1915இல் விவேகபோதினியில் வா.வே.சு. ஐயர் எழுதிய “குளத்தங்கரை அரசமரம்” தான் தமிழின் முதல் சிறுகதை என்பர்.
ஆனால் சிறுகதைக்கான மேற்கத்திய மற்றும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடிய இலக்கணமாக “ஒரே அமர்வில் வாசித்து முடிக்கக் கூடியது; முதல் வரியிலேயே கதை ஆரம்பித்தல்; கதை முழுவதுமாக ஒரு பொருள், ஒரு மனநிலை பற்றியதாகவும், ஒட்டுமொத்தமாக ஒரு ஒருமை கூடிவருவதும்” ஆகியவை கூறப்படுகிறது. அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் வேதசகாயம்பிள்ளை ஆகியோர் அ. மாதவையாவின் “கண்ணன் பெருந்தூது” சிறுகதையே தமிழின் முதல் சிறுகதை என்பர்.
எழுதப்பட்டதன் அடிப்படையில் கூட 1892இல் திருமணம் செல்வகேச முதலியார், பாரதி, அம்மணி அம்மாள் ஆகியோர் முன் வரிசையில் உள்ளனர். 1892-லிருந்து “விவேகசிந்தாமணி” இதழில் மாதந்தோறும் சிறுகதைகள் வந்து கொண்டிருந்தன.
இன்றைக்கு மேற்கத்திய சிறுகதைகளுக்கான இலக்கணத்தை நாம் ஒத்துக் கொண்டாலும் கூட க.நா.சு அவர்கள் சொல்வது போல நம் மரபை ஆராய்ந்து அதன் சாராம்சங்களையும் கருத்தில் கொண்டு புதியதொரு விமர்சன முறையை கண்டடையும் சாத்தியத்தை நாம் கை கொள்ள வேண்டும். இன்று எழுதப்படும் சிறுகதைகள் பலவும் இந்த இலக்கணங்களை கேள்விக்குள்ளாக்குகின்றன. அந்த வகையில் சிறுகதையின் ஆரம்பப் புள்ளியிலிருந்து நவீன இலக்கியத்தை பகுத்துக் கொண்டு அவற்றை மதிப்பிடக்கூடிய 1947 வரையான ஒரு சித்திரத்தை அரவிந்த் சுவாமிநாதனின் புத்தகங்கள் அளிக்கிறது.
தொல்காப்பியத்திலேயே சிறுகதையின் இலக்கணம் இருப்பதாகத் தெரிகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் சிறுகதைகள் என்று பகுத்து விடக்கூடிய கதைகள் உள்ளன. ஆனால் இன்றைக்கு நம் கைகளில் புத்தகங்களாக, அச்சு நூல்களாக தவழக்கூடிய வாய்ப்பு 1812இல் எல்லீசு அவர்கள் காலகட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது . எல்லீசு ஏற்படுத்திய “The college of saint George” என்ற அமைப்பின் வழியாக 1822இல் வீரமாமுனிவர் “பரமார்த்த குரு கதை” என்ற நூலைத் தொகுத்தார். பின்னர் வாய்மொழியாக வழங்கி வந்த பல கதைகளை நம் அறிஞர்களும், தமிழ் மேல்பற்றுள்ள வெளி நாட்டவரும் தொகுக்க ஆரம்பித்தனர். அந்தத்தொகுப்புகளில் தன் புனைக்கதைகளையும் எழுத ஆரம்பித்தனர். 1892 க்குப் பிறகு வந்த பத்திரிக்கைகள், இதழ்கள் வழியாக எழுத்து வளர ஆரம்பித்தது. முதலில் தீவிர எழுத்து, வெகுஜன எழுத்து என்ற பாகுபாடுகள் அற்று ஆரம்பித்த பயணம் மெல்ல பாகுபாடு ஆரம்பித்த விடயம் இதழ்களின் எழுச்சி வழியாக புலப்படுகிறது. “விவேகசிந்தாமணி”; “திராவிட மத்தியக் காலக் கதைகள்” என துவங்கிய இதழ்கள் 1915 களில் தீவிர இலக்கிய இதழ்களான “சக்ரவர்த்தினி”; “மணிக்கொடி”; “கலாமோகினி” போன்றவையாக உருவெடுத்தன. தீவிர இதழ்களுக்கு மாற்றாக “ஆனந்தபோதினி” ஆரம்பிக்கப்படும்போது வெகுஜன எழுத்து, விஷயங்களின் ஆதிக்கம் சிறுபத்திரிக்கை, இதழ்களில் ஆரம்பிக்கிறது. ஆனந்தபோதினியின் வெற்றியைப் பார்த்து ஊக்கம் கொண்டு “ஆனந்த விகடன்”; “ஆநந்தகுணபோதினி” ஆகிய இதழ்கள் வெகுஜன இதழ்களாக 1925களில் துவங்குகின்றன. இதில் புதிய எழுத்தாளர்களான பலர் அறிமுகமானாலும், தீவிர எழுத்தாளர்களான புதுமைப்பித்தன் போன்றவர்கள் இந்த வெகுஜனப்பத்திரிக்கைகளில் எழுதவில்லை என்ற போக்கும் கவனிக்கத்தக்கது.
சக்ரவர்த்தினி இதழ் 1905இல் ஆரம்பிக்கப்படும் போது பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பாரதி ஒரு வருடம் அதற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அங்கிருந்து தான் அசலாம்பிகை, அலர்மேல் மங்கை, கஜாம்பிகை, ராஜலஷ்மி அம்மாள் போன்ற எழுத்தாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். இந்தப் பெயர்கள் யாவும் எனக்கு புதியவை. இவர்களையும் இவர்களின் படைப்புகளையும் தெரிந்து கொள்ள அரவிந்த் சுவாமிநாதனின் புத்தகம் உதவுகிறது. அந்த காலகட்டத்தில் அதன் தேவை இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது. “மணிக்கொடி இதழ்” மணிக்கொடி எழுத்தாளர்கள்(கு.ப.ரா, ந.பா, புதுமைப்பித்தன், மெளனி, சிட்டி, சி.சு.செல்லப்பா), மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் (லா.ச.ரா, சங்கு, க.நா.சு, எம்.வி.வி) என ஒரு நிரையை ஆரம்பித்து வைத்தது. அ. மாதவையா நடத்திய பஞ்சாமிர்தம் இதழில் அவர் தன் குடுமபத்தினர், நண்பர்கள் என அனைவரையும் எழுத ஊக்குவித்தார். அங்ஙனம் உருவான மா. கிருஷ்ணன், வி. விசாலாட்சி அம்மாள், மா. லஷ்மி அம்மாள் போன்றோர் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர். மா. கிருஷ்ணன் எழுதிய சூழலியல் சார்ந்த புத்தகங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
இந்தத் தலைமுறை பலரும் அறிந்திராத, படித்திராத சிறுகதைகளை இந்தத் தொகுப்பு நமக்கு அளிக்கிறது கடந்து போன நூற்றாண்டின் (19ஆம் நூற்றாண்டின் இறுதி, 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) எழுத்துக்களை ஓட்டிப் பார்க்கவும், அந்த காலகட்டத்து மக்களின் வாழ்க்கைமுறை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், சமூகப்பின்னணி ஆகியவற்றை அறியவும் இந்த சிறுகதைகள் உதவுகின்றன. எழுத்தாளர்கள், அவர்களின் எழுத்துக்கள் “ஒரு காலகட்டத்தின் பிரதிபளிப்பு” என்று சொல்லப்படுவதுண்டு. அங்ஙனம் இந்த தொகுப்புகளின் வழியாக ஒரு காலகட்டத்தை நம்மால் குறுக்குசால் ஓட்டி காண முடிகிறது.
இந்த காலகட்டத்தின் பெண் எழுத்தாளர்களில் பெரும்பாலும் படித்த, செல்வ செழிப்புள்ள, உயர்குடிப்பெண்களே எழுத வந்துள்ளனர். மிகச்சிலரே எழுதுவதை தொழிலாகக் கொண்டு வருமானம் ஈட்டியுள்ளனர். ஒரு பெண் எழுத்தாளர் தன் வறுமையில் ரயில்வே ஸ்டேஷனின் அமர்ந்து எழுதி அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தியிருக்கிறார் என்ற செய்தி அறியும்போது பிரமிப்பாய் இருந்தது. பெண்களுக்கு எழுத்து வருமானம் ஈட்டும் தொழிலாகவும் இருந்துள்ளது.
சிறுகதைகளை எடுத்துக் கொண்டால் திருமணம் செல்வகேசவ முதலியாரின் இரண்டு சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒன்று அவர் 1892இல் “விவேகசிந்தாமணி” இதழில் எழுதிய “ஆயுள்வேத பாஸ்கரன்”, அவர் 1921இல் ”அபிநவக் கதைகள்” இதழில் எழுதிய ”ஸூப்பையர்”. ஆயுள்வேத பாஸ்கரன் ராஜகிரகத்தை கதைக்களமாகக் கொண்டு பிம்பிசாரரின் மூன்றாவது மகனான “ஜீவகன்” தான் தேர்ந்தெடுத்த தொழிலான ஆயுள்வேதத்தில் எங்ஙனம் “ஆயுள்வேத பாஸ்கரன்” பட்டம் பெறுகிறான் என்பதைப்பற்றிய கதையாக உள்ளது. ”ஸூப்பையர்” கதை 1886இல் சென்னையின் சிங்காரத்தோட்டம் (people’s park) என்று சொல்லக்கூடிய மூர் மார்க்கெட்டில் நிகழ்ந்த கோரமான தீ விபத்தை கதைக்கருவாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. “கொச்சை” பிழைக்கும் கதையும் உணர்வுப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தின் சென்னை பற்றிய ஒரு விரிவான சித்திரம் இந்தக் கதைகளின் வழி புலப்படுகிறது.
”பரம்பரை ஆண்டியோ.. பஞ்சத்திற்கு ஆண்டியோ” என்ற சிறுகதையின் தலைப்பே சிரிப்பை வரவழைக்கக்கூடியது. ஒரு மெல்லிய நகைச்சுவைக் கதையாக எஸ்.எம். நடேச சாஸ்திரி இதை எழுதியுள்ளார்.
பாரதி “சுதேசமித்ரனில்” 1919இல் எழுதிய “காந்தாமணி” என் மனதிற்கு அணுக்கமான கதை. முதலில் காந்தாமணி என்ற பெண்ணின் பெயரே ரம்மியமாயிருந்தது. காலை காட்சிகளை பாரதி விவரிக்கும் விதம், தனக்கு விருப்பான ஷெல்லியைப் பற்றிய மேற்கோள், சூரியன் உதிப்பதை “பாலசூர்யன்” என்று சொல்லும் விதமென அந்தக்கால நடைக்கு சற்றே மாறுபட்ட தொனி இதில் தெரிகிறது. காந்தாமணி, பாட்டி, காந்தாமணியின் அப்பாவான பார்த்தசாரதி ஐயங்கார், அங்கு குளித்துக் கொண்டிருக்கும் பார்த்தசாரதி, கதைசொல்லி என ஐந்து கதாப்பாத்திரங்களும் கதைக்களமாக கிணற்றடியும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரதி இங்கு நிகழும் ஒவ்வொரு உணர்வுகளையும் மிக நுணுக்கமாகக் கடத்துகிறார். “never mind.. I don’t care a dam about a சாஸ்திரம்” என அக்காலத்தில் உயர்குடி வர்க்கத்தினரிடம் புழக்கத்திலிருந்த தங்லிஷில் ஒரு வரி வருகிறது. தன் தந்தை ஆண்குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தியை காந்தாமணி பாட்டியிடம் சொல்கிறாள். அந்தப்பெண் பணக்காரப்பெண்ணாக, அழகாக இருந்தும் ஏன் இரண்டாம் திருமணம் என்ற பாட்டியின் கேள்விக்கு அவள் கொஞ்சம் ஐரோப்பியத்தன்மையோடு படித்த திமிரோடு இருப்பதாகவும், வயதுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டபடியாளுமென பதில் கூறுகிறாள் காந்தாமணி. வயதடையும் முன்னரே பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது தெரியவருகிறது. சில சமயம் வயதடைந்ததை மறைத்தெல்லாம் கூட திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். காந்தாமணிக்கு ஐம்பத்திஐந்து வயதானவரை திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். பாட்டி விதவையாக இருக்கிறாள். இறுதியில் காந்தாமணி தான் காதலித்த பையனுடன் ஓடிப்போவதும், மொட்டையடித்து விதவைக் கோலத்திலிருந்த பாட்டி அந்த கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்த தன் பாலியக் காதலனுடன் ரங்கூனுக்கு ஓடிபோவதுமென கதை முடிகிறது. வெறுமே நிகழ்ச்சிகளை மட்டுமே சொல்லியிருக்கிறார். மீறலான கதை. இங்கிருந்து நாம் என்ன வேண்டுமானாலும் எப்படியானாலும் எடுத்து பொருள் கொள்ளும் சிறுகதை.
1924இல் பாலபாரதி இதழில் “ராஜகோபாலன் கடிதங்கள்” சிறுகதையை வா.வே.சு. ஐயர் எழுதியுள்ளார். வெறுமே தன் நண்பனுக்கு தான் கண்ட ஒரு எளிய மகிழ்வான பண்பான குடும்பத்தைப் பற்றி எழுதிய கடிதமாகவும், புல்லாங்குழல் வாசிக்கும் சுடலைமுத்து பற்றியும் இந்த சிறுகதை எழுதப்பட்டுள்ளது. வடிவ முயற்சியாக முக்கியமான சிறுகதை என புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்ட சிறுகதை. இந்த சிறுகதையை வாசிக்கும் போது எழுத்தாளர் வைரவன் சமீபத்தில் “அந்திமந்தாரை” என்ற சிறுகதையை கடிதம் என்ற வடிவச் சோதனைக்கு உட்படுத்தியதாகச் சொல்லி அனுப்பி வைத்தது ஞாபகம் வந்தது. அவருக்கு “ராஜகோபாலன் கடிதங்கள்” சிறுகதையை அனுப்பி வைத்த போது 1924லேயே இந்த வடிவச் சோதனைகள் ஆரம்பித்ததை எண்ணி பிரமித்தார். ஆனால் அவரின் சிறுகதை நேர்த்தியை, அழகியலை ஒப்பிடும்போது 1924இல் எழுதிய இந்தக் கதையிலிருந்து ஒப்பிட வேண்டும் என்று தோன்றியது. இப்படியாக ஒப்பீட்டு ஆய்விற்கும் இந்த சிறுகதைகள் பயன்படும்.
அரங்கசாமி ஐயங்கார் எழுதிய ”கோபாலன் விஷயம்” அறிவியல் புனைவு சிறுகதை எனலாம். எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு எழுதிய “இயந்திர தெய்வம்” சிறுகதை மின்சார சக்தியில் இயங்கும் ரயிலை தெய்வமாக கற்பனை செய்து கொள்ளும் காண்டாவிற்கு அதன் அறிவியலை எடுத்துரைக்கும் சிறுகதையாக உள்ளது. ஜேம்ஸ் தான் இறந்தது போல நடிப்பதும், பேயாக மாறி வந்து அவனுக்கு பாடம் புகட்டுவது போல நடிப்பதுமான அமானுஷ்யக்கதையாக ஆரம்பித்து பகுத்தறிவுத்தன்மையோடு முடிகிறது. உண்மையில் எங்கள் ஊரில் முதல் முதலில் ரயில் வந்தபோது அதனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு பொங்கல் பூசை செய்ததாக தாத்தா கூறுவார். 1920களில் இன்னும் ரயிலை தெய்வமாகப் பார்க்கும் அந்தத் தன்மையைக் கடிவதாக சிறுகதை அமைந்துள்ளது.
புதுமைப்பித்தனின் “நினைவுப்பாதை” சிறுகதை இதில் உள்ளது. தன் மனைவி வைரவன்பிள்ளை இறந்து பின் வரும் சடங்கு நிகழ்ச்சியாக கதை விரிகிறது. இறுதியில் வைரவன் பிள்ளைக்கு முன் அவரின் பிள்ளையும், பின்னே அவரின் பேரனும் செல்ல, சங்கு முழங்குவதாக சிறுகதை முடிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகள். இறுதியில் முழங்கும் சங்கு சிறுகதையை மேலும் விரிக்கிறது. ந. பிச்சமூர்த்தியின் காஞ்சாமடம் சிறுகதை, ரா.ஸ்ரீ தேசிகனின் “மழை இருட்டு” , குபாரா வின் “பெண்மனம்” க.நா.சு வின் “இரண்டாவது கல்யாணம்” போன்றவை படிக்க வேண்டிய முக்கியமான சிறுகதைகள். கு. அழகிரிசாமியின் “பித்தளை வளையல்” மாப்பசான் எழுதிய The necklace சிறுகதையை நினைவு படுத்தக்கூடியது.
இங்ஙனம் மிகச்சாதரணமாக வரலாற்றுக் கதைகளில் ஆரம்பித்து, பல வகையான வடிவச் சோதனைகளைச் செய்து இன்றும் சிலாகிக்கக்கூடிய பல முக்கியமான சிறுகதைகள் உருவான காலகட்டமாக இதைப் பார்க்கலாம்.
இந்த புத்தகத்தில் ஐந்து பெண் எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன.பெண்களின் கதைக்களம் என்னவாக இருக்கிறது என்று ஆராய இவை பயன்படும். இந்த ஐந்து கதைகளில் என்னை முதன்மையாக ஈர்த்தது “அம்மணி அம்மாள்” அவர்களின் “பசுக்களின் மாநாடு” சிறுகதை. சீமைப்பசுவுக்கும், மெலிந்த இடையர் மாடுகளுக்குமான உரையாடலாக கதை உள்ளது. அரசியல் பகடிகள், அந்த காலகட்டத்தைய சிந்தனையின் பகடிகள் நிறைந்த கதை. இன்றும் கூட பொருத்தமுடையது. எழுத்தாளர் குகப்ரியை எழுதிய ”குஞ்சு”, கி. சாவித்ரி அம்மாள் எழுதிய “பழைய ஞாபகங்கள்”, கி. சரஸ்வதி அம்மாள் எழுதிய “தெய்வத்திற்குமேல்” சிறுகதை ஆகியவை காதல் கதைகளாக, ஆண்-பெண் உறவு பற்றிய கதைகளாக உள்ளன. வி. பாலாம்பாள் எழுதிய “மண்பானை” சிறுகதை தாய்-மகன் பாசத்தை சொல்லும் கதையாக உள்ளது. வி. விசாலாட்சி அம்மாளின் “மூன்றில் எது” குணமடைதலில் இருக்கும் ஒரு மர்மத்தை கேள்வியாக முன் வைக்கக் கூடியது. “That is it”, “out of the mouths of babes and sucklings” போன்ற ஆங்கிலப்பயன்பாடுகள் கதைகளில் உள்ளன. இந்தக்கதை ஆங்கில மொழிபெயர்ப்பும் கண்டுள்ளது.
தங்கள் படைப்புகளை பிரசூரிப்பதற்கு தடை ஏற்படும்போது புதிய இதழ் தொடங்குதல், புதிய பதிப்பகம் வாங்குதல் போன்ற அதிரடியான முடிவுகளை எடுக்கக் கூடிய சுதந்திரமும், செல்வ செழிப்பும் பெண் எழுத்தாளர்களிடம் இருந்துள்ளது. பெரும்பாலும் படித்த பெண்களே எழுத்தாளர்களாக இருந்துள்ளார்கள். சிலர் தங்கள் பெயருக்கு முன் “பண்டிதை” என்ற அடைமொழியோடு தான் சிறுகதைகளை பிரசூரித்திருக்கிறார்கள். சக்ரவர்த்தினி, மங்கை, கலைமகள் போன்ற இதழ்களின் ஊக்கம் பெண்களுக்கு இருந்துள்ளது. தீவிர எழுத்தாளர்களும் சிறந்த பெண் எழுத்துக்களை கண்டடைந்து ஊக்கப்படுத்தியுள்ளார்கள். “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்: பெண்ணெழுத்து” பற்றி தனிக்கட்டுரையே எழுதலாம்.
இந்த புத்தகத்திலுள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும் தமிழ் விக்கியில் பதிவுகள் உள்ளன. இதழ்கள் பெரும்பான்மைக்கும் பதிவுகள் போடப்பட்டுள்ளன. விடுபட்ட தகவல்கள் பலவும் இந்த புத்தகத்திலிருந்து சேர்க்கப்பட்டுள்ளன. இலக்கிய இடம் பகுதிக்காக மிகப்பெரிய அளவில் இந்தப் புத்தகத்திலுள்ள “கதைகளின் கதை” பகுதி பெரிதும் உதவியது. புகைப்படங்களின் சேகரங்களுக்காக அரவிந்த் சுவாமி நாதனின் மெனக்கெடல்கள் பாராட்டப்படத்தக்கது. கிடைத்த ஒவ்வொரு தகவல்களையும் அவர் பிரித்து, கோர்த்து, அடுக்கி வைத்த விதத்தை கற்பனையிலேயே பிரமிக்க முடிந்தது. நற்றுணை கலந்துரையாடல் நிகழ்வில் அதை அவர் விவரிக்கும்போது மேலும் அதன் வேலைப்பளு புரிந்தது. சிறுகதைகளுடன் அந்தந்த தகவல்களையும் இணைத்து மிகப்பெரிய சித்திரத்தை வாசகர்கள் பின்னிக்கொள்ள முடியும். எழுத்தாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள், கல்வித்துறை ஆய்வாளார்கள் என யாவர் கைகளிலும் இருக்க வேண்டிய புத்தகம்.
இந்த இரு புத்தகங்களும் பொருளாதார ரீதியாக விற்குமா என்று பொருட்படுத்தாமல் அதை பதிப்பித்து ஊக்கப்படுத்திய யாவரும் பப்ளிஷர்ஸ் ஜீவகரிகாலன் அவர்களுக்கு நன்றி. “விடுதலைக்கு முந்தைய இதழ்கள்” பற்றிய தொகுப்பு பணியில் இருக்கும் அரவிந்த் சுவாமிநாதன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
**
இந்த நூலைப் பரிந்துரைத்தமைக்காக மிக்க நன்றி ஜெ. மிகவும் அறிதலாக இருந்தது.
பிரேமையுடன்
ரம்யா.
அசலாம்பிகைஅம்மணி அம்மாள்அழகியநாயகி அம்மாள்ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள்ஆர்.சூடாமணிஆர்.பொன்னம்மாள்எஸ். விசாலாட்சிஎஸ். அம்புஜம்மாள்கமலா சடகோபன்கமலா பத்மநாபன்கமலா விருத்தாசலம்கிருத்திகாகிருபா சத்தியநாதன்கி.சரஸ்வதி அம்மாள்கி.சாவித்ரி அம்மாள்கி.சு.வி.இலட்சுமி அம்மாள்குகப்பிரியைகுமுதினிகெளரி அம்மாள்சகுந்தலா ராஜன்சரஸ்வதி ராம்நாத்சரோஜா ராமமூர்த்திசெய்யிது ஆசியா உம்மாசெய்யூர் சாரநாயகி அம்மாள்ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன்டி.பி.ராஜலட்சுமிநீலாம்பிகை அம்மையார்மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார்மீனாட்சிசுந்தரம்மாள்வி. விசாலாட்சி அம்மாள்வி.சரஸ்வதி அம்மாள்விசாலாட்சி அம்மாள்வை.மு.கோதைநாயகி அம்மாள்ஹெப்சிபா ஜேசுதாசன்June 14, 2022
நிறைந்து நுரைத்த ஒரு நாள்
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது சென்ற இரண்டு ஆண்டுகளாக பொது நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி. ஆனந்த் குமாருக்கு குமரகுருபரன் விருது 2022 வழங்குவது, ஜூன் 11 அன்று.
நிகழ்ச்சி நடத்துவதையே பாதி மறந்தது போல் இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். இம்முறை முந்தைய ஆண்டுகளில் விருது பெற்ற வேணு வேட்ராயன், மதார் இருவருக்கும் இரண்டு அரங்குகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அவர்கள் படைப்புகள் இணையதளம் வழியாக இவ்விருதின் மூலம் கவனப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட நேரில் பாராட்டப்படுவது விமர்சிக்கப்படுவது என்பது கவிஞர்களுக்கு மிக முக்கியமான ஒன்று.
கவிதா சொர்ணவல்லிவிருது விழாவுக்கு மறுநாள் இயக்குநர் கௌதம் மேனனுடன் பேசிக்கொண்டிருக்கையில் இளம் கவிஞர்களுக்கான விருது எந்த வகையில் முக்கியமானது என்று சொன்னேன். இளம் எழுத்தாளர்களுக்கு எந்த அளவுக்கு விருதுகள் முக்கியமோ அதைவிட ஒருபடி மேலாகவே கவிஞர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஏனெனில் கவிதை அடிக்கோடிடப்பட்டால் மட்டுமே அர்த்தம் கொள்ள ஆரம்பிக்கும் ஒரு கலை வடிவம்.
ஒரு கவிதையை எந்த உணர்ச்சியுமில்லாமல் வேகமாக உரையாடல் போல சொல்லிப்பாருங்கள், அது சர்வசாதாரணமாக ஆகிவிடும். அதன் வரிகள் தோறும் நிறுத்தி சரியான அழுத்தத்துடன் சொல்லும்போது கவிதையும் ஆகும். ஏனெனில் கவிதை என்பது அர்த்தமல்ல, மேலதிக அர்த்தம். அர்த்தம் சாதாரணமாகவும் மேலதிக அர்த்தம் வாசகனுக்குள் வளர்வதாக இருக்கும்போதுதான் நல்ல கவிதை உருவாகிறது.
ஆகவே எவரோ கவிதையை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு மேல் ஒரு வெளிச்சத்தை அடித்துக்காட்ட வேண்டியிருக்கிறது. அவ்வாறு வெளிச்சம் அடிக்கப்படவில்லை எனில் பலசமயம் இளம் கவிஞர்கள் நெடுங்காலம் கவனிக்கப்படாமலேயே இருந்துவிட வாய்ப்புண்டு. அரிதாக அப்படியே மறைந்துவிடவும்கூடும்.
சென்ற சிற்றிதழ்க் காலகட்டங்களில் நல்ல கவிதை உடனடியாக சிற்றிதழ் சூழலுக்குள் கவனிக்கப்படும். அதற்குரிய வாசகர்கள் வந்து அமைவார்கள். சுந்தர ராமசாமி, பிரமிள், ஞானக்கூத்தன், தேவதச்சன் என தொடர்ச்சியாக கவிதையை கண்காணித்துக்கொண்டும், வாசித்த நல்லகவிதையை பிறருக்கு அடையாளப்படுத்திக்கொண்டும் இருந்த முன்னோடிகள் இருந்தனர்.
இன்றைய முகநூல் சூழலில் அவ்வாறு கவனிக்க முடியாதபடி கவிதை பெருகி பரந்து கிடக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் கவிதைகளாவது இணையத்தில் அச்சேறுகின்றன. ஓரிரு மணி நேரங்களே மின்னி மறைந்துவிடுகின்றன. மூன்றுமாத இதழ்களில் கவிதை வந்த காலம் இருந்தது, மூன்று மாத காலம் கவிதை எப்படியேனும் கவனத்தில் நிற்கும். நன்றெனில் நீடிக்கும். பின்னர் அது மாதஇதழாகியது. வார இதழாகியது. இணைய தளங்களில் ஒருநாள் மட்டுமே நீடிப்பதாகியது. இன்று முகநூலில் சிலமணி நேரங்களே அது மேலே நிற்கிறது. ஒரு மலரைவிட குறைவான ஆயுள் கொண்டதாகிவிட்டது கவிதை.
கவிதையை ஒரு முகநூல் பதிவென்ற அளவிலேயே பார்த்து எதிர்வினையாற்றுகிறார்கள். சைக்கிள் பற்றி கவிதை எழுதினால் ‘உண்மைதான் இப்படியெல்லாம் சைக்கிள் ஓட்டக்கூடாது’ என்றோ ‘சைக்கிளை பூட்டி வைத்துப்போவது நலம் தோழர்’ என்றோ போகிற போக்கில் எதிர்வினையாற்றுபவர்களே அங்கே அதற்கு வாசகர்களாக அமைகிறார்கள். கவிதையை ஊதி அணைப்பது இந்த அணுமுறை.
இச்சூழலில் தான் அமைப்பு சார்ந்து கவிதைகளை அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. கவிதைகளை சுட்டிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் இதை ஒரு பொறுப்பாக, முன்னோர்கள் விட்டுச் சென்ற பணியின் தொடர்ச்சியாக செய்கிறேன். ஒவ்வொருவரும் அதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். தங்கள் நோக்கில் தங்கள் ரசனையில்.
கௌதம் மேனனிடம் சொன்னேன். வீரான்குட்டியின் ஒரு கவிதையை சொல்லி இது எதைக்குறிக்கிறது என்றேன். அவர் அதன் மேலோட்டமான பொருளை மட்டும் சொன்னார். அடுத்த கட்டமாக அதை அழுத்தி வேறுவிதமாக சொன்ன உடனேயே ’ஆம் இது மேலும் அரசியல் தன்மை கொண்டது’ என்றார். இரண்டு பண்பாடுகளின் முரண்பாடு அதிலே இருக்கிறது என்றார்.
பார்கவி உரைஅந்த மேலதிக அழுத்ததை கவிதைக்கு அளிக்கவே விருதுகள் தேவையாகின்றன. கவிஞன் மேல் கவனம் விழுந்ததுமே அவன் சொற்கள் அடிக்கோடிடப்பட்டு விடுகின்றன. அப்படிக் கவனிக்கப்படுகையில் தகுதியான கவிஞன் மேலெழுகிறான், சிலர் தயங்கி அழியவும்கூடும்.
நான் 10-ம் தேதியே திரைவேலைகளுக்காக சென்னை வந்துவிட்டேன். அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு தொடர்ச்சியாக பயணங்கள். மூன்றாம்தேதி இந்தியா வந்தேன். நான்காம் தேதி காசர்கோடு சென்றேன். ஏழாம் தேதி காசர்கோடிலிருந்து வந்தேன். ஒன்பதாம் தேதி கிளம்பி சென்னை.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் ரெயின் ட்ரீயில் எனது அறை விசாலமானது. தனிப்பட்ட முறையில் மிகப்பிடித்த அறைகளில் ஒன்று. அதன் வரவேற்புப் பகுதி இரண்டு பக்கமும் முற்றிலும் கண்ணாடிகளால் திறந்து வானத்தை நோக்கி திறந்திருக்கும். வெட்ட வெளியில் இருக்கும் உணர்வும் வானில் இருக்கும் உணர்வும் மாறி மாறி வந்துகொண்டிருக்கும். ஏழாவது மாடியில் இருக்கும் அந்த அறை விண்ணில் மிதப்பதுபோல உணரச்செய்வது.
நீண்ட நேரம் விடுதி அறைகளுக்குள்ளேயே இருக்கும் சலிப்பை போக்கக்கூடியவை கண்ணாடிச் சாளரங்கள். கண்ணாடிச் சாளரம் எந்த அளவுக்குப் பெரிதோ அந்த அளவுக்கு அறையை நான் விரும்புகிறேன். அழகிய அறைகளுக்குள் பாதுகாப்பாகவும் ஒருவகை சொகுசாகவும் உணர்கிறேன்.
11ம் தேதி காலை முதலே அமர்வுகள் தொடங்கின. குமரகுருபரனை நேரில் அறியாத ஒருவர் அவர் கவிதைகளைப்பற்றி மட்டுமே பேசவேண்டும் என கவிதா சொர்ணவல்லி விழைந்ததன் பேரில் இம்முறை கவிஞர் ச.துரை குமரகுருபரனின் கவிதைகளைப்பற்றி பேசினார்.
கவிஞர் ச.துரை குமரகுருபரன் விருது வழியாக குமரகுருபரனை அறிந்தவராக இருக்கலாம். மிக இளைஞராக அவர் எழுதிய மத்தி என்னும் தொகுப்புக்கு குமரகுருபரன் விருது அளிக்கப்பட்டது. எங்கள் கண்டடைதல் வீண்போகவில்லை என நிரூபிக்கும் ச.துரையின் இரண்டாவது தொகுதி சங்காயம் தமிழில் வெளிவந்த முக்கியமான கவிதைத்தொகுதிகளில் ஒன்று.
ச.துரையின் உரை கவிஞர்களுக்குரிய அடங்கிய குரல், தயக்கம், மின்னிச் செல்லும் அரிதான படிமங்கள், நுண்ணிய அவதானங்கள் ஆகியவற்றாலானதாக இருந்தது.
அதன் பின் கவிஞர் வேணு வேட்ராயனின் அமர்வு. வேணு கோவிட் காலத்தில் வெறிகொண்டு பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டது. விருதளிக்கச் சென்றபோது கோவிட் பற்றிய படிமங்களாலேயே பேச நேர்ந்தது என்று காளிப்ரசாத் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
முத்துக்குமார் வேணுவேட்ராயன் கவிதைகளைப்பற்றி பேசினார். தன்னம்பிக்கையும் அதன்விளைவான நிமிர்வும் கொண்ட குரலில் அகரமுதல்வன் வேணுவேட்ராயன் கவிதைகளைப்பற்றி பேசினார். அதிலிருக்கும் மெய்யியல் கூறுகளைத் தொட்டு சிறப்பான உரை.
வேணு ஏற்புரையில் அவ்வப்போது சொல் மறந்து சில கணங்கள் உறைந்து நின்றிருந்தபோது அவை அவரை நோக்கி அமர்ந்திருந்தது. விந்தையானதோர் அனுபவம் அது. ஒரு கவிஞனும் அரங்கும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அசைவற்று அமைதியாக அமர்ந்திருப்பது ஒருவகை கூட்டு தியானம் போல் தோற்றமளித்தது. இந்த நிகழ்வில் நினைவில் நிற்கக்கூடிய அம்சங்களில் ஒன்று வேணுவின் அந்த அமைதி என்று தோன்றியது.
மதார் தயக்கமும் குழப்பமும், நம்பிக்கையும் ஊக்கமும் கொண்ட இளம் கவிஞர். அவருடைய கவிதைகளைப்பற்றி கவிதாவும் அதன்பின் சுரேஷ் பிரதீப்பும் பேசினார்கள். சுரேஷ் பிரதீப்பின் குரலில் இருந்த தன்னம்பிக்கையும் சொற்களில் இருந்த கச்சிதமும் தொடர்ந்து சிந்திப்பவர்களுக்குரியவை. சிந்தனையை தங்களுக்குள் சொற்களாக ஓடவிடுபவர்களுக்கு மட்டும் அமையும் நாத்தயக்கமின்மை அவருடையது. முதிராச் சிறுவன் போல அவர் வாசகர் கடிதம் எழுதி எனக்கு அறிமுகமான நாட்களை நினைத்துக்கொண்டேன்.
மதிய உணவிற்குப்பிறகு அரங்கில் வீரான்குட்டி வாசகர்களை எதிர்கொண்டார். வாசகர்களின் கேள்விகளுக்கு விரிவாகவே பதில் சொன்னார். வீரான் குட்டியின் உரையாடல் அரங்குகளை முன்னரும் பார்த்திருக்கிறேன். அரசியல் அல்லது இலக்கிய வம்புகள் சார்ந்து எப்போதும் எந்த வார்த்தையும் அவர் சொல்வதில்லை. ஆனால் கவிதை என்பதைப்பற்றி எந்த தயக்கமும் இல்லாமல் தேர்ந்த சொற்களில் முன்பு ஒருமுறையும் கூறாத ஒரு பதிலை ஆனால் மிகப்பொருத்தமான பதிலை அவரால் சொல்ல முடியும்.
இந்த அரங்கிலும் வீரான்குட்டியின் உரையாடல்தான் முதன்மையான நிகழ்வு என்று தோன்றியது. ஒருவினாவிற்கு கூட பொருத்தமற்ற பதிலையோ அல்லது தயங்கிய பதிலையோ அவர் கூறவில்லை. அதே கணம் இது எனது கருத்து இப்போது தோன்றுவது, விமர்சகர்கள் இதை மறுக்கவும் கூடும் என்ற வரியை ஒவ்வொரு முறையும் சேர்த்துக்கொண்டார். அவர் குரல் மென்மையானது. பேசும் முறையும் பெண்மையின் மென்மை கொண்டது.
விடுதிக்குச் சென்று உடைமாற்றி சற்று ஓய்வெடுத்து வந்தேன். என் இருமல் என்னை முந்தைய இரவு சரியாகத் தூங்கவிடவில்லை. வரவேற்பறையில் திறந்த கண்ணாடி பரப்பு வழியாக வானத்தை பார்த்துக்கொண்டு நெடுநேரம் விழித்திருந்தேன். சிறு தூக்கம் உதவியாக இருந்தது.
மாலை ஐந்தரைக்கு விருது வழங்கும் விழா. விஷ்ணுபுரம் விழாக்கள் அனைத்தையும் போல சரியாக ஏழரை மணிக்கு விழா முடிந்தது. ஒவ்வொருவரும் சராசரியாக 25 நிமிடங்கள் பேசினார்கள்.
புதிய வாசகியாகிய கவிஞரும் எழுத்தாளருமான பார்கவி பேசினார். பார்கவிக்கு இலக்கியத்தின் மேலுள்ள பித்து என்பது நான் சில ஆண்டுகளாக கவனித்து வருவது. மேடையிலே அறிமுகம் செய்த காளிப்ரசாத் தனக்கு திருமணமான அன்றே கம்பராமாயணச் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றவர் என்று அவரை அறிமுகம் செய்தார். பார்கவி அவ்வாறு இல்லை என்றால்தான் வியந்திருப்பேன்.
தீவிரமாக ஒன்றை பற்றிக்கொள்வதற்குத்தான் இலக்கியத்துக்குள் வருகிறோம் மேலோட்டமாக அக்கறையற்று புழங்குவதாக இருந்தால் அது இலக்கியத்துக்கு வரவேண்டிய தேவையில்லை என்பது தான் எப்போதும் எனது எண்ணம். பார்கவியின் உரை சங்க இலக்கியம் கம்பராமாயணம் எனத் தொட்டு வந்து ஆனந்தகுமார் கவிதைகளின் எளிமையையும் அழகையும் சுட்டிக்காட்டியது
போகனுடைய உரை விரிவான தயாரிப்புடன் இருந்தது. கவிதை குறித்த பல கேள்விகளுக்கு விடைகளை தொட்டு வந்தார். கள்ளமற்ற எளிமையான ஒரு கவிதை எவ்வண்ணம் தன்னளவில் ஒரு அரசியல் கவிதையாகிறது. ஒரு கவிதை ஆற்றும் பணி என்ன ஆற்ற இயலாதது என்ன என விரிந்த உரை இதற்கு முன் விருது வாங்கியவர்கள் ஒவ்வொருவரையும் மதிப்பிட்டு கூறினார்.
வீரான்குட்டியின் உரை அவருடைய எப்போதைய உரைகளையும்போல சுருக்கமானது கவித்துவமானது. மொழி, பறவை சிறகால் தன்னை விசிறிக்கொள்வது போல தன்னைத்தானே குளிர்வித்துகொள்கிறது கவிதையினூடாக என்றார். மொழியின் சிறகு கவிதை எனக் கேட்டிருப்போம். பறத்தல் அல்ல குளிர்வித்தல் என்ற உவமை அக்கணத்தில் அவருக்குத் தோன்றியிருக்கும். ஆனால் அது நினைவில் நீடிக்கக்கூடியது.
கவிதை பற்றிய அனைத்து வரையறைகளும் நிலையற்றவை. ஆனால் நிலையான உறுதியான ஒரு பக்கவாட்டு கம்பியைப்போல பற்றிக்கொள்வது போல அவற்றைப்பிடித்துக்கொள்கிறேன் என்று சிம்போஸ்கயாவின் வரியை வீரான்குட்டி சொன்னார். கவிதையின் தன்னியல்பான தன்மை எடையற்ற தன்மை இந்த நூற்றாண்டில் அதுவே ஓர் அழகியலும் அரசியலும் ஆக மாறிவிட்டமை பற்றிச் சொன்னார்.
இறுதியாக நான் பேசினேன். சௌந்தர் நன்றியுரை சொன்னார். ஸ்ருதி டிவியின் பங்கேற்பால் இப்போது அந்த உரைகள் அனைத்துமே இணையத்தில் கிடைக்கின்றன. முன்பெல்லாம் உரையின் ஒரு சுருக்கத்தையும் இந்த மாதிரியான குறிப்புகளில் அளிக்க வேண்டியிருக்கும். இப்போது மனப்பதிவுகளை மட்டுமே எழுதினால் போதுமென்று ஆகிவிட்டிருக்கிறது.
காலை பத்திலிருந்து மாலை வரை தொடர்ச்சியாக ஒரு நீண்ட உரையாடல் அதுவும் கவிதை குறித்து என்பது எந்த மொழியிலும் மிக அரிதான ஒன்றுதான். அதிலும் இக்கவிதைகள் அனைத்துமே களியாட்டமும் கொண்டாட்டமும் கொண்டவை. மதார், வீரான்குட்டி, ஆனந்தகுமார் மூவருமே குழந்தைமை களியாட்டு தன்மை கொண்ட கவிதைகளை எழுதுபவர்கள் ஆன்மீகமாக ஒரு காட்சிப்படிமத்திலிருந்து எழுந்து மேலே செல்லும் கவிதைகளை எழுதுபவர் வேணு வேட்ராயன். அவர்கள் கவிதை உலகம் ஒருநாளை முழுமையாகவே நிறைத்திருந்தது.
”நிறைந்தபின் பொங்குவதில்லை இனிய மது, பொங்குதலே நிறைத்தலென நிகழ்கிறது” என்று பீர் பற்றிய ஜெர்மானிய பாடலொன்றில் வருகிறது. பீர் அவர்களுடைய தேசியபானம் கவிதைக்கும் அது பொருந்துமென்று தோன்றுகிறது.
அந்த வரியை நான் அப்போது குமரகுருபரனுடையதாகவே நினைவுகூர்ந்தேன். ஞானம் நுரைக்கும் பீர்போத்தல். அந்த அரங்கும் அவரைப்போன்றது. நிறைதலும் பொங்குதலும் ஒன்றென நிகழ்ந்து சென்றவன். பொங்கியவை அவன் வரிகளென எஞ்சுகிறன.
புகைப்படங்கள் கார்த்திக், அறிவழகன், அம்ரே கார்த்திக், சுருதி டிவி.
த.நா.குமாரசாமி- விடுபடலா?
அன்புள்ள ஜெ
நான் வாசித்து முடிக்கும் புத்தகத்தின் மீதான மற்ற வாசகர்களின் பார்வையை இணையத்தில் தேடி படிப்பது என் பார்வையை கூர்மையும், விசாலவும் படுத்தி கொள்ள எனக்கு உதவுவதாக நினைக்கிறேன். பெரும்பாலான புத்தகங்களின் மீதான நல்ல கட்டுரைகளை உங்கள் தளத்தில் தான் கண்டு கொள்கிறேன்.
அண்மையில் நூலகத்திலிருந்து எடுத்து படித்த தாராசங்கர் பானர்ஜியின் மொழி பெயர்ப்பு நாவல் (அக்னி – தா நா குமாரசாமி) பற்றி இணையத்தில் மேலதிகமாக அறிந்து கொள்ள தேடி பார்த்தேன். நான் தேடிய வரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. முக்கியமாக இது தாராசங்கர் பானர்ஜி யின் எந்த நூலின் மொழிபெயர்ப்பு என்ற தகவல் கூட கிடைக்கவில்லை. தா நா குமாரசாமி அவர்களின் விக்கி பக்கத்தில், அவர் இப்படி ஒரு நூல் மொழி பெயர்த்திருக்கும் தகவல் கூட சேர்க்கப்பட இல்லை. தமிழ் விக்கி என்கிற பெரும் பணியை ஆற்றி கொண்டு வரும் உங்களின் கவனத்திற்கு கொண்டு வர தோன்றியது. நன்றி.
சரத்
***
அன்புள்ள சரத்
தமிழ் விக்கியில் எல்லா செய்திகளும் உள்ளன. ஆகுன் (அக்னி) த.நா.குமாரசாமி மொழியாக்கம் செய்த முதல் தாராசங்கரின் படைப்பு.
ஜெ
த.நா.குமாரசாமி
த.நா.குமாரசாமி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

