கல்குதிரை, மதார் கவிதைகள்

சுரேஷ் பிரதீப் தமிழ் விக்கி மதார்- தமிழ் விக்கி

அன்புள்ள ஆசிரியருக்கு,

பூன் காவிய முகாமில் கவிதைகளுக்கான அமர்வில் உங்களுடைய உரைக்குப் பிறகு அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவில் கவிதைகள் குறித்த விவாதங்கள் பரவலாக நடைபெறுகின்றன. பல நண்பர்களுக்கு கவிதைகளின் மேல் ஒரு ரகசிய ஈர்ப்பு இருப்பது தெரிகிறது. உங்கள் வருகைக்குப் பின் எண்ணங்களை வெளிப்படையாக முன் வைக்கிறார்கள். கவிதைகளை எப்படி அணுகுவது, புரிந்துகொள்வது என்பதே விவாதங்களின் சாரம். ‘கவிதைகளைப் புரிந்துகொள்தல் என்பதை புறவயமாக வரையறுத்துக்கொள்ள முடியுமா’ என்பதற்கு என்னிடமும் ஒரு தெளிவு இல்லை. கவிதைகளை வாசித்தல், புரிந்துகொள்தல் என்பதையெல்லாம் ஒரு வாசகனின் உள்ளுணர்வு சார்ந்தவை என்றே எண்ணுகிறேன்.

இந்த உள்ளுணர்வு தொடர்ச்சியாக கவிதைகளையும், கவிதைகளைக் குறித்தும் வாசிப்பதனால் மனதில் ஏற்படும் அகவயமான ஒரு தெளிவு அல்லது முதிர்ச்சி என்பதே இப்போதைக்கு என்னுடைய நிலைப்பாடு. ‘Intuition’ என்ற ஆங்கில இணை வார்த்தைக்கு கூகுள் ‘the ability to understand something immediately, without the need for conscious reasoning’ என்று அர்த்தம் தருகிறது. நண்பர் சங்கர் பிரதாப் தளத்திலுள்ள https://www.jeyamohan.in/157730/ சுட்டியைப் பகிர்ந்திருந்தார். இந்தச் சுட்டி கவிதைகளின் உலகுக்குள் நுழைய மிகப் பெரிய நுழைவாயில், ஒரு ‘மாயச் சாளரம்’ (நன்றி: பனி உருகுவதில்லை), தொடர்ந்து இங்குள்ள கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்தக் கடிதம் கவிஞர் மதாரைப் பற்றியது. கல்குதிரை இதழில் அவருடைய ஆறு கவிதைகள் வெளிவந்துள்ளன. அவை குறித்த சில எண்ணங்கள்,

1.

கண்ணை மூடிக்கொண்டே
இருந்த பொழுது
குருடனானேன்

எங்கும் ஒரே நிறம்

வானை பார்த்துக்கொண்டே
இருந்த பொழுது
குருடனானேன்

எங்கும் ஒரே நிறம்

போகிற போக்கில்
பார்வை தந்து போனது
ஒரு பறவை

ஒரு நல்ல கவிதையை, கவிதை அனுபவத்தை வாசிக்கும் போது குலைத்துக்கொள்ள முடியுமா? முடியும். ஏனென்றால் நான் இதைச் செய்திருக்கிறேன், என்னுடைய இந்தச் செயலுக்கு மதாரின் கவிதைகளும் தப்பவில்லை. ஆனால் இந்தக் கவிதையை அப்படியே விட்டுவிடுகிறேன், இது கவிதை, அவ்வளவுதான். இந்தக் கவிதையில் ஒரு தூய்மையிருக்கிறது, நல்ல கவிதைக்கே உரிய தூய்மை. கடைசி மூன்று வரிகளை விட்டு மனம் நகர மறுக்கிறது, தோன்றியதை வரையறுத்துக் கூற முடியவில்லை, அது நல்ல கவிதையை வாசித்தவுடன் எழும் ஒரு உணர்வு என்று மட்டும் சொல்லமுடிகிறது. இது நல்ல கவிதை என்று வகைப்படுத்துவது ரசனை சார்ந்ததாக இருக்கலாம், ஆனால் அதீதமான எண்ணங்களை இந்தக் கவிதையின் மேல் செலுத்தாமல் இரு என்று மனதில் ஏதோ ஒன்று சொல்கிறதே, அதையே உள்ளுணர்வு என்று இப்போதைக்கு நம்பிக்கொள்கிறேன்.

*

2.

இயக்கத்தில் உள்ள
புலியைச் சுட
வெற்று வெளியைத்தான்
சுடவேண்டியிருக்கிறது

புலி ஓடி வெற்று வெளியை
அடைந்து மரணிக்கிறது

குறி பார்ப்பதென்பது
குறி தப்பிப் பார்ப்பதா
தலைக்குக் குறி வைப்பது
வாலை வீழ்த்தவா

வாலிபன் மரணித்துவிட்டான்
கிழவன் தப்பி
குருவி மடிந்தது
வானைக் காப்பாற்றி

ஆற்றின் தவளைக்கல்
நீர்த்தவளையை ஓடச் செய்கிறது
மூன்று நான்கு முறைகள்
நான்கு ஐந்தில்
சடலம் மூழ்குகிறது
நீருக்குள்
அடி ஆழம் நோக்கி

உக்கிரமான கவிதை. இயக்கத்தில் இருக்கும் புலியைச் சுட வேறெங்கோ சுட வேண்டியிருப்பது ஆழமான படிமம். அன்றாடச் செயல்களில் கால இடப் பரிமாணங்களின் பங்கை எத்தனை குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறோம். வாலிபன் மறைந்து கிழவன் தப்புவதும், குருவி மடிந்து வானைக் காப்பாற்றுவதும் பிரபஞ்சத்தின் சமநிலைப் படுத்தும் ஒரு போக்குதான்.

தர்க்கரீதியாக எனக்கு ‘Sniper’ களின் பிம்பம் மனதில் எழுகிறது. பார்வைத்திறன், கவனக் குவிப்பு, காற்று, வெளி, தற்செயல், இலக்கின் நிலைத்தன்மை என்று பல காரணிகளை உத்தேசித்து செயல்படுபவர்கள். குண்டு விடுபடும் தருணத்திற்கும், இலக்கை அடைவதற்கும் உள்ள இடைவெளிகள் யாரால் நிர்ணயிக்கப்படுகின்றன?

‘தவளைக்கல் வீழ்த்தும் தவளை‘ எனும் குறியீடு தொந்தரவு செய்கிறது, மதாரை மீறி எழுந்த வரிகள் என்றே எண்ணுகிறேன். சில நேரங்களில் கவிஞர்களின் கடிவாளங்களுக்கு சொற்கள் அடங்குவதில்லை, இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டு வீரன் மெல்லத்தான் நிலைத்தன்மைக்கு வரமுடியும், எல்லைக்கோட்டைத் தாண்டி சில அடிகளேனும் ஒட்டம் எனும் விசை அவனை நகர்த்திவிடக்கூடும், கவிமனதின் ஓட்டங்களும் அப்படித்தான். என்னால் கடைசி ஏழு வரிகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை, கவிதையில் இந்த வரிகளின் தேவை ஒரு புகைமூட்டக் காட்சியாய் தெரிகிறது. அர்த்தம் இல்லாமலேயே கவிதை வரிகள் மனதுக்குப் பிடிப்பது, சலனங்களை ஏற்படுத்துவது, கவிதை வாசிப்பின் வினோதம்தான். இந்தக் கவிதையில் எனக்கு தேவதச்சன் தெரிகிறார் என்பதைப் பாராட்டாகவே முன்வைக்கிறேன்.

கவிதையின் கடைசி ஏழு வரிகள், கவிதைகளைப் புரிந்துகொள்தல் எனும் புறவயமான வரையறையின் கைகளிலிருந்து நழுவிப் பறந்துவிடும் தன்மைக்கு மிகச் சரியான ஒரு மாதிரி. நீண்ட நாட்கள் என் மனதில் நிலைக்கப்போகும் கவிதை இது, மதாருடைய அடுத்த தொகுப்பில் பரவலாகப் பேசப்படும் ஒன்றாகவும் அமையலாம்.

3.

இனி எனக்கு
வேண்டாமென
பந்தைக் கீழே
குத்துகிறது
குழந்தை

துள்ளியெழும் அதன் செய்கை கண்டு
கத்துகிறது

துள்ளித் துள்ளி
உயரம் குறையும் பந்தின் அன்பில்
குழந்தைக்கு
அழுகையே வந்துவிடும் போல் தெரிகிறது

குழந்தை பந்தைத் தூக்கி முத்துகிறது
கொழகொழக்கும் எச்சிலோடு

பந்து கீழே விழுந்து துள்ளி ஓடுகிறது
குழந்தை சிரித்துக்கொண்டே
பின்னால் ஓடுகிறது
சமாதானப்படுத்த

மதாருடைய கவிதைகளில் குழைந்தைகள் பரவலாக வருகிறார்கள். குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் மேல் இருக்கும் உறவை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஒரு குழந்தையின் மனதுக்குள் புகுந்து அவர்கள் தீண்டும் பொருட்களைப் பார்த்தால் எண்ணற்ற படிமங்கள் கிடைத்துவிடும். இந்தக் கவிதையில் குழந்தையும் பந்தும் ஒன்றுதான். குழந்தைகளுக்கு மனதின் மேல் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லை, அவர்களுடைய மன ஓட்டங்களை இயக்கும் சக்தி அருவமானது.

4.

வந்த வேகத்தில்
திரும்பிச் சென்ற மழை
வந்தது எதற்கு

மறதி மேக தயவில்
வாசல்
நனைந்தது

இனி
கோலப் பொடியுடன்
நீ வரலாம்

அழகிய கவிதை. எதையாவது செய்யச் சென்று போகும் வழியில் அப்படியே மனதில் வெற்றிடமாய், வந்த வேலையை மறந்து சில நொடிகள் தவிக்கும் அனுபவத்தை எண்ணிக்கொள்கிறேன், சிறு வயதிலேயே எனக்கு இது ஏற்பட்டிருக்கிறது. இங்கு மேகத்தை ‘Dementia’ உள்ள ஒரு பெரியவரோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன், கொஞ்சம் சிரிப்பு வருகிறது, ‘பிறசண்டு’ சிறுகதையின் சிரோமணி நினைவுக்கு வருகிறார். பாவம் மேகம், சில கோலங்கள் வரையப்படுகின்றன…

5.

என் கைக்குட்டை பறந்தது காற்றில்
தலையிலிருந்து வானத்தில்

இதுவரை
நான் வாய் துடைத்தது
ஒரு சிறகின் முனையில்

சட்டைப்பைக்குள்
ஒளித்து வைத்திருந்தது
ஒரு பறவையை

கூண்டை உதறி
அது இப்போது
பறந்துவிட்டது

மழையில் நனைகிறது
என் கேசம்

கைக்குட்டைக் கம்பளத்தில்
ஏறிப் பறக்கிறது
வானின் ஒரு துளி

கைக்குட்டைக் கம்பளத்தில்
பறக்கிறது
வளி

கைக்குட்டை பறவையாக மாறி, ஒரு கம்பளமாக பரிணமித்துவிடுகிறது, வானின் ஒரு துளியை, வளியைச் சுமந்துகொள்கிறது. ஒரு குழந்தையாக என்னைக் கற்பனை செய்துகொண்டு இந்தக் கவிதையை வாசித்தால் மிகுந்த எழுச்சி தருகிறது, இன்னொரு அழகிய கவிதை.

6.

மூக்குக் கண்ணாடி அணியாமல்
தூரக்காட்சிகளின் மங்கல்
எனக்கொரு தைரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது

மேடை பயம் விலக
பள்ளி நாடகமொன்றில்
மூக்குக் கண்ணாடி அணியாமல்
நடித்த நாள்
நினைவிற்கு வந்தது

எதிர்வரும் மனிதர்கள்
கலங்கலாகிவிட்டனர்
இப்போது பயம் நீங்கிவிட்டது

பார்வைத் தெளிவெனும் அச்சம்
என் வீட்டுப் பரணில் கிடக்கிறது

எத்தனை நாள்
அதை
தூசி போகத்
துடைத்திருப்பேன்

அறியாமை
அறியாமை

அந்த பைனாக்குலர்
இனி எனக்கு வேண்டாம்

இனி தூரத்துப் பறவை
என் கண்களில் பறக்காது

அது வானத்தில் பறக்கிற செய்தியை ஏந்தி வரும்
தபால்காரர் போதுமெனக்கு

நம் எல்லோரிடமும் இந்த மூக்குக் கண்ணாடி இருக்கிறது, அதைத் துடைத்து பளபளவென்று வைத்திருப்பதை சமூகம் பாராட்டிக்கொண்டே இருக்கும், நாமும் அந்தச் செயலால் உவகையடைகிறோம். ஆனால் கண்ணாடியை வீசியெறிந்துவிடக்கூடிய துணிவு மிகச் சிலருக்கே வாய்க்கிறது, அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், ‘விதி சமைப்பவர்கள்’, சிலர் அவ்வப்போது தூக்கியெறிகிறார்கள். இதில் நீ எந்த வகை என இந்தக் கவிதை கேள்வி கேட்கிறது. கவிஞர் அபி ‘என்னுடைய தோல்விகளைத்தான் கவிதைகளாக எழுதுகிறேன்’ என்று சொன்னார், மதார் எப்படியோ!

மதார் தேவதேவன், தேவதச்சன், அபி, லக்ஷ்மி மணிவண்ணன் என மூத்தவர்களுடன் எப்போதும் ஒரு உரையாடலில் இருக்கிறார். நித்தியமான கவிதைகளை எழுதிவிட்டோம் போன்ற உளமயக்குகள் அவருக்கு இல்லை, திறந்த மனதோடு உலகை நோக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு உரையாடலில் தேவதேவனைச் சந்திகப்போவதாகச் சொன்னார், ‘அவரைப் பார்த்துவிட்டு வரும்போதெல்லாம் உத்வேகத்தில் நான்கைந்து நல்ல கவிதைகளை எழுதுவிடுகிறேன்’ என்றார். அவருடைய கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பவனாக, மிகச் சிறந்த கவிதைகளை அவரிடம் எதிர்பார்க்கும் ஒருவனாக இருப்பதில் ஒரு மன நிறைவுடன் இந்தக் கவிதைகளை உங்கள் முன் வைக்கிறேன்.

அன்பும் நன்றிகளும்,

பாலாஜி ராஜூ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.