Jeyamohan's Blog, page 758
June 22, 2022
காடு, ஒரு கடிதம்
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அன்பு வணக்கம்!
என்னுடைய பெயர் பிரதாப். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சொந்த ஊர். தற்போது கொரியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். தங்களுடைய காடு நாவலை கடந்த வெள்ளிக்கிழமை வாசித்து முடித்தேன்!
நீங்கள் எழுதியதைப் போலவே “முடிவு ஒரு பித்துநிலை” தான். நாவலை படித்து முடித்து விட்டு ஒரு பித்துப்பிடித்த பற்றற்ற பெருமௌனம் எனக்குள் சூழ்ந்துகொண்டது. ஒரு பிரிவின் தாக்கத்தில் இருந்து மீள முயன்று கொண்டிருந்தபோது இந்நாவலை வாசிக்க நேர்ந்தது. காதல், காமம், நிலையின்மை போன்ற வாழ்வின் பல்வேறு நிலைகளின் மீது ஒரு மாறுபட்ட புரிதலை உண்டாக்கியது இந்நாவல் எனலாம்.
நீலியைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்! மோகமுள் நாவலில் வரும் கங்காவிற்கு பிறகு, நீலியைத் தான் என் இதயத்துக்குள் ஊறல் போட்டு வைத்திருக்கிறேன். எழுத்துகளின் வாயிலாக நமக்குத் தெரியவரும் கதாப்பாத்திரங்களின் மீதான காதல் என்ன வகைப் பைத்தியக்காரத்தனம் என்று தெரியவில்லை. ஆனால் அவற்றை ரசிப்பதில் ஒரு தனி போதை இருக்கத்தான் செய்கிறது. இந்நாவலின் தாக்கம் எனக்குள் நெடுநாட்கள் இருக்கப் போகிறது என்பது மட்டும் உண்மை!
இந்த ஆராய்ச்சி எல்லாம் இல்லை என்றால் உண்ணாமல் உறங்காமல் கூட வாசித்து முடித்திருப்பேன் போலும். அப்படி ஒரு கட்டிப்போட வைக்கும் நடையை உங்கள் எழுத்தில் கண்டேன். “எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் பண்ணீட்டு, கருமத்த! கழுவி ஊத்தி மூடீட்டு போய் நிம்மதியா சுவாசிக்கலாம்!” என்றெல்லாம் கூடத் தோன்றியது. ஆனால் என்னுடைய தேடலுக்கும், பேராசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுக்கும், பயணங்களுக்கும் தீனி போடுவதாக இந்த நாவல் அமைந்தது எனக்கு பெருமகிழ்வைத் தந்தது.
பிரதாப்
June 21, 2022
என் சமரசங்கள் என்ன?
அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?
‘என்னுள் இருந்த சுய அடையாளம் தேடிப் பரிதவித்த அந்த இளைஞன் மன எழுச்சி தாளாமல் கண்ணீர் மல்கினான். ஞானம் மட்டுமே தன் சுயமாகக் கொண்டு இப்படித் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தால், இந்த உலகின் பணம், அதிகாரம், அற்ப வேட்கைகள் அனைத்தையும் இப்படி காலடி வைத்து இலகுவாகத் தாண்ட முடிந்தால் மட்டுமே நான் வாழ்ந்தவன், வென்றவன் என்று எண்ணிக் கொண்டேன்’
‘இவர்கள் இருந்தார்கள்’ நூலில் பெரும் பணக்காரர்கள் மத்தியில் ஞானம் ஒன்றை மட்டுமே தன் இயல்பாகக் கொண்ட க.நா.சு. பற்றி நீங்கள் எழுதியுள்ள வரிகள். (’இவர்கள் இருந்தார்கள்’ பக்கம் 81)
தற்போது (2022) நீங்கள், உங்களை இம்மாதிரி உணர்கிறீர்களா? சாகித்திய முதலிய விருதுகள் வேண்டாம் என்று நீங்கள் விலக்கியதை நான் அறிவேன். ஆயினும், கொண்ட கொள்கைகள், பொருளியல் சார்ந்து உங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாற வேண்டிய, விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டா? நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களைக் கடக்கவும், சில குழுக்களிடம் ஒத்துப் போகவும் சமரசங்கள் செய்துகொள்ள வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? இது, இலக்கிய வாழ்க்கை குறித்தான கேள்வியே தவிர, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்வியன்று.
சுருக்கமாக : உங்களை அந்த 1985 க.நா.சு. இடத்தில் பொருத்திப் பார்க்க உங்களால் முடிகிறதா?
நன்றி
ஆமருவி தேவநாதன்
***
அன்புள்ள ஆமருவி தேவநாதன்,
என்னுடைய வாழ்க்கையை கொஞ்சம் அடுத்து அறியும் எவருக்கும் இந்தக் கேள்வி எழாது என நினைக்கிறேன். இக்கேள்வி மிக அப்பாலிருந்து எழுகிறது. சரிதான், அதற்கான பதில் இது.
என்னிடம் பல குறைபாடுகள் உண்டு. குணக்கேடுகளும் உண்டு. அவை பெரும்பாலும் ஒருமுனை நோக்கி தன்னை குவித்துக் கொள்வதனால் விளைபவை. அத்துடன் படைப்பியக்கச் செயல்பாடு என்பது ஒருவன் தன்னுள் உள்ள அனைத்தையும் குத்திக் கிளறிவிடுவதுதான். காமம், வன்முறை, கீழ்மைகள், இருள்கள். அவற்றை அவன் தெளியவைக்க கொஞ்சம் தாமதமாகும். அதற்கான வழி இலக்கியத்துக்குள் இல்லை. இலக்கியம் இலக்கியவாதிக்கு வழிகாட்டாது. வாசகனுக்கே வழிகாட்டும். எழுதுவது அதுவாகி நடிப்பது. வெளியே வர வேறொரு பிடிமானம் தேவை.
அந்தக் கொந்தளிப்பும், நிலையழிவும், சமநிலையின்மையும் என்னிடமுண்டு. அதன்பொருட்டு நட்பு, உறவு அனைவரிடமும் எப்போதும் மன்னிப்பு கோரிக்கொண்டேதான் இருக்கிறேன்.
ஆனால் சமரசங்கள்? அதுவும் கொள்கைகளில்? இல்லை.
எங்கும் எப்போதும் குறைந்தது ஐம்பதுபேர் சூழத்தான் சென்ற இருபதாண்டுகளாக வாழ்கிறேன். அந்தரங்கம், தனிப்பட்ட வாழ்வு என ஒன்று இல்லை. அணுக்கமுள்ளோர் அறியாத ஒன்றும் என் வாழ்வில் இல்லை.
அவ்வண்ணம் அணுகியறிந்தோர் எவரும் ஐயமின்றி உணர்வது ஒன்றே, இலக்கியத்தில், கருத்தில் எங்கும் எவ்வகையிலும் நான் சமரசம் செய்துகொள்வதில்லை.
அவ்வண்ணம் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பதனாலேயே ஒரு இலக்கியப் பார்வையை தத்துவப் பார்வையை, ஆன்மிகப் பார்வையை தீவிரமாக முன்வைப்பவனாக இருக்கிறேன். அதையொட்டியே என்னைச் சுற்றி இத்தனை பேர் திரண்டிருக்கிறார்கள்.
இவர்கள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். அத்தனைபேரும் வாசிப்புப் பழக்கமும், இலட்சியவாத நோக்கமும் கொண்டவர்கள். கலைகளில், இலக்கியத்தில், சேவைக் களத்தில் பெரும்பங்களிப்பாற்றுபவர்கள்.
சொல்லப்போனால் இன்று இவ்வண்ணம் முதன்மைப் பங்களிப்பாற்றும் ஏறத்தாழ அனைவரையுமே எங்கள் திரள் என ஆக்கிக் கொண்டிருக்கிறோம். வெளியே இத்தரத்தில் அதிகம்பேரை நீங்கள் பார்க்கமுடியாது. வெளியே பேசும்குரல்களென தெரியவருபவர்கள் மிகப்பெரும்பாலும் ஏதேனும் அரசியல் நம்பிக்கை சார்ந்து திரண்டவர்களாகவே இருப்பார்கள். கூட்டுக்குரல்களே அவ்வாறு ஒலிக்கின்றன, தனிமனிதக்குரல்கள் மிகமிக அரிது.
என்னை சூழ்ந்திருப்போர் எவருக்கும் உலகியல் சார்ந்து எதையும் நான் அளிப்பதில்லை. அவர்களிடமிருந்து நேரமும் பொருளும் பெறவே செய்கிறேன். அளிப்பது நான் கொண்டிருக்கும் இலட்சியவாதத்தை மட்டுமே. அந்த நம்பிக்கையை மட்டுமே.
இலட்சியவாதம் மீதுதான் எல்லாக் காலகட்டத்திலும் ஆழமான அவநம்பிக்கை மனிதனிடம் இருக்கிறது. ஏனென்றால் உலகியல் சார்ந்தே அன்றாட வாழ்க்கை உள்ளது. சமூகமதிப்பு உள்ளது. லட்சியவாதம் அதற்கு எதிரானது.
அந்த அவநம்பிக்கையுடன் வருபவர்களே அனைவரும். அவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். பலகோணங்களில் பரிசீலிப்பார்கள். எப்படியேனும் இலட்சியவாதத்தைப் பொய்யென்றாக்கிவிடவேண்டும் என்றே அவர்களின் அகம் ஏங்கும். அதையும் மீறி ஆணித்தரமான நம்பிக்கை உருவான பின்னரே அவர்கள் இலட்சியவாதத்தை ஏற்கிறார்கள்.
அப்படி வந்தவர்கள்தான் என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே. அவ்வண்ணம் கூர்ந்து நோக்கி, ஐயப்பட்டு, மெல்லமெல்ல ஏற்று ஓர் அமைப்பென ஆனவர்கள் நாங்கள். சென்ற பதிநான்கு ஆண்டுகளாக ஏறத்தாழ அனைவருமே அதே தீவிரத்துடன், அதே நம்பிக்கையுடன் இருந்துகொண்டிருக்கிறோம். மேலும் மேலும் புதியவர்கள் வந்து சேர விரிந்துகொண்டும் இருக்கிறோம்.
காரணம் நான் முன்வைக்கும் அந்தச் சமரசமின்மை. அதன் மூலம் முன்வைக்கப்படும் மதிப்பீடுகள். மனிதர்கள் எப்போதும் இன்னொரு மனிதனையே நம்புகிறார்கள். வெறும் கொள்கைகளையோ தத்துவங்களையோ அல்ல. ஒருவனால் மெய்யாகவே முன்வைக்கப்படும்போது மட்டுமே கொள்கையும் தத்துவமும் இன்னொரு மனிதனால் ஏற்கப்படுகிறது.
*
அத்தகைய முழுமையான சமரசமின்மை சாத்தியமா? ஆம், அதற்கான வழி ஒன்றே. எதைச் செய்கிறோமோ அதில் உச்சமாக ஆதல். ஒரு துறையின் முதன்மை நிபுணர் எவ்வகையிலும் எவர் முன்னாலும் சமரசம் செய்துகொள்ளவேண்டியதில்லை என்பதை உங்கள் தொழிலை கொஞ்சம் கவனித்தாலே தெரிந்துகொள்ளலாம்.
சமரசம் தேவைப்படுவது, நமது போதாமைகள் மற்றும் பலவீனங்களால்தான். எந்த அளவுக்கு போதாமையும் பலவீனமும் இருக்கிறதோ அந்த அளவுக்குச் சமரசம் தேவையாகிறது.
ஒரு துறையின் முதன்மைத் திறன் கொண்ட ஒருவரின் சமரசமின்மை என்பது அவருடைய மேலதிகக் குணமாகவே உண்மையில் கருதப்படுகிறது. சொல்லப்போனால் அவர் திமிருடன் இருப்பதேகூட ஏற்கப்படுகிறது. பலசமயம் அந்த திமிரை விரும்பவும் செய்கிறார்கள்.
நான் என் தொழிலில். சினிமாவில், நுழைந்து 18 ஆண்டுகள் ஆகின்றன. என்னுடன் சினிமாவில் நுழைந்த பலர் இன்றில்லை. நான் புகழ்பெற்ற எழுத்தாளனாக, என் நண்பர் லோகிததாஸால் வலுக்கட்டாயமாக இழுத்து சினிமாவுக்கு கொண்டு செல்லப்பட்டேன். என் நண்பர்கள் சுகா, வசந்தபாலனால் அடுத்தடுத்த படங்கள் வந்தன. நான் இன்றுவரை எவரையும் தேடிச்செல்லவில்லை.
இந்த பதினெட்டு ஆண்டுகளில், ஒருவர்கூட ஒரு பைசா கூட எனக்கு பணம் பாக்கி வைத்ததில்லை. நின்றுவிட்ட படத்துக்குக் கூட பணம் தந்திருக்கிறார்கள். நான் எழுதியதை எடுக்காதபோதுகூட பேசிய பணத்தை அளித்திருக்கிறார்கள்.
காரணம் நான் எங்கும் வளைவதில்லை என்பது. அது உருவாக்கும் ஆளுமைச்சித்திரம். இன்றுவரை முதன்மை மதிப்பு இல்லாமல் எங்கும் எவரிடமும் பணியாற்றியதில்லை. வாசல்வரை வந்து வரவேற்காத எவரையும் பார்த்ததில்லை.
ஏனென்றால், நான் ஒரு தனிமனிதனாக தனிப்பட்ட பலவீனங்களே இல்லாதவன். சினிமாவில் அதற்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு. அத்துடன் ஓர் எழுத்தாளனாக நான் பொதுவாக எதிர்பார்க்கப்படும் அளவுகோல்களுக்கும் பலமடங்கு மேல் பங்களிப்பாற்றுபவன். ஒரு படத்தை முழுமையாக எழுதி, முழுமையான ஆராய்ச்சிச் செய்திகளுடன் அளிப்பேன். எனக்குரிய ஊதியத்துடன் என்னை அமர்த்தும் இயக்குநர் நேரடியாகவே படப்பிடிப்புக்குச் செல்லமுடியும்.
அந்த இரண்டுமே மதிப்பை, நிமிர்வை உருவாக்குகின்றன. தமிழில் இதுவரை எழுதிய எழுத்தாளர்களில் எல்லாவகையிலும் முதலிடத்திலேயே இருக்கிறேன் என சினிமாத்துறையினர் அறிவார்கள். அது பங்களிப்பின் விளைவாக மட்டுமல்ல, நிமிர்வின் வழியாகவும் அடைந்தது. வெளிப்படையாகச் சொன்னால் நிமிர்வே ஊதியத்தையும் வரையறை செய்கிறது.
*
ஆனால், இத்தனை ஆண்டுகளில் வேறுசில சமரசங்களை அடைந்துகொண்டிருக்கிறேன். அது என் ஆளுமையில் இயல்பாக உருவாகி வருகிறது.
முதலில் பிறரது தனிமனித பலவீனங்கள், குணக்கேடுகள் முன்பு போல எரிச்சலை அளிப்பதில்லை. உடனடியாக சில சமயம் எதிர்வினை ஆற்றினாலும் மனிதர்கள் எவர் மீதும் நீடிக்கும் ஒவ்வாமை என ஏதுமில்லை. முன்பு ஒழுக்கம் ஓர் அளவுகோலாக இருந்தது. இன்று அதெல்லாம் ஒரு விஷயமே அல்ல என நினைக்கிறேன்.
ஆகவே எவராயினும் ஏற்பதற்கு இன்று எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அது என் நண்பர்கள் பலருக்குச் சில சமயம் திகைப்பை அளிக்கிறது என தெரியும். ஆனால் எதுவும் அவ்வளவெல்லாம் பெரிய விஷயம் அல்ல என்னும் உளநிலை நோக்கிச் செல்கிறேன்.
அதேபோல, இலக்கிய மதிப்பீடுகள். முன்பு திறனற்ற அல்லது மேலோட்டமான எழுத்துக்கள் மேல் ஓர் ஒவ்வாமையை அடைவேன். போலி எழுத்துக்கள் எரிச்சலூட்டும். இலக்கிய அளவுகோல்களில் சமரசமே இல்லாமல் இருக்கவேண்டும் என்றும், கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டும் என்றும் உறுதி கொண்டிருந்தேன்.
இன்று அப்படி அல்ல. இந்த வாழ்க்கையில், தமிழ்ச்சூழலில், ஏதாவது கலை, இலக்கியம் மற்றும் அறிவுச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பற்பல பல்லாயிரங்களில் ஒருவர் என அறிந்திருக்கிறேன். ஆகவே எல்லா செயல்பாடுகளுமே நல்லவைதான், உயர்ந்தவைதான், செயலாற்றும் எல்லாருமே எனக்கு வேண்டியவர்கள்தான்.
கலையில், சிந்தனையில் கொஞ்சம் தர வேறுபாடு இருக்கலாம். அந்த வேறுபாட்டை மழுங்கடிக்கவேண்டியதில்லை. அதை முன்வைக்கலாம். ஆனால் எதிர்ப்பதும், நிராகரிப்பதும், எரிச்சல்கொள்வதும் தேவையற்றவை என்று தோன்றுகிறது. ஏதேனும் ஒருவகையில் பங்களிப்பாற்றிய எல்லாரையுமே அரவணைக்கவே நினைக்கிறேன்.
அதை இப்போது எல்லாரையும் தழுவிக் கொள்கிறேன், எல்லாரையும் பாராட்டுகிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். இருக்கட்டும், அது என்னுடைய இன்றைய மனநிலை, அவ்வளவுதான்.
*
நம் சமூகத்தில் பல்லாயிரம் பேரில் ஒருவர்தான் ஏதேனும் தளத்தில் தனித்திறனும், அதை மேம்படுத்திக்கொள்ளும் சலியா உழைப்பும் கொண்டவர். அவர் அடையும் வெற்றிகளை மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் போதாமையால், தங்கள் பலவீனங்களால் தொடர்ச்சியாகச் சமரசங்கள் செய்துகொண்டு வாழ்பவர்கள்.
ஆகவே அவர்கள் வெற்றிபெற்றவர்கள் தங்கள் சமரசங்களைப் போல மேலும் சமரசங்கள் செய்துகொண்டவர்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அவர்களால் வேறுவகையில் கற்பனை செய்ய முடியாது. வென்றோர் மற்றும் முதன்மையானவர்களின் சரிவுகளை சாமானியர் உள்ளூர விரும்புகிறார்கள். ஆகவே புகழ்பெற்றவர்களின் சமரசங்கள் மற்றும் சரிவுகளைப் பற்றி வம்புபேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வம்புகள் வழியாகவே சாமானியர் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள முடியும். தங்கள் எளிய வாழ்க்கையை பெரிய மனசோர்வில்லாமல் வாழ்ந்து தீர்க்க முடியும். தங்கள் இருப்பு, தங்கள் வாழ்க்கை பற்றி அவர்களுக்கே இருக்கும் அகக்கூச்சத்தை கடக்கமுடியும்.
எளிய மனிதர்கள் தங்கள் கால்களால், தங்கள் எண்ணங்களால் நிற்கமுடியாதவர்கள். அவர்களுக்கு அமைப்புகளாகத் திரண்டே நிலைகொள்ள முடியும். சாதி, இனம், மதம், கட்சி, கோட்பாடு என பல திரள்கள். அதிலொன்றாக தங்களை உணர்ந்தால் மட்டுமே அவர்களால் தன்னம்பிக்கை கொள்ள முடியும். அவர்களால் நிமிர்ந்து நடந்து வாழ்வைக் கடப்பவர்களைப் புரிந்துகொள்ள முடியாது.
வம்புகள் வசைகள் அவதூறுகள் என எல்லா பொதுவெளியிலும் கொப்பளிப்பவர்கள் அவர்கள்தான். அவர்கள்மேல் அனுதாபமும் பிரியமுமே எனக்கு உள்ளது. பெரும்பாலும் அவர்களை ஒரு புன்னகையுடன் அணுகுகிறேன். வாழ்ந்தாள் முழுக்க க.நா.சு. எளிமையான அமைப்புசார்ந்த மனிதர்களின் அவதூறுகளையும் காழ்ப்புகளையும் ஏளனங்களையும் சந்தித்துக்கொண்டிருந்தார். இன்று அவரைப்பற்றிய அவதூறுகளை எண்ணினால் புன்னகையே எழுகிறது. அவரும் இந்தப் புன்னகையை வந்தடைந்திருந்தார்.
சுருக்கமாகச் சொல்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. சிறுவனாகவே அவருக்கு அது தேவைப்படவில்லை. போராடி மேலே வந்த இளையராஜா போராடும் காலத்திலேயே சமரசம் செய்யத் தெரியாதவர்தான். மணிரத்னமோ, கமல்ஹாசனோ, சச்சின் டெண்டுல்கரோ எவருடன் எதன்பொருட்டு சமரசம் செய்துகொள்ளவேண்டும்?
இலக்கியமாயினும் சினிமாவாயினும் என் களத்தில் நான் முதன்மையானவனாகவே நுழைந்தேன். அவ்வண்ணமே இருப்பேன். பிறர் என்னுடன் போட்டியிடுவதைப் பற்றி கற்பனைசெய்யக்கூட முடியாத தொலைவிலேயே திகழ்வேன். அந்த உச்சத்தை கீழே நிற்பவர்களிடம் எளிதில் விளக்க முடியாது. கீழிருக்கும் எதுவும் அங்கில்லை. சமரசங்கள் மட்டுமல்ல, சஞ்சலங்களும் ஐயங்களும்கூட இல்லை.
கீழிருக்கும் பெரிய மலைகள் எல்லாம் அந்த உயரத்தில் வெறும் கூழாங்கற்கள். நீங்கள் நினைக்கவே மலைக்கும் செயல்களெல்லாம் அங்கே எளிமையானவை. ஆனால் அங்கே வேறு அழுத்தங்கள் உண்டு. கீழிருப்போர் எண்ணிப்பார்க்கமுடியாத தீவிரங்கள் அவை. மிக நுண்மையானவை. அங்கே ஒரு படியில் இருந்து அடுத்த படிக்கு ஏறவேண்டும் என்றால் பல்லாயிரம் காதம் பறக்கவேண்டும்.
அங்கே சென்றபின் கீழிருந்து அடையத்தக்கதாக ஒன்றுமில்லை. பாராட்டுக்கள், விருதுகள், அங்கீகாரங்கள் எவற்றுக்கும் எப்பொருளும் இல்லை. எவருடைய பாராட்டு? நாம் எந்த தளத்தை விட்டு முற்றிலும் விலகிச் சென்றிருக்கிறோமோ அங்கிருந்து ஒரு பாராட்டு வந்து என்ன ஆகப்போகிறது?
நாம் எய்தவேண்டியவை அங்கே அதற்கும் அப்பால் உள்ளன. நாம் அடைந்த உச்சங்களுக்கு அப்பால் அடுத்த உச்சமாக. அடைய அடைய எஞ்சும் ஒன்றாக. அதை நோக்கிச்சென்றுகொண்டே இருப்பதன் பேரின்பத்தை அடைந்தவர்கள் உச்சத்தில் திகழ்பவர்கள். அவர்களின் உளநிலைகளை கீழிருந்து எவரும் அளந்துவிடமுடியாது.
ஆனால் இன்னொன்று உண்டு. அங்கே அவ்வுயரத்தில் சட்டென்று வந்து கவியும் வெறுமை. அனைத்தையும் விட்டுவிடவேண்டும் என எழும் ஒரு வகை அகத்துடிப்பு. அதை வெல்ல வலுக்கட்டாயமாக கீழே வந்தாகவேண்டியிருக்கிறது. இங்கே எதையாவது பற்றிக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.
*
அந்த உயரம் பற்றி நான் உங்களுக்காகச் சொல்லவில்லை. பொதுவாக இதை வாசிக்கும் இளைஞர்களுக்காகச் சொல்கிறேன். அவர்களில் பலர் அந்த உச்சம் நோக்கி வரவிருப்பவர்கள் என்பதனால்.
ஒருவன் வாழ்நாளில் கொள்ளவேண்டிய முதல் ஞானம் என்பது தன்னைவிட அறிவால், செயலால், எய்தியவையால், இயற்றியவையால் முன்சென்ற பெரியவர்களிடம் கொள்ளும் அடக்கம்தான். என்றேனும் அவனும் அத்தகையோன் ஆக அதுவே முதல்படி.
அப்படி ஓர் உயரம் உண்டு என உணரவேண்டும். அதைச் சென்றடைதல் அரிது என அறியவேண்டும். அதை நோக்கி தவமிருக்கவேண்டும். அதற்கு அந்த உயரத்தை அடைந்தவர் மீதான மதிப்பு மிக அடிப்படையானது. எனக்கு அது இருந்தது. நான் தேடித்தேடிச்சென்று அடிபணிந்துகொண்டிருந்தேன்.
அப்படி ஓர் உயரம் இல்லை என்று எண்ணிக்கொள்ளலாம். எல்லாரும் சமம்தான், சாதிப்பவனும் சாமானியனும் ஒன்றுதான் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அப்படி சொல்பவன் ஒருபோதும் உயரமென்ப ஒன்றையும் எய்தப்போவதில்லை. அவன் இருந்த இடத்தை தேய்க்கும் எளியவன், வம்புபேசி வாழ்ந்து தீரவேண்டியவன்.
அந்த அடக்கத்தை இழந்து, உயர்ந்து எழுந்தவர்களை தன் அன்றாடத்தாலும் தன் சிறுமையாலும் அளவிட முயல்பவன் தன் ஞானத்துக்கான முதல் வழிதிறப்பையே மூடிக்கொள்கிறான். எளிய வம்பனாகி, தன்னை மேலும் சிறியோனாக்கிக் கொள்கிறான். உள்ளூர தன் சிறுமையை எண்ணி கூசி, அதை வெல்ல வெளியே மேலும் சிறுமையை கொட்டிக்கொண்டிருக்கிறான்.
சில விஷயங்கள் மிக மிக எளிமையானவை, கண்கூடானவை, வழிமுன் மலை என தூலமாக நின்றிருப்பவை.
*
சரி, அசாதாரணமான திறன்கள் கொண்டவர்கள், செய்துகாட்டியவர்கள் மட்டுமே சமரசம் இன்றி இருக்க முடியுமா? இல்லை. முதன்மையானவர்கள் எந்த இழப்பும் இன்றி சமரசம் இல்லாமல் இருக்க முடியும் என்றே சொல்லவந்தேன். அவர்களின் உலகை பொதுவாக நம் சூழல் அனுமதிக்கிறது. ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் பயனுள்ளவர்கள். வண்டு எல்லா சிலந்திவலையையும் அறுத்துச்செல்லும். சிலந்திவலை இருப்பதையே அது அறியாது.
அவ்வாறல்லாதவர்கள், சற்று குறைவான தனித்திறனும் தீவிரமும் கொண்டவர்கள், சமரசமின்மை கொண்டிருந்தால் அதன் விளைவாக சில இழப்புகளுக்கு ஆளாவார்கள். அவ்விழப்புகளை உற்றார் சுட்டிக்காட்டவும் செய்வார்கள். அவ்விழப்பு குறித்த பிரக்ஞை அவர்களுக்கும் இருந்துகொண்டே இருக்கும்.
ஆனால் சமரசமில்லாமல் இருப்பதன் தன்னிமிர்வு மிகப்பெரிய சொத்து. சிறுமைகளற்றவன் என ஒருவன் தன்னைத்தானே உணர்வது மிகப்பெரிய வெற்றி
ஜெ
முத்தம்பெருமாள், நடிகர் சிம்பு
தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் தொடங்கியபோது எழுந்த பலநூறு ஐயங்களுக்கு விடையாக தமிழ் விக்கியே அமையட்டும் என்று நான் நண்பர்களிடம் சொன்னேன். முத்தம்பெருமாள் கணியன் போன்ற ஒரு கலைஞர் ஏன் முக்கியமானவர், அவர் ஏன் பண்பாட்டு வரலாற்றில் பதிவாகவேண்டியவர் என நாம் பண்பாட்டறிவே இல்லாத பொதுப்புத்தியாளர்களிடம் விளக்கவேண்டிய தேவையே இல்லை. தமிழ் விக்கியிலுள்ள இப்பதிவுக்கு இணையான ஒரு வரலாற்றுப்பதிவு அவருக்கு அமையப்போவதுமில்லை. இனி இங்கிருந்தே அவர் வரலாறு எழுதப்படும்.
(முத்தம்பெருமாளுக்கும் சிம்புவுக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது…)
முத்தம்பெருமாள் கணியான்குமரகுருபரன் விழா- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
ஆனந்த்குமாருக்கு விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியை அளித்தது. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதை அறிந்தேன். வேறெந்த இதழிலும் செய்தி வரவில்லை என்றாலும் உங்கள் தளம் வழியாகவே அறிய முடிந்தது. அது மிகுந்த மனநிறைவை அளித்தது. ஒரு நாள் முழுக்க கவிதை பற்றிய உரையாடல் என்பது இன்றைய சூழலில் மிகப்பெரிய ஒரு நிகழ்வு. அரங்கிலும் மேடையிலும் தமிழின் முக்கியமான இளம் முகங்களை பார்க்க முடிந்தது. வாழ்த்துக்கள்.
எஸ்.ராஜ்குமார்
***
அன்புள்ள ராஜ்குமார்,
நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. வீரான்குட்டி மலையாளக் கவிஞர். மலையாள இலக்கியவாதிகள் ஒரு விழாவில் கலந்துகொண்டால் மலையாள இதழ்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடாமலிருப்பதில்லை. ஆகவே விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா செய்தியை மாத்ருபூமி இதழ் வெளியிட்டிருக்கிறது. மகிழ்ச்சி அளிக்கும் செய்தி அது.
இளம்கவிஞர்கள், இளம் வாசகர்கள் என அரங்கு நிறைந்திருந்தது நாங்கள் செல்லும் பாதை பற்றிய நம்பிக்கையை உருவாக்குகிறது.
ஜெ
நிறைந்து நுரைத்த ஒரு நாள் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது, மதார் அரங்கு குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது வேணுவேட்ராயன் அரங்கு குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார் குமரகுருபரன் விழா, வீரான்குட்டி உரையாடலும் உரையும் குமரகுருபரன் விழா உரைகள்- போகன், ஜெயமோகன்கரசூர் பத்மபாரதி – கடிதமும் பதிலும்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி – தூரன் விருது கரசூர் பத்மபாரதிக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய சூழலில் தமிழில் ஆய்வியக்கத்தை அறிவுக்களத்தில் அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு ஆய்வுக்களம் மலினப்பட்டிருக்கிறது.
என்ன நடந்துகொண்டிருக்கிறது? முதலில் சொல்லப்படவேண்டியது இப்போது யூஜிசி நிபந்தனைக்குப் பிறகு முனைவர் ஆய்வுசெய்தால்தான் கல்லூரி ஆசிரியர் வேலை என ஆகிவிட்டது. ஆகவே எப்படியாவது முனைவர் பட்ட ஆய்வுக்கு முண்டியடிக்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் அதை முடித்தால்தான் வேலை. கல்லூரி ஆசிரியராக முனைவர் பட்ட ஆய்வை நிபந்தனையாக்கியவர்கள் அடிமடையர்கள். பழங்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வெல்லாம் பத்துப்பதினைந்து ஆண்டுகள் செய்தனர். அதுவரை ஒருவன் வேலையில்லாமல் இருக்க முடியுமா? முனைவர் பட்ட ஆய்வைச் செய்தால்தான் வேலை என்றால் அதை ஓரிரு ஆண்டுகளில் ஒப்பேற்றவே எவரும் முனைவார்கள். அதுதான் நடக்கிறது. ஆய்வேடுகள் எல்லாமே ரெடிமேட் தயாரிப்புகள். ஒரு தொழிற்சாலை போல ஆய்வேடுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு பெரிய வணிகமாகவே ஆய்வு நடைபெறுகிறது. இன்று ஆய்வேடுகளில் எவை முக்கியமானவை என்று எவரும் சொல்லமுடியாது. இத்தனை ஆயிரம் ஆய்வேடுகளை எவர் படிக்கமுடியும்?
கல்வித்துறைக்கு வெளியே உள்ள ஆய்வுகளில் முந்தி நிற்பது அரசியல்சார்புநிலைகள்தான். ஏதாவது ஒரு அரசியல் நிலைபாடு எடுத்து அதையொட்டி ஆய்வு செய்யவில்லை என்றால் அந்த ஆய்வேட்டுக்கு வாசகர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் கட்சிநிலைபாடு எடுத்துவிட்டால் ஆய்வேட்டுக்கு வெளியீட்டுக்கூட்டங்களும் வாசகர்கூட்டங்களும் நடைபெறும். விவாதங்களும் கட்டுரைகளும் வெளிவரும்.
மூன்றாவது, ஆய்வேடுகளை ஏற்கனவே பணமும் அதிகாரமும் உள்ளவர்கள் எழுதுவது. பெரும்பாலும் அரசு அதிகாரிகள். அவர்கள் ஓய்வுபெற்றபின் எதையாவது எழுதுகிறார்கள். தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வறிஞர்கள் என்று அவர்களை ஊரே கொண்டாடுகிறது. நம்மூர் மனநிலை அது. திருவுடை மன்னனை திருமாலே என வணங்கியவர்கள்தானே நாமெல்லாம்? அங்கே விமர்சனமே இல்லை. போற்றிப்பாடல்கள் மட்டும்தான்.
இந்த குழப்பங்கள் நடுவே அவ்வப்போது அற்புதமான ஆய்வுகள் வருகின்றன. கள ஆய்வுசெய்து எழுதப்படும் ஆய்வேடுகள் பல உள்ளன. செய்பவர்களின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டால்தான் அவை அப்படி உருவாகின்றன. அவை எங்கும் மதிக்கப்படுவதில்லை. அவற்றுக்கு வாசகர்களே இல்லை. அத்தகைய உண்மையான ஆய்வேடுகளை அறிவுப்புலத்தில் உள்ளவர்கள் கவனிக்கவேண்டும். அது ஆய்வாளர்களுக்கும் ஊக்கமளிக்கும். அறிவுப்புலத்திலும் புதிய வெளிச்சம் வந்து சேரும்.
கரசூர் பத்மபாரதியின் இரண்டு ஆய்வேடுகளுமே அற்புதமானவை. மிக முக்கியமான ஆய்வாளர். அவருக்கு என் வாழ்த்துக்கள். இந்தப்பணி மீண்டும் தொடரட்டும்
எஸ்.தண்டபாணி
அன்புள்ள தண்டபாணி,
நீங்கள் குறிப்பிடும் அந்த இடைவெளி தமிழ் அறிவுலகுக்கும் ஆய்வுலகுக்கும் நடுவே உள்ளது. கரசூர் பத்மபாரதி முற்றிலும் அறியப்படாதவர் அல்ல. நானே அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
ஆனால் இந்த விருது அறிவிப்புக்குப் பின் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பொதுக்களத்தில் ஆய்வாளர்களாக அறியப்படுபவர்கள் எவரிடமிருந்தும் ஒரு கடிதம்கூட வரவில்லை. எவரும் ஒரு சம்பிரதாயமாகக்கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. முற்றிலும் உதாசீனமாகக் கடந்து செல்கிறார்கள்.
ஆச்சரியமென்னவென்றால் என்னுடைய வழக்கமான வாசகர்கள் ஒருவர்கூட ஒரு வரி வாழ்த்துக்கடிதம்கூட அனுப்பவில்லை. ஒரே ஒரு எதிர்வினைகூட வரவில்லை. முழுமையான மௌனம். கடிதங்கள் எல்லாமே எப்படியோ கல்வித்துறை சார்ந்தாவ்ர்களிடமிருந்துதான்.
இந்த அலட்சியமும் புறக்கணிப்பும் நம் சூழலிலுள்ள மாபெரும் நோய்க்கூறு ஒன்றின் சான்று. நம் அறிவுக்களம் எந்த அளவுக்கு தேக்கம்கொண்டு, தன்னைத்தானே நக்கிக்கொண்டு, வம்பளந்துகொண்டு சுழன்றுகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவது
ஜெ
கடலின் எடை- கடலூர் சீனு
ஆழ்கடல் குருட்டு மீன்
சுமந்தலைகிறது
மொத்தக் கடலின் பாரத்தையும்.
இளங்கோ கிருஷ்ணன்.
குமரகுருபரன் விழாவில் கவி இளங்கோ கிருஷ்ணன் திடீர் என என் முன் தோன்றி என் கரங்களைப் பற்றிக்கொண்டு என்னை திகைக்க வைத்தார். அவரிடம் என்னென்னவோ பேச நினைத்திருந்தேன். ஆனால் அது தருணம் அல்ல. அவரது -வியனுலகு வதியும் பெருமலர்- தொகுப்பு அளித்த கொந்தளிப்பு இன்னும் என்னை விட்டு நீங்க வில்லை. அதே கொந்தளிப்போடுதான் அவருடன் பேச இயலும். அது இனிய உரையாடலாக அமைய இயலாது. ஆகவே வெறுமனே புன்னகைத்தபடி தலையை தலையை ஆட்டியபடி சும்மா நின்றிருந்தேன்.
தமிழின் மிக தனித்துவமான பல கவிதைகள் அடங்கிய தொகுப்பு வியனுலகு வதியும் பெருமலர். என்னைக் கொந்தளிக்கச் செய்த, குருட்டு மீன், விஷ பட்டாம்பூச்சி போன்ற பல பல படிமங்களும் குறிப்பாக அரசியல் கவிதைகளும் கொண்டது.
தமிழின் அரசியல் கவிதைகள் மீதோ அத்தகு கவிதைகள் எழுதுவோர் மீதோ எனக்கு என்றுமே பெரிய மதிப்பு இருந்ததில்லை. (விதி விலக்கு இளங்கோ கிருஷ்ணன் மட்டுமே) காரணம் தமிழில் எவருக்கு எல்லாம் கவிதைக் கலை என்பதன் அரிச்சுவடி கூட தெரியாதோ அவர்கள் கையில் மட்டுமே அவர்களின் சொந்த அரிப்பை சொறிந்து கொடுக்கும் குச்சியாக மட்டுமே வேலை செய்து கொண்டிருக்கிறது அரசியல் கவிதை.
இத்தொகுப்பில் எழுவது கவிஞனின் அவன் அகம் பொங்கும் நீதியில் இருந்து எழும் கவிதைகள். குறிப்பாக தூத்துக்குடி கவிதைகள். தூத்துக்குடியில் சுடப்பட்ட அனைவரும் பிறப்பித்து பிறப்பித்து மீண்டும் மீண்டும் கொல்லப்பட வேண்டிய கொடும் தேச விரோதிகள் என்றேதான் ஆகட்டுமே, ஆனால் அவர்கள் தண்டிக்கப்பட்ட விதம், ஜனநாயகத்தை நம்பி வாழும் ஒரு சாமானியன் முகத்தில் காரி உமிழும் வகையினதானது. விஷவாயுவை திறந்து விட்டு போப்பாலில் உயிர்களை காவு வாங்கிய வெண் தோல் வேந்தன் மீது தூசி கூட பட வில்லை, பாபர் கும்மட்டம் இடிப்பு விவகாரத்தில் குற்றவாளிகள் என எவருமே இல்லை, முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைதானவர் இரட்டை ஆயுள் முடிந்துவந்து முதல்வரை கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கிறார். இதே தேசத்தில் இவர்கள் செய்த குற்றம் என்ன என்றே பொது மக்களுக்கு தெரியாது, அந்த பொது மக்கள் மத்தியில் வைத்து, பொது வெளியில் முன்னர் வெறி நாய்களை அடித்து கொல்லுவார்களே அப்படி கொல்லப் பட்டார்கள். (அப்படி சுட உத்தரவு அளித்தவர் யார் என்று இப்போதுவரை யாருக்கும் தெரியாது) இது நியாயமா என்று கேட்க ஓட்டுக்கு துட்டு வாங்கி, சாதிக்கு ஓட்டு போடும் சிவிலியன் எவருக்கும் இங்கே உரிமை இல்லை. ஜனநாயக விழுமியங்களை தத்தமது மனசாட்சியை வாய்க்கரிசி என்று போட்டு புதைத்து விட்டு புழுக்கள் போல வாழும் எவருக்கும் இங்கே கேள்வி கேட்கும் உரிமை இல்லை. இந்த வெற்றிடத்தில் இருந்து எழும் கவிஞனின் நீதியின் பாற்பட்ட குரலே இளங்கோவினுடையது.
ஐந்து பகுதிகளாக அமைந்த இந்த தொகுப்பில் பசியின் கதை பகுதியும் மரணத்தின் பாடல்கள் பகுதியும் என்னை இப்போது நினைக்கும்போதும் தொந்தரவு செய்வது. குறிப்பாக மரணத்தின் பாடல் பகுதியில் வரும் அன்னை இட்ட தீ கவிதையும் யம கதை கவிதையும்.
பசியின் கதை பகுதியில் கவிதை பேசும் ஒவ்வொரு பசியையும் ஒவ்வொரு தனித் தழல் என்று கொண்டால், பகுதியை ஒட்டுமொத்தமாக பார்க்கையில் எழுவது உடலங்களை உண்டு பசியால் நின்றெறியும் ஒரு வடவைத் தீ.
இப்போது எழுதுகையில் கூட உணர்வுகள் கொந்தளிக்கிரது. காரணம் தொகுப்பின் பல கவிதைகள் அதன் உணர்வு நிலைகள் துல்லியமாக (மரணம், பசி,இயற்கை போல) உடல், புறம், எனும் களத்தில் கட்டப்பட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவற்றுக்கு வெளியே அந்தரங்கமாக இந்த தொகுப்பின் இரண்டு கவிதைகள் என் நிகர் வாழ்வின் உடைவு தருணத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவை என்பதும் பிறிதொரு காரணம்.
இப்படித்தான்
நான்கு நீரிழிவு மாத்திரைகளால் ஆனது
அவனின் ஒரு நாள்
ஆரஞ்சு வண்ண மாத்திரையைப் பிரிக்கும்போது சூரியன் சடவு முறிக்கும்
மஞ்சளைப் பார்த்ததும்
உச்சிக்குப் போய்விடும்
சிவப்பில் கொஞ்சம்
ஆசுவாசம் போல் ஒன்றிருக்கும்
கருநீல வண்ண மாத்திரையை
ஒரு நாள் பிரிக்கும்போது கட்டிலுக்கடியில் உருண்டோடிவிட்டது
இப்படித்தான்
இருண்டது ஒரு மரணம்.
அன்றைய இரவுக்கான மாத்திரை கைநழுவிய போதுதான் அப்பா மாத்திரைகளைக் கொண்டு இந்த உயிரைப் பொத்தி வைக்கும் இழிநிலை வந்ததை எண்ணி வருந்தினார். ஒரு சொல்லும் உரைக்காத மௌனம் பூண்டார். மாத்திரை மருந்துகளை கைவிட்டார். போய்ச் சேர்ந்தார்.
அப்பாவின் காதல் மனைவி. என் அம்மா தன் காதலனோடு போய்சேர ஒரு மனமும், தங்கள் காதலின் விளை கனியான பிள்ளைகளை விட்டு போக முடியாததொரு மனமும் என சித்தம் பேதலித்தார்.
அவர் உள நோய் சிகிச்சைக்கான அறைக்கு வெளியே நான் இவ்வாறுதான் காத்திருந்தேன். இக்கவிதை வழியே இப்போது அறிகிறேன் அந்த அறைக்குள்ளே அம்மாவும் இப்படித்தான் காத்துக்கொண்டிருந்திருப்பார்.
அம்மா வந்துவிடு
கொட்டித் தீர்க்கிறது பேய் மழை
எங்கும் மென்னிருள் விரைவில் அடரக்கூடும்
நடுவழியில் அந்தகாரத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே இடியிறங்கிய மரம் பற்றி எரிகிறது.
இந்தப் பாழடைந்த மண்டபமோ காற்றில் கூகூவெனக் கதறுகிறது.
நெடுவழித் தனியனுக்கு யாருமில்லை.
இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது.
அம்மா வந்துவிடு.
தொகுப்பின் முழுமையும் ஆழ் பிரதியாக நிறைவது கவி மனம் இறைஞ்சும் கருணைக்கான ஏக்கம். புத்தனால் ஏசுவால் மட்டுமே அளிக்க இயன்ற கருணை. வியனுலகு வதியும் பெருமலர் என்றான கருணை. தொகுப்பின் பிற கவிதைகள் குறித்து, அதன் மொழியழகு தத்துவ நோக்கு இவை குறித்தெல்லாம் விரிவாக என்றேனும் எழுத வேண்டும். பார்க்கலாம்.
தொகுப்பின் சில கவிதைகள்.
இப்படித்தான்
கைப்பிடி மண்ணில்
சிறு விதையைப் புதைத்தேன்
இரண்டே நாளில் துளிர்த்தது
இப்போது அது ஒரு பூமி இப்படித்தான் ஓர் உலகைப் படைக்க வேண்டும்
கைப்பிடி இதயத்தில் ஒரு தீச்சொல்லை விதைத்தேன்
அன்பின் வனத்தையே எரித்தது
இப்போது அது ஒரு பாழ்வெளி
இப்படித்தான் ஓர் உலகை அழிக்க வேண்டும்.
***
பசியின் கதை
முன்பே சொன்னது போல்
பசியின் கதை ஒரு கதை அல்ல
ஒரு நெருப்புத் துண்டு
ஒரு மலை உச்சி
கைகள் பிணைக்கப்பட்ட ஒரு மனிதன்
ஒரு கழுகு
என்றொரு கதை
ஓர் இளம் பிச்சி
ஓர் அரசகுமாரன்
ஓர் அட்சயப்பாத்திரம்
என்றொரு கதை
ஒரு நூலகம்
ஒரு தாடிக்காரன்
சில புரட்சிகள்
பல்லாயிரம் படுகொலைகள்
என்றொரு கதை
ஓர் அன்ன சாலை
ஓர் அணையா நெருப்பு ஒரு முக்காடிட்ட துறவி
ஒரு ஜோதியில் ஐக்கியமான கதை
முன்பே சொன்னது போல் பசியின் கதை
ஒரு கதை அல்ல
முன்பே சொன்னது போல்
அது ஒன்றுக்கு மேலுமல்ல.
***
யம கதை
யமன் சொன்னது:
வெறிகொண்ட ஆண் மந்தி
பலாக் காய்களைப் பிய்த்தெறிகிறது.
சடசடவென குளத்தில் இறங்கி நீர்ப் பாம்புகளைப் பிடித்து படார் படாரெனத் தரையில் அறைந்து கொல்கிறது
மரக்கிளைகளை முறித்து புலிக்குறளைகள் மீது வீசுகிறது
மண் வாரித் தூற்றி அரற்றுகிறது
அதோ
அங்கு ஒரு குட்டிக் குரங்கு
நீலம் பாரித்து
வாய்ப்பிளந்து மரித்திருக்கிறது
நசிகேத!
கடலூர் சீனு
தமிழ் விக்கி- தூரன் விருது- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி தூரன் விருது கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அன்னாருடைய இரண்டு ஆய்வேடுகளின் நூல்வடிவங்களும் மிக நேர்த்தியானவை. மிகச்சிறப்பான முறையில் எழுதப்பட்டவை. தமிழ்ச்சமூகம் காணமறந்த இருண்ட உலகங்களை ஆய்வுகள் எப்படி வெளிக்கொண்டுவர முடியும் என்று காட்டியவை. மிகுந்த அர்ப்பணிப்புடனும் கல்வியியல் ஒழுக்கத்துடனும் கரசூர் பத்மபாரதி இந்தப்பெரும்பணியைச் செய்துள்ளார்.
கல்வித்துறை ஆய்வுகளைப் பொறுத்தவரை அவற்றில் ஆய்வேடு ஏற்கப்பட்டுள்ளதா என்பதே அளவீடு. மற்றபடி ஆய்வின் தரம் பற்றிய அகவய அளவுகோல்கள் இல்லை. ஆனால் முன்பெல்லாம் உரைகள், உரையாடல்கள் வழியாக தகுதியான ஆய்வேடுகள் அறிஞர்களால் முன்னுக்குக் கொணரப்படும். இப்போது அது நிகழ்வதில்லை. அந்தப் பெரும்பணியை தமிழ் விக்கி அமைப்பு செய்து வருகின்றது என்று நினைக்கிறேன். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
கி.கிருஷ்ணசாமி
அன்புள்ள ஜெ.
கரசூர் பத்மபாரதியின் நரிகுறவர் இனவரைவியல், திருநங்கையர் இருநூல்களையும் வாசித்திருக்கிறேன். நல்ல நாவல்கள் அளவுக்கே அகஎழுச்சி அளிக்கக்கூடிய வாழ்க்கைச்சித்திரங்களாக அவை இருந்தன. அவற்றிலுள்ள தரவுகளும், அவற்றைச் சீராகத் தொகுத்து அளித்திருக்கும் முறையும் பிரமிக்கச் செய்தன. மாற்கு எழுதிய அருந்ததியர் வாழும் முறை என்ற நூல் மட்டுமே இந்நூல்களுக்குச் சமானமானதாகச் சொல்லத் தக்கது.
கரசூர் பத்மபாரதி போன்ற ஓர் ஆய்வாளருக்கு தமிழகத்தில் நல்ல ஓர் ஆசிரியர் பணிகூட அமையவில்லை, ஆரம்பப்பள்ளிஆசிரியையாகப் பணியாற்றி இப்போது சும்மாவே இருக்கிறார் என்பது நம் கல்வித்துறையின் சீரழிவை, நம் ஆய்வு அமைப்புகளின் தரக்குறைவை காட்டும் செய்தி
கணபதி சுப்ரமணியம்
June 20, 2022
செயலும் ஒழுங்கும்
சமீபத்தில் ஹாருகி முரகாமியின் தினசரி அட்டவணையைப் பின்பற்றி அதன் படியே நடக்க முயற்சித்து ஒரு பெண் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்ததை யூ-ட்யூப்பில் பார்த்தேன். முரகாமியின் தினசரி என்பது அதிகாலை 4 மணிக்கு எழுவது, 10 கி.மீ ஓடுதல் அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு நீச்சல் பயிற்சி, 4-5 மணிநேரம் எழுதுதல், படித்தல், இசை கேட்பது, மிகச்சரியாக 9 மணிக்கு உறங்க செல்வது. இத்தனை கடுமையாக ஒரு தினசரி அட்டவணையை எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டியதுள்ளதா…
இதனை யோசிக்கும் போது எனக்கு எனக்கு உங்கள் ஞாபகம் தான் வந்தது. உங்களது பணி குறித்து அனைவருமே அறிவோம். எந்த வேலைக்கு இடையிலும் உங்கள் பணி தொய்வுற்றதே இல்லை. இப்போதைக்கு கூட தமிழ் விக்கிக்கு நீங்கள் அளித்து வரும் பங்களிப்பு குறித்து கேள்விப்படும் போது வியப்பே மேலிடுகிறது. உங்கள் நாளை எப்படி திட்டமிட்டுக் கொள்கிறீர்கள் என்பதே நான் கேட்க விரும்புகிற கேள்வி.
குறள் பிரபாகரன்
அன்புள்ள பிரபாகரன்,
அப்படி ஓர் அட்டவணையைப் போட்டு வாழவேண்டியதில்லை. படைப்பூக்கத்துடன் செயல்படும் எவருக்கும் அப்படி அட்டவணைப்படி வாழ்வது கடினம். அட்டவணையில் ஒரு சலிப்பூட்டும் அம்சம் உள்ளது. இன்று என்ன செய்யப்போகிறோம் என முன்னரே நமக்கு தெரியாமல் இருக்கையில் ஒரு கொண்டாட்டம் வாழ்க்கையில் உள்ளது.
ஆனால் விரும்பிச் செய்வதை விடாப்பிடியாக தொடர்வது என்பது அவசியம். அதற்கேற்ப செயல்களை வகுத்துக் கொண்டாகவேண்டும். அதற்கு செய்யக்கூடாதவற்றைச் செய்யலாகாது.
உதாரணமாக, நான் நேரவிரயம் செய்யும் எதையும் செய்வதில்லை. சமூகவலைத்தளங்கள், தொலைக்காட்சி இரண்டையும் தவிர்த்துவிடுகிறேன். விழித்திருக்கும் நேரம் முழுக்க தீவிரமாக வேலைசெய்தாக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறேன். நாம் செய்யக்கூடுவது அதைத்தான்.
இந்த அமெரிக்கப் பயணத்தில் மொத்தம் 6800 கிலோமீட்டர் தொலைவை 13 நாட்களில் கடந்தோம். ஒருநாளில் ஐந்து அல்லது ஆறுமணிநேரம் மட்டுமே தூக்கம். ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சமாவது விக்கி தமிழ் பணியைச் செய்தாகவேண்டும் என எனக்கே ஆணையிட்டுக்கொண்டேன். செய்ய முடிந்தது.
ஒவ்வொரு நாளும் என் உள்ளத்துக்கு உகந்த பணியை செய்யும் ஊக்கத்துடன் கண்விழிக்கவேண்டும் என்பதை நான் நெறியாகக் கொண்டிருக்கிறேன். சோம்பலால் எதையும் ஒத்திப்போடலாகாது.
எதையும் அரைகுறையாக விட்டுவிடலாகாது என்பதை அடுத்த நெறியாகக் கொண்டிருக்கிறேன். முடிந்தவரை எடுத்த காரியத்தை முடித்தாகவேண்டும் என எனக்கே ஆணையிட்டுக் கொள்கிறேன்.
எதிர்மறைச் செயல்பாடுகளில் ஆற்றலை வீணடிக்கலாகாது என்பது என்னுடைய மூன்றாவது தன்னெறி. நான் எவருக்கும் எதிராக எதையும் செய்வதில்லை. எவர் செயலிலும் தலையிடுவதில்லை. எவர் செயலையும் திருத்தவோ மாற்றவோ முயல்வதில்லை. எனக்குரியதென நான் தெரிவுசெய்துகொண்ட செயலை முழுவீச்சுடன் செய்வதே என் வேலை.
அதில் பிறர் தடைசெய்தால் அத்தடையை கடப்பது மட்டுமே நான் செய்வது. ஒருபோதும் தடை செய்தவர்களை எதிரிகளாக எண்ணுவதில்லை. அவர்களுடன் நட்புகொள்ள முடிந்தால் அதையே செய்வேன். எவரும் எனக்கு எதிரி அல்ல. நான் தவிர்ப்பவர்கள் உண்டு. அவர்களுக்காக நான் நேரமும் உள்ளமும் செலவிட முடியாதென்பதே காரணம். எதிரி என்றால் அவருக்காக நேரமும் உழைப்பும் அளிக்கவேண்டும். அவ்வண்ணம் எவருக்கும் அரை மணிநேரம்கூட அளிப்பதில்லை. எதிரிகள் எனக்கு கட்டுப்படியாகாது என்பதே என் அனுபவம்.
விவாதங்களில் ஈடுபடுவதுண்டு. அது நானே தெரிவு செய்யும் விவாதம். என்னை எவரும் விவாதத்திற்கு இழுக்க அனுமதிப்பதில்லை. நான் ஒரு விவாதத்தில் சொல்லவேண்டியவற்றைச் சொல்லிவிட்டதும் முழுமையாக பின்வாங்கிவிடுவேன். பொருட்படுத்தத் தக்கவற்றை மட்டுமே படிப்பேன். அல்லவற்றை ஒரு வரிக்குமேல் படிக்கவே மாட்டேன்.
இந்நெறிகள் எனக்களிக்கும் சுதந்திரம், எனக்களிக்கும் நேரம் அத்தனை அற்புதமானது. என் தொடர்செயல்பாட்டின் ரகசியம் என்ன என்றால் இதுதான். நேர்நிலையாக இருப்பது. பெரும் திட்டங்களுடன் இருப்பது. நம்பிக்கையை கைவிடாமலிருப்பது. நான் ஆற்றவேண்டியதை ஆற்றியதும் அப்படியே விலகி அடுத்ததற்குச் செல்வது. பிறர் பற்றிக் கவலையே கொள்ளாமலிருப்பது.
ஜெ
சுஜாதா – சர்ச்சைகள்
அன்புள்ள ஜெ,
நான் தமிழ் விக்கியை குறுக்கும் நெடுக்குமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் உங்கள் தளம் வழியாக பாவலர் ச.பாலசுந்தரம் பக்கத்துக்குச் சென்றேன். அவருடைய இலக்கணப் பணிகளை வாசித்தேன். அதன்பின் அவர் மகன் பா.மதிவாணன் பக்கத்துக்குச் சென்றேன். அங்கே அவர் எழுத்தாளர் சுஜாதாவை விமர்சனம் செய்து ஒரு புத்தகமே எழுதியிருப்பது தெரிந்தது.
அங்கிருந்து சுஜாதா பக்கம் போனேன். அங்கிருந்து சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் ஆகிய நாவல்களுக்கான பக்கங்களுக்கும், அந்த தொடர்கதை வழியாக உருவான சர்ச்சைகளையும் வாசித்தேன். அந்தக்கால ஓவியங்களுடன் அரிய பதிவுகள்
ஒரு முழுநாவலை வாசித்த பிரமிப்பு உருவாகியது. நன்றி
பாலபாஸ்கர். எம்.ஆர்
சுஜாதா
சுஜாதா
ஜெகசிற்பியன், லா.ச.ரா – கடிதங்கள்
ஜெகசிற்பியன் – தமிழ் விக்கி
ஜெகசிற்பியன்
அன்புள்ள ஜெமோ
நன்றி.
நான் இளவயதில் ஆலவாயழகன், பத்தினிக்கோட்டம் எல்லாம் படித்திருக்கிறேன். ஆலவாயழகனின் மொழி அந்த வயதில் ஒருமாதிரி ஒரு கிறுகிறுப்பை அளிப்பதாகவே இருந்தது.
இப்போது உங்கள் ஜெகசிற்பியன் இணைப்பு வழியாக போய் நகுபோலியன் எழுதிய மழநாட்டு மகுடம் வாசித்தபோது வரிக்கு வரி சிரிப்புதான் வந்தது.
நன்றி. ஒரு நல்ல வாசிப்பனுபவம்
ஆர். எஸ்.ராகவன்
***
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நான் உண்மையாகவே கேட்கிறேன். ஆலவாயழகனின் மொழியை கிண்டல் செய்யும் நகுபோலியன் லா.ச.ராமாமிருதத்தின் மொழி பற்றி என்ன சொன்னார்? இரண்டுமே flowery and futile நடைதான். Juvenile காலகட்டத்தில் ஒருவர் ஆலவாயழகனை வாசித்து கொஞ்சம் உணர்ச்சிவசப்படலாம். ஐம்பது அறுபது வயதிலும் லா.ச.ரா படித்து உச் உச் அடாடா கொட்டுவதை எதில் சேர்ப்பது?
முருகவாணன்
லா.ச. ராமாமிர்தம்
லா.ச.ரா – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


