Jeyamohan's Blog, page 755
June 30, 2022
வல்லினம் கதைகள்
அன்புள்ள ஜெ
வல்லினம் இதழில் சுசித்ரா மொழியாக்கம் செய்த மேலங்கி என்னும் ஐசக் டினேசனின் சிறுகதை வாசித்தேன். மிகச்சிறப்பான கதை. ஒரு பழைய தொன்மம்போலவே தெரிகிறது. கதையா இல்லை ஒரு பழங்கனவா என்று தெரியாதபடி அமைந்துள்ளது. இந்தவகையான கதைகள்தான் பல்வேறு உத்திகள் கொண்ட புதியகதைகளை போல அல்லாமல் காலம்கடந்து நிற்கின்றன என நினைக்கிறேன்.
ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் இசக்கி என்றகதையும் அந்த மனநிலை நோக்கிச் செல்லமுயலும் கதையாகத் தோன்றியது. பொதுவாகவே வல்லினம் இதழின் எல்லா படைப்புக்களுமே சிறப்பாக இருந்தன. சிகண்டி பற்றி இளம்பூரணன் கட்டுரை ரம்யாவின் மெக்தலீன் எல்லாமே சிறப்பான கதைகளாக தெரிந்தன.
அருண் ராஜ்குமார்
June 29, 2022
இலக்கியமும் சமூகமும்
ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது?
தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள்
உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா? நம் பாட்டி சாப்பிட்ட உணவுகூட நம் உடலில் ஓடும் இல்லையா?
எது சரி எது தப்பு என நாம் எப்படி முடிவு செய்கிறோம்? எதைக்கேட்டதும் மனம் நெகிழ்கிறோம்? எதைக்கேட்டதும் கடுமையான கோபம் கொள்கிறோம்? யோசித்திருக்கிறீர்களா? அவற்றை எல்லாம் தீர்மானிக்கும் சில விதிகள் நமக்குள் உள்ளன. அவை நம்பிக்கைகளாகவும் உணர்ச்சிகளாகவும் உள்ளன. அதைத்தான் விழுமியங்கள் என்கிறோம்.
அந்த விழுமியங்களை நம் அன்னையும் தந்தையும் சிறுவயதில் கதைகளாகத்தான் நமக்குச் சொல்லியிருப்பார்கள். அந்தக் கதைகள் எல்லாமே நம்முடைய இலக்கியத்தில் இருந்து வந்தவையாக இருக்கும். நாம் நேரடியாக இலக்கியத்தை வாசிக்காமல் இருந்தாலும் இலக்கியம் நமக்குள் வந்து சேர்வது இப்படித்தான்.
மலையாள திரைப்பட எழுத்தாளர் லோகிததாஸ் சொன்னது இது. மகாபாரதம் ராமாயணம் பற்றி பேச்சு வந்தது. நம் நாட்டில் லட்சம் பேரில் ஒருவர் கூட மகாபாரதம் கதையை வாசித்திருக்க மாட்டார்கள் என்றார் ஒரு நண்பர். ஆனால் அத்தனைபேருக்கும் அடிப்படை நம்பிக்கைகளை மகாபாரதம்தான் தீர்மானிக்கும் என்றார் லோகிததாஸ்
சரி பார்த்துவிடுவோம் என்று இருவரும் பந்தயம் கட்டினார்கள். அன்று சாயங்காலத்துக்குள் எத்தனைபேர் ஏதேனும் வழியில் மகாபாரதத்தை குறிப்பிடுகிறார்கள் என்று பார்க்க முடிவெடுத்தனர். மூன்றுபேராவது மகாபாரதத்தைப்பற்றிச் சொல்வார்கள் என்று லோகிததாஸ் பத்தாயிரம் ரூபாய் பந்தயம் கட்டினார்.
அரைமணிநேரத்தில் ஒருவர் ‘ஆளு நல்லா பீமன் மாதிரி இருப்பான்…அதை நம்பி பொண்ணக் குடுத்தோம்’ என்று சொல்லிக்கொண்டு போனார். இன்னொருவர் ‘பெரிய அர்ச்சுன மகாராசான்னு நினைப்பு. மாசம் நூறு ரூபா வருமானமில்ல’ என்று யாரையோ திட்டிக்கொண்டு போனார். கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் ‘எச்சில் தொடாம தின்ன துரியோதனன் ஆன கெதி தெரியும்ல?’ என்றார். பகலுக்குள் பதினேழு முறை மகாபாரதம் காதில் விழுந்தது
நண்பர் அயர்ந்து போனார். இப்படித்தான் இலக்கியம் இங்கே ஒவ்வொருவர் மனதிலும் வாழ்கிறது. ஒருநாளில் கண்ணகியை எத்தனைபேர் எப்படியெல்லாம் குறிப்பிடுகிறார்கள் என்று பாருங்கள். சிலப்பதிகாரத்தை அதிகம்பேர் வாசிக்கவேண்டியதில்லை. சிலப்பதிகாரம் எல்லா மனங்களிலும் வாழும்
இன்னொரு வகையிலும் இலக்கியம் வாழ்கிறது. தூள் என்று ஒரு சினிமா. விக்ரம் நடித்தது. ஒரு ஊரிலே பெரிய அநீதி. அந்த ஊருக்கு புஜபலபராக்ரமியான விக்ரம் வருகிறார். அநீதியை தட்டிக்கேட்கிறார். வில்லனை வீழ்த்துகிறார்
அதேகதை மகாபாரதத்தில் உள்ளது. பீமன் ஓர் ஊருக்கு வருகிறான். அங்கே எல்லாரும் சோகமாக இருக்கிறார்கள். கேட்டால் அங்கே பகாசுரன் என்பவன் தினம் ஒரு இளைஞனை ஒரு வண்டிச் சோற்றுடன் கொன்று தின்றுகொண்டிருக்கிறான். அன்றைக்கு ஓர் அன்னையின் மகன் சோறுடன் உணவாகச் செல்லவேண்டும். அவள் அழுதுகொண்டிருக்கிறாள். குந்தி சொல்கிறாள், பரவாயில்லை என் மகன் செல்லட்டும் என்று
பீமன் வண்டி நிறைய சோறுடன் செல்கிறான். செல்லும் வழியிலேயே வண்டிச்சோற்றை தின்று விடுகிறான். பகாசுரன் அதைக்கண்டு கோபம் கொண்டு அடிக்க வருகிறான். கிளைமாக்ஸ் ஃபைட்! கொஞ்சம் கிராஃபிக்ஸ் உண்டு. பகாசுரன் சாகிறான். பீமன் ஊரைக் காப்பாற்றுகிறான்
நம் சினிமாக்கதைகளுக்கு உரிமைத்தொகை [காப்பிரைட்] கொடுப்பதாக இருந்தால் எல்லா சினிமாவுக்கும் வியாசனுக்கு பணம் கொடுக்கவேண்டும். வியாசர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்!
இதுதான் இலக்கியம் தனி மனிதனுக்கு அளிக்கக்கூடிய பங்களிப்பு. அவனுக்கு அது விழுமியங்களை அளிக்கிறது.
அப்பா அம்மா அளிக்கக்கூடிய விழுமியங்களை மட்டும் நம்பி அப்படியே வாழ்பவர்கள் பெரும்பாலானவர்கள். மிகச்சிறுபான்மையினர் விழுமியங்களை மறுபரிசீலனை செய்கிறார்கள். இது சரியா, இப்படிச் செய்யலாமா என்று யோசிக்கிறார்கள். அவர்கள் நேரடியாக இலக்கியத்தை வாசிக்கிறார்கள்.
சிந்திக்கக்கூடியவர்கள், அதாவது சமூகத்தில் இருந்து சற்று மேலே எழுந்து வாழ விரும்பக்கூடியவர்கள் இலக்கியத்தை வாசிக்கிறார்கள். இலக்கியம் வழியாக மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. நீங்கள் எந்த வகை என்பதை நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும்
சரி, நான் முதலில் கேட்டது ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவை என்று. அதைப்பற்றி யோசித்திருக்கிறீர்களா?
ஒருசில உதாரணங்களைச் சொல்கிறேனே. பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளை இன்று பார்த்தால் அவர்கள் ஒரு நாடாகவோ சமூகமாகவோ உருவாகாமல் இருப்பதைக் காணலாம். அவர்கள் தனித்தனி இனக்குழுக்களாக பிரிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு இனக்குழுவும் ஒன்றுடன் ஒன்று கடுமையாகப் போர் செய்தபடியே இருக்கிறது.
ஆகவே அந்நாடுகளில் உள்நாட்டுப்போர் முடிவுறவே இல்லை. அந்நாடுகளில் வளர்ச்சி இல்லை. அந்நாடுகளில் செல்வங்களை அன்னியர் கொள்ளையடித்துச்செல்கிறார்கள். அங்கெல்லாம் பெரிய பஞ்சம் வந்து லட்சக்கணக்கான மக்கள் செத்து அழிகிறார்கள்.
நீங்களே டிவியில் பார்த்திருக்கலாம், எலும்பும் தோலுமாக குழந்தைகள் கைநீட்டி நின்றிருப்பதை. சாகக்கிடக்கும் குழந்தைக்கு அருகே கழுகு காத்திருப்பதை படமாகக் கண்டு கண்ணீர் விட்டிருப்பீர்கள். ஆனாலும் அவர்கள் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ஒற்றுமைப்படுத்த என்ன செய்வதென்றே எவருக்கும் தெரியவில்லை.
உலகில் உள்ள அத்தனை சமூகங்களும் அப்படித்தான் இருந்திருக்கின்றன. மனித குலம் வளர்ச்சி பெறும் விதம் அப்படித்தான் அமைந்திருக்கிறது. முதலில் சிறிய இனக்குழுக்களாக இருப்பார்கள் மக்கள். அதன்பிறகு கொஞ்சம் பெரிய இனக்குழுக்களாக ஆவார்கள். அந்த இனக்குழுக்கள் ஒன்றாக மாறி ஒரு சமூகமாக ஆகும்.
அப்படி சமூகங்கள் உருவானபின்னர்தான் அம்மக்களிடையே அமைதி உருவாகும். அனைவருக்கும் பொதுவான அறமும் நீதியும் ஒழுக்கமும் உருவாகும். அவற்றின் அடிப்படையில் அந்தச் சமூகம் செயல்படத் தொடங்கும்
இப்படிப்பட்ட சமூக உருவாக்கம் நிகழும்போதுதான் இலக்கியங்கள் தேவையாகின்றன. இலக்கியங்கள் அந்த சமூகங்களை உருவாக்குகின்றன. கான்கிரீட் கட்டிடம் கம்பி, மணல், செங்கல் எல்லாம் கலந்தது. சிமிண்ட்தான் அதை ஒட்டி ஒன்றாக நிலைநிறுத்தியிருக்கிறது. சமூகம் ஒரு கான்கிரீட் கட்டிடம். அதன் சிமிண்ட் என்பது இலக்கியம்தான்
ஆப்ரிக்காவில் காங்கோ,கென்யா, எதியோப்பியா, சூடான் போன்ற நாடுகளெல்லாம் இனக்குழுச் சண்டைகளால் அழிந்துகொண்டிருக்கின்றன. அதே மாதிரியான ஒரு நாடுதான் நைஜீரியா. அந்த நாட்டிலும் இனக்குழுக்கள் உண்டு. அவர்கள் நடுவே கடுமையான சண்டைகளும் நடந்துகொண்டிருந்தன
ஆனால் இருபதாம் நூற்றாண்டு முதல் அங்கே வலிமையான இலக்கியங்கள் உருவாக தொடங்கின. ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்த வொலே சோயிங்கா என்ற எழுத்தாளர் அதை விட்டுவிட்டு நைஜீரிய மொழியில் எழுத ஆரம்பித்தார். பென் ஓக்ரி என்ற மாபெரும் எழுத்தாளர் அங்கே எழுத ஆரம்பித்தார். ஃபெமி ஓசோபிசான், எலச்சி அமாடி போன்ற பல எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்தனர்
அப்படி ஒரு வலிமையான இலக்கியம் உருவானபோது அங்கே கொஞ்சம் கொஞ்சமாக இனக்குழு வெறுப்புகள் மறைந்தன. ஒவ்வொரு இனக்குழுவும் இன்னொரு இனக்குழுவை அறிந்துகொள்ளத் தொடங்கியது எல்லா இனக்குழுக்களுக்கும் பொருத்தமான நெறிகளும் அறங்களும் வந்தன.அவர்கள் ஒரே சமூகமாக மாறினர்
காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் என்ன வேறுபாடு? காங்கோவில் இலக்கியம் வலுவாக இல்லை. ஆகவே அது ஒரு சமூகமாக ஆகவில்லை. நைஜீரியாவில் இலக்கியம் வலுவாக உள்ளது. சமூகம் உருவாகி விட்டது . ஆகவே காங்கோ அழிகிறது நைஜீரியா வளர்கிறது.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கரேலியா ஃபின்லாந்து என்று இரண்டு நாடுகள் இருந்தன. இரண்டு நாடுகளுக்கும் நடுவே கடுமையான மனவேறுபாடு இருந்தது. ஆனால் அவர்கள் ஒரே மக்கள். அவர்கள் ஒன்றாக இருந்தால்தான் முன்னேறமுடியும் . அந்த மண்ணின் வளங்களை பயன்படுத்தமுடியும். அந்த மண்ணின் எதிரிகளை எதிர்கொள்ளமுடியும்
பின்லாந்து அன்று ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழே இருந்தது. ரஷ்ய ஆதிக்கத்துக்கு எதிராக பின்னிஷ் மக்களையும் கரேலிய மக்களையும் ஒன்றாக்கவேண்டும். ஒரே சமூகமாக ஆக்கவேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை
அவர்களை எப்படி ஒன்றாக ஆக்குவது? அவர்கள் மொழிக்குள் மிகச்சிறிய வேறுபாடுதான் உள்ளது. பின்னிஷ் மொழியிலும் சரி கரேலிய மொழியிலும் சரி பெரிய காப்பியங்கள் ஏதும் இல்லை. பெரிய இலக்கிய வரலாறுகூட அவர்களுக்கு கிடையாது.
அவர்களுக்கு ஒரு வாய்மொழிக் காப்பியம் இருந்தது. அதன் பெயர் கலேவலா, எலியாஸ் லோன்ராட் [ Elias Lönnrot] என்ற மொழியியல் அறிஞர் அந்த காப்பியத்தை வாய்மொழி மரபில் இருந்து அச்சுக்குக் கொண்டுவந்தார். 1835ல் அது நூலாக வந்தது.
கரேலியாவையும் பின்லாந்தையும் ஒற்றை சமூகமாக ஆக்கியது அந்த காப்பியம்.அந்த மக்களை ஒன்றாக்கியது. அவர்களின் விழுமியங்களை தொகுத்து அவர்களை ஒரு நாடாக கட்டி எழுப்பியது. அவர்கள் சுதந்திரப்போரில் ஈடுபட்டார்கள். ரஷ்ய ஆதிக்கத்தை ஒழித்து வெற்றிபெற்றார்கள்.
ஒரு காப்பியம் என்ன செய்யும் என்பதற்கு கலேவலா மிகச்சிறந்த உதாரணம். பின்லாந்து நாட்டின் எல்லையை கலேவலாதான் முடிவு செய்தது. அந்த நாட்டின் பண்பாடு என்ன அறம் என்ன அதன் மூதாதை மரபு என்ன அனைத்தையும் அந்தக் காப்பியம் முடிவுசெய்தது. இன்று அது பின்லாந்தின் தேசியக்காப்பியமாக உள்ளது
பின்லாந்து அரசு அந்நூலை உலகம் முழுக்க கொண்டு செல்கிறது தமிழில் ஆர்.சிவலிங்கம் (உதயணன்) அதை மொழியாக்கம் செய்தார்.(நாட்டார்த்தன்மையும் வீரசாகசத் தன்மையும் கொண்ட கலேவலாவை செயற்கையான, திருகலான , தேய்வழக்குகள் மிக்க மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது)
நண்பர்களே, அவர்களெல்லாம் இலக்கியங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். கண்டுபிடிக்கிறார்கள். நமக்கோ மகத்தான இலக்கியங்கள் ஏற்கனவே இருக்கின்றன. அவற்றை நாம் கற்காமல் மறந்துகொண்டிருக்கிறோம்.
நம்மை ஒரே சமூகமாக ஆக்கக்கூடியவை நம் இலக்கியங்கள்தான். நம் பண்பாடு என்ன என்று நமக்கே கற்பிக்கக் கூடியவை. நம்முடைய அறம் என்ன என்று நமக்கு சொல்லக்கூடியவை. அவற்றை இழந்தால் நாம் நம் சமூகத்தையே இழப்போம். நம் சமூகம் சிதறினால் நம் மண் அன்னியமாகும். நம் சந்ததியினரின் வாழ்க்கை அழியும்
மூன்று பெருநூல்களை தமிழின் அடிப்படைகள் என்று சொல்வார்கள். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன் போல் இளங்கோவைப்போல் பூமிதனில் கண்டதில்லை என்று பாரதி அந்த பட்டியலை நமக்கு அளித்திருக்கிறார்
தமிழகம் ஒருகாலத்தில் ஆப்ரிக்கா போலத்தான் இருந்தது. இனக்குழுச்சண்டைகள். உள்நாட்டுப்போர்கள். சங்ககாலம் முழுக்க நாம் காண்பது போர்களைத்தான். சிறிய அரசர்களை பெரிய அரசர்கள் அழித்தனர்.
அந்தக்காலகட்டத்தில்தான் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் வந்தது. வடவேங்கடம் தென்குமரி ஈறாக தமிழ்கூறும் நல்லுலகம்’ என தமிழகத்தின் எல்லைகளை அது வகுத்தது. முடியுடை மூவேந்தர்களை அடையாளம் காட்டி தமிழகத்தின் அரசியல் மரபை நிலைநிறுத்தியது. அரசியல்பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் உரைசால்பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவதும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதும் தமிழர் மெய்யியலின் அடிப்படை என வகுத்தது
அதன்பின் வள்ளுவன் எழுதிய குறள் நம்முடைய பண்பாட்டின் மூலநூல் அது. அறம்பொருள் இன்பம் என்று அது நம்மை வகுத்துரைத்துவிட்டது. அறத்தின் மூர்த்தியாகிய ராமனைப் பாடிய கம்பன் தமிழ் மரபின் உச்சமான படைப்பை ஆக்கினான்
இந்த மிகப்பெரிய மரபு நமக்கிருக்கிறது. நம் பண்பாட்டின் இலக்கணமே இந்நூல்களில் இருக்கிறது, தமிழ்பண்பாடு ஒரு ஏரி என்றால் இவைதான் கரைகள். இவை அழிந்தால் தமிழ்பண்பாடே அழிகிறது என்றுதான் பொருள்
நண்பர்களே, நாம் தமிழகத்தில் பயணம் செய்தால் இங்குள்ள அத்தனை ஏரிகளும் கரையிடிந்து கிடப்பதைக் காணலாம். பாழடைந்து குப்பைமேடாகக் கிடக்கும் ஏரிகள் போல ஆகிக்கொண்டிருக்கிறது தமிழ்ப்பண்பாடும்.
எங்கோ சிலர் அந்த ஏரிக்கரைகளுக்காக கவலைப்படுகிறார்கள். அந்த ஏரிக்கரைகளை பாதுகாக்க போராடுகிறார்கள். அவர்களை நாம் அறிவதே இல்லை.
அப்படிப்போராடுபவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள் அவர்களுக்கு புகழ் இல்லை. பணம் இல்லை. அவர்களை நீங்கள் கேள்விப்பட்டே இருக்கமாட்டீர்கள்.
பாரதி நவீன இலக்கியத்தின் தொடக்கம். புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,கி.ராஜநாராயணன் என்று பலர் இங்கே எழுதியிருக்கிறார்கள். பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உலகில் எந்த மொழியிலும் அவர்களுக்கு சமானமான தரத்தில் எழுதுபவர்கள் மிகக்குறைவுதான் அவர்கள் தான் உடைந்துகொண்டிருக்கும் இந்த ஏரிக்கு கரையாக இன்று இருப்பவர்கள்
இந்தமேடையில் நான் சொல்லவிருப்பது இது ஒன்றே. தன் மரபை பேணிக்கொண்ட சமூகங்களே வாழ்கின்றன. நாம் வாழ்வதும் அழிவதும் நம் தேர்வுதான்.
நமக்கு நம் முன்னோர் தொடர்ந்து ஒரு விஷயத்தை கற்பிக்கிறார்கள். வாழ்வது என்பது பிழைப்பது என்பதுதான் அது. நம் தந்தையர் நம்மை எதையும் படைக்காதவர்களாக எதையும் சாதிக்காதவர்களாக வெறுமே பிழைத்துக்கிடப்பவர்களாக ஆக்க முயல்கிறார்கள். அவர்கள் அப்படி வாழ்ந்தவர்கள். அவர்கள் அறிந்தது அதையே
‘நான் செட்டில் ஆகிவிட்டேன்’ என்கிறார்கள். ’என் மகன் செட்டில் ஆகவேண்டும்’ என்கிறார்கள். எதில் செட்டில் ஆவது? எங்கே செட்டில் ஆவது? சோறில் கறியில் குழம்பில் கூட்டில் வீட்டில் சாதியில் மதத்தில் செட்டில் ஆவது அல்லவா அது?
எதிலும் செட்டில் ஆகாதவர்களுக்கானது இலக்கியம். அவர்களே நம் மரபை வாழவைப்பவர்கள். நாளை நம் பண்பாட்டை முன்னெடுப்பவர்கள். படைப்பவர்கள். அவர்களுக்கானது இலக்கியம்
அத்தகைய சிலரேனும் இந்த அரங்கில் என் முன் இருக்கலாம். அவர்களுக்காகவே பேசுகிறேன். அவர்கள் இச்சொற்களைக் கேட்கட்டும்
[27-8-2014 அன்று சென்னை தாம்பரம் கிறித்தவக்கல்லூரி அவ்வை மன்றத்தின் விழாவில் பேசிய உரை]
மறுபிரசுரம். முதற்பிரசுரம் Aug 31, 2014
அறம்
விக்கி கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்கையில் ஒரு இடர் எழுந்து வந்தது. அறம், கற்பு போன்ற சொற்களை எப்படி மொழியாக்கம் செய்வது? மொழியாக்கம் செய்யும் சுசித்ரா அவற்றை அப்படியே பயன்படுத்தலாம் என்ற கருத்தை முன்வைத்தார். அவை தமிழ்ச்சூழலுக்கு, இந்தியச் சூழலுக்கு மட்டுமே உரிய சொற்கள். அவற்றுக்கு சரியான ஆங்கிலச் சொல் இல்லை. தத்துவக் கலைச்சொற்களை அப்படியே பயன்படுத்துவது உலகமெங்கும் வழக்கம். ஜெர்மானிய, ஜப்பானிய ,ஆப்ரிக்க கலைச்சொற்கள் அப்படி ஆங்கிலத்தில் வந்துகொண்டே இருக்கின்றன.
ஆனால் அக்கலைச்சொற்களுக்குச் சரியான, முழுமையான விளக்கம் இருக்கவேண்டும். ஆங்கிலத்திலும் கிடைக்கவேண்டும். அதற்காக சில சொற்கள் வரையறைகள், வரலாறு, நடைமுறை விரிவாக்கங்கள் ஆகியவற்றுடன் அளிக்கப்பட்டுள்ளன
முதன்மையாக அறம்.
அறம்நாமக்கல் கட்டண உரை
நாமக்கல் நகரில் ஒரு கட்டண உரை ஆற்றுகிறேன். நாமக்கல் விஷ்ணுபுரம் நண்பர்கள் முன்னரே அதைக் கோரினர். ஆனால் அப்போது வசதிப்படாமல் உரை திருப்பூரில் நடத்தப்பட்டது.
இதுவரை சென்னை, நெல்லை, கோவை, திருப்பூர் நகர்களில் நடத்தப்பட்ட கட்டண உரைகள் அனைத்துமே பண்பாட்டை வரையறுக்கவும் புரிந்துகொள்ளவும் முயன்றவை. ஓர் ஒட்டுமொத்த, ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்கும் நோக்கம் கொண்டவை. என்னுடைய பார்வையை சுருக்கமாக ஒருங்கிணைவு நோக்கு என்று சொல்வேன். சமன்வயம் என சம்ஸ்கிருதத்தில். வள்ளலாரின் பார்வை அது என வரையறை செய்யும் ம.பொ.சி அதற்கு ஒருமைப்பாடு என பொருள் அளிக்கிறார். (வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு)
இந்த உரை தத்துவம், ஆன்மிகம் சார்ந்தது. ஆனால் இலக்கியம் என்னும் வழியினூடாக அவற்றை அணுகுவது. கட்டண உரை என்பது அடிப்படையில் ஒரே நோக்கம் கொண்டதுதான். கூர்ந்து கேட்கும் அவையினரை மட்டுமே திரட்டுவது
ஜெ
நாள் 17 ஜூலை 2022 (முன்பதிவு அவசியம்)
இடம் நளா ஓட்டல் திருச்சி சாலை நாமக்கல்
தொடர்புக்கு 9952430125, 9486068416, 9738233431
அமெரிக்கா, கடிதங்கள்
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
அன்புள்ள ஜெ
நம் அமெரிக்கக் குழந்தைகள் ஒரு முழுமையான கட்டுரை. அத்தனை நீளம் எதற்கென்றால் எல்லா வழிகளையும் அடைத்து எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி நிறுத்துவதற்காகவே என்று புரிகிறது.
நெற்றியில் அடிப்பதுபோல சில விஷயங்கள் உள்ளன. அதிலொன்று நாம் பயின்றது பின்தங்கிய ஒரு கல்விமுறையில், வெறும் பொறியியல் கல்வி மட்டுமே என்பது. அப்பட்டமான உண்மை. நான் பொறியியல் படித்து முடிப்பது வரை எனக்கு தெரிந்தது என்ன என்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் இலக்கியம், பண்பாடு, வரலாறு எதைப்பற்றியும் எதுவுமே தெரியாது. பரிபூரணமான தற்குறி. ஆனால் நான் படித்தது கோவையில் ஒரு மிகச்சிறந்த கல்லூரியில். நான் மிகச்சிறந்த மாணவன். நீங்கள் சொல்வதுபோல நேராக ஐரோப்பா வந்தவன்.
ஆனால் உங்களுக்கே ஒரு மாயை இருக்கிறது. அதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். நீங்கள் முறையாகக் கல்வி முடிக்காதவர். ஆகவே கல்லூரிகளில் பொறியியலை மிகத்தீவிரமாக படிக்கிறார்கள் என நினைக்கிறீர்கள். மிகக்கடுமையான போட்டி இருப்பதனால் அப்படி படித்தே ஆகவேண்டும் என நம்புகிறீர்கள். அதுவும் பொய். நான் பொறியியல் கல்லூரியில் கற்றதெல்லாம் பொறியியலே அல்ல. பொறியியலை அப்படி கற்பிக்கவே முடியாது. கத்தோலிக்கர்கள் லத்தீன் மனப்பாடம் செய்வதுபோலத்தான் அறிவியல் விதிகளை படித்தோம். நான் படித்ததெல்லாம் வேலைபார்த்து கற்றுக்கொண்டதுதான்.
நம்மை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். வேலைபார்ப்பது, சேமிப்பது மட்டும்போதாது என்கிறீர்கள். கொஞ்சம் படியுங்கள், கொஞ்சம் பிள்ளைகள் கல்விநிலை அளவுக்கு நீங்களும் நகருங்கள் என்கிறீர்கள். அல்லது அப்படி ஓர் அறிமுகம் செய்து வைக்குமளவாவது தயார்செய்துகொள்ளுங்கள் என்கிறீர்கள். உண்மையில் அது மிகப்பெரிய சவால். அதற்கான எந்த வாய்ப்பும் புலம்பெயர் சூழலில் இல்லை என்பதே உண்மை. அதை மீறி எதையாவது செய்தால்தான் உண்டு.
ஆனால் அதற்கு எத்தனை தடைகள். இன்று, இக்கட்டுரை பற்றி ஒரு பேச்சுவந்தது. ஒருவர் “ஜெயமோகன் அறிவியலுக்கு எதிரானவர், மூடநம்பிக்கையை பரப்புபவர்’ என்றார். பொறியாளர்தான். ”எங்கே ஜெயமோகனை படித்தீர்கள், என்ன படித்தீர்கள்?” என்றேன். “அவர் இந்துஞானமரபு என்று பேசுகிறார்” என்றார். “சரி அறிவியல் மனநிலைக்கு எதிராக என்ன பேசியிருக்கிறார்?” என்றேன். அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. எங்கோ வாட்ஸபிலோ டிவிட்டரிலோ எதையோ படித்திருக்கிறார். அதிகம்போனால் நாலைந்து வரி. அதையும் ஏதோ தற்குறிதான் எழுதியிருப்பான்.
நான் ‘தமிழில் அறிவியல் மனநிலை பற்றி முப்பதாண்டுகளாக ஓயாமல் எழுதி வருபவர் ஜெயமோகன்’ என்று சொல்லி உதாரணங்களை சொல்ல ஆரம்பித்தேன். “வேண்டுமென்றால் கட்டுரைகளை அனுப்புகிறேன். விரல்தொடும் இடத்தில் அவை உள்ளன” என்றேன். ஆர்வம் காட்டாமல் “அப்றமா பேசுவோம்” என்று எழுந்து சென்றார்.
இவர்கள் மழுமட்டைகளாக இருக்க இவர்களை ஓயாமல் மேலும் மழுமட்டைகளாக ஆக்கிக்கொண்டே இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்
சக்தி
***
அன்புள்ள ஜெ
நலம்.நலம் அறிய ஆவல்!.
நான் அடிக்கடி எனக்குள் சொல்லிக் கொள்வேன், “நான் ஜெயமோகனின் அறிவியக்கத்தை சார்ந்தவன்” என, “நமது அமெரிக்க குழந்தைகள் -3” கட்டுரையை வாசித்த பின் அதற்கான தகுதி எனக்கில்லை என்று தோன்றியது. “தமிழின் பெருமை என்ன?” என்ற கேள்விக்காக நீங்கள் சொன்ன பதில் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த எனக்கே நீங்கள் தான் இக்கட்டுரை மூலம் சொல்கிறிர்கள். தமிழ் உலகின் முதல் மொழி என்பது பிதற்றல் என்ற தெளிவு உள்ளது. ஆனால் அதன் பெருமை இலக்கிய வளம் என்று சொல்லியிருப்பேன். தொடர்ச்சி, தொடும் தொலைவின் கபிலன் இருக்கிறான் என்றெல்லாம் சொல்லியிருக்க மாட்டேன்.
ஜெவின் வாசகன் நான்,என்னை இம்மாதிரி கட்டுரைகள் தான் என் அறியாமைகளை நீக்கி அறிவியக்கத்தின் பாலபாடம் தருகின்றன.
பசியோடு காத்திருக்கிறேன்,வளர்க உங்கள் அறிவியக்கம்!
நன்றி,
அன்புடன்,
சரவணப் பெருமாள்.செ
செயல் – கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் செயலும் , ஒழுங்கும் பதிவை படித்தேன்.
இந்த முறை வந்த வாஷிங்டன் பொழுது எங்கள் இல்லத்தில் இருக்கையில், உங்கள் தினசரி செயலை காணும் வாய்ப்பு கிடைத்தது.
சொல்லாக கட்டுரையில் வாசித்ததை காட்சியாக கண்ணுக்கு முன்னால் கண்டோம். காட்சியாக காணுகையில் இன்னமும் பிரமாண்டமாக இருந்தது.
இரவு எத்தனை மணி ஆனாலும் நீங்கள் தமிழ் விக்கிக்கு பங்களிக்காமல் உறங்க செல்லவில்லை, காலையில் எழுந்தாலும் தமிழ் விக்கிக்கு பிள்ளையார் சுழி போடாமல் பிற வேலைகளில் செல்வதில்லை. கொஞ்சம் கூட உற்சாகம் குறையாமல் இருந்தீர்கள். படைப்பூக்கத்தின் செயல் வேகம் என்பதை கண்ணால் கண்டோம்.
பல நண்பர் சந்திப்புகள், ஒவ்வொன்றிலும் 100 கேள்விகள், சுற்றுப்பயண வேலைகள், தமிழ் விக்கி விழா என வேகமும், பரபரப்பும் கொண்ட பலவற்றுக்கும் நடுவே நிதானமாக நீங்கள் ஆயிரம் கரங்களோடு அதை ஓவ்வொன்றாக எடுத்து மாலையாக கோர்த்தது போல நேர்த்தியாக கையாண்டது போல இருந்தீர்கள். அது நீங்கள் சொல்லும் செயலும், ஒழுங்கும் தருவன என நினைக்கின்றேன்.
அன்புடன்
நிர்மல்
***
அன்புள்ள நிர்மல்
நலம் தானே?
நானும் நலமே.
நான் செயல் பற்றி யோசிக்கும்போது ஒன்று தோன்றியது. செயலாற்றுவதில் முழுமையாக நம்மைக் குவிக்கமுடியும் என்றால் அது ஒரு யோகம். ஒரு கொண்டாட்டம். மனம் அதை நாடும். எந்த நள்ளிரவிலும் நாம் அதை செய்யமுடியும். மனம் குவியாமல் செய்யும் செயல் நம்மை சிதறடிக்கிறது. நாம் உள்ளே பலதிசைகளில் இழுக்கப்படுகிறோம். அது பெரிய வதை. ஆற்றல் வீணாவதனால் களைப்பூட்டக்கூடியதும்கூட. கூர்ந்து, ஒருமுகப்பட்டு செயலாற்ற அறியாதவர்கள் செயலை அஞ்சி தவிர்க்க முயல்கிறார்கள் என்று தோன்றியது
ஜெ
நமது அரசியல் கவிதைகள் – கடலூர் சீனு
இனிய ஜெயம்,
நண்பர் அழைத்திருந்தார். இரண்டு வினாக்களுடன். முதல் வினா தமிழில் ‘அரசியல்’ கவிதை என்று எழுதப்படுபவை எல்லாம் ஒரே போலவே இருக்கிறதே அது ஏன்? இரண்டாவது வினா பிற அரசியல் கவிதைகளை மறுத்தாலும் இளங்கோ கிருஷ்ணனின் தூத்துக்குடி கவிதைகளை மட்டும் நான் ஏன் ஏற்றுக்கொள்கிறேன்?
நண்பர் போலவே, சமூக அரசியல் கலை கோட்பாட்டு போதம் கொண்ட சிலரும் அக் கவிதைகளை ஏற்கவில்லை என்பதை பின்னர் வாசித்து அறிந்தேன். நண்பருக்கு பதில் அளிக்கையில் திமுக வுக்கு ஓட்டு போட சொல்லும் மனுஷ்ய புத்திரன் கவிதைகளும், நாங்க மனுஷங்கடா என மாரடித்து ஒப்பாரி வைத்து கம்யூனிஸ்ட் கு ஓட்டு போட சொல்லும் இன்குலாப் கவிதைகளும், போஸ்ட் அப்போகலிப், போஸ்ட் மாடனிஸ்ட், போஸ்ட் லிங்விஸ்டிக், போஸ்ட் சைன்ஸ் ஃபிக்ஷனிக் (போஸ்ட் பொயட்ரி) யவனிகா ஸ்ரீராம் கவிதைகளும், இப்படி எல்லாமே அரசியல் கவிதைகள்தான். இந்த வரிசையில் இருந்து தூத்துக்குடி கவிதைகள் எங்கே வேறுபடுகிறது?
அரசியல் கவிதைகளுடன் தவிற்க இயலாமல் உடன் இணைந்து நிற்கும் பலவீனங்கள் இரண்டு. ஒன்று அதன் கச்சா படைப்பாளியின் ஆழுள்ளதுடன் பிணைந்த, அவனது ஆழுள்ளத்தை சமைத்த காரணிகளில் ஒன்றல்ல. மனுஷ்ய புத்திரன் கவிதைகளில் அம்மா இல்லாத முதல் ரம்சான் கவிதையில் வரும் அம்மாவும், அனிதாவை எரித்த நெருப்பு கவிதையில் வரும் அனிதாவும் படைப்பாளியின் அதே அக ஆழத்தை சேர்ந்தவர்கள் அல்ல.
இரண்டு. அதன் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் அரசியல் நிலையின் ஒற்றைப்படை தன்மை. கவிதைக் கலையின் அடிப்படைகளில் அது அளிக்கும் அர்த்த, கற்பனை சாத்தியங்கள், அது தீண்டும் காலாதீத கூறு இவை முதன்மையானவை. அரசியல் கவிதைகள் அது எதை சொல்கிறதோ அதை மட்டுமே சொல்லும். அதன் காலம், (முக நூலில் வார வாரம் பேசி மறக்கப்படும் புதிய புதிய அரசியல் நகர்வு உரையாடல் போல) மிக மிக குறுகியது. ஆகவே எல்லா அரசியல் கவிதையும் ஒரே போலத்தான் இருக்கும்.
இந்த எல்லைகளுக்கு உட்பட்ட அரசியல் கவிதைகளில், இந்த தூத்துக்குடி கவிதைகளை எடுத்து கொண்டால் முதல் கவிதைகளில் சுடப்படும் போராளிகள் எதனால் சுடப்படுகிறார்கள் என்றொரு பட்டியல் வருகிறது
பட்டியலில் முதல் இடத்தில் I P L. அடுத்து சினிமா, டாஸ்மாக்,பேஸ்புக், பீச், பார்க் கோயில் என்று நீளும் இவ்வரிசையில் மற்றவை தரும் அனுபவத்துக்கும் போராட்ட அனுபவத்துக்கும், அதற்கு பொது மக்கள் ஆதரவுக்கும் உள்ள இடைவெளி பார தூரமானது.
முன்னர் கிரிக்கெட்டில் டோனி தலைமையில் இந்தியா உலக கோப்பை வென்ற ஆண்டுக்கு முன்பான இந்திய அரசியல் சூழலை சற்றே திரும்பி பார்த்தால், ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளானோம், மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வழியே தாக்கப்பட்டோம், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் உயிர்பலிகளை கண்டோம். ( அன்றும் தமிழ் நிலம் கிரிக்கெட்டில் லயித்து கிடந்தது). இந்த அத்தனைக்கும் இந்திய அரசின் பதில். மௌனம். விடுவோமா நாம். உலக கோப்பை கிரிக்கெட்டில் வரிசையாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இரண்டையும் மண்ணை கெளவ வைத்து, இலங்கையை புரட்டி எடுத்து உலக கோப்பையை வென்று, நடந்தவை அனைத்தையும் மறந்து, நாம் யார் என்று நமக்கும் உலகுக்கும் பறை சாற்றினோம்.
முக நூல் வந்த பிறகு போராட்ட களம் என்பதன் முகமே மாறி விட்டது. எல்லாமே ஐ சப்போட்டு, டிஸ்லைக்கு இரண்டு எமோஜிக்களில் முடிந்தது. ஒற்றை கருத்தியலின் கீழ் தெருவில் இறங்கி பொது ஜனம் திரண்டு நின்ற காலம் என்ற ஒன்றை முக நூல் வந்து முடித்து வைத்தது. அதன் சாதகம் அறிந்தே ஒவ்வொரு தேசத்திலும் அதன் ஆளும் சக்தி முகநூலில் கோடிகளில் முதலீடு செய்கிறது.
இந்த நிலைகளில் உள்ள முக்கிய அம்சம் கேளிக்கை. சினிமா, கோயில், பேஸ்புக்,டாஸ்மாக் எல்லாமே கேளிக்கை. இந்த அத்தனை கேளிக்கை அனுபவத்துக்கும் நீங்கள்தான் முதலாளி. ஒரு அனுபவம் பிடிக்கா விட்டால் வேறொரு அனுபவத்துக்கு மாறிக் கொள்ள முடியும். உங்கள் தேவைக்கு தக்க கேளிக்கையை கேட்டுப் பெற முடியும். இந்த அடுக்குகள் கொண்டு நமது போதத்தில் இருந்து மறைக்கப்படும், நம் மேல் கவியும் அந்த ‘உண்மையான’ அனுபவம் என்பது நமக்கு பிடித்த கேளிக்கை அல்ல. இந்த அனுபவத்தின் முதலாளி நாமும் அல்ல. நம் மேல் கவியும், நம்மால் மாற்றிக்கொள்ள முடியாத, நமக்கு உகக்காத, நாம் முதலாளி அல்லாத அந்த அந்த அனுபவம், எந்த முதலாளியின் விருப்பத்தின் பொருட்டு நிகழ்கிறதோ, அந்த முதலாளியின் கேளிக்கை சரக்கு மட்டுமே நாம். இங்கே எழும் கேள்விக்கு அதிகாரம் தரும் பதில் எதுவோ அதுவே முதல் கவிதை.
அனுபவம் என்பதற்கும் வாழ்வனுபவம் என்பதற்கும் இடையே மெல்லிய கோடு ஒன்று உண்டு. மேலே சொன்ன வகையில் அனுபவம் என்பதில் தேர்வு சாத்தியம் உண்டு. மாற்றிக் கொள்ள, விட்டு விலக, வாழ்வனுபவத்தில் அப்படி ஒன்று இல்லை. உதாரணத்துக்கு முப்பது வருடம் அறையை விட்டு வரமாட்டேன் என்று சொல்லி அறைக்குள் சென்று அமர்ந்து கொள்வது அதில் கிடைக்கும் அனுபவம், உங்கள் தேர்வு, எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எவரோ உங்களை பிடித்து கொண்டு போய் சிறையில் போட்டு, எப்போது வெளி வருவோம் என்றே தெரியாமல் முப்பது வருடம் உள்ளேயே கிடப்பது என்பதே வாழ்வனுபவம். இதன் நியதிகள் உங்கள் ஆழத்துடன் பிணைந்தவை.
எமது விரையிலிருந்து
பூட்ஸ்களை எடுப்பீராக
எமது குரல்வளையிலிருந்து
கத்தியை அகற்றுவீராக
என்று வளரும் இந்த
நான்காவது கவிதையின் உள்ளடக்கமும் அதன் பின்னணியும் மேற்சொன்ன வாழ்வனுபவம் என்றே வாசகனுக்கு கையளிக்கப்படுகிறது.
இந்த வாழ்வனுப கவிச் சுயத்தின் ஆழத்தில் இருந்து எழுவதே மூன்றாவது கவிதையின் இறுதி வரிகளான
உங்கள் அதிகாரம் பிணமாகும் வரை கேட்போம்
என்ற நீதி உணர்வின் குரல்.
தமிழில் பிற அரசியல் கவிதைகளில், மயிர் பிளக்கும் பின்நவீன அரசியல் கோட்பாட்டு விவாத குப்பைகளால், சுயம் காயடிக்கப்பட்ட காரணத்தால் இல்லாது போன, இளங்கோ கிருஷ்ணனின் தூத்துக்குடி கவிதைகளில் மட்டுமே காண முடிந்த இந்த நீதி உணர்ச்சி அதுவே இக் கவிதைகளை முக்கியத்துவம் கொண்ட கவிதைகள் என்றாக்குகிறது.
மிக நேரடியாக எழுந்து வரும் நீதியின் குரலை செவி மடுக்கஇயலாச் செவிடுகள் என்று அரசியல் கோட்பாட்டு புரிதல் வாதிகளை ஆகிய பெருமை பின்நவீன உரையாடல் சூழல் தமிழுக்கு அளித்த வெகுமதிகளில் ஒன்று. என்னைப் போல கோட்பாடுகளை அறியாத, கலை மட்டுமே அறிந்த அப்பிராணிகள் கண்ணில் மட்டும்தான் நீதி தேவதை தெரிவாள் போல :).
கடலூர் சீனு
June 28, 2022
அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை…
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
அமெரிக்காவில் சொன்ன சுவிசேஷத்தின் அடுத்த பகுதி இது.
அமெரிக்காவில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ஒரு சமூகமாக அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்பது.
அமெரிக்கத் தமிழ்ச் சமூகம் இன்னமும் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தால் ஆனது. இந்திய அளவுகோலின்படி அவர்கள் உயர்நடுத்தர வர்க்கத்தினர். அமெரிக்காவில் மெல்ல வேரூன்றிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர்.
நடுத்தரவர்க்கத்தினரின் உளவியல்தான் அவர்களை ஆள்கிறது. அது அனைத்துத் துளி உழைப்பையும் சேர்த்து செல்வமாக ஆக்கிக் கொள்வது. சேமிப்பு ஒன்றே நடுத்தர வர்க்கத்தின் வேதம். மூன்றாமுலக நாடுகளின் நடுத்தர வர்க்கம் கேளிக்கைகளுக்கோ அறிவுச்செயல்பாடுகளுக்கோ தன் உழைப்பையும் பணத்தையும் செலவழிப்பதல்ல. எவ்வகையிலும் அறக்கொடைகளுக்கோ பிற செயல்பாடுகளுக்கோ முன்வருவதும் அல்ல.
இன்றைய அமெரிக்க இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களின் வாழ்க்கை இது. ஆண்டு முழுக்க கடும் உழைப்பு, குழந்தைகளுக்காக அவ்வப்போது சிறு இடைவெளிகளில் விடுமுறைகள், சமூகப்பார்வை முன் ஒரு கௌரவத்தைக்காட்டிக் கொள்வதற்காக செய்யப்படும் உடைகள் வாகனம் போன்ற சில வசதிகள், அவ்வளவுதான். ஆண்டுக்கு ஒருமுறையோ, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ இந்தியாவுக்கு வந்து செல்வதே அவர்களுக்கு பெரும் செலவு. இதற்கு அப்பால் குழந்தைகளின் கல்வி எனும் பெருஞ்செலவு.
அமெரிக்கப் பெற்றோர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளை ஹார்வர்ட் பல்கலைக்கு அனுப்புவது போன்ற கனவுகளுடன் வாழ்கிறார்கள். அமெரிக்காவில் எனது நண்பர்கள் கேட்ட கேள்விகளில் பெரும்பாலானவற்றின் சாராம்சம் ‘என் பையனை எப்படி ஹார்வர்டுக்கு அனுப்புவது?’ என்பது தான். அதற்கு நான் சொன்ன பதில் ’ அது தெரிந்திருந்தால் நான் என்பையனை அனுப்பியிருப்பேனே?’ என்பது தான்.
இத்தகைய சூழலில் ஒரு சமூகமாக தமிழ்மக்கள் திரண்டு அங்கே ஆற்றும் பணிகள் மிக மிகக்குறைவு. பெரும்பாலும் அமெரிக்க நண்பர் ஒருவர் சொன்னது போல தமிழ்ச்சங்கங்கள் அங்கே ’தோசை மடங்கள்’ தான். இந்திய உணவை சாப்பிடுவதற்காக ஓரிடத்தில் கூடுவது, அங்கே தமிழக அரசியல், தமிழக சினிமா , அமெரிக்க குடியேற்றம் சார்ந்த கவலைகள் மற்றும் உள்ளூர் வம்புகளை பகிர்ந்துகொள்வது — அவ்வளவுதான் தமிழ் மக்களின் கூட்டுச்செயல்பாடாக இருக்கிறது.
எந்த வகையிலும் ஒரு பொருட்படுத்தப்படக்கூடிய கூட்டுச்செயல்பாடு அமெரிக்காவில் தமிழ் மக்களிடையே நிகழவில்லை. அங்கே கோயில்கள் இருக்கின்றன, புதிதாகக் கட்டப்படுகின்றன. ஆனால் பழகிப்போன சம்பிரதாயங்களை பேணுவதே அங்கு நிகழ்கிறது. தமிழ்ச்சங்கங்கள் உள்ளன. ஆனால் அங்கே இந்தியாவிலுள்ள ஒரு தமிழ்ச்சங்கத்தின் அதே தரம்தான் உள்ளது. ஒரு படி கீழ் என்றும் சொல்லலாம். அவர்களால் அங்கும் பெரிதாக ஏதும் நிகழவில்லை, அவர்களால் தமிழகத்துப் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் நன்மை என ஏதுமில்லை.
அங்கே சமூகக் கூட்டுச்செயல்பாடுகளை வழிநடத்துபவர்களுக்கு அமெரிக்கச் சூழலுக்கு உகந்த ஒரு பண்பாட்டு அமைப்பை முன்னெடுப்பதற்கான உளவிரிவோ, அறிவுத்திறனோ, இலட்சியமோ இல்லை. அவர்கள் மிக எளிய அரசியல் நோக்கு கொண்டவர்கள். இந்தியாவிலுள்ள அரசியலுக்கு ஏற்ப அங்கே ஆடும் எளிய கூத்துப்பாவைகள்.
அதற்கப்பால், வழக்கம் போல தமிழர்கள் தங்களை சாதிகளாக பகுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் வேவு பார்த்தும், மட்டம் தட்டியும் வாழ்கிறார்கள். ஒரு சிறு செயலைக்கூட கூடிச்செய்ய முடியாதபடி ஒருவரோடொருவர் ஆணவத்தால் மோதிக்கொள்கிறார்கள். இந்நிலையில் அங்கு நிகழும் செயல்பாடுகள் என்பவற்றை எவ்வண்ணம் நிகழ்த்துவது என்னும் பேச்சே எழவில்லை. செயல்பாடுகளை தொடங்க வேண்டும் என்பதுதான் முதலில் சொல்லவேண்டியது.
(அதை தொடர்ந்து சொல்லிவந்தேன். விஷ்ணுபுரம் அமெரிக்கக் கிளை அதன் விளைவாக தொடங்கப்பட்ட சிறு முயற்சி. ஆனால் அது உருவாக்கும் விளைவுகளே பிரமிப்பூட்டும் அளவு இருக்கின்றன. vishnupuramusa@gmail.com.தொலைபேசி எண் – 1-512-484-9369 )
அவ்வாறு செயல்பாடுகளை தொடங்குவதென்றால் நாம் ஒருபோதும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாதவர்கள் வடஇந்தியர்கள், குறிப்பாக குஜராத்தியர்கள். முன்னுதாரணமாக கொள்ளத்தக்கவர்கள் பஞ்சாபிகள், குறிப்பாக சீக்கியர்கள்.
அமெரிக்க சமுதாயத்தின் ஓர் அங்கமாக இன்று தமிழ் மக்கள் ஆகியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அடுத்த தலைமுறை அங்கே வேரூன்றப்போகிறது. அவர்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை தமிழுக்கு , தமிழ்ப் பண்பாட்டுக்கு செலவழிப்பது இன்றியமையாததுதான். தமிழகம் அவர்களை நம்பியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதே அளவுக்கு அவர்கள் அமெரிக்கப் பண்பாட்டுக்கும் செலவழிக்க வேண்டும். அமெரிக்க மக்களின் நலனுக்கும் அவர்கள் பங்களிப்பாற்ற வேண்டும்.
இதை நான் சொன்னபோது அமெரிக்காவில் பல நண்பர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்களுடைய பார்வையில் அமெரிக்கா செல்வவளம் மிக்க நாடு. எஜமானனின் நாடு. நாம் எஜமானனுக்கு கொடுப்பதா என்பதே அவர்களது துணுக்குறலுக்குக் காரணம். ஆனால் அமெரிக்கா ஒரு பெரும் சமூகம் . அதன் அடித்தளத்திலும் பல்லாயிரம் பேர் ஏழைகளாக, உதவிதேவைப்படுபவர்களாக இன்று உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது.
தமிழ்ச் சமுதாயம் அமெரிக்காவின் செல்வ வளம் மிகுந்த மேல்தட்டில் ஒட்டிக்கொண்டு வாழ்வது. அவர்கள் பெறுவதெல்லாம் அங்கிருந்துதான். அதை முழுக்கவே தாங்கள் எடுத்துக்கொள்ளாமல் அதில் ஒரு பகுதியையேனும் அந்நாட்டின் கீழ்மட்டத்திற்கு அவர்கள் அளித்தார்கள் என்றால் மட்டுமே அது அறமாகும். இல்லையேல் காலப்போக்கில் Suckers (சுரண்டுபவர்கள்) என்னும் அடையாளம் அவர்கள் மேல் விழும்.
அந்த அடையாளம் இன்று குஜராத்திகள் மேல் மிக வலுவாக இருப்பதை பார்க்கிறேன். குஜராத்திகள் அமெரிக்காவில் மிகப்பிரம்மாண்டமான சுவாமி நாராயண ஆலயங்களை நிறுவியிருக்கிறார்கள். பலகோடி ரூபாய் தங்கள் அடையாளத்திற்காகவும் ஆடம்பரத்திற்காகவும் பகட்டுக்காகவும் செலவழிக்கிறார்கள். ஆனால் அவர்களுடையதென அமெரிக்கப் பண்பாட்டு செயல்பாடுகளுக்கோ அமெரிக்க மானுடசேவைக்கோ எந்த பங்களிப்பும் இல்லை.
அவர்கள் குஜராத்தி பண்பாட்டுக்கோ இலக்கியத்திற்கோ பத்து பைசா அளிக்க மாட்டார்கள். குஜராத்திலிருந்து அவர்கள் ஜிலேபிவாலாக்களான சாமியார்களை மட்டுமே அழைத்துவந்து கொண்டாடுவார்கள். கணேஷ் டெவி ஒருமுறை என்னிடம் சொன்னார், குஜராத்தி இலக்கியம் செத்துக்கொண்டிருக்கிறது. குஜராத்திகளிடம் பணம் வருந்தோறும் அது மேலும் அழியும்.
மாறாக ஒவ்வொரு சிக்கல்களின் போதும் சீக்கிய சமுதாயம் அமெரிக்காவின் எளிய தரப்பினருடன் நின்றிருக்கிறது, சேவை செய்கிறது. கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது. அது கண்கூடாகத் தெரிகிறது. தமிழர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியது பஞ்சாபியர்களைத்தான்.
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கோ துன்புறும் வீடில்லாதவர்களுக்கோ தமிழ் மக்களின் அமைப்புகள் ஏன் கொடையளிக்ககூடாது? அமெரிக்காவின் முகமென திகழும் கலாச்சார விஷயங்களை ஏன் ஒருங்கிணைக்கக்கூடாது? அளிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, அளிப்பது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும். இல்லையேல் நீண்ட கால அளவில் ஒட்டுண்ணிகள் என்னும் சித்திரத்தை அமெரிக்க தமிழர்கள் அடைவதை தவிர்க்க முடியாது. இப்போதே அச்சித்திரம் ஆங்காங்கே உருவாகத்தொடங்கியிருப்பதை டாக்சி ஓட்டுநர்கள், அங்கு பல இடங்களில் சந்திக்கும் எளிய கருப்பின மக்கள் பேசும் ஓரிரு சொற்களில் இருந்து என்னால் ஊகிக்க முடிகிறது.
அமெரிக்க மக்களுக்கு, தமிழர்களுக்கு நான் கூறவிரும்பும் இன்னொன்று உண்டு. அவர்கள் இன்று அமெரிக்க குடிமகன்கள். இந்திய அரசியலை அவர்கள் பேசுவதும், இந்திய அரசியலில் ஈடுபடுவதும் ஒருவகையில் அமெரிக்கத் தேசத்திற்கு இழைக்கும் துரோகம்தான். நான் அமெரிக்க குடியுரிமை பெற்றால் ஓர் அமெரிக்கக் குடிமகனுக்கு எந்த அளவுக்கு ஆர்வமிருக்குமோ அந்த அளவுக்கு ஆர்வத்தை மட்டுமே இந்தியாமேல் காட்டுவேனே ஒழிய, அமெரிக்கச் சட்டை போட்டுக்கொண்ட இந்தியனாக என்னை உணர்ந்து இந்திய அரசியல் பற்றிச் சலம்பிக்கொண்டு இருக்க மாட்டேன்.
தமிழ் மக்கள் அமெரிக்க அரசியலில் ஈடுபடவேண்டும். அமெரிக்க அரசியலின் அனைத்து தரப்புகளிலும் இந்தியருடைய பங்கு காலப்போக்கில் உருவாகி வரவேண்டும். இந்திய அரசியலில் அங்கிருக்கும் தமிழர்கள் எதிர்மறையாகவே பங்களிப்பாற்றமுடியும். அது அவர்களுக்கும் கேடு, தமிழகத்துக்கும் நல்லதல்ல.
இரண்டு காரணங்கள். இந்திய அரசியலை அமெரிக்காவில் இருப்பவர்கள் அங்கிருந்துகொண்டு முழுமையாக அறியவே முடியாது. அமெரிக்காவிலிருக்கும் எல்லா தரப்பினரும் தமிழக இந்திய அரசியலைப்பற்றி, இங்குள்ள வாழ்க்கைச்சூழலைப்பற்றி, மிக கற்பனையான பிம்பங்களையே வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். அவை சமூக ஊடகங்கள் வழியாகவும் செய்தி ஊடகங்கள் வழியாகவும் கிடைக்கும் உதிரிச் செய்திகளில் இருந்து அவர்களே உருவாக்கிக்கொண்டவை. தங்களுடைய நோக்கங்கள் ,உணர்வு நிலைகள் ,சார்புகள் ஆகியவை சார்ந்து புனைந்து கொண்டவை.
(தமிழக அரசியலை சென்னையில் இருந்துகொண்டே உணரமுடியாது. அதற்கு நாகர்கோயில்போன்ற சிற்றூர்களுக்கு வரவேண்டும். அதைவிட உள்ளூர்களில் வாழ்ந்த அறிதல் வேண்டும்)
அந்தப் பொய்யான உளப்பிம்பங்களை ஒட்டி மிகை உணர்ச்சி அரசியலை உருவாக்கிக்கொள்கிறார்கள் அமெரிக்கத் தமிழர்கள். அமெரிக்காவில் இருக்கையில் அவர்களுக்கு ஒரு கலாச்சாரத் தனிமை இருக்கிறது. அதன் விளைவான உளச்சோர்வும் உள்ளது. ஏனென்றால் அவர்கள் இங்கே வளர்ந்தவர்கள், அங்கே உளம் பொருந்தாதவர்கள். அவர்கள் அங்குள்ள வாழ்க்கைச்சூழலில் தொடர்புகொண்டுள்ள இடம் மிகக்குறைவானது.
அந்தத் தனிமையையும் சோர்வையும் வெல்லும் பொருட்டே அவர்கள் தமிழக அரசியல் பேசுகிறார்கள். அதைப்பகிர்ந்து கொள்ளும் கும்பல்களை கண்டடைகிறார்கள். அவர்களிடம் பேசிப் பேசி மேலும் தங்களைத் தாங்களே வெறியேற்றிக்கொண்டு,ஓர் உச்ச நிலையில் வெளிப்படுகிறார்கள். இந்துத்துவர், தமிழ்த்தேசியர், திராவிட இயக்கத்தவர், சாதிப்பற்றாளர் என அமெரிக்காவில் இருந்து அரசியல் பேசும் எல்லா தரப்பினரும் ஏதேனும் ஒருவகை வெறியைத்தான் முன்வைக்கிறார்கள். அங்கிருக்கும் தனிமை அளிக்கும் உளச்சோர்வின் விளைவு. பிரிந்திருக்கும் நெருக்கமானவர்கள் மேல் நாம் தர்க்கமற்ற உணர்ச்சிகரம் கொண்டிருப்பது போல. நிதானமான அரசியல் என்பதை ஒரு குடிபெயர்ந்த இந்தியனால் பேசமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்தியப் பண்பாட்டுச் செயல்பாடுகளுடன் ஒத்துழைக்கலாம். இந்திய ஆன்மிகப்பணிகளுக்கு உதவலாம். இந்தியப்பண்பாடு, இந்து ஆன்மிகம் இந்தியர்களையும் அமெரிக்கர்களையும் இணைக்கிறது. தமிழ்ப்பண்பாடு தமிழகத்தையும் அமெரிக்கத்தமிழர்களையும் இணைக்கிறது.அந்தப்பண்பாட்டுச் செயல்பாடுகளில் அரசியல் முற்றிலும் தவிர்க்கப்பட்டு வெறும் பண்பாட்டுச் செயலாக மட்டுமே நிகழும் தளத்தில் அவர்கள் பங்களிக்கையிலேயே உண்மையான நிறைவை அடைவார்கள். சரியான பங்களிப்பையும் செய்வார்கள். அதாவது அவர்கள் அமெரிக்கர்களாக மட்டுமே நீடித்தபடி செய்யும் பண்பாட்டு, ஆன்மிகச் செயல்பாடுகளையே அவர்கள் செய்யவேண்டும்.
மோடி அமெரிக்கா வரும்போது பல்லாயிரம் அமெரிக்க இந்தியர்கள் இந்தியத் தேசியக்கொடியுடன் அவரை வரவேற்கும்பொருட்டு கூடியதைக்கண்டு நான் அருவருத்தேன். அது ஒரு அமெரிக்கனாக தன்னை உணரும் வெள்ளையருக்கு என்ன உணர்வை உருவாக்கும்? அத்தகைய ஒரு செயல்பாடு இந்தியாவில் நிகழ்ந்தால் இந்தியர்களாகிய நாம் அவர்களைப்பற்றி என்ன நினைப்போம்? இந்தியாவில் டெல்லியில் பர்மியக் குடியேற்ற மக்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். இந்தியா அளிக்கும் அனைத்தையும் பெற்று இங்கே வேரூன்றியவர்கள். பர்மியத் தலைவர் ஒருவர் வரும்போது அவர்கள் திரண்டு பர்மியக் கொடியுடன் வரவேற்று ஆர்ப்பாட்டம் செய்து வெறிக்கூச்சல் எழுப்பினால் இந்தியா அதை எப்படி பார்க்கும்? அது ஒரு துரோகம் என்றே எனக்குத்தோன்றுகிறது. அது ஒரு கீழ்மையான உணர்வு வெளிப்பாடு. அந்த நாட்டுக்கு, அதன் மரபுக்கு விசுவாசமாக இருப்பதாகச் சொல்லி பிரமாணம் எடுத்து குடிமகன்களாக ஆனவர்கள் நீங்கள் என்று அந்த அமெரிக்க இந்தியர்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
இந்தியாவில் லத்தூர் பூகம்பத்தின்போது அமெரிக்க குடிபெயர்ந்த இந்தியர்கள் பெருங்கொடையால் ஓராண்டில் அப்பகுதி மறுபடி உயிர்த்தெழுந்தது. அது உயர்வான ஒரு மனநிலை. எங்கிருந்தாலும் இந்தியச் சகோதரனுக்கு கைநீட்டுவது, இந்திய பண்பாட்டுக்கு கொடையளிப்பது ஒரு பெருமையான பணி. ஆனால் இந்திய அரசியலில் ஈடுபட்டு தாங்களும் சிறுமையடைந்து, தங்கள் சென்று வளர்ந்து பெருகி வாழும் அந்தத் தேசத்தை சிறுமையடைச் செய்வது கீழ்மை. இந்திய அரசியல் பேசும் அமெரிக்கக் குடிமகன்கள் எவரையும் எந்நிலையிலும் பொருட்படுத்துவதில்லை என்பது என்னுடைய அழுத்தமான கொள்கைகளில் ஒன்று.
அமெரிக்க தமிழர்களுக்கு உரைத்த சுவிசேஷத்தை இங்கே முடிக்கலாமென நினைக்கிறேன். அமெரிக்கர்களாக இருங்கள். அமெரிக்கப் பண்பாட்டுக்கும் அமெரிக்க வாழ்க்கைக்கும் முடிந்தவற்றைச் செய்யுங்கள். உங்கள் வேர்த்தொடர்பினால் தமிழகத்துக்கு ஏதேனும் அளிக்கமுடியுமென்றால் அதை மட்டும் அளியுங்கள். சென்றுவிட்டீர்கள், சென்ற இடத்தில் முழுமையாகப் பொருந்துங்கள் அமெரிக்காவை உங்கள் வருந்தலைமுறைகள் வெல்லட்டும். மகத்தான அந்த தேசம் உங்களாலும் உங்கள் மரபினராலும் மேலும் மகத்துவம் பெறட்டும்.
ஆம், அவ்வாறே ஆகுக!
அ.ச.ஞாவும் தமிழர் மெய்யியலும்
’தமிழறிஞர்கள் என்னும் ஒரு இனம் இங்கே இருந்ததையே அடுத்த தலைமுறைக்கு சொல்லிப் புரியவைக்கவேண்டிய நிலைமை வந்துள்ளது. கிட்டத்தட்ட அழிந்துவரும் உயிரினங்களை பட்டியலிட்டிருக்கிறது தமிழ் விக்கி. அரியபணி, வாழ்க!’ புகழ்பெற்ற பேராசிரியர் ஒருவரின் வாட்ஸப் செய்தி.
அவர் மனம் வருந்தி எழுதியிருந்தாலும் அது உண்மை. அன்று காலை ச.து.சு.யோகியார் பற்றிய செய்தியை பகிர்ந்திருந்தேன். காலைமுதல் என்னை அழைத்த அனைவரிடமும் அந்த கட்டுரையை வாசித்தீர்களா என்று கேட்டேன். ஈரோடு கிருஷ்ணன் தவிர எவருமே வாசிக்கவில்லை. (ச.து.சு யோகியா ஈரோட்டுக்காரர். அதை எந்த ஈரோட்டுக்காரராவது அறிவார்களா, எவராவது இந்தக் கட்டுரையிலாவது அதை வாசித்தார்களா தெரியாது). நான் கேட்ட பெரும்பாலானவர்கள் அந்தப்பதிவு ஒரு தமிழறிஞரைப் பற்றியது என்பதனாலேயே உள்ளே நுழைய ஆர்வம் காட்டவில்லை.
ஆயினும் நாம் செய்யவேண்டியதைச் செய்வோம் என எண்ணிக்கொண்டேன். அ.ச.ஞானசம்பந்தன் உரைகளை நான் கேட்டிருக்கிறேன். நினைவில் இருந்தே பெருகிவரும் கம்பராமாயணமும் திருவாசகமும் ஒரு பெரிய அனுபவமாக அமைபவை.
அ.ச.ஞானசம்பந்தன்
அ.ச.ஞானசம்பந்தன் – தமிழ் விக்கி
தமிழ் விக்கி -தூரன் விருது- கி.ச.திலீபன்
கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கியின் தூரன் விருது அறிவிக்கப்பட்டதைப் பார்த்து பேருவகை கொண்டேன். பத்மபாரதி அவர்கள் எழுதிய ‘நரிக்குறவர் இன வரைவியல்’ மற்றும் ‘திருநங்கைகள் சமூக வரைவியல்’ என்கிற இரு ஆய்வு நூல்களைப் பற்றி நீங்கள் ஓர் நெடுங்கட்டுரை எழுதியிருந்தீர்கள். 2015ம் ஆண்டின் இறுதியில் எழுதப்பட்ட அக்கட்டுரையைப் படித்ததும் நான் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த குங்குமம் தோழி இதழுக்காக அவரை பேட்டி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இந்த இரு நூல்களும் அப்போது அச்சில் இல்லை. உங்களது கட்டுரையை மட்டுமே தரவாகக் கொண்டுதான் பேட்டி எடுக்கத் திட்டமிட்டேன். எனது நண்பரும், உங்களது மிகத்தீவிரமான வாசகருமான தமிழ்ச்செல்வன் பேட்டி எடுக்கையில் உடன் வர விருப்பம் தெரிவித்தார்.
பத்மபாரதியின் தொடர்பு எண்ணைப் பெற்று அவரிடம் பேசினேன். சராசரியான நடுநாட்டுப் பெண் பேசும் தொணியில் வெகு இயல்பாக பேசினார். அவரைப் பேட்டி எடுக்க வேண்டும் என்றதுமே சற்று தயக்கம் காட்டினார். பின்னர் பொறுமையாக அனைத்தையும் விளக்கி அவரை சம்மதிக்க வைத்தேன். புதுச்சேரியில் ரோமன் ரோலண்ட் நூலகத்துக்கு எதிரே இருக்கும் பாரதி பூங்காவில் நானும் நண்பர் தமிழ்செல்வனும் அவரைச் சந்தித்தோம்.
தான் அப்படி ஒன்றும் பெரிதாக எதையும் செய்து விடவில்லையே என்பது போலத்தான் அவரது பேச்சு இருந்தது. அதில் நிறைந்திருந்த யதார்த்தம் எங்களை மேலும் கவர்ந்தது. வணிக இதழ்களைப் பொறுத்த வரையிலும் சினிமா பிரபலங்களிடம் மட்டும்தான் கேள்வி பதில் வடிவில் பேட்டி வெளியாகும். மற்றவையெல்லாம் கட்டுரை வடிவில்தான் எழுத வேண்டியிருக்கும். கேள்விகளை முன் தயாரித்துச் செல்லவில்லை. இயல்பாக அவரது ஆராய்ச்சிகள் சார்ந்து ஓர் உரையாடலை நிகழ்த்தினோம். அவரும் மிகப் பட்டவர்த்தனமாக இந்த ஆய்வுகள் குறித்துப் பேசினார்.
பேட்டி முடித்ததும் “எழுத்தாளர் ஜெயமோகன் உங்கள் நூல்களைப் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்த பிறகுதான் உங்களைப் பேட்டி எடுக்க வந்தோம்” என்றேன். “ஓ… அவர் நல்ல ரைட்டர்ல” என்று சொன்னார். நான் தமிழைப் பார்த்து சிரித்தேன்.
ஜெயமோகன் வாசகர் வட்டம் ஓர் குருகுலத்தைப் போன்றது. அதன் பீடாதிபதியான ஜெயமோகன் தனது சீடர்களை மட்டுமே முன் நிறுத்துவார் என்பது போன்ற கருத்துகள் நிலவிய சூழலில் இருந்து பார்க்கையில் அது எனக்குப் பெரும் முரணாகத் தெரிந்தது.அக்கட்டுரையில் நீங்கள் முன்நிறுத்தியது அப்பிரதிகளை மட்டும்தான். “திருநங்கைகள் வாழ்வை திருநங்கைகள் கூட இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்ததில்லை” என அக்கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள்
உங்களை ஓர் நல்ல எழுத்தாளர் என்கிற அளவு மட்டுமே அறிந்திருந்த / உங்களை சந்தித்தே இருக்காத பத்மபாரதியை நீங்கள் மிகச்சிறந்த ஆய்வாளராக முன் நிறுத்தியிருந்தீர்கள். உங்கள் மீதும், பத்மபாரதி மீதும் பெருமதிப்பு உருவான தருணமாக அச்சந்திப்பு அமைந்தது. நவீன இலக்கியத்தில் மட்டுமல்ல முனைவர்கள் / பேராசிரியர்கள் ஒன்றுக்கும் பெறாத கவிதை நூல், ஆய்வு நூல் என எதையாவது எழுதிவிட்டு தமிழ் அறிவியக்கத்துக்கு தான் பெரும்பங்காற்றி விட்ட தோரணையில் நடந்து கொள்வதைக் கண்டு சலிப்புற்றிருக்கிறேன். அரும்பணி ஒன்றைச் செய்து விட்டு எந்த வித மிடுக்கும் இல்லாமல் “இவரா இதை எழுதியது” என்று கேட்குமளவுக்கு யதார்த்தமானவராக பத்மபாரதி இருக்கிறார்.
ஓர் நல்ல பிரதியைக் கண்டடைவது வாசகரின் வெற்றி. அப்பிரதிக்கான உரிய அங்கீகாரத்தை வழங்குவது ஓர் அறிவுலகச் செயல்பாட்டாளரின் வெற்றி. அவரது ஆய்வுப்பணியை முன்நிறுத்திய உங்களுக்கும், இவ்விருதினை வழங்கவிருக்கிற தமிழ் விக்கி குழுமத்துக்கும் நன்றி! கரசூர் பத்மபாரதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
கி.ச.திலீபன்
குங்குமம் தோழியில் வெளியான பத்மபாரதி பேட்டி பின்வருமாறு…
பதில் தேடும் பயணங்கள்!
நிலையான இருப்பின்றி அடிப்படை வாழ்வாதாரச் சிக்கலோடு நாடோடி வாழ்க்கை வாழும் நரிக்குறவர் இனத்தையும், மூன்றாம் பாலினமாக சமூகத்தின் அத்தனை புறக்கணிப்புகளுக்கும் ஆளாகினாலும் தங்களது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருநங்கையர் சமூகத்தையும் மிக ஆழமாக ஆராய்ந்து பதிவு செய்திருப்பவர் கரசூர் பத்மாபாரதி!
இவரது ‘நரிக்குறவர் இன வரைவியல்’ மற்றும் ‘திருநங்கையர் சமூக வரைவியல்’ ஆகிய ஆய்வு நூல்கள் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றதோடு, முக்கியமான ஆவணங்களாகவும் கருதப்படுகிறது. புதுச்சேரி கரசூரைச் சொந்த ஊராகக் கொண்ட இவர், கவிதை, சிறுகதை என இலக்கியத் தளத்திலும் இயங்கி வருகிறார்.
‘‘புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் துறையில் படித்தேன். முதுகலைத் தமிழ் இறுதித் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டிய குறு ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட தலைப்புதான் ‘நரிக்குறவர் சடங்குகள் ஓர் ஆய்வு’. நரிக்குறவர் இன மக்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பின்பற்றும் சடங்குகளைப் பற்றி மட்டும் ஆய்வு மேற்கொண்டேன். பேராசிரியர் அறிவுநம்பி இந்த ஆய்வுக்கான தலைப்பை வழங்கி வழிகாட்டவும் செய்தார். குறு ஆய்வு என்பதால் எடுத்துக் கொண்ட தலைப்பைத் தாண்டி, வேறு பரிமாணத்தில் எல்லாம் செல்லவில்லை. முதுகலை தமிழ் முடித்த பின் இளமுனைவர் பட்ட ஆய்வுக்காக ‘சிறு பத்திரிகை வரலாற்றில் கசடதபறவின் பங்களிப்பு’ எனும் தலைப்பை எடுத்துக்கொண்டேன்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறிது காலமே வெளிவந்திருந்தாலும் அழுத்தமான தடத்தைப் பதித்துச் சென்ற ‘கசடதபற’ இதழிலிருந்து தலா 10 சிறுகதைகள், கவிதைகளை எடுத்துக்கொண்டு ஆய்வு சமர்பித்து இளமுனைவர் பட்டம் பெற்றேன்’’ என்று தனது ஆராய்ச்சிகளின் தொடக்கம் பற்றி பேசுகிறார் பத்மாபாரதி. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மானுடவியல் பட்டயம் படித்தபோது பத்மாபாரதிக்கு நெறியாளராக இருந்தவர் பக்தவச்சலபாரதி. தமிழகத்தின் மிக முக்கியமான மானுடவியல் ஆய்வாளரான இவரது வழிகாட்டுதல் இன்றி தனது இரு நூல்களும் சாத்தியப்பட்டிருக்காது என்கிறார் பத்மாபாரதி. ‘‘நரிக்குறவர் சடங்குகள் பற்றிய குறு ஆய்வை புத்தகமாக்க வேண்டும் என பக்தவச்சலபாரதி ஐயாவிடம் சொன்ன போது, ‘ஒரு முழுமையான நூல் ஆவதற்கு இந்தத் தகவல்கள் மட்டும் போதாது… மேலும் பல தகவல்களை ஆராய்ந்து எழுத வேண்டும்’ என்றார்.
கள ஆய்வுக்கான நெறிமுறைகளையும் கற்றுத்தந்தார். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் நரிக்குறவர் இனப்பெண்கள் பொதுவெளியிலே குழந்தைக்கு பால் கொடுத்த வண்ணமும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பார்கள். ஏன் அவர்கள் இப்படியாக வாழ்கிறார்கள்? உலகம் பெரிய வளர்ச்சி கண்டுவிட்டாலும் கூட, ஏன் இவர்கள் இப்படியே இருக்கிறார்கள்? இப்படி எழுந்த கேள்விகள்தான் இந்த ஆராய்ச்சிக்கான பாதையை எனக்கு அமைத்துத் தந்தது. அதற்கு பதில் தேடும் பயணமாகவே இந்த ஆராய்ச்சி இருந்தது’’ என்கிறார். ஒரு கிராமத்துப் பெண்ணாக இருந்து களத்தில் இறங்கி ஆராய்ச்சி செய்வதில் பல சவால்கள் இருந்த போதிலும் அவற்றையெல்லாம் கடந்து இந்த ஆராய்ச்சியை முடித்திருக்கிறார்.
‘‘புதுச்சேரி நகரம் மற்றும் பெத்திசெட்டிப்பேட்டை, வில்லியனூர், உத்தரவாகினிப்பேட்டை, சண்முகாபுரம், மதகடிப்பட்டு, விழுப்புரம் அருகே கூட்ரோடு ஆகிய பகுதிகளில் நரிக்குறவர் இன மக்கள் சாலையோரங்களில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடியிருப்புகளுக்கு காலையில் நேரமே எழுந்து சென்று விடுவேன். நாம் நினைக்கிறபடி கேட்டவுடனே எல்லாவற்றையும் சொல்லி விட மாட்டார்கள். சில பேர் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார்கள். அவர்களுக்கு சன்மானமாக வயதானவர்களாக இருந்தால் வெற்றிலை பாக்கு, குழந்தைகளாக இருந்தால் சாக்லெட், நடுத்தர வயதினருக்கு காசு கொடுத்தால்தான் பேசக்கூட செய்வார்கள். அப்படியே பேசினாலும் நாம் எதிர்பார்க்கும் பதில் கிடைக்காது. எதை எதையோ பேசுவார்கள். எல்லாவற்றையும் கேட்கக்கூடிய பொறுமை இருந்தால் மட்டுமே ஆராய்ச்சியை முடிக்க முடியும். நான் எனக்கான தகவல்கள் எல்லாம் கிடைக்கும் வரையிலும் ஓயாமல் கள ஆய்வுக்கு சென்று கொண்டிருந்தேன்.
நரிக்குறவர் இன மக்கள் ‘வாக்கிரி போலி’ எனும் மொழியைப் பேசுகின்றனர். வாக்கிரி என்றால் குருவி… ஆகவே அதனை குருவிக்கார மொழி என்கிறார்கள். இந்த மொழிக்கு பேச்சு வடிவம் மட்டும்தான் இருக்கிறது. 1972ம் ஆண்டு சீனிவாச சர்மா என்பவர் இம்மொழியைப் பற்றி ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அதில் இந்த மொழி ஆரியம், திராவிடம் என இரண்டு வகையறைக்குள்ளும் அடங்காமல் இருக்கிறது என்கிறார். உருது, மராத்தி என இரண்டு மொழிகளையும் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் மராத்தி, உருது தெரிந்தவர்களால் இவர்களது வாக்கிரிபோலி மொழியைப் புரிந்து கொள்ள முடியாது. வாக்கிரிபோலி மொழியோடு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக வாக்மேன் எடுத்துக் கொண்டு போவேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு வாக்மேன் என்பதே புதிதாக இருந்ததால் அதைக் கொண்டு போனாலே சில பேர் பேச மாட்டார்கள். இயல்பாகப் பேசும்போதுதான் அவர்களோடு கலந்து பல தகவல்களைப் பெற முடியும்.
இவர்கள் குழுக்குழுவாகப் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர் ஒருவர் இருப்பார். அவரிடம்தான் சாமி மூட்டை எனும் அவர்களது கடவுள் சிலையை கொண்டிருக்கும் மூட்டை இருக்கும். அந்த மூட்டையைப் பிரித்துப் பார்க்கவோ, தொடவோ பெண்களுக்கு அனுமதியில்லை. பெண்கள் தொட்டால் தீட்டு என ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களது இனப்பெண்களுக்கே அனுமதியில்லை எனும்போது, நான் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. ஒரு நாள் அந்தத் தலைவரின் மகள் என்னை அழைத்து ஒருவரைக் கொண்டு சாமி மூட்டையைத் திறந்து காண்பிக்கச் செய்தார்.
அதனுள் வெள்ளியினாலான காளி சிலையை பதப்படுத்திய ஆட்டுத்தோல் கொண்டு மூடி வைத்திருந்தனர். நரிக்குறவர்களிலேயே பல பிரிவினர் இருக்கிறார்கள். சிலர் வெள்ளாட்டை பலியிடுவார்கள், சிலர் எருமையை பலியிடுவார்கள். பலியிட்ட பின் அதன் தோலை பதப்படுத்தி வைத்திருந்தனர். மேலும் பலியிடுவதற்கும் பூஜைக்கும் தேவையான கத்தி, தாம்பூலத்தட்டு, சலங்கை, பூஜை சாமான்கள் என பலவும் அந்த மூட்டைக்குள் இருந்தது.
விழுப்புரத்தில் வேறொரு பிரிவைச் சேர்ந்த நரிக்குறவர் திருவிழா நடந்தபோது நான் சென்றிருந்தேன். எருமையைக் கட்டி வைத்து அதன் காதோரத்தில் போகும் நரம்பை அறுத்து பலி கொடுத்தார்கள். அப்போது திபுதிபுவென வெளியேறிய ரத்தத்தைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். சாமி ஆடுபவரிடம் குறி கேட்பார்கள். அதனையெல்லாம் அவர்களது மொழியிலேயே பதிவு செய்தேன். இந்த ஆராய்ச்சியில் இறங்கியதிலிருந்து, பல பகுதிகளிலும் யாரேனும் இறந்தால் தகவல் சொல்லும்படி சொல்லி வைத்திருந்தேன். பெத்திசெட்டிப்பேட்டையில் ஒருவர் இறந்து அடக்கமும் செய்து விட்டனர். கருமாதியின் போது எனக்குத் தகவல் கிடைக்கவே நேரடியாகச் சென்றேன். அவர்களது சடங்குகள் பெரும்பாலும் நீர் நிலைகள், மர நிழல் இருக்கும் பகுதிகளில்தான் நடக்கின்றது. நரிக்குறவர் வாழ்வியலில் மெச்சக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. அவர்களுக்குள் மறுமணம் என்பது மிகவும் இயல்பானது’’ என்று நரிக்குறவர் இன வரைவியல் நூலுக்கான களப்பணி குறித்துப் பேசுகிறார் பத்மாபாரதி.
5 ஆண்டுகால உழைப்புக்குப் பின், 2004ம் ஆண்டு அந்த ஆய்வை எழுதி முடித்து தமிழின் பதிப்பக வெளியீடாக ‘நரிக்குறவர் இன வரைவியல்’ நூலைக் கொண்டு வந்திருக்கிறார். தமிழக அரசின் 2004ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான விருதையும், சுடராய்வுப் பரிசையும் அந்நூல் பெற்றிருக்கிறது. பத்மாபாரதி முனைவர் பட்ட ஆய்வுக்காக ‘புதுவை ஒன்றியத்தில் அடித்தள மக்களின் மரபுவழி இனப்பெருக்க மருத்துவம்’ என்கிற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அட்டவணை சாதிகளில் ஒன்றான பறையர் சமூக மக்களின் இனப்பெருக்க மருத்துவம் பற்றி முழுமையாக ஆய்வு செய்திருக்கிறார்.
‘‘இனப்பெருக்கம் தொடர்பான கை வைத்தியங்களை ஆய்வு செய்தேன். குழந்தை பிறப்பதற்கு முன்/பின் செய்யப்படும் சடங்குகள், குழந்தை பிறந்ததும் என்ன மாதிரியான உணவுகள் வழங்குகிறார்கள். உடல் பற்றிய நுண்ணிய வகைப்பாடுகள் என பல தலைப்புகளின் கீழ் ஆய்வைத் தொகுத்தேன். குழந்தைப்பேறுக்காக மாதவிடாயின் 3வது நாளில் புள்ளப்பூச்சி எனும் பூச்சியை வாழைப்பழத்தில் வைத்து சூரியன் உதிப்பதற்கு முன் சாப்பிடக் கொடுக்கிறார்கள். கெட்ட ரத்தத்தை வெளியேற்ற பெருங்காய உருண்டை சாப்பிடக் கொடுக்கிறார்கள்.
பூப்பெய்தாமல் இருக்கும் பெண்களை கோயிலில் தங்க வைக்கின்றனர். கருப்பையில் பிரச்னை இருந்தால் வேப்பிலை அரைத்து கொடுக்கின்றனர். இப்படியாக இவர்களின் வைத்திய முறைகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்தேன். இது மருத்துவம் மற்றும் அறிவியல் பூர்வமாக சரியானதா என்பதை ஆய்வுக்குட்படுத்தவில்லை’’ என்பவர், நாட்டு மருத்துவர்கள், கோயில் பூசாரிகள், பிரசவம் பார்க்கும் பெண்களிடம் நேர்காணல் புரிந்து, 2010ம் ஆண்டு இந்த ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
‘‘மானுடவியல் படித்த போது அதற்காக நடத்தப்பட்ட குறு ஆய்வு தான் திருநங்கையர் சமூக வரைவியல். நரிக்குறவர் ஆய்வு போலவே இதையும் விரிவாக செய்ய வேண்டும் என்று தோன்றியதுமே களத்தில் இறங்கி விட்டேன். ஆரம்பத்தில் திருநங்கைகளை அணுகுவதில் கொஞ்சம் பயம் இருந்தது. விழுப்புரத்தில் ஒரு வீட்டில் திருநங்கையர் வசித்து வந்தனர். அங்கு அடிக்கடி சென்று அவர்களிடம் பேட்டி கண்டேன். பிள்ளையார்குப்பத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாவுக்கு சென்று அவர்களின் வழிபாட்டு முறையை பதிவு செய்தேன். திருநங்கையரும் குழுக்குழுவாக வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவி இருப்பார்கள். நான் அணுகிய குழுவின் தலைவியான ராதா அம்மா மிகவும் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசுவார். கிராமத்தில் வளர்ந்த பெண் என்பதால் பல தகவல்கள் எனக்கு புதிதாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தன. ஆரம்பத்தில் இருந்த பயம் அவர்களுடன் கலந்து பேசப் பேச அகன்றது. நம் எல்லோரையும் போலவே அன்புக்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் இவர்களும் ஏங்குகிறார்கள். இன்றைக்கு மூன்றாம் பாலினம் என்கிற பார்வையாவது அவர்கள் மீது இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்போதிருப்பதை விட சமூகப் புறக்கணிப்பு அதிகம் இருந்தது.
ஒவ்வொருவரிடம் பேசும்போதும் அந்த வலியை உணர முடியும். அந்த வலியின் பிரதிபலிப்புதான் ‘திருநங்கைகள் சமூக வரைவியல்’ நூல். 2000ம் ஆண்டு இவர் எழுதிய ‘இளமை நதியில் முதுமை ஓடங்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு புதுவை இலக்கிய ஆய்வு மன்றத்தின் சார்பாக சிறந்த கவிதை நூலுக்கான விருதைப் பெற்றிருக்கிறது. அடுத்ததாக உயிர்ப்பு எனும் சிறுகதைத் தொகுப்பு, ஈசல் கனவுகள் எனும் கவிதைத் தொகுப்பு மற்றும் உயிர்ச்சொல் எனும் ஹைக்கூ தொகுப்பையும் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். குழந்தைகள் நல குழுமத்தில் புதுச்சேரியின் உறுப்பினர்களில் ஒருவராகவும் செயல்படுகிறார். குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து குழந்தைகள் உதவி மையத்தில் பதியப்படும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். ‘‘வெளிப்படையான பார்வையை வைத்து எந்த ஒரு சமூகத்தையும் தீர்மானித்து விட முடியாது. இறங்கி ஆய்வு செய்யும்போதுதான் உண்மை நிலையை அறிய முடியும். இன்னும் ஆய்வு செய்வதற்கு எத்தனையோ இருக்கிறது. என்னால் இயன்ற வரையிலும் பங்காற்றுவேன்’’ என்கிறார் பத்மாபாரதி.
– கி.ச.திலீபன், குங்குமம் தோழி – 16.01.2016
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

