Error Pop-Up - Close Button Sorry, you must be a member of the group to do that. Join this group.

Jeyamohan's Blog, page 751

July 4, 2022

எம்.எஸ்.கமலா, மறதி எனும் அரசியல்

தமிழிலக்கிய வரலாற்றில் பெண்களின் பங்கு ஏன் மிகக் குறைவாக இருக்கிறது? ஆனால் இந்த கேள்வியே ஒருவகையில் பிழையானது. தமிழிலக்கிய வரலாற்றில் பெண்களின் பங்கு மிகக்குறைவாக பதிவாகியிருக்கிறது. பல காரணங்கள். முதன்மையானது நம் பொதுவிவாதக் களத்திற்கு வெளியே பெண்களின் குரல் ஒலித்தது என்பது. நாம் ஆவணப்படுத்திய வரலாற்றுப்புலத்தின் எல்லைக்குள் அவை இல்லை.

தமிழ்விக்கி சீராக அனைத்துப் பெண்களின் பங்களிப்புகளையும் வரலாற்றுப் பதிவாக்குகிறது. நாளை இது ஒரு பெரும் ஆவணத்தொகையாக இருக்கும். எம்.எஸ்.கமலா அவர்களில் ஒருவர். நிறைய எழுதியவர். அனேகமாக எந்த எழுத்தும் இன்று கிடைப்பதில்லை. ஆனால் தேடினால் கிடைக்கலாம்.1965, 1966-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இவர் பணிபுரிந்திருக்கிறார்.தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் பெண் பொதுச் செயலாளர்.

மேலதிகச் செய்திகளை எவரேனும் அனுப்பிவைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

 

எம்.எஸ்.கமலா எம்.எஸ்.கமலா எம்.எஸ்.கமலா – தமிழ் விக்கி

 

அசலாம்பிகைஅம்மணி அம்மாள்அழகியநாயகி அம்மாள்ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள்ஆர்.சூடாமணிஆர்.பொன்னம்மாள்எஸ். விசாலாட்சிஎஸ். அம்புஜம்மாள்கமலா சடகோபன்கமலா பத்மநாபன்கமலா விருத்தாசலம்கிருத்திகாகிருபா சத்தியநாதன்கி.சரஸ்வதி அம்மாள்கி.சாவித்ரி அம்மாள்கி.சு.வி.இலட்சுமி அம்மாள்குகப்பிரியைகுமுதினிகெளரி அம்மாள்சகுந்தலா ராஜன்சரஸ்வதி ராம்நாத்சரோஜா ராமமூர்த்திசெய்யிது ஆசியா உம்மாசெய்யூர் சாரநாயகி அம்மாள்ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன்டி.பி.ராஜலட்சுமிநீலாம்பிகை அம்மையார்மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார்மீனாட்சிசுந்தரம்மாள்வி. விசாலாட்சி அம்மாள்வி.சரஸ்வதி அம்மாள்விசாலாட்சி அம்மாள்வை.மு.கோதைநாயகி அம்மாள்ஹெப்சிபா ஜேசுதாசன்

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2022 11:34

விமர்சனத்தை எதிர்கொள்ளுதல்…

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்  ‌,

 என் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு “மீச்சிறுதுளி” கடந்த மார்ச் மாதம் வாசிகசாலை பதிப்பகம் மூலம்  வெளியானது. நூல் வெளியானவுடனேயே தங்களிடம் தந்து ஆசி பெறவே மனம் துடித்தது. நீங்கள் தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் குமரகுருபரன் விருது விழாவில்தான் நேரில் சந்தித்து ஆசி பெற முடிந்தது. நூல் வெளியான நிறைவை அப்போதுதான் அடைந்தேன். வீட்டுச் செடியில் மலர்ந்த மலரை தெய்வத்தின் சன்னதியில் சேர்த்த நிறைவு அது.

பதிப்பகம் சார்பாக நூல் அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு சிறப்புரையாற்ற யாரை அழைப்பது என்பதை என்னைக் கேட்டே முடிவு செய்தார்கள். தெரிந்த நண்பரையே நான் பரிந்துரைத்தேன். அந்நண்பர் சிறுகதைகள் ஜெயமோகனின் மாடன் மோட்சம், திசைகளின் நடுவே போலவோ ஜி. நாகராஜனின் “துக்க விசாரணை’ போலவோ தன்னை பாதிக்கவில்லை எனக் கூறி  நூலிலுள்ள கதைகளை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார். இந்நிகழ்வுக்குப் பின் கதை எழுத அமர்ந்தால் நண்பர் கூறியதுபோல அழுத்தமான கரு இல்லையோ கூர்மையான மொழியில்லையோ என எண்ணங்கள் தோன்றி எழுதவிடாமல் செய்தன. சில நாட்களுக்குப் பிறகு மதிப்பிற்குரிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அலைபேசியில் அழைத்து, முதல் தொகுப்பைவிட மீச்சிறுதுளி தொகுப்பு மேம்பட்டதாக உள்ளதென்றும் முக்கியமாக கன்னிச்சாமி, நீர்வழிப்படுதல் மற்றும் மீச்சிறுதுளி கதைகள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார். இது என் மனதை  சற்று ஆசுவாசப்படுத்தியது.

என் வாழ்க்கையை எழுதுவதற்காகத்தான் நான் எழுத வந்துள்ளேன். அது எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்பதில்லை என எனக்கே சமாதானம் செய்து கொண்டாலும் எழுத மனம் கூடவில்லை. அப்போதுதான் தங்களை சந்திக்க வாய்த்தது. உங்களிடம் அதைப்பற்றி எதுவும் கூறவில்லை. நூலை கையில் வாங்கியவுடன் சிறு பிள்ளை பரிசை பெறுவதுபோல தங்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி எனக்குள் பெறும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அதனை திரும்பத் திரும்ப அடையவே தொடர்ந்து எழுதுவது என உறுதி கொண்டுவிட்டேன். என்னால் இயன்ற மலர்களை இறைவன் சன்னதியில் வைப்பதே என் கடன் எனத் தெளிந்துள்ளேன். இது சரியா.

நான் எழுதுவதையே தொடரலாமா அல்லது தீவிரமான கரு மற்றும் அடர்த்தியான மொழியை கண்டடைய வேண்டுமா என்பதை தெளிவுறுத்துமாறு தங்களைக் கோருகிறேன்.

அன்புடன்

கா. சிவா

 

அன்புள்ள சிவா

என்னுடைய சில நாவல்கள் இன்று ஒரு கல்ட் என்னும் அளவுக்கு வாசிக்கப்படுபவை. விஷ்ணுபுரம், காடு, இரவு மூன்றும் வெவ்வேறு களங்களில் பெரிய எண்ணிக்கையில் தீவிரவாசகர்களைக் கொண்டவை. மூன்று நாவல்களும் வெளியானபோது கடுமையான எதிர்விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக காடு பற்றி திட்டமிட்டே அன்றிருந்த இலக்கிய இதழ்களான காலச்சுவடு போன்றவை மிக எதிர்மறையான விமர்சனங்களை வெளியிட்டன. எல்லாவகையிலும் முதிர்ச்சியற்ற சிறுமனிதர்கள் ஆணையை தலைக்கொண்டு எழுதிய மதிப்புரைகள் அவை. அவற்றால் என்ன ஆயிற்று?

பெரும்பாலும் ஒரு முக்கியமான படைப்பு உடனடியாக சில எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுவிடுகிறது. இரண்டு காரணங்கள். ஒன்று, பொறாமை. அதை ஓடிப்பிடித்து வாங்கி வாசிப்பவர்களில் ஒருசாரார் அதன் போட்டியாளர்கள். இன்னொன்று, புரியாமை. ஒரு புதிய படைப்பு புதிய களம், புதிய சுவை ஒன்றை கொண்டுவருகிறது. அதை கொஞ்சம் முன்னகர்ந்து அடையவேண்டும். உறுதியாக நின்றிருப்பவர்களால் அது இயலாது.

ஆகவே, விமர்சனங்கள் எவ்வகையிலும் எழுத்தாளனை பாதிக்கவேண்டியதில்லை. எந்த விமர்சனமும் அறுதியானது அல்ல. ஆனால் விமர்சனங்களை கவனிக்கவேண்டும். அதைச் சொல்பவர் நம்மிடம் மேலும் எதிர்பார்க்கிறாரா என்பது ஒரு கேள்வி. நாம் எழுதியவற்றிலுள்ள நுட்பங்கள் அவருக்கு தெரிகிறதா என்பது அடுத்த கேள்வி. இரண்டுக்கும் ஆம் எனில் நாம் அவரை கவனிக்கவேண்டும்.

நம் படைப்பில் நாம் எய்தியவை என நாமறிந்தவற்றை தொட்டுப் பேசும் ஒருவன் மேலே சொல்லும் விமர்சனங்களுக்கு மட்டுமே ஏதேனும் மதிப்பு உள்ளது. அல்லாதவர்கள் நம் வாசகர்கள் அல்ல.

சரியான விமர்சனம் நமக்கு அறைகூவல். நாம் முன்னகர்வதற்கான தூண்டுதல். எழுத்தாளன் ஒருபோதும் நான் இவ்வளவுதான், இதையே எழுதுவேன், இங்கேயே நிற்பேன் என முடிவுசெய்துவிடக்கூடாது

ஜெ

மீச்சிறு துளி வாங்க 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2022 11:33

அன்புராஜ், கடிதங்கள்

முகம் விருது, அன்புராஜ்

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

அன்புள்ள ஜெ,

வணக்கம். திரு அன்புராஜ் அவர்கள் முகம் விருதை ஏற்றுக்கொண்டுள்ளமை மகிழ்வளிக்கிறது. எழுத்தாளர் பவா செல்லத்துரை வழியாகவே அவரை அறிந்தேன். அவரின் சிறை அனுபவங்களை விவரிக்கும் உரை ஒன்றை நெடுநாள்களுக்கு முன்பு கேட்டேன். இப்போது நினைவிலிருந்து எழுபவை அடிப்படை உரிமைகளைக் கோரியமைக்காக இருளில் அவர் வாங்கிய எண்ணற்ற அடிகளும், பட்ட துன்பங்களுமே. ஆனால், அம்முயற்சிகளில் அவர் வெல்லாமல் இல்லை. உடன் வாசிப்பு, நாடகம் எனக் கலையின் வழியாக அவரும் சுற்றத்தாரும் அடையாளம் பெற்றமை கலையின் மீதும், வாழ்வின் மீதும் பெரும் நம்பிக்கையை அளிப்பவை. அவருக்கு வந்தனம்.

 

விஜயகுமார்.

 

அன்புள்ள ஜெ

அன்புராஜ் அவர்களுக்கு முகம் விருது அளிக்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது. நம் சூழலில் அன்புராஜ் போன்றவர்கள் மிகப்பெரிய முன்னுதாரணங்கள். கலையின் வழியாக மீட்பு என்று நீங்கள் அன்புராஜ் பற்றி எழுதிய கட்டுரை நீண்டகாலம் முன்பு வந்தது. அதுதான் அவரை அறிமுகம் செய்ய எனக்கு உதவியாக அமைந்தது. அறம் தொகுதியில் இடம்பெறவேண்டிய வாழ்க்கை என நினைத்துக்கொண்டேன். அன்புராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

செல்வக்குமார் எம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2022 11:32

ம.ரா.போ.குருசாமி நூற்றாண்டு விழா

 

தமிழறிஞர் ம.ரா.போ.குருசாமி நூற்றாண்டு நிறைவை ஒட்டி ஒரு நினைவுமலரை மரபின் மைந்தன் முத்தையா அவருடைய நமது நம்பிக்கை இதழ் சார்பில் வெளியிடுகிறார். ம.ரா.போ குறித்த கட்டுரைகளை எதிர்பார்க்கிறார்.

marabinmaindan@gmail.com ம.ரா.போ.குருசாமி – தமிழ் விக்கி ம.ரா.போ.குருசாமி ம.ரா.போ.குருசாமி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2022 11:32

July 3, 2022

அவரவர் வழிகள்

ஒரு முறை நான் சென்னையில் ஒரு விடுதியில் இருந்தேன். என்னுடன் பல நண்பர்கள் இருந்தனர். நான் தங்கும் விடுதிகள் ஒருவகை இலக்கியச் சந்திப்புகளாக ஆகிவிடுபவை. நட்சத்திர விடுதிகளில் விருந்தினர்களை அனுமதிப்பதில் நிபந்தனைகள் உண்டு, நான் அவற்றில் வீடு போல நாட்கணக்கில் தங்குபவன் என்பதனால் கேட்க மாட்டார்கள்.

ஏதோ ஒன்றுக்காக அஜிதனை அழைத்தேன். “எங்கடா இருக்கே?” என்றேன்.

அவன் ஆந்திராவில் ஏதோ சிற்றூரில் இருந்து ஏதோ பழைய கோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்.

பேசி முடித்து உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நண்பர் கேட்டார். “ஏன் சார், பையன் எந்த ஊர்லே இருக்கான்னு கேட்டுட்டு ஃபோன் பேச்சை ஆரம்பிக்கிறீங்க? அவன் எங்க இருப்பான்னு தெரியாதா?” அவர் எங்கள் கும்பலுக்கு புதியவர். இன்னொரு நண்பருடன் வந்தவர்.

“எப்டி தெரியும்? அவன் எங்க வேணுமானாலும் இருப்பான்”

“போறதுக்கு முந்தி சொல்லிக்கிடறதில்லியா?”

“இல்லியே”

“நீங்க கேக்க மாட்டீங்களா?”

“இல்ல, ஏன்?”

அவர் எனக்கு பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும், இல்லையேல் எப்படி அவர்கள் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது என்று விரிவாக விளக்கினார்.

நான் கேட்டேன். “எல்லாத்தையும் கேட்டு, சரியா ஆலோசனை சொன்னா மட்டும் கெட்டுப்போக வாய்ப்பில்லியா?”

அவர் “அப்டி இல்லை…” என இழுத்தார்.

நான் சொன்னேன். ”நம்மாலே நம்மோட அடுத்த தலைமுறையை கட்டுப்படுத்த முடியாது. வழிநடத்தவும் முடியாது. அவங்களோட உலகம் என்னதுன்னே நமக்கு தெரியாது. அவங்களோட சிக்கல்கள் என்ன, அவங்களோட சவால்கள் என்ன, ஒண்ணுமே புரியாது. நம்ம உலகத்திலே, நம்ம வாழ்க்கையிலே இருந்து நாம கத்துக்கிட்டதை வைச்சு அவங்களோட வாழ்க்கையை நாம தீர்மானிக்க முடியாது”

நண்பர் கொஞ்சம் சீற்றம் கொண்டார். “என்னோட பையனுங்க ரெண்டுபேருக்கும் எல்லாமே நான்தான் சொல்லிக்குடுக்கறேன். நான் சொன்னபடியே செஞ்சு இப்ப நல்லா இருக்காங்க… ”

“பெரும்பாலும் அப்டித்தான் இருப்பாங்க சார். அதைத்தான் ஸ்டேண்டேர்ட் ஆவரேஜ்னு சொல்றோம்… அவங்க உண்மையிலே நாம சொல்ற பாதையிலே போகலை. எல்லாரும் போகிற பாதையிலே அப்டியே போறாங்க. நாம அவங்களுக்குச் சொல்றதும் எல்லாரும் போகிற பாதையிலே போகத்தான் என்கிறதனாலே அது நமக்கு சரியா இருக்கு. அப்டி இருந்தா உண்மையிலே ரொம்ப நல்லது. ஆனா சிலபேரு அவங்களோட வழிய அவங்களே தேடிக்குவாங்க. அவங்களுக்கான நோக்கமும் வழியும் வேறயா இருக்கும். அப்ப நாம ஒண்ணும் சொல்ல முடியாது”

“ஆனா ரிஸ்க் இருக்குல்ல?”

“ஆமா, ஆனா விலகி நடக்கிறவங்க ரிஸ்க் எடுக்கத்தான் வேணும். அது அவனோட ரிஸ்க். நானும் அதே ரிஸ்க் எடுத்தவன்தான்”

“அவன் ஜெயிச்சா பெருமைப்பட்டுக்கலாம்… தோத்துட்டா…”

“தோத்துட்டா அவன் தோல்வி அது. நான் ஏன் அதுக்கு பொறுப்பேத்துக்கிடணும்? நான் செய்யவேண்டியதைச் சரியாச் செஞ்சா நான் எதுக்கு கவலைப்படணும்?”

அவருக்கு நான் சொல்வது புரிபடவில்லை. மேலும் நெடுநேரம் பிள்ளைகளின் வாழ்க்கையை ‘ரிஸ்க்’ இல்லாமலாக்கி, அவர்களை சமூகத்தின் முன்னிலைக்குக் கொண்டுவருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். நல்ல பள்ளியில், நல்ல கல்லூரியில் படிக்க வைப்பது. அதன் பின் நல்ல வேலைக்கு செல்லவைப்பது. நல்ல பெண்ணைப்பார்த்து கட்டிவைப்பது. அதன்பின் அவர்களின் குடும்பவாழ்க்கையில் ஒரு கண் வைத்திருப்பது.

“அப்டி எல்லாம் சரியா இருந்தா நல்லது சார். நீங்க லக்கி மேன்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

உண்மையில் என்னிடம் பேசும் என் நண்பர்களில் கணிசமானவர்கள் தங்கள் பிள்ளைகள், பெண்களின் ‘தனி வழி’ பற்றித்தான் பதற்றமும் பயமுமாகச் சொல்வார்கள். “என்ன ஆகப்போறாங்கன்னே தெரியல்ல சார். என்ன பண்றதுன்னே தெரியல்லை”.

நான் என்னுடைய சொந்த பதற்றத்தையும் பயத்தையும் சொன்னால் அவர்கள் கொஞ்சம் ஆறுதலடைவார்கள்.

என் அப்பா அவருடைய கிராமத்தில் இருந்து மதுரை வரை வேலைக்குப்போன முதல் ஆள். அது அன்று ஒரு பெரிய மீறல். என் தலைமுறையில் சரமாரியாக வெளிநாடு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இன்று உலகமே ஒரு கிராமம் ஆகிவிட்டது. நான் இளமையில் ஸ்பான் இதழில் பார்த்து வாய்பிளந்த உலகநிலப்பரப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு நானே சென்றுவந்துவிட்டேன்.

இன்றைய தலைமுறையின் வாய்ப்புகள் உலகளாவியவை. சவால்களும் உலகளாவியவை. என் தலைமுறையில் ‘வேலை கிடைத்து கல்யாணம் ஆகி செட்டில் ஆவது’ வாழ்க்கையின் பெரிய சவால். அதை அடைந்தவன் வாழ்க்கையில் வென்றவன்.

இப்போதுகூட என் தலைமுறை அப்பாக்கள் ரயிலில் பேசிக்கொள்ளும்போது “மூத்த பையன் அமெரிக்காவிலே செட்டில் ஆய்ட்டான் சார். இன்னொரு பையன் மும்பையிலே செட்டில் ஆய்ட்டான்” என மனநிறைவுடன் சொல்வதைக் கேட்கிறேன்.

ஆனால் இளைஞர்களில் கணிசமான ஒரு சிறுபான்மையினர் அப்படி ஒரு வேலை, ஒரு குடும்பம் என ‘செட்டில்’ ஆவதை வாழ்க்கையின் நிறைவாக நினைப்பதில்லை. அது ஒரு தோல்வி என நினைக்கிறார்கள். தங்களுக்குரிய தனிப்பட்ட சாதனை வேண்டும் என நினைக்கிறார்கள். தங்களுக்குரிய தனி மகிழ்ச்சிகளை நாடுகிறார்கள்.

என் தலைமுறையில் ‘பிரச்சினைகள் இல்லாமல்’ வாழ்வது சிறந்த வாழ்வென கொள்ளப்பட்டது. ’நிம்மதியான லைஃப்’ என்று சொல்லிக்கொள்வோம். ஆகவே அரசுவேலை மிக விரும்பப்பட்டது. உட்கார்ந்தால் அப்படியே ஓய்வு பெறவேண்டியதுதான். நான் உட்கார்ந்தேன், ஆனால் தவித்துக்கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் விடுபட்டுவிட்டேன்.

இன்றைக்கு அந்த வாழ்க்கையை தொடக்கத்திலேயே ‘போர்’ என தூக்கி வீசிவிடுகிறார்கள். அரசுவேலைகளில் இருந்து இளைஞர்கள் சர்வசாதாரணமாக ராஜினாமா செய்கிறார்கள். வெற்றிகரமான வேலையில் இருந்து ‘சேலஞ்சே இல்ல’ என்று சொல்லி உதறிச் செய்கிறார்கள்.

கணிப்பொறித்துறையில் மேலாளராக இருக்கும் என் நண்பர் சொன்னார், இளைஞர்கள் வேலையை விட்டுப்போவது மிகச்சாதாரணமாக இருக்கிறது. இரண்டு ஆண்டு வாழவேண்டிய ஊதியத்தை ஈட்டிவிட்டால் இரண்டு ஆண்டுகள் புதியதாக எதையாவது செய்யலாம் என நினைக்கிறார்கள். கிளம்பி தாய்லாந்து வழியாக சிங்கப்பூர் சென்று இப்போது இந்தோனேசியாவில் இருக்கிறார் என் வாசகரான ஓர் இளைஞர். லடாக்கில் பௌத்த மடாலயத்தில் ஒன்பது மாதமாக இருந்துகொண்டிருக்கிறார் இன்னொருவர்.

எனக்கு தெரிந்த இளம் நண்பர் ஸ்டாலின் பாலுச்சாமி என்பவர் கணிப்பொறி வேலையை விட்டுவிட்டு கருப்பட்டி கடலைமிட்டாய் செய்யும் தொழிலை தொடங்கினார். அவருடைய அண்ணா வினோத் பாலுச்சாமி வேலையைவிட்டு ஊர் ஊராகச் சென்று புகைப்படம் எடுக்கிறார். இன்னொரு இளம்நண்பர் சிவகுருநாதன் வேலையை உதறிவிட்டு கைத்தறி நெசவு தொழிலை ஆரம்பித்து நூற்பு என்னும் பிராண்ட் தொடங்கினார். மதுமஞ்சரி என்னும் இளம்பெண் கிராமக்கிணறுகளை தூர்வாரி புதுப்பிக்கும் இயக்கம் ஒன்றை தொடங்கினார். அப்படி நூறு இளைஞர்களை என்னால் சுட்டிக்காட்டமுடியும்.

இவர்களை என் தலைமுறை அப்பாக்கள் திகைப்புடன் பார்க்கிறார்கள். “அதான் உக்காந்தாச்சே, அப்டியே செட்டில் ஆகவேண்டியதுதானே?” என்கிறார்கள். “சிலராலே அப்டி செட்டில் ஆகமுடியாது” என்பதே அதற்குப் பதில். ’செட்டில்’ ஆகமுடிபவர்கள் ’செட்டில்’ ஆகட்டும். அவர்களே பெரும்பான்மை. பெருவழியே பெரும்பாலானவர்களுக்கு உகந்தது. பொதுச்சமூகப் பார்வையில் அவர்களே ‘நார்மல்’ ஆனவர்கள். அவர்களே ‘வெற்றி’ அடைந்தவர்கள்.

ஆனால் ’செட்டில்’ ஆகமுடியாதவர்களிடம் தந்தையரான நாம் அவர்களைச் சுட்டிக்காட்டி பெரும்பான்மையினர் போல நீயும் இருப்பதற்கென்ன என்று கேட்கக்கூடாது. நாம் வாழும் காலம் கொஞ்சம் பழையது.

சென்ற தலைமுறையிலும் இதேபோல தேடலும், சாதனைவேட்கையும் கொண்டவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களிடம் துணிவு இருக்கவில்லை. அதற்கான பொருளியல் சூழலே அன்று இல்லை. கடுமையான வேலையில்லா திண்டாட்டம் அன்றிருந்தது. அதில் போராடி முண்டியடித்து ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டவர்கள் நாம். அந்த பயம் நமக்குள் என்றும் உண்டு.

பட்டினி கிடந்தவர்களுக்கு சாப்பாடு பற்றி ஒரு பதற்றம் எப்போதுமிருக்கும். உணவு தீர்ந்துவிடும், கிடைக்காமலாகிவிடும் என அகம் பரிதவிக்கும். எத்தனை பணம் வந்து, எவ்வளவு பெரியவரானாலும். அது நம் உளநிலை. இன்றைய தலைமுறை இளமையிலேயே வேண்டியதை பெற்று வளர்கிறது. ஒவ்வொரு வழியிலும் பல வாய்ப்புகளுடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறது. அவர்களிடம் அந்தப் பதற்றம் இருப்பதில்லை. நாம் நம் பதற்றத்தை அவர்களுக்கு ஊட்டினால் அவர்களுக்கு அது சென்று சேர்வதில்லை.

அத்துடன் சென்ற தலைமுறையில் பெரும்பாலானவர்களிடம் குடும்பப்பொறுப்பும் இருந்தது. அப்பா அம்மாக்களை கவனிக்கவேண்டும். தம்பிகளை கரையேற்றவேண்டும். தங்கைகளை கட்டிக்கொடுக்கவேண்டும். என் மாமனார் , அருண்மொழியின் அப்பா சற்குணம் பிள்ளை அவர்களின் வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன். அசாதாரணமான அறிவுத்திறனும் வாசிப்பும் கொண்டவர். ஆனால் அவர் தன் நான்கு தங்கைகளையும் மனைவியின் மூன்று தங்கைகளையும் கட்டிக்கொடுத்தார். கடன்களை அடைத்ததும் கிழவனாகிவிட்டார்.அவ்வளவுதான் அன்றைய வாழ்க்கை.

இன்றைய தலைமுறையில் அந்தச் சுமைகளே இல்லை. இன்று முதியவர்கள் தாங்களே தங்களை சார்ந்து வாழ்கிறார்கள். எவருக்கும் பெரிதாக எதுவும் செய்யவேண்டியதில்லை. ஆகவே இளைஞர்கள் அவர்களின் கனவுகளை துரத்த முடிகிறது.

ஆகவே பதற்றம் வேண்டாம் என நானே எனக்குச் சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களிடமும் சொல்கிறேன்.ஆனால் நாம் செய்வதற்கு ஒன்று உள்ளது. எந்நிலையிலும் நம் மகன்களிடமும் மகள்களிடமும் நம்முடைய உரையாடல் அறுந்துவிடலாகாது. அவர்கள் எதையும் நம்மிடம் சொல்லும் சூழல் இருக்கவேண்டும்.

அதற்கு முதல் தடை என்பது ஓயாத அறிவுரைகளாலும் கண்டனங்களாலும் நாம் அவர்களுக்கு சலிப்பூட்டுபவர்களாக ஆகாமலிருப்பது. இளைஞர்களின் உலகம் நம்பிக்கையும், கனவுகளும் கொண்டது. தந்தையரின் உலகம் முற்றிலும் வேறு. நம் பதற்றங்களையும் கவலைகளையும் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தால் அவர்கள் நம்மை தவிர்க்காமல் இருக்கவே முடியாது. யோசித்துப் பாருங்கள் நம்மிடம் எவராவது பார்க்கும்போதெல்லாம் ஆலோசனைகளும் அறிவுரைகளும் சொன்னால் நாம் என்ன செய்வோம்?

விடுதியில் என்னிடம் பேசிய நண்பர் சொன்னார். “அவன் எங்க இருக்கான்னு தெரியாம இருக்கீங்க சார்… தப்பா போய்ட்டான்னா?”

“தப்பா நிஜம்மாவே போனா நாம அதை தெரிஞ்சுக்கிடவே முடியாது… நாம அவங்க உலகத்திலே இல்ல” என்று நான் சொன்னேன். “ஆனா என் மகனைப் பற்றி எனக்கு தெரியும். இருபத்தெட்டு வருசமா அவனை பாத்திட்டிருக்கேன். அவன் என்ன சிந்திப்பான்னே எனக்கு தெரியும்… அவன் தப்பான பழக்கங்களுக்கும் போகமாட்டான். ஆடம்பரங்களுக்குள்ளையும் போகமாட்டான்… அவனோட தேடல், அலைக்கழிதல் எல்லாமே வேற.”

“நெறைய பேசுவீங்களோ?”

“பேசிட்டே இருப்பேன்”

“அப்ப அறிவுரை சொல்ல மாட்டீங்களா?”

“உண்மையச் சொன்னா நான் அவன்கிட்டதான் அப்பப்ப பல விஷயங்களுக்கு அறிவுரை கேட்டுக்கிடறது. இப்ப உள்ள உலகம் என்னை விட அவனுக்கு நல்லா தெரியும்”

“அப்ப என்ன பேசுவீங்க?”

“அவன் விரிவா தத்துவம் படிச்சவன். பௌத்த தத்துவம், ஷோப்பனோவர்னு பேசுவேன். இலக்கியம் பேசுவேன்…”

நண்பர் அதிருப்தியுடன் தலையசைத்தார்.

இந்த ஆண்டு எனக்கு அறுபது வயது நிறைவு. அதையொட்டி என் மகன் அஜிதன் ஒரு நாவலை எழுதியிருக்கிறான். மைத்ரி என்னும் அந்நாவலை விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அஜிதன் புனைவு என ஒரு வரிகூட முன்னர் எழுதியதில்லை. தமிழில் அனேகமாக எதுவுமே எழுதியதில்லை. அந்நாவல் பற்றி எழுதிய ஒருவர் ஏற்கனவே ஏராளமாக அவன் எழுதி பயின்று, மிகச்சிறந்ததை வெளியிட்டிருக்கிறான் என்று கூறியிருந்தார். உண்மை அது அல்ல.

அந்நாவலில் அஜிதன் அடைந்த உயரங்கள் உள்ளன. கவித்துவமும் தத்துவதரிசனமும் இயல்பாக ஒன்றாகி வெளிப்படும் படைப்பு அது. உண்மை, அனைவருக்குமான படைப்பு அல்ல. எளிமையான வாழ்க்கைச்சிக்கல், உறவுச்சிக்கல்களை வாசிப்பவர்களுக்கு அதில் ஒன்றும் இல்லை. வழக்கமான சிற்றிதழிலக்கியமும் அல்ல.  மெய்த்தேடல், பயணம் என ஒரு மாற்று உலகில் நாட்டம் கொண்டு, அதை ஏற்கனவே கொஞ்சம் அறிந்தவர்களுக்குரிய நாவல்.

அதை நான் படித்துக்கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு திகைப்பை அடைந்தேன். சந்தேகமே இல்லாமல் அது ஒரு பெரிய இலக்கியவாதி எழுதிய படைப்பு. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. நுண்ணிய கவித்துவம் வழியாகவே உச்சமடைவது.

அந்த நாவலாசிரியனை அதற்கு முன் எனக்கு சற்றும் தெரியாது. கைகளில் உரசும் மென்காற்றை பூனையின் மீசையின் தொடுகை என்பவனை. மலைச்சரிவில் பொழியும் வெயிலை வெறும் சொற்களால் நிகழ்த்திக்காட்ட முடிபவனை. ஒரு பெரும் அகஉச்சத்தை அடைந்தவனை உடனே வந்து கவ்வுவது எதிர்நிலையாக அமையும் களைப்புதான் என உணர்ந்து அதைச் சொல்லக்கூடியவனை. ஒளியைச் சொன்னதுமே நிழலைச் சொல்லவேண்டும் என உணர்ந்த செவ்வியல் எழுத்தாளனை. நான் அவனை என் மடியில் வளர்ந்த சின்னப்பையன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். எந்த அப்பாதான் பையனை அவனுடைய முழு வடிவுடன் பார்க்க முடியும்?

அஜிதன் ’செட்டில்’ ஆகியிருந்தால் நான் ஒருமாதிரி நிம்மதி அடைந்திருப்பேன். விடுதலை என உணர்ந்திருப்பேன். நான்குபேரிடம் ‘ஆமா சார் ,பையன் செட்டில் ஆய்ட்டான்’ என்று மகிழ்ச்சியாகச் சொல்லியிருப்பேன். எனது தலைமுறையின் மனநிலை அது. ஆனால் உள்ளூர அவன்மேல் மதிப்பு இல்லாதவனும் ஆகியிருப்பேன். ’செட்டில்’ ஆன எவர்மேலும் எனக்கு எந்த மதிப்பும் இல்லை. தன் வாழ்க்கையில் தேடல் அற்ற எவரிடமும் எனக்கு ஒரு ஹாய், ஹலோவுக்கு அப்பால் உரையாட ஒன்றுமில்லை.

நாவலை வாசிக்க வாசிக்க அந்த ஆசிரியன் மேல் பெருமதிப்பு கொண்டேன். மிகமிகமிகச் சில ஆசிரியர்களே அந்த மதிப்பை என்னுள் உருவாக்கியவர்கள். நான் அறியாத எதையோ என்னிடம் சொன்னவர்கள். என் படைப்பாணவத்தை என்னை வாசகனாக மாற்றி அமரவைத்தவர்கள்.

இந்த இடம்நோக்கி வருவதற்காகத்தான் அத்தனை அலைந்திருக்கிறானா?  அந்த வழிகளை நான் எப்படி அமைத்துக் கொடுத்திருக்க முடியும்?

ஆனந்தவிகடன் 30-6-2022

மைத்ரி இணைய பக்கம் விஷ்ணுபுரம் பதிப்பகம் மைத்ரி- அச்சுநூல் வாங்க மைத்ரி மின்னூல் அமேசான் மைத்ரி காமன் போக்ஸ்- அச்சுநூல் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2022 11:35

ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை இயக்கத் தலைமகன்

தமிழியக்கத்தின் முன்னோடிகள் பலருக்கு அரசு சார்ந்த நினைவகங்கள் உள்ளன. பலவகையான ஆய்வரங்குகளும் நூல்களும் உள்ளன. பின்னர் வந்த சாதாரணமான தமிழறிஞர்களுக்கே சிலைகள் உள்ளன. ஆனால் தமிழிசை இயக்கத்தின் தலைமகன் என்று சொல்லத்தக்க தஞ்சை ஆபிரகாம் பண்டிதருக்கு குறிப்பிடும்படியான எந்த நினைவகமும் இல்லை. பெரும்பாலும் அவர் கவனிக்கப்படவில்லை.

இத்தனைக்கும் அவர் செய்த ஆய்வுகளை அவருடைய பேரன் தனபாண்டியன், நா. மம்முது உட்பட ஏராளமான ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வுசெய்திருக்கிறார்கள். சிற்றிதழ்ச்சூழலில் ஆபிரகாம் பண்டிதர் கவனிக்கப்பட்டதே இல்லை. சொல்புதிது இதழ் 2000 த்தில் அவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. நா.மம்முது அவ்விதழில் எனக்கும் வேதசகாயகுமாருக்கும் அளித்த விரிவான பேட்டி வழியாகவே இலக்கிய -அறிவுச்சூழலுக்கு அறிமுகமானார்.

ஆபிரகாம் பண்டிதர் ஆபிரகாம் பண்டிதர் ஆபிரகாம் பண்டிதர் – தமிழ் விக்கி து.ஆ.தனபாண்டியன் து.ஆ.தனபாண்டியன் து.ஆ.தனபாண்டியன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2022 11:34

தாவரங்கள் காத்திருக்கின்றன – லோகமாதேவி

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

கோவிட் தொற்று காலத்தில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறவில்லை. ஆன்லைன்  என்பதை அப்போதுதான் அறியத் துவங்கி இருந்த மாணவர்கள் தட்டுத்தடுமாறி கல்லூரியில் சேர முயன்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்லூரிக்கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி கிடைத்த படிப்பில் சேர்ந்தார்கள்

கடந்த இருவருடங்ளுமே மிக குறைந்த அளவில்தான் தாவரவியல் துறைக்கும் பிற அடிப்படை அறிவியல் துறைகளான இயற்பியல் வேதியியல் ஆகியவற்றிற்கும். மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள்.

பள்ளி இறுதியிலும் நேரடி வகுப்புகள் நடந்திராதலால் இங்கு வந்து சேர்ந்த மாணவர்களுக்கு எந்த அடிப்படை கல்வியறிவும்  ஒழுக்கம் குறித்த உணர்வும் இல்லையென்பது வருந்தத்தக்க விஷயம் என்றால் அதை காட்டிலும் அதிர்ச்சியளித்தது ஆன்லைன் தேர்வுகளில் காப்பி அடித்து பழக்கம் ஆகிவிட்டிருக்கும் அவர்களுக்கு முறையான தேர்வெழுதும் பயிற்சிகளை அளிப்பதில் இருந்த சிக்கல்கள் தான். பெற்றோர்களுக்கும் அப்படி  அவரவர் குழந்தைகள் காப்பியடித்து  தேர்வெழுதியது பெரும்பாலும் தெரிந்திருந்தும் எவரும் கண்டித்திருக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் அவர்களை திருத்தி சரியான வழிக்கு கொண்டு வர  திணறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த வருட மாணவர் சேர்க்கை வழக்கம் போல நேரடியாக கடந்த ஒருவாரமாக நடந்தது. கோவிட் காலத்துக்கு பிறகு பட்டிதொட்டிகளிலெல்லாம் கம்ப்யூட்டர் என்னும் சொல் புழங்கி அனைவருக்கும் பரிச்சயமாகி விட்டிருக்கிறது மேலும் கணிப்பொறித் துறையில் எப்படியும் அறுபதாயிரத்துக்கு குறையாமல் சம்பளம் வரும் என்பதும் மட்டும் தெரிந்திருக்கிறது

சங்கரன் கையேடு

எனவே அடிப்படை அறிவியல் துறைகளில்  சேர்ந்து பயில மாணவர்கள்  தயாராகவே இல்லை பெற்றோர்களுக்கும் அப்படியான  துறைகள் இருப்பதும் அவற்றின்  முக்கியத்துவமும் தெரியவில்லை. 90 சதவீதம் கணினி அறிவியல் படிப்பைத்தான் நாடுகிறார்கள் அவர்களின் குழந்தைகள் பள்ளி இறுதியில் கணினி அறிவியல் படித்திருக்கவில்லையெனினும் எப்படியும் அந்த படிப்பில் கல்லூரியில் சேர முயற்சிக்கிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்த நான் ஒரு மாணவனின் தந்தையிடம் அவர் மகன் பள்ளிப்படிப்பில் கணினி அறிவியல் படித்திருக்காததால் இப்போது அதில் கல்லூரி படிப்பை தொடர முடியாது என்று அரை மணி நேரம் செலவழித்து விளக்கினேன். அவர் பதிலுக்கு ‘’பணம் எத்தனை செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் கம்ப்யூட்டர் சயின்ஸில் ஒரு சீட் வேணுங்க’’ என்றார்.

தாவரவியல் படிப்பின் முக்கியத்துவத்தை கடந்த  வாரத்தில் பலநூறு பெருக்கு நெஞ்சடைக்க, தொண்ட வரள விளக்கினேன் ஆனால் யாருக்கும் புரியவில்லை வேண்டா வெறுப்பாகவும், மிககுறைந்த மதிப்பெண்  பெற்று வேறெங்கும் இடம் கிடைக்காதவர்களுமாக வெகு  சிலரே இத்துறையில் சேர்ந்திருக்கிறார்கள். இதில்தான் சேர்ந்து படிக்க வேண்டும் என்று இரண்டே இரண்டு மாணவிகள் மட்டும்தான் வந்தார்கள்.

எமிலியின் ஒவியம்

என் மாணவிகள் பலர்  கோவையை சுற்றி இருக்கும் நகரங்களில் காஃபி வாரியத்திலும், இந்திய தாவரவியல் அளவாய்வு  அமைப்பு,  வனமரபியல்  மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனங்களில் நல்ல வேலைகளிலும், காட்டிலாகா அதிகாரிகளாகவும், நல்ல ஆராய்ச்சியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள். இனி அப்படியான அமைப்புக்களில் எதிர்காலங்களில் பணியாற்ற எத்தனை பேர் தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்,

கல்லூரிகளில் அடிப்படை அறிவியல் துறைகளின் எதிர்காலம் நிச்சயமற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியின் போதே அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு அத்துறைகளின் மேதைகளை பற்றி, முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் கற்றுத்தரவேண்டும். அப்போதுதான் அப்படியான துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். இப்போதைய பெற்றோர்களும் மருத்துவம், பொறியியல் அடுத்தாக கணினி அறிவியல் இவற்றைத் தவிர தங்கள் குழந்தைகளுக்கு  வேறெதிலும் எதிர்காலம் இல்லையென்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம் குறித்து கவலைப் பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல.

J S Gamble 1847-1925 ல் உருவாக்கிய  flora of madras presidency யின்  அனைத்து தொகுப்புகளும் மிக அரிய பொக்கிஷங்கள். கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் நான் அவற்றை பலமுறை உதவிக்கென எடுத்து வாசித்திருக்கிறேன். அவற்றின் உதவிகொண்டு பல நூறு தாவரங்களை அடையாளம் கண்டிருக்கிறேன், அதைப்போலவே  1817-1911 ல்  Hooker உருவாக்கிய  Flora of British India தொகுப்புக்கள்,  பிலிப் ஃபைசன் 1915 ல்  உருவாக்கிய  பழனி கொடைக்கானல் மற்றும் ஊட்டி மலைப்பகுதிகளில் 6,500 அடி க்கு மேலான உயரத்திலிருக்கும் தாவரங்களை குறித்த அரிய நூலாகிய  flora of Nilgiri and pulny hill tops,   போன்ற நூல்களிலிருந்து பயனடைந்தவர்களே இப்போது இத்துறையில் பணியாற்றும் என்போன்ற ஆயிரக்கணக்கானோர். ஃபைசனின் இந்த நூலத்தொகுப்பு  1975க்குள் 15 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிலிப் ஃபைசனின் நூல்

தமிழ் விக்கியில் இவர்களை குறித்த  பதிவுகள் இருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.ஒரு பதிவை வாசிக்க துவங்கி ஒன்றிலிருந்து அதன் தொடர்புடைய மற்றொன்று என்று தொடர்ந்து வாசிப்பது பழக்கமாகிவிட்டிருக்கிறது  அனைத்தும் அரிய பதிவுகள்

இந்திய தாவரவியல் கழக (Indian Botanical Society) அமைப்பை உருவாக்கி, நடத்த உதவி, அந்த அமைப்பு சார்ந்து இந்திய தாவரவியல் இதழ் (Journal of the Indian Botanical Society) வெளியிடுவதிலும் முன்முயற்சி எடுத்த. ஃபைசனின்  பல மாணவர்களில் முதன்மையானவர்  மா. கிருஷ்ணன்.   கிருஷ்ணன் தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளுக்கு முன்னோடி. மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானவர். இவர் நீர்வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியை பிலிப் ஃபைசனின் மனைவி டயானா ரூத் ஃபைசனிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார். கொடைக்கானலில் ஃபைசனுடன் ஆய்வுக்குச் செல்கையில் புகழ்பெற்ற உயிரியலாளராரும், இந்திய இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவருமான ஆல்பர்ட் பௌர்ன்  மற்றும்  அவரது மனைவி எமிலி டிரீ கிளேஷேர் ஆகியோருடனும் அவருக்கு  தொடர்பு உருவானது.

பௌர்ன்  நீர்வாழ் உயிர்களுக்கும் நீரின் ஆக்ஸிஜன் அளவுக்குமான உறவு பற்றிய முக்கியமான ஆய்வை செய்தவர். ஓவியரான அவர் மனைவி எமிலி இந்தியத் தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.ஃபைசனின் flora of kodaikanal நூலில் எமிலியின் தாவரவியல் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.எந்த வசதியும் இல்லாத அந்தக்காலத்தில்   இத்துறையின் மீதான ஈடுபாட்டினாலும் அப்பணிகளின் எதிர்கால முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருந்ததாலும்  இவற்றை  செய்து முடித்திருக்கிறார்கள் .

நான் இளங்கலை அறிவியல் படித்த அதே துறையில்தான் இப்போது பணிபுரிகிறேன். துறையின் ஆய்வகம் நோய் தொற்றுக் காலத்தில் ஏகத்துக்கும் சேதமடைந்திருந்தது. பல அரிய தாவர சேகரிப்புகள் பூஞ்சைத்தொற்றில் அழிந்திருந்தன. மேலும்  உலர் தாவரங்களில் பலவும் பூச்சி அரித்து வீணாகியிருந்தன. எனவே இரண்டு உதவியாளர்களுடன் பலநாட்கள் செலவழித்து  ஆய்வகத்தை  சமீபத்தில் சுத்தம் செய்தேன்  ஆய்வக அலமாரிகளில் ஒன்றில். மறைந்த என் ஆசிரியரும்  நன்னீரியலில் (Limnology) மிக முக்கியமான ஆய்வுகள்  பலவற்றை  செய்து பல புதிய பாசி வகைகளை கண்டறிந்தவரான திரு சங்கரன் 1972ல் இருந்து 1975 வரை தொடர்ச்சியாக திருமூர்த்திமலை, கொடைக்கானல், வால்பாறை அட்டகட்டி என பல மலைப்பிரெதேசங்களுக்கு பயணித்து அப்பகுதியின் தாவரங்களை பட்டியலிட்ட ஒரு சிறிய நோட்டுப் புத்தகம் குப்பையில்  கிடந்தது.

தான்  பயணித்த  இடங்கள்,  கடல்மட்டத்திலிருந்து அப்பகுதியின் உயரம், நேரம் ஆகியவற்றுடன் 477 தாவரங்களை  பட்டியலிட்டு சிலவற்றை கேள்விக்குறியிட்டும் சிலவற்றை அன்றைக்கு மேலதிகம் தேடி வாசிக்க வேண்டும் என்றும் குறிப்பு எழுதி இருக்கிறார், அவர் அந்த  முக்கியமான ஆய்வை எந்த காரணத்தினால் முடிக்காமல் விட்டிருக்கிறார் என்று  தெரியவில்லை. இந்த பட்டியல் தகவல்களுடன்  மேலும் சில வருட ஆய்வை தொடர்ந்தால் அம்மலைப்பகுதிகளின் flora வை ஃபைசனைப்போல  உருவாக்கிவிடலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் தான் இல்லை. பொக்கிஷமாக இதை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்

ஏன் தாவரவியல் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிக முக்கியமான இது போன்ற ஆய்வுகள் செய்த  ஃபைசன், எமிலி, மா,கிருஷ்ணன்  ஆகியோரின் விக்கி பதிவுகளை வாசித்தால் இத்துறையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். இவர்களை  தமிழ் விக்கி ஆவணப்படுத்தியது எத்தனை முக்கியம் என்பதுவும் புரியும்

அன்புடன்

லோகமாதேவி

மா. கிருஷ்ணன் பிலிப் ஃபைசன்  ஆல்பர்ட் பௌர்ன் எமிலி ட்ரீ கிளெஷேர்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2022 11:33

கட்டண உரை, கடிதங்கள்

வணக்கங்கள்….தாங்கள் நலமா

தாங்கள் திருப்பூரில் “கல்தூணும் கனிமரமும் ” என்ற தலைப்பில் நிகழ்த்திய கட்டண உரை சிறிது காலத்திற்கு பின் யூ டியூப் தளத்தில் கிடைக்கும் என பதிவிட்டிருந்தீர்கள்.

தற்போது அடுத்த கட்டண உரை அறிவிப்பும் வந்தாகி விட்டது, மனம் கனிந்து அந்த உரையினை பதிவிட வேண்டுகிறேன்.

தங்களது திருக்குறள் உரை, கீதை உரை , மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி மற்றும் கல்லெலும் விதை போன்ற விதைகள் போன்ற உரைகள் என்னுடைய வாழ்க்கைப் பார்வையை விசாலப்படுத்தியது.

பொருளாதார மற்றும் லௌகீக சிக்கல்களினால் நேராக வரமுடியாத என் போன்றோருக்கு தங்களை அணுக யூ டியூப் மற்றும் உங்கள் இணையதளம் தானே வழி……

தயவுசெய்து தங்களது உரையை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்…..

அன்புடன்

கந்தசாமி

 

அன்புள்ள கந்தசாமி

அந்த உரை சுருதிடிவியிடம் உள்ளது. அவர்கள் ஏதோ ஒருவகையில் அதை வெளியிடுவதாகச் சொன்னார்கள். எப்போது வெளியிடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன்

ஜெ

 

அன்புள்ள ஜெ

நாமக்கல் உரை பற்றிய அறிவிப்பு கண்டேன்

உங்கள் மற்ற உரைகளில் இருந்து இந்த வகையான உரைகள் மேலும் ஒருபடி மேலே உள்ளன. இவை ஒரு முழுநூலையும் வாசித்து முடித்த அனுபவத்தை அளிக்கின்றன. ஒட்டுமொத்தமான ஒரு பார்வையை உருவாக்குகிறீர்கள். ஒருபக்கம் வரலாறு இன்னொரு பக்கம் தத்துவம். ஆனால் மொழி இலக்கியம்.

எதிர்பார்க்கிறேன்

செந்தில்ராஜ்

அன்புள்ள செந்தில்ராஜ்

இந்த உரைகளை நான் ஒரு தொடராகவே செய்துவருகிறேன். என் நோக்கம் எனக்கே ஒரு விரிந்த பார்வையை உருவாக்கிக் கொள்வது. நான் உணர்ந்து தெளிவுற்றவற்றையே சொல்கிறேன். ஆனால் அவை என்னால் இன்னமும் எண்ணி அடுக்கப்படாதவை. ஆகவே இந்த உரைகள் நன்கு தயாரிக்கப்பட்ட அறைகூவல்தன்மை கொண்ட உரைகள் அல்ல. எனக்கு என்னுடன் பொறுமையாக கூடவரும் ஒரு அவை தேவை.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2022 11:31

இரண்டு பாம்புகள்

போகனின் ஓர் அழகிய கவிதை. தியானத்தில் ஒளிரும் ஒரு கவலையை நாகம் இறக்கி வைத்த மணி என்று சொல்லும் உச்சத்தில் இருந்தே எழுந்து மேலே செல்லும் அரிய படைப்பு

தியானத்தில்

ஒரு கவலை மட்டும்

பிரகாசமாக ஒளிர்ந்தது.

நாகம்

இறுக்கி வைத்த

விஷக்கல்.

நான்

என் தியானத்தால்

அதை

உண்டு உண்டு

செரிக்க முயன்றேன்.

அது இன்னும் கடினமாகி

கடினமாகி

நெற்றி நடுவில்

நீலமாய்ப் பூரித்தது.

நான்

என் சிறிய கவலைகள் எல்லாம்

தாய்ப் பாம்பை நோக்கிச் செல்லும்

பாம்புக்குட்டிகள் போல்

அதை நோக்கி நெளிந்து செல்வதைப்

பார்த்தேன்.

அம்மா

நான் என்ன செய்வேன்.

புவிமேல்

நானொரு மாபெரும்

கவலைத் துளி.

 

ஆனால் இக்கவிதையை வாசித்தபோது முன்பு வாசித்த ஓர் ஆப்ரிக்கக் கவிதை நினைவுக்கு வந்தது. மூலத்துக்காக பழைய புத்தகங்களை தேடியபின் நினைவில் இருந்து எழுதுகிறேன்.

முட்டையிட்டதுமே கைவிட்டுவிட்டு

அக்கணமே மறந்துவிடும்

ஓர் அன்னையைப் பெற

என்ன பிழை செய்தன

இத்தனை பாம்புக்குஞ்சுகள்?

அதே நெளிவு

அதே பயச்சுருளல்

அதே சீற்றப்படம்

ஆனால்

அன்னை அறிவதில்லை.

அருகணைய முடிவதில்லை

நெருங்கினால்

அன்னைக்கு

இன்னொரு பாம்பு

கவ்வமுடிந்தால் இரை

விழுங்கப்பட்ட குஞ்சு

அன்னையை அடைகிறதா என்ன?

 

பெரும்பாலான தவழும் உயிர்களுக்கு அன்னை என்பதே இல்லை. அவை பேணப்படுவதில்லை. எண்ணிக்கையின் பெருக்கத்தால் அவற்றின் மரபு நீடிக்கிறது. ஆயிரம் முட்டைகள் விரிந்து வெளிவரும் ஆமைகளில், தவளைகளில், பாம்புகளில் ஒன்றே உயிர்வாழமுடிகிறது. ஈன்று சாவுக்கு விட்டுக்கொடுத்து சென்றுவிடுகின்றன அன்னைகள். பிறந்த கணம் முதல் சாவுடன் போராடி வென்று நின்றிருப்பது இதோ என் மொட்டைமாடியின் ஈரத்தரையில் தாவிக்குதித்து நின்று கண்விழித்து என்னைப் பார்க்கும் தனித்தவளை. விதியை வென்றவன்!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2022 11:30

July 2, 2022

லோலோ

லோலோ ஃபெராரி (Lolo Ferrari) என்னும் பெயரை கேள்விப்பட்டிருப்பவர்கள் கொஞ்சம் வயதானவர்களாகவே இருப்பார்கள். ஏனென்றால் தொண்ணூறுகளில் புகழ்பெற்றிருந்த அந்த பாலியல்பட குணச்சித்திர நடிகை மறைந்து, அடுத்தடுத்த நடிகைகள் வந்து கால்நூற்றாண்டு ஆகிறது. என்னை விட ஒரு வயதுதான் இளையவர். வாழ்ந்திருந்தால் பாட்டியாக திகழ்ந்திருப்பார். 2000 த்தில் மறைந்தார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ணன் என் கைக்குழந்தை என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது குமுதம் தீராநதி இதழில் வெளிவந்து பின்னர் வாழ்விலே என்னும் தொகுப்பாக ஆகியது. அக்கட்டுரை லோலோ பற்றியது.

லோலோ பெராரி வரலாற்றில் இடம்பெறுவது ஒரு குறிப்பிட்ட காரணத்தால். அந்த அம்மையார்தான் மைக்கேல் ஜாக்ஸனுக்கு நிகராக தன் உடலை அறுவை சிகிழ்ச்சை வழியாக மாற்றிக்கொண்டவர். அவர் தன் உடல்வழியாக பயணம்செய்துகொண்டே இருந்தார் என்று நான் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்

லோலோவின் மார்பகங்கள் அசாதாரணமான அளவுக்கு பெருகவைக்கப்பட்டன. அந்த எடையை தாங்க முதுகெலும்பில் உலோகத்தகடுகள் பொருத்தப்பட்டன. இடை மிகச்சிறிதாக ஆக்கப்பட்டு, அதன்பொருட்டு கருப்பையும் இரைப்பையும் நீக்கப்பட்டன. அவர் புரோட்டின் ஜெல்லி மட்டுமே உண்ணமுடியும். அவர் உதடுகள் பெரிதாக்கப்பட்டன. கண் மாற்றியமைக்கப்பட்டது. அவருடைய பெயர் கூட உண்மையானது அல்ல.

லோலோவின் மூக்கு உதாரண ரோமன் மூக்காக ஆக்கப்பட்டது. ஆகவே மூச்சுவிடமுடியவில்லை. ஆகவே ஆக்ஸிஜன் அறைகளில் வாழ்ந்தார். கடுமையான உடல்வலியால் வலிநிவாரணிகளை உண்டார். உடல் ஒவ்வாமையை தவிர்க்க நோய் எதிர்ப்புசக்தி குறைக்கப்பட்டது. டாக்டர்கள் அவர் உடலில் சோதனைகளை செய்துகொண்டே இருந்தனர்.

லோலோ தன் 38 ஆவது வயதில் மருந்துகளின் ஒவ்வாமையால் மறைந்தார். அதன்பின் அவர் கணவர் கொலைக்குற்றத்துக்கு விசாரிக்கப்பட்டார். ஆனால் லோலோ மறைந்தபோது எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் வழியாக அவரை அறிந்த நான் திகைப்ப்படைந்தேன். அவரை ’மண்ணுக்கு வந்த தேவதை’ என பலர் விம்மியிருந்தனர். அவர் ஒரு பார்பி பொம்மை. தசையில் வடிக்கப்பட்டவர்

ஆணின் அத்துமீறிய கற்பனைக் காமம் உருவாக்கிய பிம்பம் லோலோ.  அவன் பகற்கனவில் உருவான ஓர் உருவம் நோக்கி அவரை செதுக்கிச் செதுக்கி கொண்டுசென்றனர். பலிகொண்டனர்.

நந்திகலம்பகத்தில் வரும் ஒரு பாடல் இது.

(இந்த நூல் சுவாரசியமான சில பின்கதைகள் கொண்டது பார்க்க நந்திக் கலம்பகம் )

கைக்குடம் இரண்டு கனகக் கும்பக் குடமும்

முக்குடமும் கொண்டால் முறியாதோ – மிக்கபுகழ்

வேய்காற்றினால் விளங்கும் வீரநந்தி மாகிரியில்

ஈக்காற்றுக்கு ஆகா இடை

கையில் ஒரு குடம்.மார்பகங்கள் இரண்டும் பொன்னாலான கும்பம் போன்ற குடங்கள். மூன்றுகுடங்களை ஏந்திச்சென்றால் முறியாதா, புகழ்மிக்க நந்தியின் மூங்கில்காற்றில் விளங்கும் மாநகரில் ஈபறக்கும் காற்றுக்கே தாங்கமுடியாமல் துவளும் உன் இடை?

மிகையின் அழகு என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் ஓர் எல்லை வேண்டாமா என்று சொல்லத் தோன்றுகிறது.

சங்ககாலத்துக் கவிதையில் ஒரு சமநிலை உண்டு. ஒன்று யதார்த்தச் சித்திரம். இன்னொன்று அதிலிருந்து எழும் கற்பனை. பசலை படர்தல், கைவளை நெகிழ்தல் எல்லாமே கற்பனையின் விரிவாக்கம்தான். ஆனால் இணையாக மறுபக்கம் உண்மையான வாழ்க்கையின் உணர்ச்சிகளும் சித்திரங்களும் உண்டு.

கற்பனை மேலெழுந்து நிற்பது கம்பராமாயணத்தில். அதிலுள்ள காமம் முழுக்கமுழுக்க நகைகளைச் செதுக்குவதுபோல உருவாக்கப்பட்டது. உருவாக்க உருவாக்க போதாமலாகி, மேலும் மேலுமென்று போய், மிகையாகிவிட்டது. ஆனால் கம்பனின் மிகை என்பது வர்ணனைகளில்தான். நாடகீயத் தருணங்களில் வாழ்க்கையின் சித்திரம் உள்ளது. அது ஈடுசெய்யும் அம்சம்.

கம்பராமாயணத்தை ஒட்டி பின்னர் உருவான புராணங்கள், சிற்றிலக்கியங்களில் கற்பனை மட்டுமே உள்ளது. அனேகமாக வாழ்க்கையே இல்லை. அவர்களின் பெண்கள் எல்லாமே லோலோக்கள்தான். ஆண்களின் கனவை, கற்பனையை, அவற்றின் அத்துமீறலை தங்கள் வடிவமாகக் கொண்ட லோலோக்கள்.

ஆனால் ஈக்காற்று ஒரு நல்ல சொல்லாட்சி

*

நந்திக் கலம்பகம் தமிழ் விக்கி நந்திவர்மன் காதலி தமிழ்விக்கி

வாழ்விலே ஒருமுறை வாங்க

வாழ்விலே ஒருமுறை கடிதங்கள் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2022 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.