முகம் விருது, அன்புராஜ்
கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி
அன்புள்ள ஜெ,
வணக்கம். திரு அன்புராஜ் அவர்கள் முகம் விருதை ஏற்றுக்கொண்டுள்ளமை மகிழ்வளிக்கிறது. எழுத்தாளர் பவா செல்லத்துரை வழியாகவே அவரை அறிந்தேன். அவரின் சிறை அனுபவங்களை விவரிக்கும் உரை ஒன்றை நெடுநாள்களுக்கு முன்பு கேட்டேன். இப்போது நினைவிலிருந்து எழுபவை அடிப்படை உரிமைகளைக் கோரியமைக்காக இருளில் அவர் வாங்கிய எண்ணற்ற அடிகளும், பட்ட துன்பங்களுமே. ஆனால், அம்முயற்சிகளில் அவர் வெல்லாமல் இல்லை. உடன் வாசிப்பு, நாடகம் எனக் கலையின் வழியாக அவரும் சுற்றத்தாரும் அடையாளம் பெற்றமை கலையின் மீதும், வாழ்வின் மீதும் பெரும் நம்பிக்கையை அளிப்பவை. அவருக்கு வந்தனம்.
விஜயகுமார்.
அன்புள்ள ஜெ
அன்புராஜ் அவர்களுக்கு முகம் விருது அளிக்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது. நம் சூழலில் அன்புராஜ் போன்றவர்கள் மிகப்பெரிய முன்னுதாரணங்கள். கலையின் வழியாக மீட்பு என்று நீங்கள் அன்புராஜ் பற்றி எழுதிய கட்டுரை நீண்டகாலம் முன்பு வந்தது. அதுதான் அவரை அறிமுகம் செய்ய எனக்கு உதவியாக அமைந்தது. அறம் தொகுதியில் இடம்பெறவேண்டிய வாழ்க்கை என நினைத்துக்கொண்டேன். அன்புராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
செல்வக்குமார் எம்
Published on July 04, 2022 11:32