Jeyamohan's Blog, page 750
July 6, 2022
மேகனாவும் ஷ்ரேயாவும் -கடிதம்
அன்புள்ள ஜெ
அமெரிக்காவில் நீங்கள் சந்தித்த இரு இளம்பெண்கள் பற்றிய குறிப்பு நிறைவை அளித்தது. அமெரிக்கக் குழந்தைகள் பற்றி நீங்கள் எழுதிவந்த அக்கட்டுரைத் தொடருக்கு அவர்கள் பற்றிய கட்டுரை ஒரு பெரிய ஆதாரமாக அமைந்தது. அத்தகைய குழந்தைகள் உருவாகி வருகிறார்கள். அவர்களிடம் நாம் பேசும் நிலையில் உள்ளோமா, அவர்களுக்காக நாம் அறிவை திரட்டி அளிக்கிறோமா என்பதுதான் இன்றைய முக்கியமான கேள்வி. தமிழகத்தின் சில்லறைச் சாதியரசியலையும், அதன் காழ்ப்புகளையும் வெளிநாட்டிலே பேசிக்கொண்டிருக்கும் கும்பலிடம் நாம் அந்த இளைஞர்களைக் கையளிக்கவேண்டுமா என்று நாம் யோசித்தாகவேண்டும்
ராம்சந்தர்
அன்புள்ள ராம் சந்தர்
ஷ்ரேயா, மேகனா, இருவருமே நுண்ணிய வாசகர்கள். இருவருக்குமே இந்தியாமேல் ஆர்வமிருக்கிறது. வாசிப்பதற்கும் சிந்திப்பதற்குமான பயிற்சியை அங்குள்ள கல்விமுறை அளித்திருக்கிறது. மேகனா மொழியாக்கம் செய்த என்னுடைய கதையை வாசித்தபோது எத்தனை இயல்பாக அந்த தமிழ்க்கதை, அதன் அனைத்து ஆன்மிகமான, பண்பாட்டுரீதியான குறிப்புகளுடன் அமெரிக்கத்தனமாகவும் உள்ளது என்பதைக் கண்டு வியந்தேன். அந்தக்குழந்தைகளைப்போல என எண்ணிக்கொண்டேன். அவர்களே உருவாகி வரும் தலைமுறையியினர்
ஜெ
தமிழ் விக்கிநமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
யானை டாக்டரும் டாப் ஸ்லிப்பும்- கடிதம்
யானைப்பாகன் முருகேசனுடன்அன்புள்ள ஜெ,
உங்களைத் தேடி தேடி படிக்க ஆரம்பித்திருக்கும் வாசகி நான். “அறம் ” மூலமே உங்களின் அறிமுகம்.அதிலிருந்து மீள்வதற்கு இரண்டு நாட்கள் ஆனது. பின் சோற்றுக்கணக்கு.அடடா!! என்ன செய்வதேன்றே தெரியவில்லை. சாப்பாடு பரிமாறும் போது என் கைகள் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்கத் துவங்கிவிட்டேன். சில வாரங்களுக்கு நீடித்தது கெத்தேல் சாகிப்பின் தாக்கம்.
அதற்குப்பின் தான் அறிமுகமானார் டாக்டர்.கே. இரண்டு வருடங்களுக்கு மேலாக இன்னமும் அவர் நினைவில் வராத நாள் இல்லை. யானை டாக்டரைப் பற்றி நான் பேசாத ஆளில்லை. என் நட்பு வட்டம், என் கல்லூரி மாணவிகள், குடும்பத்தினர் அனைவரிடமும் சொல்லி சொல்லி என் ஆவல் தீரவே இல்லை.
ஆனால் பள்ளியில் துணைப் பாடமாக உள்ள யானை டாக்டர் பத்தோடு பதினொன்றாக மட்டுமே நடத்தப்படுவது மிகுந்த வேதனைக்குரியது.நாங்கள் வருடத்திற்கு ஒருமுறை டாப்சிலிப் செல்வதுண்டு. யானை டாக்டர் படித்த பிறகு டாப்சிலிப் பயணத்திற்காக காத்திருந்தேன்.
அந்நாளும் வந்தது.யானை டாக்டரைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள போகிறோம் என்ற ஆவலோடு சென்றேன். ஆனால் அவரது நினைவுப் புகைப்படங்கள் அனைத்தும் இப்பொழுது ஒன்று கூட காட்சிப்படுத்தப்படவில்லை. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறியவை ” உங்களைப் போல பலர் வந்து யானை டாக்டரைப் பற்றி கேட்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தை புனரமைத்த போது பழைய புகைப்படங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு விட்டது.இப்போது யானை டாக்டரைப் பற்றிய எந்த ஒரு விபரமும் அங்கே இல்லை. மிகுந்த ஏமாற்றத்தோடு அறைக்கு திரும்பினோம்.
பின் யானைத்தாவாளத்திற்கு சென்ற போது அங்கே இருப்பதிலேயே முதிய பாகன் ஒருவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு யானை டாக்டரைப் பற்றி தெரிந்திருந்தது. அவர்களைப் பொறுத்தவரை புத்தகம் என்றாலே அது பைபிள் மட்டுமே. அந்த பெரியவர் கேட்டது “யானை டாக்டரைப் பற்றி பைபிளில் எழுதியிருக்கா?அதப் படிச்சுட்டு வந்து தான் விசாரிக்கிறீர்களா” என்று.
அவர் நிஜமாகவே டாக்டர் கே வை பற்றி தான் சொல்கிறாரா? என நிச்சயமாக கூற முடியாவிட்டாலும் ஏதோ ஒரு மகிழ்ச்சி ஒரு ஆறுதல் எங்களுக்கு. நிச்சயமாக யானை டாக்டர் பலர் உள்ளங்கையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி .
தமிழ் விக்கியில் டாக்டர் கே பற்றி மேலும்அறிந்து கொள்ள ஆவலோடு எதிர்பார்க்கும் காத்திருக்கும் உங்கள் வாசகி
– பாபி முருகேசன்.
உத்தமபாளையம்
தேனி மாவட்டம்.
அன்புள்ள பாபி
டாப் ஸ்லிப்பில் இருந்த காட்டிலாகா அதிகாரி ஒருவரின் முயற்சியால் டாக்டர் கே இருந்த இல்லம் அவருடைய நினைவகமாக ஆக்கப்பட்டது. அவர் சென்றதுமே அடுத்துவந்தவர் எல்லாவற்றையும் தூக்கிவீசிவிட்டார் என்று அறிந்தேன். அந்த நினைவகத்தை அமைத்தவர் அபூர்வமானவர். தூக்கிவீசியவர்கள்தான் நம்மில் பெரும்பான்மையினர்.
ஆனால் இக்கதை அவரை வரலாற்றில் நிறுத்தும். கல்விநிலையங்களில் பெயர் கேள்விப்படுபவர்கள் அவரை பின்னர் வாசித்து அறிந்துகொள்வார்கள்.
அன்புடன்
ஜெ
July 5, 2022
வெந்து தணிந்தது காடு, வன்முறை
அன்புள்ள ஜெ
வெந்து தணிந்தது காடு பற்றிய உங்கள் கடிதம் கண்டேன். நான் அரட்டையை வளர்ப்பதாக நினைக்கவேண்டாம். என் கடிதத்தின் உள்ளுறைப்பொருள் இதுதான். எதற்காக நாம் திரும்பத் திரும்ப கேங்ஸ்டர் படங்களை எடுக்கிறோம்? நம் வாழ்க்கையில் துப்பாக்கிக்கு இந்த அளவுக்கு இடம் உண்டா? தப்பாக நினைக்கவேண்டாம்.
கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
கதைகள் பலவகை. அன்றாடத்தின் எளிமை கொண்ட கதைகள் உண்டு. குடும்பச்சூழலில் நிகழ்பவை. அவற்றுக்கு அவற்றுக்கான அழகு உண்டு. சீனு ராமசாமியின் மாமனிதன் அத்தகைய சினிமா. அதிலுள்ள தீவிரம் என்பது அன்றாட வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் உணர்வது.
ஆனால் சினிமாவின் சுவைகள் பலவகை. பெரும்பாலும் உலகமெங்கும் சினிமாக்களில் சாகசம் மிக அடிப்படையான ஒன்றாக உள்ளது. ஏன்?
சாகசம் என்றால் வெறும் அடிதடி மட்டும் அல்ல. ஒரு மனிதன் தன் வாழ்க்கையை விதிக்கு அப்படியே விட்டுக்கொடுப்பது. எந்தப்பாதுகாப்பும் இல்லாமல் நிற்பது. தன் உயிரை வைத்து விளையாடும் ஓர் ஆட்டம் அது
சாகசத்தில்தான் நாம் விதி என்று சொல்லப்படுவதை கண்ணுக்கு அருகே பார்க்கமுடிகிறது. அடுத்த கணம் என்ன நடக்கும் என்று தெரியாமல் வாழ்வது அது. அப்படிப்பட்ட வாழ்க்கை நம்மில் எத்தனைபேருக்கு உண்டு? நம்மில் எத்தனைபேருக்கு வாழ்வா சாவா என்ற கணங்கள் வாழ்க்கையில் அமைந்திருக்கின்றன?
அப்படிப்பட்ட தருணங்களில்தானே ஒரு மனிதனின் உச்சம் என்ன என்று நாம் காண்கிறோம்? மனிதனின் பொதுவான ஆற்றல் என்ன, மனிதனின் பலவீனம் என்ன, மனிதனின் அடிப்படையான உணர்ச்சிகள் என்ன என்பதெல்லாம் வெளிப்படுவது அப்போதுதானே?
அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் குற்ற உலகில் உள்ளவர்கள்தான். காவலர்களில் ஒரு சாரார். மற்ற அத்தனைபேருக்கும் நாளை என்ன நடக்கும், அடுத்த வாரம் என்ன நடக்கும், அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்று தெரியும். அடுத்த முப்பதாண்டுகளை தெளிவாக திட்டமிட்டு வைத்திருப்பார்கள்.
ஆகவேதான் சினிமாக்கள் ’அண்டர்வேர்ல்ட்’ நோக்கிச் செல்கின்றன. அங்கே மெய்யாகவே வன்முறை,சாவு,சாகசம் எல்லாம் உள்ளது. ஆகவேதான் அண்டர்வேர்ல் கதைகள் எடுக்கப்படுகின்றன
அவற்றை பார்ப்பவர்கள் சாமானியர்கள்தான். ஏன் பார்க்கிறார்கள்? அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் எந்த பரபரப்பும் இல்லை. அபாயம் இல்லை. வாழ்வா சாவா நெருக்கடி இல்லை. ஆகவே கற்பனையில் அவற்றை அடையவிரும்புகிறார்கள். அதற்காகவே இப்படங்களைப் பார்க்கிறார்கள்.
அவர்கள் கற்பனையில் அடையும் அந்த வாழ்க்கையின் உச்சதருணங்கள் வழியாக தங்கள் உணர்வுகளையும், தங்கள் சாராம்சமான பலவற்றையும் கண்டடைகிறார்கள். ஆகவே பொதுரசனைக் கலை என ஒன்று இருக்கும் வரை அதன் மைய ஓட்டமாக சாகசமே இருக்கும்.
அவற்றில் கற்பனை மட்டுமேயான ஒரு வெளியில் அதி உக்கிரமாக நடக்கும் கதைகள் உண்டு. நம்பகமான யதார்த்தச் சூழலில் உண்மையில் நடந்தவற்றை மிக அணுக்கமாக ஒட்டி நடக்கும் கதைகள் உண்டு. வெந்து தணிந்தது காடு இரண்டாவது ரகம்
ஜெ
தமிழ் விக்கிஆனந்தரங்கம் பிள்ளை, வரலாற்றில் வாழ்தல்
துபாஷ் ஆனந்தங்க பிள்ளைஆனந்தரங்கம் பிள்ளை பற்றிய இந்த விக்கி குறிப்பு உண்மையில் ஒரு குறுநாவல் போல வாசிக்கத்தக்கது. ஆனந்தரங்கம் பிள்ளை எந்த சாகசமும் செய்யவில்லை. அவர் உண்மையில் ஒரு அதிகாரி. எல்லா உயரதிகாரிகளையும்போல ’சைடுபிசினஸ்’ செய்தவர். ஆனால் அவர் வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்தார். அது பற்றிய தன்னுணர்வுடன் இருந்தார். அந்த தன்னுணர்வே அவரை வரலாற்றில் வாழவைக்கிறது.
ஆனந்தரங்கம் பிள்ளை
ஆனந்தரங்கம் பிள்ளை – தமிழ் விக்கி
தினப்படி சேதிக்குறிப்பு
அமெரிக்கா, கேள்விகள்
தமிழ் விக்கி
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை…
அன்புள்ள ஜெ
வெளிப்படையாக ஒரு கேள்வி. உங்கள் மகனோ மகளோ அமெரிக்காவில் குடியேறி, உங்கள் பேரப்பிள்ளைகள் தமிழே தெரியாமல் அங்கே வாழ்வதை நீங்கள் விரும்புவீர்களா? அவர்களுக்கு உங்கள் பெயரைக்கூட வாசிக்கமுடியாதென்றால் அதனால் வருந்த மாட்டீர்களா?
பெயர் வேண்டாம்
அன்புள்ள நண்பருக்கு,
என்னை உங்களுக்கு பெரிதாகத் தெரியாது என நினைக்கிறேன்.
என் மகள் அமெரிக்காவில் குடியேறுவதை வரவேற்பேன். இந்தியாவில் அவளுக்கு இருக்கும் பல கட்டுப்பாடுகள் அங்கே இருக்காது. அங்கே சுதந்திரமாக வாழவும், விரும்புவதைக் கற்கவும், மேலான ஒரு வாழ்க்கையை அமைக்கவும், மேலான ஓர் ஆளுமையாக அமையவும் அவளுக்கு வாய்ப்புகள் உண்டு. இந்தியாவில் அவள் நிழலுடன் போராடி நீண்ட காலத்தை வீணாக்க நேரலாம்.
ஆனால் மகன் அமெரிக்காவில் குடியேறுவதை விரும்பவில்லை. அவனுக்கு இனி அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழ்ந்து அடைய ஏதுமில்லை. அவன் பயணம் செய்யலாம், கீழைநாடுகளிலேயே அவன் பயணம் செய்யவேண்டும். இந்த ஜூலை இறுதியில் ஓர் ஐரோப்பியப் பயணம் திட்டமிடுகிறான். அந்த பயணத்திலேயே அவன் அதை கண்டடைவான்.
அவனுக்கு வசதியும் மகிழ்ச்சியும்கூட அமெரிக்காவில் கிடைக்கலாம். ஆனால் அவன் இங்கே ஆற்றவேண்டிய பணிகள் மிகுதி என நான் நினைக்கிறேன். அவன் வாழும் பல்லாயிரவரில் ஒருவன் அல்ல. இங்கே பங்களித்துச் செல்லும் மிகச்சிலரில் ஒருவன்.
பேரக் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் வாழ்க்கைச்சூழலை நான் இப்போது கற்பனைகூட செய்யமுடியாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழட்டும். நான் என் எழுத்துக்கள் காலத்தை வெல்லும் என நம்புபவ்ன்
ஜெ
*
அன்புள்ள ஜெமோ
அமெரிக்கக் குழந்தைகள் சார்பாக கடுமையான ஏளனம், வசைகளை நண்பர் குழுக்களில் காணமுடிகிறது. வாட்ஸப் குழுமங்களில்தான். ஒரு நையாண்டி நோட்டோடு உங்கள் கட்டுரையின் சில பகுதிகள் சுற்றிவருகின்றன. இந்த எதிர்வினையை எதிர்பார்த்தீர்களா? சிலர் கடும் மறுப்பை தெரிவித்தனர்.
ராம்குமார் அர்விந்த்
அன்புள்ள ராம்,
அது ஓர் எழுத்தாளனின் குரல். அந்த எழுத்தாளன் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அவன் சொல்வது உங்கள் அனுபவத்துடன் ஒத்துப்போனால் அதைப்பற்றி யோசிக்கலாம். அவன் எவரென்றே தெரியாது, அவன் கருத்துக்களில் மதிப்பில்லை என்றால் அப்படியே கடந்துபோகலாம். அவ்வளவுதான்.
ஜெ
அகழபட்டவை – சந்தோஷ் சரவணன்
தமிழக வரலாற்று மற்றும் கலாச்சார சின்னங்களை பார்ப்பதற்கான ஒரு பைக் பயணத்தை தொடங்கி இன்றோடு இரண்டு இரண்டு வாரங்கள் முடிவடைகிறது. பயணம் முடிந்த பிறகு விரிவாக எனது வலைப்பூவில் பதிவு செய்து, ஒட்டுமொத்த அணுபவங்களை தொகுத்து உங்களுக்கு கடிதமாக எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால், இன்றைய அணுபவத்தை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என தோன்றியதால் இந்த மடல்.
நெல்லையிலிருந்து காலை கிளம்பி மணப்பாடு, திருச்செந்தூர், குலசை, ஏரல் என பார்த்துவிட்டு நவதிருப்பதி தளங்களை பார்க்க தொடங்கியபொழுது, கோவில் நடை சாத்தப்படும் நேரமாகிவிட்டது. நவதிருபதி தளங்களில் உணவு இடைவெளி போல் ஒரு மணிநேரம் தான் நடையடைப்பார்கள் என்பது தெரியாததால்… மாலை தானே நடை திறப்பார்கள், மதியம் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். காலை ஆதிச்சநல்லூர் பகுதியை கடந்து செல்லும்போதே, மதியம் அங்கு செல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன்… அங்கு செல்ல தாமிரபரணியை கடக்க கூகிளிடம் வழி கேட்க… அது அருகில் இருக்கும் சிவகளை அகழாய்வு பகுதியையும் காட்டியது. எனவே முதலில் அங்கு சென்றேன்.
அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியகங்களில் சிறுவயது முதலே பார்த்து வருகிறேன். அகழாய்வு நடந்த குழிகளின் புகைப்படங்களும் கிடைக்கும். குழிகளின் மாதிரிகளை தமிழக அரசு காட்சிபடுத்தி வருகிறது. குறிப்பாக கீழடி சார்ந்தவை. ஆனாலும், அகழும் பணி எப்படி நடக்கிறது என்பதை அறிந்ததில்லை.
இன்று ஆதிச்சநல்லூர் செல்ல திட்டமிட்டபொழுது கூட, அகழாய்வுகள் நடந்த இடங்களில் ஆய்வுக்குழிகள் மூடப்பட்டிருக்கும். பார்க்க எதுவும் இல்லை என்றாலும் பெருங்கறகால மனிதன் வாழ்ந்த இடத்தில் நிறக்கபோகிறோம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.
அதே போல்.. சிவகளைக்கு சென்ற பொழுது, அங்கு முதலில் மணல்பரப்பை மட்டுமே கண்டேன். வண்டியை நிறுத்தி, சுற்றிப்பார்ப்போம் என நடக்கத்தொடங்கியபொழுது, அதன் மற்றொரு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அகழாய்வு முடிந்த குழிகள் மீண்டும் மண் இட்டு நிரப்பப்பட்டுவிடும். அகழ்ந்து முடித்த குழிகளை தார்ப்பாயால் முடி வைத்திருந்தனர். சிலகுழிகள் தகரபலகைகளால் முழுவதாகவே மூடப்பட்டிருந்தன. இரண்டு குழிகளில் நான் செல்லும் பொழுது வேலை நடந்துக்கொண்டிருந்தது. இடம் குறிக்கப்பட்ட முதல் குழியில் அப்பொழுதுதான் தரை நிலையிலிருந்து தோண்ட தொடங்கியிருந்தனர். வீட்டில் செடி நட சிறு குழி தோண்டுவதென்றாலே, மண்வெட்டியோ கடப்பாறையோ கொண்டு தான் தொடங்குவோம். ஆனால் 6 – 10 அடி குழி தோண்ட அவர்கள் குத்துக்கோடரியை (pickaxe) உபயோகித்துக்கொண்டிருந்தனர். ஒரு நேரத்தில் ஒரு விரலுக்கும் குறைவான அளவே ஆழம் தோண்டினார்கள். இன்னொரு குழியில், இப்படி தோண்டப்பட மண்னை கொள்ளறு மூலம் எடுத்து ஒரு இடத்தில் குவித்து, மிக கவணமாக மண்ணை குழிக்கு வெளியே கொட்ட மட்டும் மண்வெட்டியை உபயோகித்துக்கொண்டிருந்தனர். ஒரு குழியை இப்பொழுது தான் தோண்ட துவங்கினார்கள். ஆழமாக இருந்த இன்னொன்றிலும் தொல் எச்சங்கள் எதுவும் இல்லை.
அடிக்கும் பேய் காற்றில் திறந்தால் அவற்றை மீண்டும் மூடுவது மிகவும் கடினமாக இருக்கிறது என்பதால் அகழ்வு முடிந்து தார்பாயால் மூடியிருந்த குழிகளை திறந்து காமிக்க மிகவும் தயங்கினர். அருகிலேயே ஒரு குழியின் மாதிரியை தமிழக அரசு காட்சிக்கு வைத்திருந்தது.
இந்த அகழ்வாராய்ச்சியை பார்த்தது ஒரு புது அனுபவமாக இருந்தது.. ஆனால், அது ஆதிச்சநல்லூரில் நான் பார்க்கப்போவதை புரிந்துக்கொள்ள அடிப்படையாக அமையும் என்பதை அப்பொழுது உணரவில்லை.
அவர்கள் உணவு இடைவெளிக்கு சென்றபின் கிளம்பி ஆதிச்சநல்லூர் சென்றேன். ஆதிச்சநல்லூர் மணல்மேடு அகழாய்வுகள் நிகழ்ந்த இடம் என அறிவேன். அங்கு அரசின் தகவல் பலகைகள் இருந்தாலும், அகழாய்வுகள் நடந்துக்கொண்டிருப்பதற்கான எந்த குறியீடும் இல்லை. கரடுமுரடான பாதையில் வண்டியில் கொஞ்ச தூரம் சென்று, பிறகு நடந்து சென்றால்… அதன் மறுபகுதியில் அகழாய்வு நடந்த குழிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும், ஐந்து iconic archeological destinationsல் தென் இந்தியாவில் இருக்கும் ஒரே இடம் ஆதிச்சநல்லூர். மற்றவை ராக்கிகரி (பிஹார்), ஹஸ்தினாபுரம் (உபி), தோளவிரா (குஜராத்) மற்றும் சிவ்சாகர் (அஸாம்). அதன் ஒரு பகுதியாக இங்கு மூலஇடம்மாறா அருங்காட்சியம் (in situ museum) அமைக்கப்படவுள்ளது. அதற்காக இந்த குழிகள் பாதுகாக்கப்படுகின்றன. பல்வேறு அளவிலான முதுமக்கள் தாழிகளும் மண்பாண்டங்களும் அங்கு காண கிடைக்கின்றன.
அதன் பிறகு, சாலையின் மறுபக்கம், பாண்டியராஜா கோவிலுக்கு அருகில் இருக்கும் அகழாய்வு பகுதிகளுக்கு சென்றேன். அங்கு அகழாய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வேலை நடைபெற்றுக்கொண்டிருந்த குழிகளில் முதுமக்கள் தாழிகளையும் காண முடிந்தது. 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, அதே தாமிரபரணி கரையில் ஆதிமனிதன் ஈமசடங்குகளை செய்வதை கற்பனையில் எண்ணிபார்ப்பதே பரவசமாக இருந்தது. மேலும், மண்ணிலிருந்து பழங்காலம் எழுந்து வருவதை காண்பது உணர்ச்சிகரமான தருணம்.
சிவகளை ஆய்வுகள் மாநில அரசின் தொல்லியல் துறை முன்னெடுப்பிலும், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதி ஆய்வுகள் மத்திய அரசின் தொல்லியல் ஆய்வகத்தின் முன்னெடுப்பிலும் நடைபெற்று வருகின்றன. மத்திய மாநில அரசு என்ற வித்தியாசமா, அல்லது ஆதிச்சநல்லூரில் பொருட்கள் கிடைத்ததாலோ என்னவோ… ஆதிச்சநல்லூரில் மேலும் பொறுமையுடன் கவனமாக அகழாய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சிவகளையில் குழிக்குள் கொஞ்சம் வேகமாக தோண்டிக்கொண்டிருந்தனர். ஆனால், இங்கு குழிக்குள் கொள்ளறு அல்லது பிரஷ்ஷின் மூலம் மட்டுமே மண்ணை அகற்றிக்கொண்டிருந்தணர். வெளியே கொட்டப்படும் மணலையும் அதிலிருக்கக்கூடிய பாணை துண்டுகள் போன்றவற்றிற்காக ஜலித்து ஆய்வு செய்துக்கொண்டிருந்தனர்.
கிட்டதட்ட ஒரு மணிநேரம், அந்த சூழலை பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். பானை துண்டுகள், மூடியின் அலங்கரிக்கப்பட்ட பிடிகள் போன்றவை வெளிவந்துக்கொண்டிருந்தன. இதுவும் வரலாறு உருவாகி வருவது தானே?! நேற்றில்லாத ஒரு வரலாற்றை இந்த கண்டுபிடிப்புகள் உருவாக்கி அளிக்கின்றன.
4,000 ஆண்டுகளுக்கு முன் இடுகாடாய் உபயோகப்படுத்தப்பட்ட நிலம் இன்றும் அதன் தன்மை மாறாமல் இருக்கிறது. ஆதிச்சநல்லூர் பகுதி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என நண்பர்கள் கூறலாம், ஆனால் அந்த கட்டுப்பாடுகள் இல்லாமலும் அப்படி தான் இருந்திருக்கும் என நம்புகிறேன். சிவகளையில், அகழாய்வு பகுதியில் 20ம் நூற்றாண்டின் இறுதியை சேர்ந்த கல்லறைகள் காண கிடைக்கின்றன.
பிம்பேத்கா குகைகள் போல் தொல் மனிதர்கள் வாழ்ந்த இடங்களை பார்த்திருக்கிறேன், ஆனால் அது இன்று வரை தொடர்வதில்லை. சில நூற்றாண்டுகள் பழைய கோவில்களில் அந்த தொடர்ச்சியை காண முடிகிறது… ஆனால் ஆயிரமாண்டு பழைய கோவில்கள்.. மாமல்லபுரம், கைலாசநாதர் கோவில்கள் போன்றவை, மக்களின் வாழ்விலிருந்து விலகியதாக தான் கிடைக்கின்றன. அந்த பிண்ணனியில், 3,000 – 4,0000 ஆண்டுகளுக்கான ஒரு தொடர்ச்சியை கண்டது… காலத்தின் பிரமாண்டத்தின் முன் பணிந்து நிற்கும் தருணமாக அமைந்தது.
இந்த நெகிழ்விலிருந்து வெளிவந்து.. சில நேரம், அந்த பகுதியில் நடந்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அங்கிருந்த இந்திய தொல்லியல் அமைப்பின் மேற்பார்வையாளர் மணிகண்டன் அவர்களை சந்தித்தேன். அகழாய்வு, ஆதிச்சநல்லூர், தமிழர் வரலாறு, இந்திய வரலாறு என சில மணிநேரங்கள் அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பகிர்ந்த தகவல்களை கொஞ்சம் மற்ற தரவுகள் மூலம் மேம்படுத்தி கீழே கொடுத்துள்ளேன்..
ஆதிச்சநல்லூரில் முதல் அகழாய்வு 1876ல் ஜெர்மனியை சேர்ந்த Dr F Jagor (ஜாகோர்) அவர்களால் செய்யப்படுகிறது. பிறகு இந்திய தொல்லியல் அமைப்பின் சார்பில் Alexander Rea (அலெக்சாண்டர் ரீ) தலைமையில் 1899 முதல் 1904 வரை ஆய்வுகள் நடைபெற்றன. அதன் நெடுங்காலம் பிறகு முனைவர் சத்தியமூர்த்தியின் தலைமையில் 2004-06 காலத்தில் ஆகழாய்வுகள் நடைபெற்றன. அதன் பிறகு 2021ல் தொடங்கிய இந்த அகழாய்வு மூலஇடம்மாறா அருங்காட்சியம் அமைப்பதற்காக தொடங்கப்பட்டது. (சத்தியமூர்த்தி தன் அகழ்வுகளில் கண்டடைந்தது மீதான ஆய்வுகள் 15 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அரசியலை விட்டுவிடுவோம்).
பாதுகாக்கப்பட்ட பகுதி 114 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பகுதியின் மொத்த பரப்பளவு 125 ஏக்கர் எனவும் கூறப்படுகிறது. ஆய்வுகளை ஒழுங்குபடுத்த இந்த பகுதி கட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் தனி தனியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு ஆவணச்செய்யப்படும்.
ஆகழ்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு சேதம் ஏற்படக்கூடது என்பதால் மிகவும் பெதுவாக கவனமாக மட்டுமே இந்த செயல்கள் நடைபெறும். ஒரு நாளுக்கு சில centimetre அளவிற்கு தான் தோண்டப்படும். மேலும் இப்படி செய்யும் பொழுது, தாழிக்கு மேல் அவர்கள் எதாவது கல் குறியீடுகளை விட்டுச்சென்றிருக்கிறார்களா என கவனிக்க முடியும். சென்ற ஆய்வு வரை, தாழிகளை கண்டடைவது மட்டுமே நோக்கமாக இருந்தது. இப்பொழுது கவனித்ததில் தாழியை புதைத்து அதன் மீது கற்களை சில அமைப்புகளில் வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தோம் என மணிகண்டன் தெரிவித்தார்.
இவை அனைத்தும் ஏற்கனவே கற்கால மணிதன் தோண்டி, புதைத்து வைத்த இடங்கள்.
ஒரு குழியை தோண்ட தொடங்கி, கிடைக்கும் தரைபரப்பு மிகவும் கடினமாக இருந்தால் அங்கு மேலும் தோண்ட வேண்டிய அவசியமில்லை. அதுவே ஒரு பகுதியில் இருக்கும் மண் மிகவும் இளகுவாக இருந்தால் (loose sand) அது ஏற்கனவே தோண்டி, கற்களை எல்லாம் நீக்கப்பட்ட மணலால் மூடப்பட்ட இடம் (pit) என கருதி மிக ஆழமகா தோண்டப்படும். அப்பகுதியில் பெரும்பாலும் தாழிகள் கிடைக்கும்.
மழை உட்பட இயற்கை காரணங்களால் மண் இருகுவது மற்றும் தளர்வதால் பாதிக்கப்பட்டு தாழிகள் உடைகின்றன. உடைந்த தாழிகளுக்குள் மண் நிறைந்து விடுகின்றன. சில தாழிகளே உடையாமல் கிடைத்திருக்கின்றன. தாழிகள் உள்ளே மற்றும் அருகே, ஜெகோர் மண்பாண்டங்கள் மற்றும் இரும்பு கருவிகள் கிடைத்ததாக பதிவு செய்துள்ளார். ரீ, இரும்பு கருவிகள், ஆயுதங்கள், கல் கருவிகள் பற்றி குறிப்பிடுகிறார். மிக குறைவாக செப்பு மற்றும் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறார். சில இடங்களில் ஈமப்பொருட்கள் தாழியின் உள்ளும், சில இடங்களில் தாழியின் வெளியேவும் கிடைத்துள்ளன.
இரண்டு வகையான தாழிகள் கிடைக்கின்றன. பழமையான (~850 ஆண்டுகள் பொது யுகத்திற்கு முன்) சிவப்பு மண்பாண்ட தாழிகள், பெரிய அளவில் கையால் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. இதில், இறந்தவர்களை முழுமையாக அமரவைத்து புதைத்துள்ளனர். (Primary burial). காலத்தால் பிந்தைய கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள் அளவில் சிறியவையாக இருக்கின்றன. அவை குயவர் சக்கரங்களின் உதவியால் செய்யப்பட்டவை. அவற்றில் எலும்புகளின் சில பகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன. (secondary burial)
மணிமேகலை,
“சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்
தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்”
என ஈமசடங்குகளுக்கான முறைகளை வகுக்கிறது. இதில் இடுவோர் என்பது குறிப்பிடுவது போல் உடலை விலங்குகளுக்கு இரையாக்கி, சில காலம் கழித்து அவர்களின் எஞ்சிய பாகங்கள் மட்டும் தாழியில் இடப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறார்கள். (நீலகிரியில் வாழும் தொதவர் / தோடவர் இனமக்கள் இரண்டு நிலை ஈமசடங்குகளை பின்பற்றுவதை பார்க்கலாம்).
சில தாழிகளில் எரிந்த எலும்புகள், சாம்பல்கள் போன்றவையும் கிடைக்கின்றன. எலும்புகள் எதுவும் இல்லாமலும் சில தாழிகள் கிடைக்கின்றன.
கற்கால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தார்கள். அவர்களின் எச்சங்களும் குகைகளில் கிடைக்கின்றன. கற்காலத்தின் இறுதி.. இரும்புக்கால எச்சங்கள் குன்றுகளில் கிடைக்கின்றன.. என்பதால் இரும்பு கால மனிதன், விவசாயத்திற்கு நதிகரைகளில் தங்குவதற்கு முன், குன்றுகளில் வாழ்ந்தான் என நினைத்திருந்தேன். அவ்வாறு வாசித்ததாகவும் நினைவு. ஆனால், ஆதிச்சநல்லூர் அந்த தவறான புரிதலை மாற்றி அமைத்தது.
மேச்சலுக்கும், விவசாயத்திற்கும் உதவாத இந்த பரம்பு பகுதியில் மனிதன் வாழ்ந்திருக்கவில்லை. அவன் அருகே வளமான பகுதியில் வாழ்ந்து, பரம்பை தனது சுடு/இடுகாடாக பயன்படுத்தி வந்திருக்கிறான் என்பதை காண முடிகிறது.
ஆதிச்சநல்லூர் பரம்பை உபயோகித்த மனிதர்கள் எங்கு வாழ்ந்திருப்பார்கள்? நதியின் மறுபக்கத்தில், மண்பானை துண்டுகள் அதிகமாக கிடைக்கும் ஒரு பகுதி அவர்கள் வாழ்ந்த இடமாக இருக்கலாம் என கருதப்பட்டாலும், ஜீவநதியான தானிரபரணியை, அதுவும் மழைக்காலங்களில் கடந்து ஒவ்வொருமுறையும் இங்கு வந்திருக்க வாய்ப்பு குறைவு என்பதால், ஆற்றின் கிழக்கு கரையிலேயே சாத்தியமான இடங்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். முதல்கட்ட அகழாய்வின் படி, பரம்பிற்கு தென்கிழக்கே, தற்கால ஆதிச்சநல்லூர் கிராமத்தின் பின் தற்பொழுது ஏரி இருக்கும் பகுதியில் இந்த மக்களின் வாழ்விடம் அமைந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.
—-
இந்த உரையாடலுக்கு பிறகு, இந்தியாவின் முதல் குடைவரையான பராபர் குகைகள், மகாராஷ்டிராவில் உள்ள குடைவரைகள் குறித்தும் மணிகண்டன் பேசிக்கொண்டிருந்தார். மாலை 5 மணி அளவில்… ஏழடிக்கும் ஆழமான ஒரு குழியை தோண்டிக்கொடிருந்த ஒரு நபருக்கு உதவ மணிகண்டனே குழிக்குள் இறங்க… நான் அவரிடம் விடைபெற்று… ஆதிச்சநல்லூர் ஏரியை பார்த்துவிட்டு திரும்ப இந்த பகுதிக்கு வரும் வழியில், அருகிலுள்ள பாண்டியராஜா கோவில் பூசாரி, கோவிலுக்கான தீபத்தை புளியங்குளம் ஊரின் உள்ளே இருந்த கோவில் வீட்டிலிருந்து எடுத்து வந்துக்கொண்டிருந்தார்…
இவ்வகை சடங்கை முதன்முதலில் பார்க்கிறேன் என்பதால்… அங்கிருப்பவர்களிடம் பேசி… கோவில் வீடு, தீப வழிப்பாடு, கட்டுப்பெட்டி, சாமியாடுதல், ஆண்டுக்கு இரண்டு முறை கொடை என உறைந்த வரலாற்றிலிருந்து வாழும் வரலாற்றுக்குள் நுழையதொடங்கினேன்… அவற்றை விரிவாக தனியாக எழுதுகிறேன்..
இன்றைய நாள் மணப்பாடு கரையில் ஆழி சிறுகதையை மறுவாசிப்பு செய்து… அந்த சூழலின் அழகில் திளைப்பதில் தொடங்கி… கற்காலம் வழியாக நீண்டு ஶ்ரீவைகுண்டத்தில் நாயக்கர்களின் ராம லக்ஷமண சிலைகள் வரை விரிந்து நிறைவாக முழுமையடைந்தது.
July 4, 2022
நாமக்கல் கட்டண உரை, நிறைவு
நாமக்கல் கட்டண உரைக்கு இனிமேல் எவரும் பணம் கட்டவேண்டியதில்லை. இடங்கள் நிறைந்து விட்டன. இடங்கள் முன்னரே நிறைந்துவிட்டாலும் செய்தித்தொடர்பு சிக்கலால் விளம்பரம் நீடித்தது. ஆகவே நேற்று முன்தினம் வரை பதிவு செய்தவர்களுக்கு ஒருவழியாக இடம் ஒதுக்கிவிட்டனர். மீண்டும் பலர் முன்பதிவுசெய்வதாக தெரிகிறது. இனிமேல் எவரையும் அனுமதிக்க இடம் இல்லை என அமைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்
ஜெ
அஞ்சலி- பீட்டர் புரூக்ஸ்
மகாபாரதத்தை நீண்ட நாடகமாக அரங்கேற்றியவரான பிரிட்டிஷ் இயக்குநர் பீட்டர் புரூக்ஸ் காலமானார். அவருக்கு அஞ்சலி
களிற்றியானை நிரை – செம்பதிப்பு – முன்பதிவு
களிற்றியானை நிரை – செம்பதிப்பு – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்து நான்காவது நாவல் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். 816 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 1200/-. (இப்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இடம்பெறவில்லை)
முன்பதிவுத்திட்டத்தில் வெளிவரும் இந்நாவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் பதிப்பக தள நிரலிலும் 9080283887 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் ஆர்டர் செய்யலாம். விபிபியில் புத்தகங்கள் அனுப்பி வைக்க இயலாது. முன்பணம் செலுத்துபவர்களுக்கே முன்பதிவு செய்யப்படும்.
இந்நாவலை ஜுலை 25-ம் தேதி முதல் அனுப்பத்துவங்குகிறோம். எனவே முன்பதிவு செய்பவர்களுக்கு அவர்கள் பெயர் குறிப்பிட்டு ஆசிரியரின் கையொப்பம் வேண்டுமெனில் முதல் ஆறு நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். பைண்ட் செய்யப்பட்ட பிறகு பெயர் குறிப்பிட்டு கையொப்பம் பெற இயலாது.
முன்பதிவுக்கு :
https://www.vishnupurampublications.com/product/kalitriyaanainirai/
முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:
முன்பதிவு செய்தவர்களுக்கு பதிவு எண்ணுடன் (info@vishnupurampublications.com லிருந்து) ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். புத்தகங்கள் அனுப்பத்தொடங்கியவுடன் வாட்ஸப்பில், மின்னஞ்சலில் தெரிவிக்கிறோம்.
முன்பதிவு செய்பவர்கள் எந்தப்பெயரில் கையொப்பம் வேண்டும் என்பதைக் குறிப்பிடவும்.
முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.
ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் 9080283887 என்ற எண்ணில் அழைக்கலாம்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
இணைய இதழ்கள், இனியான அறிவுச்சூழல்
பா.ராகவன் (மெட்ராஸ் பேப்பர்)அன்புள்ள ஜெ
மெட்ராஸ் பேப்பர் , கிழக்கு டுடே பத்திரிகைகள் பற்றி எழுதியிருந்தீர்கள். இன்று ஏராளமான இணைய இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றில் ஏராளமான கட்டுரைகள் கதைகள் வெளியாகின்றன. முன்பு அச்சுப்பத்திரிகை என்றால் ஒரு பக்க எல்லை வரையறை இருந்தது. ஆகவே இஷ்டத்துக்கு விஷயங்கள் கிடையாது. எல்லாவற்றையும் படித்தாலும் ஞாபகம் நின்றது. இன்றைக்கு இணையம் என்பதனால் பக்க அளவே இல்லை. இவ்வளவு படிக்கவேண்டிய விஷயங்கள் வந்துகொட்டினால் எதை படிப்பது? வல்லினம், அருஞ்சொல், அகழ், மயிர், தமிழினி, கனலி, ஓலைச்சுவடி என்று பல இணைய இதழ்கள். நான் வாசிப்பவை மறந்துவிடுகின்றன. ஆகவே இதைக் கேட்கிறேன். இந்த இதழ்களில் எதிர்வினைகளை போடுவதில்லை. மட்டுறுத்தப்பட்ட எதிர்வினைகளை போடுகிறார்கள். இந்த சூழல் சரியா என்று தெரியவில்லை.
சபரிகிருஷ்ணா
சமஸ், அருஞ்சொல்அன்புள்ள சபரி கிருஷ்ணா,
இதையே ஒரு பைசா செலவில்லாமல் இவ்வளவு படிக்கக் கிடைக்கிறது, ஒரு கைபேசியில் எங்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று யோசித்தால் எவ்வளவு பெரிய கொடை இது என்று நினைக்கத் தோன்றும். உலக அறிவு நம் கைக்கு வருகிறது. அதற்கு நாம் எல்லை வகுக்கவேண்டுமா? இன்றைய உலகம் அறிவுக்கொந்தளிப்பு கொண்டது. நாம் மிகமிகப் பின்தங்கியிருக்கிறோம். நமக்கு இன்னும் இன்னும் இதழ்கள் தேவை. சொல்லப்போனால் இவ்விதழ்களை கல்லூரிகளில் என்று மாணவர்கள் படிக்கிறார்களோ அன்றுதான் நாம் உண்மையான அறிவியக்கம் நோக்கிச் செல்கிறோம்
நீங்கள் என்னைவிட ஒன்றும் ’பிசியானவர்’ அல்ல என நினைக்கிறேன். தமிழிலேயே அதிகமான சினிமாக்களுக்கு ஒரே சமயம் பணியாற்றுபவன் நான். ஒரு கலைக்களஞ்சியத்தையே தயாரிக்கிறேன். ஒவ்வொரு நாளும் இணையத்தில் எழுதுகிறேன், வாரம் இரண்டு நூல்களாவது படிக்கிறேன், கேரள வரலாறு சார்ந்த ஆய்வுக்குழுக்களில் விவாதிக்கிறேன்…. இதைத்தவிர பயணங்கள்,சொற்பொழிவுகள்…. ஆனால் நான் பெரும்பாலும் எல்லா இணையதளங்களையும் படிக்கிறேன். எனக்கு நேரமிருக்கிறது.
கோகுல் பிரசாத், தமிழ்னிஎப்படி? சில நெறிகளை கவனியுங்கள். அது முக்கியம். எந்த இதழிலும் எல்லா பக்கங்களும் நமக்குரியவை அல்ல. இது ஒரு சூப்பர் மார்க்கெட். நமக்கு தேவையானவற்றை மட்டும் படிக்கலாம். எந்த கட்டுரையையும் அது எதைப்பற்றியது என்று ஓரிரு பத்தி படித்து பார்த்துவிட்டு மேலே படிக்கவோ படிக்காமலிருக்கவோ செய்யலாம். நான் பொதுவாக நீண்ட அரசியல் அலசல்கள், பொருளியல் அலசல்கள், அரசியல்வாதிகளின் பேட்டிகளை கவனிப்பதில்லை. சினிமா விமர்சனங்களை ஒரு வரிகூட படிக்க மாட்டேன். சூப்பர் மார்க்கெட்டில் விதவிதமான ஆயத்த உணவுகள் குவிந்துகிடக்கும். இன்றுவரை எதையும் வாங்கியதே இல்லை.
எனக்குரியவை இலக்கியம், தத்துவம், வரலாறு போன்றவை. அவற்றை படிப்பேன். இன்றைய அறிவுச்சூழலில் ஒருவர் தன் களம் என்ன என்பதை முடிவுசெய்தாகவேண்டும். உலகிலுள்ள எல்லாவற்றிலும் ஈடுபடுவேன் என்பது எதையும் செய்யாமல் இருப்பதற்குச் சமம். எங்களூரில் ‘நாய் சந்தைக்கு போனதுபோல’ என்பார்கள். எல்லாவற்றையும் மோந்துபாத்து ஆங்காங்கே இரண்டு துளி சொட்டி கமெண்ட் போட்டு திரும்புதல்.
படிப்பவை மறந்துவிடும் என்பது ஒரு சிக்கல்தான். ஆனால் ஒரு வலைப்பூ தொடங்குங்கள். படித்து உள்வாங்கிய எதைப்பற்றியும் ஒரு பத்தியாவது எழுதி வையுங்கள். நான் என் கணிப்பொறி கோப்பில் வைத்திருப்பேன். பின்னர் தேவைப்படும். அல்லது சொல்லி பதிவுசெய்து எங்காவது சேமியுங்கள். இப்போதெல்லாம் நடை செல்லும்போது படித்தவற்றை நான் பேசிப் பதிவுசெய்கிறேன். எதைப்பற்றியானாலும் நீங்களே சொந்தமாக எதையாவது எழுதவோ, சொல்லவோ செய்துவிட்டால் அது உங்களுடைய சிந்தனை. அது மறக்காது.
விக்னேஷ்வரன் கனலிசிந்தனை என்பது நினைவுகளின்மேல் கட்டப்படுவது. தரவுகள், கருத்துக்கள் நினைவில் இருந்தால்தான் அவற்றைக்கொண்டு மேலே சிந்திக்கமுடியும். ஆகவே நினைவு மிக முக்கியமானது. அதற்கு அவற்றை நம்முள் நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு மிகச்சிறந்த வழி இதுவே.
ஒரு முக்கியமான விஷயம். ஒரு கட்டுரை படிக்கிறீர்கள். அக்கட்டுரை பற்றி அந்த இதழின் ஆசிரியரால் அளிக்கப்படாத எந்த எதிர்வினையையும் படிக்காதீர்கள். நம் வம்புமனம் அந்த கட்டுரைமேல் செய்யப்படும் விவாதங்கள், கருத்துரைகளை நோக்கி நம்மை இழுக்கும். ஆனால் அவை அக்கட்டுரையை நாம் புரிந்துகொண்டிருக்கும் விதத்தை சிதறடித்துவிடும். ஏனென்றால் இங்கே நிகழும் விவாதங்களில் பெரும்பாலானவை குதர்க்கங்கள், திரிப்புகள், உள்நோக்கம் கொண்ட திசைதிருப்பல்கள் மற்றும் வசைகள்.சரி, எதிர்வினைகள் மட்டுறுத்தப்பட்டால் எப்படி கருத்து சொல்வது?
ஜேவ கரிகாலன், யாவரும்அந்த இதழின் தரத்துக்கு ஏற்பநீங்கள் ஏன் எதிர்வினை ஆற்றக்கூடாது? எல்லா இடத்திலும் நம்முடைய இரண்டு சொட்டு உதிர்ந்தாகவேண்டுமா என்ன? எதிர்வினைகளை குறைந்தபட்சம் ஓர் ஆசிரியருக்கு மதிப்பு தோன்றும்படி நம்மால் எழுத முடியவில்லை என்றால் நாம் எவரை பாதிக்கப்போகிறோம்? சுவாரசியமாக, செய்திகளுடன், சமநிலையுடன் எதிர்வினை ஆற்றிப் பழகலாமே. அது நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்வதல்லவா? அப்படி ஓர் இதழ் எதிர்வினைகளை நிராகரிக்குமென்றால் அதுவே நமக்கு ஒரு சவாலாக ஏன் ஆகக்கூடாது?
அனோஜன், அகழ்நீங்கள் ஒவ்வொரு நாளும் பத்து கட்டுரை படிக்கிறீர்கள். அவற்றுக்குமேல் நிகழும் விவாதங்களையும் கவனிக்கிறீர்கள். இப்படியே ஓராண்டில் முந்நூறு கட்டுரைகளை வெவ்வேறு களங்களில் படித்துவிட்டீர்கள். என்ன மிஞ்சும்? நான் சொல்கிறேன், ஒன்றுமே மிஞ்சாது. ஏன்? கட்டுரை ஒரு கோலம். அதற்கொரு கட்டமைப்பு உள்ளது. அதன்மீதான தாறுமாறான விவாதம் கோலத்தை காலால் அழித்துவிடுவதுபோல. அதன்மேல் அடுத்த கோலம். முந்நூறாவது கோலமும் அழிந்து வெறும் கோலப்பொடி கலங்களே உங்களுக்குள் எஞ்சும்.
எல்லாரும் எங்கும் எதையும் பேசுவதை ‘ஜனநாயகம்’ என அபத்தமாகச் சிலர் புரிந்து வைத்திருப்பதுண்டு. ஒன்றை பற்றி படித்தவன் அதைப்பற்றி படிக்காதவனிடம் விவாதிப்பதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல, அது கோமாளித்தனம். நான் ஒருவரிடம் எதையாவது விவாதிப்பேன் என்றால் அவர் எனக்கு எதையாவது புதிதாகக் கற்பிக்கவேண்டும். இல்லை என்றால் அவர் என் உலகிலேயே இல்லை.
நவீன், வல்லினம்உதாரணமாக, மெட்ராஸ் பேப்பர் இதழில் அதன் ஆசிரியர் பா.ராகவன் பரிந்துரை செய்யாத எதையும் படிக்கவேண்டாம். வெளியாகும் எல்லா படைப்பும் அவர் பிரசுரத்திற்கு உகந்தவை என பரிந்துரை செய்பவையே. அவ்வாறு ஆசிரியரால் அளிக்கப்படாத தன்னிச்சையான சர்ச்சைகளைக் கவனிப்பதைப்போல அறிவுநேர விரயம் வேறில்லை. மெட்ராஸ் பேப்பர் பா.ராகவன் வழியாக நிகழும் உரையாடல். அது சரியாக இல்லை என்றால் அவரிடம் கேளுங்கள். அவர் தொடர்ந்து சரியாகச் செயல்படவில்லை என்று தோன்றினால் விலகிச் செல்லலாம்.
அப்படி ஓர் ஆசிரியர் ஓர் இதழுக்குத் தேவை. அவர் வழியாக நடக்கவில்லை என்றால் அது அறிவுச்செயல்பாடு அல்ல. தமிழின் இன்றைய முக்கியமான இணைய இதழ்களின் தனித்தன்மை என்பது அவற்றுக்குப் பின்னாலிருக்கும் ஆசிரியரின் பிரக்ஞைதான். தமிழினி (கோகுல் பிரசாத்) அகழ் (அனோஜன் பாலகிருஷ்ணன், சயந்தன், சுரேஷ்பிரதீப்) கனலி (க.விக்னேஷ்வரன்) மயிர் (ராயகிரி சங்கர்) ஓலைச்சுவடி (கி.ச.திலீபன்) வல்லினம் (ம.நவீன்) ஆகிய இதழ்களின் தகுதி அந்த ஆசிரியரைச் சார்ந்ததே.
கி.ச.திலீபன், ஓலைச்சுவடிமெட்ராஸ் பேப்பர், அருஞ்சொல் போன்றவை பல்சுவை இதழ்கள். ஆகவே இன்னும் விரிவான ஆசிரிய இருப்பு தேவை. அதில் அரசியல், பொருளியல் என பலவகையான கட்டுரைகள் வருகின்றன. அனைத்தின் மீதும் ஆசிரியரின் கட்டுப்பாடு தேவை. பா.ராகவன், சமஸ் இருவருமே இதழியலில் நீண்ட அனுபவம் உடையவர்கள். அவர்களின் அனுபவம் சமநிலையாகவும். தொகுப்புப் பிரக்ஞையாகவும் அதில் செயல்படவேண்டும்,
அந்த ஆசிரியருக்கு ஆசிரியர்கொள்கை இருக்கவேண்டும். அவர் ஏன் ஒன்றை பிரசுரித்தார் என அவர் சொல்ல முடியவேண்டும். அவர் ஓர் அறிவு வட்டத்தை உருவாக்கவேண்டும். அதுதான் ஓர் இதழ்.சுருங்கச் சொன்னால் அதில் ஒரு கட்டுரை வெளிவருவது ‘தன்னிச்சையாக’ இருக்கக்கூடாது. அதில் ஒரு ‘நிராகரிப்புக் கொள்கை’ இருந்தாகவேண்டும்
ராயகிரி சங்கர், மயிர்அவ்வாறன்றி உலகிலுள்ள எல்லாரும் வரலாம், என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம், எங்குவேண்டுமென்றாலும் கொண்டுசெல்லலாம் என்றால் அதன்பெயர்தான் ‘அரங்கின்றி வட்டாடல்’ நான் ஒருபோதும் ஆசிரியர் இல்லா அறிவுக்களத்தில் பதினைந்து நிமிடம்கூட செலவிட மாட்டேன். அந்த தன்னொழுக்கத்தால்தான் இத்தனை பணியாற்ற முடிகிறது.
சமூகவலைத்தளத்தின் கட்டின்மை பிரம்மாண்டமான வீணடிப்பாகவே எஞ்சும் என்பதை கண்டுவிட்டோம். இனி இந்த ஆசிரிய ஆளுமைகளை நம்பி. அவர்கள் உருவாக்கும் அறிவு வட்டத்திற்குள் செயல்பட முடிவுசெய்வோம். அதுவே பயனுள்ளது.
ஜெ
மெட்ராஸ் பேப்பர் கிழக்கு டுடே வல்லினம் தமிழினி அருஞ்சொல் யாவரும் கனலி அகழ் ஓலைச்சுவடி மயிர்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

