அமெரிக்கா, கடிதங்கள் 4
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை…
அன்புள்ள ஜெ
அமெரிக்கக் குழந்தைகள் பற்றிய கடிதம் கண்டேன். அதிலிருக்கும் ‘பணிவின்மை’தான் எனக்கு மிகவும் பிடித்தது. நம்மவர்கள் அமெரிக்கா சென்றாலே பணிவானவர்கள் ஆகிவிடுகிறார்கள். அமெரிக்காவுக்குச் சென்றதன் நன்றிக்கடன் செலுத்தும் மனநிலை வந்துவிடுகிறது. அமெரிக்காவுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் கனவு கொண்டவர்கள்தானே அவர்களெல்லாம். ஆகவே அவர்களும் அதே பக்திப்பரவச மனநிலையில்தான் பேசுவார்கள். அமெரிக்காவுக்கு வந்துவிட்ட தங்கங்கள் நீங்கள் என்று சொல்வார்கள். அவர்களின் பணம், கார் எல்லாவற்றையும் பார்த்து ஒருவிதமான பணிவு வந்துவிடும்.
நீங்கள் அவர்களை விட பலமடங்கு மேலான ஒரு நிலையில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அவர்களை ஆற்றுப்படுத்தும் பொறுப்புடன் பேசுகிறீர்கள். தமிழில் ஓர் எழுத்தாளரிடம் நாம் எதிர்பார்ப்பது இந்த கெத்துதான். பழங்காலம் முதல் இரண்டு மனப்பான்மைகள் இருந்து வந்துள்ளன. மன்னரையும் வள்ளலையும் பாடும் மனநிலை. நாமார்க்கும் குடியல்லோம் என்னும் மனநிலை. இரண்டாவது மனநிலை உள்ளவருக்கே ஆலோசனை சொல்லும் உரிமை உள்ளது.
அமெரிக்காவில் கொஞ்சம் சம்பாதித்து, கொஞ்சம் மேட்டிமைத்தனத்துடன் வாழ்பவர்களுக்கு இந்தக் குரல் எரிச்சலை அளிக்கும். ஆனால் அவர்களில் உங்களை வாசித்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு உங்கள் மேல் மதிப்பிருக்கும். நீங்கள் அவர்களை நோக்கியே பேசுகிறீர்கள் என நினைக்கிறேன்.
ஜெகன்
***
அன்புள்ள ஜெ,
கடைசியில் நீங்களும் பிள்ளைகளை ஹார்வார்ட் அனுப்புங்கள் என்றுதான் சொல்கிறீர்கள். ஆனால் ஹார்வார்ட் போகாமல் அவர்கள் வேறெங்காவது போனால் பதற்றப்படாமல் இருங்கள் என்றும் சொல்கிறீர்கள். அவர்களில் ஒருசாரார் நாளை இலக்கியம் நோக்கி வந்தால் அவர்களுக்காக தமிழ்ப்பண்பாட்டை விரித்து வையுங்கள் என்கிறீர்கள். நல்லது, பார்ப்போம்.
மகேந்திரன் ராமசாமி
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

