எழுத்து எழுதியவனை மீட்காதா?

அன்புள்ள ஜெ

“படைப்பியக்கச் செயல்பாடு என்பது ஒருவன் தன்னுள் உள்ள அனைத்தையும் குத்திக் கிளறிவிடுவதுதான். காமம், வன்முறை, கீழ்மைகள், இருள்கள். அவற்றை அவன் தெளியவைக்க கொஞ்சம் தாமதமாகும். அதற்கான வழி இலக்கியத்துக்குள் இல்லை. இலக்கியம் இலக்கியவாதிக்கு வழிகாட்டாது. வாசகனுக்கே வழிகாட்டும். எழுதுவது அதுவாகி நடிப்பது. வெளியே வர வேறொரு பிடிமானம் தேவை.” – ஜெ

எந்த உணர்ச்சியையும் நடிக்க முடியாது. எத்தனை தூரம் அதற்குள் ஆழமாக இறங்கி செல்கிறோமோ அந்தளவுக்கு அவ்வுணர்ச்சியால் மெய்யாக ஆட்கொள்ளப்படுகிறோம். படைப்பியக்க செயல்பாட்டில் கிளறிவிடப்படும் உணர்ச்சியின் தீவிரம் என்பது சமூக ஆழ்மனம் வரை செல்லக்கூடியது. எந்த உணர்ச்சியும் அதை தாங்கப்படுபவனால் அறிய முடியாதவை. பார்க்கப்படுபவனால் புரிந்து கொள்ள இயல்பவை. இலக்கியம் வாசகனுக்கு வழிகாட்டுவது அவன் பார்வையாளன் என்ற நிலையில் இருப்பதாலேயே. இங்கே வாசகனின் பார்வையாளன் என்ற நிலை என்பது வெளியிலிருந்து பார்த்தல் அல்ல. வாசிக்கப்படும் படைப்பின் உணர்ச்சி தீவிரத்தில் கரைந்து போனாலும் அது எழுத்தாளனால் தனக்கு கொடுக்கப்பட்டது என்னும் தன்னுணர்வில் இருந்து எழுவது.

மறுபுறம் தனக்குள்ளிருந்தே எழுப்பும் படைப்பு என்னும் நிலையில் எழுத்தாளன் நாம் உணர்ச்சி வசப்பட்டால் சென்றடையும் நிலையிலேயே இருக்கிறான். நாம் யாரும் சொந்த உணர்ச்சிகளின் தீமைகளிலிருந்து தானே மீள்பவர்கள் அல்ல, வேறொன்றின் துணை கொண்டே வெளிவருபவர்கள். எழுத்தாளனும் இதே நிலையிலேயே இருக்கிறான். நமக்கும் அவனுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவெனில், நாம் சுயநலத்தால் உந்தப்படுகையில் அவனோ மேலான அறவுணர்வால் அவ்வுணர்ச்சிகரத்தை அடைகிறான். ஆகவே அது மகத்துவம் கொள்கிறது.

எனினும் உணர்ச்சிகளின் இயல்பினால் எத்தனை உயரம் சென்றாலும் அதிலேயே சிக்குண்டவன். வாசகனை பொறுத்தவரை தான் எதிர் படைப்பு என்ற புற இருமை நிலையால் உணர்ச்சிகரமாக ஆட்கொள்ளப்பட்டாலும் வெளிவருவதும் அதிலிருந்து அறிதலை தொகுத்து கொள்ள முடியும். எழுத்தாளனை பொறுத்தவரை அவன் படைப்பு என்பது அவனே தான். எனவே அவனுக்கு இலக்கியம் வழிகாட்டாது. இலக்கியம் கையாளும் கருக்களை வாழ்விலிருந்து சாரம்சப்படுத்தி தரிசனமாக்கும் தத்துவமும் அந்த உணர்வறிதலை ஆளுமையாக கொள்ள செய்யும் மெய்ஞான மரபுகளும் தான் அவனது வழிகாட்டியாக இருக்க முடியும். இந்த வழிகளில் செல்லும் எழுத்தாளன் தன் படைப்புகளில் இருந்து விலக்கத்தை அடைகிறான். அவற்றை தொகுத்து கொள்கிறான். செயலூக்கம் கொண்ட எழுத்தாளன் அடுத்தக்கட்ட உச்சங்களை நோக்கி செல்ல வழி வகுக்கிறது.

மேலுள்ள நீண்ட விளக்கம் கடிதத்தின் ஆரம்பத்தில் உள்ள உங்களுடைய வரிகளை புரிந்து கொள்ள எழுதியது. அவ்வரிகள் என்னை சீண்டி சமனிழக்க செய்தன. இலக்கியவாதிக்கு ஏன் இலக்கியம் வழிகாட்டாது ? என்ற கேள்வியாக மனதில் இருந்தது. அவ்வினாவிற்கு விளக்கம் தேடுகையில் முதலில் கடலூர் சீனு அண்ணாவை தொடர்பு கொண்டேன். அவரது பதிலை பின்வருமாறு சுருக்கலாம். ( பிழைகள் இருந்தால் அவை என்னுடையவை )

தத்துவாதி(கீழை) தன் தேடலில் வாழ்க்கை குறித்த முழுமை பார்வை, அதாவது ஒரு தரிசனத்தை சென்றடைகிறான். தன் அறிவாலும் தியானத்தாலும் சென்றடைந்த அத்தரிசனத்தை வாழ்க்கையின் பல்வேறு களங்களில் பரிசோதித்து பார்த்து விடைகளை அடைகிறான். அவற்றின் மூலம் மேன்மேலும் சமனிலை கொள்கிறான்.

கலையின் பாதை இதற்கு நேர் எதிரானது. கலைஞனுக்கு அடிப்படையில் ஓர் தேடல் உள்ளது. அவனது தேடலுக்கேற்றவாறு குறிப்பிட்ட கனவை சென்றடைகிறான். கனவின் மூலம் ஒரு விடையை அடைகிறான். ஆனால் கனவு கலைந்தவுடன் முழுமையாக அதிலிருந்து வெளிவந்து விடுகிறான், – நாம் எப்படி தூக்கத்தில் கனவு கண்டு விழிக்கிறோமோ அப்படி – இப்போது மீண்டும் அத்தேடலின் ஊக்கிரம் அதிகமாகிறது. முந்தைய கனவை மேலான கனவிற்கான ஏக்கம் அவனில் குடி கொள்கிறது. அது நிறைவின்மையின் சுழல் பாதை. எனவே இலக்கியம் இலக்கியவாதிக்கு வழிகாட்டாது.

அடுத்து தொடர்பு கொண்ட சுனீல் அண்ணாவின் பதில் என்னவெனில்,

ஜெ வை பொறுத்தவரை இலக்கியப் படைப்பின் உருவாக்கம் என்பது ஒருவகையான பீடிக்கப்பட்ட நிலை, சாமியாடி. அந்நிலைக்கு ஆட்கொள்ளப்பட்டவனால் சுயமாக அதை புறவயமாக விளங்கி தெளிவு கொள்ள முடியாது. இதுதான் இலக்கியம் இலக்கியவாதிக்கு வழிகாட்டாது என்பதன் விளக்கம்.

இருவரின் பதில்களும் ஒரு திருப்தியை கொடுத்தாலும் நிறைவின்மையை என்னில் எஞ்ச செய்தன. அதற்கான காரணமாக தோன்றுவது அவற்றின் மாயத்தன்மை தான். உங்களுடைய வரி ஒரு சூத்திரம் போல மின்னி செல்கிறது. அதற்கு விளக்கம் வேண்டி நான் சென்றவர்களோ செய்யுளுக்கு செய்யுள் புனைந்துவிட்டனர். உங்கள் வரியின் இறுக்கத்தை சற்று இளகச் செய்து நெருங்குவதற்கு வழியமைத்தன. நான் சென்றடைந்த விளக்கம் மாயத்தை நீக்கி மண்ணில் நிலை நிறுத்துகிறது. ஆனால் முழுமையானதல்ல. மூன்றும் தனித்தனியாக நிற்கின்றன. இவற்றை இப்படி இணைக்கலாம். சீனு அண்ணாவின் கனவு விளக்கத்திற்கு கீழ் புறக்காட்சிகளில் உணர்வேற்றம் செய்யப்பட்ட அகநினைவுகளை கனவுகள் என்கிறோம் என்ற வரியை இணைத்து என் விளக்கத்தை பிணைக்க வேண்டும். இறுதியில் கனவென்பது பீடிக்கப்பட்ட நிலை என்ற சுனீல் அண்ணாவின் விளக்கத்தை இணைத்தால் முழுமையை எட்டும் என நினைக்கிறேன்.

இவை இப்படியே இருக்கட்டும். என் விளக்கத்தின் இறுதி பகுதி இன்னொரு கேள்வியை தூண்டிவிட்டது. தன் முந்தைய படைப்பிலிருந்து தத்துவார்த்தமாக படைப்பாளி அடையும் விலக்கமே அவனை அடுத்தக்கட்ட உச்சத்திற்கு செல்ல வழி வகுக்கிறது என எழுதியுள்ளேன். எழுதுகையில் தன்னியல்பாக அப்படி வந்தது. ஆனால் அது குறித்த முழுமையான புரிதலில்லை. ஆனால் அந்த வரி உங்களை பார்த்து வந்தது என்பதில் துளி ஐயமும் இல்லை. ஏனெனில் சமகால எழுத்தாளர்களில் தன் படைப்பில் இருந்து முழுவதுமாக தன்னை விடுவித்து கொள்ளும் வேறொருவர் இல்லை என்பது என் சிறிய வாசிப்பு எல்லையின் அறிதல். இந்நிலையில் தனது முந்தைய படைப்பிலிருந்து உள ரீதியாகவும் தத்துவார்த்தமாகவும் படைப்பாளி கொள்ளும் விலக்கம் அவனது படைப்பியக்கத்தில் எவ்வகையான பாதிப்பை செலுத்துகிறது என்பதை கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா ?

அன்புடன்

சக்திவேல்

 

அன்புள்ள சக்திவேல்

 

இலக்கியம் ஏன் அதை எழுதுபவனுக்கு மீட்பளிக்காது என்பதை நான் எப்போதுமே சொல்லி வருகிறேன். ஆனால் அது வாசிப்பவனுக்கு உறுதியாக மீட்பளிக்கும்.இந்த முரண்பாட்டை பலமுறை பலகோணங்களில் விளக்கியிருக்கிறேன். மீண்டும் இவ்வாறு கூறுகிறேன். பிரமிள் ஒருமுறை கலைஞன் என்பவன் ஞானமடைய முடியாத ஞானப்பயிற்சி செய்பவன் என்று சொன்னார். முக்தி அடையமுடியாத யோகி

ஞானத்திற்கும் இலக்கியத்திற்கும் இடையே இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக காளிதாசனையும் கம்பனையும் பயின்று ஞானமடைந்தோர் பலர் உள்ளனர். பெரும் யோகியரின் உரைகளில் அவர்கள் மேற்கோளாக்கப்படுகிறார்கள். காளிதாசனின் வரி இலாத நடராஜகுருவின் உரை அரிது. கம்பன் பலருக்கு தெய்வ உருவம் ஆனால் அவர்க்ளைப்பற்றீய தனிப்பட்ட கதைகளில் அவர்கள் காமத்தால் அலைக்கழிந்தவர்களாக நிலையற்று அலைபாய்ந்து கொண்டிருந்தவர்களாக மிகையுணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக காட்டப்படுகிறார்கள். அந்தகதைகள் பொய்யாக உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை ஏனெனில் அத்தகைய ஏற்பு கதைகளுக்கு நீண்ட காலம் அமைவதில்லை.

ஓர் இலக்கியப்படைப்பை படிக்கும்போது அதன் வாசகன் அதன் கருத்துக்களை தெரிந்துகொள்வதில்லை.  திரும்பத்திரும்ப நமது கல்வி முறையில் அவ்வாறு நமக்கு சொல்லப்படுகிறது. ஒரு நீதி நூலில் இல்லாத எந்தக்கருத்தையும் இலக்கியம் சொல்லிவிடமுடியாது. இன்னும் சொல்லப்போனால் நீதி நூலில் மிகச்செறிவாகவும் அழுத்தமாகவும் சொல்லப்பட்ட ஒரு கருத்து இலக்கியப்படைப்பில் அனுபவங்களாகவும் உணர்ச்சிகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. நீதியைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நீதிநூல்களே உசிதமானவை. திருக்குறளுக்கு நிகராக தமிழில் வேறெந்த நூலும் நீதியை சொல்லிவிட முடியாது. திருக்குறள் இருக்கையில் இன்னொரு நீதி நூலை நாம் உருவாக்க வேண்டிய தேவையும் இல்லை.

எனில் இலக்கியத்தின் செயல்பாடு என்ன? இலக்கியம் ஒரு நிகர் வாழ்க்கையை உருவாக்குகிறது. நீதிகளை நாம் தெரிந்துகொள்வது வேறு நமது வாழ்க்கை அனுபவத்தில் அவற்றை வாழ்ந்து அடைவது வேறு ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை தீவிரமாக நடத்திக்கொண்டிருந்தாலும் அவரது அனுபவ மண்டலம் என்பது மிகச்சிறியதுதான். ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களை நோக்கி  ஒருவர் திறந்துகொண்டே இருந்தாலும் கூட அவருடைய உலகம் சிறியதுதான். ஆனால் இலக்கிய வாசகனுக்கு பலநூறு  வகையான வாழ்க்கைகளை வாழ்வதற்கான வாய்ப்பு அமைகிறது. கற்பனையில் அவன் இடங்களில் சூழல்களில் காலங்களில் பயணம் செய்து பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை வாழ்கிறான். ஆணாகவும் பெண்ணாகவும் வாழ்கிறான். ஏழையாகவும் செல்வந்தனாகவும் வாழ்கிறான். வீரனாகவும் கோழையாகவும் நல்லவனாகவும் தீயவனாகவும் வாழ்கிறான்.அவன் வாழ்க்கை பலமடங்கு பெரியது. எல்லையில்லாமல் விரியக்கூடியது.

இந்த வாழ்க்கை அனைத்துமே வாசகனைப் பொறுத்தவரை ஒருவகையான நடிப்புகள். அது நடிப்பென்று அவனுக்குத் தெரியும். ஆகவே அதிலிருந்து எது கொள்ள வேண்டுமோ அது மட்டுமே கொள்ளப்படுகிறது. ஒவ்வாதவை விளக்கப்படுகிறது. வீரியம் குறைய வைத்த வைரஸ் மருந்தென்றாவது போல இலக்கியத்தில் உள்ள தீமையும் நன்மையே செய்கிறது .மிக எதிர்மறை தோரணையும் கடும் வண்ணங்களும் கொண்ட நூல்கள்கூட,  குருதியும் சீழும் கண்ணீருமாக வந்தறையும் நூல்கள் கூட, அவற்றின் வாசகனை நேர்நிலை உச்சம் நோக்கி தான் கொண்டு செல்கின்றன. (அவை கலைப்படைப்பாக இருக்கும்போது)

ஏனெனில் அவை அவனை மெய்யான வாழ்க்கை ஒன்றை வாழச் செய்கின்றன. அவ்வாழ்க்கை வழியாக  அவன் இயல்பாகவே தனது தேடல் எதுவோ அதை நோக்கி செல்கிறான். கசங்கிய  காகிதத்தில் மை விரிசல்கள் வழியாக பரவுவது போல ஒரு இலக்கியப்படைப்பு ஏற்கனவே அந்த வாசகனின் உள்ளத்திலிருக்கும் தேடல்களைத்தான் நிரப்பிக்கொண்டு செல்கிறது. ஆகவே அவன் தனக்குரிய தலைசிறந்த படைப்பைத்தான் இலக்கியத்திலிருந்து உருவாக்கிக்கொள்கிறான்.

ஆகவே ஞானத்தேடலில் இருக்கும் ஒருவனுக்கு இலக்கியம் வழிகாட்டியும் ஆசிரியனும் என ஆக முடியும் .ஆனதற்கான பல்லாயிரம் உதாரணங்கள் உலகெங்கும் உள்ளன. தாந்தேயிலிருந்து ஷேக்ஸ்பியர் வரை, காளிதாசனிலிருந்து கம்பனிலிருந்து பாரதி வரை, நாம் மிக இயல்பாக ஏற்றுக்கொண்ட ஞானவழிகாட்டிகள் இலக்கியத்தில் உள்ளனர்.

இலக்கியம் விடுதலைக்கு வழிகாட்டாது என்பவர்கள் நவீனத்துவர்களில் ஒரு சிறு சாரார் மட்டுமே. அவர்கள் இலக்கியத்தை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதற்கும், வரலாறெங்கும் இலக்கியம் என்னென்ன செய்திருக்கிறது என்று  தெரிந்துகொள்வதற்கும் முயற்சி எடுக்காதவர்கள். பெரும்பாலும் தங்களுடைய சிறுஅனுபவங்களை மட்டும் எழுதும் சிறு எழுத்தாளர்கள். அவ்வாறு அவர்கள் கூறுவதை அவர்களின் படைப்பை வைத்தே நாம் மறுக்க முடியும். அவர்கள் சொல்வதை ஒரு தரப்பென்று எடுத்துக்கொள்ளவேண்டியது தான்

இலக்கியப்படைப்பு வாசகனுக்கு பலமடங்கு பெருகச்செய்யப்பட்ட வாழ்க்கையை அளித்து, அவனுடைய ஞானத்தேடலை பல மடங்கு தீவிரமாக்குகிறது. அவனது அறிதல்களை பலமடங்கு பெருக்குகிறது. வாசிப்பே ஒரு ஞானசாதகம் என்றும் ஒரு யோகம் என்றும் சொல்லலாம். அவ்வண்ணம் கொள்ளும் ஒரு வாசகன் இலக்கியப் படைப்புகளினூடாகவே தனது விடுதலையை அடையமுடியும்.  பாரதியைப்பற்றி ஜெயகாந்தன் பேசுகையில் பாரதி இலக்கியவாதி என்னும்  இடத்திலிருந்து ஞானாசிரியனாக எழுந்தார். அவ்வெழுச்சி அவன் பாடல்களுக்குள்ளே நடந்து முடிந்தது என்று கூறுகிறார்.

ஆனால் எழுத்தாளன் அந்த விடுதலையை தன் படைப்புகளினூடாக அடையமுடியாது. ஏனெனில் அவன் தன்னுள் அனைத்தையுமே பெருக்குகிறான். தன்னுள உச்சங்களையே அவன் படைப்பின் உச்சங்களாக நிகழ்த்துகிறான். அவ்வாறு பெருக்கும்போது தொட்டதும் பலமடங்கெனப் பெருகுவது காமமே. இதை ஒரு ஆசிரியனாக மீளமீளச் சொல்லி வருகிறேன். ஏனெனில் மனித உணர்வுகளில் பெருக வேண்டும் என்று இயற்கை விரும்புவது காமமே. ஆணின் காமமோ தன்னைப் பரப்புவதற்கென்றே அனைத்து வடிவங்களையும் உருவாக்கிக்கொண்டது. இலக்கிய ஆசிரியன் தன்னைப் பெருக்கிக்கொள்ளத் தொடங்குகையில் முதலில் அவன் தொட்டு விரியச்செய்வது காமமே .அது கட்டற்றது. அதை அவன் எளிதில் ஆளமுடியாது .முன்னரே அவனுக்கு வலுவான கடிவாளச்சரடுகள் இருக்குமெனில் அதை அவன் தன் ஆளுகைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் முற்றிலும் வெல்ல இயலாது.

இணையானது வன்முறை. வன்முறை தன்னை உளரீதியாகப் பெருக்கிக்கொள்ளக் கூடியது .அதன் விந்தையான முரணியக்கங்களில் ஒன்று குறிப்பிடத்தக்கது. வன்முறை உடல் சார்ந்து நிகழ்த்தப்படும்போது குறைகிறது. உடலின் எல்லை அதை கட்டுக்குள் வைக்கிறது. உடல்சார்ந்து வன்முறையில் ஈடுபடுபவர்கள் எப்படியோ வன்முறையின் எல்லையையும் அறிந்தவர்கள்.

(வன்முறையை நிகழ்த்தாமல், அதை உடல்நிகழ்வாக நடிப்பவர்களே போர்க்கலை பயில்பவர்கள். அவர்கள் வன்முறையை கடந்துவிட்டிருப்பதை நான் எப்போதும் கண்டுவருகிறேன். சிறந்த உதாரணமாக பல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்களைச் சொல்வேன். அவர்கள் மிக அமைதியான, வெள்ளந்தியான மனிதர்கள். அண்மையில் அப்படித் தோன்றியவர் தேகி பட தயாரிப்பாளரும், களரி பயிற்றுநடுமான நிரஞ்சன். நாளெல்லாம் வன்முறையை நடிப்பவர். பயிற்றுவிப்பவர். மிகமிக அமைதியானவர், அகிம்சையும் கருணையும் கொண்டவர்)

மாறாக உடல்சார்ந்த வன்முறையை அச்சத்தால், ஒழுக்கத்தால், உடல்வலிமையின்மையால் தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்பவர்கள் உள்ளத்தால் உச்சகட்ட வன்முறை நோக்கி செல்பவர்களாக இருப்பார்கள். அந்த வன்முறை கட்டற்றது. ஏனெனில் அங்கே அதைக்கட்டுப்படுத்தும் கூறு என உடல் இல்லை. நெறி மட்டுமே உள்ளது. ஆனால் ஆழுள்ளம் நெறியை அறியாது. நெறிகளால் கனவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. சாமானியனின் கட்டற்ற வன்முறையையே நாம் சினிமாக் கதைநாயகனில் காண்கிறோம்.

எழுத்தாளனில் எழும் காமமும் வன்முறையும் படைப்பின் வழியாக வெளிப்படுகையில் கலையென ஆகுகையில் அவை பிறிதொரு வடிவு கொள்கின்றன. கலையின் ஒழுங்கு கலையின் நோக்கம் ஆகியவை அந்தக்காமத்தையும் வன்முறையையும் செம்மையாக்கம் செய்து வாசகனுக்கு அவற்றின் சாராம்சமாக எழும் முழுமை அறிதல் ஒன்றை அளிக்கின்றன. ஆனால் ஆசிரியனுக்கு அவை வெறும் காமமும் வன்முறையுமாகவே நின்றுவிடுகின்றன. கலையாக அவை மாறும்போது அவை அவனிலிருந்து மிக விலகி பிறிதொன்றாகிவிடுகின்றன.

எனவே அவன் தொட முடியாத ஒன்றாகிவிடுகின்றன. அவன் தன் படைப்பில் தன்னுடைய வெறும் காமத்தையும் வன்முறையையுமே பார்ப்பான். மறுபக்கமிருந்து அதைப்பார்க்கும் ஒரு வாசகன் அதில் வாழ்வின் மெய்மையை இப்பிரபஞ்சத்தின் முழுமையின் சாராம்சத்தை காணமுடியும். கம்பன் கம்பராமாயணத்தில் காமமும் வன்முறையும் மட்டுமே நிறைந்திருப்பதையே காண்பான் நான் காணும

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.