Jeyamohan's Blog, page 745
July 16, 2022
நீலி மின்னிதழ்- ரம்யா
தமிழ்விக்கி பணிக்காக “சக்ரவர்த்தினி” இதழ் பற்றிய பதிவு எழுதிக்கொண்டிருந்தபோது 1905லேயே பெண்களுக்காக மட்டும் இதழ் ஆரம்பித்திருந்தது வியப்பைத் தந்தது. பாரதி ஒரு வருடத்திற்குமேல் ஆசிரியராக இருந்திருக்கிறார். ஆனால் நீங்கள் அந்த பக்கத்தில் மேலும் தகவல்களைச் சேர்த்திருந்தீர்கள். அது பாரதியாரின் நோக்கத்தைச் சொல்லியிருந்தது.
“அறிவின்மை என்னும் பெருங்கடலில் தத்தளிக்கும் நமது பதினாயிரக் கணக்கான பெண்களைக் கரைசேர்ப்பதற்கும்ச் சில பெருங்கப்பல்கள் இருந்தபோதிலும், யாம் கொண்டுவரும் சிற்றோடம் அவசியமில்லை என்று யாவரே கூறுவார்?” என பெண்களுக்காக ஓர் இதழை நடத்தவேண்டும் என எண்ணியமைக்கான காரணத்தை பாரதியார் கூறியதாக இருந்தது.
பாரதியாருக்கு முன்பு அமிர்தவர்சனி, மகாராணி, சுகுணகுணபோதினி, மாதர் மித்திரி, பெண்மதிபோதினி, மாதர் மனோரஞ்சினி போன்ற பெண்களுக்கான இதழ்கள் வெளிவந்தன. அவருடைய காலகட்டத்தில் பெண்கல்வி, தமிழ்மாது முதலிய இதழ்கள் வந்துள்ளன. ஆனால் இந்த இதழ்களில் பெரும்பாலும் பெண்களுக்கு மரபான ஒழுக்கநெறிகளை உபதேசிப்பது, நோன்புகள் மற்றும் மதச்செய்திகளைச் சொல்வது போன்றவையே நிறைந்திருந்தன. தேசியச் செய்திகளுக்கும், பெண்கல்வி பெண்விடுதலை போன்றவற்றுக்கும் இடமளிக்கும் ஓர் இதழை தொடங்குவதே பாரதியின் நோக்கமாக இருந்தது. மேலும் சக்ரவர்த்தினி இதழ் மூலமாக பல முக்கியமான பெண் எழுத்தாளர்கள் உருவாகி வந்தார்கள். அவர்கள் சிறுகதைகள் எழுத ஊக்குவிக்கும் முயற்சியும் நடைபெற்றது.
அசலாம்பிகை அம்மாள், அலர்மேல்மங்கை அம்மாள், ராஜலஷ்மி அம்மாள், ஆர்.எஸ். சுப்பலஷ்மி அம்மாள், கஜாம்பிகை போன்றோர் பங்களித்த முக்கியமான பெண் எழுத்தாளர்கள். ஆண் எழுத்தாளர்களும் பெண்களுக்கான பல சிந்தனைக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அது அன்றைய காலகட்டத்தின் தேவையாக இருந்துள்ளது. பாரதி இதில் எழுதிய பல கட்டுரைகள் பின்னத்தூரால் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளது.
இன்றைய நவீன காலகட்டத்தில் பெண்களை எழுத ஊக்குவிக்க என தனி இதழ் அவசியமில்லை. இணைய காலகட்டத்தில் தனி வலைதளம், பல மின்னிதழ்களின் பெருக்கத்தாலும் பெண்கள் எழுத முடிகிறது. ஆக அதற்காக ஒரு மின்னிதழ் ஆரம்பிப்பது அவசியமற்றது. பெண் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் யாவும் “தமிழ் விக்கி” யிலேயே தொகுக்கப்பட்டுவிடும். ஆனால் பெண் படைப்புகளைப் பற்றிய ரசனை, விமர்சனக் கட்டுரைகளை தொகுக்கும் முயற்சியில் ஒரு இதழ் ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியது. சங்க காலம் முதல் தற்போது வரை எழுதப்பட்டுள்ள அனைத்து பெண் எழுத்துக்களையும் தொகுக்கும் முயற்சியாக “நீலி மின்னிதழ்” அமையப்பெறும்.
தமிழ் இலக்கிய காலகட்டத்தை சங்க காலம், சங்கம்மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், நவீன காலம் (விடுதலைக்கு முன், பின்) என்று பிரித்து, ஒவ்வொரு காலகட்டத்தையும் சில இதழ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசூரிக்கலாம் என்று தோன்றியது.
நீலி இதழ் காலாண்டு இதழாக அமையும். நண்பர்கள் இணைந்து இந்த தொகுக்கும் பணியைச் செய்கிறோம். தமிழ் பெண் எழுத்தாளர்கள் என்று குறிக்கிவிடாமல், உலக இலக்கியத்தையும் இணைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினோம். அவை பற்றிய தொடர் கட்டுரைகளை நண்பர்கள் எழுதுகிறார்கள்.
சுசித்ரா நவீன இலக்கியத்தில் உலக பெண் எழுத்தாளர்களின் புனைவுலகம், பங்களிப்பு சார்ந்து தொடர் கட்டுரையாக எழுதுகிறார். ஜெ. சைதன்யா உலக பெண் எழுத்தாளர்களின் அபுனைவுலகம் சார்ந்து தொடர் கட்டுரை எழுதுகிறார். இதழுக்கு முதன் முதலில் இந்த கட்டுரைகள் எழுதுவதாக இறுதியான பின் தான் பிற நண்பர்களிடம் பேசினேன். அதையொட்டி தமிழ் நவீன இலக்கியம் சார்ந்து சுரேஷ் பிரதீப் தொடர் கட்டுரைகள் எழுதுவதாகச் சொன்னார். அனோஜன் ஈழத்து பெண் எழுத்தாளர்களை தொகுத்து தொடராக எழுதுவதாகச் சொன்னார். மலேசியா நவீன் மலேசிய பெண் எழுத்துலகம் பற்றிய கட்டுரைகள் தருவதாகச் சொன்னார். ’வனம்’ ஷதிர் ஈழத்து நாட்டுக்கூத்து பெண் கலைஞர்கள் பற்றி எழுதுவதாகச் சொன்னார். ஜி.எஸ்.எஸ்.வி நவீன் நட்டுப்புறவியலில், கலைகளில் பெண்கள் பங்கு பற்றி எழுதுவார். ஜெயராம் நவீன ஓவியக்கலையுலகில் குறிப்பிடத்தகுந்த பெண் கலைஞர்கள் பற்றி எழுதுவதாகச் சொன்னார்.
சங்க காலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் மூன்று இதழ்கள் வருகிறது. மொத்தம் இருக்கும் பத்து கட்டுரைகளில் மூன்று கட்டுரைகளும், தலையங்கமும் சங்க கால பெண்ணெழுத்து சார்ந்து வரும். கல்பனா ஜெயகாந்த், லோகமாதேவி, சீனு, இசை, வெண்பா, பார்கவி ஆகியோர் சங்க காலம் சார்ந்து எழுதுகிறார்கள். ஜா. தீபா திரைக்கதை, வசனம் சார்ந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பு சார்ந்த கட்டுரையை தொடராக எழுதுகிறார். நிக்கிதா பக்தி இலக்கியம் சார்ந்த பெண் படைப்புகள் பற்றி எழுதுகிறார். ஸ்வேதா சண்முகம் விடுதலைக்கு முந்தைய காலகட்டம் சார்ந்த பெண்களைப் பற்றியும், பெண் எழுத்தாளர்களின் குடும்பச் சூழல், ஆண் எழுத்தாளர்களுக்கு அவர்களின் மனைவிகளின் பங்களிப்பு சார்ந்த கட்டுரைகளையும் எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார். சாம்ராஜ், நரேன், கவிஞர் ஆனந்த் குமார், ஆனந்த் ஸ்ரீநிவாசன், தம்பி வீரபத்ரன், சக்திவேல், விக்னேஷ் ஹரிஹரன் ஆகியோரும் தொடர்ந்து பங்களிப்பு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கான விக்கி பக்கத்தை உருவாக்கும் போது “இலக்கிய இடம்” பகுதிக்காக பெரும்பான்மையாகச் சார்ந்திருந்தது உங்களுடைய தளம், எஸ்.ரா தளம் தான். மேலும் பா.வண்ணன், க. மோகனரங்கன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் புதியவர்களை நோக்கி தொடர்ந்து தங்கள் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். சுனில் சாருடைய தளத்தில் பெரும்பாலும் பலருக்கும் எழுதியிருக்கிறார். சுரேஷ்ப்ரதீப் பல இணைய இதழ்களில் புதியவர்களின் படைப்புகளைப் பற்றிய விமர்சனங்களை எழுதியுள்ளார். ஆனாலும் தமிழ் விக்கி பதிவு போடும்போது தான் இன்னும் எழுத வேண்டிய பல எழுத்தாளர்கள் இருப்பதை அறிய முடிந்தது. உதாரணமாக ரமேஷ் ரக்ஷனின் விக்கி பக்கம் எழுதும் போது இலக்கிய இடத்திற்காக எங்கும் கட்டுரைகள் கிடைக்கவில்லை. அவர் ஒரு நாவலும், நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் போட்டுள்ளார். பெரும்பாலும் எல்லா படைப்புகளையும் சுனில் சார் படித்திருக்கிறார். எந்த ஒன்றுக்கு இல்லையானாலும் மிக நேர்த்தியாக புதியவர்களுக்கான இலக்கிய இடத்தைச் சொல்லியிருக்கிறார். “ரமேஷ் ரக்ஷனுக்குல்லாம் ஒரு நல்ல கட்டுரை இருந்திருக்கனும். எழுதனும். இப்படி எழுதப்பட வேண்டியவர்கள் நிறைய இருக்கிறார்கள்” என்றார். சுனில் சாரின் வாசிப்பும், அதை தொகுப்பதும் உண்மையில் ஊக்கமாக இருந்தது ஜெ. விமர்சனக் கட்டுரைகள், ரசனைக் கட்டுரைகள் எழுதுவதென்பது ஒரு இயக்கமாக நடைபெற வேண்டும் என்றார்.
எத்தகைய படைப்பாயிருப்பினும் அது பற்றிய விமர்சனம் தேவை என்பது புரிந்தது. அந்தப் படைப்புகளின் பேசு பொருள் என்ன, நீண்ட இலக்கிய மரபில் அது வகிக்கும் இடம் என்ன என்பதையும் தொகுத்துக் கொள்வதன அவசியம் புரிகிறது. எண்ணிக்கை அளவில் பெண்கள் எழுதுவது குறைவாகத்தான் உள்ளது. இன்றைக்கு தீவிரமாக எழுதும் பெண்களின் படைப்புகளுக்குக் கூட இவ்வகையான ரசனை, விமர்சனக் கட்டுரைகள் குறைவாக உள்ளது அல்லது இல்லை. மிகச்சிலர் தான் பேசவும் செய்கிறார்கள். உதாரணமாக பெருந்தேவி அவர்கள் பதினேழு புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். அவை அனைத்தையும் பற்றிய தனித்தனியான விமர்சன, ரசனைக் கட்டுரைகள் வர வேண்டும். அவரின் படைப்பிற்கு பல வகையான வாசிப்புப் பார்வை வேண்டும். ஒட்டுமொத்தமாக அவரின் எழுத்துக்களைப் பற்றிய ரசனை, விமர்சனக் கட்டுரைகள் வேண்டும். அவரைப் பற்றிய நேர்காணல் ஒன்று வேண்டும். இதன் வழி அவர் எதிர்கொண்ட சவால்கள், தனக்குப் பின் வரும் பெண்களுக்கு அவர் சொல்லவேண்டியவைகள் என யாவற்றையும் தொகுக்க வேண்டும். இன்றைக்கு நவீனச்சூழலில் எழுத வரும் பெண்களுக்கு ஒட்டுமொத்த இலக்கியத்தில் தங்கள் இடம் என்பதைத் தாண்டியும் சங்க காலத்திலிருந்து தற்போது வரை வந்த நிரையின் தொடர்ச்சியே நாம் என்ற பிரக்ஞை வேண்டும். இதுவரை என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது இனி எழுத வேண்டிய களங்களை அவர்கள் முன் திறந்து வைக்கும். கலை என்பது அப்படி தொடர்ச்சியைக் கண்டறிந்து எழுதுவதல்ல என்பதும் ஒரு தரப்பாகப் பார்க்கிறேன். என் அளவில் இவையாவும் விமர்சனங்களை மேலும் செறிவாக்கப் பயன்படும். அதற்கு “நீலி மின்னிதழ்” பயன்படும்.
கவிஞர் இசையிடம் அவருக்குப் பிடித்த பெண் கவிஞர்கள் பற்றி விமர்சன/ரசனைக் கட்டுரை எழுதித்தர கேட்டபோது தயங்காமல் “ஒவ்வையார்” பற்றி எழுதுவதாகச் சொன்னார். தமிழ் இலக்கியத்தில் ஒளவையார் என்ற பெயரில் பலரும் எழுதியிருக்கிறார்கள். அந்தப் பெயரில் எழுதிய அனைத்துப் பாடல்களும் தனக்கு விருப்பமானவை என்றார். பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த ஒளவையாரைத் தொகுப்பது பெண் கவிஞர்களுக்காக மட்டுமல்லாது ஒட்டுமொத்த இலக்கியத்தில் அவரின் இடத்தைச் சொல்லவும் பயன்படும். அவரிடம் தமிழ் விக்கியில் ஒருவாரம் முன்பு ஜா.தீபா அவர்களின் பரிந்துரையின் பேரில் எழுதிய தாயம்மாள் அறவாணன் பற்றி பகிர்ந்து அவரின் ஒளவையார் நூலைப் பற்றிச் சொன்னேன். அவர் மகடூ முன்னிலை, ஒளவை களஞ்சியம் என இரு புத்தகங்களையும் வாங்கி தன் பணியை ஆரம்பித்துவிடார். இரண்டாவது இதழிலிருந்து அவரின் கட்டுரை வரும்.
புனைவுகளைத்தாண்டியும், அபுனைவுகளில், ஆய்வுகளில் இயங்கும் பெண்களைப் பற்றியும் எழுத வேண்டும் ஜெ. நீங்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்திய கரசூர் பத்மபாரதி சிறந்த உதாரணம். மொழிபெயர்ப்புகளில் பெண்களின் பங்கு பெருகியிருக்கிறது. ஒரு புத்தகமானாலும் அதைப் பற்றிய விமர்சனம் வேண்டும் என்று தோன்றுகிறது. அது அவர்கள் பாதைக்கு உதவியாக இருக்கும். மோசமான மொழிபெயர்ப்புகளும் வருகிறது. யாவும் சொல்லப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. கலை, பண்பாடு, செயற்பாட்டாளர்கள் என இன்னும் விரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஜெ. மஞ்சரியின் நேர்காணல் முதல் இதழில் வருகிறது. அது ஒரு தொடக்கமாக அமையும். “ஆகஸ்ட் 1” லிருந்து நீலி மின்னிதழ் வருவதற்கான பணியில் இருக்கிறோம் ஜெ.
சீனு சாரிடம் இதழ் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது நீங்கள் ஆரம்பித்த “ஜன்னல்” இதழ் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதில் “காலம்தோறும் பெண்” என்ற கட்டுரைத் தொடரை நீங்கள் எழுதிக் கொண்டிருந்ததாகச் சொன்னார். அது சங்க காலம் தொடங்கி நவீன இலக்கியம் வரை பெண்களின் எழுத்துக்கள் பற்றிய ஒரு கோட்டை வரைவதான கட்டுரை என்றும் இந்த இதழுக்கு அந்தக் கட்டுரைகள் ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும் கூறினார். அதைப் பற்றிய முழு விவரம் தெரியவில்லை ஜெ. அந்தக் கட்டுரைகள் எங்களுக்கு கண்டிப்பாக வழிகாட்டியாக அமையும் ஜெ. நீலி மின்னிதழின் சிந்தனை உங்களிலிருந்து உருவானது தான் என்பதை தீர்க்கமாக நம்புகிறேன். என்னிலிருந்து பிறக்கும் அனைத்து சிந்தனையும் எங்கோ நீங்கள் விதைத்தது தான் என்றும் உளமாரக் கருதுகிறேன் ஜெ. இதழுக்கான பெயர் என்று சிந்தித்த கணம் என் முன் வந்தது “நீலி”; “காளிந்தி” என்ற இரு பெயர்கள் தான். ஆனால் அன்று கடிதம் எழுதும்போது இயல்பாகவே “நீலி” என்ற பெயர் வந்து அமைந்து கொண்டது. ஜன்னல் இதழுக்கு எழுதிய கட்டுரைகள் இருந்தால் அது நீலி மின்னிதழுக்காக நீங்கள் தர வேண்டும். ஒருவேளை எழுதி முடிக்கப்படாமல் இருந்தால் எங்களுக்காக நீங்கள் சங்ககாலம் முதல் தற்போது வரை உள்ள பெண் எழுத்துக்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை தொடர் கட்டுரைகளாகத் தர வேண்டும். நீலி மின்னிதழைப் பற்றிய விளக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம். இது சார்ந்த உங்களின் அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் தேவை ஜெ.
பணிவன்புடன்
ரம்யா .
***
அன்புள்ள ரம்யா
மகத்தான முயற்சி. வாழ்க
எந்த பெருமுயற்சியும் ‘என்ன வந்தாலும் இதை நிகழ்த்துவோம்’ என்னும் உறுதிப்பாட்டில் இருந்தே வெற்றிநோக்கிச் செல்லமுடியும். எதிர்ப்புகள் வந்தாலும், அனைவருமே விலகிச் சென்றாலும், இது நிகழவேண்டும். எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் ஒரு வரி உண்டு. ‘நான் என்னிடம் எந்த சாக்குபோக்கையும் சொல்லிக்கொள்ள மாட்டேன்”
ஜெ
***
நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை ஓர் இலக்கியவாதியாக இன்று நினைவுகூரப்படுவதில்லை. அவருடைய ஒரு கவிதையேனும் எங்கும் எவராலும் மேற்கோள் காட்டப்படுவதில்லை. ஒருவேளை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் அவருக்கும் பாரதிதாசன் போல ஒரு பல்கலைகழகம் அமைந்திருக்கலாம். ஆனால் இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கே அவரைத் தெரியாது.
பாரதிதாசன் பரம்பரை போல நாமக்கல் கவிஞர் மரபு என்று ஒன்று தமிழ்க் கவிதையில் உண்டு. பாரதிக்குப்பின் வந்த மரபுக்கவிதை இயக்கங்கள் இரண்டு. ஒன்று நாமக்கல் கவிஞர் மரபு. அம்மரபில் ஏராளமான கவிஞர்கள் உண்டு. பலர் இன்று நினைக்கப்படுவதில்லை
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை நாமக்கல் கவிஞர் மரபுமைத்ரி -எதிர்வினைகள்
அன்புள்ள ஜெ,
மைத்ரி நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். இங்கு இரவு மணி மூன்று.
மாத்ரி-ஜீது (சக்தி-சிவன்) தொன்மத்தின் நவீன வடிவமான மைத்ரி-ஹரன், கற்பனாவாதமும் யதார்த்தமும் கலப்பது என மைத்ரி எனக்கு மிக பிடித்திருந்தது. அஜிதனுக்கு அன்பும் வாழ்த்துக்களும். முதல் நாவல் என்ற ஆச்சரியம் விலகவில்லை. கூடவே இதுவே கடைசி நாவல் என்று அவர் சொல்வது வருத்தத்தையும் தருகிறது.
எனக்கு காஷ்மீர சைவம் மற்றும் தத்துவங்கள் குறித்த பரிச்சயம் இல்லை. சுசித்ராவின் சிறந்த முன்னுரையை ஒரு கையேடாக கொண்டு மீள்வாசிப்பு செய்தால் அந்த தளங்கள் பின்பு திறக்கலாம். ஆனால், நாவலின் காதல் கதைக்காகவும், கற்பனாவாத நில காட்சிக்காகவும், கொட்டிக்கிடக்கும் உவமைகளுக்காகவுமே எனக்கு பிடித்திருந்தது. உதா: மரங்களே அற்ற சரளை கற்களால் ஆன மலைச்சரிவை “தோலுரிக்கப்பட்ட விலங்கு” என்கிறார்; கரிய வானில் பதிந்த கூர்நகத்தடமாக பிறைநிலவு வருகிறது.
காடு நாவலின் கூட்டுவாசிப்பு தந்த பரவசத்தில் அதைப்போன்று ஒரு நாவல் எழுதிப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன் என முன்னுரையில் சொல்கிறார் அஜிதன். காடு நாவலில் காமம் அதன் அத்தனை வடிவங்களிலும் வரும்; நிறைய கதைமாந்தர்கள்; நாவலின் கதை நிகழும் காலம் – கதாநாயகன் கிரியின் மொத்த வாழ்நாள். மைத்ரியில் கதையின் காலம் இரண்டே நாட்கள். மிகக்குறைந்த கதை மாந்தர்கள். காடு நாவலில் உச்சமாக வரும் குறிஞ்சி பூக்கும் மலைச்சரிவில் தேன் உண்ணும் வண்டுகளின் வாழ்க்கையை (நீலி-கிரி) மட்டுமே எடுத்து, விரித்து சொல்வது போல கதைக்களம்.
காடு நாவலின் மையமே “முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்லின் பெருவிருந்தே காமம்” என்ற சங்கபாடல் தான். காமம் என்ற தீராத விருந்தை சுவைத்து பருகிய சங்ககாலத்து கண்ணதாசனின் தரிசனம் அது.
மைத்ரியின் தரிசனம் அந்த தீராத விருந்தை சுவைத்துப் பருகி, பின்பு ஆழத்து இருளுடன் மல்லிட்டு, திசையெங்கும் கிழித்து எறிந்த மெய்ஞானியுடையது.
காஷ்மீர சைவ மெய்ஞானி லல்லேஷ்வரியின் வரிகளுடன் நாவல் துவங்குகிறது. இந்த மூன்று வரிகளும்தான் நாவலின் மூன்று பகுதிகள்.
“ஒரு கணம் கூட அதை ஏற்கவில்லை
நான் என் சுயத்தின் மதுவை
கண்மூடி பருகினேன்.
பின் என் ஆழத்து இருளுடன்
மல்லிட்டேன்
அதை வீழ்த்தி நகங்களால்
திசையெங்கும் கிழித்தெறிந்தேன்.
– லல்லேஷ்வரி
அன்புடன்,
விசு
வால்நட் கிரீக், கலிஃபோர்னியா
06-29-2022
அஜிதன் எழுதிய மைத்ரி நாவலை முன்வைத்து
அஜிதனின் முதல் நாவல் இது. சமகால தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவராக இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் புதல்வன் அஜிதன்.
அஜிதனுக்கும் என் சொந்த மாவட்டமான தருமபுரிக்கும் ஒரு பூர்வீக தொடர்புண்டு. ஜெமோ தருமபுரியில் தொலைதொடர்பு துறையில் பணிபுரிந்த போது 1993 ஆம் ஆண்டு தர்மபுரி மண்ணில் பிறந்தவர் அஜிதன்.
சிறுவயதில் பள்ளிப் படிப்பில் அஜிதன் ஒரு மந்த புத்திக் காரணகாவே இருந்திருக்கிறார். தனியார் பள்ளிகளால் அஜிதனை கையாள முடியாது என தெரிந்த ஒரு தருணத்தில் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டு பத்தாம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் 460 மதிப்பெண் பெற்றவர் அஜிதன்.
அமெரிக்க தத்துவஞானி இங்கர்சால் பள்ளிகளும், கல்லூரிகளும் குழந்தைகளை வைரங்களாக பட்டை தீட்டாமல் வெறும் கூழாங்கற்களாவே மாற்றுகிறது என்பது எவ்வளவு நிஜம். உண்மையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மந்தபுத்திக்காரர்களாக இருந்தவர்கள் பின்னாளில் அவர்கள் சார்ந்த துறைகளில் பெரும் உச்சத்தை அடைந்திருக்கிறார்கள்.
அஜிதன் ஜெயமோகனின் மகன் என்பது அஜிதனுக்கு பெருமிதமும் பலமும் என்றாலும் அதுவே அவருக்கு பலவீனமும் கூட.
இன்றைக்கு வாசிக்கக்கூடிய எழுதக்கூடிய நிறைய பேருக்கு ஒரு ஆதர்சமான குருநிலை மனிதர் ஜெயமோகன். அஜிதனுக்கும் அவர் அப்பா என்ற உயிர் உறவு தாண்டி குருநிலை ஆசான். ஆனால் அவரின் பாதிப்பில்லாமல் தன்னை இலக்கியத்தில் முன்னிறுத்தி கொள்வதுதான் அஜிதனுக்கு முன்னிருக்கும் மிகப்பெரிய சவால்.
மைத்ரி நாவலில் ஒரு வித பேரமைதியும், நிதானமும் உள்ளது. முப்பது வயதிற்குள் இப்படி ஒரு முதிர்ச்சி மனம் கொண்டு இந்த வாழ்க்கையை, உலகை ஆன்மிக சிந்தனையில் பார்த்திருப்பது அஜிதனின் பலம் என்றே சொல்லலாம்.
ஜெயமோகனின் முதல் நாவல் ரப்பரில் அவர் பிறந்து புரண்டு புழுதியளந்த குமரி மண்ணின் நிகர் வாழ்கையும், மனிதர்களும் புனைவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அஜிதனின் முதல் நாவலிலேயே இந்திய ஆன்மீகத்தின் ஞானபூமியான இமயமலையையும், காதலையும் களமாக்கியுள்ளார். அப்பா குமரியில் ஆரம்பித்ததை மகன் இமயத்தில் ஆரம்பித்திருக்கிறார்.
இமயமலை நோக்கிய பயணத்தில் ஒருவனுக்கு கைகூடும் ஒரு காதலின் கனமான சித்திரம் இந்நாவல். நாவல் முழுக்க எவ்வித உணர்ச்சி உயரங்களும் கையாளப்படாமல் நுண்ணிய சித்தரிப்புகளால் எழுதப்பட்ட நாவல் இது. முழுக்க முழுக்க கர்வாலி மக்கள் சார்ந்த வாழ்வியல், பண்பாடு பற்றிய விவரிப்புகள் கொண்ட நாவல்.
நாவலில் வரும் ஹரனும், மைத்ரியும் இளமையின் இச்சைகள் நிரம்பிய உயிர்கள் என்றாலும் ஒரு வித தூய உறவோடு பயணிக்கிறார்கள். நாவலில் சிக்கி, சோனியா என்ற இரண்டு கோவேறு கழுதைகளும் இரு பாத்திரங்களாக இவர்களை மலைகளில் சுமந்து பயணிக்கிறது.
ஹரனின் மனதில் கடந்த கால சித்திரமாய் அவ்வப்போது கெளரி என்ற பெண்ணின் உருவம் வந்து போகிறது. காடு நாவலில் வரும் வனநீலி போல. மைத்ரியின் ஜித்து பெரியப்பாவிற்கும், ரிது பெரியம்மாவிற்கும் இடையேயான கைகூடாத காதல் கதை வரும் அத்தியாயம் ஒரு கனமான காதல் கவிதை.
மந்தாகினி ஆறு, தேவதாரு மரங்கள், பனி மலை, காடு, மசக்பின் இசை என ஒரு தூய்மையான உலகை நம் முன் விரித்து செல்கிறது மைத்ரி நாவல். கர்வாலி மக்களின் ஐதீகத்தின் படி சிவபெருமானை அடைய பார்வதி கடுந்தவம் புரிந்து சிவன் தன் காதலை ஒப்புக் கொண்ட இடம் கெளரிகுந்த் எனப்படுகிறது. இதே கொளரி குந்தில் தான் ஹரனும், மைத்ரியும் புணர்ந்து பிரிகிறார்கள். மைத்ரி அவனை விட்டு செல்லும் போது ஒரு வித மனப்பித்தேறி அலைந்து இமயமலை உச்சியை அடைகிறான் ஹரன்.
மனம் எல்லா பற்றிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் தருணம் தான் விடுதலையே. அவ்வித விடுதலையை கொளரி குந்த்தில் உள்ள ஒரு வெப்பகுளத்தில் மூழ்கி அடைகிறான் ஹரன். அவன் உள்மூச்சில் நான் நான் என்ற ஓங்காரத்தை உணர்கிறான். அனைத்துயிர்களின் உணர்வுகளுக்கு ஆதாரமான சிவனை தான் என உணர்வதே காஷ்மீர சைவத்தின் நோக்கமாகும்.
ஹரன் என்றால் சிவபெருமான் என்று பொருள். கெளரி என்றால் பார்வதி என்றும் பொருள். மைத்ரி என்றால் ஒன்றாதல், ஒன்று மட்டுமே ஆதல் என புத்த மதம் கூறுகிறது. காஷ்மீர சைவம் மற்றும் பெளத்த மெய்மையின் தேடலின் நிறைவே இந்நாவலின் தரிசனமாகிறது. முழுக்க முழுக்க ஒருவனின் பயணமும் காதலும் கலந்து தத்துவ தரிசனத்தை முன் வைக்கும் நாவல் இது.
உண்மையில் இந்த நாவலில் ஜெயமோகனின் சாயல் இல்லை என்று சொல்ல முடியாது. ஜெயமோகனை பின்பற்றுபவர்களுக்கே எழுத்தில் அந்த பிரச்சினை உண்டு. அவருக்கு பிறந்த மகனுக்கும் இருக்கத்தானே செய்யும். ஆனால் பிற்காலத்தில் அவர் எழுதி எழுதி அவரது தந்தையின் சாயலிலிருந்து அவரை விடுவித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். இமயமலைப் பற்றி எழுதப்பட்ட நூல்களில் எனக்கு எப்போதும் பிடித்தவை ஜெயமோகன் எழுதிய பனி மனிதன் நாவலும், ஷௌக்கத் எழுதிய ஹிமாலயம் பயண நூலும் தான்.
இந்த இரண்டு நூலின் தாக்கம் இல்லாமல் அஜிதன் மைத்ரி நாவலை எழுதியிருப்பது அவரது தனித்தன்மைக்கு சான்று. நாவல் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த வித உணர்ச்சி மேலோங்கலும் இல்லாமல் ஒரு தூய நதியின் நடை வடிவில் எழுதப்பட்டுள்ளது. செவ்வியல் இலக்கியங்களைப் படிக்கும்போது மனம் கொள்ளும் வெறுமையையும், கடுமையுணர்வையும்ம் இந்த நாவலிலும் உணர்ந்தேன். அப்படி பார்த்தால் மைத்ரி கூட ஒரு வகையில் செவ்வியல் சாயல் கொண்ட நாவல் தான்.
வேலு மலயன்
மைத்ரி அச்சுநூல் வாங்க மைத்ரி அச்சுநூல் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் மைத்ரி மின்னூல் வாங்க மைத்ரி நாவல் இணைய தளம்சொல்மயங்கும் வெளி, கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
“சொல்மயங்கும் வெளி” கட்டுரையை ஒட்டி ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் கல்லூரி விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது சுஜாதவின் கதைகளை (பெரும்பாலும் அறிவியல்) வாங்கி படிப்பதுண்டு. அப்போது பார்வதிபுரத்தில் வசிக்கும் என் நண்பன் மணிரத்னம் பார்வதிபுரத்துக்கு வந்திருந்தார் என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஜெயமோகன் என்ற எழுத்தாளர் தன் வீட்டில் பக்கத்தில் தான் இருப்பதாகவும் அவரை பார்க்கத்தான் மணிரத்னம் வந்ததாகவும் சொன்னான். இது கடல் திரைப்படம் வெளியாவதற்கு ஓர் ஆண்டு முன்பு.
அடுத்த முறை நான் புத்தகக்கடைக்கு சென்றபோது ஜெயமோகன் புத்தகங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். விஷ்ணுபுரம், கொற்றவை போன்ற “பெரிய” புத்தகங்கள் மிரட்சியடைய செய்தன. அப்போது தான் “விசும்பு” அறிவியல் புனை கதை தொகுப்பை வாங்கினேன். அதன் முதல் கதையான ஐந்தாவது மருந்தே என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தொகுப்பின் கதைகள் உருவாக்கிய தாக்கம் ஏன், அது ஏன் முன்பு படித்த கதைகளில் உருவாகவில்லை என்பதற்கான விடைகளை “சொல்மயங்கும் வெளி” கட்டுரையில் கண்டுகொண்டேன். எனக்கு தீவிர இலக்கியத்தின் அறிமுகமாக அமைந்தது “விசும்பு” தொகுப்பு தான். இப்போது தொடர்ந்து கடந்த 8-9 வருடங்களாக உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன்.
தமிழ் சூழலில் தீவிர இலக்கியம் பெரும்பாலான மக்களுக்கு தற்செயலாகத்தான் அறிமுகமாகிறது என்று நீங்கள் ஒரு உரையில் சொல்லியிருப்பீர்கள். என் விஷயத்தில் அது முற்றிலும் உண்மை. பார்வதிபுரத்துக்கு வந்த மணிரத்தினத்திற்கும் அதை என்னிடம் சொன்ன என் நண்பனுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.
அன்புடன்
கார்த்திக்
கிருஷ்ணன்கோயில், நாகர்கோயில்
அன்புள்ள ஜெ
சொல் மயங்கும் வெளி வாசித்தேன். அறிவியல் புனைகதைகள் பற்றிய என் மிகப்பெரிய குழப்பம் ஒன்றுக்கான பதில் அதில் இருந்தது. அறிவியல்புனைகதைகள் ஏன் இலக்கியமாவதில்லை, அல்லது எப்படி இலக்கியமாகின்றன என்பது மிகப்பெரிய கேள்விதான். மேலைநாடுகளில் எல்லா ஃபேண்டஸிகளையும் அறிவியல்புனைவு பிரிவில் சேர்த்துவிடுகிறார்கள். அவை அறிவியலை பயன்படுத்தி எழுதப்பட்டால்தான், அறிவியல் கொள்கை ஒன்று அவற்றில் இருந்தால்தான் அவை அறிவியல்புனைகதைகள். அறிவியல் புனைகதைகள் இலக்கியமாவது அவை நாம் வாழும் வாழ்க்கையின் அடிப்படைகளை நிலைகுலையச் செய்து புதிய கேள்விகளை எழுப்பும்போதுதான். கௌதம சித்தார்த்தனின் நூலை படிக்கவேண்டும்
ஆர்.கே.சுந்தர்
July 15, 2022
காப்பியங்கள் தமிழில்
தமிழில் பிறமொழிக் காப்பியங்கள் அரிதாகவே மொழியாக்கம் செய்யப்படுகின்றன. மகாபாரதத்திற்கே சரியான உரைநடை மொழியாக்கம் என்பது நீண்டநாட்களாக இல்லை என்பதே சூழல். தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரின் கும்பகோணம் மொழியாக்கம் வெளிவந்த காலகட்டத்திலேயே புதுமைப்பித்தன் போன்றவர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. முதல்பதிப்புக்குப்பின் அரைநூற்றாண்டுக்காலம் மறுபதிப்பு வெளிவரவில்லை. இன்றும் அந்நூல் வாசிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.
ஆனால் பாகவதம் உட்பட வெவ்வேறு புராணங்களின் மொழியாக்கங்கள் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன. வால்மீகி ராமாயணத்துக்கு சிறந்த மொழியாக்கம் உள்ளது. ரகுவம்சத்திற்கு வே.ஸ்ரீ. வேங்கடராகவாச்சார்யர் மொழியாக்கம் தமிழில் ஒரு சாதனை என்றே சொல்லத்தக்கது. காவிய ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ளும் மொழியாக்கம் அது. (ரகுவம்சம் )
மேலைக்காவியங்களில் மிகச்சிலவே தமிழில் வெளிவந்துள்ளன. ஒப்புநோக்க அவற்றில் சிறந்த மொழியாக்கம் நாகூர் ரூமி மொழியாக்கத்தில் வெளிவந்த இலியட் மொழியாக்கம். நவீன உரைநடையில் செறிவாக அமைந்த அந்த மொழியாக்கம் பரவலாக வாசிக்கப்பட்ட ஒன்று.
முற்றிலும் வீண் எனச் சொல்லத்தக்க இரு மொழியாக்கங்கள் உள்ளன. ஒன்று ஆர்.சிவலிங்கம் (உதயணன்) மொழியாக்கம் செய்த பின்னிஷ் மொழி காவியமான கலேவலா. அந்த மொழியாக்கத்தின் அச்சு, அதன் படங்களின் தரம், அனைத்தையும் விட அதன் மலிவான விலை (பின்லாந்து அரசின் நிதிக்கொடையுடன் அச்சானது) காரணமாக அதை பலர் வாங்கியிருப்பார்கள். நானும் வாங்கினேன். வாசிக்க வாசிக்க மண்டையில் கல்லால் அறைந்த உணர்வை நான் அடைந்ததையே பலரும் அடைந்திருப்பார்கள்.
கலேவலா பின்னிஷ் மொழியின் முதற்காப்பியம். பலவகையிலும் இந்திய இதிகாசங்களுடன் ஒப்பிட்டு ஆராயவேண்டியது. சீவகசிந்தாமணி முதலிய தமிழ் காப்பியங்களுடனும் ஒப்பிடப்படலாம். ஆனால் தமிழ் நாட்டார் காப்பியங்களான உலகுடையபெருமாள் கதை, சுடலை மாடன் கதை போன்றவற்றுடன் ஒப்பிடப்பட்டு மிக விரிவான ஆய்வுகள் நடைபெற்றிருக்கலாம். கிரேக்க, கிறிஸ்தவ செவ்வியலால் தொடப்படாத நாட்டார் காவியமான இது இந்தியாவின், தமிழகத்தின் தொன்மையான காவியங்களை புரிந்துகொள்ளும் பல வழிகளை திறக்கக்கூடியது. ஆனால் அத்தகைய எந்த ஆய்வும் நிகழவில்லை. கலேவலா பற்றிய எந்த உரையாடலும் தமிழ்ச்சூழலில் நிகழவில்லை.
அவ்வண்ணம் வாசிக்கப்படாமல் போனமைக்கு ஆர்.சிவலிங்கம் அவர்களின் மொழியாக்கம் ஒரு முதன்மைக்காரணம். தமிழக நாட்டாரிலக்கியம் சார்ந்த அறிதலோ, செவ்வியல் மரபில் பயிற்சியோ இல்லாத அவர் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பயிற்சியற்ற மொழியில் இக்காவியத்தை மொழியாக்கம் செய்தார்.பின்னர் உரைநடையில் மொழியாக்கம் செய்யப்பட்டபோதும்கூட அந்நடை தேர்ச்சியற்றதாக, தேவையற்ற சொற்களும் சொற்றொடர்க்குழப்பங்களும் கொண்டதாகவே அமைந்தது. தமிழக எழுத்து- வாசிப்புச் சூழலில் இருந்து பலகாலம் அகன்றிருந்த ஆர்.சிவலிங்கம் அவர்களுக்கு தமிழின் ஓட்டம் கைவரவில்லை.
புதுக்கவிதைக்கு அண்மையான அல்லது தமிழ்நாட்டார்ப் பாடல்களுக்கு அணுக்கமான ஒரு வடிவில் இக்காவியம் மீண்டும் மொழியாக்கம் செய்யப்படவேண்டும், அஸ்கோ பர்ப்போலாவின் முன்னுரைகூட வாசிப்புக்கு உகந்த தமிழில் மீண்டும் மொழியாக்கம் செய்யப்படவேண்டும் . அதன்பின் சில வாசிப்பரங்குகளுடன் இது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டால் நம் காப்பிய வாசிப்பில் பெரிய விளைவுகள் உருவாகலாம்
நான் ஆங்கிலச் சுருக்கத்தில் மிக ஈடுபட்டு வாசித்த காப்பியம் தாந்தேயின் டிவைன் காமெடி. பல கட்டுரைகளில் அதை குறிப்பிட்டிருப்பேன். ஏனென்றால் அது சித்தரிக்கும் ஆன்மாவின் மீட்புப்பயணம் ஒரு காலகட்டத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு மிக அண்மையானதாக இருந்தது.
டிவைன் காமெடியை விண்ணோர் பாட்டு என்ற பெயரில் கே.சுப்ரமணியம் மொழியாக்கம் செய்து விடியல் பதிப்பகம் வெளியிட்டது. பெரிய நூல்கள். விடியல் சிவா எனக்கு அவற்றை ஒரு சிறு குறிப்புடன் அனுப்பிவைத்து அந்நூலைப்பற்றி நான்கு வரி எழுதும்படி கோரினார். நானும் எழுதவேண்டும், பாராட்டவே வேண்டும் என்னும் எண்ணத்துடன் அந்நூலை வாசிக்க முற்பட்டேன்.
மிகக்கொடுமையான மொழியாக்கம். மரபார்ந்த யாப்பில் அமைந்த நடை. யாப்பு என்பது இயல்பாக, பேச்சுபோல தன்னியல்பாக, ஒருவருக்கு வருமென்றால்தான் அது வாசகனுக்கு உகந்ததாக இருக்கும். செய்யப்படும் யாப்பு என்பது ஒருவர் முக்கி முக்கிப் பேசுவதுபோன்றது.
கே.சுப்ரமணியம் தங்குதடையின்றி யாப்பை கையாளும் அளவுக்கு தமிழ்ப்புலமை கொண்டவர் அல்ல. ஆகவே செய்யுள்நடை மிகமிக செயற்கையாக உள்ளது. யாப்பு தன்னியல்பாகவே அடைமொழிகள் மற்றும் அணிமொழிகள் வழியாக இயங்கக்கூடியது. எனென்றால் அதில் பொருள் அமைவதைவிட சந்தம் அமைந்தாகவேண்டும். ஆகவே சரியாக யாப்பு அமையாவிடில் சுற்றிச்செல்லும் நடையும், தேய்வழக்கான அணிகளும் செய்யுளில் நிறைந்திருக்கும். கே.சுப்ரமணியத்தின் மொழியாக்கம் அத்தகையது.
டிவைன் காமெடியை இன்றைய நவீன மொழிநடையில். செறிவாக எவரேனும் மீண்டும் மொழியாக்கம் செய்யலாம். அது பொதுவாசகர் இயல்பாக வாசித்துச்செல்லத்தக்க நூல் அல்ல. ஆனால் ஆய்வாளர்களுக்கு இந்திய காவியங்களை ஐரோப்பியக் காவியங்களுடன் ஒப்பிட்டு வாசிக்க மிக உதவியானது. ஐரோப்பாவின் வரலாறென்ன, அதன் சாராம்சமான விழுமியங்களும் உணர்வுகளும் என்ன என்பதை ஐரோப்பியப் பெருங்காவியங்கள் வழியாகவே நாம் உணர்ந்துகொள்ளமுடியும். நவீன ஐரோப்பிய ஆக்கங்களை வாசிக்கவும் இன்றியமையாதது அந்த வாசிப்பு.
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2015
கலேவலா தமிழ் விக்கி உதயணன் தமிழ் விக்கிகி.வா.ஜகந்நாதன், நாட்டாரியல் முன்னோடியா?
நான் ஓரு பல்கலைக் கழக உரையில் கி.வா.ஜகந்நாதன் தமிழக நாட்டாரியல் முன்னோடிகளில் ஒருவர் என்று சொன்னேன். அரங்கில் திகைப்பு. நாட்டாரியலில் ஆய்வு செய்யும் ஒருவர் என் ’அறியாமையை’ பெருந்தன்மையுடன், மென்மையாக மறுத்தார். நான் கி.வா.ஜ செய்த ஆய்வுகள், தொகைநூல்களை அங்கே குறிப்பிட்டேன். அவர்கள் அந்த மாபெரும் பங்களிப்பு பற்றி கேள்விப்பட்டிருக்கவே இல்லை.
இதைப்போல பலவகையான தொன்மங்கள் அறிவுத்துறை சார்ந்தே கட்டமைக்கப்படுகின்றன. அவை தற்செயலாக உருவாகின்றவை அல்ல. தமிழக நாட்டாரியலை மட்டுமல்ல அதன் வரலாற்றையே புனைவாக உருவாக்கும் ஒரு போக்கும் இங்குள்ளது. எந்த கட்டுரையிலும் கி.வா.ஜகந்நாதனோ மு. அருணாசலம் அவர்களோ குறிப்பிடப்பட்டிருக்க மாட்டார்கள்.
நான் அவர்கள் பெயரைச் சொன்னதுமே ‘அவர்கள் அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிடவில்லை’ என்பார்கள் சிலர்.
‘சரி, பெரிதாகச் செய்தவர் எவர்?’ என்பேன்
யோசித்து குழம்பி சில பெயர்களைச் சொல்வார்கள். பெரும்பாலும் ஏதாவது வெளிநாட்டுக் கட்டுரைகளை குளறுபடியாக தமிழாக்கம் செய்தவர்களின் பெயர்களாக இருக்கும் அவை.
கி.வா.ஜகந்நாதன் போன்றவர்கள் செய்த அரும்பணியின் இடம் அது அல்ல. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் அச்சு ஊடகமும் நவீனக்கல்வியும் பரவத்தொடங்கி, வாய்மொழி மரபு வேகமாக அழிந்துகொண்டிருந்தது. செவிச்செல்வமாக கேட்டு அறிந்து நினைவிலிருந்து சொல்பவர்கள் மறைந்துகொண்டிருந்தனர். அந்த காலச்சந்தியை உணர்ந்து வாய்மொழியில் இருந்து நாட்டார்பாடல்கள், பழமொழிகள், கதைகளை அலைந்து சேகரித்து பதிவுசெய்து தொகுத்த அவருடைய பணி என்பது பலவகையிலும் உ.வே.சாமிநாதையரின் பணிக்கு நிகரானது. அவரே இருபதாண்டுகள் பிந்தி தொடங்கியிருந்தால் பாதிப்பங்கு அழிந்திருக்கும்.
அவரை எளிமையாக சாதிச்சிமிழுக்குள் அடக்குவார்கள். அவர் செவ்வியல் அறிஞர் என்பதனாலேயே நாட்டாரியலுக்கு எதிரானவராகவே இருப்பார் என இவர்களே கற்பனை செய்துகொள்வார்கள். திட்டமிட்டே வேறு வரலாறுகளை எழுதிக்கொள்வார்கள். ஆனால் வெறுந்தகவல்களாலேயே ஒரு கலைக்களஞ்சியம் உண்மைவரலாறாக, மறுக்கமுடியாத ஒரு கட்டுமானமாக நிலைகொள்ளக்கூடும்.
கி. வா. ஜகந்நாதன்தமிழ்விக்கி,நண்பர்களும் பகைவர்களும்
தமிழ்விக்கி தொடங்கப்பட்டபின் வந்துகொண்டிருக்கும் எதிர்வினைகள் வேடிக்கையானவை. ஆனால் சிரிக்கப் பழகவில்லை என்றால் நாம் தமிழ்ச்சமூகத்தின் மீதான நம்பிக்கையையே இழந்துவிடுவோம்.
இத்தனைக்கும் இதை படிப்பவர்கள் தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த சிறுபான்மையினர் என்பதை மறக்கக்கூடாது. அவர்களில் உள்ள மனநிலைகளைச் சொல்லவருகிறேன்.
தமிழ் விக்கி வெளியான சிலநாட்களிலேயே ஒரு நண்பர் பதில் போட்டிருந்தார். அவர் வெளிநாட்டில் வசிப்பவர். நன்றாகவே படிப்பவர். ஆனால் வாழ்நாளின் கடைசித்துளி உழைப்பையும் ஒரே விஷயத்துக்காகச் செலவிடுகிறார். அவர் பிறந்த சாதிதான் ’உலகிலேயே உசத்தி’ என நிறுவ.
நான் அவருக்கு முன்பொரு முறை எழுதினேன். மெய்யாகவே அவ்வாறு தன் உழைப்பால் அவர் அதை நிறுவிட்டாரென்றால்கூட அதனாலென்ன நன்மை? அவர் பிறந்தமையால் அச்சாதி உலகிலேயே உயர்ந்தது என ஆனால் என்னதான் கிடைக்கும் அவருக்கு?
அவர் என்னை அவருடைய சாதிக்கு எதிரானவன் என்று முத்திரை குத்தி வசைபாடி எழுதினார். நான் அவரை மேற்கொண்டு கவனிப்பதை விட்டுவிட்டேன். ஆனால் என் உள்ளம் மலைப்படைந்துவிட்டிருந்தது. எவ்வளவு பிரம்மாண்டமான வாழ்க்கை விரயம். எவ்வளவு பெரிய மாயை.
தமிழ் விக்கி வந்ததும் அவர் கடிதங்கள் எழுதலானார். பிழைசுட்டும் கடிதங்கள். எஸ்.வையாபுரிப்பிள்ளை அகராதிக்குழுவின் தலைவர்தான், அவருக்கு அகராதி தயாரிப்பில் பங்கில்லை, அதைச் செய்தவர்கள் கீழே இருந்தவர்கள். ஒரு பட்டியல் அனுப்பியிருந்தார். அங்கே பிழைதிருத்துநர் பணி செய்த நாலைந்து பிராமணர்கள்.
நான் அவருக்கு வையாபுரிப் பிள்ளை அகராதி நினைவுகள் என்னும் நூலில் எழுதிய செய்திகளை அனுப்பினேன். ‘இருட்டடிப்பு செய்றார்’ என ஒரே வரி பதில். அடுத்த கடிதம். காஞ்சிப் பெரியவர் ஆசியால்தான் பெரியசாமி தூரன் கலைக்களஞ்சியம் தயாரித்தார். அவரே அதைச் சொல்லியிருக்கிறார். அதை அவரைப்பற்றிய பதிவில் சேர்க்கவேண்டும். நான் அவருக்கு விளக்கம் அளிக்கவில்லை. அவர் தமிழ்விக்கி ஒரு நசிவு சக்தி என்றும், அதை எதிர்ப்பது தன் கடமை என்றும் சொல்லி நீண்ட பதில் எழுதினார்
மறுபக்கம் தினம் ஒரு கடிதம்.பாலகுமாரன், லா.ச.ரா ,சுந்தர ராமசாமி, க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா போன்ற ’பார்ப்பனர்களை’ தமிழ் விக்கி ‘பிரமோட்’ செய்கிறது. அதற்கு பணம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை ‘வைக்கவேண்டிய இடத்தில்’ தமிழ் சமூகம் வைத்திருந்தது. அதை முறியடிக்க சூழ்ச்சி நடக்கிறது- இப்படி. இந்தப் பட்டியலில் சுவாமி விபுலானந்தரையும் பார்ப்பனப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.
இங்கே எல்லாருக்கும் பிரச்சினை புறவயத்தன்மைதான். தகவல்கள்தான் எதிரி. அவரவர் கூச்சலை அவரவர் போட இடம் ஒதுக்குவதை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்.
லா.ச.ராமாமிர்தம் பாலகுமாரன் சுந்தர ராமசாமி க.நா.சுப்ரமணியம் சி.சு.செல்லப்பாசௌராஷ்டிரர் வரலாறு -கடிதம்
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் வாசகன் அருண் எழுதுவது. வணக்கம்.
உங்கள் புலம்பெயர்தல் பற்றிய காணொளியை சமீபத்தில் கேட்டேன். அதில் சௌராஷ்டிர சமூகத்தின் புலம் பெயர்தல் பற்றி ”மீ காய் கேரூன்” என்று ஒரு புத்தகம் எழுத முயற்சி நடந்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள். நான் சௌராஷ்டிர சமூகத்தை சேர்ந்தவன் அனால் என் சிந்தனை மொழி தமிழ் தான். என் பிறந்த ஊர் திண்டுக்கல். எனக்கு சௌராஷ்டிர சமூகத்தின் புலம்பெயர்தலின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம். எனக்கு எங்கள் சமூகத்தின் புலம் பெயர்தல் பற்றி மிகவும் குறைவான தகவல்களே தெரியும். நான் தெரிந்து கொண்ட விவரங்கள் கீழ்கண்டவாறு :
கஜினி முகம்மது படையெடுப்பின் பொது சௌராஷ்டிர தேசத்தில் இருந்து புலம் பெயர்ந்து பல நகரங்கில் தங்கி விஜய நகர பேரரசின் காலத்தில் ஆந்திர தேசத்திற்கு வந்து பல காலம் தங்கி இருந்தனர் அப்போது பெருமாள் வழிபாடு மற்றும் அவர்களின் சில சடங்குகள் எங்கள் சமூகத்தின் பழக்கவழக்கங்களுடன் கலந்தது. சில காலம் கழித்து தமிழகம் புலம் பெயர்ந்து . இங்கு தங்கி வாழ்கிறோம் என்பது பொது வரலாறு. இங்குள்ள மன்னர்களின் அழைப்பின் பேரில் நெசவு தொழில் செய்ய தமிழகம் வந்ததாகவும் கூறுகின்றனர்.
என் முன்னோர் 3 தலைமுறைகளுக்கு முன் பழனியில் இருந்து திண்டுக்கல் வந்ததாகவும் அவர் மந்திரம் , போர்த்தொழில் மற்றும் வைத்தியம் செய்து வந்ததாகவும் என் தந்தை சொன்னார். எங்கள் குடும்பத்தில் குலதெய்வமாக சிவனை வழிபடுகிறோம். என் தாத்தா (அப்பாவின் அப்பா ) புரட்டாசி மாதம் சனி கிழமையில் எங்கள் சமூகத்தில் மற்ற அனைவரும் பெருமாள் விரதம் இருக்கும் போது காலையிலேயே ஆட்டுக்கறி வாங்கி வருவாராம்.
எனக்கு சௌராஷ்டிர மக்களின் புலம் பெயர்தல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசை. நீங்கள் ஏதாவது நூல்களை பரிந்துரைத்தால் உதவியாக இருக்கும்.
அன்புடன்
அருண்
***
அன்புள்ள அருண்
நானறிந்தவரை சௌராஷ்டிரர்களின் தமிழகக் குடியேற்றம், அவர்களின் வாழ்க்கைச்சூழல் சார்ந்து சௌராஷ்டிரர் முழு வரலாறு என்னும் நூல் உள்ளது. ஆசிரியர் கே. ஆர்., சேதுராமன், மதுரை. முக்கியமான புனைவு என ஏதுமில்லை. எம்.வி.வெங்கட்ராமின் வேள்விதீ நாவலில் உள்ளது மேலோட்டமான ஒரு சித்திரம் மட்டும்தான்.
சௌராஷ்டிரர்களின் பூர்வ வரலாறு என ஒரு சிறு நூலை லண்டன் சுவாமிநாதன் என்னும் ஆய்வாளர் லண்டன் அருங்கட்சியக நூலத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளார்.
ஜெ
நாமக்கல் உரை, கடிதம்
நாமக்கல் கட்டண உரை பற்றிய அறிவிப்பை கண்டேன். வாழ்த்துக்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆன அரங்கின் தேவை பற்றி நீங்கள் எண்ணுவது புரிகிறது.
நடுவே ஒரு சின்ன வேடிக்கை. உங்கள் உரை பற்றிய போஸ்டரை எவரோ ஃபோட்டோஷாப் வேலை செய்து உறை என ஆக்கி முகநூலில் சுற்றில் விட்டிருந்தனர். அதை வைத்துக்கொண்டு ஒரு பாமரக்கூட்டம் கிக்கீக்கீ என சிரிப்பான்போட்டுக்கொண்டிருந்தது .எழுத்தாளர் என தங்களை நம்பிக்கொண்டிருப்பவர்களும் அதிலுண்டு.
என் நண்பர் ஒருவர், அப்படி ஒரு பதிவை என்னிடம் காட்டி கிக்கிக்கீ என்றார். நான் உங்கள் புத்தகங்களை காட்டி கேட்டேன், இதில் எதையாவது கேள்விப்பட்டிருக்கிறாயா? அவருக்கு ஒன்றும் தெரியாது. சரி, நீ எதையாவது வாசிப்பதுண்டா? அதுவும் இல்லை. சரி, உனக்கு தெரிந்த தமிழ் அவர்களுக்குத் தெரியாது என்று எப்படி முடிவுசெய்தாய்?
ஒரே காரணம் மதக்காழ்ப்பு. இணையத்தில் அப்படி போய் இளிப்பான் போட்டுவிட்டு வந்தவர்களில் பெரும்பாலானவர்களின் உணர்ச்சி மதக்காழ்ப்புதான். நான் சொன்னேன், மதக்காழ்ப்பால் இப்படி பொதுவெளியில் போய் பல்லிளிக்கையில் மதத்தை இழிவுசெய்கிறாய் என்று தெரிகிறதா? கற்பதையும் கற்பிப்பதையும் வலியுறுத்திய ஒரு மதத்தின் மேல் நம்பிக்கை கொண்டவன் இதைச் செய்யலாமா?
என்ன சொல்ல? இப்படித்தான் நம் சூழல் இருக்கிறது. இப்படி ஒரு அபத்தமான விஷயத்தை ஒருவன் எப்படி செய்யமுடியும் என நாம் நினைப்போம். அதை நம்பி அதற்கு ஆகா போட ஆயிரம் பேர் வந்து நிற்பதைக் கண்டால் திகைப்புதான் வருகிறது.
நியாஸ்
***
அன்புள்ள நியாஸ்,
1992ல் சோவியத் உடைவுக்குப்பின் அதுவரை இடதுசாரி தீவிரக்குழுக்களில் செயல்பட்டு வந்த ஒரு பெரும்கூட்டம் அரசியல் நம்பிக்கை இழந்து நேரடியாக கலையிலக்கியத்துள் நுழைந்தது. அவர்கள் அதுவரை கலையிலக்கியச் சூழலில் இருந்த எல்லா நெறிகளையும் அழித்தனர். சிறந்த உதாரணம் வினவு
இலக்கியச்சூழலில் வசைகள், வம்புகள் உண்டு. ஆனால் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து செய்யப்படும் திரிப்புகளும் பிரச்சாரங்களும் அதற்குமுன் இல்லை. அது அரசியல்வாதிகளின் உத்தி,
முகநூல் வந்தபின் நாம் பேசும் எல்லா களத்தையும் நாலாந்தர அரசியல்வாதிகள் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாவகையான திரிப்புகள், பிரச்சராங்களையும் அவர்கள் தங்கள் அரசியல்களத்தில் இருந்து இங்கே கொண்டுவந்து அறிமுகம் செய்கிறார்கள்.
ஜெ
July 14, 2022
சொல்மயங்கும் வெளி
(கௌதம சித்தார்த்தன் எழுதிய ‘இப்போது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?’ அறிவியல்புனைவின் முன்னுரை)
அறிவியல் புனைகதைகளின் முக்கியமான சவால்களில் ஒன்று அன்றாட யதார்த்தத்தை அறிவியலுடன் இணைப்பது. அறிவியல் நம்முடைய அன்றாட யதார்த்தத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. நம்முடைய ஒவ்வொரு நாளையும் தீர்மானிக்கிறது. ஆனால் நம் அகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதில்லை. அது வேறு ஒரு உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நம்முடன் தொடர்புகொண்டிருப்பது அறிவியலின் விளைகனியாகிய தொழில்நுட்பம் மட்டுமே.
எண்ணிப்பாருங்கள், நாம் அறிவியலுக்குள் பேசப்படும் எதைப்பற்றியும் நம் அன்றாடவாழ்வில் கவலை கொள்வதில்லை. எந்த ஒரு அறிவியல் செய்தியோ நிகழ்வோ நம்மை உலுக்கி எடுத்து இரவு தூங்காமல் ஆக்குவதில்லை. அறிவியல் நமக்கொரு வியப்பை மட்டுமே அளிக்கிறது. அவ்வியப்பு அது நாம் அறியாத வேறொரு தளத்தில் அது நிகழ்கிறது என்பதனால் எழுவது. குளோனிங் பற்றி, கடவுள் துகள் பற்றி ஒரு செய்தியை வாசிக்கும்போது நாம் பரபரப்பும் உற்சாகமும் அடைகிறோம். நாச்சுழற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். கவலையை நடிக்கிறோம். ஆனால் உத்வேகம் கொண்டிருக்கிறோம்.
ஏனெனில் அது செயல்படும் தளம் நம்முடையதல்ல. நாம் அங்கு வேடிக்கை பார்க்கவே செல்கிறோம். இந்த மனநிலையால் அறிவியல் சார்ந்த எதையுமே ஒரு வேடிக்கை அம்சம், ஒரு வியப்புக்கூறு இல்லாமல் பார்க்க முடியாதவர்களாகவும் ஆகிவிட்டிருக்கிறோம்.
எளிய அறிவியல் புனைகதைகளின் இயல்பென்பதே இந்த வேடிக்கை பார்க்கும் அம்சத்தையும் , வியப்பு அம்சத்தையும் மட்டுமே புனைகதைகளில் முதன்மைப் படுத்துவது. இப்போது நீங்கள் அறிவியல் புனைகதைகளின் தலைசிறந்த படைப்பு என்று நினைத்துப்பார்க்கக்கூடிய எதுவும் அடிப்படையில் திகைப்பு வியப்பு ஆகிய உணர்வுகளை மட்டுமே அளிப்பவை என்பதைக்காணலாம்.
நெடுங்காலத்திற்கு முன் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் கேட்டார். அறிவியல் சார்ந்த புனைகதைகள் மனிதர்கள் எழுத தொடங்கும்போதே அந்த வடிவம் ஏன் சாகசம், மர்மம், திகில் சார்ந்ததாக மாறியது? ஏன் தீவிர இலக்கியத்துக்குள் இயல்பாக முதலடி எடுத்து வைக்கவில்லை? பொது வாசிப்புக்குரிய பரபரப்பு எழுத்தாக அது நிலைபெற்றுவிட்ட பிறகு, அதில் மேதைகள் தோன்றி அதைத் திரும்ப இலக்கியத்தின் பக்கம் கொண்டுவரவேண்டியிருந்தது என்றார் நண்பர்.
மிக ஆழமான கேள்வி அது. வரலாறு சார்ந்து நவீன புனைகதைகளில் எழுதப்பட்ட முதல் படைப்பே தீவிர இலக்கியப்படைப்பாகத்தான் இருக்கிறது. வெவ்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிர இலக்கியப்படைப்புகள் தான் முதலில் வெளிவந்திருக்கின்றன. அல்லது தீவிர இலக்கியப்படைப்பும் பொது வாசிப்பு படைப்பும் ஒரே சமயம் வந்திருக்கிறது. அறிவியல்புனைவுக்கு அப்படி நிகழவில்லை. மேரி ஷெல்லி, ஜூல்ஸ்வெர்ன் காலம் முதல் ஏறத்தாழ இரண்டு தலைமுறைக்காலம் அறிவியல் புனைகதை என்பது பரபரப்புக் கதையாகவே கருதப்பட்டது. நெடுங்காலம் இலக்கியவிமர்சகர்கள் அதை கவனித்ததே இல்லை.
ஏனெனில் நான் மேலே சொன்னதுதான். சாமானியனுக்கு அறிவியல் என்பது அவனுடைய ஆழம் சார்ந்ததல்ல. அவன் அகம் புழங்கும் களம் அல்ல. அது அவனுக்கு அன்னியமான வேறொரு களம். தீவீரமான அறிவுச் செயல்பாடு நிகழக்கூடிய, ஆனால் மிக அகன்று வேறொன்றாக இருக்கக்கூடிய ஒரு களம் அது. ஒரு சர்க்கஸ் பார்ப்பதைப் போலத்தான் சாமானியன் அறிவியலைப் பார்க்கிறான். அங்கே ஈட்டி முனையில் ஒற்றைக் காலூன்றி நிற்கிறார் ஒருவர். ஒருவர் மேல் ஒருவர் என ஏறி பன்னிரண்டு பேர் நிற்கிறார்கள். உறைவாளை விழுங்குகிறார் இன்னொருவர். வாழ்நாளெல்லாம் அதி உக்கிரமான பயிற்சி மூலம் அடைந்த நம்ப முடியாத திறமைகள் வெளிப்படுகின்றன. அவற்றைப்பார்த்து வியப்பது மட்டுமே அவன் செய்யக்கூடியதாக இருக்கிறது.
அறிவியல் புனைகதைகள் பொதுவாசிப்புக் களத்தில் இருந்து நகர்ந்து இலக்கியமாக ஆகும்போது அவை இந்த வியப்பு, திகைப்பென இரு அம்சத்தையும் வெளியே தள்ள முயல்கின்றன. அவ்வாறு வெளியே தள்ளும்போது புனைவுக்குரிய கூறு என எது எஞ்சியிருக்கிறது என்பது அடுத்த கேள்வி. வரலாறு, சமூகவியல் ஆகியவற்றில் எல்லாம் வியப்பையும் திகைப்பையும் அகற்றிவிட்டாலும் கூட அன்றாடம் சார்ந்த வாழ்க்கைப் பிரச்னை என்று ஒன்று எஞ்சியிருக்கிறது. அதிலிருந்து உச்சகட்ட தத்துவப்பிரச்சினை வரை வாசகனை கொண்டுசெல்லமுடியும்.
வரலாறு, சமூகவியல்களங்கள் இயல்பாகவே இலக்கியமாகின்றன. இவ்வண்ணம் நாம் வாழ்ந்தோம், இவ்வாறு வாழ்ந்தோம் என்பதே தீவிர இலக்கியத்துக்குப் போதுமானதாக இருக்கிறது. மேலதிகமான வினாக்களை அவற்றிலிருந்து எழுப்பிக்கொள்ள முடியும். அறிவியலில் அவ்வாறு எது எஞ்சுகிறது என்று நான் சென்ற இருபதாண்டுகளாக ஒவ்வொரு முறை அறிவியல் புனைகதைகளைப் படிக்கும்போதும் உசாவுவதுண்டு.
இன்று எனக்குத் தோன்றுவது, அறிவியல் எஞ்சியிருக்கும் வாழ்க்கைக்கூறென்பது தலைகீழாக்கம்தான். அறிவியல் நாம் வாழும் அன்றாட வாழ்க்கையை தலைகீழாக்குகிறது. அதன் அடிப்படைகளை குலைத்து ஆட்டத்தை புதுவிதமாக ஆரம்பிக்க சொல்கிறது. நாம் நாகர்கோவிலிலிருந்து ரயில் பிடித்து சென்னைக்கு செல்வதற்கு பன்னிரண்டு மணி நேரம் ஆகிறது. ஒரு அதிநவீன போக்குவரத்துத் தொழில்நுட்பம் வந்து பத்து நிமிடத்தில் அங்கு செல்ல முடிந்தால் நமது வாழ்க்கையின் அடித்தளங்கள் அனைத்தும் மாறிவிடுகின்றன. நம் கண்ணெதிரே இணையம் நம் சிந்தனையையே தலைகீழாக்கியது. இன்று அமெரிக்காவில் இருக்கும் ஒரு நபருடன் நான் தொலைபேசி வழியாக பேசமுடியும். இணையத்தில் உரையாடமுடியும். ஆனால் என்னுடைய மெய்யுருத் தோற்றம் அவர்களுடைய இல்லத்தில் சோபாவில் அமர்ந்து அவர்களுடன் பேச முடியும், தொட முடியும், அதை நான் இங்கிருந்தே உணரவும் முடியும் என்றால் நான் வாழும் எதார்த்தம் சிதைந்துவிடுகிறது.
இவ்வாறு இன்றிருக்கக்கூடிய வாழ்க்கையின் யதார்த்த அடிப்படைகள் அனைத்தையுமே அறிவியலால் சிதைக்க முடியும். அவ்வாறு சிதைத்தால் எது எஞ்சியிருக்குமோ அதுவே மானுட சாரமாக இருக்க முடியும். சிதல் புற்றை நீர்விட்டு கரைத்தால் மூன்றாம் நாள் அதே சிதல் புற்று அங்கிருக்கிறது. நூறு முறை கரைத்தாலும் அந்த சிதல்புற்று அங்கிருக்கிறது. அப்போது தெரிகிறது, சிதல் புற்றின் அந்த வடிவம், அந்த கட்டமைப்பு, அதுதான் சிதலின் சாராம்சம். அது அச்சிதலுக்குள் இருக்கிறது. ஒவ்வொரு சிதலுக்குள்ளும் இருக்கிறது. மண்ணைக்கொண்டு அது புற்று கட்டும். மூட்டையில் இருந்த பிளாஸ்டர் ஆஃப் பாரீஸைக்கொண்டும் அதைக் கட்டியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பொருள் முக்கியமல்ல, பொருளில் நிகழ்வது அந்த சிற்றுயிரின் சாராம்சம்தான்.
மானுட வாழ்க்கையின்மேல் நீரூற்றி அழித்து, அதன் கட்டுமானங்களை தொடர்ந்து கலைத்து பிறிதென்ன என்று பார்ப்பதைத்தான் அறிவியல் புனைகதைகள் செய்து வருகின்றன. இப்போது என் உள்ளத்தில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியவை என நான் எண்ணிப் பார்க்கும் அனைத்து முதன்மையான அறிவியல் புனைகதைகளும் நான்வாழும் வாழ்க்கையின் யதார்த்தத்தின் எல்லா நெறிகளையும் ரத்து செய்து காட்டியவைதான். எளிய வாசகர்கள், அவர்களில் மிகப்பெரிய விமர்சகர்கள் கூட உண்டு, வியப்பையும் திகைப்பையும் அளிப்பதனாலேயே பல கதைகளைக் கொண்டாடுவதுண்டு. ஆனால் நான் ஓர் அறிவியல் புனைகதை என் உலகத்தை கலைத்து அடுக்காவிட்டால் அதை நீண்டகாலம் நினைவு கூர்வதில்லை.
புனைவு அளிக்கும் திகைப்பு என்பது எனக்கு மூன்று சீட்டு விளையாடுபவன் காட்டும் கைத்திறமை போலத்தான். முதலில் வியப்பு. அவ்வியப்பு ஏன் உருவாகிறது என்று பார்த்தபின் ஆர்வமின்மை. நான் விரும்பும் கதைகள் என்னுள் நானே எதையாவது கண்டடையச் செய்பவை. இன்று ஐசக் அசிமோவின் மிகச்சில கதைகளே என்னைக் கவர்கின்றன. ஆனால் ஜான் பார்த் இன்றும் என்னில் சிந்தையழியக்கூடிய எழுத்தொன்றை எழுதியவராகவே நீடிக்கிறார். நான் அவரை இன்னும் கடந்துசெல்லவில்லை. காரணம் என் அறிவியலறிவின் போதாமையும்தான்.
தமிழில் அறிவியல் புனைகதை சுஜாதாவிலிருந்து தொடங்குகிறது. அண்மையில் இலக்கிய விமர்சகரான நரேன் இந்திய அளவிலேயே சுஜாதாவைத்தான் சொல்ல முடியும் என்கிறார். சுஜாதாவுடைய எழுத்து முழுக்க முழுக்க பொதுவாசகர்களுக்குரிய வியப்பு, திகைப்பு ஆகியவற்றை முன்னிறுத்தக்கூடியது. சுஜாதாவின் கதைகளை அறிவியல்கதைகள் எனலாம், அறிவியல் இலக்கியப் புனைவென்று சொல்ல முடியாது. அவ்வாறொன்றை தமிழில் அறிமுகம் செய்ய வேண்டுமென்ற கனவு எனக்கு இருந்தது. ‘விசும்பு’ தொகுதியில் பல கதைகள் அந்த வகையைச் சார்ந்தவை.
ஆனால் அந்தத் தலைமுறையில் நான் எண்ணியதுபோல அதற்கு உடனடியான எதிர்வினைகளும் தொடர்ச்சிகளும் உருவாகி வரவில்லை. ஆனால் அதற்கு அடுத்த தலைமுறையில் அக்கதைகளை கடந்து செல்லும் படைப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. அரூ இதழில் ரா.கிரிதரன், சுசித்ரா, நம்பி நாராயணன் போன்றோர் எழுதிய கதைகளை மிகச்சிறந்த அறிவியல் புனைகதைகள் என்று கூறுவேன். அவை வியப்போ திகைப்போ அளிப்பவை அல்ல. நான் ஏற்கனவே கூறியது போல நாம் வாழும் உலகத்தை, அவற்றின் அடிப்படைகளை,சிதைத்து கலைத்து போடுபவை அவை. மீண்டும் அவற்றை எதைக்கொண்டு கட்டுவோம் என்ற திகைப்பை அளிப்பவை. மீண்டும் கட்டுகையில் நமது சாராம்சம் என்ன என்று நாம் கண்டறிய உதவுபவை.
நான் அறிவியல் புனைகதைகளை இருபதாண்டுகளுக்கு முன் எழுதியபோது அன்றிருந்த எனது சக எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவை இலக்கியம் அல்ல என்ற எண்ணமோ, அல்லது இலக்கியம்தானா என்ற ஐயமோ இருந்தது. அவர்கள் உறுதியான யதார்த்தச் சித்தரிப்புகளையே இலக்கியமாக கருதிக்கொண்டிருந்த காலம் அது. இன்னும் அவர்களில் பெரும்பாலானோர்கள் அதே மனநிலையில் தான் அப்படியே நீடிக்கிறார்கள். அதாவது இலக்கியம் என்றால் எடுத்துக்கொண்டு வெளியே சென்றாலும் சுத்தியல் போல, கத்திபோல பயன்படவேண்டும்.
அந்த நிராகரிப்பு இயல்பானது. அவர்கள் இன்று உருவாகி வந்திருக்கும் புதிய அறிவியல் புனைகதைகளின் உலகை மேலும் திகைப்புடன் பார்க்கிறார்கள். இவை அவர்களுக்கு சிக்கலான மொழிநடை,சிக்கலான கதை அமைப்பு கொண்ட ஒருவகை இலக்கியச் சோதனை முயற்சிகளாகவே தெரிகிறது அந்த சோதனைக்கான தேவை என்ன என்று அவர்களுக்குப் புரியவில்லை. இத்தகைய கதைகளை எளிமையான அன்றாட யதார்த்தத்தை சொல்லும் மொழிநடையில் எழுதப்பட முடியாது. செறிவான தத்துவார்த்த மொழி அல்லது உருவக மொழியிலேயே எழுதப்பட முடியும் என்பது அவர்களுக்குப் பிடிகிடைக்கவில்லை. அதுவும் இயல்பானதே. ஒரு சூழல் அப்படியெல்லாம் புதியதை ஏற்றுக்கொள்ளாது.
இயல்பல்லாத ஒன்று, எனது தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் நீண்ட இடைவெளிக்குப்பின் அத்தகைய அறிவியல் புனைகதை ஒன்றுடன் தமிழுக்கு முன் வந்து நிற்பது. கௌதம சித்தார்த்தன் தமிழில் நான் எழுத வருவதற்கு முன்னரே ஓர் எழுத்தாளராக அறியப்பட்டவர். 1984-ல் நான் இலக்கியம் படிக்கத் தொடங்கும்போதே க.நா.சுவின் பட்டியலில் இறுதியாக கௌதம சித்தார்த்தனின் பெயர் இருந்தது.
கௌதம சித்தார்த்தனின் இலக்கிய வாழ்க்கை என்பது அவ்வப்போது நிகழும் நீண்ட இடைவெளிகளால் ஆனது. யதார்த்தமான கதைகள் வழியாக அறிமுகமானவர் திரைப்பட ஆர்வம் காரணமாக சற்று விலகிச் சென்றார். அதன்பின் அங்கிருந்து மீண்டும் இலக்கியத்துக்கு வந்து அன்றிருந்த மாய யதார்த்தம், மிகைபுனைவு பாணியிலான கதைகளை எழுதினார். நாட்டாரியல் தொன்மங்களையும் மிகைபுனைவு மற்றும் மாய எதார்த்த உத்திகளையும் கலந்து அவர் எழுதிய கதைகள் சில கவனிக்கப்பட்டன. அவற்றில் காடையூர் வெள்ளையம்மாள் பற்றிய கதையான மண் மிகவும் குறிப்பிடத்தகுந்தது.
மீண்டும் ஒரு இடைவேளைக்குப்பிறகு அவருடைய இந்த அறிவியல் புனைகதை எழுதப்பட்டிருக்கிறது. இதை எனக்கு அவர் அனுப்பியபோது அறிவியல் புனைகதையா என்ற திகைப்பு எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் கௌதம சித்தார்த்தன் முறையாக அறிவியல் பயின்றவரல்ல என்று எனக்குத்தெரியும். ஆனால் இந்த இடைப்பட்ட காலங்களில் அவர் கணிப்பொறி மென்பொருள்களில் ஆர்வம் கொண்டவராகவும், அது சார்ந்த நூல்களைப் பயில்பவராகவும் ஆகியிருக்கிறார். இந்த இடைவெளியினூடாக அவர் பரிணாமம் அடைந்து வந்த இடத்தில் இந்த நாவல் இருக்கிறது.
ஒரு முன்னுரையில் நாவலின் உள்ளடக்கம் பற்றி விரிவாக பேசமுடியாது. வாசகர்களுக்கு ஆணையிடுவதாக அது தோன்றலாம். ஆனால் இந்த நாவல் எங்கு நிற்கிறது வாசகர்களுக்கு முன்னரே சொல்லப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. இதன் முதல் சில பக்கங்கள் எனக்கு திகைப்பையும் குழப்பத்தையும் அளித்தன. மெல்ல மெல்ல நான் எந்த இடத்திலிருந்து வாசிக்கிறேனோ அந்த இடத்தின் அடித்தளங்களை உறுதியாக சீராக நொறுக்கி என்னை ஒரு திசைமயக்க நிலையில் கொண்டு சென்றுவிடுவதை அறிந்தேன். அறிவியல் புனைகதைகளில் நான் எதிர்பார்ப்பது அதுதான்.
இன்று செய்தித் தொடர்பு உலகம் ஒவ்வொருவருக்கும் தங்கள் மாய உருவங்களை உருவாக்கி நடமாடவிடுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. தங்கள் விருப்ப வடிவங்களை முழுமையாகப் புனைந்து அவற்றையே தாங்களென உலவ விட முடியும். அவற்றுக்குப்பின்னால் ஒளிந்துகொள்ள முடியும். இப்போதே சமூக வலைத்தளங்களில் நேரடியாகவே அது உள்ளது. இந்நாவல் அதனுடைய உச்சகட்டத்தை கற்பனை செய்கிறது. அவ்வாறு மாயங்களை உருவாக்கியபின் ஒருவன் தன்னுடைய அடையாளத்தை தானே அழித்துக்கொள்ள முடியும் என்றால் அவனில் எஞ்சுவது எது என்று ஒரு எண்ணத்தை இந்நாவல் உருவாக்குகிறது.
அடுக்கடுக்காக வெவ்வேறு களங்களில் இந்த அவதார தோற்றங்கள் வழியாக மனிதர்கள் உருவாக்கிக்கொண்டே செல்லும் நிகர் கலாச்சாரங்களை அறிமுகம் செய்கிறது. இந்நாவல் உருவாக்கும் உருவெளி மயக்கங்களை தொட்டுக்காட்ட விரும்புகிறேன். ஒன்று உலகம் என்று நாம் சொல்லும் நிலங்களும் நாடுகளும் கலந்த வெளி மறைந்து வேறொரு ‘சைபர் வெளி’ உருவாகிறது. ஆனால் அங்கும் தேச, இட அடையாளங்களைச் சொல்கிறார்கள். ஆனால் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை.
இன்னொன்று கிரிப்டோ கரன்ஸி போன்ற சிலவற்றை அங்கே உருவாக்குகிறார்கள். அந்த மாய உலகின் நாணயத்துக்கு இங்கே யதார்த்தத்தில் ஒரு மதிப்பு ஏற்படுவதற்காக அதை தங்கள் உடலிலேயே பச்சையாக குத்திக்கொள்கிறார்கள். இவ்வுலகில் அதை ஒரு குறியீடாகவோ ஆபரணமாகவோ ஆக்கிக்கொள்கிறார்கள். அங்கு வேறொன்றாக இருப்பதை இங்கே செல்லுபடியாகும் இன்னொன்றாக ஆக்கிக்கொள்கிறார்கள். அபத்தம் வழியாக மேலும் அபத்தம். இப்படி ஒவ்வொன்றும் மயங்கிக்கொண்டே இருப்பதை சொல்லிச் சொல்லி சிந்தனையை உறையவைக்கும் அளவுக்கு ஒரு பெரும் வெளிமயக்கத்தை உருவாக்குவதனாலெயே இந்நாவல் முக்கியமானது என நினைக்கிறேன்.
இந்நாவலின் வெளி உருவாக்கும் சாத்தியங்களை எண்ணிப்பார்க்கிறேன். ‘இந்தோனேசியாவில் இருக்கும் என் பெண்தோழி’ என ஒரு வரி. உடனே இலக்கணப்படி தோழி போதுமே, அதென்ன பெண் தோழி என்று கேட்கலாம். ஆனால் அவள் அறுவைசிகிழ்ச்சை செய்துகொண்ட ஆணாக, திருநங்கையாக இருக்கலாம். குறுகிய காலம் பெண்ணாக இருந்து திரும்ப ஆணாக ஆகிறவளாக இருக்கலாம். ஆணின் பெண் அவதாரங்கள் நடுவே அவள் பெண்ணின் பெண் தோற்றமாக இருக்கலாம். எல்லா சொற்களும், இலக்கணங்களும் வேறுவடிவம் கொள்கின்றன அங்கே.
விளையாட்டு என்பதே மானுட இனம் உருவாக்கிக் கொண்ட ஒரு மெய்நிகர் உலகம்தான். வேட்டையும் போருமே விளையாட்டுக்கள் ஆயின. நெறிகளுக்கு உட்பட்ட வேட்டை, அழிவில்லாத போர். ஆனால் உணர்வுகள் மெய்யானவை. இந்நாவலில் விளையாட்டுக்களை உருவாக்கி அவற்றை மெய்நிகர் உலகின் உச்சகட்ட வெறிகளுக்கு களமாக்குகிறார்கள். மெல்லமெல்ல அவற்றைக்கொண்டு மெய்வாழ்க்கையை (அப்படி ஒன்று இருந்தால்) ஆட்சிசெய்ய முயல்கிறார்கள்.
எண்ணிப்பார்த்தால் உருவக அடிப்படையில் இந்த நாவலை வரலாற்றுக்கும் பொருத்திப்பார்க்க முடியும் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் அவர் காலத்து சிற்றரசர்களும் வாழ்ந்த யதார்த்தம் ஒன்று. மெய்கீர்த்திகள், கல்வெட்டுகள் வழியாக அவர்கள் உருவாக்கி நமக்களித்திருக்கக்கூடிய யதார்த்தம் இன்னொன்று. அவற்றில் இருந்து நீலகண்ட சாஸ்திரியும் பண்டாரத்தாரும் உருவாக்கி அளித்த யதார்த்தம் முற்றிலும் வேறொன்று. இவற்றில் எதில் அவர்கள் வாழ்கிறார்கள்?
உண்மையில் நம் வாழ்க்கையிலேயே நாம் தொடர்ந்து வேறு வேறு உலகங்களைப் புனைந்துகொண்டே இருக்கிறோம். ஒரு வாழ்க்கை பத்து ஆடிகளில் பிரதிபலிக்கிறது எனில் பத்து வாழ்க்கை அங்கு நிகழ்கிறது என்பது தானே பொருள். அதில் மெய்யென்ன, பொய்யென்ன? மெய்யென ஒன்றிருந்தால் அதுவும் இன்னொரு பிரதிபலிப்புதான் என்று ஆனால் எது எஞ்சுகிறது?.
கௌதம சித்தார்த்தனின் இந்த நாவல் நவீன அறிவியல் தொழில்நுட்பம் உருவாக்கும் இந்த கடந்த நிலையை சித்தரிப்பதனால் முக்கியமாகிறது. தெளிவான சீரான சொற்றொடர்களுடன், கால இட வரையறைகளுடன், கதாபாத்திரத் தெளிவுடன் எழுதப்பட்ட நாவல் அல்ல இது. அத்தகைய அனைத்துமே சிதறும் ஒரு உலகை உருவாக்குவது. இது உருவாக்கக் கூடிய மெய்-பொய் உலகில் எது எஞ்சுகிறது எனில் அந்தந்த கணங்களின் மனமயக்கம் மட்டுமே. அவ்வகையில் தமிழில் எழுதப்பட்ட முற்றிலும் புதிய ஓர் அறிவியல் புனைகதை இது. புதிய ஒரு தொடக்கத்தை இது உருவாக்கி வைக்கிறது.
எனது தலைமுறையைச் சார்ந்த ஒருவர், தான் எழுதிய அனைத்தையுமே கழற்றிப்போட்டுவிட்டு இப்படி ஒரு படைப்புடன் வந்து நிற்பதென்பது மகிழ்ச்சியையும் வியப்பையும் உருவாக்குகிறது அவருக்கு எனது வாழ்த்துகள்.
ஜெ
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers




