மைத்ரி -எதிர்வினைகள்

அன்புள்ள ஜெ,

மைத்ரி நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். இங்கு இரவு மணி மூன்று.

மாத்ரி-ஜீது (சக்தி-சிவன்) தொன்மத்தின் நவீன வடிவமான மைத்ரி-ஹரன், கற்பனாவாதமும் யதார்த்தமும் கலப்பது என மைத்ரி எனக்கு மிக பிடித்திருந்தது. அஜிதனுக்கு அன்பும் வாழ்த்துக்களும். முதல் நாவல் என்ற ஆச்சரியம் விலகவில்லை. கூடவே இதுவே கடைசி நாவல் என்று அவர் சொல்வது வருத்தத்தையும் தருகிறது.

எனக்கு காஷ்மீர சைவம் மற்றும் தத்துவங்கள் குறித்த பரிச்சயம் இல்லை. சுசித்ராவின் சிறந்த முன்னுரையை ஒரு கையேடாக கொண்டு மீள்வாசிப்பு செய்தால் அந்த தளங்கள் பின்பு திறக்கலாம். ஆனால், நாவலின் காதல் கதைக்காகவும், கற்பனாவாத நில காட்சிக்காகவும், கொட்டிக்கிடக்கும் உவமைகளுக்காகவுமே எனக்கு பிடித்திருந்தது. உதா: மரங்களே அற்ற சரளை கற்களால் ஆன மலைச்சரிவை “தோலுரிக்கப்பட்ட விலங்கு” என்கிறார்; கரிய வானில் பதிந்த கூர்நகத்தடமாக பிறைநிலவு வருகிறது.

காடு நாவலின் கூட்டுவாசிப்பு தந்த பரவசத்தில் அதைப்போன்று ஒரு நாவல் எழுதிப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன் என முன்னுரையில் சொல்கிறார் அஜிதன். காடு நாவலில் காமம் அதன் அத்தனை வடிவங்களிலும் வரும்; நிறைய கதைமாந்தர்கள்; நாவலின் கதை நிகழும் காலம் – கதாநாயகன் கிரியின் மொத்த வாழ்நாள். மைத்ரியில் கதையின் காலம் இரண்டே நாட்கள். மிகக்குறைந்த கதை மாந்தர்கள். காடு நாவலில் உச்சமாக வரும் குறிஞ்சி பூக்கும் மலைச்சரிவில் தேன் உண்ணும் வண்டுகளின் வாழ்க்கையை (நீலி-கிரி) மட்டுமே எடுத்து, விரித்து சொல்வது போல கதைக்களம்.

காடு நாவலின் மையமே “முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்லின் பெருவிருந்தே காமம்” என்ற சங்கபாடல் தான். காமம் என்ற தீராத விருந்தை சுவைத்து பருகிய சங்ககாலத்து கண்ணதாசனின் தரிசனம் அது.

மைத்ரியின் தரிசனம் அந்த தீராத விருந்தை சுவைத்துப் பருகி, பின்பு ஆழத்து இருளுடன் மல்லிட்டு,  திசையெங்கும் கிழித்து எறிந்த மெய்ஞானியுடையது.

காஷ்மீர சைவ மெய்ஞானி லல்லேஷ்வரியின் வரிகளுடன் நாவல் துவங்குகிறது.  இந்த மூன்று வரிகளும்தான் நாவலின் மூன்று பகுதிகள்.

“ஒரு கணம் கூட அதை ஏற்கவில்லை
நான் என் சுயத்தின் மதுவை
கண்மூடி பருகினேன்.
பின் என் ஆழத்து இருளுடன்
மல்லிட்டேன்

அதை வீழ்த்தி நகங்களால்
திசையெங்கும் கிழித்தெறிந்தேன்.
– லல்லேஷ்வரி

அன்புடன்,

விசு

வால்நட் கிரீக், கலிஃபோர்னியா

06-29-2022

அஜிதன் எழுதிய மைத்ரி நாவலை முன்வைத்து

அஜிதனின் முதல் நாவல் இது. சமகால தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவராக இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் புதல்வன் அஜிதன்.

அஜிதனுக்கும் என் சொந்த மாவட்டமான தருமபுரிக்கும் ஒரு பூர்வீக தொடர்புண்டு. ஜெமோ தருமபுரியில் தொலைதொடர்பு துறையில் பணிபுரிந்த போது 1993 ஆம் ஆண்டு தர்மபுரி மண்ணில் பிறந்தவர் அஜிதன்.

சிறுவயதில் பள்ளிப் படிப்பில் அஜிதன் ஒரு மந்த புத்திக் காரணகாவே இருந்திருக்கிறார். தனியார் பள்ளிகளால் அஜிதனை கையாள முடியாது என தெரிந்த ஒரு தருணத்தில் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டு பத்தாம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் 460 மதிப்பெண் பெற்றவர் அஜிதன்.

அமெரிக்க தத்துவஞானி இங்கர்சால் பள்ளிகளும், கல்லூரிகளும் குழந்தைகளை வைரங்களாக பட்டை தீட்டாமல் வெறும் கூழாங்கற்களாவே மாற்றுகிறது என்பது எவ்வளவு நிஜம். உண்மையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மந்தபுத்திக்காரர்களாக இருந்தவர்கள் பின்னாளில் அவர்கள் சார்ந்த துறைகளில் பெரும் உச்சத்தை அடைந்திருக்கிறார்கள்.

அஜிதன் ஜெயமோகனின் மகன் என்பது அஜிதனுக்கு பெருமிதமும் பலமும் என்றாலும் அதுவே அவருக்கு பலவீனமும் கூட.

இன்றைக்கு வாசிக்கக்கூடிய எழுதக்கூடிய நிறைய பேருக்கு ஒரு ஆதர்சமான குருநிலை மனிதர் ஜெயமோகன். அஜிதனுக்கும் அவர் அப்பா என்ற உயிர் உறவு தாண்டி குருநிலை ஆசான். ஆனால் அவரின் பாதிப்பில்லாமல் தன்னை இலக்கியத்தில் முன்னிறுத்தி கொள்வதுதான் அஜிதனுக்கு முன்னிருக்கும் மிகப்பெரிய சவால்.

மைத்ரி நாவலில் ஒரு வித பேரமைதியும், நிதானமும் உள்ளது. முப்பது வயதிற்குள் இப்படி ஒரு முதிர்ச்சி மனம் கொண்டு இந்த வாழ்க்கையை, உலகை ஆன்மிக சிந்தனையில் பார்த்திருப்பது அஜிதனின் பலம் என்றே சொல்லலாம்.

ஜெயமோகனின் முதல் நாவல் ரப்பரில் அவர் பிறந்து புரண்டு புழுதியளந்த குமரி மண்ணின் நிகர் வாழ்கையும், மனிதர்களும் புனைவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அஜிதனின் முதல் நாவலிலேயே இந்திய ஆன்மீகத்தின் ஞானபூமியான இமயமலையையும், காதலையும் களமாக்கியுள்ளார். அப்பா குமரியில் ஆரம்பித்ததை மகன் இமயத்தில் ஆரம்பித்திருக்கிறார்.

இமயமலை நோக்கிய பயணத்தில் ஒருவனுக்கு கைகூடும் ஒரு காதலின் கனமான சித்திரம் இந்நாவல். நாவல் முழுக்க எவ்வித உணர்ச்சி உயரங்களும் கையாளப்படாமல் நுண்ணிய சித்தரிப்புகளால் எழுதப்பட்ட நாவல் இது. முழுக்க முழுக்க கர்வாலி மக்கள் சார்ந்த வாழ்வியல், பண்பாடு பற்றிய விவரிப்புகள் கொண்ட நாவல்.

நாவலில் வரும் ஹரனும், மைத்ரியும் இளமையின் இச்சைகள் நிரம்பிய உயிர்கள் என்றாலும் ஒரு வித தூய உறவோடு பயணிக்கிறார்கள். நாவலில் சிக்கி, சோனியா என்ற இரண்டு கோவேறு கழுதைகளும் இரு பாத்திரங்களாக இவர்களை மலைகளில் சுமந்து பயணிக்கிறது.

ஹரனின் மனதில் கடந்த கால சித்திரமாய் அவ்வப்போது கெளரி என்ற பெண்ணின் உருவம் வந்து போகிறது. காடு நாவலில் வரும் வனநீலி போல. மைத்ரியின் ஜித்து பெரியப்பாவிற்கும், ரிது பெரியம்மாவிற்கும் இடையேயான கைகூடாத காதல் கதை வரும் அத்தியாயம் ஒரு கனமான காதல் கவிதை.

மந்தாகினி ஆறு, தேவதாரு மரங்கள், பனி மலை, காடு, மசக்பின் இசை என ஒரு தூய்மையான உலகை நம் முன் விரித்து செல்கிறது மைத்ரி நாவல். கர்வாலி மக்களின் ஐதீகத்தின் படி சிவபெருமானை அடைய பார்வதி கடுந்தவம் புரிந்து சிவன் தன் காதலை ஒப்புக் கொண்ட இடம் கெளரிகுந்த் எனப்படுகிறது. இதே கொளரி குந்தில் தான் ஹரனும், மைத்ரியும் புணர்ந்து பிரிகிறார்கள். மைத்ரி அவனை விட்டு செல்லும் போது ஒரு வித மனப்பித்தேறி அலைந்து இமயமலை உச்சியை அடைகிறான் ஹரன்.

மனம் எல்லா பற்றிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் தருணம் தான் விடுதலையே. அவ்வித விடுதலையை கொளரி குந்த்தில் உள்ள ஒரு வெப்பகுளத்தில் மூழ்கி அடைகிறான் ஹரன். அவன் உள்மூச்சில் நான் நான் என்ற ஓங்காரத்தை உணர்கிறான். அனைத்துயிர்களின் உணர்வுகளுக்கு ஆதாரமான சிவனை தான் என உணர்வதே காஷ்மீர சைவத்தின் நோக்கமாகும்.

ஹரன் என்றால் சிவபெருமான் என்று பொருள். கெளரி என்றால் பார்வதி என்றும் பொருள். மைத்ரி என்றால் ஒன்றாதல், ஒன்று மட்டுமே ஆதல் என புத்த மதம் கூறுகிறது. காஷ்மீர சைவம் மற்றும் பெளத்த மெய்மையின் தேடலின் நிறைவே இந்நாவலின் தரிசனமாகிறது. முழுக்க முழுக்க ஒருவனின் பயணமும் காதலும் கலந்து தத்துவ தரிசனத்தை முன் வைக்கும் நாவல் இது.

உண்மையில் இந்த நாவலில் ஜெயமோகனின் சாயல் இல்லை என்று சொல்ல முடியாது. ஜெயமோகனை பின்பற்றுபவர்களுக்கே எழுத்தில் அந்த பிரச்சினை உண்டு. அவருக்கு பிறந்த மகனுக்கும் இருக்கத்தானே செய்யும். ஆனால் பிற்காலத்தில் அவர் எழுதி எழுதி அவரது தந்தையின் சாயலிலிருந்து அவரை விடுவித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். இமயமலைப் பற்றி எழுதப்பட்ட நூல்களில் எனக்கு எப்போதும் பிடித்தவை ஜெயமோகன் எழுதிய பனி மனிதன் நாவலும், ஷௌக்கத் எழுதிய ஹிமாலயம் பயண நூலும் தான்.

இந்த இரண்டு நூலின் தாக்கம் இல்லாமல் அஜிதன் மைத்ரி நாவலை எழுதியிருப்பது அவரது தனித்தன்மைக்கு சான்று. நாவல் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த வித உணர்ச்சி மேலோங்கலும் இல்லாமல் ஒரு தூய நதியின் நடை வடிவில் எழுதப்பட்டுள்ளது. செவ்வியல் இலக்கியங்களைப் படிக்கும்போது மனம் கொள்ளும் வெறுமையையும், கடுமையுணர்வையும்ம் இந்த நாவலிலும் உணர்ந்தேன். அப்படி பார்த்தால் மைத்ரி கூட ஒரு வகையில் செவ்வியல் சாயல் கொண்ட நாவல் தான்.

வேலு மலயன்

மைத்ரி அச்சுநூல் வாங்க  மைத்ரி அச்சுநூல் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் மைத்ரி மின்னூல் வாங்க  மைத்ரி நாவல் இணைய தளம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.