Jeyamohan's Blog, page 741
July 23, 2022
புதுவை வெண்முரசு விழாவில் நான்…
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 50 வது கூடுகை 30.07.2022 சனிக்கிழமை அன்று மாலை 4:00 மணி முதல் 7:30 மணி வரை நடைபெற இருக்கிறது .
நிகழ்வின் பேசு பகுதிகள் குறித்து நண்பர் திருமாவளவன் உரையாடுவார் .சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு.பொதுப்பணித்துறை அமைச்சர்.திரு. க.லட்சுமி நாராயணன் அவர்களும் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள் .
நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 6 “வெண்முகில் நகரம்”
பகுதி 4 : தழல் நடனம் 1 முதல் 3 வரை
பகுதி 5 : ஆடிச்சூரியன் 1 முதல் 3 வரை
பகுதி 6 : ஆடியின் அனல் 1 முதல் 3 வரை
இடம்:
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி ,
புதுவை -605 001.
தொடர்பிற்கு:-
9943951908 ; 9843010306
எம்.கே.தியாகராஜ பாகவதர்
தமிழ் விக்கியில் இப்போது சினிமா, அரசியல், வரலாறு போன்றவற்றை தவிர்த்து பண்பாடு இலக்கியம் ஆகியவற்றையே முன்னிலைப்படுத்துகிறோம். பின்னர் எஞ்சியவற்றைச் சேர்க்கலாமென்று திட்டம். ஆனால் எம்.கே.தியாகராஜ பாகவதர் வெறும் நடிகர் அல்ல. அவர் ஒரு பண்பாட்டு சக்தி. தமிழிசை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் – தமிழ் விக்கி
கௌதம சித்தார்த்தன், கடிதம்
அன்பு ஜெயமோகன்,
எழுதி நீண்ட நாட்கள் ஆகின்றன. எதனாலோ, எழுதத் தோன்றவில்லை. வாசிப்பில் தீவிரமாய் இருக்கிறேன். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் அவஸ்த நாவலும், புதுமைப்பித்தன் தொடர்பான விமர்சனக்கட்டுரை நூலும்(தொ.மு.சி.ரகுநாதன்) சமீபமாய் வாசித்தவற்றில் குறிப்பிடத்தக்கவை. க.நா.சு மொழிபெயர்ப்பில் வெளியான சில மொழியாக்கக்கதைகளோடு, தஸ்தாயெவ்ஸ்கியின் நிலவறைக் குறிப்புகள்(எம்.ஏ.சுசீலா) படைப்பையும் இப்போது வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இவ்வாசிப்பு மனோநிலை அபாரமாய் இருக்கிறது.
நிலவறைக் குறிப்புகள் வாசிக்கத் துவங்கிய நாளன்று ஒரு ஆச்சர்யம். எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் அவர்களின் நூலுக்கான தங்களின் முன்னுரை தளத்தில் வெளியாகி இருந்தது. அந்நாவலுக்கு ஒரு அறிமுகச்சாளரமாக உங்கள் முன்னுரை அமைந்திருக்கிறது. உங்கள் படைப்புகள் அறிமுகம் ஆகும் முன்பே எனக்கு அறிமுகமானவர் அவர். நீங்கள் முன்னுரை கொடுத்து விட்டதாக கெளதம சித்தார்த்தன் முன்னரே தெரிவித்திருந்த போதிலும், அதை எதிர்பாராமல் வாசித்ததில் மகிழ்ச்சி. அம்மகிழ்ச்சி நீர்த்துப்போவதற்குள் எழுதிவிட வேண்டும் என்றுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பெரும்பாலான வாசகர்களுக்கு கெளதம சித்தார்த்தன் அவர்களைத் தெரியாது. எங்கள் கொங்கு மண்ணின் முக்கியப்படைப்பாளிகளில் ஒருவர் அவர். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரை நான் அறிவேன். என்னை விட வாசிப்பும் இலக்கிய அனுபவமும் மிகுந்தவராயினும் எங்கள் ஆரம்பகால வாசிப்புப் பிதற்றல்களைப் பொறுத்துக் கொண்டவர். வாய்ப்பு அமையும் போதெல்லாம் அவரைச் சந்திப்பேன். அவரின் உப்புக்காரப்பள்ள(கவுந்தப்பாடி, ஈரோடு) இல்லம் அமைந்திருக்கும் புளியமர நிழத்தடிகளே எங்களின் உரையாடல் களங்கள். சிலநேரங்களில் நண்பர்களுடன், பலசமயங்களில் தனியாகவும் அவரைச் சந்திப்பேன். முன்முடிவுகளோ, முன்திட்டமிடலோ இல்லாத எங்கள் உரையாடல்களின் வழியேதான் நான் இலக்கியப்படைப்பு என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் விளங்கிக் கொள்ள ஆரம்பித்தேன்.
அப்போது அவரின் படைப்புகளை வாசிக்கக்கூட அறியாதவன் நான். அதற்காக எங்களைப் புறக்கணிக்க மாட்டார். பல சமகால எழுத்தாளுமைகளின் படைப்புகளைச் சிலாகித்து அறிமுகப்படுத்துவார். புதியவர்களின் நல்ல படைப்புகளை ஆதரித்து உன்னதம் இதழில் வெளியிடுவார். இயக்குனர் பா.ரஞ்சித் ஆரம்பகாலத்தில் எழுதிய கதை ஒன்று உன்னதம் இதழில் வெளியாகி இருக்கிறது. உமாபதியின் கவிதைகளை நெடுஞ்சாலை மனிதன் எனும் பெயரில் பதிப்பித்திருக்கிறார். மொழிபெயர்ப்பிலும். மொழியாக்கங்களிலும் அளவில்லா ஆர்வம் கொண்டவர் அவர். அதற்கென்று தமிழி என்றொரு இணைய இதழையும் நடத்தியவர்.
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை நடத்திய காலகட்டத்தில், முருக வழிபாடு பற்றி நானும் அவரும் பல மணிநேரங்கள் பேசி இருக்கிறோம். அப்போது நான் முருக வழிபாட்டை தனித்தமிழ்ச்சமூக நெறியின் அடையாளமாகக் காட்டும் ஆர்வத்தில் இருந்தேன். சொல்லப்போனால், பண்பாட்டுத்தமிழ்த்தேசியம் ஒன்றுக்கான அரசியல் வரையறையே என்னிடம் இருந்தது. ஒரு கோடி மக்களை முருகனடியார்களாக மாற்றிக் காட்டுவதான வெறியும் என்னிடம் இருந்தது. கடுமையான சமஸ்கிருத வெறுப்பாளனாகவும், முற்போக்கு பீரங்கியாகவும் என்னை அடையாளப்படுத்தி இருந்த காலம் அது. முருக வழிபாடு குறித்து நான் வாசிக்க ஆரம்பித்த போதே என் முட்டாள்தனங்களை விளங்கிக் கொள்ள ஆரம்பித்தேன். பண்பாட்டை இடதுசாரி அல்லது வலதுசாரித் தரப்பாக மாற்றும் ’அரசியல் பித்தலாட்டங்கள்’ புரிபடத் துவங்கின. இருவாக்கியங்களில் சொல்லிவிட்டாலும், எனக்குள் வலுக்காட்டாயமாய் உட்கார்ந்திருந்த அபத்த முற்போக்குத்தனங்களில் இருந்து விடுபடுவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தன.
பிற்போக்குத்தனத்துக்கு எதிரானதாய்த் தன்னைக் காட்டிக் கொண்ட முற்போக்குக் கொள்கைகள், தங்களுக்கு என்று தனித்த அடையாளம் இல்லாதவையாக இருந்தன. பிற்போக்கைச் சாடுவதே முற்போக்கு என்பதாக அறியப்பட்டது. கடவுள் இருக்கிறார் என்பது பிற்போக்கு என்றால், கடவுள் இல்லை என்பது முற்போக்கு. இதை விளங்கிக் கொள்வது இன்றைக்கு இன்னும் சிரமம். இரண்டையும் கடந்து கடவுள் பற்றிய மேலதிக ஆய்வுக்கு ஒருவர் சென்றுவிடவே முடியாதபடி அடைத்துக் கொண்டு நிற்கும் ’அறிவுஜீவிச் செயல்பாடுகளால்’ மொண்ணைத்தனமான சிந்தனை முறைக்கு இளைஞர்கள் மயங்கி விட்டார்களோ என கவலை கொள்கிறேன். சமூகவலைதளங்களைத் திறந்தாலே தென்படும் விமர்சனங்களைப் பார்த்தால், நடுக்கமாக இருக்கிறது. பிற்போக்கு எதிர் முற்போக்கு என்பதாக சமூக அரசியல் களத்தைச் சுருக்கி வைத்துக்கொண்டு நம்மவர்கள் செய்யும் அட்டகாசங்களை என்னவென்று சொல்வது?
இருமைகளுக்குள் சமூகச்சிந்தனையைச் சிறைப்படுத்தி இருந்த அறிவுஜீவிகளின் பிடியில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஒன்று பெரியாரை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். இரண்டுக்கும் அப்பால் நின்று பெரியாரின் சமூகவரலாற்றுத் தேவை, அவரின் சிந்தனை முறைமை, அம்முறைமையின் நடைமுறைக் கோளாறுகள் போன்றவற்றை நான் விளங்கிக் கொண்டு விடவே கூடாது. இன்றைக்கும் சொல்கிறேன். பெரியார் எனக்கு முன்னோடிதான். பெரியாரை முழுக்கப் புறக்கணிக்கும் முட்டாள்தனத்தைச் செய்திடவே மாட்டேன். அதேபோன்று, அவரின் கோட்பாட்டில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் காலமாற்றத்துக்குத் தகுந்தவாறு பரிசீலித்துப்பார்க்கவும் தயங்க மாட்டேன். அதுவே நாம் அவருக்குச் செய்யும் நன்றியாக இருக்க முடியும்.
கோட்பாடுகள் என்பவைச் சமூகச் சீர்திருத்தத்துக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அறிவியல் முறைமைகள் என்பதான கருத்து இன்றைய இளந்தலைமுறையிடம் வலுவாக ஊன்றப்பட்டிருக்கிறது. அது நவீன அறிவுஜீவித்தோற்றம். இத்தோற்றத்தைச் சமகாலத் தலைமுறை அறிந்து கொண்டாக வேண்டும். இல்லை என்றால், செக்குமாடு போலச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். சொல்லப்போனால், அவையும் தேய்வழக்காகிப் பிற்போக்கு வறட்டுத்தனத்தைப் போலச் சலிக்கச் செய்துவிடும்.
மார்க்சின் காலகட்டப் பின்புலத்தைக் கொண்டு புரிந்து கொள்ளப்படாத மார்க்சியம் வறட்டுத்தனமாகவே இருக்கும். இதை மார்க்சின் வரலாற்று வாதத்தின் வழிதான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்கரியம் காந்தியம் போன்ற சமூகஅறிதல்முறைமைகளை நிரூபண அறிவியல் முறைமைகளாக நம்பும் அபாயச்சூழலில் இருந்து வெளியே வருவது இன்றைக்கு முக்கியமானது.
திரும்பவும் சொல்கிறேன். கோட்பாடுகளோ, சமூகநலச் சிந்தனைமுறைமைகளோ உதறப்பட வேண்டியவை அல்ல. சிந்தித்து நம்மை விளங்கிக்கொள்ளப் பயன்படுபவை. அவற்றை நிரூபண அறிவியல் முறைமைகள் போன்று சமூகச்சூழலில் பரப்புரை செய்து ‘அரசியல் லாபங்களுக்குப்’ பயன்படுத்திக் கொள்ளும் போக்கைத் ‘தெளிந்து கொள்ள’ வேண்டியதே இன்றைக்கு மிக முக்கியம்.
மார்க்சியம் முதல் இலக்கியம் வரையிலான தெளிவுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் வாசிப்பும், கெளதம் சித்தார்த்தன் போன்ற தீவிர இலக்கியவாதிகளிடம் நிகழ்த்திய உரையாடல்களும் முக்கியக் காரணங்கள். சமீபமாய், என் சிந்தனைப் போக்கைச் செழுமைப்படுத்தியவர் பேராசிரியர் டி.தருமராஜ் அவர்கள். அவரின் அயோத்திதாசர் நூல் என்னளவில் முக்கியமான ஒன்று. அவரின் நாட்டுப்புற வழக்காறுகள் தொடர்பான கட்டுரைகளும் முக்கியமானவை.
உன்னதம் இதழின் கட்டுரைகள், கதைகள் மிரட்சியைத் தரும்படி இருக்கும் என்றாலும்.. அவற்றைப் புறக்கணிக்க மாட்டேன். திரும்பத்திரும்ப அவற்றை வாசித்துப் பார்ப்பேன். பெரும்பாலும் மொழியாக்கங்கள் அதிகம் இருக்கும். போர்ஹேஸ், மாக்ஸ்வெல் போன்ற பெயர்களை எல்லாம் உன்னதம் வழியாகத்தான் அறிந்தேன். இப்போது கூட சில உன்னதம் இதழ்கள் கைவசம் இருக்கின்றன.
நாங்கள் சந்தித்த காலத்திலேயே புதுவகை எழுத்து பற்றி எங்களிடம் பேசுவார். அது பற்றி இன்றுவரை எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன என்றாலும், அவரின் சமீபத்திய நாவலான இப்போது என்ன நேரம் மிஸ்ட குதிரை நாவலை அவ்வகைமைக்கான நல்ல உதாரணமாகச் சுட்டலாம். அந்நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை நாவல் வந்த பிறகு எழுதுவதாக இருக்கிறேன். இப்போதைக்கு அவருக்கு என் மனம் உவந்த வணக்கங்கள்.
சென்ற மாதத்தில் ஒருநாள் கெளதம சித்தார்த்தன் அவர்களை, அவரின் பெருந்துறை இல்லத்தில் சந்தித்தேன். பல மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்தோம். முகத்தில் தளர்வு தெரிந்தபோதும் உற்சாகம் குறையாமல் பேசினார். ஆனால், அவரிடம் ஒருவிதச் சலிப்பு தெரிந்தது. அச்சலிப்பு பற்றிக் கேட்டும் விட்டேன். “ஆமாம் தலைவரே.. ஒரு மாதிரி வெறுமையாய் இருக்கு!” என்றார். அடுத்த நாள் காலை, சாலையோரம் கூடை முடைந்து கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிப் பகிர்ந்து கொண்டேன். அவன் ஒருபோதும் சலிக்காமல் கூடை முடைவது(கூடையை யாரும் கண்டுகொண்டு பாராட்டவோ வாங்கவோ செய்யாவிட்டாலும்) எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது எனக் குறிப்பிட்டு, அவனை முன்னோடியாகக் கொண்டிருப்பதாகவும் சொன்னேன். அதை அவர் எப்படி எடுத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை. என்னளவில், அவர் எழுத்து முடைபவர்; முடைந்து கொண்டேதான் இருப்பார்.
முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.
இந்திரஜாலம்
ஆவணித் திங்கள், மூன்றாம்பிறை, பிரம்ம முகூர்த்தத்தில் நகரச்சத்திரத்தில் கூடிய முந்நுாற்றி இருபது குடும்பங்கள், இராஜத் துரோகக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்காமல் ஸ்தம்பித்திருந்த அதே சமயம், தலைமறைவான மாவடிப்பிள்ளையின் வீட்டில் மகன் சாம்பாஜி உறக்கமின்றி, கைமீறிப் போன காரியங்களை நினைத்தபடி, திண்ணையில் நித்ய துயிலிலிருக்கும் வெள்ளக்குட்டியைப் பார்த்தவாறே சீராக வெளிவரும் அவரது குறட்டையைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான்.
இந்திரஜாலம் – தூயன்நீர்ச்சுடர் வருகை
அன்புள்ள ஜெ,
நீர்ச்சுடர் செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன். எஸ்.பாகுலேயன் பிள்ளை அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நூலில், எஸ்.பாலகிருஷ்ணனுக்கு அன்புடன் என்று உங்கள் கையெழுத்தில் பார்த்ததும் மனதில் இனிமை நிறைந்தது. நாள் சிறப்புற்றது. நன்றி.
உங்கள் கையெழுத்து முன்பிருந்ததைவிட இப்போது ஒரு குறியீடுபோல மாறிவருகிறது. பேனா உபயோகிப்பது மிகவும் குறைந்ததனால் இருக்கலாம்.
இந்நூல் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் செம்பதிப்பு. சிறப்பாக வந்துள்ளது. நூல் எப்போது வரும் என்பது பற்றிய தகவல்களை தொடர்ந்து மின்னஞ்சல், வாட்ஸப்பில் தெரிவித்துவந்த மீனாம்பிகை அவர்களுக்கு நன்றி. பதிப்பகத்தை நடத்தி வரும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒரு மாபெரும் அழிவிற்குப் பிறகு நடக்கும் நீர்க்கடன் பற்றிய விரிவான சித்திரத்தை நாவல் அளிக்கிறது. திவ்யாஸ்திரங்கள் ஏதுமின்றி அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் நடத்தும் இறுதி யுத்தம் ஒரு உச்ச கலைவடிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது. கங்கையில் பாய்ந்து உயிர் துறக்கும் பொதுமக்கள், இளவரசிகள், ஈமச் சடங்குகள் நடக்கும் இடத்தில் கர்ணனைத் தன் மகன் என குந்தி உலகுக்கு அறிவிக்கும் இடம் என நாவல் முழுதும் உணர்வு உச்சங்களே.
ஒரு பாத்திரத்தைப் பற்றி உயர்வாகவும் தாழ்வாகவும் இரு வேறு எல்லைகளில் வர்ணிக்கும்போது, அவை உண்மையில் உங்கள் மனதின் அடிஆழத்தில் இருந்து வருவதாகவே தோன்றும். இந்த மாற்றம் உங்கள்மீது செலுத்தும் தாக்கத்தை எப்படித் தாங்கிக்கொள்கிறீர்கள் என்று எப்போதும் ஆச்சரியமாக இருக்கும். இந்த நாவலில் கனகர் இளைய யாதவரைக் கண்ட சிறிது நேரத்தில் இந்த மாற்றத்தை அடைகிறார்.
கனகர் இளைய யாதவரை விழியசையாது நோக்கிக்கொண்டு நின்றிருந்தார். முன்பு ஒருமுறையும் அவரை அவ்வண்ணம் பார்த்ததில்லை என்று தோன்றியது. பார்க்கும்தோறும் முன்பொருமுறையும் அவரை மெய்யாகவே பார்த்ததில்லை என்ற நம்பிக்கை உறுதிப்பட்டபடி வந்தது. ஒவ்வொரு முறையும் தொலைவில் அவரை பார்க்கையில் முதற்கணம் எழும் அகத்திடுக்கிடல், அவர் அணுகி வருகையில் எழும் சொல்லில்லா உளக்கொந்தளிப்பு, அணுகியபின் மெய்மறைய உளமழிய இன்மையென்றே உணரும் இருப்பு, அகன்றபின் விழிக்குள் எஞ்சும் பாவையென அவரை மீண்டும் காணுதல், எண்ணம் தொடுந்தோறும் கரையும் அவ்விழிப் பாவையை உள்ளத்தில் அழியாது சேர்த்து வைத்துக்கொள்ளும் பொருட்டு எழும் பதற்றம், பின்பு அவரை பார்க்கவே இல்லை எனும் ஏக்கம், பிறிதொருமுறை பார்த்தாகவேண்டும் எனும் தவிப்பு, பார்க்கவே முடியாதோ என்னும் துயரம்… ஒவ்வொருமுறையும் அது மலைப்பாறை உருண்டு வந்து நீரில் விழுவதுபோன்ற ஒரு கொந்தளிப்பு. அறிந்த எந்த இன்பத்துடனும் அதற்கு தொடர்பில்லை. ஆயினும் அறிந்த இன்பங்களில் எல்லாம் அதுவே தலையாயது.
கனகர் நடுங்கி எழுந்த உரத்த குரலில் “அரசே, நான் எளிய அந்தணன். அறமுணர்ந்தவன் அல்ல. அரசுசூழ்தல் அறிந்தவனும் அல்ல. அரண்மனைக் கடையூழியன். வாழ்நாளெல்லாம் அடிபணிதல், ஆணைபேணுதல் அன்றி வேறேதும் அறியாது வாழ்ந்து இன்று கீழ்மையன்றி எதுவும் எஞ்சாமல் இங்கு நின்றிருக்கிறேன். எனினும் இதோ இதை சொல்லத் துணிகிறேன். ஏனென்றால் இப்புவியில் வாழும் எக்கடையனை விடவும் கடையனாக உங்களை இத்தருணத்தில் உணர்கிறேன். மானுடரை வைத்தாடும் இழிந்தோன் நீங்கள். இதோ இக்குருதி அனைத்திற்கும் பொறுப்பேற்கவேண்டிய கொடுந்தெய்வம்!” என்றார்
வெண்முரசின் ஆசிரியருக்கு நன்றியும் வணக்கமும்.
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை
July 22, 2022
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் – தேசிய விருதுகள்
வெளியான நாள்முதல் உலகமெங்கும் வெவ்வேறு திரைவிழாக்களில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் விருதுகளைப் பெற்று வருகிறது. இம்முறை தேசிய விருதுகள். வசந்த் சாய் பாராட்டுக்குரியவர். என் கதை ஒன்றும் அதிலுள்ளது, தேவகிச்சித்தியின் டைரி. வசந்த் சாய்க்கு நன்றி.
சிவரஞ்சனி அசோகமித்திரன் கதைகளைப் போல எளிமையானது. அன்றாடம் சார்ந்தது. நேரடியானது என்று தோற்றமளிப்பது. இது குறியீடு, இது படிமம் என்று சொல்லிக்கொள்ளாதது. உதாரணமாக, பரிசுபெற்ற ஆதவன் கதையில் அந்தப் பெண் ஒரு பேருந்துக்குப் பின்னால் ஓடுகிறாள். அவள் ஓடுவது எதைத் துரத்தி? இழந்தவற்றையா? சென்றமைந்த இளமையையா? ஒருபோதும் திரும்பாத கன்னிப்பருவத்தையா? ஆனால் ஒருமுறையாவது அவள் அதை பிடித்துவிட்டாள்
திருவனந்தபுரம் திரைவிழாவில் அந்தக் காட்சியில் அரங்கில் எழுந்த கைத்தட்டலை நினைவுகூர்கிறேன். ஓர் ஆக்ஷன் ஹீரோவின் கிளைமாக்ஸ் சண்டைக்கு நிகரான கைத்தட்டல். அது அந்த அரங்கில் இருந்த பெரும்பான்மையினரான பெண்களிடமிருந்து வந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு விட்டுவிட்டவற்றைத் துரத்திச் சென்றுகொண்டிருப்பவர்கள்.
தமிழில் சிவரஞ்சனியும்… விமர்சகர்களால் பெரிய அளவில் பேசப்படவில்லை. இங்கே எல்லாம் வெளிப்படையாக இருக்கவேண்டியிருக்கிறது. தேசிய அளவில் அது கவனிக்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது.
நாமக்கல் உரை, ஒரு நாள்
கட்டண உரைகளை தேர்ந்தெடுத்த பங்கேற்பாளர்கள் மட்டுமே அமைந்த அரங்கு தேவை என்பதற்காகவே அமைக்கிறோம். அந்த முடிவு மிகச்சரியானது என்பதையே திரும்பத் திரும்ப கட்டண உரைகள் நிரூபிக்கின்றன. நான் இன்றுவரை எந்த உரையையும் போதிய தயாரிப்பு இல்லாமல், அடிப்படையான ஒரு கட்டமைப்பு இல்லாமல், அதுவரை சொல்லாத புதிய பார்வை ஒன்று இல்லாமல், நிகழ்த்தியதில்லை. ஆனால் அந்த தயாரிப்பு அரங்கினர் பக்கத்தில் இருந்து இருந்ததா என்றால் பல இடங்களில் இல்லை என்றே சொல்லவேண்டும்.
ஆகவே நான் பலசமயம் அரங்கினரைச் சினந்துகொண்டிருக்கிறேன். சிலரை அரங்கில் இருந்து வெளியே அனுப்பியதும் உண்டு. உரை தொடங்கியபின் சாவகாசமாக உள்ளே வருவதென்பது தமிழகத்தின் பொதுப்பண்பாடு. அரங்கில் இருக்கும் பெரியமனிதர்களை கும்பிடுவதற்காகவே கூட்டங்களுக்கு வருபவர்கள் உண்டு. முன்வரிசையில் அமர்ந்து பேப்பர் படிப்பவர்கள், பேச்சு நடுவே செல்போனில் பேசுபவர்கள், பாதியில் கும்பலாக எழுந்து செல்பவர்கள் எங்கும் உண்டு. அரங்கை கருத்தில்கொள்ளாமலேயே முழங்குபவர்களுக்கு அது பிரச்சினையாக இல்லாமலிருக்கலாம். எனக்குப் பெரிய பிரச்சினை.அரங்கினர் கவனிக்கவில்லை என்றால் என்னால் பேசமுடியாது.
நாமக்கல்லில் கட்டண உரையை நடத்துவதைப் பற்றி நாமக்கல் நண்பர்கள் வாசு, வரதராஜன் மற்றும் எங்கள் பயணங்களில் எப்போதுமே பத்தடி முன்னால் பாய்ந்த்செல்பவரான ‘காங்கோ’ மகேஷ் ஆகியோர் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கே கூட்டம் வருமா என்னும் சந்தேகம் இருந்தது. நான் அமெரிக்கா செல்வதனால் உரையை மார்ச்சில் வைக்கலாம் என்று சொன்னபோது இரண்டுமாத தயாரிப்புக்காலம் தேவை என்றனர். அவ்வுரை திருப்பூரில் நிகழ்ந்தது.
ஆனால் நாமக்கல் உரை தளத்தில் அறிவிக்கப்பட்டபோது சிலநாட்களிலேயே அரங்கு நிறைந்துவிட்டது. தளத்தில் அறிவிப்பை எடுக்கச் சொல்லி எனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை நான் மூன்றுநாட்கள் பார்க்கவில்லை. அதன் பின் அறிவிப்பை நீக்கினேன். அதற்குள் முப்பதுபேர் பணம் கட்டியிருந்தனர். இன்னும் பெரிய அரங்குக்குச் செல்லலாம் என்றால் அவகாசம் இல்லை. ஆகவே அரங்கில் கையில்லாத நாற்காலிகள் போட்டு இருக்கைகளைக் கூட்டினார்கள். மேடையின் அளவை பாதியாக்கி இடத்தை கூட்டினர். பக்கவாட்டில் இருக்கைகளைப் போட்டனர். விண்ணப்பித்த அனைவரையும் அமரச்செய்ய முடிந்தது. ஆயினும் ஐம்பது பேர் வரை வரவேண்டாம் என்று சொல்லப்பட்டார்கள். வேறு வழியில்லை.
ஆறுமணிக்கு நான் மேடையேறும்போது அரங்கு நிறைந்து அமைதியாகிக் காத்திருந்தது. ஆசிரியர் மகேஷ் என்னை அறிமுகம் செய்து பேசும்படி அழைத்தார். இளம்நண்பர் ராம் யஜூர்வேதத்தின் அறிதல் பற்றிய பகுதி ஒன்றை ஓதி விழாவை தொடங்கிவைத்தார். முறைப்படி வேதம் கற்றவர். தமிழகத்தில் சரியான உச்சரிப்புடன், பொருளும் உணர்ந்து வேதம் ஓதப்படுவதை அரிதாகவே கேட்கமுடிகிறது. ராமின் அற்புதமான குரலில் அழியாச்சொல், மானுடத்தின் தொன்மையான சொல் அதே இசையுடன் ஒலிப்பதென்பது அந்த அரங்கை இந்த மண்ணில் நடந்த பல்லாயிரமாண்டுக்கால ஞானப்பயணங்களுடன் இணைத்தது.
பைபிள் ஆதியாகமத்தில் கடவுள் ஒளியுண்டாகக் கடவது என்று ஆணையிட்டு ஒளியை உருவாக்கிய பகுதியை வாசித்தபடி என் உரையை தொடங்கினேன். நான் அது வரை ஆற்றிய உரைகள் பண்பாடு என்றால் என்ன என்பதை வெவ்வேறு கோணங்களில் வகுத்துக்கொள்வதற்கான முயற்சிகள். அவை பீடம். நாமக்கல் உரையே சிலை. என் முதல் ஆன்மிக உரை. அல்லது மெய்யியல் உரை. ‘விடுதலை என்பது என்ன?’ மோட்சம், முக்தி, வீடுபேறு, சொற்கம் என்றெல்லாம் சொல்லப்படுவது என்ன என வரலாற்றின் வழியாகவும் தத்துவத்தின் வழியாகவும் விளக்கும் முயற்சி.
முதற்பகுதி உரை அவற்றைப் பற்றிய பொதுவான கற்பிதங்கள், உருவகங்கள் ஆகியவற்றை விலக்கி அக்கேள்வியை எதிர்கொள்வதற்கான பயிற்சி. வஸ்தி என்று ஆயுர்வேதத்தில் சொல்வார்கள். பொதுவாக குடல்தூய்மையாக்கலைக் குறிப்பிடும் சொல், உடலை எல்லாவகையிலும் தூய்மையாக்குவதை சொல்கிறது. அதன்பின்னரே ஆயுர்வேத மருந்துகள் அளிக்கப்படும். முக்தி, மோட்சம், வீடுபேறு பற்றி பொதுநம்பிக்கையில் உள்ள மாயமந்திரத் தன்மை, மிகைத்தன்மை ஆகியவற்றை அத்தனை எளிதாகக் கடக்கமுடியாது. அது ஒரு வழிகாட்டல் மட்டுமே.
அதன்பின் தத்துவார்த்தமாக வெவ்வேறு ஞானமரபுகளில் சொல்லப்படும் விடுதலைகள் என்னென்ன என விளக்கி வேதாந்தத்தை அவற்றிலொன்றாக நிறுத்தி முடித்தேன். இந்த உரையின் இறுதி என்பது ஒரே வரியில் ‘விடுதலை என்பது எய்துவது அல்ல, திகழ்வது’. அங்கிருந்தே இன்னொரு உரையை தொடங்கவேண்டும். நித்ய சைதன்ய யதியின் சொற்களில் வேதாந்தத்தின் விடுதலை என்பது என்ன என்பதை ஐந்து நிமிடத்தில் சொல்லிவிடமுடியும். வாழ்நாள் முழுக்க பயின்றால்தான் அதில் அமைய முடியும். இதன் அடுத்த உரை ‘சாதனா’ பற்றியதாக இருக்கலாம்.
இந்த உரைகளை நான் முப்பதாண்டுகளுக்கு முன்னரே நிகழ்த்தியிருக்கலாம். உண்மையில் இந்த தத்துவ நூல்களை நான் ஆழ்ந்து கற்றது அப்போதுதான். இன்று அந்நூல்கள் பல நினைவில் சற்று மங்கலாகி விட்டிருக்கின்றன. அவற்றை இன்று அதே தீவிரத்துடன் ஆழ்ந்து பயில்வேன் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த உரையை ஆற்றும் தன்னுணர்வு அல்லது தெளிவு இப்போதுதான் வந்துள்ளது. அதை நானே உணர்ந்தபின் இந்த உரை.
அதாவது வெண்முரசுக்குப் பின். அது என் யோகம். என் சாதனா. இன்று பேசுகையில் நான் என் அறிதல்களை சொல்லவில்லை. என் நூலறிவைச் சொல்லவில்லை. என் ஐயங்களை முன்வைக்கவில்லை. நான் சொல்வன என்னால் நன்கறியப்பட்டவை. கண்முன் உள்ள உண்மைகள் போல துலங்கியவை. ஆகவே எந்த ஐயமும் இன்றி முன்வைக்கப்படுபவை.
ராம்ஆனால் ஒரு மேடையின் எல்லைக்குள் உள்ளவற்றையே மேடையுரையாக ஆற்ற முடியும். அப்பால் உரிய செவிக்கென மட்டும் சொல்லப்படும் சில எப்போதும் எஞ்சியிருக்கும். அது ஆன்மிகத்தில் மட்டுமல்ல, கலையிலக்கியம் அனைத்திலும் அப்படித்தான். உரை ஓர் அழைப்பு மட்டுமே. உரையின் வழியாக முழுமையாக ஒன்றை சொல்லவோ கற்கவோ முடியாது.
இந்த எல்லையை நான் மிக உணர்ந்தே இவ்வுரைகளை ஆற்றுகிறேன். அத்துடன் ஒன்று, நான் திரும்பத் திரும்ப இதை வலியுறுத்துகிறேன். இது ஓர் ஆன்மிக குருவின் அருளுரை அல்ல. இது சில மெய்யியல்புரிதல்களை உருவாக்குவதற்கான ஒரு தொடக்க வழிகாட்டல் மட்டுமே. ஓர் எழுத்தாளனாக, மெய்யியல் மாணவனாக, நித்ய சைதன்ய யதியின் மாணவனாக, ஒரு குறிப்பிட்ட மெய்மரபின் தொடர்ச்சியாக நின்று நான் உரைப்பவை மட்டுமே. நான் என்னை முன்வைக்கவே மாட்டேன்.
இந்த வகையான உரைகளை ஆற்றுவதற்கான தேவை என்ன? அதை நித்ய சைதன்ய யதி உணர்ந்திருந்தார். இன்று இரண்டு எல்லைகள் உள்ளன. ஒன்று சர்வசாதாரணமான உலகியலை நாத்திகவாதமாக முன்வைக்கும் போக்கு. நாத்திகம் என்பதே ஓர் உயர்விடுதலை தத்துவ நிலைபாடாக இருக்கமுடியும். ஆனால் அது தனக்கான தத்துவம், தனக்கான இலட்சியவாதம் ஆகியவற்றை எய்தியிருக்கவேண்டும். அது இங்கில்லை. இருப்பது எதிர்மறைப் பண்பு ஓங்கிய சல்லிசான ஒரு உலகியல் பார்வை மட்டுமே
மறுபக்கம், மிக எளிமையான, சொல்லப்போனால் பாமரத்தனமான ஆன்மிகம். சில்லறை அற்புதங்களை நம்புவது. எளிய தொன்மங்களில் உழல்வது. முதலில் சொன்னதைவிட இதுவே ஆபத்தானது.மெய்யான ஞானத்தேடல் கொண்டவர்களைக்கூட பொய்யான நம்பிக்கைகளை நோக்கி கொண்டுசெல்கிறது. அவர்களே எளிமையான பாவனைகளுக்குள் விழுந்துவிடுகிறார்கள். நம்பிக்கை ஒரு கல்திரை. பாவனை இரும்புத்திரை.
அத்தகையவர்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஆகவே இந்த உரைகளை முடிந்தவரை ‘நிலத்தில் நின்று’ ஆற்றுகிறேன். அப்பட்டமான யதார்த்தத்தில் இருந்தே தொடங்குகிறேன். பெரும்பாலான மாயைகளை, பாவனைகளை கலைக்கிறேன். நம்பிக்கைகளை அவற்றின் மெய்யான மதிப்பை உணர்ந்து கொள்ளும்படிச் சொல்கிறேன்.
உண்மையில் செவிகொள்ளும் ஒருவர் தன் வழி என்ன என தானே தேர்வுசெய்துகொள்ள முடியும். தன்னை தானே ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியும். என் இலக்கு அவ்வளவே. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பதையும் அறிவேன். இதன் வழியாக என்னிடம் வருபவர்களை விட என்னைவிட்டு விலகிச்செல்பவர்களே அதிகம் இருப்பார்கள் என்று தெரிந்திருக்கிறேன். ஆனாலும் இது ஓர் ஆணை. நான் ஒரு கருவி.
புகைப்படங்கள்- மோகன் தனிஷ்க்
உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை
நமது இசைக்கலைஞர்கள் முறைப்படி ஆவணப்படுத்தப்படவே இல்லை. நமக்கு உண்மையில் அவர்கள்மேல் பெரிய மதிப்பில்லை. இது ஒரு விளிம்புக் காலகட்டம். இப்போது அவர்களை ஆவணப்படுத்தாவிட்டால் அவர்கள் நிரந்தரமாக மறைந்துவிடக்கூடும். மங்கல இசை மன்னர்கள் என்னும் நூல் அவ்வகையில் மிக முன்னோடியான ஒன்று. அந்நூலை ஆவணமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பதிவு
உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை
உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை – தமிழ் விக்கி
Stories of the True- கடிதம்
அன்புள்ள ஜெ,
நான் அறம் கதைகளை பலமுறை வாங்கியிருக்கிறேன். பலருக்குப் பரிசளித்தும் உள்ளேன். திரும்பத்திரும்ப வாங்கும், திரும்பத்திரும்ப வாசிக்கும் ஒரு படைப்பு அது. ஆனால் தமிழை முறையாகப் பயிலாத என் பிள்ளைகள் உட்பட அடுத்த தலைமுறைக்கு அறம் கதைகளை வாசிக்கும் அனுபவம் இல்லை. அவர்களுக்கு கதைச்சுருக்கத்தைச் சொல்லத்தான் முடியும். அவர்களுக்கு இந்த மொழியாக்கம் உதவும் என நினைக்கிறேன். ஆளுக்கொரு பிரதி வாங்கிக் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.
அறம் கதைகள் குறிப்பாக வளரிளம் பிள்ளைகளுக்கு மிக உதவியானவை. இன்றைக்கு சமூகவலைச் சூழலில் இருந்து அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் நுகர்வுவெறி, எதிர்மறை அரசியல் இரண்டும்தான். எல்லாவற்றையும் தூக்கிவீசிப் பேசினால். எல்லாவற்றையும் வசைபாடினால் பெரிய புரட்சிவீரர் ஆகிவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அந்த வயதிலேயே லட்சியவாதம், அதிலுள்ள சாகசம் அறிமுகமாவது மிக நல்லது. என் மகனுக்கு யானைடாக்டர் வழியாகத்தான் வைல்ட் லைஃப் அறிமுகம். அதற்கு முன் இருந்த வேடிக்கை மனநிலை போய் ஒரு லட்சியவாதம் அறிமுகமாகியது. இன்றைக்கு அவன் ஒரு நல்ல பயணி. அறம் கதைகளுக்கும் மற்ற நவீன இலக்கியப்படைப்புகளுக்கும் உள்ள வேறுபாடு இது. அறம் கதைகள் எல்லாரும் வாசிக்கலாம். இலக்கியப்பரிச்சயம் கட்டாயமல்ல. இலக்கியப்படைப்புகளிலுள்ள அத்துமீறலோ கசப்புகளோ அல்லது வேறுவகையான எதிர்மறை விஷயங்களோ அவற்றில் இல்லை. தேவையில்லாத பூடகத்தன்மையும் இல்லை.
தமிழகத்தில் ஒரு ஐம்பதாயிரம்பேர் அறம் ஆங்கிலத்தை வாங்கி பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள் என்றால் அது மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமையும்
ராஜி சுவாமிநாதன்
சுரேஷ் பிரதீப், ஒரு வாசகர் கடிதம்
சுரேஷ் பிரதீப்ஓர் எழுத்தாளனுக்கு ஆத்மார்த்தமான ஒரு நல்ல கடிதம் வருவதென்பது ஒரு நல்ல தொடக்கம். அது அவன் வாழ்நாள் முழுக்க நீளும் ஓர் உரையாடல் நிகழவிருப்பதன் தடையம். சுரேஷ் பிரதீப் இணையதளத்தில் இந்தக் கடிதத்தை கண்டேன். ஒரே சமயம் இளம் வாசகர் கடிதமாகவும் கூடவே இலக்கிய விமர்சனத் தகுதியுடனும் இருக்கும் எழுத்து
என் சிறுகதைகள் குறித்து அ.க.அரவிந்தன்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

