Jeyamohan's Blog, page 740

July 24, 2022

புதுவெள்ளம்

தேவிபாரதியின் ‘நொய்யல்’ முன்வெளியீடு தேவிபாரதி – தமிழ் விக்கி

தேவிபாரதியின் நொய்யல் நாவலுக்கு எழுதிய முன்னுரை 

சில அடிப்படையான படிமங்கள் எழுத்தாளர்களின் உள்ளத்தில் எவ்வாறு எழுகின்றன என்பது எப்போதும் ஆர்வமூட்டும் ஒரு வினா. பெரும்பாலான படிமங்கள் அந்த எழுத்தாளனின் உளநிலையையும் கனவுகளையும் பொறுத்தவை. அவனுக்கே உரியவை. அவன் வெளிப்படும் அத்தருணத்துக்குரிய மொழியை அக்கணம் கண்டுகொண்டவை. ஊற்று மண்சுவை பெறுவத்போல. ஆயினும் அவற்றை அகழ்ந்து அகழ்ந்து செல்வோமென்றால் நீண்ட மரபு உருவாக்கி நனவிலியின் ஆழத்தில் எங்கோ புதைத்து வைத்திருக்கும் ஆழ்படிமங்களை சென்றடைய முடியும். அந்த எழுத்தாளன் தன்னை எழுத்தாளன் என்று உணர்வதற்கு முன்னரே மொழியினூடாக, தெய்வ உருவங்களினூடாக ,நூறுநூறு கதைகளினூடாக அவை அவனுக்குள் சென்று குடியேறியிருக்கும். அவை அவன் எலும்பின் மஜ்ஜை போல. அவன் குருதி முழுக்க அங்கிருந்தே ஊறி வருகிறது.

வளருந்தோறும்  அவன் தன் பிரக்ஞையை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். கற்றறிகிறான். கற்றவற்றை கலைத்தும்,  கோர்த்தும் சிந்திக்க  ஆரம்பிக்கிறான். தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்கிறான். அந்த அடையாளத்தை பேணும்பொருட்டு சிந்திக்கத் தொடங்குகிறான். நான் இத்தகையவன் என்று தன்னுடைய எல்லா எழுத்தினூடாகவும் அவன் அறைகூவிக்கொண்டே இருக்கிறான். ஆனால் பாறை இடுக்குகளினூடாக கசிந்துவரும் ஆழ்நிலத்து ஊ ற்று போல அவனுள்ளிருந்து அவனறியாத அந்த ஆழம் வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. எங்கோ ஓரிடத்தில் ஊற்றுபெருகி அப்பாறைகளை அது பெயர்த்து வெளியே தள்ளுமெனில் அங்கொரு அருவிப் பீறிடலை நாம் பார்ப்போம்.

தேவிபாரதியின் முந்தைய நாவல்களிலிருந்து நொய்யல் எனும் இந்த நாவல் முற்றிலும் வேறுபட்டிருப்பது அது இந்நாவல் வரை தேவிபாரதி தனக்கென உருவாக்கி வைத்திருந்த அறிவார்ந்ததும், எதிர்மனநிலை கொண்டதும், சற்றே தத்துவார்த்த சோர்வு கொண்டதுமன  நவீனக் கதைசொல்லி என்னும் தன்னடையாளத்தை இந்நாவலில் அவருக்கு உள்ளிருந்து எழும் ஓர் ஊற்று பெருகி எழுந்து உருட்டி அப்பால் தள்ளி வெளியாகியிருக்கிறது என்பதனால் தான். இந்நாவலில் தேவிபாரதி அவருடைய வழக்கமான செறிவான யதார்த்தவாதத்தை பெரும்பாலும் கைவிட்டிருக்கிறார். அவருடைய நாவல்களில் எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் இருத்தலியல் தத்துவமும் அதிலிருந்து எழும் விலகல் கொண்ட அங்கதமும் இந்நாவலில் இல்லை. இது இதுவரைக்கும் அவர் நாவல்களில் இல்லாத தொன்மங்களையும் தொன்மங்களையும் சார்ந்த தீவிர உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் படைப்பாக இது உள்ளது.

முன்பொருமுறை லா.சா.ராமிருதத்தின் ஒரு கதையை முன்வைத்து நண்பர்கள் நடுவே ஒரு விவாதம் நடந்தது. அக்கதையில் சீற்றமடைந்த ஒரு பிராமணகுடும்பத்துப் பெண் ஓடிச்சென்று தன் வீட்டுக் கொல்லைக்கிணற்றில் குதித்துவிடுகிறாள். கிணற்றிலிருந்து நீர்பொங்கி வெளிவருகிறது. பெருவெள்ளமாகி அந்தத் தெருவையே மூழ்கடிக்கிறது. ஊரை மூழ்கடித்துச் செல்கிறது. நண்பர் ‘இந்தக் கதை எப்போது எழுதப்பட்டது?” என்று கேட்டார். நான் ‘1950 வாக்கில் எழுதப்பட்ட கதை‘ என்று சொன்னதும் ‘அப்படியென்றால் மாய எதார்த்தவாதத்தை லாசரா முன்னரே எழுதிவிட்டாரல்லவா?” என்றார்.

மாய யதார்த்தவாதமென்பது லத்தீனமெரிக்கா தன்னுடைய தொல்மரபை நவீன சூழலில் வெளிப்படுத்துவதற்காக கண்டுபிடித்த ஒரு கதைசொல்லும் முறை. ஏதோ ஒருவகையில் எல்லா மரபுகளுக்கும் தங்களுக்கான மாயங்கள் உள்ளன தங்களுக்கான நவீனகதை சொல்லும் முறைகளையும் அவை உருவாக்கிக்கொள்ள முடியும்.  உள்ளன. மாயங்கள் ஏன் ?ஏனெனில் மானுட உள்ளம் செயல்படும் சில ஆழங்களை மாயத்தினூடாக மட்டுமே சொல்ல முடியும் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமுள்ள உறவின் சில பகுதிகள் மாயத்தினூடாக அன்றி தொடமுடியாதவை. மானுட உறவே மாயங்களின் விளையாட்டுதான் .

சொல்லப்போனால் மாயத்தை சொல்வதற்காக மட்டுமே மனிதன் கதை என்னும் வடிவத்தை உருவாக்கியிருக்கிறான்.அதீதங்களை சொல்வதற்காக கட்டின்மையை சொல்வதற்காக மட்டுமே உலகெங்கும் கதைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அன்றாடத்தை யதார்த்தத்தை, தர்க்கத்திற்குள் சிக்குவதைச் சொல்வதற்கு கதையை பயன்படுத்தலாம் என்பதே பதினெட்டாம் நூற்றாண்டு உலகத்திற்கு அளித்த ஒரு புதிய அறிதல்தான் .ஒரு மாறுதலுக்காக அதை சொல்லிப்பார்த்தார்கள். அதன் உச்சங்களை தொட்டார்கள். ஆனால் இப்போது எண்ணிப்பார்க்கையில் அந்த உச்சகட்ட யதார்த்த படைப்புகளில்கூட நரம்பென ஊடாடி அவற்றை ஒருங்கிணைத்து அவற்றின் சாராம்சத்தை வெளிக்காட்டுவதாக  இருந்தது அவற்றிலுள்ள மாயத்தன்மைதான். யதார்த்தவாத நாவல்களில் உள்ளது உள்ளார்ந்த மாயத்தன்மை. ஆசிரியனால் பூடகமாக்கி வைக்கப்பட்ட மாயத்தன்மை என்று அதை சொல்லலாம். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலில் ஒரு குன்றின்மேல் ஏறி நின்று பனிமூடிய ராணுவ அணிகளை பார்வையிடும் நெப்போலியனின் காட்சியும் சரி, போர்க்களத்தில் மல்லாந்து படுத்து மேகங்களை பார்த்து அங்கே எவ்வளவு அமைதி என்று வியக்கும் ஆண்ட்ரூவின் காட்சியும் சரி அந்த தருணங்களில் சென்றடைவது ஒரு மாயநிலையைத்தான். அந்தப்புள்ளிகளை மட்டும் கதையாக ஆக்குவதென்றால் மாயப்புனைவே தேவைப்படும். 

மாயக்கதைகள வாழ்வின் சாரமென திகழும் புரியாத சிவவற்றை ,அவை வெளிப்படும் தருணத்தை மட்டுமே கதையாக்க முயல்கின்றன என்று தோன்றுகிறது. நம்முடைய பண்பாட்டுக்கே உரிய மாயத்தன்மை லாசராவின் அக்கதையில் வெளிப்படுகிறது. ஆறு, கிணறு, பாம்பு,தீ என நாம் எப்போதும் சொல்லிச் சொல்லி வளர்த்துக்கொண்டே இருக்கும் சில தொல்படிமங்களைச் சார்ந்து லாசராவின் மனம் இயங்குகிறது. நவீன எழுத்தாளர்கள் பலருக்கு அது அவர்கள் இளமையில் கேட்ட குழந்தைக் கதைகளின் சாயலில் உள்ளதனாலேயே, தாங்கள் வளர்ந்துவிட்டோம் எந்று அவர்கள் எண்ணிக்கொள்வதனாலேயே அவற்றிலிருந்து விலக்கம் ஏற்படுகிறது எதிர் திசையில் சென்று, தூய யதார்த்ததை தொட்டு, அங்கே எஞ்சும் ஒன்றை தொட எம்பி மாயத்தை அடைகிறார்கள். வளைந்து மீண்டும் தங்கள் குழந்தைமைக்கு வந்து சேர்கிறார்கள் போலும் தந்தையிடமிருந்து விலக்கத்தை உருவாக்கிக்கொள்ள முயன்று, ஐம்பது வயதுக்கு மேல் தந்தையைப்போலவே தானுமாகும் வாழ்க்கையைத்தான் மைந்தர்கள் அனைவரும் கொண்டிருக்கிறோம் என்பது போல.

தேவிபாரதியின் நாவலில் அவர் சென்றடைந்திருக்கும் இடம் எனக்கு பலவகையான எண்ணங்களை உருவாக்குகிறது. தமிழின் மிக முதிர்ந்த, மிக சரியான யதார்த்தவாத படைப்பாளிகளில் ஒருவர் காரிச்சி போன்ற அதீதத்தின் விளிம்பிலேயே நடமாடும் ஒரு கதாபாத்திரத்தை ஏன் உருவாக்குகிறார்? இத்தனை ஆண்டுகளில் அவர் எழுதி எழுதி அடைய முடியாத எதை இந்நாவலில் அவர் அடைய எண்ணுகிறார்? எஞ்சியது என்ன? இந்நாவல் முழுக்க அவருக்கு இயல்பே இல்லாத வியப்பின் மொழி உருவாகி வந்திருக்கிறது.நாவலின் தொடக்கத்தில் நொய்யலில் வெள்ளம் வரும் சித்தரிப்பின் மொழியில் நான் முதல் முறையாக தேவிபாரதியில் உறையும் சிறுவனை பார்த்தேன். ஏற்கனவே எனக்கு ஐந்து வயதான சுந்தர ராமசாமியை, மூன்று வயதான லா.ச.ராவை, ஒரு வயதான பிரமிளை தெரியும்.

நொய்யலில் வெள்ளமா? ஆமாம், நொய்யலிலேதான். சாயக்கழிவும் உடைமுள்புதர்களும், குப்பைகளுமாக வரண்டு கிடக்கும் அந்த மணல் தடத்தில்தான் வெள்ளம். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் தேவிபாரதிக்கு அப்பெருவெள்ளம் தேவைப்பட்டிருக்கிறது. அதுவும் ஓர் அன்னை சொல்ல, அவள் சொல் பொய்யாமல் எழும் வெள்ளம். அன்னை தெய்வம். பிச்சியவள் காண் எங்கள் அன்னை, பெரும் பேயவள்காண் எங்கள் அன்னை என தேவிபாரதி கண்டுகொண்ட அன்னை. ‘மலையுருகிப் பெருக்கெடுத்த நதி மடியுமோ நிரந்தரமாய்? அத்தனை பெரிய ஆற்றலை வெளிப்படுத்த வல்லதோ ஒரு சிறு சொல்?’ என நாம் கண்டடையும் பெருநதி.

நொய்யல் என்றாலே நொய்தல், தேய்தல் என்று பொருள். நொய்யல் ஆறு வெள்ளம் பெருகி ஊரை நிரப்பி தெய்வங்களையும் கோயில்களையும் சுருட்டிக்கொண்டு செல்கிறது. அந்த ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இன்னொரு தெய்வம் தேவனாத்தா. பூசாரியின் உள்ளிருந்து கிளம்பி உடலெங்கும் ஆவேசித்து அவன் சொல்லில் திகழ்ந்து அருளும் மருளும் என திகழ்ந்து வாழ்த்தி வரங்கொடுத்து நின்றிருக்கும் பேயுரு. காரிச்சி எளிய பெண். அவளுடைய பிறப்பு எளிதிலும் எளிது ஆனால் நொய்யலிலிருந்து, தேவனாத்தா முதலான அதன் தெய்வங்களிலிருந்து ஒரு மர்மச்சரடு காரிச்சிக்குள் வந்து புகுந்து கொள்கிறது. அவள் சுட்டிக்காட்டி ஆணையிட்டால் நொய்யல் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. பெய்யெனப்பெய்யும் மழை என்பது போல“காரிச்சி, பாரு, தேவனாத்தா நொய்யல் எல்லாம் ஒன்றா?” என்னும் ஒரு திகைப்பு இந்நாவலில் உள்ளது. அதுவே இக்கதைப்பரப்பு முளைத்தெழுந்த முதல்விதை போலும். 

இந்நாவல் முழுக்க ஆதிக்கம் சாதி இழிவுகள், தொல்நிலத்தின் ஒடுக்குமுறைகள், அவற்றினூடாக மீறி எழும் மானுடத்தருணங்கள் உள்ளன. தனித்தனி நிகழ்வுகளாக சொல்லப்படும் அவை அனைத்துமே இந்நாவலின் மையச்சரடான உருவாக்கும் இந்த மாயத்தால் ஒன்றெனக் கோக்கப்பட்டுள்ளன. “நீ என்ன தேவனாத்தாளா? நீ வான்னு சொன்னா வாரதுக்கு?” “ஆமாங்க சிரிக்கவுண்டரே, நான் தேவனாத்தா தே. தேவனாத்தா வேற காரிச்சி வேறயில்ல” எனும் இடம் ஓர் உதாரணம். நொய்யல் பெருகி வருகிறது. ஏனென்றால் நொய்யலும் காரிச்சியேதான். இந்த மனிதர்கள் அனைவருக்குள்ள்ளும் ஓடும் ஒன்றையே தேவிபாரதி இந்நாவலில் நொய்யல் என கண்டடைகிறார். 

ஒரு புனைவில் வரும் அதீத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களின் பெறுமதி என்ன என்று எப்படி மதிப்பிடுவது? அதீதத்தன்மை பெரும்பாலான யதார்த்தவாத நோக்குள்ள வாசகர்களுக்கு ஒருவித ஒவ்வாமையை உருவாக்குகிறது. அது ஆசிரியர் உரத்துப் பேச முற்படுவதாக அவனுக்குத்தோன்றுகிறது. அப்படித்தோன்றுவது ஒரு குறிப்பிட்ட வகையான உளப்பாங்கின் விளைவே ஒழிய அதற்கு பொதுமதிப்பு எதுவுமில்லை. ஏனெனில் நம் வாழ்க்கையில் தொடர்ந்து அதீதமான மனிதர்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு கணத்தில் ,ஏதோ ஒரு ஊரில் ,நாம் கண்டு மறந்த மனிதரை வாழ்நாள் முழுக்க நினைவு கூர்ந்துகொண்டிருக்கிறோம். அது அவர்களிலிருக்கும் ஓர் அதீதப்பண்பை நாம் அடையாளம் கண்டுகொண்டதனால்தான். நாம் நினைவில் சேமித்திருக்கும் எல்லா கணங்களும் அதீதங்கள் மட்டுமே. அவற்றால்தான் நாம் நம் வாழ்க்கையையே நினைவுச்சரடாக கோத்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதீதமென்பது ஒருவகை பொங்கிவழிதல் என்று கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் அவருடைய உடலால், சூழலால் அளிக்கப்பட்டிருக்கும் ஓர் அளவு உள்ளது. அந்த அளவைத்தாண்டி அவருள்ளிருந்து ஒன்று பீரிடுவதே அதீதத்தன்மை. அந்த அதீதத்தன்மைதான் உண்மையில் அவருடைய சாரம் .அது எந்த அளவிற்குள்ளும் நிற்காதது.எந்தக்கட்டுக்குள்ளும் அடங்காது. ஒருவரிடம் எப்படி ஒடுக்கினாலும் ஒடுக்க முடியாத ஒன்று இருக்குமெனில் அதுவே அவருடைய சாராம்சம் எனலாம். அந்த அதீதத்தன்மையை நோக்கி கலைஞர்கள் ஈர்க்கப்படுவது மிக இயல்பானது. ஏனெனில் அது  மாடனுடசாராம்சம் நோக்கிய பயணம்.அனைத்து வகையிலும் சாதாரணமான, ஒவ்வொரு தெருமுனையிலும் சந்திக்கத் தகுந்த ஒருவரை உண்மையில் புனைவாக்கத்தான் வேண்டுமா என்ற ஐயம் எனக்கு உண்டு. ஒரு புனைவில் அவர் எங்கோ ஓரிடத்தில் ஒரு வகைமாதிரியாக நிகழ்த்தப்படலாமே ஒழிய புனைவென்னும் கலை அவருக்காக உருவாக்கப்பட்டதல்ல. அது சாராம்சம் நோக்கி செல்வது. சாராம்சம் என்பது அதீதமாக வெளிப்படுவது. இன்று திரும்பிப்பார்க்கையில் உலகப்புனைவுலகில் அதீதங்களினூடாக தங்களை நிகழ்த்திக்கொண்ட பெருங்கதாபாத்திரங்களே நினைவில் நிற்கிறார்கள். அந்தந்த தருணங்களில் நான் பொருத்தி நான் மகிழ்ந்த சிறு சிறு கதாபாத்திரங்கள் எல்லாருமே வெறும் முகங்களாக மங்கின புகைப்படங்களாக மாறி பின்னகர்ந்துவிட்டிருக்கின்றனர். 

ஒவ்வொரு அதீதத்துடனும் என் உள்ளம் சென்று தொடும் ஒரு புள்ளி உள்ளது. ஏனெனில் அந்த அதீதங்கள் அனைத்தும் ஒரு மானுடனாக என்னுடையவையேதான். என்னால் ஜோன் ஆஃப் ஆர்க்கை புரிந்துகொள்ள முடிகிறது. நெப்போலியனை புரிந்துகொள்ள முடிகிறது. பித்தனும் விவேகியுமான காந்தியையும் புரிந்துகொள்ள முடிகிறது. இவை அனைவருமாக ஆகும் ஒரு சாத்தியத்தை எனக்கு புனைவு திறந்து காட்ட வேண்டும். எனில் மட்டுமே புனைவை வாசிப்பதற்கான ஊதியத்தை நான் அடைகிறேன்.

தேவிபாரதியின் இந்நாவல் முக்கியமானதென்று எனக்குத் தோன்றுவது இதில் அந்த அதீதங்கள் வெளிப்படும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையும் அவர்களின் தீவிரமும் அதிகம் என்பதனால்தான் .காரிச்சிக்கு நிகராகவே முக்கியமானவர் குமரப்ப பண்டிதன். அவர் வாழ்க்கையின் ஒரு வரைகோட்டுச்சித்திரத்தை தேவிபாரதி அளிக்கிறார். அதனூடாக தன்னுடைய ஒவ்வொரு எல்லையையும் அவர் கடந்து போவதை காண முடிகிறது. எளிய குடிநாசுவனாக பிறந்து ,கல்வியினூடாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து, உள்ளுணர்வையும் கல்வியையும் இணைத்துக்கொள்ள முடிந்தமையால் ஜோதிடம் வழியாக காலங்களைக் கடந்து பார்க்கும் கண்கள் பெற்று, அதன்பின்னரும் தன்னை ஒரு எளிய நாசுவனாகவே பார்க்கும் சூழலின் காலூன்றி நின்றிருக்க வேண்டிய குமரப் பண்டிதன்ர ஒரு காலகட்டத்தின் முழுத்துயரத்தையும் வெளிப்படுத்துபவனாகவும், மானுடத்துயரங்கள் அனைத்தையும் கடந்து தன் ஞானத்தால் அனைத்தையும் கடந்து நின்றிருக்கும் உச்சத்தைக்காட்டுபவனாகவும் இந்நாவலில் வெளிப்படுகிறான்.

இந்நாவல் தேவிபாரதியின் வேறெந்த நாவலிலும் இல்லாத அளவுக்கு அதீத தருணங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே வேறெந்த நாவலிலும் இல்லாத அளவுக்கு மானுட உச்சங்களும் அவை வெளிப்படும் அழகிய சொற்தருணங்களும் கொண்டுள்ளது. ஆனால் அந்தச் சொற்தருணங்கள் நாம் செவ்வியல்தன்மை மேலோங்கிய நாவல்களில் காணும் சொற்றொடர்களால் ஆனவை அல்ல. அவை ஒரு நாட்டார்ப்பாடலில் வருவன போலிருக்கின்றன. ஒரு பயணத்தில் நாடோடி ஒருவனின் வாயில் இருந்து வெளிப்படுவன போலிருக்கின்றன. 

தேவிபாரதியின் இந்நாவலில் உள்ள மாயத்தை லாசராவின் நாவலில் உள்ள மாயத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது அதை புரிந்துகொள்ளுவதற்கான வழி.காரிச்சியை நாம் அபிதாவுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.  லாசராவின் அபிதா அவளுடைய அதீதத்தை அடைவது தொடப்படாத தூய்மையினூடாக ,பேரழகினூடாக, நெருப்புக்கிணையான ஒன்றாக லாசரா அபிதாவை உருவாக்குகிறார். தொட முடியாதவள் என்னும் பொருளில் அவளுக்கு அபிதகுசலாம்பாள் என்று பெயர் வைக்கிறார். நேர்மாறாக காரிச்சி அவலட்சணமானவள், கன்னங்கரியவள், ஓங்கு தாங்கானவள், நம் மரபு அரக்க குணம் என்றுஅரக்க தோற்றம் என்று சொல்லக்கூடிய அனைத்து தன்மைகளையும் கொண்டவள். அவளில் வெளிப்படும் தெய்வீகத்தையே தேவிபாரதி இதில் எழுதுகிறர். லாசரா மாயம் காட்டிய  அந்த டாரட் கார்ட் அப்படியே புரண்டு மறுபக்கத்தை காட்டுகிறது. நேரெதிரான குணங்களுடன் அதே தெய்வத்தன்மையுடன் காரிச்சி அமர்ந்திருக்கிறாள். குமரப்ப பண்டிதனின் கதையும் அதுவே. அவன் ஏறிச்செல்லும் உயரங்கள் அகவயமானவை, ஆனால் புறவுலகில் அவன் கீழ்மையின் எல்லைகள் வரை செலுத்தப்பட்டு அவமதிக்கப்படுகிறான். நம் நாட்டார்த்தெய்வங்களில் பல கீழ்ச்சாதி என கருதப்பட்ட குலங்களைச் சேர்ந்தவை, அவமதிப்பை அடைந்து அதனூடாகவே தெய்வமானவை. இந்த விந்தையான முரண்நிகழ்வை இந்நவீனநாவலும் சுட்டிச்செல்கிறது.

இந்நாவல் முழுக்க திகழும் மீபொருண்மை அல்லது ஆன்மிகத் தன்மை என்பது முழுக்கமுழுக்க நம்முடைய நாட்டார் மரபு சார்ந்தது. நாட்டார் மரபுத்தெய்வங்கள் காரிச்சியையும் குமரப்பண்டிதனையும் போன்றவை.   நாவல் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் ஆக்ரோஷமான அந்த நாட்டார் தன்மையே இதை ஒரு தனித்த படைப்பாக மாற்றுகிறது. கிரிக்கவுண்டனுக்கு இருக்கும் நீரில்கண்டம் எனும் பிறவிச்சாபமும், மீள மீள அவன் நொய்யல் நோக்கியே ஈர்க்கப்படுவதும், அங்கே அவன் கண்டடையும் தருணங்களும் எதைக் காட்டுகின்றன? நொய்யல் என்னும் ஆற்றை முழுக்க விளக்கிவிட முடியாத ஒரு ஆழ்பெருக்காக இந்நாவல் ஆக்கிவிடுகிறது   அதுவே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது. 

எப்போதும் என்னை உத்வேகமூட்டும் அம்சமென்பது ஒரு எழுத்தாளன் தன்னுடைய சாத்தியங்களை தானே மீறுவது தான் அதுவரை எழுதியவற்றை ஆடைபோல் களைந்துவிட்டு பிறிதொருவனாக வெளிப்படுவது. இந்நாவலில் நான் வாசித்த எல்லா தேவிபாரதி நாவல்களிலிருந்தும் முற்றிலும் விடுபட்டு வேறொருவராக தேவிபாரதி நிகழ்ந்திருப்பது பெரும் உவகையை அளிக்கிறது அவருக்கு என் வணக்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2022 11:35

பற்று,வரவு , இருப்பு

அடையாற்றின் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அஞ்சு  ஆலமரம் என்று அழைக்கப்படும் பகுதியை விட்டு சற்றுத் தள்ளி இருப்பது. இது ஆறாவது ஆலமரமாக இருக்கலாம். ஆனால் அஞ்சு பத்து என்று சொல்வதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. ஆகவே அது தனித்து விட்டது. முன்னொரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் அப்படி ஒரு தனித்த ஆலமரத்தின் கீழே அந்தவழியாக ஒருநாள் ஒரு  பண்டிதர் நடந்து போய்க்கொண்டிருந்தாராம். அப்படிப் போகும்போது மரத்தின் மேலிருந்த பிரம்ம ராட்சசன் தொப் என  அவர் அருகில் குதித்து பிடித்துக் கொண்டானாம்.  

பற்று வரவு இருப்பு – காளிப்பிரசாத்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2022 11:34

பற்று,வரவு , இருப்பு

அடையாற்றின் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அஞ்சு  ஆலமரம் என்று அழைக்கப்படும் பகுதியை விட்டு சற்றுத் தள்ளி இருப்பது. இது ஆறாவது ஆலமரமாக இருக்கலாம். ஆனால் அஞ்சு பத்து என்று சொல்வதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. ஆகவே அது தனித்து விட்டது. முன்னொரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் அப்படி ஒரு தனித்த ஆலமரத்தின் கீழே அந்தவழியாக ஒருநாள் ஒரு  பண்டிதர் நடந்து போய்க்கொண்டிருந்தாராம். அப்படிப் போகும்போது மரத்தின் மேலிருந்த பிரம்ம ராட்சசன் தொப் என  அவர் அருகில் குதித்து பிடித்துக் கொண்டானாம்.  

பற்று வரவு இருப்பு – காளிப்பிரசாத்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2022 11:34

க.செல்லையா அண்ணாவியார்

[image error]

தமிழகத்து நாட்டார்கலைஞர்கள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படவே இல்லை. அவர்கள் ஆய்வுப்பொருளாகக்கூட ஆகவில்லை. இத்தனைக்கும் தமிழகத்தில்தான் கல்வித்துறை சார்ந்து பலகோடி ரூபாய் நாட்டாரியல் ஆய்வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாறாக ஈழத்து நாட்டார் கலைஞர்கள் பெருமளவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர். பேராசிரியர் சு. வித்தியானந்தன், கார்த்திகேசு சிவத்தம்பி, மௌனகுரு போன்றவர்களின் தொடர் அக்கறை அதற்குக் காரணம்

க.செல்லையா அண்ணாவியார் [image error] க. செல்லையா அண்ணாவியார் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2022 11:34

க.செல்லையா அண்ணாவியார்

[image error]

தமிழகத்து நாட்டார்கலைஞர்கள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படவே இல்லை. அவர்கள் ஆய்வுப்பொருளாகக்கூட ஆகவில்லை. இத்தனைக்கும் தமிழகத்தில்தான் கல்வித்துறை சார்ந்து பலகோடி ரூபாய் நாட்டாரியல் ஆய்வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாறாக ஈழத்து நாட்டார் கலைஞர்கள் பெருமளவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர். பேராசிரியர் சு. வித்தியானந்தன், கார்த்திகேசு சிவத்தம்பி, மௌனகுரு போன்றவர்களின் தொடர் அக்கறை அதற்குக் காரணம்

க.செல்லையா அண்ணாவியார் க. செல்லையா அண்ணாவியார் க. செல்லையா அண்ணாவியார் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2022 11:34

மைத்ரி- கடிதங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வாசகனாக, அவருடைய கட்டுரைகள் மற்றும் செய்திகளின் வழியாக அஜிதன் ஒரு பயணி, அவருடைய ஆர்வமும் தேடலும் திரைத்துறை என்று மட்டுமே அறிந்திருந்தேன். அஜிதன் முதன் முறையாக அவராகவே வெளிப்பட்ட “சியமந்தகம் – ஜெயமோகன்-60″ ல் எழுதிய கட்டுரையில் அவரது எழுத்தின் ஆழமும் அதிலேயே குறிப்பிட்டிருந்த “மைத்ரி” நாவல் அறிவிப்பும் மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்தது. நாவலை வாசிக்கும் தோறும் அந்த எதிர்பார்ப்பு, பிரமிப்பாக மாற்றம் அடைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும் . 

மைத்ரி ஒரு இளைஞரின் பயணம். உலகியலில் காலடி எடுத்துவைக்கும் நடுத்தர வயதுடைய ஹரன் என்ற இளைஞன் அவனுடைய வாழ்க்கையின் ஒரு முடிச்சித் தருணத்தின் இறுக்கத்தில் அதிலிருந்து வெளியேறி இலக்கின்றி பயணம் செய்ய நேரிடுகிறது. இலக்கின்றி பயணம் செய்யும் ஒரு இந்தியர் இமயத்தை நோக்கித்தான் வரமுடியும் என்ற இயல்பில் உத்தரகாண்டின் ருத்திரப்ரயாக் செல்கிறார். அங்கிருந்து பேருந்தில் சோன் பிரயாக் பயணிக்கிறார். 

அந்த பயணம், அந்த பயணத்தில் அவனோடு இணையும் மைத்ரி என்ற பெண், அவளோடு செல்லும் ஒரு கிராமம், அவளுடன் கிடைக்கும் ஒரு அனுபவம், அதை அடுத்து அவன் அடையும் கண்டடைதல் என இருக்கும் அந்த “வாழ்க்கைத் துளி“யை நாவல் பிடித்து வைத்திருக்கிறது. 

இதில் மிக குறிப்பிட்டு சொல்லும்படி இருப்பது நாவல் நிகழும் களம். இமையப்பனி மலை முகடுகளின் நடுவில் நாவல் நிகழ்கிறது. அந்த நிலத்தில் பயணிக்காத ஒருவர் கற்பனையில் இந்த நாவலின் ஒரு பக்கத்தை கூட எழுதியிருக்க முடியாது என்ற புரிதலில் நாவலாசிரியர் ஒரு பயணி என்பதை வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களில் தெரிந்துவிடுகிறது. அதில் அவர் புறக்காட்சிகளை இணைத்திருக்கும் விதத்திலும், அதன் செறிவிலும் நுண்மையிலும் அவர் எழுதிக்கொண்டே பயணித்திருப்பாரோ என்று தோன்றச் செய்கிறது.  

நாவலில் வரும் ஊர் பெயர்களையும் இடங்களையும் இணையத்தில் தேடிப் பார்க்கும் போது இதுபோன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையை வாசகனின் மனதில் தூண்டிவிடுகிறது (மைத்ரி போன்ற பெண் அருகில் வந்து அமர வேண்டும் என்ற ஆர்வத்தையும்). இதைத்தாண்டி இந்த நாவலை தத்துவார்த்தமாகவும் வாசிக்க முடியும் என்று முன்னுரை எழுதியிருக்கும் எழுத்தாளர் சுசித்ரா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

மைத்ரி, அதன் நாவல் களம் சார்ந்து, அதன் தரிசனம், விவரிப்பு சார்ந்து ஒரு புதிய முயற்சி, அது வெளிப்பட்டிருக்கும் வகையில் ஆசிரியரின் முதல் முயற்சி என்று நம்புவதற்கு சற்று சிரமமாகவே இருக்கிறது. 

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா. 

***

அன்புள்ள ஜெ

மைத்ரி படித்தேன். வெறும்காட்சிகளால் ஆன ஒரு சிறு பயணம். ஒன்றுமே நிகழாமல் நாவல் முடிகிறது. ஆனால் எல்லாமே உள்ளத்தில் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. பரபரப்பு நாடும்  வாசகர்களுக்கு உரியது அல்ல. எடுத்தால் கீழே வைக்கமுடியாத படைப்பும் அல்ல. நான் இந்த இருநூறு பக்க நாவலை எட்டு நாள் எடுத்துக்கொண்டு வாசித்து முடித்தேன். நவீனக்கவிதையில் ஆர்வமும் பழக்கமும் உள்ளவர்களுக்கு இது இயல்பான வாசிப்பை அளிக்கும். காட்சிகள் எல்லாமே படிமங்களாக ஆகிக்கொண்டே இருக்கின்றன. ஏனென்றால் மனம் காட்சிகள் வழியாகவே வெளிப்படுகிறது.

ஒருவன் ஒரு பெண்ணை சந்திக்கிறான். பார்வைக்கு அவள் இன்று வாழும் ஒரு கட்வாலி பெண். அவளுடன் மலைப்பகுதியின் ஆழத்துக்குள் மூழ்கி மூழ்கி செல்கிறான். அங்கே எல்லாமே அசைவில்லாமல் காலமில்லாமல் இருக்கின்றன. அவன் அவள் வழியாக தன்னை உணர்கிறான். ஹரன் மைத்ரி. ஹரன் டைனமிக் ஆனவன். மைத்ரி அல்லது சக்தி ஸ்டேட்டிக் ஆனவள். ஒரு eternal dialectics அது அற்புதமான கவித்துவத்துடன் கிளைமாக்ஸில் சொல்லப்பட்டுள்ளது

ராஜ்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2022 11:31

மைத்ரி- கடிதங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வாசகனாக, அவருடைய கட்டுரைகள் மற்றும் செய்திகளின் வழியாக அஜிதன் ஒரு பயணி, அவருடைய ஆர்வமும் தேடலும் திரைத்துறை என்று மட்டுமே அறிந்திருந்தேன். அஜிதன் முதன் முறையாக அவராகவே வெளிப்பட்ட “சியமந்தகம் – ஜெயமோகன்-60″ ல் எழுதிய கட்டுரையில் அவரது எழுத்தின் ஆழமும் அதிலேயே குறிப்பிட்டிருந்த “மைத்ரி” நாவல் அறிவிப்பும் மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்தது. நாவலை வாசிக்கும் தோறும் அந்த எதிர்பார்ப்பு, பிரமிப்பாக மாற்றம் அடைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும் . 

மைத்ரி ஒரு இளைஞரின் பயணம். உலகியலில் காலடி எடுத்துவைக்கும் நடுத்தர வயதுடைய ஹரன் என்ற இளைஞன் அவனுடைய வாழ்க்கையின் ஒரு முடிச்சித் தருணத்தின் இறுக்கத்தில் அதிலிருந்து வெளியேறி இலக்கின்றி பயணம் செய்ய நேரிடுகிறது. இலக்கின்றி பயணம் செய்யும் ஒரு இந்தியர் இமயத்தை நோக்கித்தான் வரமுடியும் என்ற இயல்பில் உத்தரகாண்டின் ருத்திரப்ரயாக் செல்கிறார். அங்கிருந்து பேருந்தில் சோன் பிரயாக் பயணிக்கிறார். 

அந்த பயணம், அந்த பயணத்தில் அவனோடு இணையும் மைத்ரி என்ற பெண், அவளோடு செல்லும் ஒரு கிராமம், அவளுடன் கிடைக்கும் ஒரு அனுபவம், அதை அடுத்து அவன் அடையும் கண்டடைதல் என இருக்கும் அந்த “வாழ்க்கைத் துளி“யை நாவல் பிடித்து வைத்திருக்கிறது. 

இதில் மிக குறிப்பிட்டு சொல்லும்படி இருப்பது நாவல் நிகழும் களம். இமையப்பனி மலை முகடுகளின் நடுவில் நாவல் நிகழ்கிறது. அந்த நிலத்தில் பயணிக்காத ஒருவர் கற்பனையில் இந்த நாவலின் ஒரு பக்கத்தை கூட எழுதியிருக்க முடியாது என்ற புரிதலில் நாவலாசிரியர் ஒரு பயணி என்பதை வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களில் தெரிந்துவிடுகிறது. அதில் அவர் புறக்காட்சிகளை இணைத்திருக்கும் விதத்திலும், அதன் செறிவிலும் நுண்மையிலும் அவர் எழுதிக்கொண்டே பயணித்திருப்பாரோ என்று தோன்றச் செய்கிறது.  

நாவலில் வரும் ஊர் பெயர்களையும் இடங்களையும் இணையத்தில் தேடிப் பார்க்கும் போது இதுபோன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையை வாசகனின் மனதில் தூண்டிவிடுகிறது (மைத்ரி போன்ற பெண் அருகில் வந்து அமர வேண்டும் என்ற ஆர்வத்தையும்). இதைத்தாண்டி இந்த நாவலை தத்துவார்த்தமாகவும் வாசிக்க முடியும் என்று முன்னுரை எழுதியிருக்கும் எழுத்தாளர் சுசித்ரா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

மைத்ரி, அதன் நாவல் களம் சார்ந்து, அதன் தரிசனம், விவரிப்பு சார்ந்து ஒரு புதிய முயற்சி, அது வெளிப்பட்டிருக்கும் வகையில் ஆசிரியரின் முதல் முயற்சி என்று நம்புவதற்கு சற்று சிரமமாகவே இருக்கிறது. 

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா. 

***

அன்புள்ள ஜெ

மைத்ரி படித்தேன். வெறும்காட்சிகளால் ஆன ஒரு சிறு பயணம். ஒன்றுமே நிகழாமல் நாவல் முடிகிறது. ஆனால் எல்லாமே உள்ளத்தில் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. பரபரப்பு நாடும்  வாசகர்களுக்கு உரியது அல்ல. எடுத்தால் கீழே வைக்கமுடியாத படைப்பும் அல்ல. நான் இந்த இருநூறு பக்க நாவலை எட்டு நாள் எடுத்துக்கொண்டு வாசித்து முடித்தேன். நவீனக்கவிதையில் ஆர்வமும் பழக்கமும் உள்ளவர்களுக்கு இது இயல்பான வாசிப்பை அளிக்கும். காட்சிகள் எல்லாமே படிமங்களாக ஆகிக்கொண்டே இருக்கின்றன. ஏனென்றால் மனம் காட்சிகள் வழியாகவே வெளிப்படுகிறது.

ஒருவன் ஒரு பெண்ணை சந்திக்கிறான். பார்வைக்கு அவள் இன்று வாழும் ஒரு கட்வாலி பெண். அவளுடன் மலைப்பகுதியின் ஆழத்துக்குள் மூழ்கி மூழ்கி செல்கிறான். அங்கே எல்லாமே அசைவில்லாமல் காலமில்லாமல் இருக்கின்றன. அவன் அவள் வழியாக தன்னை உணர்கிறான். ஹரன் மைத்ரி. ஹரன் டைனமிக் ஆனவன். மைத்ரி அல்லது சக்தி ஸ்டேட்டிக் ஆனவள். ஒரு eternal dialectics அது அற்புதமான கவித்துவத்துடன் கிளைமாக்ஸில் சொல்லப்பட்டுள்ளது

ராஜ்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2022 11:31

கோவை புத்தகக் கண்காட்சியில் இன்னும் ஒரு நாள் இருப்பேன்…

கோவை புத்தகக் கண்காட்சியில் 255 எண் கொண்ட அரங்கு விஷ்ணுபுரம் பதிப்பகம். 25 ஜூலை 2022 , இன்றும்  மாலை 5 முதல் 7 மணி வரை விஷ்ணுபுரம் அரங்கில் இருப்பேன். இன்று ஊர் திரும்புகிறேன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2022 10:38

July 23, 2022

கோவை புத்தகக் கண்காட்சியில் நான்

கோவை புத்தகக் கண்காட்சியில் 255 எண் கொண்ட அரங்கு விஷ்ணுபுரம் பதிப்பகம். இன்று மாலை 5 முதல் 7 மணி வரை விஷ்ணுபுரம் அரங்கில் இருப்பேன்.

விஷ்ணுபுரம் பதிப்பகம்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2022 22:04

புதிய ஆலயங்கள்

மாயாபூர்

அன்புள்ள ஜெ

சமீபகாலமாக பல இடங்களில் அமைந்துள்ள Iskon கோவில்கள் செல்லும்போது கவனிக்கின்றேன். வருங்காலங்களில், இக்கோவில்கள் உலகளவில் இந்து கலாச்சாரத்தின் பிடிமானமாகவும், இந்து வழிபாட்டின் நவீன மையங்களாக அமையும் என்று தோன்றுகிறது.

அங்கு நான் முக்கியமாக கவனித்தது, இக்கோவில்கள் அமைந்திருக்கும் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறைகள், ஒற்றை வரியில் எளிமையான ‘ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’ மந்திர வழிபாடு, கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு ஜாதி வித்தியாசமில்லாமல், பக்தி உள்ள எவரும் அவ்வியக்கத்துடன் இணைந்து சேவை செய்ய அனுமதி.

பிர்லா மந்திர் கல்கத்தா

முக்கியமாக நாம் எவற்றையெல்லாம் நம் புராதனக் கோவில்களில் அரசு மற்றும் மக்களின் அக்கறையின்மையினால் இனி கடைபிடிக்கவே முடியாதோ என்று நினைப்பவையான, கோவிலின் வளாகத்தை துப்புரவாக வைத்திருத்தல், அர்ச்சனை, சிறப்பு தரிசனம் என்ற வகையில் பக்தியை வியாபாரப்படுத்தாமல் இருப்பது, கோவிலின் வாசலிலே பல கடைகளை வைத்து, வரும் பக்தர்களை அந்தக்கடைகளில் வாங்க கட்டாயப்படுத்துதல் போன்ற பல தொல்லைகள் iskon கோவில்களில் இல்லை.

அவர்களின் சிறு கடைகள் உள்ளே இருந்தாலும் அங்கு வாங்குவதற்காக எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை.

அவர்களின் பெரும்பாலான கோவில்களில் அமைந்துள்ள திருமண மண்டபங்கள் பக்தியுடன் கலாச்சாரங்களையும் வரும் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை வருகிறது.

சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்

 

சிலரிடம் இவற்றை நான் பகிர்ந்து கொண்ட போது, பலநாடுகளில் இக்கோவில்கள் மதமாற்றம் செய்கின்றனர் எனக்கூறினர்.

அதுவும் எனக்கு இவர்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாக தோன்றவில்லை. பல நாட்டவர்கள் விருப்பப்பட்டு தாமாக முன் வருவதாகவே தோன்றுகிறது.

இக்கோவில் மற்றும் இயக்கத்திற்கு பின் பக்தியைத்தான்டி எந்த வித எதிர்மறையான நோக்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இது பற்றிய உங்களின் கருத்து அறியவே இக்கடிதம்.

நன்றி!

இந்துமதி

புனே.

அக்‌ஷர்தாம், டெல்லி

அன்புள்ள இந்து,

நம்முடைய வழிபாட்டிடங்களையும் தொன்மையான ஆலயங்களையும் இரண்டாகப் பிரிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை தொடர்ந்து நான் எழுதி வருகிறேன். நம்முடைய வழிபாட்டிடங்கள் பலவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அன்றிருந்த போக்குவரத்து சூழல், ஆலயங்களுக்குள் எவர் நுழையலாம் எவர் நுழையக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் ஆகியவற்றை வைத்துப்பார்த்தால் மிகக்குறைவானவர்களே ஆலயங்களுக்குள் நுழைந்து வழிபடும்படி இருந்திருக்கிறது.

சென்ற ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவில் பரம்பனான் ஆலயத்துக்கு சென்றேன். உலகின் இரண்டாவது பெரிய விஷ்ணு ஆலயம் என்று சொல்லப்படும் பரம்பனான் ஆலயத்தொகையில எந்த ஆலயத்திலும் ஒரே சமயம் பத்து பேருக்கு மேல் நின்று வழிபட முடியாதபடித்தான் அதனுடைய அமைப்பு இருந்தது. ஆலயங்களின் கருவறை முகப்பு பகுதியைப் பார்த்தால் அது தெரியும். மிகுதியான நபர்கள் நின்று வழிபடும்படி அவை வடிவமைக்கப்படவில்லை. மிகுதியான பேர்கள் மூலவிக்கிரகத்தை ஒரே சமயம் பார்க்கும்படி அமைந்த ஆலயங்கள் இந்தியாவிலும் அனேகமாக எவையும் இல்லை. 

இன்று போக்குவரத்து பெருகிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக அண்மைக்காலத்தில் நடுத்தர வர்க்கம் கார்களை வாங்கத்தொடங்கிய பின்னர் ஆலயங்களில் கூட்டம் பலமடங்கு பெருகிவிட்டது. பொருளாதார வளர்ச்சி உருவாகும் தோறும் ஆலயங்களுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை மேலும் பெருகும் .ஆலயங்களின் கூட்டம் வருங்காலத்தில் இன்னும் சில மடங்காகும். இந்தியாவின் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டால் இது தொன்மையான ஆலயங்களின் அழிவுக்கே வழி வகுக்கும். 

இவ்வளவு திரளை எதிர்கொள்ளும் வசதிகள்  நமது ஆலயங்களில் இல்லை. இவ்வளவு பேர் உள்ளே இருந்தால் ஆலயத்தின் வெப்பநிலை மிகப்பெருகிவிடுகிறது. விளக்குகள் போன்றவற்றால் அந்த எண்ணிக்கை மேலும் பெருகுகிறது. அந்நிலையில் வெளியிலிருந்து காற்று உள்ளே வரும் பாதைகளை அமைக்க வேண்டியிருக்கிறது. அண்மைக்காலத்தில் நமது ஆலயங்களில் தீப்பாதுகாப்பு இருக்கிறதா என்ற ஆய்வுக்குப் பிறகு, பெரும்பாலான ஆலயங்கள் சிறப்பு நாட்களில் எந்த விபத்தையும் எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்ற முடிவுக்கு நிபுணர்கள்  வந்திருக்கிறார்கள்.மிகச்சிறு பகுதிக்குள் பலநூறு நெரித்து அடித்து நின்றிருக்கிறார்கள்.ஆலயக் கருவறைப்பகுதிக்குள் உள்ளே செல்லும் வழியும் வெளியே செல்லும் வழியும் குறுகியவை. அவற்றின் வழியாக ஒரே சமயம் இரண்டு பேருக்கு மேல் உள்ளே வரவோ வெளியே செல்லவோ இயலாது. 

இத்தனை பெருந்திரள் ஆலயங்களுக்குள் வரும்போது ஆலயம் அழியத்தொடங்குகிறது. சிற்பங்கள் சீரழிகின்றன. ஆலய வளாகங்களுக்குள் கழிப்பறைகள் கட்ட வேண்டியிருக்கிறது. வருங்காலத்தில் மேலும் மேலும் வசதிகள் தேவைப்படும். இப்போதே ஆலயங்களுக்குள் சக்கர நாற்காலிகளுக்கான வழி தனியாக அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. இத்தனை பேரை அனுமதிப்பதாக இருந்தால் அந்த வசதிகள்  கண்டிப்பாக தேவை என்று தான் நான் நினைப்பேன்.

ரணக்பூர், சமணக்கோயில்

ஆலயங்களுக்குள்ளே சிற்ப நெறிகள் ஆகம நெறிகள் அனைத்தையும் பறக்கவிட்டு குளிர்விப்பான்கள் அமைக்கப்படுகின்றன. ஒலிபெருக்கிகள் அமைக்கப்படுகின்றன. பெரும்பாலான இந்து ஆலயங்களில் இரும்புக்கம்பிகளால் பலவகையிலும் வளைக்கப்பட்டு துண்டாடப்பட்டு சிறைக்கொட்டடிகள் போலத் தோற்றமளிக்கின்றன. ஒரு ஆலயத்திற்கு இருக்கவேண்டிய அழகு ,அமைதி, சிற்ப ஒருமை எவையுமே இங்கு இந்தியாவில் மாபெரும் ஆலயங்கள் எதிலுமே இல்லை. 

உடுப்பி போன்ற ஆலயங்களைப்பார்த்தால் ஒரே சமயம் பத்து பேருக்கு மேல் வழிபடும்படி அவற்றின் கருவறை அமைப்பு இல்லை என்பதைப் பார்க்கலாம். சில ஆலயங்களில் தெய்வத்தை சில குறிப்பிட்ட கோணங்களில் பார்க்கும்படி மட்டுமே கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய சிற்பக் காரணங்கள், ஆகமக் காரணங்கள் உள்ளன.இன்றைய சூழல் அனைத்தையுமே இல்லாமல் ஆக்குகிறது. 

ஆலயங்கள் வெறும் கட்டிடங்கள் அல்ல. ஆலயங்கள் தங்கள் அளவிலேயே ஒருவகைச் சிற்ப அமைப்புகள். அந்தச் சிற்ப அமைப்புதான் அவற்றை ஆலயங்கள் ஆக்குகிறது. அது அழிந்தால் அவை வெறும் கட்டிடங்களே. ஆகம முறைப்படியான பூஜையும், சிற்ப சாஸ்திரப்படியான கட்டுமானமும் அமையாத ஆலயம் அந்த ஊருக்கே பழிசேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது

தமிழர்கள் விசித்திரமானவர்கள். நானறிந்தவரை தனிநபர் இல்லங்களுக்கு வாஸ்து இலக்கணமோ, வாஸ்து விதிகளோ இல்லை. வாஸ்து என்பது ஊர்களுக்கே உள்ளது. இல்லங்கள் அதன் பகுதிகள். ஆகவே பழைய ஊர்களில் இல்லங்கள் ஊரின் ஒட்டு மொத்த அமைப்புக்கு உகந்த முறையில் அமைந்திருக்குமே ஒழிய தனி இல்லமாக எந்த வாஸ்து இலக்கணப்படியும் அமைந்திருக்காது. கோட்டைக்கு வாஸ்து சாஸ்திரம் உண்டு, அரண்மனைக்கு உண்டு. ஆனால் நம்மவர் வீட்டுக்கு வாஸ்து பார்ப்பார்கள். வாஸ்து இருந்தே ஆகவேண்டிய ஆலயங்களில் வாஸ்துவை தூக்கி வீசுவார்கள். 

தமிழ்நாட்டில் இன்று தனிநபர் இல்லங்களுக்கு மாய்ந்து மாய்ந்து வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார்கள். அதைச் சொல்ல பல்லாயிரம் போலிகள் கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் வாஸ்து ஒரு அணு மாறினாலும் பிழை என்று சொல்லத்தக்க ஆலயங்களில் வாஸ்து எல்லா நெறிகளும் மீறப்படுகின்றன. ஆலயங்களுக்குள் தாறுமாறாக கான்கிரீட் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. வாஸ்துவின்படி கோபுர முகப்புதான் ஆலயத்தின் முகம். அதிலுள்ள சிற்பங்கள் எல்லாமே அந்த அடிப்படையில்தான் அமைந்துள்ளன. இன்று கோபுரமுகப்புக்கு வெளியே மழையில் கார் வந்து நிற்பதற்காக கான்க்ரீட் போர்டிகோக்கள் கட்டப்படுகின்றன. எவருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை. 

எனில் இத்தனை பேர் வழிபட வேண்டாமா என்ற கேள்வி இருக்கிறது. அவ்வாறு வழிபடுவதற்கு பிர்லா மந்திர் போல மிக வசதியான, சிற்ப அழகுமிக்க, நவீனக் கோவில்களை உருவாக்கலாம். அவற்றை கான்க்ரீட்டில் உருவாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆலயங்களை இடித்து இடித்து கட்டிக்கொண்டிருக்க முடியாது. ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை கான்க்ரீட் கட்டிடங்களை இடித்தாகவேண்டும். சலவைக்கல்லில், கருங்கல்லில் கட்டலாம். இன்றைய தொழில்நுட்பத்தில் மிகச் செலவு குறைவாகவே அவற்றை செய்யமுடியும். சிற்ப வேலையையே அழகுறச்செய்ய முடியும். 

மறுபக்கம், தொன்மையான ஆலயங்களில் அவற்றின் வருகையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு உரிய வழிகளை முன்னரே ஒருமுறை எழுதியிருந்தேன். (அன்று அதற்கு எதிர்வினை ஆற்றியவர்களில் நாத்திகர்களுக்கு ஆலயம் தேவையில்லை என எண்ணம். ஆத்திகர்கள் பலருக்கு ஆலய வழிபாடு, நெறிகள் பற்றி ஒன்றுமே தெரியாது. கருத்து சொல்ல ஒன்றுமே தெரிந்திருக்கவேண்டியதில்லை என்பது நவீன இணைய ஊடக வழக்கம்) 

ஆலயங்களில் நாம் கட்டற்ற திரளை இனிமேலும் அனுமதிக்க முடியாது. முதலில் இத்தகைய எண்ணங்களைக்கேட்கும்போது எல்லாமே ஒவ்வாமை அளிக்கின்றன ஆனால் வேறுவழியில்லை என்பதைக்கொஞ்சம் யோசித்தால் புரிந்துகொள்ள முடியும். (முன்னரே சொல்வதை அலட்சியம் செய்தால் பெரிய விபத்துக்கள் நிகழ்ந்து, அவற்றில் இருந்து கற்றுக்கொண்டு வேறு வழியே இல்லாமல் அந்த முடிவுகளுக்கே வந்து சேரவேண்டியிருக்கும்.)

நம் ஆலயங்களில் ஒரு நாளைக்கு இவ்வளவு பேருக்குமேல் நுழையக்கூடாதென்று நெறி அமைக்கவேண்டும். இப்போதே இந்தியாவின் முதன்மையான காட்டு பகுதிகளுக்குள், சூழியல் பகுதிகளுக்குள் ஒருநாளைக்கு எத்தனை பேர் நுழையலாம் என்பது அறுதியாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஓர் ஆலயத்தில் ஒரு நாள் காலை மாலை என இரு பொழுதிலாக அதிகபட்சம் ஐந்நூறு பேர் அனுமதிக்கப்படலாம். அவர்களுக்கு உயர்ந்த கட்டணம் வசூலிக்கப்படலாம். கட்டணம் அளிக்கும் வசதி இல்லாதவர்களுக்கு அவற்றில் சலுகை அளிக்கலாம். அவ்வாறு அறநிலையத்துறையின் கீழிருக்கும் அனைத்து கோயில்களுக்கும் முன்பதிவு திட்டம் வருமெனில் ஒரு கோயிலில் பெரும்கூட்டம் முண்டியடிக்க மிக அருகிலேயே இன்னொரு ஆலயம் ஓய்ந்துகிடப்பது நிகழாது. எல்லா ஆலயங்களிலும் சீராக மக்கள் செல்வார்கள் என்றால் இன்றிருக்கும் நெரிசலில் பெரும்பகுதி இல்லாமல் ஆகிவிடும். புதிய ஆலயங்களை அமைப்போமெனில் வழிபாடு இன்னும் வசதியானதாக நவீனமானதாக ஆகிவிடும். 

இஸ்கான், பெங்களூர்

பலருக்கு இன்னும் கூட உண்மை நிலவரம் புரியவில்லை. ஆலயங்களுக்கு இன்று சென்று கொண்டிருப்பவர்கள் நடுத்தர வயது தாண்டியவர்கள். பல்வேறு வகையான குழந்தைப்பருவ நினைவுகளும் அதற்குரிய உளநிலைகளும் கொண்டவர்கள். இளைய தலைமுறையினர் ஆலயங்களுக்குச் செல்வது மிகக்குறைந்து வருகிறது .ஏனெனில் ஆலய வழிபாடென்பது பெரும் துன்பம் தருவதாக மாறியிருக்கிறது. ஆறு ஏழு மணி நேரம்  நீண்ட வரிசைகளில் காத்து நின்றிருக்கவேண்டியிருக்கிறது. சிறுநீர் கழிக்க முடியாது .வியர்வை வழிந்து கொட்டும் .அதன் நடுவே பெரிய மனிதர்கள் தனி வழியே சென்று கொண்டும் வந்துகொண்டும் இருப்பதை பார்க்க நேரிடும். வழிபடுமிடத்தில் அரைக்கணம் நிற்க முடியாது செல்க செல்க என்று உந்துதல், வசைகள். பல ஆலயங்களில்  போலீஸ்காரர்கள் தடியாலடிக்கிறார்கள். கையால் பிடித்து உந்திவிடுகிறார்கள். ஓர் ஆலயத்தை உளநிறைவுடன் சென்று வணங்கி வழிபட்டு மீள்வதென்பது முதன்மையான ஆலயங்களில் பெரும்பாலும் எங்குமே இயல்வதாக இல்லை.  

அத்துடன் நம் ஆலயங்களில் இன்று எந்த நெறிகளும் பேணப்படுவதில்ல்லை. பிரசாதம் வாங்கிய பிறகு தொன்னைகளை அங்கேயே வீசிச் செல்கிறார்கள். சந்தனத்தையும் குங்குமத்தையும் தூண்களில் தேய்க்கிறார்கள். எண்ணெயைக்கண்ட இடத்தில் வீசுகிறார்கள். இருண்ட அழுக்கான இடங்களாக நமது ஆலயங்கள் மாறிவிட்டிருக்கின்றன. அவற்றை சிறப்புற நம்மால் பேணமுடியவில்லை. நவீன ஆலயங்களை திட்டமிட்டு வடிவமைக்கலாம். அங்கே நெறிகளை உருவாக்கி கறாராகப் பேணலாம். பிர்லா ஆலயங்கள், இஸ்கான் ஆலயங்கள் மிக நேர்த்தியானவை. மிகச்சுத்தமானவை.

முதன்மைக் கேள்வி என்பது இறை சாந்நியத்தியம் பற்றியது. தொன்மையான ஆலயங்களில் அந்த இறைதிகழ்வு இருப்பதனால் அங்கே பெருங்கூட்டம் வருகிறதென்றும், புதிய ஆலயங்களில் அவ்வாறு இறைதிகழ்வ இல்லை என்றும் ஒரு கூற்று உண்டு. ஒன்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.பெரும்பாலும் புகழ்பெற்ற ஆலயங்கள் ஊடகங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக புகழ் பெற்றிருப்பவையே ஒழிய, அவ்வாறு இறைதிகழ்வால் புகழ் பெற்றவை அல்ல. அதேபோன்று எவரும் அறியாது விரிந்து கிடக்கும் ஆலயங்கள் பலவும் இறைதிகழ்வு இல்லாதவையும் அல்ல. 

இதை தனிப்பட்ட முறையில் உறுதியாக என்னால் கூற முடியும்.  ஓர் உதாரணம் தஞ்சையில் திருவெண்காடு என்னும் ஊரில் உள்ள ஆலயம். அனேகமாக எவரையுமே அங்கு நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் வழிபாட்டு வழக்கம் உள்ளவர், இறையுணர்வு உள்ளவர், அதைக் கடந்த நுண்ணுணர்வு உள்ளவர் அந்த ஆலயம் எத்தனை முதன்மையானது ,எத்தனை இறைதகழ்வுள்ளது என்பதை அங்கு சென்றதுமே உணர முடியும். அவ்வாறு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் கைவிடப்பட்டுக்கிடக்கின்றன. 

ஆலயத்தின் இறைதிகழ்வென்பது அதை நிறுவியபோதே அங்கு  வந்துவிடுவதல்ல. அந்த ஆலயத்தின் ஒட்டுமொத்த சிற்ப அமைப்பு அங்கு இறைதிகழ்வுக்கான முதன்மைக்காரணம். அதற்கப்பால் அது முறையாக இறைநிறுவுதல் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பது .மூன்றாவதாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முறை தவறாது அங்கு இறைவழிபாடு நிகழ்ந்தாகவேண்டும் ,அதற்குரிய அனைத்து சடங்குகளும் முறையாகச் செய்யப்பட்டாக வேண்டும் என்பது. சரியாக இறைச்சடங்கும் மறைச்சடங்கும் செய்யப்படும் ஆலயங்களில் இறைதிகழ்வு கண்டிப்பாக இருக்கும். 

இஸ்கான், அஹமதாபாத்

இன்று ஒழிந்து கிடக்கும் பெரும் ஆலயங்களையும் அவ்வாறு மீண்டும் வலுவாக இறைநிறுவுகை செய்ய முடியும்.புதிய ஆலயங்களில் அவற்றுக்கான சடங்குகளையும் முறைமைகளையும் சரியாக செய்வோமெனில் அவை இறைதிகழ்வுக்குரிய இடங்களே .அத்தகைய எத்தனையோ புதிய ஆலயங்கள் தமிழகத்தில் இன்று உள்ளன. ஆகவே புதிய ஆலயங்களை வெறும் சுற்றுலாத்தளங்களாகப் பார்க்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் அவை இன்று நாம் வணங்கும் பழைய ஆலயங்களைப்போலவே முதன்மை பெறக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

ஆலயங்களில் வழிபட வருபவர்களுக்கு நடத்தை நெறிகள் வகுக்கப்படவேண்டும். தூய்மை நெறிகள் உருவாக்கப்படவேண்டும். முழுமையாகவே ஆலயம் அமைதியும் தூய்மையும் கொண்டதாக இருக்கவேண்டும். அவை இன்றைய பிர்லா மந்திர் போன்ற பேராலயங்களில் காணக்கிடைக்கின்றன. இஸ்கானின் பெரும்பாலான ஆலயங்கள் மிக வலுவான இறைதிகழ்வு கொண்டவை. ஏனெனில் மிகத்தீவிரமான இறைநம்பிக்கை கொண்டவர்களால் அணுவிடை தளராத இறைச்சடங்குகளும் மறைச்சடங்குகளும் செய்யப்படுபவை அவை. 

இஸ்கான் பற்றிய அவதூறுகளில் பெரும்பாலானவை அவர்களிடமிருக்கும் அந்த தீவிரத்தன்மையைக்கண்டு அஞ்சுபவர்களால் உருவாக்கப்படுபவை. அவர்களுடைய தீவிரத்தன்மை பழமைவாதப் பார்வை கொண்டதென்று சிலர் சொல்லலாம் .பக்தியை மட்டுமே முன்னிறுத்துவது என்பதனால் எனக்கு பெரும்பாலும் இஸ்கான ஏற்பு இல்லாததுதான. ஆனால் ஒரு மத மரபெனும் முறையில் அந்த தீவிரமே அவர்களுடைய ஆலயங்களை இறைதிகழ்வு கொண்டதாக ஆக்குகிறது. 

அவர்கள் மதம் மாற்றுகிறார்கள்  என்பதோ, இன்னும் பிறவோ அவதூறுகளைக் கூறுபவர் யார்? எந்த ஆதாரங்களை முன் வைக்கிறார்கள்? அமெரிக்கா போன்று அடிப்படையில் கிறிஸ்தவ மனநிலை கொண்ட தேசங்களில் அவர்கள்  மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து உருவாக்கி, அவர்களின் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைக்க நினைக்கிறார்கள். அது இயல்பானதே. இந்தியாவில் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கு மேலாக அவர்கள் மிகத்தீவிரமாக இயங்கி வருகிறார்கள். அரசியல்வாதிகள் உருவாக்கும் சில வம்புகள் அல்லாமல் அவர்கள் மேல் எந்த குற்றச்சாட்டும் உருவானதில்லை.

மத மாற்றம் என்றால் என்ன? தங்களுடைய தரப்பை முன்வைக்க அதை பிறர் ஏற்கும்படி செய்ய  எந்த மத நம்பிக்கையாளனுக்கும் உரிமை உண்டு. இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அந்த உரிமை உண்டு என்று நான் வலியுறுத்திக் கூறிவருகிறேன். மதமாற்றம் செய்யும்பொருட்டு பொய்ப்பிரச்சாரம் செய்வதோ, கட்டாயப்படுத்துவதோ, ஏமாற்றுவதோ, அரசியலில் ஈடுபடுவதோ பிழை. ஆனால் அப்பிழைக்காகக்கூட மதமாற்ற உரிமை தடுக்கப்படலாகாது. அப்பிழை சுட்டிக்காட்டப்படலாம். அதைச்சொல்லி மதமாற்றத்தை தடைசெய்யலாம் என்றால் மதஉரிமையை அரசின் கையில் அளிப்பதாகவே பொருள்படும். அது தனிமனிதனின் ஆன்மிகச்சுதந்திரம் பறிக்கப்படுவதே. நான் எனக்கு கிறிஸ்தவமோ இஸ்லாமோ மீட்பின் வழி என தெரிந்தால் அரைநால்கூட தயங்கமாட்டேன், மதம் மாறிவிடுவேன். அது என் உரிமை. அதில் அரசோ சமூகமோ தலையிடக்கூடாது.

அந்த உரிமையை இஸ்கான்காரர்களுக்கு மட்டும் மறுப்பதற்கு எவருக்கு அதிகாரம் உள்ளது? மதமாற்றம் இஸ்கான்காரர்கள் செய்தால் மட்டும் அது தீங்காகிறதா என்ன? மதமாற்றத்திற்கு அவர்கள் ஏதேனும் மோசடிகளைச் செய்கிறார்களா? மந்திர தந்திர வித்தைகளை பிரச்சாரம் செய்கிறார்களா? அல்லது பொய்களையோ சூழ்ச்சிகளையோ உருவாக்குகிறார்களா? எவ்வகையிலேனும் எந்த தேசத்திலேனும் அரசியலில் ஈடுபடுகிறார்களா? இல்லாதபோது அந்தக்குற்றச்சாட்டுக்கு என்ன பொருள்? 

நமது எதிர்கால ஆலயங்கள் பிர்லா மந்திர்களைப்போல இஸ்கான் ஆலயங்களைப்போல அமையவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.  அவ்வாறு அமையும் என்று நம்புகிறேன். 

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2022 11:37

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.