Jeyamohan's Blog, page 737

July 31, 2022

இந்து என்னும் பெயர்

இந்து என உணர்தல்

அன்புள்ள ஜெ

பொதுவான எல்லா உரையாடல்களிலும் தங்களை நாத்திகர் என்று சொல்லிக்கொள்பவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன், அதற்கே உரிய சிரிப்புடன், “இந்து என்ற சொல் எந்த நூலிலும் இல்லை தெரியுமா? வேதங்களோ கீதையோ தேவாரமோ திருவாசகமோ அதைச் சொல்லவில்லை” என்பார்கள். திரும்பத் திரும்ப அவர்களிடம் விளக்க முயல்கிறேன். நீங்கள் ஒரு சுருக்கமான விளக்கம் அளித்தால் இதே கேள்வி கொண்ட பலருக்குச் சென்று சேரும்.

சாந்தகுமார், மும்பை

***

அன்புள்ள சாந்தகுமார்

அவ்வளவு சீக்கிரம் சென்று சேராது. அறியாமை என்பது ஒரு வகை ஓடு. மிக வலுவானது. அறியாமை சற்றேனும் அகலும்போதே தனக்கு தெரியாதோ என்னும் ஐயம் எழுகிறது. அதன்பின்னரே எதையாவது கவனிப்பார்கள். நம்மூர் நாத்திகர்கள் பொதுவாக நாத்திக வேடம் போடுவதே எதைப்பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் வசதிக்காகத்தான்.

இந்து என்று அல்ல எந்த மதத்தின் பெயரும் அந்த மதம் உருவாகிய காலகட்டத்தில்  இருக்காது. எல்லா பெயர்களும் அந்த மதங்களுக்கு காலப்போக்கில் அமைந்தவையே. ஒரு தனிநபர் அல்லது தனிநூலில் இருந்து உருவான மதங்களுக்கு இயல்பாக அந்த தனிநபர் அல்லது தனிநூலின் பெயரே அமைந்துவிடும். பௌத்தம், கிறிஸ்தவம்போல.

சிலசமயம் உருவகப்பெயர் காலப்போக்கில் அமையும். அவர்கள் தங்களை வேறு பெயரில் சொல்லிக் கொள்வார்கள். சீடர்கள் என்று பொருள் கொண்ட சிக்கா (சிஷ்யா) என்னும் சொல் காலப்போக்கில் மருவி சீக்கியர் என்னும் பெயர் ஆகியது. அவர்கள் தங்கள் மதத்தை கல்ஸா (பாதை) என்றே அழைக்கிறார்கள்.

சில சமயம் மதங்களுக்கு இடம் சார்ந்து, காலம் சார்ந்து பெயர் மாறுபடும். ஜினர் (எய்தியவர்) என்னும் சொல்லில் இருந்து ஜைனம் என்னும் சொல் பிறந்தது. ஆனால் தமிழகத்தில் அது சமணம் என அழைக்கப்படுகிறது (சிரமணம் என்னும் சொல்லின் மரூவு அது. சிரமணம் என்றால் நோன்பு, உழைப்பு என்று பொருள்).

இப்படித்தான் மதங்களின் பெயர்கள் அமைகின்றனவே ஒழிய மதங்களுக்கு எவரும் மடியில் அமர்த்திப் பெயர் சூட்டுவதில்லை. இதையெல்லாம் கொஞ்சம் வரலாற்றுணர்வுடன் இவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். 

உலகிலுள்ள மதங்கள் இருவகை. முதல்வகை, தீர்க்கதரிசன மதங்கள் ஒரு தீர்க்கதரிசியில் அல்லது இறைத்தூதரில் இருந்து தொடங்குபவை. சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம். இரண்டாம் வகை, பரிணாம மதங்கள். இவை பழங்குடி வாழ்க்கையில் தனித்தனி வழிபாடுகளாகவும் சடங்குகளாலகவும் தோன்றி, காலப்போக்கில் குறுமதங்களாக வளர்ந்து, தத்துவ அடிப்படையை உருவாக்கிக்கொண்டு ஒருங்கிணைந்து, பெருமதமாக ஆனவை. இரண்டாம் வகை மதம் இந்துமதம்.

கிரேக்க, ரோமானிய மதங்கள் அத்தகைய பரிணாம மதங்கள். ஐரோப்பிய பாகன் மதங்கள், ஆப்ரிக்க மதங்கள், ஜப்பானிய ஷிண்டோ மதம், சீனத்து தாவோ மதம் அத்தகையவை. இந்தியாவிலேயே திபெத்தில் போன் என்னும் மதம் அத்தகையது. அவை உருவாகி பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அவற்றுக்கு பெயர் அமைகிறது. அவை வளருந்தோறும் பெயர் மாறுபடுகிறது.

இந்துமதத்தின் தொடக்கம் பழங்குடி வாழ்க்கையில் உள்ளது. நாமறியாத வரலாறற்ற காலகட்டத்தில். இந்தியாவின் குகை ஓவியங்களிலும் பாறைச்செதுக்குகளிலும் அதன் தொடக்ககால சின்னங்கள் உள்ளன. இடக்கல் பாறைக்குடைவு ஓவியங்கள் முதல் பிம்பேட்கா குகை ஓவியங்கள் வரை உதாரணம். பின்னர் அவை எளிய வழிபாட்டுமுறைகளாயின. குறுமதங்கள் ஆயின.

வரலாற்றை நாம் அறியத் தொடங்கும் காலகட்டத்திலேயே இந்தியாவின் குறுமதங்கள் ஒன்றாக இணையத் தொடங்கிவிட்டன. அந்த தொகுப்புக்காலமே  இந்துமதத்தின் தொடக்கம். அவை ஆறுமதங்களும் ஆறு தரிசனங்களும் ஆக தொகுக்கப்பட்டன. (தரிசனங்கள் வழிபாட்டுமுறை இல்லாத மதங்கள். அவையும் பழங்காலத்தில் மதங்கள் என்றே சொல்லப்பட்டன) பின்னர் தத்துவ விவாதங்கள் உருவாயின. அவை மூன்று தத்துவமுறைமைகள் என தொகுக்கப்பட்டன.

ஆகவே வேதங்கள், ஆறுமதங்கள் (சைவம், வைணவம், சாக்தம்,காணபத்யம், கௌமாரம், சௌரம்) ஆறு தரிசனங்கள் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம்) மூன்று தத்துவமுறைமைகள் (உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை) ஆகியவை அடங்கியதே இந்துமதத்தின் முதன்மையான அடிப்படை வடிவம். இது மிக நீண்ட ஆன்மிக- தத்துவ உரையாடல் வழியாக உருவாகி வந்த அமைப்பு. இது உருவாகி இரண்டாயிரத்துக்கு மேல் ஆண்டுகள் ஆகிறது.

இந்த தொகுப்புத்தன்மை தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆறுமதங்கள் காலப்போக்கில் சைவம், வைணவம், சாக்தம் என மூன்றாகக் குறைந்தன. சௌரம் வைணவத்தில் இணைந்தது. கௌமாரமும் காணபத்யமும் சைவத்தில் இணைந்தன. பின்னர் சாக்தமும் சைவத்தில் இணைந்தது. சைவமும் வைணவமும் எஞ்சின. இந்த இணைவுக்குரிய கதைகளே புராணங்கள் ஆயின.

சைவமும் வைணவமும் பெருமதங்கள் ஆயின. அவற்றில் பல புதிய வழிபாட்டுப்பிரிவுகள் வந்து இணைந்துகொண்டே இருந்தன.அந்த புதிய வழிபாட்டுப் பிரிவுகளை இணைக்கும் பொருட்டு ஆகமங்கள் உருவாகிக்கொண்டே இருந்தன. சைவத்திலும் வைணவத்திலும் உள்ள பல குறுந்தெய்வங்கள் அவ்வாறு இணைந்தவை. அவற்றைப் பற்றி டி.டி.கோசாம்பி முதல் சுவீரா ஜெயஸ்வால் வரை இடதுசாரி வரலாற்றாசிரியர்களே விரிவாக எழுதியுள்ளனர்

அதேபோல, உள்ளிருந்து சடங்கு சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் புதிய பிரிவுகள் தோன்றிக்கொண்டே இருந்தன. அத்வைதமும், அதை மறுத்து உருவான விசிஷ்டாத்வைதமும் துவைதமும் உதாரணங்கள். அண்மையில்கூட ஷிர்டி சாய்பாபா வழிபாடு இந்துமதத்திற்குள் உருவாகி தனிப்பிரிவாக மிக வலுவாக நீடிக்கிறது. அது இஸ்லாமிய மரபிலிருந்து கிளைத்தது. இன்னும் அதுபோல பல மரபுகள் உருவாகலாம்.

பொயு ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஆறுமதங்களையும் ஒற்றை அமைப்பாக ஆக்கினார். அதுவே இன்றைய இந்துமதத்தின் அடிப்படை. ஷன்மத சம்கிரகம் (ஆறுமதத் தொகுப்பு) செய்த சங்கரரின் வழிவந்தவர்களால் மேலும் மேலும் வழிபாடுகள் தொகுக்கப்பட்டன. பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் அதுவே இந்து மதம் என பெயர் பெற்றது. இன்றும் நீடிக்கிறது.

இந்த பெருங்கட்டமைப்புக்குள் தங்கள் தனித்தன்மையை தக்கவைத்துக் கொள்ளும் தனிமரபுகள் பல உள்ளன. ஒன்றுடன் ஒன்று முரண்படும் பல தரப்புகள் உள்ளன. அந்த சுதந்திரத்தை இந்த மரபு அளிக்கிறது. வழிபாட்டு மரபுகளும் வழிபாட்டை நிராகரிக்கும் அத்வைதமும் இதற்குள் உண்டு. மங்கலச்சடங்குகள் மட்டுமே கொண்ட வைணவமும் சரி, எல்லாவகையான எதிர்மறைச் சடங்குகளும் கொண்ட வாமமார்க்க பூசைகளும் சரி இதற்குள் அமைபவைதான்.

இந்து மதம் என்பது இன்று, இவ்வாறு ஒரு வரலாற்றுப்பரிணாமத்தின் விளைவாக உருவாகி வந்திருக்கும் ஒரு மெய்ஞானமரபுக்கு நாம் அளிக்கும் பெயர். நூறாண்டுகளுக்கு பின் இது இன்னும் மாறுபடலாம், புதிய பெயர் சூட்டப்படலாம். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் முற்றிலும் புதிய பெயரில் இது நீடிக்கலாம். இது ஒன்றும் பெயர் சூட்டி பதிவுசெய்யப்பட்ட லிமிட்டட் கம்பெனி அல்ல.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2022 11:35

ம.தி. பானு கவி, ஒரு காவிய வாழ்க்கை

தன் குடும்பத்தை விட்டு காசி செல்கிறார் ஒருவர். ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் அவர் திரும்பி வரவில்லை என்றால் துறவியாக கருதப்படுவார். அவர் ஒருநாள் பிந்திவிடுகிறது. ஊரைவிட்டு நீங்கி துறவி ஆகிறார். அவர் மனைவி ஏங்கி உயிரிழக்க மகன் தந்தையை தேடி கிளம்புகிறான். ஒரு மகத்தான நாவலுக்கான கரு. ஆனால் இது ம. தி. பானுகவியின் வாழ்க்கை

ம. தி. பானு கவி 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2022 11:34

குடவாயில், கடிதங்கள்

குடவாயில் பாலசுப்ரமணியம்

 குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் விக்கி

 

அன்புள்ள ஜெ

குடவாயில் பாலசுப்ரமணியம் பற்றிய தமிழ் விக்கி பதிவு துல்லியமாக இருந்தது. அவருடைய பங்களிப்பை மிக விரிவாகவும் கச்சிதமாகவும் பதிவுசெய்த அக்கட்டுரைதான் இனி காலந்தோறும் அவரைப் பற்றிய எல்லா பேச்சுகளுக்கும் அடிப்படையாக அமையவிருக்கிறது. மிகமிக அற்புதமான கட்டுரை. ஒரு வரி கூடுதலோ குறைவோ இல்லை.

நன்றி

செ. குமரவேல்

***

அன்புள்ள ஜெ

குடவாயில் பாலசுப்ரமணியம் பற்றிய கட்டுரை தமிழ் விக்கியில் மிகச்செறிவானது. முழுமையான கட்டுரை. நான் அவர் ஆலயங்களைப் பற்றி எழுதியிருக்கிறார், அவ்வளவுதான் என்னும் எண்ணத்தில் இருந்தேன். அது வரலாற்றெழுத்தின் மூன்றாவது காலகட்ட எழுத்து என்றும், அது நுண்வரலாறு என்றும் தெரிந்துகொண்டது மிகப்பெரிய தொடக்கம். அந்த குறிப்பிலேயே நுண்வரலாறு என்பது என்ன என்பதும் தெளிவாக இருந்தது. கல்லூரிகளில் பாடமாக அமையவேண்டிய கட்டுரை அது

ராஜ்குமார்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2022 11:32

சகா, அமெரிக்கத் தலைமுறை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 

நலம். உங்களிடம், அமெரிக்கப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு எப்படித் தமிழ் கற்றுக்கொடுப்பது என்று கேட்டார்கள்.  ஆஸ்டின் இல்லத்தில் நீங்கள் தங்கியிருந்தபொழுது, உங்களையும் அருண்மொழி  நங்கை அவர்களையும் பார்க்க வந்த  நண்பர்கள், சகா, தமிழ் பேசுவதையும், அவன் பண்பாக அவர்களிடம் நடந்துகொண்டதையும் பார்த்து, இதை எப்படிச் சாத்தியப்படுத்தினீர்கள் என்று கேட்டார்கள். எதற்கும் இப்படித்தான் என்று புத்தகம் போடமுடியாது என்பது எனது எண்ணம். ஒரு framework கொடுக்கலாம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று நாம் முடிந்ததைச் செய்யலாம், தோழனாக தோள் கொடுக்கலாம். பதில் என்று இல்லாமல், சகாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி நண்பர்களுக்குப் பகிர்ந்தேன். இது, அமெரிக்கக் குழந்தைகள் கட்டுரை வருவதற்கு முன்னரே எழுதப்பட்டது.  நண்பர்கள், தங்கள் கட்டுரையையும் வாசித்துவிட்டு, நீங்கள் சொல்லும் அந்த பத்து சதக் குழந்தைகளில், சகாவும் ஒருவன் என்றார்கள். ஸ்ரேயா சந்திரனும், மேகனாவும் அந்த பத்து சதத்தில் உள்ளவர்கள் என்றார்கள்.  அவன் எனக்கும் ராதாவுக்கும் மகன் மட்டுமல்ல. நாங்கள் எடுத்திருக்கும் இலக்கியப் பயணத்திற்கு  உறுதுணையாக நிற்பவன்.  ராதாவும் சகாவும் , நமது அமெரிக்கக் குழந்தைகள் கட்டுரையை மொழியாக்கம் செய்யும் பணியில் உள்ளனர். இது எழுதும் சமயம் முதல் பாகத்தை முடித்து விட்டிருக்கிறார்கள். சகா, mainereview எனும் பத்திரிகையில் staff reader வேலையில் இருக்கிறான். அந்தப் பத்திரிகைக்கு வரும் கதைகளை வாசித்து தரம் பிரித்தல் அவனது அன்றாட வேலை.   ஒரு வளர்ந்துவிட்ட அமெரிக்க குழந்தையை மேலும் பல நண்பர்களும் அறிந்துகொள்ள எனது கட்டுரையை இங்கே பகிர்கிறேன்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

***

அன்புள்ள சௌந்தர்

சகா நான் முன்னுதாரணமாகக் கொள்ளும் அமெரிக்கத் தமிழ் இளைஞன். அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்கனாகவே ஆகிவிட்டவர். ஆனால் தமிழ் மரபு, தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டவர். தமிழர், இந்தியர் என்பதை தாழ்வுணர்ச்சியாகக் கொண்டு அதை மறைக்க முயல்வதில்லை, அதை பொய்யான உயர்வுணர்ச்சியாக ஆக்கிக்கொள்ளவுமில்லை. இயல்பாக இருக்கிறார். கி.ரா.நூலின் மொழியாக்கத்தில் அவருடைய பங்களிப்புதான் இன்று மிகமிகத் தேவையாகும் விஷயம். நம் பண்பாட்டை, இலக்கியத்தை அமெரிக்க ஆங்கிலத்துக்கு கொண்டுசெல்லும் மொழியாக்கநிபுணர்கள் நமக்குத்தேவை.நான் எதிர்பார்க்கும் எதிர்கால தமிழ் அமெரிக்கக் குழந்தைகள் அப்படி இருக்கவேண்டும். அவர்களால்தான் நாம் உலக அரங்குக்குச் செல்லவேண்டும்

ஜெ

***

அனைவரின் நல்வாழ்த்துக்களுடன்

ஆஸ்டின் சௌந்தர்

வருடாந்திர ஊர்ப்பயணம் ஒன்றின் பொழுது, குலதெய்வக் கோவில் சென்று குடும்பமாக கும்பிட்டோம். எனது சகோதரன், அது சமயம் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என் மகனை, தம்பி என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்டார்.  நான் மருத்தவனாகி, புற்றுநோய் இல்லாமல் ஆக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் என்றான். தனது இரண்டாம் வகுப்பிலிருந்து புத்தகமாக வாசித்துத் தள்ளும் அவன், Barnes & Noble- புத்தகக் கடையில், மனித உடலின் பாகங்களை விளக்கும் புத்தகம் ஒன்றை வாங்கச் சொல்லிக் கேட்டான். வருங்கால டாக்டருக்கு, 90 டாலர்கள் மதிப்புள்ள அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொடுக்க, தகப்பனாக எனக்கு எந்த யோசனையும் இருக்கவில்லை. பத்து / பதினொன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது, அவனது நண்பன் ஒருவன் இவனுக்கு போன் செய்து பௌதிகத்திலும், வேதியியலிலும் சந்தேகங்கள் கேட்பான். பள்ளியில் படிக்கும்பொழுது கல்லூரி கல்லூரியாக சென்று, எங்கு படிக்கலாம் என்று உலா வரும் காலத்தில், UT Dallas-ல், ஐந்து வயதில் இருந்தே தான் மருத்துவன் ஆகவேண்டும் என்று சொல்லும் மாணவர்களுக்கான கல்லூரி இது என்றார் விளக்கங்கள் சொன்ன விரிவுரையாளர் ஒருவர். கனவுகளுடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்த பெற்றோர்களின் கூட்டத்தில். நானும், ராதாவும், நம்ம பையனை பற்றி அப்படியே சொல்கிறார் என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் முன்னரே, எந்தக் கல்லூரி என்று குழந்தைகளுக்குத் தெரிந்துவிடும். சகாவிற்கு, UT Dallas-ல் முழு உதவித்தொகையுடன் படிக்க இடம் கிடைத்தது. வருடத்திற்கு எனக்கு பத்தாயிரம் டாலர்களே செலவு. எதற்கு under graduate-கெல்லாம் ஐம்பதாயிரம் அறுபதாயிரம் டாலர்கள் செலவு செய்வது ஸ்டேன்ஃபோர்ட் போன்ற கல்லூரிகளில் படிக்கவேண்டும் என்று அதுபோன்ற கல்லூரிகளுக்கு அப்பளை செய்யவேண்டாம் என்று பொருளாதர ரீதியில் பேசி என்னை கன்வின்ஸ் செய்தான். இவனிடம் சந்தேகம் கேட்கும் பள்ளி நண்பன் , ஸ்டேன்ஃபோர்ட் கிடைத்து சென்றான்.

ஐந்தாம் / ஆறாம் வகுப்பிலிருந்து அவனுடன் ஒன்றாக படித்த நண்பர்கள் படைசூழ, UT Dallas-ற்கு சென்று ஒரு வருடம் BioTechnology படித்தான். வருட விடுமுறையில் வந்தவன், நோயாளியின் நிலையில் நின்று விடும் தனது மனநிலைக்கு மருத்தவப் படிப்பு ஒத்துவராது என்று முடிவு செய்திருந்தான். அப்புறம் வீட்டிலிருந்தபடியே அருகில் உள்ள கல்லூரிக்கு சென்று BBA Finance படித்து பட்டம் வாங்கினான்.

இரண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது, Feeling என்றால் என்ன என்று கேட்டதற்கு அவ்வளவு அழகாக பதில் சொன்னான். Photosynthesis பற்றிக் கேட்க, அதற்கும் ஒரு தெளிவான பதில். Costco-வில், ‘I Can Read A Book’ என்ற புத்தகம் வாங்கிக்கொடுத்தோம். அது மட்டுமே நாங்கள் வாசிக்க, அவனும் எழுத்துக்கூட்டி வாசித்தான். பிறகு வந்த வார நாட்களில் பத்து அல்லது பதின்மூன்று புத்தகங்கள் நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுக்கவேண்டியதாகியது. Grand Canyon சென்று சூரியோதயம் பார்த்து வந்ததை , கனடாவில் சூரியோதயம் என்று படம்போட்டு மூன்று வரிகள் எழுதி அவன் வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தான்.  ஐந்தாம் வகுப்பில் வருடம் 200 புத்தகங்களுக்கு மேல் வாசிக்கும் முதல் மூன்று மாணவர்களில் ஒருவனாக இருப்பான்.

அறிவியலில் Student of the Month என்று ஏழாம் வகுப்பில் படிக்கும்பொழுது அறிவிப்பு வர,  நானும் ராதாவும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டோம். அரங்கத்தில் பார்த்த அவனது ஆங்கில ஆசிரியை எங்களை நோக்கி வந்தார். இப்பொழுது தெரிகிறது அவனுக்கு அந்த சிரிப்பு யாரிடமிருந்து வந்தது என்று எனக்கு ஐஸ் வைத்துவிட்டு, “உங்கள் மகனின் ஆங்கில பேப்பர் வந்தால், நான், ஆவலுடன் படிப்பேன்’ என்றார். அவன் கலிஃபோர்னியாவை மிஸ் பண்ணுவதாக எழுதிய கவிதை நன்றாக இருந்தது என்றார்.

அப்பொழுதெல்லாம், வீட்டில் எல்லோருக்கும் ஒரே கணினிதான். அவனது டைரக்டரியில் சென்று அவன் எழுதிவைத்திருந்ததையெல்லாம் வாசித்துப் பார்த்தேன். Bullying பற்றி அவன் எழுதியிருந்த கட்டுரை என்னை உருக்கிவிட்டது. Bullying-ல் ஈடுபடுவது மட்டுமல்ல, பார்த்துக்கொண்டு, நடவடிக்கை எடுக்காமல் இருப்பவர்களும் குற்றவாளிகளே என்று சிறுவனாக அவன் கட்டுரையில் அவன் வைத்த கேள்வி என்னை சீண்டியது. ஒரு வாசகனாக, அவன் எழுத்தாளன் என்று உணர்ந்த தருணம் அது. அதை நான் தமிழில் மொழிபெயர்த்து காற்றின்நிழல் பக்கத்தில் நண்பர்களுக்கு ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.

கணிதமும் ஆங்கிலமும் நன்றாக இருக்கவேண்டும் என்று kuumon பயிற்சிக் கூடத்திற்கு அழைத்துச் சென்றோம். மாதிரி தேர்வுகளை திருத்திய kumon பள்ளியை நடத்துபவர், இவனுக்கு ஆங்கிலத்தில் பயிற்சி தேவையில்லை என்று சொல்லிவிட்டார். கணிதத்திற்கு  மட்டும் சில வருடங்கள் Kumon-ல் பயிற்சி பெற்றான்.

மகனுக்கு சேமிப்பு, முதலீடு போன்றவற்றை இளவயதிலேயே கற்பிக்கும் தந்தையாக, அவனை அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசிக்க சொல்லி கட்டுரைகள் எழுதச் சொல்வேன்.  நான் எழுதும் கட்டுரைகளை அவன் மேற்பார்வை பார்க்க, அவன் எழுதும் கட்டுரைகளை நான் மேற்பார்வை பார்க்க, இருவரும் இருபது கட்டுரைகளாவது எழுதியிருப்போம். வருடங்கள் ஓட, அவனது பரிந்துரையின்படி,  நான் திருத்துவது அதிகமாகிவிட்டிருந்தது.

படித்து பட்டம் வாங்குவது,  பிழைக்க ஏதோ ஒரு வேலை வேண்டும். மற்றபடி தனக்குப் பிடித்தது எழுதுவதுதான் என்று ஆகிவிட்டிருந்தான். Lord of the Rings-ஐ பார்க்கும்பொழுதெல்லாம் வாசித்துக்கொண்டிருப்பான். அவனுடன் சேர்ந்து நானும் Neil Gaiman ரசிகனானேன். Fantacy நாவல்களும் இலக்கியம் ஆகலாம் என்றான். பேய்க்கதைகள் சொல்லும் படமும் கலைப்படமாக இருக்கலாம் என்றான். Fantacy நாவல் எழுதுவதே தனது கனவு என்று சொல்ல ஆரம்பித்தான். அடுத்த என்ன வேலைக்கு முயற்சிக்கிறேன் என்பதைவிட, எந்தக் கதையை எந்த பத்திரிகைக்கு அனுப்பியுள்ளேன் என்று சொல்ல ஆரம்பித்தான்.

எனக்குத் தமிழ் எழுத்தாளர்களின் மேல் உள்ள பிரியத்தை பார்த்துவிட்டு, அவனாக முன்வந்து, எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்  நாவலை மொழியாக்கம் செய்து கொடுத்தான். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா), இலாப  நோக்கமற்ற நிறுவனமாக இயங்குவதற்கு அவனது உழைப்பும் பங்கும் முக்கியமானது. மொழியாக்கங்களுக்கென்று உள்ள குழுவில் அவனையும் இணைத்துக்கொண்டு தனது சேவையை தொடர்கிறான்.

2020-ல், நோய்த்தொற்று காலத்தில் வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கும்படியாக , அவன் எழுதியதையெல்லாம் தொகுத்து சொந்தமாக Hireath புத்தகத்தை வெளியிட்டான். ‘Friends’ கதையில் வரும் பெண்ணை, சரியாக சித்திரத்திருக்கிறாய் என்று வாசித்த பெண்கள் எல்லாம் சொல்லி பாராட்டினார்கள். அவன் தோழிகள், இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் என்று முகம் சிவந்தார்கள். ‘Waltz’ கதையில் மேஜிகல் ரியலிஷம் உள்ளது என இலக்கிய வாசகர்கள் சொல்ல வாய்ப்பிருக்கிறது. தங்கை, சுபாங்கி, இந்தக் கதையிலிருக்கும் வரிகளை மனப்பாடமாக சொல்வாள். அவன் எழுதிய கதை ஒன்றில் பர்ட் என்ற பாத்திரம் இறப்பதை வாசித்துவிட்டு, உனக்கு குமுதம் ஆசிரியர் புனிதன் எப்படி இறந்தார் என்று தெரியுமா எனக் கேட்டேன். நிஜத்தின் அருகில் நிறைய யோசிக்க ஆரம்பித்துவிட்டான் என என்னை உணரவைத்த குறுங்கதையது.

சகா, சிறுவனாக சுழன்று வந்த காலத்தில் Teakwondo விரும்பி கற்றுக்கொண்டான். அவனது ப்ளாக் பெல்ட் தேர்வின்போது ஒரு சிறுவன் மிகவும் சிரமப்பட்டான். சகா, அவனுக்கு நன்றாக பயிற்சி கொடுத்து வெற்றிபெற மிகவும் உதவி செய்தான். அந்தச் சிறுவனின் தகப்பன் என்னிடம் வந்து, ‘நல்லதொரு மகனைப் பெற்றுள்ளீர்கள்’ என்று பாராட்டிவிட்டு சென்றார்.

2006-ல் என் தந்தை எங்களுடன் வந்து ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். மூவரும் சேர்ந்து வீட்டுத்தோட்டத்தில் வேலை செய்வோம். ‘சொன்னா கேட்கறானல்லப்பா உன் பிள்ளை, அப்புறம் என்ன?’ என்றார்.

நாங்கள் வசிக்கும் காம்ப்ளெக்ஸில், இரண்டு வயது, ஐந்து வயது, எட்டு வயது என குழந்தைகள்  விளையாட, பத்து வயது பையனாக எப்படி இரண்டு வயது குழந்தையை பார்த்துக்கொள்கிறான் என்று குழந்தைகளின் அன்னைகள் வந்து எங்களிடம் பாராட்டிவிட்டுச் செல்வதுண்டு.

எழுத்தாளர்கள் ஜெயமோகனும், அருண்மொழியும், தங்களது அமெரிக்கப் பயணத்தில், நண்பர்களுடன் ஆஸ்டின் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிச் சென்றார்கள். ஜெயமோகன் அவர்களை பார்க்க வாசகர்களும் வந்திருந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் சகாவிடம் என்ன பார்த்தார்கள் என்று தெரியவில்லை. அவனைப்பற்றி ஒரே பாராட்டு மழை. ஊருக்கு சென்று, நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டோம் என்று ஆடியோ செய்தியனுப்பிய அருண்மொழி அவர்களும், சகாவின் பொறுமையை பாராட்டிப் பேசியிருந்தார்கள்.

எங்கள் மகன் படிப்பில் B+. வளர்ந்த சகாவாக, நல்ல மானுடனாக, அன்னையர்களிடம் A+. அனைவரின் ஆசியிலும், எழுத்தாளனாக A+  வாங்குவான் என்று நானும் ராதாவும் காத்திருக்கிறோம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2022 11:32

கி.ராஜநாராயணன், கடிதங்கள்

[image error]

அன்புள்ள ஜெ.,

உடல் ஊனம் ஒருவரை எழுத்தாளராக ஆக்க முடியுமா? ஆக்கியிருக்கிறது. ‘ஒத்தக்கை ஒச்சமாப் போனதுனால பள்ளிக்கூடத்துல போட்டாரு அவங்கப்பா. இல்லாட்டி இன்னொரு தட்டானாப் போக்களிஞ்சு போயிருப்பான்‘ என்று தன்னுடைய நண்பரும் எழுத்தாளருமாகிய கு.அழகிரிசாமியைக் குறித்து ஒரு கடிதத்தில் எழுதுகிறார் கி.ரா. இப்படி கடிதம் தோறும் செய்தித் தெறிப்புகள். போன புத்தகச் சந்தையில் வாங்கிய ‘கி.ராஜநாராயணன் கடிதங்கள்‘ (அன்னம் வெளியீடு) சமீபத்தில் படித்து முடித்தேன். ஏற்கனவே புத்தகமாக வந்த கடிதங்கள் தவிர்த்து, 60 களிலிருந்து 2002 முடிய (2003 ல் 501 ரூபாய்க்கு ரிலையன்ஸ் கைபேசி வந்து விட்டது. ‘விட்டதுடா இந்த ‘சீண்ரம்‘ புடிச்சவேலை‘னு மொத ஆளாப் போயி வாங்கிருப்பாரா இருக்கும்) ‘நைனா‘ எழுதிய கடிதங்களின் பெரும் தொகுப்பு. ஒரு பெரும் கதைசொல்லியின், விவசாயியின், வயசாளியின் வாழ்க்கைத் தொகுப்பு. கிட்டத்தட்ட எண்ணூறு பக்கங்கள். ஆனால் வாயில் போட்டதும் காணாமல் போகிற பஞ்சு மிட்டாய் போல பக்கம் பறக்கிறது. மனசு இனிக்கிறது.

பதிப்பாளருக்கு எழுதிய கடிதங்கள் – இவர் கேசில் ‘மீரா‘ ஒருவர்தான், ‘கதை சொல்லி‘ யின் ஆசிரியராக கதை கேட்டு சக எழுத்தாளர்களுக்கான கடிதங்கள், நாட்டுப்புறக் கதைகளைத் திரட்ட பாரத தேவி, கழனியூரன் போன்றவர்களுக்கு எழுதிய கடிதங்கள், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.வே.சு அய்யருக்கு எழுதிய கடிதங்கள் என்று பலவகையில் கடிதஇலக்கியம் பரிமளிக்கிறது.ஆரம்பத்தில் ரசிகமணி டி.கே.சி., தி.க.சி என்று ஆரம்பித்து அவர்கள் பேரப்பிள்ளைகள் வரை எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அதேபோல முதலில் குறுகிய வட்டத்தில் கரிசல் எழுத்தாளர்களோடுதான் கடிதத் தொடர்பிருந்திருக்கிறது. பிறகு வட்டம் மாவட்டமாகி ‘சாகித்ய அகாடமி‘ வாங்கிய பிறகு சினிமா, தொலைக்காட்சி என்று தொடர்புகள் பெருகிப் பெருகி ‘போதுமடா சாமி‘ என்றொரு அலுப்பு வந்து விடுகிறது நைனாவிற்கு. அதை கடிதங்களிலும் பதிவு செய்கிறார். பல கடிதங்களில் காலம் தாழ்த்தி பதில் எழுதுவதற்கான மன்னிப்புக்கோரலும் உண்டு.

‘நீங்க ஒரு காரியம் பண்ணணுமே, நல்ல கதையா ரெண்டு கதை அனுப்பணுமே‘ என்று இவர் ‘கதைசொல்லி‘க்கு கதை கேட்காத கரிசல் எழுத்தாளர்களே இல்லை. ‘உங்க சிறுகதைத் தொகுப்பு வந்துருச்சாம், கேள்விப்பட்டேன். நான் படிக்கிறதாக இல்லை. நாவல் எழுதுமய்யா‘ என்று கந்தர்வனைக் கடிந்து கொள்கிறார். கொஞ்ச நாட்களே பழகினாலும் நெறைய உரிமை எடுத்துக்கொள்ளும் வெள்ளந்தி கிராமத்தானாக பல இடங்களில் வெளிப்படுகிறார். கர்நாடக சங்கீதத்தில் ராகங்களைத் தொகுத்து அமைப்பது சம்பந்தமாக இளையராஜாவிடம் கூறியதை அவர் ‘சீரியஸா‘க எடுத்துக்கொள்ளாதது குறித்து வருத்தப்படுகிறார். ‘முதல் மரியாதை‘ படத்தில் அவர் கதையை உபயோகப்படுத்திக்கொண்டதற்கு ‘தகுந்த மரியாதை செய்து அனுமதி வாங்கிச் சென்றாரகள்‘     என்றொரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். சுந்தரராமசாமி வீட்டில் ராத்திரி மட்டும் வாசனை வரும் அதிசய மரம் – அந்த வாசனை வருவது இலைகளில் இருந்து, தஞ்சாவூர் பகுதியில் விளையும் பூக்காத, இலை மட்டும் தரும் வாழை, தென்காசிப் பக்கம் பழுக்காத சின்னச் சின்ன காய்கள் மட்டும் தரும் பலா மரங்கள் என்று பல செய்திகள். 93 ஆம் வருட தீ விபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘அன்னம்‘ கடை எரிந்தது, தி.ஜானகிராமன், ஆதவன், கிருஷ்ணன் நம்பி ஆகியோரின் மறைவு போன்ற பல செய்திகள் பதிவாகியிருக்கின்றன.   

எழுத்தாளர் பாரத தேவியை (இப்படித் தான் அழைக்கப்பட வேண்டுமென்பது பாரததேவியின் வாழ்நாள் ஆசை) தன்னுடைய மகளாகவே கருதுகிறார். ‘பெறாம, வளத்துக் கட்டிக்குடுக்காம பேரனோட மக கிடைக்கறதுன்னா, கசக்குதா‘. நாட்டுப்புறக் கதைகளை சேகரித்துக் கொடுப்பதன் மூலம் கி.ரா வுக்கு அறிமுகமாகிறார் ராஜபாளையம் அருகிலுள்ள சொக்கலிங்கபுரம் பாரததேவி. தொடர்ந்து சேகரித்த கதைகளை அனுப்பியவண்ணம் இருக்கும் அவருக்கு ஒரு ஆசை. தன்னுடைய கதை  பத்திரிகையில் வரவேண்டும், தான் எழுத்தாளராக அறியப்படவேண்டுமென்று. அப்பாவும் ஊக்குவிக்கிறார். கதைகளை எழுதி அனுப்புகிறார் பாரதா. கி.ரா வுக்கு திருப்தி இல்லை. கு.அழகிரிசாமி, உ.வே.சா முதலியவர்களைப் படிக்கச் சொல்கிறார். ஒரு கட்டத்தில் மகளின் அன்புத்தொல்லை தாங்கமுடியாமல் ‘அப்பா உண்மையச் சொல்லணும், உண்மையச் சொல்லணும் என்கிறாய், சொன்னால் கோவிக்கக்கூடாது, உனக்கு சிறுகதைகள் சரியாக எழுத வரவில்லை. அதனால் ஒன்றும் குறைந்துபோகவில்லை. நீதான் மணி மணியாக நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து அனுப்புகிறாயே, அதற்காகவே இந்த உலகம் உன்னைப் போற்றும். எனக்குமே இந்த வேலையில்தான் பூரண திருப்தி‘ என்று எழுதினாலும் அவர் சமாதானமாவதில்லை. ‘சரி, பொன்னீலனோட அம்மா அழகிய நாயகியம்மாள் எழுதின மாதிரி தன்வரலாறா எழுதிப்பாரேன் அல்லது நடிகை பானுமதி அவரோட அத்தையைப் பத்தி எழுதி பரிசெல்லாம் வாங்குச்சே அந்த மாதிரி ஏதாவது எழுது. நம்ம கதைகள யாரும் எழுதலாம். நீ அனுப்புற கதைகள் தான் எப்பிடி இருக்கு தெரியுமா? கடவுள் உன்னைப் படைச்சதே இப்பிடி கதைகளை சேகரிக்கத்தான்‘ என்கிறார். இது ஏதோ பாரததேவியைச் சமாதானப் படுத்த எழுதினார் என்றுதான் நினைத்தேன். தன்னுடைய பெரிய பங்களிப்பாக கி.ரா கருதுவதும் நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பைத்தான் என்பதை பல கடிதங்களில் பதிவு செய்கிறார். ‘ பாலியல் கதைகளெல்லாம் அவர்கள் என்ன, எப்படிச் சொல்கிறார்களோ அப்படியே பதிவு செய்யவேண்டும் கெட்ட வார்த்தை உட்பட. இதில் கூச்சப்படவோ, மாச்சப்படவோ ஒண்ணும் கிடையாது. உன் வார்த்தைகளைப் போட்டு உன் கதையாய் ஆக்கிப்புடாதே…அப்பாவுக்கு எல்லாம் தெரியும்‘  என்று மகளாக இருந்தாலும் வேலையில் ‘கறாலா‘ க இருந்திருக்கிறார்.  

ஒரு முறை கரிசல் எழுத்தாளர்கள் ஒரு விழாவில் ஒன்றுசேர ஒரு போட்டி.கி.ரா வுக்குத் தெரியாத நாட்டுப்புறத்துக் கதை ஒன்றை யார் சொல்வதென்று. ஒருவர் கதையை ஆரம்பிக்கவேண்டியது, இதுதானே என்று கி.ரா முடிக்கவேண்டியது. ஒருவராலும் அவருக்குத் தெரியாத ஒரே ஒரு கதை சொல்ல முடியவில்லை.  ‘அந்தப் பெருமாவையும் முருகனையும் விட்டுறாத, என்ன அருமையாச் சொல்றாங்க..காமாட்சியாபுரம் காளீஸ்வரிக்கு தனி ஃபைலே போட்டுட்டேன். எங்கதான் புடிச்சாளோ இம்புட்டுக் கதையை..’,’ கதை சொல்றவ பொம்பளையா இருந்தா, இந்தக் கதையை பொறந்த வீட்டுல கேட்டாளா, புகுந்த வீட்டுல கேட்டாளான்னு கேளு, கதையை சொன்னது யாரு, எந்த ஊரு எல்லாம்‘ அந்த வயதான காலத்திலும் பம்பரமாக இயங்கி, பத்து தொகுப்புகள் நாட்டுப்புறக் கதைகள் மட்டும் கொண்டுவந்திருக்கிறார். அதில் பாரததேவியின் பங்கு மிகஅதிகம். ‘உன்னை உலகம் மறக்காது‘ என்று கி.ரா சொன்னாலும், பாரத தேவி பற்றிய ஒரு பதிவு கூட இல்லை. அவர் பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்திருக்கிறார். ஒரு கடிதத்தில் அவர் மகன் அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்கு செல்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் கி.ரா. எழுத்தாளர் சோ.தருமனுக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு கடிதத்தில் அவர் பற்றிய குறிப்பு வருகிறது.

உடம்பால் நிறைய அவதிப்பட்டிருக்கிறார். ‘நடுவுல ஆச்சு போச்சுண்னு ஆயிப்போச்சு. ஜிப்மர்ல போயி ஸ்டே ஆர்டர் வாங்கிட்டு வந்தோம். எத்தனை நாளைக்குத்தான் இந்த ஒடம்ப கண்ணாடிப் பாத்திரம் மாதிரிப் பாத்துக்கிறது ‘ என்கிறார். அவருக்கு சிறுவயதில் காசநோய் தாக்கியபோது மருந்தே கிடையாது. ‘தைரிய லட்சுமி இருந்ததால பொளச்சேன்‘ என்கிறார். பயணங்கள் அவரைச் சலிப்படையச் செய்கின்றன. சாகித்ய அகாடமி கிடைத்தவுடன் ‘அவ்வளவு தூரம் போயி வாங்கிட்டு வர்றத நெனச்சாத்தான் மலைப்பா இருக்கு‘ என்கிறார். தன்னுடைய எண்பது வயதுவரை கடுமையாக உழைத்திருக்கிறார். உஷா, பாக்யா, போலீஸ் செய்தி என்று ஒரு பத்திரிகை விடாமல் எழுதித் தள்ளியிருக்கிறார். 

கடிதங்களைப் பிரசுரிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்கிறார். பாரததேவியிடம் ‘ அந்தக் குடிமகன் கதையெல்லாம் பத்திரிகைல போட முடியாது. பிரச்சினை வரும். தொகுப்புல கொண்டுவருவோம்‘ என்கிறார். கடிதங்களைப் பிரசுரிக்கும்போது இரண்டு பக்கத்துக் கடிதங்களையும் பிரசுரிக்கவேண்டும் ‘கு.அழகிரிசாமி எழுதுன கடிதம் எத்தனை இருக்கு. நான் எழுதினது ஒண்ணாவது இருக்கா?’ என்கிறார். அப்படிப் பிரசுரமான ஒரே தொகுப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் கி.வே.சு அய்யருக்கு எழுதிய கடிதங்கள்தான்.

கடிதம் மிகவும் நீண்டுவிட்டது என்று இவர் சொல்லுவதே நாலு பக்கக் கடிதம்தான். நீங்கள் நீண்ட கடிதங்கள் பல எழுதியிருப்பீர்கள். உங்கள் கடிதங்கள் தொகுப்பாக வர வாய்ப்புண்டா?     

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2022 11:31

July 30, 2022

அறிதல்-அறிதலுக்கு அப்பால்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுடைய கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களுடைய பணி தமிழில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. உங்களுடைய ஒரு கருத்துடன் நான் மாறுபாடுகிறேன். இந்திய மதங்களில் தத்துவமே அதி கடைசி எல்லையாக அல்லது தத்துவமே அதனுடைய இறுதி லட்சியமாக முன்வைக்கப்படுகிறதாகத் தாங்கள் எழுதுவது (அல்லது நான் அப்படிப் புரிந்துகொள்கிறேனா என்று தெரியவில்லை) மிகவும் முரணாகத் தெரிகிறது.

இந்திய மதங்களின் சாரமே தத்துவத்தின் எல்லையை எப்படி மீறுவது என்பதே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே பிரமம் என்பதே இந்து சிந்தனையின் உச்சம். மகாபாரதத்தில் தருமத்தின் மறுஉருவாகச் சித்தரிக்கபடும் விதுரர் தன்னுடைய கடைசி காலத்தில் வார்த்தைகள் அற்ற மௌனத்தில் மறைந்துவிடுவதாகக் குறிக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனும் “ரகசியங்களுள் நான் மௌனம்” என்று சொல்லுகிறார். தத்துவம் வார்த்தைகளின் விளையாட்டு, சத்தியத்தைத் தேடுபவர்கள் அந்த விளையாட்டில் ஈடுபடுவதில்லை. ரமணர் அவர்களும் “கற்றதெல்லாம் ஒருநாள் மறக்க வேண்டிவரும்” என்று சொல்லி இருக்கிறார். தத்துவம் மிக முக்கியமானதுதான், ஆனால் கீழை மரபில் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சூனியத்தில் அல்லது பிரமத்தில் அல்லது பக்தியில் கரைந்து ஒன்றுவதே ஒரே லட்சியம்.

தத்துவத்திற்கு ஒரு முக்கியமான பணி இருக்கிறது, அது தத்துவ விசாரணை செய்பவனை மேலான ஒன்றின் மேல் நாட்டம்கொள்ள வைப்பதே. வார்த்தைகளில் இருந்து விடுபட்டு சூனியத்தை நோக்கிச் செல்வதே… எப்படி பக்தி பக்தனை பகவானுடன் ஒன்றச் செய்வதோ அது மாதிரி… நம்முடைய மரபின் உயிரே அதில்தான் இருப்பதாக நான் கருதுகிறேன். நாம் மேலைச் சிந்தனை முறையில் நம்முடைய மதத்தைப் புரிந்துகொள்ள நினைத்தால் அது ஒரு கேலிக்கூத்தாக முடியும், நாம் காலமாற்றத்தைப் பேசுகிறோம், பேசுவதால் காலமற்றத்தை உணர்ந்துகொள்ள முடியும் என்பதால் அல்ல, அதை நோக்கி சில பேராவது செல்வார்கள் என்பதற்காக மட்டுமே. மேற்கத்திய சிந்தனைக் காலத்திலேயே உழன்று கொண்டிருப்பது, அது அதனுடைய வரமும் சாபமும் ஆகும். அவர்கள் புத்தரையே வெறும் தத்துவவாதியாக முன்னிலைபடுத்தியவர்கள். புகழ்பெற்ற தத்துவமேதை ரஸ்ஸலே புத்தரையும் சாக்கரடீசும் நிகரானவர்கள் என்றே எழுதுகிறார். சாக்கரடீஸ் ஒரு தத்துவவாதி அவர் லாஜிக்கைத் தாண்டிச் செல்வதே இல்லை, ஆனால் புத்தரோ தர்க்கத்தைத் தாண்டிச் செல்கிறார். அந்தத் தாண்டிச் செல்லும் கோட்டை எல்லா மேற்கத்திய சிந்தனையும் நிராகரிக்கும் அல்லது தவறாக விளக்கம் அளிக்கும்.

ஆகவே தாங்கள் நம்முடைய தத்துவத்தின் உயிரான “தர்க்கத்தைத் தாண்டிச் செல்லத் தூண்டும் லட்சியத்தையும்” கொஞ்சம் எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தக் கடிதத்தில் எதாவது பொருட்பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும்.

தங்களுடைய நெடுநாள் வாசகன்

க.வேல்முருகன்

***

அன்புள்ள வேல்முருகன்,

இந்திய ஞானமரபைத் தத்துவம் என்று சொல்லமுடியுமா என்பது எப்போதும் விவாதிக்கப்பட்டுவரும் ஒரு கேள்வி. நானே இதை எழுதியிருக்கிறேன். மேலைதத்துவம் என்பது தர்க்கம் மூலம் விடைகாணமுடியும் என்ற நம்பிக்கையை சாரமாகக் கொண்டது. அதன் வேர்ச்சொல்லே Philo Sophia என்று விரிவது. அறிவுத்தேவதைமேல் கொண்ட பிரியம் எனப் பொருள்.

இந்தச் சரியான அர்த்தத்தில் இந்திய சிந்தனைமரபில் நியாய தரிசனம் ஒன்றை மட்டுமே தத்துவம் என்று சொல்லமுடியும். பிற அனைத்துமே முக்தி அல்லது மோட்சம் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவை. முக்தி என்பது பல்வேறு பொருட்களில் அவற்றால் பேசப்படுகிறது. பொதுவாகத் துயர்களில் இருந்து விடுதலை. துயர் உருவாவது மனமயக்கத்தால், அறியாமையால். ஆகவே அறிவே முக்தி என ஜடவாத சிந்தனைகள் வாதிடுகின்றன. அதற்காகவே அவை பேசுகின்றன.

அறிவு அல்ல அவற்றின் இலக்கு. அறிவைக் கையாண்டு விடுதலை பெறுவதுதான். ஆகவே அறிவை நடைமுறைப்படுத்துவது பற்றியும் அறிந்ததை உணர்வது பற்றியும் அவை பேசுகின்றன. ஒன்றை அறிவதற்கும் அந்த அறிவை உணர்ந்து வாழ்ந்து அதுவேயாக ஆவதற்கும் இடையேயான வேறுபாடு பெரிது என எல்லா சிந்தனைகளும் அறிந்திருந்தன. அறிதல் என்பது முதல்படியே என்றும் அதை மிதித்து ஏறி மேலே செல்லவேண்டியிருக்கிறது என்றும் அவை சொல்கின்றன.

அத்வைத மரபுப்படி அறிதல்-அறிபடுபொருள்-அறிபவன் மூன்றுமே ஒன்றேயாகும் ஒரு நிலையே முக்தி. அத்வைத நூல்களின் அனைத்துத் தர்க்கங்களும் அந்த மையம்நோக்கி நம் அறிவைக் கொண்டு செல்லும் முயற்சிகளே.

ஆகவே இந்திய ஞானமரபை இந்தியதத்துவம் என்று சொல்லமுடியாது. நான் அச்சொல்லை மிகக் கவனமாகவே கையாள்கிறேன். தத்துவம் என்னும்போது நான் ஞானமரபு அறிவைச் சந்திக்கும் புள்ளிகளை மட்டுமே குறிக்கிறேன். ஞானமரபு என்பது உள்ளுணர்வைச் சந்திக்கும் தளங்களும் கடந்துசெல்லும் தளங்களும் அடங்கிய ஒன்று. எல்லா தரிசனங்களிலும் தத்துவமும் மெய்ஞானமும் உள்ளன. தத்துவம் அதன் கால்,மெய்ஞானம் அதன் சிரம். கால்தான் நிலத்தைத் தொடுகிறது. தலை காலை இயக்குகிறது.

இந்திய ஞானிகள் அனைவருமே அறிவின் எல்லைகளைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். ‘அறியாமை ஒரு முள், அதை எடுப்பதற்கான முள் அறிவு. முள்ளை எடுத்தபின் இருமுட்களையும் வீசிவிட்டு மேலே செல்லவேண்டும்’என்ற ராமகிருஷ்ண பரமஹம்சரின் வரியே மிக அழகானது.

ஆனால் இதைத் தத்துவநிராகரிப்பு எனக் கொள்ளவேண்டியதில்லை. தத்துவமாக மட்டுமே பார்ப்பது எப்படி முழுமையற்றதோ அப்படியே தத்துவமே இல்லாமல் தூய உள்ளுணர்வு எனக் கற்பனைசெய்துகொண்டு எதையும் கற்காமலிருப்பதும் முழுமையற்றது. எந்த ஞானியும் அதைப் பரிந்துரைத்ததில்லை. இயல்பான சோம்பல் மற்றும் தகுதியின்மை காரணமாகக் கல்வியைத் தவிர்ப்பதற்காக நம்மில் பலர் இப்படித் தத்துவ எதிர்ப்பை ஒரு நிலைப்பாடாக மேற்கொள்வதுண்டு. தாங்கள் தத்துவமற்ற உள்ளுணர்வு வெளிக்கு- சுயம்புவாகச் சென்றுவிட்டதாகப் பாவனையும் செய்வார்கள். அது சாத்தியமல்ல.

அறியாமை என்ற முள் பிறப்பிலேயே வருவது. அதை ஆணவமலம் என்றது மரபு. ஆகவே அதை எடுக்க அறிவு இன்றியமையாதது. அந்த முள்ளைக் காலில் வைத்துக்கொண்டு வெகுதூரம் செல்லமுடியாது. நம் உள்ளுணர்வு வலுவான தர்க்கத்தால் மூடப்பட்டுள்ளது. அந்த ஓட்டை உடைத்து மட்டுமே உள்ளுணர்வைத் தீண்டமுடியும். ஆகவே தீவிரமான அறிவுத்தளம் இல்லாத இலக்கியமோ ஆன்மீகமோ சாத்தியமல்ல. அப்படி ஒன்றை முன்வைத்தால் அது வெற்று பாவனையாகவே இருக்கும்.

ஆகவேதான் மெய்மையின் வாசலை அத்தனை நுண்ணியதாக உருவகித்த நம் மரபு,இத்தனை சிந்தனைகளையும் தர்க்கங்களையும் உருவாக்கியது. அவை வீண் மயிர்பிளப்புகள் அல்ல. அவற்றையே இறுதியாகக் கொள்வதே பிழை. அது அறியாமையின் இன்னொரு முகம் மட்டுமே.

நீங்கள் சொன்னது போலத் ‘தர்க்கத்தைத் தாண்டிச் செல்லத் தூண்டும் லட்சியத்தை’ப் பற்றி எளிதாக நேரடியாக எழுதிவிடமுடியாது. என் ஊடகம் இலக்கியம். அதில் விரிவாகவே எழுதியிருக்கிறேன். விஷ்ணுபுரம் நாவலே அறிதல்-அறிதலுக்கு அப்பால் என நகரும் ஆக்கம்தான்.

ஜெ

***

முதற்பிரசுரம் செப் 2011/ மறுபிரசுரம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2022 11:35

ர.சு.நல்லபெருமாள்

ர.சு.நல்லபெருமாள் தமிழில் இரு கோணங்களில் அறியப்படுகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிடித்தமான எழுத்தாளர் அவர். இரண்டு, அவர் எழுதிய கல்லுக்குள் ஈரம் நாவல் கமல்ஹாசனின் ஹே ராம் திரைகதைக்கு மிக அணுக்கமானது. காந்தி கொலை பற்றி பல கோணங்களில் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் மாலன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். ர.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரமே அவற்றில் புகழ்பெற்றது

ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2022 11:34

வனவாசம் முதலிய கதைகள் -கடிதங்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று வனவாசம் கதையை வாசித்தேன். வனவாசப் பருவம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். நாடுகளுக்கும் இருக்கும். கலைகளுக்கும் இருக்கும். அந்த பருவத்தை அது கடந்துதான் வரவேண்டும்.வனவாசம் தண்டனையா? சுகபோகத்தில் சிக்கிவிட்டு பார்த்தால் தண்டனைதான். நான் வனவாசத்தை இப்படி எடுத்துக்கொள்கிறேன். படிக்கப் பிடிக்காது . ஆனாலும் படிப்பில் முதல் மாணவன். படித்ததற்கு காரணம் அம்மா, போட்டியாய் இருந்த சுகுமார், ரேங்க் சீட்டில் எண் ஒன்றை ஆசிரியர் எழுதும் முறை. எண் ஒன்றுக்கு பீடமும், கிரீடமும் கொடுப்பார்கள்.அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதை வாங்கினால் ஒரு பெருமை.

என்னுடைய வனவாசம் ஸ்டடி விடுமுறையில் தொடங்கும். விடுமுறை தொடங்கியவுடன் அனைத்தும் தீவிரம்கொண்டு என்னை இழுக்கும். கோவில் திருவிழா பாட்டு, தொலைக்காட்சியில் பிடித்த சினிமா, அதுவரை காதுகொடுத்து கேட்டிராத அம்மா பேசும் கதைகள் கேட்க கேட்க இனிக்கும். இதனை வென்றுவிட்டு படிக்க அமர்வேன். மனதை சமாதானம் சொல்லி அமரவைப்பேன். எழுதும்போது என்னை நானே நினைத்துக் கொண்டு சிரித்துக்கொள்கிறேன்.இந்த வனவாசம் தேர்வு முடியும் வரை தொடரும். வனவாசத்தை வென்று கடந்த பின் ஒரு நிறைவு கிடைக்கும். அது தேர்வில் மதிப்பெண்ணில் வெளிப்படும்.

இக்காலகட்டம் கூத்து கலைக்கு வனவாசம். கூத்துக்கலையை வென்றது வேறொரு கலைதான். மீண்டும் கூத்து வெல்லுமா? ஆமா, இப்ப அர்ஜுனன் வேசத்துக்கு என்ன மதிப்பு?. இந்த வரியை படிக்கும்போது ஒரு நம்பிக்கை மனதில் வந்தது. மீண்டும் கூத்து எழும். மஹாபாரதம் வெண்முரசாய் இன்று எழுந்து நிற்கிறது. கூத்தும் எழுந்து நிற்க சாத்தியம் உண்டென்று வலுவாய் தோன்றுகிறது.

இதில் இன்னொரு வனவாசமும் கலைஞனனுக்குள் கலை கொள்ளும் வனவாசம். அரிதாரம் பூசியபின் எழும் அர்ஜுனன் கலைந்தபின் வனத்துக்குள் சென்றுவிடுகிறான். அரிதாரம் இட்டு படையல் வைத்தால்தான் மீண்டும் வருவான்.

அன்புடன்

மோகன் நடராஜ்

***

அன்புள்ள ஜெ

இந்தப்புத்தகக் கண்காட்சியில் புனைவுக் களியாட்டுக் கதைகளை வாங்கினேன். எல்லா கதைகளும் இணையதளத்தில் வெளியானவை. நான் வாசித்தவை. ஆனாலும் அவை நூல்களாக வேறு அனுபவம் அளித்தன. உதாரணமாக தங்கப்புத்தகம், வான்நெசவு. இரண்டுமே ஒரே களத்தில் நிகழ்பவை. ஆகவே ஒரு நாவல் போல முழுமையான அனுபவத்தை அளிப்பவையாக இருந்தன. அற்புதமான அனுபவங்கள். சிறுகதைத் தொகுதிகளில் பத்துலட்சம் காலடிகள் இன்னும் படிக்கவேண்டிய நூல்

செ.மாணிக்கவேல்

***

வான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்க தங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்க பத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2022 11:33

க.நா.சு உரையாடல் அரங்கு

யுவன் சந்திரசேகர், தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். இந்த வருடம் தங்களின் மற்றும் அருண்மொழி நங்கை அவர்களின் வருகை அமெரிக்க வாசகர்களுக்கு வெவ்வேறு வகையில் இலக்கிய அனுபவத்தை தந்தது. தமிழ்விக்கி துவக்க விழா, பூன் முகாம்,  நூலகங்களில் நடந்த வாசகர்கள் சந்திப்பு, நண்பர்களின் வீட்டில் நடந்த சந்திப்பு என மே மாதம் முழுதும் எங்களை அறிவியக்க உலகில் வைத்திருந்தீர்கள். அடுத்து என்ன, அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற கேள்விகளை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்கள் கேட்டுக்கொண்டே உள்ளார்கள்.

பூன் முகாம் பற்றி எழுதும்பொழுது, திட்டத்தின்படி, ஒவ்வொன்றும் நேரத்திற்கு நடந்தது என்று பாராட்டியிருந்தீர்கள். எல்லாம் தங்களிடமும், நண்பர்களிடமும் கற்றுக்கொண்டதின் பயிற்சியே அன்று வேறில்லை. நாம் 2020-ல், தமிழ் ஆளுமைகளுடன் நடத்திய ஆறு zoom நிகழ்வுகள் மிக முக்கிய காரணம். பழனி, சங்கர் பிரதாப், சிஜோ, பாலாஜி ராஜூ என நண்பர்கள் கோயம்புத்தூரில் நடக்கும் விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்டு, அந்த அனுபவத்தை எடுத்து வந்தார்கள். ஊட்டி முகாமில் கலந்துகொண்ட நண்பர்கள், அதை அப்படியே இங்கு நடத்திக் காண்பிக்க ஆசைப்பட்டார்கள். எல்லாமும் சேர்ந்து ஒரு கட்டுக்கோப்பான நிகழ்வுகளை நடத்தும் அறிவியக்கமாக உருவெடுத்துவிட்டோம். மேலும் தொடர்வதில் ஆர்வமுடன் உள்ளோம்.

முக்கியமாக, தங்களிடம் போனில் பேசியதைப்போல, zoom நிகழ்வுகளை மீண்டும், க.நா.சு உரையாடல் அரங்கு என்ற தலைப்பில் தொடரலாம் என உள்ளோம். இரு மாதத்திற்கு ஒரு முறை என்று திட்டமிட்டு ஒவ்வொரு ஆளுமையாக அழைத்து கலந்துரையாடல் நடத்தலாம் என உள்ளோம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா), கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினருக்கு தக்க சன்மானமும் கொடுத்து சிறப்பிக்கும். முதல் நிகழ்வு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி, இந்திய நேரம் இரவு 8:30-க்கு, எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுடன் நடத்த திட்டமிட்டுள்ளோம். நிகழ்விற்கான அறிவிப்பு பத்திரிகை தயாராகிக்கொண்டுள்ளது.  நண்பர்கள், யுவன் சந்திரசேகர் அவர்களின் படைப்புகளை வாசித்து, கலந்துரையாடலுக்கு தங்களை தயார் செய்துகொள்ள இக்கடிதத்தின் மூலம் முன்னறிவிப்பு கொடுக்கிறோம்.

இந்த முறை ஒரு வசதி, நண்பர்கள் தமிழ் விக்கி பக்கத்திற்கு சென்று வரவிருக்கும் விருந்தினரைப் பற்றியும், அவர்களின் நூல்கள் விபரங்களையும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளலாம்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2022 11:33

தமிழ்ப்பண்பாட்டுக்கு ஒரு நூல் -கடிதமும் பதிலும்

தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

அமெரிக்காவில் வாழும் தமிழ்க் குழந்தைகள் பற்றிய உங்களின் கட்டுரைகளைப் படித்தேன்.

அக்குழந்தைகளின் அடையாளச் சிக்கலையும் அவற்றிற்கான தீர்வுகளையும் நீங்கள் முன்வைத்தீர்கள். அந்த அடையாளச் சிக்கல்கள் அமெரிக்கா வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வாழும் குழந்தைகளுக்கும் உண்டு என்றே நான் உணர்கிறேன்.

ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஆங்கிலம் உலக மொழி என்ற எண்ணம் வந்து விடுகிறது. எனவே அதற்கு முதலிடம். அடுத்ததாக அவர்கள் இந்தி மொழியைத் தேசிய மொழி என்று நம்புகிறார்கள். இந்தி என்பது இந்திய அரசின் இரு அலுவல் மொழிகளில் ஒன்று என்பதைத் தாண்டி அது தேசிய மொழி மற்றும் இந்தியா முழுவதும் தெரிந்த மொழி என்றும் அதற்கு இரண்டாம் இடம் கொடுக்கிறார்கள்.

நம்முடைய மாநில அளவில் (தோராயமாக ஒரு 700 கிலோமீட்டர் அளவில்) மட்டுமே உள்ள மொழி என்பதால் தமிழ் மூன்றாமிடத்திற்கு தள்ளப்படுகிறது. நாம் பிறப்பிலேயே தமிழை அறிந்து கொள்வதால் நமக்கு பேச்சுத்தமிழ் பிரச்சினையில்லை; அதுவே போதும் என நம் குழந்தைகள் நினைக்கிறார்கள். அதைத் தாண்டித் தமிழை நன்கு கற்க வேண்டும் என்ற எண்ணம் நம் குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது.

தமிழால் நம் பிழைப்புக்கு ஒன்றும் ஆகப் போவது இல்லை என்றபின் தமிழ் நமக்கெதற்கு என்ற எண்ணம் தழைத்தோங்குகிறது. இவற்றைப் போக்க நீங்கள் சொன்ன தீர்வுகளின் எனக்கு உடன்பாடே. தமிழ் பற்றிய வீண் பெருமைகளை விடுத்துத் தமிழின் உண்மையான சிறப்புகளைத் தமிழ்க் குழந்தைகள் அறிந்து கொள்வதே தமிழ் வளர வழிவகுக்கும்.

தமிழின் சிறப்புகளை எடுத்துக் கூறும் ஒரு சிறிய நூலை நீங்கள் அல்லது உங்களின் சீடர் யாராவது எழுத வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

அந்த நூல் 100 பக்க அளவிலானதாக இருக்கலாம்; எளிய மொழி நடையில் இருக்கலாம்; பெரிய எழுத்துருவும் நிறைய படங்களும் கொண்டு இருக்கலாம்; தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கலாம் என்பது என் அவா.

இந்திய அளவிலும் உலக அளவிலும் ஒரு தமிழன் தடுமாறும் போது அவனைத் தாங்கிப் பிடிக்க அந்த நூல் ஒரு கைத்தடியாக அமையும் என நான் உணர்கிறேன்.நான் அதிக இலக்கிய அறிமுகம் இல்லாதவன். என்னால் அத்தகைய நூலை எழுதிவிட முடியாது. தங்களைப் போன்ற இன்றைய தமிழ் முன்னோடிகள் மனது வைத்தால், தொன்மை அல்ல தொடர்ச்சி என்பதே தமிழின் சிறப்பு என்பதைத் தமிழ்ச் சமூகத்தின் அடுத்த கண்ணிக்கு எடுத்துச் செல்ல முடியும்.

தமக்கென முயலா நோன்றாள்

பிறர்க்கென முயலுந‌ர் உண்மையானே

என்ற நான் எட்டாம் வகுப்பில் படித்த வரிகளின் வழி வாழ்பவர் நீங்கள்! எட்டுத் திக்கும் தமிழர்கள் செல்கிறார்கள்!

தமிழும் செல்ல மனது வையுங்கள்!

தங்கள் உண்மையுள்ள‌,

வ‌.முனீஸ்வரன்

ஆசிரியர்

இனிது இணைய‌ இதழ்

***

அன்புள்ள முனீஸ்வரன்,

நீங்கள் எண்ணுவதுபோல அத்தனை எளிய ஒரு செயல் அல்ல இது. கருத்துகள் எளிமையான பிரச்சாரம் வழியாக சென்றடைவதில்லை. கருத்துக்களம் என்பது நேர்நிலையாகவும் எதிர்நிலையாகவும் முன்வைக்கப்படும் கருத்துக்களால் ஆன ஒரு பெரிய விவாதப்பரப்பு. அதில் பலவகையான கருத்துநிலைபாடுகள் உண்டு. என்னென்ன தரப்புகள் இப்போது காணக்கிடைக்கின்றன என்று சொல்கிறேன்.

இந்த கருத்துக்களத்தில் தமிழே உலகின் தலைமொழி, தமிழர்களே உலகில் உயர்ந்த மக்கள், தமிழ்ப்பண்பாடே தொன்மையானது என்னும் நிலைபாடு கொண்டவர்கள் உள்ளனர். தமிழுக்கு எந்த தனித்தன்மையும் இல்லை, இந்திய பொதுப்பண்பாடே உள்ளது என வாதிடும் தரப்பினர் உள்ளனர். தமிழ்பற்றியும் இந்தியா பற்றியும் மேம்போக்காகத் தெரிந்துகொண்டு வரலாற்றை எழுதும் வெண்டி டேனிகர் போன்ற உள்நோக்கம் கொண்ட, முதிரா வரலாற்றாசிரியர்கள் உள்ளனர்.

இந்தக் களத்தில் ஓங்கி நிற்கும் ஒரு தரப்பாக தமிழ்ப்பண்பாட்டின் வெற்றியைச் சொல்லும் குரல் ஒலிக்கவேண்டும் எனில் எல்லா தரப்புக்கும் ஆதாரபூர்வமாக பதில்சொல்லும் ஏராளமான நூல்கள் தேவை. ஓர் அறிவியக்கமாகவே அது நிகழவேண்டும்.

அதற்குத் தடையாக உள்ளது என்ன? பாருங்கள், குடவாயில் பாலசுப்ரமணியம் போன்ற ஒரு பேரறிஞர் இங்குள்ளார். அவரை செவிகொள்ள ஆளில்லை. ஆனால் யூடியூபில் உளறுபவர்களுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள். வெண்டி டேனிகர் பெறும் இடம் குடவாயில் பாலசுப்ரமணியத்துக்கு ஏன் இல்லை? ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் பெறும் இடம் அ.கா.பெருமாளுக்கு ஏன் இல்லை?

அங்குதான் நம் அறிவுவறுமை உள்ளது. அதைச்சுட்டிக்காட்டவே நான் எழுதுகிறேன். அப்படி ஓர் அறிவு வறுமை நமக்குள்ளது என நாம் உணர்ந்த பின்னரே நம் கல்வி ஆரம்பிக்கமுடியும்.

நீங்கள் சொல்லும்படி எழுதலாம்தான்.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.