Jeyamohan's Blog, page 733
August 18, 2022
மோகினியின் ஆசி – விஜயபாரதி
திருநங்கை பற்றிய என் முதல் நினைவு ஒருமுறை நறுக்கென தலையில் கொட்டு வாங்கியதுதான். கல்லூரி நாட்கள். ரயிலில் நண்பர்களுடன் சென்னையிலிருந்து வாலாஜா வரை பயணம். ஒரு திருநங்கை அனைவரிடமும் பணம் வசூலிக்கும்போது நான் காசு இல்லை என மறுத்தேன். அப்போதுதான் அந்த கொட்டு விழுந்தது.
ஆனால் இன்று அந்த கொட்டு பணத்துக்காக இல்லை எனவே நினைக்கிறேன். என் முகம் ஒவ்வாமையை வெளிப்படுத்தியிருக்கலாம். அங்கு பணமில்லை என மறுத்த அனைவரும் கொட்டுவாங்கிவிடவில்லை. மேலும் அன்று நான் நோஞ்சான் சிறுவன். எனவே அந்த செல்ல தண்டனை. கொஞ்சம் பெரியவர்களாக இருந்தால், அவமரியாதை செய்தால் துணியைத் தூக்கிக்காட்டுதல், வசை என வேறு அருவருக்கத்தக்க எதிர்வினைகள் கிடைத்திருக்கும். இந்த எதிர்வினை ஒரு சமூகமாக அரவாணிகள் வளர்த்துக்கொண்ட எதிர்ப்பு சக்தி என்கிறார் கரசூர் பத்மபாரதி. அவரது “திருநங்கையர் – சமூக வரைவியல்” புத்தகத்தில் இது அரவாணிகளின் நேர்க்கூற்றாகவே பதிவாகியுள்ளது.
அரவாணிகள் பெரும்பாலும் அறுவை சிகிழ்ச்சை மூலமாகவும், ஹார்மோன் மாற்றுக்கான மருந்துகளாலும் வலுவிழந்தவர்களாக உணர்கின்றனர். அவர்கள் விரும்பும் ஒதுக்கும் வேலைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. கடின வேலைகளை ஒதுக்கியே வைத்துள்ளனர். பலவான்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க பலவீனமாக உணரும் ஒரு அரவாணிக்கு இருக்கும் ஒரே வழி அருவருப்பைத் தூண்டி, அவர்களை தாமாகவே விலகிச் செல்ல வைப்பது மட்டுமே.
ஒரு நண்பரிடம் இந்த புத்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அரவாணிகளால் எந்தத் தொழிலையும் தொடங்க முடியாது அவர்களால் எங்கும் நிரந்தரமாக வேலை பார்க்கவும் முடியாது நிலையான வருமானம் இல்லாதது அரவாணிகளின் பொருளாதார நிலை மட்டமாக இருக்க காரணம். இந்த நிலைக்கு அரவாணிகள் நடந்து கொள்ளும் விதம்தானே காரணம் என்றார். அதுதான் இன்றைய பொதுப் புரிதல். நிலையான வருமானம் இல்லாமையால் அவர்களது தொழிலும் நடத்தையும் அருவருப்பாக உள்ளதா அல்லது அந்நடத்தையால் நிலையான வருமானம் இல்லாமல் போனதா? பத்மபாரதியின் புத்தகம் இன்றைய பொதுப்புரிதலை கேள்விக்குள்ளாக்குகிறது. M.A படித்த பட்டதாரி அரவாணி , வேலை கிடைக்காமல், 10 நாள் பட்டினிக்குப் பிறகு, தன் சுயமரியாதையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு முதன்முதலாக பிச்சை கேட்டு கையேந்தும் தருணம் வாசிப்பவர்களை நஞ்சதிரச்செய்வது.
ஒரு எளிய சிற்றுண்டி விடுதி தொடங்கினால் கூட அங்கு பெண்கள் யாரும் சாப்பிட போவதில்லை. ஆண்கள் மட்டுமே செல்கின்றனர். அதிலும் சிலர் உணவுக்கு பணம் கொடுப்பதில்லை, மாறாக வம்புக்கு இழுத்து கடையை அடித்து நொறுக்குகின்றனர். எந்த வேலையில் சேர்ந்தாலும் பணியிடத்தில் கிண்டலும், பாலியல் தொந்தரவும் நிச்சயம்.
எனில், பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழிலையும் மட்டும்தான் இந்த சமூகம் அரவாணிகளின் தொழிலாக ஏற்றுக்கொள்கிறது. பிச்சை எடுப்பதையும்கூட அவர்கள் நிம்மதியாக செய்துவிட முடியாது. பிச்சை இரந்து செல்லும் இடத்தில் “மேலே கைவைக்கும்” கடை முதலாளிகளும் உண்டு. அதனால்தான் “தரங்கெட்ட தென்னாடு, தேய்ந்துபோன தென்னாடு” என்ற வழக்கு அரவாணிகளிடையே புழங்குகிறது என்பதை அரவாணிகளின் வாய்மொழியாகவே பதிவு செய்கிறார்.
ஆனால் வட இந்தியா அரவாணிகளுக்கு இந்த அளவு மோசமில்லை . அரவாணிகளின் வாழ்த்தை மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணனின் வாழ்த்தாகவே கொள்கின்றனர். வீட்டிலும், கடையிலும் நடக்கும் விழாக்களுக்கு அரவாணிகளை பல மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து அழைத்து வந்து வாழ்த்த வைப்பதும் நடக்கிறது. அங்கெல்லாம் பிச்சை எடுப்பதோ, பாலியல் தொழிலோ இல்லை என்றல்ல. இப்படி ஒரு மதிப்புமிக்க ஒரு வழியும் உள்ளது என்பதே “வாழவைத்த வட நாடு” என்று போற்ற காரணம்.
வருமானம் சற்று செழிப்பான எல்லா இடங்களிலும் போலிகள் உண்டு. சாதாரண ஆண்கள் போலி அரவாணிகளாக வேடமிட்டு வசூல் செய்வதும் உண்டு. இதை மற்ற அரவாணிகள் கண்டுபிடித்து துரத்திவிடுகின்றனர். போலி அரவாணிகள் “கைதட்டலில் சொதப்புவது” காட்டிக்கொடுத்துவிடும் என்று வாசித்தபோது புன்னகைத்துக்கொண்டேன். வெண்முரசில் அர்ஜுனன் போல, எழுகதிர் சிறுகதையில் ஸ்ரீகண்டன் நாயர் போல உள்ளூர அவர்களால் பெண்ணாக உணர முடியவில்லை. அதனால்தான் கைதட்டல் சொதப்புகிறது.
புத்தகத்தின் இந்த இயல் வெறும் வடக்கு தெற்கு பற்றிய அவதானிப்போடு நிற்கவில்லை. அங்கிருந்து திரும்ப தென்னாட்டுக்கே வருபவர்களையும் அடையாளம் காண்கிறது. சிறு எண்ணிக்கையிலிருக்கும் அரவாணிகளிலும் சிறுபான்மையினரின் இந்த “வீடு திரும்புதல்” நிகழ்வையும் அவதானித்து பதிவு செய்தது வியப்புதான். ஆனால் இத்தகைய கோணங்கள்தான் புத்தகத்துக்கு ஆழம் சேற்கின்றன. ஆம், வடக்கு வாழ வைக்கிறது, ஆனாலும் அங்குள்ள வாழ்க்கை கிட்டத்தட்ட அடிமையாக வாழ்வதுதான். பணம் இருக்கும், பாதுகாப்பு இருக்கும். ஆனால் ஒரு குடும்பமாக குருவுக்கு கட்டுப்பட்டு வாழும் இடத்தில் சுதந்திரம் இருப்பதில்லை. அந்த இறுக்கம் தாளாமல் சிலர் திரும்பி தென்னாட்டுக்கே வந்து வேறு வழியின்றி இழிதொழிலை ஏற்றுக்கொள்கின்றனர். சுதந்திரத்திற்காக வருமானத்தையும், பாதுகாப்பான, மதிப்பான வாழ்க்கையையும் விட்டுவிட தயாராக இருப்பது தான் இங்கு ஆழமான முரண். ஒரு இலக்கியவாசகன் இதன் வழியே வெகுதூரம் செல்ல முடியும்.
கூத்தாண்டவர் திருவிழா பற்றிய இயல் முக்கியமான ஒன்று. அரவான் தான் கூத்தாண்டவர். அரவான் பற்றிய கதைகளே மூன்று உள்ளன. அனைத்துமே கிருஷ்ணனை பெரும் சூழ்ச்சிக்காரன் ஆக காட்டுகின்றன. அதில் ஒரு கதையில் அரவானே திரௌபதியிடம் “அறுத்திடம்மா” என்று சொல்ல திரௌபதி அரவாணை பலி கொடுக்கிறாள். எல்லா கதைகளிலுமே அரவான் மகாபாரதப் போரை ஒரே நாளில் முடிக்கும் வல்லமை உடையவனாகவே வருகிறான். அரவாணிகள் அரவானை கணவனாக வரித்துக் கொண்டவர்கள். அரவான் இறக்கும் முன் கேட்ட வரத்துக்காக கிருஷ்ணன் மோகினியா வடிவம் எடுப்பதை மீள நடிக்கும் நிகழ்வு. மிகவும் விந்தையான ஒரு விஷயம் கூத்தாண்டவர் திருவிழாவில் சாதாரண ஆண்கள் கிட்டத்தட்ட 3000 பேர் அரவாணிகளுடன் நின்று அரவானுக்கு மனைவியாக தாலி கட்டிக் கொள்கின்றனர். அன்று ஒருநாள் அத்தனைபேரும் மோகினிகள்தானே.
அரவானை கணவனாக நினைத்து வழிபட்டாலும் முர்கே வாலி மாதா தான் அரவாணிகளின் தெய்வம் . மாதாவுக்காக நடத்தப்படும் சடங்குகள், முக்கியமாக விரைத்தறிப்பு சடங்குகளை வாசிக்கும்போது பற்கள்கூச கண்கள் மங்கிவிடுகின்றன. ஆனால் பத்மபாரதி அதை மூடநம்பிக்கை என்று புறந்தள்ளுவதை விட ஒரு சமுதாயம் அவர்களுக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாடு என்றும் அதை அவர்களே எண்ணி வெளியே வரவேண்டும் என்றும் தான் எழுதுகிறார்.
சமுதாயம் பற்றிய இயல் அரவாணிகள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்வதையும், தாய் மகள் என்ற உறவுகளை தத்தெடுத்துக்கொள்வதையும் விரிவாக பதிவுசெய்கிறது. மருத்துவம் பற்றிய பகுதியை வாசிக்கும்போது கள ஆய்வு எத்தனை உழைப்பை கோருவது என்பதை உணர முடிந்தது. உள்ளம் பெண்ணாக உணர ஆரம்பித்த பிறகு உயிரை பணயம் வைத்தாவது தன் உடலையும் பெண்ணாக்கிவிடுவது என்பது அரவாணிகளின் துணிவு. விரைத்தறிப்பின்போது இறப்பு நிகழலாம் என்பதால் முந்தைய நாள் பிடித்தவற்றை சாப்பிடச்சொல்கிறார்கள். எத்தனை பேர் அப்படி இறந்திருந்தால் இந்த சடங்கு வழக்கமாகி வந்திருக்கும். எண்ணவே மலைப்பாக இருக்கிறது.
விருது அறிவிக்கப்பட்ட பின்தான் பத்மபாரதி பற்றி அறிந்து புத்தகத்தை வாசித்தேன். ஆய்வு புத்தகம் என்றாலும் மொழி அவ்வப்போது பத்மபாரதி நம்மிடம் கதை சொல்வது போலவே உள்ளது. தேவையான இடங்களில் கறாரான வரையறை, வாய்மொழியாக கேட்ட தகவல்களைச் சொல்லும்போது ஊகங்களுக்கு இடம் கொடுக்கும் மொழி. இந்த வாசிப்பு அரவாணிகள்மீதான பல பிம்பங்களை உடைத்துவிட்டது. அன்று சிறுவனாக நான் தலையில் வாங்கிய அடியை இன்று அரவாணியின் ஆசியாகவே எடுத்துக்கொள்கிறேன்.
ஆய்வாளர் பத்மபாரதியின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் முன்னால் பணிகிறேன். இந்த புத்தகத்துக்காகவே அவருக்கு நன்றிகள். தமிழ் விக்கி தூரன் விருது பெறும் பத்மபாரதிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி
பா.விஜயபாரதி
சென்னை
அஞ்சலி, நெல்லை கண்ணன்
இலக்கியப் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் என் நண்பர் எழுத்தாளர் சுகாவின் தந்தை. எனக்கு தனிப்பட்ட முறையிலும் அணுக்கமானவர். நெல்லையின் மரபிலக்கிய ஆளுமைகளில் ஒருவர்.
அஞ்சலி
August 17, 2022
முதற்சுவை
அம்மாவுக்கு நல்ல குரல், ஆனால் பாட்டு பாடுவதில்லை. கவிதைகள்தான் மெல்லிய ராகத்துடன் சொல்லுவாள். சம்ஸ்கிருத யாப்பை ஒட்டி மலையாளத்தில் கவிதை இலக்கணம் அமைந்தபோது சம்ஸ்கிருதத்தில் உள்ள சந்தங்களும் கவிதையில் குடியேறின. அனுஷ்டுப்பு சந்தத்தில்தான் பழைய கவிதைகள் பெரும்பாலும் இருக்கும். துஞ்சத்து எழுத்தச்சன் கிளிப்பாட்டு என்ற நாட்டார் சந்தத்தில் தன் ‘அத்யாத்ம ராமாயணம்’ காப்பியத்தை எழுதி அதைப்பிரபலப்படுத்தினார். பின்னர் கிளிப்பாட்டு முக்கியமான ஒரு சந்தமுறையாக மாறியது. கிட்டத்தட்ட சொல்வதுபோலவே ஒலிக்கும் கேட்க ஒருவகை ஆசிரியப்பா. பெரும்பாலான மலையாளிகள் கவிதைகளை செவியின்பமாகவே அறிந்திருப்பார்கள். அம்மாவும் அப்படித்தான்.
அம்மா இளம்பெண்ணாக இருக்கும்போதுதான் சங்கம்புழகிருஷ்ணபிள்ளையின் ரமணன் என்ற கதைக்கவிதை வெளியாகி பெரும்புகழ்பெற்றது. அன்றெல்லாம் சந்தைகளில் அரையணாவுக்கு ரமணனின் மலிவுப்பதிப்பு கிடைக்கும். எழுதப்படிக்கத்தெரிந்த பெண்கள் எல்லாரும் அதை வாங்கி உணர்ச்சிகரமாகப் பாடுவார்கள்.கற்பனாவாதத்தின் கனிந்த நுனி அந்தக் கவிதை. இசைத்தன்மையும், இனிய சொல்லாட்சிகளும், மிகையுணர்ச்சிகளும் கலந்தது. மலையாளமொழி சங்கம்புழ கவிதைகள் வழியாகவே பதின்பருவத்தை அடைந்தது என்று பின்னர் விமர்சகர்கள் எழுதினார்கள்.
சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் அவரது நண்பர் இடப்பள்ளி ராகவன்பிள்ளையும் இரட்டையர் என்ற அளவில் புகழ்பெற்றவர்கள். இடப்பள்ளி ராகவன்பிள்ளை ஒரு பெண்ணைக் காதலித்தார். அவளுடைய பெற்றோர் இடப்பள்ளி ராகவன்பிள்ளையை ஏற்கவில்லை. பெற்றோரை மறுதலிக்க அவள் முன்வரவுமில்லை. ஆகவே இடப்பள்ளி ராகவன்பிள்ளை மனம் உடைந்து தூக்கு போட்டுக்கொண்டார். அந்தக் கொந்தளிப்பில் குடிகாரராக அலைந்த சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை ஆறுமாதம் கழித்து எழுதிய காவியம் ‘ரமணன்’. அதில் ஆட்டிடையனாகிய ரமணன் பிரபுகுடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகையைக் காதலிக்கிறான். அவளும் காதலிக்கிறாள்.
‘கானனச் சாயையில் ஆடு மேய்க்கான்
ஞானும் வரட்டயோ நின்றே கூடே?’
என்று அவள் கேட்க
‘எங்கிலும் சந்திரிகே லோகம் அல்லே?
பங்கில மானஸர் காணுகில்லே?’
என்று அவன் நிராகரித்துவிடுகிறான். அவளுடைய நினைவை அவன் பூத்த மலர்மரங்கள் நிறைந்த மலைச்சரிவில் அமர்ந்து புல்லாங்குழலில் இசைக்கிறான். அவளுடைய பெற்றோர் காதலை நிராகரிக்கிறார்கள். அவள் அவனுடன் வரத்தயார்தான். அவன்தான்
‘பாடில்லா பாடில்லா நம்மை நம்மள்
பாடே மறந்நு ஒந்நும் செய்து கூடா!’
என்று நிராகரிக்கிறான். அவளுடைய திருமணம் நடக்கிறது. மனம் உடைந்த ரமணன் காடுகளில் புல்லாங்குழல் ஊதி ஊதி அலைகிறான். தன் நெஞ்சில் உள்ள இசை முழுக்கத் தீர்ந்து போனபின்னர் ஒரு பூத்தமரத்தில் காட்டுக்கொடியில் தூக்கிட்டு இறக்கிறான்
பிரிட்டிஷ் கற்பனாவாதத்தில் இருந்து நேரடியாக இறங்கி வந்த கவிதை இது. வேர்ட்ஸ்வர்த்துக்குப் பிரியமான மேய்ச்சல் வாழ்க்கையைத்தான் அப்படியே சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் இலட்சியக்கனவாக ஆக்கிப் பாடியிருந்தார். கேரளத்தில் அடர்காடுகளும், நீர்நிலைகளும், வயல்களும்தான். ஆகவே அங்கே எந்தக்காலத்திலும் மேய்ச்சல் வாழ்க்கை இருந்ததில்லை. கன்றுகாலிகள் வீட்டில்தான் வளர்க்கப்பட்டன. முற்றிலும் தெரியாத ஒரு வாழ்க்கைமீது எழுந்த பிரியம் ஒரு கனவுபோல அனைவரையும் இழுத்துக்கொண்டது.
இன்னொன்றும் தோன்றுகிறது, ரமணனின் கதாபாத்திர உருவகத்தில் கிருஷ்ணன் இருக்கிறான். கேரளம் ஐந்து நூற்றாண்டாக கிருஷ்ணபக்தி வேரூன்றிய மண். எங்கும் கோபிகாவல்லபனாகிய வேணுகோபாலன் காதலிசை எழுப்பி நிற்கும் ஆலயங்கள். அங்கெல்லாம் தினமும் ராதாகிருஷ்ண காதலைப்பாடும் ஜெயதேவரின் அஷ்டபதிப் பாடல்கள். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையே அஷ்டபதியை மலையாளத்தில் மொழியாக்கம்செய்திருக்கிறார்
வேர்ட்ஸ்வர்த்தும் ஜெயதேவரும் கலந்த ஒரு வெற்றிகரமான கலவை ‘ரமணன்’. கோபிகைகளை வென்ற கண்ணன் சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் காவியத்தில் காதலில் தோற்று உயிரைவிடுகிறான். நாணயத்தின் மறுபக்கம். ஒருவகையில் இரண்டுமே காதலின் சர்வ வல்லமையைக் கொண்டாடக்கூடிய கதைகள்தானே? இதை சற்று நக்கலாக கெ.ஜி.சங்கரப்பிள்ளை இப்படி ஒரு கவிதையில் எழுதினார்.
பதினாறாயிரத்து எட்டுக்கு
இடையன்
என்றாலும்
ஒன்று கைவிட்டுப் போனபோது
தூக்கில் தொங்கினான்
பரம கஞ்சன்!
அம்மா ரமணனை முழுக்கவே மனப்பாடமாக்கியிருந்தாள். ரமணன் வழியாகத்தான் அவளுக்குக் கவிதையில் ஈடுபாடு வந்தது. கோயில்குளத்துக்குக் குளிக்கப்போகும்போது கூடவே சேர்ந்து குளித்த நெய்யாற்றின்கரை தங்கம்மை அக்கா ரமணனின் சில வரிகளைப் பாடுவதைக் கேட்டாள். மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டாள். அந்தவரிகள் அப்படியே மனதுக்குள் நுழைந்துகொண்டன. வீட்டுக்கு வந்து ரமணன் ஒரு பிரதி வாங்கித்தரவேண்டுமென அண்ணாவிடம் கேட்டாள்.
அன்றெல்லாம் குலஸ்திரீகள் கதைகவிதை வாசிப்பது கற்புக்கு இழுக்கு என்று எண்ணப்பட்டு வந்தது. மூத்த அண்ணா கை ஓங்கியபடி அடிக்கவே வந்துவிட்டார். ‘நாயுட மோளே வெட்டிக் கொந்நு குழிச்சுப் போடுவேன்..போடி உள்ள’ ஆனால் இளைய அண்ணன் அன்று புகழ்பெற்றிருந்த கம்யூனிஸ்டு. அவர் ரகசியமாக ஒரு பிரதி வாங்கி வீட்டில் வேலைக்கு வரும் காளிப்பெண்ணிடம் கொடுத்தனுப்பினார்.
காளிப்பெண்ணுக்கும் அம்மாவுக்கும் ஒரே வயது, ஒரே கனவு. இருவரும் ரகசியமாகத் தென்னந்தோப்புக்குள் ஓலையும் மட்டையும் சேகரித்து வைத்திருக்கும் கொட்டகைக்குள் அமர்ந்து ரமணனை மனப்பாடம் செய்தார்கள். காளிப்பெண்ணுக்கு எழுத்து தெரியாது. அவள் காதால் கேட்டே கற்றுக்கொண்டாள். இருவரும் மீண்டும் மீண்டும் அந்தவரிகளைப் பாடியபடி கனவுலகில் அலைந்தார்கள். பூவன்றி வேறில்லாத காடு. புல்லாங்குழலின் இனிய இசை. அதை உணர்ச்சிகரமாக வாசிக்கும் பேரழகன். காதலுக்காக, ஒரு பெண்ணுக்காக, உயிரையே இழக்கக்கூடியவன்!
அன்றெல்லாம் அம்மாவோ காளிப்பெண்ணோ ஒருவர் ரமணனில் ஏதேனும் ஒருவரியை முனகினால்கூட இன்னொருவர் அதைப் பாட ஆரம்பித்துவிடுவார். இருவரும் சேர்ந்து பாடுவார்கள். சிலசமயம் வேறு சமவயதுப்பெண்களும் சேர்ந்து பாடுவார்கள். ‘ரமணன் கொஞ்சநேரம் பாடினால் அப்படியே கண்கலங்கி அழுகை வந்துவிடும்’ என்று அம்மா சொல்வாள். எல்லாப் பெண்களும் சேர்ந்து கண்கலங்கி இனிய துயரத்தைப் பெருமூச்சாக வெளியே விடுவார்கள்.
ரமணனின் பாதிப்பு மலையாள மனதில் நிரந்தரமானது. அன்றுமுதல் இன்று வரை துயரத்தில் முடியும் காதல்கதைகள்தான் மலையாளத்தில் பெருவெற்றி பெற்றிருக்கின்றன. தகழி சிவசங்கரப்பிள்ளையின் ‘செம்மீன்’ ஓர் உதாரணம். ‘மானஸ மைனே வரூ’ என்று கடற்கரையில் நிலவில் அமர்ந்து பாடும் பரீக்குட்டி ஒரு ரமணன் அல்லவா? அப்படி எத்தனை திரைப்படங்கள்!
அம்மா ரமணனில் இருந்து குமாரன் ஆசானுக்கு வந்து சேர்ந்தார். ‘நளினி’, ‘லீலா’ எல்லாமே காதல் தோல்வியின் கதைப்பாடல்கள்தான் என்று இப்போது தோன்றுகிறது. அவை எளிய மானுடக்காதல்கள் அல்ல, எய்தவே முடியாத இலட்சியக்காதல்கள், அவ்வளவுதான். அம்மா விடிகாலையில் எழுந்து சமையலை ஆரம்பிக்கும்போது மெல்லிய குரலில் குமாரன் ஆசானின் வீணபூவு [விழுந்தமலர்] நீள்கவிதையைப் பாடுவதை நான் பலமுறைகேட்டிருக்கிறேன். உதிர்ந்த மலரை நோக்கிக் கவிஞன் பாடுகிறான்
குமாரனாசான்ஹா புஷ்பமே, அதி துங்க பதத்தில்
எத்ர சோ·பிச்சிருந்நு ஒரு ராக்ஞி கணக்கே நீ?
[‘ஓ மலரே உன்னதமான இடத்தில்
எத்தனை சோபித்திருந்தாய் நீ, ஒரு மகாராணியைப்போல!’]
‘அவனி வாழ்வு ஒரு கினாவு! கஷ்டம்!’ என்ற கடைசிவரியைப் பலமுறை மெல்ல ஆலாபனைசெய்து அம்மா நிறுத்துவாள். குளிருக்குப் போர்வையைப் போர்த்தியபடி கண்மூடிக்கிடந்து நான் உதிர்ந்த மலரின் விதியை எண்ணிக் கண்ணீர் விடுவேன். வழ்வெனும் துயரக் கனவு. மகத்தான பிரபஞ்சவிதிகளால் கொஞ்சம் கூடக் கருணை இல்லாமல் தட்டித்தள்ளப்பட்ட மலர். உதிர்வதைத்தான் எல்லா மலர்களும் நூறு நுறு வண்ணங்களால் கொண்டாடுகின்றனவா என்ன?
அம்மாவுக்கு பின்னர் இடச்சேரி, ஜி.சங்கரக்குறுப்பு, வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் கவிதைகளில் ஈடுபாடு ஏற்பட்டது. ஆனாலும் அம்மாவுக்கு மிகவும் பிடித்த கவிஞர்களாக மூவரே இருந்தார்கள். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளைக்கு எப்போதும் ஒரு தனி இடம். அதன்பின்னர் குமாரன் ஆசான். முதலிடம் துஞ்சத்து எழுத்தச்சன்தான். அம்மாவின் அத்யாத்ம ராமாயணம் பிரதி இப்போதும் என்னிடம் உள்ளது. வீட்டில் இருந்த புத்தகங்களை எல்லாம் செலவுக்கு விற்ற அண்ணா அந்நூலை விற்கவில்லை, வீடுதோறும் அந்நூல் இருந்தமையால் யாரும் வாங்கவில்லை.
முழுக்கோட்டில் நாங்கள் இருந்த காலகட்டத்தில் வருடம்தோறும் ஆடிமாதம் அம்மா துஞ்சத்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு நூலை வாசிப்பாள். அது ஒரு கேரளத்துச் சடங்கு. ஆடிமாதம் முழுக்க மழைச்சாரல் இருக்கும். நோய்கள் வரும் மாதம். விவசாய வேலைகள் குறைவானதனால் பட்டினி பரவும் மாதமும்கூட. ராமாயணம் அவை அனைத்தில் இருந்தும் ஒரு காப்பு என்று அக்காலத்தில் நம்பினார்கள்.
காலையில் குளித்துக் கூந்தலைப் பின்பக்கம் முடைந்திட்டு அதில் துளஸி இலைசூடி அம்மா வரும்போது வந்திருக்கும் பாட்டிகளும் பெண்களும் குழந்தைகளும் எழுந்து நின்று வணங்குவார்கள். ‘விதுஷி’ என்று அம்மாவை ஊரிலே சொல்லுவார்கள். குழந்தைகளை எழுத்துக்கு இருத்துவதற்கு முன்பு அம்மாவிடம் ஆசி வாங்க அழைத்து வருவதுண்டு. வித்யாதேவியின் ஆசி பெற்ற பெண்மணி. அம்மா அமர்ந்தபின் எல்லாரும் அமர்வார்கள்.
கூடத்தில் முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, வாழையிலையில் பூவும் பழமும் படைத்து, பூஜை செய்வோம். பெரும்பாலும் பூஜையை நான்தான் செய்வேன். அம்மா வாசிக்க ஆரம்பிப்பாள். முதலில் நூலைத்திறந்து கும்பிட்டபின் கணபதி ஸ்துதி, சரஸ்வதி ஸ்துதி, ஹனுமான் ஸ்துதி, விஷ்ணு ஸ்துதி என்று வாசித்தபின் அம்மா எங்கிருந்தோ தாளில் பிரதிசெய்து வைத்திருந்த எழுத்தச்சன் ஸ்துதியையும் வாசிப்பாள். அதன் பின்பு விட்ட இடத்தில் இருந்து கதை தொடங்கும்
அம்மாவின் குரல் இனிமையான உலோகச்சத்தம் கலந்தது. எழுத்தச்சனைப் புரிந்துகொள்வது மிக மிக எளிது. நாட்டுப்புறப்பாடல் போலவே இருக்கும். புராண நுட்பமோ, தத்துவ ஆழமோ இருக்கும் இடங்களை இருமுறை வாசித்தபின் அவற்றுக்குப் பொருள் விளக்கம் சொல்வாள். உணர்ச்சிகரமான காட்சிகளை நாடகப்பாங்குடன் வாசித்துச் சொல்வாள். சீதையின் கதை கேட்கும்போதெல்லாம் பெண்கள் அதில் மூழ்கிவிடுவார்கள்.
நன்றாக நினைவிருக்கிறது, ஒருமுறை நான் ஓரமாக அமர்ந்து கேட்கிறேன். சீதை அசோகவனத்தில் திரிசடையிடம் பேசும் காட்சி. அம்மா வாசித்துச்செல்கிறாள். அவள் தன்னையே மறந்துபோய்விட்டிருந்தாள். அந்தக் கூடத்தில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், பலவயதை, பல சாதிகளை, பல குடும்ப நிலைகளைச் சார்ந்தவர்கள் அனைவருமே கன்னங்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்கள்.
ஒருமுறை அம்மா சீதை வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருக்கும் இடத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். சட்டென்று சந்தம் மாறுபட்டது. நான் உடனே கண்டுபிடித்துவிட்டேன். அது குமாரன் ஆசானின் ‘சிந்தாவிஷ்டயாய சீதா’ [சிந்திக்கும் சீதை] என்ற கவிதை. வசிஷ்டரின் ஆசிரமத்தில் சீதை ராமனைப்பற்றி ஆங்காரத்துடன் ஆவேசத்துடன் சிந்திக்கும் இடம் அது. ராஜதர்மத்துக்காகத் தன்னுடைய எல்லையில்லாத பிரியத்தை நிராகரித்த அவன் எப்படி ஒரு புருஷோத்தமன் ஆக முடியும் என்று அவள் கேட்கும் வரிகள் அக்காலத்தில் கேரளத்தை உலுக்கியவை.
அந்த சந்தம் முடிந்ததும் ஒரு பிராமணப்பாட்டி ”இத இதுக்கு முன்னாடி கேட்டதில்லியே?” என்றாள். அம்மா மெல்ல ”இதும் ராமாயணம்தான்..” என்றாள். பாட்டி ”ஆரு எழுதினது?” என்றாள். ”குமாரன் ஆசான்” என்றாள் அம்மா மெல்ல. ஆசாரமான பாட்டி உடனே எழுந்து கத்தப்போகிறாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆசான் ஈழவர் வேறு. பாட்டி அம்மாவையே கூர்ந்து பார்த்தபின் பெருமூச்சு விட்டு ”இன்னொரு வாட்டி படிடீ” என்றாள்.
அம்மா என்னை கர்ப்பமாக இருக்கும்போதுதான் காளிப்பெண் தற்கொலைசெய்துகொண்டாள். அவள் கணவன் இன்னொருத்தியைக் கூட்டி வந்தான். புலையர்சாதியில் அன்று அது சாதாரணம். கடன் வாங்கிய பணம் கொடுக்க முடியாவிட்டால் மனைவியைக் கொடுத்துவிடுவார்கள். காளிப்பெண் அப்படியே ஓடிப்போய்ப் பின்பக்கம் இருந்த ஆழமான கிணற்றில் குதித்து, கீழே சென்று சேர்வதற்குள்ளாகவே மண்டை உடைந்து இறந்தாள். அம்மாவுக்கு நாலைந்து நாள் காய்ச்சலும் வலிப்பும் இருந்தது.
அதன்பின்னர் அம்மாவுக்கு ரமணன் கவிதை பிடிக்காமல் ஆகியது. அதைப் பாடுவதே இல்லை. நான் பாடினால்கூட ‘வேண்டாம்டா, அது ஒரு அச்சானியம் பிடிச்ச பாட்டு’ என்று சொல்லிவிடுவாள். மலையாள நவீன இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்து அப்படியே தீவிர இலக்கிய வாசகி ஆனாள். ஆங்கில இலக்கியங்களில் ஈடுபாடு வளர்ந்தது. டபிள்யூ. டபிள்யூ. ஜேகப்ஸ், தாக்கரே, ஜார்ஜ் எலியட் என்று தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தாள். அக்கால மனநிலைப்படி பிரிட்டிஷ் மக்களே ஆகச்சிறந்த இலக்கியத்தைப் படைக்க முடியும் என்று அவளும் நம்பினாள்
அம்மாவைக் கவர்ந்த எர்னெஸ்ட் ஹெமிங்வே அந்த எண்ணத்தை மாற்றினார். ஹெமிங்வேயின் ‘யாருக்காக மணி முழங்குகிறது?’ நாவலை அம்மா நாலைந்து தடவைக்குமேல் வாசித்திருக்கிறாள். ‘அது ஒரு கிளாஸிக். மொழியை அதுபோல யாருமே கையாண்டதில்லை’ என்பாள்.
பிரெஞ்சு இலக்கியம் கொஞ்சம் பிந்தி அறிமுகமாயிற்று. அதற்குக் காரணம் தற்செயலாகக் கிடைத்த லே மிஸரபிள்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பு. இரவெல்லாம் தூங்காமல் அம்மா அதையே படித்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் வாசிப்பு எல்லாமே தற்செயல்தான். அவளுக்கு வாசிப்பைப் பகிர்ந்துகொள்ள என்னைவிட்டால் யாருமே கிடையாது.
அம்மா தஸ்தயேவ்ஸ்கி, தல்ஸ்தோய் யாரையுமே கேள்விப்பட்டதில்லை. ருஷ்ய இலக்கியமே அறிமுகம் கிடையாது. தமிழிலக்கியத்தில் ஜெயகாந்தன் தி.ஜானகிராமன் இருவரையும் பொருட்படுத்திப் படித்தாள். அவர்கள் ஆனந்த விகடன் வழியாக அறியப்பட்டிருந்தார்கள். புதுமைப்பித்தன் ,மௌனி எல்லாம் அக்காலத்தில் சிலநூறுபேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். அம்மாவுக்குத் தமிழிலக்கியம் மீது பெரிய மதிப்பு ஏதும் உருவாகவில்லை. நான் முதலில் கல்கி, சாண்டில்யன் பின்பு ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் என்று முன்னேறினேன். அம்மாவிடம் ஆவேசமாகப் பேசிப் புல்லரிப்பேன்.
அம்மா இருவரையுமே நிராகரித்தாள். இருவரும் இரண்டுவகைக் கற்பனாவாதிகள் என்றாள். ஜெயகாந்தனின் கற்பனாவாதம் கருத்துக்கள் சாந்தது. அவர் இலட்சியவாதி. தி.ஜானகிராமனின் கற்பனாவாதம் மனித உறவுகளைச் சார்ந்தது. கற்பனாவாதம் எல்லாம் முதிராத வாசிப்புக்கு உரியவை. பக்குவமடைந்த மனிதர்களுக்கு அவை உதவாது. இலக்கியத்தின் உச்சகட்ட ஞானம் என்பது முற்றிலும் சமநிலை கொண்டதாக இருக்கும் என்றாள்
ஆனால் அம்மா விக்டர் யூகோவின் லே மிஸரபிள்ஸ் நாவலை ஒரு கற்பனாவாதப் படைப்பாகக் காணவில்லை. அதை ஒரு கிளாசிக் என்றே சொல்லிவந்தாள். பிரெஞ்சு எழுத்தாளர்களில் எமிலி ஜோலா, மாப்பஸான், ரோமெய்ன் ரோலந்த் போன்றவர்கள் அம்மாவுக்குப் பிடித்திருந்தார்கள். எமிலி ஜோலாவின் பரபாஸ் நாவலை நாலைந்துமுறை அம்மா படித்திருக்கிறாள். ஆனாலும் அம்மாவுக்கு லே மிஸரபிள்ஸ் தான் ‘மேஜர் கிளாஸிக்’
அம்மாவுக்குத் தூக்கமின்மை வியாதி இருந்திருக்கலாம். ஒரு நாளைக்கு மூன்றுமணிநேரம் தூங்கினால் அதிகம். அதனால் உடல் மெலிந்துகொண்டே வந்தது. சிறுவயதில் மிக அழகானவள் என்று சொல்வார்கள். நாற்பதைந்து வயதுக்குள் நன்றாக மெலிந்து கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழிந்து வயோதிகத்தோற்றம் வந்துவிட்டது. ஆனாலும் சட்டென்று மனதைக் கவரும் அழகிய தோற்றம் அம்மாவுக்கு இருந்தது. என் நண்பர்கள் எல்லாருமே அதைச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அம்மாவின் கண்கள்தான் என்று நினைக்கிறேன். அவை மிக அழகானவை.
எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை. அம்மா மண்ணெண்ணை விளக்கை அருகே வைத்துக்கொண்டு படுத்தபடி படிப்பாள். நான் தூக்கம் விழித்துப்பார்க்கும்போது மொத்த வீடே இருட்டில் இருக்கும். இருளின் திரையில் ஒரு ஓவியம் போல செஞ்சுடர் ஒளியில் நெளியும் அம்மாவின் முகம். நெற்றியின் இருபக்கமும் லேசாக நரை ஓடிய கூந்தலிழைகள். அம்மா படிக்கும்போது அழுவதோ உணர்ச்சிமாற்றம் கொள்வதோ இல்லை. முகம் கனவில் நிலைத்துப்போய் இருக்கும்.
ஏன் அம்மாவுக்கு லே மிஸரபிள்ஸ் அந்த அளவுக்குப் பிடித்திருந்தது? நான் அதை இருமுறை படித்திருக்கிறேன். அது ஒரு கிளாஸிக் என்றுதான் இப்போது நானும் நினைக்கிறேன். மனிதகுலம் தன்னைப்பற்றித் தான் கொண்டிருந்த நம்பிக்கையின் ஆவணம் அது. அம்மா எப்போதுமே கனவுச்சாயல் கொண்ட நாவல்களை நிராகரித்து வந்தார். எம்.டி.வாசுதேவன் நாயரை அவளுக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. பிமல் மித்ராவைப் பிடிக்கவில்லை. சரத்சந்திரர் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் லே மிஸரபில்ஸை நாடிக்கொண்டிருந்தாள். ‘நன்மை மீது நாட்டம் இல்லாவிட்டால் தீமைகளை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?’என்று ஒருமுறை அந்நாவலைப் பற்றிப் பேசும்போது சொன்னாள். அந்நாவலில் உள்ள உக்கிரமான துன்பநிலைகள் அம்மாவைக் கவர்ந்தனவா என்ன?
அம்மா 1985 இல் தன் 54 ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்டாள். பொதுவாக முதியவர்கள் தற்கொலைசெய்துகொள்வது மிக மிக அபூர்வம் என்பார்கள். ஏனென்றால் இனி நாட்கள் மிச்சமில்லை என்று ஆகும்போதுதான் வாழ்க்கையின் அருமை தெரிகிறது. வாழ்க்கையைப் பற்றிப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமலாகிவிடுவதனால் ஏமாற்றங்களும் இல்லாமலாகின்றன. இளம் வயதுத் தற்கொலைக்குப்பின்னால் ஒரு நம்பிக்கையின் முறிவு இருக்கிறது. முதிய வயதுத் தற்கொலைக்குப் பின்னால் ஒரு தத்துவப்பிரச்சினை இருக்கிறது.
அம்மா தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணங்களை எவ்வளவோ சொல்லலாம். அந்தத் தருணத்து வேகம். நெடுநாளைய வன்மம். தனிமை. அர்த்தமின்மையை உணர்ந்தது. ஆனால் ‘ரமண’னும் ஒரு காரணம் என்று எனக்குத்தோன்றுவதுண்டு.
மறுபிரசுரம், முதற்பிரசுரம்Feb 18, 2013
தமிழ்விக்கி – தூரன் விருது விழா -கடிதங்கள்
நேற்றைய ஈரோடு நிகழ்வுக்கு நண்பர்கள் நாங்கள் வந்திருந்தோம்.நேர்த்தியான நிகழ்ச்சி ஏற்பாடுகள் மனதுக்கு நிறைவாக இருந்தது.
நிகழ்ச்சியை நெறிப்படுத்திய தம்பி மயங்கி விழுந்ததும் கிருஷ்ணன் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்ட லாவகமும் நிகழ்ச்சிக்கு தெளிவை தந்தது.
அ.க.பெருமாள் அவர்களின் விளிம்பு நிலை மக்களின் நிலை குறித்து பேசியதும் பத்மாவதிக்கு சில நுண்ணிய யோசனைகள் சொன்னதும் அருமை.
உங்கள் உரையில் தமிழ் விக்கி தொடங்க வேண்டிய அவசியமும் அதைத் தொடர்ந்த இடர்பாடுகளும் அதை வெற்றி கண்ட விதமும் தமிழ் செய்த நல்லூழ்..
பத்மாவதி ஏற்புரையில் அவரின் வெகுளியான பேச்சில் நரிக்குறவர்கள் மற்றும் திருநங்கைகள் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கான ஆய்வுக்கு அவர் பட்ட சிரமங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.பத்மாவதி உங்களைப் பற்றி பேசும்போது உங்கள் புன்னகை ஏற்பும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.
ஏராளமான தகவல்களோடும் மகிழ்வோடும் நற்சிந்தனைகளோடும் வீடடையும்போது அதிகாலை மணி 2.30.
நன்றி.
அன்புடன்
மூர்த்தி /விஸ்வநாதன்
வாழப்பாடி.
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதின் இன்னொரு வடிவம் போலவே தமிழ்விக்கி- தூரன் விருதும் அமைந்திருந்தது. அதேபோல பிரம்மாண்டமான கல்யாணமண்டபம். கீழே உணவுக்கூடம். மேலே விழா அரங்கு. நூறுபேருக்குமேல் தங்குவதற்கான ஏற்பாடுகள். ஐந்துவேளை உணவு. விரிவான எழுத்தாளர் – சந்திப்பு அரங்குகள்.
தமிழில் ஆய்வாளர்களுக்கு கல்வித்துறைக்கு வெளியே இடமே இல்லை என்பதுதான் நடைமுறை. நல்ல ஆய்வுகள்கூட வெளியே தெரியாது. அதேசமயம் ஜனரஞ்சகமாக யூடியூபில் சாதி, மத, இனக்காழ்ப்புகளைக் கொட்டி வரலாற்றாய்வு பண்பாட்டாய்வு என்றெல்லாம் பாவலா காட்டினால் புகழ்பெறலாம். ஆய்வாளர்களுக்கென்று இப்படி ஓர் அரங்கு அமைவது மிகமிக இன்றியமையாது. இந்த அரங்கு ஆய்வாளர்களுக்கு மட்டும் உரியதாக நீடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
மேடையிலும் அரங்கிலும் அ.கா.பெருமாள், கு.மகுடீஸ்வரன், லோகமாதேவி மூவருமே நன்றாகப்பேசினார்கள். கு.மகுடீஸ்வரன் கொங்குவட்டார ஆய்வாளர். முப்பதாண்டுகளாக எழுதி வருபவர். ஆனால் அவரைப் பற்றி நான் கேள்விப்படுவதே இப்போதுதான். நானும் இதே வட்டம்தான். எந்த இடத்திலும் எவரும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. எண்ணிப்பார்த்தால் இப்படி எத்தனைபேர் இருப்பார்கள் என்ற ஆச்சரியமே உருவாகிறது. நீங்கள் செய்துகொண்டிருப்பது பெரும் பணி. வாழ்க
செந்தில்ராஜ்
அன்புள்ள ஜெ.
நலம்தானே?
நான் தமிழ் சமூக ஊடகங்களை அவ்வப்போது பார்ப்பவன். கொஞ்சநாள் முன்னால் நிறையவே கவனித்துவந்தேன். முழுக்கமுழுக்க எதிர்மறைத்தன்மை. கசப்பு. எந்த இடத்திலும் வசைபாடுவதற்கும் ஏளனம் செய்வதற்கும்தான் முட்டிமோதி வருகிறார்கள். அதற்கு தமிழ்ப்பெருமை இனப்பெருமை என்று எதையாவது சொல்கிறார்கள். ஒரு விஷயத்தை வாசித்துப் புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்றுபவர்களே குறைவு. வெறும் வெறுப்பு கக்குதல் மட்டும்தான்.
அப்படி வெறுப்பையே வாங்கிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் நீங்கள். அந்த வெறுப்பு வழியாகவே நானும் உங்களை அறிந்துகொண்டேன். அந்த வெறுப்பின் நடுவே நின்று இந்தளவுக்கு பாசிட்டிவான அதிர்வுகளைப் பரப்புகிறீர்கள். நண்பர்களைச் செயலாற்ற வைக்கிறீர்கள். நம்பிக்கையை நிலைநாட்டுகிறீர்கள். மகத்தான செயல்பாடு இது. என் வணக்கங்கள்.
ராஜேந்திரன் மகாலிங்கம்
கி.ஆ.பெ.விசுவநாதம்: திராவிடமும் சைவமும்
கி.ஆ.பெ.விசுவநாதம் முப்பதாண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள்களில் ஏதேனும் ஒருவகையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தார். குறிப்பாக திமுக அதிமுக கட்சிகளை மீண்டும் இணைக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக கேலிக்குரியவராகவும் சித்தரிக்கப்பட்டார். ஆனால் மரபான தமிழறிஞர். சைவமறுமலர்ச்சியை நிகழ்த்தியவர்களில் ஒருவர்
கி. ஆ. பெ. விசுவநாதம் – தமிழ் விக்கி
கவிதை இணைய இதழ், ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. பிரமிள், மோகனரங்கன், வெ.நி.சூர்யா, ச.துரை, மதார் கவிதைகள் பற்றி பாலாஜி ராஜு, கடலூர் சீனு, சங்கர் கணேஷ், மதார் எழுதிய கவிதை வாசிப்புகள் இடம்பெற்றுள்ளன.
நன்றி,
ஆசிரியர் குழு.
களிற்றியானை நிரை- வருகை
அன்புள்ள ஜெ,
களிற்றியானை நிரை செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன். நன்றி!
இந்நாவல் வெண்முரசு வாசகர் கூட்டங்களை நடத்தும், வெண்முரசைப் பரவலாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் நண்பர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயரை நாவலில் உங்கள் முன்னுரையில் காண மகிழ்ச்சியாக இருந்தது.
அட்டையில், எழும் யுகத்திற்கான அறிவிப்பைப்போல கவசஉடை அணிந்த சம்வகையின் வண்ணப்படம். சம்வகை ஒருவகையில் தற்போதைய இந்தியப் பெண்களையும் பிரதிபலிக்கிறாள்.வலிமை கொண்டு எழுந்து வரும் பெண்கள் ராணுவத்திலும் அரசிலும் தங்களுக்கான இடத்தை எடுத்துக்கொள்ளும் வலுவான குறியீடு.
அழிவிற்குப்பின் அஸ்தினாபுரியும் பாரதவர்ஷமும் மீண்டெழும் சித்திரத்தை அளிக்கும் நாவல், அரசுகளும், குலங்களும், வணிகமும், நகரங்களும், ஊர்களும், தொல்கதைகளும் என எல்லாம் எப்படித் தங்களுக்கான தொடர்ச்சியைப் பேணிக்கொள்கின்றன என விவரிக்கிறது. இறுதியில் அந்தணர்களால் நெய்யூற்றிக் கொளுத்தப்பட்ட சார்வாகரின் கோலும் தீக்ஷணனை அடைந்து தொடர்கிறது.
பாண்டவ சகோதரர்கள் பாரதத்தின் நான்கு திசைகளிலும் இருந்து கொண்டுவரும் பரிசுகளும் அவற்றைப்பற்றிய கதைகளும் ஒவ்வொரு வகையில் யுதிஷ்டிரரை அலைக்கழிக்கின்றன. அர்ஜுனன் கொண்டுவரும் புற்குழல் பீஷ்மருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தக்குழலைக் கொடுத்த பூசகனின் சொற்கள்:
“எங்கள் நிலத்தை ஆள்பவர் தன் சாவைப்பற்றி அறிந்திருக்கவேண்டும். தன் வாழ்வின் மெய்மையை அறிந்தவரே தன் சாவை அறிந்தவர். அவருக்கு அச்சொல் தெரிந்திருக்கும். எவர் ஒரு சொல்லை உரைத்து அச்சொல்லை அந்த வானம்பாடி மீளச் சொல்லவில்லையோ அவரே மேருநிலத்தை ஆளும் தகைமைகொண்டவர். தெய்வங்களுக்கு உகந்தவர். அவரை வணங்குக! அவருக்கு அடிபணிந்து கோல் அளித்து அழைத்துவருக! என்று தெய்வம் கூறியது. ஆகவேதான் வந்தேன்.”
பீஷ்மர் தன் இறுதிச் சொல்லை உரைத்து உயிர்நீப்பதன்மூலம் மேருநிலத்தை ஆளும் தன் தகைமையை நிறுவிச்செல்கிறார்.
துரியோதனனின் பெரும் ஆளுமை வெண்முரசில் பல இடங்களில் அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது. இதிலும், சத்யபாமைக்கும் சாரிக்கருக்கும் இடையிலான பின்வரும் உரையாடலில் ஒரேவரியில் அது மிகவும் உணர்ச்சிகரமாக வெளிப்படுகிறது:
சாரிகர் “அரசி…” என்று தயங்கியபடி அழைத்தார். “அங்கே மறைந்த பேரரசர் துரியோதனனின் மகள் லக்ஷ்மணை ஆட்சி செய்கிறார் என்றீர்கள். அவர் தன் தந்தையரைக் கொன்று அஸ்தினபுரியை வென்று ஆளும் யுதிஷ்டிரன் மீதும் இளைய யாதவர் மீதும் கடுஞ்சினம் கொண்டிருப்பதாகவும் சொன்னீர்கள்” என்றார். “இக்குழவி பாண்டவர்களின் எஞ்சும் துளி. இது அழிந்தால் பாண்டவர்களின் கொடிவழி அறுந்து போய்விடும்.” சத்யபாமை “நீர் எண்ணுவதென்ன என்று தெரிகிறது. இக்குழவிக்கு கிருஷ்ணையால் தீங்குவரக்கூடும் என்றா?” என்றாள். “அவர் நேரடியாக தீங்கிழைக்க வேண்டியதில்லை. இப்போது உரியவை அனைத்தையும் செய்யாமலிருந்தால், செய்வனவற்றை சற்றே பிந்தினால், நேரடியாக ஈடுபடாமல் தவிர்த்துவிட்டால்கூட இம்மைந்தன் வாழமாட்டான்” என்றார் சாரிகர்.
பெருமூச்சுடன் “உங்கள் ஐயமும் அச்சமும் புரிந்துகொள்ளற்குரியதே” என்று சத்யபாமை சொன்னாள். “அவளுடைய வஞ்சம் இயல்பானது, ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்.” அவள் முகம் ஒளிகொண்டது. புன்னகை இன்றி ஒரு முகத்தில் ஒளியெழுவதை அப்போதுதான் சாரிகர் கண்டார். “ஆனால் இப்புவியில் எந்தக் குழந்தையையும் ஈன்ற அன்னையிடம் என நம்பி ஒப்படைப்பதென்றால் அது கிருஷ்ணையிடமே. முற்றெதிரியின் குழந்தையே ஆயினும். ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்” என்றாள் சத்யபாமை. அவர் மெய்ப்புகொண்டு அறியாமல் கைகூப்பினார்.
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை
சுவாமி பிரம்மானந்தருடன் தங்க அழைப்பு…
மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர் ஈரோடு அருகே எங்கள் தங்குமிடத்தில் மூன்றுநாட்கள் இருப்பார். 26 ஆகஸ்ட் 2022 முதல் 28 ஆகஸ்ட் வரை. ஆர்வம்கொண்டவர்கள் அவருடன் தங்கலாம். உரையாடல் அமர்வுகள் உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
பெயர், வயது, ஊர், முன்னர் எங்கள் நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளீர்களா ஆகிய செய்திகளை தெரிவித்து மின்னஞ்சல் செய்யலாம்.
மூன்றுநாட்களுக்கு தங்குமிடம், உணவு உட்பட ரூ 3000 ஆகும். மாணவர்கள், செலவு செய்ய முடியாத நிலையில் உள்ள இளைஞர்கள் தெரிவித்தால் அவர்களின் கட்டணத்தை பிறர் அளிக்க ஏற்பாடு செய்ய முடியும்.
ஜெ
jeyamohan.writerpoet@gmail.com
August 16, 2022
அன்றாட வம்புகளும் அறிவுச்சூழலும்
Dear Jeyamohan Sir,
PS1 டீஸர் பார்த்து எழுந்த கேள்விகளை பார்த்திருப்பீர்கள். இந்த திரைப்படம் அந்த காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச்சென்று வரலாற்றை காட்டும் என நீங்களும் கூறினீர்கள்.
அப்படி இருக்க ஏன் சைவத்தை போற்றியவர்கள் நெற்றியில் திருநீர் பட்டை இல்லை? ஏன் போர் உடை கிரேக்க வீர்ர்கள் சாயலில் உள்ளது? ஆதித்த கரிகாலன் கொடியின் நிறம் சிவப்புதானா? சோழ தேசக் கொடி கூட சற்று வேறு மாதரி உள்ளது?
இதுபோல எழுந்த மற்ற கேள்விகளையும் சேர்த்து ஒரு கட்டுரை வெளியிட்டால் தெளிவுபெற உதவியாக இருக்கும்.
உங்கள் பங்களிப்பு உள்ளதனாலேயே இப்படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
நன்றி!
Best Regards,
Karthick S
அன்புள்ள கார்த்திக்,
உங்கள் கடிதத்திலிருந்து நீங்கள் இளைஞர் என்று கண்டு கொண்டதனால் இக்கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் இக்கடிதத்தை இன்றிருக்கும் நிலையிலிருந்து வயதும், சற்று அறிவு மலர்வும் கூடிய பத்தாண்டுகளுக்குப்பின் இருக்கும் நீங்களாக இருந்து மீண்டும் படித்துப்பாருங்கள். இதிலிருக்கும் ஒருவகையான சிறுமை உங்கள் பார்வைக்கு படவில்லையா?
நீங்கள் இந்த விவாதத்தை முகநூலிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இவற்றை முகநூலில் நிகழ்த்துபவர்கள் யார்? அவர்கள் அறிஞர்களோ, ஆய்வாளர்களோ அறிவுப்புலத்தில் ஏதேனும் பங்கு உடையவர்களோ அல்ல. பெரும்பாலானவர்கள் எளிய வாழ்க்கையில் எங்கோ பொருத்திக்கொண்டு அன்றாடத்தில் திரும்பத் திரும்ப உழன்றுகொண்டிருப்பவர்கள். நடுத்தர, கீழ்நடுத்தர வாழ்க்கையின் சலிப்புக்குள் சிக்கிக்கொண்டவர்கள்.
அவர்களுடைய அந்தரங்க பகற்கனவுகளில் அவர்கள் தங்களை முக்கியமானவர்களாக, தலைமைத் தன்மை கொண்டவர்களாக, வரலாற்றில் இடம்பெறுபவர்களாக எல்லாம் புனைந்துகொள்கிறார்கள். தங்களை நாயகர்களாக எண்ணி ஆணவநிறைவு அடைகிறார்கள். அதன்விளைவாக ஒருவகையான இருநிலைத் தன்மை அவர்களுக்கு உருவாகிறது. தங்கள் சிறுமையை தாங்களே பார்க்கும் நிலை அது. அதை மெல்ல மெல்ல ஒரு கசப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள். ஏதேனும் ஒருவகையில் அறியப்பட்ட அனைவர் மேலும் கசப்பையும் காழ்ப்பையும் உமிழ்வதன் வழியாக அவர்களின் அகத்தில் சுட்டெரிக்கும் புண்பட்ட ஆணவம் சற்றே தணிகிறது. அதையே ஒரு வம்புப் பேச்சாக நிகழ்த்தும்போது அவர்களின் அன்றாடத்தின் சலிப்பும் மறைகிறது. பொது வம்பு என்பதன் உளநிலை இதுதான்.
அன்றன்று பேசப்படும் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் தங்களுக்குத் தெரிந்த சிறு துளிகளை வைத்துக்கொண்டு, புகழ்பெற்ற அனைத்து ஆளுமைகளையும் இழிவு செய்து பேசுவதும் வசைபாடுவதும் கொக்கரிப்பதும் ஏளனம் செய்வதும் இவர்களின் இயல்பு. இவர்களில் ஒருவராக நீங்கள் எதிர்காலத்தில் ஆக விரும்புகிறீர்களா? இவர்களிடமிருந்து உங்கள் வரலாற்றறிவையும் இலக்கிய அறிவையும் உலகியல் அறிவையும் பெற விரும்புகிறீர்களா? ஆம் எனில் நாம் மேற்கொண்டு விவாதிக்கவோ பேசவோ எதுவுமில்லை. அல்ல என்று உங்களுக்கு ஒரு கணமேனும் தோன்றினால் இதை மேலும் படிக்கலாம்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவருவதை ஒட்டி இத்தளத்தில் சில குறிப்புகளை நான் எழுதி வருகிறேன். பொதுவாக என்னுடைய திரைப்படங்கள் சார்ந்த எந்த விவாதத்தையும் எனது தளத்தில் முன்னெடுப்பதில்லை. ஏனெனில் திரைப்படம் என்பது ஒரு கேளிக்கை. அதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பது என்பது வெறும் வம்புதான். வம்புகளில் எனக்கு ஆர்வம் இல்லை. அதற்கான தளமும் இதுவல்ல. ஆனால் பொன்னியின் செல்வன் பற்றி இங்கு ஏன் பேசப்படுகிறது என்றால், அதை ஒட்டி இலக்கியம் தமிழ் வரலாறு ஆகியவை சார்ந்து சிலவற்றை பொதுச்சூழலில் கவனப்படுத்த முடியும் என்பதனால்தான். சில வரலாற்றாசிரியர்களின் பெயர்களை முன்வைக்க முடியும் என்பதனால்தான்.
இப்போது தமிழ் விக்கி இணையதளத்தில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களைப்பற்றிய பதிவை சில ஆயிரம் பேர் வந்து படித்திருக்கிறார்கள் என்றால் பொன்னியின் செல்வனும், அதை ஒட்டி அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டதும் காரணம். இத்தகைய தருணங்களை எப்போதுமே தமிழின் அறிவார்ந்த செயல்பாடுகளை நோக்கி ஈர்க்க பயன்படுத்திக்கொள்வது என் வழக்கம். அவ்வகையிலேயே சோழர் கால வரலாறு பற்றிய குறிப்புகள் பொன்னியின் செல்வன் எனும் புள்ளியுடன் தொடர்பு படுத்தி இந்த தளத்தில் வந்துகொண்டிருக்கின்றன. அன்றி பொன்னியின் செல்வன் பற்றி ஆங்காங்கே வம்பர்கள் அமர்ந்து பேசும் அனைத்து வம்புகளுக்கும் பதில் அளிப்பது என்னுடைய வேலையல்ல. சென்ற முப்பதாண்டுகளில் நான் செய்துவரும் அறிவியக்கப்பணியின் அளவை வைத்துப் பார்க்கும்போது எவரும் அதை உணர முடியும்.
பொதுவாக வம்பர்கள் ஓர் ஆவேசநிலை எடுக்க விரும்புவார்கள். மதம் ,ஜாதி, இனம், மொழி எதையேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டுதான் அந்த ஆவேச நிலையை எடுக்க முடியும். அந்த ஆவேச நிலையை எடுத்தால் மட்டுமே அவர்களால் ஆங்காரமாக அடிவயிற்று வேகத்துடன் கூச்சலிட முடியும். அப்போது மட்டும் தான் அவர்களுள் எரியும் அந்த புண்பட்ட ஆணவம் நிறைவு கொள்கிறது. எளிய மனிதர்கள், பல்வேறு காரணங்களால் அறிவியக்கத்துடன் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லாது அமைந்தவர்கள், பல்வேறு தளங்களில் சிதறடிக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்களைப்பற்றிய ஆழ்ந்த அனுதாபம் மட்டுமே என்னிடம் உள்ளது. அந்த மிகை உணர்ச்சிகளை எதிர்கொள்வதற்கு பதிலாக தவிர்த்து செல்வதையே நான் விரும்புவேன்.
நீங்கள் எங்கு சிக்கிக்கொள்கிறீர்கள் என்றால் உங்களை அறியாமலேயே மதம், ஜாதி, இனம், மொழி சார்ந்து ஏதேனும் பற்று உங்களுக்குள் இருக்கும் என்றால் அதைச் சார்ந்து பேசுபவர் ஒருவரை உங்களவராக ஏற்றுக்கொள்கிறீர்கள். அவர்களுடைய குரல் அறச்சீற்றம் கொண்டதென்றும் மெய்யான தரப்பு என்றும் எண்ண ஆரம்பிக்கிறீர்கள். அந்த திசை உங்களை வம்பிலிருந்து மேலும் வம்புக்கு இட்டுச் செல்லும். ஒரு கட்டத்தில் அந்த வரிசையில் உங்களைக் கொண்டு அமரவைக்கும். நீங்களே உங்களை வெறுக்கும் நிலையில் ஒரு வம்பராக மட்டும் உங்களை கண்டுகொள்வீர்கள். இதை இத்தருணத்திலாவது புரிந்துகொள்ளுங்கள்.
பொன்னியின் செல்வன் ஒரு பொதுரசனைக்குரிய திரைப்படம். அந்த எல்லைகளுக்குள் நின்றுகொண்டு அது தமிழ் வரலாறு குறித்து பேசுகிறது. அது இந்தியாவெங்கும் தமிழர்களின் பொற்காலம் ஒன்றை முன்வைக்க இருக்கிறது. அந்த ஒரு காரணத்தினாலேயே பலரால் அது எதிர்க்கப்படுகிறது. எதிர்ப்பவர்களில் பலர் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தோரணை கொண்டவர்களாயினும் உள்ளூர தமிழர் பெருமையால் சீண்டப்படுபவர்கள்தான். அதற்கான காரணங்கள் பல இருக்கும். அவற்றுக்குள் செல்ல நான் விரும்பவில்லை.
மிக எளிமையாக உங்களிடம் நான் கேட்க முடியும். சோழ மன்னர்கள் நெற்றி நிறைய விபூதி அணிந்திருந்தார்கள், போர்க்களத்தில் வியர்வை கொட்டும்போதும் அந்த விபூதி அழியாமல் இருக்கும்படி அதை ஃபெவிக்கால் கலந்து பூசியிருந்தார்கள் என்பதற்கு உங்களுக்கு கல்வெட்டு சான்று இருக்கிறதா என்ன?சோழர் காலத்து உடைகள் எப்படியிருந்தன, அரசவை எப்படி இருந்தது என்பதற்கு உங்களிடம் என்ன சான்று இருக்கிறது?
சோழர் காலத்தில் மெய்யாகவே அணிந்திருந்த உடைகள், அவர்களின் அரண்மனைகள் அணிகள் ஆகியவற்றை இன்று காட்டினால் அது ஒரு வெற்றிகரமான வணிகப்படமாக இருக்குமா? உதாரணமாக, கோபுலு முன்பு சரித்திரக்கதைகளுக்கு வரைந்த ஓவியங்களில் தமிழ் மன்னர்கள் தரையில் வட்டமாக அமர்ந்து தங்கள் அமைச்சர்களுடனும் குலத்தலைவர்களுடனும் உரையாடுகிறார்கள். ஒவ்வொருவர் முன்னாலும் தாம்பாளத்தில் வெற்றிலை தாம்பூலம் வைக்கப்பட்டிருக்கிறது. பெரிய தலைப்பாகைகளும் மீசைகளும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தடித்த மரத்தாலும் கற்களாலுமான தாழ்வான கூரை கொண்ட சிறிய அறைகள். மன்னர்களும் குலத்தலைவர்கள் எவருமே மேலாடை எதுவும் அணிந்திருக்கவில்லை.
உண்மையில் மிக எளிமையாக இப்படித்தான் இருந்திருக்க முடியும். பொன்னியின் செல்வனுக்கு மணியம் வரைந்த ஓவியத்தில் அவர்கள் அணிந்திருப்பதுபோல எப்போதும் அரைக்கிலோ நகைகளும் ஒருகிலோ கிரீடமும் அணிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் பதினாறாம் நூற்றாண்டு முதல் வருகை தந்த வெள்ளை பயணிகள் இங்குள்ள அரசர்கள் பிரபுக்களைப்பற்றி அளிக்கும் சித்திரங்கள் கோபுலு வரைந்த சித்திரங்களுடன் ஒத்துப்போகின்றன. எப்போதாவது கொலுவீற்றிருக்கும்போது பளபளக்கும் அணிகளையும் ஆடைகளையும் அணிந்திருக்கலாம். ஆனால் சாதாரணமாக அது வழக்கம் கிடையாது.
அப்படி ஒரு தமிழ்ப் படத்தை எடுத்துவிட முடியுமா? ஏனெனில் எடுக்கவிருப்பது ஒரு வணிகப்படம். அது பெரும் காட்சித்தன்மை கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் Spectacular என்பார்கள். மெய்யாகவே அன்றைய படைவீரர்கள் அணிந்திருந்த ஆடைகள் மிக எளிமையாக இருந்திருக்கலாம். எல்லாமே சிறிதாக, சாதாரணமாக இருந்திருக்கலாம். கோவில்களில் காணப்படும் செதுக்கோவியங்கள் அதையே காட்டுகின்றன. இன்று ஒரு திரைப்படத்தில் அதைக் காட்ட மாட்டோம். இன்னும் மிகைப்படுத்தியே அதை காட்ட முடியும். இல்லையென்றால் அது கேளிக்கைப்படம் அல்ல.
நாம் எடுப்பது ஆவணப்படம் அல்ல. வணிகப்படம். இந்தியா முழுக்க ரசிகர்களால் ஏற்கப்படக்கூடிய தன்மை அதற்குத் தேவை. ஒரு ஆடையோ தோற்றமோ மிக விந்தையாக இருக்குமெனில் அதை பண்பாட்டு அடையாளம் என்று இந்தியா முழுக்க கொண்டு செல்ல இயலாது. இதுவரை உலக அளவில் எடுக்கப்பட்ட எல்லாப்படங்களும் அந்த இலக்கணப்படி தான் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சோழர்களின் மீது ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தையோ வழிபாட்டு அடையாளத்தையோ இன்று சுமத்த நமக்கு உரிமை கிடையாது. அவர்கள் சைவர்கள் என்பது வெளிப்படை. ஆனால் வைணவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் நிதிக்கொடை அளித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். எங்கும் எப்போதும் தங்களை சைவ வெறியர்களாகவே அவர்கள் காட்டிக்கொண்டார்கள் என்று இன்று அமர்ந்துகொண்டு முடிவு செய்ய யாருக்கு உரிமை இருக்கிறது? அனைத்து குடிமக்களுக்கும் பொதுவானவர்களாக ஏன் அவர்களை நாம் எண்ணிக்கொள்ளக் கூடாது?
இந்த வகையான அசட்டு தீவிரப் பிடிவாதங்களை வரலாற்றின் மீது ஏற்றுவதெல்லாம் வரலாற்றறிவோ பொதுவான நிதானமோ இல்லாத வம்புகளின் வெளிப்பாடு மட்டுமே. மதவெறியர்களுக்கோ இன வெறியர்களுக்கோ மொழி வெறியர்களுக்கோ இந்த மாதிரி தீவிரமான நிலைபாடுகள் தேவையாக இருக்கலாம். இதை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
சோழர்காலத்து உடை பற்றி கேட்டீர்கள். கவச உடைகள் பற்றி படத்தின் கலைத்துறை தாராசுரம் ஆலயத்தில் ஆய்வு செய்ததன் அடிப்படையில் அந்த உடைகள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆலோசகர்களாக ஜெயக்குமார் பரத்வாஜ் போன்ற முறையான ஆய்வாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அன்றைய கவசங்கள் தோலால் செய்யப்பட்டவை -குறிப்பாக எருமைத்தோலால். இரும்புக்கவசங்கள் குதிரை மேல் செல்லும் போர்வீரர்கள் மட்டுமே அணியத்தக்கவை.
உலகில் எங்காயினும் கவச உடைக்கு ஒரே வடிவம் இதுதான் இருக்க முடியும். ஏனெனில் கவசங்கள் உடல் அசைவுகளுக்கு ஏற்ப தான் அமைய முடியும். நீங்கள் கிரேக்க வரலாறு சார்ந்த படங்களில் ஒரு கவச உடையைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் ஏறத்தாழ அந்த உடைதான் எங்கும் உள்ளது. ஜப்பானிய கவச உடைக்கும் கிரேக்க கவச உடைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
அனைத்துக்கும் மேலாக இந்தியாவில் கிரேக்க தொடர்பு உருவாகி ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சோழர்களுடைய வரலாறு வருகிறது. ஏன் அவர்களுக்கு கிரேக்க செல்வாக்கு இருக்ககூடாது? சோழர் காலத்தில் தமிழகத்தில் மிக வலுவான சீன செல்வாக்கு இருந்தது. சோழர்காலத்துடைய சிற்பங்களில் சீன முகங்கள் உள்ளன. ஏன் சீனாவிலிருந்து அவர்களின் கவச உடையே நமக்கு வந்திருக்க கூடாது?
சோழர்களின் கொடியின் வண்ணம், வடிவம் பற்றி எவர் என்ன சொன்னாலும் எல்லாமே ஊகங்கள், கற்பனைகள்தான். நமக்கு சோழர்கள் பற்றிக் கிடைப்பவை மிகச் சுருக்கமான சில கல்வெட்டுச் செய்திகள் மட்டுமே. (மற்ற தமிழ் அரசுகள் பற்றி அவ்வளவுகூட கிடையாது) இந்திய வரலாறு குறித்தே மிகக்குறைவான செய்திகள்தான் உள்ளன. அச்செய்திகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஊகங்கள்தான் நம் வரலாறு. (ஆர்வமிருந்தால் டி.டி.கோசாம்பி இந்திய வரலாறு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையை வாசிக்கவும்)
இவற்றையெல்லாம் பேசலாம். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு மெய்யான வரலாற்றில் ஆர்வம் இருக்கிறதா, சமநிலையுடன் அதை கற்க தயாராக இருக்கிறீர்களா, குறிப்பிடப்படும் நூல்களை கவனிக்கிறீர்களா என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள். ஒரு திரைப்படத்தை வைத்துக்கொண்டு சில பல வெறிகளின் அடிப்படையில் வம்புச் சழக்குகளை செய்பவர்களுடன் இவற்றையெல்லாம் பேசுவதென்பது ஒரு வெட்டிவேலை.
பத்துநாட்களுக்கொருமுறை முகநூலிலும் வாட்ஸப்பிலும் வரும் வம்புகளில் ஈடுபட்டு விவாதித்துக்கொண்டிருப்பது அறிவுச்செயல்பாடு அல்ல. உங்களுக்கு ஆர்வமுள்ள துறை என்ன என பாருங்கள். அதில் ஓர் அடிப்படை வாசிப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கே உங்களைப்பற்றி ஒரு தன்னம்பிக்கை வரும். அதன்பின் இதெல்லாம் அற்பத்தனம் என தெரியும்.
அந்த அற்பத்தனம் என்றும் நம் சூழலில் இருக்கும் .ஆனால் அதில் ஒரு இளைஞராக நீங்கள் சிக்கிக்கொண்டீர்கள் என்றால் சிந்திக்கும் திறனை இழப்பீர்கள். வெறும் ஒரு வம்பராகச் சென்று அமைவீர்கள். தயவு செய்து இதைப்பற்றி யோசியுங்கள். இதைப்பற்றி யோசித்தபின் ,எப்போதாவது தெளிவடைந்தபின் எனக்கு எழுதுங்கள். அதுவரையில் நமக்கிடையே எந்த உரையாடலும் நடக்கமுடியாது. உங்கள் உலகத்தில் எனக்கு எந்த இடமும் இல்லை, என் உலகத்தில் உங்களுக்கும்.
நன்றி.
ஜெ
பொன்னியின் செல்வன் நாவல் யவனராணி- சாண்டில்யன் உடையார் -பாலகுமாரன்தமிழ் விக்கி- தூரன் விருதுவிழா – கடிதம்
தூரன் விருது விழா, 2022 – தொகுப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
இன்னொரு மனநிறைவான விழாவாக அமைந்தது தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது விழா. விஷ்ணுபுரம் விருது விழாவைப் போன்றே வாசகர் எண்ணிக்கையும் அமர்வுகளும் அமைந்து விட்டது. அடுத்த ஆண்டு முழுமையாக இரண்டு நாட்கள் தேவைப்படும் போல் தெரிந்தது.
முதல் நாள் பிரம்மானந்த சுவாமி அவர்களின் முதல் அமர்வு விழாவிற்கு துறவி ஒருவரின் ஆசிகளைப் போல் அமைந்தது. ஞானம் குறித்த கேள்விக்கு knowledge அனைத்தும் புறவயமானது என்றார். அஹம் பிரம்மாஸ்மி என்பது குறித்த பெளத்த தரப்பின் விமர்சனத்தையும் அது உண்மையில் எவ்வாறு ‘நான்’ அற்று இயல்பை மட்டுமே சுட்டுகிறது எனக் கூறியது இதுவரை நான் அறியாத கோணம். மலேசியராகத் தன்னை உணர்ந்து இந்திய-தமிழ்நாடு சார்ந்த ஆன்மிகத் தன்மைகளின் வேரை விட்டுவிடாதவராகவே தெரிந்தார் சுவாமி பிரம்மானந்தர்.
மறுநாள் காலை நடையின் போது சித்தோடு பறவைகள் சரணாலயம் சென்ற போது அங்கு ticket counterல் இருந்தவர் நாம் எதற்காக வந்திருக்கிறோம் அந்த நிகழ்ச்சி என்ன என்பது குறித்தெல்லாம் ஆர்வமாகக் கேட்டறிந்தார். ரைட்டர்ஸ் மட்டும் தான் வருவாங்களா என்றார் இல்லை யார் வேண்டுமானாலும் வரலாம் மாலை நிகழ்ச்சிக்கு அவசியம் வாங்க என்றேன். வார இறுதி நாட்கள் தொடர் விடுமுறை போன்ற காரணங்களால் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து பலர் பயணம் சார்ந்த சிரமங்களையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.
இரண்டாம் நாளின் முதல் அமர்வு அ.கா. பெருமாள் அவர்களுடையது. இவரது நூலான சுசீந்திரம் கோவில் வரலாறு மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். நாட்டாரியல் கோயில் மற்றும் மரபுகளை இந்தியர்கள் ஆராயும் போது முதன்மையாக அதன் மீது கொண்ட பற்றின் காரணமாகவே அதைச் செய்கிறார்கள் என்றார். ஆய்வுகளின் அடிச்சுவட்டைக் கூட அறிந்திராத எனக்கு அவரின் பதில்கள் திகைப்பையும் இந்தத் துறை சார்ந்து கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
அடுத்த அமர்வு பேராசிரியர் லோகமாதேவி அவர்களுடையது. மிகவும் charged ஆக இருந்த அமர்வு இது தான். புறவயமான தாவரவியல் ஆய்வு மற்றும் அதன் பெயர்களை நினைவில் இருத்தி வைப்பது எந்த வகையிலும் ரசனை சார்ந்த அதன் அகவயமான தொடர்பை பாதிப்பதில்லை என்றார். ஒரு மாத காலம் வெளியூர் சென்று திரும்பிய பின் பிறரால் பாதுகாக்கப்பட்டும் தன் கவனம் இன்றி வாடிய செடியைக் குறித்து கூறியது உணர்வுப்பூர்வமாக தாவரங்களுடன் நமக்கு உள்ள உறவை சுட்டியது.
நான் பொதுவாக செடி கொடிகளைப் பார்த்தால் என்னையும் அறியாமல் சிறிது நேரம் அவற்றை தடவிக் கொடுப்பேன். ஆனால் ஒரு நாயின் தலையை தடவுவதில் எனக்கு பெரிய ஆர்வம் ஏற்பட்டதில்லை. பல்வேறு வகையான உயிர்களுடன் நமக்குள்ள தொடர்பு மிகவும் பிரமிப்பானது. தாவரங்கள் நமக்கு உணவாகவும் ஊட்டமாகவும் கூட மாறுவதால் அதனுடனான நமது அன்றாட அணுக்கத்தின் அடிப்படையிலேயே பல கேள்விகள் அமைந்தன.
இந்த அமர்வுகள் அனைத்தும் இலக்கியம் எவ்வாறு அவர்கள் சார்ந்த துறையை செழுமையுறச் செய்கிறது என்பதற்கான அத்தாட்சி. லோகமாதேவியின் தர்ப்பை ஆன்மிகம் தொன்மம் நவீன அறிவியல் உள்ளிட்ட பல தளங்களை ஊடுருவிச் செல்லும் சிறப்பான கட்டுரை. Hallucinogens குறித்த ஒரு ‘ஹை என்ட்(‘high end) குறிப்புடன் 15 நிமிடங்கள் கூடுதலாக நீடித்த அந்த பெரும் அமர்வு முடிவுக்கு வந்தது.
உணவு இடைவேளைக்குப் பின் மகுடீசுரன் அவர்களின் அமர்வு அந்தப் பகுதியின் தனித் தன்மைகளை தொட்டுச் சென்றது. பிறகு சிறப்பு விருந்தினர் கரசூர் பத்மபாரதி அவர்களின் அமர்வு. அமர்ந்து பேசுவதில் தனக்குள்ள தயக்கத்தைக் கூறி நின்றவாறே பேசினார். நாம் அன்றாடம் பார்ப்பவர்கள் ஆனால் அழுக்கானவர்கள் என விலகிப் போகும் ஒரு சமூகம் குறித்து அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்தும் கூறினார். அது ஒரு பெரும் ஆய்வாக மலர்ந்து நரிக் குறவர்கள் பற்றிய தரமான ஒரே நூலாக தமிழில் நமக்கு கிடைத்திருக்கும் நூல் அவரின் கள ஆய்வு.
மாலை நேர நிகழ்ச்சியில் திரு விஜயபாரதி, திருமலை, சந்தோஷ் மற்றும் மதுசூதன் ஆகியோர் தமிழ் விக்கி பணிக்காக கெளரவிக்கப்பட்டது நெகிழ்வூட்டக் கூடியதாக இருந்தது. ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் உரையில் இலக்கியலாளர்கள், நரிக்குறவர் போன்ற ஒரு சமூகத்தினரைக் குறித்து விரிவாகப் பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால் அந்த வேலையை முதலில் செய்தது ஆய்வாளர் பத்மபாரதி தான் என்றார்.
தமிழ் விக்கியின் இன்றைய தேவை அது உருவான விதம் குறித்து விளக்கிய போது இன்று குறை கூறுவோருக்குக் கூட கலை இலக்கியம் சார்ந்த பயன்பாட்டில் விக்கி தவிர்க்க முடியாத இடம் பிடிக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
கரசூர் பத்மபாரதியின் உரை மிக நேரடியானதாக நீண்ட காலம் பழகிய ஒரு தோழரின் உரை போல் அமைந்திருந்தது. கணமான விருது உலோகத்தை கையில் தூக்கிய போது சற்று கெதக் என்று தோன்றியது. தன் விருது பணத்தை இனிமேலான ஆய்வுக்கே செலவிடப் போவதாகக் கூறியது நெகிழ்வுறச் செய்வதாக இருந்தது. விஷ்ணுபுரம் விருதுகள் இதுவரை சோடை போனதில்லை. பெரியசாமி தூரன் பெயரில் வழங்கப்படும் இந்த விருதும் மிகச் சரியான நபர் ஒருவரின் கைகளுக்கே சென்று சேர்ந்திருப்பது மிகவும் நிறைவை அளித்தது.
நாளை மற்றொரு நாளே என்பது இருத்தலியல் சார்ந்த சலிப்பு ஒவ்வொரு நாளும் கணமும் புதியது என்பது பின்நவீனத்துவ இருத்தலியல் முடிபு. ஆனால் செயலாக வெளிப்படாத எதுவும் மதிப்பற்றது தான் அத்தகைய செயலூக்கம் கொண்ட நண்பர்கள் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் சென்னை செந்தில் அவர்கள் மற்றும் இன்முகம் மாறா முகத்துடன் வந்தோரை கவனித்துக் கொண்ட அழகிய மணவாளன் ஆகியோருக்கு நன்றிகள்.
அரசுகள் சில கோடி ரூபாய் செலவழித்தாலும் இத்தகைய உளப்பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்துவது சாத்தியமல்ல. சாத்தியமற்றதை சாத்தியமாக்குவது ஜெவை ஊக்கமாகக் கொண்டு ஒருமுனைப்பட்ட நோக்குடன் மிக எதிர்மறையான நம் சூழலிலும் நிகழ்த்தப்படும் இத்தகைய நிகழ்வுகள்.
மனதில் இருந்து அகலா விழா நினைவுகளுடன்
சிவக்குமார் ஹரி
சென்னை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers




