Jeyamohan's Blog, page 735
August 4, 2022
நீரின் நிறைவு
பெண்ணியத்துக்கு எதிரான ஜெயமோகன் சொற்களில் இருந்து ஒரு பெண்ணிய இதழா என்று குமுறி ஓர் ஆவேசமான கடிதம். பொதுவாக ஆவேசமாகப் பேசினால் பொய்யுணர்வுகள் உண்மையாகிவிடுமென்ற நம்பிக்கை நம்மிடையே வலுவாக உள்ளது. நாம் நூல்களில் இருந்து எதையும் கற்பதில்லை, பொதுவான மேடையுரைகளில் இருந்தே கற்கிறோம் என்பதே காரணம்.
ஒன்று, நான் பெண்ணியத்திற்கோ அல்லது வேறெந்த இயத்துக்கோ எதிரி அல்ல. பெண்ணியம் ஒரு விடுதலைச் சிந்தனை என்பதே என் எண்ணம். ஆனால் எழுத்தில் அப்படி ஓர் நிலைபாடு எடுப்பது கலைப்படைப்பு கொள்ளவேண்டிய அகவயத்தன்மை, தன்னிச்சையாக விரியும் தன்மை, தன்னைத்தானே கண்டுகொள்ளும் தன்மை ஆகியவற்றை இல்லாமலாக்கிவிடும் என்பது மட்டுமே என் கருத்து. அறிவு வகுத்த பாதையில் செல்வது அல்ல கலை. சூழல் உருவாக்கும் பார்வையை எதிரொளிப்பதல்ல இலக்கியம். அவ்வளவுதான்.
பெண்ணின் ஆற்றல் வெளிப்படுவது பெண்ணியக் கூச்சலின்போது என நான் நம்பவில்லை. தனக்குச் சூழலும் தன் இயல்பும் வகுத்த எல்லைகளை தாண்டிச்செல்பவரே ஆற்றல் கொண்டவர். ஆணானாலும் பெண்ணானாலும். அத்தகைய அத்தனை பெண்களையும், ஒருவர் விடாமல், அடையாளப்படுத்தி முன்னிறுத்துபவனாகவே இதுவரை இருந்து வந்துள்ளேன். கரசூர் பத்மபாரதி வரை.
நீலி இதழில் அப்படிப்பட்ட ஆளுமை ஒருவரின் பேட்டி வெளிவந்துள்ளது. மதுமஞ்சரி கிராமப்புற கிணறு சீரமைப்பு இயக்கத்தை தொடங்கி முன்னெடுக்கும் ஆளுமை. நம்முடன் வாழும் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனின் அடுத்தடுத்த தலைமுறை தொடர்ச்சியை நான் அவரில் பார்க்கிறேன். பல ஆண்டுகளாக எனக்கு அணுக்கமான மதுவை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அணைக்காமல் இருக்க முடியவில்லை. என்னை அவர் அப்பா என அழைக்கும்போது உருவாகும் பெருமிதம் ஆணாக இருப்பதன் பேரின்பங்களில் ஒன்று.
மாலன் -கடிதம்
மாலனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அந்த அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கக் கூடாது என்கிறார்கள். அதைப்பற்றிய விமர்சனங்களை கவனித்தீர்களா? (ஸ்டாலின் பாராட்டியதும் எல்லாம் கப்பென்று அடங்கிவிட்டதையும் கண்டிருப்பீர்கள்)
நா.குமார்
***
அன்புள்ள குமார்,
சாகித்ய அக்காதமி என்றல்ல எந்த விருது பற்றியும் என்னுடைய மதிப்பீடு ஒன்றே. அதைப் பெறுபவர் இலக்கியத்திற்குப் பங்களிப்பாற்றியவரா இல்லையா? அவருக்கு அத்தகுதி உண்டா இல்லையா?
அந்நூலை பரிசுக்குரியதாக கருதலாமா என்பது இன்னொரு கேள்வி. ஆனால் அப்படிப் பார்த்தால் சாதனையாளர்களான பல படைப்பாளிகளுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அக்காதமி விருதுகள் மிகச்சாதாரணமான ஆக்கங்களுக்கு அளிக்கப்பட்டவை. ஏனென்றால் அவர்கள் எழுதுவதை நிறுத்திவிட்டபின் முதிய வயதில் விருது அளிக்கப்படுகிறது. மூன்றாண்டுகளுக்குள் வந்த நூலுக்கு விருது அளிக்கப்படவேண்டும் என்னும் நெறி இருப்பதனால் அக்காலத்தில் வெளியான ஏதோ ஒரு நூலுக்காக அவ்விருது அளிக்கப்படுகிறது. ஆகவே நூலை நான் கருத்தில் கொள்வதில்லை.
மாலனுடைய மொழியாக்கம் சிறப்பானது. இலக்கியச் செயல்பாட்டாளராக, இதழாளராக அவருடைய பங்களிப்பை எவரும் மறுக்கவும் முடியாது. ஆகவே எல்லாவகையிலும் அவ்விருது ஏற்கத்தக்கதே.
மாலனுக்கு இதழியலுக்காக இந்தியாவின் எந்த தலைசிறந்த விருது வழங்கப்பட்டாலும் நான் வரவேற்பேன். ஆனால் இலக்கியத்துக்கான சாகித்ய அக்காதமி வழங்கப்பட்டால் அவருடைய இலக்கியப்படைப்புகள் அந்த தரம் கொண்டவை அல்ல என விமர்சிப்பேன்.
(ஆனால் இப்போதெல்லாம் எதையும் விமர்சனம் செய்யவே மனம் வரவில்லை. சரிதான் என்று ஒரு நிலை. சலிப்போ சோர்வோ அல்ல. நான் மிக விலகிவிட்டதாக உணர்கிறேன்)
அமைப்பில் இருப்பவர் விருது வாங்கலாகாது என்று நெறி இல்லை. நடுவர்குழுவில் இருப்பவர் வாங்கலாகாது என்றே நெறி உள்ளது. அது ஒரு சிறு அறப்பிரச்சினையாகச் சொல்லப்படலாம். ஆனால் சொல்பவர்களின் மொழியையும் அதிலுள்ள கசப்பையும் பாருங்கள். அறம் பற்றி கவலைப்படும் கும்பலா அது? நேற்றுவரை அவர்கள் சாகித்ய அக்காதமி பற்றி என்ன கவலைப்பட்டிருக்கிறார்கள்?
அக்குரல்களில் உள்ள அரசியல்வெறி, சாதிவெறி ஆகியவற்றில் இருந்து விலகிவிடத் தெரியாவிட்டால் நாம் இலக்கியம் வாசித்துப் பயனில்லை.
ஜெ
August 3, 2022
அபி 80, ஒரு மாலை
பாண்டிச்சேரியில் இருந்து நள்ளிரவில் கிளம்பி 31 ஜூலை 2022 அதிகாலை மதுரைக்கு வந்தேன். மதுரையில் அழகியமணவாளனும், ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் மனைவி கிருபாவும் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார்கள். முந்தைய நாள் மழைபெய்த ஈரமும் குளிரும் இருந்த மதுரை எனக்கு புதியது. நான் விடியற்காலையில் வியர்வை பெருகச்செய்யும் மதுரையையே அறிந்திருக்கிறேன்.
விடுதிக்குச் சென்றதும் பேசிக்கொண்டிருந்தேன். கவிஞர் தேவதேவனை பெங்களூரிலிருந்து வந்த ரயிலில் இருந்து ஜி.எஸ்.எஸ்.வி.நவீனும் அருளும் அழைத்து வந்தார்கள். சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நான் தூங்கிவிட்டேன். பத்துமணிக்குத்தான் எழுந்தேன். அதற்குள் ஏகப்பட்ட கூட்டம் அறைக்குள் நிறைந்து இலக்கியக்கொப்பளிப்பு ஆரம்பித்திருந்தது. (தேவதேவன் பெங்களூரில் தன் மகனுடன் இருக்கிறார். பெங்களூர் நண்பர்கள் சந்திக்க விரும்பினால் ஏதாவது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம். அபி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பினார். ஆகவே அழைத்து வந்தார்கள்)
அருண்மொழி, அஜிதன், சைதன்யா மூவரும் நாகர்கோயிலில் இருந்து காரில் வந்தனர். அருண்மொழி அபிக்கு அணுக்கமானவள். இருவருக்கும் பொதுவானது இந்துஸ்தானி இசை. கீழே சிரிப்பொலியும் அரட்டையும் உரக்க கேட்கும். ‘யார்?’ என்றால் ‘அபி சார்தான்’ என்பாள். அவள் அடுத்த தலைமுறை படைப்பாளி. ஆகவே ஒரு நெருக்கம். எனக்கெல்லாம் அபி சுந்தர ராமசாமியின் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆகவே மரியாதையுடன் கூடிய ஒரு விலக்கம்.
ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் பிடிவாதமான முயற்சியால், தனிமனித உழைப்பால், உருவான நிகழ்ச்சி இது. அபியின் கவிதைகள் வழியாக மட்டுமே அவரை அறிந்தவர் நவீன். அத்தகைய வாசகர்களால்தான் கவிதை என்னும் இயக்கம் நீடிக்கிறது.
மதியம் அம்மா மெஸ்ஸில் சாப்பிட்டோம். சாப்பிட்டதுமே நான் ஒரு குட்டித்தூக்கம் மறுபடியும் போட்டேன். முந்தைய நாள் ரயிலில் போர்வை தரப்படவில்லை. தெரிந்திருந்தால் பாண்டிச்சேரியில் போர்த்தப்பட்ட பொன்னாடையையாவது கொண்டுவந்திருக்கலாம். எங்கள் குழு வழக்கப்படி அப்பொன்னாடையை நண்பர் இளம்படைப்பாளி அனங்கனுக்கு போர்த்தி அவர் எழுதவிருக்கும் படைப்புகளுக்காக கௌரவித்தோம்.
சுரேஷ்குமார இந்திரஜித் வந்திருந்தார். நீண்டநாளுக்குப் பின் கவிஞர் ஜெயபாஸ்கரனைச் சந்தித்தோம். முன்பு அவர் அனுப்பும் அழகிய கையெழுத்திலான வாழ்த்து அட்டைகள் நினைவில் நின்றிருப்பவை. அவருடைய கடிதங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. முழு இன்லண்ட் லெட்டரில் நாலைந்து வரிகள் எழுதி எஞ்சிய பக்கத்தை காலியாக விட்டு வீணடிக்கும் அவர் மேல் எனக்கு ஆதங்கம் இருந்தது அன்று
திருச்செந்தாழை,ஸ்டாலின் ராஜாங்கம், இளங்கோவன் முத்தையா என எழுத்தாளர்களும் நண்பர்களும் வந்துகொண்டிருந்தனர். நண்பரும், சொல்புதிது இதழை என்னுடன் சேர்ந்து நடத்தியவருமான சதக்கத்துல்லா ஹசநீ, அமெரிக்காவில் சந்தித்த ஜமீலா என பலர் வந்திருந்தார். அரங்கு நிறைந்தது. குளிரூட்டப்பட்ட அரங்கு. கொஞ்சம் கூடுதலாகவே குளிர் ஊட்டப்பட்டிருந்தது.
சிறப்பான விழா. ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு வகையில் நன்றாக அமைந்திருந்தன. அபியை வெவ்வேறு கோணத்தில் அணுகும் உரைகள்.மிக நன்றாகத் தயாரிக்கப்பட்ட சுசித்ராவின் உரை கட்டுரையாகவே வெளியிடத்தக்க அளவுக்குச் செறிவு கொண்டிருந்தது
அபி பற்றி நான் நிறையவே பேசியிருக்கிறேன். ஆனால் எத்தனை பேசிய பின்னரும் பேச மிஞ்சியிருக்கிறது. கவிஞர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் கவிதை பற்றி கவிஞர்கள், விமர்சகர்கள் பேசுவதற்கும் வாசகர்கள் பேசுவதற்கும் பெரிய வேறுபாடுண்டு. கவிதையை வாசகர்கள் பேசத்தொடங்கும்போது சட்டென்று அது கவிதை வடிவமாக அன்றி, கவிதை அனுபவமாக ஆகிவிடுவதை காண்கிறேன்
முன்பு அபி எழுதிய ஒரு கட்டுரையையே சார்ந்து பேசுவதென்றால் கவிதை கவிஞனின் தனியனுபவம், பின்னர் மொழியினூடாக ஒரு பொது அனுபவம் என்னும் வடிவங்களை அடைகிறது. அந்த பொதுவடிவமே இலக்கிய விமர்சனத்தில் பேசப்படுகிறது. கவிதையை வாசகர்கள் பேசத்தொடங்கும்போது அது மீண்டும் ஒருவகை தனியனுபவமாக ஆகிறது. வாசகன் பேசுவது அவன் அடைந்த கவிதையைப் பற்றித்தான்.
எப்போது ஒரு கவிஞன் அப்படி வாசகர்களின் கவித்துவக் கற்பனையில் திகழ தொடங்குகிறானோ அப்போதுதான் அவன் அமரத்துவம் அடையத் தொடங்குகிறான். அவன் மொழியில் கரைந்து மொழியின் பகுதியாக ஆகிவிடுகிறான். அவ்வண்ணம் ஒரு கவிஞனை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பதற்காகவே கவிஞனைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. எக்கவிஞனும் இயல்பாக மக்களிடம் சென்று சேர்வதில்லை. அப்படிச் சென்று சேர்பவர்கள் மக்கள் ஏற்கனவே அறிந்தவற்றை எழுதுபவர்கள். கவிஞனுக்கும் மக்களுக்கும் நடுவே ஓர் இணைப்பு மொழியில் உருவாகவேண்டும். அதற்கே கவிதைரசனை, கவிஞனை விவாதித்தல் ஆகியவை தேவையாகின்றன. நாம் இன்று பாரதியை நம் மொழியின் ஒரு பகுதியாக உணர்கிறோம். பேசிப்பேசி அவனை கொண்டு சென்று சேர்த்தவர்கள் பரலி சு. நெல்லையப்பர், வ.ரா முதல் ப.ஜீவானந்தம், ஜெயகாந்தன் வரை பலர்.
அபியின் ஏற்புரையில் தன் கவிதை ஓர் வாசிப்பனுபவமாக தன்னிடமே திரும்பி வருவது பற்றிய திகைப்பும் மகிழ்ச்சியும் தெரிந்தது. கவிஞருக்கு வாசகர்கள் கொடுக்கக்கூடும் பரிசு அது ஒன்றே. அது அவருடைய எண்பதாவது பிறந்தநாளில் ஒரு நற்கொடை.
விழாவில் அபியின் கவிதைகள் பற்றி விஷ்ணுபுரம் வட்டம் சார்பில் உருவாக்கப்பட்ட அந்தர கவி என்னும் தொகைநூல் வெளியிடப்பட்டது. அபியின் நண்பர் ஜி.ஆர்.பாலகிருஷ்ணன் அபி பற்றி எழுதிய ஆழங்களின் அனுபவம் என்னும் நூல் வெளியிடப்பட்டது. அபிக்கு வாழ்த்துப் பத்திரம் அளிக்கப்பட்டது. இளம் எழுத்தாளர் நிகிதா தொகுத்து வழங்கினார்.
விழாவுக்குப்பின் இரவுணவு ஏற்பாடாகியிருந்தது. விழா நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே மழை கொட்ட ஆரம்பித்தது. விழா முடிந்தபின்னரும் மழை தொடர்ந்து மெல்ல ஓய்ந்தது. எனக்கு விழாவுக்கு நிகராகவே அந்த விருந்தும் பிடித்திருந்தது. ஒருவரின் பிறந்தநாள் விழாவில் உணவு வழங்குவது இருந்தாகவேண்டும் என்று தோன்றுகிறது
நான் பதினொரு மணி ரயிலில் திருவனந்தபுரம் செல்லவேண்டும். ஆகவே உடனடியாக காரிலேறி விடுதிக்குச் சென்று அங்கே பெட்டியை தூக்கிக்கொண்டு விரைந்தேன்.
கு.ராஜவேலு, இலட்சியவாதமும் அதிகாரமும்
கு.ராஜவேலுவின் வாழ்க்கையை வாசிக்கும்போது எத்தனை பெரிய சாகசவாழ்க்கை, எத்தனை பெரிய இலட்சியவாதம் என்று முதலில் தோன்றியது. அவர் எழுதிய சில நாவல்கள் எண்பதுகளில் கல்லூரிப்பாடங்களில் இருந்தன. இன்று அவரை எவரும் நினைவுறுவதில்லை. அவர் மறைந்தபோது ஓர் அஞ்சலிக்குறிப்பு போடலாமென எண்ணினேன். வேண்டாம், அவருக்கு அந்த தகுதி இல்லை என்று தோன்றியது. தவிர்த்துவிட்டேன்.
ஏனென்றால், அவர் தன் இலட்சியவாதம் வழியாக காங்கிரஸ் அரசில் உயர்பதவியை அடைந்தார். அதன்பின் அந்த அதிகாரத்தில் திளைத்தார். தன்னை ஓர் எழுத்தாளனாக முன்வைத்தவர் அதன்பொருட்டு மற்ற நல்ல எழுத்தாளர்களை முழுமையாக புறக்கணித்தார். கல்வித்துறைக்குள் நவீன இலக்கியம் நுழைய அரைநூற்றாண்டுக்காலம் பெருந்தடையாகத் திகழ்ந்தார். அவருடைய அதிகாரத் தோரணை (காமராஜுடன் அவருக்கிருந்த நட்பும்) பெரிதும் பேசப்பட்டுள்ளது.
ஓர் உதாரணம். தி.ஜ.ரங்கநாதன் முதுமையில் நோயுற்று தங்க இடமில்லாமல் அரசிடம் ஒரு வீட்டுக்கு விண்ணப்பித்தார்.ஜெயகாந்தனே அவருக்காக காமராஜிடம் மன்றாடினார். அவருக்கு குடிசைமாற்றுவாரிய வீடு ஒதுக்கப்பட்டது. தி.ஜ.ரவும் அவர் மனைவியும் குடிசைமாற்றுவாரிய வீட்டின் எண் எழுதப்பட்ட சிலேட்டுடன் நிற்கும் அடையாளப்புகைப்படம் தமிழிலக்கியவாதியின் அவலத்தின் கண்கூடான உதாரணமாக இன்றும் உள்ளது. கு.ராஜவேலு எண்ணியிருந்தால் இதழாளர்களுக்கான ஒரு இல்லத்தை கௌரவமாக அவருக்கு கொடுத்திருக்க முடியும்.
கு.ராஜவேலு
கு.ராஜவேலு – தமிழ் விக்கி
தமிழ் விக்கி தூரன் விருதுகள்- விருந்தினர். எஸ்.ராமச்சந்திரன்
தமிழ் விக்கி- தூரன் விருது வழங்கும் விழா 14- ஆகஸ்ட்- 2022 அன்று காலைமுதல் இரவு வரை ஈரோட்டில் நிகழ்கிறது. (முந்தையநாளே வந்து தங்க விரும்புபவர்களுக்கு இடவசதி உண்டு). இதில் ஆய்வாளர்களை வாசகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி அமைகிறது. இந்நிகழ்வு ஆய்வுலகில் என்ன நிகழ்கிறது என்பதை பொதுவாசகர்கள் உணர்வதற்கான அரங்கு.
தமிழ் விக்கி- தூரன் விருது விழாவில் வரலாற்றாய்வாளர் – பண்பாட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொள்கிறார். வாசகர்களுடன் ஒரு மணிநேரம் உரையாடுவார்.
எஸ்.ராமச்சந்திரன் நீண்டகாலம் கொற்கையில் பணியாற்றியவர். தமிழக வரலாற்றாய்வில் ஒரு கட்டத்தில் உருவான தேக்கத்தை பல புதிய முன்னூகங்கள் வழியாகத் தகர்த்தவர் ராமச்சந்திரன். உதாரணமாக அவர் காந்தளூர்ச்சாலை பற்றி முன்வைக்கும் புதிய ஊகத்தை சொல்லலாம்
வரலாற்றாய்வை பண்பாட்டு ஆய்வுடன் இணைத்து நிகழ்த்தியவர், சாதிகளின் உருவாக்கத்தையும் அமைப்பையும் செயல்முறையையும் கருத்தில் கொண்டு நுண்வரலாற்றாய்வை நிகழ்த்தியவர் என ராமச்சந்திரனின் பங்களிப்பை வரையறை செய்யலாம்.
வரலாற்றில், பண்பாட்டில் ஆர்வமுள்ளவர்களை கொந்தளிக்க, சிந்திக்க, குழம்ப, நெடுந்தொலைவு செல்லச் செய்யும் ஆய்வுகளும் கருதுகோள்களும் நிறைந்தவை ராமச்சந்திரனின் எழுத்துக்கள்.
ராமச்சந்திரன் தமிழ் விக்கி
காந்தளூர் சாலை கலமறுத்தருளி எஸ்.ராமச்சந்திரன் எஸ்.ராமச்சந்திரன் மீனாட்சி பற்றி நாகராஜாவும் நாகரம்மனும் முத்தூற்றுக் கூற்றம் – கள ஆய்வு எறாடி ராஜாக்கள் யார்? வல்லம் பிரகாரப் போரும் வெங்கலராஜனும் கறுப்பு வெள்ளை சிவப்பு நாஞ்சில் குறவன் என்பவன் யார்? காமவேள் விழவு குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆராயப்பட வேண்டியவை இராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் வரலாறா கற்பனையா? ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் திருமகள் உற்பத்தி பண்டைத்தமிழகத்தில் இந்திரவழிபாடு கொற்றவை மலை ஐயன் தைநீராடல் முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்? திருமண ஏசல் பாடல்கள் சிலப்பதிகாரத்தின் காலம் திருமெய்யம் கல்வெட்டு தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?மைத்ரி- கமலதேவி
உத்ரகண்டில் உள்ள ருத்ரபிரயாகையில் நாவல் தொடங்குகிறது. பிரயாகை என்றால் சங்கமம். மைத்ரி என்றால் ஒருமை. மிச்சமின்றி சங்கமித்தல்.மனிதனும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். இயற்கையும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். மனிதரும் மனிதரும் சங்கமிக்கும் உணர்வு நிலைகள். மனமும் மனமும் சங்கமிக்கும் இடங்கள். ஆணும் பெண்ணும் சங்கமிக்கும் இடங்கள். இறுதியில் தானே தன்னை அறிந்து தன்னுடன் சங்கமிக்கும் ஒரு அறிதல் நிலையில் நாவல் முடிகிறது.
மைத்ரி – கமலதேவி
விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்
விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள். பல நூல்கள் புதிய பதிப்பு வந்துள்ளன. வரவிருக்கும் ஈரோடு புத்தகச் சந்தையில் யாவரும் பதிப்பகம் உட்பட கடைகளில் இவை கிடைக்கும். கோவையில் விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகத்தில் கிடைக்கும். இணையப் புத்தகக் கடைகள் வழியாகவும் வாங்கலாம்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
சு.வேணுகோபால், சொல்முகம் கருத்தரங்கு
நண்பர்களுக்கு வணக்கம்.
நமது சொல்முகம் வாசகர் குழுமத்தின் முதல் இலக்கிய கருத்தரங்கு வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. அதில் எழுத்தாளர் திரு. சு. வேணுகோபால் அவர்களின் முன்னிலையில் அவரது படைப்புகள் மீதான வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்படும். இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்விற்கு வரவேற்கிறோம்.
நாள் : 07-08-22, ஞாயிற்றுக்கிழமை, காலை 09:00 – 01:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு:
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
தமிழ் விக்கி தூரன் விருது விழா
தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவரும், இசைப்பாடலாசிரியருமான மறைந்த பெரியசாமி தூரன் நினைவாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட உள்ளது. இவ்விருது ரூபாய் இரண்டு லட்சமும் சிற்பமும் அடங்கியது.
இவ்வாண்டுக்கான விருது மானுடவியல் – நாட்டாரியல் ஆய்வாளரான முனைவர் திரு கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விழா ஈரோடு, சென்னிமலை சாலை, கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள ராஜ் மகால் திருமண மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ உள்ளது.
உரையாடல் அரங்குகள்:
13.08.2022
சிறப்பு விருந்தினராக மலேசியாவிலிருந்து சுவாமி பிரம்மானந்தா அவர்கள் வருகிறார். விழாவுக்கு முதல் நாள் 13 ஆகஸ்ட் 2022 சனிக்கிழமை இரவு சுவாமி பிரம்மானந்தாவுடன் உரையாடல் நிகழும். வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.
உரையாடலில் பங்கு கொள்ள 13 ஆம் தேதி சனிக்கிழமை மாலை வரவிரும்பும் வாசகர்கள் azhaindian@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு கீழ்க்கண்ட தகவல்களை பகிர்ந்து பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
பெயர் :
ஊர்:
வயது:
தொலைபேசி எண்:
14.08.2022
14 ஆகஸ்ட் 2022, ஞாயிறு காலை 10.00 மணி முதல் அ.கா.பெருமாள், டாக்டர் எஸ்.ராமசந்திரன், லோகமாதேவி, கரசூர் பத்மபாரதி ஆகியோருடனான வாசகர் உரையாடல் அரங்குகள் நிகழும்.
நன்றி
August 2, 2022
கமல் உரையாடல், இரண்டாம் பகுதி பற்றி…
கமல் பேட்டியின் இரண்டாம் பகுதி வெளியிடப்பட்டிருக்கிறது. முந்தைய பகுதியின் மீதான பல எதிர்வினைகளை பார்த்துக் கொண்டிருந்தேன். கமல் என்னும் ஆளுமையை ஒவ்வொருவரும் எப்படி எப்படி புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்னும் திகைப்பு ஏற்பட்டது.
அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஊடக ஒளியிலேயே நின்றிருக்கும் ஓர் ஆளுமைக்கு அந்த ‘விதி’ தவிர்க்க முடியாத ஒன்று என்று புரிந்தது. ஆனாலும் அந்த குழப்பச்சிடுக்குகள் ஆச்சரியமூட்டின. எத்தனை கொண்டாட்டம், எத்தனை விதந்தோதல், எத்தனை காழ்ப்புகள், எத்தனை பொருமல்கள். சம்பந்தமே அற்ற எத்தனை முத்திரை குத்தல்கள். ஒருபக்கம் பார்ப்பனிய முத்திரை. மறுபக்கம் கிரிப்டோ கிறிஸ்தவர் என்று இந்துத்துவர்களின் அடிவயிற்றுச் சாபம்…
நானறிந்த கமல் பற்றிச் சொன்னால் அது இங்குள்ள விதந்தோதல்களில் ஒன்றாக ஒரு பக்கத்தினருக்கு தோன்றும். இன்னொரு சாரார் அவர்களின் ‘ஆண்டவரை’ நான் மனிதனாக்கிவிட்டதாக எண்ணவும்கூடும். ஏதேனும் ஒரு கட்டத்தில் அதை எழுதலாம். இந்த உரையாடலின் பின்னணி, உரையாடலின் முறை ஆகியவற்றை ஆர்வமுள்ள நண்பர்கள் புரிந்துகொள்வதற்காகச் சிலவற்றைச் சொல்லியாகவேண்டும். அவர்களுக்காக மட்டும்.
இந்த உரையாடல் என்னுடைய அறம் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories of the True என்னும் நூலின் வெளியீட்டை ஒட்டி ஜகர்நாட் பதிப்பகமும் இந்து நாளிதழும் கோரியதன்பொருட்டு நிகழ்த்தப்பட்டது. ஒரு வணிக வெளியீடான புத்தகத்தின் ‘பிராண்ட் அம்பாசிடர்’ ஆக கமல் வந்தார். அவர் ஒரு வணிகப்பொருளின் விளம்பரத்துக்காக சிலகோடிகள் ஊதியம் பெறுபவர். இது நட்புக்காக மட்டும் அல்ல, இந்நூல் அவரை கவர்ந்த ஒன்று என்பதற்காகவும் அவர் அளித்த விளம்பரம். அவருடைய அலுவலகத்தில் நடைபெற்றது. இன்று இந்தியாவில் ஒரு நூல் விளம்பரத்துக்காக வேறெந்த நடிகரையாவது அணுகமுடியுமா? எனக்குத் தெரியவில்லை.
இந்நூலுக்காக மட்டும்தான் அவர் வந்தாரா? இல்லை, இதற்கு முன்னரும் தமிழில் இருந்து ஆங்கிலம் சென்ற பல இலக்கிய நூல்களுக்கு அவருடைய பரிந்துரையே பின்னட்டைக் குறிப்பாக இடம்பெற்றுள்ளது. இன்று நவீனத்தமிழ் இலக்கியத்தை தேசிய அளவுக்கு, உலகளவுக்கு கொண்டுசெல்ல நமக்கு புகழ்பெற்ற வேறு குரல்கள் அனேகமாக இல்லை என்பதே உண்மை. நம்மில் பிற உலகப்புகழ்பெற்றவர்கள் நம் அறிவியக்கத்தை எவ்வகையிலும் பொருட்படுத்துவதில்லை. இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி கன்னட இலக்கியம் பற்றிப் பேசுகிறார். அப்படிப்பேச ஒரு தொழிலதிபர் நமக்கு இல்லை. நம் துணைவேந்தர்கள், நம் அரசியலாளர்கள் எந்த இலக்கியவாதி குறித்தும் அறியமாட்டார்கள். கமல் நமக்கு இன்றிருக்கும் ஒரே ஊர்தி. இந்தியா கவனிக்கும் ஒரே தமிழ்க்குரல். அதன்பொருட்டு அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
கமலுடனான உரையாடல் பொதுவாக அறம் கதைகள் பற்றியும், திரைப்படங்கள் சினிமா ஆவதைப்பற்றியும் நடக்கலாம் என்று பதிப்பாளர் கூறினர். பேட்டியாக அன்றி ‘தன்னிச்சையான’ உரையாடலாக நிகழலாம் என்றும், ஒரு குறிப்பிட்ட புள்ளியில் கூர்ந்து செல்லவேண்டியதில்லை என்றும் கோரினர். அவ்வாறே நிகழ்ந்த இயல்பான பேச்சு இது. அது பின்னர் படத்தொகுப்பாளர்களால் அவர்களின் கோணத்தில் வெட்டி தொகுக்கப்பட்டுள்ளது.
நான் கமலிடம் என்றுமே விரும்புவது அவருடைய இளமையை. எனக்கு அறுபதாகிறது. நாற்பது வயதான பலரை பார்க்கையில், என்ன இத்தனை முதியவர்களாக இருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றும். நான் என் முப்பது வயதில் எத்தனை கனவுகளும், செயலூக்கமும் கொண்டிருந்தேனோ அதே போலவே இன்றும் திகழ்பவன். எனக்குச் சோர்வும் சலிப்பும் இல்லை. மகிழ்ச்சியும் கொந்தளிப்புமான வாழ்க்கை என்னுடையது. வாசிப்பு, எழுத்து, நட்புக்கூடல், பயணம் என் அன்றாடம். ஆனால் என் பார்வையில் என்னைவிட இளையவராகவே கமல் தோற்றமளிக்கிறார்.
எனக்கு எப்போதுமே தோன்றுவது அவருடைய மாறா வயது இருபது என்று. எதிலும் உற்சாகம். ஒன்றைச் சொல்லும்போதே அவருக்கு பத்து நினைவுக்கு வந்துவிடும். ஒரு திட்டத்தைச் சொல்லும்போதே மேலும் பல திட்டங்கள் பொங்கி எழும். நிலைகொள்ளாமல் இருப்பார். அந்த ஊக்கத்தாலேயே அவரால் ஒன்றை முழுமையாகச் சொல்ல முடியாது. ஒரு வலுவான தர்க்க வியூகத்தை உருவாக்க முடியாது. ஒரே விஷயத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கவும் இயலாது. அந்த பேச்சு, சிரிப்பு ஆகியவற்றிலிருக்கும் தன்னியல்பான இளமையின் ரசிகர்களே அவருடைய நண்பர்கள்.
இருபது வயதின் ஊக்கக் கொப்பளிப்பு இன்றி அவரை நான் கண்டதில்லை. அவரை நான் நேரில் காண விரும்புவதே அதன்பொருட்டுத்தான். திரையுலகில்கூட பலர் அவரை பார்ப்பதே அந்த தணியாத ஊக்கத்தில் சிறிது பெற்றுக்கொள்வதற்காகத்தான். அவ்வாறு வாழ அவரால் இயன்றிருக்கிறது. அல்லது அந்த இயல்பு அவருள் இருக்கிறது. இன்னொருவர் என்றால் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் திரைத்திட்டங்களில் திளைப்பார்கள். கோடிகளில் கணக்குபோட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த வெற்றியில் நீந்திக்கொண்டிருப்பார்கள். அவர் கிளம்பி அமெரிக்கா சென்று முழுக்கவே டிஜிட்டல் திரைப்பின்னணியில், முழுக்கமுழுக்க உள்ளரங்கில் திரைப்படம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கற்க ஒரு பல்கலைக்கழக வகுப்பில் சென்று அமர்ந்திருக்கிறார்.
தன்னைச் சுற்றி அதைப் பயில வந்து அமர்ந்திருப்பவர்கள் முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் என்றார். அவர் அவர்களைவிடவும் பத்து வயது இளையவர்தானே என்று நான் எண்ணிக்கொண்டேன். அடுத்து என்ன பயிலலாம், எந்த புதிய இடங்களுக்குள் நுழையலாம் என்னும் சிறுவனுக்குரிய வேட்கை அவருடையது.
அந்த உரையாடலிலும் தெரிபவர் அந்த கமல். அவர் பேசுவன எல்லாமே அப்போது அக்கணத்தில் அவருக்கு தோன்றுபவை. அவர் இயல்பு என்னவென்றால் அப்படிப் பேசும்போதே ஓர் ஐம்பதுகோடி ரூபாய் திட்டம் உள்ளத்தில் தோன்றிம, அங்கிருந்தே அப்படியே எழுந்து, அதைச் செய்ய ஆரம்பிப்பது. உலகியல் பார்வையில் அவரை திட்டமிடத்தெரியாதவராக, லௌகீக விவேகம் கொஞ்சம் குறைவானவராக அது காட்டலாம். ஆனால் உண்மையில் பெரிய அரசியல்தலைவர்கள் கூட அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். நேரு அப்படிப்பட்டவர் என பதிவுசெய்திருக்கிறார்கள். கனவு காண்பவர். அதை செயலாக்கும் நடைமுறைவாதிகள்தான் நூறு, ஆயிரம்பேர் சுற்றிலும் நிறைந்திருக்கிறார்களே.
பலசமயம் கமல் வாழ்ந்த வாழ்க்கைதான் மிகச்சிறந்த வாழ்க்கையோ என்று நினைப்பேன். இளமையிலேயே நின்றுவிடுவது. இளமைக்குரிய ஊதாரித்தனம், கட்டுப்பாடின்மை, புதுப்புதுத் திட்டங்கள். தீராப்பெருங்கனவுகள், சாகசங்கள், காதல்கள்… அது ‘பாதுகாப்பான’ பயணம் அல்ல. அவரே ஏகப்பட்ட இடர்களில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டவர்தான். சாகசமும் ஆபத்தும் ஒன்றாகப்பிணைந்தவை.
ஆனால் என்ன குறைந்துவிட்டது? அவர் தன் மகள்களுக்கு மிகமிக விருப்பமான இலட்சியத் தந்தை. அவர்களின் கதாநாயகன். கூடவே அவர் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தார். சம்பாதித்தார், விரும்பிய செயல்களில் அள்ளி இறைத்தார். ஒவ்வொரு கணமும் தான் விரும்பியபடி வாழ்வில் திளைத்தார். அதுதான் இருபத்தொன்றாம் நூற்றாண்டு வாழ்க்கையோ என்னவோ. இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுமே அத்தகைய வாழ்க்கை இயல்வது. நம்மில் பலர் உண்மையில் அவரைக் கண்டு அகத்தே பொறாமை கொள்கிறோமோ? (கண்டிப்பாக நான் இல்லை. நான் என் விருப்பப்படி மட்டுமே இக்கணம் வரை வாழ்ந்தவன். ஒரு நாளையும் எனக்கு மகிழ்வில்லாததாகச் செலவிடாதவன்)
இந்த உரையாடலிலும் அவருடைய உள்ளம் தாவித்தாவிச் செல்வதை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அந்த உரையாடல் முழுக்க அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அவரைப்போல ஒரு மகத்தான கதாபாத்திரத்தை எழுதவேண்டும் என எண்ணினேன். அல்லது வெண்முரசில் அர்ஜுனன் என எழுதிவிட்டேனா என்ன?
Stories of the True : Translated from the Tamil by Priyamvada
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers


