Jeyamohan's Blog, page 734
August 6, 2022
கொங்கு அறிஞர்கள்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி பக்கங்களில் கொங்கு வட்டார அறிஞர்கள் பலருடைய குறிப்புகளைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.தி. அ. முத்துசாமிக் கோனார், டி.எம்.காளியப்பா, வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர், தெய்வசிகாமணிப் புலவர் போன்றவர்கள் பற்றிய பதிவுகள் கண்டேன்.
செ.இராசு அவர்களைப் பற்றிய பதிவும் உடனடியாக வரும் என நினைக்கிறேன்.
செந்தில்
***
அன்புள்ள செந்தில்
ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டிருக்கிறோம். விரைவில் ஒரு முழுமையான சித்திரம் அமையலாம். ஆனால் இது முடிவே இல்லாத பணி. அடுத்தடுத்த தலைமுறைகள் முன்னெடுத்துக் கொண்டுசெல்லவேண்டியது.
செ.ராசு பற்றிய பதிவு முழுமையடையும் நிலையில் உள்ளது.
ஜெ
August 5, 2022
Stories of the True- ஒரு பேட்டி
அறம் தொகுதியின் ஆங்கிலமொழியாக்கமான Stories of the True வெளியாகியிருக்கிறது. அதையொட்டி பிரிண்ட் இதழில் வெளியான என் பேட்டியுடன் ஒரு ஸூம் உரையாடலும் வெளியாகியிருக்கிறது. இந்த பேட்டிகள் உரையாடல்கள் எல்லாமே நூலை நோக்கிய கவனத்தை ஈர்ப்பதற்காகவே. இந்த விவாதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வரும் விவாதங்கள் சமூக ஊடக நுரைகள். நூலை ஒட்டி மதிப்பீடும் விவாதமும் எழுமென்றால்தான் அவற்றுக்குச் சொல்மதிப்பு.
சென்ற காலங்களில் நூலுக்கு இத்தனை விளம்பரங்கள் தேவைப்படவில்லை. ஆனால் இன்று அப்படி அல்ல. இன்று சந்தையில் நூல்கள் குவிகின்றன. விளைவாக கவனம் மெலிந்துகொண்டிருக்கிறது. வாசகர்களின் உதாசீனம் பெருகுந்தோறும் விளம்பரம் கூடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் அதற்குரியவை. இன்னும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பதிப்பகத்தார் சொல்லும் இலக்கிய மாநாடுகளுக்கெல்லாம் சென்றே ஆகவேண்டும் என்று கேள்விப்பட்டேன். பார்ப்போம்
Over 300 books, 2 rebirths later, iconic Tamil author Jeyamohan says translations are strange
அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கியும் தொல்காப்பியமும்
அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி அயல்நாட்டுத் தமிழறிஞர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். தொல்காப்பியம் சார்ந்த அவருடைய கருத்துக்கள் பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளாயின. இன்று அவர் தமிழாய்வில் அந்த விவாதம், அதில் அவருடைய நிலைபாடு காரணமாகவே நினைவுகூரப்படுகிறார்
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி – தமிழ் விக்கி
தமிழ் விக்கி- தூரன் விருது, விருந்தினர் சுவாமி பிரம்மானந்தர்
தமிழ் விக்கி- தூரன் விருது வழங்கும் விழா 14- ஆகஸ்ட்- 2022 அன்று காலைமுதல் இரவு வரை ஈரோட்டில் நிகழ்கிறது. (முந்தையநாளே வந்து தங்க விரும்புபவர்களுக்கு இடவசதி உண்டு). இதில் ஆய்வாளர்களை வாசகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி அமைகிறது. இந்நிகழ்வு ஆய்வுலகில் என்ன நிகழ்கிறது என்பதை பொதுவாசகர்கள் உணர்வதற்கான அரங்கு.
அரங்கில் சிறப்பு விருந்தினரான சுவாமி பிரம்மானந்தர் கலந்துகொள்கிறார். மலேசியாவைச் சேர்ந்தவரான சுவாமி பிரம்மானந்தர் தயானந்த சரஸ்வதியின் மாணவர். சிவானந்தர் வழிவந்த அத்வைதி. நவீன இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். மலேசியாவில் அவர் தமிழ்ப்பண்பாட்டுக்கும் தமிழ்ச்சமூகத்திற்கும் மதங்களைக் கடந்த ஒரு மையமென திகழ்பவர். கூலிம் நகரில் அவருடைய ஆசிரமத்தில் நவீன இலக்கியச் சந்திப்புகள் பல நடைபெற்றுள்ளன. சுவாமி பிரம்மானந்தரை வாசகர்கள் சந்திக்கும் உரையாடல் நிகழ்ச்சி நடைபெறும்
சோழநாட்டில் கரிசலா?
அன்புள்ள ஜெமோ,
இளங்கோ கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் படப்பாடலில் ஒரு வரி வருகிறது ‘பொட்டல் கடந்து புழுதி கடந்து தரிசு கடந்து கரிசல் கடந்து…’ என்ற வரி வருகிறது. அவரை சிபாரிசு செய்தவர் நீங்கள். அவரிடம் சொல்லுங்கள். சோழர்களின் தொடக்க காலகட்டத்தில் அவர்கள் பாண்டியநாட்டை ஜெயிக்கவில்லை. கரிசல் நிலம் அவர்களின் ஆட்சியில் இல்லை. சோழநாட்டில் பொட்டல், தரிசு நிலமே இல்லை. இதையெல்லாம் கவனித்து எழுதியிருக்கலாம். மற்றபடி பாட்டு நன்றாகவே உள்ளது.
டாக்டர் சிவதாஸன்
***
அன்புள்ள டாக்டர்
பேஷண்ட்ஸ் குறைவு என நினைக்கிறேன். முகநூலில் பிஸியாக இருப்பீர்கள் போல. மாத்ருபூதமும் இதேபோல சினிமாப்பாட்டில் அறுவைசிகிழ்ச்சை செய்தார்.
வந்தியத்தேவன் வருவது வடக்கே ராஷ்ட்ரகூட நாட்டில் இருந்து. போர்க்களத்தில் இருந்து சோழநிலத்துக்குள் நுழைகிறான். அவன் கடந்து வந்த நிலம் ராயலசீமா. அது இன்றும் பாதிப்பொட்டல். தெலுங்கு கங்கா திட்டம் வருவதற்கு முன் முழுப்பொட்டல். அதுதான் அசல் கரிசல் நிலம். அங்கு வாழ்ந்தவர்கள் குடியேறி வேளாண்மைக்கு கொண்டுவந்ததே தென்பாண்டி நாட்டுக் கரிசல் நிலம்.
பாவம் இளங்கோ. நல்ல மனிதர்.
ஜெ
***
திருப்பூர் கட்டண உரையை கேட்க…
ஆசிரியருக்கு வணக்கம்!
தாங்கள் திருப்பூரில் ஆற்றிய கட்டண உரை நிகழ்வின் காணொளிகள் இரண்டு பகுதிகளாக வெளிவர இருக்கின்றன.
இந்தக் காணொளிகளை காண #ShrutiTVLiterature சேனலின் ‘ஆம்பல்‘ என்ற Membership இருந்தால் தான் காணமுடியும். அதற்கான கட்டணம் ரூ.299.
இந்த முறையில் வசூலாகும் தொகையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நிர்வாகிகளிடம் அளித்துவிடுகிறோம்.
நன்றி!
ஞானகங்கை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
இணைந்து நடத்திய நிகழ்வில்
“கல்தூணும் – கனிமரமும்” என்ற தலைப்பில் ஜெயமோகன் ஆற்றிய உரை
Jeyamohan speech
Part 01 – https://www.youtube.com/watch?v=ypozEx9CFRs
Part 02 – https://www.youtube.com/watch?v=X3QbH42kAXU
Join Membership –
https://www.youtube.com/channel/UCW1Eo2DbGgHjc0zk9wCi2Bw/join
August 4, 2022
பொன்னி நதி, ஒரு கானல்வரி
இளங்கோ கிருஷ்ணன் அழைத்தபோது நான் திருவனந்தபுரத்தில் இருந்தேன். ஷாஜி கைலாஸுக்காக ஒரு படம். இளங்கோ பதற்றத்தில் இருந்தார். “சார் பாட்டு ஃபைனல் வெளியாயிடுச்சு…பாத்தீங்களா”
நான் “ஆமா…ரொம்ப நல்லா இருக்கு” என்றேன்
“எனக்கு பதற்றமா இருக்கு சார்….முதல்பாட்டு….பொன்னியின் செல்வனிலேயே இதான் ஃபோக் சாங். மத்ததெல்லாமே கிளாஸிக் லேங்குவேஜ்ல இருக்கு. இது முதல்ல வெளியாயிருக்கு”
அப்படி பல பதற்றங்கள். ஒரு கவிஞன் பாடலாசிரியன் ஆவதென்பது சட்டென்று புகழொளிக்குச் செல்வது. அதிலும் பொன்னியின் செல்வன் போன்ற மாபெரும் சினிமாவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் முதல்பாடல் வெளியாவதென்பது ஒரு பெருநிகழ்வு. இளங்கோ சட்டென்று அவர் குடும்பத்தினரிடையே கூட ஹீரோ ஆகியிருப்பார்.
ஆனால் அந்த மகிழ்ச்சியை இன்னும் இருபதாண்டுகள் கழித்து நினைத்துப் பார்க்கையில்தான் அனுபவிக்க முடியும். இப்போது அடிவயிற்றில் பதற்றம் மட்டுமே இருக்கும். இன்பம் போன்ற துன்பம் அல்லது துன்பம் போன்ற இன்பம். என்ன செய்கிறதென்றே தெரியாது.
மணி ரத்னத்திடம் இளங்கோவை நான் ‘சிபாரிசு’ செய்தேனா என பலர் கேட்பதுண்டு. சினிமா ஒரு தொழில். அதில் சிபாரிசெல்லாம் செல்லுபடி ஆகாது. எந்த விஐபி சிபாரிசு செய்தாலும் தகுதி இல்லையேல் தொழிலுக்குள் செல்ல முடியாது. நிலைக்கவும் முடியாது. மறக்கவே முடியாத விஷயம் இது கோடிகளின் தொழில் இது என்பது.
மணி ரத்னம் புதிய சொல்லாட்சி கொண்ட பாடலாசிரியர் தேவை என நினைத்தார். காரணம் ஒன்றே ஒன்றுதான், பலர் அதை உணர்ந்திருக்க மாட்டார்கள். இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் மிக முதிய இயக்குநர் அவரே. அவருக்குப்பின் வந்த இரண்டு தலைமுறையினர் ஓய்வுபெற்றுவிட்டனர். மணிரத்னம் இளமையாக இருப்பது அவருடைய படைப்புகளிலுள்ள இளமையால். அவர் அதை தக்கவைத்துக் கொள்வது அவர் சேர்த்துக்கொண்டே இருக்கும் இளைஞர்களால். ரவிவர்மன் பொன்னியின் செல்வனுக்கு அளித்திருக்கும் புதிய தோற்றத்தை படம் பார்ப்பவர்கள் உணரலாம். அவ்வாறுதான் புதிய கவிஞர் தேவைப்பட்டார்.
நான் இளங்கோவை பரிந்துரைத்தேன். இளங்கோவின் கவிதைத் தொகுதிகளை வாங்கிவந்து கண்ணாடிபோட்டுக்கொண்டு ஆடிட்டர் போல குனிந்து அமர்ந்து முதல்பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை எல்லா கவிதைகளையும் வாசித்து ,(தமிழகத்தில் அனேகமாக இவர் ஒருவர்தான் அவ்வாறு வாசித்திருக்க வாய்ப்பு) நல்ல வரிகளை தேர்வுசெய்து பரிசீலித்து. அதை ரஹ்மானிடம் விவாதித்து, உதவி இயக்குநர்களுடன் மேலும் ஆலோசித்து, இறுதியாக மணி ரத்னம் இளங்கோ கிருஷ்ணனை தேர்வுசெய்தார். பொன்னியின் செல்வனில் எல்லாமே அவருடைய தெரிவுதான். அவர் அப்படத்தின் சர்வாதிகாரி.
இளங்கோ கிருஷ்ணனின் இசையில் இன்னும் துடிப்பான பாடல்கள் உள்ளன. ஆனால் இந்தப்பாடல் பொன்னியின் செல்வன் என்னும் சினிமாவின் பொதுவான உளநிலையை காட்டுவது. இது பாகுபலி போல அதிகாரப்போட்டி அல்ல. பழிவாங்கும் கதை அல்ல. நல்லதும் கெட்டதும் மோதும் கதை அல்ல. இது முதன்மையாக இளமைக்கொண்டாட்டம் கொண்டது. அந்த மனநிலை வெளிப்படும் பாடல் இது. ஆடிப்பெருக்கின் களியாட்டு.
முதன்மையாக இது ஒரு நாட்டுப்பாடல். நாட்டுப்பாடலாக எழுதப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுப்பாடலை அப்படியே மெட்டமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் தேவையில்லை. அந்த நாட்டுப்பாடல் ஏதோ சில மாயங்களால் மேலைநாட்டிசையாகவும் மாற்றப்பட்டுள்ளது. மேலைநாட்டு இசையால்தான் அந்த பிரம்மாண்டமான சூழ்ந்திசை உணர்வை அளிக்கமுடியும். நம் இசை தனித்த இன்னிசை. மெலடி எனலாம். மேலை இசை சேர்ந்திசைத்தன்மை கொண்டது. ஆர்க்கெஸ்ட்ரல் எனலாம். இப்பாடலில் நாட்டார்மெட்டும் பாடலும் மாபெரும் சேர்ந்திசைத்தன்மையை அடைகின்றன. அதன்வழியாக மேலைநாட்டிசையாக மாறுகின்றன.
அதன் இறுதியில் சேர்க்கப்பட்டது சிவமணி உருவாக்கிய தாளம். எளிமையாகத் தொடங்கி சிக்கலாகிக்கொண்டே செல்வது. நான் அதை இப்போதுதான் முழுமையாகக் கேட்கிறேன். ஆனால் நெடுநாட்களாகவே அது எப்படி மீண்டும் மீண்டும் நுணுக்கமாக அமைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது என்று கேள்விப்பட்டுக்கொண்டே இருந்தேன். அப்பாடலின் மைய ஓட்டம் அந்த தாளம்தான். சொற்கள் அதனுடன் இணைந்து தாங்களும் நடனமாடுகின்றன
இளங்கோவின் வரிகளும் அழகானவை
நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்
ஆரல் மீனாட்சி
ஆரல்வாய்மொழி மீனாட்சியம்மன் ஆலயம் இன்று பொதுவழிபாட்டில் பல்லாயிரம் ஆலயங்களில் ஒன்றாக இருக்கலாம். உண்மையில் அது பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயம். மீனாட்சி விருந்தினர்தான். ஆனால் குமரித்துறைவிக்குப் பின் எனக்கு அது மதுரையேதான்
ஆரல்வாய்மொழி மீனாட்சியம்மன் ஆலயம்
ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் கோயில் – தமிழ் விக்கி
தமிழ்விக்கி தூரன் விருதுவிழா- விருந்தினர்- அ.கா.பெருமாள்
தமிழ் விக்கி- தூரன் விருது வழங்கும் விழா 14- ஆகஸ்ட்- 2022 அன்று காலைமுதல் இரவு வரை ஈரோட்டில் நிகழ்கிறது. (முந்தையநாளே வந்து தங்க விரும்புபவர்களுக்கு இடவசதி உண்டு). இதில் ஆய்வாளர்களை வாசகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி அமைகிறது. இந்நிகழ்வு ஆய்வுலகில் என்ன நிகழ்கிறது என்பதை பொதுவாசகர்கள் உணர்வதற்கான அரங்கு.
தமிழ் விக்கி- தூரன் விருது விழாவில் அ.கா.பெருமாள் பங்கெடுக்கிறார். அ.கா.பெருமாள் பொதுவாக விழாக்களில் கலந்துகொள்வதில்லை. நம் நண்பர்கள் அவரை ஒரு சூம் நிகழ்ச்சியில்தான் சந்தித்திருப்பார்கள். மிகச் சுவாரசியமான உரையாடல்காரர். 14 அன்று அ.கா.பெருமாளுடன் வாசகர்களுக்கு ஓர் உரையாடல் ஏற்பாடு செய்துள்ளோம்.
அ.கா.பெருமாள் – தமிழ் விக்கிக.நா.சு உரையாடல் அரங்கு – யுவன் சந்திரசேகர் – சந்திப்பு
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
அன்புள்ள நண்பர்களுக்கு,வணக்கம் ! க.நா.சு உரையாடல் அரங்கு கலந்துரையாடல் வரிசையில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம். இந்த இணைய நிகழ்வில் முதலில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துகொள்ளலாம். YouTube நேரலையிலும் நண்பர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை , எண்ணங்களை முன்வைக்கலாம்.க.நா.சு உரையாடல் அரங்கு யுவன் சந்திரசேகர் – சந்திப்பு
சனிக்கிழமை, ஆகஸ்ட் 6 2022, மாலை 8:30 மணி IST / காலை 10:00 மணி CST
யூட்யூப் நேரலை : https://www.youtube.com/channel/UCnKBkYCgGW5MPqp_yBRVf4gZoom நிரல் : https://us02web.zoom.us/j/82780604498(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)நிகழ்ச்சி நிரல் :8:30 PM IST / 10:00 AM CST : வாழ்த்துப்பா – விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமார்8:35 PM IST / 10:05 PM CST : அறிமுகம் / வரவேற்பு – ஆஸ்டின் சௌந்தர்8:40 PM IST / 10:10 PM CST : யுவனின் நீர்ப்பறவைகளின் தியானம் நூலை முன்வைத்து – விஸ்வநாதன் மகாலிங்கம்8:50 PM IST / 10:20 PM CST : யுவனின் ஜென் கவிதைகளை முன்வைத்து – வேணு தயாநிதி9:00 PM IST / 10:30 PM CST : கேள்வி பதில் நேரம்
அனைவரும் யூட்யூப் நேரலையில் கலந்துகொள்ளலாம்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
தொடர்புக்கு vishnupuramusa@gmail.comJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

