Jeyamohan's Blog, page 742
July 22, 2022
தஞ்சை பிரகாஷ் இலக்கிய வட்டம் தஞ்சை- மூன்று நிகழ்வுகள்
தஞ்சை பிரகாஷ் இலக்கிய வட்டம் தஞ்சை, மூன்று நிகழ்வுகள்
இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சை
நாள் : 24- 7-2022
மாலை ஐந்து மணி
July 21, 2022
காதலும் இலக்கியமும்
Otakumommy SD ஃபோர்பீரியாவாசகராக அறிமுகமாகி, எழுதத் தொடங்கியிருக்கும் சக்திவேல் ஒரு கடிதத்தில் இவ்வாறு கேட்டிருந்தார். அவருக்கு அஜிதன் எழுதிய மைத்ரி ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. மொழி வழியாகவே புலன்கள் அனைத்தையும் நிறைக்கும் அனுபவம். மெய்யான வாழ்வனுபவத்துக்கு மேல் ஒரு கனவனுபவம். அந்தப் பரவசம் என்பது அது காதல் கதை என்பதனால், அவர் இளைஞர் என்பதனால் வந்ததா? அவரால் அப்படி எண்ண முடியவில்லை. ஆனால் ஒருவர் அப்படிச் சொல்லக்கூடுமா?
நான் மைத்ரி பற்றி பேசப்போவதில்லை. காதல் என்னும் புனைவுக்கரு பற்றி சில சொல்லலாம் என்று தோன்றுகிறது. தமிழின் ஜெயகாந்தன் காதல் பற்றி எழுதியதில்லை. அவருக்கு அது எழுத உகந்ததாகவே தோன்றவில்லை. வாழ்க்கையில் காதலுக்கு மிக அற்பமான இடமே உள்ளது என்று அவர் சொன்னார். அவருடைய மூதாதையான புதுமைப்பித்தன் காதல் பற்றி எழுதவில்லை. சுந்தர ராமசாமி எழுதவில்லை. அசோகமித்திரன் எழுதுவதைப் பற்றி எண்ணிப்பார்க்கவே முடியாது. ஆனால் மௌனி பெரும்பாலும் காதல் பற்றியே எழுதினார். தி.ஜானகிராமன் காதலின் தாபத்தை வெவ்வேறு களங்களில் திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டிருந்தார்.
காதல் எந்த அளவுக்கு புனைவுக்கு உரிய கரு? உலகில் எழுதப்பட்ட கவிதைகள், கதைகளில் மிகப்பெரும்பாலானவை காதல் பற்றியவை. தமிழின் மாபெரும் கவிஞனாகிய கபிலன் பெரும்பாலும் காதல்கவிதைகளை எழுதியவன். உண்மையில் நம் அன்றாட வாழ்க்கையில் காதலின் இடம் மிகச்சிறிது. காதலிப்பவர்கள், காதலித்தவவர்களே மிகக்குறைவானவர்கள். அவர்கள் வாழ்க்கையிலேயே காதலின் காலகட்டம் மிகக்குறுகியது. வாழ்க்கையில் காதலுக்கு எவ்வளவு இடம் என்று பார்த்தால் இலக்கியத்தில் காதலின் இடம் மிகமிக அதிகம். நம்பமுடியாத அளவுக்கு இலக்கியம் காதலை பெரிதாக்கியிருக்கிறது. கவிதைகளில் பெரும்பாலானவை காதலைப்பற்றியவையே. காதல் இல்லையேல் இசையே இல்லை என்பார்கள். எல்லா பாடல்களும் ஏதோ ஒருவடிவில் காதல்பாடல்களே என்று பி.கே.பாலகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் சொல்கிறார்.
யதார்த்த உணர்வு கொண்ட எழுத்தாளர்களைப் பொறுத்தவரை காதல் என்பது ஒருவகை மனமயக்கம், ஒரு வகை பொய்யான நெகிழ்ச்சி, அவ்வளவுதான். மிகக்கறாராகப் பார்த்தால் காதல் என்பது என்ன? ஒரு ஆண் பெண்ணிடம் உடலுறவு கொள்ள அவள் ஒப்புதலை கோருவதுதானே? அல்லது, பெண் ஆணிடம் கோருவது. பாலுணர்வின் ஒரு மென்மையான வெளிப்பாடு. எல்லா விலங்குகளிலும் ஆண் பெண்ணை வெல்லவும் பெண் ஆணை கவரவும் அந்த நாடகம் நடத்தப்படுகிறது. சரியான இணையை கண்டடைவதற்கான ஓர் உளவியல் போட்டிதான் அது. பாலுறவில் காதல் முடிவடைகிறது. அதற்குப்பின் உள்ளது காம உறவு. அதன் நீட்சியாக உருவாகும் குடும்பம் என்னும் அமைப்பும், அதற்குள் உள்ள உறவுகளும் பின்னர் தொடர்கின்றன. காதல் வெறுமொரு தொடக்கம், ஒரு முகாந்திரம்– வேறென்ன?
எனில் அதை ஏன் இத்தனை தீவிரமாக இலக்கியம் பேசுகிறது? முப்பதாண்டுகளுக்கு முன் சுந்தர ராமசாமியுடன் நான் செம்மீன் நாவலை முன்வைத்து காதல் என்னும் பேசுபொருள் பற்றி பேசியதை நினைவுகூர்கிறேன். தமிழில் நல்ல காதல்கதைகள் ஏன் எழுதப்படவில்லை என நான் அன்று ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். தன்னால் ஒரு காதல் கதையை எழுத முடியாது என்று சுந்தர ராமசாமி சொன்னார் (ஆனால் அதன்பின் சில நல்ல காதல்கவிதைகளை எழுதினார்). நான் வாழ்நாள் முழுக்க காதல்கதைகளை எழுதிக்கொண்டே இருப்பேன் என்று நான் சொன்னேன். நான் நவீனத்துவ எழுத்தாளன் அல்ல, நான் யதார்த்தவாதி அல்ல, நான் கனவுகளில் திளைக்கவே எழுதுகிறேன் என்றேன். என்ன காரணத்துக்காக கபிலனுக்கும் நம்மாழ்வாருக்கும் காதல்கவிதை எழுதவேண்டிய தேவை இருந்ததோ அதே காரணத்துக்காகவே அவற்றை நான் எழுத விரும்புகிறேன் என்றேன்.
அந்தக் காரணங்கள் இருவகைப்பட்டவை. இலக்கியத்தின் பேசுபொருட்களில் முதன்மையானது மானுட உறவுதான். தந்தை மகன் உறவு, அன்னையுடனான குழந்தைகளின் உறவு,நட்புறவு, அரசனுடனான உறவு என மானுடர் கொள்ளும் உறவுகளை இலக்கியம் பேசிக்கொண்டே இருக்கிறது. அவ்வுறவுகளில் ஆண்பெண் உறவே மிகச் சிக்கலானது, நுட்பமானது. எல்லா உறவுகளும் அடிப்படையில் எளிமையானவை, உயிரியல் சார்ந்த அர்த்தம் மட்டுமே கொண்டவை. ஆனால் மானுட ஆணவம் இணைந்துகொள்ளும்போது உறவுகள் சிக்கலாகின்றன. அச்சிக்கலையே இலக்கியம் எழுதுகிறது. ஆண்பெண் உறவிலேயே உச்சகட்ட ஆணவ ஊடுருவல் உள்ளது. ஆண்பெண் உறவில் மிக நுண்ணிய தளம் காதலே.
ஏனென்றால் காதலில் ஒருவரை ஒருவர் அறியாத இருவர் அணுகுகிறார்கள். இரண்டு ஆணவங்கள் முட்டிக்கொள்கின்றன. இரண்டு பண்பாட்டுப்பின்னணிகள் மோதிக்கொள்கின்றன. மண்மேல் மானுடர் கொள்ளும் உறவுகளிலேயே மிகக் கூரியது, மிக மிக மென்மையானது, முடிவில்லாத வண்ணவேறுபாடுகள் கொண்டது காதலுறவே. ஆகவேதான் இலக்கியம் காதலை பேசுகிறது
இலக்கியம் காதலைப் பேசுவது உறவுகளில் ஒன்றாக அல்ல. அனைத்து உறவுகளுக்கும் உதாரணமாக திகழும் ஒன்றாகத்தான். காதலை மட்டுமே பேசும் படைப்புக்கு இலக்கிய மதிப்பில்லை. காதலை பேசுவதான பாவனையில் மானுட உறவின் உள்ளடுக்குகளை, அதன் உளவியல்நாடகங்களை, அதன் உணர்ச்சிநிலைகளைப் பேசும் படைப்புகளே இலக்கியத் தகுதி கொள்கின்றன. காதல் அங்கே ஒரு மானுட இருப்பு இன்னொரு மானுட இருப்புடன் கொள்ளும் உறவாடலின் ஒரு குறியீடாகவே நிகழ்கிறது. அதுவே காதல்கதைகள் அடையவேண்டிய ஆழம்.
தேடல், தவித்தல், கண்டடைதல், இணைதல்,பிரிதல், இழத்தல் என்று மானுட உறவின் நிலைகள் பல. அவை அனைத்தையுமே காதலைப் பேசும் ஒரு நல்ல இலக்கியப் படைப்பு பேசமுடியும். மானுட உறவில் என்றும் சொல்லித்தீராத சூட்சுமங்கள் உள்ளன. ஏன் ஒருவரிடம் முதற்கணத்திலே வாழ்நாள் முழுக்க நீடிக்கும் உறவை அடைகிறோம்? மிகமிக இறுக்கமாக இருக்கும் ஓர் உறவு எந்த மர்மப்புள்ளியில் சட்டென்று முழுமையாக உடைந்துவிடுகிறது? மிகமிக நேசிப்பவரை ஏன் வதைக்கிறோம்? வதைபடுவதே எப்படி களிப்பாக ஆகிறது? எல்லாமே எல்லா உறவுகளிலும் உள்ளவைதான், காதலில் அவை இன்னும் கூரியவை, இன்னும் துலக்கமானவை. ஆக்வேதான் காதல் கதைகள் எழுதப்படுகின்றன.
உலகிலுள்ள மகத்தான காதல்கதைகள் பலவும் இந்தவகையைச் சேர்ந்தவை. கதேயின் இளம் வெர்னரின் துயரங்கள் (தமிழில்,காதலின் துயரங்கள்) அலக்சாண்டர் குப்ரினின் ஒலேஸ்யா, இவான் துர்க்கனேவின் வசந்தகால வெள்ளம், நட் ஹாம்சனின் விக்டோரியா என நினைவிலெழும் காதல்கதைகள் பல. எல்லாமே மானுட உறவின் நுண்வடிவச் சித்தரிப்புகள். மரத்தின் நுண்வடிவே அதன் மலர் என்பதுபோல.
ஆனால் இது ஒரு தளம்தான். இதற்கும் அப்பால் ஒரு தளம் உண்டு. மானுடனுக்கு இங்கே விளங்கிக்கொள்ளவே முடியாத, வகுத்துரைக்கவே முடியாத, ஒரு தாபம் உள்ளது. ஒரு தவிப்பு. ஒருவகை தனிமையுணர்வு. ஒரு முழுமையின்மையுணர்வு அது. இயற்கையின் பேருருவைப் பார்க்கையில், வான்கீழ் நின்றிருக்கையில், மாபெரும் இசைக்கோலம் ஒன்றின் முடிவில், தன்னந்தனிமையில் அவன் அந்த தாபத்தை உணர்கிறான். தன்னை உடைத்து திறந்துவிடவேண்டும், கரைந்து அழிந்துவிடவேண்டும், துளியும் எஞ்சக்கூடாது என்னும் உணர்வு எழுகிறது. அல்லது உலகையே அள்ளி தன்னுள் நிறைத்துக்கொள்ளவேண்டும், தன் இடைவெளிகள் அனைத்தும் நிரம்பவேண்டும் என்னும் தவிப்பு ஓங்குகிறது.
உண்மை, அந்த உணர்வு அனைவருக்கும் எழுவது அல்ல. மானுடரில் தொண்ணூறு விழுக்காட்டினரும் அத்தகைய ஒன்றை உணர்ந்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் வாழ்வது பொருண்மையான யதார்த்தத்தில். அவர்களின் உலகம் வேறு, அவர்களால் இதை புரிந்துகொள்ளவே முடியாது. அந்த உணர்வை அடையும் சிலர் உண்டு, அவர்களே துறவிகளாகிறார்கள், நாடோடிகளாகிறார்கள், பித்தர் என அழைக்கப்படுகிறார்கள். அவர்களே கலையிலக்கியங்களை உருவாக்குகிறார்கள். அவர்களே இவ்வுலகின் அத்தனை பேரிலக்கியங்களையும் கலைகளையும் சமைத்தவர்கள். அவர்களே கலையிலக்கியத்தின் சாராம்சமாக உள்ள இந்த அகத்தனிமையை உணரும் ரசிகர்களும்.
அந்த தவிப்பைச் சொல்ல தூலமாக வாழ்க்கையில் இருந்து கிடைக்கும் உருவகம் என்பது காதலே. மகத்தான காதல்கவிதைகளில் முழுக்கமுழுக்க தர்க்கமற்ற பித்தாக வெளிப்படுவது அந்த தனிமையும் தவிப்பும்தான். உலகியலில் அதற்கு அர்த்தமே கிடையாது. மிகச்சிறந்த உதாரணம் ராபர்ட் பிரௌனிங் எழுதிய போர்ஃபீரியாவின் காதலன் என்னும் கவிதை. அச்செயலுக்கு உலகியல் விளக்கமே இல்லை. முழுப்பித்து. உலகநியாயத்தை கொண்டு அதை பேச ஆரம்பிப்பவன் அதன் முன் முட்டாள் ஆகிவிடுவான். ஆனால் அகத்தனிமையின் தவிப்பை உணர்ந்த வாசகன் அதை உடனே அடையாளம் கண்டுகொள்வான். அவனாலேயே அது உலகின் மகத்தான கவிதைகளில் ஒன்றாக நீடிக்கிறது.
ராபர்ட் பிரௌனிங்கின் உலகைச் சார்ந்தவை மௌனியின் சிறந்த கதைகள். அவை பேசுவது காதலை அல்ல, காதல் என்னும் வடிவில் அவை முன்வைப்பது என்றுமுள்ள மானுடத் தவிப்பொன்றை. அழியாச்சுடர் என, பிரபஞ்சகானம் என மௌனி பெயரிட்டுச் சுட்டுவதே அதைத்தான். முன்பு ஓர் இலக்கியப் பேராசிரியர் எழுதினார் , “நல்ல செவப்பா ஒரு பாப்பாத்திய அந்த ஹீரோவுக்கு சேத்துவிட்டிருந்தா தீந்துடற பிரச்சினைதான் மௌனி எழுதினது” அவர் மௌனியை அவமதிப்பதாக நண்பர் கொதித்தார். நான் சொன்னேன். அந்த பேராசிரியர் உண்மையிலேயே அவருக்கு தோன்றியதைத்தான் சொல்கிறார். அவர் வாழும் உலகில் அந்த தவிப்பு அப்படித்தான் அர்த்தமாகும்.
காதல்கதைகளில் இந்த இரண்டாம்வகை படைப்புகள் மானுட உறவின் வழக்கமான உளவியல்நாடகம், பாவனைகள், பலவகை படிநிலை வளர்ச்சிகள், ஆணவ மோதல்கள் ஆகிய தன்மைகள் இல்லாதவை. அவை காதல் என்னும் ‘டெம்ப்ளேட்’டை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. யதார்த்தத்தை நம்புவதில்லை. உதாரணம் மௌனி கதைகள்தான். ஒருவன் ஒரு பெண் பாடுவதை கேட்கிறான். அவள் முகத்தில் ஏன் என்ற பாவனை இருக்கிறது. அவனை அந்த பாவனை அலைக்கழிக்கிறது. ‘பயங்கர வசீகரம்’ என்னும் சொல்லாட்சி அவனுள் எழுகிறது. அவள் பாடும்போதே இறந்துவிடுகிறாள். அந்த பாவனை அவள் முகத்தில் எஞ்சியிருக்கிறது. இது ஒரு மௌனி கதை. “அதென்ன ஒருத்தி பாடும்போதே சாவது? நம்ப முடியவில்லை” என்பவர் மௌனி கதைகளைப் படிக்கக்கூடாது, அவ்வளவுதான்.
காதலின் தவிப்பை, கண்டடைதலை, இழத்தலை அருவமான மானுடநிறைவின்மையின் உருவகமாக ஆக்கிக்கொள்ளும் கதைகளுக்கு நிகழ்ச்சிகள் முக்கியமல்ல. பெரும்பாலான அத்தகைய கதைகள் எதுவுமே நிகழ்ந்திருக்காது. உதாரணம், மீண்டும் மௌனி கதைகள்தான். அவற்றில் பெரும்பாலும் எதுவுமே நிகழ்வதில்லை. கதைநிகழ்வது பெரும்பாலும் அகத்தில்தான். ஏனென்றால் புறநிகழ்வுகளுக்கு உறவுச்சிக்கல்கள் தேவை. இத்தகைய கதைகளில் உறவுச்சிக்கல்கள் இருப்பதில்லை. இவற்றிலுள்ளது காதல் எனும் உருவகம். இரண்டு உயிர்கள் ஒன்றையொன்று ஈர்ப்பது, நிறைவுகொள்ள தவிப்பது, நிறைவுகொள்வது, அல்லது நிறைவுகொள்ளாமையை அடைவது மட்டும்தான்.
(மௌனி கதைகளில் எப்போதுமே மானுட நிறைவின்மையே எஞ்சுகிறது. பெரும்பாலும் எல்லா பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகளிலும் அந்த நிறைவின்மையே சாராம்சமாக எஞ்சுகிறது. அது ஒரு மேற்கத்திய தரிசனம். அடிப்படையான மானுடதாகம் தணிவதே இல்லை என்பது அப்பார்வை. தணியும் என்பது இந்திய தரிசனம். அதையே சிவசக்தி லயம் என்கிறார்கள். அல்லது சத்யம் சிவம் சுந்தரம் என்கிறார்கள்)
நிகழ்வுகளை நம்பாத நிலையில் இத்தகைய கதைகள் இரண்டு இலக்கிய வழிமுறைகளையே தேர்வுசெய்தாகவேண்டும். ஒன்று, கவியுருவகம் மற்றும் படிமங்கள். (Metaphor, Images) , இரண்டு புறக்காட்சி வர்ணனை.
மௌனி கதையில் ஒருவன் துயருற்றவனாக வந்து ஓர் அயலூரில் தங்குகிறான். பட்டுப்போய் நிற்கும் ஒரு மரத்தை பார்க்கிறான். ‘பாழ்பட்ட’ என்னும் சொல் அவன் உள்ளத்தில் ஊறுகிறது. அச்சொல்லே அவனுள் ஓடிக்கொண்டிருக்கிறது— அவ்வளவுதான் கதை.அந்த மையப்படிமமே அக்கதைக்கு போதுமானது.
கதை நடக்கும் சூழலை படிமப்பரப்பாக ஆக்கிக்கொள்ளும் கதைகள் உண்டு. மௌனி கதைகளே மீண்டும் உதாரணம். ஒருவன் கோயிலுக்குள் நுழைகிறான். யாளிகள் வெருண்டு பின்னடைகின்றன என்று தோன்றுகிறது.
இரண்டாவது வழிமுறை புறவுலகை நுணுக்கமாகச் சித்தரிப்பது. அந்த உணர்வுகளை அப்புறவுலகம் ‘காட்ட’ ஆரம்பிக்கும். இது எளிய வழி முறை அல்ல. ‘இந்த்ரிய ஜாக்ரதை’ என்று சம்ஸ்கிருத காவியயியல் சொல்லும் ஐம்புலன் விழிப்புணர்வு நிலை என்பது கவிஞர்களுக்குரிய பண்பு. வெயில், மழை, செடிகள், மலர்கள், வண்ணங்கள், நிழல்கள், மணங்கள், ஓசைகள் என ஐம்புலன் பதிவுகளையும் கற்பனையிலேயே உருவாக்கி, சொற்கள் வழியாக வாசகனும் அவற்றை உணரும்படிச் செய்யவேண்டும்.
அகவுலகைச் சித்தரிப்பதை விட கடினமானது புறவுலகைச் சித்தரிப்பது. ஒரு கத்தரிப்பூவின் வண்ணம் என்ன என்று எப்படிச் சொல்வது? அதை நுணுக்கமாக இன்னொன்றுடன் ஒப்பிட்டே சொல்ல முடியும். அந்தியின் மயங்கொளியை எப்படி சொல்ல முடியும்? பலவகையான நுண்தகவல்கள் வழியாக அதை வெளிப்படுத்த வேண்டும். அது மொழித்திறன் அல்ல. ஆசிரியரின் மெய்யான அனுபவம் வெளிப்பட்டால் மட்டுமே வாசகன் அந்த அனுபவத்தை அடைய முடியும்.
நவீனத்துவ படைப்புகள் புறவுலகை சுருக்கமாகச் சொல்கின்றன. ஏனென்றால் அவற்றுக்கு புறவுலகம் என்பது கதைநிகழும் இடம் மட்டுமே. இத்தகைய செவ்வியல் – கற்பனாவாத படைப்புகளுக்கு அது கதை நிகழும் இடம் அல்ல. அது அகமே புறவுலகமாக விரிந்திருப்பது. அகத்தில் என்ன நிகழ்கிறது என்று சொல்லவே ஆசிரியர் புறவுலகைச் சொல்கிறார். வெயிலின் வண்ணம் மாறுவதை, ஒரு நிழல் இடம் மாறுவதைச் சொல்லும்போது அவர் அகத்தில் நிகழும் ஏதோ ஒன்றை உணர்த்த விரும்புகிறார்
ஆகவே இத்தகைய கதைகளில் வரும் புறவுலகம் ஒரு வழக்கமான கதையின் ‘சூழல் சித்தரிப்பு’ அல்ல. அப்படி எடுத்துக்கொள்ளும் வாசகர்களுக்கு இக்கதைகள் எழுதப்படுவதுமில்லை. இவற்றின் பணியே வேறு. இதை எல்லா நுண்கலைகளிலும் காணலாம். வின்செண்ட் வான்காவின் நட்சத்திர இரவு ஓவியத்தில் நிழலுருவாக நின்றிருக்கும் செடார் மரம் வெறுமொரு மரம் அல்ல. அவர் தங்கியிருந்த ஆஸ்பத்திரியின் சன்னலுக்கு வெளியே அது நின்றிருந்தது மட்டுமே அந்த ஓவியத்தில் அது நின்றிருப்பத்ற்குக் காரணம் அல்ல. அது வான்காவை வதைத்த எத்தனையோ விஷயங்களின் அடையாளம். ஓர் ஓவிய விமர்சகர் சொன்னதுபோல அந்த நிழல் மரம் வான்காவை பலிகொள்ளாமல் அமையாது. அதுவே அவர் தற்கொலை செய்துகொள்ள காரணமாகியது.
ஒரு காதல் கதை இலக்கியமாவது அது பரபரப்பான ‘அடுத்தது என்ன?’ வகை கதையாக இருக்கும்போது அல்ல. அது ‘நம்பகமான’ கதையாக இருக்கும்போது அல்ல. அனைவரும் அறிந்த வாழ்க்கைநிகழ்வுகள் அதில் இடம்பெறும்போது அல்ல. திகைக்க வைக்கும் திருப்பங்களும் உச்சங்களும் நிகழும்போது அல்ல. அவை அனைத்துமே மில்ஸ் ஆண்ட் பூன் நாவல்களின் இயல்புகள்.
காதல் கதை இலக்கியமாவது இரண்டு நிலைகளில்தான். அ. அது மொத்த மானுட உறவின் சிக்கல்களையும் காதலென்னும் உறவினூடாகச் சித்தரிக்கையில். ஆ. அது மானுடனின் என்றுமுள்ள தவிப்ப்பைச் சொல்ல காதலை பயன்படுத்தும்போது. இலக்கியத்தின் இரண்டு பேசுபொருட்களின் உருவகமாக காதல் அங்கே அமைந்துள்ளது.
கமல்ஹாசனுடன் ஓர் உரையாடல்
என்னுடைய அறம் சிறுகதைகளின் தொகுதி பிரியம்வதா மொழியாக்கத்தில் ஜக்கர்நாட் பதிப்பகம் சார்பில் வெளியாகியிருக்கிறது. அதன்பொருட்டு தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்காக நானும் கமல்ஹாசனும் உரையாடிக்கொண்டோம். அதன் பதிவு. அதன் காணொளியும் உள்ளது
கமல்ஹாசனின் அலுவலகத்தில் காமிராக்கள்முன் இயல்பாக நடந்த உரையாடல். முதலில் இருபது நிமிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோம், பின்னர் தமிழில். சில நிமிடங்களுக்குப்பின் காமிராவை மறந்துவிட்டோம். மொத்தம் நாற்பது நிமிடம் போதும். ஆனால் ஒருமணிநேரத்துக்குமேல் பேச்சு சுவாரசியமாகச் சென்றது.
இந்திய ஆங்கில புத்தகச் சந்தையில் ஒரு நூலுடன் செல்வதென்பது எளிதல்ல. அங்கே ஆசிரியர்களும் பேசுபொருட்களும் எல்லாம் வகுக்கப்பட்டிருக்கின்றன. இன்றும் அது வங்க, இந்தி எழுத்தாளர்கள் மற்றும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் களம்தான். வாசகர்கள் எவர் என்பதே கண்ணுக்கு தெரிவதில்லை. பெரும்பாலும் பெருநகர் சார்ந்த வாசகர்கள். ஆசிரியர்களை அவர்கள் செய்திகள், விவாதங்கள் வழியாகவே அறிந்துகொள்கிறார்கள். இயல்பான ஒரு கவனமும் வாசிப்பும் இதுவரை தமிழில் இலக்கியப்பெறுமானம் உடைய எந்நூலுக்கும் அமையவில்லை. அறம் அப்படி ஒரு கவனத்தைப் பெறுமென்றால் நன்று
Stories of the True : Translated from the Tamil by Priyamvadaகே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு மேடையில் நான் சொன்ன அறிஞர்களின் பெயர்களில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி முதலிடத்தில் இருந்தார். அதை தொடர்ந்து இணையத்தில் அவருக்கு மொட்டை வசை. எவர் என்றே தெரியாமல் செய்யப்படும் வசைகளில் ஒன்றே பொதுக்கூறு, சாஸ்திரி என்னும் அவருடைய பெயர்.
இந்தப்பதிவில் இருந்தே அவரைப்பற்றி பின்னர் சிலர் அறிந்துகொண்டு, அவரை கரைத்துக்குடித்த பாவனையில் பேசியதை கண்டேன். வரலாற்றுக்குறிப்புகளுக்கு அப்படிச் சில பின்விளைவுகளும் உண்டு போலும்
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி – தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்
கோவை புத்தகக் கண்காட்சியில் கடை எண் 255 விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் புத்தகக் கண்காட்சிப் பங்கேற்பு இது.
இவ்வரங்கில் குமரித்துறைவி, கதாநாயகி, அந்த முகில் இந்த முகில் ஆகிய நாவல்கள் கிடைக்கும். புனைவுக் களியாட்டுச் சிறுகதைகள் தொகுப்புகளாகியுள்ளன. ஆலயம் எவருடையது, ஒருபாலுறவு, இந்து மெய்மை, வணிக இலக்கியம் என வெவ்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வெளியாகி கிடைக்காமல் இருந்த ஈராறு கால்கொண்டெழும் புரவி, அனல் காற்று போன்ற நூல்கள் மறுபதிப்பாகியுள்ளன.
கதாநாயகி நாவலை புத்தகவடிவில் பார்த்தபோதுதான் அது 380 பக்கம் கொண்ட பெரிய நாவல் என்னும் எண்ணம் எனக்கு வந்தது. ஐந்து அடுக்குகள் கொண்ட நாவல். ஐந்து காலகட்டங்கள். ஒன்று விர்ஜீனியாவின் கதை நிகழும் பண்டைக்காலகட்டம். இரண்டு ஃபேன்னி ஹில்லின் வாழ்க்கை நடக்கும் பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டன். இன்னொன்று ஃபேன்னி உருவாக்கிய புனைவுக்காலகட்டம். நான்காவது வாழ்ந்த பிரிட்டிஷ் இந்திய காலகட்டம். ஐந்து கதைசொல்லியின் காலகட்டம். ஐந்து காலகட்டங்களிலும் வெவ்வேறு கதைமாந்தர் வழியாக ஒரே கதைச்சரடு ஓடிச்செல்கிறது. ஒன்றையொன்று கதைகள் நிரப்புகின்றன. புனைவு நிஜவாழ்க்கையையும், நிஜவாழ்க்கை புனைவையும் பொருளேற்றம் செய்கிறது. ஒட்டுமொத்த வரலாற்றுச் சித்திரமாக பெண்களின் அகவுலகு ஒன்று விரிகிறது. ஆனால் இது ஒரு பேய்க்கதை. ஒரே மூச்சில் வாசித்து முடிக்கமுடியும்.
அந்த முகில் இந்த முகில் எளிமையான, உணர்ச்சிகரமான காதல்கதை. அந்தக் காதல்கதையை அழகுறசெய்வது அதிலுள்ள பல காதல்கள். கதையின் பின்புலமாக உள்ள சினிமாவுக்குள் நிகழும் காதல், அதை நடிக்கும் ராமராவுக்கும் பானுமதிக்குமான நுண்ணிய காதல். காதலின் திளைப்பும், இழப்பும், ஏக்கமும் கூடிய நாவல் அது.
குமரித்துறைவி இதற்குள் பல பதிப்புகள் கண்டுவிட்டது. இலக்கியமறியாத ஒருவருக்கு ஒரு பரிசளிக்கவேண்டும் என்றால் குமரித்துறைவியை அளிக்கலாம். தமிழிலக்கியத்தின் உச்சங்களை வாசித்த ஒருவர் அடுத்து என்ன என்று கேட்பாராயினும் குமரித்துறைவியே அதற்குரியது. நான் வைக்கம் முகமது பஷீரின் சிறப்பு என சொல்வது இதையே. பஷீரிலேயே வாசிப்பை தொடங்கமுடியும், முடிக்கவும் முடியும்.
பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்துள்ளது. ரஷ்யநாவல்களின் கட்டமைப்பும் அழகும் கொண்ட ஆக்கம். இன்று நாம் ஒரு காலகட்டத்தை கடந்து வந்து நின்றிருக்கிறோம். மிக எளிமையாக உருவாக்கப்படும் அரசியல் கொந்தளிப்புகளின் உள்ளடக்கம் உண்மையில் என்ன என்று உணரத் தலைப்பட்டிருக்கிறோம். அந்த தேடல் கொண்டவர்களின் நூல் அது. கருத்தியலின் மாபெரும் கவர்ச்சி, அதன் அழிவுத்தன்மை, அதற்கப்பால் இலட்சியவாதத்தின் ஒளிமிக்க உச்சம் ஆகியவை வெளிப்படும் படைப்பு.
ஜெ
விஷ்ணுபுரம் பதிப்பகம்கோவையில் நான்…
குடவாயில் பாலசுப்ரமணியன் – தமிழ் விக்கிகோவையில் புத்தகக் கண்காட்சி தொடங்கவிருக்கிறது. 22 ஜூலை முதல் தொடங்கும் இவ்விழா கோவை மாவட்டச் சிறுதொழில்கள் சங்கம் (கொடீஷியா) அரங்கில் நடைபெறுகிறது.
இவ்வாண்டுக்கான கொடீஷியா விருது வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இளம்படைப்பாளிக்கான விருது சுரேஷ் பிரதீப்புக்கு வழங்கப்படுகிறது
23- ஜூலை-2022 அன்று நிகழும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் நான் பேசுகிறேன்.
விழா நாள் 23-7-2022
பொழுது மாலை 6 மணி
இடம் கொடீஷியா வணிக வளாகம் கோவை
கொடீஷியா விருது பெறும் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் தமிழின் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் முதன்மையான சிலரில் ஒருவர். தீவிரமான கதைக்கருக்களும், அகவயப்பார்வையும் கொண்ட படைப்புகளை எழுதுபவர். சுரேஷ் பிரதீப்புக்கு வாழ்த்துக்கள்
சுரேஷ் பிரதீப் தமிழ் விக்கி
சுரேஷ் பிரதீப் – தமிழ் விக்கி
Stories of the True -கடிதம்
அன்புள்ள ஜெ
அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியிருக்கும் செய்தியைக் கண்டேன். இதற்கு முன்னரும் அசோகமித்திரன், அம்பை உள்ளிட்ட பலருடைய கதைகள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. ஆனால் அவற்றுக்கு ஒரு சிறிய வட்டத்துக்கு வெளியே ஆதரவு இருந்ததாகச் சொல்ல முடியாது. முக்கியமான காரணம் இந்தியச் சூழலில் பொதுவாக தமிழிலக்கியம் மீது இருக்கும் ஒருவகையான அலட்சியம்தான். நாம் சரியான படைப்புகளை கொண்டுசென்று சேர்க்கவில்லை. சரியானபடி முன்வைக்கவும் இல்லை. ஆகவே ஒரு வங்கப்படைப்பையோ கன்னடப்படைப்பையோ இந்திப் படைப்பையோ மலையாளப்படைப்பையோ வாங்குவதுபோல இதை உடனடியாக வாங்க மாட்டார்கள். அதை வாங்கச்செய்வது நம் கையில்தான் உள்ளது.
தமிழில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்படுவது மிகமிகக்குறைவாகவே உள்ளது. அனேகமாக எதுவுமே இல்லை என்றே சொல்லவேண்டும். ஓரிரு கமெண்டுகள் வந்தாலும்கூட அதெல்லாமே தமிழர் அல்லாதவர்கள் எழுதுவதுதான். அசோகமித்திரனுக்கு இந்திய இலக்கியத்தில் கொஞ்சம் கவனம் வந்ததே பால் ஸக்காரியாவும், அர்விந்த் அடிகாவும் எழுதியதனால்தான். நாம் நம்முடைய படைப்புகளைப் பற்றி இதழ்களிலும், இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் எவ்வளவு எழுதுகிறோமோ அவ்வளவுக்கு அவை சென்று சேரும். சுமாரான மலையாள நாவல்களைப் பற்றியெல்லாம் அவர்கள் எழுதித்தள்ளுவதை காணும்போது ஆச்சரியமாகவே இருக்கும். இந்த நூலாவது விரிவான கவனம் பெறும் என நம்புகிறேன்
சூரியநாராயணன்
July 20, 2022
கோணங்கிக்கு வாழ்த்து
தமிழக அரசு வழங்கும் இலக்கிய மாமணி விருது எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. கோணங்கிக்கு வாழ்த்துக்கள்
ஜெ கோணங்கி தமிழ் விக்கிபிறழ்வுகள்
René Magritte. The Double Secret, 1927.
அன்பின் ஜெ அவர்களுக்கு,
சமீபகாலமாக அதிகம் வாசிக்கிறேன். அதிகம் என்றால் அதிக நேரம். இப்போதைக்கு ஒரே ஒரு சந்தேகம். தங்களின் ஏழாம் உலகம் வாசித்து ஒரு ஆண்டுகளாகிறது. இன்னமும் அந்தபெயரைக் கேட்டாலோ எங்காவது அந்த புத்தகத்தைப் பார்த்தாலோ அந்நாவலின் தாக்கம் மனதிற்குள் வந்துவிடுகிறது. சமீபத்தில் வாசித்த காடு என்னுள் உண்டாக்கிய பாதிப்பு அளப்பரியது. தற்போது சாடத் ஹசன் மண்ட்டோ படைப்புகள் வாசிக்கிறேன். அவரது ‘திற’ சிறுகதையை இன்று படித்து எனக்குள் மிகப்பெரும் தாக்கத்தை/சோகத்தை/அந்த சமூகத்தின் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது.
இந்தமாதிரியான இலக்கியங்கள் சொல்ல வருபவை என்ன? இதுமாதிரியான இலக்கியங்களால் என்னுள் நிகழும் இந்தப் பிறழ்வு ஆரோக்கியமானதா? தயைகூர்ந்து தெளிவாக்கவும்.
பின்குறிப்பு: வெண்முரசு எனது எல்லைக்கு அப்பாற்பட்டது என்ற நினைப்பை அடுத்தடுத்த விளக்கங்களால் உடைத்தெறிந்த உங்களுக்கு நன்றிகள். புத்தகம் ஆர்டர் செய்திருக்கிறேன்.
அன்புடன்
நஸ்ருதீன் ஷா
www.minnalgal.in
அன்புள்ள நஸ்ருதீன்,
நம்முடன் சாதாரணமாகப் பேசுபவர்களைக் கவனியுங்கள். தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத, படிப்பினை அளித்த நிகழ்வுகளாக எதைச் சொல்கிறார்கள்? பெரும்பாலும் ஆழ்ந்த இக்கட்டுகளை, அதிதீவிரமான நிகழ்வுகளைத்தான் இல்லையா? மயிரிழையில் தப்பிய விபத்துக்களை, கடுமையான மனத்துயர்களைத் தாண்டியதை, மீளவேமுடியாத சிக்கல்களைக் கடந்துவந்ததைத்தான் சொல்வார்கள். பலருக்கு அப்படிச் சொல்ல ஓரிரு நிகழ்வுகளே இருக்கும். வாழ்நாள் முழுக்கச் சொல்வார்கள்.
ஏன்?ஏனென்றால் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வாழ்க்கையில் மிகக்குறைவாகவே நம்முடைய முழு அகத்திறனும் வெளிப்படும் தருணங்கள் வாய்க்கின்றன. பெரும்பாலும் நம் மனதின் நுனியாலேயே அன்றாடவாழ்க்கையை கடத்திவிடுகிறோம்.ஆகவே எப்போதுமே நம் அகம் பலவாறாகப் பிரிந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. நாம் சாதாரணமாக எதையும் கவனிப்பதே இல்லை.
ஆனால் மேலே சொல்லப்பட்ட உச்சகணங்களில், தீவிரத்தருணங்களில், நம் இயல்புமனம் நிலைகுலைகிறது. நாம் முழுமையாக ஒருங்கு குவிகிறோம். நம் முழுஆற்றலும் வெளிப்படுகிறது. நாம் முழுமையாக வாழ்கிறோம். அப்போது நாம் நம்மைக் கண்டுகொள்கிறோம். அந்தக் கண்டடைதலே நாமறியும் உண்மையான ஞானம் என உணர்கிறோம்
இதன்பொருட்டே சாகசங்கள் செய்யப்படுகின்றன. பயணங்கள்ச் செய்யப்படுகின்றன. மனிதன் அனைத்துவகையான ‘ரிஸ்க்’ களையும் இதற்காகவே எடுக்கிறான்.
இவை நேர்வாழ்க்கையில். கற்பனையில் இந்த உச்சங்களை அடைவதற்கான ஒரு வழி என இலக்கியத்தைச் சொல்லலாம். இலக்கியம் புறவாழ்க்கைக்கு நிகரான ஓர் அகவாழ்க்கையை வாழச்செய்கிறது. அதை நிகர்வாழ்வு எனலாம். அந்த வாழ்க்கை புறவாழ்க்கை போல இருக்க முடியாது. புறவாழ்க்கையின் நிதானமான, இயல்பான, சலிப்பூட்டும் வாழ்க்கையை மனிதன் அங்கே வாழமுடியாது. சொல்லப்போனால் அதிலிருந்து தப்பவே அவன் இலக்கியத்தை வாசிக்கவருகிறான்
அங்கே அவன் தன்னைக் கண்டடையவேண்டும். கற்பனையில் உச்சகணங்களை அடைந்து அங்கே தான் எப்படி வெளிப்பாடுகொள்கிறோம் என அவன் அறியவேண்டும். அதுவே இலக்கியம் அளிக்கும் மெய்மையனுபவம். இலக்கியம் எதையும் ‘சொல்வதில்லை’ அது அனுபவிக்கச் செய்கிறது. அதில் வாசகன் அடைவதெல்லாம் அவனே அதற்குள் அனுபவித்து அறிவதுதான். விதவிதமான அனுபவங்கள், உண்மைவாழ்க்கையில் கிடைக்கவேகிடைக்காதவை, அங்கே அவனுக்குக் கிடைத்தாகவேண்டும்
இலக்கியம் ஒரு வாசகன் செய்தித்தாளில், அன்றாட அலுவல்களில், பேச்சில் கிடைக்கும் அதே விஷயங்களைச் சொல்வதாக இருக்கமுடியாது. அங்கெல்லாம் எது விடுபடுகிறதோ அதைச்சொல்வதாகவே அது இருக்கமுடியும்.
ஆகவேதான் இலக்கியம் உச்சங்களை, நெருக்கடிகளை, இக்கட்டுகளை நோக்கி குவிகிறது. நாம் பெரும்பாலும் அத்தகைய நெருக்கடிகளை உண்மையான வாழ்க்கையில் தவிர்க்கவே முயல்வோம். நம்முடைய அகம் நிலைகுலையாமல் ஒழுகிக்கொண்டிருப்பதற்கே நாம் முயல்வோம். இலக்கியம் அந்த சகஜநிலையைக் குலைப்பதனால் அந்த அனுபவத்தை ‘நிலைபிறழ்வு’ என்கிறோம்
நம் நீதியுணர்ச்சி தூண்டப்படுவதும் நிலைபிறழ்வாகவே நமக்குத் தெரியும். நம் நம்பிக்கைகள் சீண்டப்படுவது, நம் கொள்கைகள் உடைக்கப்படுவது, நம் வாழ்க்கைநோக்கு மாற்றப்படுவது நமக்கு நிலைபிறழ்வே. ஆனால் இலக்கியம் அதைச் செய்தாகவேண்டும். இல்லையேல் அது ஒன்றையும் அளிப்பதில்லை
பலசமயம் வாழ்க்கையின் பிறழ்வுகள், சரிவுகள், செரித்துக்கொள்ளமுடியாத உண்மைகள் வழியாக இலக்கியம் அந்த உச்சங்களையும் நெருக்கடிகளையும் காட்டுகிறது. ஏனென்றால் அவை வாழ்க்கை. நாம் காணாத வாழ்க்கை. நீ நம்பும் உண்மைகள் இந்த இடத்தில் செல்லுபடியாகுமா பார் என்கிறது இலக்கியம்
விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் இதை திரும்பத் திரும்ப பலர் எழுதியிருக்கிறார்கள். அந்நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு பெரும் வெறுமை சூழ்ந்துகொள்ளும். எல்லா அடிப்படைகளும் நொறுங்கிவிட்டிருக்கும். அது தேவைதானா என்று பலர் கேட்டனர்.
நான் அதற்கு ஓர் உவமையை பதிலாகச் சொன்னேன். ஒரு கட்டிடத்தை நீங்கள் கட்டி குடியிருக்கிறீர்கள். தொன்மையான, பாரம்பரிய உரிமையாக கிடைத்த பழைய கட்டிடம். அதை ஒரு விசை உடைத்து விரிசலிடுகிறது. நீங்கள் அதை விட்டு வெளியே வந்து வெட்டவெளியில் நிற்கிறீர்கள். பின்னர் நீங்களே ஒரு புதிய வீட்டை கட்டுகிறீர்கள். புதிய வீடுகள் அவ்வாறுதான் கட்டப்படுகின்றன. அந்த விசைதான் இலக்கியம். அது உடைக்கிறது, மறுபரிசீலனைக்குச் செலுத்துகிறது
பெரிய நாவல்கள் எவையுமே நிறைவை மகிழ்வை அளிப்பதில்லை. நிலைகுலைவை, அதன் விளைவான ஆழ்ந்த மனச்சோர்வையே அளிக்கின்றன. அந்த மனச்சோர்வு ஒரு பெரிய படைப்பூக்க விசையாக வாசகனிடம் நீடிக்கிறது. அவன் அதை யோசித்து யோசித்து மெல்லமெல்ல தன் சிந்தனைகளை ஒருங்கமைக்கிறான். தன்னை புதியவகையில் தொகுத்துக்கொள்கிறான்
ஆகவேதான் பெரியநாவல்களுக்குப்பின் நாம் புதியதாகச் சிந்திக்க ஆரம்பிக்கிறோம். புதியதாகப் பிறக்கிறோம் என்றுகூடச் சொல்லலாம். அந்த சிந்தனையை எத்தனைநாள் நம்மில் நீடிக்கவைக்கிறது என்பதே ஒரு படைப்பை மதிப்பிடும் அளவுகோலாகும்
நாம் உவகையுடன் படித்து முடித்த படைப்புகளை எளிதில் கடந்து வந்திருப்போம். நிலைகுலைய வைத்தவை பிறழவைத்தவை நம்முடன் இருக்கின்றன, நம்முடன் வளர்கின்றன இல்லையா? அதுதானே இலக்கியத்தின் இலக்கு?
ஜெ
கவிமணி
தேசிகவினாயகம் பிள்ளை வரலாற்றை அணுகி ஆராய ஆராய நாஞ்சில்நாடனின் கும்பமுனிதான் ஞாபகத்துக்கு வருகிறார். அந்தக் குசும்பும் புலமையும் அவருடைய இயல்புகள்தான். அவரை குழந்தைக்கவிஞர் என்றே இன்று அறிந்திருக்கிறோம். தமிழகக் கல்வெட்டாய்வின் முன்னோடிகளில் ஒருவர் அவர் என்பதை அறிந்தவர் சிலரே
தேசிகவினாயகம் பிள்ளை – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

