Stories of the True -கடிதம்
அன்புள்ள ஜெ
அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியிருக்கும் செய்தியைக் கண்டேன். இதற்கு முன்னரும் அசோகமித்திரன், அம்பை உள்ளிட்ட பலருடைய கதைகள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. ஆனால் அவற்றுக்கு ஒரு சிறிய வட்டத்துக்கு வெளியே ஆதரவு இருந்ததாகச் சொல்ல முடியாது. முக்கியமான காரணம் இந்தியச் சூழலில் பொதுவாக தமிழிலக்கியம் மீது இருக்கும் ஒருவகையான அலட்சியம்தான். நாம் சரியான படைப்புகளை கொண்டுசென்று சேர்க்கவில்லை. சரியானபடி முன்வைக்கவும் இல்லை. ஆகவே ஒரு வங்கப்படைப்பையோ கன்னடப்படைப்பையோ இந்திப் படைப்பையோ மலையாளப்படைப்பையோ வாங்குவதுபோல இதை உடனடியாக வாங்க மாட்டார்கள். அதை வாங்கச்செய்வது நம் கையில்தான் உள்ளது.
தமிழில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்படுவது மிகமிகக்குறைவாகவே உள்ளது. அனேகமாக எதுவுமே இல்லை என்றே சொல்லவேண்டும். ஓரிரு கமெண்டுகள் வந்தாலும்கூட அதெல்லாமே தமிழர் அல்லாதவர்கள் எழுதுவதுதான். அசோகமித்திரனுக்கு இந்திய இலக்கியத்தில் கொஞ்சம் கவனம் வந்ததே பால் ஸக்காரியாவும், அர்விந்த் அடிகாவும் எழுதியதனால்தான். நாம் நம்முடைய படைப்புகளைப் பற்றி இதழ்களிலும், இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் எவ்வளவு எழுதுகிறோமோ அவ்வளவுக்கு அவை சென்று சேரும். சுமாரான மலையாள நாவல்களைப் பற்றியெல்லாம் அவர்கள் எழுதித்தள்ளுவதை காணும்போது ஆச்சரியமாகவே இருக்கும். இந்த நூலாவது விரிவான கவனம் பெறும் என நம்புகிறேன்
சூரியநாராயணன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

