Stories of the True- கடிதம்
அன்புள்ள ஜெ,
நான் அறம் கதைகளை பலமுறை வாங்கியிருக்கிறேன். பலருக்குப் பரிசளித்தும் உள்ளேன். திரும்பத்திரும்ப வாங்கும், திரும்பத்திரும்ப வாசிக்கும் ஒரு படைப்பு அது. ஆனால் தமிழை முறையாகப் பயிலாத என் பிள்ளைகள் உட்பட அடுத்த தலைமுறைக்கு அறம் கதைகளை வாசிக்கும் அனுபவம் இல்லை. அவர்களுக்கு கதைச்சுருக்கத்தைச் சொல்லத்தான் முடியும். அவர்களுக்கு இந்த மொழியாக்கம் உதவும் என நினைக்கிறேன். ஆளுக்கொரு பிரதி வாங்கிக் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.
அறம் கதைகள் குறிப்பாக வளரிளம் பிள்ளைகளுக்கு மிக உதவியானவை. இன்றைக்கு சமூகவலைச் சூழலில் இருந்து அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் நுகர்வுவெறி, எதிர்மறை அரசியல் இரண்டும்தான். எல்லாவற்றையும் தூக்கிவீசிப் பேசினால். எல்லாவற்றையும் வசைபாடினால் பெரிய புரட்சிவீரர் ஆகிவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அந்த வயதிலேயே லட்சியவாதம், அதிலுள்ள சாகசம் அறிமுகமாவது மிக நல்லது. என் மகனுக்கு யானைடாக்டர் வழியாகத்தான் வைல்ட் லைஃப் அறிமுகம். அதற்கு முன் இருந்த வேடிக்கை மனநிலை போய் ஒரு லட்சியவாதம் அறிமுகமாகியது. இன்றைக்கு அவன் ஒரு நல்ல பயணி. அறம் கதைகளுக்கும் மற்ற நவீன இலக்கியப்படைப்புகளுக்கும் உள்ள வேறுபாடு இது. அறம் கதைகள் எல்லாரும் வாசிக்கலாம். இலக்கியப்பரிச்சயம் கட்டாயமல்ல. இலக்கியப்படைப்புகளிலுள்ள அத்துமீறலோ கசப்புகளோ அல்லது வேறுவகையான எதிர்மறை விஷயங்களோ அவற்றில் இல்லை. தேவையில்லாத பூடகத்தன்மையும் இல்லை.
தமிழகத்தில் ஒரு ஐம்பதாயிரம்பேர் அறம் ஆங்கிலத்தை வாங்கி பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள் என்றால் அது மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமையும்
ராஜி சுவாமிநாதன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

