அறம், பக்தி, இன்னபிற -கடிதம்

அறம் தமிழ் விக்கி பக்தி தமிழ் விக்கி

அன்பு ஜெ,

தமிழ் விக்கியில் உங்களுடைய ”அறம்” பதிவு மிகப் பிடித்திருந்தது. ஒரு பரந்துபட்ட பொருளுடைய கலைச்சொல்லை நம் பண்பாட்டிலிருந்தே எடுத்து அதை தொகுத்திருப்பது மிகவும் பயனுள்ளது. ”அறம்” என்ற கலைச்சொல் கடந்த பத்தாண்டுகளில் மிகப் பிரபலம். வெறுமே உழைப்பு, அறிவு (Intelligent quotient) என்பதைத் தாண்டி உணர்வு ரீதியான அறிவுக்கு (emotional intelligence), decision making ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வந்த பிறகு போட்டித்தேர்வுகளிலும் அறம் என்ற விடயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொண்டுவரப்பட்டது. மத்தியத்தேர்வாணயம் நடத்தும் குடிமைப்பணித்தேர்வில் ப்ரிலிமினரி தேர்வில் decision making, logical reasoning, mental ability க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  2013இல் “Ethics, Integrity and Aptitude” என்ற நான்காவது பொதுத்தாள் (General studies 4) முதன்மைத்தேர்வில் சேர்க்கப்பட்டது.

இதன் பாடத்திட்டதில் இருந்தவை பெரும்பாலும் படிப்பறிவு சார்ந்தில்லாமல் சிந்தனை சார்ந்து அமைந்திருந்தது. (Syllabus: Ethics and Human Interface, Attitude, Aptitude and Foundational Values for Civil Service, Emotional Intelligence, Contributions of Moral Thinkers and Philosophers from India and World, Public/Civil Service Values and Ethics in Public Administration, Probity in Governance) பாடத்திட்டம் வந்த சில வருடங்களுக்குப் பின் தான் போட்டித்தேர்வு பயிற்சி அமைப்புகள் இந்த பாடத்திட்டம் சார்ந்த விஷயங்களுக்கான புத்தகங்களைக் கொண்டுவந்தன. சிறப்பாக தொகுக்கப்பட்டது என்று பெரும்பாலும் கருதப்பட்ட புத்தகங்களில் கூட போதாமைகள் இருந்தது. ஒரு வாரம் உட்கார்ந்து இந்த ஒட்டு மொத்த பாடத்திட்டத்துக்கும் தனியாக குறிப்புகள் எடுத்தால் நாமே அவற்றை அறிந்து கொண்டு, சிந்தித்து, தொகுத்துக் கொள்வதற்கு பயன்படும். குடிமைப்பணித்தேர்வை தமிழில் எழுதலாம் என்று முடிவெடுத்தபோது இந்த பொதுத்தாளுக்கு தனியாக நானே குறிப்புகள் எடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். இதிலுள்ள கலைச்சொற்களை மட்டும் பட்டியலிட்டு அவற்றை தமிழில் விரித்துக் கொள்ள முற்பட்டேன். அந்த சமயத்தில் இந்தத்தாளின் முதல் முக்கியமான கலைச்சொல்லாக என் முன் வந்து நின்றது “அறம்”.

ஆங்கிலத்தில் இதற்கான குறிப்புகளே கூட கோர்வை செய்ய முடியாமல் ஒரு அகாடமிக் தன்மையில் தான் இருக்கும். அறம் சார்ந்த நிலைப்பாடுகளுக்கான கோட்பாடுகளை வாசித்தபின்னும் இதற்காக ]புகழ்பெற்ற மேலை நாட்டு ஆசிரியர்கள், நீதிபதிகளின் இறுதித்தீர்ப்புகளை பார்ப்பது, உரையாடுவது என தொகுத்துக் கொள்வோம். அப்படி ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் “மைக்கேல் சாண்டல்” என்ற ஆசிரியர், ஃப்ராங்க் காப்ரிக்கோ என்ற நீதிபதி என பலரும் அறிமுகமானார்கள். குறிப்பாக சாண்டலின் கேள்விகளும், அவர் அறம் சார்ந்த நிலைப்பாடுகளை நம்மை சிந்திக்க வைக்கும் முறையும் காணொளிகள் வாயிலாகவே எங்களை அவரின் மாணவர்களாக்கியது.

சிந்தனை சார்ந்து இவைகள் இருந்தாலும் சிந்தனைகள் கட்டற்று இருக்காமல் அவற்றிற்கு ஒரு வழியை அமைத்துக் கொடுக்க ஏற்கனவே இருந்த சிந்தனையாளர்கள் பற்றிய அடிப்படைப் புரிதல் அவசியமாகிறது. மேலை மற்றும் கீழைத் தத்துவம் சார்ந்து அடிப்படையான சிந்தனைவாதிகளையும் அவர்களின் கோட்பாடுகளையும் முதலில் தெரிந்து கொண்டோம். பின் ஒவ்வொரு கலைச்சொல்லையும் தனியே எடுத்து விவாதிப்பது அதற்கான கோட்பாடுகள், அது சார்ந்த சிந்தனைகளை தொகுப்பது போன்றவற்றை செய்ய வேண்டியிருந்தது. இவை யாவும் ஒரு அறம் சார்ந்த கேள்விக்கு, ஒரு முடிவைக் கோரும் கேள்விக்கு நம் நிலைப்பாடு என்ன என்பதைத் தேர்ந்தெடுத்து அதை நிலை நிறுத்த பயன்படுகிறது. இது மாதிரியான கேள்விகள் சார்ந்த கலந்துரையாடலுக்குப் பின் நண்பர்கள் நாங்கள் பகடியாக “எல்லாம் சரி ‘what is ethics’? இதுக்கு மொதல்ல விடை சொல்லு” எனக் கேட்டுக் கொண்டு.. ”மறுபடியும் மொதல்ல இருந்தா” என்பது போல கலைந்து செல்வோம்.

தமிழில் குடிமைப்பணி எழுதலாம் என்று தேர்ந்தெடுத்த காலகட்டத்தில் அதற்கான தயாரிப்பில் முதலில் வந்து நின்றது “அறம்” தான். பேசிப்பேசி தீராத தலைப்பு இந்த ”அறம்” என்பது. ஒட்டு மொத்த தாளுக்கும் முதலில் எனக்கு உறுதுணையாக இருந்தது “திருக்குறள்” தான். அவற்றையுமே கூட நமக்கானதாக தொகுக்க சிரத்தையாக முயல வேண்டியிருந்தது. அறத்துப்பாலைத்தவிரவும், பொருட்பாலில் உள்ள அரசியலும், அமைச்சியலும் உதவியது. உரை நடையாக மு.வ. வின் “அறமும் அரசியலும்” சில நிலைப்பாடுகளுக்கு உதவியது. இந்த பொதுத்தாளைப் பொறுத்தவரையிலும் எப்போதும் ஒரு நிறைவின்மையோடு தான் தேர்வு எழுதச் செல்வோம்.

இன்று அங்கிருந்து வெகு தொலைவில் வந்துவிட்டேன் ஜெ. ஆனால் “அறம்” என்ற பதிவைப் பார்த்தவுடன் அதன் முக்கியத்துவம் என்ன என்பது புரிந்தது. ஒரு பக்கம் மகிழ்வும் மறு பக்கம் நீங்கள் அந்த பரந்து பட்ட பொருள் ஒன்றை எப்படியாக கோர்த்து ஒரு சட்டகத்துக்குள் அடைத்திருந்தீர்கள் என்பதை ஆர்வமாக வாசித்தேன். நீங்கள் அடுக்கிய முறை அறிதலாக இருந்தது. உங்களுக்கே உரிய பாணியில் மூலத்திலிருந்து வரலாறு, பண்பாடு என்பவற்றிலிருந்து அதன் பொருளை விளக்கி அறத்தொடு நிற்றல், அறம் பாடுதல், அறம் படுதல் என விரித்த விதம் பிடித்திருந்தது. மேலும் இதை நீங்கள் விரிப்பீர்கள் என்று கூட நினைத்துக் கொண்டேன்.

அன்று நண்பர்களிடம் அந்தப் பதிவைப் பற்றி பேசி தொகுத்துக் கொண்டேன். அதன் பிறகு ஒரு நாள் ஜி.எஸ்.எஸ்.வி நவீன் “ரம்யா.. சார் ’அறம்’ சீரீஸ்ல ’பக்தி’ எழுதறாங்க கவனிச்சீங்களா?” என்று கேட்டார். பொதுவாக நீங்கள் எழுதும் பதிவை நீங்கள் முடிக்கும் வரை காத்திருந்து தான் படிப்போம். “பக்தி” பதிவு மட்டும் ரன்னிங் கமெண்ட்ரி போல படித்துக் கொண்டிருந்தோம். ”பக்தி” க்ரீன் டிக் வந்ததும் நவீன் அலர்ட் செய்தார். வாசித்து விட்டு சிலாகித்துக் கொண்டோம்.

“பக்தி” பதிவு வந்தபோது களப்பணிக்காக சென்று கொண்டிருந்தேன். வழிதோறும் வாசித்து, நெகிழ்ந்து என பயணித்திருந்தேன். செல்லும் வழியில் சென்னிகுளம் என்ற ஊரில் கவிராயரின் சிலை ஒன்று இருப்பதாக எழுத்துக்காரர் சொன்னார். “ஓ.. அப்படியா சரிங்க” என்பது போல படித்துக் கொண்டிருந்தேன். நான் ஆவல் அடையாததைக் கண்டு “காவடிச்சிந்து எழுதினாருல்ல ம்மா அவரு” என்றார். காவடிச்சிந்து என்பது என் மூளையில் முட்டியதும் தமிழ்விக்கியில் பதிவு போட்டது நினைவிற்கு வந்தது. நான் சட்டென திரும்பி “அண்ணாமலை ரெட்டியார்” என்றேன். அவருக்கு ஒரே மகிழ்ச்சி. தன் ஊரிலுள்ள பெரிய மனிதரை தெரிந்து வைத்திருப்பது கண்டு பெருமிதமும் தெரிந்தது. அண்ணாமலை ரெட்டியாரை எடுத்து மீட்டு வாசித்து விட்டு அந்த மணிமண்டபத்தை தமிழ்விக்கியில் இணைக்க புகைப்படம் எடுத்துக் கொண்டேன். ஊருக்கு நடுவில் மிகப்பெரிய இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. பூட்டி வைத்திருந்த அந்த காம்பவுண்டை திறந்து காணிப்பதில் அங்கிருந்தவர்களுக்கு ஆர்வம் அதிகமிருந்தது தெரிந்தது. அவர்களிடம் தமிழ்விக்கி பதிவை காணித்து இவரைப் பற்றி ஆவணப்படுத்தியிருக்கோம் என்றேன். ”அவங்க சந்ததிகள்” என்று வாயெடுக்கும் முன் அவருக்கு குழந்தைகள் இல்லை என்பது ஞாபகம் வந்தது. அந்த மணிமண்டபத்திற்கு பின்னாலேயே அவர் நினைவாக ஒரு ஆரம்பப்பள்ளி செயல்படுவதைக் காணித்தார்கள். மிக இள வயதில் இறந்த கவிராயரை இன்றும் மக்கள் நினைவு கொண்டிருப்பதன் முக்கியத்துவம் புரிகிறது. எங்கோ மூலை முடுக்கில் பிறந்து இன்றும் சிலாகிக்கும் ”காவடிச்சிந்தை” எழுதிய அண்ணாமலை ரெட்டியாரை எழுதும்போது அவரின் பாடலை சிலாகிக்கும்போது கிடைத்த நிறைவு அந்த இடத்தில் கிடைத்தது.

பக்தி என்பது ஏதோ ஆன்மீகம் சார்ந்ததோ, கடவுள் நம்பிக்கை சார்ந்ததோ மட்டும் அல்ல. ஒன்றுக்காக தன்னை அர்ப்பணிப்பது, அதில் திழைப்பது. அப்படியான மனிதர்களை தான் இந்த பதிவுகளின் வழி தரிசித்துக் கொண்டிருக்கிறேன். ”பக்தி” பதிவுடன் அண்ணாமலை ரெட்டியாரின் இந்த நினைவும் ஒட்டிக் கொண்டது. வரும் வழியில் “ஒப்புக் கொடுத்தல்” என்ற வார்த்தை ஒன்று என்னை தொற்றிக் கொண்டிருந்தது. சிறு வயதிலிருந்தே தினமும் சர்ச்சில் கேட்ட வார்த்தை தான். மானுட மகன் தன்னையே ஒப்புக் கொடுத்திருக்கிறார்.  ஆன்மீகத்தில், கலையில், எழுத்தில், அரசியலில், சேவையில், செயலில் என தன்னை ஒப்புக் கொடுத்தவர்களைத்தான் தொகுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் மட்டுமே மகிழ்வையும் நிறைவையும் தேடிய மனிதர்களை தொகுத்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் அனைவரிடமும் இருப்பது “பக்தி” தான். எங்கோ அதன் உன்னதத்தை கண்டு கொண்டவர்கள்.. அதன் தரிசனத்தை கண்டடைந்து திரும்புதலில்லாத வாழ்வைக் கை கொண்டு  பிறருக்காக இருந்தவர்கள். ஆம் ஒப்புக் கொடுத்தவர்கள். பக்தி என்ற கலைச்சொல்  பற்றிய பதிவு சிந்தனைக்கான ஊற்றுமுகமாகக் கருதுகிறேன் ஜெ. அன்று முழுவதுமாக ”பக்தி” என்பதை உங்கள் பதிவின் வழியாக விரித்துக் கொண்டிருந்தேன். இந்த கலைச்சொற்கள் யாவும் ஒரு சிந்தனைக்கான தொடக்கப் புள்ளியாக அமைத்திருக்கிறீர்கள்.

“அறம்” பதிவிற்காகவும், “பக்தி” பதிவிற்காகவும் மிக்க நன்றி ஜெ. இந்த வரிசையில் நீங்கள் அடுத்து என்ன எழுதுவீர்கள் என்பதை நாங்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அறிதலை அளித்துக் கொண்டிருப்பதற்காக நன்றி ஜெ.

பிரேமையுடன்

ரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.